Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday 16 May 2017

ஆட்டுக்கு வளைகாப்பு

ஆடு கர்ப்பமாக இருக்கிறது என அறிந்து பெரு மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடிச் சென்றேன்.

''அம்மா அம்மா ஆட்டுக்கு வளைகாப்பு பண்ணுவோம்மா''

அம்மா என்னை முறைத்துப் பார்த்தார்கள்.

''ஏன்டா இப்படி இருக்க ஊருல என்ன பேசுவாங்க தெரியுமா''

''ஆட்டோட கர்ப்பத்துக்கு நம்ம தலைவர் வீட்டு கிடாதான் காரணம் அதையும் கூட்டி வரலாம்மா, தயவு செஞ்சி சரினு சொல்லும்மா''

''என் வயித்துல எப்படிடா நீ வந்து பொறந்த, நீயெல்லாம் ஆட்டுக்குப் பொறக்க வேண்டியவன், போயிரு''

அம்மாவின் கோபம் எனக்கு எரிச்சல் தந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் வளைகாப்பு விழா ஏற்பாடு பண்ண வேண்டும் என திட்டமிட்டு வரும் ஞாயிறு அன்று விழா நடத்த ஒரு சின்ன அரங்கம் பிடித்தேன். ஆட்டிடம் செய்தி சொன்னேன். ஆடு என்ன சொல்றான் இவன் என்பது போல என்னைப் பார்த்தது.

கால்கள் மட்டுமே உள்ள ஆட்டுக்கு கொலுசு போலத்தான் வளையல் போட இயலும் என அறுபது வளையல்கள் அதன் நான்கு கால்களுக்கு அளவெடுத்து வெளியூரில் உள்ள கடையில் சொன்னேன்.

''யாருக்குவே''
.
''ஆட்டுக்குண்ணே''

''புத்தி கெட்டுப் போச்சாலே, அவனவன் பெத்த புள்ளைக்கே வளைகாப்பு செஞ்சி வைக்கமாட்டீங்கா இவனைப் பாருவே, கலிகாலம். சரி சரி கொடுத்துட்டு போ நாலு நாளுல செஞ்சி வைக்கேன்''

''சனிக்கிழமை வேணும்''

''சரிவே, வெள்ளிக்கிழமை வந்து வாங்கிக்கோ''

பூக்கடையில் சென்று நின்றேன். ஆட்டுக்கு மாலை போட்டால் மாலை தரையில் தட்டக்கூடாது. அந்த ஆடு தன்னை வெட்டப் போகிறார்களோ என எண்ணவும் கூடாது என யோசித்தேன்.

''என்ன தம்பி, என்ன வேணும்''

''சந்தனம், குங்குமம் வேணும்''

''வேற''

''ஆட்டுக்கு ஒரு நல்ல மாலை செஞ்சி தாங்க''

''என்ன கிடா வெட்டா''

''இல்லை ஆட்டுக்கு வளைகாப்பு''

''முன்னமே சொல்ல வேண்டிதான தம்பி, தப்பா பேசிட்டேனே, சரி ஆடு எவ்வளவு உயரம்''

எப்போது ஆட்டின் உயரம் அளந்து இருக்கிறேன். கால் அளவு அளந்த எனக்கு ஆட்டின் உயரம் தெரியவில்லை.

''என்னோட தொடை உயரத்துக்கு இருக்கும்ணே''

தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எட்டிப்பார்த்தார்.

''இப்பவே கட்டித்தரவா''

''சனிக்கிழமை வேணும்''

அங்கிருந்து நேரடியாக துணிக்கடைக்குப் போனேன். எனக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா அல்லது ஆட்டுக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா என யோசித்தபடி உள்ளே சென்றேன். சந்திரன் அண்ணனை அங்கே பார்ப்பேன் என நினைக்கவில்லை. அவர் கண்ணில் படாமல் ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டேன்.

சந்திரன் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள் தான். அந்தப் பெண் கூட பக்கத்து ஊர்ப் பையனை காதல் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் முன்னர் ஓடிப்போய்விட்டாள். சில வாரங்கள் கழித்து வந்த அவர்களை இந்த சந்திரன் அண்ணன் வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். அந்தப் பையன் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. என் மாமன் பையன் கணேசன் தான் சற்று தொலைவில் உள்ள பூச்சிக்காட்டில் ஒரு வீடு தந்து அடைக்கலம் தந்து இருக்கிறான். அந்த பெண் கூட மாசமாக இருப்பதாக கணேசன் சொன்னான். நான் பூச்சிக்காடு எல்லாம் போனது இல்லை. இந்த வளைகாப்புக்கு அவனை அழைக்கலாம் என்றால் வேலை காரணமாக டில்லி செல்வதாக போன வாரம் சொல்லி இருந்தான்.

ஆடு கருப்பு நிறம். அதற்கு என்ன நிறம் பொருத்தம் என கடையில் சேலை எடுக்க அமர்ந்தேன். துணியாக எடுத்து தைக்கலாம் என்றாலும் சேலையாக எடுத்தால் நல்லது என எண்ணினேன். நீல நிறத்தில் பச்சை நிறம் கலந்தது. சேலையில் இது முன்புறம் வருவது, ஜாக்கெட் பீஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.

''சேலை ஆட்டுக்குத்தான்''

''ஆட்டை கல்யாணம் கட்டியிருக்கிகளா''

என்னவொரு சேட்டை அந்தப் பெண்ணுக்கு என நினைத்தேன். அவளது கழுத்தை கவனித்தேன். தாலி ஒன்றும் தட்டுப்படவில்லை. மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.

''ம்ம்ம் நான் வளர்க்கிற ஆடு அது. கட்டினா உங்களைத்தான் கட்டிக்கிறலாம்னு இருக்கேன்''

''ஆமா காத்துக்கிட்டு இருக்காக''

சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்ததால் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சு கொடுக்கக்கூடாது என சேலையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. யார் எவர் என பிறகு விசாரிக்க வேண்டும். பக்கத்தில் கிடாவுக்கு ஒரு வேட்டியும் சட்டையும் வாங்கினேன்.

சேலையுடன் தையல்கார கோமதி அக்கா வீட்டுக்கு வந்தேன்.

''ஒரு சத்தியம் பண்ணுக்கா''

''என்னடா வந்ததும் வராததுமா சத்தியம் பண்ண சொல்ற''

''இப்போ ஒரு சேலை கொடுப்பேன் அதை என்னோட ஆட்டுக்கு தைச்சி கொடுக்கணும்''

''நீ லூசுன்றது சரியாத்தான்டா இருக்கு''

பட்டென என்னை லூசு என அந்த அக்கா சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

''சரிடா சேலையைக் கொடு''

சேலையை வாங்கிப் பார்த்ததும் அக்காவின் முகத்தில் ஏகப்பட்ட ஆச்சரியம்.

''டேய் இது விலை உசந்த பட்டாச்சேடா, கொடுத்து வைச்ச ஆடுதான்''

''ஆட்டோட அளவுக்கு தைச்சிக் கொடுக்கா, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சொல்லுக்கா''

''போடா ஆட்டுக்கு சேலை தைக்கிறேன்னு சொன்னா யார் என்கிட்டே தைக்க கொடுக்கமாட்டாங்க. யார்ட்டயும் சொல்லலை. இன்னைக்குப் போய் ஆட்டுக்கு அளவு எடுத்துக்கிறேன்''

''அப்படியே இதை கொஞ்சம் வெட்டிக்கொடுக்கா''

''என்னடா இது''

''கிடாவுக்கு சட்டை வேட்டி''

''சரிடா''

''அளவு''

''போடா நான் பாத்துக்கிறேன்''

குங்குமம், சந்தனம் இவற்றை ஆட்டுத் தொழுவத்தில் ஒளித்து வைத்தேன்.

வளைகாப்பு பத்திரிக்கை அடிக்க வேண்டும் என வெள்ளையாபுரம் சென்றேன்.

''யாருக்கு வளைகாப்பு''

''ஆட்டுக்கு''

''ஆடுனு மட்டும் போட்டு இருக்கு, ஆட்டுக்குப் பேரு இல்லையா''

''ஆட்டுக்கு பேரு ஆடுதான், இது ஆடு, கிடா படம்''

நான் எழுதிக் கொடுத்த தாளினை தலையில் அடித்துக் கொண்டார்.

''எவ்வளவு காப்பி வேணும்''

''முன்னூறு, இல்லையில்லை முன்னூற்றி மூணு''

''இந்த ஞாயிற்றுக்கிழமைனு போட்டு இருக்கு, இப்ப வந்து தர, இன்னைக்கு செவ்வாய்க்கிழமை''

''சும்மாதானே இருக்கீங்க''

''எகத்தாளம்''

''வெள்ளிக்கிழமை காலையில வரேன்''

''சரி அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ''

அங்கேயே ஒரு உணவுக்கடையில் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், பருப்பு சாதம் என உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

தலைவரிடம் சென்று விபரத்தைச் சொன்னேன். கலகலவென சிரித்தார்.

''முட்டாப்பய வேலை எல்லாம் நீ செய்ற, சரி வந்து சனிக்கிழமை சாயந்திரம் பத்திட்டுப் போ''

''ஐயா யார்கிட்டயும் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்ல வேணாம்''

''ரகசிய வளைகாப்பா''

''ஊரறிய வளைகாப்பு தான்''

மீண்டும் சிரித்தார்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. சேலையை அட்டகாசமாக கோமதி அக்கா தைத்து இருந்தார். ரவிக்கை கூட தைத்து இருந்தார். வேட்டி சட்டை எல்லாம் எப்படி துல்லியமாக வெட்டினாரோ தெரியவில்லை.

வெள்ளையாபுரம் சென்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கை வாங்கி வந்தேன். அவருக்கே முதல் பத்திரிகை. வளையல்களை வாங்கிக்கொண்டு ஒரு பத்திரிக்கையை அங்கே தந்தேன். நேராக துணிக்கடைக்கு சென்று அந்தப் பெண்ணைத் தேடிப் போய் பத்திரிகை தந்தேன்.

''நிசமாலுமா''

''ம்ம்''

''வராம இருந்துராதீங்க''

''கட்டாயம் வரேன்''

அவளது பெயர் வனிதா. பூச்சிக்காடுதான் சொந்த ஊரு. பெண்ணின் பெற்றோர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். கணேசனுக்கு தெரிந்த பெண் தான். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வீடு வந்து சேர்ந்தேன்.

''அம்மா இன்னைக்கு எல்லோருக்கும் வளைகாப்பு பத்திரிகை தரனும்''

''உனக்கு அறிவே இல்லையா, என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற, உனக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு ஊரெல்லாம் பேசப் போறாங்க''

அம்மா பத்ரகாளியானார். நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அப்பா சத்தம் கேட்டு வந்தார்.

''உங்க புள்ள என்ன காரியம் பண்ணி இருக்கு பாருங்க''

எனது கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தார்.

''நல்ல காரியம் பண்ணி இருக்கான். நம்ம பேரைக் கூட போட்டு இருக்கான்''

''உங்க ரெண்டு பேரை என்ன பண்றது''

''நீங்க வர வேண்டாம், நானே பத்திரிகை போய் வைக்கிறேன்''

''அதுதான் முறை''

''என்னங்க முறை கிறைங்கிறீங்க''

''போகட்டும்''

நானாக மட்டும் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை தந்தேன். என்ன நினைத்தார்களோ வரோம்பா என்றார்கள். சந்திரன் அண்ணன் முகத்தில் மட்டும் பெரும் சோகம் நிறைந்து இருந்தது போல எனக்குத் தென்பட்டது.

சனிக்கிழமை அன்று மாலை வாங்கி வந்தேன். அன்று முழுவதும் மிகவும் படபடப்பாக இருந்தது. தலைவர் வீட்டில் சென்று அன்று மாலையில் கிடாவை அழைத்து வந்தேன். நன்றாக ஆடு மற்றும் கிடாவை குளிப்பாட்டினேன். ஆட்டுத் தொழுவத்தில் தான் அன்று உறங்கினேன்.

மறுநாள் காலை ஆட்டிற்கு ரவிக்கை சேலை அணிவித்தேன். கிடாவுக்கு சட்டை வேட்டி அணிவித்தேன். என் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. ஊரெல்லாம் வளைகாப்பு பற்றிய பேச்சாக இருந்தது. வீட்டுக்கு ஒருவர் என பெண்கள் கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ஆடு, கிடா சற்று மிரண்டது. பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆடு என்னைப் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பார்த்தேன். கிடா தன்னை வீரன் என எண்ணிக்கொள்ளத் தொடங்கியது.

வனிதா தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தாள். என் அப்பா அம்மாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் பேசிக்கொள்ள தொடங்கினார்கள். வனிதா என்னுடன் வந்தாள்.

''எவ்வளவு கூட்டம்''

''அன்பை போற்றும் மனிதர்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்காங்க, எதையும் ஒரு தெய்வ நிலையில் பார்க்கும் மனம் அவங்களுக்கு இருக்குங்க''

அம்மாயிதான் முதலில் ஆட்டுக்கு சந்தனம் குங்குமம் வைத்தார். அதன் பின் அப்பத்தா வந்தார். அவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பெருமிதம் கொண்டார்கள். அம்மாவும் வந்தார்கள். இப்போது என்னவோ அவர்களிடம் பெரும் மகிழ்ச்சி இருப்பது போல தோனியது. என்னிடம் நேராக வந்தார். வனிதா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

''யாரும் உனக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்கனு நினைச்சேன், என் தப்புதான்''

அம்மா என்னிடம் அப்படி சொல்லிவிட்டு வனிதாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போனார்.

வனிதாவின் முகத்தில் வெட்கம் கண்டேன்.

ஆடு, குங்குமம் சந்தனம் என தன்னை நிரப்பிக் கொண்டு இருந்ததை பார்த்தபோது ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவே எனக்குத் தென்பட்டது.

எல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். வந்தவர்களில் ஒருவர் வருமானத்துக்கு வைக்கிற விழானு நினைச்சேன் ஆனா யார்கிட்டயும் காசு கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டியேப்பா என ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தார். வேண்டாம் என மறுத்தாலும் அவர் கேட்பதாக இல்லை. சாப்பாட்டின் சுவையை விழாவின் சிறப்பை பெருமை பேசாதவர்கள் ஊரில் இல்லை.

அன்று இரவு களத்துமேட்டில் அமர்ந்து இருந்தேன். சந்திரன் என்னைத் தேடி வந்தார். வந்தவர் என் கைகளைப் பிடித்தபடி கலங்கி நின்றார்.

''என் கண்ணைத் தொறந்திட்ட தம்பி''

காதல் செய்து ஓடிப்போன சந்திரன் அண்ணன் மகளின் திருமண வரவேற்பு மற்றும் வளைகாப்பு என அதே அரங்கத்தில் ஒரு சேர பத்து நாட்கள் கழித்து வெகு விமரிசையாக நடந்தது.

முற்றும்

Tuesday 14 February 2017

ஆட்டிற்கும் அன்பிற்கும் நன்றி - முன்னுரை

முன்னுரை 

அசைவம் சாப்பிடுபவர்கள் அன்பு செய்ய தகுதி அற்றவர்கள். 

இதை எழுதியதுதான் எழுதினேன். இது தவறான கருத்து என பல நண்பர்கள், தோழிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தவறான கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நான் பேசாமல் இருந்து இருக்கலாம், அன்பு என்ற சொல் இல்லையென்றாலும் அருள் அதாவது கருணை என்ற சொல் வடிவம் கொண்டு இருப்பதால் இது வள்ளுவர் சொன்னது என ஒரு குறளை மனதில் நினைத்துக் குறிப்பிட்டுவிட்டேன்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

வள்ளுவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அவரவருக்கு எது சௌகரியமோ அதைத்தான் சரியென்று சொல்வார்கள்.

அதைவிட ஒருபடி மேலே போய் இதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி அதன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள வேண்டும்  என ஒருவர் சொல்லிவிட்டார். மேலும் ஒருவர் என்னவொரு புத்திகெட்ட வாக்கியம் இது என கேட்டுவிட்டார்.

பல்வேறு கருத்துக்களைக்  கொண்ட மனிதர்கள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிலர் மென்மையானவர்களாகவும், பலர் வன்மையானவர்களும் என இருக்கிறார்கள். என்னால் இந்த வன்மையானவர்களின் சொற்கள் தரத்தை எல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.

தனது சிந்தனைக்கு, தனது கருத்துக்கு மாற்று கருத்து சொல்லிவிடக்கூடாது என மிகவும் கடினமான சொற்களை கையாள்கிறார்கள். அவர்களின் தரத்துக்கு நாம் செல்வது என்பது அவசியம் இல்லை. இல்லையனில் அன்பை வலியுறுத்தும் தகுதி நமக்கில்லை என்றாகிறது.

ஆனால் இந்த அசைவம் சாப்பிடுபவர்கள் குறித்து ஏதேனும் கருத்தைச் சொன்னால் உடனே மூளை பலருக்கும் அதீதமாக வேலை செய்து விடுகிறது. இதற்குப் பின்னணி என்னவென்று யோசித்துப் பார்த்தால் சாதீய கருத்து ஒன்று இருக்கிறது என்பது எனது மனதுக்கு தெரியாமல் போய்விட்டது. அன்பு செய், அசைவம் உண்ணாதே என்றால் பார்ப்பனீயத்திற்கு குடை பிடிப்பதாக கருதிக்கொள்ளும் மடத்தனம் எல்லாம் எனக்குப் புரிவதற்கு சில நாட்கள் ஆனது.

அதிலொருவர் சைவம் சாப்பிட்ட ஹிட்லர் ஒரு கொடுங்கோலன், எனவே இந்த வாக்கியம் தவறானது என்கிறார். ஹிட்லரின் ஆணைக்கு கீழ் படிந்த பலரும் மூளை கெட்டுப் போன அசைவக்காரர்கள் என்றெல்லாம் மறுத்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. ஹிட்லர் ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டவர் என்பது வேறு வரலாறு.

மனிதர்களை பலியிடுவது எத்தனை கொடுங்குற்றமோ அதைப்போல விலங்குகளை பலியிடுவது கொடுங்குற்றமே 

இப்படியெல்லாம் நான் சொல்வதினால் என்னை விலங்கினப் பிரியன் என்றோ, அசைவம் வெறுக்கும் சைவப் பிரியன், அன்பை வலியுறுத்தும் சமணப் பிரியன் என்றோ நீங்களே கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டாம்.

அன்பு காட்டுபவர்களை வெறுக்கச் செய்வதே பலரது பணி

இந்த அன்பையும், அன்பின் வழி சொன்ன ஆடும் என்னோடு சேர்ந்து உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கும்.





Monday 5 December 2016

பெருந்துயரம் - மரணம்

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 17

காலையில் வேலைக்குக்  கிளம்பிச் செல்லும் முன்னர் எனது வேலை இடத்து மேற்பார்வையாளர்  நோயை எதிர்த்துப் போராடி இன்று அதிகாலை மருத்துவமனையில் அமைதியாக இறந்துவிட்டார் என்று எனது மற்றோரு பேராசிரியரிடம்  இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. எவருக்கு  மரணம் ஏற்படக்கூடாது என்று கடந்த ஒரு வருடமாக  வேண்டிக்கொண்டு இருந்தேனோ அவர் இப்போது மரணம் அடைந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு நல்ல நண்பரை, ஒரு சகோதரரை, ஒரு நல்லாசிரியரை இழந்து விட்டேன்.

நான் அவரை மார்ச் மாதம் 2003ல் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவரின் மேற்பார்வையில் தான்  வேலை செய்து வந்து இருக்கிறேன். எனது ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். அறிவிற்சிறந்தவர். சிறு வயதிலேயே கல்லூரியில் உயர் பதவி பெற்றவர் என்ற பெருமை உண்டு. அவரது சிந்தனை செயல் எல்லாம் ஆராய்ச்சிதான்.

இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிப் பயணத்தைக் தொடங்கியவர். ஆராய்ச்சி தவிர்த்து  அவ்வப்போது கிரிக்கெட் பற்றி மட்டுமே என்னிடம் பேசுவது உண்டு. சில நாட்கள் முன்னர் கூட இந்தியாவில் செல்லாத பணம் குறித்த அறிவிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். இவரைப் போல ஆராய்ச்சிச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை எப்போதும் தூண்டிக்கொண்டே இருப்பார்.

பதின்மூன்று வருட காலப் பழக்கம். சென்ற வருடம் இவருக்கு கேன்சர் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால் இவரது மன தைரியம் தனக்கு நோய் இருந்தது போலவே இவர் காட்டிக்கொள்ள வில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வார காலத்தில் கூட வேலை குறித்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு இருந்தார்.

எல்லாம் சரியாகி மீண்டும் வேலைக்கு வந்து சேர்ந்தார். திடீரென சில மாதங்கள் முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆராய்ச்சியைச் செய்ய உன்னைத் தனியாக விட்டுவிட்டேன் அதற்காக என்னை மன்னித்துக் கொள் என்று கூட மின்னஞ்சல் எழுதிக் கொண்டு இருந்தார். குணமாகி வாருங்கள், நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தெரிந்தது எனக்கு அன்று.

மீண்டும் சரியாகி வந்தவர் சோர்வாகவே காணப்பட்டார். இரண்டு வாரங்கள் முன்னர் bone marrow transplant பண்ண வேண்டும் அதற்கான நபர் கிடைத்துவிட்டார் என மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.

அவர் மூன்று மாத காலத்திற்கு ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு மருத்துவத்துறை மாணவனை கடந்த மூன்று மாதங்களாக நான் மேற்பார்வை செய்ய வேண்டியது இருந்தது. அவன் எழுதும் ரிப்போர்ட் நான் சரி பார்க்கவா என்றபோது நான் சரி பார்த்து அனுப்புகிறேன் எனக் கூறிவிட்டார். அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முதல் நாள் கூட ஆய்வகத்தில் வந்து எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்று சொன்னபோது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்றார்.

அவரின் முழு முயற்சியால் தான் நான் இன்னமும் இந்த ஆராய்ச்சி வேலையைச் செய்து கொண்டு இருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்னரே அவரது செய்முறை பயிற்சி வகுப்புகள் எல்லாம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது அதற்கான ஏற்பாடுகளை என்னை  பண்ணச் சொல்லி எனது பேராசியர் சொன்னபோது தான் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டதாக மருத்துவமனையில் இருந்தே மின்னஞ்சல் எழுதினார்.

எல்லா மருத்துவ சிகிச்சை நல்லபடியாக முடிந்து தேறி வந்து கொண்டிருந்தார். இந்த வாரம் வீட்டிற்கு வந்து விடுவார் என்று சொல்லி இருந்தார்கள். அவருக்கு ஒரு முறை மட்டுமே மின்னஞ்சல் அனுப்பி விரைவில் குணமாகி வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். அவரிடம் அதற்குப் பதில் இல்லை. இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவே சென்று இருக்கிறார் என்று மனமும் நினைத்துக் கொண்டு இருக்கிறது. அவர் இப்போது உயிரோடு இல்லை என்று நினைத்தால் மனதில் பெரும் வலி உண்டாகிறது. அவரது மனம் ஒத்துழைத்த அளவிற்கு அவரது உடல் ஒத்துழைக்க வில்லை.

அவர் உயிருடன் இருந்தபோது மரணத்தை விட நோய் கொடியது என்றே நினைத்தேன். அவர் இறந்த பின்னர் மரணம் நோயை விடக் கொடியது என்றே நினைக்கிறேன்.

மிகவும் ஒரு  நல்ல மனிதரை, நல்ல ஆராய்ச்சியாளரை இத்தனை விரைவாக இழந்து நிற்கிறேன் என்பதே பெருந்துயரமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

(தொடரும்)




Monday 17 October 2016

செவ்வாய் கிரகத்தில் நான்

part 2

நான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றது போன்ற கனவு கண்டேன். ராக்கெட்டில் சென்று செவ்வாய் கிரகத்தில் இறங்கிய இடத்தில் சிறிது நீர். ஒரு குழந்தை போன்ற மனநிலையில் மனம் சந்தோசமானது. என்னுடன் எனது நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். பாலைவனம் போன்ற செம்மண் பரப்பு எங்கும் தெரிய ஒரு பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட இடம் என பலகை தெரிகிறது. இதோ எங்கள் தமிழ் தமிழ் என ராக்கெட்டில் வந்த ஆங்கிலேயர் ஒருவரிடம் சொல்கிறேன். அவரும் ஆமோதிக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட இடம்தனில் உள்ளே நுழைய தாவரங்கள் பயிரிடப்பட்டு இருப்பது காண்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியே நடந்தால் ஊர் வருகிறது. அங்கே மக்கள் தமிழ் நிறத்தில் தென்படுகிறார்கள். நீச்சல் குளத்தில் பலர் மகிழ்ச்சியோடு வரிசையாக அமர்ந்து குளிக்கிறார்கள். அதைத்தாண்டிச் செல்ல ஒரு சிலரிடம் பேச்சு கொடுக்கிறேன். அந்த வழியில் பழங்கால தமிழ் எழுத்து கல்வெட்டு தென்படுகிறது.

இப்படித்தான் என நினைக்கையில் சிறிது நேரத்தில் போஸ்டர் தெரிகிறது. பிரின்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஒருவர் எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இன்னொருவர் இந்தி பேச எங்களுக்குப் புரியாது என சொல்ல பங்களா மொழி பேசி தமிழில் சொல்கிறார். அப்போது எனது மனைவி உடன் இருக்கிறார். பூமியின் வேறு ஒரு பகுதிக்கு வந்துவிட்டோமோ என சந்தேகம் ஏற்படுகிறது.

அங்கிருந்து நடக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் தரையில் அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார். சிறிது தூரம் நடந்து எனது மொபைல் எடுத்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்ததை காட்டுகிறது. செவ்வாய் கிரகம் வர மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே, மூன்று வருடங்கள் இழந்து விட்டோமே திரும்பிப் போனால் மூன்று வருடங்கள் கிடைக்குமா என கணக்கிட்டு மேலும் மூன்று வருடம் ஆகுமே என நினைக்கிறேன்.

இதே போன்று இங்கு வேறு இடங்கள் உண்டா? கல்லூரி எங்கே? தொழிற்சாலைகள் எங்கே என்ற என் கேள்விகள் மனதோடு இருக்கிறது. அங்கு எவரிடமும் கேட்கவில்லை. மொபைலில் orbit என பூமி போன்ற கிரகங்கள் காட்டுகிறது. படம் எடுத்து அனுப்ப நினைக்கிறேன். ஆனால் அதற்கான signal இல்லை என மனம் சொல்கிறது.

இந்த மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உண்டு என எண்ணம் உண்டாகிறது. அந்த மனிதர் பேசிய பேச்சில் அரசர் எங்கோ சென்றுவிட்டார் என்பது போன்ற வார்த்தை முழு விசயம் தெரியவில்லை. காட்சிகளின் ஊடே துப்பாக்கி ஏந்திய போலிஸ் எங்களை எவர் எனக்கேட்டுக்கொண்டே ராக்கெட் அருகில் ஆங்கிலத்தில் பேசி வந்து புன்னகையுடன் சென்ற காட்சி.

நான் எங்கு சென்றாலும் உடன் என் மனைவி இருப்பார் எனும் காட்சி, தமிழ் மீதான என் நேசம், மொபைல் போன் தாவரங்கள் என இந்த செவ்வாய் கிரக பயணம் உண்மையிலேயே நான் இதுவரை கண்ட அற்புதமான கனவுகளில் ஒன்று. இந்த கனவு சற்று தொடர்ந்து இருக்கலாம்.

(அடுத்து ஒரு கனவுடன் விரைவில்)

Sunday 22 November 2015

நமது திண்ணை நவம்பர் மாத இணைய இதழ்

சற்று தாமதமாகவே வெளிவந்த இந்த இணைய இதழில் எப்போதும் போல வழக்கமான இராமானுசர் தொடர் இல்லாதது ஒரு குறையாகவே தெரிந்தது. பல வேலைகள் காரணமாக உடனே இந்த இதழை வாசிக்கவும் இயலவில்லை. வேலைக்கு முன்னுரிமை தரும்போது தமிழ் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த இதழின் ஆசிரியருக்கு பெருமளவில் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  ரிஜ்ஜியின் மழலைக் கடிதம் மிகவும் கவலை தரக்கூடிய கவிதை. இந்த உலகம் மிகவும் பொல்லாத ஒன்றாகவே தெரிகிறது. இறைவனுக்கு வணக்கங்கள் எனத் தொடங்கும் கவிதையில் நிறைய வலிகள். பெண்ணாக பிறப்பது பெரும் இடர் என இந்த கவிதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. பல இழிநிலை மனிதர்களால் குழந்தைகள்  படும் பெரும் துயரத்தை பல வரிகளில் நாம் காணலாம். இவ்வுலகம் மாற வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்கிறது.

உதயாவின் புகையிலை தவிர்ப்போம் எனும் விழிப்புணர்வு முத்தம் குறித்த கதை. ஒரு விஷயத்தை சமூகத்திற்கு சொல்ல முற்படும்போது வலி தரும் விசயங்களை சொல்லும்போது மனதில் படியும் என்றே எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் கதைப்பாத்திரங்கள் அத்தனை பாதிப்பை நம்மில் உண்டாக்குவது இல்லை. புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் என பல பழக்கவழக்கங்கள் உடல் நலத்திற்கு இடையூறு என சொன்னாலும் இன்றும் பெரும்பாலான மனிதர்கள் அதை விட்டுவிட்டதாகத் தெரியவில்லை.

அழகிய ஓவியங்கள் மிகவும் சிறப்பு. ஓவியங்கள் நமக்கு பாடம் நடத்தும். கொக்கின் வாயில் இருக்கும் மீன், கண்ணாடியில் விசித்திர முகம் என ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் சொல்லவே வரையப்பட்டு இருக்கும்.

அவளதிகாரம் மகளதிகாரம் அவனதிகாரம் எல்லாம் எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் அந்தந்த வரிகளில் வாழ்ந்து விடுகிறார்கள். முடி கலைவதே இன்பம். தேவதையுடன் உலா வருகிறேன். மௌனம் எப்போதுமே அழகு. பெரிய ஆபிசராம். என்னிடம் குழந்தையாகிப் போவான். சோறு ஆக்கிடுவான். குருடாக ஆசை. நானும் எத்தனையோ அவளதிகாரம் எழுதி இருக்கின்றேன் என்றே கருதுகிறேன். இதற்கு காரணம் எவர் என என்னைக் கேட்டால் அன்றில் இருந்து இன்று வரை பல பெயர்களை சொல்ல இயலும். எவரேனும் ஒருவர் கருப்பொருளாகி நிற்பார்கள். அதை எவராலும் அறிந்து கொள்ள இயலாதபடி எனது எழுத்து அமைந்து விடும்.

மெழுகுவர்த்திகள் குறித்து மேலும் பல விபரங்கள் தந்து இருக்கலாம். எங்கே செயல்படுகிறது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் யார் யார். எத்தனை வருடமாக தொண்டு புரிகிறார்கள், அவர்களை தொடர்பு கொள்வது எப்படி போன்ற விபரங்கள் இல்லாமல் இருப்பது முழுமையற்று இருக்கிறது. ஆசிரியர் இதை அடுத்தமுறையாவது இணைத்தால் நன்றாக இருக்கும்.

உதயாவின் கபாலி மிகவும் நகைச்சுவையான அதே வேளையில் நல்லதொரு கருத்து சொல்லும் கதை. ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என எனவும் சில அபத்தமான காரியங்கள் நல்லதில் சென்று கூட முடியும்.

நவராத்திரி விழாவா, பண்டிகையா சுசீமா அம்மா அவர்களின் பயன்மிக்கத்  தொடர். இதுவரை படி அமைத்து கொலு பொம்மைகள் எல்லாம் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. இந்தத் தொடரில் குறிப்பிட்டபடி பாடல்கள் பிறர் வீட்டுக்குச் செல்லுதல் எல்லாம் நான் கண்டதே இல்லை. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடுவோம். கலப்பை, புத்தகம் என கொண்டாட்டம் இருக்கும். தனிப்பட்ட சமூகம் கொண்டாடுமா, அல்லது எல்லா சமூகத்தினரும் கொண்டாடுவார்களா எனத் தெரியாது. சகோதரி ஷக்திபிரபா கூட இதுகுறித்து எழுதியாக ஞாபகம். எப்படி எடுத்துக் கொண்டாலும் இந்த நவராத்திரி ஒரு விழாதான். ஒன்பதாம் எண்ணுக்கு உரிய பலன்கள். நிறைய விசயங்களை உள்ளடக்கிய பகுதியை அனைவரும் பயன்பெறும் வண்ணம் எழுதி இருப்பது வெகு சிறப்பு. எல்லாமே புதிய விசயங்கள்தான்.

ஆசிரியரின் திரு தனஞ்ஜெயின் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு. தேசிய விருது பெற்ற ஒரு எழுத்தாளர். ஒரு தயாரிப்பாளர். சினிமா குறித்த அவரது பார்வை மிகவும் சிறப்பு. அவர் தொழில் குறித்த தொடர்பான கேள்விகள் எல்லாம் சிறப்பு.

நண்பர் ரவியின் கிச்சன் டைம் பால் பேடா. இது பால்கோவாவுக்கு சளைத்தது அல்ல என்றே கொள்ளலாம். எவரேனும் செய்து பார்த்தவர்கள் எப்படி வந்தது என சொன்னால் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

டிவிட்டரில் சிந்தனை எல்லாம் எப்படி இருக்கும் எனில் சமூகத்தில் சினிமா முதற்கொண்டு அரசியல் வரை ஏதும் பிரச்சினை எனில் அனைவருமே அது குறித்து தங்களது எண்ணங்களை பதிவு செய்வார்கள். அப்படித்தான் துவரம் பருப்பு குறித்த சிந்தனையை இதில் காணலாம்.

உமாக்ருஷ் அவர்களின் பாடல் பரவசம். இந்த பாடலை நான் கேட்டதே இல்லை. வித்யாசாகரின் இசை மிகவும் மென்மையாக இருக்கும். பாடல் வரிகள் என்னவெல்லாம் சொல்ல வருகிறது என மிகவும் தெளிவாக ஆராய்ந்து இருக்கிறார். நல்ல நல்ல பாடல் வரிகள். எப்படி பாடுவது என்பதே இந்த பாடலுக்கான வெற்றி.

மதிப்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்.

பத்து இதழ்கள் கண்ட நமது திண்ணை தனது எல்லையை விரிவாக்கி இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளை தன்னுள கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா. அற்புதமான நமது திண்ணை இணைய இதழ் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்.


Thursday 3 September 2015

நமது திண்ணை செப்டம்பர் மாத சிற்றிதழ்

நமது திண்ணை சிற்றிதழை ஒவ்வொருமுறை ஒருவர் வெளியிடுவர். இதற்கு பெரிய விழா எல்லாம் இல்லை. ட்விட்டரில் இந்த சிற்றிதழின் இணைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என சொல்லி இணைப்பு தருவார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த முறை தி.மு.க மந்திரி (அவரே சொன்னபிறகு தான் எனக்குத் தெரியும்) திரு ஜெ அன்பழகன் இந்த சிற்றிதழை வெளியிட்டு இருக்கிறார். ஒரு மந்திரி ஒரு சிற்றிதழை வெளியிட முன்வந்து இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பக்க வடிவமைப்பே மிகவும் அட்டகாசம். அட்டைப்படத்தை அலங்கரிக்கும் காய்கறியை இங்கே  படித்துத் தெரிந்து கொள்ளலாம். சுபாஷினி அவர்களுக்கு நன்றி.

1. உயிருக்குள் ஓர் உயிர் - எமி

குழந்தையைப்  பற்றிய, தாய்மையைப் பற்றிய உயிருக்குள் ஓர் உயிர் எனும் அற்புதமான  கவிதையை எமி எழுதி இருக்கிறார். பிள்ளை பெறுவதால் அல்லது குழந்தையை சுமப்பதால் அழகு குறையும் எனும் கவலை இரண்டாவது பத்தியில் தென்படுகிறது. தூக்கத்தை மறந்தேனே என சொல்லப்பட்ட வரிகளுக்கு பின்னர் ஓர் விளக்கமும் இருக்கிறது. உலகம் உருண்டை நம்பினேன் எனும் எண்ணமும் வெளிப்படுகிறது நல்ல நல்ல உவமைகள் கொண்டு இருக்கும் இந்த அழகிய கவிதையில் எழுத்துப்பிழைகளைத்  தவிர்த்து இருக்கலாமோ? தேவை இல்லைதான், அந்த அழகிய குழந்தையை தாய்மையைச்  சுமந்த கவிதையில் ஏது  குறை என எமி கருதி இருக்கலாம்.

2. வளர்த்து விடுங்கள் - வருண் 

மரம் பேசும் கவிதையாக மனிதம் வேண்டும் கவிதையாக அமைந்து இருக்கிறது. இப்போதெல்லாம் மரத்தின் மீதான அக்கறை பெரும்பாலான மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. வளி  இல்லாமல் திண்டாடும்போது நல்ல கவிதை வரி. வி'சுவாசமாக நல்ல வார்த்தை நயம்.

ராஜ் மற்றும் அம்ஹர் அவர்களின் அழகிய படங்கள் சிற்றிதழை அலங்கரிக்கின்றன.

3. ஸ்ரீஇராமானுஜர் - சுஷீமாசேகர் 

மிகவும் சுவாரஸ்யமான தொடர் என்றால்  மிகையில்லை. திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார், கோவிந்தபட்டர், ஸ்ரீ போதாயன மகரிஷி என பலரது வாழ்வோடு ஸ்ரீ இராமானுஜர் வாழ்வு இணைந்து இருக்கிறது. அன்பில்  மனம் வைத்தால் அனைவரும் மனம் மாறுவர் என்பதற்கு இவரது திருமலைக்கு சென்ற காட்சி விளக்குகிறது. கோவிந்த பட்டர் தான் கொண்ட அன்பை மறக்காமல் பின்னர் இவரின் அன்பை பெற்ற காட்சி சிறப்பு. கூரத்தாழ்வாரின் மனப்பாடம் பண்ணும் ஆற்றல் நான் படித்த  பள்ளியில் ஒரு சில மாணவர்களை  நினைவுகூற  செய்தது. அவன் எல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதும் அப்படியே ஒப்பிப்பான்  என்பார்கள்.எனக்கும் சரஸ்வதி தேவி கனவில் வரமாட்டார்களா எனும் நிறைவேறாத கனவு உண்டு.

ஸ்ரீ ஆண்டாளின்  ஆசையை இவர் நிறைவேற்றிய கதையை ஓரிடத்தில் சொன்னபோது எனக்கும் பேசத் தெரியும் என சொன்னார்கள். இந்த கதையைப் படித்தபின்னர் நிறைய பேசலாம் போல. நன்றிகள் அம்மா.

4. தலைகவசம் - ப. மணிகண்டபிரபு 

தலைக்கனத்தோடு செல்லவில்லை,  தலையில் கனத்துடன்  செல்கிறேன் என அருமையான கவிதையை எழுதி இருக்கிறார் மணி. இவரது சிந்தனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். முகமே அடையாளம் எனினும் நம் உடல் வைத்து நம்மை யார் என கண்டுபிடிப்பவர் உள்ளனர் என ஒரு வரி கவிதைத்துவம். நமது மனதுக்குள் புன்னகைப்பது தெரியாது என்பது போல தலை கவசம் அறிந்தால் முகம் புன்னகைப்பது தெரியாது என்பது போல ஒரு வரி. மிகவும் சிறப்பு.

5. அப்பா - எம்சீ189 (பாமரன்) 

நல்லதொரு குட்டிக்கதை. அதுவும் கடைசி வரி மிகவும் முத்தாய்ப்பு. நாம் நல்லது செய்தால் நமது கெட்டது எல்லாம் மறைந்து போகும். படிப்பு என்பது எல்லாருக்கும்  இல்லை. எவ்வளவு படிச்சாலும் தலையில் ஏறமாட்டேங்குது ஏறமாட்டேங்குது என சொல்பவர்களிடம் எல்லாம் நன்றாக இன்னும் முயற்சி செய்யுங்கள் என சொன்னாலும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களே அதிகம் தோல்வி அடைகிறார்கள். படிப்பு மட்டுமே சமயோசித புத்தி தராது  என்பதையும் அப்பாவின் அன்பையும் அறிவுறுத்தும் கதை.

6. கிச்சன் டைம் கோவக்காய் பொரியல் - நளபாகம் ரவி 

கோவக்காய் அட! மேலதிக விபரங்கள் இங்கே  இங்கே இதை வினிகரில் போட்டு விற்பார்கள். அப்படியே கடித்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும். வெள்ளரியின் சிறு வடிவம். இவர் எழுதுவது எல்லாம் மிகவும் எளிதாக இருக்கிறது. செய்வதுதான் கடினமாக படுகிறது. ஒருமுறையேனும் நண்பர் சொல்வதை சமைத்து இங்கே ஒரு பதிவு எழுதிவிட வேண்டும்.

7.நேர்காணல் திருமதி ஜானகி சுஷீமாசேகர் 

அன்பான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த உலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கிற ஒரு ஏக்கம் வந்துவிட்டுப் போகும். எத்தனை அழகிய மனிதர்களால் ஆனது உலகம். ஒருவரின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருப்பதால்தான் பல திறமையாளர்கள் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மிகவும் அருமையான பேட்டி   என்றே சொல்ல வேண்டும். குறுகிய நேரத்தில் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அழுகை, அன்பு, ஆர்வம், இசை என எல்லாம் அறிந்து கொண்ட வேளையில் ஒரு விருதுவை புறக்கணித்த தைரியம் வெகு சிறப்பு. செத்த பின்பு ஞானி அவசியமில்லை. கடைசியில் வாசித்த வரிகள் கண்களில் நீர்த்திரள செய்தது. அற்புதமான மனிதர்களை இவ்வுலகம் பின்பற்றவேண்டும்.

கேசவ் அவர்களின் ஓவியங்கள் வெகு சிறப்பு. அருமை. மகளதிகாரம், அவளதிகாரம், மதுவிலக்கு பற்றிய அழகிய டிவிட்கள்.

8. பாடல் பரவசம் - உமா க்ருஷ் 

அப்படியே சிறிய வயது நினைவுகளை முதல் நான்கு பத்திகளில் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி  விடுகிறார். இளவயது இசையோடு ஒட்டிய கிராமத்தின் நினைவுகள் சுகமானவை என்பதை நினைவுபடுத்துகிறது. பாடல் பற்றிய பரவசத்தில் மூழ்கும் முன்னர் பாடல் பெற்ற சிறப்பில்  ஒரு நடிகரின் வரலாறு தென்படுகிறது. தேவா இல்லையென்றால் தமிழ் இசையில் இல்லை கானா என்றாலும் ஒரு நல்ல இசை அமைப்பாளாராக இருக்கப்போய்த்தான் பல படங்களுக்கு இசை அமைத்து தேனிசை தென்றல் என பட்டம் பெற்றார் தேவா என அறிய முடிகிறது. மிகவும் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார் வாலி. இந்த வரிகளை வாசிக்கும்போது கடினமாக இருக்கும், ஆனால் இதை இசைக்குள் நுழைத்து இனிமையாக்கிய பெருமை பாடகர்கள், இசை அமைப்பாளருக்குச்  சேரும். வெட்டப்பட்ட வரிகள் கண்டு இவரது கோபமும் புரிகிறது. அருமை.

சிற்றிதழ் ஆசிரியரின் தியாகராஜ பாகவதர் குறித்த விஷயங்கள்  அருமை, கைது செய்யப்பட்டு பின்னர் என்ன ஆனது என எழுதி இருக்கலாம்தான்.

அழகிய வடிவமைப்புகளுடன் மின்னி வானம் தொட்டு  சிறக்கிறது நமது திண்ணை சிற்றிதழ்.



Tuesday 7 July 2015

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16

பாதை - 15

இதுவரை ஆராய்ச்சியில் என்ன செய்து இருக்கிறோம் என எவரேனும் கண்டுகொள்ள வேண்டுமெனில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரைகள் மூலம் அறிய இயலும். நான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக ஆராய்ச்சி செய்வதால் அவர்கள் என்ன சொல்வார்களோ அதைத்தான் செய்ய வேண்டும். அதற்கு மீறி நமது சுய சிந்தனைகளுக்கு எல்லாம் அங்கே வேலை இல்லை. இது எல்லாம் தவறு, இது அவசியமா என்ற கேள்விகள் எழுப்பினாலும் இதோ இதைச் செய்தால் போதும் எனும்போது சரிதான் என தலையாட்டிவிட்டுப் போகத் தோன்றும்.

பொதுவாக ஆராய்ச்சியில் என்ன காரணம் என அறியாமலே பல விசயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதுதான் காரணமோ என்ற சிந்தனையில் கூட ஆராய்ச்சி நடக்கின்றன. பொதுவாக செல்கள், திசுக்கள் என தொடங்கப்படும் ஆராய்ச்சியில் அத்தனை குற்ற உணர்வு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளில் செய்யப்படும் ஆராய்ச்சி குற்ற உணர்வு ஏற்படுத்தாமல் போனதே இல்லை. ஒரு உயிரைத் துடிதுடிக்க கொன்று அந்த உயிரில் இருந்து மூச்சுக்குழல் எடுத்து அதை வெளியில் பொருத்தி என செய்யப்படும் ஆராய்ச்சி சற்று மன சங்கடமாகவே இருக்கும். சங்கடப்பட்டால் முடியுமா என நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

அப்படி என்னதான் ஆராய்ச்சி? வேறு ஒன்றும் இல்லை. Guinea pigs இல் இருந்து அதன் மூச்சுக்குழல் பிரித்து எடுக்க வேண்டும். அந்த மூச்சுக்குழலை சின்ன சின்னதாக ஒரு செமீ க்கு வெட்ட வேண்டும். அந்த சின்ன வளையங்களை மேல் கீழ் உள்ள கம்பி ஒன்றில் மாட்டி அதை இதற்கே உரித்தான  உப்புக்  கரைசலில் 37 டிகிரி செல்சியசில் வைத்து விட வேண்டும். எப்போதும் 5% கார்பன் டை ஆக்சைடு உள்ள காற்று செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இப்போது சில மூலக்கூறுகள் இந்த வளையங்களை கடினமாக்கும். அப்படி ஓரளவு  ஆக்கியபின்னர் நாம் தயாரிக்கும் மூலக்கூறு இந்த கடினமாக்கலை எளிதாக்குமா என பார்க்க வேண்டும். இவ்வளவுதான் ஆராய்ச்சி. இதை எவர் வேணுமென்றாலும் செய்யலாம். இதற்கு முனைவர் பட்டமோ பட்டப்படிப்போ ஒரு அவசியமும் இல்லை. இது ஒரு சாதாரண வேலை.

ஆனால் இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் தான் இந்த ஆராய்ச்சியின் தன்மையை முடிவு செய்யும். கடினமாக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகளாக  இருக்கும். அப்படி வெவ்வேறு பிரிவு சேர்ந்தவைகள் கடினமாக்கும்போது அதை எல்லாம் நமது மூலக்கூறு எளிதாக்கினால் எப்படி சாத்தியம் என பல விசயங்களை வைத்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

எழுதவே முடியவில்லையே என்பதற்காக எழுதத் தொடங்கிவிட்டேன். தொடர்ந்து தொடர்வேன்.

(தொடரும்) 

Wednesday 3 June 2015

தமிழ் மின்னிதழ் - 2 லீனா மணிமேகலை ஆண்டாளின் தோழிகள்

கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் இங்கே கவிதை என எழுதப்பட்டு இருக்கும் பகுதியில் சென்று பார்த்தால் நான் சொல்வதன் உண்மை என்னவென அறிந்து கொள்வீர்கள். கவிதை எனக்கு எழுதத் தெரியாது என தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவர் சொன்னதால் வெறும் வார்த்தைகள் என தலைப்பிட்டே கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் கவிதைகளைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா என்றுத் தெரியாமல் பல கவிதைகளைப் போற்றி பாராட்டி வருகிறேன். இந்த தமிழ் மின்னிதழில் லீனா மணிமேகலை கவிதைகள் என சில வாசித்தேன். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். கேள்விப்பட்டதோடு அப்படியே இருக்கட்டும். சர்ச்ச்சைக்குரியவர்கள் இவ்வுலகில் அதிகம் கவனம் ஈர்த்துவிடுகிறார்கள். பிறர் சொல்லத் தயங்குவதை சொல்பவர்கள் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள்.

10. லீனா மணிமேகலை கவிதைகள்

நட்சத்திர தூசி.

நீ எனக்கு யாரடா! இந்த கவிதையை எப்படி வேண்டுமெனினும் சிலாகித்துக் கொள்ளுங்கள். ஒரு அன்னியோன்யமான அன்பை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திரைச்சீலை அன்பை விலக்குவதில்லை. கவிதைத்துவம் என்பது இதுதான். வார்த்தைகளில் காட்சி அமைப்பு ஏற்படுத்தி விடுவது.

அடுத்து இதுவும் ஒரு நிலை சொல்லிச் செல்கிறது. இடைவெளி குறித்தும் ஆயுள் ஒரு இரண்டக  நிலை. திரையரங்கு இருளில் இருந்து காட்சிப்படுத்தபடுகிறது. பூச்சியின் ரீங்காரம் என திரை இரைச்சல் என நிறைய யோசித்தோ யோசிக்காமலோ கவிதை வரிகள் வந்து விடுகின்றன.

11. குவியொளி - மகி

ஒரு விஷயத்தை ஒரு வார்த்தையில் சொல்ல இயலும். ஒரு வாக்கியமாக சொல்ல இயலும். ஒரு கதையாக சொல்ல இயலும். ஆத்திசூடி எழுதப்பட்ட வரலாறு சுவாரஸ்யம். அதுபோல ஒரு வாக்கியமாக பல குவிந்து இங்கே ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. உடன்பாடு, உடன்படு.

12. ச. முத்துவேல் கவிதைகள்

இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன. இரும்புக்கரம் என்பது ஒரு ஆதிக்க சக்தியின் வெறியாட்டத்தை கவிதை விளக்கம் சொல்கிறது. சில வரிகள் அதன் வீரியத்தை உணர்த்தும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. காதலிப்பது சற்று வித்தியாச கோணம். கலவி உரையாடல்கள் சற்று வித்தியாசம்தான். தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பினும் நல்ல கவிதைதான்.

13. மணிவண்ணன் - சமூகப் புரட்சியின் கலைஞன்  முரளிகண்ணன்

ஒருவரைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எனக்கேட்டால் இப்படித்தான் எழுத வேண்டும் என இந்த கட்டுரையை தைரியமாகக் குறிப்பிடலாம். இத்தனை விரிவாக இத்தனைத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதற்கு நன்றிகள். எனக்கு மணிவண்ணன் அவர்களை மிகவும் பிடிக்கும். அமைதிப்படை படம் பார்த்தபோது வியந்தது உண்டு. எனக்கு ஒரு படைப்பாளியாக அவர் இருந்து இருக்க வேண்டும் என்றே எண்ணியது உண்டு. அவரின் அரசியல் நிலைப்பாடு, எண்ணம் என பல விசயங்கள் அறிய முடிந்தது.

14. நிழலோவியம் - புதியவன்

ரசித்து மகிழலாம். தெளிவாக இருக்கிறது.

15. அப்பா - செந்தில்சிபி

அப்பாவுக்கு நான் எதுவுமே செய்யலை. கொள்ளி  மட்டும் தான் வைச்சேன். அப்பா பற்றி எழுதிக் கொண்டே இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அழகிய உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார். அவரது வாழ்க்கையை சொன்னதில் இருந்து செந்தில் சார் வாழ்வும் அறிய முடிகிறது. மிகவும் நேசித்த பதிவு.

16. ராஜா சந்திரசேகர் கவிதைகள்.

கவிதை என்றால் இவரது கவிதைதான் அதி அற்புதம் என சொல்லலாம். எழுத்தாளர் நர்சிம் அவர்கள் குறிப்பிட்ட கவிஞர் இவர்தான் என்றே நினைக்கிறேன். இவரது கவிதைகள் பல வாசித்து இருக்கிறேன். தீட்டப்பட்ட வைரம் போல ஜொலி ஜொலிக்கும். முதல் கவிதை ஒரு நிமிடம் நம்மை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்யும். ஏம்மா இப்படி செஞ்சிட்ட? பிரமாதம் குறுங்கவிதைகள்.

17. நா ராஜூ கவிதைகள்

வார்த்தைகளுடன் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்து இருந்தது. சில வார்த்தைகள் இலக்கியத்தன்மையைத் தந்துவிடும் வல்லமை கொண்டவை. தமிழுக்கு உண்டான சிறப்பு. இவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளை கண்டு கொண்டது போல் இருந்தது.

18. ஆண்டாளின் தோழிகள் - சங்கர் கிருஷ்ணன்.

பிரமாதம். திருப்பாவை குறித்து எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார். ஏதோ  பாடல் என்று நான் இருக்க ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார். நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய பார்வை வெகு சிறப்பு. நிறைய ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த பதிவு இது.

(தொடரும்)

Friday 15 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பசி, உறக்கம் எல்லாம் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உறக்கம் பசி தொலைத்து எல்லாம் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்தது இல்லை. எத்தனை சுவாரஷ்யமாக இருந்தாலும் முழுவதும் முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. விருப்பப்பட்டு நேரம் இருப்பின் அதன் மூலம் செய்வதுதான் வழக்கம். ஒரு புத்தகம் தந்தால் அதை வாசிக்க பல மாதங்கள் ஆகி இருக்கிறது.

இந்த தமிழ் மின்னிதழ் -2 மிகவும் சிறப்பாகவே வந்து இருக்கிறது. இத்தனை சிரமம் எடுத்து ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அடுத்தமுறை புதிதாக ஒரு படைப்பினை எழுதி அதை அனுப்பி எனது படைப்பின் திறனை பரிசோதித்துக் கொள்ளலாமா என்றே எண்ணி இருக்கிறேன். பல எழுத்துத் திறமை உள்ளவர்களைத் தாண்டிச் செல்வது சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எழுத்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படித்தான் முதலில் புனைவு, கவிதை என வாசித்துவிட்டு வேறு பக்கம் திரும்பலாம் என எண்ணி எல்லா புனைவுகளும், கவிதைகளும் வாசித்து முடித்தேன். அதற்குப்பின்னர் இங்கொன்று அங்கொன்று என வாசித்து இந்து இந்துத்தவா என்றெல்லாம் படித்து திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் எழுத்து உலகில் நான் இழந்து கொண்டு இருப்பது நிறையவே என மனதுக்குத் தெரிகிறது. எனக்கு இவரப் பற்றி அறிந்து கொண்டதே இல்லை. இவரது குரல் ஒன்றை ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட அதை திரு. வைரமுத்து, திரு சரவணகார்த்திகேயன் என குழம்பியது உண்டு. அத்தனை அற்புதமான குரல். அழுத்தம் திருத்தமாக இருந்தது. ஒற்றுப்பிழை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு இந்த பிரச்சினை உண்டு. சரிசெய்ய நன்னூல் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான் வாசிப்பு என்றால் நிறைய தூரம் என ஆகிவிட்டது.

இணையப் பழங்குடிகள் என்ற ஆசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் முன்னரே நண்பர் சுதாகர் என்ன சார் ஒரு பொண்ணு தெருவில நடமாட முடியல. போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறாங்க என்று சொன்னபோது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறைக்கு மட்டுமே சென்று வருவது என்பதால் எனக்கு இது அவ்வளவாக தெரியாது. அதே ஏழு எட்டு வருடங்கள் முன்னர் எனக்கு நகைச்சுவை எஸ்எம்எஸ் என எனது அண்ணன் மகன் அனுப்பிக்கொண்டு இருந்தான். எப்படி இப்படி எல்லாம் என்றேன், சித்தப்பா வேண்டுமெனில் பல படங்கள் கூட உண்டு என சிரித்தான். எதுவும் அனுப்பாதே என்றேன். நிறுத்திவிட்டான். இன்று எனது நண்பன் ஒருவன் என்னை வாட்சாப் குழுமத்தில் இணைத்து இருக்கிறான். நிறுத்தாமல் ஏதோ  ஏதோ  பகிர்ந்து கொள்கிறார்கள். அதை எல்லாம் படிக்க கேட்க எனக்கு நேரமே இருப்பது இல்லை. நண்பன் என்பதற்காக சகித்துக் கொண்டு அந்த குழுமத்தில் இருக்கிறேன். அவ்வளவே.

நான் தமிழகத்தில் இருந்தவரை இணையம் ஒன்றும் அத்தனை பிரபலமாக ஏன் கணினி கூட அத்தனை இல்லை. நான் லண்டன் வந்தபின்னர்தான் முதன் முதல் மொபைல் போன்  வாங்கினேன். ஆனால் இந்த நாட்டிற்கு வந்தபிறகுதான் இணைய உலகமே அறிமுகம். அது எத்தனை ஆபத்தானவை என்பது குறித்து ஆசிரியர் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் ஒருவரை வஞ்சம் தீர்க்க இவன் இவளோடு இருக்கிறாள் என்பது போல பெயர்கள் இணைத்து ஊர் பொதுச் சுவற்றில் எழுதி வைப்பார்கள். அது அந்த ஊர் வழி செல்பவர்க்கு மட்டுமே தெரியும். இன்றைய காலத்தில் எள்ளி நகையாடும், வஞ்சம் தீர்க்கும் உலகம் ஒருபடி மேலே சென்று விட்டது.

1. ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்'' - யுவன் சந்திரசேகர் (நேர்காணல்)

இந்த இதழின் ஆசிரியர் நேர்காணல் எடுக்கச் செல்லும் முன்னர் அனைத்து நூல்களை வாசித்துச் சென்றார் எனச் சொல்ல இயலாது. நூல்களை வாசித்த காரணமே இவரை சந்திக்கச் சென்று இருக்கிறார் என்றே புரிய முடிகிறது. எப்படி குரல் எனக்குள் ஒரு சலனம் உண்டாக்கியதோ அதைப்போல் இவரது நேர்காணல் என்னுள் சலனம் உண்டாக்கியது. எனக்கும் ஒரு தண்டபாணி இப்போது இல்லமால் போனது குறித்து யோசிக்கிறேன். எனது முதல் நாவலுக்கு திரு ரத்தினகிரி, திருமதி பத்மஜா இருந்தார்கள். எப்படி எழுத்துகள் மட்டுமே எனக்குப் போதும் இந்த அரசியல் சினிமா எல்லாம் அவசியம் இல்லை ஒதுங்கி ஒரு படைப்பாளர் இருக்க இயலும் என்பதை இவரது நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிறைய வாசித்து இருக்கிறார், நிறைய எழுத்தாளர்கள் மூலம் இவருக்குப் பழக்கம் இருக்கிறது. நமது நூல் குறித்து நாம் பேசுவது கூட கூச்சம் தரும்.

ஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படைப்பு என ஒரு எழுத்தாளர் பயணம் அமையும். அவரது அப்பா குறித்து படித்தபோது பிரமிப்பாக இருந்தது. பலகாலங்கள் அவரது தந்தை வாழ்ந்து இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எழாமல் இல்லை. இவருடைய நாவல்கள், சிறுகதை தொகுதிகள், கவிதைகள் என படித்துவிடலாம் என்றே இருக்கிறேன். ஏனோ என்னை அறியாமல் என்னுள் வாசம் செய்கிறார். எந்த ஒரு எழுத்தளாரும் என்னைப் பாதித்தது இல்லை, எல்லாம் எழுத்துதானே என்று சர்வ சாதாரணமாக கடந்து சென்று இருக்கிறேன். ஒரு எழுத்தாளரோ அல்லது எவரோ அவர்தம் நடவடிக்கைகளே என்னைப் பாதிக்கின்றன. இவர் கவிதைகள் எழுதுவேன் என்றும் கவிஞர் யுவன் என அழைக்கப்படுவேன் என்றும் சொன்னபோது என்னை நான் பார்த்துக் கொண்டேன்.

முன்னர் குறிப்பிட்டு இருந்தேனே எத்தனை சுவாரஸ்யம் இருந்தாலும் தள்ளி வைத்துவிடுவேன் என, என்னால் அப்படி தள்ளி வைக்க இயலாத ஒரு வாசிப்பு என்று சொல்லலாம். இந்த இதழின் ஆசிரியரின் கேள்விகள் இவரது மனதில் ஒரு பெரும் நீரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சலனமின்றி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி பயணித்து இருக்கிறார். மொழிப்பெயர்ப்பு நாவல்கள் கூட இருக்கும் போல. ஒரு தமிழ் எழுத்து உலகத்தில் நிச்சயம் சர்ச்சைகளில்  சிக்காத எழுத்தாளர் என்றே நினைக்கிறேன். இல்லையெனில் எங்கோ இருக்கும் எனக்கு இவரது பெயர் இன்னும் அறிமுகம் ஆகாதது ஆச்சரியம்.

ஒவ்வொருவரும் இவரது நேர்காணலைப் படித்து விடமாட்டார்களா என்றே எனக்குள் தோன்றுகிறது. சின்ன சின்ன சிந்தனைகளே ஒரு நாவல் வடிவம் எடுக்கின்றன. எனக்கு திருமதி புஷ்பலதா அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு படைப்பை எழுதி வைத்துவிட்டு அதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் பின்னர் படிக்கும்போது எப்படி இருக்கிறது எனப்பார்க்க வேண்டும், அப்போது அதில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யலாம் என்று சொன்னது உண்டு. அதைப்போலவே இவரது கருத்துகளில் அந்த எண்ணம் மிளிர்கிறது. இவரது படைப்புகள் குறித்தேப் பயணம் நமக்கு சலிப்பில்லாத ஒன்று. இவரது எழுதியதைப் பற்றி எழுத நினைத்தால் ஆனந்தமாகவே இருக்கும்.

அந்தரத்தில் இருக்கும் தனியன் நான் என சொல்லி இருக்கிறார். இல்லை ஐயா, உங்களை பல தண்டபாணிகள் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு புத்துணர்வு தரும் உங்கள் நேர்காணல் என்று சொல்லி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

1. யாத்திரை - சௌம்யா (கவிதை)

இவரது எழுத்துகளில் உள்ள எளிமை எனக்குப் பிடித்த ஒன்று. என்னைப் பொருத்தவரை ஒரு படைப்பு என்பது எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த கவிதை அமைந்து இருக்கிறது. ஒரு மரணம் அடைந்த பின்னர் அந்த உடலில் உலவும் ஆன்மாவின் கூற்றாக அமைகிறது கவிதை. உடலை விட்டுப் பிரிந்தபின்னர் என்னவெல்லாம் செய்யத் துடிப்போம் எனும் பார்வையில் அமைந்து பாவப்பட்ட உடல் எரிக்கப்பட்டதாக அமைகிறது. மிகவும் அருமையான கவிதை.

2. அமில மழை - சொரூபா (புனைவு)

இந்த சிறுகதையைப் படித்தபோது ஒரு ஆணின் மனநிலை, ஒரு பெண்ணின் மனநிலை நமது ஊரில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பெண், ஆனால் சகித்துக் கொள்ள இயலாத ஆண். இந்த சிறுகதையில் 'ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சி பேசிக்கிறதாலெல்லாம் ஹெச் ஐ வி வராதாம்'' என முடியும். ஹரிக்கு உரைத்து இருக்கும்.

ஒரு சிறுகதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்திய சிறுகதை இது. இந்த கதையில் வரும் போதைப்பழக்கம், ஊசி ஏற்றுவது போன்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதன் மூலம் கதை நாயகன் எப்படிபட்டவன் என்று ஓரளவுக்குத்  தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் கடைசி வரிதான் கதைக்கான களம். ஹெச்ஐவி குறித்த ஒரு சம்பவம் உண்மையில் கண்டு இருக்கிறேன். இதன்  முழு விபரம் எழுதாமல் தவிர்க்கிறேன். ஒருவருக்கு மதுரையில் ஊசி ஏற்றியதன் மூலம் ஹெச்ஐவி வந்தது உண்டு. மிகவும் ஒழுக்கமானவர். ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட சுத்தமில்லை என்று எண்ணியவருக்கு அப்படி வந்தது தான் இன்னும் ஆச்சரியம். எத்தனை அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒரு உயிர் என்றோ போய்  இருக்கும், நல்லவேளை மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த சிறுகதையில்  CD4 பற்றி எழுதியதோடு ஒரு பெண்ணின் மனநிலை எல்லாம் விளக்கப்பட்டு  இருக்கிறது.

கதை மாந்தர்களுடன் பேச்சு, பழக்கம் என முதலில் ஆரம்பித்தே அத்தனை இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான சிறுகதை.

3. பூமிகாவுக்கு உதவிய பூ - என் சொக்கன், என் நங்கை என் மங்கை (புனைவு)

மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் சிறுவயதில் இங்கு குழந்தைகள் படிக்கும் புத்தகத்தில் உள்ள கதையைப் போன்று ஒரு உணர்வு தந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதைகளில் சிறுவர்கள் லாஜிக் பார்ப்பார்கள் என்பதால் கதை முடியும்போதும் ஒரு லாஜிக்குடன் முடிந்து இருந்தது. குச்சிகளால் கட்டப்பட்ட தெப்பம் என வெகு சிறப்பு.

4. அன்று - நவினன் (புனைவு)

மிகவும் அருமையான சிறுகதை. ஒரு சிறுகதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார். இந்த கதையில் கடைசியில் முடியும் வரிகள்தான் கதைக்கான ஆதாரம் சொல்லிச் செல்லும். கதைநாயகன் எப்படிப்பட்டவன் என்று மிகவும் அருமையாகச்  சொல்லப்பட்டு இருக்கிறது. எதற்கு ஜெயிலுக்குச் சென்றான் என்பதற்கான பதில் அங்கே உண்டு. ஒரு சிறுகதையில் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அந்த சிறுகதையின் அர்த்தம் புரியும்.

5. மொழி - செல்வராஜ் ஜெகதீசன் (புனைவு)

இந்த சிறுகதையை வாசிக்கும்போது நானும் எனது குடும்பத்தாரும் லண்டன் சரவணபவனில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. இந்த சிறுகதையில் மொழி குறித்த அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என எனக்கு மிகவும் நெருங்கிய உணர்வினை அழகாக விவரித்துச் சென்ற அருமையான கதை.

இது போன்று பல சூழலை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாயின் மொழியோடு கதை முடிகிறது. பல மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் தான் எனினும் அதற்கான ஈடுபாடு சிறுவர்களிடம் நம்மிடம் வரும்படியாக இருக்க வேண்டும். என்ன சொல்லித்தருகிறார்கள் என தமிழ் வெறுத்த குழந்தைகள் அதிகம். மொழி நேசிப்புக்குரியது.

6. அவரன்றி யாரறிவார்? - கர்ணா சக்தி ( அனுபவம்)

இசையை இசையை கற்றவர்தான் ஆராதிக்க முடியும் என்றில்லை. ஒரு இசை நம்மில் எத்தனை சுதந்திரமாக நம்மை வசியப்படுத்துகிறது என்றே அருமையாக அனுபவித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அதைப்போல பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலும்.

இசை நம்மை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டது. இசைஞானியின் இசை குறித்து நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கலைநயம், அபிநயம் போல இசைநயம் இந்த அனுபவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆம், இளையராஜாவன்றி யாரறிவார்?

அடுத்து...

ஒரு குழப்பத்தைப்  படித்தேன் என்றால் மிகையாகாது, ஆனால் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் தெளிந்து கொண்டேனா என்பதை எப்படியும் அது குறித்து எழுதும்போது மீண்டும் வாசிப்பேன் எனவே நிச்சயம் அறிந்து கொள்வேன். அப்படி என்னதான் அப்படியொரு விஷயத்தை தமிழ் மின்னிதழில் படித்தேன்?

(தொடரும்)

Sunday 3 May 2015

நமது திண்ணை - சிற்றிதழ் வடிவமைப்பு

பொதுவாக ஒரு புத்தகமோ, மாத இதழோ, வார இதழோ அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. கைக்கு அடக்கமாகவும், தூக்குவதற்கு ஏதுவாகவும்  இருப்பவை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் இப்போது இணையத்தில் வெளியிடும் வகையில் புத்தகங்கள் எல்லாம் வந்துவிட்ட சூழலில் கருப்பு வெள்ளை என பழைய முறையை பின்பற்றியே வெளியிடுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மெனக்கெட்டு வண்ணம் மாற்றி செயல்படுவது அவசியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் இணையதளத்தை பார்த்தோம் எனில் படிப்பவர்களின் மனதை கவரும் வண்ணம் ஒவ்வொரு பக்கமும் சிறப்பாக செய்து இருப்பார்கள். அதற்கு அவர்கள் செலவிடும் நேரம் அந்த வடிவமைப்புக்கு உரிய சிந்தனை என உடன் இருந்து பார்த்து இருப்பதால் பிரமிப்பு ஏற்பட்டது உண்டு.

மிகவும் சரியாக வண்ணக்கலவை, அந்த இணையதளம் என்ன சொல்ல வருகிறது என்பதை வெளிக்காட்டும் பாங்கு என இருக்க வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இணைய இதழாக வெளிவரும் நமது திண்ணை சிற்றிதழில் முயற்சித்தால் என்ன என திரு அல்  அமீன் அவர்களின் சிந்தனை ஒரு செயல்பாட்டாக மாறி இருக்கிறது. இதழ்களின் வடிவமைப்பு பற்றி முன்னரே குறிப்பிட்டு இருந்தாலும் இந்த இதழின் வடிவமைப்பு குறித்து சற்று பார்ப்போம். அதாவது வடிவமைப்பு மெருகேற்றினால் இந்த சிற்றிதழின் அளவு அதிகமாகும் அபாயம் இருக்கிறது. அப்படி அளவு அதிகமாகும்போது தரவிறக்கம் செய்ய அல்லது பிறருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப சிரமம் உண்டாகும்.

சரி வடிவமைப்புக்கு செல்வோம். முதல் பக்கம் அத்தனைத் தெளிவாக இல்லை. சமீபத்தில் மறைந்த திரு ஜெயகாந்தன் அவர்களின் படத்தை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. நான் 50% அளவில் தான் பார்க்கிறேன் ஆனால் தெளிவு இல்லை. மொபைல் மூலம் செய்வதாலோ அல்லது பெறப்பட்ட படம் அத்தனை தெளிவான ஒன்று என இல்லாததாலோ அத்தனை சிறப்பாக வரவில்லை. சற்று கவனம் செலுத்தலாம். பளிச்சென மனம் ஒட்ட  வேண்டும்.

இரண்டாவது பக்கம் சற்று நன்றாக இருக்கிறது. மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்டு வரவேற்பு இதழ் போல உள்ளது. அடுத்த பக்கம் அதே பிரச்சினை. பின்புறத்தில் என்ன இருக்கிறது (பெண் முகம்) என தெளிவாகத் தெரியவில்லை. கவிதை சோகத்தைத் தாங்கி இருப்பதால் பின்புறம் சோகமாக இருக்கட்டும் என விட்டுவிட்டார்.

அடுத்து வருகிறது எனது கதை. இங்கே தான் வண்ணமயமாக்கல் தொடங்குகிறது. கருப்பாக இருந்தபோது இல்லாத தெளிவு வண்ணத்தில் தெளிவாக இருக்கிறது. எனது கதைக்கு நான் எந்த ஒரு யோசனையும் அவரிடத்து சொல்லவில்லை. எனக்கு இந்த பின்புற படம் பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. எத்தனைப் பொருத்தம். எழுத்தும் வண்ணம் கொண்டு இருப்பது படிப்பதற்கு இடைஞ்சலே இல்லை. எனது கதை என்பதால் எனக்கே ஒரு தனி கர்வம் தந்தது என்றால் மிகையாகாது.

அடுத்து அடுத்த பக்கங்கள்  மிகவும் ஜொலிக்கின்றன. நல்ல வண்ண நிறங்களுடன் கூடிய நகைச்சுவை பக்கம். நினைவலைகள் பசுமையாக இல்லாது இருப்பதை காட்டும் வண்ணம் என பக்கவாட்டில் ஒரு வண்ணம் என நன்றாகவே இருக்கிறது. அடுத்த பக்கத்தில் மரத்தின் கீழ் உள்ள ஒரு சிறுவனின் ஓவிய அமைப்பு என வண்ணங்கள் தெளித்து சிறப்பித்துவிட்டார். திருப்பூர் என்பதற்கு திரைப்படத்தில் வருவது போல பெயர்ப்பலகை மற்றும் பின்னணியில் ஒரு வாகனம் என சிறப்பாகவே இருக்கிறது. வண்ணம் நமக்கு எரிச்சல் தரவே இல்லை.

அக்ஷய திரிதி முதல் பக்கம் கருப்பு பின்புலம் சரியில்லை. தங்க நாணயங்கள் சரியாக தெரியவில்லை. இனி வரும் இதழில் இந்த சாம்பல், கருப்பு வண்ணங்களை பின்புறத்தில் இருக்குமாறு உள்ளதை தவிர்க்கலாம். அடுத்த பக்கம் மீண்டும் அருமையாக வந்து இருக்கிறது. பஜ்ஜி ரொட்டி எல்லாம் நன்றாகவே இருக்கிறது. திரு அல் அமீன் அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. கிளிக்ஸ் பை மீ பக்கமும் நன்றாகவே இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் பக்கங்கள் மிகவும் அருமை. இப்படிப்பட்ட ஒரு தெளிவான படத்தை முதல் பக்கத்தில் திரு ஜெயகாந்தன் அவர்களுக்கு அலங்கரித்து  இருக்கலாம்.எனக்கு வண்ண வண்ண எழுத்துகள் மிகவும் பிடிக்கும். சலிப்பு ஏற்படுத்தாத வண்ணம் பின்புறத்தில் ராமானுஜர் இருப்பது வெகு சிறப்பு. திண்ணை பாடகி பக்கமும் அருமையாகவே இருக்கிறது.

பாடல் பரவசம் பின்புறம் அத்தனை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெண், மாட்டுவண்டி, நிலம் என சிறப்பு படுத்தி இருக்கிறார். கருத்தம்மா என தெரிகிறது. நல்லதொரு முயற்சி. மழலையர் மன்றம் பின்புறம் நன்றாக இருக்கிறது என்றாலும் புத்தகங்கள் பற்றிய பக்கங்களில் அத்தனைத் தெளிவு இல்லை. ஆனால் வடிவமைப்பு வெகு சிறப்பு. மேடைப்பேச்சு பக்கங்கள் வடிவமைப்பு சிறப்பு. கடைசிப் பக்கத்தில் வாலி நன்றாகத் தெரிகிறது.

வண்ணமயமான இந்த சிற்றிதழ் மொத்தத்தில் 88 சதவிகிதம் வடிவமைப்பு வெகு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இது எத்தனை கடினம் என்பதை உழைப்பவரிடத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும். நான் இதை எழுத எடுத்தக்கொண்ட நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் இதை வடிவமைக்க எத்தனை மணி நேரங்கள் செலவிட்டு இருப்பார் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஒவ்வொரு வரிகளுக்கும் வண்ணம் கொடுத்து பின்புறம் அந்த எழுத்துகளை பாதிக்காது இருக்கும் வண்ணம் வடிவமைத்து ஏதோ  ஒரு இணைய இதழ் வெளியிட்டோம் என இல்லாமல் இத்தனை சிறப்பாக செய்து இருக்கும் திரு அல்  அமீனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இங்கே எழுதப்பட்டவை எனது பார்வையில் தென்பட்ட சிறு சிறு குறைகள்தானே  தவிர உங்கள் உழைப்பை ஒருபோதும் குறைத்து மதிப்பிட இயலாது. ஒரு படைப்பினை வெளியிட்டு அதற்கு கிடைக்கும் பாராட்டோ, திட்டோ அது நமக்கானது என எண்ணும்  மனநிலை எனக்கு இருப்பது போல உங்களுக்கும் இருப்பது அறிவேன்.

நமது திண்ணை தமிழில் ஒரு அற்புத இணைய சிற்றிதழ் என கூறிக்கொண்டு ஆசிரியர் திரு ஆந்தைகண்ணன் மற்றும் திரு அல்  அமீன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Saturday 25 April 2015

இறைவனும் இறை உணர்வும் - 5 (From Man to God - Mrs Sushima Shekar)

பகுதி - 4    From Man to God My Father's Spiritual Journey - Mrs Sushima Shekar

நாம் உலகில் எவர் எவருடன் தொடர்பு கொள்கிறோம் என்பது நமது செயல்பாடுகள், நடவடிக்கைகள் பொருத்து அமைகிறது. நான் இணைய உலகில் எழுத வராமல் இருந்து இருந்தால் பலருடைய அறிமுகம் எனக்கு கிடைத்து இருக்காது. எனது உலகம் மிகவும் சிறியது. எனக்கு இறைவன் பிடிக்கும். அதற்காக இறை மறுப்பு கொள்கையாளர்களை எல்லாம் நான் வெறுப்பது இல்லை. அவரவருக்கு அவரவர் அறிவு.

இந்த தொடரை நான் எழுத ஆரம்பித்து சில ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் அதிகம் புத்தகங்கள் வாசிக்கும் வழக்கத்தை இன்னும் மீண்டும் தொடரவில்லை. திடீரென ஒருமுறை புத்தகம் பற்றி சுசீமா அம்மா அவர்கள் நண்பர் ரவியுடன் பேசுகையில் என்ன புத்தகம் எங்கு கிடைக்கும் என்றேன். அந்த புத்தகம் அன்புக்காக வழங்கப்படுவது, விற்பனைக்கு அல்ல எப்படி உங்களிடம் சேர்ப்பது என்றார். அப்போது அர்ச்சகர் ஒருவர் ஊரில் இருந்ததால் அவரிடம் தரச்சொல்லி இருந்தேன். அவரும் புத்தகத்தை என்னிடம் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

இறைவன் உணர்வு என்பது உண்மைக்கு நெருக்கமானது அதை நீங்கள் உணரும் வரை இறைவன் பற்றிய கேள்விக்குறி இருக்கும் என்றே பலர் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு இறைவன் உணர்வு இதுவரை வந்தது இல்லை என மிகவும் தெளிவுபடுத்திவிட்டேன், ஆனால் அடுத்தவர்கள் கொண்டுள்ள இறைவன் உணர்வு குறித்து நான் ஒருபோதும் கேலி செய்வது இல்லை, மாறாக எனக்கு இன்னும் அந்த வாய்ப்பு இல்லை என்றே கருதுவது உண்டு. இந்த நூல் ஒரு தந்தையின் இறைவன் உணர்வு பற்றி அதுவும் எனக்கு மிகவும் நெருக்கமான ஓம் நமோ நாராயணா என்று சொல்லிச் சென்றது எனக்குள் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.

சுசீமா அம்மா அவர்கள் சொன்னதுபோல எவர் ஒன்றை உணர இயலுமோ அவரால் மட்டுமே மற்றவரின் உணர்வுகளை உணர இயலும். பிறரின் நலனுக்கு பாடுபடும் எந்த ஒரு மனிதரும் போற்றப்பட வேண்டியவர் என்பதில் மறு கருத்து இல்லை. தனது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்த சுசீமா அம்மா அவர்களின் தந்தை எப்படி எல்லாம் பிறருக்காக வேண்டினார் அவருள் உணர்ந்த இறைவன் எப்படி என மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்கள். இந்த நூலைப் படிக்கும்போது எனது தந்தை நினைவுக்கு வந்தார்.

எங்கள் வீட்டில் எவருக்கேனும் ஏதேனும் நோய் வந்தால் கூட சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் திருநீறு வைத்துவிடுவார். நான் திருநீறு வைக்காமல் வீட்டைவிட்டு எங்கும் செல்வதில்லை. பின்னர் குங்குமம் வைக்க ஆரம்பித்து இருந்தேன். தினமும் இரவில் சாமி கும்பிடும் வழக்கம் எங்கள் வீட்டில் உண்டு. என் தந்தை சமீபத்தில் கீழே விழுந்து நடக்க முடியாமல் போனபோது அவரை பார்க்க சென்று இருந்தேன். எனக்கு அழுகை வந்ததை நிறுத்த இயலவில்லை. ஆனால் என் தந்தைக்கோ என்னைப் பார்த்ததில் சந்தோசம். நடந்திருவேன்  என நம்பிக்கை சொன்னவர் இரண்டே வாரங்களில் நடந்தார். எனக்கோ இன்னும் ஆச்சரியம். கடவுள் பற்றி அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும் ஏமாற்றுத்தனம் என் தந்தைக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது. இப்படி வாழ்வில் எப்போதும் எவர் உதவி இன்றி வாழப் பழகிய என் தந்தை சில வாரங்கள் பிறரை நம்ப வேண்டி இருக்கிறதே என மனதளவில் குற்ற உணர்வு கொண்டார் என்றே அறிந்தேன். வயது 86. தனது குடும்பமே முன்னுரிமை என்பதில் என் தந்தை முழு உறுதியாக இருந்தார்.

இந்த நூல் படிக்கும்போது ஒரு பார்கின்சன் நோய் மூலம் பாதிக்கப்பட்ட சுசீமா அம்மாவின் தந்தையின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆனால் அவரது மன உறுதி பிறருக்கு வேண்டும் அந்த குணம் வியப்பில் ஆழ்த்தியது. அவரது உண்மையான உழைப்பு தன்னை ஏமாற்றியவர்களை மன்னிக்கும் மனப்பாங்கு என அவரது தெய்வீகத் தன்மையை நூல் முழுவதும் அறிந்து கொள்ளலாம். அவரது இறுதி மரண நிகழ்வு ஒரு நிமிடம் என்னை உலுக்கியது. எனது அன்னை இறந்தபோது அவரது பிள்ளைகள் நாங்கள் எவருமே அருகில் இல்லை. ஆனால்  இறக்கும் நாள் அன்று எல்லோர் கனவிலும் என் அன்னை வந்தார் என்றே எல்லோரும் சொன்னார்கள். எனக்கும் ஆச்சரியம். என் அம்மா இறந்துவிட்டார்கள் என அதிகாலை நான்கு மணிக்கு தூக்கத்தில் நினைக்கிறேன். ஆறு மணிக்கு செய்தி வந்துவிட்டது. என் அம்மாவின் மரணம் குறித்து எண்ணும் போதெல்லாம் எனக்கு அரங்கனின் மீது ஒரு கேள்வி எழும். அது இருக்கட்டும்.

இன்றைய காலத்தில் இந்த இறைவன், இறைவன் உணர்வு எல்லாம் ஒரு கேலிப் பொருளாகவே ஒரு பிரிவினரால் பார்க்கப்படுகிறது. அதற்கான காரணம் ஏமாற்றுத்தனம். சில ஏமாற்றுக்காரர்களினால் பல உண்மையானவர்களின் மனம் புண்படத்தான் செய்கிறது. எனது சிந்தனைகள் பலரை புண்படுத்தி இருக்கிறது. நான் விமர்சிக்காத பகவத் கீதையா? வள்ளலாரா? மதங்களா? இறைத்தூதர்களா? மகான்களா? அது என் மற்றொரு சிந்தனையின் கோணம். விமர்சிப்பது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் எது எத்தகைய விமர்சனம் எனும் பக்குவம் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் சொன்னார் என ஒரு மனிதன் சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. இறைவனின் அவதாரங்கள் என சொல்லும்போது எனக்கு கேள்வி எழுகிறது. அந்த கேள்விகளை எல்லாம் என்னால் எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அவை கேள்விகள், அதற்கான விடைகளை  நானே உருவாக்கி அவையெல்லாம் பித்தலாட்டங்கள் என எப்போது நான் முடிவு செய்கிறேனோ அப்போதே எனது அறியாமை அங்கு வெளிப்படுகிறது. ஏனெனில் அடுத்தவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை நான் உணராத காரணத்தின் மூலம்  புறந்தள்ளுவது என்றான பின்னர் அங்கே உண்மை எனக்கு தெரியாமல் போய்விடுகிறது.

இந்த நூலினைப் படிப்பவர்கள் அதே இறைவன் உணர்வில் பயணிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் படித்ததும் இந்த இறைவனின் உணர்வுக்குத் தொடர்பு உடையவர்கள் நிச்சயம் உணர்வார்கள். எனக்குள் அந்த சலனத்தை இந்த நூல் ஏற்படுத்திச்  சென்றது என்னவோ உண்மை.

இப்போது கூட ஓம் நமோ நாராயணா எனும் மந்திரம் ஒலிக்க  பூஜை அறையில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இறை உணர்வு அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. தெய்வீகம் என்பதை மத சடங்குகளுடன் இணைத்து விடாதீர்கள்.

வெகு சிறப்பாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்தனை படித்தபோது படித்து முடித்த பின்னர் சுசீமா அம்மாவின் தந்தையுடன் பயணித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. எனது அன்புகளும் நன்றிகளும் அம்மா.

புத்தகம் வேண்டுவோர் twitter-ல்  @amas32 அம்மாவிடம் கேளுங்கள்.