Showing posts with label சவால் சிறுகதைப் போட்டி 2011. Show all posts
Showing posts with label சவால் சிறுகதைப் போட்டி 2011. Show all posts

Friday 21 October 2011

தொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)

                                 தொலைநோக்கிப் பார்வை - சிறுகதை  (2011)


இருபத்தி நான்கு வயதாகும் விஷ்ணு ஒரு விசித்திரமான ஆர்வம் கொண்டவன். திடமான உடல். நன்றாக கலைத்து விடப்பட்ட தலைமுடி. மாதக்கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். கண்களில் அடக்க முடியாத ஒரு தேடல். நான்கு மணி நேர உறக்கம். இரவு வந்துவிட்டால் நட்சத்திரங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவான். நிலாவில் ஏதேனும் தெரிகிறதா என கண்களை கசக்கி கசக்கிப் பார்ப்பான். என்ன காரணமோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது வானமும், நட்சத்திரங்களும் அவனது மனதில் ஒருவித ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. அவனது குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதாகிப் போனது. பகலில் வயலில் வேலை செய்தது போக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களில் சென்று வானவியல் பற்றிய புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். மிக குறைந்த அளவிலான வான சாஸ்திரம் புத்தகங்களே நூலகங்களில் இருந்தன.

கடந்த ஏழெட்டு வருடங்களில் இவன் புத்தகங்களில் இருந்து எடுத்து குறித்து கொண்ட குறிப்புகள் இவனுக்குள் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்தன. எவரேனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கிடைக்கமாட்டர்களா எனும் ஏக்கத்தில் நட்சத்திரம் பற்றி பேசினால் நடிகர் நடிகைகள் பற்றி பிறர் பேசுவது கண்டு ஏமாற்றமே அடைந்தான். இரவு நேரங்களில் தோட்டத்தில் வேலை பார்க்க செல்லும் போது நிலவின் ஒளியை ஒரு இடத்தில் குவித்து வைக்க முடியுமா எனப் பார்ப்பான். வானமும், வயலும் என வாழ்க்கையில் வருடங்கள் மிக வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கடந்த வருடம் தான் கொரட்டூர் பஞ்சு ஆலையில் வேலைக்கு சேர்ந்தான்.

விஷ்ணுவுக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பித்தார்கள். கொரட்டூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சின்னவயல் எனும் ஊரில் எட்டு வரை படித்திருந்த ஜெயலட்சுமியை விஷ்ணுவுக்குப் பிடித்துப் போனது, ஜெயலட்சுமிக்கும் விஷ்ணுவைப் பிடித்துப் போனது. ஜெயலட்சுமி வெட்டப்படாத நீண்ட கூந்தல் உடையவளாய் இருந்தாள். அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதி ஆறு மாதங்களுக்கு பின்னர் என குறித்து வைத்தார்கள்.

பெண் பார்க்க சென்ற நாள் அன்றே தனது ஆர்வத்தை பற்றி ஜெயலட்சுமியிடம் பேசினான் விஷ்ணு. 

''எனக்கு இந்த வானம், நட்சத்திரங்கள் மேல நிறைய ஆர்வம், உங்களுக்கு அதுபோல எதுவும் ஆர்வம் உண்டா''

விஷ்ணுவின் ஆர்வத்தைக் கேட்ட ஜெயலட்சுமி முதலில் புரியாமல் விழித்தாள். 

''வானத்தையே வெறிச்சிப் பார்த்துட்டு இருப்பீங்களா, நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துர மாட்டீங்களே''

''இல்லை, வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பத்தி நிறையத் தெரிஞ்சிக்க ஆசைப்படுவேன், கல்யாணம் பண்ண முன்னாடியே மறக்குறதைப் பத்தி கேட்கறீங்களே''

''உங்களுக்குப் பிடிச்சது எனக்கும் பிடிச்சா நல்லா இருக்கும்''

''ம்ம், நல்லா பேசறீங்க, ரொம்பப் பிடிச்சிருக்கு'' 

விஷ்ணு தன்னை வந்துப் பார்த்துச் சென்றதில் இருந்து வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டாள் ஜெயலட்சுமி. 

பின்னர் ஒரு நாள் இது குறித்து அவளுடைய தோழி ஆண்டாளிடம் பேசினாள். 

''உனக்கு வானத்தைப் பார்த்து ஆராய்ச்சி பண்றவங்க யாருனாலும் தெரியுமா?''

''என்ன திடீருனு கட்டிக்கிறப்போறவரு வான விஞ்ஞானியா''

''அவருக்கு விருப்பமாம், அதான் என்னனு தெரிஞ்சிக்கிறனும்''

''ம்ம் வீரபத்திரனு ஒருத்தர் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்காரு, நீ வேணும்னா அங்கே போய் பாரு''

இதனை ஜெயலட்சுமி விஷ்ணுவுக்கு தெரியப்படுத்தினாள். விசயம் கேள்விப்பட்ட விஷ்ணு வீரபத்திரனை சந்திக்கச்  சென்றான். ஆய்வாளர்களுக்கே உரிய தோற்றத்துடன் இருந்தார் வீரபத்திரன். ஆய்வகம் பெரும் நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்து வானத்தை ஆராய்ச்சி பண்ணும் தொலைநோக்கிகள் நிறுவப்பட்டு இருந்தன. 

விஷ்ணுவினைக்  கண்டவர்கள் யாரோ ஆராய்ச்சிக்காரன் என்றே நினைத்தார்கள். விஷ்ணுவின் ஆர்வத்தை கண்ட வீரபத்திரன் விஷ்ணுவிடம் சில புத்தகங்கள் தந்தார். அங்கே நிறுவப்பட்ட தொலைநோக்கியை அவனுக்குக் காட்டினார். 

''விஷ்ணு, இந்த தொலைநோக்கியின் மூலம் வியாழன் கிரகத்தின் மேற்பகுதி வரை ஓரளவுக்குப் பார்க்க இயலும்'' 

''சார் ஏதாவது நட்சத்திரம் பற்றி சொல்ல முடியுமா?, என்னவெல்லாம் இந்த தொலைநோக்கி மூலம் பாத்து இருக்கீங்க'' 

''ஒன்னா, ரெண்டா கணக்கிலேயே அடங்காத எந்த நட்சத்திரத்தைப்  பத்தி சொல்றது, புத்தகங்களைப் படிச்சிப் பார், ஒரு மாசம் கழிச்சி வா'' 

 அவனது செல்பேசி எண்களை தனது செல்பேசியில் எழுதியவர் அவனது பெயரை Vishnu informer எனக் குறித்துக் கொண்டார். அவர் கொடுத்த புத்தகங்கள் அவனால் வாசிக்கப்படாதவைகள். புரியாத ஆங்கிலத்தில் சில புத்தகங்கள். கடினப்பட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் புத்தகங்கள் சில. விஷ்ணு தன்னிடம் இருந்த கைகளால் எழுதப்பட்ட குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனைக் கண்டான். 

''நான் வரேன் சார்''

''ம்ம்''

ஆய்வகத்தில் இருந்து பிரதான சாலையை வந்து அடைந்தான் விஷ்ணு. அவனது செல்பேசி ஒலித்தது. விஷ்ணுவை அழைத்தார் வீரபத்திரன். 

''குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை வந்து தந்துட்டுப் போ. எனக்கு நாளைக்கு ஒரு கலந்துரையாடலுக்குத் தேவைப்படுது, மறந்துபோய் உன்கிட்ட கொடுத்துட்டேன்.''

''அதுக்கென்ன சார் வந்து தந்துட்டுப் போறேன்''

புத்தகம்தனை பாதி வழியில் சென்றவன் மீண்டும் வந்து கொடுத்துச் சென்றான். அவனுக்குள் அந்த குறியீடுகள் பற்றிய ஆர்வம அதிகமானது.

திருமண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. பஞ்சு ஆலையில் வேலை பார்த்த வேறு இருவரின் வாய்த் தகராறு, அவர்களுக்குள் அடிதடியில் போய் நின்றது. இந்த விசயம் கொரட்டூர் காவல் நிலையம் வரை சென்றது. கொரட்டூர் எஸ் பி, கோகுல் விசாரித்தார். விஷ்ணுவும் சாட்சியாக விசாரிக்கப்பட்டான். விஷ்ணு சொன்ன சாட்சியின்படி இருவருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் எஸ் பி கோகுல் தீர்ப்பு சொல்லி அனுப்பியவர் விஷ்ணுவை அழைத்தார். 

'‘அவங்களை காப்பாத்த நீ பொய் சொல்ற, என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற' 

''நான் என்ன பொய் சொன்னேன் சார், அவங்க இரண்டு பேரும் ஒருத்தரைப் புரிஞ்சிக்காம அடிச்சிக்கிட்டாங்க, அதான் தீர்ப்புச் சொல்லிட்டீங்களே. பிறகு என்ன சார்''

''நீ மாட்டாமல் போகமாட்ட''

எஸ் பி கோகுல் அவ்வளவு நல்லவர் கிடையாது. எப்படியாவது தன்னை ஏதேனும் விஷயத்தில் மாட்டிவிடுவார் எனக் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை தேட ஆரம்பித்தான் விஷ்ணு. கொரட்டூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதென்றால் நாளில் பாதி பிரயாணத்தில் செலவாகிவிடும் என நினைத்து அங்கேயே வீடும் தேட ஆரம்பித்தான். இந்த விசயம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் விஷ்ணு தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

வீரபத்திரனைச் சந்தித்தான். 

''சார் இங்கே எனக்கொரு வேலை கிடைக்குமா''

''நீ  Assistant informerஆ எனக்கு கீழே வேலை செய், உனக்குத் தங்குவதற்கு குறைந்த வாடகையில் ஒரு வீடும் ஏற்பாடு செய்றேன்''

''இந்த பெரும் உதவிக்கு நன்றி சார்''

விஷ்ணுவின் உதவியால் வீரபத்திரன் உற்சாகமாக காணப்பட்டார். பொதுவாகவே வீரபத்திரன் ஆய்வகத்தில் இரவு பன்னிரண்டு மணி வரை தனியாய் இருப்பது உண்டு. குறியீடுகள் குறித்து விஷ்ணுவிடம் எல்லா விசயங்களும் சொன்னார் வீரபத்திரன். 

''எப்படியும் பிற நட்சத்திரக் குடும்பங்களில் இருப்பவர்கள் மூலம் நாம் பேச இயலும். சில தகவல்கள் எனக்குக் கிடைத்து இருக்கு'' 

விஷ்ணுவுக்கு வீரபத்திரன் ஆய்வு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியது. 

''எனக்கும் அந்தக் குறியீடுகள் பத்தி சொல்ல முடியுமா''

''விஷ்ணு இந்தக்  குறியீடுகள் அனைத்தும் தனது கணினியில் உள்ளது நீ அதனைக்  காண ஒரு குறியீடு எழுதினால் மட்டுமே முடியும் , குறிச்சிக்கோ S V 42 6J. உள்ளே போய் மத்தக் குறியீடுகள் மூலம் பேசலாம்''

''நன்றி சார்''

''என்னோட அப்பா, அம்மா மற்றும் என்னோட பேரு எல்லாம் இதில இருக்கு யாரிடமும் இந்த குறியீடு மட்டும் தர வேண்டாம், உன் மீதான நம்பிக்கை காரணமாகத்தான் தருகிறேன், இங்கே ஆய்வு புரிபவர்களிடம் இதனை பற்றி நான் எதுவும் சொன்னதில்லை  இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்கு விலைபேசிருவங்க, இன்னும் முழுமையா ஆராய்ச்சிப் பண்ணி இந்த உலகத்துல நாம மட்டும் இல்லை, பிற நட்சத்திரக் குடும்பத்துல உயிரினங்கள் இருக்குனு நிரூபிக்கனும்'' என எச்சரித்தார் வீரபத்திரன்.  

சில மாதங்கள் விஷ்ணு மிகவும் கவனமாகப் பணிபுரிந்து வந்தான். ஒருமுறை மதிய உணவு வேளையில் வீரபத்திரனுடன் சில வருடங்கள் பணிபுரியும் ராகுலிடம் இந்தக் குறியீடுகள் குறித்த விசயங்கள் பற்றி வாய் தவறி சொன்னான் விஷ்ணு. 

''என்னக் குறியீடு விஷ்ணு, எந்த நட்சத்திரங்கள் பத்தியது, ஏலியன்ஸ்?''

சுதாரித்து கொண்டான் விஷ்ணு.

''ஏலியன்ஸ் இல்லை சார், அது பிற நட்சத்திரங்கள் பற்றியது''

''எத்தனை வருசமா நாங்க இங்க உழைக்கிறோம், எனக்குத் தெரியாத குறியீடு உனக்குத் தெரிஞ்சி இருக்கு, வீரபத்திரனுக்கு நிறைய நெருக்கம் ஆயிட்ட''

''நட்சத்திரங்கள் பத்தி சொல்றதுதான் சார், வேற ஒன்னும் இல்லை''

இதைப் பற்றி ராகுல் அறிந்து கொள்ள முனைந்தவர் தனது நண்பன் கொரட்டூர் எஸ் பி கோகுலிடம் தகவல் தெரிவித்தார். எஸ் பி கோகுல் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தார். 

ஒருநாள் வீட்டிற்குச் செல்லாமல் ஆய்வகத்திலேயே இருந்தார் ராகுல். இரவு பதினோரு மணியளவில் எஸ் பி கோகுல் ஆய்வகத்திற்கு வந்தார். ராகுலும், கோகுலும் வீரபத்திரனிடம் சென்று விசாரித்தார்கள். 

''நீங்க விஷ்ணுகிட்ட குறியீடு தந்து இருக்கீங்க, அதை எங்களுக்குத் தரலைன்னா உங்களை உயிரோட விடமாட்டோம், ஏலியன்ஸ் பத்தி தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க'' மிரட்டினார்கள். 


விஷ்ணுவால் தனக்கு இத்தனை இன்னல்கள் வந்து சேரும் என வீரபத்திரன்  நினைக்கவே இல்லை. இத்தனை வருடங்களாக பாதுகாக்கப்பட்ட இரகசியம் இப்படி ஆகும் என நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் சமாளிக்கவே எண்ணினார். 

''அந்தக் குறியீடுகள் அமெரிக்காவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்படுபவை, இந்த உலகம் தோன்றிய உடன் உருவான நட்சத்திரம் பற்றிய தகவல்கள்தான் வேறு எதுவும் இல்லை''

இதை ராகுல் சற்றும் நம்பவில்லை. ஆனாலும் மேலும் வீரபத்திரனை இதைக் கேட்பதைவிட விஷ்ணுவிடம் அதிகம் பணம் தருவதாகச் சொல்லி மிரட்டி வாங்கிவிடலாம் எனக் கருதினார். 

''சரி, உங்களை நம்பறேன்'' எனச் சொல்லிவிட்டு வெளியேறினார்கள் ராகுலும் கோகுலும். 

''கோகுல், விஷ்ணுனு ஒருத்தன் இங்கே வேலை பார்க்கிறான். அவன்கிட்ட நீ விசாரிச்சி இந்த குறியீடு எல்லாம் எப்படி பார்க்கலாம்னு கேளு. இனி இந்த வீரபத்திரனை சும்மா விடக்கூடாது, இந்த இரகசியம் நான் வெளியிட்டா எனக்குத்தான் பேரும் புகழும் கிடைக்கும்''

மறுநாள் விஷ்ணுவை பார்த்த கோகுல் ஆச்சர்யம் அடைந்தார். 

''எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடி வந்துட்டு இப்ப மாட்டிக்கிட்ட எனக்கு இந்த குறியீடு பத்தி விவரம் சொல்லு''

''நான் சார் கிட்ட கேட்டுட்டு  உங்களுக்கு அனுப்புறேன், பழைய பிரச்சினைகள் இப்போ வேணாம் சார்''

''சரி,  இந்தா  ராகுலோட செல்பேசி எண், அவருக்கு மறக்காமல் அனுப்பிரு அப்படி எதுவும் ஏடாகூடமா பண்ண நினைச்ச தோலை உரிச்சிருவேன்''''

''சரி சார்''

நடந்த விசயத்தை வீரபத்திரனிடம் சொல்லி மன்னிப்பு கேட்டான் விஷ்ணு. அதோடு தன்னை மணம் முடிக்க இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் சென்று தங்குமாறு கூறினான். வீரபத்திரனும் அன்றே ஸ்ரீவைகுண்டம் விட்டு சென்றார்.

விஷ்ணு ராகுலுக்கு  S W H2 6F -இதுதான் குறியீடு  –விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். 

அதோடு வீரபத்திரனுக்கும் Sir, ராகுலிடம்  தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். இந்த இரண்டு விசயத்தையும் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இரண்டு தாள்களில் பிரின்ட் எடுத்த விஷ்ணு அந்த தாள்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டு போனான்.

அவன் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இருந்து கதவை பூட்டிவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் ராகுல் வீரபத்திரன் ஆய்வகத்தின் கதவை உடைத்து கணினியில் குறியீடுதனை எழுத கணினி திறக்க மறுத்தது. ராகுல் கோபம் அடைந்தார். விஷ்ணு வெளியில் நின்று அந்த நிகழ்வை எல்லாம் படம் பிடித்தான். காவல் அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னான். 

''ராகுல் சார், நீங்க தப்பிக்க முடியாது''

''நேத்து முளைச்ச காளான் நீ, என்னை மிரட்டுறியா''

''இவ்வளவு படிச்சும் உங்களுக்குத் திருட்டுப் புத்திப் போகலையே, நீங்க இந்த அறையை உடைச்சி வந்தது, அந்தப் பெட்டியில் இருந்து ஆவணங்களைத் திருடினதுனு எல்லாம் படம் பிடிச்சி இருக்கேன்''

''எஸ் பி கோகுல் என்னோட நண்பன்தான், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது''

''தெரியும் சார் அதான் நான் தகவல் கொடுத்தது வேற இடம்''

அங்கே வந்த காவல் அதிகாரிகள் ராகுலை கைது செய்தார்கள். 

விவரம் அறிந்த எஸ் பி கோகுல் விஷ்ணுவிடம் ‘என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கொக்கரித்தார்.  வீரபத்திரன், ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி ஆய்வகம் வந்து சேர்ந்தார். வீரபத்திரன் தலைமையில் விஷ்ணுவின் திருமணம் இனிதே நடைபெற்றது.

எஸ் பி கோகுல். விஷ்ணுவை கைது செய்ய புது திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில் அவரை வேலையை விட்டு ஒரு வருடம் நீக்குவதாக ஒரு கடிதம் அவரது கைகளை தழுவியது. 

Monday 10 October 2011

போங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)


சனிக்கிழமை காலையில் எழுந்து தனது மிதி வண்டியில் வெகுவேகமாக தன்னிடம் இருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ரமேஷ், மனோகரின்  வீட்டிற்குப் போனான். வீடு பூட்டப்பட்டு இருந்தது. மனோகரின்  செல்பேசிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் இருந்து அழைப்பு விடுத்துப் பார்த்தான். செல்பேசியின் அழைப்பு சத்தம் மறுமுனையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும் எவரும் எடுத்து பேசவில்லை. கையில் வைத்திருந்த புகைப்படத்தை உற்று நோக்கியவாறே நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.

மீண்டும் செல்பேசியில் மனோகரை தொடர்பு கொண்டான் ரமேஷ். மனோகர் செல்பேசியை எடுத்தான்.

 'டேய் மனோகர், எங்க இருக்க? சீக்கிரமா வீட்டுக்கு வரியா, நான் உன் வீட்டு பக்கத்துலதான் இருக்கேன்'

'என்னடா அவசரம், இப்பதான் கடைக்கு சாப்பிட வந்தேன்'

'எந்த கடையில இருக்க'

'விஷ்ணு ஹோட்டல், மேலப்புதூர்.

'ஏண்டா, இங்க இருக்கறது எல்லாம் கடையா தெரியலையா, அங்க சாப்பிட போகனுமா?'

'நீயும் வாடா, உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்றேன்'

'சரி பூரியும், பொங்கலும் சொல்லு'

ரமேஷ் விஷ்ணு ஹோட்டல் சென்று அடையும் போது ஹோட்டலின் வெளியில் மனோகர் காத்துக் கொண்டிருந்தான்.

'என்னடா ஆர்டர் பண்ணலையா?'

'ஆறிப்போகும்னு ஆர்டர் பண்ணலை, என்ன என்னை தேடி வந்திருக்க என்ன விசயம்?'

'சொல்றேன், சாப்பிடலாமா?' ஹோட்டலைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் எனும் வேகம் ரமேஷிடம் அதிகமாகவே இருந்தது.

'சரி வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'

விஷ்ணு ஹோட்டல் மிகவும் பளிச்சென இருந்தது. இங்கே அசைவம், சைவம்  பரிமாறப்படும். இந்த ஹோட்டலுக்கு மனோகர் அவ்வப்போது வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ரமேஷ் ஹோட்டலை வெளிப்புறம் மட்டுமே பார்த்து சென்று இருக்கிறான். அருகில் ஒரு அருமையான மைதானம் இருக்கிறது, அங்கே சிறுவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.

ஹோட்டலுக்குள் நுழைந்ததும் ஒரு ஓரமாக இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தான் மனோகர்.

'உட்காருடா, இதுதான் நான் வந்தா எப்பவும் உட்காருற இடம், அதுவும் காலியா இருந்தா'

ரமேஷ் மனோகருக்கு எதிராக அமர்ந்தான். அவர்கள் அமர்ந்த அடுத்த நிமிடம் என்ன சாப்பிட வேண்டும் என பணியாளர் வந்து நின்றார். ஒவ்வொன்றாக சொல்லி அவரை அனுப்பினான் மனோகர்.

'இன்னைக்கோட உன்னோட பழகி ஆறு மாசம் ஆகப்போகுதுடா மனோகர், இந்த மதுரைக்கு வந்து இறங்கின மறு நிமிஷம் பணத்தை தொலைச்சி நின்னப்ப, யாரு என்ன அப்படினு விசாரிக்காம பணம் கொடுத்து உன்னோட செல்பேசி, அட்ரஸ் எல்லாம் கொடுத்து பழகினதை இன்னும் மறக்கமுடியலை, அந்த ஐநூறு ரூபாய நிச்சயம் திருப்பி கொடுத்துருறேன்'

'நானே இந்த ஊருக்கு வந்து ஒன்றரை வருஷம்தான் ஆகுது, ஏண்டா பாக்கறப்ப எல்லாம் இதைப் பேசி என்ன பெரிய தியாகி லெவலுக்கு கொண்டு போற, அந்த பணத்தை விடுடா, நீ என்னைய பாக்க வந்த காரணத்தை சொல்லு'

'இந்தாடா இந்த புகைப்படத்தைப் பாரு'

'அட, ரொம்ப நல்லா இருக்கே, யாருடா அந்த படத்துல, நீயா?'

'இல்லைடா, இந்த படத்தில இருக்கறதை வைச்சி கதை எழுதனுமாம், எழுதி தருவியா?'

'இதுக்குத்தான் இந்த காலையிலே என்னை தேடி வந்தியா'

'டேய் எழுதிக் கொடுடா, முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்டா'

பணியாளர் தண்ணீர் கொண்டு வைத்து போனார்.

'இந்த படத்தைப் பாக்கறப்ப யாரோ ஒருத்தனை அவனுக்கே தெரியாம படம் எடுத்து இருக்காங்கடா'

'டேய் மனோகர், இது கதை எழுதுரதுக்காக எடுத்த படம்டா'

'இருக்கட்டும்டா, ஆனா இந்த படத்துல இருக்கற விசயம் சிலிர்ப்பா இருக்குடா, கவலை வேண்டாம் அப்படினு எப்பவும் உபயோகிப்பான் போலடா அந்த ஆளு'

'ஒரு கிரைம் கதை எழுதுடா, அதுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு அப்படினும், Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவ விஷ்ணு அப்படினு போட்டுருக்குலடா'

அப்பொழுது பணியாளர் பூரி, இட்லி பொங்கல் என கொண்டு வந்து வைத்துப் போனார்.

'சரி எழுதி தரேன், சாப்பிடு'.

ரமேஷ் இரட்டிப்பு சந்தோசத்துடன் சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு கடையில் பணத்தை கட்ட சென்றபோது கல்லாவில் இருந்த முதலாளி அதுக்கென்ன இப்போ கவலை வேண்டாம் என முன்னால் பணம் கட்டியவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

'இந்த படத்துக்கு நீ கதை எழுதி கொடுத்து முத பரிசு எனக்கு கிடைச்சா, ஊருக்கு அனுப்பி வைச்சிருவேண்டா' என்றான் ரமேஷ்.

'சரிடா, கவலைய விடு' என்றவன்

'விஷ்ணு ஹோட்டல் அப்படின்னு பேரு வைச்சிருக்கீங்க, என்ன காரணம் சார்' என ஹோட்டல் முதலாளியிடம் கேட்டான் மனோகர்.

'என் பேரைத்தான் வைச்சிருக்கேன், அதைப்பத்தி உங்களுக்கு கவலை வேண்டாம்' என்றார் ஹோட்டலின் முதலாளி.

'இந்தப் படத்தை பாருங்க' என்றான் மனோகர்.

'இந்தப் படம் எங்க கிடைச்சது, நீங்க யாரு' என்றார் ஹோட்டல் முதலாளி.

'நாங்க சுந்தரம் மோட்டார்ஸ்ல வேலைப் பாக்கறம். இண்டர்நெட்டுல இருக்கிற இந்தப் படத்தை வைச்சி ஒரு கதை எழுதணுமாம்' என்றான் மனோகர்.

'முத்து வந்து கல்லாவைப் பாத்துக்கோடா, யாராச்சும் வந்தா நான் வெளிய போயிருக்கேன்னு சொல்லு ' என்றவர்

'நீங்க ரெண்டு பெரும் என்னோட வாங்க' என ஹோட்டலில் மேலிருந்த மாடிக்கு அவர்களை அழைத்து சென்றார், ஹோட்டல் முதலாளி விஷ்ணுவரதன். கணினியை இயக்கினார்.

'இது ஒரு எழவு, ரொம்ப மெதுவாத்தான் திறக்கும், அந்த எஸ் பி கோகுல் எப்போ வருவானோ, சிக்கலுல மாட்டிகிட்டேனே'

'என்ன சார் சிக்கலு, சொல்லுங்க'

'இரண்டு வருஷம் முன்னாடிதான் இந்த ஹோட்டலை எஸ் பி கோகுல்கிட்ட நான் வாங்கினேன்.'

'எந்த ஊரு எஸ் பி சார்?

'அவன் எஸ் பி இல்லை, அவன் பேரு எஸ் பி கோகுல், சாத்தூர் பாலசுப்ரமணி கோகுல் அதைத்தான் அவன் சுருக்கி எஸ் பி கோகுல் அப்படினு வைச்சிகிட்டேனு சொல்வான், அதைப்பத்தி இப்போ கவலை வேண்டாம்'

கணினி திறந்தது. மின்னஞ்சல் பக்கத்துக்கு சென்றார்.

'அப்பாடா, குறியீடு பத்தி ஒன்னும் பதில் காணோம்'

'ஒன்னும் புரியலையே சார், என்ன சார் குறியீடு?'

'நீங்க பாத்த இண்டர்நெட்டு பக்கத்தை காட்டுங்க, படத்தை யார் எடுத்தது, எங்க எடுத்தது எல்லாம் தெரியணும், இந்த படத்தை நீக்க சொல்லணும்'

'சார் மொத்த விபரமும் சொன்னா நாங்க உங்களுக்கு உதவி பண்றோம்' என்றான் மனோகர்.

'என்கிட்டே கடைய வித்துட்டுப் போன எஸ் பி கோகுல் அப்போ அப்போ இந்த கடைக்கு வருவான். ஆறு மாசமா தல்லாகுளம் குமாரோட சேர்ந்து தங்கம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். வர கஷ்டமர்கிட்ட பேசி கலப்பட தங்கம் வித்துருவேன் நாக்கு குழருது என எச்சில் விழுங்கியவராய் கலக்கலா ரொம்ப தங்கம் வித்துருவேன்.  இதனால குமாருக்கு என் மேல மரியாதை. ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் ஒரு குறியீடு கொடுப்பேன், அதை சொன்னாத்தான் குமார் நல்ல தங்கம் முக்கால்வாசி விலைக்குத் தருவான்' இதை தெரிஞ்ச இந்த எஸ் பி கோகுல் போன வாரம் தங்கம் வேணும்னு கேட்டான். நான் சரினு சொன்னேன், ஆனா எனக்கு இந்த எஸ் பி கோகுல் கொஞ்சம் கூட பிடிக்காது.

நேத்துதான் நான் எஸ் பி கோகுலுக்கு, Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவலை வேண்டாம் அப்படினு அனுப்புனேன். அதை அப்படியே குமாருக்கும்  அனுப்பிட்டு, அடுத்த மெயிலுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் அப்படினு அனுப்பிட்டு குமாருக்கு போன் போட்டேன். அவன் 'விஷ்ணு இன்பார்மர்' அப்படினுதான் என் பேரை அவன் மொபைலுல போட்டுருப்பான்.

இந்த இரண்டு விசயத்தையும் அவன் பாத்துட்டு இருந்தப்பதான் யாரோ அவனை படம் எடுத்து இப்படி செஞ்சி இருக்காங்க. இப்ப காட்டுங்க எங்க அந்த பக்கம்'.

'ரமேஷ் காட்டுடா'

ரமேஷ் இணையம் திறந்தான். 'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க சார், எல்லாத்தையும் அழிச்சிரலாம்' என்றான் மனோகர்.

'எதுக்கு அவ்வளவு பணம்?'

'தாங்க, இல்லைன்னா பிரச்சினை பெரிசாயிரும், சார் பாலாவை எனக்கு தெரியும், அவன்தான் இந்த இணையதள உரிமையாளர், இருங்க கூப்பிடுறேன் என செல்பேசியில் அழைத்தான் மனோகர். பாலா அப்பொழுதே வருவதாக சொன்னான்.

விஷ்ணுவரதன் பணத்தை எண்ணி கொடுத்தார். பின்னர் மூவரும் கீழே வந்தார்கள்.

இவர்கள் கீழே வருவதற்கும் பாலா அங்கே நிற்பதற்கும் சரியாக இருந்தது.

'ஐ ஆம் எஸ் பி கோகுல், சாரி ஐ ஆம் எம் எல் பாலா' என கையை நீட்டினான். விஷ்ணுவரதன் 'நான் தான் விஷ்ணு' என கையை நீட்டினார்.

மனோகர் எல்லா விபரங்களும் சுருக்கமாக சொன்னான். 'கவலை வேண்டாம் சார், எல்லாத்தையும் அழிச்சிருவோம்' என விஷ்ணுவரதன் முன்னரே அனைத்தையும் அழித்தான் பாலா.

 பின்னர் வெளியில் வந்தார்கள்.

'எப்படிடா அந்த படம் உனக்கு கிடைச்சது' என்றான் மனோகர்.

'எல்லாம் தல்லாகுளம் குமாரும், எஸ் பி கோகுலும் நானும் சேர்ந்து செஞ்சதுடா. இந்த விஷ்ணு ரொம்ப மோசமானவன், இவனால குமாருக்கு ரொம்ப கெட்ட பேரு. இவனாலதான் இந்த ஹோட்டலையே விற்கிற நிலைமைக்கு எஸ் பி கோகுலு போனான். இவனை எப்படி பிஸினஸ்ல இருந்து கழட்டி விடலாம்னு யோசனை பண்ணினப்ப நாங்க சேர்ந்து தீட்டின திட்டம் இது. நல்லாவே வொர்க் அவுட் ஆயிருச்சி. இனி குமார் மத்ததைப் பார்த்துப்பான்' என்றான் பாலா.

'படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி?' என்றான் ரமேஷ்.

'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.

'இந்தாடா ரமேஷ், பத்தாயிரம் வைச்சிக்கோ, கதை எழுதாமலேயே உனக்கு பரிசு கிடைச்சிருச்சி' என்றான் மனோகர்.

அருகில் இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 'சரியான போங்காட்டம்டா' என மற்ற சிறுவர்களை நோக்கி சத்தம் போட்டு கொண்டிருந்தான்.