Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday 15 May 2017

திருநெல்வேலி ட்வீட்டப் கவிதை - TnMegaTweetup2017

டிவிட்டரில் எழுதும் தமிழ் கீச்சர்கள் வருடந்தோறும் ஒருமுறை ஓரிடத்தில் ஒன்று கூடி விழா எடுப்பது வழக்கம். இதற்காக கவிதை எழுதி பேரும் புகழும் பெற வேண்டும் என்பது என்னுடைய பேராசைகளில் ஒன்று. நான் டிவிட்டரில் எழுத ஆரம்பித்த ஆண்டு ஆகஸ்ட் 2013. அதற்கு முன்னரும் விழா நடந்து இருக்கிறது. ட்விட்டரில் சேர்ந்த பிறகு எழுதிய முதல் எழுத்து இது  அதற்குப்பிறகு ஒரு கதை எழுதி அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறேன். 
எவ்வளவு விளையாட்டுத்தனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் எதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதக்கூடாது என நினைக்க வைத்த கற்றறிந்த கயவர்கள் பற்றி எழுதியது. திருப்பூரில் நடந்தபோது நான் எழுதவில்லை 

இம்முறை இத்திருவிழா திருநெல்வேலியில் நடந்தது. நண்பர் பாண்டித்துரை அவர்களிடம் கவிதையை கொடுத்து அனுப்பினேன். கவிஞர் திரவியம் அவர்கள் கவிதையை சிறப்பாக வாசித்தார்கள். அவர்களுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருமளவுக்கு ஒருங்கிணைப்பைச் சரியாகச் செய்து இருந்தார்கள் என உறுதியாக சொல்லலாம். வாழ்த்துக்கள். 

ஒரு உறுத்தலான விசயம், அதுதான் குறை சொல்லாமல் இருக்க இயலாதே, இந்த அசைபடத்தில் ஒலிக்கும் சில குரல்களை கேளுங்கள் நான் சொல்வது உங்களுக்குத் தெரிய வரும் அப்படி இல்லாதபட்சத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவும்.   

எனக்குள் எப்போதுமே இப்படியொரு எண்ணம் எப்போதும் உண்டு அதாவது ஒன்றை உயர்த்திப் பேச மற்றொன்றை தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமே இல்லை மேலும் ஒன்றை உயர்த்திப் பேசினால் மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளும் இல்லை. அதை இந்தக் கவிதையில் தவறவிட்டது போல இருக்கிறது. ஆனால் இதை கவிதை என்று இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அதுவரைக்கும் பரவாயில்லை. அடுத்தமுறை இத்திருவிழா பாண்டிச்சேரியில். அதற்கும் இப்போதே வரிகள் யோசிக்கத் தொடங்கி  இருக்கிறேன். 


அசைபடத்தில் கவனித்தால் எனது பெயர், நான் வசிக்கும் இடம் எல்லாம் மிகவும் தவறாகவே சொல்லப்பட்டு இருக்கிறது, இது என்னுடைய தவறுதான். இராதாகிருஷ்ணன், லண்டன் என எழுதித் தந்து இருக்க வேண்டும். இப்படித்தான் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் எவர் என ஒரு விபரமும் புரியாமல் அந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். எவருடன் பழகுகிறோம், எவருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது கூட பல நேரங்களில் தெரியாது. நாம் எழுதுவதை எல்லாம் ஏதோ  இந்த உலகத்தையே மாற்றி அமைத்து விடும் வலிமை கொண்ட சொற்றொடர்களாக எண்ணி வாதிட்டு கொண்டு இருப்பார்கள், எரிச்சல் அடைவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக மன உளைச்சல் அடைபவர்களும் உண்டு. எப்படி இருப்பினும் முகம் காட்டாதவர்கள் மத்தியில் முகம் காட்டும் சிலர் கொண்டாடும் திருவிழா இது. எனது கவிதை எப்போதும் தொடரும். 


நெல்லைக்கு ஒரு வாழ்த்து

நெல்லுக்கும் திரு என மரியாதையிட்டு
அன்பின் வேலியால் கட்டப்பட்டு
நெல்லையப்பர் காந்திமதி சுவாசிக்கும்
ஊரின் பெருமை உரக்கச் சொல்வேன்
இரக்கமனம் கொண்ட மக்கள் உள்ள
தாமிரபரணி ஆறு புகழ் கொண்ட
திருநெல்வேலி மிகச் சிறந்த ஊரு

அன்பைத் தொல்லையாய் எவரும்
இங்கே கண்டதுமில்லை
பண்பைத் தொலைத்து எவரும்
இங்கே வாழ்வதும் இல்லை
தமிழ்ச்சொல்லை சொல்லும் விதத்தில்
இத்தரணியில் எவருமே இவர்களுக்கு
ஓர் நிகருமில்லை

நெல்லையின் பெருமையைச் சொல்லவே
எல்லையில்லா புகழ்கொண்ட தமிழ்
நாடினேன்
இல்லையென சொல்லாது நல்விசயங்கள்
செய்யும் இதயம் கனிந்த மக்களை
தன்னுள்ளே கொண்ட நெல்லையில்
குடிபுகுந்தேன்

நெல்வளம் கொண்ட நகரம்
சொல்வளம் கொண்ட நகரம்
தேவாரப் புகழ் பெற்ற திருத்தலம்
எம்சிவன் நடனமிட்ட தாமிர திருச்சபை
இனிப்பின் சுவை அல்வா
நெற்கதிர் அறுக்கும் அரிவாள் – நெல்லை
புகழ் பாடுவேன்

தமிழின் வீரம் சொன்ன நெல்லை
பாளையக்காரர்கள் வலம் வந்த எல்லை
தாமிரம் நல்ல மின்கடத்தி
நாமும் இங்கே கூடினோம் தமிழ் கடத்தி
நமது புலமையைச் சொல்ல
நெல்லைபோல ஒரு இடமும்
இல்லை

எழுத்தால் அறிமுகம் ஆனோம்
கருத்தால் மனதில் கூடினோம்
நம் நட்பை உலகறியச் செய்து
இதை எந்த நாளும்
நல்வழியில் தொடர்வோம்
வளர்வோம் வாழ்வோம்
வாழ்க தமிழ்
Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.


Sunday 29 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) 2 நிறைவு


20 இரவு

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு இப்படி சோகமாகத்தான் எழுத வேண்டுமா என அவரிடம் கேட்டு வைக்க அதற்கு அவர் இது என் பாணி, நீ வேண்டுமெனில் சந்தோசமாக எழுதி வைத்துக் கொள் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, சிந்தனை உண்டு.

இரவு குறித்த கதையில் பெண்ணின் கைப்பை உவமை அழகு. விட்டத்து பல்லி பேய்க்கதைகள் கரப்பான் பூச்சி என இரவின் பயத்தை பாடல்களே துணை

21. ஸ்வீட்டான்

மிகவும் அழகிய கவிதை. ஒற்றுப்பிரச்சினை எனக்கு உண்டு. எங்கு க்  வரும் த்  என. தேவதைத்தனங்கள் தேவதை தனங்கள். கைகள் மெத்தை. மிகவும் அழகாக சிவந்த முதுகின் காரணம் மருதாணி கரங்கள்.

22 பிரார்த்தனை

நல்ல புத்தி கொடு என சின்னஞ்சிறு குழந்தையே சாமியிடம் வேண்டும். ஒரு வெள்ளேந்தியாக சாமியிடம் பிரார்த்தனை மிகவும் சிறப்பு. என்னவெல்லாம் எண்ணம் வரும் என நேர்த்தியான சிந்தனை

23 மீ காதல்

காதலித்தபடி இருக்கிறோம் இயல்பாக இருப்பதே சுகம். எதையும் கேட்காமல் தரப்படுவது காதல். பெண்ணியம். ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என தாண்டி அன்பில் நிலைத்து நிற்கும்

24 இதழதிகாரம்

முத்தம் தாடி. சிலுங்கும் கொலுசு. பெண் முத்தங்கள்.

25 ஊடலுணவு

கோபங்கள் தொலையுமிடம் அன்பு

26 தேவதைகள்

சிறுமியின் தேவதை உரையாடல் கவிதைத்தனமானதுதான். கட்டுபாடற்ற வாழ்வே சிறப்பு

27 காத்திருப்பு

நொடிகளுக்கு யுகம். நிறைவடைந்த நினைவுகள். இதை ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

28 யாத்திரை.

தமிழ் மின்னிதழில் வெளியான கவிதைகளில் இதுவும் ஒன்று.

29 அறியாமை

அம்மா! அம்மா இல்லாத வாழ்வு குறித்த ஓர் பார்வை இது. என்னவெல்லாம் அம்மா தன்  குழந்தையைப் பற்றி அறிந்து இருப்பார் என சுகம் சொல்லி சோகம் ஆகும் கவிதை.

30 படையல்

சற்று வித்தியாசமான சிந்தனை

31 எதிர்காலம்

உறவுகள் சலிப்பூட்டுகின்றன. நீ இருக்கிறாய் என்பதே போதுமானது எதிர்காலம் சிறப்புற

32 ஜன்னல்

ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள்  இல்லை எனலாம். அத்தனை வசீகரமானவை. ஜன்னல் ஒரு காட்சி பெட்டகம். கம்பிகள் கொண்ட ஜன்னல். முத்தாய்ப்பான முடிவு

33 விலைமகள்

தமிழ் மின்னிதழில் வெளியான மற்றொரு கவிதை.

34 குறுங்கவிதைகள்.

உழைப்பு எனத்  தொடங்கி ஒவ்வொரு கவிதையும் வெகு சிறப்பு

வலிக்குதா வலிக்குதா என்று குழந்தை தன்  அம்மாவைப் போல் அல்லாமல் பொம்மையிடம் கேட்பதாக முடிகிறது கவிதைத்தொகுப்பு.

எளிய வார்த்தைகள் கொண்டு அழகிய மாலைகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. சின்ன சின்ன நிகழ்வுகளே ஒரு காவியம் ஆகின்றன. பேசத் தெரியாதவனுக்கு பேச்சு சொல்லிக் கொடுப்பதைப் போல கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லித் தருகின்றன.

கவிதைகள் அந்த படைப்பாளியின் எண்ணத்தை வெளிக்கொண்டு வருவனவாக இருந்தாலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலும் ஒருவர் சிந்திக்கக் இயலும். பெரும்பாலும் ஒரு படைப்பாளி சுதந்திரமாக சிந்திக்கும் போது  தன்னை பாதிக்கும் விசயங்களையே கவிதைக்கான கருப்பொருளாக வைப்பார். இந்த கவிதைகளில் அன்பு, அம்மா, காதல் என உறவுகள் பற்றியே வலம்  வருகிறது.

சிந்தனைகள் செழித்தோங்கி பல அழகிய படைப்புகள் தந்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

(நிறைவு 


Sunday 22 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) -1

அம்மா - சௌம்யா அவர்களின் கவிதைத்தொகுப்பு மின்னூல் வடிவில். பல புத்தகங்கள் வெளிவர வேண்டுமென வாழ்த்துகிறோம்.

'சமூகத்தலைவி' மீனம்மாகயலின் அட்டைவடிவமைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிஞ்சு கால்களை தாயின் கரங்கள் அள்ளி குவிப்பது போல அமைந்து இருக்கிறது. அம்மா என்ற எழுத்தில் வைக்கப்பட்ட அழகிய சிவந்த நிற பொட்டு. மின்னூல் எவ்வித வண்ணம் இல்லாமல் கருப்பு வெள்ளை வடிவில் அமைந்து இருக்கிறது. எளிமைதான்.

அறிமுகமே இப்படித்தான் தொடங்குகிறது. 'அரட்டைகேர்ள்' என்ற பெயரில் 2011 முதல் ட்விட்டரில் இயங்கி வரும் சௌம்யா கோவையைச் சேர்ந்தவர் என. அவர் எழுதிய பல கவிதைகளின் தொகுப்பாக இந்த மின்னூல் இலவசமாக இங்கு  பெற்றுக் கொள்ளலாம். மின்னூல் விற்பனைக்கு கூட பண்ணலாம் என இப்போதுதான் தெரியும். இந்த கவிதைத் தொகுப்பை எப்படி வாசிப்பது என சென்றால் மொபைல் போனில் இதற்குரிய அப்ளிகேசன்ஸ் தரவிறக்கம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது. உடனே தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கியாகிவிட்டது. வலைதளம்  பேஸ்புக், ட்விட்டர் என தமிழில் இவரது இயக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. ட்விட்டர், வலைதளம் பார்த்தது உண்டு. பேஸ்புக் பார்த்தது இல்லை.

1. கிடா

இந்த கவிதையை ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. எனது கிராமத்தின் நிகழ்வை கண்ணுக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்திய ஒரு அற்புதமான கவிதை. கிடா எப்படி எல்லாம் அன்புடன் ஓடியாடி திரிந்தது என கவிதையாக நிற்கும். 'சாமி ஆடு, கைய கிய்ய வைச்சீங்க' என அப்படியே அந்த நிகழ்வு. அதுவும் அந்த கடைசி வரியில் கவிதைக்கான உயிர்நாடி.

2.  அம்மா

வேண்டாம். ஒரு தாயின் மரணம் பற்றி எழுதவே வேண்டாம். ஜில்லுனுதானே இருக்கு என்ற வரி படித்தபோது ஒரு இனம் புரியாத நெருடல். தாயை இழந்த பின்னர் எப்படி எல்லாம் நாம் தாயிடம் சொல்லிக்கொள்வோம் என்பது போன்ற உணர்வினை அழகாக தென்பட்டு இருக்கிறது

3. அப்பா

அப்பா அடித்ததேயில்லை. ஆமாம். பலருக்கும் பரிச்சயமான வரி. ஒரு தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான வரிகளில் தெளிவாகத் தெரிகிறார் அப்பா. 'நீ குழந்தை தானேடா' இப்போது கூட இதே வார்த்தைகளை என் தந்தை என்னிடம் சொன்னது உண்டு.

4. கணவன்

முத்தம் ரகசியம் தாம்பத்யம் வளவிக்கீறல் என சொல்லி சோகமான ஒரு கவிதைதான் என்பது கடைசி வரியில் தென்பட்டது.

என்ன இது எல்லா கவிதைகளுமே ஒரு வலியின் தடமாக இருக்கிறதே என்று யோசித்தேன். அடுத்து வந்தது பருவம்

5. பருவம்

குழந்தமை, பால்யம் பதின்மம் என சொல்லி ஒரு சிறுமியின் பருவம் எய்த நிலையை சொல்லிச் சென்றது கவிதை. முதுமை எல்லாம் சொல்லாமல் பருவம் என்றால் பருவமாக இருந்தது.

6. மோகமுள்

இது ஒரு நாவலின் தலைப்பு. உவமைகளைத் தாங்கி வந்திருக்கும் கவிதை. அடர்ந்த வனம். கருத்த தீவு. அதரம், இதழ் நெற்றி, கன்னம் கழுத்து என வார்த்தைகளில் நிறையவே மோகம் தாண்டவமாடுகிறது. மீசை குறித்த பார்வை சிறப்பு.

7. ஞானம்

புத்தனின் ஞானம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரு அழகிய கவிதை. பற்று வைப்பதில் விலகி இருப்பதே துறவறம். பற்று கொண்ட ஒன்றை விட்டு விலகிடுவதெ ஞானம் யசோதரா.

8. மரப்பாச்சி

மரப்பாச்சி பொம்மைகள். தனியாய் மாலையணிந்து வலி சொல்லும் கவிதை இது. சின்ன சின்ன வரிகளில் அதிரவைக்கும் கவித்துவம் தென்படுகிறது.

9. வான்சிறப்பு

வள்ளுவரின் வரிகள் கொண்ட தலைப்பு. மழை என்றால் என்ன எப்படியெனினும் மழை பிரமிப்பு. மழை நினைவுபடுத்திச் செல்லும் கவித்துவம்.

10. உறக்கம்

உறக்கம் மட்டும் இல்லையெனில் இவ்வுயிரின் இயக்கம் ஏதும் இல்லை. உறக்கம் ஒரு வரம். கவித்துவ வரிகளால் சிறப்பிக்கப்பட்ட உறக்கம்.

11. உதிரா நினைவு

அண்ணனின் பிறந்த தினம் குறித்த கவிதை என வாசிக்கத் தொடங்கினால் அம்மாவின் அன்பைச் சொல்லும் அழகிய கவிதை.

12. அவள் பெயர் அட்சயா

பொம்மை குறித்த பொருள் பொதிந்த உயிர் நிறைந்த கவிதை. இதுபோன்ற கவிதைகள் எல்லாம் மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமல்ல நம்மோடு எளிதாக இணைந்துவிடும் கவிதை. நமது நினைவுகளை கிளறிவிடும் கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

13 மிச்சங்கள்

மீண்டும் ஒரு பழைய நினைவுகளை அசைபோடும் கவிதை. பாத்திரங்களில் பெயர் பதிப்பார்கள். மனித பாத்திரங்களுக்கும் பெயர் வைப்பார்கள்.

14 வலி

பெயர் குறித்த வலி நிறைந்த கவிதை.

15 வன்முறை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை சொல்லும் கவிதை. முதலில் வாசிக்கும்போது என்னவோ என நினைக்க கடைசியில் ஒரு உணர்வின் மீதான வன்முறையை அழகாக விவரிக்கும் கவிதை

16 மகள்

இந்த கவிதையைப் படித்தவுடன் ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து போனது. எதற்கு மகள் வேண்டும் எனும் எனது எழுத்து கூட ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடுதான். நல்ல வரிகளுடன் தொடக்கம். பெண் குழந்தை என்றால் மிகவும் இஷ்டம் போல. அருமையான வெளிப்பாடு.

17. முத்தம்

காதல் முத்தம் அட்டகாசம்.

18 கண்ணீர்

அழுகையில் வடிந்து போனதென் அத்தனை ஆதங்கங்களும், அவமானங்களும், கோபங்களும் இயலாமையும். மனவலி நிவாரணி.

19. காதலிக்கப்படுதல்

காதலிக்கப்படுதல் கடைநிலை மனிதருக்கும் சந்தோசம் தரும். காதலிக்கபடுவதால் என்னவெல்லாம் நடக்கும் எனவும் புரியலாம்.

19. விஷூ

அம்மா முகத்தைத்தான் வெறிக்கிறது பார்வை.

ஒரு நிகழ்வை விவரிக்கும் கவிதையில் சில வரிகளே அந்த நிகழ்வின் சிறப்பம்சம்.

கவிதாயினி சௌம்யாவின் அம்மா அற்புதமாகவே இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் நூலுக்கு நான் எனது எண்ணத்தை  எழுதுவது இதுவே இரண்டாவது தடவை என்றே கருதுகிறேன்.

(தொடரும்)


Wednesday 7 October 2015

நமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்

முதல் பக்கத்தைப் பார்த்ததும் பளிச்சென மனதில் ஒட்டிக்கொண்டு ஒருவித சந்தோசம் தந்துவிடுகிறது நமது திண்ணை. பொதுவாக குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி விளையாடுவார்கள். சுதந்திரமான வீட்டில் குழந்தைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட கோடுகள் இருக்கும். ஆனால் இப்படி ஓவியம் வரையலாம் என்பது ஒரு சில குழந்தைக்களுக்கேத்  தெரியும். அருகில் இருக்கும் செடி கொடிகளால் அந்த மரம் உயிர் பெற்று இருப்பது போல உங்கள் கண்ணுக்குத் தெரிந்தால் நீங்கள் தான் ஓவியத்தில் ஜீவன் காண்பவர்கள். இலைகள், மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள். வெகு பிரமாதம். ஓவியர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ருதி. 

எமி அவர்களின் தாயகம் தேடும் உயிர் ஒரு நீண்ட வலியை சொல்லும் கவிதை. இந்த கவிதையில் வரும் ஒவ்வொரு விஷயமும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் ஓலமாகவே இருக்கும். புலம் பெயர் மக்களில் பல வகையினர் உண்டு. இந்த கவிதையில் சொல்லப்படும் புலம் பெயர் மக்களின் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் நாடு போல எதுவுமே இருப்பது இல்லை. பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்கிறோம் என்பதோடு அந்த புலம் பெயர் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை கவிதை மனவலியுடன்  முடித்து வைக்கிறது.

ரிஸ்வான் அவர்களின் அன்புள்ள அப்பா.  பெருக்குவேன் காகிதங்கள் தினம், பணமெனும் காகிதம் வேண்டி. கல்வி நல்லதொரு வாழ்வைத் தரும் என சொல்லி மகள் மீதான எதிர்பார்ப்புடன் குப்பை பெருக்கினும் கோபுரம் தொடு என அருமையாக இருக்கிறது.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் இத்தனை வேகமாக முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சைவ மன்னன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்து இருந்தால் ஸ்ரீராமானுஜர் இன்று இத்தனை அளவுக்கு பேசப்பட்டு இருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் நல்ல மனிதர்களுக்கு எவரேனும் உதவியாக வந்துவிடுவார்கள் என்பதுதான் காலம் காலமாக கண்டு வரும் செய்தி. கண்கள் இழப்பது, உயிர் துறப்பது என்பதெல்லாம் நல்லதொரு விசயத்திற்காக முன்னர் மனிதர்கள் துணிந்து செய்தார்கள் என அறிய முடிகிறது. பிற சமயங்களை வெல்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். ஓம் நமோ நாராயணா என்றே சொன்னால் போதும் என வாழ்ந்தவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

எம்சி அவர்களின் நண்பன் கதை ஒருவரது  சின்ன கவனக்குறைவு பிறருக்கு எத்தனை பாதிப்பு உண்டாக்கும் என சோகம் சொல்லி முடித்த கதை.

விமலா பாட்டி அவர்களின் காலக்கண்ணாடி கடிதம் பற்றிய அருமையான நினைவலைகள் எனது கடிதம் எழுதிய காலங்களை, இன்றும்  கடிதம் எழுதும் அப்பா குறித்து அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. அவர் சொன்னது போல கடிதங்கள் எல்லாம் தொகுத்து வைத்து இருந்தால் ஒரு காவியமே எழுதி இருக்கலாம் தான்.

பரிசல் அவர்களின் வீட்டைக் காலி பண்ணிப்பார், அட்வான்ஸ் கேட்டுப் பார் என்பது வீட்டின் உரிமையாளரே அட்வான்சை காலி பண்ணிப்பார் என முடிந்து இருப்பது பெரும் சோகம். பணத்திற்கு ஆசைப்பட்டு நல்ல நல்ல குணங்களை மனிதர்கள் தொலைத்து விடுகிறார்கள். முன்பணம் என்பது ஒரு பாதுகாப்புக்கு எனத் தெரியாமல் அதை செலவழித்துவிடும் உரிமையாளர்கள் பலர் இதுபோல நடந்து கொள்வது உண்டு. பலர் நிலையை பிரதிபலிக்கிறது.

அவளதிகாரம், மகளதிகாரம் படங்கள் எல்லாம் அருமை.

பெண்களின் அவல நிலையைச் சொல்லும் ஒரு சோகமான கவிதை மனோவின் ஆண்  திமிர் . மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்  இறந்து போகவேணும் என எந்த ஒரு மனைவியும் வேண்டுவதில்லை, மாறாக தானே  இறந்து போகிறார்கள்.

சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ திரு அன்பழகன் நேர்காணல்! ஒரு மக்கள் பிரதிநிதியிடம் சினிமா குறித்து நேர்காணல் தொடங்கியதும் என்ன இது என்றே தோணியது. தமிழ் சமூகம் சினிமாவால் தான் சீரழிந்தது என்று இல்லை, சினிமாவுக்கு முன்னரே சீரழிந்த தமிழ் சமூகம் தான் அது. சில கேள்விகளுக்குப் பின்னர் அவரது அரசியல் வாழ்வு பற்றி இருந்தது. மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், வாரத்தில் எத்தனை முறை தொகுதிக்கு  செல்கிறீர்கள், அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறீர்களே உங்கள் தொகுதியின்  தெருக்களில் அடிக்கடி தென்படுவது உண்டா, உங்கள் தொகுதி மக்களுக்கு நாட்டின் மீதான அக்கறை என்ன, குற்றங்கள் குறைந்து இருக்கிறதா என பேட்டி எடுத்து இருந்தால் கலகலப்பாக இருந்து இருக்கும். ஆசிரியரின் முதல் நேர் காணல் என்பதால் அதுவும் தமிழகத்தில் இந்த முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்றால் அளவு கடந்த மரியாதை என்பதால் அதுவும் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்பதால் சற்று கவனம் அவசியம் தான்.

அட யானைக்கு 38 பெயர்கள். பிரமாதம்.

உமா  க்ருஷ் அவர்களின் பாடல் பரவசம்  காதல் கவிதைகள் படித்திடும் நேரம் உண்மையிலேயே பிறைசூடனின் மிகவும் அற்புதமான  பாடல். ஒரு பாடலுடன் நம் மனம் ஒன்றிவிடாது போனால் அந்த பாடலின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு பாடல் கேட்போம் அத்தோடு போய்விடுவோம் ஆனால் அதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் ரசிப்பதற்கு தனி மனநிலை வேண்டும். இசைஞானி இசை என்றால் தரம் பிரித்து விடலாம் எனுமளவுக்கு அவரது இசை இருப்பது என்னவோ உண்மைதான். பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்பட்ட பாடல் என்றாலும் அத்தனையும் சரியாக இணைந்து போக வைப்பதே ஒரு இசையமைப்பளாரின் வெற்றி. இவரது எழுத்தின் மூலமே  அந்த பாடலின் உன்னதம்தனை, இசையின் மேன்மையை நாம் அறிந்து கொள்ளச்  செய்து இருப்பதுதான் வெகு சிறப்பு. அதோடு காட்சிப்படுத்தலை அதில் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறார். அருமை.


நண்பர் ரவி அவர்களின் சமையல். உக்காரை. எங்குதான் பெயர் கண்டுபிடிப்பு செய்வார்களோ? கேள்விபட்டதே இல்லை. வெறும் கடலைப்பருப்பு வைத்து ஒரு உணவு. வித்தியாசமாக இருக்கிறது. சட்னிக்கு பதில் இப்படியும் செய்து சாப்பிடலாம்தான்.

ஆசிரியர் மூலம் சுந்தரராஜன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. நமது திண்ணை இணைய இதழ் மட்டுமல்ல இனிய இதழ்.

அழகிய வடிவமைப்பு, எண்  அழுத்தினால் பக்கம் செல்லும் நேர்த்தி எனத் தொடர்ந்து அனைவரையும் உற்சாகம் பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த இணைய இதழ் புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை நமது திண்ணை ஆசிரியர் அவர்களிடம் விபரங்கள் கேட்டு செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். 

Thursday 3 September 2015

நமது திண்ணை செப்டம்பர் மாத சிற்றிதழ்

நமது திண்ணை சிற்றிதழை ஒவ்வொருமுறை ஒருவர் வெளியிடுவர். இதற்கு பெரிய விழா எல்லாம் இல்லை. ட்விட்டரில் இந்த சிற்றிதழின் இணைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என சொல்லி இணைப்பு தருவார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த முறை தி.மு.க மந்திரி (அவரே சொன்னபிறகு தான் எனக்குத் தெரியும்) திரு ஜெ அன்பழகன் இந்த சிற்றிதழை வெளியிட்டு இருக்கிறார். ஒரு மந்திரி ஒரு சிற்றிதழை வெளியிட முன்வந்து இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பக்க வடிவமைப்பே மிகவும் அட்டகாசம். அட்டைப்படத்தை அலங்கரிக்கும் காய்கறியை இங்கே  படித்துத் தெரிந்து கொள்ளலாம். சுபாஷினி அவர்களுக்கு நன்றி.

1. உயிருக்குள் ஓர் உயிர் - எமி

குழந்தையைப்  பற்றிய, தாய்மையைப் பற்றிய உயிருக்குள் ஓர் உயிர் எனும் அற்புதமான  கவிதையை எமி எழுதி இருக்கிறார். பிள்ளை பெறுவதால் அல்லது குழந்தையை சுமப்பதால் அழகு குறையும் எனும் கவலை இரண்டாவது பத்தியில் தென்படுகிறது. தூக்கத்தை மறந்தேனே என சொல்லப்பட்ட வரிகளுக்கு பின்னர் ஓர் விளக்கமும் இருக்கிறது. உலகம் உருண்டை நம்பினேன் எனும் எண்ணமும் வெளிப்படுகிறது நல்ல நல்ல உவமைகள் கொண்டு இருக்கும் இந்த அழகிய கவிதையில் எழுத்துப்பிழைகளைத்  தவிர்த்து இருக்கலாமோ? தேவை இல்லைதான், அந்த அழகிய குழந்தையை தாய்மையைச்  சுமந்த கவிதையில் ஏது  குறை என எமி கருதி இருக்கலாம்.

2. வளர்த்து விடுங்கள் - வருண் 

மரம் பேசும் கவிதையாக மனிதம் வேண்டும் கவிதையாக அமைந்து இருக்கிறது. இப்போதெல்லாம் மரத்தின் மீதான அக்கறை பெரும்பாலான மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. வளி  இல்லாமல் திண்டாடும்போது நல்ல கவிதை வரி. வி'சுவாசமாக நல்ல வார்த்தை நயம்.

ராஜ் மற்றும் அம்ஹர் அவர்களின் அழகிய படங்கள் சிற்றிதழை அலங்கரிக்கின்றன.

3. ஸ்ரீஇராமானுஜர் - சுஷீமாசேகர் 

மிகவும் சுவாரஸ்யமான தொடர் என்றால்  மிகையில்லை. திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார், கோவிந்தபட்டர், ஸ்ரீ போதாயன மகரிஷி என பலரது வாழ்வோடு ஸ்ரீ இராமானுஜர் வாழ்வு இணைந்து இருக்கிறது. அன்பில்  மனம் வைத்தால் அனைவரும் மனம் மாறுவர் என்பதற்கு இவரது திருமலைக்கு சென்ற காட்சி விளக்குகிறது. கோவிந்த பட்டர் தான் கொண்ட அன்பை மறக்காமல் பின்னர் இவரின் அன்பை பெற்ற காட்சி சிறப்பு. கூரத்தாழ்வாரின் மனப்பாடம் பண்ணும் ஆற்றல் நான் படித்த  பள்ளியில் ஒரு சில மாணவர்களை  நினைவுகூற  செய்தது. அவன் எல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதும் அப்படியே ஒப்பிப்பான்  என்பார்கள்.எனக்கும் சரஸ்வதி தேவி கனவில் வரமாட்டார்களா எனும் நிறைவேறாத கனவு உண்டு.

ஸ்ரீ ஆண்டாளின்  ஆசையை இவர் நிறைவேற்றிய கதையை ஓரிடத்தில் சொன்னபோது எனக்கும் பேசத் தெரியும் என சொன்னார்கள். இந்த கதையைப் படித்தபின்னர் நிறைய பேசலாம் போல. நன்றிகள் அம்மா.

4. தலைகவசம் - ப. மணிகண்டபிரபு 

தலைக்கனத்தோடு செல்லவில்லை,  தலையில் கனத்துடன்  செல்கிறேன் என அருமையான கவிதையை எழுதி இருக்கிறார் மணி. இவரது சிந்தனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். முகமே அடையாளம் எனினும் நம் உடல் வைத்து நம்மை யார் என கண்டுபிடிப்பவர் உள்ளனர் என ஒரு வரி கவிதைத்துவம். நமது மனதுக்குள் புன்னகைப்பது தெரியாது என்பது போல தலை கவசம் அறிந்தால் முகம் புன்னகைப்பது தெரியாது என்பது போல ஒரு வரி. மிகவும் சிறப்பு.

5. அப்பா - எம்சீ189 (பாமரன்) 

நல்லதொரு குட்டிக்கதை. அதுவும் கடைசி வரி மிகவும் முத்தாய்ப்பு. நாம் நல்லது செய்தால் நமது கெட்டது எல்லாம் மறைந்து போகும். படிப்பு என்பது எல்லாருக்கும்  இல்லை. எவ்வளவு படிச்சாலும் தலையில் ஏறமாட்டேங்குது ஏறமாட்டேங்குது என சொல்பவர்களிடம் எல்லாம் நன்றாக இன்னும் முயற்சி செய்யுங்கள் என சொன்னாலும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களே அதிகம் தோல்வி அடைகிறார்கள். படிப்பு மட்டுமே சமயோசித புத்தி தராது  என்பதையும் அப்பாவின் அன்பையும் அறிவுறுத்தும் கதை.

6. கிச்சன் டைம் கோவக்காய் பொரியல் - நளபாகம் ரவி 

கோவக்காய் அட! மேலதிக விபரங்கள் இங்கே  இங்கே இதை வினிகரில் போட்டு விற்பார்கள். அப்படியே கடித்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும். வெள்ளரியின் சிறு வடிவம். இவர் எழுதுவது எல்லாம் மிகவும் எளிதாக இருக்கிறது. செய்வதுதான் கடினமாக படுகிறது. ஒருமுறையேனும் நண்பர் சொல்வதை சமைத்து இங்கே ஒரு பதிவு எழுதிவிட வேண்டும்.

7.நேர்காணல் திருமதி ஜானகி சுஷீமாசேகர் 

அன்பான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த உலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கிற ஒரு ஏக்கம் வந்துவிட்டுப் போகும். எத்தனை அழகிய மனிதர்களால் ஆனது உலகம். ஒருவரின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருப்பதால்தான் பல திறமையாளர்கள் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மிகவும் அருமையான பேட்டி   என்றே சொல்ல வேண்டும். குறுகிய நேரத்தில் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அழுகை, அன்பு, ஆர்வம், இசை என எல்லாம் அறிந்து கொண்ட வேளையில் ஒரு விருதுவை புறக்கணித்த தைரியம் வெகு சிறப்பு. செத்த பின்பு ஞானி அவசியமில்லை. கடைசியில் வாசித்த வரிகள் கண்களில் நீர்த்திரள செய்தது. அற்புதமான மனிதர்களை இவ்வுலகம் பின்பற்றவேண்டும்.

கேசவ் அவர்களின் ஓவியங்கள் வெகு சிறப்பு. அருமை. மகளதிகாரம், அவளதிகாரம், மதுவிலக்கு பற்றிய அழகிய டிவிட்கள்.

8. பாடல் பரவசம் - உமா க்ருஷ் 

அப்படியே சிறிய வயது நினைவுகளை முதல் நான்கு பத்திகளில் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி  விடுகிறார். இளவயது இசையோடு ஒட்டிய கிராமத்தின் நினைவுகள் சுகமானவை என்பதை நினைவுபடுத்துகிறது. பாடல் பற்றிய பரவசத்தில் மூழ்கும் முன்னர் பாடல் பெற்ற சிறப்பில்  ஒரு நடிகரின் வரலாறு தென்படுகிறது. தேவா இல்லையென்றால் தமிழ் இசையில் இல்லை கானா என்றாலும் ஒரு நல்ல இசை அமைப்பாளாராக இருக்கப்போய்த்தான் பல படங்களுக்கு இசை அமைத்து தேனிசை தென்றல் என பட்டம் பெற்றார் தேவா என அறிய முடிகிறது. மிகவும் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார் வாலி. இந்த வரிகளை வாசிக்கும்போது கடினமாக இருக்கும், ஆனால் இதை இசைக்குள் நுழைத்து இனிமையாக்கிய பெருமை பாடகர்கள், இசை அமைப்பாளருக்குச்  சேரும். வெட்டப்பட்ட வரிகள் கண்டு இவரது கோபமும் புரிகிறது. அருமை.

சிற்றிதழ் ஆசிரியரின் தியாகராஜ பாகவதர் குறித்த விஷயங்கள்  அருமை, கைது செய்யப்பட்டு பின்னர் என்ன ஆனது என எழுதி இருக்கலாம்தான்.

அழகிய வடிவமைப்புகளுடன் மின்னி வானம் தொட்டு  சிறக்கிறது நமது திண்ணை சிற்றிதழ்.Friday 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)Thursday 27 August 2015

பேய் ஊர்

எவருக்குத் தெரியும்
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என

பூசாரி கோடாங்கி
ஆசாரி செட்டியார்
தேவர் நாயுடு
சக்கிலியர் ரெட்டியார்
அவர்தம்மில் ஒருவராக
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என
எங்கிருந்து தவம் இருந்தனரோ

அவுசாரி தேவடியா
பொறுக்கி குடிகாரன்
கஞ்சா கசக்கி சீட்டு கட்டு
அடிதடி சண்டை
என அல்லல்படும்
அந்த ஊரில் தான்
பிறக்க வேணும் என
எவர் எழுதி வைத்தனரோ

கோவிலு குளம்
முனி பிசாசு
காடு தோட்டம்
கிணறு தோப்பு
தரிசு காஞ்ச கண்மாய்
மண்ரோடு தார்ரோடு
அந்த ஊரில் தான்
அழுது சிரிக்க வென
எப்படித்தான் அங்கு போனாரோ

அரசு வைச்சது ஒரு பேரு
இவங்க வைச்சது பேய் ஊரு
ஆம்பளைன்னு இல்ல
பொம்பளைன்னு இல்ல
ஒன்னு கிணறுல விழுந்து
சாகுறா
இல்லை கயித்துல தொங்கி
சாகுறா
சுடுகாடு ஒண்ணு உள்ள
அந்த ஊரில் தான்
அடக்கம் ஆவோம் என
சத்தியமிட்டு சொல்லி சேர்ந்தாரோ

காதலு தோத்து
விஷம் குடிச்ச ஆளும் உண்டு
கட்டிக்கிட்டவன் சரியில்லைன்னு
தட்டிக்கேட்டு தானே
அவன் கையால செத்தது உண்டு
விவாகரத்து கூத்தியாள்
கூத்தியான் விவகாரமான
அந்த ஊரில் தான்
மணமுடித்து வாழ்  என
கண்கள் இன்றி போனாரோ

என்ன என்னவென்னவோ
நடக்குது
ஆனாலும் பாருங்களேன்
அம்மனுக்கு கூழும்
கருப்பனுக்கு கறிசோறும்
தீபாவளி பொங்கலுன்னு
தின்னு தீக்குறாங்க
அந்த ஊரில் தான்
தின்னு கழியணும்னு
தினவெடுத்து போய் விழுந்தாரோ

எதுவுமே நடக்காத மாதிரி
எல்லோரும் சாமி பேய்னு
சத்தியம் பண்ணி
தீபம் அணைக்கிறாங்க
பேய் இருக்கும் ஊரில
சாமியும் தான் இருக்குமோ
சாமி இருக்கிற ஊரில
பேயும்தான் இருக்குமோ
என்னதான் இருந்தாலும்
பிறந்த ஊரு பெருமை
பேய் ஊருனு ஆனாலும்
விட்டுத்தான் போகுமோ என்றாரோ!

Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.
Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்


Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Saturday 18 July 2015

அவளது சொந்தம்

வேண்டுவன எல்லாம் வேண்டுவன
விடுவன எல்லாம் விடுவன
தான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு 
ஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை

ஊர்வன எல்லாம் ஊர்வன

பறப்பன எல்லாம் பறப்பன 
கல்வியறிவு களவு அறிவு என 
எந்த அறிவும் கொண்டதில்லை 

நடப்பன எல்லாம் நடப்பன

கடப்பன எல்லாம் கடப்பன
கவலை ஆட்டுவித்து கவலை புரிந்து 
காலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன

அவளது சொந்தம் என்று திரிவன

அவனது சொந்தம் என்று வருவன
ஒன்றுக்கொன்று வேறுபட்டு உழன்று 
உடைந்தும் ஒட்டுறவாக இருப்பன

சாமி கண்டேனென சொல்வன 

பொய்யாய் உலகம் வெல்வன
தானே உலகமும் சுற்றமும் என மறந்து 
ஏதோ எவரோ என ஓடி ஒளிவன

அழுவன எல்லாம் சிரிப்பன

சிரிப்பன எல்லாம் அழுவன
இன்பம் மட்டுமே கருதி வாழ்வில் 
துன்பம் கண்டால் நடுங்குவன

ஓடுவன எதையோ நாடுவன

நாடுவன எதையோ தேடுவன
மறதியில் எதையும் மறந்து திரிந்து
ஏதும் அறியாது சிவனாகி கிடப்பன

கண் பார்ப்பன காது கேட்பன

வாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன
காலமெல்லாம் இதையே நினைந்து

நினைந்து மூளை தோல் உணர்வன 
எது காப்பன எது தோற்பன 
அது அழிவன அதுவே ஆக்குவன
எல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும் 
வழி மாறாது இப்படியே இருப்பன 

எல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது
போனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ?

Monday 6 July 2015

நமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்

ஜூலை மாத சிற்றிதழ் இங்கு 

என்னை மிகவும் பாதித்தது இராமானுஜரின் வாழ்க்கை. கணவன் மனைவி நேரெதிர் குணம் கொண்டு இருந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது இராமானுஜரின் வாழ்க்கையை சுசீமா அம்மா அவர்களின் இந்த தொடரில் படித்தபோது நிறையவே பயம் தொற்றிக்கொண்டது. Women from Venus, Men form Mars என்பது ஒருவேளை உண்மையோ என எண்ணும்  அளவிற்கு வெவ்வேறு கருத்துகள், வெவ்வேறு பிடித்தவைகள் என ஆண் பெண் என பேதம் கொண்டு இருக்கவே செய்கிறார்கள்.

கணவன் சொன்னால் மனைவி கேட்பதில்லை. மனைவி சொன்னால் கணவன் கேட்பதில்லை. இராமானுஜரோ வேறு மாதிரி இருந்து இருக்கிறார் என நினைத்தால் கடைசியில் துறவறம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அவரது மனைவியின் செயல்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு உரியது என்று சொல்லிவிட முடியாது ஆனால் காலம் காலமாக வெகு சிலரே சமய, அரசியல், சமூக ஈடுபாடுகளில் இணைந்து உள்ளார்கள் எனும்போது பெண்களை குற்றம் சொல்ல இயலாது.

அதீத சமூக சிந்தனை உள்ள ஆடவரோ, பெண்டிரோ திருமணம் முடிக்கக்கூடாது. ஒன்று குடும்பம் பிள்ளைகள் என வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அல்லது ஊருக்கு என வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அன்பை எதிர்பார்த்து இருக்கும் குடும்பம் அல்லாடிவிடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு குறித்த விமர்சனம் தவறுதான் என அறிந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த உலகத்திற்கு தத்துவம் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன. எவருக்குத் தேவை பாவமும் புண்ணியமும், இறைபாதமும், இறைபாதமற்றதும். இதனால்தான் தனிப்பட்ட வாழ்வு பாராமல் இருக்கச் சொல்லிச் சென்றார்கள் அதுவும்  அழகாக அவரவர் தவறுகளை மறைத்து தப்பித்துக் கொண்டார்கள். 

ரமதான் மாதம் என்பதைக் குறிக்கும் வண்ணம் அட்டை வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிரியரின் எழுத்தில் உள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சிற்றிதழ் என்றாலும் எழுதுபவருக்கு நிறைய எதிர்பார்ப்பும், வாசிப்பவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். எத்தனயோ தொழில்நுட்பம் பெருகிவிட்ட நிலையில் கஷ்டப்பட்டு ஒன்றை உருவாக்குவதைவிட எளிமையான வழி இருப்பின் அதைத் தொடர்வது நல்லது என்றே கருதுகிறேன். எப்படி கொண்டுவர வேண்டும் என எண்ணுகிறோமோ அப்படியே கொண்டு வந்துவிட வேண்டும்.

கான் அவர்களின் விதவை கவிதை வலி சுமக்கும் கவிதை எனில் ஃபாரிஜாவின் பெண்ணாக ஏன் பிறந்தோம் எனும் முதிர்கன்னி கவிதை அதையும் தாண்டிய வலி கொண்டது. இப்போது மேலே குறிப்பிட்ட இராமானுஜர் வாழ்வும் இந்த இரண்டு கவிதை நிலைகளும் எடுத்துக் கொள்வோம். இல்லறவாழ்வு இனிமையாகவோ இனிமையற்றதோ இருந்தாலும் தன்னுடன் வாழும் ஒருவரை இழத்தல் கொடியது. வண்ணங்கள் கலைந்த எனத் தொடங்கி உளி தொலைந்த என ஒவ்வொரு வார்த்தையில் திரும்பவே கிடைக்கப்பெறாத தொலைதல் சொல்லப்பட்டு இருக்கிறது. எவர் முதிர்கன்னி? வறுமைக்குப் பிறந்துவிட்ட கொடுமைகள் என வலி தொடங்கி, இந்த சமூகப்பார்வை குறித்த வார்த்தைகள் ஈட்டிபோல குத்துகின்றன.

இடியாப்பச் சிரிப்பு மிகவும் ரசிக்கும்தன்மை உடையதாக தற்போது மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதை பகடி பண்ணி எழுதப்பட்டவைகள் நிறைய. உண்ண  உணவு இன்றித் தவிக்கும் ஒரு பக்கம். தரப்படும்  உணவில் தரமில்லாமல் தந்து விடுவது ஒரு பக்கம். அப்படியே அதே பக்கத்தில் கணேஷ் அவர்களின் கவிதை யதார்த்தமாக அமைந்து இருக்கிறது. சூரியன் ஒரு ஓவியன். நல்ல ரசனை. நல்ல புகைப்படங்கள் சிறப்பாக இருக்கின்றன. அடுத்து கர்ணன் குறித்து ரவிக்குமார் அவர்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருக்கிறது. கர்ணன் சிந்திக்கும் அளவுக்கு அவனது புத்தி செயல்படவில்லைதான். அப்படி செயல்பட்டு இருந்தால் ஒரு மகாபாரதம் நடந்து இருக்காது, ஒரு மாபெரும் காவியம் கிடைத்து இருக்காது. வள்ளுவருக்குத் தெரியுமோ என்னவோ நுண்ணிய பல நூல்கள் கற்பினும் என சொல்லிச் சென்றுவிட்டார். ஒட்டுற மண்ணுதான் ஒட்டும். ஜீவா அவர்களின் உபதேசம் நல்லதொரு படிப்பினை கதை. ரசிக்கும்வகையில் இருந்தது. பெற்றோர் பிள்ளைகள் நிலை இப்படித்தான்.

சின்ன சின்ன வரிகளில் உலகம் சொல்லும் கருத்துக்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொருவரின் எழுத்தும் அற்புதம். அதுவும் இந்த சிற்றிதழில் அவரவர் பெயர் அழுத்தினால் நேராக ட்விட்டர் சென்று விடும்  வடிவமைப்பு நிச்சயம் பாரட்டப்படக்கூடியதுதான். வாழ்த்துக்கள். பிரசன்னா அவர்களைப் பற்றி நாளேடுகளே பெருமை பேசி இருக்கின்றன. அவரது ஓவியங்களின் அலங்கரிப்பு இந்த நமது திண்ணை சிற்றிதழுக்கு பெரிய அங்கீகாரம். ஓவியங்கள் நம்முடன் பேசுவது போலவே இருக்கும் என்பதுதான் இவரது ஓவியங்களின் சிறப்பு.

கார்த்திக் அவர்களின் ஆலவாயன் பற்றிய நாவல் மதிப்புரை மிகவும் சிறப்பு. நிறைய நூல்களைப் படிக்கக்கூடியவர். மிகவும் தெளிவான எண்ணங்கள் கொண்டு இருப்பவர். மாதொருபாகன் எனும் நாவலின் தொடர்ச்சி இது. ஒரு நாவல் மனிதர்களின் மனதோடு ஒட்டிவிட வேண்டும். பல விசயங்களை இந்த நாவல் ஆசிரியர் சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

கிரேசி மோகன் அவர்களின் நேர்காணல். அடடா! சுசீமா அம்மா அவர்களின் கேள்விகள் சிறப்பு என்றால் கிரேசி அவர்களின் பதில்கள் வெகு சிறப்பு. இவர் குறித்து பல விசயங்களை அறியமுடிந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நிலை எனக்கு மன கஷ்டம் தந்தது. ஆஹா ஓஹோவென புகழப்படும் படைப்பாளிகள்  நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பது பாரதியார் காலத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அது ஏன்  வள்ளுவரே கூட பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை என சொல்லிவிட்டார். நிறைய வாசிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை எனக்கும் தான். மிகவும் பிடித்த வரி, எனது எழுத்துதான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு. ஜானகி ஆசிரியை, அட! தமிழ் மீது பற்றுக்கு ஒரு ஆசிரியை, ஆசிரியர் என அனைவருக்கும் இருந்து விடுகிறார்கள். வெண்பா! எழுத்தாளர் சொக்கன் அவர்களை நினைவுப்படுத்தினார். இது மட்டுமல்லாது, நண்பர் ரத்தினகிரி வெண்பா அருமையாக எழுதுவார், வெண்பா எப்படி எழுதுவது என கற்றுத்தந்த சூரியகாந்தி அவர்களை நினைவுபடுத்தியது. ஒவ்வொரு வெண்பாவும் அசத்தல்.

வருண் அவர்களின் நுரையீரலின் ஓலம் அந்த அழுகுரல் புகையில் கரைந்து போய்விடுவது சோகம். எவரேனும் செவிகொடுத்து கேட்கமாட்டார்களா? உமா க்ருஷ் அவர்களின் பாடல் பரவசத்தில் மலரே மௌனமா மிகவும் அற்புதமான பாடல் வரிசையில் ஒன்று என்றால் மிகையாகாது. அவர் எஸ்பிபி குறித்து சொன்ன தகவல் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்பதை விட எப்படி பாட வேண்டும் என்பதில் இருக்கிறது ஒரு பாடலின் வெற்றி. இசை அதற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அற்புதமான வரிகள் இருந்தும் சிதைத்துவிடும் இசையும், காண சகிக்காத காட்சியும் இல்லாமல் அனைத்துமே ஒருங்கிணைந்த ஒன்று என பரவசம் கொள்ளக்கூடிய பாடல் தான். மிகவும் அருமை.

கூட்டாஞ்சோறு என்பது சாதாரண சொல் என்றே நினைத்து இருந்தேன்.  கூட்டாஞ்சோறு என்றால் பழைய சோறு, புது சோறு என கலந்து உருவாக்குவது என நினைத்தால் மிகவும் அருமையாக அந்த சோறு எப்படி தயாரிப்பது என எழுதி இருக்கிறார் நண்பர் ரவி. புளியோதரை, எலுமிச்சை  சாதம், தயிர் சாதம் போல இந்த கூட்டாஞ்சோற்றில் பல காய்கறிகள் பங்குபெற்று விடுகின்றன, அத்தோடு புளி கரைசல், எலுமிச்சை எல்லாம் வந்து விடுகிறது. பிஸ்மில்லாபாத் என்பதுதான் இதுவோ?

ஆசிரியர் அவர்களின் கண்ணதாசன் குறித்து தெரிந்து கொள்ளமுடிந்தது. இன்று ஆசிரியர் இந்த சிற்றிதழை அச்சு வடிவில் கொண்டுவரலாம் என எண்ணியபோது எனக்கு சந்தோசமாக இருந்தது. செய்யலாம் என்றே சொன்னேன். ஆனால் பலர் வேண்டாம் என்று கூறினாலும் 'நாட்டாமை' என அனைவராலும் ட்விட்டரில் அறியப்படும் திருமாறன் அவர்கள் இன்னும் பல விசயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என சொன்னார். சரிதான், ஆனால் எவர் எழுத முன் வருகிறார்கள்? எழுதுவது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அதை எல்லோராலும் செய்ய இயலாது. இணையத்தில் பல விசயங்களை எழுதுபவர்கள் தனக்கென ஒரு வழி கொண்டு இருக்கும்போது இப்படி நூல்கள் எல்லாம் வெளியிட எழுத முன் வருவார்களா? நமது திண்ணைக்கு நல்ல எழுத்தாளர்கள் கிடைக்கவும் நிறைய நல்ல விசயங்கள் சேர்த்துக் கொள்ளவும் வாழ்த்துகிறோம்.

Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Wednesday 3 June 2015

தமிழ் மின்னிதழ் - 2 லீனா மணிமேகலை ஆண்டாளின் தோழிகள்

கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் இங்கே கவிதை என எழுதப்பட்டு இருக்கும் பகுதியில் சென்று பார்த்தால் நான் சொல்வதன் உண்மை என்னவென அறிந்து கொள்வீர்கள். கவிதை எனக்கு எழுதத் தெரியாது என தமிழ் இலக்கியம் அறிந்த ஒருவர் சொன்னதால் வெறும் வார்த்தைகள் என தலைப்பிட்டே கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் கவிதைகளைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதா என்றுத் தெரியாமல் பல கவிதைகளைப் போற்றி பாராட்டி வருகிறேன். இந்த தமிழ் மின்னிதழில் லீனா மணிமேகலை கவிதைகள் என சில வாசித்தேன். இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். கேள்விப்பட்டதோடு அப்படியே இருக்கட்டும். சர்ச்ச்சைக்குரியவர்கள் இவ்வுலகில் அதிகம் கவனம் ஈர்த்துவிடுகிறார்கள். பிறர் சொல்லத் தயங்குவதை சொல்பவர்கள் மக்களால் கவனிக்கப்படுகிறார்கள்.

10. லீனா மணிமேகலை கவிதைகள்

நட்சத்திர தூசி.

நீ எனக்கு யாரடா! இந்த கவிதையை எப்படி வேண்டுமெனினும் சிலாகித்துக் கொள்ளுங்கள். ஒரு அன்னியோன்யமான அன்பை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திரைச்சீலை அன்பை விலக்குவதில்லை. கவிதைத்துவம் என்பது இதுதான். வார்த்தைகளில் காட்சி அமைப்பு ஏற்படுத்தி விடுவது.

அடுத்து இதுவும் ஒரு நிலை சொல்லிச் செல்கிறது. இடைவெளி குறித்தும் ஆயுள் ஒரு இரண்டக  நிலை. திரையரங்கு இருளில் இருந்து காட்சிப்படுத்தபடுகிறது. பூச்சியின் ரீங்காரம் என திரை இரைச்சல் என நிறைய யோசித்தோ யோசிக்காமலோ கவிதை வரிகள் வந்து விடுகின்றன.

11. குவியொளி - மகி

ஒரு விஷயத்தை ஒரு வார்த்தையில் சொல்ல இயலும். ஒரு வாக்கியமாக சொல்ல இயலும். ஒரு கதையாக சொல்ல இயலும். ஆத்திசூடி எழுதப்பட்ட வரலாறு சுவாரஸ்யம். அதுபோல ஒரு வாக்கியமாக பல குவிந்து இங்கே ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு இருக்கிறது. உடன்பாடு, உடன்படு.

12. ச. முத்துவேல் கவிதைகள்

இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன. இரும்புக்கரம் என்பது ஒரு ஆதிக்க சக்தியின் வெறியாட்டத்தை கவிதை விளக்கம் சொல்கிறது. சில வரிகள் அதன் வீரியத்தை உணர்த்தும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. காதலிப்பது சற்று வித்தியாச கோணம். கலவி உரையாடல்கள் சற்று வித்தியாசம்தான். தலைப்புக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று இருப்பினும் நல்ல கவிதைதான்.

13. மணிவண்ணன் - சமூகப் புரட்சியின் கலைஞன்  முரளிகண்ணன்

ஒருவரைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எனக்கேட்டால் இப்படித்தான் எழுத வேண்டும் என இந்த கட்டுரையை தைரியமாகக் குறிப்பிடலாம். இத்தனை விரிவாக இத்தனைத் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதற்கு நன்றிகள். எனக்கு மணிவண்ணன் அவர்களை மிகவும் பிடிக்கும். அமைதிப்படை படம் பார்த்தபோது வியந்தது உண்டு. எனக்கு ஒரு படைப்பாளியாக அவர் இருந்து இருக்க வேண்டும் என்றே எண்ணியது உண்டு. அவரின் அரசியல் நிலைப்பாடு, எண்ணம் என பல விசயங்கள் அறிய முடிந்தது.

14. நிழலோவியம் - புதியவன்

ரசித்து மகிழலாம். தெளிவாக இருக்கிறது.

15. அப்பா - செந்தில்சிபி

அப்பாவுக்கு நான் எதுவுமே செய்யலை. கொள்ளி  மட்டும் தான் வைச்சேன். அப்பா பற்றி எழுதிக் கொண்டே இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அழகிய உணர்வுகளை அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார். அவரது வாழ்க்கையை சொன்னதில் இருந்து செந்தில் சார் வாழ்வும் அறிய முடிகிறது. மிகவும் நேசித்த பதிவு.

16. ராஜா சந்திரசேகர் கவிதைகள்.

கவிதை என்றால் இவரது கவிதைதான் அதி அற்புதம் என சொல்லலாம். எழுத்தாளர் நர்சிம் அவர்கள் குறிப்பிட்ட கவிஞர் இவர்தான் என்றே நினைக்கிறேன். இவரது கவிதைகள் பல வாசித்து இருக்கிறேன். தீட்டப்பட்ட வைரம் போல ஜொலி ஜொலிக்கும். முதல் கவிதை ஒரு நிமிடம் நம்மை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்யும். ஏம்மா இப்படி செஞ்சிட்ட? பிரமாதம் குறுங்கவிதைகள்.

17. நா ராஜூ கவிதைகள்

வார்த்தைகளுடன் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த விளையாட்டு எனக்குப் பிடித்து இருந்தது. சில வார்த்தைகள் இலக்கியத்தன்மையைத் தந்துவிடும் வல்லமை கொண்டவை. தமிழுக்கு உண்டான சிறப்பு. இவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளை கண்டு கொண்டது போல் இருந்தது.

18. ஆண்டாளின் தோழிகள் - சங்கர் கிருஷ்ணன்.

பிரமாதம். திருப்பாவை குறித்து எத்தனை அனுபவித்து எழுதி இருக்கிறார். ஏதோ  பாடல் என்று நான் இருக்க ஒவ்வொரு பாடலுக்கும் இருக்கும் ஒரு கதையை அழகாக சொல்லி இருக்கிறார். நாலாயிர திவ்விய பிரபந்தம் பற்றிய பார்வை வெகு சிறப்பு. நிறைய ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த பதிவு இது.

(தொடரும்)

Friday 15 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்''

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பசி, உறக்கம் எல்லாம் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி உறக்கம் பசி தொலைத்து எல்லாம் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்தது இல்லை. எத்தனை சுவாரஷ்யமாக இருந்தாலும் முழுவதும் முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல் எல்லாம் எப்போதும் இருந்தது இல்லை. விருப்பப்பட்டு நேரம் இருப்பின் அதன் மூலம் செய்வதுதான் வழக்கம். ஒரு புத்தகம் தந்தால் அதை வாசிக்க பல மாதங்கள் ஆகி இருக்கிறது.

இந்த தமிழ் மின்னிதழ் -2 மிகவும் சிறப்பாகவே வந்து இருக்கிறது. இத்தனை சிரமம் எடுத்து ஒரு இதழை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள். அடுத்தமுறை புதிதாக ஒரு படைப்பினை எழுதி அதை அனுப்பி எனது படைப்பின் திறனை பரிசோதித்துக் கொள்ளலாமா என்றே எண்ணி இருக்கிறேன். பல எழுத்துத் திறமை உள்ளவர்களைத் தாண்டிச் செல்வது சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எழுத்து எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படித்தான் முதலில் புனைவு, கவிதை என வாசித்துவிட்டு வேறு பக்கம் திரும்பலாம் என எண்ணி எல்லா புனைவுகளும், கவிதைகளும் வாசித்து முடித்தேன். அதற்குப்பின்னர் இங்கொன்று அங்கொன்று என வாசித்து இந்து இந்துத்தவா என்றெல்லாம் படித்து திரு. யுவன் சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் எழுத்து உலகில் நான் இழந்து கொண்டு இருப்பது நிறையவே என மனதுக்குத் தெரிகிறது. எனக்கு இவரப் பற்றி அறிந்து கொண்டதே இல்லை. இவரது குரல் ஒன்றை ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட அதை திரு. வைரமுத்து, திரு சரவணகார்த்திகேயன் என குழம்பியது உண்டு. அத்தனை அற்புதமான குரல். அழுத்தம் திருத்தமாக இருந்தது. ஒற்றுப்பிழை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு இந்த பிரச்சினை உண்டு. சரிசெய்ய நன்னூல் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள். எனக்குத்தான் வாசிப்பு என்றால் நிறைய தூரம் என ஆகிவிட்டது.

இணையப் பழங்குடிகள் என்ற ஆசிரியரின் பார்வை மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகள் முன்னரே நண்பர் சுதாகர் என்ன சார் ஒரு பொண்ணு தெருவில நடமாட முடியல. போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கிறாங்க என்று சொன்னபோது எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. விடுமுறைக்கு மட்டுமே சென்று வருவது என்பதால் எனக்கு இது அவ்வளவாக தெரியாது. அதே ஏழு எட்டு வருடங்கள் முன்னர் எனக்கு நகைச்சுவை எஸ்எம்எஸ் என எனது அண்ணன் மகன் அனுப்பிக்கொண்டு இருந்தான். எப்படி இப்படி எல்லாம் என்றேன், சித்தப்பா வேண்டுமெனில் பல படங்கள் கூட உண்டு என சிரித்தான். எதுவும் அனுப்பாதே என்றேன். நிறுத்திவிட்டான். இன்று எனது நண்பன் ஒருவன் என்னை வாட்சாப் குழுமத்தில் இணைத்து இருக்கிறான். நிறுத்தாமல் ஏதோ  ஏதோ  பகிர்ந்து கொள்கிறார்கள். அதை எல்லாம் படிக்க கேட்க எனக்கு நேரமே இருப்பது இல்லை. நண்பன் என்பதற்காக சகித்துக் கொண்டு அந்த குழுமத்தில் இருக்கிறேன். அவ்வளவே.

நான் தமிழகத்தில் இருந்தவரை இணையம் ஒன்றும் அத்தனை பிரபலமாக ஏன் கணினி கூட அத்தனை இல்லை. நான் லண்டன் வந்தபின்னர்தான் முதன் முதல் மொபைல் போன்  வாங்கினேன். ஆனால் இந்த நாட்டிற்கு வந்தபிறகுதான் இணைய உலகமே அறிமுகம். அது எத்தனை ஆபத்தானவை என்பது குறித்து ஆசிரியர் எழுதி இருக்கிறார். எங்கள் ஊரில் ஒருவரை வஞ்சம் தீர்க்க இவன் இவளோடு இருக்கிறாள் என்பது போல பெயர்கள் இணைத்து ஊர் பொதுச் சுவற்றில் எழுதி வைப்பார்கள். அது அந்த ஊர் வழி செல்பவர்க்கு மட்டுமே தெரியும். இன்றைய காலத்தில் எள்ளி நகையாடும், வஞ்சம் தீர்க்கும் உலகம் ஒருபடி மேலே சென்று விட்டது.

1. ''அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்'' - யுவன் சந்திரசேகர் (நேர்காணல்)

இந்த இதழின் ஆசிரியர் நேர்காணல் எடுக்கச் செல்லும் முன்னர் அனைத்து நூல்களை வாசித்துச் சென்றார் எனச் சொல்ல இயலாது. நூல்களை வாசித்த காரணமே இவரை சந்திக்கச் சென்று இருக்கிறார் என்றே புரிய முடிகிறது. எப்படி குரல் எனக்குள் ஒரு சலனம் உண்டாக்கியதோ அதைப்போல் இவரது நேர்காணல் என்னுள் சலனம் உண்டாக்கியது. எனக்கும் ஒரு தண்டபாணி இப்போது இல்லமால் போனது குறித்து யோசிக்கிறேன். எனது முதல் நாவலுக்கு திரு ரத்தினகிரி, திருமதி பத்மஜா இருந்தார்கள். எப்படி எழுத்துகள் மட்டுமே எனக்குப் போதும் இந்த அரசியல் சினிமா எல்லாம் அவசியம் இல்லை ஒதுங்கி ஒரு படைப்பாளர் இருக்க இயலும் என்பதை இவரது நேர்காணல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நிறைய வாசித்து இருக்கிறார், நிறைய எழுத்தாளர்கள் மூலம் இவருக்குப் பழக்கம் இருக்கிறது. நமது நூல் குறித்து நாம் பேசுவது கூட கூச்சம் தரும்.

ஒரு படைப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படைப்பு என ஒரு எழுத்தாளர் பயணம் அமையும். அவரது அப்பா குறித்து படித்தபோது பிரமிப்பாக இருந்தது. பலகாலங்கள் அவரது தந்தை வாழ்ந்து இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எழாமல் இல்லை. இவருடைய நாவல்கள், சிறுகதை தொகுதிகள், கவிதைகள் என படித்துவிடலாம் என்றே இருக்கிறேன். ஏனோ என்னை அறியாமல் என்னுள் வாசம் செய்கிறார். எந்த ஒரு எழுத்தளாரும் என்னைப் பாதித்தது இல்லை, எல்லாம் எழுத்துதானே என்று சர்வ சாதாரணமாக கடந்து சென்று இருக்கிறேன். ஒரு எழுத்தாளரோ அல்லது எவரோ அவர்தம் நடவடிக்கைகளே என்னைப் பாதிக்கின்றன. இவர் கவிதைகள் எழுதுவேன் என்றும் கவிஞர் யுவன் என அழைக்கப்படுவேன் என்றும் சொன்னபோது என்னை நான் பார்த்துக் கொண்டேன்.

முன்னர் குறிப்பிட்டு இருந்தேனே எத்தனை சுவாரஸ்யம் இருந்தாலும் தள்ளி வைத்துவிடுவேன் என, என்னால் அப்படி தள்ளி வைக்க இயலாத ஒரு வாசிப்பு என்று சொல்லலாம். இந்த இதழின் ஆசிரியரின் கேள்விகள் இவரது மனதில் ஒரு பெரும் நீரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சலனமின்றி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி பயணித்து இருக்கிறார். மொழிப்பெயர்ப்பு நாவல்கள் கூட இருக்கும் போல. ஒரு தமிழ் எழுத்து உலகத்தில் நிச்சயம் சர்ச்சைகளில்  சிக்காத எழுத்தாளர் என்றே நினைக்கிறேன். இல்லையெனில் எங்கோ இருக்கும் எனக்கு இவரது பெயர் இன்னும் அறிமுகம் ஆகாதது ஆச்சரியம்.

ஒவ்வொருவரும் இவரது நேர்காணலைப் படித்து விடமாட்டார்களா என்றே எனக்குள் தோன்றுகிறது. சின்ன சின்ன சிந்தனைகளே ஒரு நாவல் வடிவம் எடுக்கின்றன. எனக்கு திருமதி புஷ்பலதா அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு படைப்பை எழுதி வைத்துவிட்டு அதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் பின்னர் படிக்கும்போது எப்படி இருக்கிறது எனப்பார்க்க வேண்டும், அப்போது அதில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யலாம் என்று சொன்னது உண்டு. அதைப்போலவே இவரது கருத்துகளில் அந்த எண்ணம் மிளிர்கிறது. இவரது படைப்புகள் குறித்தேப் பயணம் நமக்கு சலிப்பில்லாத ஒன்று. இவரது எழுதியதைப் பற்றி எழுத நினைத்தால் ஆனந்தமாகவே இருக்கும்.

அந்தரத்தில் இருக்கும் தனியன் நான் என சொல்லி இருக்கிறார். இல்லை ஐயா, உங்களை பல தண்டபாணிகள் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு புத்துணர்வு தரும் உங்கள் நேர்காணல் என்று சொல்லி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

1. யாத்திரை - சௌம்யா (கவிதை)

இவரது எழுத்துகளில் உள்ள எளிமை எனக்குப் பிடித்த ஒன்று. என்னைப் பொருத்தவரை ஒரு படைப்பு என்பது எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த கவிதை அமைந்து இருக்கிறது. ஒரு மரணம் அடைந்த பின்னர் அந்த உடலில் உலவும் ஆன்மாவின் கூற்றாக அமைகிறது கவிதை. உடலை விட்டுப் பிரிந்தபின்னர் என்னவெல்லாம் செய்யத் துடிப்போம் எனும் பார்வையில் அமைந்து பாவப்பட்ட உடல் எரிக்கப்பட்டதாக அமைகிறது. மிகவும் அருமையான கவிதை.

2. அமில மழை - சொரூபா (புனைவு)

இந்த சிறுகதையைப் படித்தபோது ஒரு ஆணின் மனநிலை, ஒரு பெண்ணின் மனநிலை நமது ஊரில் எப்படி இருக்கிறது என அறிந்து கொள்ளலாம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் பெண், ஆனால் சகித்துக் கொள்ள இயலாத ஆண். இந்த சிறுகதையில் 'ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சி பேசிக்கிறதாலெல்லாம் ஹெச் ஐ வி வராதாம்'' என முடியும். ஹரிக்கு உரைத்து இருக்கும்.

ஒரு சிறுகதை நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்திய சிறுகதை இது. இந்த கதையில் வரும் போதைப்பழக்கம், ஊசி ஏற்றுவது போன்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதன் மூலம் கதை நாயகன் எப்படிபட்டவன் என்று ஓரளவுக்குத்  தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் கடைசி வரிதான் கதைக்கான களம். ஹெச்ஐவி குறித்த ஒரு சம்பவம் உண்மையில் கண்டு இருக்கிறேன். இதன்  முழு விபரம் எழுதாமல் தவிர்க்கிறேன். ஒருவருக்கு மதுரையில் ஊசி ஏற்றியதன் மூலம் ஹெச்ஐவி வந்தது உண்டு. மிகவும் ஒழுக்கமானவர். ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட சுத்தமில்லை என்று எண்ணியவருக்கு அப்படி வந்தது தான் இன்னும் ஆச்சரியம். எத்தனை அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். ஒரு உயிர் என்றோ போய்  இருக்கும், நல்லவேளை மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கிறது. இந்த சிறுகதையில்  CD4 பற்றி எழுதியதோடு ஒரு பெண்ணின் மனநிலை எல்லாம் விளக்கப்பட்டு  இருக்கிறது.

கதை மாந்தர்களுடன் பேச்சு, பழக்கம் என முதலில் ஆரம்பித்தே அத்தனை இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அட்டகாசமான சிறுகதை.

3. பூமிகாவுக்கு உதவிய பூ - என் சொக்கன், என் நங்கை என் மங்கை (புனைவு)

மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதில் வரையப்பட்ட ஓவியங்கள் சிறுவயதில் இங்கு குழந்தைகள் படிக்கும் புத்தகத்தில் உள்ள கதையைப் போன்று ஒரு உணர்வு தந்தது. உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதைகளில் சிறுவர்கள் லாஜிக் பார்ப்பார்கள் என்பதால் கதை முடியும்போதும் ஒரு லாஜிக்குடன் முடிந்து இருந்தது. குச்சிகளால் கட்டப்பட்ட தெப்பம் என வெகு சிறப்பு.

4. அன்று - நவினன் (புனைவு)

மிகவும் அருமையான சிறுகதை. ஒரு சிறுகதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார். இந்த கதையில் கடைசியில் முடியும் வரிகள்தான் கதைக்கான ஆதாரம் சொல்லிச் செல்லும். கதைநாயகன் எப்படிப்பட்டவன் என்று மிகவும் அருமையாகச்  சொல்லப்பட்டு இருக்கிறது. எதற்கு ஜெயிலுக்குச் சென்றான் என்பதற்கான பதில் அங்கே உண்டு. ஒரு சிறுகதையில் என்ன புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொருத்தே அந்த சிறுகதையின் அர்த்தம் புரியும்.

5. மொழி - செல்வராஜ் ஜெகதீசன் (புனைவு)

இந்த சிறுகதையை வாசிக்கும்போது நானும் எனது குடும்பத்தாரும் லண்டன் சரவணபவனில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தந்தது. இந்த சிறுகதையில் மொழி குறித்த அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என எனக்கு மிகவும் நெருங்கிய உணர்வினை அழகாக விவரித்துச் சென்ற அருமையான கதை.

இது போன்று பல சூழலை சந்தித்து இருக்கிறேன். ஒரு நாயின் மொழியோடு கதை முடிகிறது. பல மொழிகள் கற்றுக்கொள்வது அவசியம் தான் எனினும் அதற்கான ஈடுபாடு சிறுவர்களிடம் நம்மிடம் வரும்படியாக இருக்க வேண்டும். என்ன சொல்லித்தருகிறார்கள் என தமிழ் வெறுத்த குழந்தைகள் அதிகம். மொழி நேசிப்புக்குரியது.

6. அவரன்றி யாரறிவார்? - கர்ணா சக்தி ( அனுபவம்)

இசையை இசையை கற்றவர்தான் ஆராதிக்க முடியும் என்றில்லை. ஒரு இசை நம்மில் எத்தனை சுதந்திரமாக நம்மை வசியப்படுத்துகிறது என்றே அருமையாக அனுபவித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. அதைப்போல பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலும்.

இசை நம்மை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டது. இசைஞானியின் இசை குறித்து நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கலைநயம், அபிநயம் போல இசைநயம் இந்த அனுபவத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆம், இளையராஜாவன்றி யாரறிவார்?

அடுத்து...

ஒரு குழப்பத்தைப்  படித்தேன் என்றால் மிகையாகாது, ஆனால் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் தெளிந்து கொண்டேனா என்பதை எப்படியும் அது குறித்து எழுதும்போது மீண்டும் வாசிப்பேன் எனவே நிச்சயம் அறிந்து கொள்வேன். அப்படி என்னதான் அப்படியொரு விஷயத்தை தமிழ் மின்னிதழில் படித்தேன்?

(தொடரும்)