Friday 31 July 2009

மறதி ஒரு வியாதி

நான் காசிநாதன் வந்து இருக்கேன், என்னை தெரியுதா உன் பால்ய தோழன் கல்யாணம் ஆகி போனவன் தான் அதற்கப்புறம் இந்த ஊருக்கு வரவே இல்லை என்னை தெரியுதா என்னை பாரு' 70 வயது காசிநாதன் தனது நண்பர் பூமிநாதனிடம் 45 வருடங்கள் கழித்து தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்.

பூமிநாதன் 'எதையெல்லாம் எடுத்துட்டு போறாங்க, எதையெல்லாம் சொல்லிட்டு போறாங்க' என்றார்.

காசிநாதனை தனியாய் பூமிநாதன் மகன் சின்னச்சாமி அழைத்துச் சென்றார்.

'அப்பாக்கு நினைவு போய் மூணு வருசம் ஆச்சி பசிச்சா சாப்பிடவும், வெளியில வந்தா போகவுமா இருக்கார், யாரையும் அடையாளம் தெரியல வர்வங்களை போறவங்களை பார்க்கிறார், இப்போ பேசறதையே பேசறார். இவர் தான்னு அறிமுகப்படுத்தினா தலையை ஆட்டுறார் அப்புறமா வந்தவங்க திரும்பி வந்தாக் கூட யாருன்னு தெரிய மாட்டேங்குது சுத்தமா நினைவு இல்லை'

காசிநாதன் யோசித்தார்.

'டாக்டர்கிட்ட காமிச்சீங்களா என்ன சொன்னாங்க எப்ப இருந்து இப்படி ஆச்சு'

'அம்மா இறந்த மறு நிமிடமே தன்னோட நினைவை இழந்துட்டார், டாக்டர்ங்க அல்சைமெர் நோய்னு சொல்றாங்க வயசானவங்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருக்காம் இதை எப்படி தீர்க்கிறதுன்னு தெரியலை அம்மாதான் நினைவுன்னு வாழ்ந்தவர்' என மனம் கரைந்தான் சின்னசாமி.

காசிநாதன் தனது இளம் வயது கதையை சொன்னார்.

'உங்க அப்பா மட்டும் இல்லைன்னா நான் இன்னைக்கு இந்த அளவுக்கு நல்லா வந்து இருக்க மாட்டேன், நான் நல்லா படிக்கிறேன்னுட்டு தான் படிக்காம அவர் வீட்டுல இருந்து பணம் வாங்கி என்னை படிக்க வைச்சார், கல்யாணத்தைக் கூட அவர்தான் என் வீட்டிலயும் பொண்ணு வீட்டிலயும் பேசி சம்மதம் வாங்கி முடிச்சி வைச்சார், நான் வேலை நிமித்தமா வெளியூர் போய் அப்புறம் அங்கேயே செட்டில் ஆகி இந்த மண் பக்கம் வரலை, யார் இவரை பாத்துகிறது இப்போ'

'நானும் என் பொண்ஜாதியும் தான். ஒ அவரா நீங்க நினைவு இருக்கறப்ப, அப்பா உங்களைப் பத்தி விசாரிப்பார் எங்கயும் யாருக்கும் தெரியல, எப்படி இருக்கானோனு சொல்லிக்கிட்டே இருப்பார், நீங்க எப்படி இத்தனை வருசம் கழிச்சி பார்க்க வந்து இருக்கீங்க' என்றான் சின்னசாமி.

சின்னசாமி கேட்ட கேள்வியில் தனக்கும் இந்த நோய் நோயாய் இத்தனை நாளாய் இல்லையெனினும் இருந்து இருக்கிறது என்று எண்ணி 'பூமி' என ஓடிச்சென்று காசிநாதன் பூமிநாதனைக் கட்டிக்கொண்டு கதறினார், காலம் கடந்து நன்றி நினைத்து...

நன்றி மறப்பவரை விடவா இந்த அல்சைமெர் நோய் கொடியது?

இந்த அல்சைமெர் நோயானது நமது மூளையில் ஏபி - 42 என்னும் புரோட்டினானது ஒழுங்காக மடிய முடியாமல் அரைகுறையாய் மடிந்து பீட்டா சீட்டுகளைப் போன்று படிந்து பின்னர் பைபர்களாக மாறி படிமமாய் படிவதால் நினைவானது இழக்கப்படுகிறது. இதற்கு அலுமினியம், இரும்பு போன்ற 3 சார்ஜ்கள் கொண்டவைகளால் இருக்கலாம் என மருத்துவம் தெரிவிக்கிறது ஆனால் உறுதிபடுத்த முடியவில்லை.

ஏ பி - 42 புரோட்டினை தனியாய் நரம்பு செல்களுடன் சேர்த்து செய்த ஆராய்ச்சியில் அந்த நரம்புகள் செல்கள் மடிந்தன, ஆதலினால் இந்த புரோட்டின் இவ்வாறு ஆகாமல் எப்படி காக்கலாம் எப்படி திருப்பலாம் என மருத்துவம் முயல்கிறது.

ஒருவேளை ஆராய்ச்சி வெற்றி பெற்றால் பூமிநாதன் நினைவு திரும்பி காசிநாதனை இனம் கண்டு காசிநாதனின் புகழ்மிக்க வாழ்க்கையினை கண்டு பெருமிதம் அடையலாம். பலன் எதிர்பாராமல் செய்த உதவியல்லவா!

----முற்றும்----

No comments: