Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday 31 January 2013

தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விடும் என தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே  ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர் அறிவித்ததை கண்டு பெரும்பாலான அமைப்புகள் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.

இனிமேல் சட்ட ஒழுங்குதனை  சீர்குலைய செய்வோம் என ஒவ்வொருவரும் அவரவருக்கு வேண்டியதை நிறைவேற்ற அரசுவிடம் மனு கொடுக்க ஆயத்தமாகிறார்கள் என அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

திருடர்கள் அமைப்பு:  
உறுப்பினர்கள்: நான்கு கோடி 

எங்களை எந்த தொந்தரவும் செய்யாமல் திருட வழி வகுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விடும் அபாயம் இருக்கிறது.

சாதி கட்சி:
உறுப்பினர்கள்: ஏழரை கோடி 

தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினர்களும் இனிமேல் வன்னியர்கள் என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காத பட்சத்தில் எங்கள் உறுப்பினர் கணக்கு பொய்யாகும் சாத்தியம் உள்ளது, அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு சாலைகளில் குவிக்கப்படும்.

அரசியல் கட்சி: 
உறுப்பினர்கள்: கணக்கு காட்டப்படவில்லை 

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அரசு கவிழ வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக ஆளும் கட்சி என போஸ்டர்கள் ஒட்டப்படுவதுடன் தனித்திராவிட நாடு அமைக்கப்படும்.

மொடாக்குடியர்கள் அமைப்பு:
உறுப்பினர்கள்: ரேஷன் கார்டு இல்லை. 

வீட்டுக்குழாயில் தண்ணீர் பதிலாக மதுபானம் வரவேண்டும்.

இன்னும் இன்னும் தொடரும்...

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'


Wednesday 21 December 2011

கருப்புதனை கருப்புனு சொல்றது தப்பா?

 எங்க ஊருல கருவாயன் அப்படின்னு என்னை கூப்பிடுவாங்க. நான் ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டவனை திருப்பி அடிச்சது இல்லை. நிற வெறியை கிளப்புறானு இனவெறியை சொல்றான்னு ஒருநாளும் கத்துனது இல்லை.

கஞ்சா கருப்பு அப்படின்னு ஒரு நகைச்சுவை நடிகரு கூட இருக்காரு. அவர் ஒரு நாள் கூட தன பேருல கருப்பு இருக்கேன்னு கவலைப்பட்டு இருப்பாரானு தெரியலை.

சினிமா பாட்டு எழுதி தேசிய விருது வாங்குன விஜய் கூட கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு அப்படின்னு ரொம்பவே கருப்பு கலரை புகழ்ந்து எழுதுனாரு. கருவண்ண கண்கள், கரு மேக கோலங்கள் அப்படி இப்படி கருப்பு பத்தி நம்ம ஊருக்காரங்க அத்தனை பெருமையா பேசுறாங்க.

ஆனா கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு சொன்னா அது இனவெறி, நிறவெறியாம். எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமா இருந்துச்சு. கருப்பு இனத்தவர்கிட்ட போய் இதை கேட்டு பாக்கலாமா அப்படினுட்டு ஒரு கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு கூப்பிட்டேன். பொளார் அப்படின்னு ஒரு அறை விட்டதுல  என் கன்னம் கருப்பா பழுத்து போச்சு. அன்னைக்குல இருந்து எது எது என்னைய சொன்னா எனக்கு வலிக்குமோ அதுமாதிரி அது அது மத்தவங்களை சொன்னா வலிக்கும்னு நினைச்சேன். ஆனா நினைப்பு நினைப்போட இருந்துச்சு.

'யே குண்டு' அப்படின்னு ஒருத்தரை கூப்பிட்டேன். 'என்னடா சொன்ன, அப்படின்னு அந்த பொண்ணு காலுல இருக்க செருப்பை தூக்கி என் மேல எறிஞ்சிருச்சி' வலி தாங்கலை. குண்டா இருக்கவங்களை 'குண்டு' அப்படின்னு சொல்றது கூட தப்புதானாம். ஒல்லியா இருக்கிறவங்களை 'ஒல்லி பச்சான்' அப்படின்னு சொல்றதும் குத்தம் தானாம். இருக்கறதை இருக்கறமாதிரியே சொன்னா எல்லாரும் அடிக்க வராங்க. 'டூ யூ நோ ஹௌ ஐ ஃபீல்? அப்படின்னு கேட்கறாங்க.

இது மாதிரி என்னை ஒருதரம் 'போடா முட்டாபயலே' அப்படின்னு ஒருத்தர் திட்டினதும் எனக்கு ஜிவ்வுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிருச்சு. எதுக்குடா அப்படி சொன்ன? அப்படின்னு கேட்டேன். 'முட்டாபயல முட்டாபயனு திட்டாம அறிவாளினா திட்டுவாங்க' அப்படின்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போய்ட்டான்.

ஹூம், முட்டாளத்தான இருக்குமோ அப்படின்னு நினைக்கிறப்போ ஒரு கருப்பு இனத்தவரு போனாரு.

வாய் வரைக்கும் வார்த்தை வந்துச்சி. அன்னைக்கு வாங்குன அடி நினைவுக்கு வந்ததால மனசுக்குள்ளார சொல்லிக்கிட்டேன். டே கருப்பு! அவனுக்கு கேட்கபோறதும் இல்லை, என்னை அவன் அடிக்கப் போறதும் இல்லை.

அப்புறம் தான் செய்தி தாளைப் பார்த்தேன். கருப்பு அப்படின்னு ஒரு கருப்பு இனத்து விளையாட்டு வீரரை ஒரு வெள்ளை இனத்து விளையாட்டு காரர் கூப்பிட்டாருன்னு அந்த வெள்ளை இனத்தவரை எட்டு போட்டிகளில் தடை பண்ணிட்டாங்க. அவரும் என்கிட்டே பாவமா கேட்டாரு. கருப்புதனை கருப்பு அப்படின்னு சொல்றது தப்பா!

ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன். ஒரு சில வார்த்தைகள் இனத்தை கேலி பண்ணுவதாகவும், நிறத்தை கேலி பண்ண கூடியதாகவும் இருக்கு, அதை எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிரனும் அப்படின்னு புது டிக்சனரி போடலாம்னு போய்கிட்டு இருக்கேன்.

டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல!

Friday 14 October 2011

தண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா

நியூட்ரினோ ஒரு போங்காட்டம் அப்படினு ஒரு தலைப்புல எழுத நினைச்சேன். அதைப் பத்தி மனசுல நினைச்சிட்டே இருக்கறப்ப சவால் சிறுகதை பத்திய அறிவிப்பு பார்த்தேன். சரி போங்காட்டம் அப்படின்னு ஒரு தலைப்பு வைச்சி ஒரு சிறுகதையை எழுதி முடிச்சிட்டேன். நியூட்ரினோவுக்கு போங்காட்டம் தான்.

எப்ப பார்த்தாலும் உலகை திருத்த வந்த உத்தம சிகாமணி மாதிரி எழுத்துல வேஷம் கட்டினா எதுனாச்சும் நடக்கவாப் போகுது. வாழ்க்கைய சீரியசாப் பார்த்தா அப்புறம் ஐ சி யு ல கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான் அப்படின்ற ஒரு அடிப்படை எண்ணம கூட வந்து சேரலை. என்ன செய்ய, செய்ய முடியாதவங்க சிந்திக்க மட்டும் செய்வாங்கன்னு சொல்லிக்கிற வேண்டியதுதான்.

பல மாசங்களா இந்த பதிவுலகம் பக்கமே அவ்வளவா எட்டிப் பார்க்கலை. எல்லாம் தலை போற காரியம்னு நினைச்சி, இந்த ஊரை சீர்படுத்த வந்த தியாக செம்மல்னு நினைச்சிகிட்டு அப்பப்பா ஒருவழியா ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் தலை போற காரியம் நிறைய இருக்கு. அப்ப அப்ப எழுதுவோம்னு அப்ப அப்ப நினைப்பு வரும்.

சரி, என்ன என்ன எழுதி வைச்சிருக்கொம்னு பார்த்தா ரொம்ப தொடர்கள் அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. ஒன்னு ஆரம்பிச்சி அதை தொடர்ந்து செய்யணும், இல்லேன்னா ஆரம்பிக்க கூடாது. அப்படி ஆரம்பிச்சிட்டா முடிச்சிரனும் அல்லது தொடர்ந்து வாரம் வாரம் எழுதணும். இப்படி எந்த நிர்பந்தம் இல்லாம, கொள்கையும் இல்லாம எழுதினா 'மொக்கை பாண்டி' அப்படின்னு ஒரு பட்டம் போட்டுக்கிரலாம்.

இப்படித்தான் ஒரு பில்டர் அங்கொரு இங்கொரு வேலைன்னு எல்லா வேலையும் வாங்கி வைச்சிகிருவானாம். ஒரு வேலையும் ஒழுங்கா முடிச்சி தரமாட்டானாம். இப்போ முடிக்கிறேன், அப்போ முடிக்கிறேனு இழுத்து அடிப்பானாம். அது மாதிரி எழுத்துல இருந்தா எழுத்து வசப்படுமா.

சரி இந்த நியூட்ரினோ எதுக்கு, தண்ணீர் வரம் தலைப்பு எதுக்கு. எல்லாம் அறிவியல் பண்ற கூத்து தான். எதையாவது சொல்லிட்டே இருந்தாத்தான் அறிவியல் பத்தி பரபரப்பா பேசுவாங்க.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ஒளியை விட வேகமாக செல்லும் பொருள் எதுவுமே இவ்வுலகில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை அப்படின்னுட்டு. இவர் சொன்னதை இதுவரைக்கும் யாருமே முறியடிக்க முடியலையாம். ஒளி தான் அதி வேகமாம். ஆமா இந்த ஒளி எது? இயற்பியல் பாடம் தான் எடுக்கனும். இந்த ஒளிக் கீற்றுகளில் மொத்தம் ஏழு வகையா பிரிச்சி இருக்காங்க, அதனுடைய அலை நீளத்தை கணக்கில் வைச்சி. அந்த அத்தனை ஒளியும் ஒரே வேகம் தானாம். இந்த ஒளியின் வேகம் வேறுபட்ட கனம் நிறைந்த பொருள்களில் செல்லும் போது குறையுமாம்.

சரி இந்த நியூட்ரினோ எங்கே இருந்து வந்திச்சி. என்ன பண்றது. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் அப்படின்னு படிச்சி வந்தவங்க கிட்ட அதையும் தாண்டிய பல அணு துகள்கள் இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும், அப்படித்தான் பல அணு துகள்கள் இருக்காம். அதுல ஒண்ணுதான் இந்த நியூட்ரினோ. இருந்துட்டு போகட்டுமே, இந்த நியூட்ரினோவா சாப்பாடு போடப் போகுது.

அது இல்லை பிரச்சினை, இந்த நியூட்ரினோ ரொம்ப வேகமாம். அதாவது ஒளியை விட மில்லி செகண்டு வேகமா போகுதாம். இதை உங்ககிட்டே விடறேன், நீங்களே அறிஞ்சி சொல்லுங்க அப்படின்னு பல வருசமா ஆராய்ச்சி பண்ணுன கூட்டம் அறிவிசிருச்சாம். சரி இப்போ அதுக்கென்ன அப்படினா, ஐன்ஸ்டீன் சொன்னது பொய், இதுவரைக்கும் சொல்லிட்டு வந்த பெரும் பிளவு கொள்கை எல்லாம் பொய் அப்படின்னு நிரூபணம் செய்யலாமாம். செஞ்சி...கால காலமா ஒன்னை சொல்லி இன்னொன்னை மாத்துரதுதானே நம்ம அறிவியலோட வேலை. அதுக்குத்தானே அறி இயல்.

இந்த செய்தி வந்த நேரம் பெரும் பரபரப்பு. இப்ப அப்படியே அடங்கி போச்சு. எதுக்குனா நாநோபார்ட்டிகில் அப்படின்னு கேள்வி பட்டுருப்போம். கடுகு சிறிசு காரம் பெரிசு அப்படிங்கிற மாதிரி ஒரு துகள் ரொம்ப சின்னதா இருந்தா அதனோட போக்குவரத்தே தனியாம். அது போல இந்த நியூட்ரினோ விதிகள் எதுவுமே பின்பற்றாதாம். நம்ம உடலுக்குள்ள கூட இப்போ இந்த நிமிஷம் பல நியூட்ரினோக்கள் கடந்து போகுதாம். ஆனா ஒளி நம்ம உடலை ஊடுருவுமா? அப்படி ஊடுருவிச்சினா எப்படி ஒருத்தரை ஒருத்தரை பார்க்கறது. இந்த நியூட்ரினோ ஒளியை விட வேகமா இருக்க வாய்ப்பு இல்லைன்னு சொன்னாலும் அறிவியல் வித்துவான்கள் வேற யாராச்சும் ஆராய்ச்சி செஞ்சி சொல்லட்டும்னு இருக்காங்க.

அப்புறம் இந்த கோமெட்டு. இது பண்ற அட்டூழியம் தாங்க முடியலை. கால் கடுக்க நடந்து தலையில ஒரு குடம், இடுப்புல ஒரு குடம் அப்படின்னு தண்ணீ சுமந்து வரக்கூடியவங்க்களை நினைச்சா எவ்வளவு கஷ்டம். அதுவும் இந்த தண்ணீர் தான் இந்த பூமியில் உயிர்கள் வாழ ஆதாரம்னு தெரியும். அந்த தண்ணீரை இந்த கோமேட்டுதான் கொண்டு வந்து கொட்டுச்சாம். பூமியில மட்டும் எதுக்கு கொட்டுச்சோ. கோமெட்டுக்கே வெளிச்சம். இந்த கோமெட்டு சூரியன் பக்கத்தில வந்ததும் தன் கிட்ட இருக்க பனிக்கட்டிய உருக்கி தண்ணியா கொட்டிருமாம். அதோடு மட்டுமா, பூமியில ஏற்பட்ட எரிமலை வெடி சிதறல் இந்த தண்ணீருக்கு காரணம் அப்படின்னு எப்படி தண்ணீர் வந்ததுனு ஒரே அலசல். போர் போட்டு தண்ணீர் எடுக்கறவங்களை நிறுத்த சொல்லனும். பூமிக்கு தண்ணீர் வரம் கொடுத்தது எங்க ஊரு மாரியாத்தா அப்படின்னு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது.

அதோடு நிற்கிறாங்களா, உலகம் விரிவடைஞ்சிட்டே அதுவும் படு வேகமா போய்கிட்டே இருக்காம். எல்லாம் இந்த ஒளி மூலம் பண்ற ஆராய்ச்சி தான். கருந்துளை, கரும் பொருள் அப்படின்னு இந்த மொத்த உலகமே அப்படித்தான் இருக்காம். ஒளி ஊடுருவ இயலாத பொருள் ஏதேனும் வான் வெளியில் சிந்தப்பட்டு இருக்கிறதோ அப்படின்னு ஒரு ஐயம் வந்துட்டு போகுது.

இப்படி அறிவியல் எல்லாம் பேசிட்டு இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனா சாப்பாட்டுக்கு மம்பட்டிய எடுத்து வெட்டுனாதானே உண்டு. கிணத்துல தண்ணீ இருக்கா, வயக்காலுக்கு தண்ணீ போதுமானு வானத்தை பார்த்துட்டு இருக்கிற நமக்கு இந்த தண்ணீ எப்படி வந்துச்சுனும், இந்த உலகம் விரிவடையுதா, சுருங்கி தொலையுமானு கவலை பட தோணுமா. அவரவர் கவலை அவரவருக்கு.

அதுக்கப்பறம் ராணா படத்துக்கு ஒரு பாட்டு எழுதினா என்ன அப்படின்னு தோணிச்சி.

இணையம் இல்லாத காலத்தில்
மனிதர்களின் மனதில்
இணையே இல்லாமல்
இடம் பிடித்த அரசனே பேரரசனே

மழை பொழிய வானம் மறுத்தால்
நல்ல மனிதர்களை விதைக்கும்
வருணனே நீ தர்மனே (இணையம்)

ஒளியை விட நீ வேகம்
உன் உணர்வால் தீர்த்துவிடு தாகம்
நியூட்ரினோ அது நீதானோ
உலகம் போற்றும் அரசனே ராணா

நீ சொன்னதால் தானே பூமியில்
உயிரினம் வளர்ந்தது
பூமிக்கு பெருமை சேர்க்க
நீயும் அரசனாய் இங்கு பிறந்தது

ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்)

கருந்துளை கரும்பொருள் எல்லாம்
உன்னில் உன்னில் ஐக்கியம்
ஒளியை மட்டுமே சிந்தும்
உனது கண்கள் உலகின் பாக்கியம் ராணா

செம்மண்ணோ, களிமண்ணோ
பசுமை போத்திடும் ரகசியம்
இந்த பாரினில் நீ தந்தாய் அதிசயம்
உண்மை மக்கள் பெற்றவனே


ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்) 

இப்போதைக்கு நான் மொக்கைபாண்டி இல்ல, இல்ல, இல்ல. 




Thursday 29 July 2010

இனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே

ஒரு வலைப்பூ வைத்திருந்தால் அதற்கு கட்டாயம் பின்னூட்டம் எழுதும் வாய்ப்புதனை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு வலைப்பூவே அல்ல.

                                                 - ஆங்கில வலைப்பதிவர்

வலைப்பூ அங்கீகாரம்தனை இன்றுமட்டும்  எனது வலைப்பூ இழக்கிறது. :)

Tuesday 6 July 2010

பதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்

எழுத்து வேற, அதை எழுதறவங்க வேற அப்படினு பிரிச்சி பார்க்க சொன்னாலும் சொன்னாங்க. ஆனா என்னால எழுத்து வேற அதை எழுதுறவங்க வேற அப்படினு இனம் பிரிச்சி பார்க்கறதுல ரொம்ப சிரமமாத்தான் இருக்கு.  கற்பனை அப்படிங்கிறதுல பாதிக்கு மேல உண்மை இருக்கத்தான் செய்யும், எதுக்குனா கற்பனைனு எழுதப்படற விசயம் மாதிரியே வாழறவங்க இருக்காங்க இந்த உலகத்தில.

நல்ல விசயங்கள் எழுதுறாங்க. நல்ல விசயங்களை மட்டுமே எழுதுறாங்க. இது யாருக்கு தோணும்னா, அதை எழுதுறாங்களே அவங்களுக்குத் தோணும். ஆனா படிக்கிறவங்களுக்கு அப்படித் தோணுமா. பலருக்கு தோணாது, சிலருக்கு தோணும். 

நமக்கு தெரிஞ்சதை எழுதிட்டு ஓரமா இருக்கலாம். நமக்கு பிடிச்சதை படிச்சிட்டு ஓரமா இருக்கலாம். ஆனா எழுத்துனு வரப்ப எதுக்கு இப்படி எல்லாம் எழுதனும் அப்படினு  மத்தவங்களை அதட்ட தோணும், எதுக்குனா நம்மதான் இந்த உலகத்தை என்னமோ மிகவும் நேரான பாதையில செலுத்துரமாதிரி ஒரு அடவடியான எண்ணம் ;)

போன ஜென்ம பகை அப்படிங்கிற மாதிரி போன வருஷ பகை, அதுக்கு முந்தின வருஷ பகை, போன மாச பகை, போன வார பகை அப்படினு புகைஞ்சிகிட்டே இந்த எழுத்து இருந்துட்டு வருதாம். பத்திக்கிட்டு எரியமாட்டிங்குதுன்னு சிலருக்கு கவலை வேற இருக்காம். வெட்டிகிட்டு சாகமாட்டாங்களானு ஒரு கூட்டம் பிராத்தனை பண்ணிகிட்டு திரியறாங்களாம்.

வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லைனு ஒரு பேச்சு அடிபடுது. அப்புறம் என்ன எழுத்து எழவுக்கு இப்படி எழுத்து தகராறு. அது வேற ஒன்னும் இல்லையாம். சண்டைய பார்க்கத்தான் கூட்டம் கூடுமாம். அது மாதிரி ஒருத்தரை இன்னொருத்தர் எழுதி தாக்கிகிட்டா பதிவுலகத்தில் தனக்கென தனி இடம் ஒன்னு சிறப்பா அமைச்சிக்கிடலாம்னு தெரிஞ்சவங்க எல்லாம் சொல்றாங்க. ;) நாலு பேருக்கு நாம தெரியனுமா நல்லவங்களுக்கு கெடுதல் பண்ணு அப்படினு ஒரு சொல் வழக்கு இருக்கு. கெட்டவனு பேரு வாங்கிருவோம்னு பயப்படவேணாம் ;)  நல்லவருனு சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து.

இப்போ  எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல  சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.

சரி அதெல்லாம் பிரச்சினை இல்லை, எனக்கு இப்போ இந்த தமிழுல எழுதறவங்க எழுத்து எல்லாம் படிச்சி படிச்சி அவங்களைப் பத்தி ஒரு பிம்பம் உருவாக ஆரம்பிச்சி தொலைஞ்சிருச்சி. இதுல கொடுமை என்னனா தப்பா எழுதுறதை வைச்சிதான் பிம்பம் பெரிசா உருவாக ஆரம்பிச்சிருச்சி. ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு தீய விசயம் இருந்தால் போதும், அத்தனை நல்ல விசயங்களும் பொசுங்கிப் போய்விடும் அப்படிங்கிற பாலபாடம் எனக்கு கத்து கொடுக்கப்பட்டு  இருக்கறதால இந்த பிம்பம் எல்லாம் மறையவே மறையாது. பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.

யார் அந்த பதிவர்கள்? அப்படிப்பட்ட  பதிவர்களை கை காட்டித்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஏனெனில் என்னை பார்க்க வேண்டும் என எவருக்கும் இனிமேல் நினைப்பு இருக்காது. அவரவர் தேவைக்கு அவரவர் சரியாக செய்து கொள்வார்கள். ;)

Thursday 29 April 2010

எழுதுவதை நிறுத்திப் போராட்டம்

அன்பு நிறைந்த தமிழ் எழுத்தாளர்களே, பாசம் மிக்க தமிழ் பதிவர்களே, மன்னிக்கவும் பதிவர் எழுத்தாளர்களே, உங்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறேன். அந்த அமைப்பின் பெயர் என்னவெனில் ' தமிழ் தொண்டு அமைப்பு ' ஆகும்.

இந்த தமிழ் தொண்டு அமைப்பிற்கு நான் தலைவர். இந்த 'தமிழ் தொண்டு அமைப்பு' தனில் உறுப்பினராக சேருபவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன், இல்லை இல்லை,  கட்டாயப்படுத்துகிறேன்.  மேலும் எவர் எவர் துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணை பொருளாளர், கணக்காளர், என பல பதிவுகளுக்கு, மன்னிக்கவும், பதவிகளுக்கு தங்கள் பெயரை தாங்களே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பெயரை எவரேனும் பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவெனில் நமது கோரிக்கைகளை நாமே முனைந்து செயல்பட்டு நிறைவேற்றும் வரை தமிழில் எழுதாமல் இருப்பது ஆகும். இந்த அமைப்பில் இணைபவர்கள், அதாவது சேர்ந்துவிட்டீர்கள்,  இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முக்கிய நோக்கத்தை எவரேனும் மறந்து செயல்பட்டால் அவர்களை கடுமையாக இந்த அமைப்பு தண்டிக்கும் என்பதை கடுமையாகவே சொல்லிக் கொள்கிறேன். மேலும் இந்த அமைப்பில் நீங்கள் இணையாவிட்டால் உங்களை எழுத்தாளர்கள் என்றோ, பதிவர்கள் என்றோ ஒருபோதும் நீங்களோ எவரோ அழைத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். அதையும் மீறி நீங்கள் எழுதினால் உங்கள் கணினிகள், கைகள் உடைக்கப்படும் என்பதை சற்று சீற்றத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

வருகிற மே மாதம் முதல் தினமான சனிக்கிழமை அன்று நமது போராட்டம் தொடங்குகிறது என்பதை அறிவுறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்கள் ஆகிவிட்டீர்கள் எனும் உணர்வு இப்போதே உங்களுக்கு வர வேண்டும். தமிழில் எழுதுவதை நிறுத்த நீங்கள் இப்போதே உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மொழி பெயர்ப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு ஏதேனும் தமிழில் எழுதினால் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் உள்ள இந்த தமிழ்  எழுத்தாளர்கள், பதிவர் எழுத்தாளர்கள் இந்த அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என கடுமையாகவே எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் கோரிக்கைகள் என்னவெனில்

௧. உலகம் முழுவதும் அனைவரும் தமிழ் அறிந்திருக்க வேண்டும். எழுத படிக்க கட்டாயம் தெரிய வேண்டும்.

 ௨. அனைவரும் தமிழ் எண்களை உபயோகித்து பழக வேண்டும், இனிமேல் வேறு எண்களை மறந்தும் உபயோகிக்கக் கூடாது.

௩. ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, ஸ்பானிஷ் இது போன்ற மொழிகள் யாவும்  தமிழ் மொழிக்கு அடிமை என அந்தந்த மொழிகள் தங்களை தாங்களே அறிவித்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மொழி புழக்கத்தால் அனைத்து பிற மொழிகள் அழிந்து போய்விட வேண்டும்.

௪. மிகவும் முக்கியமாக அனைவரும் தங்களது பெயர்களை தமிழில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முன் மாதிரியாக என் பெயரை நான் மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டேன்.

௫. தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பிற மொழி வார்த்தைகள் பேசக் கூடாது.

௫. உலகில் உள்ள அனைவரும் தமிழர்கள் எனும் எண்ணம் அனைவரின் மனதில் வேரூன்ற வேண்டும்

இப்படிப்பட்ட பல கோரிக்கைகளை, மற்ற கோரிக்கைகள் பின்னர் வெளியிடப்படும்,  நிறைவேற்றும் வரை அனைவரும் இனிமேல் தமிழில் எழுதாமல் இருக்க வேண்டும் என ஆணையிடுகிறேன். தமிழில்தானே எழுதாமல் இருக்கலாம், ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ எழுதுவேன் என எவரேனும் கள்ளத்தனமாக முயன்றால் அதைப் பார்த்துக் கொண்டு இந்த அமைப்பு புளியங்காய் பறித்துக் கொண்டிருக்காது என்பதை அவசியத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதை எதை எழுத வேண்டுமோ அதை அதை இந்த இரண்டு நாட்களுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். மே மாதம் முதல் தேதி இனிமேல் எழுத்தாளர்கள் தினமாக கொண்டாடப்படும். இப்படிப்பட்ட காலவரையற்ற எழுதுவதை நிறுத்தி நடத்தப்படும்  போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------
ராசு : ஏன்டா, நம்ம அண்ணனுக்கு மொக்கைன்னா என்னான்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.

வாசு : தெளிவாப் பேசிட்டு போயிருக்காரு, மொக்கை, சக்கைன்னுட்டு . வாடா நாம களத்தில இறங்குவோம்

ராசு : ?????

-------------------------------------------------------------------------------------------------------------

                                              தமிழ் தொண்டு அமைப்பு

நிறுவனர் மற்றும் தலைவர் :  ராதாகிருட்டிணன்
துணைத் தலைவர் : தாமோதர் சந்துரு
செயலாளர் : ஷங்கர்
துணை செயலாளர் : சுந்தரா
பொருளாளர் : சித்ரா
துணைப் பொருளாளர்: ஹேமா
பொறுப்பாளர்கள் : கதிர் (தமிழ் மொழி மட்டும்) ஜெஸ்வந்தி (பிற மொழிகள்) சங்கவி (கலைகள் மற்றும் கலாச்சாரம்) பா.ராஜாராம் (எழுத்தாளர்கள் நலம் பேணுதல்)
எழுத்தாளர்களின் தொடர்பாளர்: ரமேஷ் (தமிழ் உதயம்)
ஒருங்கிணைப்பாளர் : தீபா (கபீஷ்)
செய்தித் தொடர்பாளர்: தர்ஷினி (தோழி)
பட்டய கணக்காளர்:                                          
வழக்கு அறிஞர் :        
வங்கித் தொடர்பாளர் :                        
வங்கி : ஸ்டேட்ஸ் பேங்க் ஆப் இந்தியா
பதிப்பகம் : நயினார் பதிப்பகம் (அனுமதி பெற வேண்டும்)

---------------------------------------------------------------------------------------------------

Friday 16 April 2010

சிரிக்கத் தெரியாதுங்க, மன்னிச்சிருங்க.

எத்தனை தடவை, திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாலும், அதே நகைச்சுவை காட்சிகள் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இருப்பேன். எத்தனை தடவை நகைச்சுவை பதிவுகள் பார்த்து மனம் விட்டு சிரித்து இருந்திருப்பேன். சிரிப்பு ஒன்றுதான் மனிதர்களை மற்ற விலங்கினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என சொல்லும் போதெல்லாம் சிரிப்புடன் சிந்தனையும் வந்து சேர்ந்து விடுகிறது.

சிரிப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா? பிறரை சிரிக்க வைப்பது என்பது என்ன அவ்வளவு கஷ்டமா? எனக் கேள்வி கேட்டால் பல நேரங்களில் ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நகைச்சுவை என்பது மிகவும் மெல்லிய கயிறு. அதை சற்று அதிகமாக இழுத்துவிட்டால் அறுந்து போகும் தன்மை உடையது. இதில் வயது வந்தோர்க்கான நகைச்சுவையும் இருக்கத்தான் செய்கிறது. அதில் வக்ர எண்ணங்கள் தலை காண்பித்தாலும் அவை நகைச்சுவை எனும் போர்வையால் மறைக்கப்பட்டு விடுகிறது. நகைச்சுவை உணர்வுடன் எல்லா விசயங்களையும் அணுகினால் துன்பம் விலகிப் போய்விடும் என்பது சத்தியமான உண்மை, ஆனால் அந்த நகைச்சுவைதனை எல்லா இடங்களுக்கும் பொருத்திப் பார்ப்பது இயலாத காரியம்.

நகைச்சுவை என சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் எனும் உரிமையே பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. நகைச்சுவைதனை உற்று நோக்கும் போது தோன்றுவது என்னவெனில் ஒருவரின் முட்டாள்தனத்தை கண்டு சிரிக்கிறோமா அல்லது ஒருவரின் சமயோசித புத்தியை நினைத்து ரசிக்கிறோமா என பாகுபாடு பார்க்க இயல்வதில்லை.

ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவது என்பது அந்த நம்பிக்கையின் அடிப்படை.  பிறரது நம்பிக்கைகள் கேலிக்குரியதாகத் தெரியலாம். பிறரின் செயல்பாடுகள் அர்த்தமற்றதாகத் தெரியலாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களுக்கு ஒரு விசயத்தை தன்மையுடன் புரிய வைக்காமல் நகைச்சுவை செய்தால் சிரித்துவிட்டுத்தான் போகத் தோன்றும், சிந்திக்கத் தோன்றாது.

நான் மிகவும் கோபக்காரனாகவே தெரிகிறேன், முகத்தை கடுகடுவென வைத்திருக்கிறேன் என பலரும் சொல்லும்போது மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன். 'இஞ்சி தின்ன குரங்கு' எனும் பழமொழியை 'உர்ராங்கொட்டான்' எனும் அடைமொழியை என்னால் மிகவும் ரசிக்க முடிகிறது.

கலகலப்பாகவே பேசும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஆனால் பேசி முடித்து கிளம்புகையில் ஒரு வெறுமை உணர்வு எட்டிப் பார்க்கிறது. துயரப்படுபவர்கள் கண்களில் வட்டமிடுகிறார்கள். அடுத்தவர்களை பாவம் என்று எண்ணாதே, நீதான் பாவம் என என்னை நோக்கிச் சொல்லும்போதெல்லாம் என்னால் சிரித்து மகிழ்ந்திருக்க இயலவில்லைதான்.

பொது நல வாழ்க்கைக்காக வசதியான வாழ்க்கையை துறந்துவிட்ட பல தலைவர்களை கோமாளிகள் என பிறர் சொல்லக் கேள்விபடும் போதெல்லாம் இனம் புரியாத வலி வந்து சேர்ந்துவிடுகிறது. இலங்கையில் துயரப்படும் தமிழ் உறவுகளை கண்டு ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் பேசிப் பேசியே அந்த கொடிய நிகழ்வுகளை நகைச்சுவையாக்கும் தன்மை கண்டு சிரித்து மகிழ எப்படி முடியும்?

என் சட்டைப் பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது, அழுத பையன் அழுதபடியே எனும் வரிகள் என்னை வாட்டும் போதெல்லாம் எப்படி என்னால் மகிழ்ந்து இருக்க இயலும்?

இப்படி எத்தனையோ வாழ்வியல் கசப்புகளை மறந்துவிட்டு எப்பொழுதும் சிரித்து மகிழ்ந்திருங்கள் எனச் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கும். இருப்பினும் எதையும் மாற்ற இயலாது, ஏன் வீணாக மனதையும் உடம்பையும் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கல்யாண வீட்டில் அழுது கொண்டிருப்பது எத்தனை அசெளகரியமோ அது போல சாவு வீட்டில் சிரித்துக் கொண்டிருப்பது அத்தனை அசெளகரியம். இந்த பூமியானது கல்யாண வீடாகவும், சாவு வீடாகவும் மாறி மாறி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கெங்கு அழ வேண்டுமோ அங்கங்கு அழுது விடுவதும், எங்கெங்கு சிரிக்க வேண்டுமோ அங்கங்கு சிரித்து விடுவதும் செளகரியமான ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு பட்டிமன்றம் பார்த்த போது நான் மிகவும் ரசித்த நகைச்சுவை ஒன்று:

மனைவி: 'இன்னைக்கு சாம்பார் வைக்கவாங்க, இல்லைன்னா ரசம் வைக்கவாங்க'

கணவன்: 'நீ ஏதாச்சும் ஒன்னு செஞ்சி வைச்சிரு, அப்புறம் பேரு வைச்சிக்கலாம்'

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். உலக உயிரினங்கள் யாவும் எப்போதும் மகிழ்ந்திருக்க நல்லதொரு வாய்ப்புதனை நல்குவாய் பரம்பொருளே.