Wednesday 23 March 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (2)

காற்று வளி மண்டலம். பூமிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். வாயுக்கள் சில கிரகங்களில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த வாயுக்கள் எல்லாம் உயிர்கள் தோன்ற வழி வகுக்கவில்லை என எண்ணும்போது ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. அறிவியல் சொல்படி இந்த பூமி உருவானபோது இங்கே ஆக்சிஜன் தனியாக இல்லை. ஏதோ ஒரு தனிமத்துடன் இணைந்தவண்ணமே இருந்து இருக்கிறது. கரியமில வாயு தன்மையில் இந்த ஆக்சிஜன் கலந்து இருக்கிறது. மேலும்  நீர் கோமெட்டினால் பூமியில் கொட்டப்பட்டு இருக்கிறது. அந்த நீரில் ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் கலந்து இருக்கிறது.

தனியே தனிமமாக இல்லாத ஆக்சிஜன், ஆனால் உயிர்கள் எப்படி உருவானது என பார்க்கும்போது பாக்டீரியாவை சொல்கிறார்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் (?)சுவாசிக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அதன் உடல் அமைப்புகள் அவ்வாறு இருக்கிறது. இந்த சுவாசத்தின் முக்கிய பணி என்னவெனில் அந்த உயிரினத்திற்கு தேவையான சக்தியை வழங்குவது மட்டுமே.

தானாக உணவை தயாரிக்க தெரிந்த பாக்டீரியாக்கள், தாவரங்கள் எல்லாம் சுவாசம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. மூச்சை உள்ளிழுத்து விடுதல் மூலம் மட்டும் ஒரு உயிரினம் வாழ்ந்து விடுவதில்லை. செல்களில் இருக்கும் மைட்டோகான்றியாவில் நடைபெறும் வேதிவினையே ஒரு உயிரினம் வாழ  வழி வகுக்கிறது.

உள்ளிழுக்கப்பட்ட காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், வெளிவிடப்படும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், ஏன் ஈரப்பதமும் வித்தியாசபடுகிறது.

உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 21% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 0.04% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு குறைந்த ஈரப்பதம் என அறியப்படுகிறது. அதுவே வெளியிடப்படும் காற்றில் உள்ள வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 16% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 4% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு அதிக  ஈரப்பதம் என அறியப்படுகிறது. 

இந்த நைட்ரஜன் நீரில் மூழ்கி செல்பவர்களுக்கு ஆஸ்த்மா வரவழைக்கும் சக்தி உடையதாக குறிப்பிடுகிறார்கள். 

(தொடரும்) 

Saturday 5 March 2011

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?


பணம் குழந்தையை தரும் என்றேன் மனதில் ஏற்பட்ட பதட்டத்தை நீக்கிவிட்டு. என்ன சொல்கிறாய் என்றே திருப்பி என்னைக் கேட்டாள். ஆமாம், பணம் எல்லாவற்றையும் தரும் என்றேன் சொல்வதின் அர்த்தம் புரியாமல். 

விளையாட்டாக பேசாதே, எனது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. என் மீது அவர் கொண்டிருந்த பாசம் எல்லாம் விலகி போய்கொண்டிருக்கிறது என அழுதேவிட்டாள். 

நிலைமையை புரிந்து கொண்டவனாய் என்ன பிரச்சினை என கேட்டபோது எல்லா பிரச்சினைகளையும் வரிசையாக சொல்லி வைத்தாள். குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாத ஒன்றுதான் பெரும் கவலை என்றாள். கவலைப்படாதே என ஆறுதல் மட்டும் சொல்லி வைத்தேன். 

ஆனால் அதற்கடுத்த கேள்வி ஒன்றை அவள் என்னிடம் கேட்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'என்னை திருமணம் செய்து கொள்வாயா?'' என்றாள். எனக்கு ஆத்திரம் அதிகமாகவே வந்தது. இனிமேல் உன்னுடன் எனக்கு எந்த உறவும் வேண்டாம் என உதறி தள்ளிவிட துடித்தேன். அதை சொல்லாமல் செய்துவிடுவது மிகவும் நல்லது என தோன்றியது. 

''எதற்கு உனது மனம் இப்படி அலைபாய்கிறது, திருமண வாழ்க்கையில் நீ இருந்து கொண்டு எதற்கு இப்படி பேசுகிறாய், நிச்சயம் உனது பிரச்சினை சரியாகிவிடும்'' என சொல்லிவிட்டு அவளிடம் பணம் செலவழித்து பிள்ளைபேறு பெற்று கொள்ள வழி தேடுமாறு சொன்னேன். எல்லா மருத்துவமும் பார்த்தாகிவிட்டது என்றே கண்ணீர் வடித்தாள். எனக்கு வேதனையாகி போனது. நீயும் காதலித்து பார் எல்லாம் புரியும் என்றாள் அவள். 

நான் திருமணம் ஆனவன், எனக்கு எப்படி காதல் இனிமேல் வரும் என்று அவளிடம் சொல்லி சென்று வருமாறு அனுப்பிவிட்டேன். எனக்கு காதல் வருமா எனும் யோசனை அதிகம் ஆகிப் போனது. இதை மனைவியிடம் ஒரு நாள் கேட்டு வைத்தேன். 

உங்களுக்கு வரும் எனில் எனக்கும் வரும் என எச்சரித்தார். அவரின் தீராத கோபம் என்னை பயமுறுத்தியது. ஆனாலும் காதல் வருமா எனும் கேள்வி மட்டும் தொலைந்து போகவே இல்லை. 

என்னுடன் வேலை செய்த பெண் எனக்கு ஒருமுறை அழைப்பு விடுத்தாள். என்ன என விசாரித்தேன். அவளது வாழ்க்கையை இனிமேல் வாழ விருப்பமில்லை என சோகமாக சொன்னாள். மேலும் அவளது கணவர் அவளை விவாகரத்து பண்ண வேண்டும் என அதற்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டார் என சொன்னதும் கவலை வந்தது. உடனடியாக நான் அவரிடம் பரிந்து பேசினேன். எனக்கு தெரிந்த சில விசயங்களையும் சொன்னேன். சரி என கேட்டு கொண்டார். ஆனால் சில மாதங்களில் விவாகரத்து அவர்களுக்குள் நடைபெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

காதல் வருமா? காதல் எப்படி வரும்? என்பதற்கான காரணத்தை தேடி அலைந்தேன். இந்த தேடலில் இருந்த நேரத்தில் தமிழ் படங்களில் வரும் கதை நாயகிகளை போல ஒரு நாயகியை கண்டேன். அவள் யார், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதா, எனக்கு திருமணம் ஆகிவிட்டதே என்பதையெல்லாம் மறந்து எனக்குள் காதல் துளிர்விட்டது. இதுதான் காதல் என சொல்வதா என்பதை புரிந்து கொள்ள இயலாமல் அந்த நாயகியுடன் பேசுவதில் அலாதி பிரியம் கொண்டேன். அவள் பக்கத்து அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருக்கிறாள் என்பதே பெரும் வசதியாகி போனது. 

இது காதல் என்பதா? மனைவியிடம் விபரத்தை சொன்னேன். அன்று வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் நடனம் ஆடின. அமைதி, சப்தத்திடம் புதிய பாடம் கற்று கொண்டிருந்தது. 

என்னுடன் வேலை செய்த பெண் என்னை சில தினம் பின்னர் பார்த்தாள். இன்னும் நீங்கள் என் மனம் விட்டு அகலவில்லை என்றாள். எனக்குள் இருந்த காதல் அவளது காதலை முதல் முதலாக புரிந்து கொண்டது. 

இந்த சமூகத்தில் எல்லா அவலங்களும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எது அவலம், எது அவலம் இல்லை என்பதை தீர்மானிப்பவர்கள் மட்டும் மாறிக்  கொண்டே இருக்கிறார்கள். 

முற்றும்.