Friday 17 October 2008

காதல் மட்டும் 11

11. உலக இயக்கம் யாவும்
உனது இயக்கம் என்றே
உள்ளூர நினைத்திருக்க
நான் என்னுள் கொண்டது
காதல் மயக்கமாம்.

காதலுக்கு மயங்குதல்
காதலினால் மயக்குதல்
யாவும் வார்த்தைகளின் மயக்கம்
என்பதை நீயே உணர்ந்து
எனது இதயத்தின்
சீரான அமைதித் துடிப்புக்கு
பார்வையால் சொல்லிச் சென்றாய்

காதல்
தெளிவின் உச்ச நிலை
என்றும் உயர் நிலை
எப்பொழுதும் ஒரே நிலை.

Thursday 16 October 2008

வேர்களை மறந்த விழுதுகள்

முன்னுரை:-
மனித இனத்திற்கென்று தனித்தனி அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு குடும்பம், ஊர், நகரம், நாடு, உலகம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள், சமயக் கொள்கைகள் என பிரிந்து வாழும் முறையானது சரியில்லை என்றாலும் தனக்கென இருக்கும் அடையாளங்களை தொலைத்து வாழ்வது என்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். எந்த ஒரு பிரிவினையும் ஏற்படுத்தாது தமக்குரிய அடையாளங்களை பாதுகாப்பது மட்டுமின்றி, மற்றவர்களுடைய அடையாளங்களுக்கு மதிப்பளித்து வாழ்வது இன்றைய உலகில் இன்றியமையாததாகும்.

உலகம் யாவும் தமிழர்:

உலக நாடுகளில் தமிழர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். கல்வித்துறை, கணினித்துறை, மருத்துவத் துறை, கட்டிடத் துறை, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சிறப்புடன் செயலாற்றி வருகிறார்கள். அப்படி சிறப்புடன் வாழும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு உரிய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை இழந்து வருவதும், வேண்டுமென்றே தொலைத்து வருவதும் வேதனைக்குரிய விசயம்.

'எலி வளையானாலும் தனிவளை வேண்டும்' இது ஒரு அழகிய பழமொழி. ஆனால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தனிவளையை கொய்துவிட்டு எப்படி தனிவளை ஏற்படுத்திக் கொள்வது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் கலாச்சாரம், பண்பாட்டினை கட்டிக் காத்திட வெளிநாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை, அங்கேயே இருந்து காப்பாற்ற முடியும். அதுமட்டுமின்றி, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருப்பது நமது பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பெரும் அவலத்தை ஏற்படுத்திக்கொண்டே வருவது நமது எண்ணத்தின் ஓட்டத்தை தடுமாறச் செய்வது தவிர்க்க முடியாதது.

'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்றார் மகாகவி பாரதியார். 'தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்ற சொன்ன மகாகவியே இதுபோன்று சொல்ல அன்றே விதை விதைக்கப்பட்டு இருக்கிறது, ஆங்கில தாகம் ஆட்டிப்படைத்திருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னர் அதே நிலை கட்டுக்கடங்காமல் செல்வது கவலைக்குரிய விசயம் அல்லவா!

பிறமொழிகளை கற்றுக் கொள்வதிலும், புலமை பெற்றுக் கொள்வதிலும் எவ்வித இரண்டாம் உணர்வு தேவையில்லை, எனினும் நமது தாய் மொழியை மறந்து வாழ்வது, சந்ததியினருக்கு கற்பிக்காமல் விடுவது நமது தாயை அவமதித்து வாழ்வதற்கு சமம். நாம் தமிழர் என்ற அடையாளம் அழிந்து போகும் நிலை வருத்தத்திற்கு உரியது.

கலாச்சார சீரழிவு, பண்பாடு முறைகேடு:

தமிழனுக்கு என என்ன இருக்கிறது என ஆதங்கப்படும் நிலை இன்று வருவதற்கான காரணமே நல்ல பண்பை, நல்ல செயலை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லாததுதான். 'அம்மா எங்கே?' என இன்றைய நவநாகரீக தமிழர் குழந்தையிடம் கேட்டால், அக்குழந்தை அம்மாவிடம் சென்று 'அந்த மாமா என்னைத் திட்டுகிறார்' என ஆங்கிலத்தில் சொல்லும் அளவிற்கு நமது நிலை நகைப்புக்குரிய விசயமாகிவிட்டது.

தமிழர் ஒருவரிடம் தமிழ் கலாச்சார பண்பாடு பற்றி விளக்கமாக சொல்லுங்கள் எனக் கேட்டபோது அவர் அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என சொன்ன பதில் எந்த அளவிற்கு கலாச்சார சீரழிவும், பண்பாடு முறைகேடும் நடந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறியலாம். 'புலியை முறம் கொண்டு விரட்டிய வீரப் பெண்மணி' என தமிழரின் வீரம் பேசிய நாம் இன்று ஒரு வட்டத்தில் சிக்க வைத்து வழி தெரியாது தவிக்கின்றோம்.

'உடுத்தும் உடையிலும்
உண்ணும் உணவிலும்
பேசும் பேச்சிலும்
பார்க்கும் பார்வையிலும்
பணிவின் பாங்கிலும்
அடக்கத்தின் அறிவிலும்
அறிந்துகொள் மனிதனென்று
அதனினும் அவன் தமிழனென்று' என்பான் ஒரு கவிஞன்.

இன்று உடை பற்றிய சர்ச்சை பெரும் சர்ச்சையாகி வருகிறது. 'ஆடை இல்லாத மேனிஅவன் பெயர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு பொழுது போக்கு'என்னும் நிலை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. உணவு விசயத்திலும் அதே நிலை தொடர்கிறது. அப்படியெனில் மாற்றங்கள் அவசியமில்லையா என கேட்கலாம். மாற்றங்கள் நிச்சயம் வேண்டும், ஆனால் அந்த மாற்றங்கள் நமது அடையாளங்களை அழிப்பதை சம்மதிக்க நாம் நம்மை மாற்றிக் கொள்வது என்பது நம்மை நாமே அவமானப்படுத்துவதாகும்.

வழிமுறை:

'பழமை பழமையென்றுபாவனை பேசலன்றிபழமை இருந்தநிலை கிளியேபாமரர் ஏதறிவார்'என்பார் பாரதி. நமது கலாச்சாரம், பண்பாட்டினை நாம் முறையாக கற்றுக் கொண்டு பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நமது சந்ததியினருக்கு முறையாக கற்பிக்க வேண்டும். அச்சத்தில் உழன்று நாம் பின்தங்கி விடுவோமோ என்ற எண்ணம் அகற்றி திறம்பட செயல்புரிய வேண்டும்.

லெமூரியா என்றொரு கண்டம் இருந்ததாகவும், அங்கே தமிழர்கள் கலாச்சாரம் பண்பாட்டில் சிறப்புடன் விளங்கியதாகவும் அதில் இருந்த ஒரு பகுதியினர்தான் நாம் எனவும் கூறுவர். அக்கண்டம்தான் அழிந்துவிட்டது, ஆனால் நாம் இருக்கிறோம், நமது கலாச்சாரம் பண்பாடு அழியவிடாமல் காப்பது நமது கடமையல்லவா.

முடிவுரை:

'நல்லதோர் வீணை செய்தே அதைநலங்கெட புழுதியில் எறிவதுண்டோ'எறிந்துவிட்டோம். நமது வேரினை மறந்து விட்டோம். இனியும் அடையாளம் தெரியாத அளவிற்கு அது சிதைந்து போகும் முன்னர் எடுத்து சுத்தப்படுத்துவோம், பாதுகாத்து பின்வரும் நாளில் போற்றி காத்திடுவோம், தமிழர்களாகிய நாம் இதனை சூளுரையாக எடுத்து தொடர்ந்து செயலாற்றி வெற்றி பெறுவோம்.

புற்றுநோய்

புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.

Wednesday 15 October 2008

பேரின்பத் தழுவல்கள் நிறைவுப் பகுதி (9)

பொய்யென சொல்ல ஆரம்பித்ததும் அதில்
மெய்யும் இருக்கும் என்றே நீயும்
தாயாய் காத்து இருந்தாய் நானும்
சேயாய் விளையாடி விட்டேன்

இருநிலை வைத்ததன் நோக்கம் மனம்
ஒருநிலை எவர்கொள்வார் என்றே அறியவோ
பலநிலை பார்த்தபின் பழிசொல்லும் குணமற்று
தவநிலை எய்திட விரைந்தேன்

நடந்திடும் செயல்களில் எல்லாம் நீயென
கிடந்து உழலும் மனம் கொண்டதும்
மடிந்து எழும் மானிட பிறவிகள்
நொடிந்து போகாது இருத்திடுவாய்.

இருக்கிறாய் என்றே உரக்கச் சொல்கிறேன்
உருக்கிய உயிரை உனதென தருகிறேன்
தெளிவாய் சிந்தையில் ஒளிர்வாய் என்றென்றும்
அளிப்பாய் ஓரருள் யாவர்க்கும்.

பாதைகள் பலவென போடச் சொல்லி
போதையில் அமிழ்த்தி விட்டது போதும்
உனை அடையும் வழியானது ஒன்றேயென
வினை தீர்த்து சொல்லிடுவாய்!

முடி ரொம்பத்தான் அழகு

''ஏண்டா போய் முடிவெட்டிட்டு வரதுதானே, இப்படி பரட்டையாட்டம் முடிக்கு எண்ணெய் தேய்க்காம சீவாம இப்படியா வெயிலுல அலைஞ்சிட்டுத் திரிவ'' அம்மா ஏகநாதனிடம் சத்தம் போட்டார்.

''எனக்கும் உன்னைப்போல முடியை வளர்க்கனும்னு ஆசைம்மா, பேசாம இரேன்''

''சொன்னா கேளுடா, போய் முடியை வெட்டிட்டு வா, முடி ரொம்ப இருந்தா ஜலதோசம் பிடிச்சிக்கப் போகுது''

''இத்தனை நாளு பிடிக்காத ஜலதோசம் இன்னைக்காப் பிடிக்கப் போகுது நீ வேலையப் பாரும்மா''

''உங்க அப்பா வரட்டும் அவரைக் கூட்டிட்டுப் போய் வெட்டிவிடச் சொல்ரேன்''

''அவரே முடியை ஒழுங்கா வெட்டுரதில்லை, இதுல எனக்குத் துணையா அனுப்புறியா, அவருக்கு முடியை வெட்டச் சொல்லிட்டு நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்''

''நீ முடியை வெட்டாம வீட்டுக்குள்ள வந்த உனக்கு சாப்பாடு இல்லை சொல்லிட்டேன்''

''சாப்பாடு நீ போடாட்டா எதிர்த்த வீட்டு பாட்டி வீட்டுல சாப்பிட்டு போறேன்''

''அம்மா கூட பேசாதடா, எதிர்த்த வீட்டுல போய் சாப்பிடுவானாம்''

''பேசாதேனு சொல்லாதம்மா, நாளைக்கு வெட்டிட்டு வரேன்''

ஏகநாதனுக்கு முடியை வெட்டுவது என்றால் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. ஒவ்வொருமுறையும் நன்றாகவே வளரவிட்டு பின்னர் அம்மாவுடன் சண்டையிட்டு வெட்டிக்கொண்டு வருவது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே சண்டையிட்டுவிட்டு மனதில்லாமல் முடியை வெட்டச் சென்றான். முடியை வெட்டிக்கொண்டு ஆற்றினில் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டு இருக்கையில் ஒரு முனிவர் போல் தோற்றம் கொண்டவர் மரத்தில் கீழ் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர் அருகில் சென்றான் ஏகநாதன்.

''உங்களை இதுக்கு முன்னமே இங்கே பார்த்ததில்லையே''

''எப்பவும் இங்கதான் நான் வந்து உட்கார்ந்திருப்பேன், நீ என்னைப் பார்த்திருக்க மாட்ட, என்ன விசயம் சொல்லு''

''நீங்க இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கீங்க, தாடியும் பெரிய தாடியா இருக்கே, முடி வெட்டுறதில்லையா அதுவும் ஜடைவிழாமே நல்லா இருக்கே''

''நீட்டலும் மழித்தலும் வேண்டா, அது அதுபாட்ட வளர்ந்துட்டுப் போகுது, விழுந்துட்டுப் போகுது''

''எனக்கும் ஆசைதான், ஆனா முடியை வெட்டச் சொல்லி வற்புறுத்துராங்க''

''வெட்டமாட்டேனு வளர்த்துப் பாரு அப்புறம் வெட்டச் சொல்ல மாட்டாங்க, நான் சின்ன வயசில இருந்து இதுவரைக்கும் முடியை வெட்டினது இல்லை''

''நீங்க கொடுத்து வைச்சவருதான்''

''பேப்பர் எல்லாம் படிக்கிறது உண்டா?''

''இல்லையே''

''அறிவியலுல ஆர்வம் இருக்கா''

''அது எதுக்கு''

''ரத்தம் மூலம் உடலுல என்ன என்ன இருக்குனு அறிய முடியறதைவிட முடியை வைச்சி நம்ம உடலுல என்ன என்ன அப்படினு ஆதியில இருந்து சொல்லிரலாம் அதுக்கான ஆய்வு முறையை கண்டுபிடிச்சி இருக்காங்கலாம்''

''மரத்துக்கீழ உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்கிறீங்களோ''

''இந்தா பேப்பரை படிச்சிப் பாரு, அறிவியல் விசயம் தெரியும். மூடவிசயம்னு சொல்லப்படற செய்வினை செய்றதுக்குக் கூட முடியை உபயோகிப்பாங்க தெரியுமா''

''அதுதான் இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கிங்களா''

''நீளமான முடி நிறைய உயிரியல் விசயங்களை அடக்கி வைச்சிருக்குமாம், அதனால என்னோட சின்ன வயசு கால முதல் இன்னைக்கு வரைக்கும் என்ன இருந்ததுனு சொல்லிரலாம், எப்படி சாப்பிட்டாங்க, என்ன சாப்பிட்டாங்கனு கூட இந்த முடியில விசயம் மறைஞ்சிருக்குமாம்''

''அப்ப ஏன் மொட்டை போடுறாங்க''

''எல்லாம் தெரிஞ்சிருச்சினு வைச்சிக்கோ அகங்காரம் வந்துரும். முடிதான் ஒருத்தருக்கு அழகு. அப்படி அகங்காரத்தை தொலைக்கத்தான் மொட்டை போடச் சொல்றதா சொல்வாங்க, வளருர முடிதானே அதான் மொட்டை போடறதா சொல்வாங்க''

''இனி நான் முடியை வெட்டவே மாட்டேன், எனக்கும் உயிரியல் விசயங்களை இந்த முடி அடக்கி வைக்கட்டும்''

''தானா கொட்டிராம பார்த்துக்கோ''

''அட பாவிகளா'' ஏகநாதன் சொல்லிவிட்டு வேகமாய் ஓடினார் முடி திருத்தும் கடையில் தனது முடியைத் தேடி!

பேரின்பத் தழுவல்கள் 8

பிறவிப்பயன் எதுவென்று புரியாத நிலையின்று
கறந்தசொல் எதுவும் காதினுள் புகாது
மறதியில் மனம் சிக்குமோ மாயனே
அறம் உரைத்ததை காணுமோ?

சொற்சுடரே அழியாது நிற்கும் தவமே
அருட்சுடரே எம்மை ஆட்கொண்டு நின்றபின்
கறுக்கும் வானம் பொழியும் மழையில்
வெறுக்கும் எண்ணம் கரையுமோ?

ஐந்தெழுத்து மந்திரத்தில் அகமும் களிப்புற்று
பைந்தமிழில் புகழ்பாடும் பரந்தாமனின் எட்டெழுத்து
மந்திரத்தில் ஏதும் ஆவதில்லை என்றே
தந்திரம் செய்யுமோ மனம்

கொண்ட அருளை கூறுபோட்டு உள்பார்த்து
தீண்டலில் சுகமில்லையென்றே திருட்டு சொல்லி
வேண்டாமென ஒதுக்கிய விரக்தி நிலையை
தாண்டிட உனதருள் நாடுவனே

இக்கோலமும் புரிந்திட எனைநீயும் பணித்தாயோ
முக்காலமும் ஒருகாலமென அறிந்திட செய்தாயோ
சிக்கலையும் கலைத்திட வழியும் சொன்னாயோ
திக்கெலாம் உனையன்றி எதுவுமில்லை.

Tuesday 14 October 2008

பேரின்பத் தழுவல்கள் 7

இருளைத் தேடி இன்னலைத் தேடி
அருளை ஒதுக்கி அவமதிப்பினில் விழுந்து
பொருளே சுகமென போகம் பெரிதெனும்
மருள் நீக்கிட வருவாயா?

தேடலே உன்னிடம் யான் கொண்டிருந்த
ஊடலில் மனம் வதங்கி நின்றே
ஆடலில் பாடலில் உனையே கண்டு
கூடலும் கூடுமோ ஐயனே

உனைபற்றி சுதந்திரமாய் பேசுவதில் மனமின்றி
எனைபற்றி எவ்விதமும் உரைத்திடும் போதிலும்
வினையற்று நிற்கின்ற காட்சியாய் கண்டே
முனைப்பற்று போனது தவறே

நாரணனே உனை நாடியே வந்து
பேரருளே தந்திருந்த பெருமையுள ஈசன்கண்டு
கோரமும் கோபமும் அற்ற சாந்தம்
ஓரமாய் மனதினுள் விரியுமே

தெய்வம் உனையன்றி வேறில்லை என்று
மெய்யாய் பலரும் உரைத்ததை கேட்டும்
பொய்யில் விழுந்த புண் மனத்தை
ஐயனே அம்மையே காத்தருள்வீரோ?

Monday 13 October 2008

பேரின்பத் தழுவல்கள் 6

இறந்து போகும் நிலையை தினமும்
மறந்து விடாமல் நினைவில் இருத்தி
துறந்து விடச் சொன்ன விசயங்களை
பறந்து விடாமல் பற்றியிருப்பதை அறிவாய்.

போகும் என அறிந்து கொண்டு
வேகம் குறைப்பதில் அக்கறை இல்லாது
தேகம் தேய தேய உழைத்தொழிந்து
சாகும் நிலை வரும்வரை சகித்திருப்பாய்.

ஓடிய கால்கள் நிற்பதை மறக்கும்
தேடிய கண்கள் கிடைத்தும் தேடும்
வாடிய மனம் கண்ட இப்பிறவியில்
நாடிய உன்னையும் நஞ்சித்து வைக்கும்.

காலம் தொடரும் உன் தொடர்ச்சியில்
பாலம் கட்டியே இக்கரை நின்று
ஓலம் இட்டு சரியும் உயிர்களில்
கோலம் போட்டு களித்திருப்பது நீயாவாய்.

அமைதியில் மனதை இறுக்கி வைத்து
சுமைதீரும் என்றே உன்சுமை ஏந்தினாலும்
இமைமூடி இறந்ததும் உன்நினைவு அகலும்
உமை தழுவிடாது இருந்திடல் பிழையில்லை.

ராட்ஸ் விதி

என்னது ராட்ஸ் விதி என நினைத்து விட வேண்டாம். தமிழரான எனக்கு இந்தியாவில் இருந்தபோது ஆங்கில மோகம் இருந்தது என்பதை மறுக்க இயலாதுதான். சிறு வயதிலே கதை கட்டுரை நாடகம் படம் என விளையாட்டாய் திரிந்த பொழுது எங்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜெராகரா புரொடக்ஸன்ஸ். ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் அரோகரா ஆகிவிட்டது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் கவிதைகளை எழுதிக் குவித்த காலம். இப்படி கவிதைகளை எழுதி அதை வெளியிடும் நிறுவனமாக வைத்துக்கொண்டதுதான் ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட். ஆனால் இந்த ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட் நிறுவனமாக மாற்ற ஒருபோதும் முயற்சித்ததில்லை.

ராட்ஸ் எனும் பெயர் எனக்கு எப்படி வந்தது? அழகிய பெயரான இராதாகிருஷ்ணனை இராதா என்றே பலர் அழைக்க கல்லூரியில் வைத்துக்கொண்டதுதான் ராட்ஸ். ஆங்கிலத்தில் Rads என வரும். இன்றும் சில நண்பர்கள் ராட்ஸ் என்றே அழைப்பார்கள். ஆனால் வெளிநாட்டிற்கு வந்தபின்னர் உன்னை எப்படி அழைக்க எனக் கேட்டவர்களுக்கு ராதா என அழையுங்கள் என்றேன். பெண் பெயர் அல்லவா என தெரிந்தவர்கள் கேலி செய்தது உண்டு. என்னை ராதா என்றே அழையுங்கள் என சொல்லியாயிற்று. Rada என்றே எழுத ஆரம்பித்தார்கள். ஆஹா Rads இப்பொழுது Rada ஆகிவிட்டதே என நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.

ஆனால் இந்த ராட்ஸ் எனும் பெயர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கல்கத்தாவில் அனைவராலுமே ராட்ஸ் என்றே அழைக்கப்பட்டேன். ராட்ஸ் இண்டர்நேசனல் லிமிடெட் பதிவிட வேண்டும் என இங்கிலாந்திலே முயற்சித்தது உண்டு. ஆனால் இது தற்பெருமை அல்லவா என என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்ட நாளும் உண்டு. ஆனால் ஒருவர் என்னை மற்றவரிடம் அறிமுகப்படுத்தும் போது இவர் ஒரு விஞ்ஞானி, எழுத்தாளர் என்றெல்லாம் சொல்ல கூனி குறுகிப் போனேன். இறைவனின் அருளால் இத்தனை தூரம் கடந்த வந்த பாதைக்கு இப்படியும் ஒரு புகழுரை இருக்குமோ என அஞ்சாமல் இருக்க இயலவில்லை. என்ன சாதித்து விட்டோம், குடும்பத்தில் நிம்மதியை நிலவ முடிந்ததா, உலக குழந்தைகளின் வறுமை போக்க இயன்றதா? எதுவுமே இல்லை! ஆனால் இது எண்ணங்களோடு சரி, எதை செயல்படுத்த முடிந்தது? செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள், செய்ய இயலாதவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என ஒருவர் சொல்ல கேள்விப்பட்டது உண்டு. நான் இரண்டாவது ரகம் போலும். எனது பேச்சைக் கேட்டு எவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அறிவதற்கில்லை. ஏனெனில் செய்பவர்கள் அத்தனை பேசுவதில்லை.

இதெல்லாம் எல்லாம் இருக்கும் வரை தான். அதன் அடிப்படையிலே வலைப்பதிவு ஒன்றையும் தொடங்கிவிட்டேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு எல்லாம் கிடையாது அங்கே. முத்தமிழ்மன்றம் சூரியன் எனில் எல்லாம் இருக்கும் வரை வலைப்பதிவு ஒரு பூமி. அவ்வளவே. இங்கே பதிவிடப்படாமல் எந்த ஒரு கவிதையும் கட்டுரையும், கதையும் அங்கே நேரடியாகப் பதிவிடப் போவதில்லை. இப்படியெல்லாம் சட்டதிட்டங்கள் என்னுள். என்ன இவையெல்லாம் எல்லாம் இருக்கும் வரை தான்.

சரி விசயத்துக்கு வருவோம். விஞ்ஞானம் எனும் பகுதியில் இந்த வியாக்கியானம் தேவை தானா? தேவையில்லாமல் எதையும் அத்தனை எளிதாக எழுதிடத் தோணுவதில்லை தான். பின்னாளில், முன்னால் எழுதியவைகளை படிக்கும்போது அட இப்படியும் எழுதினோமா எனத் தோன்ற வைத்த பதிவுகள் பல உண்டு இங்கே. இப்படியெல்லாமா எழுதினோம் என வெட்கப்பட வைத்த பதிவுகளும் உண்டு. ஆனால் தவறாக மனதில் இன்று படும் முன்னால் பதிவுகளை திருத்திட முனைந்ததில்லை. அன்று அது சரி, இன்று அது தவறு நாளை சரியாகவே இருக்கக்கூடும்.

ராட்ஸ் விதி என்ன சொல்கிறது?

ராட்ஸ் விதி: ஈர்ப்பு விசையும், எதிர் விசையும் அதனால் உண்டாகும் சம விசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் மட்டுமே நோபல் பரிசுக்கோ, விதி என சொல்வதற்கோ பரிந்துரைக்கப்படும், சரியென ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விளக்கம் சரியாக இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும்.

நமது முன்னோர்கள் சொல்வார்கள், எல்லாம் மனசு தான் காரணம். உள்ளிருப்பதே வெளியில் எனவும் சொல்வார்கள். இதற்கு, ராட்ஸ் விதிக்கு நான் தரும் விளக்கம்.

நான் நேராக பூமியின் மேல் இப்போது நிற்கிறேன். பூமியின் விசையானது என்னை நேராக கீழே இழுக்கிறது. ஆனால் நான் விழாமல் இருக்க நான் பூமியின் மேல் எதிர்த்து தரும் விசையானது சமமாக இருக்க நேராகவே நிற்கிறேன். இப்போது எனது எடை 750N. 750N விசையை நான் செலுத்த பூமியானது அதே விசையை என்மீது செலுத்துகிறது. நினைவில் கொள்ளுங்கள் நான் நினைவுடனே நிற்கிறேன் மேலும் நேராகவே நிற்கிறேன்.

சற்று நேரத்தில் தூக்கம் வந்துவிடுகிறது. நான் நேராக நிற்க இயலவில்லை, விழுந்துவிடுகிறேன். அதே 750N. பூமி என்மீது செலுத்தும் விசையும் அதே 750N தான். அப்பொழுது என்னை நேராக நிற்க வைத்திருந்தது உடலில் பரவியிருந்த எண்ண விசை. இந்த எண்ண விசையானது எந்த ஒரு உதவிப் பொருளும் இல்லாமல் என்னை நேராக நிற்க வைத்தது. ஆனால் எண்ண விசையானது இல்லாத பட்சத்தில் நேராக நிற்க இயலவில்லை. ஆக ஈர்ப்பு விசையும் அதற்கான எதிர்விசையும் அதனால் ஏற்படும் சமவிசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே என்கிறேன் நான்.

எதிர்கருத்து வரும் அல்லவா? சரி இப்பொழுது உடல் கீழே விழுந்துவிட்டது. அப்படியெனில் உடலில் விசை ஒன்று அதிகமாகி இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் உடல் ஆகாயத்தில் பறந்திருக்கும். ஆனால் முதலில் உடல் எடை செலுத்திய விசை 750N. அதில் எண்ண விசையும் அடக்கம். இப்பொழுது எண்ண விசை கழிந்தால் குறையத்தானே வேண்டும், ஏன் அதிகரித்தது என கேள்வி வரும். நான் விழுந்தது பக்கவாட்டில்! பூமிக்குள் எனது கால்கள் புதைந்து செல்லவில்லை! பக்கவாட்டில் நான் விழுந்தபோது அங்கே ஈர்ப்பு விசையானது குறைவாக இருக்க நான் விழுகிறேன், இப்பொழுது விழுந்த உடன் மொத்த விசையும் பரவி பூமி எனது உடலுக்கு மேல் செலுத்தும் விசை 750N. எனது உடல் செலுத்தும் விசை அதுவே. அப்படியெனில் எண்ண விசை எவ்வளவு? 0.00000000000001க்கும் குறைவாகவே இருக்கலாம்.

இது எப்படி சாத்தியம்? இந்த விசையானது இப்படியொரு விளைவை எப்படி ஏற்படுத்த முடியும்? ஏற்படுத்துகிறதே. நினைவு வந்ததும் எழுந்து விடுகிறோம். பலரால் எழ முடியவில்லை, நடக்க முடியவில்லை என்பது கூட எண்ண விசையால் கட்டுப்படுத்தப்படுபவையே.

இது எப்படி? புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு அணுவின் நிறையானது புரோட்டான் மற்றும் நியூட்ரான் மட்டுமே என்கிறது அறிவியல். எலக்ட்ரானுக்கும் நிறைக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். ஆனால் இந்த எலக்ட்ரான்கள்தான் மொத்த உலகமும் உருவாக புது புது விசயங்கள் உருவம் கொள்ள காரணம். எல்க்ட்ரான்கள் எப்படியோ அப்படியே நமது எண்ணம் கொண்டுள்ள விசையும்.

ராட்ஸ் விதி நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. சாதம் கொதித்தபோது மூடப்பட்ட தட்டு தள்ளாடியது. நீராவி எஞ்சின் உண்டானது. மரத்தில் இருந்த ஆப்பிள் கீழே விழுந்தது, ஈர்ப்பு விசை என கண்டறியப்பட்டது.மனிதனில் ஏற்படும் மாற்றங்கள் என்ன செய்தது? இறைவனை அல்லவா கண்டு கொண்டது. எனவே ராட்ஸ் விதி அறிவியலால் நிராகரிக்கப்படுகிறது.

Sunday 12 October 2008

பேரின்பத் தழுவல்கள் -5

எங்கு இனியுன்னை தேடிக் கண்டிட
சங்கு சக்கரம் தாங்கிய உருவம்
நிலவுடன் புலித்தோல் போர்த்திய உருவம்
பலவும் கண்ணை மறைத்தது!

கொண்ட எண்ணத்தில் கீறல் விழுந்திட
அண்ட சாரம்சம் அனைத்தும் பறந்திட
உருவத்தில் உன்னை வைத்துப் பார்த்ததும்
பருவத்தில் தொலைத்த காதலிது.

யாருமில்லா இடம் நோக்கி நகர்ந்திட
நீரும் சோறும் தட்டிக் கழித்து
உடுத்திய உடையை கிழித்து எறிந்து
எடுத்த கோலம் கண்டாய்.

சுற்றுச் சுவர்கள் தெரிய மறுத்தது
பற்று பாசம் நினைவு வெறுத்தது
இருப்பாய் என்றே ஒளியின் வேகத்தில்
சுருக்கிக் கொண்டேன் உயிரை.

குலுக்கியதும் சில்லென குலுங்கியது குற்றுயிர்
உலுக்கியதும் சிதறி விழுந்தன உணர்வுகள்
அறைந்து சொல்லி உறைய வைத்தாய்
மறைந்து இருப்பேனென்றது புரிந்தது.

Saturday 11 October 2008

குஞ்சுகளை விரட்டும் தாய்பறவை

முன்னுரை:-

தனிமனிதனின் ஆர்வமும், தனிமனித திறமையை அடைத்து வைத்துக் கொள்ளாமல், அத்திறமையானது உலகம் யாவும் பரவி தனி ஒருவருக்கு மட்டுமல்லாது, உலகத்திற்கே பயன்படுமாறு ஒருவர் வாழும் வாழ்க்கை மிகவும் சிறந்த வாழ்க்கையாக கருதப்படுகிறது. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் அத்தகைய சிறப்பு வாழ்க்கை வாழ்வதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

திருவள்ளுவரின் கூற்று:

‘’தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று’’ என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் பிறந்த பிறப்பின் வெற்றியானது அவர் பெறும் புகழ் மட்டுமல்லாது, அதனை தக்கவைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. இந்த குறள் திருவள்ளுவருக்கு மிகவும் பொருந்தும்.

‘’ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்’’எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். அன்னையானவர் தனது குழந்தைகளை அடைத்து வைத்தால், உலக அறிவினைப் பெற விடாது ஒடுக்கி வைத்தால் எப்படி அக்குழந்தை சான்றோன் ஆவது?

எந்த ஒரு தாயும் தனது பிள்ளைகளின் மகிழ்ச்சியில் பெரிதும் பூரித்துப் போவாள். பாரெல்லாம் போற்றும்படி தனது பிள்ளை இருக்க வேண்டி, தாயானவள் தனது பிள்ளைகளை தொலைதூர கல்லூரியிலும் படிக்கவும், வேலை பார்க்கவும் அனுப்பி மகிழ்ச்சியில் திளைத்து இருப்பாள். பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது பாசத்தை மனதோடு பூட்டி வைத்து அப்பிள்ளையை அனுப்பும் அன்னையை குறை சொல்ல இயலாது.

பறவைகளின் வாழ்க்கை:

‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ ‘’திரைகடலோடியும் திரவியம் தேடு’’ என நமது முன்னோர்கள் கூறியதன் காரணம், இவ்வுலகத்தில் வந்து பிறந்த மறு கணமே நமக்கு இந்த உலகம் முழுவதும் சொந்தம் என்றாகிவிடுகிறது. எனவே நம்மை சுருக்கிக் கொள்ளாமல், நமது ஆற்றலைப் பெருக்கி, பொருளாதாரத்தில் உயர்வு அடைவது மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்படி செய்வது சிறந்தது. அதற்கு தாயானவர் தனது பிள்ளைகளை சுயமாக வாழும்படி கற்றுக் கொடுத்து திறமையானவர்களாக இருக்க வழி செய்ய வேண்டும்.

பறவைகள் தனது குஞ்சுகளுக்கு இரை தேடி வருவது மட்டுமின்றி, பிற விஷமிகளிடமிருந்து காப்பாற்றியும் வரும். ஒரு காலகட்டம் ஆனதும், அந்த குஞ்சுகளை தனது சொந்தக்காலில் நின்று வெற்றி பெற வழி அனுப்பி வைக்கும். அப்படி அந்த தாய் பறவையானது செய்யாது போனால், பறவை இனம் இன்று அழிந்து போய் இருக்கும் என்பதை கண்கூடாக நாம் அறியலாம்.

‘’இறக்கை முளைத்துவிட்டது, அதனால்தான் பறந்து போய்விட்டது’’ என பறவையினை எடுத்துக்காட்டி பேசுபவரும் உண்டு. பறக்காமல் இருக்க வேண்டுமெனில் இறக்கை எதற்கு? எனவே பறவையின் வாழ்விலிருந்து தனக்கென தொழிலைக் கற்றுக் கொண்டு தனித்துவமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி பறவைகள் போல் விதைக்காமல், அறுவடை செய்யாமல் இருந்தால் நமது மனித இனம் அழிந்து விடும்.

ஒரு உண்மைச் சம்பவம்:

ஒரு தாய் தனது மகனை தன்னுடன் கிராமத்திலேயே இருக்கச் செய்தார். இளநிலை படிப்பு படிக்க வேறு இடம் அனுப்ப அவருக்கு மனமில்லை. இவ்வாறு அனுப்பாமல் அந்த மகனுக்கு உரிய தொழிற்பயிற்சியும், மனவலிமையும் கற்றுத்தராமல் அந்த மகனை தாய் வளர்த்து வந்தார். பெரும் செல்வந்தரான அந்த மகன் தாயின் அரவணைப்பிலே வளர்ந்து எதுவும் கற்றுக் கொள்ளாமல் பின்னாளில் அனைத்து சொத்துக்களையும் இழந்து தனிமைப் படுத்தப்பட்டு அவதிப்பட்டார். அந்த மகனின் இயலாமைக்கு அந்த தாய் பழி சுமத்தப்பட்ட நிகழ்வு அனனவரது மனதிலும் ஒரு ஆதங்கத்தை உருவாக்கும். மேலும் இது போல் வாழ்பவருக்கு இது ஒரு நல்ல படிப்பினையாகும்.

வெளி இடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதால் மட்டும் அப்பிள்ளை சாதித்து விடாது, அதற்குரிய மனவலிமை, பயிற்சி அனைத்தும் தாய் கற்றுத் தர வேண்டும், பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நினைவில் கொள்வது நல்லது.

முடிவுரை:

‘’பிள்ளையைப் பெத்தா கண்ணீரு’’ ‘’குழந்தையைப் பெத்தா கோமணம் மிச்சம்’’ போன்ற பாடல் வரிகள் இனிமேல் வராமல் இருக்க வேண்டுமெனில் பெற்ற குழந்தைகளை அடைத்து வைக்காமல், உரிய பயிற்சி தந்து அவர்களது முயற்சியில் வெற்றி பெற அவர்களை தனியாய் அனுப்பி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.

பேரின்பத் தழுவல்கள் -4

அலையென நரம்புகளில் உணர்வுகள் பரவிட
சிலையென என்னை நீயும் ஆக்கினாய்
தன்னுணர்வு கொண்டு பார்த்த வேளையில்
என்னுணர்வு கொன்று சிலையானாய்!

நடுக்கம் தோய்ந்த கைகள் இழுத்தே
வெடுக்கென கொட்டிய தேளின் வலியில்
துடித்து கதறும் சிறுபிள்ளை நிலையில்
வெடித்து மூளை சிதறியது!

சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம் இருளுண்டாக்கி
நேற்று இன்று நாளை மறந்து
தனித்து அடைத்து கண்கள் மூடுகையில்
மெளனித்து அமர்ந்தாய் அருகினில்!

ஒதுங்கிப் போய்விடுவென உரக்க சொல்லிட
வதங்கி வாய்வந்து நின்றிடும் வார்த்தை
விழுந்து விடாவண்ணம் உன்காலில் விழுந்தேன்
எழுந்து வாவென சொல்லாயோ!

ஏக்கம் கொண்டு கேவி அழுகையில்
துக்கம் துடைத்திடும் விரலால் தொட்டாய்
இப்பொழுதேனும் என்னுடன் இருந்திடுவென அரற்றுகையில்
எப்பொழுதும் இருப்பேனென மறைந்தாய்!

Friday 10 October 2008

அவசர அறிவிப்பு

விண்வெளி ஆராய்ச்சியாளர் முருகானந்தம் வீட்டிற்குள் சந்தோசம் கலந்த முகத்துடன் வேகவேகமாக நுழைந்ததைக் கண்டு அவரது மனைவி பிரியா புரியாது கேட்டார்.

'என்ன அவசரமாக வருகிறீர்கள். என்னாயிற்று?'

'மிக முக்கியமான விசயம், உடனடியாக செயல்படுத்த வேண்டும், இதற்கு எவ்வளவு செலவு ஆகும் எனத் தெரியவில்லை, எப்படி அனைத்து நாடுகளும் ஒப்புக்கொள்ளும் என்று தெரியவில்லை ஆனால் இதைக் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும்' என்று சொன்னவாரே தனது அறைக்குள் சென்று முருகானந்தம் தன்னுடன் கொண்டு வந்திருந்த அனைத்து விபரங்களையும் ஒழுங்குப்படுத்தினார்.

அவரைப் பின் தொடர்ந்து வந்த அவரது மனைவி பிரியா 'அப்படி என்ன முக்கியமான காரியம், நிதானமா யோசியுங்க' என்று சொன்னதும்தான் தாமதம்,

முருகானந்தம் வேகமாக திரும்பி 'இது அப்படி யோசிக்க வேண்டிய காரியமில்லை, இன்னைக்கு நானும் நண்பர் சிவானந்தமும் ஒரு முக்கியமான விசயத்தைக் கண்டுபிடிச்சிருக்கோம். இயந்திர தொலைநோக்கியின் மூலம் 5000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நமது பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சிருக்கோம். சாதாரணமான ஒளியானது பல்வேறு பகுதிகளில் சிதறுவதால் அது நமது பூமியை அடைவது இல்லை, ஆனா ஒரு நட்சத்திரமானது மற்றொரு நட்சத்திரத்திற்கு அருகில் போனால் அந்த நட்சத்திரத்தின் ஒளியானது வளையும் அதனால அந்த நட்சத்திரம் பிரகாசமா தெரியும். அப்படி நாங்க உருவாக்கின தொலைநோக்கியால பார்த்தப்ப நம்ம பூமி போல ஒரு கிரகம் பார்த்தோம், இதுவரைக்கும் யாரும் பார்த்தது இல்லை' என வெகுவேகமாக சொல்லிக்கொண்டே அனைத்து கோப்புகளையும் தயார்படுத்திக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினார் முருகானந்தம்.

'வாழ்த்துகள் உங்களுக்கு, ஆனா இப்ப அதுக்கு என்னங்க வந்துருச்சு, இவ்வள அவசரமா தலைபோற காரியம் மாதிரி செய்றீங்களே' என்றார் பிரியா.

'நம்மளைப் போல அறிவான உயிரினங்கள் அங்கு வாழக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கு, நாம இங்கிருந்து அங்க போக கிட்டத்தட்ட 6 பில்லியன் வருடங்கள் ஆகும், அதனால நாம அங்கு போக நமக்கு சாத்தியமில்லை. ஆனா அவங்க அங்கே இருந்து இங்கு வர சாத்தியம் இருக்கலாம்' என விண்வெளி ஆராய்ச்சியாளர், ஜோசியக்காரர் போல் இந்த விசயம் சொன்னதும்

பிரியா சிரித்துக் கொண்டே 'என்னங்க நாம போக முடியாதுனா, அங்க யாரும் இருந்தா இங்க வரமுடியாது தானே. இதுக்குப் போய் வந்ததும் வராததுமா ஒரு காப்பி கூட குடிக்காம என் முகத்தைப் பார்த்துக் கூட பேசாம பறக்கிறீங்களே' என்றார்.

'உனக்கு சிரிப்புதான் வரும், நம்ம பூமியின் நிலையைப் பார்த்தியா, குழந்தைகள் பசி பட்டினியால அவதிப்படறாங்க, ஒவ்வொருத்தரும் ஒரு நம்பிக்கையை கையில வைச்சிக்கிட்டு எதிர்மாறா நடக்கிறாங்க. எங்கப் பார்த்தாலும் அமைதியில்லாத சூழ்நிலை, சுற்றுப்புற சுகாதார பிரச்சினை, பணப் பிரச்சினை, உள்நாட்டு வெளிநாட்டு கலவரங்கள், நாட்டு உரிமை இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள். இப்படி நாம துண்டாடிக் கிடக்கறதை அவங்க வரும்போது பார்த்துட்டா நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க அதான் இதைப்பத்தி நாட்டுத் தலைவர்கள்கிட்ட பேசி உடனே அனைத்தையும் சரி செய்யனும் அதான் நமது ஜனாதிபதியை சந்திக்க கிளம்பிட்டு இருக்கேன்' என்றார்.

'நல்ல விசயம்தான், ஆனா இதெல்லாம் கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாத் தெரியலை உங்களுக்கு, போன வாரம் நம்ம சாலையில சாக்கடை செல்லும் குழாயில் அடைப்பு இருந்தது, அதை சரிசெய்ய உங்களை புகார் கொடுத்து வரச் சொன்னப்ப இந்த ஊர் கவுன்சிலருப் பார்த்துப்பாருனு சொன்னீங்க, நீங்க செய்யலைனு தெரிஞ்சதும் நான் போய் புகார் கொடுத்து இப்ப சரியாயிருச்சி, அப்ப நம்ம இடத்தைப் பார்த்து மற்றவங்க என்ன நினைப்பாங்கனு வராத அக்கறை இப்ப வந்துருக்கிறது கொஞ்சம் அதிகம்தான்' என பிரியா சொன்னதும்

முருகானந்தம் தன்னிடம் இருந்த கோப்புகளை எடுத்து மேசையில் வைத்தார். 'எல்லா நல்ல காரியங்களும் ஒரு தனி மனிதன்கிட்ட இருந்துதான் தொடங்கனும், ஆனா தனிமனிதனுக்கு ஆயிரம் சிந்தனைகள் இருக்கு. இப்படி இருக்கேனு நினைச்சி சொல்லிக்காட்டிட்டு போறவங்கதான் ரொம்ப பேரு, ஆனா இப்படி இருக்கேனு அதை சரி செய்யறவங்க கொஞ்ச பேருதான். இது அவசர உலகம் பாரு. நீ செஞ்ச நல்ல காரியத்துக்கு எனது வாழ்த்துகள், ஒரு பூமி போல ஒரு கிரகத்தை கண்டுபிடிச்சதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. அவங்க வந்துட்டா நம்ம பூமியைப் பார்த்து ஏளனம் பண்ணுவாங்களேனு தோணிச்சி, இப்ப நம்ம நாடுக ஒருத்தரை ஒருத்தர் ஏளனம் பண்ணிக்கிட்டு இருக்கறது மறந்தே போச்சு'என அமைதியாய் இருக்கையில் அமர்ந்தார்.

பிரியா புன்னகைத்துக் கொண்டே தனது கணவனுக்காக காப்பி போடச் சென்றார்.

காபியை அருந்திவிட்டு மனைவிக்கு தனது அன்பு வார்த்தைகள் சொல்லிவிட்டு தான் அவசர அவசரமாக வரும்போது வீதி வழியில் தான் கண்ட குப்பையினை எடுத்துப் போடாமல் வந்தவர், இப்பொழுதும் எடுத்துப் போடாமல் இருப்பதை கண்டு நிதானமாக அப்புறப்படுத்தினார்.

'என்னது கிரகத்தைப் பார்த்துட்டு இருக்கற மனுசனுக்கு, கிரகம் பிடிச்சிருச்சி போல இப்படி ரோட்டுல கிடக்கற குப்பையை அள்ளிப் போட்டுட்டு கிடக்காரு' என அந்த வீதி வழியில் நடந்து சென்றவர்களின் பேச்சு முருகானந்தத்திற்கு சுர்ரெனப் பட்டது. எனக்கும் தான்.

முற்றும்.

என்னவாகி இருப்பீங்க?

அந்த அழகிய வீட்டின் முன்னால் திங்கட்கிழமையன்று அதிகாலையில் சேவல் 'கொக்கரக்கோ' என கூவியது. திங்கட்கிழமையாய் இருந்தால் என்ன, செவ்வாய்கிழமையாய் இருந்தால் என்ன, சேவல் என்ன குயிலா? 'கொக்கரக்கோ' என்றுதானே கூவும். அதே நேரத்தில் அந்த அழகிய வீட்டின் அருகில் இருந்த தொழுவத்தில் ஒரு பசுமாடு 'மா' என்று சத்தமிட்டது. பசுமாடு என்ன இன்றைய சூழலில் மாறிப்போன மனிதர்களின் வழியா? 'மா' என்றுதானே சத்தமிடும்.

சரியாக நேரம் காலை நான்கு மணி முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. தெய்வசிகாமணியின் பஞ்சாங்கப்படி இன்று சூரிய உதயம் ஆறு மணி இருபத்தி ஒன்பது நிமிடங்களுக்குத்தான். வழக்கம்போல காளியம்மாள் அதிகாலை எழுந்து 'சரக் சரக்' என வீட்டின் முன் வாசலைப் பெருக்க ஆரம்பித்து இருந்தார். மாலையும் பெருக்குவார். நாள்பொழுதெல்லாம் குப்பை விழத்தானே போகிறது என பெருக்காமல் விட்டுவிடமாட்டார். மாலையும் பெருக்குகிறாரே, எவ்வளவு குப்பைகள் வந்து விழுகிறது என கணக்கா எடுக்கிறார்? பெருக்கி இப்போது கூட்டி முடித்துவிட்டார். வீட்டு வாசல் மிக மிக மிக சுத்தமாக இருந்தது.

பசுமாட்டு சாணத்தை எடுத்து தண்ணீரில் கரைத்தார். வாசலில் முன்புறம் தெளித்தார். சாணம் கரைத்த தண்ணீரைத் தெளிக்காது, சாதாரணத் தண்ணீரை அவரைத் தெளிக்கச் சொல்வது சரியில்லைதான். வாசல் தெளித்தவர் கோலம் போட ஆரம்பித்துவிட்டார். குறுக்குவாட்டில் ஆறு புள்ளிகள் வைத்தார். அடுத்த வரிசையும் ஆறு புள்ளிகள் வைத்தார். இப்படியே புள்ளிகள் வைத்து அந்த புள்ளிகளை இணைத்தபோது அழகிய தாமரை உருவாகியிருந்தது. மலர் உருவாகும் இடத்தில் சாணத்தை உருண்டை செய்து வைத்தார், அதன்மேல் ஒரு சின்ன மலரையும் வைத்தார். பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மணி ஐந்து ஆகியிருந்தது. இந்த அரைமணி நேர வேலையை இப்பொழுது பலர் செய்வதே இல்லை.

தனது ஒரே மகனான கோபாலுவினை காளியம்மாள் எழுப்பினார்.

'கோவாலு, கோவாலு மணி அஞ்சு ஆச்சுப்பா, எழுந்திருப்பா, இன்னைக்காவது ஒனக்கு நல்ல நேரம் பொறக்கட்டும்'

கோபால் அவசர அவசரமாக எழுந்தான். அருகில் படுத்து இருந்த தந்தையை எழுப்பிவிட்டான். அம்மா எழுப்பாமல் இருந்து இருந்தால் மனதில் சொல்லி வைத்தபடி சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடங்களுக்கு எழுந்து இருப்பான். தூங்கும்போது காலையில் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என நமக்குள் சொல்லி்வைத்துக் கொண்டால் நமது விழிகள் சரியாக அத்தனை மணிக்கு விழித்துக் கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் 'பயாலாஜிக்கல் கிளாக்' என சொல்வார்கள். தமிழில் 'உயிரியல் நேரம்' என சொல்லிக்கொள்வோம்.

குளித்த பின்னர் தனது வீட்டில் இருந்த பூஜை அறையில் சாமிக்கு விளக்கு ஏற்றி வழிபட்டான் கோபால். வழிபாட்டினை மனதுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும் என சொல்வார்கள். ஆனால் கோபால் எப்போதும் வாய்விட்டு சொல்வதுதான் வழக்கம்.

'சாமி, இன்னைக்கு போற இண்டர்வியூல எப்படியாவது எனக்கு வேலை கிடைச்சிரனும், உன்கிட்ட நான் வேலை தேடிப் போறப்ப எல்லாம் சொல்லிட்டுதானே போறேன், இந்த தடவையும் என் தேவையை விட இன்னொருத்தர் தேவை அதிகம்னு நினைச்சிராதே எப்படியாவது எனக்கு இந்த வேலை கிடைச்சிர வழி செய்'

வேண்டுதல் முடித்து தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்கினான். 'வேலை கிடைச்சிரும்' என இருவருமே வழக்கம்போல ஒருசேர சொன்னார்கள். அம்மா சுடச்சுட தயார் செய்த இட்லிகளை வைத்தார். கூடவே சட்னியும் சாம்பாரும். அமைதியாக ரசித்து சாப்பிட்டான் கோபால்.

நேர்முகத் தேர்வுக்கு பலர் வந்து இருந்தார்கள். 'நம்பிக்கை' எனும் வார இதழில் நிருபர் பணிக்கான வேலை அது. கோபால் அங்கிருந்தவர்களிடம் எல்லாம் சகஜமாக பேசினான். அனைவரும் வேலை கிடைக்க வேண்டுமே என்ற ஒரு நோக்கத்தில் சந்தோசத்தை சற்று ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அச்சம் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. நிலைமையை புரிந்து கொண்ட கோபால் தனது மனதில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டும் பதில் சொல்லிக்கொண்டும் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டான். நேர்முகத் தேர்வும் நடந்து முடிந்தது. ஒரு வாரத்தில் பதில் சொல்கிறோம் என சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீட்டிற்கு மாலை வந்து சேர்ந்தான். அம்மா வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். கோபாலைப் பார்த்ததும் அம்மா கேட்டார்.

''கோவாலு, எப்படிப்பா பண்ணினே, என்னப்பா சொன்னாக''

''நல்லா பண்ணியிருக்கேன்மா, ஒரு வாரத்தில சொல்றேனு சொல்லி இருக்காக''

''இதுதான்பா எனக்கு உன்கிட்ட பிடிச்சது, நாம பண்ற விசயத்தை நல்லா பண்ணியிருக்கோம்னு நமக்குத் தோணனும், மத்தவங்க ஒருநாளைக்கு இல்லாட்டி ஒருநாள் நல்லா இருக்குனு சொல்லியிருவாக, கை காலு அலம்பிட்டு வா காபி போட்டுத் தரேன்''

''ஏன்மா தோட்டத்துக்குப் போய்ட்டு வந்துட்டியா''

''வேலை சீக்கிரம் இன்னைக்கு முடிச்சிட்டோம்பா''

மறுநாள் காலையில் வழக்கம்போல அம்மாவுடனும் அப்பாவுடனும் தோட்ட வேலைக்குச் சென்றான் கோபால். அங்கிருந்தவர்கள் காளியம்மாளிடம் 'பையன் காலேசுல பெரிய படிப்பு படிக்குதுனு சொன்ன, இன்னுமா வேலை கிடைக்கல இரண்டு மாசம் ஆகப்போகுதுல்ல, ஆனாலும் உன் பையன் கெட்டிக்கார பையன் காளியம்மா, இம்புட்டு படிச்சிருக்கோம்னு நினைக்காம தோட்டத்துல உடம்பை வளைச்சி வேலை செய்யுது பாரு அதைப் பாராட்டனும்' என சொன்னபோது 'வேலை வேலைனு தேடுறான், படிச்ச படிப்புக்கான வேலை கிடைக்கவரைக்கும் தோட்டத்துல வேலை செய்றேனு சொல்றான், வேணாம்னு சொன்னாலும் கேட்கறதில்ல, சரி செய்யட்டும்னு விட்டுட்டேன். நாம வேலைக்கு ஆளு கூப்பிட்டு வேலை செய்றோம், இதோ நிற்கிறாளே செல்லாயி இவ அம்மாக்கு உடம்பு சரியில்லைனு இவ வந்துருக்கா, பாவம் என்கிட்ட வந்து எது களை, எது செடினு கேட்டா, சொன்னேன் எம்புட்டு வேகமாக வேலையை செஞ்சா அப்படி சொல்லிக்கொடுத்தா வேலையை செஞ்சிட்டு போறான், ம்ம் எந்த மவராசன் வேலை கொடுப்பானோ எம்புள்ளைக்கு' என்றார் காளியம்மாள்.

அதே சேவல். கொக்கரக்கோ. அதே பசுமாடு. மா. அதே சாணம். கோலம். ஒரு வாரம் ஓடியேப் போனது. தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வீடு வந்த கோபால் தபால் இருப்பதை எடுத்துப் பார்த்தான். அச்சத்துடன் தபாலினைப் பிரித்தான். உள்ளே இருந்த கடிதம்தனை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளினான். 'அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, அப்பா எனக்கு வேலை கிடைச்சிருச்சி, சாமி எனக்கு வேலை கிடைச்சிருச்சி' என சத்தமிட்டான்.

''கோவாலு நீ செயிச்சிட்டிப்பா எப்போ வரச் சொல்லியிருக்காக''

''அடுத்த வாரம் வரச்சொல்லியிருக்காகம்மா, இன்னும் ஒரு வாரம் நம்ம தோட்டத்துல வேலை செய்யலாம்மா''

''ஒரு வாரம் வீட்டுல இருப்பா அதான் வேலை கிடைச்சிருச்சில்ல''

''இல்லம்மா, உங்களோட எல்லாம் வந்து வேலை செய்யிறது சந்தோசமா இருக்கும்மா ஆனா இந்த வேலைக்குப் போகனும்னுதானே படிச்சேன், இந்த வேலை மூலம் நம்ம வேலையோட முக்கியத்துவத்தை மக்கள் முன்னால கொண்டு போவேன்மா''

காளியம்மாளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வேலை கிடைத்த விசயம் அறிந்தவர்கள் கோபாலினைப் பாராட்டினார்கள். முதல்நாள் வேலை அன்றே அந்த வார இதழ் ஆசிரியரிடம் தான் ஒரு கட்டுரை எழுத இருப்பதாக கூறினான் கோபால். கட்டுரையின் தலைப்பு என்னவாகி இருப்பீங்க? எனவும் எப்படி நடிகர், நடிகையரிடம் என்னவாகி இருப்பீங்க என கேட்கிறார்களோ அதைப்போல கிராமத்து மக்களிடம், சிறந்த மருத்துவர்களிடம், சிறந்த கட்டிடக்கலைஞரிடம் என பலரிடம் கேட்டு எழுத இருப்பதாக சொன்னதும் ஆசிரியர் கோபாலினை பாராட்டி உடனே சம்மதம் சொன்னார்.

முதன்முதலாக தனது ஊருக்கு வந்து தனது தாய் தந்தையரிடம் கேட்டான்.

''நீங்க இரண்டு பேரும் இப்போ விவசாயம் பார்க்காம இருந்தா என்னவாகி இருப்பீங்கனு சொல்ல முடியுமா?''

''நாங்க சொந்த விவசாயம் பார்க்காம இருக்கிற நிலை இருந்து இருந்தா கூலி விவசாயம் பார்த்து இருந்து இருப்போம், எங்களுக்குத் தெரிஞ்ச தொழிலு இதுதான்பா, படிக்கப் பிடிக்காம விவசாயம்னு வாழ்க்கை சந்தோசமா இருக்கு''

அதற்கடுத்தாக அந்த ஊரில் இருந்த செல்வந்தரை ஒருவரைப் பார்க்கச் சென்றான்.

''நீங்க இப்படி விவசாயம் பார்க்காம இருந்து இருந்தா என்னவாகி இருப்பீங்க?''

''தம்பி கோபாலு எப்படி இருக்க, வேலை கிடைச்சதும் அதுவுமா என்கிட்ட கேள்வி கேட்க வந்துட்ட. நான் படிச்சது எலக்ட்ரிகல் என்ஜினியரிங். ஒரு கம்பெனிக்கோ, பஸ் டிப்போக்கோ வேலைக்குப் போகாம நாம ஊர் தோட்டத்துக்கு எல்லாம் உதவியா இருக்கும்னு அப்படியே விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். இந்த விவசாயம் இல்லாம இருந்து இருந்தா படிச்ச படிப்புக்கான வேலையைப் பார்த்து இருந்துருப்பேன்''

இவ்வாறு பலரிடம் பேசியபின்னர் கடைசியாக ஒரு சமூக நல சேவகரிடம் சென்றான் கோபால்.

''நீங்க சமூக நல சேவகராக இல்லாட்டி என்னவாகி இருப்பீங்க?''

''நான் சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''

''ஓ உங்களுக்குனு வேறு வேலை, ஆசை இருந்தது இல்லையா?''

''தம்பி ஒவ்வொரு வேலையும், ஒவ்வொரு படிப்பும் சமூக நலனில் அக்கறை செலுத்தக்கூடியதாக இருக்கனும். இப்போ நீங்க செய்ற வேலை கூட சமூக நலன் கருதியதுதான். டாக்டரோட வேலை சமூகத்தில் எந்த ஒரு நோயும் இல்லாமல் பாதுகாக்க கூடிய வேலை. இப்படி ஒவ்வொருத்தரை எடுத்துக்கிட்டா அவங்களோட வேலை தங்களோட சுயமான முன்னேற்றத்துக்குனு இல்லாம தாங்க படிச்ச படிப்பு கெளரவத்துக்கு கிடைச்ச வேலைனு பார்க்காம சமூக நலனுக்காக உழைக்கிறோம்னு மனசில படனும். அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் சமூக அக்கறை, சமூக நல அமைப்புகளுக்குத்தான் சமூக அக்கறைனு இருக்கக் கூடாது. வேலையில்லாம இருக்கற பட்டதாரிக்குக் கூட சமூக நலனில் அக்கறை இருக்கனும். அப்படி இருந்தாத்தான் ஒரு உயரிய உண்மையான சமுதாயம் உருவாகும். அதனால நான் எந்த வேலைக்குப் போய் இருந்தாலும் ஒரு சமூக நல சேவகராகவே இருந்து இருப்பேன்''

''என்னுடைய கட்டுரைக்கு அற்புதமான விசயத்தைச் சொல்லி இருக்கீங்க, நீங்க சொல்றதுபோல யாராவது என்னவாகி இருப்பீங்கனு கேட்டா சமூக நல சேவகராகவே இருக்கோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லனும், எல்லாரும் மாறனும்''

கோபால் நன்றி சொல்லிவிட்டு மிக அருமையான கட்டுரையை தயார் செய்து ஆசிரியரிடம் தந்தான். அதைப்படித்துவிட்டு கோபாலை வெகுவாகப் பாராட்டினார். அந்த கட்டுரை மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. ஒவ்வொருத்தரும் மற்றவர்களை என்னவாகி இருப்பீங்கனு கேட்க ஆரம்பித்தார்கள்.

முற்றும்.

பேரின்பத் தழுவல்கள் -3

உணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்

அழும்குரல் கேட்டு அழுதே செல்வாய்
விழும்சப்தம் கேட்டு விழுந்தே செல்வாய்
தாங்கியிருக்கும் உன்வலிமை குறைவது இல்லை
தூங்கியிருந்தயெனை எழுப்பியது எவ்விதம்

தாயும் தந்தையும் சேயும் விந்தையாகும்
நீயும் உன்நிழலும் தீராத சிந்தையாகும்
மானிடப் பிறவியில் கண்டு கொள்ள
ஊனுடம்பு உருவானது எவ்விதம்

ஆச்சரியமற்ற அதிசயமற்ற பேராளன் நீயின்றி
பூச்சியரிக்கும் செல்கள் கொண்டே புதைந்தேன்
ஒளிசிந்தும் மருந்தில் விழியின்றி யானும்
பார்த்து பணிந்தது எவ்விதம்

எவ்விதம் என்றே யானும் கேட்டிட
அவ்விதம் என்றே மந்திரம் சொன்னாய்
கேட்டிட பொறுமை தொலைத்து உனது
நீட்டிய கரம்தனை பிடித்தேன்.

பேரின்பத் தழுவல்கள் -2

பற்றிய கரம்தனை விட்டே தவித்து
சுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்
தன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல்
உன்புகழ் ஏற்றிட ஏதுசெய்தாய்.

பெற்ற தாயை இழந்த போழ்தில்
கற்ற மொழியும் கரைந்து வெற்று
நிலையில் மனம் அற்று போகையில்
தலைமீது உன்கரம் உணர்ந்தேன்.

இழந்த உயிரை மீட்டுத் தாவென
குழந்தை போலுன்னை கேட்டு நீந்துகையில்
பேச கூடாமல் ஊனம் நேர்ந்ததுபோல்
நேச பார்வை காட்டினாய்.

நிலைத்து விடுவாயென நினைவில் இருத்திட
கலைத்து சென்ற மறுகணம் மலைத்து
ஒடுங்கிப் போகின்ற இவ்வுயிர் தொட்டு
நடுங்கிய நிலைதனை அறிவாய்.

எம்பிரானே எனதுயிர் உனதாகியதை உணர்ந்தே
நம்பியிரு வெனகதறி நொடியாவும் தேம்பி
உடைந்து செல்லும் மண்துகளாய் மாறிடினும்
அடைந்து நிற்பது நின்னருகில்.

Thursday 9 October 2008

பேரின்பத் தழுவல்கள் - 1

பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில்
உன்னையன்றி வேறு எவர் இறைவா.

கற்றதும் வந்துவிடும் இலக்கணத் தமிழ்கொண்டு
உற்றதாய் உணர்ந்ததாய் உன்னை நினைந்து
உடல் வெந்து உள்ளம் உருகுகையில்
தாயாய் இருந்து தலைவருடுவாய் இறைவா.

நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா.

மேனி கொண்டதன் ஞானம் புரியவைத்து
அண்டப்பேரொளி கொண்டு இருளை கொய்து
உண்டெனச் சொல்லி உறங்க வைத்து
அமைதியை போதிக்கும் அருளாளனே இறைவா.

உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா.

Wednesday 8 October 2008

காதல் மட்டும்

10. ஸ்பரிஸம் இல்லாத காதல்தனை
உரசிக்கொள்ளாமல் நீ சொல்லும்விதம்
உரசலில்லாமல் நானும் நிற்கும்விதம்
உயிர்கள் உரசியே சொன்னது

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

காதல் மட்டும்

8. காதல் கதை ஒன்றை
எழுதிடச் சொல்லிட
மோதல் எதுவுமின்றி
எழுதித் தந்ததை
நிராகரித்து அனுப்பியவரிடம்
நாளை செல்ல வேண்டும்
நீ உடன் வருவாயா?

காதல் மட்டும்

7. மாலை நேரம் தோட்டத்தில்
புல் அறுக்க வந்தாய்
புல் கட்டினை உன் தலையில்
வைத்து விடுவதற்கு பதிலாய்
நானே சுமந்து சென்ற போது
உனக்கு நாணமாக இருந்திருக்கும்

அடுத்த தினமே நீ தோட்டம்
மாற்றிச் சென்றபோது
நீ வரும் முன்னரே புல்கட்டினை
உன்வீட்டில் சேர்த்திட
முடிவு கொண்டேன்
உன்மீதான என் காதல்
எதையும் வலியென நினைப்பதில்லை
நீயும் இனி அவ்வாறு
நினைக்காதே!

காதல் மட்டும்

6.உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு
கடந்த வெள்ளியன்று நீ வந்தபோது
கோவில் பிரகாரம் எனப் பாராமல்
அச்சத்தை சற்று ஒதுக்கிவிட்டு
'உன்னை மிகவும் பிடிச்சிருக்கு'
எனத் தெளிவாகச் சொல்லியபோதும்
பிடித்ததின் காரணம் என்னவென
நீ கேட்டு நின்றபோது
காரணம் தெரியாதென கலங்கிய விழிகளுடன்
உன்னைப் பார்த்தே நானும் நின்றிட
கோவில் பிரகாரம் எனப் பாராமல்
என்னை நீயும் கட்டியணைத்து காதருகில்
'என்னை மிகவும் பிடிச்சிருக்கு'
எனச் சொல்லியதன் காரணம்
நான் காரணங்கள் சொல்லாத நிலை
என்பதல்ல என உனது
கலங்கிய விழிகள் கண்டபோது
முதன்முதலில் காதலில் வெட்கம் கொண்டேன்.

Tuesday 7 October 2008

காதல் மட்டும்

5. அம்மாவிடம் மெல்லக் கேட்டேன்
காதலித்து இருக்கிறாயா என்று
அப்பாவும் சொல்லக் கேட்டேன்
மற்றவர்களிடம் காதலை மறைத்திடுவென
காதலைப் புரிந்துகொள்ள
உன்னிடம் மெளனமாகி நின்றேன்
ஊரார் எல்லாம் நம்மை
காதலர்கள் என எண்ணாமல்
நமது உள்ளம் காதலிப்பதில்
இருக்கும் சுகம் தனிதான்!
ஊருக்குத் தெரியவா காதல்
உனக்கும் எனக்கும்தானே காதல்.

காதல் மட்டும்

4.செடிகளில் உன்னை
உரசிக்கொண்டே நடந்து போகையில்
மலரின் வாசனையை விட
இலை சிந்திய வாசம்
அற்புதம் என அன்றுதான்
உண்மையிலே நுகர்ந்தேன்
அடிக்கடி நீ உரசிப்போக
என்வீட்டு முன்னால் செடிகளை
நட்டு வைக்கிறேன்
மழை பொய்க்காது பெய்யட்டும்.

காதல் மட்டும்

3. தாயம் விளையாட வேண்டுமென
நீ ஆவலுடன் சொன்னதும்
முத்துக்களை ஒருபக்கம் உராய்ந்ததில்
எழுந்த வெப்ப அனலில்
மிதமான குளிர்ச்சியை உணர்ந்தேன்
அவசரமாய் வாங்கிச் சென்று
உன் தோழியருடன் நீயும்
சிரித்து விளையாடுகையில்
தேய்ந்த கல்லில் நானும்
சாய்ந்து அழுததை அறிவாயா?
உன்னுடன் இருப்பதே
என் சந்தோசம் என நானும்
வட்டம் போட்டுக்கொண்டதை
உன் நெற்றிப் பொட்டும் அறியுமா?

காதல் மட்டும்

2.செதுக்கு முத்து விளையாட
சேர்த்து வைத்த புளியம்பழங்களை
சுவைத்துப் பார்த்த நீயும்
இனிக்கிறது என்று சொல்லி
எடுத்துக் கொடுத்த முத்துக்களை
பதுக்கி வைத்து இருக்கிறேன்
அதை பாதையில் போட்டு
எவரும் செதுக்க விடமாட்டேன்.

காதல் மட்டும்

1. நீ
எட்டி உதைத்து விளையாடிய பந்து
என் வீட்டுக்கண்ணாடியை
முத்தமிட்டுப் போனது
புதுக்கண்ணாடி ஒன்றை
இன்றே மாட்டிவிடுகிறேன்
நீ
விளையாடுவதை மட்டும்நிறுத்திவிடாதே.

அறிமுகம் - என்னைப் பற்றி.

இந்த எழுத்துலகப் பயணம் சிறு வயதில் நோட்டுப் புத்தகத்தில் ஆரம்பித்தது. அதன்பின்னர் முத்தமிழ்மன்றத்தில் எழுத, தொடர்ந்தது, இப்போது அங்கே எழுதியவைகளைச் சேகரிக்கும் வண்ணமாக இந்த வலைப்பூ தொடர்கிறது. 2008ம் வருடம், பிப்ரவரி மாதம் இந்த வலைப்பூத் தொடங்கினேன்.

இதுவரை பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என தமிழில் எழுதி இருக்கிறேன். நுனிப்புல் பாகம் - 1 எனும் நாவல், வெறும் வார்த்தைகள் எனும் கவிதை தொகுப்பு மற்றும் தொலைக்கப்பட்ட தேடல்கள் எனும் சிறுகதை தொகுப்பு  வெளியிட்டு இருக்கிறேன்.