Tuesday 26 November 2013

நுனிப்புல் பாகம் 3

முன்னுரை 

முன்னோர்களுக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்திருக்கிறது, ஆனால் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருந்துவிட்டார்கள். ஏதேனும் ஒன்றின் மீது தன் கருத்தை சொல்வதையே பழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் ஒரு மரத்தின் பட்டை காய்ச்சல் குறைத்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க தெரிந்து இருக்கிறது. தாவரங்களை வைத்தே பல அரிய விசயங்களை அவர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்கட்டும். 

வாத்தியார் பையன் மக்கு என்பது கூட அறிவாற்றல் என்பது மரபணுக்கள் மூலம் கடத்தப்படுவதில்லை என்பதை சொன்ன ஒரு வாக்கியம் தான். இன்றைய உலகம் மரபணுக்களால் சூழப்பட்டு இருக்கிறது. தாய் சொன்னால் மட்டுமே குழந்தையின் தந்தை யார் என்பது தெரிந்தது போய் இப்போதெல்லாம் மரபணு சோதனை செய்தே நிரூபிக்கிறார்கள். 

குளோனிங், தேர்ந்தெடுத்தல் முறை என்றெல்லாம் மனித உயிர்களின் சிருஷ்டியை கடவுளிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். கடவுள் இனி நன்றாக இளைப்பாறலாம். இனி பிரம்ம காலங்கள் நமக்கு அவசியம் இல்லாமல் போகலாம். ஆண், பெண் எனும் இருபாலர் சேர்ந்து வாழும் அமைப்புகள் காலப்போக்கில் தொலைந்து போகலாம். 

ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடம் செல்லும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. தகவல் தொடர்புகள் மிக அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. சிந்தனைகளை பிறரிடம் செலுத்த அதற்கான தொழில்நுட்பம் பெருகி வருகிறது. மருத்துவ துறையின் சாதனைகள் என எத்தனையோ பெருகிக் கொண்டே இருக்கின்றன. 

இருப்பினும் இது போன்ற எந்தவித சலனத்துக்கும் ஆட்படாத மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் உலகம் தனி. அந்த உலகத்தில் அவரை சுற்றி இருப்பவர்களும், அவர்களது கிராமமுமே வாழ்க்கை. விவசாயம்தனை இன்னும் பற்றிக்கொண்டு வாழும் சமூகம் மொத்தமாக ஒன்றும் தொலைந்து போய்விடவில்லை. 

வெயில், மழை என அல்லாடிக் கொண்டு இருக்கும் எனது சமூகம் இருக்கத்தான் செய்கிறது. கனவுலகில் சஞ்சரிக்கும் ஆசைகளை அது தேக்கி வைத்து இருக்கிறது. படிப்பின் அவசியம் வலியுறுத்தி மனிதாபிமானம் தொலைக்கும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்க ஆசைப்படுகிறது. கல்விக்கு செல்வத்தை விரயமாக்கி அனுபவ பாடம் தனை கற்றுக்கொள்ள மறுத்து வரும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்கிறது. 

வானாளவிய கட்டங்கள், இரைச்சல் கூடிய பேருந்துகள், விவசாய நிலங்களை கூறு போட்டு செல்லும் ரயில் பாதைகள், சாலைகள் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இன்னும் பழைய நம்பிக்கைகள் மீது பற்று வைத்து சாமி பார்த்துக்கொள்ளும் எனும் ஓரிரு சொல்லில் நிம்மதியாக தூங்கி பொழுதை கழிக்கும் சாவடி மனிதர்கள் இன்னும் சஞ்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

நமக்கான உலகம் வேறு என்றாகிப் போனபின்னர், நமது உலகம் தவிர வேறு உலகம் இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தில் சில அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த அதிசயங்கள் அலட்சியப்படுத்தபடுகின்றன. அலட்சியபடுத்தபடாமல் லட்சியமாக்கி தொடர்கிறது வாழ்க்கை. இது நாவல் அல்ல... மனிதர்கள்.

Monday 25 November 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 21

காயத்ரி தூங்க சென்று இருந்தாள். அந்த இரவில் கோரனிடம் இருந்து போன் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

''இன்னைக்கு அந்த வாத்தியானை போட்டு தள்ள முடிவு பண்ணிட்டேன்''

''அதை ஏன் என்கிட்டே சொல்ற, சொல்றவன் செய்யமாட்டான், செய்றவன் சொல்லமாட்டான்''

''உன் பேரை எழுதி வைச்சிட்டு போக போறேன், உனக்கு தான் இந்த வாத்தியானை பிடிக்காதே''

''எழுதி வைச்சிட்டு போ, கையெழுத்து என்னை மாதிரியா இருக்காது''

தைரியமாக பேசினாலும் எனக்குள் இனம் புரியாத பயம் வந்து தொற்றி கொண்டது. பேரைப் போலவே கோரபுத்தி உடையவனாக இருக்கிறானே, என்னை எதற்கு இந்த வம்பில் மாட்டிவிட வேண்டும்.

''போய் உன்னோட பையில இந்த வாத்தியானோட பாட நோட்டு இருக்கானு பாரு, அதுதான் தடயம்''

மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது. திரும்ப அழைத்து பார்த்தேன், அதற்குள்ளாகவே இணைப்பு முற்றிலும் இல்லாமல் போனது. எனக்கு வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

வேகவேகமாக பையில் நோட்டினை தேடினேன். அவன் சொன்னது போலவே அந்த நோட்டினை காணவில்லை. நெஞ்சு படபடவென அடித்து கொண்டு இருந்தது. மயங்கி விழுந்துவிடுவது போன்ற உணர்வு. காயத்ரியின் அறையினை மெல்ல தட்டினேன். கதவினை மெதுவாக திறந்து அறையில் விளக்குதனை போட்டேன். அவள் அழகாக தூங்கி கொண்டு இருந்தாள்.

''காயூ''

''ம்ம்''

''எழுந்திரு காயூ, ஒரு பிரச்சினை''

சட்டென விழித்தாள். அதற்குள்ளா இப்படி உறங்கிப் போனாள். கனவு என எதுவுமே காண மாட்டாளா?

''என்ன முருகேசு''

படபடப்புடன் விசயத்தை சொல்லி முடித்தேன்.

''சரி, காலையில பாத்துக்கிரலாம்''

''அவன் சாரை கொல்லப்போறான், நீ என்ன இவ்வள அசால்ட்டா சொல்ற''

''அவன் கொல்லமாட்டான், வேணும்னா அவர்கிட்ட இவன் சாவான்''

''காயூ''

''கவலைப்படாம, நீ தூங்கு முருகேசு''

''எப்படி தூங்குறது''

''இங்க தூங்கு, நான் உன்னோட ரூமில தூங்குறேன்''

''எனக்கு என்னோட ரூமில தூங்க தெரியாதா, அவன் திருப்பி போன் பண்ணுவானோ''

''என்ன திடீர் பயம் உனக்கு''

''கொலையை தடுக்கனும், பழி பத்தி பயமில்லை''

''சொன்னா கேளு, எதுவும் நடக்காது''

காயத்ரியின் அறையை விட்டு வெளியேறினேன். உடைகள் மாற்றினேன். வீட்டில் எவரிடமும் சொல்லாமல் கதவை வெளியில் பூட்டிவிட்டு வெளியேறினேன். அந்த நடு இரவில் ஆசிரியரின் வீட்டினை அடைந்தபோது மணி சரியாக 11.00.

ஆசிரியர் வீட்டின் வாசலில் கோரன் நின்று கொண்டு இருந்தான்.

''நீ இங்கு வருவாய் என எனக்கு தெரியும்''

''எதற்கு இப்படி ஒரு விபரீத விளையாட்டு''

''நான் வகுப்பில் சொன்னது மறந்து போனயா''

''அதுதான் அவர் சொன்னாரே, அது ஒரு தற்கொலை''

''அவர் சொன்னா அதை நீ நம்பிருவியா''

''அதுக்கு எதுக்கு என்னை இதுல வம்புக்கு இழுக்கிற''

''சுபத்ரா''

''யார் சுபத்ரா''

''சுபத்ராவை தெரியாது?, உன்னோட உண்மை காதலி''

''கோரன், வேண்டாம்''

''என்னடா வேண்டாம், சின்ன வயசுல இருந்து அவ உன்னை காதலிப்பா, நீ இன்னொருத்திய காதலிப்ப, அதை வந்து உன்கிட்ட சொன்னா, நீ அவளை உதாசீனப்படுத்துவ, இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, இப்பவும் சொல்றேன், நீ சுபத்ராவை ஏத்துக்கோ, காயத்ரியை எனக்கு விட்டுக் கொடுத்துரு, இல்லைன்னா நீ கொலை கேசுல உள்ள போக வேண்டி இருக்கும்''

சுபத்ராவை இவனுக்கு எப்படி தெரியும்? என்ற யோசனையில் மனம் சென்றது. அதோடு எனது காயத்ரி மீது இவனுக்கு என்ன ஆசை.

''கோரன், சுபாவை எப்படி உனக்கு தெரியும்''

''உன்கிட்ட கதை பேச நான் என்ன சினிமா வில்லன்னு நினைச்சியா, உன் பக்கத்தில உட்கார்ந்து இருந்தா நான் என்ன உன்னோட உயிர் நண்பன்னு கனவு கண்டியா''

இனிமேலும் தாமதிக்க கூடாது என அவன் எதிர்பாராதபோது அவனது மூக்கில் இரண்டு மூன்று என எண்ணிக்கொண்டே குத்துகள் விட்டேன். அந்த குத்துகளின் வேகத்தில் அவன் நிலைகுலைந்து போனான். அவன் வைத்து இருந்த பையில் உள்ள நோட்டினை எடுத்து கொண்டேன். படுபாவி, கத்திகள் இரண்டு வைத்து இருந்தான்.

பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி வைத்தேன். மயக்கமாகி இருக்க வேண்டும். அப்படியே படுத்துவிட்டான். அவனை தரையில் இழுத்துக் கொண்டு ஆசிரியரின் வீட்டினை தட்டினேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

''என்ன இந்த நேரத்தில''

''சார், இவன் உங்களை கொல்ல வந்தான்''

''யாரு''

''கோரன்''

மயங்கி கிடந்த கோரனை ஆசிரியர் பார்த்தார். வீட்டினுள் தூக்கி சென்றோம். மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. மூக்கினை மேல்வாக்கில் உயர்த்தி பிடித்தவர், தண்ணீரால் முகம் தனை துடைத்தார். விழித்து பார்த்தவன்

''நீங்க யாரு?''

நான் திடுக்கிட்டேன்.

''டேய் நான் முருகேசுடா, இவர் நம்ம சார்டா''

அவன் சுற்றும் முற்றும் பார்த்தது கண்டு எனக்கு மிகவும் பதட்டமானது.

''இவனோட வீடு தெரியுமா?''

''தெரியும் சார்''

''சரி வா, இவனை அவங்க வீட்டுல விட்டுட்டு வருவோம்''

''எப்படி சார், இந்த நிலைமையில''

''சொல்றதை செய்''

கோரனை எனது வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டேன்.

''சார், நான் அவங்க வீட்டுல விட்டுட்டு போறேன்''

''அவங்க அப்பாவை பார்த்து நான் சொல்லிட்டு வரனும்''

இனி எதுவும் செய்ய முடியாது என புரிந்து கொண்டு கோரன் வீட்டினை அடைந்தோம். அவருடைய காரில் தான வந்தோம். வரும் வழியில் கோரன் எங்க போறோம், நீங்க யாரு என்றே கேட்டு கொண்டிருந்தான். நடுத்தர வயது உடையவர் வீட்டு கதவினை திறந்தார்.

''உங்க பையன் என்கிட்டே படிப்பு சம்பந்தமா சந்தேகம் கேட்க வந்தவன் கிளம்பி போறப்ப கீழே தவறி விழுந்துட்டான், இப்போ தன் நினைவு இல்லை. அதான் விட்டுட்டு போக வந்தேன்''

''சரி, போ''

''நீங்க யாரு, இது யார் வீடு''

''கோரன், இது உன்னோட வீடு''

''முருகேசு, கிளம்பு அவங்க அப்பா பாத்துக்கிருவார், வா உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்''

''இல்லை சார், நான் போய்கிறேன்''

கோரன் வீட்டுக்குள் சென்றதை பார்த்து கொண்டே இருந்தேன். எனக்குள் அளவில்லா பயம் வந்து சேர்ந்தது. கதவு சாத்தப்பட்டது. வீட்டின் சன்னல் ஓரம் எனது காதை வைத்தேன்.

''போன காரியம் என்னடா ஆச்சு''

''நம்ம சுபத்ரா சொதப்ப வைச்சிட்டாப்பா''

''அவகிட்ட எதுக்குடா இந்த விசயத்தை சொன்ன''

''நேத்து அவளை எதேச்சையா பார்த்தேன், அப்போதான் இந்த முருகேசு பயலை பத்தி எல்லாம் சொன்னா. அதனால இவனை இதுல கோர்த்து விடலாம்னு திட்டம் போட்டேன். அவன் என்னை அடிச்சி மயக்கமாக்கிட்டான்''

''அந்த வாத்தியானை பதிமூணாவது நாள் காரியம் ஆக முன்னாடி முடிக்கனும்டா. இந்த முருகேசு கருகேசு எல்லாம் இதுல சேர்க்காதே''

''நான் பாத்துக்கிறேன்பா''

எனக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

(தொடரும்) 

Wednesday 20 November 2013

நான் சைவத்திற்கு மாறிய கதை

எங்கள் வீட்டில் எப்போதாவது அதுவும் விசேச தினங்களில் மட்டுமே மட்டன், சிக்கன் என வாங்குவார்கள். 'மக்காளி மாமா'தான் ஆட்டுக்கறி எல்லாம் விற்பனை செய்வார். எனக்கு இந்த ஆட்டுக்கறி, கோழி என்றால் பிடித்தும் பிடிக்காமலே இருந்தது. 

எங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள், கோழிகள் கூட இரையாகி இருக்கின்றன. பலமுறை வேண்டா வெறுப்பாகவே சாப்பிட்டு இருக்கிறேன். முட்டை என்றால் மிகவும் விரும்பியே சாப்பிட்டு இருக்கின்றேன். அதுவும் எங்கள் வீட்டில் புரட்டாசி மாதம் என்றால் முட்டை கூட பொறித்து தரமாட்டார்கள். இதனால் எங்கள் வீட்டிற்கு எதிராக இருக்கும் 'உப்புநக்கி அவ்வா' வீட்டில் சென்று பிரத்தியோகமாக எனக்கென முட்டை பொறித்து சாப்பிட்டு வந்து இருக்கிறேன். 

ஒரு முட்டை இருந்தால் போதும், பழைய சாதம்தனை சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன் என வீட்டில் சொல்லுமளவுக்கு அத்தனை பிரபலம். உத்தங்குடியில் கல்லூரியில் படித்த போது நானும் எனது நண்பர் ராஜேசும் மதுரைக்கு சென்று ஆளுக்கொரு முழுக்கோழி சாப்பிட்டு வந்து இருக்கிறோம். 

உத்தங்குடியில் இருந்த கடை ஒன்றில் தினமும் ஒரு முட்டை கொத்து புரோட்டா சாப்பிடாமல் சென்றதில்லை. புரோட்டா அத்தனை அருமையாக இருக்கும். காத்திருந்து சாப்பிட்டு சென்று இருக்கிறோம். புரோட்டாவை போட்டு அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் அழகே தனி. சமீபத்தில் நான் எழுதிய காமக் கதைகளுக்கு எப்பவும் மவுசு அதிகம் என்பதில் இந்த உத்தங்குடி கடையும், நாங்கள் கடைசி வருடத்தில் தனியாக எடுத்த வீடுமே எனது கற்பனையில் வந்து போயின. நாங்கள் ஐவர் தங்கி இருந்தோம், தினமும் காலை, மதியம் இரவு என அந்த கடையில் ஒருமுறையாவது கறியுடன் சேர்ந்தே சாப்பிடுவது உண்டு. மாதம் அறுநூறு ரூபாய் என வந்துவிடும். கல்லூரி முடிக்கும் தருவாயில் இந்த அசைவம் மீது சற்று வெறுப்பு வரத் தொடங்கி இருந்தது. 

அசைவமாக இருப்பது சற்று அசௌகரியமாக இருந்தது. விடுமுறை நாளில் வீட்டுக்கு சென்றால் வறுத்த ரத்தம், ஆடு கோழி என அம்மா சமைப்பது உண்டு. எனக்கு பிடிக்கவில்லை என சொன்னாலும் அம்மா சமைக்காமல் விட்டதில்லை. கல்கத்தாவில் படித்தபோது  மீன் சாப்பிட ஆரம்பித்தேன். அதன் முள்ளை விலக்கி சாப்பிடுவது பெரிய போராட்டமாகவே இருக்கும். அங்கே கடைகளில் முட்டையை உள்ளே வைத்து முட்டை ரோல் செய்து தருவார்கள். எப்படியும் ஒன்றாவது தினமும் சாப்பிட்டு விடுவேன். இப்படி வெறுப்புடனே அசைவத்தை மிகவும் ரசித்து சாப்பிட்டு வந்தேன். 

சென்னையில் கல்லூரியில் வேலை பார்த்தபோது கடைகளுக்கு சென்று சாப்பிடும்போது சிக்கன் எல்லாம் மிச்சம் இருந்தால் ராதாவிற்கு தந்துவிடுங்கள் என சொல்லுமளவுக்கு சிக்கனை சாப்பிடவே செய்தேன். ஆனால் ஏதோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒருமுறை வீட்டிற்கு சென்றபோது அம்மா மட்டன் சமைத்து இருந்தார்கள். வேண்டாம் என்றே பிடிவாதம் பிடித்தேன். ஆனால் அவர்களோ நான் சாப்பிட்டே தீர வேண்டும் என சொன்னார்கள். வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு வைத்தேன். அம்மா உலகில் இல்லாது போனால் இந்த அசைவம் தொடக்கூடாது என முடிவு செய்தேன். அப்போதுதான் எனக்கு திருமணம் எல்லாம் செய்யும் திட்டம் உச்ச கட்டம் அடைந்து இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அம்மா எனக்கு திருமணம் ஆகுமுன்னரே இறந்து போனார்கள். நான் சைவம் ஆவது என முடிவு எடுத்தேன். அம்மா இறந்தபின்னர் மூன்று மாதங்கள்  முட்டை மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன். 

திருமணம் நிச்சயம் ஆனது. மனைவியாக வர இருந்தவரிடம் என அசைவ கதையை சொன்னேன். அவர் அசைவம் சாப்பிடுவதில்லை என சொன்னார். அதோடு முட்டையும் சாப்பிட மாட்டேன் என சொன்னார். அப்படி எனில் நானும் முட்டையை விட்டுவிடுகிறேன் என முழு சைவமாக மாறினேன். நீ எங்காவது சாப்பிட்டு வந்தால் எனக்கு என்ன தெரியும் என்றே ஒருமுறை மனைவியாக வந்தவர் சொல்லிவிட மனதில் உறுதி கொண்டேன். குளிர் நாட்டிற்கு வந்ததும் அசைவம் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள், நான் சைவம் மட்டுமே சாப்பிட்டேன். நான் சைவத்திற்கு மாறியது மனைவிக்காகவே என பலரும், என் மனைவியோ என் அம்மாவுக்காக தான் நான் மாறினேன் என சொல்லிக் கொள்வார்கள். 

நான் சைவத்திற்கு மாறிய பின்னர் சில கனவுகள் கூட வந்தது உண்டு. நான் அசைவம் சாப்பிட்டுவிட்டு அலறியது போன்ற கனவுகள். ஒருமுறை முட்டை சாப்பிட்டுவிட்டு நான் செத்து போனேன் என்றெல்லாம் கனவு கண்டு இருக்கிறேன். கொடுத்த வாக்கு மீறக்கூடாது என்பதில் நான் கொண்டிருந்த பற்றுதான் அது. சைவத்திற்கு மாறி இன்றுடன் பதினைந்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது. வருடம் ஒருமுறை மருத்துவரை பார்க்க சென்றால் மீன் சாப்பிடு, முட்டை சாப்பிடு என அறிவுரை சொல்கிறார்கள். நான் புன்னகையுடன் அவர்களை கடந்து செல்கிறேன். 

என்னைப் பார்த்து ஒருவர் வைணவனா எனக் கேட்டார். எனக்கு எல்லா சமய கதைகளும் பிடிக்கும் என்றே சொல்லி செல்கிறேன். சாப்பாடு விசயத்தில் நான் சைவம் என்று சொன்னால் அது ஒரு சமய அடையாளம் என்று கூட அர்த்தப்படுத்தப்படும். அப்படித்தான் என்னை பலரும் கேட்டார்கள். நான் சைவம் என்றால் உங்கள் மதம் சொன்னதா என்றே கேட்டார்கள். மனைவி சொன்னது என இந்த சைவம் மாறிய கதை எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. 

Tuesday 19 November 2013

அடியார்க்கெல்லாம் அடியார் 36

'யார் சொல்லி நீவீர் இங்கு வந்தீர், உம்மை விட்டு பிரிந்தே யாம் இந்த நிலை எடுத்துக் கொண்டோம், எதற்கு எம்மை தேடுகிறீர்''

''ஒழுங்கா பேசுங்கோ, நீங்க எதுக்கு அந்த வைஷ்ணவியை ஏமாத்தினேள், இப்போ அந்த பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கப் போறா, அதான் உங்களோட நான் வாழ முடிவு பண்ணி இருக்கேன், இந்த சிவன் வேசம் கலைச்சிருங்கோ'' 

''யான் இதில் இருந்து பௌத்த வேடம் தரிக்க இருக்கிறேன், நீயும் பௌத்த வேடம் தரித்து கொள். எனது அடியாராக இருக்க சம்மதம் எனில் தொடர்ந்து ஏதும் பேசாமல் என்னுடன் வந்து கொண்டிரு, இல்லையெனில் என்னைப் பெற்றெடுத்தவர்களுடன் நீயும் சென்று விடு''

கண்களில் கண்ணீர் பொங்கிட ருக்மணி மதுசூதனனைப் பார்த்தாள். 

''ஏனிப்படி ஒவ்வொரு வேடம் தரித்து கொண்டு ஊர் ஊராக அழையனும், நாம ஊரில போய் சேர்ந்து வாழலாம்''

மதுசூதனன் ருக்மணியை பரிதாபமாக பார்த்தான். 

''எமது அடியாராக வருவீர் என்றே எம்மை எம்முடன் அழைத்தோம், விருப்பம் இல்லையெனில் திரும்பவும்'' என மதுசூதனன் சொன்னதும் கோபம் கொண்ட ருக்மணி விறுவிறுவென வைஷ்ணவி வீடு நோக்கி போனாள். மதுசூதனன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். 

''எங்கே அவன்'' என மதுசூதனின் பெற்றோர்கள் கேட்டார்கள். அவா என்னோட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு போறார் என அழுதாள் ருக்மணி. வைஷ்ணவிக்கு என்ன செய்வது என புரியவில்லை. திடீரென் யோசித்தவளாய் வேகமாக வீட்டிலிருந்து வெளியில் ஓடினாள். மதுசூதனனை கண்டு இடைமறித்தாள். கதிரேசனும், ருக்மணி, பெற்றோர் என  உடன் ஓடி வந்து சேர்ந்தனர். 

''உனக்கு என்ன வேணும், இப்போ என்னை பொண்ணு பார்க்க வந்தது இவங்கதான், இப்ப சொல்லு'' என்றாள் வைஷ்ணவி. 

''புத்தி பேதலித்து வந்து இருப்பார்கள், யாம் இனி திருமணம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உம்மை இனிமேல் எம்மால் காதல் புரியவும் முடியாது, வேணுமெனில் நீவிரும் அடியாராக எமக்கு வரலாம்'' என நடந்தான் மதுசூதனன். 

''நில்லுடா மதுசூதனா'' என்றான் கதிரேசன். அவன் போட்ட சப்தத்தில் அங்கே நடந்து கொண்டு இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். உன்னை போலீசில் புகார் கொடுத்து ஜெயிலுல அடைச்சிருவோம், ஜாக்கிரதை.

''தாராளாமாக செய்யலாம் எமது அடியாரே, நீவிர் முதலில் திருமண பந்தம் விட்டு எம்மோடு வாரும், யாம் நாளையில் இருந்து புத்த பிட்சுவாக மாற்றம் கொள்ள இருக்கிறோம். இந்த இந்தியாவில் பௌத்தம் மீண்டும் தழைக்க யாமே அவதாரம் எடுத்து உள்ளோம். இனி எமது பெயரை திரிகோடன் என்றே மாற்றம் செய்வோம்'' என்றான் மதுசூதனன். 

''உனக்கு பைத்தியமாடா பிடிச்சி இருக்கு, இதோ இந்த ரெண்டு பொண்ணுகளோட வாழ்க்கையை பத்தி யோசிச்சியா, உன்னை காதலிச்ச ஒரே காரணத்திற்கு உன்னை மறக்க முடியாம அதோ அவ தள்ளாடிட்டு இருக்கா, இதோ இவங்க உன்னை கல்யாணம் பண்ணின பாவத்திற்கு உன்னை தேடி வந்து நிக்கிறாங்க, புரிஞ்சிக்கோடா'' 

''யாம் சொன்னது சொன்னதுதான், அனைவரும் எமது அடியாராக மாறிவிடுங்கள், இன்று இரவு சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு இருக்கிறது அங்கு வந்து எம்மை சந்தியுங்கள், அங்கே உங்கள் அனைவரையும் சிந்திக்க வைப்பேன். 

அவன் போகட்டும் விடுப்பா, என்றே மதுசூதனின் தந்தை சொன்னார். யாரும் எதிர்பாராத விதமாக மதுசூதனின் தாய் அவனது கால்களை பற்றி கதறினார். எங்க கூட வந்துருப்பா எனும் குரல் கதிரேசனை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. 

மதுசூதனன் குனிந்து அன்னையின் கரம் பற்றி தூக்கினான். ''யாம் இனி திரிகோடன், எம்முடன் நீவிர் வந்தால் சிவன் ஆலயத்தில் ஓரிடம் உங்களுக்கு தர செய்து அங்கே எமது அடியாராக தொடரலாம், இதை மீண்டும் மீண்டும் எம்மால் சொல்ல இயலாது. வருவது எனின் வாருங்கள், இல்லையேல் கோவிலில் சந்திப்போம். மதுசூதனன் விறுவிறுவென நடந்தான். கதிரேசன் அவனை விரட்டி கொண்டு போனான். 

(தொடரும்) 




Thursday 14 November 2013

இன்னுமொரு கிரகத்தில் மனிதர்கள்

எத்தனை கதைகள் வந்து இருக்கும், எப்படி எல்லாம் மனிதர்கள் கற்பனையில் வேற்று கிரகவாசிகள் வந்து போய் இருப்பார்கள். உயிரினங்கள் பூமியில் இருந்து தோன்றி இருக்காது எனவும்,வேறு ஒரு கிரகத்தில் இருந்தே வந்து இருக்க கூடும் என்றே ஒரு கோட்பாடு உண்டு.

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் வருடங்கள் முன்னர் தோன்றி இருக்க கூடும் என்பது ஒரு தோராயனமான கணிப்பு, இது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் தோன்றியதற்கு முன்னர் உள்ள கணிப்பு. இன்றுவரை பலரும் வேறு கிரக உயிர்கள் சாத்தியம் என்றே நம்புகிறார்கள். ஆனால் இதுவரை அப்படி கிரக உயிர்கள் இருப்பதாக எந்த ஒரு அடையாளமும், குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தேவலோகம், இந்திரலோகம் என்றெல்லாம் எதை வைத்து கற்பனை செய்தார்கள் என புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை அப்படி இருந்து அவை எல்லாம் பிற்காலத்தில் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டதா என எந்தவொரு அடையாளம் இல்லை. வைகுண்டம் எல்லாம் எங்கே இருக்கும் என்றே மிகவும் யோசனையாக இருக்கிறது. இவை எல்லாம் கற்பனை என்றே புறந்தள்ளிவிட முடியாது. புராணங்கள் கணக்குப்படி அன்றைய கால கட்ட மனிதர்களின் வயது காலம் பன்மடங்கு இருந்தது என்றே குறிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு என்று மட்டுமே ஒரு சிறப்பு தன்மை இல்லை, இதைப்போல பல கிரகங்கள் பிரபஞ்சத்தில் உண்டு என சொல்வது புராணங்கள் அல்ல, மாபெரும் அறிவியலாளர்கள். வியாழனின் கிரகத்தில் ஈரோப்பா நிலா, சனி கிரகத்தின் என்செலாடஸ் எனும் நிலா போன்ற இடங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் நான்காம் தேதி 40 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதாகவும், அதில் 11 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்கள் முன்னர் வேற்றுகிரகவாசிகள் எவரேனும் தொடர்பில் உள்ளனரா என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு தரும் அளவிற்கு மனிதர்கள் சிலர் வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவே நம்புகிறார்கள்.

இந்த பூமி எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தவர்களை தெரியாது. ஆனால் மனிதர்கள் இங்கும் அங்கும் இருக்கவே செய்தார்கள். இவர்களுக்கான தகவல் தொடர்பு, வழித் தொடர்பு என எதுவும் இல்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனித சமூகம் உலகமெலாம் பரவியது என இருப்பினும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் முன்னர் வெளிநாடு என்றாலே பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மூலை முடுக்கெல்லாம் எல்லா நாடுகளும் தெரிகிறது

இதே போலவே வேறு கிரகத்தில் நம்மை போலவே மனிதர்கள் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் தொலைவில் நாம் இல்லை. ஏனெனில் பன்னிரண்டு ஒளிவருடங்கள் தொலைவில் ஒரு பூமி போன்ற கிரகம் உள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது ஒரு வினாடிக்கு 300000000 மீட்டர்  என கணக்கில் சொல்லப்படுகிறது. இதை ஒருநாள், ஒருவாரம், ஒரு மாதம் ஒரு வருடம் என கணக்கில் கொண்டு பார்த்தால் மிக அதிக தொலைவு என்பது புலப்படும். மனித வாழ்நாள் குறைந்து போனதால்.பல விசயங்கள் சாத்தியம் அற்றதுதான்.

ஒரு உயிரினம் தோன்ற மிக முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், நைட்ரஜன், என்பதோடு பாஸ்பரஸ்,கந்தகம் தேவைப்படுகிறது. முக்கியமான வேதி வினைகள் நடைபெற தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் இருந்துவிட்டால் உயிரினம் சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்து இருக்கலாம் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இந்த அறிவியல் எப்படி வேண்டுமெனில் தேடட்டும்,

இன்னுமொரு கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ள, நாம் அவர்களை தொடர்பு கொள்ள இன்னுமொரு யுகம் ஆகலாம்.

 

Monday 4 November 2013

தமிழ் எதிரி

ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே எழுதப்பட்டு இருக்கும் எழுத்துகள் என்னால் வாசிக்க இயலும் ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. அந்த எழுத்துக்கள் ஆங்கில உருவில் தான் இருந்தன. அப்போது எனக்குள் தோன்றியது எல்லாம் தமிழை இப்படி செய்து விடலாமே என்றுதான். தமிழ் அழிகிறது என சொல்பவர்களுக்கு தமிழை காப்பாற்ற இதுதான் வழி என்றே எனக்குள் பலமுறை தோன்றியது உண்டு. ஆனால் தமிழ் மீது கொண்ட பாசம் தமிழ் எழுத்துக்கள் தொலைந்துவிடக் கூடாது எனபதில் தான் இருந்தது.

இந்த இணையத்தில் நான் முதன் முதலில் எழுத வந்தபோது ஆங்கில எழுத்துருவில் தான் எழுதினேன். ஆனால் அதற்கு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். எப்படியாவது தமிழ் எழுதும் விசைப்பலகையை கண்டு கொள்ள வேண்டும் எனும் உத்வேகம் தமிழ் எழுதும் எழுத்துருவினை கொண்டு வந்து என்னிடத்தில் சேர்த்தது.

என்னதான் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினாலும் தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதும் ஒரு ஜீவன் அதில் இருப்பது இல்லை. என்னதான் ஒரு பெண்ணின் மடி என்றாலும் தாய் மடி போல் அமைவது இல்லை. டைப்ரைட்டர் காலத்தில் இருந்தது போல இப்போது விசைப்பலகை எல்லாம் தமிழில் வந்து கொண்டிருப்பதால் தமிழ் எழுத்துருவை கற்று கொள்வதில் தான் அந்த மொழியின் சிறப்பு இருக்கிறது.

எழுத்துருவு மாற்று கருத்து என்னை போன்ற வெளிநாட்டில் வாழ்ந்து தமிழை தனது சந்ததிக்கு தராமல் தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சரியாகவே பொருந்தும். இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்றாலும் தமிழுக்கு முன்னுரிமை தந்து தனது சந்ததிகளுக்கு தமிழை போதிக்கிறார்கள். அது கூட காலபோக்கில் குறைந்துவிடும்.

ஒரு தமிழ் நாவலை வெளியிட்டபோது தமிழர்கள் பலர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முடியுமா என்றே கேட்டார்கள். எனக்கோ தமிழ் மொழியை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே தமிழ் மொழிக்கு சிறப்பு என்றே தோணியது. நீங்கள் தமிழ் மொழி கற்று கொள்ளுங்கள் என்றே சொல்லி முடித்துவிட்டேன்.

எந்த ஒரு மொழியும் தன்னகத்தே மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நடமாடும் நிலை வந்தால் ஒழிய அந்த மொழி அழிந்து போகும். சமஸ்கிருதம் ஒரு உதாரணம். மேலும் ஒரு மொழியின் பயன்பாடு ஒரு இனத்துடன் இருப்பது கூட அந்த மொழியின் வளர்ச்சியை தடை செய்யும்.

இதற்காகவே தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் பிற மொழிக்கு மொழி பெயர்த்து இருந்திருக்க கூடாது என்றே கருதுவேன். வேண்டுமெனில் வந்து தமிழ் படி எனும் ஒரு உறுதியான நிலை எடுத்து கொளல் வேண்டும்.

தமிழில் ஆங்கிலம் கலந்துவிட்டது. ஒருவர் அருமையாக சொன்னார், அதிர்ஷ்டத்திற்கு லக் என்பது தமிழ் மொழி என! என்றோ எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. தமிழ் எண் சொல் என கேட்ட நண்பனிடம் 1 2 3 எழுதி தந்துவிட  இதுவா தமிழ் எண் என கேட்டு அன்றைய எனது முட்டாள்தனம் எனக்கு புரிந்து போனது.

இனி எப்படி தமிழ் வாழும் என்பது தமிழகத்தில் வாழ்பவர்களை பொருத்தே அமையும். பிற நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழ் சங்கம் என வைத்து தமிழ் வளர்த்தாலும் இனி வரும் காலங்களில் தமிழ் பிற நாடுகளில் தொலையும். எப்படி பண்டிகைகள் இந்திய பண்டிகைகள் என அடையாளம் கொண்டவனோ அதைப்போல தமிழ் உலக மொழி எனும் அந்தஸ்தை அடையப் போவதில்லை. ஆங்கிலத்தை இனி வெளியேற்றுவது கடினமான செயலே.

தமிழ் அழிந்து போகும் எனில் அதற்கு காரணம் நாம் தான். அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள்.