Wednesday 5 December 2012

அதர்மபுரி - சாதீய அரசியல்

தர்மபுரியில் ஏற்பட்ட கலவரத்தின் மூலம் பாதிக்கப்பட்ட சக மனிதர்களுக்கு எமது அனுதாபங்களும், இந்த கலவரத்தின் மூலம் உயிர் இழந்த சக மனிதர்களுக்கு எமது இரங்கல்களையும் தெரிவித்துக்  கொள்கிறோம். 

சக மனிதர்களின் மனதில் அமைதியும் நற்சிந்தனையும் வளரட்டும் என்றே வேண்டுகிறோம். 
-------------------------------

வேறொரு ஊரை சார்ந்த ரெட்டியார் சாதியச் சேர்ந்தவன் எங்கள் ஊருக்கு விடுமுறைக்காக வந்தபோது, எங்கள் ஊர் சக்கிலியர் சாதி பெண்ணின் கையை பிடிச்சி இழுத்து விட்டான் என்று ஊரெல்லாம் அன்று ஒரே பேச்சாகத்தான் இருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் குடும்பமார்கள் என சொல்லப்படும் சாதி வகையைச் சார்ந்தவர்கள், மூப்பனார் சாதி வகையைச் சார்ந்தவர்கள் அந்த ரெட்டியார் பையனை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், அவனை அடித்து துவைக்க வேண்டும்  என இந்த மூன்று கிராமங்களுக்கு அன்று கிராமத் தலைவராக இருந்த எனது மாமாவிடம் அவர்கள் வந்து சொன்னபோது, எனது மாமாவோ என்ன ஏது என விசாரிக்கலாம் என சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள், இதே உங்க வீட்டு பெண்ணை கையை பிடிச்சி இழுத்து இருந்தா இப்படித்தான் விசாரணை பண்ணனும்னு சொல்லுவீங்களோ என கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த ரெட்டியார் பையன், தான் அவ்வாறு செய்யவில்லை என்றே சொன்னதாகவும், அவன் அவனது சொந்த ஊருக்கே சென்றுவிட்டதால் பிரச்சினை பெரிதாகாமல் போனது என்றே நினைவில் இருக்கிறது. இது கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் முன்னர் எனது கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம்.

நான் எனது வாழ்நாளில் இந்த சாதிய வேறுபாட்டு கருமங்களை எல்லாம் ஒரு பொருட்டாக பார்த்ததே இல்லை. கிரிக்கெட் விளையாடும் போது இந்த சாதி பேதங்கள் எல்லாம் உடன் விளையாடும் பையன்கள் பேசும்போது கூட எரிச்சலாக இருக்கும். எதற்கு இப்படி பிரிவினை பார்க்கிறார்கள் என்றே தோணும். அவர்கள் எங்களை சாமி என அழைப்பதுவும் கூட எனக்கு மிக மிக வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் அவர்களைத்தான் தோட்ட, காட்டு வேலைகளுக்கு எல்லாம் அழைத்துச் செல்வார்கள், இருப்பினும் ஏதோ ஒருவித வேறுபாடு இருந்து கொண்டேதான் இருந்தது. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது கூட அவ்வளவாக எனது கிராமத்தில் நடந்தது இல்லை. தேவர் சாதி பையனை காதலித்த ஒரே குற்றத்திற்காக தனது மகளை எரித்து அந்த குற்ற உணர்விலேயே இறந்து போன தாய் எனது கிராமத்தில் தான் இருந்தார். கல்லூரியில் இருந்து விடுமுறை காலத்தில் ஊருக்கு வந்தபோது இந்த செய்தி என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த பையனும் சரி, பெண்ணும் சரி எனக்குத் தெரிந்தவர்கள்தான். இங்கே சாதி பிரச்சினை என்பதைவிட கௌரவ பிரச்சினை தான் பெரிதாக இருந்தது. ஆனால் எனது கிராமத்தில் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் பற்றி அரசல் புரசலாக செய்தி வெளிவரும் போது, அந்த சம்பந்தப்பட்ட கள்ளத் தொடர்பில் இருப்பவர்கள் எல்லாம் வேறு வேறு சாதியை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட மனிதர்கள் என்றே நினைத்து இருக்கிறேன். இன்றைய கால சூழல் சற்றே மாறி இருக்கிறது எனலாம், இருப்பினும் இன்னும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னமும் பல இடங்களில் அவர்களைப் பற்றிய கண்ணோட்டம் பெரிதாக மாறிவிட்டதாகத் தெரியவில்லை.

என்னுடன் படித்த நண்பர்கள் என்னிடம் மிகவும் சகஜமாகவே பழகுகிறார்கள். சாதி வேறுபாடு எல்லாம் நான் பார்த்தது இல்லை என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் குறித்தான பார்வை அவர்களிடம் இன்னமும் மாறாமல் இருக்கிறது, அது மரியாதை நிமித்தமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இப்படிப்பட்ட கிராமத்தில் சாதி பெயரை சொல்லி எவரும் பெரிய அளவில் அரசியல் செய்தது இல்லை. பெரிய கலவரங்கள் எதுவும் ஏற்பட்டது இல்லை என்றே நினைவில் இருக்கிறது.

தர்மபுரி - இந்த ஊரின் பெயரில் என்ன இருக்கிறது எனில் தர்மம் நிறைந்த நகரம் என்பதுதான். ஆனால் அங்கேதான் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த தர்மபுரி பற்றி கேள்விப்பட்டபோது ஏதோ வழக்கமான பிரச்சினை என்றுதான் இருந்தேன். இந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென பார்த்தபோது ஒரு உயர் சாதி என சொல்லப்படும் சமூகம், தலித் சமூகம் மேல் கொண்டிருக்கும் வெறித்தனமான வன்மம் என்றேதான் எண்ணத் தோணுகிறது. இந்த தர்மபுரி ஒரு காலத்தில் பிரிவினை அற்ற இடமாகத்தான் திகழ்ந்து வந்து இருக்கிறது. ஆனால் சாதி அரசியல் இன்று  தர்மபுரியை தங்களது சொந்த நலனுக்கு  சூறையாடி இருக்கிறது  என்பதை மறுக்கவே இயலாது. எல்லா இடங்களிலும் சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.  அந்த பிரச்சினையின் தீவிரம் என்னவென என்பதை அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். ஆனால் நமது மக்கள் உணர்ச்சி வசப்படும் நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த உணர்ச்சிவயப்படுதலை இந்த சாதி அரசியல் பண்ணுபவர்கள் தங்களுக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு பையன் குடும்பம், ஒரு பெண்ணின் குடும்பம். பிரச்சினை பெண் வீட்டார், பையன் வீட்டார். இத்தோடு முடிய வேண்டிய விசயம் எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை பல வருடங்களாக புகைந்து கொண்டேதான் இருந்து இருக்கிறது. உயர் சாதி என சொல்லப்படும் சமூகம் மரம் வெட்டும் செயலைத்தான் முதலில் இந்த பிரச்சினையில் கும்பலாக தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்களில் காட்டப்படுவது போல தலித்  சமூகத்தின் வீடுகளை எல்லாம் சூறையாடி இருக்கிறார்கள். இது மனிதர்களின் பயமுறுத்தல் செயல் என்றே சொல்லலாம். இனிமேல் இப்படி செய்வீர்களா என அவர்களின் மனதில் ஒரு தீராத காயத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம். இந்த துயர சம்பவத்திற்கு காவல் துறையினரும் உடன்போயிருக்கிறார்கள் என்கிறது தலித் மக்கள் இனம். பொருளாதாரத்தில் தாழ்வுநிலையில் இருக்கும் சமூக மக்களின் கண்ணீரை எவருமே துடைப்பாரில்லை, துடைக்க தயாராகவும் இல்லை. தனது சாதிக்காரன் முன்னுக்கு வந்தாலே வயிறு எரியும் நிலையில் இருக்கும் மக்கள் முன்னர் தாழ்த்தப்பட்டோர் என அடையாளம் கொண்டவர்கள் முன்னேறி நிற்பது எப்படி? இதற்காகவே அவரவருக்கு இருக்கும் அடையாளத்தை உடைத்து வெளியில் வாருங்கள் என சொன்னால் எவர் கேட்க போகிறார்கள்?

இந்த சூழலில் சாதிய கணக்கெடுப்பு வேறு! அனைத்து சாதி அமைப்புகள் கூட்டம் வேறாம். வெவ்வேறு நாடுகளுக்கு எல்லாம் சென்றாலும் சாதி அடையாளம் தொலைவதும் இல்லை. நமது ஊரில் தோன்றிய இந்த சாதி ஒழிய இன்னும் பல வருடங்கள் ஆகலாம். மேலும் இந்த கலவரத்தின் முழு விபரங்களை பத்திரிகைகள் விவரித்து கொண்டு இருக்கலாம். இன்னும் இன்னும் பலர் மேடைகள் போட்டு பேசிக்கொண்டு இருக்கலாம். இது போன்ற அவலங்களை எல்லாம் தாண்டி மனித சமூகம் எழுச்சி நடை போட்டு கொண்டுதான் இருக்கிறது, ஆனால் தன்னுள் ஒரு சாதி, இனம், மொழி, என அடையாளத்தை பச்சை குத்திக் கொண்டு திரிகிறது. அப்படி இருக்கும் வரை வேறுபாடுகள் என்றேனும் ஒருவகையில் எவரேனும் ஊதிவிட்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள். அதற்கு எந்த காரணம் வேண்டுமெனிலும் ஒரு காரணம் ஆகலாம். தர்மபுரியில் ஏற்பட்ட பிரச்சினை மெதுவாக தமிழக பிரச்சினையாக மாறாமல் இருக்கட்டும். அதற்கு சாதி அரசியல் பண்ணுபவர்கள் சற்று ஒதுங்கி நின்றால் நல்லது.

மேலும் விபரங்கள் அறிய: தர்மபுரி கலவரம்  


Friday 30 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 2

அஷ்டமாசித்திகளில் முதலான அணுவைப் போல் சிறியது ஆதல் என்பது எவ்வகையில் சாத்தியம் என எவரேனும் பரிசோதனையில் இறங்கி இருக்கிறார்களா என்றால்புராண கதைகளில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலே இது சாத்தியமா என்றால் இதுவரை நமது காலகட்டத்தில் எவரேனும் இப்படி முயற்சித்து வெற்றி கண்டு இருக்கிறார்களா என்றால் இல்லையென்றே உறுதியாக சொல்லலாம்.

ஆனால் புராண காலத்து கதாபாத்திரங்கள் அல்லது வாழ்ந்த ஜீவன்கள் எல்லாம் முனிவர்களின் சாபத்தினால் அணிமா நிலையை அடைந்து இருக்கின்றன என்றே குறிப்பு இருக்கிறது. அகலிகை சிறு கல்லாக மாறுதல் கூட ஒருவகையில் அணிமாவை சார்ந்ததுதான். கண்ணுக்கே உட்படாத அணிமா வகை என்பது ஒருவகை பண்புதான்.

அணிமா குறித்து சொல்லும்போதே அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோம். எத்தனையோ முறை ஸ்ரீரங்கம் சென்ற போதெல்லாம் இந்த திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று பார்க்க வேண்டும் என தோணவே இல்லை. இதுவரை இந்த ஆலயத்திற்கு சென்றதும் இல்லை. அட்லாண்டீசும் லேமூரியாவும் என்ற கதை எழுதிய பொது கூட திருவானைக்கோவிலில் உள்ள நூலகம் என எழுதினேனே தவிர இந்த ஆலயம் பற்றி எழுதவில்லை.மேலும் சில தருணங்களில் திருவானைக்கோவில் வழியாக செல்லாமல் மாம்பழம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் சென்றது உண்டு. சிறுவயது காலம் தொட்டே இந்த ஸ்ரீரங்கநாதர் எனக்கு மிகவும் பழக்கமாகிப் போனவர்  என இருந்தாலும் திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் மட்டும் எனக்கு பரிச்சயமே இல்லை.  சிவ வழிபாடு எல்லாம் செய்யக்கூடாது என்று இல்லை, ஏனோ இந்த அகிலாண்டீஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் எனக்கு தெரியாமலே போனது.

அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தபோது ஜம்புகேஸ்வரர் கண்ணுக்குத் தெரிகிறார். யார் இந்த அகிலாண்டீஸ்வரி? பொதுவாகவே இந்து புராணங்களில் ஒரே ஒரு தெய்வம் தான் பல உருவங்களில் பல பெயர்களில் அவதாரமோ அல்லது பூமியில் பிறப்போ எடுத்து வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான். அவர்களின் பூமியில் எழுந்தருளல் குறித்து மிகவும் அற்புதமாகவே எழுதி வைத்து இருக்கிறார்கள். இவை எல்லாம் சத்தியமாகவே நடந்த செயலா என்றால் எனக்குத் தெரியாது. ஆனால் திருவானைக்கோவிலில் உள்ள ஆலயம் அதற்கு சான்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் என வரலாறும், அதோடு சம்பந்தமான புராண கதைகளும் உண்டு.

சிவன், உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என கயிலையில் தவம் இருக்கிறார். சிவன் நினைத்தால் இந்த உலகினை எப்போதுமே நன்றாக வைத்து இருக்க முடியும், அதாவது தீயவைகள் எல்லாம் அழித்துவிட்டால் நல்லவை மட்டும்தானே மிஞ்சும். ஆனால் அந்த தீயவைகளை கூட நல்லவைகளாக மாற்ற வேண்டி சிவன் தவம் இருக்கிறார். சிவனின் தவத்தைக் கண்டு,  பார்வதி சிவனை நோக்கி பரிகாசம் செய்கிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை கைலாயிலத்தில் இருந்து பூமிக்கு சென்று தவம் மேற்கொள்ளுமாறு கட்டளை  என்ற சாபம் இடுகிறார். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் எல்லாம் சிவன், பார்வதியின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாகவே உண்டு. பார்வதி இவ்வுலக சுபிட்சத்திற்கு நான் தவம் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பூமியில் அகிலாண்டீஸ்வரியாக அவதாரம் மேற்கொள்கிறார்.

அப்பொழுது அவர் தெரிவு செய்த இடம் தான் காடுகள் நிறைந்த திருவானைக்கோவில். அங்கே அவர் ஒரு நாவல் மரத்தின் கீழே தனது தவத்தை மேற்கொள்கிறார். பதிபக்தி என சொல்வார்கள். தன்னை தனியாக அனுப்பிவிட்டாரே என கோபம் எதுவும் சொல்லாமல் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து லிங்கம் செய்து வழிபடுகிறார். மணலில் கயிறு திரிப்பது சாத்தியமற்ற செயலாக இருந்தாலும் இன்றைய அறிவியல் விசயங்களில் மணலுடன் சில வேதியல் பொருட்களை சேர்த்தால் மணலில் கயிறு  திரித்தல் சாத்தியம் தான். அன்றைய கால கட்டத்தில் தனது தவ வலிமையால் பார்வதி தண்ணீரில் லிங்கம் செய்து வழிபட்டது சாத்தியமாகவே இருக்க கூடும். தண்ணீர் பனிக்கட்டியான பின்னர் அதை சிவலிங்கமாக செய்வது மிகவும் சாத்தியமே. இதனை அப்பு லிங்கம் என்றே குறிப்பிடுகிறார்கள். 

அகிலாண்டீஸ்வரியின் தவத்தை மெச்சிய சிவன் ஒருவழியாக கடைசியில் அவருக்கு தரிசனம் தருகிறார். அப்பொழுது சிவன் ஒரு ஆசிரியராக, அகிலாண்டீஸ்வரி ஒரு மாணவியாக இருந்து ஞானம்தனை சிவனிடம் இருந்து பெற்று கொள்கிறார். அதனால் தான் இந்த திருவானைக்கோவிலில் சிவனுக்கும் அகிலாண்டீஸ்வரிக்கும் திருக்கல்யாணம் கூட நடைபெறுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவானைக்கோவில் பெயர் வரலாறு கூட மிகவும் சுவராஸ்யம் தான். சிவனின் பக்தர்களான மலையவன் மற்றும் புஷ்பதந்தா என்பவர்கள் கைய்லாயிலத்தில் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு புஷ்பந்தாவை பூமியில் ஒரு யானையாக உருவெடுக்க சபதம் போடா, புஷ்ப்தந்தா மலையவனை ஒரு சிலந்தியாக உருவேடுக்குமாறு சபதம் இடுகிறார்கள். இங்கே அணிமாவும், மகிமாவும் சாத்தியமாகிறது. மகிமாவின் மகிமை பற்றி அடுத்தத் தொடரில் பார்க்கலாம். பூமிக்கு உருமாறி வந்தாலும் ஜம்புகேஸ்வரம் என்ற நகரை அடைந்து அங்கே சிவனை பூஜிக்கிறார்கள். அங்கேயும் இவர்களின் சண்டை ஓயவில்லை. சிலந்தியானது நாவல் மர இலைகள் சிவலிங்கம் மேல் விழாமலிருக்க சிலந்தி வலை கட்டுகிறது. ஆனால் யானையோ அது லிங்கத்திற்கு மீதான அழுக்கு என அழித்து கொண்டு தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்கிறது. இதைக் கண்டு கோபம் கொண்ட சிலந்தி யானையை கொன்றுவிடுகிறது. இவர்களது பக்தியினை மெச்சி சிவன் இவர்கள் இருவருக்கும் மீண்டும் பழைய நிலையை கைலாயித்தில் தந்துவிடுகிறார்.

மலையவன் அடுத்தொரு பிறப்பில் கோச்செங்கண்ணன் எனும் அரசராக பிறப்பு எடுக்கிறார். செங்கண்ணன் எனும் பெயர் அவரது கண்கள் பிறப்பிலேயே சிவப்பாக இருந்ததால் வந்தது என்கிறது குறிப்பு. அதாவது ஜோசியர் குறித்த நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை மாபெரும் சிறப்பு அடையும் என்ற நிலை. ஆனால் குழந்தை பிறக்கும் தருணம் முன்கூட்டியே வந்துவிட தாய் ஜோசியர் குறித்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாக தொங்கவிடச் சொல்கிறார். அப்படி தலைகீழாக தொங்கவிட்டதால் குழந்தையின் கண்கள் சிவந்து போனது என்கிறது குறிப்பு. அறிவியல் சிந்தனை அன்றே கோலோச்சிதான் இருக்கிறது. கோ என்றால் அரசு, அரசர். கோச்செங்கண்ணன் பல சிவ ஆலயங்களை கட்டுகிறார். அப்படி கட்டிய ஒரு பஞ்சபூத ஆலயங்களில் ஒன்றானதுதான் திருவானைக்கோவில். இந்த ஆலயத்தில் ஒரு சிறு யானை கூட நுழையக் கூடாது என பழைய பகையை மனதில் வைத்து ஆலயம் எழுப்பினான் என சொல்வது உண்டு. ஆனாலும் யானைக்கு பெயர் வந்தது. திரு என்றால் சிறப்பு. சிவனை வழிபட்ட யானை. ஜம்பு அதாவது நாவல் மரங்கள் நினைந்த காடு. திருவானைக்கா என்பதுதான் முன்னர் இருந்தது. பின்னர் திருவானைக்கோவில் என மருவியது என்கிறார்கள்.

உலகம் செழிக்க பார்வதியே அகிலாண்டீஸ்வரியாக வந்து தவம் இருந்து கூட சிலந்தி யானையை கொன்றதாகத்தான் வரலாறு குறிக்கிறது. தெய்வபக்தி நிறைந்த இருவர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பொறாமை எண்ணம் இருவரையும் அழிக்கிறது, இருப்பினும் தெய்வபக்தியால் யோகநிலை கைகூடுகிறது. ஆனால் இது தவறான ஒன்று. காதல், அன்பு, தெய்வீகம் என சொல்லிக்கொண்டு மற்றதை அழித்தல் முறை கேடான செயல். பற்று கொண்டு இருத்தல் என்பது பற்றற்று இருத்தல் போல் இருப்பது இல்லை.

நல்ல விசயங்கள் மனதில் இல்லாது போகும்போது நாம் கூனிக்குறுகி போகிறோம். இதுதான் உண்மையான அணிமா. எண்ணங்கள் சிறுத்து போதல் எனலாம்.

(தொடரும்)


Wednesday 28 November 2012

கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்?

பக்தா என்ற குரல் கேட்டதும் எனக்கு பயமாகவே போய்விட்டது. இத்தனை நாட்கள் நிம்மதி இன்று தொலைந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை கலைத்து வீட்டின் ஜன்னல் கதவின் வழியாக பார்த்தேன். அங்கு சாமியார் நின்று கொண்டிருந்தார். வீட்டினை திறப்பதா வேண்டாமா என மிகவும் யோசித்தேன். மீண்டும் பக்தா நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன் என்றார்.

நான் கதவினை திறக்காமல் பேசாமல் சென்று படுத்து விட்டேன். இருந்தாலும் மனம் திக் திக் என அடித்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டின் கதவு திறந்து கொண்ட சப்தம் எனது பயத்தை மிகவும் அதிகமாக்கியது. மெதுவாக வீட்டின் வாசற்புறம் திரும்பி பார்த்தேன். ஆமாம், வீட்டின் கதவு திறந்து சாமியார் உள்ளே வந்து கொண்டிருந்தார். இந்த அம்மாவும், அப்பாவும் இந்த நேரத்தில் எங்கு தான் போய்த் தொலைந்தார்கள் என மனம் வெகுவேகமாக அடிக்கத் தொடங்கியது.

என்னிடம் மந்திர சக்தி இருப்பதை மறந்து விட்டாயா பக்தா என்றார் சாமியார். நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்தவன் போல அடடே சாமியாரா, வாருங்கள் நான் நன்றாக தூங்கிவிட்டேன் அதனால் தான் நீங்கள் வந்தது கூட தெரியாமல் போய்விட்டது என்றேன். நான் கதவை சரியாக பூட்டித் தொலைக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். நான் சாமானியன், பொய் பேசலாம், ஆனால் சாமியார் எதோ மந்திர சக்தி மூலம் கதவை திறந்ததாக பொய் சொல்கிறாரே என மனதில் கோபம் வந்தது.

இந்த மதிய வேளையில் கூட உனக்குத் தூக்கம் வருமா? என்றார் சாமியார். தலைவலி சற்று அதிகமாக இருந்தது, அதுதான் தூங்கிவிட்டேன் என பொய் சொன்னேன். சரி சென்று முகம் அலம்பி கொண்டு வா, நாம் ஒரு இடம் போகலாம் என்றார். எனக்கு எரிச்சலாக போய்விட்டது. நன்றாக தூங்கி கொண்டு இருந்தானை எதற்கு இந்த ஆள் வம்பு செய்கிறார் என நொந்து கொண்டேன். எனக்கு தலைவலி மிகவும் அதிகமாக இருக்கிறது அதனால் நான் எங்கும் வர இயலாது என மீண்டும் ஒரு பொய் சொன்னேன்.

சாமி, நீங்கள் தான் மந்திர சக்தியால் கதவை திறந்து கொண்டு வந்தீர்கள் அல்லவா, அது போல எனது தலைவலியை மந்திர சக்தியால் போக்கிவிடுங்களேன் என சொன்னேன். இருக்கிற தலைவலியை போக்கலாம், ஆனால் இல்லாத தலைவலியை எப்படி போக்குவது? அது எந்த மந்திர சக்திக்கும் கட்டுக்கு அடங்காதே என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் அதிகமானது. நான் பொய் சொன்னது எல்லாம் இவருக்கு தெரிந்து இருக்குமோ என அச்சம் என்னை வாட்டியது. ஆனால் அவர் பொய் தானே சொல்லி இருக்கிறார் என எனது தலையணையை நகற்றிய போது வீட்டு கதவின் சாவி எனது கைக்கு அகப்பட்டது. சாமியார் எதோ மந்திர சக்தியால் தான் கதவை திறந்து இருக்கிறார் என முடிவுக்கு வந்த வேளையில் நிறையவே யோசிக்கிறாய் என்றார் சாமியார். உடனே கிளம்பு வா போகலாம் என்றார்.

எனக்கு வர விருப்பம் இல்லை என்றேன். அதைக்  கேட்டதும் சாமியார் சிரித்த சிரிப்பு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது என்றார் சாமியார். எனக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஆமாம் எனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது, இந்த கேடு கெட்ட சாமியாரை நான் பார்க்கவே வேண்டாம் என நினைத்தாலும் வந்து தொலைத்து விடுகிறார். அதோடு மட்டுமில்லாமல் என்னை எங்கோ எனது விருப்பத்திற்கு மாறாக அழைத்து செல்வேன் என துடி துடிக்கிறார். வேறு வழியின்றி நான் கிளம்பத் தயாரானேன்.

வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் தர வேண்டும் என தோணவில்லையா என்றார் சாமியார். கடவுளே இந்த சாமியாரை நீ கொன்று விட மாட்டாயா என நினைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்தேன். இவர் கெட்ட கேட்டுக்கு பழச்சாறா தர முடியும் என நினைத்தேன். சாமியார் சிரித்துக் கொண்டே எனது உடலில் எழுபத்தி ஐந்து சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. பரவாயில்லை குடிக்கிறேன் என வாங்கி கொண்டார்.

சாமியாருடன் நானும் கிளம்பினேன். நீ எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து அதை செய்து முடித்து இருக்கிறாயா என்றார் சாமியார். ஆமாம் செய்து முடித்து இருக்கிறேன் என்றேன். சாமியார் சிரித்து கொண்டே பொய் சொல்ல வேண்டும் என நினைத்து அதை செய்துதான் முடித்து கொண்டு இருக்கிறாய் என்றார். எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது. இவருக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறதே என நினைத்து சாமியாரிடம் நீங்கள் இந்த உலகத்தை சீரானதாக மாற்ற நினைக்கலாமே என்றேன். நான் நினைத்து என்ன செய்ய, அந்த கடவுள் நினைக்க வேண்டுமே என்றார் சாமியார். ஆமாம் சாமி, அந்த கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் நீங்கி கோபம் கொப்பளித்தது. நல்லதை செய்ய நாம் நினைத்தால் அதை தீயதில் சென்று முடிக்கும் கடவுள் என்ன கடவுள் என்றேன். நல்ல கடவுள் என்றார் சாமியார். எனக்கு இதனால் தான் இவரை பார்க்கவே பிடிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் கடவுளுக்கு வக்காலத்து வாங்குவார். எங்கோ என்னை அழைத்து கொண்டு வந்துவிட்டார் போல என நினைத்தேன். அதற்குள், நாம் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்றார் சாமியார்.

அந்த இடத்தில் எதுவுமே இல்லை. மரம், செடி கொடிகள் என எதுவுமே இல்லை. மெல்லிய காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதோ இப்படிப்பட்ட இடத்தில் இருந்துதான் மரங்கள், செடிகள், மனிதர்கள், பூச்சிகள், புழுக்கள் என எல்லாமே உருவானது என்றார் சாமியார். சாமி இவைகள் எல்லாம் இறைவனால் படைக்கப்படவில்லையா? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என சாமியார் சொல்லிக் கொண்டே நான் சொல்ல வந்தது உனக்கு புரிந்து இருக்கும் என சொல்லி மறைந்து போன சமயம் பார்த்து நல்ல நாள் அதுவுமா இன்னும் என்ன தூக்கம் என அப்பா என்னை பிரம்பால் ஓங்கி ஒரு அடி அடித்தார். உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் வலிக்குமோ என நினைத்து கொண்டே நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என வலியால் துடித்துக் கொண்டே எழுந்தேன்.

Friday 16 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 1

அஷ்டமாசித்திகள் என்றால் எட்டு பேறுகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இதனை அடைய பெற்றவர்கள் மாபெரும் பலன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்றே அறியப்படுகிறது. பெரும்பாலும் சித்தர்கள் இத்தகைய எட்டு சித்திகள் பெற்றவர்களாகவே  காட்டப்படுகிறார்கள். இந்த எட்டு சித்திகள் பெறுவது என்பது அத்தனை எளிதான காரியமாக சாமானியர்களுக்குத் தெரிவதில்லை. இவை எல்லாம் கண் கட்டு வித்தையாக இருக்கலாம் என்றே பொதுவாக உணரப்பட்டாலும், ஒருவேளை இருக்குமோ என்கிற மாய பிம்பம் தென்படத்தான் செய்கிறது.

அஷ்டமாசித்திகள் எவை எவை.

1. அணிமா. இதை அணுத்தன்மை அல்லது நுண்மை என்றே குறிப்பிடலாம். அதாவது அணுவைப் போன்று சிறியவையாதல் என பொருள்படும்.

'கறந்த பால் மடிபுகா' என்று சொன்னாலும் யோக நிலையின் மூலம் உடலை சிறியது ஆக்கலாம் என்றே சொல்கிறார்கள். பொதுவாக பார்க்கப் போனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே ஆகிறது. ஆனால் உடல் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை என்னவென பார்க்கும் போது சில விசயங்கள் சாத்தியப்படலாம். மூன்று வகை உடல்கள் எவை எவை.

அ . ஸ்தூல சரீரம் அதாவது  கண்களுக்கு புலப்படக் கூடிய உடல்

ஆ . சூக்ஷ்ம சரீரம் அதாவது கண்களுக்கு புலப்படாமல் நுட்பமாய் அமைந்து இருப்பது. இதனை லிங்க சரீரம் என்றும் சொல்கிறார்கள். இந்த லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு, பிராண வாயு ஒன்று என்பவைகளால் ஆனது.

இ. காரண உடல். அதாவது பருவுடல், காரண உடல் இரண்டிற்கும் அடிப்படை இந்த காரண உடல்.

பருவுடம்பு மட்டுமில்லாமல் வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு மற்றும் இன்ப உடம்பு எனவும் உடம்பு பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒரு நிலை ஆகும். இப்படி பிரித்தெடுத்து சிந்தித்த முன்னோர்கள் போற்றத்தக்கவர்கள் தான்.

தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம் மற்றும் சோத்திரம் இவை ஞானேந்திரியங்கள். அதாவது   மெய் (உணர்தல்), வாய் (சுவை) ,கண் (பார்வை), மூக்கு (வாசம்), செவி (கேட்டல்) என ஐம்பொறிகளாக வகைப்படுத்தலாம். லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் மூலம் ஆனது என்பது இவை கண்களுக்கு புலப்படாத விசயங்கள் உணர்வதாக குறிப்பிடுகிறார்கள். இவைகளை பஞ்ச தன்மாத்திரைகள் என்றே சொல்கிறார்கள்.

வாக்கு, பாணி, பாதம், பாயுரு மற்றும் உபஸ்தம் என்பவை கர்மேந்திரியங்கள் என்றே  குறிக்கப்படுகின்றன. அதாவது வாய், கை, கால், மலவாய், கருவாய். இவை சொல்லல், நடத்தல் கொடுத்தல், விடுதல், மகிழ்தல் என கர்மங்களை செய்வதால் இவை கர்மேந்திரியங்கள் என்றே குறிக்கப்படுகின்றன.

மனம், அறிவு, நினைவு மற்றும் முனைப்பு போன்றவை அந்தக்கரணங்கள் என்றே வழங்கப்படுகின்றன. அந்தக்கரணங்கள் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் கட்டுபாட்டில் வைக்கக் கூடியவை. மனம், புத்தி இரண்டுமே எவை என்பது பிரித்தறிய மனம் நினைப்பு என்றும் புத்தி என்பது அறிவு என்றும் சொல்கிறார்கள். நாம் ஒன்றை நினைக்க மனம் துணையாகும். ஆனால் அதை நிச்சயித்து நடத்த புத்தி தேவை என்பதாகும்.

(தொடரும்)


Tuesday 13 November 2012

எனக்கு மட்டும் இல்லையா தீபாவளி?

சிறு வயதில் கேள்விப்பட்ட நரகாசுரன் கதை தான் தீபாவளிக்கு என இருந்தாலும் வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன. நிறைய பெண்களை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த நரகாசுரனை வீழ்த்திய தினம் தான் தீபாவளி என்றே கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி அன்று வெடி வெடித்து ஆராவரத்துடன் புத்தாடை உடுத்தி மகிழ்ந்து இருப்பது ஒரு பொழுது போக்கு. எப்போது தீபாவளி வரும், எத்தனை புது படங்கள் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்போரும், ஒரு புது ஆடை கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் சிலரும், எந்த பண்டிகை வந்தாலும் நமது நிலை இதுதான் என இருப்போர் பலரும் என விழாக்காலங்கள் இந்தியாவில் களைகட்டும்.

சரவெடி, லக்ஷ்மி வெடி, அணுகுண்டு, மத்தாப்பு என சந்தோசமாக கழித்த நாட்கள் நினைவில் ஆடும். இந்த தீபாவளியுடன் எங்கள் கிராமத்தில் பொங்கலும், அதனுடன் கரி நாள் என கொண்டாடப்படும். தீபாவளிக்கு என விடுமுறை நாட்கள் குறைந்தது மூன்று தினமாவது  கிடைத்துவிடும். இது போன்று தீபாவளி கொண்டாடி பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. தீபாவளி அன்று கூட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போலவே நிலைமையும் மாறிவிட்டது.

இந்த சிறப்பான தீபாவளி லக்ஷ்மி தேவிக்கு தொடர்புடையது என்று ஒரு சாரர் கூறுவது உண்டு. அதாவது ஒளியானது வாழ்வில் வீசத் தொடங்கினால் அங்கே லக்ஷ்மி தேவி வாசம் செய்வது உண்டு எனும் ஐதீகம் உண்டு. அதாவது லக்ஷ்மி தேவி அவதாரம் செய்த தினம் இந்த தினம் தான் என்று குறிப்பில் இருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாமல் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது லக்ஷ்மி தேவியை இந்த திருநாளில் தான் பாலி எனும் அரசனிடம் இருந்து வாமணர் காப்பாற்றினார் என்பதால் இந்த திருநாளை லக்ஷ்மி தேவிக்கு அர்பணிக்கிறார்கள்.

வனவாசம் முடித்துவிட்டு பாண்டவர்கள் திரும்பி வந்த தினம், இலங்கையில் இருந்து சீதையை  மீட்டு அயோத்திக்கு ராமர் வந்த தினம் கூட தீபாவளியாக கொண்டாடப்படுவதும் உண்டு. இந்த தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாது சீக்கியர்கள், ஜெயின் மதம் தொடர்புடையவர்கள் கூட கொண்டாடுவது உண்டு. யுகங்கள் மாறினாலும் வெவ்வேறு காரணத்திற்காக இந்த தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது தெள்ளத் தெளிவாகிறது.

இனி வரும் காலங்களில் இந்த தீபாவளி தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்ட தினமாகவும், இனம், நிறம் போன்ற வேறுபாடு நீக்கிய நாளாகவும், மதங்கள் அழிக்கப்பட்டு தெய்வீகத் தன்மை நிலைபெற்ற நாளாகவும் கொண்டாடப்படலாம். அப்படிப்பட்ட ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் நாள் ஒன்றே உண்மையான தீபாவளி. அதுவரை இந்த தீபாவளி பண்டிகை எல்லாம் ஒரு பொழுது போக்கு. ஒரு விடுமுறை தினம் அவ்வளவுதான். 

Friday 9 November 2012

வள்ளலார்

யார் இந்த வள்ளலார்? வள்ளலார் பற்றி இன்றைய சமூகம் மறந்து கொண்டிருக்கலாம், ஆனால் சாதிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று எனும் சமரச சன்மார்க்க கொள்கையை பரப்பியவர். இறைச்சி உண்பவர்களை அறவே வெறுத்தார் என்பது மட்டும் சமரச சன்மார்க்க கொள்கைக்கு எதிரான ஒன்று.

சிதம்பரத்தில் பிறந்த இவரின் இயற்பெயர் ராமலிங்கம். ராமலிங்க அடிகளார் என மாற்றம் கொண்டு வள்ளலார் என பின்னாளில் போற்றப்பட்டவர். இவரின் வாழ்க்கை குறிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இவரின் தொண்டு மிகவும் போற்றத்தக்கது என்றும் திருவருட்பா இயற்றி தமிழுக்கு பெருமை சேர்த்தார் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை.

இவரின் ஜீவ காருண்யம், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை என இவரது சொல்லாடல்  மிகவும் பிரபலமானவை. உலகில் நன்மையே நிலைக்க வேண்டும் எனும் கனவுலகில் இவர் வாழ்ந்தவர் என்றே சொல்லலாம்.

சிதம்பரத்தில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர். சென்னைக்கு சென்ற தருணத்தில் வேடிக்கையாக சென்னையை தர்மமிகு சென்னை என அழைத்தவர் பின்னாளில் தீட்டிலே திளைத்த சென்னை என மாற்றிக் கொண்டார். உலகில் நீதி, நியாயம், நேர்மை எல்லாம் நிலைக்காமல் போவது கண்டு மனதில் வாட்டம் கொண்டு இருந்து இருக்கிறார். அந்த வாட்டம் எல்லாம் போக்க இறைவன் ஒருவனே கதி என்ற நிலையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இப்படியெல்லாம் இருந்தாலும் ஞானம் என்பது அத்தனை எளிதாக எவருக்கும் கிடைப்பதில்லை. எப்போதும் இறைவன் பற்றியும், சமயங்கள் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பவர்கள் மிகவும் குறைவு. விளையாட்டு பருவத்தில் இறைவன் மீதான பற்று என வரும்போது அங்கே மற்ற விசயங்கள் அடிப்பட்டு போய்விடுகின்றன.

ஒரு விசயத்தை பற்றி அறிந்து கொள்ள கல்வி சாலைகள் அவசியமே இல்லை என்பதுதான் முந்தைய கால சூழல். அவரவர் அறிந்து கொண்டிருந்த விபரங்கள் தலைமுறைக்கு கடத்தப்பட்டன. ராமலிங்கம் சிறு வயதில் இருந்தே அவரது மூதாதையர்களின் சமயமான சைவம் குறித்து ஆர்வம் கொண்டிருந்து இருக்கிறார். அதுவும் சென்னையில் தனது அண்ணனுடன் வசித்து வந்தபோது தனது அண்ணனின் சைவ புலமை அவரை மிகவும் கவர்ந்து இழுந்து இருக்கிறது. இதன் பொருட்டு வீட்டிலேயே தமிழ் கற்று கொண்டு இறைவன் மீதான பற்றினை வளர்த்து வந்து இருக்கிறார்.

பொதுவாக சித்தர்கள் சமய சடங்குகளை அறவே வெறுக்க கூடியவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் பரமானந்தனை வெளியில் தேடுவது எங்கனம் என்றே கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அது போலவே ராமலிங்கம் இந்த கருத்தில் மிகவும் வலுவாக இருந்து இருக்கிறார்.

பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் போதும், அவருக்கு கூட்டம் சேர்ந்துவிடும். அப்படி கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு இவரின் பால் அன்பு பாராட்டியவர் ஏராளம். சில சங்கங்கள் அமைத்து வெற்றியும் கண்டவர்.

சிறு வயதிலேயே இறைவன் மீது அன்பு கொண்டு  இருந்தவருக்கு இவரின் விருப்பத்திற்கு மாறாக இவரது திருமணமும் நடந்தேறியிருக்கிறது. அதெல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளாமல் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சிறப்பு வாய்ந்தது.

இப்படி இருந்த இவர் ஜனவரி மாதம் முப்பதாம்  நாள் தனது தொண்டர்களிடம் இதோ இந்த வீட்டில்  உள்ளே செல்கிறேன், யாரும் கதவை திறக்க வேண்டாம், அப்படி திறந்தாலும் அங்கே நான் இருக்க மாட்டேன் என சொல்லி சென்றதாகவும், கதவு நான்கு மாதமாக திறக்கப்படமால் அரசு உத்தரவின் பேரின் மே மாதம் திறக்கப்பட்டு பார்த்த போது  அங்கே ராமலிங்கம் எனும் வள்ளலார் இல்லாமல் இருந்ததை அரசு பதிவேட்டில் பதிந்து வைத்துவிட்டது.

இது குறித்து தொண்டர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்?

வள்ளலார் அருட்பெரும் சோதியுடன் கலந்து விட்டார் என்றே சொல்லித் திரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அவரின் மனதின் வலியை கண்டு கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய் இருந்து இருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம்.

தனது உடலானது மிகவும் கேவலமானது என்றே எல்லா சித்தர்களும் வள்ளலார் உட்பட பாடி வைத்து இருக்கிறார்கள். மண வாழ்க்கை கேவலமான ஒன்றே என்பதுதான் இவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏதோ இவர்கள்,  இறைவன் மீது பற்று வைத்து விட்டால், இறைவனையே சதா பாடித் திரிந்தால் எல்லாமே நன்றாக இருந்துவிடும், உடல் தேஜஸ் நிலை அடைந்து விடும்  என்பது இவர்களின் ஒரு கற்பனை காட்சியாக வலம் வந்து இருக்கிறது.

நெருப்பில் மறைந்த மாணிக்கவாசகர், அப்படியே சமாதியாகிப் போன காரைக்கால் அம்மையார் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவது என்பது அறவே கிடையாது என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது. ஆனால் இந்த ஆன்மா அழிவது இல்லை, பாதிக்கப்படுவது இல்லை என்று சொல்வதற்கு காரணம் இந்த இயற்கை வாழ்வில் ஒவ்வொருவரும் கண்டு கொண்ட பிரச்சினைகள்.

எவர் எல்லாம் இறைவனை நாடுவார்கள்? இதற்கு மிகவும் எளிமையான காரணம் ஒன்று இருக்கிறது. இதை எத்தனை பேர் மனதைத் தொட்டு மனசாட்சிக்கு உட்பட்டு ஆமாம் என சொல்லப் போகிறார்கள்?

பிரச்சினைகள் உள்ளவர்கள், பிரச்சினை வராமல் இருக்க வேண்டுபவர்கள் இறைவனை நாடுவார்கள். இறைவனை நாடினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனும் எதிர்பார்ப்புகளே பெரிதும் இந்த இறைவனின் மீதான சடங்குகள் சம்பிராதயங்கள் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன. பெரும்பாலனவர்கள் இதனை அறிந்து வைத்து இருந்தாலும் நம்பிக்கை எனும் பேரில், பயம் கருதி இதனை காலம் தொட்டு தொடர்ந்து வந்து இருக்கிறார்கள். இதனை வள்ளலார் கடுமையாகவே எதிர்த்தார். அதனால் தான் இவரின் தொண்டு இடங்களில் எந்த ஒரு சடங்குகளும் அனுமதிக்கப்படுவது இல்லை.

இத்தனை பாடல்கள் இயற்றியும், எத்தனையோ நல்ல விசயங்கள் எடுத்து சொல்லியும் திருந்தாத மானிடர்கள் கண்டு மனம் வெதும்பிய வள்ளலார் இறுதியாக எடுத்த முடிவு. யாருக்கும் சொல்லாமல் ஓடிப் போவது. இதை சாதாரணமாக செய்தால் ஓடிப் போய்விட்டார் என்றே கேவலமாக பேசக் கூடும் என திட்டமிட்டே இந்த செயலை செய்தார் எனலாம்.

தான் பாடிய திருவருட்பாக்கள் மூலம் திருந்தாத மானிட சமூகம் தான் இறைவனுடன் ஐக்கியமானது என நினைத்தாலாவது திருந்தட்டும் என்றே இந்த ஓடிப்போன மறைதல் செயலை நிறைவேற்றி இருக்கிறார்.

உண்மையை சொல்பவன் சதிகாரன்.
நன்மையை நினைப்பவன் நாசக்காரன்.

ஒரு உயர்ந்த உள்ளத்தை, சமூகம் சமரச வாழ்வில் திளைக்க வேண்டும் என தனது வாழ்நாளில் பாடுபட்ட ஒரு ஜீவனை ஓடிப்போக வைத்த இந்த சமூகம் வெட்கி தலை குனிய வேண்டுமே தவிர அருட்பெரும் சோதியில் கலந்து விட்டார் என பொய் சொல்லித் திரிய கூடாது.

இவரது சமரச சன்மார்க்கத்தை மட்டுமே பெரிதாக பேசித் திரியும் சமூக ஆர்வலர்கள் சமரசத்தை ஒவ்வொரு ஊரில் முதலில் நிலைநாட்டத் தொடங்கட்டும். ஒரு சமூகம் அவரவர்  தலைவரின் பிறந்த நாள், இறந்த நாள் என கொண்டாடி பிற சமூகத்தை களங்கப்படுத்துவது நிற்கட்டும். இராமலிங்க பிள்ளையில் இருக்கும் சாதிய பெயர் வள்ளலாரில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

Thursday 1 November 2012

ஓவபைன் தந்த அதிர்ச்சி

பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் போல. இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதி, பலவகையான செயல்முறை பயிற்சிகள் என எதுவமே இல்லாத காலத்தில் இந்த இந்த தாவரம் இந்த இந்த பலனைத் தரும் என சித்தர்கள் என போற்றப்படுபவர்கள் கண்டுபிடித்து தந்ததே பெரும் அதிசயம் தான்.

இந்தியா, சைனா போன்ற நாடுகள் இது போன்ற மருத்துவ முறைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து கொண்டிருந்தன. தாவரங்களின் மூலம் தங்களது உடல் நலனை காத்துக் கொள்ளும் முறையை மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள். இது கூட இயற்கைத் தேர்வு அடிப்படையில் மனித இனம் தம்மை இவ்வுலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு முயற்சி எனலாம்.

ஓவபைன் அல்லது ஸ்ட்ரோபந்தின் எனப்படும் மருந்து ஸ்ட்ரோபந்துஸ் எனப்படும் மலர் இன வகை சார்ந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பொருளாகும். இந்த ஸ்ட்ரோபந்துஸ் ஆப்பிரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வளரும் தன்மை உடையது. இவை மிகவும் உயரமாக வளரக்கூடிய தாவரமும் ஆகும்.

இந்த தாவரம் மிகவும் விஷத்தன்மை உடையது என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த ஆப்பிரிக்கர் கூட்டம் இதனை அம்பில் தடவி பிறரை கொல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றே குறிப்புகள் இருக்கின்றன. அதி வேளையில் இந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓவபைன் இதயத்திற்கு மிகவும் உபயோகமாகக் கூடிய மருந்தாக பயன்படுத்தப்பட்டது. எதுவுமே அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த மருந்து அளவு அதிகமானால் ஆளையே கொன்று விடும் என்பதுவும் அறியப்பட்ட ஒன்று.

இதய கோளாறுகள் நீக்கும் இரண்டு வகை மருந்துகள் என டிஜிடளிஸ் மற்றும் ஸ்ட்ரோபந்துஸ் இரண்டுமே விஷத்தன்மை உடையவை. இந்த ஓவபைன் சோடியம் பொட்டாசியம் பரிமாற்றத்தை தடுக்கும் தன்மை உடையது. இப்படிப்பட்ட மிகவும் கொடிய மருந்துடன் வேலை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் தலையில் எழுதப்படாத விதி.

கினிபிக்ஸ் வேகஸ் நரம்புதனில் இந்த மருந்தினை சோதனை செய்தபோது இவை மிகவும் அற்புதமாகவே வேலை செய்தது. மிகவும் சிறப்பான மருந்து ஒன்று கண்டுபிடித்துவிட்டோம் என்ற குதூகலத்தில் இந்த மருந்து அளவு அதுவும் மிகவும் குறைவான அளவு கினிபிக்ஸ் ற்கு தந்தபோது அவை அனைத்தும் இறந்து போயின. இந்த செயல்முறையை செய்வதற்கு முன்னரே எனக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. கவனத்துடன் இரு, இல்லையெனில் இந்த மருந்து உன்னை தாக்கலாம் என.

ஆனால் மிகவும் குறைந்த அளவே தந்தும் இப்படி இந்த மருந்து செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாழ்விலும் அப்படித்தான். கெட்ட விசயங்கள் மிகவும் குறைவாக செய்தால் பிரச்சினை இல்லை என்று நினைக்க கூடியவர்கள் உண்டு. ஆனால் அந்த குறைவான கெட்ட விசயங்கள் மனிதர்களை அழிக்கும் வல்லமை உடையதுதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடப்பதைவிட ஒரு உண்மை சொல்லி அந்த கல்யாணம் நின்றால் அதுதான் சிறப்பு.

இப்படி உலகில் பல விஷத்தன்மையான விசயங்கள் நல்லது செய்வது போலவே வலம் வருகின்றன. அவை வளம் பெறாமல் காப்பது நமது கையில் உள்ளது. 

Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


Tuesday 30 October 2012

காதலில் வக்கிரம்

எனக்கு நீ கிடைக்காமல் போனால் 
எவருக்குமே நீ கிடைக்காமல் 
போகக் கடவது என்றே 
சாபம் இட்டதுண்டு 

தினந்தோறும் நீ வரும் பேருந்தில் 
அன்று நீ வராததை கண்டு 
அந்த பேருந்து கவிழட்டும் 
என்றே நினைத்தேன் 

உனது அழகிய முகத்தை 
நான் பார்க்கக் கூடாது 
என்று சொன்ன உன் தந்தைக்கு 
பாடம் புகட்ட 
அமிலத்தை அவரது  முகத்தில் 
தெளித்துவிட துடித்தேன் 

எனது காதலை உன்னிடம் 
சொன்னபோது 
நீ மறுத்து வெறுத்து ஒதுக்கிய 
மறுகணம் 
நான் இறந்துவிடலாம் என்றே 
கலங்கினேன்

காதலும் காதல் சார்ந்த 
இடம் கல்லறை 
என அனைவரும் 
சொல்லிவிடட்டும் என 
உன்னையும் அன்றே 
கொன்று ஓரிடத்தில் நம்மிருவரையும் 
புதைக்க பயணித்தேன் 

உள்ளத்தில் உள்ள காதலை 
தேக்கி வைக்க இயலாமல் 
உள்ளத்தில் உள்ளது எல்லாம் 
உன்னிடத்தில் மீண்டும் சொன்னபோது 
நான் தவிக்க வேண்டும் என்றே 
நீ என்னை தவிர்ப்பதாக சொன்னாய் 

என்னில் மட்டும் இல்லை 
காதலில் வக்கிரம் 
உன்னிடத்திலும் உண்டு 
கண்டுகொள்!

Saturday 27 October 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 11

கர்ம வினை என்று சொன்னபோதே  எனக்குள் ஏற்பட்ட குழப்பம் பெரியதாகவே இருந்தது. இது குறித்து நான் காயத்ரியிடம் மேலும் விவரமாக கேட்க நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் அமைதியாக இருந்ததால் எப்படி கேட்பது என்றே நினைத்தேன்.

''அப்படினா நீ என்னை மறந்துடுவியா'' என்றேன். அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே எல்லாம் இருந்தால் காயத்ரி ஒன்று ஆம், அல்லது இல்லை என்று சொல்லிவிடலாம். பதிலுக்கு காத்து இருந்தேன்.

''அதன் சொன்னேனே கர்ம வினைன்னு'' என்றாள். 'புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்' என்றேன். 'நீ இந்த காலேஜுக்கு வர முன்னால என்னைப் பார்த்தியா? இதற்கு முன்னால எத்தனை கேர்ல்ஸ் நீ பாத்து இருப்ப. என்கிட்டே வந்து எதுக்கு லவ் சொன்ன'. இதெல்லாம் கர்ம வினை என்றாள்.

ஒன்று நடப்பதும், நடவாமல் இருப்பதும் கர்ம வினை எனில் நமது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்பதற்கே ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறதே என நினைத்து ''நாம நினைச்சா எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள்ள கொண்டு வந்துராலாமே'' என்றேன். ''கட்டுக்குள்ள கொண்டு வந்துதான் பாரு'' என்றாள்.

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை. வீடு நோக்கி நடந்தோம். அம்மாவிடம் இது குறித்து கேட்க வேண்டும் போலிருந்தது. வழக்கத்திற்கு மாறாக காயத்ரியின் அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். அம்மாவின் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.

''என்னம்மா, ஒரு மாதிரியாய் இருக்க'' என்றேன். நான் வந்ததை கூட கவனிக்காதவர் போலே தென்பட்டார். மீண்டும் அம்மாவை உலுக்கினேன். 'வாப்பா' என்றவர் அடுக்களையில் நுழைந்தார். காயத்ரி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

''அம்மா'' என்றேன்.

''பிரச்சினைக்கு மேல பிரச்சினை வந்தா என்னடா பண்ண முடியும்?'' என்ற அம்மாவின் வார்த்தை சற்றே நடுக்கம் கொண்டிருந்தது. ''விவரமா சொல்லும்மா'' என்றேன்.

''காயத்ரியோட அக்காகிட்ட ஒருத்தன் இன்னைக்கு வம்பு பண்ணியிருக்கான். இவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய்ட்டானாம். அவனை இவளுக்கு தெரியும்னு சொல்றா'' என்றாள். ''பூ இவ்வளவுதானாம்மா, இதுக்கு எல்லாம் நீ எதுக்கு நடுங்குற'' என்றேன். ''டே பெரிய விவகாரமா ஆயிரமாடா'' என்றார் அம்மா.

''எல்லாம் கர்ம வினைம்மா'' என்றேன். ''என்ன சொன்ன நீ, கர்ம வினையா'' என்றார் அம்மா. ''ஆமாம்மா காயத்ரி அப்படித்தான் சொன்னா'' என்றேன். ''ம்ம் நாம வாங்கி வந்த வரம் அப்படி'' என்றார் அம்மா. ''யாரும்மா நாம கேட்காத வரத்தை எல்லாம் கொடுத்தது'' என்றே சொல்லி வைத்தேன். அதற்குள் அம்மா காபி எல்லாம் தயாரித்து முடித்து இருந்தார்.

நாங்கள் அனைவரும் அமர்ந்து முறுக்குதனை கடித்துக் கொண்டு காபிதனை அருந்தி கொண்டிருந்தோம். காயத்ரியின் அக்காவிடம் பையனின் விபரம் வாங்கிக் கொண்டேன். காயத்ரி நீ எதுவும் வம்பு பண்ணாத என என்னை எச்சரித்தாள்.

''பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்'' என்றேன். இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம பேசற என்றார் அம்மா. ''தூசி துகளாகி, துகள் ஈறாகி, ஈர் பேனாகி, பேன் பெருமாள் ஆனது, அந்த பெருமாளை ஆக்கியது பெண்கள்'' என்றேன். காயத்ரி என்னை கோபமாகப் பார்த்தாள்.

(தொடரும்)

Tuesday 23 October 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 6

முன்பகுதி 

மாணிக்கவாசகர் முக்காலத்தை அறிந்து இருந்தாரா என்பதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு அரியதாகவே இருக்கிறது. ஆனால் முனிவர்கள் அனைவரும் முக்காலமும் அறிந்தவர்களாகவே காட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒரு கதை கூட சொல்லப்பட்டு இருக்கிறது. பிருகு முனிவர் மிகவும் ஆணவம் கொண்டவர் என்றே கருதப்படுகிறது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் இவருக்கும் கீழேதான் எனும் மமதை இவருக்கு மிகவும் அதிகமாகவே உண்டு. முன்னொரு காலத்தில் எல்லாம் கற்றறிந்தவர்கள் பெரும் மதிப்புக்கு உரியவர்களாகவே போற்றப்பட்டு வந்தனர். அதன் காரணத்தில் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் எல்லாம் கடவுளர்களால் போற்றப்பட்டு வந்தார்கள்.

புராணங்களில் கூறப்பட்டவை புரட்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் எழுதப்பட்ட விசயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமும், அதே வேளையில் சுவராஸ்யமாகவும் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எள்ளலுக்கு உட்படும் புராணங்கள் எனினும் எழுதப்பட்டவைகளை மாற்றி அமைத்தல் என்பதும், திரித்து கூறுதல் என்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

மகாபாராதம் என சொல்லப்படும் இதிகாசம் இந்தியாவின் வரலாறு என்றே குறிப்பிடப்படுகிறது. அஸ்தினாபுரம் என்ற ஒரு இடம் இருந்ததாக, இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறந்த காலத்தை தோண்டி எடுக்கும் திறன் அகழ்வாரய்ச்சியாலர்களுக்கு நிறையவே உண்டு. படிமங்களை கொண்டு இறந்த காலம் உணரும் திறனை அவர்கள் வளர்த்து கொண்டார்கள் என்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.

கடவுளர்களால் போற்றப்பட்ட பிருகு முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் பிரமனும்,சிவனும். இவர்கள் இருவருக்கும் சாபம் இடுகிறார் பிருகு முனிவர். பிரமனுக்கு கோவில்களே இருக்காது எனவும, சிவனுக்கு லிங்க வடிவிலேதான் பூஜை எனவும் சொல்லி செல்கிறார். ஆனாலும் பிரமனுக்கு ஒரு கோவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய வழிபாட்டு முறையை கொண்டு அன்று பிருகு முனிவர் சொன்னது போல எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. அல்லது பிற்காலத்தில் பிருகு முனிவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை பின்பற்றியும் இருந்து இருக்கலாம். ஆனால் இங்கே முக்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவராகவே பிருகு முனிவர் போற்றப்படுகிறார்.

இதைவிட விசேசம் என்னவெனில் பிருகு முனிவர் விஷ்ணுவை காலால் எட்டி நெஞ்சில் உதைக்க, விஷ்ணுவோ பணிவுடன் அவருக்கு பணிவிடை செய்ய விஷ்ணுவுக்கு கோவில்கள் என்கிறார் பிருகு முனிவர். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி பிருகு முனிவரின் வம்சமான பிராமணர்கள் வசதி வாய்ப்பு இன்றி போகட்டும் என சாபம் இடுகிறார். இங்கே எவர் பிராமணர் எனும் கேள்வி பெரிய கேள்வி? எவர் அந்தணர்? ஆனால் பின்னர் சற்று பரிவு கருதி முக்காலத்தை குறித்து வைக்கும் ஆற்றல் பெற்று பிராமணர்கள் அதன் மூலம் அவர்களது வாழ்வினை வளப்படுத்தட்டும் என்றே ஒரு வாய்ப்பு தருகிறார்.

அந்த வாய்ப்பை கொண்டு பிருகு முனிவர் ஒரு தனி சூத்திரங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிருகு சம்ஷிடா எனப்படுவது அது. விநாயகரின் துணை கொண்டு எழுதப்பட்டதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு கூட முனிவர்களில் நான் பிருகு என்கிறார். இப்படி பல விசயங்ககளை தொகுத்து வைக்கிறார் பிருகு. ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் படையெடுப்பால் தொலைந்து போயின என்கிறார்கள். நாலந்தா பல்கலைகழகத்தில் பிருகு முனிவரின் எழுத்துகள் சேர்த்து வைக்கப்பட்டன என்றும் அந்த பல்கலைகழகம் அழிக்கப்பட்டதால் எல்லாம் அழிந்து போயின என்கிறார்கள். பிருகு முனிவரின் சீடர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய மரபணுக்கள் எப்படி தொகுக்கப்பட்டதுவோ அது போன்று எல்லா உயிர்னங்களின் முக்காலங்களையும் தொகுத்து வைத்ததாகவே சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சோதிட கலை உருவானது என்றே சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இருப்பதால் வாழ்வு சுவாரசியம் என்றும் சொல்வது உண்டு.

(தொடரும்)

Thursday 18 October 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - அஷ்ஷிரியர்கள்

 முன்பகுதி 

அஷ்ஷிரியர்கள் என்பவர்கள் மூலமே ஹிட்டிடேஷ் அழிவுக்கு வந்தது எனினும் ஹிட்டிடேஷ் முழு அழிவுக்கு காரணமானவர்களை வரலாறு அதிகமாக குறித்து வைக்கவில்லை. இந்த அஷ்ஷிரியர்கள் முதன் முதலில் ராணுவ கட்டமைப்பை வரலாற்றில் உருவாக்கியவர்கள் எனலாம். தற்போதைய ஈராக்கிற்கு வடக்கு பகுதியில் இவர்களது அரசமைப்பு இருந்ததாக வரலாறு குறிக்கிறது. இவர்களது இந்த ராணுவ கட்டமைப்பின் மூலம் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

இவைகள் பாபிலோனியன் கலாச்சாரத்தை பெரிதும் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்தோ ஆரியன் மற்றும் செமிதீஸ் எனப்படும் மக்கள் இங்கு  வந்தார்கள். அச்சூர் எனப்படும் இடத்தை தலைநகரமாக கொண்டு பல வணிகத்திற்கு வித்திட்ட இடமும் இதுதான். எகிப்து நாட்டுடன் பெரும் வணிக போக்குவரத்து ஏற்பட்டது. தெற்கில் இருந்த பாபிலோனியர்களுடன் பல வேறுபாடுகளுடனே இந்த மக்கள் வளர்ந்து வந்தார்கள். பக்கத்து நாடுகளுடன் போர் புரிவது என தொடங்கி தங்களது எல்கை பரப்பை விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்கள் இந்த அஷ்ஷிரியர்கள்.

ஒரு எல்கையை பிடித்துவிட்டால் அங்கே இருக்கும் மக்களை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் அந்த எல்கை மக்கள் எந்த ஒரு பிரச்சினையும் பண்ண வாய்ப்பிலாமல் செய்து வந்தார்கள். கடல்வாழ் மக்கள், அரமேனியன் எனப்படுபவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். மேசபோடோமியா நகரங்களுக்கு இவர்கள் சிம்ம சொப்பனமாக  விளங்கினார்கள். பழைய அஷ்ஷிரியர்கள் இதன் மூலம் சற்று பின் தங்கினார்கள். அதற்கு பின்னர் வந்த அஷ்ஷிரியர்கள் இழந்த இடங்களை மீட்டு மேலும் எல்கையினை விரிவுபடுத்தினார்கள்.

அஷ்ஷிரியர்கள் புயல் போல போரிடுவார்கள். உடைகள் எதுவும் அணியாமல், உடைகள் அணிந்து இருந்தாலும் அதை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு கத்தியை வட்டமாக சுழற்றுவார்கள். அவர்களின் போர் முறை சிங்கம் சினம் கொண்டது போலவே இருக்கும் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் அரசமைப்பு முறையானது ராஜா, மற்றும் கவர்னர்களை கொண்டது. கவர்னர்கள் சாலை அமைப்பு, ராணுவம், வணிகம் என் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்வார்கள். ராணுவ அமைப்புக்கு மிகவும் கடுமையான பயிற்சி முறை எல்லாம் தரப்படும். மலைகளில் எல்லாம் சென்று போரிடும் பயிற்சி முறை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கும் கடவுள் உண்டு. பாபிலோனியன், அச்சூர் எனப்படும். ஆனால் மத கட்டுபாடுகளை மக்கள் திணிப்பதை அறவே தவிர்த்தார்கள்.

இவர்கள் போரிட்டதே வணிகத்தை பெருக்கி கொள்ளத்தான் என்பது போல வணிக போக்குவரத்துதனை மிகவும் சிறப்பாக அமைத்து கொண்டார்கள். பல இடங்கள் இவர்களுக்கு கப்பம் கட்டும் இடங்களாக மாறின. வேலைக்காரர்களாக வெற்றி பெற்ற இடங்களில் இருந்து மக்களை இறக்குமதி செய்து கொண்டார்கள். எதிரிகளை மிகவும் துச்சமாகவே மதித்தார்கள். எரிப்பது, வெட்டுவது போன்ற கொடும் தண்டனைகள் வழங்கிய வழக்கம் இவர்களிடம் இருந்தது. இருப்பினும் அஷ்ஷிரியர்கள் மீண்டும் தாழ்வினை அடைந்தார்கள். இவர்களின் கொடுமையான முறை இவர்களுக்கு எதிராக அமைந்தது.

அதற்கு பின்னர் டிக்லாத் பிலேசெர் என்பவர் ராணுவத்தை, அரசு அமைப்பை மிகவும் நெறிபடுத்தினார். உரார்டன்ஸ் எனப்படுபவர்கள் அஷ்ஷிரியர்கள் வணிக போக்குவரத்துக்கு பெரும் தடையாக இருக்க அவர்களை இவர் வென்றது மூலம் மேலும் அஷ்ஷிரியர்கள் தழைக்க ஆரம்பித்தார்கள். இவர் மக்களை பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்து ஒரு ஒற்றுமையை உருவாக்கினார் பாபிலோநியர்களையும் இவர் வென்றார். இவருக்கு பின்னர் வந்த சார்கன் என்பவர் எல்கையை மென்மேலும் அதிகரித்தார். இவரின் மகன் தங்களுக்கு எதிராக இருந்த பாபிலோனியாவை முற்றிலுமாகவே அழித்தார். அவருக்கு பின் வந்த இசர்கடன் பாபிலோனியாவை மீண்டும் நிர்மானித்தார்.

இவருக்கு பின்னர் வந்தவர்கள் திறமையற்று போனதால் சைத்தியன்ஸ் மற்றும் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் இந்த அஷ்ஷிரியர்கள் முழுவதுமாக அழிந்து போக காரணமானார்கள். அஷ்ஷிரியர்கள் அற்புதமான நூலகம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். சுற்றி இருந்த நாடுகள் கொண்ட வெறுப்பு அந்த நூலகத்தையும் அழித்தது. வாழ்க்கையில் சீரழியாமல் இருக்க திறமையானது தொடர்ந்து சந்ததிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் போர் மட்டுமே திறமை என்றாகாது. மக்களை தம் வசப்படுத்துவது மூலம் மட்டுமே ஒரு அரசு சாதிக்க முடியாது. மக்களுக்கு வேண்டிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

பாபிலோனியர்கள் யார்?

(தொடரும்) 

Wednesday 10 October 2012

அவனுடன் அவள் ஓடிப் போய்விட்டாள்

ரமேஷும், ராதிகாவும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். முதலில் காதல் இனிக்கத்தான் செய்தது. சில வருடங்களில் இனித்த காதல் சில காரணங்களால் புளிக்க ஆரம்பித்தது. அவர்களின் காதலில் கொஞ்சம் இனிப்பை அதிகமாக சேர்த்து இருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். ஆனால் பழக பழக பாலும் புளிக்கும் என்பது எவரோ எழுதி வைத்தது, எதற்காக எழுதி வைத்தார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியது இல்லை.

திடீரென ஒருநாள், ராதிகா சிவக்குமாருடன் ஓடிப் போய்விட்டாள் எனும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ரமேஷ். அவன் இந்த விசயத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. சிவக்குமார், ரமேஷிற்கு பழக்கம் தான். ஆனால் ராதிகாவும், சிவக்குமாரும் நெருக்கமாக பழகியதை ரமேஷ் பார்த்தது கூட கிடையாது. இப்படி எனது தலையில் மண்ணை வாரி போட்டு விட்டாளே என கதறினான், புலம்பினான் ரமேஷ். இப்போது கூட எதற்கு இப்படி ஒரு அபசகுனமான ஒரு முடிவு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நடந்தது அதுதானே, அது இல்லை என்று எப்படி மறுக்க முடியும்?

சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் வேறொரு ஊரில் பேருந்து நிலையத்தில் மோசமான நிலையில் இருந்த ராதிகாவை சந்தித்தான் ரமேஷ். தன்னை ஏமாற்றிவிட்டு போனவள் தானே எனும் ஆத்திரம் இருந்தாலும் அவள் இருந்த நிலை அவள் மீது பரிதாபம் கொள்ளச் செய்தது. என்ன ஆயிற்று என்றே வினவினான். தன்னை சிவக்குமார் ஏமாற்றிவிட்டதாக ரமேஷின் காலில் விழுந்து புலம்பினாள் ராதிகா.  ரமேஷிற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. தன்னுடன் அவளை உடன் அழைத்துச் சென்றான். இப்போது கூட நீங்கள் கேட்கலாம், எதுக்கு அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றியவளுக்கு கடவுள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார், அப்படியே விட வேண்டியது தானே என. ஆனால் நடந்தது அதுதானே.

ரமேஷின் வீட்டில் ராதிகாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ராதிகாவை தலைமுழுகி விட்டதாக ராதிகா அப்பா புலம்பித் தள்ளினார். என்ன செய்வது என யோசித்தான் ரமேஷ். ராதிகாவிடம் ஒரு திட்டம் சொன்னான். ராதிகாவும் சம்மதித்தாள். அடுத்த நாள் காலையில் ரமேஷ் கூட ராதிகா ஓடிப்போய்ட்டா என்றே ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்தது. இப்போது கூட நீங்கள் நினைக்கலாம். ரமேஷ் தானே ராதிகாவிடம் இதற்கு யோசனை சொன்னான். எதற்கு ரமேஷ் ராதிகாவை கூட்டிட்டு ஓடிப்போய்விட்டான் என ஊர் சொல்லவில்லை என. அதுதான் நமது கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

இப்படித்தான் நீங்கள் தொலைகாட்சித் தொடர்களிலும், செய்தித் தாள்களிலும், உங்கள் கிராமங்களிலும், நகரங்களிலும், சிலரது வீட்டிலும் கூட நடந்து கொண்டு இருப்பதை கண்டு இருப்பீர்கள். நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் அப்போதெல்லாம் என்ன மனுசங்க என்று கோபம் உங்களுக்குள் கொப்பளிக்கும். இவர்கள் எல்லாம் எதற்கு வாழ்கிறார்கள் என ஆதங்கம் கொள்வீர்கள். அதுவும் கற்பனை பாத்திரங்களை கண்டு வெகுண்டு எழுவீர்கள். அதுவே நீங்கள் செய்ய வேண்டிய வாய்ப்பு வந்தால்  எப்படி அவ்வாறு நடந்தீர்கள் என சிந்தித்து பார்க்க கூட உங்களுக்கு நேரம் இருக்காது. ஓடிப்போவதில் மட்டுமே குறியாக இருப்பீர்கள். எதற்கு இப்படி? கர்ம வினையா? கவனக்குறைவா? ஆசையின் உந்தலா? என்ன காரணம்? இதற்கெல்லாம் மூளையின் செயல்பாடுகள், எண்ணங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

மெண்டல் சிமுலேசன் அதாவது மூளை பாவனை என்று இதனை குறிப்பிடலாம். அதாவது இந்த மூளை பாவனையில் உண்மையாக நடந்த நிகழ்வையோ, அல்லது கற்பனையாக ஒரு நிகழ்வையோ பாவனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு இன்று என்ன நடக்கும் என யோசனை செய்வது, நடந்த போன நிகழ்வுகளை அசை போடுவது, வினோதமான கற்பனை செய்வது, நடந்த ஒன்றை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என நினைப்பது போன்றவை மூளை பாவனையில் அடங்கும். இப்படிப்பட்ட மூளை பாவனை மூலம் ஒரு காரியத்தை மிகவும் அழகாக சாதிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

அதாவது நாம் இந்த விசயம் தான் நடக்கும் என மூளை பாவனையில் நாம் ஒரு சில விசயங்களை அணுகும்போது அந்த நம்பிக்கை தன்மையில் அந்த விசயங்கள் உண்மையிலேயே நடந்துவிடும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. நான் நினைத்தேன், நடந்துவிட்டது என பலர் குறிப்பிடுவதை பார்க்கலாம். இதன் காரணமாக நாம் மூளை பாவனை செய்வதன் மூலம் ஒரு நிகழ்விற்கு நம்மை தயார் படுத்தி கொள்ளலாம். இப்போது ரமேஷிற்கு, ராதிகா தன்னை விட்டுப் போய்விடுவாள் எனும் ஒரு மூளை பாவனை நடந்து இருந்தால் ராதிகா ஓடிப் போனபோது அவன் அதிர்ச்சி அடைய வாய்ப்பு இல்லை என்றாகிறது. சில விசயங்கள் எ ப்படியும் நடக்கும் எனும் எல்லா வாசல்களையும் திறந்து வைத்தாலும் உயரிய எண்ணங்களே மிகவும் அவசியம் என சொல்லப்படுகிறது.

திட்டமிடலுக்கு மூளை பாவனை மிகவும் அவசியம். ஒரு நிகழ்வை நாம் செய்ய விரும்பும்போது அது குறித்து நாம் ஒத்திகை பார்க்கும் வழக்கம் பல வருடங்களாகவே உண்டு. சில நேரங்களில் அந்த ஒத்திகையை நமது மூளை செய்து பார்க்கும். விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்ல இருப்பவர்கள் என எல்லாரும் மூளை பாவனை செய்து பார்ப்பதால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றே சொல்கிறார்கள். ஒரு விசயத்தை பாவனை அதாவது கற்பனை செய்யும் போது நமது ரத்த வேகம் முதற்கொண்டு பல விசயங்களில்  மாற்றம் ஏற்படுகின்றது. ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் இந்த பாவனையின் மூலம் செழுமைப்படுத்தபடலாம்.

இந்த மூளை பாவனையின் மூலம் ஒரு எண்ணம், அந்த எண்ணத்தை செயல்முறைக்கு கொண்டு வருதல் என்பதை மிகவும் அருமையாக செய்து முடிக்கலாம் என்றே பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. ஒரு இலக்கு நோக்கிய பயணத்திற்கு இந்த மூளை பாவனை மிக மிக அவசியம்.

ரமேஷ் ராதிகாவிடம் நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் நம்மை நமது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே சொல்ல அதை ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். ரமேஷிற்கும், ராதிகாவிற்கும் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தையுடன் ஓரிரு வருடங்களில் அவர்கள் ஊருக்கு வர அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ரமேஷிற்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது. அதுபோலவே எப்படி நடந்தது? அதுதான் கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

மூளை பாவனை இரண்டு வகைப்படும். ஒன்று முடிவை பாவனை செய்வது. மற்றொன்று முடிவை நோக்கிய செயல்பாடுகளை பாவனை செய்வது. குழந்தை பிறந்தால் சேர்ந்து வாழலாம் என்பது முடிவு குறித்த பாவனை. குழந்தை பெற என்ன என்ன செய்ய வேண்டும் என்பது முடிவு குறித்த செயல்பாடுகள் பற்றிய பாவனை.

இப்போது ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். அது குறித்து முடிவு பாவனை ஒன்றும், முடிவு நோக்கிய செயல்பாடுகள் குறித்த பாவனை ஒன்றும் தொடங்குங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்.




Tuesday 9 October 2012

எதற்காக பொய் பேசுகிறோம்?

''நீங்கள் பொய் பேசும் பழக்கம் உடையவரா?''

''ஆமாம், எப்போதாவது பேசுவது உண்டு''

''எதற்காக பொய் பேசுவீர்கள்?''

''தேவை ஏற்படின் அதற்காக பொய் பேசுவேன்''

''எந்த மாதிரியான தேவைகள்?''

''நான் பிறருக்கு நல்லவராக இருக்க வேண்டும் எனும் தேவை ஏற்படும் போதெல்லாம், எனது வாழ்வாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பொய் பேசுவேன்''

''பொய் பேசுவது மிகவும் கடினமான ஒன்றா?''

''அது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை''

''பொய் பேசுவது ஒரு நோய் என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது. அது என்ன நோய்?''

''பொய் ஒரு தொற்று நோய். ஒரு பொய் சொல்லிவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். அது அடுத்தவரிடமும் சென்று பரவிக்கொண்டு இருக்கும். 

இதுவரை எத்தனை முறை பொய் சொல்லி இருப்பீர்கள்?''

''கணக்கில் இல்லை''

''அப்படியெனில் நீங்கள் முதலில் சொன்னது பொய்யா?''

''எப்போதாவது பொய் பேசுவேன், ஆனால் அதை கணக்கில் வைத்துக் கொண்டது இல்லை''

''நாம் பொய் பேசுவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா?''

''பிறரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான், இது கூடவா தெரியாது. பிறரை ஏமாற்றவும் பொய் சொல்லலாம்''

''எதற்கு பிறரை ஏமாற்ற வேண்டும்?''

''நாம் நன்றாக வாழ வேண்டுமெனில் பிறரை ஏமாற்றத்தான் வேண்டும். இது இயற்கை விதி''

''இயற்கை விதியா?''

''இல்லாத கடவுளை இருப்பதாக சொன்னது கூட பொய் தான்''

''எவர் சொன்னது?''

''ஒரு சொற்பொழிவு கூட்டத்தில் ஒருவர் சொன்னார்''

''அவர் சொன்னது உண்மை  தான் என்பது தெரியுமா?''

''ஆமாம், இல்லை இல்லை. அவர் சொன்னது பொய்''

''அது எப்படி தெரியும்?''

''எனக்குத் தெரியும்''

''நீ அவர் சொன்னதை நம்பாததால் அவர் சொன்ன விசயம் உனக்கு உண்மையாகத் தெரியவில்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா?''

''இல்லை, அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய்''

''உனக்குள் ஏற்படும் பயம் ஒன்றுதான் உன்னை பொய் சொல்ல வைக்கிறது என்பது உனக்கு தெரியுமா?''

''இருக்கலாம்'' 

''பயம் இல்லாத பட்சத்தில் பொய் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போகும் அல்லவா?''

''அப்படி சொல்ல முடியாது. அப்படியும் சொல்லலாம்''

''சொல்ல முடியுமா, முடியாதா?''

''முடியும், பயம்  இல்லையெனில் பொய் தேவை இல்லை''

''வாழ்வில் எந்தவொரு பயம் இல்லாத பட்சத்தில் உண்மையாக இருக்க இயலும்  என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது, ஆனால் இப்போது தெரியும்''

''ஒன்றை தெரியாமல் சொல்வது பொய் இல்லை, தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி சொல்வதுதான் பொய், அதாவது தெரியுமா?'' 

''புரியலை''

''தெரியாமல் சொல்வது அறிவீனம். அறிவீனத்தை அறிவால் போக்கி கொள்ளலாம். நீ அறிவாளியா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாகத் தெரியாது''

''முட்டாளாக இருப்பது எளிது. முட்டாளாக நடிப்பது கடினம். நீ முட்டாளா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாக தெரியாது''

''இவ்வுலகில் எப்படியாவது வாழ வேண்டும் என்றே உயிரினங்கள் போராடுகின்றன. அதில் மனிதர்கள் விதிவிலக்கல்ல. தனது வாழ்விற்கு பங்கம் ஏற்படும் எனில் அதில் இருந்து தப்பிக்க பொய் சொல்வது மனிதர்களின் இயற்கை குணம். பொய் சொல்கிறோம் என்கிற ஒரு உணர்வு கூட அப்போது இருப்பதில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் மனிதர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது பொய் இல்லை என்று மேலும் மேலும் பொய் சொல்வார்கள். நீ அறிவாளி இல்லை, முட்டாளும் இல்லை. அப்படியெனில் நீ என்னவாக இருக்க கூடும்?''

''எனக்கு தெரியாது. அதுதான் சொன்னேனே நான் எப்போதாவது பொய் பேசுவேன்''

''பொய் பேசுபவரா நீங்கள்! ஒருநாளைக்கு எத்தனை முறை பொய் பேசுகிறீர்கள் என்பதை குறிப்பில் வைத்து கொள்ளுங்கள். பொய் பல நேரங்களில் உண்மை போன்றே உங்களுக்குத் தோற்றம் அளிக்கும்'' 

''ஆமாம், நீங்க பொய் பேசுவீங்களா''

''பொய், அது என்னனு எனக்கு தெரியாது''

''....''



Friday 5 October 2012

சாட்டை வலிக்கிறது

ஒரு படைப்பாளியின் நோக்கம் என்ன? ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்ன? சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் படைப்பாளிகள் என்னதான் செய்ய முயற்சி செய்கிறார்கள்? ஒரு திரைப்படத்தின் நோக்கம் வணிக ரீதியாக லாபம் அடைவது ஒன்றுதான். மற்றபடி எல்லாம் சமூகத்திற்கு இதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம், அதை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் என சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் கண்துடைப்புதான். எந்த ஒரு படைப்பாளியும் வெட்கம் கொள்ள வேண்டியது, வெட்டியாக படம் பிடிப்பதும், வெட்டியாக எழுதுவதும் தான். 

சமூக அவலங்களை தங்களது படைப்புகள் மூலம் துடைத்து எறிந்து விடலாம் என்றோ, சமூக அவலங்களை படம் பிடித்து காட்டுகிறேன் என தங்களது திறமைகளை பறைசாற்றிக் கொள்ள இவர்கள் கையாள்வது ஒரு ஊடகம். அவ்வளவுதான். 

சினிமா என்பது ஒரு தொழில். அதில் சேவை எல்லாம் செய்ய முடியாது. ஆனால் சேவை செய்வது போல நடிக்கலாம். நடித்து மக்களை கண்ணீர் விட வைக்கலாம். 'உச்' கொட்ட வைக்கலாம். படம் பார்த்து கெட்டுப் போனேன் என சொன்னவர்கள் ஏராளம். படம் பார்த்து திருந்தினேன் என சொன்னவர்கள் மிக மிக  குறைவு. ஒரு குடும்பம் திருந்தினாலே போதும் என்கிற முனைப்பு எல்லாம் திரைப்படங்களுக்கு சரிபட்டு வராது. அப்படி என்னதான் இந்த திரைப்படங்கள் சொல்ல வருகின்றன. 

அரசு பள்ளி ஒன்றின் இயலாத தன்மையை, ஒரே ஒரு ஆசிரியர் அடியோடு மாற்றி கட்டுகிறார். இது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை எல்லாரும் அறிவார்கள். அதைத்தான் இந்த சாட்டை எனும் திரைப்படம் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் செய்து முடித்து இருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது ஒரு கற்பனையான உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அவலக் காதல். இதைத் தாண்டி படிக்க வேண்டும் எனும் வேகம் பள்ளி மாணவர்களிடம் வர வேண்டும் என்பதை இந்த சாட்டை கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கலாம். அது இந்த கற்பனை உலகத்துக்கு இன்னமும் வலிமை சேர்த்து இருக்கும். 

அத்தனை மாணவர்கள் திருந்த ஒரு ஆசிரியர் மட்டும் பொறாமை உணர்வுடன் வலம் வருகிறார். ஆஹா மிகவும் சாமர்த்தியமாக கடைசியில் மனம் மாறுகிறார். படம் ஹீரோயிசம் சொல்லி சென்றதே தவறே அடிப்படை பிரச்சனைகளை தொட்டு செல்லாதது பெரும் குறைதான். 

நான் படித்த பள்ளி அரசு பள்ளிதான். அந்த ஊரில் தனியார் பள்ளி ஒன்றும் உண்டு. இரண்டு பள்ளிக்கும் எப்போதுமே ஒரு போட்டி இருக்கத்தான் செய்யும். தனியார் பள்ளியின் சதவிகிதம் அரசு பள்ளியின் சதவிகிதத்தைவிட கொஞ்சம் கூடத்தான். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் உரிமை இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்க்கும் தன்மை அடியோடு குறைவு. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயப்படத்தான் செய்வார்கள். போராடி படித்தும் அந்த பள்ளியின் முதல் மாணவன் பெற்றது வெறும் எழுபது இரண்டு சதவிகிதமே. இதற்கு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்றே இன்றும் நினைத்து பார்க்கிறேன். நான் படித்து களைத்ததை விட விளையாடி களைத்த நேரம் அதிகம். 

தன்னார்வம் இல்லாத எவரும் முன்னேறியதாகவோ, தம்மில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவராகவோ இதுவரை எந்த வரலாறும் எழுதி வைத்தது இல்லை.  

இந்த திரைப்படம் பலருக்கு தன்னார்வம் ஏற்பட வைக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால் தன்னில் ஒரு தன்னார்வம் இல்லாமல் போனதுதான் பெரும் குறை. சினிமா எப்போதும் சினிமா என்ற வட்டத்திற்குள்  மட்டுமே இருக்கட்டும். அது சமூகத்தை திருத்திவிடும் எனும் கனவு காண்போர்களுக்கு விழும் சாட்டை அடி பெரிய வலியைத்தான் தரும். 

படம் பார்த்த பின்னரும் திருந்தாத சமூகம் கண்டு இந்த படத்தை இயக்கிய, நடித்த, தயாரித்த இயக்குனர்களுக்கு வலிக்குமா?! 

Thursday 4 October 2012

நட்சத்திர பதிவர் இல்லாமல் தவிக்கும் தமிழ்மணம்

சார், உங்க பிள்ளைகள் மீது எத்தனை அக்கறை வைத்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? என்றே ராஜ் வீட்டின் உள்ளே வந்தார் ராம்.

அமருங்கள், வந்ததும் வராதுமாக என்ன கேள்வி இது. என்ன விசயம்? என்றே கேட்டார் ராஜ்.

'நேற்று தற்செயலாக உங்களிடம் பேசியபோது, உங்கள் பிள்ளைகள் எப்படி வேண்டுமெனில் இருக்கட்டும் என்று பேசினீர்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. மேற்கொண்டு அதுகுறித்து நான் பேச வேண்டும் என சொன்ன போது வீட்டிற்கு வாருங்கள் பேசலாம், இப்போது நேரமில்லை என சொல்லிவிட்டு சென்றுவிட்டீர்கள். எனக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லை. அதுதான் அவசர அவசரமாக உங்களைத் தேடி வந்துவிட்டேன்''

''அவர்களின் சுதந்திரம் தான் நமது சுதந்திரம். அவர்கள் சுயமாக எல்லாம் தெரிந்து கொண்டு போராடி வளரட்டும், அப்போதுதான் வாழ்வின் அர்த்தம் புரியும் என்ற கோணத்தில் தான் நான் அவ்வாறு சொன்னேன்''

''ஒரு நல்ல பாதையை நாம் தான் காட்ட வேண்டும், அந்த பொறுப்பு எல்லா பெற்றோர்களுக்கும் உள்ளது. பிள்ளைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டாத பெற்றோர்களால்தான் பெரும்பாலான பிள்ளைகள் தடம் மாறி போய்விடுகின்றன''

''அப்படி எப்படி நீங்கள் சொல்லலாம்? எனது பிள்ளைகள் அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்''

''உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகளின் விசயத்தில் எப்படி?, ஆமாம் மனைவி, பிள்ளைகள் எங்கே?''

''அவள்  கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள் , ஆனால் முழு கண்டிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. மனைவி அவளது தோழி வீட்டிற்கு சென்று இருக்கிறாள். பையனும், பொண்ணும் அவர்கள் நண்பர்களோடு விளையாட சென்று இருப்பார்கள்''

''உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் எல்லாம், அதுவும் பள்ளிகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற விசயங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் தலையிடுவது உண்டா?''

''அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நிறைய அலுவல்கள் உண்டு, அவளுக்கும் நிறைய அலுவல்கள் உண்டு''

''இதைத்தான் சொல்கிறேன், பிள்ளைகளின் மீதான அக்கறை என்பது மிகவும் குறைவு. எல்லா பிள்ளைகளும் கேட்டுப் போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இப்போதெல்லாம் இ மெயில், பேஸ்புக், டிவிட்டர் என சோசியல் நெட்வொர்க் என பெருகிக் கொண்டே போகிறது. இதில் அவர்கள் ஈடுபாடு கொண்டு தங்களது வாழ்வில் அக்கறை செலுத்தாமல் போகலாம்''

''நீங்கள் எதற்கு இப்படி என்னை பயமுறுத்துகிறீர்கள்? நானோ அவர்கள் மிகவும் நேர்மையாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்றே இருக்கிறேன். இதை எல்லாம் எனக்கு சொல்ல நீங்கள் யார் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது''

''எதிர்கால சந்ததியினர், எதிர்கால சந்ததியினர் என சொல்லி நமது சந்ததியினர் பொறுப்பின்மையுடன்  நடந்து கொண்டால் எப்படி எதிர்கால சந்ததியினர் முன்னேற இயலும். எதற்கும் நான் அடுத்த வாரம் வருகிறேன். உங்கள் பையன், பெண் இருவரது பள்ளி நடவடிக்கைகள், உங்களிடம் உண்மை பேசுகிறார்களா, எப்படி நடந்து கொள்கிறார்கள் என அறிந்து எனக்கு சொல்லுங்கள். நான் இதுகுறித்து கட்டுரை எழுதி தமிழ் திரட்டி ஒன்றில் இணைக்க வேண்டும். அந்த திரட்டி நட்சத்திர பதிவர் இன்றி திணறிக் கொண்டு இருக்கிறது''

'' சரி சொல்கிறேன், வந்த உங்களுக்கு ஒரு காபி கூட தரவில்லை''

''பரவாயில்லை, அடுத்த முறை எனக்கு விருந்து வைத்துவிடுங்கள்''

ஒரு வாரம் ஒரு வினாடியில் கழிந்து போனது. ராம் ராஜுவை ஒரு பூங்காவில் சந்திக்க வேண்டும் என பிரியப்பட்டு அழைக்கிறார். ராஜ் சம்மதம் தெரிவித்து வருகிறார்.

''நீங்கள் சொன்னது சரிதான், என் பிள்ளைகள் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த ஒரு வாரத்தில் ஊர்ஜிதம் செய்து கொண்டேன்''

''இதற்குதான் உங்களை நான் பூங்காவிற்கு வர சொன்னேன். வீட்டில் வைத்து பேச இயலாது. சரி, தெரிந்ததும் என்ன செய்தீர்கள்''

''காட்டு கத்தல் கத்தினேன். இரண்டு அறை கூட அறைந்துவிட்டேன். இனிமேல் இப்படி நடக்கமாட்டோம் என அழுதார்கள்''

''சரியாகி விடும் என நினைக்கிறீர்களா''

''ஆமாம்''

''இதுதான் பொறுப்பின்மை. அது எப்படி ஒரு நாளில் சரியாகும். நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். பிள்ளைகள் இனி சாமர்த்தியமாக நடந்து கொள்ளப் பார்ப்பார்கள். உங்களுக்கு இதமான விசயங்களை மட்டுமே சொல்லி உங்களை மேலும் ஏமாற்றப் பார்ப்பார்கள். வயது நிலை அப்படி, அவர்களின் பழக்கங்கள் அப்படி. நிதானமாக மாற்றப் பாருங்கள்''

''கவனமாக இருக்கப் பார்க்கிறேன்''

''நீங்கள் உங்கள் பிள்ளைகளின் குருநாதர். உங்களைப் பார்த்தே உங்கள் பிள்ளைகள் வளரும். சரி போனால் போகட்டும், பாவம் என்றெல்லாம் இருக்காதீர்கள். அதிக கண்டிப்பும் அவசியமற்றது. விசயங்களை மிகவும் தெளிவாக பேசுங்கள். என்ன சொல்கிறீர்களோ அதன்போல நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்று சொல்லி, நீங்கள் வேறு விதமாக நடந்தால் உங்கள் பிள்ளைகள் நம்ம பெற்றோர்களே இப்படி என இறுமாப்பு கொள்வார்கள்''

''விருந்து ஒன்று ஏற்பாடு செய்கிறேன்''

''அதெல்லாம் வேண்டாம். ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது அதுவே போதும்''

''எனது கண்களைத் திறந்து விட்டீர்கள்''

''தயவு செய்து ஒருபோதும் மூடிவிடாதீர்கள்''. 

Tuesday 2 October 2012

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
நீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்
உன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்
நீ புறக்கணிக்கப்பட்டதாக புலம்புகிறாய்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

உன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்
என்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்
நீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே
குருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

ஒற்றை வரிக் கதை ஒன்று
உனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று
ஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு
அங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி
சேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்

யுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்
தன்தோளில் ஏறியே அமரச் செய்தான்
காற்றை போலவே கடந்தான் முனிவருடன்
மறுகரை தாண்டியதும்  யுவதி நன்றியுடன்
வணக்கம் சொல்லியே போயே போயினள்

பலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே
வெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்
முனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே
வேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை
மனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ

சாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே
தவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்
வேசம் தரித்து விஷம் கொண்டு
உலவித் திரிவது உலகில் எங்கனம்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னைப் போல இருந்திட நீ நினைக்கையில் 
மண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்
உன்னைப் போல நீயும் இருந்தால்
உலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

அறிவியல் சொல்லும் ஒரு கதை
சொல்லி முடிக்கிறேன் மனதில் வை
ரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்
கதையின் நாயகன் கவனமாய் கேள்
ஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு

அறிவியல் விதி ஒன்று
டி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி
புரதம் உண்டாக்கும்

ரெட்ரோ வைரஸ்
உடல் செல்லுக்குள் நுழைந்தே
தன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி
உடல் செல்லை கொல்லும்

உன்னை என்னுள் பரவ விட்டால்
என்னை எனக்கு எனக்கே புரியாது
காதலி என்று சொல்லிக் கொண்டு
மனக் கதவின் ஓரம் நிற்காதே
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

Monday 1 October 2012

மத மாற்றம் மன மாற்றம் தருமா?

எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மேல் விழ மனம் மிகவும் லேசாக இருந்தது.

நான் இந்த மதத்துக்காரன் என்றுதானே என்னிடம் இந்த சாமியார் வந்து தொலைக்கிறார். மதம் மாறிவிட்டால் என்ன என்று யோசனை வந்தது? வேறொரு மதம் மாறிவிட்டால் அந்த மதத்து குருமார்கள் வந்து தொலைப்பார்களே என யோசித்து மதமே வேண்டாம் என விட்டுவிட்டால் என யோசித்தேன். அது  வேண்டவே வேண்டாம் தந்தை பெரியார் தாடியோடு வந்து நிற்பாரே என மிகவும் அதிகமாக யோசித்தேன். எப்படியும் புதியவன் என்பதால் வேற மதத்து குருமார்கள் வர தயங்குவார்கள், அதனால் வேறொரு மதம் மாறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்கு எப்படி இந்த மதம் கிடைத்தது? அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டபோது அது அப்படித்தான்டா என்றே சொன்னார்கள். எனக்கு கோபமாக வந்தது. நான் எதற்கு இந்த  மதம் கொண்டவனாக திரிய வேண்டும்? எனக்கு வேறொரு மதம் வேண்டும் என்றேன்? எதற்கு என்றார்கள். என்னை கனவில் தினமும் சாமியார் தொல்லை செய்கிறார், அவரது தொல்லையில் இருந்து நான் விடுபட வேண்டும் என்றேன். கிளுகிளுப்பான சாமியாரா என்றார் அப்பா. அப்பாவை நோக்கி கொழுப்பா உங்களுக்கு என்றார் அம்மா. இனி அவர்கள் சண்டையில் எனது மத மாற்றம் மறந்து போகும் என நினைத்து அங்கிருந்து விலகினேன்.

எனக்குத் தெரிந்த மதம் மாறிய சிலரை சென்று சந்தித்தேன். நான் மதம் மாற வேண்டும் என நினைக்கிறேன், எந்த மதம் நல்லது என சொல்லுங்கள் என்றேன். ஒருவன், நான் அந்த மதத்தில் இருந்தவரை எனது வாழ்க்கை சீரானதாக இல்லை, ஆனால் இந்த மதம் வந்தவுடன் மிகவும் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்றான். என்ன காரணம் என்றேன். எல்லாம் மதம் சொல்லும் போதனை தான் என்றேன். அப்படி என்ன நீ மாறிய மதம் சொல்லிவிட்டது என்றேன். அன்பு, அன்பு அன்பு என்றான். யோசித்தேன். நான் இப்போது இருக்கும் மதமும் அப்படித்தானே சொல்கிறது என நினைத்து கொண்டு, வேறு என்ன சொல்கிறது என்றேன். மனம் நிம்மதியாக இருக்க வழி சொல்கிறது என்றான். என்ன என்ன வழிகள் என்றேன்? எனக்கு நேரமில்லை, நீ இந்த மதத்திற்கு மாறினால் எல்லாம் புரியும், முதலில் எனது மதத்திற்கு மாறு என்றான். வேறொருவனிடம் என்றேன்.

அவன் நான் மதம் மாறியதால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றான். ஏன்டா குப்பை, மதம் மாறாம இருந்தா கூட வெளிநாடு நீ போயிருக்கலாம் என்றேன். அவனோ அந்த மதத்தில் இருந்தவரை நான் குப்பை, இப்போ இந்த மதத்துக்கு வந்ததால நான் கோபுரம் என்றான். நீ என் மதத்துக்கு மாறு, அப்புறம் உனக்கு ஈசியா வெளிநாடு வாய்ப்பு வாங்கித் தரேன் என்றான். அவன் அவன் மதத்தை அவனது மதம் என சொந்தம் கொண்டாடுகிறார்களே என தோணியது. எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் எனும் ஆசை நிறையவே உண்டு. வெளிநாடு செல்வதற்கு  மதம் மாற துணிந்துவிட்டேன். அவனிடம் எப்படி மதம் மாற வேண்டும் என விபரங்கள் கேட்டேன். அவன் சில நடைமுறைகள் சொன்னான். பெயர் மாற்றம், உருவ மாற்றம், பழக்க மாற்றம் என பல விசயங்கள். ஒவ்வொரு மதத்தில் இத்தனை கட்டுபாடுகளா என யோசித்தேன். ஆனால் அடுத்த நாள் அவனை வந்து பார்க்குமாறு சொல்லி சென்றான்.

முதலில் பார்த்தவனிடம் இது குறித்து விபரங்கள் சொன்னதும், அவனுக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. என்ன காரணத்திற்கு அவனது மதத்திற்கு மாறுகிறாய், அதற்கு பேசாமல் உனது மதத்திலேயே நீ இருக்கலாம், இரண்டும் ஒன்றுதான். எனது மதம் மட்டுமே வேறு. எனது மதத்தில் சேர்வதாக இருந்தால் சொல் என சொல்லிவிட்டு போய்விட்டான். சாமியார் தொல்லை வேண்டாம் என நினைத்து வெளிநாட்டு ஆசை வந்து தொத்திக் கொண்டது. அன்று இரவெல்லாம் தூங்க வேண்டாம் என உறுதியாக இருந்தேன். தூங்கினால் தானே அந்த சாமியார் வந்து தொலைகிறார்.

''நாளைக்கில இருந்து உன் கனவுல நான் வரமாட்டேனு நினைச்சியா'' என்றார் சாமியார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தூங்காமல் உட்கார்ந்து இருந்தாலும் இந்த சாமியார் வந்து தொலைகிறாரே என்று எரிச்சலுடன் ''ஆமாம், நீ வரக்கூடாது, நாளையில் இருந்து நான் வேறு மதம்'' என்றேன். ''மதம் மாறினால் பெயர் மாற்ற வேண்டுமே'' என்றார் சாமியார். ''நான் நல்ல பெயரை யோசித்து வைக்கிறேன்'' என்றேன். ''நானே சொல்கிறேன், உனது பெயர் மன்சவ்'' என்றார் சாமியார்.

''இதென்ன பெயர், அந்த மதத்தின் வாசனையே இல்லை'' என்றேன் நான். ''வாசனைப் பொருட்களை பெயரில் தூவு, வாசனை வரும்'' என சாமியார் சிரித்தார். ''நான் பெயர் முதற்கொண்டு எல்லாம் எனது நண்பனிடம் கேட்டுக் கொள்வேன், நீங்கள் போகலாம்'' என்று சொன்னேன். ''மதம் மாறுவதன் மூலம் மனம் மாற்றம் வரும் என நினைக்கிறாயா?'' என்றார் சாமியார். ''சாமி, மனமாற்றத்தினால் தானே  மதமே மாறுகிறேன்'' என்றேன் எகத்தாளத்துடன். ''அப்படி என்ன மனம் மாற்றம்'' என்றார் சாமியார். ''எதோ ஒன்று'' என்றேன்.

''வெளிநாடு போனாலும் அங்கேயும் என்னால் வர இயலும், இவ்வுலகம் எனக்கு சொந்தம்'' என்றார் சாமியார். ''நான் வெளிநாடு போக இருக்கிறது, உங்களுக்கு எப்படி'' என்று குழைந்தேன். ''யாம் அறிவோம், விடிந்துவிட்டது நீ உனது நண்பனை கண்டு வா'' என்றார் சாமியார்.

''ஏம்பா , உட்கார்ந்துட்டே இப்படியா  தூங்குவ, ஒழுங்காப் போய் படு. உட்கார்ந்துட்டே கனவு காண்றது. உனக்கு ஒருத்திய கட்டி வைச்சாத்தான் நீ எல்லாம் உருப்படுவ'' என அம்மாவின் சத்தத்தில் அலறிக் கொண்டே எழுந்தேன்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாவே எடுத்தார். ''ரொம்ப சந்தோசம்டி, பையனும், அம்மாவும் நல்லா இருக்காங்களா, நாளைக்கு வந்து பார்க்கிறேன், இன்னைக்கு நேரமாயிருச்சி'' என அம்மாவின் இந்த பக்க குரல் மட்டும் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்ததும் கேட்டேன்.

''யாரும்மா போன்ல'' என்றேன்.

''என் பெஸ்ட் பிரண்டோட பொண்ணுக்கு பையன் பிறந்து இருக்கானாம், பேரு கூட முன்னமே செலக்ட் பண்ணிட்டாங்களாம்''

''என்ன பேரு'' என்றேன்.

''மன்சவ்''

''மன்சவ்'' என்னையும் அறியாமல் கத்தினேன்.

''எதுக்கு இப்படி கத்துற'' என அம்மா கத்தினார்.

மதம் மாற்றம் மன மாற்றம் தருமா? மன மாற்றமே மத மாற்றத்திற்கு காரணமா? விடை தெரியாமல் சாமியாரை மனமுருக அன்று வேண்டினேன். 

Friday 28 September 2012

தூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்

மிகவும் கடுமையான உழைப்பு உழைத்தால் நன்றாக தூக்கம் வந்துவிடுகிறது. இது உடல் அயர்ச்சியை போக்க நமது உடல் தேர்ந்தெடுத்த பாதை என்கிறார்கள். மன அயர்ச்சி இருந்தால் அத்தனை எளிதாக தூக்கம் வந்து தொலைப்பதில்லை. எனக்கு மிகவும் உடல் அயர்ச்சியாக இருக்கவே நன்றாகவே உறங்கிப் போனேன். எனது குறட்டை சத்தம் கேட்டு 'கொடுத்து வைச்ச மகராசன்' என எவரோ சொன்னது காதில் விழுந்தது. உடல் உபாதைகளும், மன அழுத்தமும் இல்லாத பட்சத்தில் மிகவும் ஆழ்ந்த தூக்கம் வருமாம். 'அடிச்சிப் போட்டது போல தூங்குறான் பாரு' என இன்னொரு சத்தமும் எனது காதில் விழுந்தது. நான் தூங்குகிறேனா, அல்லது தூங்குவது போல நடிக்கிறேனா? எனக்கே மிகவும் சந்தேகமாக போய்விட்டது.

ஒருவர் நான் குறட்டை விடுகிறேன் என்கிறார், ஆனால் எனக்கு குறட்டை சத்தம் கேட்கவில்லை. அவர் பேசும் சப்தம் மட்டும் கேட்கிறது. எதைக் கேட்பது, எதை கேட்க கூடாது என்று எனது சிந்தனைகள் வரையறுத்து கொண்டுவிட்டனவா? எவருமே என்னை அடிக்கவில்லை. இன்று மிகவும் கடுமையான உழைப்பு. அந்த அலுப்பில் தூங்கிவிட்டேன். ஆனால் 'இந்த தூக்கம் உடல் அசதியை போக்க வந்தது அல்ல' என்றார் ஒருவர். விழித்து பார்க்கையில் சாமியார் நின்று கொண்டிருந்தார்.

''எதுவெல்லாம் இயற்கை தேர்வு என்று கண்டுபிடித்துவிட்டாயா'' என்றார் சாமியார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நான் என்ன டார்வினா? எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? எதுவெல்லாம் இயற்கையாக தோற்றம் கொள்கிறதோ அதுவெல்லாம் இயற்கை தேர்வு'' என்று முடித்தேன். ''

நன்றாக தூங்கினாய் போலிருக்கிறது'' என்றார்.

 ''ஆமாம் உடல் அலுப்பு'' என்றேன்.

 ''அது உடல் அலுப்பு மூலம் வருவது அல்ல, அது உனது மூளைக்கு தேவையான ஒரு இளைப்பாறுதல், பசித்தவுடன் சாப்பிடுவது போல அல்ல இந்த உறக்கம். இந்த தூக்கம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை மிகவும் அதிகமாக கடைப்பிடித்தாலும் ஆபத்து, மிகவும் குறைவாக கடைப்பிடித்தாலும் ஆபத்து. கும்பகுர்ணன் அதிகம் தூங்கியதால் லங்கேஷ்வரம் ராமனால் வெல்லப்பட்டது'' என்றார் சாமியார்.

 ''சாமி இப்போ என்னதான் சொல்ல வரீங்க'' என்றேன் கலையாத தூக்கத்துடன்.

''இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துயில் கொள்கின்றன. இந்த துயில் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றன. எத்தனை விதமான சோகம் இருந்தாலும் ஒரு கணத்தில் கண்களை சொக்க வைக்கும் தூக்கம்தனை எவரும் என்னிடம் வராதே என வெறுத்து ஒதுக்க இயலாது. தூக்கம் வந்தே இயலும். நாம் கொட்டாவி விடும்போதே நமது மூளை தூங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. நமது செயல்பாட்டில் வேகமானது குறைந்து போய்விடக் கூடும். இறைவனுக்கு கூட இந்த இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. அதனால் தான் அவரை உறங்க வைக்கும் சமய சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர்'' என சொல்லி முடிக்கும் முன்னர் நான் குறுக்கிட்டேன்.

''சாமி, தூக்கம் பத்தி சொன்னீங்க சரி, இப்போ எதுக்கு இறைவன் துயில் கொள்கிறான், சயன நிலை என வம்பு செய்கிறீர்கள்'' என்றேன்.

''இறைவனே துயில் கொள்ளும்போது அவன் படைத்த ஜீவராசிகள் எங்கனம் என்பதை குறிப்பிடவே அவ்வாறு சொன்னேன். அது இருக்கட்டும். இந்த தூக்கத்தின் மூலம் நாம் சாதிப்பது என்ன? இந்த தூக்கத்தினால் நமது உடல் மூலக்கூறுகள் அளவில் என்ன நடக்கிறது என்பதை இதுவரை முழுவதுமாக கண்டு கொள்ள முடிந்தது இல்லை. பகலெல்லாம் இருமல் மூலம் பாதிக்கப்படுவர் தூங்கியபின்னர் இருமலே இல்லாமல் உறங்கிவிடுகிறார். இது போன்ற பல விசயங்கள் புரிபடமாலே இருக்கின்றன என்பதுதான் பரந்தாமனின் விளையாட்டு'' என்றார் சாமியார்.

''பரந்தாமனின் விளையாட்டு என்பதெல்லாம் நீங்கள் ஆடும் விளையாட்டு, தூங்குவதால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கிறது. விளையாடாமல் சொல்லுங்கள்'' என்றேன். எனக்கு அதிகம் தூக்கம் வந்து தொலைப்பதால் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனும் ஒரு எண்ணம்.

''பரந்தாமனின் விளையாட்டு பற்பல. அதை முழுவதும் கண்டுகொண்டார் எவரும் இல்லை. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன்  சூப்பர் ஆக்சைடாக ( O2- )  மாறிவிடுகிறது. இது நமது செல்களை பாதிக்க செய்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஜீன்கள் தூங்கும்போது மிகவும் அதிக அளவில் தனது வேலைப்பாடுகளை செய்கின்றன. சதா இறைவன் மீது பக்தி செல்லும் தொண்டர்கள் கூட சிறிது நேரம் இளைப்பாறுதல் அவசியம். மதியம் குட்டித் தூக்கம் போடுகிறேன் என்பது நம்மை சசுறுசுறுப்பாக வைக்கத்தான். அதிகம் சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் வெகுவேகமாக நடைபெறும். அப்போது இந்த சூப்பர் ஆக்சைடு அதிக அளவில் உற்பத்தி ஆகும். அதன் மூலம் ஏற்படும் சேதாரம் சரி செய்ய இந்த தூக்கம் தேவை. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்'' என்றார் சாமியார்.

''தொண்டர், குண்டர் அப்படி எல்லாம் பேசமா விசயத்தை மட்டும் தெளிவுபடுத்தினால் போதும்'' என்றேன்.

''இதோ உனது பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்த எலி இருபது மணி நேரம் அசராமல் தூங்கும். ஆனால் யானைக்கோ இரண்டு மணி நேர தூக்கம் போதும். ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறிய உயிரினங்களில் வெகு வேகமாகவும், பெரிய உயிரினங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறுவதே காரணம். அளவுக்கு அதிகமாக உண்டதால் கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்க வேண்டியதாகிவிட்டது'' என்றார் சாமியார்.

''கும்பகர்ணன் பக்கத்தில இருந்து பாத்தீங்க'' என நான் சொன்னதும்

''''முக்காலமும், எக்காலமும் யாம் அறிவோம், ஆனாலும் தூக்கத்திற்கான இந்த காரணம் தவறு என்போர் உண்டு. வேறு சில காரணங்கள் என நமது உடல் உணவை செரிக்கும்போது உண்டாகும்  சக்தி மூலக்கூறு அளவு குறைந்துவிடும் பட்சத்தில் நமக்கு தூக்கம் வந்தவிடும். இந்த தூக்கம் மூலம் அடினோசின் ஏஎம்பி உருவாக தயாராக இருக்கும். மேலும் மூளையின் நரம்பு மண்டலமானது ஒரு நாளில் பல புதிய புதிய நரம்பியல் பாதையை உருவாக்கி வைத்து இருக்கும். அதில் எது எது அவசியமற்றதோ அதை எல்லாம் நீக்கி நம்மை புத்துணர்வுடன் வைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நமது மூளை நமது நினைவுகள், கற்று கொண்டவை போன்ற பல விசயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தவே இந்த தூக்கம் வருகிறது'' என்றார் சாமியார்.

''நீங்க சொன்னது எல்லாம் இயற்கை தேர்வு. தூக்கம் நமக்கு இயற்கை கொடுத்தது. தூக்கம் கிடக்கட்டும், நாம எதுக்கு முழிச்சிட்டு இருக்கனும்?'' நான் கேட்ட கேள்வியில் சாமியார் நிலைகுலைந்து போயிருப்பார் என்றே கருதினேன்.

''நாம முழிச்சிட்டு இருக்கிறதுக்கு எப்போதும் பரந்தாமன் புகழ் பாடத்தான். நாம சாப்பிட, நம்மை பாதுகாக்க, நமது இனத்தைப் பெருக்க நாம முழிச்சிட்டு இருக்கணும்னு சாதாரண மனுசாள் சொல்வாங்க. ஆனா எப்பவும் அவன் புகழ் பாடத்தான் நாம முழிச்சிட்டு இருக்கணும்'' என்று சாமியார் சொல்லி முடித்ததும் சட்டென விழித்தேன்.

''நல்லா குறட்டை விட்டடா'' என அப்பாவும், ''அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினடா'' என அம்மா சொன்னதும் தூக்கத்தில் வரும் இந்த கனவு மூளையின் வேலையோ? என புரியாது களைத்திருந்தேன்.




Wednesday 26 September 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 10

வெகு வேகமாக அருகில் வந்த அந்த ஆசிரியர் அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டார். எனக்கு திடுக்கென இருந்தது.

''நீங்கள் என்னை அறைந்ததற்கான காரணம் எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைத்து இருந்தால் என்னை அறையாமல் இதே காரணத்திற்காக இருந்து இருக்கலாம் என்றான் எனது அருகில் இருந்தவன்''.  அந்த ஆசிரியர் மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்றார். 

''என்னை அடித்த குற்றத்திற்காக உங்கள் மீது என்னால் புகார் செய்ய இயலும், ஆனால் நான் அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை'' என்றான் அவன் மேலும். சிறிது நேரம் அங்கு நின்றவர் வேறு எதுவும் பேசாமல் அவரது இருக்கைக்கு சென்றார் அந்த ஆசிரியர். 

இருக்கையில் அமர்ந்தவர் வேறு எதுவும் பேசவில்லை. வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. அப்பொழுது முன் வரிசையில் இருந்த ஒருவன் சார், நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி தொடரலாம் என அவர் சொன்ன வாசகத்தை அப்படியே அச்சு பிறழாமல் சொன்னான். 

''இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை' என அவன் சொல்லி முடிக்க மீண்டும் எனது அருகில் இருந்தவன் எழுந்து 'நீயும் அவரோட சேர்ந்து வெட்டித்தனமா பேசாதடா' என்றான். 

மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. இம்முறை இவனுக்கு எந்த அறையும் விழவில்லை. We always look for the reasons for our actions. For certain kind of actions, we blame it on something rather than own it ourselves. This is an extra-ordinary behaviour by human beings in the world to protect them from criticism and have a security as well. When I questioned our professor, he could not answer my comment, but he tried to distract by acting in another way. Action for a reason, reason for an action, this is not a proper way. 

அருகில் இருந்தவன் மடமடவென பேசி முடித்ததும் எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. நீ தமிழ் மீடியமா என்றேன். ஆமாம் என்றான் அவன். நானும் தான், எனக்கு நீ சொன்னது விளங்கவே இல்லை என்றேன். முறைத்துப் பார்த்தான். இவன் பேசியதை மாணவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். 

எதற்கு முறைக்கிற? என்றேன். நான் சொன்னது விளங்கவில்லைன்னு சொன்னியே என்றான். அப்போ முறைக்கிறதுக்கு அது ஒரு காரணம்! என்று நமட்டு சிரிப்பு சிரித்தேன். For an action, there will be a reaction. Action can't be only reason for that reaction. என்றான். எனக்கு ஜிவ்வென கோபம் வந்தது. கோவத்தை அடக்கி வைத்து கொண்ட வேளையில் ஆசிரியர் எழுந்தார். 

''எண்ணங்களை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தால் காரணமும், காரியமும் அடிபட்டு போகும், அதை எனக்கு மிகவும் அருமையாகவே இந்த மாணவன் விளங்க வைத்துவிட்டான். அவனுக்கு எனது நன்றி'' என அவர் சொல்லி முடிக்க அருகில் இருந்தவன் எழுந்து நீங்க எப்போதான் வெட்டித்தனமா பேசறதை நிறுத்திட்டு பாடம் எடுக்கப் போறீங்களோ தெரியலை என்றான். அனைவருமே மீண்டும் சிரித்தார்கள். ஆசிரியரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. 

அவனை வகுப்பறையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கத்தினார். அவன் போக மறுத்தான். நீங்கள் எங்களுக்கு ஒன்றும் மனோதத்துவ பாடம் எடுக்க வரவில்லை. அதைப்போல தத்துவ இயல் ஒன்றும் சொல்லி தர அனுப்பி வைக்கப்படவில்லை. நீங்கள் எடுக்க வேண்டிய பாடம் மட்டும் எடுத்தால் போதும். இப்போதே அரை மணி நேரம் செலவாகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் என்ன சொல்லித் தர இயலும்? என அவன் பேசியது கண்டு அவரது கோபம் அதிகம் ஆகியது. 

This is my class. I choose what I teach. என்று அவர் கத்தியதும் I choose what I listen என இவன் இங்கிருந்து சத்தம் போட்டான். எனக்கு அருகில் இருந்தவனை அடிக்க வேண்டும் போலிருந்து. அதனால் அவனது காலை ஓங்கி மிதித்தேன். ஆ எனும் அலறல் சத்தம் கேட்டது. சாரி என்றேன். என்னை மீண்டும் முறைத்துப் பார்த்தான். 

அதற்கடுத்து அந்த ஆசிரியர் பாடம் நடத்தும் மனநிலையில் இருப்பதாகவே தெரியவில்லை. இவனை வகுப்பறையை விட்டு துரத்துவதற்காகவே மனித எண்ணங்கள் குறித்தே பேசினார். எப்போதுதான் வகுப்பு முடியும் என இருந்தது. அருகில் இருந்தவனை பிரின்சிபால் அழைப்பதாக சொன்னார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து வந்தவன் அமைதியாக அமர்ந்து இருந்தான். 

மதிய வேளையில் என்ன நடந்தது என கேட்டேன். இனிமே எதிர்த்து பேசினா சஸ்பென்ட் பண்ணிருவேன்னு சொன்னார் என சொல்லி முடித்து கொண்டான். எதிர்த்து பேசறது ஒரு காரணம், உன்னை சஸ்பென்ட் பண்றதுக்கு என சிரித்தேன். நங் என எனது தலையில் கொட்டியவன் சாரி என்றான். காயத்ரியை நோக்கி வந்துவிட்டேன். 

'இன்னைக்கு கிளாஸ் எப்படி?' என்றேன். 'அவன் என்ன லூசா' என்றாள். 'நீதான் கேட்கணும்' என்றேன். 'காரணம், காரியம். நீ என்ன நினைக்கிற' என்றாள். கர்மம் என்றேன். 'என்ன சொல்ற' என்றாள். அதாவது கர்ம வினை. கற்றறிந்த மாந்தர்கள் கூட இந்த கர்ம வினைக்கு தப்பிக்க முடியாது. எல்லோரும் சிக்கி அல்லாடனும் அதுதான் இந்த உலகியல் நியதி'. 

'ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், காரியம்' என்றாள். 'ம்ம் சில ஏத்துக்க முடியும், சில ஏத்துக்க முடியாது' என்றேன். 'என் அப்பாவை நினைச்சாத்தான் இன்னும் என்னால தாங்கிக்க முடியலை' என்றாள். அவரைப் பத்தி பேச வேணாம்னு சொல்லியாச்சு என்றேன். 'மனசு கேட்கலை' என்றாள். அவளது கைகளை பிடித்தபோது சில்லென இருந்தது. 

'காயத்ரி, இனிமே கவலைப்படாதே. மறந்துரு' என சொன்னதும் சரி என தலையாட்டினாள். மீண்டும் வகுப்பு. எனக்குப்  பிடித்த ஒரு ஆசிரியர் வந்து இருந்தார். அவர் பேசியது தாலாட்டு போன்று இருக்கவே நன்றாக தூங்கிவிட்டேன். என்னை எவரோ தொடுவது போன்றே உணர்ந்து முழித்து பார்த்தேன். அந்த ஆசிரியர் எனது அருகில் சிரித்து கொண்டு இருந்தார். 

நாளைக்கு வரும்போது தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துட்டு வா, அதோ அங்க நல்லா படுத்து தூங்கலாம், எதுக்கு சிரமப்படற, அடுத்த வகுப்பு ஆரம்பிக்க போகுது என சொல்லிவிட்டு நான் பதில் ஏதும் பேசும் முன்னர் அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பே அமைதியாக இருந்தது. பக்கத்தில்  இருந்தவர்கள் என்னை மாட்டிவிட்ட மகிழ்வில் இருந்தார்கள். 'தூங்கு முருகேசு, தூங்கு' என எல்லோரும் ஒரு சேர சத்தமிட்டார்கள். அவர்களது சத்தத்தில் எனது தூக்கம் தொலைந்து இருந்தது. 

அன்று மாலையில் காயத்ரியிடம் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ன நடத்தினார் என கேட்டேன். நினைவுகள் பற்றி நடத்தினார் என்றாள். நான் கேட்கும்போது தூக்கம் பற்றித்தானே ஆரம்பித்தார், அதுதான் தூங்கிட்டேன் என்றேன். காயத்ரி சிரித்தது எனக்கு மகிழ்வாக இருந்தது. தூக்கம் பற்றி பேசினவர் நினைவுகள் பற்றி பேசினார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது என்றாள். நமக்கு மிகவும் பிடித்தமான்வைகள், பிடிக்காதவைகள், பாதிப்புக்கு உள்ளாக்கினவைகள் என  இவைகளை நாம் அவ்வளவு எளிதா மறக்கவே மாட்டோம்னு சொன்னார். தெரிஞ்சது தானே என்றேன். ஆனா காலையில என்ன சாப்பிட்டோம்னு மறந்திருவோம்னு சொன்னார். 

அப்படின்னா என்னை நீ மறக்கவே மாட்டியா என்றேன் நான். யோசித்தவள் கர்ம வினை என்றாள். எனக்கு  குழப்பமாக இருந்தது. 

(தொடரும்)

Friday 21 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 5

கிராமம் நோக்கிய பயணம். மின்சார தட்டுபாடு பற்றி இதுவரை ஒன்றும் அறிய வாய்ப்பு இல்லை. சென்னையில் கால் வைத்ததில் இருந்து கிராமத்திற்கு வந்த ஒரு நாள் வரை மின்சாரம் நின்றதாக தெரியவே இல்லை. மின்சார வெட்டு என்றெலாம் பேசினார்களே என யோசிக்க தோணியது. ஆனால் அன்று இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மின்சாரம் வெட்டப்பட்டது. மின்சாரம் மீண்டும் ஒரு மணிக்கு வந்தது. இந்த வேளையில்  யுபிஎஸ் உதவியது. அடுத்தடுத்து மின்சாரத் தட்டுபாடு வெகுபாடு படுத்தியது. ஒருமுறை ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மறுமுறை அதுவும் கும்பாபிஷேக விழா செல்ல காலையில் எழுந்து தயாராக மின்சாரம் இல்லாமல் போனது. யுபிஎஸ் இருந்தும் உபயோகமின்றி இருந்தது. எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்ததுதான் மிச்சம். 

தினம்தோறும் மதுரை பயணம். துணிக்கடைகள். பாத்திரக்கடைகள். வேறு என்ன சொல்ல. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் மாலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்ற திருப்தி. பணம் எதுவும் கொடுக்காமல் சாதாரண வரிசையில் நின்று சென்றபோது அலாதி இன்பம். அப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. கோவில் சுற்றி வந்தபோது சரியான கூட்டம். நல்லவேளை முன்னரே சென்று வந்தோம் என நினைத்துக் கொண்டோம். 

மதுரையில் கிளி ஜோசியரை தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்குமே கிளி ஜோசியரை காண இயலவில்லை. கடைசிவரை கிளி ஜோசியமே பார்க்க இயலவில்லை. இந்த ஜோசிய அனுகூலங்கள் எல்லாம் ஒருவகையான பொழுதுபோக்கு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த ஜோசியம், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டங்கள், இதனால் நான் அடைந்த பாதிப்புகள் நிறைய என இந்த கிளி ஜோசியம் பற்றி பேசியபோது வெகுண்டு எழுந்த ஒரு மாணவியின் வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கத்தான் செய்தது.

இந்தியாவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் குறைவு என்று சொல்வார்கள். இதற்கு காரணம், உறவு, பந்தங்கள் எல்லாம் இருப்பதால் ஆறுதலுக்கு என இருப்பார்கள், அதன் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்பு குறைவு என்பார்கள். ஆனால் இன்று மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 

கேரளாவிற்கு பயணம். எங்கு சென்றாலும் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் ஆகிவிடுகிறது. படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம் நன்றாகவே இருந்தது. அதற்கு முன்னர் பதநீர் குடிக்க வேண்டும் என பல நாள் ஆசையை கேரளா செல்லும்போது வழியில் காரை நிறுத்தி குடித்தோம். பதநீர் பதநீர் போன்றே இல்லை. பாட்டில்களில் அடைத்து விற்றார்கள். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாந்தி எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் பெரும் அவஸ்தை தான். அதற்கு பின்னர் ஒரு முறை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கதை எல்லாம் அப்பப்பா. விமான நிலையம் செல்வோமா, மாட்டோமா என பெங்களூர் நகருக்குள்ளேயே வழி தெரியாமல் இரண்டு மணி நேரம் செலவழித்தது. மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் - மதுரை. இரண்டே தினத்தில் சென்று வந்ததும் மூன்றாம் நாள் எங்கும் செல்ல முடியாத நிலை. 

என்றுமே செல்லாத குற்றாலம் இந்த முறை செல்ல வாய்ப்பு வந்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. குற்றாலத்தில் வந்து தங்கி விடலாமா என்கிற சீதோஷ்ண நிலை. ஒரு திருமணத்திற்கு சென்றபோது திருமணம் முடிந்த மறுகணமே மனிதர்கள் பறந்து போயிருந்தார்கள். 

சில நண்பர்கள் கோவித்து கொண்டார்கள். ஒரே ஒரு நண்பர் பல வருடங்கள் கழித்து வந்து பார்த்தார். பழைய கதைகள் பேசிய பொழுது நன்றாகவே இருந்தது. உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே. 

இந்தியா என்றால் உறவுகள் , விருந்தோம்பல். திருவிழாக்கள். என்ன சொல்லி தந்தது இந்தியா என்று எண்ணி பார்க்கையில் என்ன நான் கற்று கொண்டேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. திருவள்ளுவர் சொன்னதுதான். கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இந்தியா என்றுமே நல்லதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. எடுத்துக் கொள்பவர்கள் மாறிவிட்டார்கள். 

முற்றும். 

Wednesday 19 September 2012

கசாப்பு கடைக்காரர் கையில் காப்பு கட்டலாமா?

இந்தியா பயண கட்டுரைத் தொடரில் இருந்து சற்று விலகிச் செல்லலாம் என நினைக்க வைத்த ஒரு விசயம் இது. பொதுவாகவே இந்த இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் மனிதனை ஒரு கட்டுபாடுக்குள் இருக்க கொண்டு  வரப்பட்டவைதான் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை, இருப்பினும் இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் எந்த அளவுக்கு பின்பற்ற முடியும் என்பதில் ஒரு பல பரீட்சையே செய்து கொள்ளலாம் என்றுதான் எண்ணத் தோணுகிறது.

 சென்ற வருடம் லண்டனில் உள்ள கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்ற போது, கையில் காப்பு கட்டச் சொன்னார்கள். இந்த பிரமோற்சவம் வருடாந்தோரும் ஆகஸ்ட் மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களில் கடைசி ஞாயிறு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். திங்கள் கிழமை அன்று விழா இனிதே முடிவடையும். இப்படி இருக்கும் பட்சத்தில் சில கட்டுபாடுகள் சொன்னார்கள். மனைவியுடன் உறவு கொள்ளாது இருத்தல். அசைவ உணவு சாப்பிடாது இருத்தல், சுருக்கமாகஸ் சொன்னால் அக சுத்தம், புற சுத்தம் என சுத்தமாக இருத்தல். லண்டனுக்கு வெளியில் செல்லாது இருத்தல் போன்ற கட்டுபாடுகள். நான் ஏற்கனவே ஸ்பெயின் தீவான மயோர்கா செல்ல முடிவு எடுத்து இருந்ததால் காப்பு கட்ட வேண்டாம் என நினைத்து காப்பு கட்ட மறுத்துவிட்டேன்.

ஆனால் இந்த வருடம் காப்பு கட்ட வேண்டிய சூழல் வந்தது. முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஏனெனில் எனக்கு இது போன்ற சடங்கு சாத்திரங்களின் கட்டுபாடுக்குள் சிக்கி கொள்ள விரும்புவதில்லை. இதைக் கட்டினால் இது எல்லாம் செய்யக் கூடாது என சொல்லப்படும்போது அதைக் கட்டிக்கொண்டு செய்யக் கூடாததை செய்தால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் சற்று அதிகமாகவே உண்டு. எனக்கு காப்பு கட்ட வேண்டிய நேரம் வந்தபோது ஐயர் சற்று அதிகமாகவே தயங்கினார். எனது மன நிலை அவர் அறிந்து வைத்து இருந்தாரா என தெரியவில்லை. விழா முடிந்ததும் கேட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

சரி, கட்டுங்கள் சாமி என்று சொல்லி கெட்டியாக கட்டியாகிவிட்டது. எதுக்கு கட்டினோம் எனும் மனநிலை வேறு. வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் காப்பு கட்டிவிட்டு வந்துவிட்டேன் என காட்டினேன். எதற்கு இதெல்லாம் என்றே கேட்டார்கள். ஏனெனில் நான் எப்போதுமே இதுபோன்று செய்து கொண்டது இல்லை. கட்டிவிட்டு விட்டார்கள் என்றேன் அப்பாவியாய். உங்கள் சம்மதம் இல்லாமலா கட்டினார்கள் என்றதும் இல்லை வேறு வழியின்றி கட்டிக்கொண்டேன் என சொன்னதோடு நாம் எனது கையில் காப்பு இருக்கும் வரை சற்று தள்ளி இருக்க  வேண்டும் என்றேன். இதை  மீண்டும் மீண்டும் சொல்லி வைத்தேன். அருகில் அருகே தூங்குவது கூட தவறோ என்று மனைவி சொல்ல அதெல்லாம் எவர் சொன்னது என்று அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றே சொல்லியாகிவிட்டது.

முதல் நாள் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் அன்பின் மிகுதி அதிகமாகவே இருந்தது. அடுத்த நாள் இரவு மிகவும் அன்பாக பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் இருவருக்குள் ஒன்றுமே இல்லாத விசயம் குறித்து கருத்து வேறுபாடு வந்தது.  ஏதேனும் ஒரு மாலை வேளையில் ஒரு புது வீடு பார்க்கலாமா என்றார் மனைவி. நானோ இந்த பத்து நாட்கள் என்னை எங்கும் அழைக்காதே என்று சொன்னேன். இதுதான் நடந்தது. அதற்கடுத்து எதற்கு பத்து நாட்கள் எதுவும் செய்ய கூடாது என்று ஆரம்பித்து சின்ன ஊடல். எனக்கோ என்ன இது என தோணியது. நம்மை இறைவன் பிரித்து வைக்க சதி பண்ணுகிறான் என்று காப்பு மீது பழியை போட்டு விட்டு இரண்டாம் கழிந்தது. காப்பு குறித்து எனது மனைவி சற்று பயந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காப்பு கையில் இருக்கிறது, கவனம் என்றே சொன்னார். அன்னியோன்யம் அநியாயத்திற்கு விலகி நின்றது. எனக்கே ஆச்சர்யம்.

மூன்றாம் நாள் மீண்டும் சகஜ நிலை. அன்றுதான் நினைவு வந்தது, அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும், அங்கே இந்த வாரம் கிட்டத்தட்ட ஐம்பத்தி நான்கு கினி பிக்ஸ் கொல்ல வேண்டும் என. அது எனது ஆய்வகத்தில் உள்ள மற்ற நபரின் வேலை. அவருக்கு முன்னரே இதே வேலையில் உதவியதால் இந்த முறையும் செய்ய வேண்டிய நிலை. இந்த வேலையை ஒரு வாரம் தள்ளிப்போட்டு இருந்து இருக்கலாம். ஆனால் காப்பு கட்டப் போகிறேன் எனும் நினைப்பு எல்லாம் முன்னரே இல்லை. அதனால் எல்லா கினி பிக்ஸ் வந்து சேர்ந்துவிட்டது. செய்தே ஆக வேண்டிய சூழல்.  அடடா, ஆராய்ச்சி வேலையில் பல உயிரினங்களை கொல்ல வேண்டி இருக்கிறதே, இதை மறந்து கையில் காப்பு கட்டிவிட்டோமே என நினைத்தேன். அதை மனைவியிடம் சொல்லி வைக்க, உங்களை எல்லாம் எவர் காப்பு கட்ட சொன்னது என்றார்.

வேலைக்கு சென்றேன். கையில் இருக்கும் கயிறு குறித்து தற்போது எவரும் கேள்வி கேட்கவில்லை. இதற்கு முன் சில வருடங்கள் முன்னர் இந்தியா சென்று திரும்பிய போது கையில் கோவிலில் வாங்கிய கருப்பு கயிறு கட்டி இருந்தேன். வேலை இடத்தில் ஒரு உணவு விருந்தில் கையில் என்ன கருப்பு கயிறு என சைனா மாணவன் கேட்க நான் பதில் சொல்லும் முன்னரே கடவுள் நம்பிக்கை இல்லாத எனது ஆசிரியர் அந்த கயிறு இவன் உயிரை காப்பற்றும் என்று சிரித்து வைத்தார். அன்று மாலையே கயிறுதனை கழற்றிவிட்டேன். இந்தியாவில் இருந்தபோது எல்லாம் முருகன் டாலர் வைத்த கயிறு, கையில் கருப்பு கயிறு. அட அட என்ன பக்தி மாயம். எல்லாம் தொலைந்து போனது, என்னையும் சேர்த்து.

முதல் நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. அடுத்த நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. கையில் இருந்த காப்பு மனதை உறுத்தவே இல்லை. எந்த ஒரு விசயத்திற்கும் காழ்ப்புணர்வு கழித்த மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்றே உலகில் சொல்லி இருக்கிறார்கள். காப்பு கட்டிய காரணத்தால் மட்டுமே அக சுத்தம், புற சுத்தம் கவனிக்க வேண்டிய ஒன்றில்லை. அக சுத்தம், புற சுத்தம் எல்லாம் எல்லா நேரங்களிலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை எவரேனும் மனித குலத்திற்கு பொட்டில் அடித்தாற்போல் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தினம் தினம் கையில் இருக்கும் காப்பு நினைவுறுத்துவதை போல சொல்லி வைப்பார்களா?

இதற்குதான் இந்த மதத்தில் கசாப்பு கடைக்காரர் மற்றும் நிமிடந்தோறும் நாராயண நாராயணா என சொல்லும் நாரதர் கதை உலகுக்கு சொல்லப்பட்டது. கசாப்பு கடைக்காரர் மோட்சம் அடைந்ததை கண்டு, உன் பெயரையே இரவும் பகலும் உச்சரிக்கும் தனக்கு இன்னமும் மோட்சம் கிட்டாதது குறித்து நாராயணரிடம் கேட்கிறார் நாரதர். அதற்கு நாரணனோ இதோ இந்த கிண்ணத்தில் இருக்கும் எண்ணையை கொட்டிவிடாமல் சுற்றி வா என்கிறார். சுற்றி வருகிறார் நாரதர். எத்தனை முறை நாராயணா சொன்னாய் என்கிறார் நாரணன். நமோ நாராயணா, எனது கவனம் எல்லாம் கிண்ணத்தில் இருக்கும் எண்ணை கொட்டிவிடக்கூடாது என்பதில் தான் இருந்தது, பெயர் உச்சரிக்கவே மறந்து போனேன் என்கிறார் நாரதர். நாராயணன் சிரிக்கிறார். நாரதர் அர்த்தம் புரிந்து கொள்கிறார். இறைவன் பெயரில் மட்டும் சுத்தம் என விரதம், முடி கட்டுதல், பாதை யாத்திரை நடத்தல் என செய்வதை விட எல்லா காலங்களிலும் மனிதர்கள் நியாயம், தர்மம் என கட்டுபாடுக்குள் இருக்க ஒரு காப்பு வேண்டும். அதை எங்கே பெறுவது, எப்படி எல்லாருக்கும் கட்டுவது? 

Friday 14 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 4

முதலில் நல்லியில் துணிகள் வாங்கலாம் என ஐயர் அழைத்து சென்றார். வேஷ்டிகளும், துண்டுகளும் மட்டுமே அதிகமாக வாங்கினார். நல்லியில் முடித்து கொண்டு லிஸ்ட் கொடுத்த பொருட்கள் வாங்க மீண்டும் அதே இடத்திற்கு சென்றோம். ஆடி கார்த்திகை என்பதால் கோவிலில் கூட்டம் நிறைந்து இருந்தது, அதோடு அந்த பாதையை அடைத்து வைத்து இருந்தார்கள். காரினை நிறுத்த எங்குமே இடம் இல்லை. என்ன செய்வது என புரியாமல் முழித்து நின்றோம். 

அப்போது ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்த பக்கத்தில் அப்படி அப்படியே கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடம் நோக்கி காரினை நிறுத்தினோம். ஐயர் பைக்கில் முன்னமே அந்த இடம் சென்று இருந்ததால், டிரைவர் நண்பர் காரிலிருந்து கடையை நோக்கி சென்றார். அப்போது ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. மற்றொரு கார் எங்கள் கார் மறித்து நின்றது. எப்படி இந்த வேன், கார் எல்லாம் எடுப்பது என மலைப்பாக இருந்தது. 

நிறைய பொருட்கள் என்பதால் ஒரு சைக்கிள் ரிக்சாவில் கொண்டு வருகிறோம் என தகவல் வரவே காத்து இருந்தோம். அதே போல எடை நிரப்பும் வண்டி ஒன்றில் அனைத்து பொருட்களும் வந்து இருந்தது. அதற்கு முன்னர் அருகில் இருந்த வேன் மிகவும் குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை விட்டு சென்றது கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் காருக்கு முன் இருந்த கார் அப்படியே நின்று கொண்டு இருந்தது. 

சாக்கு மூட்டைகள் காரின் பின்புறம் ஏற்றினார்கள். துரியோதனன் தனது வீட்டினை வைக்கோல் மூலம் அடைத்து விட்டது போல காரின் பின்புறம் அடைக்கப்பட்டது. ஹோமம் கட்டைகள் சில வண்டியின் மேற்புறம் போட்டார்கள். அதே குறுகிய இடைவெளியில் கார் பயணித்தது கண்டு ஹூம் என்றே பெருமூச்சு விடத் தோணியது. எத்தனை நெரிசல்களிலும் லாவகமாக கார் ஓட்ட வேண்டுமெனில் இந்தியாவில் மட்டுமே கற்று கொள்ள இயலும். 

கார் பயணித்த சில வினாடிகளில் போக்குவரத்து போலீசார் காரினை ஓரம் கட்ட சொன்னார். மறுபடியும் குளிர் தாளுக்கு பிரச்சினையா என நினைக்க, டிரைவர் நண்பர் சென்று பேசிக்கொண்டே இருந்தார். என்ன பிரச்சினையோ என தெரியாமல் காருக்குள் அமர்ந்தே இருந்தோம். திரும்பி வந்தவர் காரில் லோடு ஏற்றியது குற்றம் என சொல்வதாக சொன்னார். அப்போது இன்சூரன்ஸ் படிவம் கேட்க இவரோ இரண்டு நாட்கள் காலாவதியாகிப் போன இன்சூரன்ஸ் படிவம் வைத்து இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் படிவம் வீட்டில் இருப்பதாக சொல்ல எனக்கோ 'அடக்கடவுளே' என்று இருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் வரை கேட்பதாக சொன்னார். சரி கட்டிவிட்டு வாருங்கள் என்றேன். அதெல்லாம் தேவையில்லை என சொன்னவர் போலிஸ் ஒருவருக்கு தொலைபேசி போட்டு பேசினார். 

அந்த நேரம் வந்த ஐயர் சென்று அவர்களிடம் பேச, அவர்களோ மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிந்தது. நம் மீது தான் குற்றம், இதில் அவர்கள் மீது என்ன கோபப்பட வேண்டி இருக்கிறது என்று நினைத்தே நான் எப்போதுதான் காரினை விடுவார்கள் என யோசித்தவாறே அமர்ந்து இருந்தேன். காரினை பிடித்து வைத்துக் கொள்வார்களா என்று அப்பாவியாய் கேட்டேன். இதோ வருகிறேன் என டிரைவர் நண்பர் சென்றார். அவர் கையில் வைத்து இருந்த போனை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார். அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இவரிடம் போனை கொடுத்தார். சிறிது நேரத்தில் டிரைவர் நண்பர் முன்னூறு ரூபாய் கட்டிவிட்டு வந்தார். அந்த ரசீது பார்த்தபோது வேகமாக சென்றதற்காக அபாரதம் போட்டு இருந்தது. ஹூம் இந்தியா. 

எல்லோரும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நேர் வழியில் இங்கே வாழ்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் இந்த இந்தியாவை ஒருபோதும் சீர்திருத்த போவதில்லை. இன்சூரன்ஸ் படிவம் வைக்காத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். லண்டனில் எல்லாம் இன்சூரன்ஸ் படிவம் எல்லாம் கையில் வைத்து இருப்பதில்லை. கார் எண் தட்டினால் போதும், காரின் மொத்த வரலாறும் தெரியும். இன்சூரன்ஸ் புதுபிக்கபட்டதா நகல் வேண்டும் என்று வேறு அந்த போலீசார் கேட்டாராம். அங்கேயே பேக்ஸ் வசதி வைத்து இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதேனும் தவறு எனினும் இத்தனை நாளுக்குள் நகல் அனுப்பி வை என விட்டுவிடலாம். காரினில் லோடு ஏற்ற கூடாது என்பதற்கான சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. 

எனக்கு இனி எத்தனை போலீசார் பிடிப்பார்களோ எனும் அச்சம் வேறு. அடுத்த நாள் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் இன்சூரன்ஸ் படிவம் வந்தால் மட்டுமே காரை எடுத்து செல்லலாம் என நான் சொல்லி வைத்தேன். அதைப்போலவே டிரைவர் நண்பரின் அண்ணன் அங்கும் இங்கும் அலைந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். கிராம பகுதியில் ஸ்கேன், பேக்ஸ் எல்லாம் வசதி ஒன்றும் பெருகிவிட வில்லை. டிரைவர் நண்பர் எவ்வளவோ சொல்லியும் நான் இன்சூரன்ஸ் படிவத்துடன் தான் செல்ல வேண்டும் என சொன்னது வீணான விசயமாகவே இருந்தாலும், முக்கியமான விசயமாகவே எனக்கு தெரிந்தது.  அதற்கு பின்னர் எவரும் காரை பிடிக்கவே இல்லை. 

நகரத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என நினைத்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு வரை செல்ல வேண்டிய நிர்பந்தம். எனவே மீண்டும் அதே போக்குவரத்து நெரிசல். விஜயகாந்த் வீடு சென்றபோது மாலை மணி மூன்று. சாலையில் குழி தோண்டி போட்டு இருந்தார்கள். அவரது வீட்டில் காவல் போடப்பட்டு இருந்தது. இருப்பினும் எவரும் எளிதாக செல்லுமாறு வீட்டின் வெளிவாயில் திறந்தே இருந்தது. 

சென்னையில் இருந்து கிராமம் நோக்கிய பயணம். நகரத்தை விட்டு வெளியேறவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிப்போனது. கார் சென்ற வேகம் மிரள செய்தது. இடம் செல்கிறார்கள், வலம் செல்கிறார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லை. மெதுவாக செல்லும் வண்டி வலம் செல்கிறது. ம்ஹூம். போதும் போதும் என்றாகிவிட்டது. 

இரவெல்லாம் பயணித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்று. அப்பாடா என்று இருந்தது. தமிழகம் மட்டுமே இப்படியா! 

(தொடரும்)