Tuesday 14 February 2017

ஆட்டிற்கும் அன்பிற்கும் நன்றி - முன்னுரை

முன்னுரை 

அசைவம் சாப்பிடுபவர்கள் அன்பு செய்ய தகுதி அற்றவர்கள். 

இதை எழுதியதுதான் எழுதினேன். இது தவறான கருத்து என பல நண்பர்கள், தோழிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தவறான கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நான் பேசாமல் இருந்து இருக்கலாம், அன்பு என்ற சொல் இல்லையென்றாலும் அருள் அதாவது கருணை என்ற சொல் வடிவம் கொண்டு இருப்பதால் இது வள்ளுவர் சொன்னது என ஒரு குறளை மனதில் நினைத்துக் குறிப்பிட்டுவிட்டேன்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

வள்ளுவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அவரவருக்கு எது சௌகரியமோ அதைத்தான் சரியென்று சொல்வார்கள்.

அதைவிட ஒருபடி மேலே போய் இதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி அதன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள வேண்டும்  என ஒருவர் சொல்லிவிட்டார். மேலும் ஒருவர் என்னவொரு புத்திகெட்ட வாக்கியம் இது என கேட்டுவிட்டார்.

பல்வேறு கருத்துக்களைக்  கொண்ட மனிதர்கள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிலர் மென்மையானவர்களாகவும், பலர் வன்மையானவர்களும் என இருக்கிறார்கள். என்னால் இந்த வன்மையானவர்களின் சொற்கள் தரத்தை எல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.

தனது சிந்தனைக்கு, தனது கருத்துக்கு மாற்று கருத்து சொல்லிவிடக்கூடாது என மிகவும் கடினமான சொற்களை கையாள்கிறார்கள். அவர்களின் தரத்துக்கு நாம் செல்வது என்பது அவசியம் இல்லை. இல்லையனில் அன்பை வலியுறுத்தும் தகுதி நமக்கில்லை என்றாகிறது.

ஆனால் இந்த அசைவம் சாப்பிடுபவர்கள் குறித்து ஏதேனும் கருத்தைச் சொன்னால் உடனே மூளை பலருக்கும் அதீதமாக வேலை செய்து விடுகிறது. இதற்குப் பின்னணி என்னவென்று யோசித்துப் பார்த்தால் சாதீய கருத்து ஒன்று இருக்கிறது என்பது எனது மனதுக்கு தெரியாமல் போய்விட்டது. அன்பு செய், அசைவம் உண்ணாதே என்றால் பார்ப்பனீயத்திற்கு குடை பிடிப்பதாக கருதிக்கொள்ளும் மடத்தனம் எல்லாம் எனக்குப் புரிவதற்கு சில நாட்கள் ஆனது.

அதிலொருவர் சைவம் சாப்பிட்ட ஹிட்லர் ஒரு கொடுங்கோலன், எனவே இந்த வாக்கியம் தவறானது என்கிறார். ஹிட்லரின் ஆணைக்கு கீழ் படிந்த பலரும் மூளை கெட்டுப் போன அசைவக்காரர்கள் என்றெல்லாம் மறுத்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. ஹிட்லர் ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டவர் என்பது வேறு வரலாறு.

மனிதர்களை பலியிடுவது எத்தனை கொடுங்குற்றமோ அதைப்போல விலங்குகளை பலியிடுவது கொடுங்குற்றமே 

இப்படியெல்லாம் நான் சொல்வதினால் என்னை விலங்கினப் பிரியன் என்றோ, அசைவம் வெறுக்கும் சைவப் பிரியன், அன்பை வலியுறுத்தும் சமணப் பிரியன் என்றோ நீங்களே கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டாம்.

அன்பு காட்டுபவர்களை வெறுக்கச் செய்வதே பலரது பணி

இந்த அன்பையும், அன்பின் வழி சொன்ன ஆடும் என்னோடு சேர்ந்து உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கும்.