Friday 26 November 2010

இல்லத்தரசிகளின் இன்பமயம்

எனக்கேற்ற நண்பரை காணேன் 

தினங்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி வளர்ந்து கொண்டே இருப்பதை போல எனது மகளும் வளர தொடங்கினாள். எப்பொழுது தவழ்வாள், எப்பொழுது பேசுவாள் எனும் எதிர்பார்ப்பு என்னுள் அதிகமாகி கொண்டே போகையில் ஒரு நாள் எனது மனைவி என்னிடம் 'என்னங்க தனி குடித்தனம் போகலாமாங்க' என்றார். 'என்ன ஏதும் பிரச்சினையா' என்று கேட்டேன். 'நமக்குன்னு ஒரு குடும்பம் வந்திருச்சு, இனிமே நாம தனியா இருக்குறதுதான நல்லது' என்றார். எனக்கு புரிந்து போனது. எனது பெற்றோர்கள் ஏதேனும் சொல்லி இருக்க வேண்டும், இல்லையெனில் விளங்காத பாட்டி வந்து ஏதேனும் இவரின் மனம் வலிக்கும்படியாக பேசி இருக்க வேண்டும்.

'யாரும் எதுவும் சொன்னாங்களா' என்றேன். 'இல்லைங்க' என்றார். எத்தனையோ மாறிவிட்டார் எனது மனைவி. ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடுவதில்லை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஏதேனும் கேட்டு என்னால் இயலாமல் போனால் என்னை நச்சரிப்பதில்லை. எப்போ முடியுதோ அப்போ செஞ்சா போதும் என அமைதியாக இருந்துவிடுவார். அவருடைய இந்த மாற்றத்தை கண்டு நானும் என்னை  மாற்றி கொண்டேன். பரிசீலிக்கிறேன் என சொன்னேன். மறந்துராதீங்க, இனிமே இதை பத்தி பேசமாட்டேன் என சொன்னார்.

என்னுடன் வேலை பார்த்த பெண் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து போவார். மிகவும் சந்தோசமாகவே காணப்பட்டார். அதிக பணம் இருந்தால் நிம்மதி போய்விடும் என்பார்கள். ஆனால் அதிக பணம் அவளிடம் இருக்கும் காரணத்தினால்  அவள் நிம்மதியாக இருப்பதாக சொல்லும்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். அவள் புதிய இடத்திற்கு போக இருப்பதாகவும், இனிமேல் தொடர்ந்து வீட்டுக்கு வர இயலாது என சொன்னபோது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. எங்கு செல்வது என்பது பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை என சொல்லி சென்றார்.

ஒரு சில தினங்களில் வீட்டில் எனது பெற்றோர்களிடம் நான் புதிய வேலைக்கு செல்ல இருப்பதாக சொன்னேன். இப்போ இருக்கிற வேலைக்கு என்ன பிரச்சினை என்றார்கள். பிரச்சினை இல்லை, ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்க்கும் மன பக்குவம் எனக்கு இல்லை என சொன்னேன்.  வேலை பார்க்க செல்லும் இடம் அதிக தொலைவு எனவும், அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்க்க வேண்டும் என சொன்னதும் எனது பெற்றோர்கள் மிகவும் கவலைபட்டார்கள். எனது மனைவியையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என சொன்னதும் நிறையவே கவலைபட்டார்கள்.

'பறக்க நினைச்சிட்டீகளோ' என எனது தந்தை சொன்னதோடு நிறுத்தி கொண்டார். நாளும் வந்தது. நாங்கள் கிளம்பினோம், அப்பொழுதுதான் எனக்குள் மனது மிகவும் வலித்தது. 'எங்களோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்' என என் அம்மா சொன்னபோது எனக்குள் அழுகை வந்துவிட்டது. மனைவியை பார்த்தேன். அவள் எடுத்த முடிவு தவறோ என அவள் நினைத்து இருக்க கூடும்.

'லீவு கிடைக்கறப்ப எல்லாம் வாங்க' என எங்களை வழியனுப்பிய அவர்களை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டேன். புதிய வீடு, புதிய மனிதர்கள், புதிய இடம். வேலைக்கு செல்லாத எனது மனைவி மிகவும் சந்தோசமாகவே இருந்தார். தினமும் வேலையை விட்டு வந்ததும் அவருடன் பேசுவதில் எனது பொழுது கழியும். தனியாக இருப்பது கவலையாக இருக்கிறதா என்று கேட்டபோது, இப்பொழுதுதான் இரண்டு மடங்கு என்ன பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அன்பு எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது. நிறைய ஓய்வு இருக்கிறது. நம் மகளை பார்த்து பார்த்து வளர்க்க முடிகிறது என்றார்.

பாவம் உன் பெற்றோர்கள், என் பெற்றோர்கள், நாளை அவர்களின் நிலை நமக்கும் வரலாம் என சொன்னபோது 'அவர்கள் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள், தினமும் இரண்டு வீடுகளுக்கும் நான் அரைமணி நேரம் பேசிவிடுவேன்' என்றார். இந்த வாரம் ஒரு நாள் அங்கு, ஒரு நாள் இங்கு என செல்லலாம் என அவர் சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

எனது குடும்ப வாழ்க்கை இத்தனை மகிழ்ச்சிகரமாக அமையும் என ஒருபோதும் நான் கனவிலும் நினைத்தது இல்லை. எனது நண்பர்கள், எனக்கு பழக்கமானவர்கள் எல்லாம் தினமும் ஏதேனும் பிரச்சினைகளுடன் இருக்கும்போது வீட்டுக்கு வீடு வாசற்படி என சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். ஆனால் எனது வீட்டுக்கு மட்டும் எப்படி வித்தியாசமான வாசற்படி வந்து சேர்ந்தது.

இருவரின் பெற்றோர்களை பார்த்துவிட்டு வந்தோம். மனதில் நிறைய சந்தோசம் நிறைந்து இருந்தது. ஒருவேளை எனது மனைவிக்கு வேலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன். எதற்கு நான் வேலைக்கு செல்ல வேண்டும், எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்து இருக்கிறது.

குழந்தை கவனிப்பு, வீட்டு கவனிப்பு என மிகவும் நிம்மதியாகவே இருக்கிறது என்றார். இத்தனை படித்தும் வேலைக்கு செல்லவில்லையே எனும் ஏக்கம் இல்லையா? என்றேன். வீட்டில் இருந்தே ஏதேனும் வேலை செய்ய முடிகிறதா என பார்க்கிறேன் என்றார். நல்ல யோசனை. ஏதேனும் முடிந்தால் சொல் என சொன்னேன். அவரின் விருப்பபடி ஒரு கணினி வாங்கினோம். அத்துடன் இணைய இணைப்பும் வாங்கினோம். தினமும் புதிது புதிதாக  பல விசயங்களை என்னுடன் பேச ஆரம்பித்தார்.

வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்க கூடும் என மனதில் நினைத்து கொண்டேன். அந்த வார இறுதியில் எனது மாமா மகள், அத்தை, மாமா என மூவரும் எனது மாமா மகளின் திருமண பத்திரிகையுடன் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். பத்திரிகையை பார்த்தபோது எனது பெயர் எல்லாம் போட்டு இருந்தது. பையன் அமெரிக்காவில வேலை பார்க்கிறான், இவளும் கல்யாணம் முடிச்சிட்டு அமெரிக்கா போக போறா என்றார். எப்படி அந்த சம்பந்தம் கிடைச்சது என்றேன். இப்ப இருக்கிற நிலைமையில என்னவென்னவோ நடக்குது என அங்கலாய்த்தார். எனது மாமா மகள் என்னிடம் வந்து 'இண்டர்நெட்டுல பிடிச்சேன் மாமா' என்றார். அப்பொழுது எனக்குள் ஒரு இனம் புரியாத கவலை வந்து தொலைந்தது.

மாமா மகளின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. கல்யாணம் நடந்த சில வாரங்களில் அவள் அமெரிக்கா பறந்து போனாள். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருமுறை என்னை பார்க்க வந்து இருந்தாள். அவளின் முகத்தில் கவலை குடி கொண்டு இருந்தது. என்ன ஆயிற்று என்றேன். 'பணம் குழந்தையை தருமா?' என்றார். மனம் பக் என்றது.

(தொடரும்)

11 comments:

sathishsangkavi.blogspot.com said...

//'பணம் குழந்தையை தருமா?' //

நிறைய பேரிடம் நான் கேட்ட கேள்வி... இதில் தலைகுனிந்தவர்கள் தான் அதிகம்...

Vidhya Chandrasekaran said...

பெண் வேலைக்குப் போவது தான் பெருமை. இல்லத்தரசிகளாய் இருப்பவர்களெல்லாம் அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள் என சொல்பவர்களிடமெல்லாம் கேட்க வேண்டிய கேள்வி.

//'பணம் குழந்தையை தருமா?' //

Chitra said...

மிகவும் ரசித்து வாசித்தேன்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

உண்மை. நல்ல பதிவு !

எஸ்.கே said...

மிக நல்ல பதிவு!

kavitha said...

நன்றாக இருக்கிறது.. எல்லார் வீட்டிலும் நடப்பது போல இருக்கிறது.. கண் முன் தெரிகிறது உங்களின் கதை

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

ஹேமா said...

நம்மவர் சமூக அலசல் தொடங்கியிருக்கிறீர்கள்.
நல்லது.சில விஷயங்கள் தேவையானவர்கள் மனதில் பதியட்டும் !

Radhakrishnan said...

மிக்க நன்றி ஹேமா.

kavinsandron said...

நானும் என் பெற்றோரை பிரிந்து இருக்கிறேன் என் மனைவிக்காக..

என்னவென்று சொல்வது.. என் வழியை

Radhakrishnan said...

மிக்க நன்றி கவின்சந்திரன்