Showing posts with label நுனிப்புல் பாகம் 3. Show all posts
Showing posts with label நுனிப்புல் பாகம் 3. Show all posts

Monday 7 November 2016

நுனிப்புல் பாகம் 3 10

நுனிப்புல் பாகம் 3 9

இந்த மாதவி குறித்து தனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பாரதியை மிகவும் ஆட்டி வைத்தது. இவ்வுலகில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவியல் உலகம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் என்ன நடக்கும் என்பதை ஓரளவு தீர்மானிக்க இயலும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

ஒரு வாரம் மேல் ஆகியும் மாதவி எவ்வித தொடர்பும் இன்றி இருந்தாள். பாரதி கொஞ்சம் கொஞ்சமாக மாதவி குறித்த நினைவுகளில் இருந்து மீண்டு கொண்டு இருந்தாள். எவரையும் சந்திக்காமல் கல்லூரி, வீடு என ஒரு வாரம் கழிந்து போனதை பாரதி எண்ணிக்கொண்டு இருந்தாள்.

''பாரதி, உன்கிட்ட பேசனும்''

சுந்தரன் தன்னைத் தேடி வருவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பறவைகளையோ, விலங்குகளையோ மரம் தேடிச் செல்வது இல்லை.

''என்னடா பேசனும்?''

''பிரபா என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டா, வேலை கூட மாறிப் போயிட்டா''

''போகாம என்ன செய்வா, திமிர் பிடிச்சி அலைஞ்சா என்ன செய்வா''

''என்னை நீ காயப்படுத்தாத பாரதி''

''ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ. நம்மை பாதுகாத்து நமக்கு அடைக்கலம் தந்து வாழ வைக்கிற மனுசங்களுக்கு எப்பவும் நன்றியுள்ளவங்களா இருக்கனும், அதை நீ முதலில் கத்துக்கோ''

''எனக்காக நீ பிரபா கிட்ட பேச முடியுமா?''

''அவகிட்ட நா எதுக்கு உனக்காக பேசனும்''

''நான் உன்னை லவ் பண்றேன் அப்படினு நினைக்கிறா''

''அதுக்கு நா என்ன பண்ண முடியும், தேவை இல்லாம பிரச்சினை பண்ணாத''

''நீ வந்து நாம லவ் பண்ணலைன்னு சொல்லனும்''

''சொன்னா''

''என்னை அவ ஏத்துப்பா''

''எதுக்கு வேலைய விட்டுப் போனா''

''எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதான் வேற வேலை கிடைச்சதுனு போயிட்டா''

''இது என் லவ்வரு, பேரழகினு சொல்லிட்டுத் திரிஞ்சிருப்ப''

''ஹெல்ப் பண்ணு பாரதி''

''சரி அவ போன் நம்பர் கொடு''

''இல்லை நேர்ல போய் பேசிட்டு வருவோம்''

''உன்னோட ஒரே ரோதனையாய் போச்சுடா, சரி வா''

ஒன்றிலிருந்து மெதுவாக விலகி பின்னர் சம்பந்தமே இல்லாமல் போக ஒன்று மனக்கசப்பு உண்டாகி இருக்க வேண்டும் அல்லது மறறொன்று கிடைத்திருக்க வேண்டும். இந்த மனிதர்களின் வாழ்வை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடலாம்.

இந்த பிரபஞ்சம் எத்தனை பெரிதாக இருந்தால் என்ன, அந்த பிரபஞ்சத்தில் எத்தனை நாடுகள் இருந்தால் என்ன அந்த நாட்டில் எத்தனை மக்கள் இருந்தால் என்ன. எல்லாம் ஒரு சின்ன வட்டம் தான்.

சுந்தரனுடன் சேர்ந்து பாரதி பிரபா வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

''பாரதி, எப்படி இருக்க, சமாதான தூதுவர் ஆகிட்ட போலிருக்கு. ஒரு வாரமா பேச்சையே காணோம்''

''உன்னோட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு மாதவி, நான் இந்த ஒரு வாரம் மௌன விரதம்''

''மௌன விரதம் என்னோட மட்டுமா இல்லை ஊரு உலகத்துக்கு கூடவா''

''இப்போ எதுக்கு போன் பண்ணின, அதுவும் சமாதான தூதுவர்னு சொல்ற''

''என்ன பாரதி, கோபமா இருக்க. மௌன விரதம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நான் கூட அடுத்த வருஷம் வைகுண்ட ஏகாதசிக்கு முழு நாளும் மௌன விரதம் இருக்கப்போறேன். அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அப்போ நீயும் ஊர்லதான் இருப்ப''

''மாதவி இப்படி பொடி வைச்சி பேசறதை நீ நிறுத்து. உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும். இப்போ நான் சுந்தரன் விஷயமா போய்கிட்டு இருக்கேன்''

''காதல் மன்மதன் சுந்தரன் என்ன சொல்றான், பிரபா என்ன கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாளா? சரி சரி நீ சமாதானம் செஞ்சு வை. நான் உன்னைக் கூப்பிட்டதற்கு முக்கிய காரணம் ஒரு பத்து நாட்கள் சென்னைக்கு வர இருக்கேன். உன் வீட்டுல எனக்குத் தங்க இடம் கிடைக்குமா?''

''என்ன சொல்ற, எப்போ வரப்போற? என்ன விசயம்''

''தங்க இடம் கிடைக்குமா?''

''அதெல்லாம் இடம் இருக்கு, எப்போ வரேன்னு மட்டும் சொல்லு''

''ஒரு முக்கியமான விசயம் பாரதி. கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லப் பழகிக்கிட்டோம்னு வைச்சிக்கோ நம்ம அறிவுத்திறன் பாதுகாக்கப்படும், வைச்சிருரேன்''

''ம்ம்''

''போன்ல யாரு மாதவியா?''

''ஆமா, அதைப்பத்தி உனக்கு என்ன?''

''நீ மாதவியை விட அழகா அறிவா இருக்க ஆனா உனக்கு எதுக்கு வாசன் மேல ஆசை''

''சுந்தரா, இனி ஏதாவது பேசின அப்படியே திரும்பிருவேன்''

''மன்னிச்சிரு பாரதி''

பிரபாவின் வீட்டை அடைந்ததும் பிரபா மட்டுமே வீட்டில் இருப்பது தெரிந்தது. பெருங்கூட்டமொன்றில் அவரவருக்கான சுதந்திரம் என்பது தனிமை. இவ்வுலகில் நம்மைப்போலவே நல்லவர்களாக இருப்பார்கள் என எண்ணும்  நபர்கள் ஒருவகை. அனைவருமே மோசமானவர்கள் என எண்ணும்  நபர்கள் இன்னொருவகை.

அதே இவ்வுலகில் உத்தமர்களாக இருப்பவர்கள் மீது கூட அவச்சொல்லை வீச சிலர் தயங்குவதே இல்லை. மேலும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எந்த ஒரு தொழிலும் எவரும் நிலைத்து இருக்க இயலாது என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த பிரபா அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

''சுந்தரா, உனக்குப் பிடிச்சிருக்கு அங்கிருதுக்காக அவளுக்கும் பிடிக்கனும்னு நினைக்கிற உன் நினைப்புல மண்ணை அள்ளிப்போடனும்''

''பாரதி, பிரபாகிட்ட நல்லா பேசு''

''சுந்தரா, ரகசியமான நட்பு, ரகசியமான உறவு அப்படிங்கிற ரகசியமான எதுவுமே நிம்மதியான மகிழ்ச்சியை யாருக்கும் தராது''

''பிரபா, பிரபா''

வீட்டின் கதவைத் தட்டி பிரபாவை பாரதிதான் அழைத்தாள். வீட்டின் கதவைத் திறந்து கொண்டு பிரபா வந்து நின்றாள்.

''என்ன வேணும்''

''சுந்தரன் விசயமா பேசணும்''

''தனிப்பட்ட விசயத்தில் தலையிட வேண்டியது இல்லை, உள்ளே வாங்க''

சுந்தரன், பாரதி வீட்டிற்குள் நுழைந்தனர். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து வைத்தாள். பிரபாவிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள் பாரதி. அனைத்தையும் கேட்டுவிட்டு பிரபா மிகவும் அமைதியாக எனக்கு இவனைப் பிடிக்கலை என முடித்துக் கொண்டாள்.

சுந்தரன் பாரதியை நோக்கி எல்லாம் உன்னாலதான் என சத்தம் போட்டான். பாரதி அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பிரபாவிடம் நிறைய நேரம் பேசி ஒருவழியாக அவளை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்துவிட்ட நிம்மதி பாரதிக்கு இருந்தது.

சமாதான தூதுவருக்கு வாழ்த்துக்கள் என மாதவி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். பாரதிக்கு படுங்கோபம் வந்தது. மாதவி சென்னைக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என முடிவுக்கு வந்தாள்.

(தொடரும்)


Friday 10 July 2015

நுனிப்புல் பாகம் -3 9

பகுதி - 8

9. மரபியல் உலகம்

இவ்வுலகில் இந்த குழந்தைகள் விசித்திரம். எப்படி குழந்தைகள் ஒரு விஷயத்தை அறிந்து கொள்கின்றன எப்படி ஒரு பழக்க வழக்கத்தை பின்பற்றுகின்றன என்பது மற்றொரு அதிசயம். பசிக்காக மட்டுமே குழந்தை. பின்னர் தனக்கு இன்னது தேவை என கருதி அழும் குழந்தை. குழந்தைகள் உலகம் புரிந்து கொள்ள இயலாது.

இரட்டைக் குழந்தைகளுக்கு எல்லாவித மரபணுக்கள் ஒரேமாதிரி இருந்தாலும் அவர்களது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கும். சூழ்நிலையானது குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாறுபாட்டினை உண்டாக்கும். வாசன் இந்த இரண்டு குழந்தைகள் எப்படி வளர்ந்து என்னமாதிரியான மனிதர்களாக உருவாகி வருவார்கள் என யோசித்தான்.

மறுநாள் சாரங்கன் நேராக விநாயகம் பெரியவர் வீட்டிற்கு வந்து இருந்தார். விநாயகம் அவரை வீட்டுக்குள் வரவிடாமல் மந்தையில் சென்று பேசலாம் என அழைத்துச் சென்றார்.

''அவ்வளவு கோபமா உனக்கு''

''சாரங்கா, நீ பண்ணி இருக்கிற காரியம் தெரியுதா, இன்னும் நீ மாறலை''

''எனக்கு சம்பந்தம் இல்லை, இல்லைன்னா உன்னை எதுக்கு வந்து பார்க்கபோறேன்''

''சொல்ல வந்த காரியத்தைச் சொல்லு''

''இங்கே நிலம் விலைக்கு வாங்கணும்''

''நான் தரமாதிரி இல்லை, நீ வேணும்னா இங்கே யார் தராங்கனு கேட்டு வாங்கிப்போடு. எனக்கு எந்தவித ஆட்சேபணை  இல்லை''

''அவங்க வந்தப்ப நீ அப்படி சொல்லி இருக்கலாமே, எதுக்கு முத்துராசு அவங்க மேல கையை நீட்டினான். அதுதான் அவங்க கொலைபண்ண முயற்சி பண்ணி இருக்காங்க''

''அவங்க என்ன பேசினாங்க, நீ என்ன பேச சொல்லி அனுப்பின, வாசன் மேல அவங்க காட்டின மரியாதை. சாரங்கா உன்கிட்ட எனக்குப் பேச எதுவும் இல்லை''

விநாயகம் விறுவிறுவென அங்கிருந்து சென்றார். சாரங்கனை நோக்கி சிலர் யாருமே உனக்கு நிலம் இங்கே தரமாட்டாங்க, பேசாம வேற ஊருல நிலம் வாங்கிப்போட்டு வாழுற வழியைப் பாரு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முத்துராசு அங்கே வந்தார்.

''இன்னும் இங்கதான் திரியிற''

''ராசு, உன்னோட ஆட்டத்தை எல்லாம் வேற யார்கிட்ட வேணா வைச்சிக்கோ''

''இப்ப நீ கிளம்பலை, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. ஊர்த் துரோகி''

சாரங்கன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவர் இனி இந்த குளத்தூர் பக்கம் வரக்கூடாது என்கிற நினைப்புடன் போனாலும் மனதில் ஏற்பட்ட அவமானம் அவரை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேணும் என எண்ணிக்கொண்டே இருக்கச் செய்தது. வாசன் அவரை வழியில் கண்டான்.

''ஐயா, என்ன இந்தப்பக்கம்''

''நிலம் வாங்கலாம்னு வந்தா யாரும் மரியாதை தரல, அந்த விநாயகம் என்னை ஒரு மனிசனா கூட மதிக்கமாட்டேன்கிறான். இந்த ராசு என்னை ஒரு எதிரியாகவேப் பார்க்கிறான். நீ என்ன என்னை சொல்லப்போற''

''உங்களை என்ன சொல்லப்போறேன் ஐயா. நீங்கதான் இன்னும் என் மேல கோவத்தில இருக்கீங்க. எப்படியும் நீங்க திரும்பி வரத்தான் போறீங்க. ஒவ்வொருமுறை ஏதேனும் திட்டம் இல்லாமலா வரப்போறீங்க. நிலம் வாங்குற அளவு உங்களுக்கு காசு ஏது''

''நீயும் என்னை எதிரியாப் பார்க்குற. எனக்கு காசு எப்படி வந்ததுனு உனக்கு கவலை வேணாம். நிலம் தர முடியுமானு சிலர்கிட்ட கேட்டு எனக்கு தகவல் சொல்லு, நான் வந்து வாங்கிக்கிறேன்''

''எனக்குத் தெரிஞ்சி உங்களுக்கு யாரும் நிலம் தரமாட்டாங்க. உங்களோட செய்கை எல்லாம் நல்லா இல்லை ஐயா''

''வாசா, உன்னை நான் எப்படியும் ஒழிச்சி கட்ட நினைச்சி இருந்தா அதை என்னைக்கோ செஞ்சிருக்க முடியும். எனக்கு அது தேவை இல்லை.''

''வேற என்னதான் உங்க எண்ணம்''

''நானும் இந்த ஊருல வாழணும். என்னை ராசு நீ அந்த விநாயகம் எல்லோரும் சேர்ந்து வெளியே அனுப்பிட்டீங்க''

''நீங்கதான் போனீங்க. மறந்துரவேணாம்''

முத்துராசு அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார்.

''எனக்குத் தெரியும் நீ இப்படிதான் பண்ணுவ''

கல் ஒன்றை எடுத்து சாரங்கனின் பக்கத்தில் எறிந்தார். சாரங்கன் படும் கோபம் கொண்டவராக அனுபவிப்பீங்க என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

''என்னண்ணே இப்படி பண்றீங்க''

''வாசா, உனக்குத் தெரியாது. இவன் விஷம். சரி நான் தோட்டத்திற்குப் போறேன்''

''வீட்டுக்கு வரை போயிட்டு வரேன்ணே''

வாசன் நேராக ஐவரதன் அஷ்டவரதன் இருவரையும் பார்க்க சென்றான்.

பூங்கோதையிடம் எப்படி இருவரையும் அடையாளம் காண்பாய் என்றான். ஐவரதன் வலது கையில் கட்டப்பட்ட கயிறு, அஷ்டவரதன் இடது கையில் கட்டப்பட்ட கயிறு என அடையாளம் காட்டினாள்.

நமது மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் இரண்டு இரண்டாக இருக்கும். இந்த மரபணு ஒன்று செயல்பாட்டு தன்மையும். மற்றொன்று அடங்கிய தன்மையும் கொண்டு இருக்கும். எந்த மரபணு வெளிப்படுகிறதோ அதன் குணாதிசயம் வெளிப்படும். இப்போது இந்த இரண்டு குழந்தைகளிடம் உள்ள மரபணு ஒருவருக்கு ஒன்று வெளிப்பட்டும், மற்ற குழந்தைக்கு மற்ற மரபணு வெளிப்பட்டும் இருந்தால் அதுவே வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருக்கும்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட பழக்கம் உருவாகும் என இந்த மரபணுக்கள் தீர்மானிக்க இயலது எனினும் சில அடிப்படை இயல்புகள் மாற வாய்ப்பு இருக்கும் என்றே வாசன் நினைத்தான்.

''ரெண்டு பேரும் எதிர்மாறான குணம் கொண்டு இருந்தா என்ன செய்வீங்க பூங்கோதை''

''வளரட்டும்ணா பார்க்கலாம். அந்த செடிகள் எல்லாம் என்ன அண்ணா பண்ணி இருக்கீங்க''

''அப்படியேதான் இருக்கு. பார்க்கலாம்''

வாசன் தோட்டத்திற்கு திரும்பிச் சென்றான். முத்துராசு தோட்டத்தில் மயக்கமாகி விழுந்து இருந்தார்.

(தொடரும்)





Thursday 25 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 8

பகுதி 7 

8. நினைவுகள்

திருமால், அவரது மனைவி யோகலட்சுமி, மகன் தீபக், மகள் தீபா என அனைவரும் வந்தார்கள். பாரதியையும், கிருத்திகாவையும் நன்றாக நினைவு இருந்தது.

''ரொம்ப நேரமா காத்து இருக்கீங்களா?''

''இல்லை சார்''

''சரி உள்ளே வாங்க''

வீட்டினுள் நுழைந்ததும் அவர்களை அமரச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார் யோகலட்சுமி. தாங்கள் வாங்கி வந்த பழங்களை எடுத்துத் தந்தார்கள். தீபக் வாங்கிக்கொண்டு நன்றி சொன்னான். அவனது பேச்சு அத்தனை இனிமையாக இருந்தது.

''என்ன பாரதி, என்ன விஷயம் சொல்லுங்க''

''பெருமாள் தாத்தா பிறந்துட்டார், ரெட்டக்குழந்தைக, தாயும் சேயும் சுகமாக இருக்காங்க''

''ரொம்ப சந்தோசம், கேட்கவே மனசு மகிழ்ச்சியா இருக்கு''

''முக்காலமும் உங்களுக்குத் தெரியும் தானே''

அப்போது நீர்மோர் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, நீங்கதானே சொன்னீங்க, சாருக்கு முக்காலமும் தெரியும்னு''

கிருத்திகா சொன்னதும் யோகலட்சுமி சிரித்தவண்ணம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். பாரதி சாத்திரம்பட்டி சென்ற விசயம்தனை சுருக்கமாக சொன்னாள்.

''எனக்கு அப்படி எல்லாம் ஒண்ணும்  தெரியாது. முக்காலம் பற்றிய கலை சொல்லித்தாங்கனு குழந்தைகள் கேட்பாங்க, நான் சும்மா சரினு  சொல்வேன். மற்றபடி எனக்கு எக்காலமும் தெரியாது''

''மாதவிக்கு எல்லாம் தெரியுதே''

''அப்போ நீங்க அதை மாதவிகிட்டதான் கேட்கணும். என்கிட்டே கேட்டா எப்படி? பெருமாள் தாத்தா பிறந்தார்னு சொன்னது நீங்க, அவர் எப்படி பிறக்க முடியும். இறந்தவர் பிறப்பது இல்லை. நினைவுகளுடனே மனிதர்கள் இறந்து போவார்கள். டிமென்சியா நோய் பற்றி நீங்க படிச்சி இருப்பீங்கதானே. ஒரு மனிசனோட மூளைகளில் ஏற்படும் பாதிப்பு நினைவு, மொழி செயல்பாடு என எல்லாத்தையும் சிதைச்சிரும். அப்படி இருக்கறப்ப ஒரு மனிசன் இறந்துட்டா அவனது செல்களின் மூலம் நினைவுகளை திரும்ப கொண்டு வர முடியும் அப்படிங்கிறது முடியாத காரியம். இப்போ இனி வரும் காலங்களில் என்ன நடக்கும்னு யூகிச்சி சொல்லக்கூடிய திறன்கள் என்கிட்டே இருக்குறமாதிரி தெரியலை. மாதவிக்கு அப்படி ஒரு சக்தி இருக்கும்னா அது ஆச்சரியம்தான்''

''மெடிக்கல் பத்தி எல்லாம் பேசறீங்க, நீங்க என்ன படிச்சி இருக்கீங்க'' பாரதியின் ஆர்வம் அதிகம் ஆனது.

''நான் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கேன். மேற்கொண்டு படிக்க எனக்கு விருப்பம் இல்லை. இவளும் பத்தாவது வரைதான் படிச்சி இருக்கா. ஆனா இப்போ பல குழந்தைகளைப் படிக்க வைக்கிற திருப்தி இருக்கு. நினைவு வைச்சிக்கிற செல்கள் பத்தி உங்க அபிப்ராயம் என்ன''

தீபக், தீபா ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். கிருத்திகா அவளை கவனித்த வண்ணம் அமர்ந்து இருந்தாள். திருமால் என்ன பேசுகிறார் என அந்த சிறு குழந்தைகளின் கவனிப்பு கிருத்திகாவிற்கு ஆச்சரியம் தருவதாக அமைந்து இருந்தது. பாரதிதான் பதில் சொன்னாள்.

''நம்ம உடலில் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் செல்கள் நினைவுத்தன்மை கொண்டவைகள். ஒரு வேக்சீன் போட்டம்னா, அவை நமது உடலில் உள்ள செல்களைத் தூண்டி ஆண்டிபாடீஸ் உண்டாக்கும் அப்படியே நினைவு செல்கள் உண்டாக்கும். அது மட்டுமில்லாம திருப்பி அதே நோய் வந்து தாக்கினா அதை சரியாக கணிச்சி நம்மை பாதுகாக்கும்.''

''அந்த செல்களின் பணி  அது. இப்போ கருவை உண்டாக்கும் செல்கள் எல்லா செயல்களை தன்னகத்தே வைத்து இருக்கும்போது தாய் தந்தை நினைவுகளை சுமந்து வருதா''

பாரதிக்கு அந்த கேள்வி சற்று குழப்பமாக இருந்தது. நினைவுகளை சுமந்து வருமா என தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். தீபக் என்ற யோகலட்சுமியின் குரல் கேட்டு தீபக் சமையல் அறைக்கு சென்றான்.
அவனைத் தொடர்ந்து தீபாவும் சென்றாள்.

''வாய்ப்பு இல்லை'' பாரதி சட்டென முடித்தாள்.

''அப்படின்னா பெருமாள் தாத்தா நினைவுகளுடன் வலம்  வரமாட்டார். அந்த குழந்தைகள் சாதாரண குழந்தைகள்தான். ஆனா உங்களுக்கு வாசன் எல்லோருக்கும் அது பெருமாள் தாத்தா. உங்கள் எண்ணங்களை அந்த குழந்தைகள் மீது திணிக்கப் பார்ப்பீங்க''

பாரதி மிகவும் அமைதியானாள். தீபக், தீபா குடித்த வண்ணம் எங்கே அமர்ந்து இருந்தார்களோ அங்கே அமர்ந்து இருந்தார்கள்.

''மாதவி, உங்களைப் பார்க்க கிருத்திகாவை என்னிடம் கூப்பிட்டு போகச்  சொன்னாள்''

''என்ன காரணம் என நீங்க கேட்டு இருக்கலாமே''

''என்ன காரணம்னு நீங்க சொல்லுங்க''

''எதற்கும் ஒரு துணையாக இருக்கட்டுமேனு இருக்கலாம். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மனிதர்கள் அப்படின்னு ஜோசியர்கள், நாடி பார்ப்பவர்கள். மை தடவி சொல்பவர்கள், குறி பார்ப்பவர்கள், ரேகை பார்ப்பவர்கள் அப்படின்னு நிறைய பேர் இந்த உலகத்தில் இருக்காங்க. அவர்களுக்கு அது வேலை. ஒரு சிலர் சொல்வது நடக்கிறது அப்படின்னு நம்பும் மனிதர்கள் இப்போ மட்டுமில்லை எப்பவுமே உண்டு, இப்போ அதிகமாகிட்டே வராங்க. அதுமாதிரி எதிர்காலம் சொல்றது மாதிரி நான் இருப்பேன்னு நீங்க நினைச்சா என்னை மன்னிக்கனும் எனக்கு அப்படிப்பட்ட ஞானம் அறிவு சிந்தனை எதுவுமே இல்லை.

மாதவிகிட்ட நான் இதுவரை ஒரே ஒருமுறைதான் பேசி இருக்கேன். அதுவும் திருமலைக்குப் போகறப்பபார்த்துப் பேசியதோடு சரி. ரொம்ப அறிவான பொண்ணு. ஆனா நீங்க சொல்றமாதிரி முக்காலமும் உணர்ந்த பெண் மாதிரி எனக்குத் தோணலை. எதேச்சையாக அவங்க சொல்றதுக்கு நீங்க அர்த்தம் கண்டுபிடிச்சி அந்த பொண்ணுக்கு எல்லாம் தெரிஞ்சி இருக்கும்னு நம்புறீங்க''

''நீங்க சொன்னதுதான் சார் உண்மை, இவதான் தேவை இல்லாம மாதவியை கடவுள் ரேஞ்சுக்கு பேசுறா''

கிருத்திகா பட்டென சொன்னதும் திருமால் சிரித்தார். அப்போது பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார் யோகலட்சுமி.

''அக்கா, அதுக்குள்ளே பண்ணிட்டீங்களா, கடையில் வாங்க மாட்டீங்களா''

''இல்லைம்மா, இதெல்லாம் சின்ன சின்ன வேலைகள்தானே''

''நான் கடவுள் ரேஞ்சுக்கு எல்லாம் மாதவியைப் பத்தி பேசலை. ஆனா அவளுக்கு சில விசயங்கள் முன்கூட்டியே தெரியுது. அவள்கிட்ட பழகினப்ப எனக்கு எதுவும் தெரியலை. ஆனா அவ பேசறதை வைச்சிப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. அவளுக்கு பல விசயங்கள் தெரியுது''

''பாரதி, நீங்க கிருத்திகா பேச்சு கேளுங்க. நம்முடைய செல்களுக்கு எப்படி சரியா கால் உண்டாக்கணும், கை உண்டாக்கணும்னு தெரியும். எல்லா குண  நலன்கள் கொண்ட செல்கள் எப்படி மற்ற குணநலன்களை மறைச்சி ஒன்றை மட்டும் உருவாக்க துணிகிறது''

பாரதிக்கு இது சற்று ஆச்சரியமாக இருந்தது. இப்படி எல்லாம் இவர் எங்கு சென்று படித்தார் என்றே கேட்க வேண்டும் போலிருந்தது. கிருத்திகா குறுக்கிட்டாள்.

''எல்லாமே கருவில் சேர்த்து வைக்கப்பட்டது. அது திட்டமிட்டபடி வெளிப்படுகிறது. இதை ஆர்கநோஜெநிசிஸ் அப்படின்னு சொல்வாங்க. நாங்க அதை எல்லாம் படிக்கிறது இல்லை. எங்க மருத்துவத்தில் எப்படி என்ன நோய் இதுமாதிரி படிப்போம். இவதான் ஜெனிடிக்ஸ் எல்லாம் படிக்கணும்னு ஆர் என் ஏ எல்லாம் படிச்சிட்டு இருப்பா. எனக்கு ஒரு டாக்டர் ஆனா போதும்''

''கிருத்தி, ஆர் என் ஏ  பத்தி இப்போ எதுக்கு? நான் இன்னும் அதுபத்தி வாசிக்கலை, உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க''

''இப்போ ஆண்  பெண் இணைந்து உண்டாகிற கரு ஒரு குழந்தையா மாறும்போது இருவரின் விசயங்களை கொண்டு வருது. ஆனா பெருமாள் தாத்தா உருவான கரு அப்படி இல்லை. விஷ்ணுப்பிரியன் ஏதோ  பண்ணிதான் அந்த செல்களை அவர் ஒரு குழந்தையா உருவாக வழி பண்ணி இருக்கார். எனக்கும் தெரியலை பாரதி. இப்பவாச்சும் நம்புங்க எனக்கு முக்காலம் மட்டுமில்லை இக்காலமும் தெரியாது.''

கிருத்திகா என்ன நினைத்தாள் எனத் தெரியவில்லை. அங்கிருந்த பலகாரங்கள் சாப்பிட்டு முடித்தவள் இதற்கு மேல் நமக்கு என்ன வேலை என்பதுபோல பாரதியைப் பார்த்தாள். பாரதிக்கு திருமாலிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. இவருக்கு இப்படி இத்தனை விசயங்கள் தெரிகிறது.

மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆர்வம் என்று ஒன்று உண்டு. மனதில் ஒன்றை நிறுத்திக்கொள்ளும் தொடர்ந்து கொள்ளும் ஆசை அது. ஒரு சிலர் அதிலேயே ஊறி இருப்பார்கள். அதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். சிலருக்கு பல விசயங்களில் ஆர்வம் இருக்கும். பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்களது சிந்தனையை குறிப்பிட்ட வழியில் செலுத்தினால் மட்டுமே ஒன்றில் சாதனை பண்ண இயலும். திருமால் பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டு இருப்பவராகவே தென்பட்டது.

''போவோமாயா''

''இரு கிருத்தி, கொஞ்ச நேரம் இருக்கலாம்''

''சாப்பாடு தயாராகிக் கொண்டு இருக்கு, சாப்பிட்டே போங்க, வேற எதுவும் கேட்கணுமா?''

''உங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம் போல இருக்கு, வார வாரம் ஏதேனும் ஒரு நேரம் தந்தா உங்களை வந்து பார்க்கிறேன்''

''ஆசிரமத்திற்கு வார வாரம் வாங்க, நான் பெரும்பாலும் அங்கதான் இருப்பேன்.

பாரதிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது மாதவியிடம் இருந்து போன்  வந்தது. வாசனுக்கு என்ன நேர இருந்தது, குளத்தூரில் என்ன நடந்தது என எல்லா விசயங்களையும் சொன்னவள் கிருத்திகா நான் சாதாரண பொண்ணுனு  சொன்னாளா அதுக்குத்தான் அவளை கூப்பிட்டு போக சொன்னேன். நீ முன்ன பார்த்த திருமால் வேற இப்போ பார்த்த  திருமால் வேறனு  தெரிஞ்சிகிட்டியா என்ற அவளது சொல் கேட்டு அப்படியே போனை திருமாலிடம் எதுவும் சொல்லாமல் கொடுத்தாள்.

''எப்படிமா என்கிட்டே போன் வந்ததுன்னு கண்டுபிடிச்ச, நல்லா இருக்கேன்மா. சாத்திரம்பட்டி போனதாக கேள்விபட்டேன்''

மறுமுனையில் மாதவி என்ன சொல்கிறாள் என பாரதிக்கு கேட்கவில்லை. ஆனால் போன்  கைமாறியது எப்படி அவள் அறிந்தாள்  என ஆச்சரியம் கொண்டாள்.

''மெடிக்கல் படிக்கிற பொண்ணுகதானே, நிறைய சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நீ பண்ணப்போற மூளை ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள். பாரதிகிட்ட இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் உன்னோட ஒரே ஒரு தரம் தான் பேசினேன்னு''

பாரதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மாதவி குறித்து சற்று எரிச்சல் உண்டாகத் தொடங்கியது. எதற்கு தன்னிடம் அவள் குறித்த விசயங்களைச் சொல்ல மறுக்கிறாள் எனும் கோபத்தின் வெளிப்பாடு அது.

''சரிமா, பாரதிகிட்ட கொடுக்கிறேன், நீ சொன்னமாதிரி பாரதி முகம் கோபமாகத்தான் மாறிக்கிட்டு வருது''

அந்த வார்த்தைகள் பாரதியை மேலும் ஆத்திரமூட்டியது. தன்னை கட்டுபாட்டில் வைத்துக் கொண்டாள்.

''சரி மாதவி, அப்புறம் பேசறேன்''

எதுவும் பேசாமல் துண்டித்தாள். அதற்கு மேல் எதுவும் பேச விரும்பாதவளாய் பாரதி தென்பட்டாள். கிருத்திகாதான் பாரதியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றாள். பாரதியின் கண்கள் குளமாகின. கிருத்திகா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பாரதி கேட்பதாக இல்லை. மாதவியின் செயல்கள் தனக்கு எரிச்சல் அளிப்பதாக அழுகையின் ஊடே சொன்னாள்.

''என்னை எவளோனு அவ நினைகிறதால என்கிட்ட கூட சொல்லமாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறா, அப்படி சொல்லாட்டியும் பரவாயில்லை எதுக்கு இப்படி பூடகமாகவே பேசணும். என்னை வெறுப்பேத்த இப்படி பண்றா. அங்க என்னோட பெரியம்மா முன்னமே வந்து இருக்கக்கூடாதா மாதவினு சொல்றாங்க. இவளுக்கு அப்படி ஏதேனும் தெரிஞ்சி இருந்தா எங்க பெரியப்பாவை எதுக்கு இப்படி தனியே தவிக்க விடனும்''

''விடுயா, அதைப் பத்தி எதுவும் நினைக்காதே. வா, சாப்பிட்டு கிளம்புவோம், சார் பார்த்தா தப்பா நினைப்பார். சொன்ன கேளுயா''

''இல்லை கிருத்தி, லீவு வரப்ப நேரா மாதவியை சந்திச்சி பேசணும். அவ என்னதான் மனசில நினைச்சிட்டு இருக்கா''

''சரிய்யா இப்பா வாய்யா போகலாம்''

பாரதியின் மனம் துடிதுடித்துக் கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Sunday 21 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 7

பகுதி - 6  

7 வஞ்சகர்கள் நிறைந்த உலகம்

பெரியவரிடம் வாசன் சாரங்கனிடம் சென்று எதுவும் விசாரிக்க வேண்டாம் என சொன்னான். பெரியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வேண்டாம் என சம்மதம் சொல்லிவிட்டார். முத்துராசு தான் இந்த உலகம் வஞ்சகர்களால் நிறைந்தது என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். பெரியவர் சற்று அதட்டியதும் அமைதி ஆனார்.

இந்த உலகம் வஞ்சகர்களால் மட்டுமே நிறைந்தது என குறிப்பிட இயலாது. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள தனது சந்ததிகள் நிலைநிறுத்த போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட நலன் என்று ஒன்று இல்லாமல் இல்லை.

பெரியவர் வாசனிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். வாசன் நாம் எதுவும் தவறு செய்யவில்லை என சொன்னபோது முத்துராசு அவர்களை அடித்து விரட்டியது அபாயகரமானது என்றே குறிப்பிட்டார்.

வாசன் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மாதவி வாசனிடம் பேசினாள்.

''மாமா நீங்க பாதுகாப்பாக இருங்க, எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு தெரியாது''

''என்ன சொல்ற மாதவி''

''உங்க உயிருக்கு ஆபத்து இருக்கு மாமா''

''மாதவி...''

''நீங்க வீட்டுல இருங்க, இன்னைக்கு எங்கையும் போக வேணாம்''

''ம்ம் சரி மாதவி, எந்த வீட்டில் இருந்தாலும் சரிதானே''

''ம்ம்''

முத்துராசுவிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல் தான் தோட்டம் செல்வதாக சென்றார். வாசன் சற்று கோபமாக சொன்னதும் சரி தம்பி நான் வீடு போறேன் என போனவர் வாசன் சற்று மறைந்ததும் தோட்டம் நோக்கி சென்றார். வாசன் நேராக கேசவன் வீட்டிற்குப் போனான்.

''எப்படி இருக்க பூங்கோதை''

''நல்லா இருக்கேண்ணா''

''பையனுங்க என்ன பண்றாங்க''

''இப்போதான் தூங்கினாங்க''

''கேசவன் எங்க''

''மாரிமுத்து தோட்டம் போறேன்னு போனார்ணா, நான் போய் காபி கொண்டு வரேன்ணா''

''வேணாம் பூங்கோதை, நெகாதம் செடி வாடிப்போனது பத்திக் கேள்விப்பட்டதான''

''ஆமாணா, ரோகிணி  கூட போன் பண்ணிக் கேட்டா. எனக்கும் ஆச்சரியமா இருக்குணா''

''மேற்கொண்டு படிக்கலையா பூங்கோதை''

''இல்லைணா, இவங்களை வளர்த்துப் பெரியவங்க ஆக்கணும், பெருமாள் தாத்தா அவரோட முந்தைய நினைவுகளோட இருப்பாராண்ணா''

''உனக்கு குழந்தைகளில ஏதேனும் வித்தியாசம் தெரியுதா பூங்கோதை''

''அண்ணா ஒரு நிமிஷம் காபி போட்டு வரேன். மோராவது குடிங்க''

''ம்ம்''

வாசன் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்தான். அதில் இரு குழந்தை விழித்துப் பார்த்தது. அதே பெருமாள் தாத்தாவின் கண்கள். இரண்டு கைகளையும் வாசனை நோக்கி நீட்டியது. வாசன் கைகளை நீட்டினான். அவனது கைகளை இறுகப் பற்றிக்கொண்டது. வாசன் விடுவிக்க முயன்றான். குழந்தை சிரித்தது. வாசன் ஆச்சரியம் அடைந்தான். பூங்கோதை அங்கே வந்து கொண்டு இருந்தாள். குழந்தை கைகளை விடுத்து கண்ணை மூடியது.

''காபி''

''பூங்கோதை, நீ இந்த குழந்தைகளில் எதுவுமே வித்தியாசம் பார்க்கலையா''

''இல்லண்ணா''

''பெருமாள் தாத்தா...''

''என்னண்ணா, நீங்க எதுவும் பார்த்தீங்களா''

''என்னோட கையை இறுகப் பிடிச்சான்''

''அண்ணா''

''பூங்கோதை, பெருமாள் தாத்தா கரு தான் இரண்டாக பிரிந்து இரட்டை குழந்தையாகப் பிறந்து இருக்கு, உனக்கும் கேசவனுக்கும் உருவான கரு எதுவும் இல்லை''

''அண்ணா, டாக்டர் விஷ்ணுப்பிரியன் அப்படி சொன்னாரா''

''மாதவிதான் சொன்னா''

வாசன் மாதவிக்கு போன்  பண்ணி அங்கு என்ன நடந்தது என சொல்லிக்கொண்டு இருந்தபோது கேசவன் வீட்டிற்குள் வந்தான்.

''மாப்பிள்ளை நீ இங்கதான் இருக்கியா''

''என்னாச்சு''

''முத்துராசுவை மூணு பேரு வெட்டிக்கொல்ல வந்தானுங்க, மாரிமுத்து நான், வீரப்பசாமி, வேல்முருகன் எல்லாம் அந்த நேரத்தில நம்ம பெரியவர் தோட்டம் வழியா வந்தோம். பெரிய கலவரம் ஆகிருச்சி. அடிச்சி அவனுகளை போலிஸ் ஸ்டேசனுக்கு கொண்டுப் போயிட்டு இருக்கோம். நீ வீட்டுக்குப் போயிட்டன்னு ராசு மாமா சொன்னார். கொஞ்சம் பணம் எடுக்கத்தான் வந்தேன், நீ இங்கேயே இரு. உன்னை கொல்லத்தான்  வந்து இருக்கானுங்க மாப்பிள்ளை''

''நானும் வரேன்''

''சொன்னா கேளு மாப்பிளை''

வாசனுக்கு வியர்த்துக் கொட்டியது. யார் இந்த மனிதர்கள். முத்துராசு சொன்னது போல வஞ்சம் நிறைந்த மனிதர்கள். முத்துராசு எதற்கு தோட்டம் போனார் என்றே வாசன் யோசித்தான். வாசன் தனது வீடு நோக்கி நடந்தான்.

கேசவனும் பிறரும் அவர்கள் மூவரையும் காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தார்கள். அவர்களை விசாரித்தபோது சாரங்கன்  பெயரைச் சொன்னார்கள். பெரியவர் மிகவும் கோபம் கொண்டவர் ஆனார். சாரங்கனுக்கு அழைத்து பேசியபோது விநாயகம் நீ தேவையில்லாம பேசறதை நிறுத்து எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

காவல் அதிகாரிகள் சாரங்கன் வீடு சென்றார்கள். சாரங்கனிடம் விசாரித்தபோது தான் அவ்வாறு செய்ய சொல்லவில்லை என அடம்பிடித்தார். அவர்கள் தப்பிக்க தன்னை சொல்வதாக சொன்னார். காவல் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துவிட்டு திரும்பினார்கள்.

''சாரங்கா, என்ன இது''

''நான் நிலம் விலை பேச சொன்னேன். ஆனா கொல்ல  சொல்லலை''

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இன்றி வீடு திரும்பினார். இரவெல்லாம் பெரியவருக்கு யோசனையாக இருந்தது.

குழந்தைப் பிடித்த தனது கைகளைப் பார்த்துக் கொண்டான் வாசன்

(தொடரும்)


Thursday 11 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 6

நுனிப்புல் பாகம் 3 - 5

6. இருவழிப் பாதை

பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு என்று ஒன்று இருக்கும். இறப்பு என்று ஒன்று இருந்தால் பிறப்பு ஒன்று இருக்கும். ஆனால் இதுவரை எவரது இறப்புமே மீண்டும் ஒரு  பிறப்பாக வந்தது என நிரூபிக்கப்படவில்லை. தனது முன் ஜென்ம வினை என்று சொல்கிறார்கள், தான் முன் ஜென்மத்தில் இது போன்று இருந்ததாக ஒரு சிலர் குறிப்பிட்டு இருப்பதை நிரூபிக்க வழி ஒன்றும் இல்லை.

பாரதி வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள். இந்த திருமாலுக்கு எப்படி முக்காலமும் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற யோசனை அவளில் ஓடிக்கொண்டு இருந்தது. கிருத்திகா உடன் வந்தால் நன்றாகவே இருக்கும் என எண்ணினாள். ஒரு முறை வாசன் கூட மாதவி முக்காலமும் அறிந்தவள் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறாள். இதை எல்லாம் மாதவியிடத்து  கேட்டு ஊர்ஜிதம் பண்ணிட தோணவில்லை.

சாத்திரம்பட்டிக்குச்  சென்றபோது நாச்சியார் அம்மாள் முன்னமே வந்து இருக்கலாமே மாதவி என்று சொன்னபோது பாரதிக்குப் புரியாமல் தான் இருந்தது. அதுகுறித்து இதுவரை என்ன ஏது  என விசாரிக்கத் தோணவில்லை.

மாதவியை அழைத்துப் பேசலாம் என எண்ணினாள், அதற்குள் பாரதியின் போன்  ஒலித்தது. நாம் எவரை மனதார நினைக்கிறோமோ அவர் நமக்கு உடனடியாக ஏதேனும் ஒரு ரூபத்தில் காட்சி தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் தான். போனினை  எடுத்தாள்.

''என்ன பாரதி, என்னைப் பத்தி நினைச்சிட்டு இருந்தியா?, எதையும் நிறைய யோசிக்காத, சுந்தரன் எப்படி இருக்கான்''

''மாதவி, உன்னைப்பத்தி நினைச்சிட்டு இருந்தேனு எப்படி உனக்குத் தெரியும்''

''ஒரு யூகத்தில் சொன்னதுதான், உண்மையிலேயே என்னைப் பத்திதான் நினைச்சிட்டு இருந்தியா, இல்லை திருமால் பத்தி கூடவா?''

''மாதவி, உனக்கு முக்காலமும் தெரியுமா''

''எக்காலமும் எனக்குத் தெரியாது பாரதி, சும்மா வாசன் மாமாதான் எனக்கு எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு இருப்பாரு. அப்படித்  தெரிஞ்சி இருந்தா எதுக்கு நான் மெடிசின் படிக்கப் போறேன். பேசாம ஒரு ஜோசியம் பார்க்கிற வேலையை எடுத்து இருக்கமாட்டேன். உட்கார்ந்த இடத்திலேயே நல்ல சம்பளம். யாரோ பிரச்சினைக்கு ஏதோ  ஒரு பரிகாரம். எந்தக் கவலையும் இல்லை பாரு. அப்படியே மாதவியம்மன் அப்படின்னு ஒரு சின்ன கோவில் கட்டி ஊரு உலகம் எல்லாம் தெரிஞ்சிருக்கமாட்டேன்''

''மாதவி, நீ கிண்டல் பண்றேன்னு தெரியுது, ஆனா அவங்கவங்க வேலை அவங்கவங்களுக்கு கஷ்டம். ஒருவேளை யாருமே ஜோசியம் பார்க்க வரலைன்னா, சாமி கும்பிட வரலைன்னா உன்னோட நிலை கஷ்டம்தானே.''

''எல்லாம் எனக்குத் தெரிஞ்சி இருக்கறப்ப அப்படி ஒரு கஷ்டம் ஏன்  வரும், சொல்லு பாரதி''

''மாதவி, உனக்கு இந்த உலகத்தில் நடக்கிறது நடந்தது நடக்கப்போறது எல்லாம் தெரியுமா''

''எதுவுமே தெரியாது பாரதி. சும்மா எதேச்சையா போன்  பண்ணினேன் அதுவும் நீ சுந்தரன் விஷயம் சொன்னதில் இருந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அவன் உன்னை கேலி கிண்டல் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு''

''பார்த்தியா, உனக்கு எல்லாம் தெரியும். அவன் என்னை கேலி கிண்டல் பண்ணினான்''

''அவன்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ ஒண்ணும்  அவனை  சொல்லாத''

''மாதவி, சாத்திரம்பட்டி பத்தி கொஞ்சம் சொல்றியா''

''எனக்கு என்ன தெரியும், நீயும்தான் கூட வந்த, உனக்கு விஷயம் தெரியுமா நம்ம ஊருல அதான் எங்க குளத்தூர்ல சின்னப் பிரச்சினை. ரெண்டு பேரை அடிச்சிட்டாங்க. எனக்கு என்னமோ அது பெரிய கலவரத்தில போய்  முடியும்னு தோணுது. வாசன் மாமாகிட்ட எச்சரிச்சி வைக்கணும்''

''யாரு சொன்னாங்க இதை''

''என்னோட அம்மாதான்''

''பொய் எல்லாம் பேசுவியா மாதவி''

''தாராளமா  பேசுவேன், பொய் தேவையெனில் உண்மையாகும். சுந்தரன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ திருமாலைப் பார்க்கறப்போ கூட கிருத்திகா இல்லைன்னா அருண் இவங்களோட போ. அவரு இந்தவாட்டி உக்கிரமான நிலையில் இருப்பார். சாந்தரூபம்னு நினைச்சியில! அப்புறம் முக்கியமான ஒண்ணு சும்மா ஆர் என் ஏ னு  இருக்காம  ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி நிறைய படி''

''எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சி. வாசன் சொன்னது மாதிரி உனக்கு எல்லாமே தெரியும். நீ தெரியாத மாதிரி நடிக்கிற. திருமால் ஐயா உக்கிரமான நிலை அப்படின்னு உனக்கு எப்படித் தெரியும். அவர் மட்டும் அப்படி இருக்கட்டும். ஆமா அது எப்படி நீ இது படினு  சொல்ற''

''மறந்துட்டியா, நீதான் ஆர் என் ஏ  உலகம் எல்லாம் சொல்லி இருக்க. நீ போய்ட்டு வந்துட்டு பேசு''

''ம்ம்''

இந்த மாதவி புரியாத புதிராக தென்பட்டாள். சாதாரணமாகவே தென்படும் இவளில் எப்படி இத்தனை ஆற்றல் இருக்க இயலும். அதுவும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் பத்தி சொல்கிறாள். ஆர் என் ஏ தன்னை டி என் ஏ வாக மாற்றும் வல்லமை இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ்க்கு உண்டு. ஒற்றையாகவோ, இரட்டையாகவோ மாற்றி வைக்கும். இந்த வினையூக்கி மட்டும் இல்லையெனில் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் உருவாகி இருக்கவே இருக்காது.

வாசனின் வைரஸ் கவிதைப் போல இந்த ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்டேஸ் தான் உயிரின் மூலமாக இருக்கக் கூடுமோ. முதலில் ஆர் என் ஏ  உருவாகி  அதில் இருந்து டி என் ஏ உருவாகி பின்னர் டி என் ஏ  மூலம் ஆர் என் ஏ உருவாக்கி இந்த உயிரினங்கள் இருந்து இருக்குமோ.

பாரதியை நட்சத்திரங்களை எண்ண  விடாமல் யோசனை பண்ண வைத்துவிட்டாள்  மாதவி. இந்த உலகில் எதுவுமே முன்னோக்கி சென்றது பின்னோக்கி வராது என பாரதி நினைக்கும்போதே கடல் அலைகள் பற்றிய எண்ணம் வந்து சேர்ந்தது.

கிருத்திகாவிடம் மீண்டும் போன்  பண்ணி கேட்டபோது திருமாலைப் பார்க்க உடன் வருகிறேன் என்று சொன்னாள். அன்று இரவு அம்மாவிடம் அப்பாவிடம் சொன்னபோது எதுக்கும் அருண் நீயும் போயிட்டு வா என்று சொன்னார்கள். அருண் மறுபதில் சொல்லாமல் சரி என்றான். பாரதிக்கு சற்று பயமாக இருந்தது. கிருத்திகா வருகிறாள் என்று சொன்னதும்தான் அருண் நான் எதுக்கு என ஒதுங்கிக் கொண்டான்.

இந்த மாதவி பற்றி அறிய தேவகிதான் சரியான வழி என பாரதி யோசித்துக் கொண்டே அன்று உறங்கினாள். கனவில் மாதவிதான் பலமுறை வந்து போனாள். என்றுமே கனவில் வராத மாதவி இன்று மட்டும் ஏன்  என்றே உறக்கத்தின் ஊடே விழித்த வண்ணம் இருந்தாள் . திருமால் ஐயாவைப் பார்த்துதான் ஆக வேண்டுமா எனும் எண்ணம் வேறு வந்து சேர்ந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணவும்  செய்தாள்.

ஒரு வார்த்தை கூட தன்னிடம் மாதவி கனவில் பேசவில்லை என்று எண்ணினாள்  பாரதி. கிருத்திகாவும் பாரதியும் திருமாலைச் சந்திக்கப் போனார்கள்.

முதலில் வந்தபோது என்ன நிலையோ அதே நிலை. திருமால் வருவார் என வீட்டின் வெளியில் இம்முறை காத்து இருந்தார்கள்.

(தொடரும்)




Wednesday 3 June 2015

நுனிப்புல் பாகம் 3 - 5

பகுதி - 4

5. வாசனின் விவசாயம் 

வாசன் பெரியவரை சந்திக்கச்  சென்றான். அவரிடம் சாத்திரம்பட்டி பற்றி கேட்டுக்கொள்ள அதிக ஆர்வம் இருந்தது. இருப்பினும் அதை கேட்க வேண்டாம் என முடிவு செய்தான். பெரியவரின் வீட்டில் வேறு இருவர் அமர்ந்து இருந்தார்கள். உள்ளே செல்வதா, வேண்டாமா என முடிவு செய்வதற்குள் பெரியவர் வாசனை அழைத்தார். 

''வாசா உள்ளே வாப்பா''

அழைத்தபின்னர் செல்லாமல் இருப்பது சரியில்லை என உள்ளே சென்றான் வாசன். அங்கிருந்த அந்த வேறு இரண்டு  நபர்கள் வாசன் அப்படிங்கிறது நீதானா என்பது போல பார்த்தார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் வாசன் அமர்ந்தான். 

''தம்பி, என்ன வேலை பார்க்கிறீங்க''

நல்ல முறுக்கலான மீசை வைத்து பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் கொண்ட நடுத்தர வயது மிக்க ஒருவர் கேட்டார். 

''விவசாயம் பார்க்கிறேன்''

''விவசாயமா, தம்பிக்கு படிப்பு ஏறலையோ?''

அந்த கேள்வியை வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. புன்முறுவல் செய்தான். அதற்குள் பெரியவர் குறுக்கிட்டார். 

''ரொம்ப நல்லா படிக்கிற பையன், பன்னிரண்டாவதுல கூட ஆயிரத்து நூறு மார்க்கு. விவசாயம் மட்டுமே பார்ப்பேன் அப்படின்னு முடிவு பண்ணிட்டார்''

''யாருயா இவனுக்கு பொண்ணு கொடுப்பா''

மெல்லிய தேகம் கொண்ட சற்றே வயதான மற்றொரு நபர் சொன்னதைக் கேட்டு வாசன் மேலும் சிரித்துக் கொண்டான். 

''பொண்ணு எல்லாம் நிச்சயம் பண்ற அளவுல இருக்கு. அதுவும் டாக்டர் படிக்கிற பொண்ணு'' 

பெரியவர் சொன்னதும்தான் தாமதம் இருவரும் கலகலவென சிரித்தார்கள். 

''பொருந்தாத மாட்டைப் பூட்டினா வெள்ளாமை வீடு வந்து சேராது. படிக்காத இவனுக்கு டாக்டர் பொண்ணு, அந்த பொண்ணு கொடுக்கிற இளிச்சவாயன் யாருன்னு பார்க்கணுமே''

சிரிப்பை நிறுத்தி இப்படி உதிர்த்த வார்த்தைகள் அவரைப்போலவே சற்று முரட்டுத்தனமாக இருந்தது. 

''இந்த ஊரில ஒரு டிராக்டர் காணோம், எல்லாம் மாட்டு உழவுதானா, மாட்டுப்பயக  இருக்கிற ஊருல மாடுதான் உழவு போல''

அவர்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். வாசனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 

''ஐயா, நான் கிளம்புறேன், பிறகு பேசலாம்''

வாசன் சொல்லிக்கொண்டு கிளம்பும் முன்னர் பெரியவர் அந்த இருவரையும் வீட்டைவிட்டு வெளியேப் போகச் சொன்னார். 

''தராதரம் தெரியாம உங்களை இங்க உட்கார வைச்சிப் பேசினேனே அது என்னோட தப்பு. இந்த வாசன் தான் ஊர்த்தலைவர். நீங்க என்ன வியாபாரம் பார்க்க நினைச்சாலும் இவரோட அனுமதி இல்லாம பண்ணக்கூடாது. உங்க புத்தி எல்லாம் சரியில்லை. கிளம்புங்க''

பெரியவரின் சற்று கோபமான குரல் கண்டு அவர்கள் ஏதும் திடுக்கிடவில்லை. 

''அப்படி யாரு இருக்கானு கேட்கத்தான் கேட்டோம். இவர் இப்படியே விவசாயம் பண்ணினா டாக்டர் பொண்ணு விவசாயம் பார்க்குமா, இல்லை இவரோட பிள்ளைகதான்  விவசாயம் பாக்குமா. டாக்டர் பிள்ளைக மாடு மேய்க்கிறத உங்க ஊருல ஏத்துக்குவாங்கள. ரொம்ப கோபபட்டு பேசுறீரு. ஏன்டா வாசு நீ இத்தனை மார்க்கு வாங்கி ஒரு டாக்டர், எஞ்சின்னீர் படிக்காம இப்படி வேகாத  வெயிலுல விவசாயம் பாக்கற, உனக்கு புத்தி ஏதும் கழண்டு கீழ விழுந்துருச்சா, ஒரு அம்பது ஏக்கர் நிலத்தை இந்த ஊருல வளைச்சி போட்டுரலாம்னு தான் வந்தோம். நீ அனுமதி கொடுக்கலன்னா என்ன ஊருல இருக்கவங்ககிட்ட பேசி வாங்கிக்கிறோம்''

பெரியவர் எழுந்தார். 

''இங்க யாரும் உங்களுக்கு நிலம் தர மாட்டாங்க, நீங்க கிளம்பிப் போகலாம்''

''உங்களைப் பார்க்கச் சொன்னாங்கனு வந்தா, மரியாதை இல்லாமல் நடந்துக்கிறீரு. இதே ஊருக்குள்ள  நாங்க வரத்தான் போறோம். உங்களை என்ன பண்றோம்னு பாரு. வாடா போலாம்''

அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் வெளியேறினார்கள். வாசன் அவர்களை பின்தொடர்ந்து சென்றான். 

''உங்களுக்கு என்னப்  பிரச்சினை''

''ஒரு பிரச்சினையும் இல்லை. உன்னப் போல முட்டாப்பயக எல்லாம் விவசாயம் பாக்கத்தான் லாயக்கு. நீ எல்லாம் எப்படிடா ஊர்த்தலைவர் ஆன. உனக்குப் படிப்பு வரலைதானே. ஆயிரம் இரண்டாயிரம் மார்க்குன்னு பொய் சொல்றியா''

அந்த நேரம் பார்த்து முத்துராசு அங்கே வர அவர்கள் பேசியது அவர் காதில் விழ சரியாக இருந்தது. என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அடி அடித்தார். வாசன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. என்ன ஏது  என விசாரிக்காமல் அவர்கள் இருவரையும் பலமாகத் தாக்கினார்கள். வாசன் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. 

''இவனுங்க ஊர் ஊராப் போய்  ஆளை ஏமாத்துற கூட்டம், திருட்டுப் பயல்க''

''என்ன அண்ணே சொல்றீங்க''

''டேய் அவனுகளை அந்த மரத்தில கட்டிப்போடு, தோலை உரிச்சிருறேன். இவனுக பத்தி உனக்குத் தெரியாது. இவனுக கூட்டம் பெரிசு''

சத்தம் கேட்டு பெரியவர் வெளியே வந்துப் பார்த்தார். 

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, யார் இப்படி இவங்களை அடிச்சது. முத்துராசு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணி வைச்சிருக்க''

''ஐயா, இவனுக பொல்லாதவனுக. ஊருக்குள்ள குடியேறி அந்த ஊரையே உலையில் போட்டுருவானுக''

''அப்படி எங்க நடந்திச்சி. உனக்கு எப்படி விபரம் தெரியும்''

''நீங்க சாரங்கன் கிட்ட பேசிப் பாருங்க ஐயா''

''அவன்கிட்டயா?''

''ஆமாயா, சாரங்கனை கூப்பிட்டு பேசுங்க''

முத்துராசு சொன்னது கேட்டு பெரியவர் குழப்பம் கொண்டார். அதற்குள் வாசன் அவர்கள் இருவரிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருந்தான். 

''எங்களை அடிச்ச இந்த ஊரை கொளுத்தாம விடமாட்டோம்'' என வலியின் ஊடே அவர்கள் பேசியது முத்துராசுவிற்கு பெரும் எரிச்சல் உண்டாக்கியது. அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து முரட்டுத்தோற்றம் கொண்டவரின் வாயில் சரியாக எறிந்தார். வாசன் அதிர்ச்சி அடைந்தான். 

''அண்ணே, போலிஸ் கேஸ் ஆகிரப்போதுண்ணே, விடுண்ணே''

''ராசு, என்ன பழக்கம் இது. கொஞ்சம் கூட மரியாதை இல்லாம. நாங்க எல்லாம் இங்க நிக்கிறது கண்ணுக்குத் தெரியலையா'' பெரியவர் சற்று கோபமாகவே கண்டித்தார். 

''ஐயா, நீங்க இப்படி வரவங்க எல்லாரையும் மன்னிச்சி அனுப்புங்க, அவனுக இப்படியே வந்து வந்து போகட்டும். அன்னைக்கு அப்படித்தான் திருட வந்தவங்களை மன்னிச்சி அனுப்பினீங்க''

''ராசு''

பெரியவர் சப்தம் இட்டதும் முத்துராசு அமைதி ஆனார். 

''இங்க நடந்தது எல்லாம் உங்களை எச்சரிக்கத்தான். மற்றபடி உங்க மேல எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. ராசு, இவங்களை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ''

அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். வாசன் தான் அவர்களை அழைத்துச் செல்வதாக அவர்களை அழைத்தான். அவர்கள் தாங்களாகவே செல்வதாக தடுமாறிச் சென்றார்கள். கூட்டம் அங்கிருந்து கலைந்தது. 

முத்துராசு தோட்டம் செல்வதாக கூறிக்கொண்டு அவர்களை வேறு வழி சென்று மடக்கினார். 

''பழி வாங்கணும்னு  இந்தப் பக்கம் இனிமே வந்த, நான் என்ன பண்ணுவேன்னு இப்ப காட்டினது விட பலமடங்கு இருக்கும். நீ நாராயணபுரத்தில பண்ணினது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா. சாரங்கன்கிட்ட சொல்லி வை. உன் கூட்டத்து ஆளுக எவனாச்சும் இந்த ஊருல குடி இருக்க வந்து குடி கெடுக்க நினைச்சான், நான் மனுசனா இருக்கமாட்டேன்''

எதுவும் சொல்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். 

வாசன் தன்  தோட்ட  வேலைகள் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான். வாசனுக்கு விவசாயம் பார்ப்பது அத்தனை தவறான காரியமா என யோசிக்க வேண்டும் போல் இருந்தது. என் பிள்ளைகள் விவசாயம் பார்ப்பார்களா? இந்த சுந்தரன் விவசாயம் பார்க்காமல் வெளியூர் போய் விட்டானே. மாதவி எதற்கு மருத்துவம் படிக்கச் செல்ல வேண்டும். 

ஊரில் விவசாயம் பார்த்த கொஞ்சம் சிலரில் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களாகவே  அவனுக்குத் தெரிந்து கொண்டு இருந்தது. கிராமங்கள் விவசாயம் நம்பி இருக்கிறது. விவசாயம் மழையை நம்பி இருக்கிறது. ஆனால் இந்த நிலத்தை எல்லாம் விலைக்கு வாங்கி அதில் தொழிற்சாலை எழுப்ப, வீடுகள் கட்டி விற்க ஒரு கூட்டம் இன்று அடி வாங்கியவர்களைப் போல அலைந்து கொண்டு இருக்கிறது. 

முத்தையா தனது நிலங்களை எல்லாம் விற்றுவிட்டு தனது பிள்ளைகளிடம் சென்று இருக்கப்போவதாக நேற்றுதான் மந்தையில் கூறிக்கொண்டு இருந்தார். இவரிடம் அதிகம் பணம் கொடுத்து அந்த நிலத்தை இவர்கள் கையகப்படுத்திக் கொண்டால் என்ன ஆவது என வாசன் யோசித்தான். அடிபட்டு போனவர்கள் நிச்சயம் திரும்புவார்கள். 

''என்ன யோசனை, மந்தையில் இன்னைக்கு என்ன பெரிய கலாட்டாவா. அந்த முத்துராசு கையை வைச்சிட்டு சும்மா இருக்கமாட்டானா''

தனது அப்பாவின் குரல் கேட்டு எழுந்தான் வாசன். 

''கிராமத்து நிலத்தை வாங்கி, அதில வீடு கட்டுற கூட்டம் பிரச்சினைப்பா''

''நானும் இப்பதான் கேள்விபடறேன். நீ அதை நினைச்சி வருத்தப்படாதே''

அப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் வாசனுக்கு இதமாக இருந்தன. அப்போது முத்துராசு வாசனை அழைக்க வந்தார். 

''வாசா, வா நாம போய்  அந்த சாரங்கனை என்ன ஏதுனு  விசாரிச்சிட்டு வருவோம்''

''இப்ப வேணாம்ணே, அவர்தானு  நமக்கு எப்படி தெரியும்''

''சொன்னாக் கேளு, பெரியவர்தான் உன்னை கூப்பிட்டு வரச்சொன்னார்''

வாசனுக்கு சாரங்கனை சந்திக்கப் போவதா வேண்டாமா என யோசனையாக இருந்தது. 

(தொடரும்) 




Friday 22 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 4

 பகுதி - 3 

4. பாரதியின் கனவு

மறுநாள் காலை பாரதியைப் பார்த்து சுந்தரன் என்னோட காதலை உனக்குத்தான் புரியக்கூடிய சக்தி இல்லை என  சொல்லி சிரித்தான். பாரதி சுந்தரனை நோக்கி முறைத்தாள்.

''என்ன முறைக்கிற, உன்னைவிட ஒரு நல்ல பொண்ணுதான் என்னை காதலிக்கிறா, டாக்டருக்குப் படிக்கிறோம்னு உனக்கு தலைக்கனம், உன் திமிரு எல்லாம் வேற எங்காச்சும் வைச்சிக்கோ''

''சுந்தரா, நான் உன்னை எதுவும் சொன்னேனா, நீ யாரையாவது காதலி எனக்கென்ன. எனக்கு உன்னை காதலிக்க மனசு இல்லை அவ்வளவுதான். உனக்கு ஒரு பொண்ணு கிடைச்சிருக்கானுட்டு என்னை நீ இப்படி பேசறத நிறுத்து''

''சும்மா அழாத, உனக்கு அந்த வாசனும் கிடைக்க மாட்டான். அவனுக்கு மாதவியை பேசி முடிச்சிட்டாங்க''

சுந்தரன் சொல்லி முடிக்கும் முன்னர் அவனது பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

''என்ன வாய் ரொம்ப பேசுதே, எங்கப்பா உனக்கு சம்மதம் சொல்லிட்டாருன்னுட்டு நீ துள்ளுற, ஒழுங்கா இரு இல்லை வேலை இடத்தில இருந்து தூக்கிருவேன். நீ எதுக்கு பாரதி இவன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க''

அருண் அங்கு வந்து நிற்பான் என்று சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தான் சுந்தரன்.

''அண்ணா, நீ அப்பா கிட்ட சொல்லி எதுவும் பிரச்சினை பண்ண வேண்டாம். பாவம் அவன்''

''சரி பாரதி''

பாரதி தனது தோழி கிருத்திகாவைச்  சந்திக்கச் சென்றாள்.

''என்னய்யா ஒருமாதிரி சோகமா இருக்க''

''ஒண்ணுமில்லை கிருத்தி''

''மறைக்காம சொல்லுய்யா''

''சுந்தரன் என்னை இன்னைக்கு வம்புக்கு இழுத்தான்''

''காதல் பண்ண ஆரம்பிசிட்டான்ல, இனி அவன் அப்படித்தான்.

''உன்னோட சொந்தக்கார பொண்ணுதான  அந்த பிரபா''

''தூரத்து சொந்தம்தான், சரிய்யா, உன்னோட ஜெனிடிக்ஸ் கனவு எல்லாம் எப்படி இருக்குய்யா, எதுவுமே நீ இதுவரைக்கும் சொன்னது இல்லையே''

''புதுசா ஒரு எண்ணம் இருக்கு கிருத்தி''

''சொல்லுய்யா''

''ஆர்என்ஏ மட்டுமே உள்ள ஒரு மனிதரை உண்டு பண்ணனும், டிஎன்ஏ இல்லாம சர்வைவ் பண்றமாதிரி செட் பண்ணனும்''

''என்னய்யா நீயும் நல்லா கதை சொல்ற, எந்த இங்க்லீஸ் படம் பார்த்த''

''கிருத்தி, நான் திருமால் அவரைப் போய் நாளைக்குப்  பார்க்கப் போறேன். அவருக்கு பல விஷயங்கள் தெரிஞ்சி இருக்கு. நீயும் வரியா''

''நான் வரலைய்யா, நீ மட்டும் போய்ட்டு வந்துரு. இன்னைக்கு ஏதாவது  படம் பார்க்கப் போகலாம்''

''இல்லை கிருத்தி, நான் இந்த ஆர் என் ஏ  பத்தி இங்க உட்காந்து எழுதலாம்னு வந்தேன், உனக்கு ஒண்ணும்  பிரச்சினை இல்லையே''

வாம்மா பாரதி என்றவாறு கிருத்திகா அம்மா வந்தார். கிருத்திகா, பாரதிக்கு குடிக்க ஏதவாது கொடுத்தியா என்றபடி உள்ளே சென்றவர் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வந்தவர் எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன் என வைத்தார்.

''என்ன பாரதி அம்மா, அப்பா அண்ணன் எல்லாரும் நல்லா இருக்காங்களா, அடிக்கடி இந்தப் பக்கம் உன்னைக் காணோமே''

''எல்லோரும் நல்லா இருக்காங்க, கொஞ்சம் வேலை''

''சரி பேசிட்டு இருங்க''

கிருத்திகா அம்மா சென்றதும் பாரதி ஆர்என்ஏ குறித்து குறிப்பெடுக்க ஆரம்பித்தாள்.

'வினையூக்கிகள் மட்டுமே வேதிவினையில் ஈடுபடும் என அறிந்த உலகத்திற்கு இந்த ஆர் என் ஏக்கள்  வினையூக்கிகளாக செயல்படும் என்பது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. வினையூக்கிகள் புரதத்தினால் ஆனவை. புரதம் எப்படி மடங்கி உருவாகிறதோ அதைப்பொருத்தே ஒரு வினையூக்கி உண்டாகும். மேலும் இந்த வினையூக்கி குறிப்பிட்ட வேதிவினையில் மட்டுமே பங்கு கொள்ளும்.

இந்த வினையூக்கித் தன்மை கொண்ட ஆர்என்ஏக்கள் ரைம்போசைம் எனப்படும். இது நமது செல்லில் உள்ள ரைபோசோம்  அல்ல.  இப்படி புரதம் உண்டாகும் முன்னரே இந்த ஆர்என்ஏக்கள் ஒரு வேதிவினையை எதற்கு உண்டு பண்ணி இருக்கக்கூடாது எனும் சிந்தனை செய்யாத மக்கள் இல்லை. இதனால் ஆர்என்ஏ  தான் இந்த உலகில் உயிர்கள் உண்டாக காரணம் என எண்ணுபவர்கள் உண்டு'

''என்னய்யா பயங்கரமா குறிப்பு எடுத்துட்டு இருக்கப் போல''

கிருத்திகாவின் குறுக்கீடு கண்டு பாரதி நிமிர்ந்தாள்.

''நீ எழுதுய்யா, தொந்தரவு பண்ணிட்டேனோ?''

''இல்லை கிருத்தி, இந்த ஆர்என்ஏ  உலகம் அதிசய உலகம் போல தெரியுது''

''எனக்கு இந்த உலகம் போதும், என்னை அதில் இழுக்காதே''

''சரி, ஒரே ஒரு விஷயம் கேளு. இந்த ஆர் என் ஏ  தான் இந்த உலக உயிர்களுக்கு காரணம்''

''அப்படின்னா கடவுள்''

''அது வாசன் கிட்டதான் கேட்கணும்''

''வாசனுக்கு கடவுள், உனக்கு ஆர் என் ஏ''

''அப்படியே வைச்சிக்கோ, சரி கொஞ்சம் இரு''

கிருத்திகாவை பாதியில் நிறுத்திவிட்டு மேலும் சில வரிகள் பாரதி எழுத ஆரம்பித்தாள்.

'புரதம் உண்டாக்கும் வேதிவினையை இன்றளவில் இந்த ஆர் என் ஏக்கள் மட்டுமே நமது செல்லில் உள்ள ரைபோசொமில் செயல்படுத்துகின்றன. இந்த ஆர் என் ஏக்கள் ஸ்திரத்தன்மை அற்றவைகள் என்பதாலும், இவைகளால் எல்லா வேதிவினையை ஊக்குவிக்க முயலாது என்பதாலும் நாளடைவில் இந்த ஆர் என் ஏக்களை புறம் தள்ளிவிட்டு புரதம் முக்கிய வினையூக்கியாக செயல்படத் தொடங்கியது.

இந்த ஆர் என் ஏக்கள் டி என் ஏக்களில் இருந்து தற்போது உருவாகி அவை கரு உறையை விட்டு வெளியேறி இந்த புரதம்தனை உருவாக்குகிறது எனும்போது இந்த ஆர் என் ஏக்கள் தான் டி என் ஏக்கள் உருவாக காரணம் என்பதும் அறிய முடிகிறது. இந்த உலகம் ஆர் என் ஏ  உலகம் என்பதில் மறு கருத்து இல்லை'

''பாரதி, நாம வெளியில் போகலாமாய்யா?''

''கிருத்தி, இப்போதான் கொஞ்சம் எழுதி இருக்கேன், அதுக்குள்ளே வெளியில் போகணும்னு சொல்ற''

''உனக்கு இப்படி ஏதாவது கிடைச்சிருது, எனக்கு என்ன இருக்கு சொல்லுய்யா. ஜாலியா வெளியில் போய்ட்டு அப்புறம் வந்து எழுதலாம்''

''இனி நீ சொன்னால் கேட்கமாட்ட, சரி வா போகலாம்''

இருவரும் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் கூட வந்து இருக்கமாட்டார்கள். அவர்கள் எதிரில் சுந்தரனும், பிரபாவும் வந்தனர். இதை பாரதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

''கிருத்தி, நாம திரும்பிப் போய்ருவோம்''

''எதுக்குய்யா பயப்படற?''

''யார் வராங்க பாரு''

''நம்ம பிரபா, சுந்தரன்யா''

''சொன்னா கேளு கிருத்தி''

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சுந்தரன் வெகுவேகமாக இவர்களை நோக்கி வந்தான். பிரபாவும் உடன் வந்தாள் .

''பாரதி, இதுதான் பிரபா. உன்னை விட அழகு''

''சுந்தரா, என்ன பேச்சு பேசுற'' கிருத்திகா சற்று கடுமையாகவே சொன்னாள்.

''சொன்னதுல என்ன தப்பு, பாரதிக்கு தான் ஒரு பெரிய அழகினு நினைப்பு''

பிரபா இடைமறித்து ''சுந்தரா, நீ இப்படி எல்லாம் பேசின அப்புறம் நான் உன் கூட பழகுறதை நிறுத்திறுவேன்'' என்றதும் சுந்தரன் நிலைமையை புரிந்துகொண்டு  அங்கிருந்து நகர்ந்தான். பிரபா இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்ந்தாள்.

''நீ சொன்னா கேட்டியா கிருத்தி''

''என்னய்யா அவன் இப்படி இருக்கான், அவனுக்குப் போய்  நான் உதவினேன் பாரு''

''விடு கிருத்தி, அவனுக்கு நான் அவனோட காதலை ஏத்துக்கலைன்னு மன வருத்தம். அவனுக்கு இது ஒரு காயம் மாதிரி இருக்கும். என்னோட கனவு இப்படி காதல் பண்றது இல்லை கிருத்தி. எனக்கு இந்த ஆர் என் ஏ  உலகம் தான் உலகம்''

''ஆர் என் ஏவை  கொஞ்சம் விட்டுத் தள்ளுயா''

''நாளைக்கு நிசமாவே நீ திருமால் பார்க்க வரலையா''

''ஏன்யா இப்படி உங்க கிராமத்து ஆட்கள் முக்கியம்னு இருக்க, அந்த திருமால் என்ன உனக்கு சொந்தமாய்யா. பெருமாள் தாத்தானு  சொல்ற, கொஞ்சம் யூத் மாதிரி பிகேவ் பண்ணுய்யா''

''எல்லாம் சொந்தம்தான்''

''எப்படி''

''நாளைக்கு வா சொல்றேன்''

''ம்ம் சரிய்யா''

விரைவாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் பாரதி குறியாக இருந்தாள். கிருத்திகாவும் பாரதிக்கு ஏற்றபடி ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினார்கள்.

விவசாய நிலங்களில் வீடு கட்டுவது போல இந்த பூமியில் பல மாற்றங்கள் எப்படி வெளி கண்ணுக்கு புலப்படுகிறதோ அது போல நமது உடலில் நடந்த அல்லது உடல் உருவாகும் முன்னர் உள்ளே நடந்த விஷயங்களை குறித்து வைக்காமல் போனாலும் இப்படித்தான் என ஒரு தீர்மானத்திற்கு வர முடிகிறது. அப்படித்தான் பாரதியும் ஆர் என் ஏவில் மூழ்கிக் கொண்டு இருந்தாள்.

(தொடரும்)


Thursday 14 May 2015

நுனிப்புல் பாகம் 3 -3

பகுதி -2 

3. பழியும் நிவராணமும்

''ஐயா, உங்ககிட்ட ஒரு விசயம் கேட்கலாமா''

வாசன் என்ன கேட்கபோகிறான் என்பதை யோசித்த விநாயகம் மறுப்பு எதுவும் சொல்லாமல் சரி கேள் என்றே சொன்னார்.

''உங்களுக்கும் நாச்சியார் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம்''

''வாசன், எனக்கு என்ன சொல்றதுனு  தெரியலை, அது ஒரு நிறைவேறாத காதல்''

''நீங்க காதலிச்சீங்களா''

''என்ன வாசன், காதல் வரக்கூடாதா?''

''இல்லை ஐயா, எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் அதான் கேட்டேன்''

''நீயும் மாதவியும் நேசிக்கிற மாதிரி எங்க நேசிப்பு இருந்து இருந்தால் எங்களுக்குப் பிரச்சினை வந்து இருக்காது, நான் சைவம், நாச்சியார் வைணவம். இது ஒரு தடையாக இருக்கும்னு நான் அப்ப எதிர்பார்க்கலை''

''ஐயா, ஆனா நீங்க இந்த நெகாதம் செடி, பெருமாள் கோவில் எல்லாம் ஒரு வைணவம் பின்பற்றிய முறைதானே. அதுவும் உங்கள் கனவில் நாராயணன் வந்து சொன்னதாகதானே இந்த புத்தகம் எல்லாம் சொன்னீங்க. உங்களை சைவம்னு யாருமே சொன்னது இல்லையே''

''என் பேரு மட்டும் தான் நான் மாற்றலை வாசன், மற்றபடி நான் எல்லாம் வைணவத்துக்கு முழுசா மாறிட்டேன். அதுக்கு காரணம் நாச்சியார் தான்''

பெரியவரின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. ஒரு இளமைக்கால சரித்திரத்தை ஒவ்வொரு கிராமங்களும் தாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நிராகரிக்கப்பட்ட கனவுகள். பழமையில் ஊறிப்போன மனிதர்கள் என இன்னும் ஆங்காங்கே கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைய தலைமுறைக்கு புரியாத ஒரு வாழ்க்கை ஒன்றை கிராமம் முழுவதும் இன்னும் வெறுத்து ஒதுக்கிவிடவில்லை.

''உங்க சொந்த ஊரு சாத்திரம்பட்டிதானா ஐயா''

''ஆமாம் வாசன், எங்க குடும்பம் மட்டும்தான் சைவம். மற்ற எல்லாருமே வைணவம். எங்க குடும்பம் அங்கே எப்படி போனாங்கனு  நானும் என்னோட அப்பா அம்மாகிட்ட கேட்டது இல்லை. எங்க சொந்தகாரங்க யார் எவர்னு  எனக்குத் தெரியாது. அந்த ஊர்க்காரங்க மட்டுமே சொந்தம்னு  நினைச்சப்பதான் இந்த நாச்சியார் பழக்கம் ஆனா. இப்ப இதுக்கு மேல வேண்டாமே''

குரல் தழுதழுத்தது. காதலித்தவரிடம் காதலின் வலி பற்றி கேட்டு அறிந்து கொள்ள முடியாது. காதலின் வலி என்பது என்றுமே ஆற்ற இயலாத ஒரு துயரம். வாழ்வின் அடிப்படை என்னவெனில் காதல் தோற்ற பின்னர் வேறு ஒரு பெண்ணை அல்லது ஆணினை கல்யாணம் பண்ணி வாழ்வது சகஜம். அப்படி இல்லாதபட்சத்தில் மரணம் எனும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். காதலுக்கு என கல்யாணம் பண்ணாமல் வாழ்வது மிகவும் அரிது.

''ஐயா''

''என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுப்பா''

வாசன் பெரியவரிடம் சரி என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான். எவருமே சொல்லாத விசயம் இது. இந்த ஊரில் எவருமே எதையும் பெரியவர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இறந்து போன பெருமாள் தாத்தாவுக்கும், சென்னையில் இருக்கும் திருமாலுக்கும் பெரியவர் பற்றி தெரிந்து இருக்கிறது. ஆனால் மாதவி பற்றி சாத்திரம்பட்டியில் சொன்னார்களே. அதுவும் கொஞ்ச வருஷம் முன்னால நீ வந்துருக்கக் கூடாதாம்மா என்று அந்த நாச்சியார் அம்மாள் எதற்கு மாதவியிடம் சொல்லி இருக்க வேண்டும். வாசன் நிறைய யோசிக்கலானான்.

அன்று இரவே மாதவிக்கு அழைப்பு விடுத்தான்.

''மாதவி, உனக்கு பெரியவர் விநாயகம் பற்றி தெரிஞ்சதை சொல்லு''

''என்ன மாமா, உருகும் உயிர் கதை சொல்ல சொல்றீங்களா?''

''மாதவி, நான் சீரியசா கேட்கிறேன். அவரும் நாச்சியார் அம்மாவும் காதலிச்சாங்கனு  பெரியவர் சொன்னார்''

மாதவி மறுமுனையில் எதுவும் பேசாமல் இருந்தாள். சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர் மாதவியே  தொடர்ந்தாள்.

''மாமா, நான் அடுத்தவாட்டி ஊருக்கு வரப்ப எல்லாம் விபரமா சொல்றேன். பெரியவரை அந்த ஊரில இருந்து விரட்டி விட்டுட்டாங்க. அவர் குளத்தூர் வந்துட்டார். அதுக்கு காரணம் பெருமாள் தாத்தா. சாரங்கன் ஐயா கொஞ்சம் உதவினார்''

''உனக்கு எப்படித் தெரியும் மாதவி, என்னைக்காச்சும் நீ இதுபத்தி என்கிட்டே பேசி இருக்கியா''

''மாமா நான் யாருகிட்டயும் எதுவும் பேசிக்கிறல, ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோங்க, உங்ககிட்ட இது எல்லாம் சொல்ல வேணாம்னு நினைக்கல. யாராச்சும் பெரியவர் பத்தி ஊருக்குள்ள எதுவும் பேசுறாங்களா, நாம எல்லாம் அவர் ஊருக்கு வந்தப்பறம் பிறந்தவங்க மாமா. நான் எழுதின கதையே இப்போதான மாமா படிச்சீங்க''

''சரி மாதவி, நீ ஊருக்கு வந்தப்பறம் சொல்லு. படிப்பு எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு''

''பரவாயில்லை மாமா, என்னோட ஆராய்ச்சி சம்பந்தமா ஒரு புது மேடம் கிட்ட உதவி கேட்டு இருக்கேன், சரினு  சொல்லி இருக்காங்க. இந்த பெரியவர் விஷயத்தை குழப்பிக்க வேண்டாம். பாரதி போன்  பண்ணினாள். சுந்தரன் அங்க வேலைப் பார்க்கிற இடத்தில ஒரு பொண்ணை  காதலிக்கிறானாம். ஏன்  மாமா உங்க குடும்பம் காதல் குடும்பமா?''

''மாதவி, என்ன சொல்ற நீ. அவன் திருந்தவே மாட்டான். போனவாட்டி பிரச்சினைனு  ஊருக்கு வந்தான். இப்ப மறுபடியும் என்ன இது. நான் அவனுக்கு போன்  பண்றேன்''

''ஐயோ மாமா, வேண்டாம். நான் உங்ககிட்ட தகவலாத்தான் சொன்னேன். நம்ம ஊருக்கு எதுவும் தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டா. அந்த குட்டிப் பையன்களைப் போய்  பார்த்தீங்களா?''

''பார்த்தேன் மாதவி''

''உங்களுக்கு வியர்த்துக் கொட்டி இருக்குமே''

''மாதவி''

''சும்மா சொன்னேன் மாமா. ஊருக்கு வரப்ப பேசறேன். எதுவும் முக்கியம்னா போன்  பண்ணுங்க''

''உனக்கு எல்லா விஷயங்களும்  முன்கூட்டியே தெரியுமா மாதவி''

''ஒண்ணுமே தெரியாது மாமா, சரி வைச்சிடுறேன்''

வாசனுக்கு மாதவி பற்றி அன்றுதான் யோசனை வந்தது. ஒருவேளை இவளுக்கு எல்லாம் தெரியுமோ. அப்படியே தெரிந்தாலும் முன்கூட்டி நடப்பதை எப்படி சொல்ல இயலும். எனக்கு வியர்த்தது அவளுக்கு எப்படித்  தெரியும். யூகித்து இருப்பாளோ?

வாசன் வீட்டின் மாடியில் மயங்கி விழுந்தான். தற்செயலாக அங்கு வந்து அவன் அம்மா தரையில் விழுந்து கிடந்த வாசனை எழுப்பிவிட்டார். வாசன் முழித்துப்  பார்த்தவன் அம்மா பெரியவர் பத்தி ஏதாவது பழைய வாழ்க்கை தெரியுமா என்றான். எதுவும் தெரியாதுப்பா என்றார். வாசன் அதுக்கு மேல் கேட்பது முறையில்லை என தவிர்த்தான்.

சாத்திரம்பட்டிக்குள் ஒரு சோகம் ஒளிந்து கொண்டு இருந்தது.

(தொடரும்)


Tuesday 5 May 2015

நுனிப்புல் பாகம் 3 - 2

நுனிப்புல் பாகம் 3 - 1

2. சுந்தரனின் இரண்டாவது காதல்

சுந்தரன் இன்று தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரபாவிடம் தனது விருப்பத்தைச் சொல்லிவிடலாம் என தீர்மானம் கொண்டான். பிரபா குறித்து ஓரளவுக்குத் தகவல்கள் சேர்த்து வைத்து இருந்தான். பிரபா சம்மதம் சொல்லிவிட்டால் பிரச்சினை இருக்காது என்றே திட்டமிட்டான். பாரதியுடன் நேர்ந்தது போலத் தனக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் சற்று பதட்டம் இருக்கத்தான் செய்தது. வாசனின் கவிதைப் புத்தகம்தனை தேடினான். அதில் இருக்கும் சில கவிதைகளை மனப்பாடம் செய்து கொண்டான்.

சேகர், அருண் வரும் முன்னரே வேலைக்குச்  சென்று சேர்ந்தான் சுந்தரன். பிரபாவும் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தாள். பிரபா, மாநிறம். நடுத்தர உயரம். இங்கு வேலைக்குச்  சேர்ந்து ஆறு மாதங்களே ஆகிறது. எல்லோரிடம் நன்றாக பழகும் குணம்.

எப்போது பிரபாவிடம் பேசும் தருணம் கிடைக்கும் என சுந்தரன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். மனம் வேலையில் ஒட்டவில்லை. அருண் கூட இரண்டு முறை சுந்தரனை வந்து சத்தம் போட்டுச் சென்றான். மதிய வேளையில்தான் நேரமே கிடைத்தது. எப்படியும் சொல்லிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் பிரபாவை நோக்கிச் சென்றான் சுந்தரன்.

''பிரபா, உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்''

''என்ன திடீருனு''

''நீ யாரையாச்சும் காதலிக்கிறியா''

''இல்லை, எதுக்கு இந்த கேள்வி. நான் இங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்து பார்க்கிறேன், உன்னோட பார்வை சரியில்லையே''

''உன்னை யாரும் காதலிக்கிறாங்களா''

''எனக்கு எப்படித்  தெரியும், இதுவரைக்கும் யாருக்கும் சொல்ல தைரியம் இருந்தது இல்லை, ஆமா என்ன இன்னைக்குப் பேச்சு ஒருமாதிரியா இருக்கு''

''உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, உன்னை நான் காதலிக்கலாமா?''

இதைக் கேட்டதும் பிரபா குலுங்கி குலுங்கிச் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற?''

''காதலிச்சிக்கோ, யாரு வேணாம்னு சொன்னாங்க''

''உனக்காக இந்த கவிதையை யோசிச்சி வைச்சேன், நீ கேளு''

''கவிதை எழுதுவியா, சொல்லு கேட்கலாம்''

''நான் மட்டும் இருந்தேன்
உலகம் வெறுத்தது
நீ என் உடன் வந்தாய்
உலகம் இனித்தது''

''நீதான் எழுதினியா?''

''ஆமாம், இன்னொரு கவிதை கேளு''

''சொல்லு''

''பொய் உரைக்க வருவதில்லை
ஐயம் உள்ளத்தில் எழுவதில்லை
உன்னுடன் பேசுவதாலே''

''நிசமாவே நீதான் எழுதினியா''

''இதோ இதுவும்
வலி வந்ததும் உன்னை மட்டும் நினைத்தேன்
வந்த வழி நோக்கியே வலியும்  சென்றதே''

''வாசன் அப்படின்னு ஒரு கவிஞர் உனக்குத் தெரியுமா?''

''யார் வாசன்?, என்ன கவிஞர்?''

''நீ சொன்ன கவிதை எல்லாம் நான் கவிதைப் புத்தகத்தில் படிச்சி இருக்கேன். என் வீட்டுல இந்த புத்தகம் இருக்கு. கிருத்திகா என்னோட சொந்தம்தான். தமிழரசி என்னோட அத்தை. இவங்களை உனக்குத் தெரியாதுன்னு சொல்லாதே. அவங்களோட எங்களுக்கு கொஞ்சம் மனஸ்தாபம், அதான் அவங்க யாரு நாங்க யாருனு இருக்கோம், ஆனா கிருத்திகா, பாரதி எல்லாம் என்னோட பேசுவாங்க. உன்னோட பார்வையை வைச்சி நான் உன்னை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணினப்ப நீ யாரு, பாரதி யாரு, இந்த கம்பெனி முதலாளி யாருனு எல்லாம் எனக்குத் தெரியும். உன்னை திட்டிகிட்டே இருப்பாரே அருண் அவர் கூட யாருனு தெரியும்''

''பிரபா அது வந்து''

''பொய் உரைக்க வருவதில்லை அதை நீ சொல்லி இருக்கக்கூடாது, உனக்கு பாரதியோட லவ் பெயிலியர், இப்போ என்கிட்டே முயற்சி பண்ற. என்கிட்டே பெயிலியர் ஆயிருச்சினா அடுத்து யாரு''

''இல்லை பிரபா, உன்னை எனக்கு நிறையப் பிடிச்சி இருக்கு''

''எதுக்கு இப்படி காதலிக்கத் துடிக்கிற''

''காதலிக்காம கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லா இருக்காது''

''யார் சொன்னா''

''எனக்குத் தெரியும், நானாத்தான் சொல்றேன்''

''சுந்தரா அங்கே என்ன பேசிட்டு இருக்க, மணி என்ன ஆகுது. பிரபா அவனோட உனக்கு என்ன பேச்சு''

அருண் அவர்களை நோக்கி கத்தியபடியே வந்தான். சுந்தரன் பிரபாவிடம் சொல்லிவிடாதே என கண்களால் கெஞ்சினான்.

''இல்லை சார், சில புரோசெசிங் எல்லாம் இன்னைக்குள்ள பண்றதைப் பத்தி சொல்லிட்டு இருந்தார்''

''சுந்தரா, ஒழுங்கா வேலையை மட்டும் பாரு. நீ எனக்கு நிறைய உதவியா இருக்கிறனுதான் இன்னும் இங்கு இருக்க. வேலை இடத்தில இப்படி வெட்டியா நின்னு பேசிட்டு இருந்த குளத்தூருக்கு பெட்டியை கட்டு''

''வேலை பத்திதான் பேசிட்டு இருந்தேன்''

''போ, எதிர்த்துப் பேசாத''

சுந்தரனை  இது போல பலமுறை அருண் அவமானபடுத்திக்கொண்டே இருந்து வருகிறான். தனது தங்கையை காதலித்தான் என்கிற ஒருவித மன எரிச்சல் அவனுடன் இருந்து கொண்டே இருந்தது. வேறு வழியின்றி இதை எல்லாம் பொறுத்துக் கொண்டே இருப்பது சுந்தரனுக்கு பழகிவிட்டது. வாசனின் கவிதைகள் இத்தனை தூரம் பிறர் தெரிந்து இருப்பார்கள் என சுந்தரன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலை வேலையை முடித்து கிளம்பும்போது சேகர் வந்து சுந்தரனை வீட்டுக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார். சுந்தரன் தான் ஓரிடம் செல்ல இருப்பதாக சொல்லி பிறகு வருகிறேன் என சொல்லி அனுப்பினான். அருண் சுந்தரனை முறைத்துப் பார்த்துவிட்டு 'வேகாம வீடு வந்து சேரு' என எச்சரித்துச் சென்றான்.

வீட்டிற்கு கிளம்பிய பிரபா சுந்தரனிடம் வந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் ஒரு காபி கடைக்கு சென்றார்கள். இவர்கள் இருவரும் இப்படி சேர்ந்து செல்வது இன்றுதான் முதல்முறை.

''சுந்தரா, சொந்தமா ஒரு கவிதை எழுதி எனக்குத்  தா, இப்படி அடுத்தவங்க கவிதையைத் திருடாதே. உன்னை அருண் சார் எப்படி அவமானப்படுத்துறார், உனக்கு வேற வேலை இந்த ஊரில கிடைக்காதா?''

''இல்லை பிரபா, வேற எங்கயாச்சும் வேலைக்குப் போனா ஊருல திட்டுவாங்க, அதுக்கு இவர்கிட்ட திட்டு வாங்கிட்டுப் போயிரலாம். உன்னை நான் காதலிக்கலாமா''

''இனிமே திட்டு வாங்காம இருக்கப்பாரு. வாரத்தில மூணு நாளு திட்டு வாங்கிருற''

''என்மேல இருக்கப் பிரியத்திலதான நீ அருண் கிட்ட சொல்லலை''

''பாவமா இருந்துச்சி, அதனால்தான் சொல்லலை, சரி நீயா யோசிச்சி ஒரு கவிதை இப்போ சொல்லு''

''சூரியன் ஒளி  தொலைத்தாலும்
உனது ஒளி
ஒருபோதும் என்னுள் தொலையாதே

நிலவு சுற்றுப்பாதை
மறந்தாலும்
உன்னை பின்தொடரும்
பாதை எனக்கு மறக்காதே

கொடுங்கனவு ஒன்றில்
நீ வந்து நின்றதும்
மகிழ்கனவாக மாறுதே

என் அழகு பன்மடங்கு
கூடிவிடும்
என் உலகு சிறந்து
மலர்ந்து விடும்
நீ மட்டும் காண்பதாலே

என் மதியும் மயங்கும்
வான் மதியும் தயங்கும்
உன் அழகை காண்பதாலே''

சுந்தரன் மடமடவென சொல்லி முடித்தான். பிரபா குலுங்கி குலுங்கி மீண்டும் சிரித்தாள்.

''என்ன சிரிக்கிற பிரபா''

''மறுபடியும் வாசன் கவிதைகளா''

''உனக்கு எப்படி இத்தனை ஞாபகமா தெரியும்''

''அப்போ அப்போ எடுத்துப் படிப்பேன், இதுமாதிரி நிறைய கவிதைகள் மனசுல பதிந்து இருக்கு. எல்லோரும் சொல்றதுதானே''

''என்னை உனக்குப் பிடிச்சி இருக்கா''

''காதலில் தோத்து இருக்க, அதனோட வலி உனக்குத் தெரியும். அதனால என்னை நீ ஏமாத்தமாட்டனு நம்பலாம்''

''அப்படின்னா என்னை நீ காதலிப்பியா''

''நீதான் என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டியே''

''உனக்கு கவிதைப் பிடிக்குமா''

''ஆமாம்.

சாப்பிட்டு முடித்து இருந்தேன்,
மீண்டும் பசித்தது.
அப்போதுதான் உணர்ந்தேன்
நீ இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை என''

''சூப்பர் சூப்பர்''

''இதுவும் வாசன் எழுதின கவிதைதான். நான் ஒண்ணும்  எழுதலை. இந்த கவிதையை மனப்பாடம் பண்ணலையா''

''பிரபா உங்க வீட்டுல நீ ஒரே பொண்ணுதான. உனக்கு அப்பா இல்லைதானே. உங்க அம்மா கூட பள்ளிக்கூட டீச்சர்''

''நான் யாரு என்ன பண்றேன் எங்க குடும்பம் எப்படி அப்படின்னு ஊரெல்லாம் விசாரிச்சி இருக்கப்போல''

''உங்க சொந்தம் பந்தம் எல்லாம் விசாரிக்கலை. உங்க வீடு பக்கம் கூட நிறையவாட்டி வந்து இருக்கேன்''

''கள்ளத்தனம் உன்கிட்ட நிறைய இருக்கு''

''இல்லை, உன் மேல இருக்கிற அக்கறைதான்''

''பார்க்கலாம் எப்பவுமே இருக்குமான்னு''

இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். பிரபாவுடன் அவளது வீடு வரை வந்து விட்டுவிட்டே தனது வீடு நோக்கிச் சென்றான் சுந்தரன். அன்று இரவு சாப்பிட அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். சேகர் சுந்தரனை நோக்கி கேட்டார்.

''பிரபாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''

''எந்த சம்பந்தமும் இல்லை''

''சுந்தரா, என்கிட்டே நீ எதையும் மறைக்க நினைக்காதே, உண்மையை சொல்லு. என்னை நம்பித்தான் உன்னை உங்க அப்பா அம்மா இங்கே அனுப்பி இருக்காங்க''

''எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரை பிடிச்சி இருக்கு''

''அப்பா இவனை நம்ம வீட்டை விட்டு வெளியேப் போகச்  சொல்லுங்க. இவனால நமக்குப் பிரச்சினைதான்''

அருண் சற்று கோபத்துடன் சொன்னான். பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

''இரு அருண். நீ இவனை இனிமே வேலை இடத்தில திட்டுறதை குறை. எத்தனை தடவை சொல்றது. சுந்தரா, நீ வேலை இடத்தில் வேலையில்  கவனமா இரு. நான் பிரபா அம்மாகிட்ட பேசுறேன். எதுவும் பிரச்சினை வராமல் இருக்கணும்''

''நான் எதுவும் பிரச்சினை பண்ணமாட்டேன்''

''அப்பா, என்ன நீங்க. இவனை...''

''அருண். நீ தலையிடாதே''

சுந்தரனுக்கு அன்று நிம்மதியாக இருந்தது. தன்னை சேகர் ஐயா புரிந்து இருக்கிறார் எனும்போது சற்று ஆறுதலாக இருந்தது, இல்லையெனில் இந்த அருண் பெரிய பிரச்சினை பண்ணி இருப்பான். தன்னை நிராகரித்த பாரதிக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்க வேண்டும், அவளுக்குள் ஒரு வலி உண்டாகி இருக்க வேண்டும். அதனால்தானே அமைதியாக இருந்தாள்  என சுந்தரன் நினைத்தான்.

சுந்தரன் வாசனின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டினான்.

'எல்லாம் சொல்லிவிட்டாயா என்றாள்
ஆம் என்றேன்.
இனி நீ சொல்ல ஒன்றும் இல்லைதானே? என்றாள்.
உன்னை காதலிக்கிறேன் என்றேன்.
வெட்கித்  தலை குனிந்தாள்'

(தொடரும்)





Wednesday 29 April 2015

நுனிப்புல் பாகம் 3 - 1

1. தாவரங்களே போற்றி

இருளும் ஒளியும் சேருமிடத்து
இருளும் ஒளியும் இருப்பது இல்லை
இருள் தனியா, ஒளி தனியா
உன்னைத் தவிர எவரும் அறிவது இல்லை


வாசனுக்கு நெகாதம் செடி எல்லாம் வாடிப் போனது பெரும் வருத்தம் தந்து கொண்டு இருந்தது. நிலத்திற்கு அடியில் காய் தரும் கனி தரும் தாவரங்கள் ஒரு முறைதான் வளரும். அவைகளைப் பிடுங்கி எறிந்ததும் விலங்குகளுக்கு உணவு ஆகும், நிலத்திற்கு உரம் ஆகும். நிலத்திற்கு வெளியில் காய்க்கும் சில தாவரங்களை வேருடன் பிடுங்கிட அதன் ஆயுட்காலம் அத்துடன் முடியும். ஆனால் கனி மட்டும் பறித்த பின்னர் இப்படி வதங்கிப் போகும் தாவரங்கள் ஏதேனும் உண்டா என வாசனுக்கு புரியவில்லை.

ரோகிணியிடம் அல்லது பூங்கோதையிடம் கேட்டுப் பார்க்கலாம் என்றே நினைத்தான். ஒருவேளை விநாயகம் ஐயாவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறதா என அவரை நோக்கிச் சென்றான்.

''என்ன வாசன், ஒரு மாதிரியாக இருக்க''

''எல்லா செடிகளும் வாடி வதந்கிருச்சியா, இனிமே அவை கனி தராது, பிடுங்கிற வேண்டியதுதான்''

''இதைப் பத்தி அந்த நோட்டில் எதுவும் எழுதலையே, நம்மகிட்ட கொஞ்சம் விதைகள் இருக்குதானே, அதை வைச்சி மீண்டும் விதைக்கலாம். ஆனால் இதனோட மருத்தவ பலன் என்னன்னு  எனக்குத் தெரியலை, அந்த கனியை சாப்பிட்டுப் பார்த்தாலாவது சொல்லலாம், எப்படி விற்பனை பண்றது யார் வாங்குவாங்க புரியலையே வாசன்''

''ஐயா இப்போதைக்கு இந்த கனி எதையும் நாம விற்க வேணாம், சாப்பிட வேணாம். அதில் இருக்கிற விதைகளை நாம விதைக்க இந்த நிலத்தை பண்படுத்தி ஆகணும் அதுக்கு எப்படியும் ஒரு இரண்டு வாரங்கள் ஆகும்''

''அப்படின்னா இந்த செடிகளை பிடுங்கிரலாம் வாசன்''

''இதை எல்லாம் காய வைச்சி நம்ம பூங்கோதை இல்ல ரோகிணிகிட்ட கொடுத்து ஆராய்ச்சி பண்ண சொல்லலாம்''

''பூங்கோதை இப்பதான் குழந்தைக்கு தாய் ஆகி இருக்கா, நீ ரோகிணிகிட்ட  கேட்டுப் பாரு வாசன்''

''நீங்க சொன்ன மாதிரி இந்த செடி மனசை நெகிழ வைக்கும் செடியா இருக்குமோ?''

''இருக்கும் வாசன்''

''ஆனா, இந்த செடியே வாடிப் போகுதே இது எப்படி மருத்தவ குணம் கொண்டதாக இருக்கும்''

''இன்னும் உனக்கு சந்தேகம் போகலையா?''

''ஐயா கேள்வி கேட்கிறது சந்தேகத்தின் அடிப்படையில் இல்லை, தெரிஞ்சிக்கணும் போல இருக்கு''

''முத்துராசுவை கூப்பிட்டு எல்லா செடிகளையும் பிடுங்கி காயப்போட்டு பத்திரமா எடுத்து வை, அப்படியே நிலத்தை உழுது போட்டுரு, எரு  எல்லாம் அடிக்கணும்''

''எப்போ ஐயா சாத்திரம்பட்டி போகலாம், எனக்கு அங்கே போகணும் போல இருக்கு''

''இல்லை வாசன் அதுபத்தி பேச வேணாம்''

இந்த தாவரங்கள் நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது பொருட்கள் இல்லாமல் ஒழுங்காக வளராது. மேலும் இந்த இலைகளில் இருக்கும் குளோரோபில் மெக்னீசியம் கொண்டு இருக்கும். இப்படி தாது பொருட்கள் உட்கொண்டு வளரத் தொடங்கியதுதான் இந்த தாவரங்கள்.

வெறும் பாறைகளாக இருந்தது அந்த பாறைகளில் இருக்கும் தாது பொருட்கள் மண்ணுக்குள் போகத் தொடங்கின. நைட்ரஜன் ஆகாய வெளியில் அதிகம் இருந்த போது  மின்னல்கள் அந்த நைட்ரஜன்களை  நைட்ரேட்களாக மாற்றின. இந்த நைட்ரேட்கள் பூமிக்குள் புதையுண்டு இருந்தன.

பாக்டீரியாக்கள் இந்த பூமியில் உருவான காலத்தில் அவைகளும் இந்த நைட்ரஜனை நைட்ரேட்களாக மாற்றும் வல்லமை கொண்டு இருந்தன. அது மட்டுமின்றி இந்த நைட்ரேட்களை நைட்ரஜனாக மாற்றும் வல்லமை சில பாக்டீரியாக்களுக்கு இருந்தது.

தாவரங்கள் நேரடி நைட்ரஜன் உட்கொள்வதில்லை. மாறாக கரியமில வாயு உட்கொண்டு உணவு தயாரிக்கும். மனிதர்கள் ஆக்சிஜனை உட்கொண்டு ஆற்றல் பெற்றார்கள். இந்த நைட்ரஜன் ஒரு முக்கிய தனிமம். இவை நமது உடலில் காணப்படும் மரபணுக்களில் வியாபித்து இருக்கின்றன. நீர் வளம் கொண்டு இருந்தாலும் கனிம வளம் இல்லாத நிலம் வறண்ட நிலம்தான்.

''முத்துராசு அண்ணே, அந்த செடி எல்லாம் பிடுங்கிரலாமா?''

''இருக்கறதே அம்பதோ அறுவதோ, இதுக்கு ரெண்டு பேரா?''

''துணைக்கு இருந்தா நல்லா இருக்கும்னு பார்த்தேண்ணே''

''ஆமா வாசா, நீயும் ஐயாவும் இந்த செடியை  வேரோட பிடுங்கி கொண்டு வரப்ப வாடாத செடி பழத்தை பறிச்சதும் எப்படி வாடிருச்சி, அதுவும் சில பழங்களில் விதை கூட இல்லாம இருந்துச்சே''

''யாருக்குண்ணே தெரியும்''

''நீங்க மலையில் இந்த செடியை பிடுங்கறப்ப, வேற வாடின செடி எதுவும் இருந்துச்சி?''

''அப்படி எதுவும் கண்ணுக்குத் தெரியலைண்ணே''

''கத்தரிக்காய் கூட சில மாசங்கள் வரும், இது ஒரு வருஷம் கழிச்சி ஒரே வாட்டி பழத்தை கொடுத்துட்டு தலையைப் போட்டுருச்சி, என்ன மகிமை செடியோ''

''வாங்கண்ணே வேலையை முடிச்சிரலாம்''

''இரு வாசா, இந்த பாத்திக்கு தண்ணி பாச்சிட்டு வந்துருறேன், நீ மேற்கொண்டு படிக்கலாம்ல, என்னமோ அக்ரி படிப்பு இருக்காமே''

''அது யாருண்ணே  சொன்னா''

''நம்ம வீட்டு பிள்ளைக படிக்குதல''

''பரவாயில்லைண்ணே படிப்பு விபரம் தெரிஞ்சி வைச்சிருக்கீங்க. நெத்து  விடுற செடி எல்லாம் ஒரு பொழப்புதான், அண்ணே இதுல சில செடிகளை தண்டுவ வெட்டி வைச்சி பார்ப்பமோ''

''உன் இஷ்டம் வாசா, நீயும் ஐயா பேச்சு கேட்டு இந்த பகுமான செடியை நட்டு வைச்ச, உரம் தண்ணீ பாய்ச்சினதுதான் மிச்சம், ஒரு காசும் இன்னும் பாக்கலை''

''கொஞ்சம் காலம் ஆகட்டும்ணே''

வாசனும் முத்துராசுவும் எல்லா செடிகளையும் நிலத்தில் இருந்து பிடுங்கி பத்திரப்படுத்தினார்கள். செடி அத்தனை மிருதுவாக இருந்தது. வேர்கள் உதிர்ந்து போயிருந்தன.

நிலத்தில் வேர் மூலம் உறிஞ்சி அதை இலைகளுக்கு கடத்திய பின்னர் இலைகள் கரியமில வாயுவுடன் கலந்து குளுக்கோஸ் எனும் கார்போஹைட்ரெட் உருவாக்கும். இந்த குளுக்கோஸ் இந்த தாவரங்களில் பல்வேறு விதமாக மாற்றம் கொள்ளும். அவை செல்லுலோசாக மாறி செடியின் செல்களில் சுவர்களாக தேங்கும். ஸ்டார்ச்சாக மாறி சேமித்து வைக்கப்படும். கனிகளில் இவை மேலும் இனிப்பு தன்மை கொண்டதாக சுக்ரோஸ் வடிவம் எடுக்கும். இதே குளுக்கோஸ் எண்ணெய் வடிவம் விதைகளில் எடுக்கும். மிக முக்கியமாக இந்த குளுக்கோஸ் நைட்ரேட் உடன் இணைந்து அமினோமிலங்களாக உருமாறி பின்னர் புரதமாக மாறும்.

தன்னிறைவு கொண்ட தாவரங்கள் இந்த உலகில் போற்றப்பட வேண்டியவைகள்.

'நெகாதம் செடி' வாசன் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

(தொடரும்)



Tuesday 26 November 2013

நுனிப்புல் பாகம் 3

முன்னுரை 

முன்னோர்களுக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்திருக்கிறது, ஆனால் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருந்துவிட்டார்கள். ஏதேனும் ஒன்றின் மீது தன் கருத்தை சொல்வதையே பழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் ஒரு மரத்தின் பட்டை காய்ச்சல் குறைத்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க தெரிந்து இருக்கிறது. தாவரங்களை வைத்தே பல அரிய விசயங்களை அவர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்கட்டும். 

வாத்தியார் பையன் மக்கு என்பது கூட அறிவாற்றல் என்பது மரபணுக்கள் மூலம் கடத்தப்படுவதில்லை என்பதை சொன்ன ஒரு வாக்கியம் தான். இன்றைய உலகம் மரபணுக்களால் சூழப்பட்டு இருக்கிறது. தாய் சொன்னால் மட்டுமே குழந்தையின் தந்தை யார் என்பது தெரிந்தது போய் இப்போதெல்லாம் மரபணு சோதனை செய்தே நிரூபிக்கிறார்கள். 

குளோனிங், தேர்ந்தெடுத்தல் முறை என்றெல்லாம் மனித உயிர்களின் சிருஷ்டியை கடவுளிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். கடவுள் இனி நன்றாக இளைப்பாறலாம். இனி பிரம்ம காலங்கள் நமக்கு அவசியம் இல்லாமல் போகலாம். ஆண், பெண் எனும் இருபாலர் சேர்ந்து வாழும் அமைப்புகள் காலப்போக்கில் தொலைந்து போகலாம். 

ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடம் செல்லும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. தகவல் தொடர்புகள் மிக அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. சிந்தனைகளை பிறரிடம் செலுத்த அதற்கான தொழில்நுட்பம் பெருகி வருகிறது. மருத்துவ துறையின் சாதனைகள் என எத்தனையோ பெருகிக் கொண்டே இருக்கின்றன. 

இருப்பினும் இது போன்ற எந்தவித சலனத்துக்கும் ஆட்படாத மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் உலகம் தனி. அந்த உலகத்தில் அவரை சுற்றி இருப்பவர்களும், அவர்களது கிராமமுமே வாழ்க்கை. விவசாயம்தனை இன்னும் பற்றிக்கொண்டு வாழும் சமூகம் மொத்தமாக ஒன்றும் தொலைந்து போய்விடவில்லை. 

வெயில், மழை என அல்லாடிக் கொண்டு இருக்கும் எனது சமூகம் இருக்கத்தான் செய்கிறது. கனவுலகில் சஞ்சரிக்கும் ஆசைகளை அது தேக்கி வைத்து இருக்கிறது. படிப்பின் அவசியம் வலியுறுத்தி மனிதாபிமானம் தொலைக்கும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்க ஆசைப்படுகிறது. கல்விக்கு செல்வத்தை விரயமாக்கி அனுபவ பாடம் தனை கற்றுக்கொள்ள மறுத்து வரும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்கிறது. 

வானாளவிய கட்டங்கள், இரைச்சல் கூடிய பேருந்துகள், விவசாய நிலங்களை கூறு போட்டு செல்லும் ரயில் பாதைகள், சாலைகள் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இன்னும் பழைய நம்பிக்கைகள் மீது பற்று வைத்து சாமி பார்த்துக்கொள்ளும் எனும் ஓரிரு சொல்லில் நிம்மதியாக தூங்கி பொழுதை கழிக்கும் சாவடி மனிதர்கள் இன்னும் சஞ்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

நமக்கான உலகம் வேறு என்றாகிப் போனபின்னர், நமது உலகம் தவிர வேறு உலகம் இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தில் சில அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த அதிசயங்கள் அலட்சியப்படுத்தபடுகின்றன. அலட்சியபடுத்தபடாமல் லட்சியமாக்கி தொடர்கிறது வாழ்க்கை. இது நாவல் அல்ல... மனிதர்கள்.