Friday, 21 October 2011

தொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)


இருபத்தி நான்கு வயதாகும் விஷ்ணு ஒரு விசித்திரமான ஆர்வம் கொண்டவன். திடமான உடல். நன்றாக கலைத்து விடப்பட்ட தலைமுடி. மாதக்கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். கண்களில் அடக்க முடியாத ஒரு தேடல். நான்கு மணி நேர உறக்கம். இரவு வந்துவிட்டால் நட்சத்திரங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவான். நிலாவில் ஏதேனும் தெரிகிறதா என கண்களை கசக்கி கசக்கிப் பார்ப்பான். என்ன காரணமோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது வானமும், நட்சத்திரங்களும் அவனது மனதில் ஒருவித ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. அவனது குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதாகிப் போனது. பகலில் வயலில் வேலை செய்தது போக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களில் சென்று வானவியல் பற்றிய புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். மிக குறைந்த அளவிலான வான சாஸ்திரம் புத்தகங்களே நூலகங்களில் இருந்தன.

கடந்த ஏழெட்டு வருடங்களில் இவன் புத்தகங்களில் இருந்து எடுத்து குறித்து கொண்ட குறிப்புகள் இவனுக்குள் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்தன. எவரேனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கிடைக்கமாட்டர்களா எனும் ஏக்கத்தில் நட்சத்திரம் பற்றி பேசினால் நடிகர் நடிகைகள் பற்றி பிறர் பேசுவது கண்டு ஏமாற்றமே அடைந்தான். இரவு நேரங்களில் தோட்டத்தில் வேலை பார்க்க செல்லும் போது நிலவின் ஒளியை ஒரு இடத்தில் குவித்து வைக்க முடியுமா எனப் பார்ப்பான். வானமும், வயலும் என வாழ்க்கையில் வருடங்கள் மிக வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கடந்த வருடம் தான் கொரட்டூர் பஞ்சு ஆலையில் வேலைக்கு சேர்ந்தான்.

விஷ்ணுவுக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பித்தார்கள். கொரட்டூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சின்னவயல் எனும் ஊரில் எட்டு வரை படித்திருந்த ஜெயலட்சுமியை விஷ்ணுவுக்குப் பிடித்துப் போனது, ஜெயலட்சுமிக்கும் விஷ்ணுவைப் பிடித்துப் போனது. ஜெயலட்சுமி வெட்டப்படாத நீண்ட கூந்தல் உடையவளாய் இருந்தாள். அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதி ஆறு மாதங்களுக்கு பின்னர் என குறித்து வைத்தார்கள்.

பெண் பார்க்க சென்ற நாள் அன்றே தனது ஆர்வத்தை பற்றி ஜெயலட்சுமியிடம் பேசினான் விஷ்ணு. விஷ்ணுவின் ஆர்வத்தைக் கேட்ட ஜெயலட்சுமி முதலில் புரியாமல் விழித்தாள். பின்னர் ஒரு நாள் இது குறித்து அவளுடைய தோழியிடம் பேசியபோது அவளது தோழி ஸ்ரீவைகுண்டத்தில் வசிக்கும் வான ஆராய்ச்சி நடத்தும் வீரபத்திரன் என்பவர் பற்றிய குறிப்புகள் தந்தாள். இதனை ஜெயலட்சுமி விஷ்ணுவுக்கு தெரியப்படுத்தினாள். விசயம் கேள்விப்பட்ட விஷ்ணு வீரபத்திரனை சந்திக்க சென்றான். ஆய்வாளர்களுக்கே உரிய தோற்றத்துடன் இருந்தார் வீரபத்திரன். வழியெங்கும் வீரபத்திரன் பற்றி கேட்டுக் கொண்டே சென்றான் விஷ்ணு. விஷ்ணுவினை கண்டவர்கள் யாரோ ஆராய்சிக்காரன் என்றே நினைத்தார்கள். விஷ்ணுவின் ஆர்வத்தை கண்ட வீரபத்திரன் விஷ்ணுவிடம் சில புத்தகங்கள் தந்தார். தன்னிடம் இருக்கும் தொலைநோக்கியை அவனுக்கு காட்டினார். இந்த தொலைநோக்கியின் மூலம் வியாழன் கிரகத்தின் மேற்பகுதி வரை ஓரளவுக்குப் பார்க்க இயலும் என்றார்.

‘சார் ஏதாவது நட்சத்திரம் பற்றி சொல்ல முடியுமா?, என்னவெல்லாம் இந்த தொலைநோக்கி மூலம் பாத்து இருக்கீங்க என்றான் விஷ்ணு.
‘ஒன்னா, ரெண்டா கணக்கிலேயே அடங்காத எந்த நட்சத்திரத்தைப்  பத்தி சொல்றது, புத்தகங்களைப் படிச்சிப் பார், ஒரு மாசம் கழிச்சி வா என அனுப்பி வைத்தார். அவனது செல்பேசி எண்களை தனது செல்பேசியில் எழுதியவர் அவனது பெயரை Vishnu informer என குறித்து கொண்டார். அவர் கொடுத்த புத்தகங்கள் அவனால் வாசிக்கப்படாதவைகள். புரியாத ஆங்கிலத்தில் சில புத்தகங்கள். கடினப்பட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் புத்தகங்கள் சில. விஷ்ணு தன்னிடம் இருந்த கைகளால் எழுதப்பட்ட குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை கண்டான். அவன் வரும் வழியிலேயே வீரபத்திரன் விஷ்ணுவை அழைத்து குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை திருப்பி கொண்டு வந்து தருமாறு கூறினார். பாதி வழியில் சென்றவன் மீண்டும் வந்து கொடுத்து சென்றான். அவனுக்குள் அந்த குறியீடுகள் பற்றிய ஆர்வம அதிகமானது.

திருமண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. பஞ்சு ஆலையில் வேலை பார்த்த வேறு இருவரின் வாய்த் தகராறு, அவர்களுக்குள் அடிதடியில் போய் நின்றது. இந்த விசயம் கொரட்டூர் காவல் நிலையம் வரை சென்றது. கொரட்டூர் எஸ் பி, கோகுல் விசாரித்தார். விஷ்ணுவும் சாட்சியாக விசாரிக்கப்பட்டான். விஷ்ணு சொன்ன சாட்சியின்படி இருவருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் எஸ் பி கோகுல் தீர்ப்பு சொல்லி அனுப்பியவர் விஷ்ணுவை அழைத்து ‘அவங்களை காப்பாத்த நீ பொய் சொல்ற, என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கண்டித்து அனுப்பினார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை தேட ஆரம்பித்தான் விஷ்ணு. கொரட்டூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதென்றால் நாளில் பாதி பிரயாணத்தில் செலவாகிவிடும் என நினைத்து அங்கேயே வீடும் தேட ஆரம்பித்தான். இந்த விசயம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் விஷ்ணு தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

வீரபத்திரன் உதவியின் மூலம் அவரது ஆய்வகத்தில் Assistant informer என ஒரு வேலை தேடிக் கொண்டான்  விஷ்ணு. அவனுக்கு தங்குவதற்கு குறைந்த வாடகையில் ஒரு வீடும் ஏற்பாடு செய்தார். விஷ்ணுவின் உதவியால் வீரபத்திரன் உற்சாகமாக காணப்பட்டார். பொதுவாகவே வீரபத்திரன் ஆய்வகத்தில் இரவு பன்னிரண்டு மணி வரை தனியாய் இருப்பது உண்டு. குறியீடுகள் குறித்து விஷ்ணுவிடம் எல்லா விசயங்களும் சொன்னார் வீரபத்திரன். விஷ்ணுவுக்கு வீரபத்திரன் ஆய்வு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியது. அவனிடம் இந்த குறியீடுகள் அனைத்தும் தனது கணினியில் உள்ளது என்றும் அதனை காண ஒரு குறியீடு எழுதினால் மட்டுமே முடியும் என்றவர் அதனை தந்தார். S V 42 6J என்று சொன்னவர் தனது தந்தை பெயர், தனது பெயர், தனது பிறந்த வருடம் தனது மாதம் நாள் என குறித்து தந்தார். விஷ்ணு நம்பிக்கையுடன் பெற்றுக்கொண்டான், யாரிடமும் இந்த குறியீடு மட்டும் தர வேண்டாம் என கூறினார். உன் மீதான நம்பிக்கை காரணமாகத்தான் தருகிறேன் மேலும் இங்கே ஆய்வு புரிபவர்களிடம் இதனை பற்றி தான் எதுவும் கூறவில்லை எனவும், இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அவர்கள் விலைபேசி விடுவார்கள் என எச்சரித்தார் வீரபத்திரன்.  

வீரபத்திரனுடன் பல வருடங்கள் பணிபுரியும் ராகுலிடம் இந்த குறியீடுகள் குறித்த விசயங்கள் பற்றி ஒரு நாள் வாய் தவறி சொன்னான் விஷ்ணு. ராகுல் புரியாமல் விழித்தார். சுதாரித்து கொண்டு ஆமாம் ஆமாம் அது பிற நட்சத்திரங்கள் பற்றியது என்றார் ராகுல். ஆனால் இதைப் பற்றி ராகுல் அறிந்து கொள்ள அப்பொழுதுதான் முனைந்தார். தன் தவறு உணர்ந்தான் விஷ்ணு. இதனை ஒரு காவல் அதிகாரி மூலம் கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்தார் ராகுல். வீரபத்திரன் மேல் சந்தேகம் கொண்ட ராகுல் தனது நண்பன் கொரட்டூர் எஸ் பி கோகுலிடம் தகவல் தெரிவித்தார். எஸ் பி கோகுல் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தார். ஒருநாள் வீட்டிற்கு செல்லாமல் ஆய்வகத்திலேயே இருந்தார் ராகுல். இரவு பதினோரு மணியளவில் எஸ் பி கோகுல் ஆய்வகத்திற்கு வந்தார். ராகுலும், கோகுலும் வீரபத்திரனிடம் விசாரித்தார்கள். குறியீடு குறித்து கேட்டார்கள்.
அந்த குறியீடுகள் அமெரிக்காவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்படுபவை என்றும் இந்த உலகம் தோன்றிய உடன் உருவான நட்சத்திரம் பற்றிய தகவல்கள் என்றும் சொன்னார் வீரபத்திரன். இதை ராகுல் சற்றும் நம்பவில்லை. அப்படி எந்த ஒரு ஆய்வகத்துடனும் தொடர்பில்லை என ராகுல் சாதித்தார். தொடர்பிருப்பதாக வீரபத்திரன் ஆதாரங்கள் உண்டு என சாதித்தார். இதனைக் கண்டு வெறுப்படைந்தார் ராகுல். தன்னிடமே மறைத்த வீரபத்திரன் மேல் ஆத்திரம் பொங்கியது. எஸ் பி கோகுல் ராகுலை சமாதானம் செய்தார்.

‘கோகுல், விஷ்ணுனு ஒருத்தன் இங்கே வேலை பார்க்கிறான். அவன்கிட்ட நீ விசாரிச்சி இந்த குறியீடு எல்லாம் எப்படி பார்க்கலாம்னு கேளு. இனி இந்த வீரபத்திரனை சும்மா விடக்கூடாது, இந்த ரகசியம் நான் வெளியிட்டா எனக்குத்தான் பேரும் புகழும் கிடைக்கும் என்றார் ராகுல்

மறுநாள் விஷ்ணுவை பார்த்த கோகுல் ஆச்சர்யம் அடைந்தார். உடனே எனக்கு இந்த குறியீடு பத்தி விவரம் சொல்லு என்றவரிடம் நான் அவர்கிட்ட கேட்டு உங்களுக்கு அனுப்புறேன் என விஷ்ணு சொன்னான். ராகுலின் வேறொரு செல்பேசி எண்ணை தனது எண் என விஷ்ணுவிடம் தந்தார் எஸ் பி கோகுல். பின்னர் எஸ் பி கோகுல் ராகுலிடம் தகவல் சொல்லிவிட்டு போனார். நடந்த விசயத்தை வீரபத்திரனிடம் சொன்னான் விஷ்ணு. அதோடு தன்னை மணம் முடிக்க இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் சென்று தங்குமாறு கூறினான். வீரபத்திரனும் அன்றே ஸ்ரீவைகுண்டம் விட்டு சென்றார்.

விஷ்ணு கோகுலுக்கு Mr. கோகுல் S W H2 6F -இதுதான் குறியீடு கவலை வேண்டாம் –விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். அதோடு வீரபத்திரனுக்கும் Sir, எஸ் பி கோகுலிடம் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். இந்த இரண்டு விசயத்தையும் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இரண்டு தாள்களில் பிரின்ட் எடுத்த விஷ்ணு அந்த தாள்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டு போனான்.

அவன் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இருந்து கதவை பூட்டிவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் ராகுல் வீரபத்திரன் ஆய்வகத்தின் கதவை உடைத்து கணினியில் குறியீடுதனை எழுத கணினி திறக்க மறுத்தது. ராகுல் கோபம் அடைந்தார். தாள்களை எடுக்க வந்த விஷ்ணு வெளியில் நின்று அந்த நிகழ்வை படம் பிடித்தான். ராகுலை அழைத்தான் விஷ்ணு. அப்போது மேசையின் மீது கிடந்த தாள்களைப் பார்த்த ராகுல் தனது செல்பேசி ஒலிப்பதை எடுத்துப் பார்த்தார். செல்பேசியில் Vishnu Informer என்றிருப்பதை பார்த்த வேளையில் விஷ்ணு அதனையும் படம் பிடித்தான்.


‘ராகுல் சார், இனி நீங்க தப்பிக்க முடியாது என செல்பேசியில் சொல்லிவிட்டு அன்று இரவே ஸ்ரீவைகுண்டம் காவல் அதிகாரியிடம் புகார் தந்தான். இவன் தந்த புகார் அடிப்படையில் ராகுல் கைது செய்யப்பட்டார்

விவரம் அறிந்த எஸ் பி கோகுல் விஷ்ணுவிடம் ‘என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கொக்கரித்தார்.  வீரபத்திரன் ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி ஆய்வகம் வந்து சேர்ந்தார். வீரபத்திரன் தலைமையில் விஷ்ணுவின் திருமணம் இனிதே நடைபெற்றது.

எஸ் பி கோகுல். விஷ்ணுவை கைது செய்ய புது திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில் அவரை வேலையை விட்டு ஒரு வருடம் நீக்குவதாக ஒரு கடிதம் அவரது கைகளை தழுவியது. .


Post a Comment

9 comments:

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

ஷைலஜா said...

கதை நல்லாருக்கு....இன்னும் கொஞ்சம் பாத்திரங்களே பேசறமாதிரி எழுதினால் சுவை கூடும்.
வெற்றிக்கு வாழ்த்துகள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி அருள். வந்து படித்து விடுகிறேன். விடமாட்டேன்னு ஒரே ஆதரவு. நன்றி.

நன்றி ஷைலஜா. சென்ற கதையில் பாத்திரங்கள் பேசியது, இந்த கதையை ஒரு கதை போல சொல்லிவிட்டேன்.

அடுத்து ஒரு நகைச்சுவை கதை தயார் செய்ய வேண்டும்.

asksukumar said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..! :) கதை நன்றாக உள்ளது. ஓட்டு போட்டாச்சுங்க!

Radhakrishnan said...

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி. வாக்கு அளித்தமைக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

வெற்றிக்கு வாழ்த்துகள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.

நம்பிக்கைபாண்டியன் said...

பலரும் கடிதத்தின் செய்தியில் கொண்டு வந்துகொண்டிருக்க நீங்கள் அந்த புகைப்படத்தையே கதையில் கொண்டு வந்து விட்டீர்கள்!பலே

சைலஜா அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்

Radhakrishnan said...

மிக்க நன்றி பாண்டியன். பாத்திரங்களை பேச வைத்து இன்னும் சுவாரஸ்யமாகவே எழுதி இருக்கலாம் போலிருக்கிறதே.