Showing posts with label வம்சி சிறுகதைப் போட்டி 2011. Show all posts
Showing posts with label வம்சி சிறுகதைப் போட்டி 2011. Show all posts

Tuesday 1 November 2011

அறவாழி பிறவாழி (வம்சி சிறுகதைப் போட்டி)

பேரனூரில் ஒரே ஒரு பெருமாள் கோவில். மற்ற கோவில்கள் எதுவும் இல்லை. இந்த பெருமாள் கோவில் மிகவும் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்து பெற்றது. தினமும் குறைந்தது இருபது பேராவது இந்த பெருமாள் கோவிலில் தனியே வீற்றிருக்கும் வசந்தபெருமாளை தரிசிக்க வந்துவிடுவார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சற்று அதிகமாகவே வருவார்கள். 

இந்த கோவிலில் வேலை பார்க்கும் பட்டாச்சாரியார் ராமனுஜம் குடும்பம்தான் கோவிலை பரமாரித்து வருவதோடு வரவு செலவு கணக்கு எல்லாம் பார்த்து வருகிறார்கள். இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது. சின்ன கட்டிடமாக ஆரம்பித்து கோவில் எனும் சொல்லும்படியாய் வந்து நிற்கிறது. ராமானுஜத்தின் தாத்தா, அப்பா என பூசாரியாக இருந்து வந்த கோவில் தற்போது முப்பது மூன்று வயதான ராமானுஜத்தின் கைகளில். 

பூசாரிக்கே உரிய தோற்றத்துடன் இருக்கும் ராமானுஜத்திற்கு ஒரே பையன் எட்டு வயதாகும் ஸ்ரீராம். முன் தலையில் இருக்கும் முடி வழித்து பின்புறம் அழகாக கட்டப்பட்ட முடி. நெற்றியில் இடப்பட்ட ராமம். நாலு முழ வேஷ்டியை பாங்காக கட்டிய பாங்கு என ஸ்ரீராம் அந்த பெருமாள் கோவிலில்தான் எப்பவும் இருப்பான். பள்ளிக்கு செல்லும் வழக்கம் எல்லாம் இல்லை. கோவிலை சுற்றி இருக்கும் நிலத்தில் ஓடியாடி விளையாடுவது, தந்தைக்கு உதவி செய்வது, புத்தகம் படிப்பது என அவனது பொழுது போகும். அவனது தாய் சத்தியவதி கற்று தந்ததில் இருந்துதான் எழுத படிக்க கற்று கொண்டு வருகிறான். 

பேரனூருக்கு புதிதாக வேலைக்கு வந்த ஆசிரியர் ராமமூர்த்தி பெருமாள் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். சுறுசுறுப்பாக வேலை செய்து திரியும் ஸ்ரீராமனை பார்த்த ஆசிரியர் ராமானுஜத்திடம் பேச்சு கொடுக்கலானார். 

'சாமி, யாரு இந்த பையன்?'

'என்னோட பையன் தான்'

'பள்ளிக்கூடம் போகறது இல்லையா'

'இல்லை, ஆத்துல படிச்சிட்டு, கோவிலுக்கு வந்துருவான், அவனுக்கு இந்த பெருமாளுனா இஷ்டம், எனக்கடுத்து அவன்தான் இந்த பெருமாளை பார்த்துக்கிரனும்' 

'நாலு எழுத்து படிச்சி வேற வேலைக்கு போகலாம் இல்லையா'

'போலாம், எங்க குடும்பத்தில இருந்தவா எல்லாம் படிச்சி நகரம்னு போய்ட்டா, ஆனா எனக்கு இந்த பெருமாளை விட்டு போக மனசில்லை அதான் இங்கனயே இருந்துட்டன்'

'உங்களோட கூட பிறந்தவங்க'

'ரெண்டு அண்ணா, ஒரு தமக்கை இருந்தா, அவாதான் கிராமத்தை விட்டு போய்ட்டா, நான், என் ஆத்துக்காரி, இதோ இவன், நாங்கதான் இந்த பெருமாளுக்கு துணை' 

ஆசிரியர் ராமமூர்த்தி பெருமாளை வணங்கிவிட்டு ஸ்ரீராமை அழைத்தார். 

'நீ பள்ளிக்கூடத்துக்கு படிக்க வரியா'

'வீட்டுல படிச்சிட்டு இருக்கேன், இங்கயும் படிக்கிறேன், எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கலை' 

ஸ்ரீராமின் மழலை குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகள் ஆசிரியர் ராமமூர்த்திக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. 

'உனக்கு சயின்ஸ், மேத்ஸ், இங்கிலீஸ் வரலாறு, பூகோளம் எல்லாம் படிக்கனும்னா பள்ளிகூடத்துக்கு போகனுமே, அதெல்லாம் எப்படி வீட்டுல படிப்ப' 

'அம்மா சொல்லி கொடுத்துட்டு இருக்கா'

'எனக்கு பள்ளிகூடத்துக்கு போக நேரமாச்சு, சாயந்திரம் வந்து பார்க்கிறேன்'

ஆசிரியர் ராமமூர்த்தி செல்வதையே  பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவர் அவனது கண்களில் இருந்து மறைந்ததும் தனது தந்தையை பார்த்தான். 

'நோக்கு பள்ளிக்கூடம் போக ஆசை வந்துடுத்தா'

'இல்லை, இதோ இந்த பெருமாள்கிட்ட இருக்கறதே போதும்'

அன்றைய தினம் எல்லாம் ஸ்ரீராம் மிகவும் யோசனையாகவே இருந்தான். தனது பெரியப்பாவின் வீடுகளுக்கு எல்லாம் செல்லும்போது அவர்களின் பிள்ளைகள் புது புது விளையாட்டு பொருட்கள், தொலைக்காட்சி என வலம் வருவதை கண்டு மகிழ்வுடன் அவர்களுடன் பொழுது கழித்திருக்கிறான். அவர்கள் தங்களோடு வந்து படிக்க சொல்லியபோது ஸ்ரீராம் மறுத்துவிட்டான். 'பெருமாளுக்கு யார் இருக்கா' என்பதே அவனது வாசகமாக இருக்கும்.

'புள்ளைய உன்னைப் போலவே கெடுத்து வச்சிருக்கே' என ஏகத்துக்கும் ராமனுஜம் திட்டு வாங்கி வருவார். இதன் காரணமாகவே சில வருடங்களாக தனது சகோதர சகோதரிகள் வீட்டுக்கு போவதையே நிறுத்திவிட்டார். 

சாயந்திரம் வருகிறேன் என சொன்ன ஆசிரியர் கோவிலுக்கு வரவில்லை. ஸ்ரீராம் எட்டி எட்டிப் பார்த்தான். அவர் கண்ணுக்கு எட்டவில்லை. கோவில் நடை சாத்தி வீட்டுக்கு வர இரவு எட்டு மணியாகிவிடும். 

ஸ்ரீராமின் வீடு மூன்று அறைகள் கொண்டது. வீட்டுக்கு முன்னர் சிறிது இடம் காலியாக இருக்கும், இரண்டு புறமும் மலர் செடிகள் பூத்து குலுங்கும். வீட்டு கதவை திறந்ததும் படிகள் ஒவ்வொன்று மேலாக செல்லும். அந்த படிகளின் இருபுறம் திண்ணைகள் இருக்கும். அந்த திண்ணைகள் முன் கட்டைகளான காற்று சென்று வரும்படியான, வெயில் வந்து போகும்படியான தடுப்பு இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் திண்ணையில் யார் இருக்கிறார்கள் என பார்ப்பது கடினம். அதற்கடுத்து சமையல் அறை. தக்காளி, புடலங்காய் என சமையல் மூக்கை துளைக்கும். அதற்கடுத்து அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தலையணை மற்றும் போர்வைகள். வீட்டுக்கு பின்புறம் செல்ல ஒரு கதவு. வீட்டின் பின்புறத்தில் ஒரு அழகிய நந்தவனம். இங்கிருந்து பூக்கள் பறித்துத்தான் பெருமாளுக்கு மாலையாய் கட்டி சாத்துவது வழக்கம். ஒரு ஓரமாய் கழிவறை, குளியல் அறை.  இந்த வீடே ஒரு கோவில் போல்தான் இருந்தது. 

அன்று வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீராம் தனது அம்மாவிடம் சென்று அன்று நடந்த விசயத்தை சொன்னான். 

'பள்ளிகூடத்துக்கு போறியா' 

'வேணாம், நீங்களே சொல்லிக்கொடுங்க'

'முதல்ல சாப்பிடு, அப்புறம் சொல்லித் தரேன்'

சாப்பிட அமரும்போது வீட்டு வாசலில் ஆசிரியர் ராமமூர்த்தி வந்து நின்றார். 

'உள்ளே வாங்கோ'

'இல்லை, நான் இந்த திண்ணையிலே உட்கார்ந்து இருக்கேன்'

'அட வாங்கோ, ஆச்சாரம் எல்லாம் பார்க்காதீங்கோ, வந்து சாப்பிடுங்கோ' 

ஸ்ரீராம் ஆவலுடன் ஆசிரியர் கையை பிடித்து வந்தான். அவரும் மறுக்க இயலாமல் அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார். 

'வீட்டுல எப்பவும் சைவம் தான், வேற எதுவும் எதிர்பார்த்துராதீங்கோ'

'இல்லை இல்லை, தெரிஞ்சதுதானே'

'பையன் நீங்க வருவீங்கன்னு சாயந்திரம் எல்லாம் எதிர்பார்த்துட்டு இருந்தான்' 

'ஒரு வேலையா நகரத்துக்கு போக வேண்டியதா போச்சு, அதான் வந்து பாத்துட்டு போலாம்னு வந்தேன், பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாமே'

'நீங்கோதான் சொல்லனும், நாங்களும் சொல்லிப் பாத்துட்டோம், அவன் பெருமாளுக்கு யார் இருக்கா அப்படின்னு கேட்கறான். ஆமா உங்க ஆத்துக்காரி, குழந்தைங்க'

'நான் கட்டை பிரமச்சாரி, இனிமேதான் பொண்ணு தேடனும்'

சாப்பிட்டு முடித்து திண்ணையில் அமர்ந்தார்கள். ஸ்ரீராம் ஆசிரியரை பார்த்துவிட்டு அம்மாவிடம் படிப்பு சொல்லிக் கொடுக்க சொன்னான். 

ஸ்ரீராம் படிப்பதை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். 

'சாமி, சொல்றேன்னு தப்பா எடுக்காதீங்க இப்படிப்பட்ட அறிவாளிய அடைச்சி வைச்சிராதீங்க'

'நான் என்ன பண்றது, அவன் பெருமாளே கதின்னு இருக்கான், வற்புறத்தி என்ன பண்றது'

ஸ்ரீராம் பள்ளிக்கு செல்லவே இல்லை. வருடங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. ஆசரியர் ராமமூர்த்திக்கு திருமணம், குழந்தையும் பிறந்தது. ஸ்ரீராம் பெருமாள் கோவிலிலேயே வாழ்க்கை நகர்த்தினான். 

ஆசிரியர் ராமமூர்த்திக்கு ஸ்ரீராம் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு ஏற்படும். காலம் செல்லும் வேகத்துக்கு எவரும் ஈடு கொடுக்க இயல்வதில்லை. ஸ்ரீராமுக்கு தமக்கை ஒன்று பிறந்தது. அவள் பள்ளிக்கூடம் போகலானாள். 

தமக்கை பள்ளி சென்றதால் ராமமூர்த்தி குற்ற உணர்வு குறைந்தவராக காணப்பட்டார். வாலிப பருவம் அடைந்தான் ஸ்ரீராம். தந்தை சொல்லிக் கொடுக்காத வேதம் எல்லாம் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு சொல்லித் தர ஆரம்பித்தான் ஸ்ரீராம். ராமனுஜம் பெருமிதம் கொண்டார். 

ஒரு நாள் ஸ்ரீராமை பார்த்த ஆசிரியர் ராமமூர்த்தி மகிழ்வுடன் பேசினார். 

'ஸ்ரீராம், நானும் இந்த ஊருல பத்து வருசமா இருக்கேன், நீ பள்ளிக்கூடம் வரலைன்னாலும் நீ ரொம்ப நல்லா சொல்லி தரேன்னு என் பையன் வந்து சொன்னான்' 

'வேதம், மந்திரங்கள் எல்லாம் ஒரு குலம் மட்டுமே கத்துகிரனும்னு இல்லையே, நாளைக்கு என் பிள்ளை என்னைப் போல இந்த பெருமாளுக்கு துணையா இருப்பானுனு நான் உறுதியா சொல்ல முடியாது, அதான் என் தாத்தா, அப்பா செய்யாததை நான் செஞ்சிட்டு வரேன்'

ஸ்ரீராமை கைகள் எடுத்து வணங்கினார் ராமமூர்த்தி. பள்ளியில் ஒழுக்கம் குறைந்து இருக்கிறது என கவலைப்பட்ட ராமமூர்த்தி ஸ்ரீராம் சொல்லிகொடுக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து மாணவர்கள் மிகவும் ஒழுக்கமாக பாடம் படிப்பதை கண்டு பிரமிப்பு அடைந்தார். 

ஸ்ரீராம் வீட்டுக்கு பெற்றோர்கள் வந்து நன்றி சொல்லி சென்ற வண்ணம் இருந்தார்கள். ராமனுஜத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. 

காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஊரில் இருந்த குழந்தைகள் மிகவும் நன்றாக படித்து நகரம் எல்லாம் சென்று கொண்டிருந்தார்கள். பேரனூர் பிள்ளைகள் தனித்து தெரிந்தார்கள். ராமமூர்த்தி பெரும் மகிழ்வு அடைந்தார். 

'பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாத மனிதர்களை வளர்க்கும் பள்ளிக்கூடம் வேணும், பெரிய கல்வி கற்று பெரிய சம்பாதிப்பு சம்பாதிச்சாலும் ஒழுக்கம், நேர்மை தவறாத அந்தணர்கள் பலரை இந்த ஊரில உருவாக்கி இருக்கேன், அதுவரைக்கும் எனக்கு சந்தோசம் தான், குலத்தினால் வருபவர்கள் அந்தணர்கள் அல்ல, குணத்தினால் வருபவர்களே அந்தணர்கள்' என்றான் ஸ்ரீராம். 

'நீ நிறையவே சாதிச்சிட்ட' என்றார் ராமமூர்த்தி.

'அறத்திற்கு உட்பட்டு வாழ பழகி கொண்ட மனிதர்களால் மட்டுமே எந்த ஒரு பிரச்சினைகளில் இருந்தும் சுலபமாக விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும்'. என்றான் ஸ்ரீராம். 

ஆசிரியர் ராமமூர்த்தியின் மகன் தனது மேற்படிப்பை முடித்து விட்டு பேரனூர் வந்து அடைந்தான். பெருமாள் கோவில் மணியோசை அவனது காதில் இன்னிசையாக கேட்டது.