Friday 8 May 2009

பழங்காலச் சுவடுகள் - அத்தியாயம் 6

கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சின்னச்சாமி கதவைத் திறந்தார். பிரம்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார். தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்.

''உள்ளே வாங்க''''நீங்க இன்னும் தயாராகவில்லையா''
''இதோ கிளம்பிட்டே இருக்கோம், கொஞ்சம் காத்திருக்க முடியுமா''
''சீக்கிரம் வாங்க''

அகிலாவும் சின்னச்சாமியும் தயாரானார்கள். பாஸ்போர்ட் மற்றும் விமான சீட்டு எல்லாம் பத்திரப்படுத்தினார்கள். இராமபிரானை வேண்டிக்கொண்டாள் அகிலா. வாகனத்தில் அமர்ந்து பிரம்ட் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். மாலை நேரம் ஆகியிருந்தது. ஒரே சத்தமாக இருந்தது. பிரம்ட் பதட்டமடைந்தான். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் முன் கூட்டமாக இருந்த மனிதர்களை நோக்கி சென்றான்.

''என்ன நடக்குது, ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்''
மரியா பிரம்ட் நோக்கி வந்தார்.
''என்னை ஏமாற்றியா நீ இந்த திருமணம் செய்ய துணிந்தாய்?''
''யார் சொன்னது"
''இதோ உனது இளவல் தான் சொன்னான், அந்த சிந்து பெண் திருமணம் ஆனவள் எனவும் அந்த மனிதர் அவரது கணவர் எனவும் சொன்னான், ஏன் இப்படி காரியம் பண்ண துணிந்தாய்''

''நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு பெண்ணும் எங்கள் ஐவரையும் மணக்க சம்மதிக்கப் போவது இல்லை நாங்கள் காலம் காலமாக இப்படியே இருக்க வேண்டியதுதான்''
''நீ தேடாமல் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்''
''நான் உங்கள் பேச்சுப்படி நடக்கப் போவது இல்லை''

கூட்டத்தில் இருந்தவர்கள் வாளினை எடுத்தார்கள். பிரம்ட் நோக்கி வந்தார்கள். பிரம்ட் வாகனம் நோக்கி ஓடினான். மரியா பிரம்ட் ஐ விட்டுவிடச் சொன்னார். ஆனால் கூட்டம் அவனை துரத்தியது. மற்ற நான்கு சகோதரர்களும் வாளினை எடுத்துக்கொண்டு அந்த கூட்டத்தை விரட்டினார்கள். ஓடியவர்கள் திரும்பினார்கள். அகிலாவும் சின்னச்சாமியும் அதிர்ச்சி அடைந்தார்கள். வாள் சண்டை நடந்தது. மரியா கூட்டத்தினரை நோக்கி சண்டையை நிறுத்துமாறு சத்தமிட்டார். ஆனால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பிரம்ட் சண்டை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.

''என்னை வாளால் வெட்டுங்கள்''

சண்டையிட்டவர்கள் அப்படியே நின்றார்கள். மரியாவும் அந்த இடத்திற்கு வந்தார். கூட்டமாக அனைவரும் வந்து சேர்ந்தனர். கூட்டத்தினர் மரியாவை மனம் மாறச் சொன்னார்கள். மரியா தான் தனது கணவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் இப்படித்தான் என் பிள்ளைகள் இருக்க வேண்டும், அவர்கள் இதை மீறிச் செல்லக்கூடாது என பிடிவாதமாக இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கமாகி விழுந்தார். அவரைத் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் சென்றது. கூட்டத்தில் இருந்தவர் பிரம்ட் நோக்கி சொன்னார்.

''எல்லாவற்றிற்கும் நீயே காரணம், உன்னை பலியிட்டால் தான் சரியாகும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உங்கள் குடும்பமே விளையாட இருந்தது''
''இது எங்கள் பிரச்சினை, நீங்கள் ஏன் இப்படி தலையிடுகிறீர்கள்''
''இது இந்த பகுதி பிரச்சினை, எங்களுக்கும் உனது தாய்க்கும் நடக்கும் பிரச்சினை, உனது தாயின் ஆசை நிறைவேற்ற இதுபோன்று இங்கிருந்து செய்ய வேண்டாம், ஒரு பொழுது தருகிறோம், இடத்தை காலி பண்ணுங்கள்''

பிரம்ட் விவிட் நோக்கிச் சென்றான். ஏன் இப்படிச் செய்தாய் எனக்கேட்டான். விவிட் சொபிட் பற்றி குறிப்பிட்டான். பிரம்ட்க்கு ஆத்திரமாக வந்தது. அனைவரும் பேசிதானே செய்தோம், அதற்குள் ஏன் இப்படி முடிவு செய்தீர்கள் எனக் கேட்டான். அதற்குள் சொபிட் வாளால் அப்பகுதியைச் சார்ந்த ஒருவன் கையை வெட்டினான். சொபிட்டை விரட்டினார்கள். பிரம்ட் வீட்டுக்குள் சென்று தாயை தூக்கிக்கொண்டு வாகனம் நோக்கி ஓடினான். மற்ற மூவரும் வாகனம் நோக்கி வந்தார்கள். சொபிட் தனியாக விடப்பட்டான், அவனை மட்டுமே கூட்டம் குறி வைத்து ஓடியது. வாகனத்தை விரைவாக எடுத்தான் பிரம்ட். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தில் உறைந்து போனார்கள். வாகனம் விடுதி செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. சொபிட் தொலைவில் ஓடுவது தெரிந்தது. வாகனத்தை சொபிட் நோக்கி செலுத்தினான் பிரம்ட். வாகனம் அருகில் வந்ததும் சொபிட் தாவி ஏறினான். மற்றவர்கள் வாளை வீசினார்கள். சொபிட் கையை குறிபார்த்தது ஒரு வாள். சொபிட் அலறினான். துணியால் கட்டுப்போட்டார்கள். வாகனத்தை விரைவாக செலுத்தினான் பிரம்ட். வாகனம் பிரமிடுகள் பகுதியை அந்த அந்திமாலையில் அடைந்தது. ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தினான் பிரம்ட். ஐந்து பேரும் தனியாக சென்றார்கள். பிரம்ட் சொன்னான்.

''மடையர்களாக நீங்கள் நடந்து கொண்டீர்கள்''
''தவறு பண்ணிவிட்டோம் மன்னியுங்கள்''
''அத்தனை பொருளும் இழக்க வேண்டியதாகிவிட்டது உங்கள் நடத்தையினால், பாதாள அறையின் சாவி யாரிடம் இருக்கிறது''
''நான் வைத்திருக்கிறேன்''
''சரி இன்று இரவே செல்வோம், பாதாள அறையில் இருக்கும் அந்த பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்''
''யோசனையில்லாமல் நடந்து கொண்டுவிட்டோம்''
''இனி பேசி பயனில்லை, தாயை குணப்படுத்த ஒரே வழி ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதுதான்''

வாகனத்துக்கு திரும்பினார்கள். அகிலாவையும் சின்னச்சாமியையும் பிரமிடுகளுக்கு அருகில் அமரவைத்தார்கள். மரியாவும் விவிட்டும் உடன் இருந்தார்கள். நால்வரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். விவிட் சொன்னான்.
''இதோ இந்த பிரமிடுக்கு முன்னால் நின்றுதான் மாவீரன் அலெக்ஸாண்டர் தனக்கு இதுபோல ஒன்று கட்ட வேண்டும் என சொன்னான்''
''ஏன் இப்படி சண்டை நடந்தது''
''எங்கள் மேல் அந்த பகுதி மக்களுக்கு வெறுப்பு அதிகமாகிவிட்டது, எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, எனது அம்மா பழங்காலத்தில் நடந்த ஒரு மாபெரும் போர் சரித்திரத்தினை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஒரு பெண்ணை முடித்து வைக்க முடிவெடுத்தார்கள், அதுதான் அவர்களது வெறுப்புக்கு உச்சம்''
''எந்த போர் சரித்திரம்''
''சிந்து நாட்டில் நடந்தது அது''
''இந்தியாவா''''ஆமாம்''
''எப்படி இதெல்லாம் தெரியும்?''
''எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, மாவீரன் அலெக்ஸாண்டர் தனது கேடயத்தை எனது முப்பாட்டனாரிடம் கொடுத்துச் சென்றான்''
''வீட்டில் ஒன்றும் தெரியவில்லையே''
''ஆறு அறைகளுக்கு கீழே பெரிய பாதாள அறை இருக்கிறது, அங்கேதான் நிரப்பி வைத்திருக்கிறோம், ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கிறது வேத சாஸ்திரங்கள் முதற்கொண்டு அங்கே இருக்கிறது. கிரேக்க நாட்டில் பலவருடங்கள் முன்னர் கட்டப்பட்ட நூலகம் ஒன்று அழிந்து போனது, ஆனால் அந்த நூலகத்தில் இருந்த நூல்களின் பிரதிகள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது''
''எப்படி உங்களுக்கு கிடைத்தது''
''எங்கள் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் முதல் வழிவழியாக வந்தது'' ''உங்கள் தந்தை எங்கே?''

மரியா விழித்துப்பார்த்தார். பிரமிடு பகுதியில் இருப்பதைக் கண்டு பதட்டமடைந்தார். விவிட் நடந்ததை சொன்னான். அகிலாவைப் பார்த்து மரியா வணங்கினார். மன்னிக்குமாறு வேண்டினார். பிரமிடுகளில் காற்று மோதி ஒருவித சப்தத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. விவிட் பழங்கள் எடுத்து அனைவருக்கும் தந்தான். தந்தையை பற்றி எதுவும் பேசாமல் இருந்தான் விவிட். அகிலாவும் சின்னச்சாமியும் தேன்நிலவுதனை நிலவின் வெளிச்சத்தில் அன்று கொண்டாடினார்கள். வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரம்ட் சற்று தள்ளி நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றான். மூவரும் உடன் சென்றார்கள். ஊர் அமைதியாய் இருந்தது. இருளில் நிலவு வெளிச்சம் மட்டுமே இருந்தது. வீடு பாதிப்பு அடையாமல் இருப்பது கண்டான். வீட்டை திறந்து உள்ளே சென்றான். உள்புறமாக பூட்டிவிட்டு பாதாள அறைக்குச் சென்றான். மூவரும் மேல்தளத்தில் இருந்தார்கள். பாதாள அறையில் விளக்கு ஏற்றினான். அனைத்தையும் எப்படி எடுத்துச் செல்வது என புரியாமல் விழித்தான். வெளியில் பெரும் சப்தம் கேட்டது பாதாள அறையில் எதிரொலித்தது.(தொடரும்)