Showing posts with label சவால் சிறுகதை. Show all posts
Showing posts with label சவால் சிறுகதை. Show all posts

Monday 27 September 2010

வைரவாசல் (சவால் சிறுகதை)




நெடு நெடுவென உயரமும், தோசை சட்டி போன்ற பரந்த முகமும் உடைய ஐம்பது வயது மதிக்கத்தக்க பரந்தாமன் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் தனது வீட்டு மாடியில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.  வழுக்கைத்தலையில் இருந்து அவரது நெற்றியில் வியர்வைத்துளிகள் கோடு போட்டுக் கொண்டிருந்தது. அந்த வியர்வைத்துளிகள் புதிய ஆற்றுப்பாதை போல அமைந்து இருந்தது.                                                                 

வறட்சியான காலத்தில் எப்படி ஆறு வற்றி போய்விடுமோ அதைப்போலவே சட்டென அந்த வியர்வைத்துளிகளை தனது வலது பக்க தோளில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த துண்டினால் துடைத்து விட்டார். 'சே என்ன வெயில்' என வெயிலில் நடந்து கொண்டே  அழுத்துக் கொண்டார்.       

நேரத்தைப் பார்த்தார். மணி சரியாக பன்னிரண்டு என காட்டிக் கொண்டிருந்தது. பசிக்க வேறு ஆரம்பித்தது. பரந்தாமன் தனது ஒரு கைப்பேசியை எடுத்தார். காமினியின்  கைப்பேசியின் எண்களை ஒவ்வொன்றாக அழுத்தினார். மறுபுறம் 'வைரத்தைக்  கொண்டு வருவேன், தைரியமாய் இருந்து கொள்ளுங்கள்' என ஒலித்தது. சிலமுறை அதே வரிகளை ஒலித்தவுடன் அடங்கிப் போனது. 'ஏன் இன்னும் போன் எடுக்கலை இந்த காமினி' என மனதுக்குள் கேட்டுக்கொண்டார்.

''வெயிலுல குளிர் காயறீங்களா, வந்து சாப்பிட்டு போங்க'' என பரந்தாமனின் மனைவி பரமேஸ்வரி வீட்டின் கீழ் தளத்தில் இருந்து கத்தினார். சாப்பாடு என்றதும் மேலும் பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் காமினி எண்களை அழுத்தினார். அதே பாடல். அதே அடக்கம். இருபது முறை இதுவரை அழைத்துவிட்டதாக கைப்பேசி கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

 மாடியிலிருந்து கீழிறங்கி வந்தார். அவசரம் அவசரமாக சாப்பிட்டார். இரண்டு மூன்று முறை புரையேறிவிட்டது. ''யாரு நினைக்கிறாங்களோ இந்த நேரத்தில'' என பரமேஸ்வரி சிறிது சாதம் எடுத்து வைத்தார். ''அந்த காமினி பொண்ணுதான் நினைக்கிறாளோ என்னவோ, அவளுக்கு போன் போட்டு பார்த்தேன், ஆனா அவ எடுக்கலை'' என்றார். ''ஏன் நம்ம பொண்ணு நினைக்கமாட்டாளா'' அப்பொழுது பரந்தாமனின் கைப்பேசி ஒலித்தது. அவசரமாக எடுத்தார். மனைவியை பார்த்தார்.

மறுமுனையில்,

''சார், நான் டாக்டர்.காமினி பேசறேன்''

''எங்கே இருக்கே''

''ஒரு முக்கியமான ஆப்பரேசன் வேலை வந்திருச்சி சார். இப்போதான் முடிச்சிட்டு எங்க மருத்துவமனையில என்னோட அறையிலதான் இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில வைரவாசல் கிளம்பிருவேன். வயர் எல்லாம் அப்படி அப்படியே மாட்டிக் கிடக்கு, கழட்டனும்''

''இன்னைக்கு ராத்திரியே வந்து சேர்ந்துருவியா''

''வந்துருவேன் சார், ஆனா அந்த சிவா என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கான், இப்போ கூட எங்க மருத்துவமனையிலதான் இருக்கான்''

''அவனுக்கு ஒரு மயக்க மருந்து ஊசியை நறுக்குன்னு குத்திட்டு போ''

''அதெல்லாம் வேணாம் சார். அவன் கண்ணுக்கு தெரியாம வைரவாசல் போகணும், அதுதான் எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது''

''அவன் கூட யாராச்சும் இருக்காங்களா''

''தெரியலை சார்'' 

''சரி''

''அப்புறம் பேசறேன் சார்''

தனது முகத்தில் மீண்டும் மாஸ்க்தனை அணிந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அந்த அறையில்  டாக்டர் ரகசியன் உள்ளே நுழைந்தார்.

''ஹௌ இஸ் பேசன்ட் நௌ காமினி''

'' பைன் டாக்டர்''

''யு ஹவேன்ட் ரிமுவ்ட் யுவர் மாஸ்க்''

'' வில் டூ சார்''

'' தேங்க்ஸ் பார் திஸ் ஹெல்ப், யு கேன் லீவ் நௌ''

''ஓகே சார்'' 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

 ''ஆ'' என சின்ன சத்தம் எழுப்பிக் கொண்டாள். புல்தரை மெத்தென இருந்தாலும் மலர் உடம்பில் முள்ளாகத்தான் குத்தியது. தனது கைப்பையில் எல்லாம் சரிபார்த்து கொண்டாள். தான் அணிந்து இருந்த வெள்ளை கோட்டினை கழற்றினாள். கைப்பையில் இருந்து ஒரு சிறிய பையை எடுத்து கோட்டினை வேகமாக மடித்து அதற்குள் வைத்தாள்.

அங்கிருந்து ஆட்டோ ஒன்றில் ஏறி நேராக திருச்சி பேருந்து நிலையம் அடைந்தாள். வெகு வேகமாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறினாள். 

''வைரவாசலுக்கு ஒரு டிக்கட்'' 

''வண்டி நிக்காதும்மா'' 

''வைரவாசலுக்கு அடுத்த ஸ்டாப்ல இறங்கிகிறேன்'' 

காற்று சன்னல் வழியாக படபடவென அடித்தது. ஒரு கனவு காணலாம் என்று நினைத்துப் பார்த்தாள். ஆனால்  மனம்  அனுமதி தரவில்லை. தனது சிறிய வயது காலங்களை எல்லாம் அசை போட நினைத்தாள். அதற்கும் மனம் அனுமதி தரவில்லை. வைரவாசல் அடைந்ததும் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என  சிந்திக்க நினைத்தாள். அதுவும் இயலவில்லை. உறங்குவது போன்று கண்களை வைத்துக் கொண்டாள். மனம் உறங்கிப் போனது.

வைரவாசல் ஊர்தனை பேருந்து நெருங்கியது. இதை அறிந்த காமினி பேருந்தின் சன்னல் வழியே குதிக்கலாமா என எண்ணினாள். எலும்பு கூட தேறாது என படி அருகில் வந்தாள். ஓரிடத்தில் பேருந்து மெதுவாக செல்லவே ஓடும் பேருந்தில் இருந்து கீழிறங்கி பேருந்துடன் சிறிது தூரம் ஓடி நின்றாள். இரண்டாவது தடவை தப்பித்தோம் என நினைத்துக் கொண்டாள்.

ஊர் அமைதியாக இருந்தது. அங்கும் இங்குமாக மனிதர்கள் இருந்தார்கள். 

''இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வீடு எது?''

''நேராப் போய் கிழக்கே போங்க'' 

வழி சொன்னவர்கள் காமினியை சற்று நேரம் கழித்து பின் தொடர்ந்தார்கள். காமினி,  சுப்பிரமணி வீட்டினை அடைந்தாள்.  அவள் சற்றும் எதிர்பாராத வண்ணம் வீட்டினில் உள்ளே இருந்து சிவா வெளிப்பட்டான். அதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து போனாள் காமினி.
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

''சிவா....'' 

''நான் திருடன் தான், கொள்ளைக்காரன் தான். எப்படிப்பட்டவனா இருந்தா உங்களுக்கு என்ன''

''நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை'' 

''உனக்கு தெரிஞ்ச ரகசியம் எனக்கு தெரியாதா?''

அப்பொழுது சிவாவின் கைகளில் சட்டென பெரும் கல் ஒன்று விழுந்தது. துப்பாக்கி சற்று தள்ளி சென்று விழுந்தது.  சிலர் ஓடி வந்து சிவாவினை வளைத்தார்கள்.
''போங்க, இவனை நாங்க பாத்துக்கிறோம், டேய் இவன் காரை அடிச்சி நொறுக்குங்கடா'' 

சுப்பிரமணி வீட்டுக்குள் நுழைந்தாள் காமினி.

'வைரமணி' என கட்டிப்பிடித்தாள் காமினி.

''உனக்கு ஒன்னும் ஆகலையே மணி''

''இல்லை''

''எங்கே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி''

''தெரியலை''

''ராஸ்கல், அவன் தான் சிவாவுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கனும்'' 

''அவரா''

''வேகமா கிளம்பு, திருட்டு கேஸ் போட்டுருவான்'' 

இன்னும் சிலர் சிவாவை அடித்து கொண்டிருந்தார்கள். சிவா வலியால் துடி துடித்து கொண்டிருந்தான்.சுப்பிரமணி அந்த இடத்திற்கு வந்தபோது காமினியும், வைரமணியும் திருச்சி நோக்கி பேருந்தில் பயணித்து கொண்டிருந்தார்கள். 

''சார், உங்க வீட்டுக்கு வந்த பொண்ணை இவன் கொல்ல பார்த்தான் சார்'' 

''எங்கே அந்த பொண்ணு''

''உங்க வீட்டுல இருந்த ஒரு பொண்ணை கூட்டிட்டு போய்ட்டாங்க சார்''

''இவனை விட்டுட்டு நீங்க போங்க'' 

அனைவரும் அங்கிருந்து நகன்றார்கள். சிறிது நேரத்தில் காவல் அதிகாரிகள் அங்கே வந்தார்கள். 

''வீ அரெஸ்ட் போத் ஆப் யு பார் கிட்னாப்பிங் எ கேர்ல்''

இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி திருதிருவென முழித்தார்.

மாலையில் பரந்தாமனின் வீட்டுக்கு காமினியும், வைரமணியும் வந்து சேர்ந்தார்கள். இதை கண்ட பரந்தாமன் முகத்தில் பெரும் பிரகாசம் தெரிந்தது.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

''டைமண்டா இவ, இவ சரியான மண்டு சார்'' 

(முற்றும்) 
கதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்
kbkk007@gmail.com