Friday 26 December 2014

கண்டு தாழிட்டேன் - 2

அவனைக் கொன்றுவிட மனம் துடித்தது. அன்றே வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன். என்னை இரு என சொல்ல எவருக்குமே தைரியம் இல்லை. எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது. எவரேனும் நமக்குத் தேவைப்படுவார்கள் என்றுதானே நாம் கொடுமைகளை பொறுத்துக் கொள்கிறோம். கோபமாக வெளியேறினேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா கடுமையாகவே சத்தம் போட்டார். இதுக்குனு வேலைய விடுவியாம்மா, சுத்த அறிவுகெட்ட ஜென்மம் நீ என்றார். உங்களுக்கு ரொம்ப அறிவு, திட்டுறாராம் திட்டு. நீ செஞ்சது சரிதான் உனக்காச்சும் தைரியம் இருக்கே என்றார் அம்மா. காவ்யாவிற்கு போன் செய்தேன். அடியேய் உன்னைப்பத்தி கேவலமா பேஸ்புக்ல ஒருத்தன் எழுதி இருக்கான். நீ ஒரு வேசினு வேற எவனு தெரியலைடி. அந்த கௌதமன்தான் பண்ணி இருப்பான். ஏன்டீ? அவனை ஓங்கி ஒரு அறைவிட்டேன் அந்த கடுப்பில் பண்ணி இருப்பான் என்றேன். உன்ட்ட என்னடி சொன்னேன், பேசாம ஒதுங்கிப் போயிருக்கலாம்ல என்றாள். சரிடீ என சொல்லிவிட்டு போலிஸிடம் புகார் சொன்னேன். இனி வேலை தேட வேண்டும். சிறிது நேரத்தில் கௌதமன் போன் செய்தான். அந்த பேஸ்புக் ரிமூவ் பண்ணிட்டேன். புகாரை வாபஸ் வாங்கு என்றான். இணைப்புதனை துண்டித்தேன் இச்சமூகத்தில் மன்னிப்பு கிடைக்கும் என்ற தைரியம் பாவம் செய்யத் தூண்டுகிறது. சாவட்டும்.

எனது இன்னொரு தோழி சியாமளினி மூலம் வேறு ஒரு வேலை நான்கே நாட்களில் கிடைத்தது. காவ்யா அவளது எண்ணை மாற்றி இருந்தாள். எனக்கு புது எண் தரவில்லை . கௌதமன் என் மீது பெரும் வெறியில் இருந்து இருக்க வேண்டும் அவனை பலர் பேஸ்புக்கில் காறித்துப்பி விடும்படி ஒரு காரியம் செய்து இருந்தேன் தண்டனை தந்த திருப்தி எனக்குள் இருந்தது. ஆம்பள பசங்க அப்படித்தான் என சில பெண்களின் சப்பைக்கட்டு வேறு. வலி தாங்கிப் பழகியவர்கள். கௌதமன் வேலையை ரிசைன் பண்ணியதாக தகவல் வந்தது. அவன் வேறு எங்கேனும் சென்று திருந்தினால் சரி என இருந்தேன். முதல் நாள். புது வேலை. ஐ ஆம் ஶ்ரீதர் என வந்து நின்றவனைப் பார்த்ததும் என் கண்கள் காதல் கொள்ளத்துடித்தன. யுவர் ப்ரொஜக்ட் லீடர் காயத்ரி லெட் மீ இன்ட்ரடியூஸ் அவர் கொலீக்ஸ் டூ யூ. தேன் ஒலி ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்தது எனது இருக்கையில் அமர்ந்தேன். பெரிய அலுவலகம் எல்லாம் கிடையாது. ஆரம்பித்து ஒரு மூன்று வருடங்கள் ஆகி இருந்தது. எட்டு பேர் கொண்ட வேலை இடம். ஆண்கள் மூன்று பெண்கள் ஐந்து. மேலும் பத்து பேர் வீட்டில் இருந்து வேலை செய்வார்கள். மொத்தம் 18 பேர் மட்டுமே. சியாமளினி பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னைவிட பேரழகு. சிறு வயதிலிருந்து தோழி. அவள் ஒரு டாக்டர். மாதம் ஒரு முறை சந்திக்கும் வழக்கம் உண்டு. அவளிடம் நிறைய பேசுவதுண்டு. எங்கள் வீட்டு குடும்ப டாக்டர். அப்பா அம்மாவுக்கு ஏதேனும் என்றால் அவள்தான். வயது 24. மாநிறம். நல்ல உயரம்.

அவளுக்கு ஒரு காதலன் உண்டு பெயர் டாக்டர் சியாமளன். இருவரும் ஒரே கிளினிக்கில் வேலை பார்த்தனர் சியாமளனின் நண்பரின் கம்பெனிதான் நான் வேலைக்கு சேர்ந்து இருப்பது. நல்ல சம்பளம். நல்ல மனிதர்கள். ஆனால் ஶ்ரீதர்?! கௌதமன் போல இருப்பானோ என சந்தேகம் வந்தது. அடுத்தநாள் கோவிலுக்கு சென்று இருந்தேன். இந்த கோவிலுக்குப் போனதே இல்லை. அந்த கோவிலில் வயதான அம்மாவுடன் ஶ்ரீதர் நின்று இருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் வைத்தேன். தலை நிறைய மல்லிகைப்பூ நீல வண்ண சேலை என நான் ஜொலித்தேன். அம்மா, இவங்க காயத்ரி என சொல்ல அந்த அம்மா லேசாக சிரித்தார். @radhavenkat2: இந்த கோவிலுக்குத்தான் வருவீங்களா? என்றார் ஶ்ரீதர். இல்லை சார், இதுதான் முதல் தடவை. நம்ம கம்பெனிக்கு வந்ததால தெரிஞ்சது என்றேன். நல்ல சாமி என சொல்லிவிட்டு கும்பிட்டு வாங்க என்றார். அந்தம்மா கணவனை இழந்தவர் என்பதானா அடையாளம் இருந்தது.
சாமியை வணங்கினேன். கோவிலை சுற்றி வந்தபோது ஶ்ரீதர் அங்குதான் நின்றார். என்ன சார் இன்னும் இங்கேயே நிற்கறீங்க என்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தான் என்றார். வரேன்மா என சொல்லி நடந்தேன்.

சியாமளினியை அன்று சந்தித்து பேசினேன். கௌதமன் காவ்யா ரகுராமன் குறித்து சொன்னதும் அவளின் ஒரே வார்த்தை தான் பதில். உலகம். நீ தப்பு பண்ணி இருக்கியா என்ற என் கேள்விக்கு இல்லை என்றே சொன்னாள். சியாமளன் அத்தனை நல்லவரா என்றேன். சிரித்தாள். உடல் மீதில் ஆசை எல்லோருக்கும் இல்லை. என்ற பதில் எனக்குப் பிடித்து இருந்தது. கௌதமன் மீது நான் கொண்டது உடல் மீதான காதல். ஶ்ரீதர் மீது கொள்ளத்துடிப்பது மனம் மீதான காதல். காயத்ரி  எல்லா ஆண்களும் மோசம் கிடையாது சின்ன சின்ன சபலம் இருக்கும், ஆனா அறிவுள்ளவங்க அதை கட்டுபடுத்திருவாங்க சந்தேகப்படு, எல்லாரையும் இல்ல என்றாள். சியாமளனின் அறையை எட்டிப் பார்த்தேன் எனக்கொரு சியாமளன் வேண்டும் என நினைத்தேன் அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கௌதமனைப் பார்த்து விலகி நடந்தேன். காயத்ரி நில்லுடி என அசிங்க அசிங்கமாக பேசினான். வேடிக்கைப் பார்த்தவர்கள் அதிகம். நான் நிற்காமல் நடந்தேன். சில நிமிடத்தில் போலீஸ் வந்தது. கௌதமனை அடித்து உதைத்தார்கள். சிலர் திருந்த முனைவதே இல்லை. பெண்ணை கேவலமாகப் பேசும் கொடிய நாக்கு தானாக அறுந்து விழவேண்டும் என எனது வேண்டுதல் பலித்துவிடுவதில்லை என்றபோதும் வேண்டிக்கொண்டேன் வாழ்வை இயல்பு இயல்பற்றது என பிரித்துக்கொள்ளலாம். இயல்பாக இருப்பது கடினம். இருக்கிறதை விட இல்லாத ஒன்றின் மீது அதிகப்பற்று வரும் அதை அடைய மனம் போராடும் அந்த போராட்டம் வலியாக உருவெடுக்கும். வலி மரணத்தை உண்டுபண்ணும். (தொடரும்) 

Monday 22 December 2014

கண்டு தாழிட்டேன் - 1

அவள் திட்டிக்கொண்டே இருந்தாள். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏன்டீ உனக்கு அவனைப் பிடிச்சா காதலி, என்னை எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என கொஞ்சம் அதிகமாகவே சத்தம் போட்டுவிட்டேன். அந்த மூஞ்சிய எவன் லவ் பண்ணுவான், அவன் சரியில்லை அதனால்தான் சொல்றேன். சும்மா கத்தாதே என்றாள். உன் மூஞ்சிய விட அவன் நல்லா மூக்கு முழியுமாத்தான் இருக்கான், உனக்கு பொறாமை அவன் உன்னை கண்டுக்கலைனு என நான் சொன்னதும் உன்னைத் திருத்த முடியாதுடி என என்னைத் திட்டிவிட்டுப் போனாள். என் பெயர் காயத்ரி. வயது 23. மென்பொருள் வேலை. அதோ போகிறாளே அவள் காவ்யா வயது 23. அதே வேலை.

ஒரே கல்லூரியில் படித்தோம் என்பதுதான் எங்களுக்கான நட்பு. நான் பேரழகி, அவள் கொஞ்சம் பேரழகி. எனக்கு திமிர் அதிகம். அவளுக்கு கொஞ்சம் திமிர். கல்லூரியில் அவள் ரகுராமை காதலித்தாள். முதல் வருடத்திலேயே காதல். ஆனால் கடைசி வருடத்தில் காதல் கைகூடவில்லை. என்னையும் சிலர் காதலித்தார்கள் அந்த ரகுராம் என்னை காதலிப்பதாக மூன்றாம் வருட இறுதியில் சொன்னதை நான் காவ்யாவிடம் சொன்னதால் அதற்குப்பின் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது  நான் ரகுராமை உடனடியாக நிராகரித்தேன். என்னை முதலில் காதலிக்க வக்கில்லாதவன் எதற்கு என்னை இரண்டாவதாக காதலிக்க வேண்டும். காவ்யா கசந்தாளோ?

காவ்யா அவனோடு சண்டை போடாத நாளே கிடையாது. அதிலிருந்து இந்த காதல் பையன் எல்லாம் வெறுக்கத் தொடங்கி இருந்தாள். நான் முதன் முதலில் காதல் என மனதில் உணர்ந்தது இதோ இந்த கௌதமன் தான். என்னை விட ஒரு வயது மூத்தவன். இங்குதான் வேலை. பார்த்தவுடன் என் மனம் பற்றிக்கொண்டது. இந்த காவ்யாவை அவன் காதலிக்கக்கூடாது என நான்தான் வலியப் போய் கைகொடுத்து என் காதலை கண்களால் வெளிப்படுத்தினேன். அட்டகாசமான முகம் கட்டான உடல். வசீகரித்தான். காவ்யா காதலித்து விடக்கூடாது என அவளிடம் கௌதமனை நான் காதலிப்பதாக முதலில் சொன்னபோது சிரித்தாள். இருவரும் வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது

கௌதமன் இரண்டு வருடங்களாக இங்கே வேலை செய்கிறான். ஆறு மாதங்கள் சும்மா இருந்தவள் என்னை காதலிக்கக்கூடாது என சொல்ல என்ன காரணம் என யோசித்தேன். ஆனால் அவளை பொறாமைப் பிடித்தவள் என திட்டிவிட்டேன் கோபமாகப் போய்விட்டாள். அன்று கௌதமனை சந்தித்தேன். கௌதம் டிட் யூ ஸ்பீக் டூ காவ்யா? என்றேன். நோ என்றான். எனக்கும் அவனுக்குமான காதல் வேலை இடத்துக்குத் தெரியாது. வேலையில் இருப்பவர்கள் யாரும் கௌதமனை குறை சொன்னது இல்லை. இந்த காவ்யா!

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவே இல்லை கௌதமன் என்னை மட்டுமே காதலிக்கிறானா என எப்படி உறுதி செய்வது? குழப்பம் கண்களைச் சுற்றியது. அடுத்தநாள் கௌதமனிடம் எதேச்சையாகத்தான் கேட்டேன். ஆர் யூ சஸ்பிசியஸ்? என்றான் வேறு கேட்க மனமே இல்லை நோ ஜஸ்ட் என சொன்னேன். அன்று இரவு கௌதமன் எனது மொபைலுக்கு அழைத்தான். ஒய் டிட் யூ ஆஸ்க் மீ தெட் என்றான். ஒண்ணுமில்லை என சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை, காவ்யா நீ நல்லவன் இல்லை என சொன்னதாக சொன்னாள் என்றேன். அசிங்கமாக காவ்யாவைத் திட்டிவிட்டு டோன்ட் லிஸன் டூ கெர் என வைத்துவிட்டான். காவ்யாவை அவன் தகாத வார்த்தை சொன்னது எனக்கு வலித்தது. காவ்யாவிற்கு போன் செய்தேன் என்னடி கௌதமன் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா என்றேன். நீ அவனை காதலிக்காதே என்றாள். ஏன்டீ இப்படி மொட்டையா சொல்ற, ரகுராமன் மாதிரி நடந்துகிட்டானா என்றேன். அவன் பேச்சையே பேசாத, நீ காதலிக்காத, அவனை விட்டு விலகிருடி என அவள் சொன்னதும் எரிச்சலை உண்டுபண்ணியது அவன் நல்லவனில்லையெனில் என்ன காரணம் சொல்லித்தொலைத்தால் என்ன என மனதில் எண்ணிக்கொண்டு போனை வைத்தேன்

அடுத்தநாள் கௌதமன் என்னோடு பேசவில்லை. என்னைத் தவிர்த்தான், நான் தவித்தேன். சொல்லுடி எதுக்கு காதலிக்க வேணாம்னு சொல்ற என மதியம் கேட்டேன். விளக்கம் சொல்ல முடியாதுடி, அவன் நல்லவனில்லை என்றாள். இனி காவ்யாவிடம் கேட்கவே கூடாது என முடிவு செய்தேன். கௌதமன் அன்று மாலையில் என்னிடம் காவ்யாவைப் பற்றி படு கேவலமாக பேசினான். அவனை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது ஆனாலும் உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தது. அவளது நட்பு பற்றிய அக்கறை எனக்கு பெரிதில்லை. கௌதமன் எனக்கு மட்டும் எனும் என் திமிர் தாண்டவம் ஆடியது. அவளது ரகுராமன் பற்றிய காதலை சொன்னதும் காவ்யாவை சகட்டுமேனிக்குத் திட்ட ஒய் ஆர் யூ சோ ஆங்கிரி  ஆன் கெர் என்றேன். சீ இஸ் எ யூசர் லெட் அஸ் நாட் டாக் அபவுட் தெட் எனத் திட்டினான். அவன் கரம் பற்றினேன். சீ இஸ் மை க்ளோஸ் ப்ரண்ட் என்றேன். சட் அப் நவ் என்றான். அதிர்ந்தேன். அவளைப் பற்றி பேசினாலே எரிந்து விழுந்தான். அன்றோடு காவ்யா பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தேன். காவ்யாவிடம் கௌதமனைப் பற்றி பேசுவதும் இல்லை. சில மாதங்கள் போனது. காவ்யா வேறு வேலை தேடிச் சென்றாள். என்னடி என்னாச்சு எனக் கேட்டபோது சிலமாதங்கள் முன்னரே கௌதமன் தன்னிடம் தவறாக பலமுறை நடக்க முயன்றான் நான் மறுத்துவிட்டேன் உன்னை எச்சரித்தேன். நீதான் அவனது காதல் வலையில் வீழ்ந்து என்மீது பொறாமை கொண்டாய். நான் எங்கே உண்மையை சொல்லி விடுவேனோ என மிரட்டினான். பயந்து வேலையை விட்டுப்போவது போல அவனிடம் சொல்லிவிட்டு வேறு வேலைக்குச் செல்கிறேன். நீ ஒரு ஓட்டவாய், அன்று சொல்லி இருந்தால் அவனது சட்டையைப் பிடிப்பாய்.

என் நிலை என்ன ஆவது? நீ ஆண்களிடத்தில் எச்சரிக்கையாகவே இரு. அந்த ரகுராமன் நான் காதலிப்பதை சாதகமாக்கிக் கொண்டு என்னை அடைய முயற்சித்தான், முட்டாள், நான் மறுத்ததும் உன்னிடம் காதலை சொல்லி இருக்கிறான், நீ என்னிடம் உளறிவிட்டாய். அவனோடு தினமும் சண்டையிட்டேன். என் காதலை அவன் ஏற்கவில்லை. அவனைப் பற்றி அன்று உன்னிடம் சொல்ல மனமில்லை. ஒரே கல்லூரி. இங்கு வந்தால் இந்த கௌதமனின் பார்வை என் மீதே இருந்தது. காமுகப் பார்வைடி அது. நீயோ முந்திக்கொண்டு காதலிப்பதாக சொன்னபோது சிரித்தேன். உன்னை அடைய நினைத்தானாடி? என்றாள். கண்களில் நீர்்நிறைய ஆம் கேட்டான்டி முடியாதுன்னேன்

அதான் என்கிட்ட கேட்டு இருக்கான். நம்மைப் பார்த்தா எப்படிடீ இந்த பசங்களுக்கு இருக்கும்? என பொரிந்து தள்ளிவிட்டாள். சில விசயங்களை பேசாது போனது எத்தனை தவறு என காவ்யாவிடம் சொன்னேன். இல்லடி நீ என்னை நம்பற சூழலில் இல்லை. என் மேல உனக்கு நட்பு இருந்தாலும் நமக்கே உரித்தான பொறாமை உன்னோட திமிர் உனக்குத் தந்தது. நீயும் வேற வேலை தேடு, இனி நாம பிரிஞ்சிரலாம் என்றாள். அவனை நம்பாதே. அவள் கண்களில் கண்ணீர் இருந்தது. எனக்கு அவனை நம்பாதே. எனக்கு கை கால்கள் உதறல் எடுத்தது அன்று என் அப்பாவிடம் நேரடியாகவே கேட்டேன். ஏன்ப்பா பையனுங்க எல்லாம் இப்படித்தானா? என ரகுராமன் கௌதமன் கதையை சொன்ன மறுகணம் சில லூசுக அப்படித்தான்மா என்றார் நாமதான் கவனமாக இருக்கணும் என்றவரிடம் சரிப்பா என அம்மாவிடம் போய் அதே கதையை சொன்னேன் எடுபட்ட பயல்க பொட்டபிள்ளைக வாழ்க்கையோட விளையாடறதே பொழப்பா வைச்சிட்டுத் திரியறாணுங்க எனத் திட்டினார். ஆண்கள் மோசமானவர்களா? ஒரு ரகு ஒரு கௌதமன். வேறு யார் என யோசிக்கையில் வாழ்வில் கண்ட ஆண்கள் சிலரின் நடவடிக்கைகள்   அபத்தமாகத் தெரிந்தது. புரியாமல் இருந்து இருக்கிறேன். வெட்கமே இல்லாத சீவன்கள்.

கௌதமனிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்க இயலவில்லை. அங்கிருந்த பெண்கள் சிலரிடம் கௌதமனைக் குறித்து கேட்டபோது டோன்ட் டாக் நான்சென்ஸ் எனத் திட்டி  விட்டதோடு என்னைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டார்கள்்எனக்கு தாங்க முடியாத எரிச்சல் எல்லாம் அவனிடம் சொல்ல வெலவெலத்துப் போனான் ஐ ஆம் நாட் தெம் என அவனை ஓங்கி அனைவர் முன்னிலையில் அறைந்தேன். திஸ் இஸ் பார் காவ்யா எனச் சொன்னதும் யூ என கையை ஓங்கினான். அங்கிருந்த பெண்கள் சிலரது முகம் மகிழ்ச்சி களை கொண்டது. இப் யூ டச் மீ, யூ வில் பி டெட் என்றேன். அவமானத்தில் வெளியே ஓடினான். எனக்கு ஏமாற்றப்பட்ட ஆங்காரம். (தொடரும்)




Thursday 11 December 2014

வெட்டித் தருணங்கள் - 2

அன்று நிறைய கனவு கண்டேன். எனக்கான ஒரு லேப்டாப். இரவு முழுக்க விழித்து இருந்தேன். அடுத்தநாள் நானும் என் அப்பாவும் கடைக்குப் போனோம். விதவிதமாக லேப்டாப் வைத்து இருந்தார்கள்.

"எதுனு தெரியுமா?"

"டோசிபா ஸ்டேடிலைட்"

"அப்ப போய் எடு, எதுக்கு பிராக்கு பாக்குற"

எனக்கு எதை தேர்ந்தெடுப்பது என சற்று குழப்பம் அடைந்தேன். நண்பன் சொன்னதை நம்பலாமா என புரியாமல் திகைத்தேன்

"என்ன மசமசனு நிற்கிற"

"இதோ எடுத்துட்டு வாரேன்"

அங்கே இருந்த விற்பனை பையனிடம் மேலும்  விசாரித்து சரியாக ரூபாய் 30000க்கு ஒரு லேப்டாப் வாங்கினேன்.

"எனக்கு ஒரு நல்ல போன் வேணும்பா"

"இந்த போன் நல்லாதான இருக்கு"

"நிறைய ஆப்ஸ் இதில இல்லை"

இது உடையட்டும், வேற வாங்கலாம்"

லேப்டாப் வாங்கிய கையோடு நேராக மாரியம்மன் கோவிலுக்குப் போனேன். லேப்டாப் பூஜை பண்ண இல்லை. என்னிடம் சவால் விட்டவன் அங்கு இருந்தான், அவனுக்கு காட்டவே சென்றேன். வீடு வந்ததும் லேப்டாப் திறந்தேன். புதிய உலகம் எனக்கானது. இரண்டு அக்காக்கள், வேண்டாம்
.
இன்டர்நெட் கனெக்‌ஷனுக்கு போன் பண்ணி சொன்னேன். டாடா மெமரி கார்டு வாங்க சொன்னார்கள். எனக்கு வீட்டில் இணைப்பு வேண்டும் என அடம்பிடித்தே போன் செய்தேன். இன்னும் சில நாட்களில் இணைப்பு தருகிறோம் என சொன்னார்கள்.

சிவகுமாருக்கு போன் செய்தேன்.

"டேய் லேப்டாப் வாங்கிட்டேன்டா"

"என்ன லேப்டாப்"

"டோசிபா"

"இன்டர்நெட்?"

"ஏர்டெல்"

"பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் அப்புறம் இன்ஸ்டாக்ராம் எல்லாம் ஆரம்பிடா"

"அதெல்லாம் எதுக்குடா"

"நீ வெளி உலக ஆட்களோட பழக வேணாமா? உங்க வீட்டுல யார்கிட்டயும் இல்லையா?"

"இல்லைடா"

"இன்னைக்குத்தான லேப்டாப் வாங்கி இருக்க, ஒண்ணொன்னா சொல்றேன். மொபைலே காலேஜுக்கு வந்தப்பறம் வாங்கி இருக்க"

"கிண்டல் பண்ணாத"

"நாளைக்கு லிங்கா பார்க்க வாடா"

"என் தலைவன் படம் மட்டுமே பார்ப்பேனு உனக்குத் தெரியாதா?"

"யாரு அணிலா?"

"அப்பா வரார்,பிறகு பேசறேன்டா"

அப்பா ஒன்றும் வரவில்லை. அந்த நாயை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது. சிவகுமார் நாய் கல்லூரியில் பழக்கம். பெரிய பணக்காரன். எல்லோரிடம் திமிராக பேசுவான். கத்தி படம் வெற்றி பெற்றது அவனுக்கு வயிற்றெரிச்சல். தான் யாருக்கும் ரசிகன் இல்லைனு சொல்வான். மடையன், அணிலாம். நாளை அவனை வயிற்றில் ஓங்கி குத்து விட வேண்டும்.

(தொடரும்)

Monday 8 December 2014

நிலத்திற்கடியில் வாயுத்தொல்லை - மீத்தேன்

பூமி உருவானபோது பூமியில் ஹைட்ரஜனும் ஹீலியமும், மீத்தேனும், அம்மோனியாவும், நீராவியும் கொஞ்சம் நைட்ரஜனும், கரியமிலவாயும் நிறைந்தே இருந்தன. சிறிது காலங்களில் ஹைட்ரஜனும், ஹீலியமும் பூமியின் வளிமண்டலத்தில் இருந்து நிறைய வெளியேறிப் போனது.

விண்வெளி கற்கள், கோமெட்கள் எல்லாம் தண்ணீர், அம்மோனியா, மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு இன்னும் பிற வாயுக்களை பூமியில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருந்தன. கொதிநிலையில் இருந்த பூமி சற்று குளிர்ச்சி அடையத் தொடங்கிய காலம் அது.

மீத்தேன்  நீராவியுடன் இணைந்து வேதிவினை புரிந்து வளிமண்டலத்தில் நிறைய கரியமில வாயுவை, ஹைட்ரஜனை உண்டாக்கியது. பூமியில் அப்போதெல்லாம் நிறைய எரிமலைக் குழம்புகள் வெடித்துச் சிதறும். அப்படி வெடித்துச் சிதறிய எரிமலைக் குழம்புகளாலும் கரியமில வாயு, பூமியின் வளிமண்டலத்தில் அதிகம் ஆனது. இதெல்லாம் நடந்தது கிட்டத்தட்ட நான்கு பில்லியன் ஆண்டுகள் முன்னர்.

நாட்கள் ஆக ஆக நீராவி குளிர்ந்து நீர் ஆனது. நிறைய மழை பெய்து கடல் உருவானது. அப்படி உருவான கடலில் இந்த அம்மோனியாவும், கரியமில வாயுவும் மூழ்கி புதிய மூலக்கூறுகள் உருவாகின. கிட்டத்தட்ட மூன்றரை பில்லியன் ஆண்டுகள் முன்னர் பாக்டீரியாக்கள் உருவானதாக சொல்லப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் வளிமண்டலத்தில் மீத்தேன், அம்மோனியா கரியமிலவாயு எல்லாம் கணிசமான அளவில் குறைந்து போயின. இந்த பாக்டீரியக்களில் சில கரியமில வாயுவையும் ஹைட்ரஜனையும்  இணைத்து மீத்தேன் மற்றும் தண்ணீர் உண்டாக்கியது. இந்த வேதிவினை இந்த பூமியில் முன்னரே வேறு விதமாக நடந்தது என்றே குறிப்பிட்டு இருந்தோம். எந்த மீத்தேன் அதிக வெப்பத்தினால் நீராவியுடன் இணைந்து கரியமில வாயு, ஹைட்ரஜன் உண்டு பண்ணியதோ அதே மீத்தேனை இந்த பாக்டீரியாக்கள் உண்டு பண்ணிக் கொண்டு இருந்தன. அப்போது ஆக்சிஜன் குறைவாக இருந்த காலம்.

பின்னர்  நாட்கள் நகர நகர நைட்ரஜன் வளிமண்டலத்தை ஆக்கிரமித்து கொண்டது. அதற்குப் பின்னர் பாக்டீரியா, பாசி, தாவரங்கள் எல்லாம் கரியமில வாயு உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடத் தொடங்கிய காலம் வந்ததும் கரியமில வாயு நமது வளிமண்டலத்தில் முற்றிலும் குறைந்து போனது. ஆக்சிஜன் நமது வளிமண்டலத்தில் நிறையத் தொடங்கியது. அதிக குளிர்ச்சி ஏற்பட கொஞ்ச நஞ்சமிருந்த மீத்தேன் எல்லாம் வளிமண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டு பனிக்கட்டி வடிவத்தில் மீத்தேன் உருமாறிக் கொண்டது.

இந்த பூமியில் ஆக்சிஜன் 30 சதவிகிதம் இருந்த காலம் உண்டு. அதற்குப் பின்னர் ஒரு மோசமான விளைவுகளால் ஆக்சிஜன் 12 சதவிகிதமாக குறைந்து கரியமில வாயு அதிகரிக்க நிறைய உயிரினங்கள் இறந்து போயின. பின்னர் இந்த தாவரங்களின் உதவியால் ஆக்சிஜன் தற்போது 21 சதவிகிதமும், கரியமில வாயு 0.04 சதவிகிதமும் நைட்ரஜன் 78 சதவிகிதமும் மற்ற வாயுக்கள் ஒரு சதவிகிதமும் உள்ளது. நாமும் சிறப்பாக வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் இந்த மீத்தேன், கரியமில வாயு எல்லாம் எங்கே போயின? எவரேனும் வெளியில் இருந்து வந்து திருடிப் போனார்களா என்றால் அதுதான் இல்லை. எல்லாமே இந்த பூமியில் பதுங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த பூமி பாறைகளால் ஆனது. அந்த பாறைகளுக்குள்  இந்த வாயுக்கள் சிக்கிக் கொண்டு இருக்கின்றன. நிலக்கரி வடிவில் இந்த வாயுக்கள் ஒளிந்து கொண்டன. மனிதனுக்கு நிறைய அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கத் தொடங்கியதுதான் பெரிய பிரச்சினை.

நிலக்கரியாக மாறி இருந்த இவைகள் எல்லாம் நாம் இந்த நிலக்கரியை எரிக்கத் தொடங்கியதும் வெளியேறத் தொடங்கின. கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு பெருமளவில் வெளி வந்தன. நமது தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்த வாயுக்களின் அளவை நமது வளிமண்டலத்தில் நிரப்பிக் கொண்டு வருகிறோம்.

இந்த பூமியின் வெப்பநிலையை மாற்றக்கூடிய வாயுக்கள் என கரியமில வாயுவும், மீத்தேனும் என குறிப்பில் ஏற்றி வைத்துவிட்டார்கள். இந்த மீத்தேன் அதிலும் வெப்பநிலையை 23 மடங்கு கரியமில வாயுவை விட அதிகரிக்கும் சக்தி கொண்டது என கண்டறிந்து உள்ளார்கள்.

மீத்தேன்? கொடுமையானதா? நச்சு வாயு என்றெல்லாம் எவரும் இதனை குறிப்பிடவில்லை. ஆனால் நச்சுத்தன்மை வேறு வழியில் உண்டு பண்ணக்கூடியது. மீத்தேன் ஹைட்ரோகார்பன் வகையறாவை சேர்ந்தது. நிறைய சேர்க்கப்பட்ட கழிவுகள், அரிசி உபயோகிக்கும் நிலங்கள், மாட்டு சாணங்கள் என இந்த மீத்தேன் நீக்கமற நிறைந்து இருக்கிறது. பெட்ரோல், டீசல், கெரசின் போன்ற வகையில் மீத்தேன் ஒன்று. எப்படி பெட்ரோல், டீசல் எரிவாயுவாக பயன்படுகிறதோ அதைப்போல இந்த மீத்தேன் எரிவாயுவாக பயன்படக்கூடியது. எரிக்கும் போது பெட்ரோல், டீசலை விட இந்த மீத்தேன் அதிக அளவில் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் சேர்ப்பதில்லைதான். ஆனால் இதுவெல்லாம் போக பாறைகளுக்குள் இந்த மீத்தேன் பதுங்கி இருக்கிறது. நிலக்கரிச்  சுரங்கத்தின் பெரும் சவால் இந்த மீத்தேன். உலகில் இந்த மீத்தேன் வாயுவை வெளியேற்றியே பின்னரே நிலக்கரி எடுப்பது வழக்கம்.

இந்த மீத்தேனால் வேறு என்னதான் பிரச்சினை?

1. இந்த மீத்தேன் வெடித்து சிதற வைக்கும் வல்லமை கொண்டது. எளிதில் தீப்பற்றக் கூடியது.
2. இந்த மீத்தேன் தண்ணீரில் கலந்து கலப்படம் உண்டு பண்ணினால் மரணத்தை கூட உண்டுபண்ணும்.
3. இந்த மீத்தேன் அதிக அளவில் வெளியேறினால் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் விபரீத விளைவுகள்  ஏற்படும். மனிதர்களுக்கு தலைவலி மயக்கம் போன்றவை ஏற்படும்.
4. இந்த மீத்தேன் பூமியை வெப்பம் அடைய செய்யும், காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.
5.இந்த மீத்தேன் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கேடு தரக்கூடியது.
6.இந்த மீத்தேன் கார்பனை உள்ளே வெளியே என மாற்றும் வல்லமை கொண்டதால் தாவரங்களுக்கும், தாவரங்கள் வளரும் நிலங்களுக்கும் பிரச்சினை உண்டுபண்ணக் கூடியது.

மீத்தேன் ஆக்சிஜனை மெல்ல மெல்ல மென்று விழுங்கினால் என்ன ஆகும் என ஆக்சிஜன் சுவாசித்து வாழும் நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இப்போது ஒரு விவசாய நிலம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அங்கே நிலத்திற்கு பல அடி தூரத்தில் கிரானைட் கற்கள் இருக்கின்றன. எவருக்கும் இந்த கிரானைட் கற்கள் விபரம் தெரியாது. ஒருமுறை கிணறு வெட்ட அந்த நிலத்தை தோண்ட உள்ளே கிரானைட் கல் இருப்பது தெரிய வருகிறது என வைத்துக் கொள்வோம். விவசாய நிலம் வைத்திருப்பவர் என்ன செய்வார்? அந்த நிலத்தை எல்லாம் தோண்டி கிரானைட் கல் எடுக்கவே முற்படுவார். ஆக அங்கே விவசாய நிலம் இனி கிரானைட் பூமியாக மாறும். அதோடு சுற்றுப்புறம் எல்லாம் மாசுதன்மை அடையும்.

இதே பிரச்சினைதான் இப்போது தமிழகத்தில் பெருமளவில் மீத்தேன் பிரச்சினை குறித்து பேசப்பட்டு வருகிறது. மீத்தேன் மூலம் எரிவாயு நமக்கு கிடைக்கும். எவர் இல்லை என்று சொன்னது. ஆனால் அப்படி மீத்தேன் வாயுவை எடுக்கும் இடமானது எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை வேண்டாமா? என்பதே மக்களின் உள்ளக் குமுறல்.

எதற்கு எடுத்தாலும் மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால் மக்கள் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்றே அரசு கேட்கிறது. முதலில் பாதுகாப்பு அவசியம். கல்குவாரிகள், மணல் லாரிகள் என பூமியை சுரண்டித் திண்ணும்  தொழில் முதலைகளின் வயிற்றுப் பசிக்கு ஏழைகளின் பாமர மக்களின் வயிற்றில் வயலில் அடிக்கத்தான் வேண்டுமா? இந்த தொழில் முதலைகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பரந்த சாலைகள் வேண்டும் என பல விவசாய நிலங்கள் பறிபோயின. அதாவது ஒரு எல்கையோடு நின்று போனது. எவரும் நிலத்தைத் தோண்டி சாலை போடவில்லை.கட்டிடங்கள் எழுப்பி இன்னும் பல விவசாய நிலங்கள் பறிபோயின. நிலக்கரி சுரங்கங்களுக்கென இன்னும் பல நிலங்கள் பறிபோயின.
இப்போது இந்த மீத்தேன் வாயு.

மீத்தேன் வாயுவை எடுக்கும்போது 1 சதவிகித மீத்தேன் கூட வளிமண்டலத்தில் கசிந்தால் அதன் விளைவு விபரீதம் என்கிறார்கள். மீத்தேன் வளிமண்டலத்தில் கசிவதை தடுத்த நிறுத்த வேண்டும் என பல நாடுகள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் மீத்தேன் இருக்கிறதா என ஒரு நாடு அதுவும் விளைநிலங்கள் அருகில் திட்டம் தீட்டுவது என்னிடம் தங்க ஊசி இருக்கிறது, கண்ணில் குத்திக் கொள்கிறேன், அது தங்கம் கண்ணை ஒன்றும் செய்யாது என சொல்வது போல் இருக்கிறது.

ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்னர் அது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கிடையாது. பெரிய அளவில் பேசி முடிவு எடுக்க வேண்டியது. அதன் பின்னர் மக்களை மிரட்டி அதை சாதிக்க வேண்டியது. கூடங்குளம் அணு உற்பத்தி முதற்கொண்டு மக்களின் பலவீனத்தினை தனக்கு பலமாக அரசு பயன்படுத்தி வருகிறது.

பூமிக்குள் எப்படி செய்வார்கள், என்ன செய்வார்கள் என்பதெல்லாம் பாமர மக்களுக்கு புரியாது. புரியவும் வேண்டாம். போபாலில் விஷ வாயு தாக்கி இறந்தவர்கள் அதிகம். ஈவு இரக்கமற்ற தன்மையில் நடந்து கொள்ளும் அதிகாரிகள். ஒரு பாலத்தை ஒழுங்காக கட்டத் தெரியாத பொறியியல் வல்லுநர்கள்.

மக்கள் போராடுவார்கள். பின்னர் அடங்கிப் போய்விடுவார்கள். நமது திட்டம் செயல்படும் எனவும் பணம் தந்தே அடிமைபடுத்தி விடலாம் எனவும் எண்ணம் கொண்டு இருப்போர் பலர்.

Natural gas comprises 95% of methane என நமது வாயை மூடிவிடவே எல்லா முயற்சிகளும் நடக்கும். இந்த பூமி எல்லா பிரச்சினைகளையும் சமாளித்தே வந்து இருக்கிறது. காவேரியும் சமாளிக்கும், சமாளிக்கட்டும்.



Friday 5 December 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 23

பகுதி 22  இங்கே

அன்று இரவும் கோரனைத்  தேடி சென்றேன். அவனும் அவனது அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

''இனி அவனை ஒன்னும் பண்ண வேண்டாம், ஊரை விட்டே ஓடிட்டான்ல அது போதும்''

''ம்ம்''

''நாளைக்கு காலேஜுக்குப் போ''

''முருகேசு இருக்கான்''

''அவன் கிடக்கான், அவன் கிட்ட எதுவும் சொல்லிக்கிற வேணாம்''

''ம்ம்''

இனி அங்கே நிற்பதில்லை என வீடு நோக்கி நடந்தேன். கோரன் எதுக்கு ஆசிரியரை கொல்ல  முயற்சிக்க வேண்டும், ஆசிரியர் எதற்கு ஊரை விட்டே ஓட வேண்டும் எனும் கேள்விகளுடன் வீடு சேர்ந்தேன்.

''காயூ, வாத்தியாருக்கும் கோரன் குடும்பத்திற்கும் ஏதோ  தகராறு இருக்கு போல''

''அதுக்கு என்ன இப்போ, நீ கோரனை  பத்தி பேசறது நிறுத்து, நான் படிக்கணும்''

''படி, உன்னை யாரு பிடிச்சிட்டு இருக்கா''

''ஏன்  பிடிச்சித்தான் பாரேன்''

''கத்துவ, அதானே''

''பிடிக்கிறதுக்கு எல்லாம் யாரும் கத்தமாட்டாங்க''

''உன் அக்காவைப் பார்க்க போலாமா''

''எதுக்கு இப்ப பேச்சை மாத்துற, உனக்கு அவளைப் பார்க்க ஆசை. அப்படித்தானே''

''அவளை எதுக்குப் பார்க்கணும், எனக்கு உன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை''

''சும்மா சொல்லாதே''

''நிசமாவே இல்லை, உன் அக்காவைப் பார்த்துட்டு வரலாம்னு தான் சொன்னேன்''

''சரி போலாம்''

காயத்ரிக்கு கோரன் பற்றிய பேச்சு பிடிக்காமலே இருந்தது. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனோம். கோரன் வந்து இருந்தான்.

''கோரன் உன்கிட்ட பேசணும்''

''தேவை இல்லை''

விறுவிறுவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்குச்  சென்றான். சிறிது நேரம் அங்கிருந்தவன் வெளியில் வந்தான்.

''கோரன் நில்லு''

''உயிரோட நீ இருக்கணுமா  வேணாமா?''

''என்ன ஆச்சு உனக்கு''

''என்னோட விசயத்தில தலையிடாதே''

''நீ எதுக்கு இப்படி நடந்துக்கிற''

கத்தியை எடுத்துக் காட்டினான். நான் மிரண்டு போனேன்.

''ஒரே சொருகு, குலை வெளியே வந்துரும்''

நான் அங்கிருந்து நகன்றேன். அவன் கல்லூரியில் இருந்து வெளியே போனான். நான் கல்லூரி முதல்வர் அலுவலகம் சென்றேன்.

''கோரன் எதுக்கு வந்தான்''

'' வேலையை விட்டுப் போன பொரபுசர் பத்தி விசாரிச்சான், தெரியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன்''

அவரிடம் மேற்கொண்டு கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என சொன்னார்.

எனக்கு வகுப்பில் அவன் அருகில் சில நாட்களாக இல்லாதது ஒரு மாதிரி இன்றும் இருந்தது. அவன் இருந்தால் ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பான்.

திடீரென கோரன் வகுப்பில் நுழைந்தான்.

''முருகேசு, வெளியே வாடா''

வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர் அவனை நோக்கி நீ உள்ள வர வேண்டியது தானே என்றார். உன் வேலையை மட்டும் பாரு என அவரை நோக்கி கத்தியவன் என்னை நோக்கி வாடா என கத்தினான். நான் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

வகுப்பில் இருந்த சில மாணவர்கள் எழுந்து வேகமாக அவனை மடக்கிப் பிடித்து அவன் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்தார்கள். அந்த கத்தியை வாங்கிய சோபன் கோரனை  நோக்கி இதுதான் நீ படிக்கிற லட்சணமா எனக் கேட்டான். ஆமாம், ஒரு வாத்தியார் ஒழுங்கா இல்லைன்னா அப்படித்தான் ஆகும், எனக்கு என்ன நடந்தது தெரியுமா?

மொத்த வகுப்பும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது. கோரன் தன கதையை சொல்ல ஆரம்பித்தான்

(தொடரும்)