Monday 31 October 2011

கம்யூனிசமும் கருவாடும் - 7


 கம்யூனிசம் என்றால் என்ன, அது என்ன சொல்ல வருகிறது என்பது அத்தனை சிரமம் இல்லை. இந்த கம்யூனிசம் குறித்து ஒரு தளத்திலிருக்கும் விசயத்தை அப்படியே எழுதி, தேவையிருப்பின் மேற்கோளிட்டு காட்டுவேன், அதாவது திருடி எனது தளத்தில் பிரசுரித்து கம்யூனிச பிரச்சார பதிவாக இருக்க வேண்டாம் என்பதால் எனது எழுத்துகளின் மூலமே கொடுக்கிறேன். இந்த கட்டுரையின்  கடைசி அத்தியாயத்தில் அன்றைய தினத்தில் என்ன மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் பற்றி நினைத்தார்களோ அது குறித்த சிந்தனை இப்படியாக முடிகிறது. 

'கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.'' நன்றி மார்க்சிஸ்ட் தளம்


இன்றைய அனைத்து கம்யூனிஸ்ட்கள் இதை எல்லாம் படித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் எதற்காக கம்யூனிசம் ஆரம்பித்தது என்கிற அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு இவர்கள் எல்லாம் கம்யூனிசத்தில் இணைந்து இருந்தால் இவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று பெருமிதப்பட்டு கொள்ளலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. இதனால் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கு அதாவது தங்களை தாங்களே அர்பணித்து கொண்டவர்களுக்கு, இவர்கள் அவப்பெயரைத் தேடி தந்துவிடுகிறார்கள். 

சமூக அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஆதரவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சிகள் ஆரம்பித்ததுதான் மிச்சம். மாவோயிஸ்ட், நக்சலைட், யிஸ்ட் என யிஸ்ட் என கூவியதுதான் மிச்சம். அதுவும் கேவலம், இந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும், அந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும் என நாய்படாத பாடு பட்டதை கண்டு கம்யூனிஸ்ட்கள் குறித்து நகைப்பு மட்டுமே மிஞ்சும். அதுவும் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களது பைக்கு எத்தனை பைசா வரும்படி கிடைக்கும் என முதலாளிகள் அறைக்கு சென்று கை கட்டி பேசி வந்ததை பார்த்தது இருக்கிறேன். இதே கம்யூனிஸ்ட்கள் வெளிநாட்டு கூலிப்படைகளாக அலைந்து திரிவது கூட அவமானம். இவர்கள் இங்கே அமைப்பு நடத்த எவரோ பணம் தருகிறார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க கூடும். உழைக்காமல் பணம் எப்படி வரும்? இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அத்தனை கஷ்டமில்லை. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் மொத்த கம்யூனிசத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. 

இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வெறுக்கின்ற பலர் இருந்தாலும் இந்த கம்யூனிசம் போர்வைக்குள் செல்ல மறுக்கிறார்கள். முதலாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கம். நானும் பாட்டாளி வர்க்கம் தான். நானும் கூலி வேலைதான் செய்கிறேன். எனது உழைப்பிற்கு அதிகமோ, குறைவோ மாதம் மாதம் ஊதியம் பெற்று கொள்கிறேன். எனது உழைப்பில் கிடைக்கும் வரவுதனில் பங்கு எதுவும் எனக்கு கிடையாது. ஆனால் என்னை பாட்டாளி வர்க்கம் என சொல்லக்கூடாது, என்னை நடுத்தர வர்க்கம் என சொல்ல வேண்டும் என பிரிக்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவர் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டு பணம் அவரது கைகளில் இருந்து வருகிறது, அல்லது எங்காவது கடன் வாங்குகிறார். இந்த முதலீட்டு பணத்தையோ, அல்லது அவரது உழைப்புக்கு  அவர் உபயோகபடுத்தும் அறிவையோ இந்த பாட்டாளி வர்க்கத்தினர் பகிர்ந்து கொள்வதில்லை. இவர்கள் தங்கள் உடல் உழைப்பை மட்டுமே தருகிறார்கள். இதையெல்லாம் மறந்து இவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது கம்யூனிசம். 

முதல் அத்தியாயத்தில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த கம்யூனிச அடிப்படை சிந்தனையான அனைவரும் பொது என்கிற கொள்கையானது ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமை, அயர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவுடைமை நிலம் என சில குழு சமுதாயங்கள், கிராம சமுதாயங்கள் எல்லாம் இருந்து இருப்பதாக பல அறிஞர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு பின்னர் இந்த சமுதாய கட்டமைப்புகள் ஒழிந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட தொடங்கினர். இன்றைய நிலைமையில் இந்த வேறுபாடு அதிகமாகி பாட்டாளி வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் தோற்று போயினர். இந்த நிலைமை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அதிகமாகவே இருந்து இருக்கிறது. அவர் காலம் போகட்டும், ஆனால் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் குடும்பம் எப்படி தெரியுமா இருக்கிறது? இவர்களின் நிலம் எல்லாம் வெவ்வேறு. இவர்கள் வேலைக்கு ஆள் வைத்து கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் என கத்துகிறார்கள். பாவம் கார்ல் மார்க்ஸ். 

இந்த அத்தியாயத்தில் எப்படி பல வர்க்கங்கள், அதன் உட்பிரிவுகள் இருந்திருக்கிறது என மத்திய காலம், ரோம பேரரசு காலம் என குறித்து வைக்கிறார். நிலபிரபுத்துவம் அழிந்து நவீன முதலாளித்துவம் வந்தாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டும் அதற்குரிய புது நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளதாகவே மார்க்சும், இங்கெல்சும் ஆதங்கபட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்று வேண்டாமா என எதற்கு நாம் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். 

எப்படி இந்த முதலைத்துவம் அதாவது முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை கோடிட்டு காட்டுகிறார் மார்க்ஸ். ஒரு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, கடல்வழி அதாவது நன்னம்பிக்கை வழி பயணம் என பிற நாடுகளுக்கு செல்லும் வழியே இந்த பண்ணையடிமையிலிருந்து வெளியேறிய நகரத்தார் பலருக்கு இந்த முதலாளித்துவ கூறுகள் வளர்க்க வழிபோட்டது. அதோடும்ட்டுமில்லாமல் கிழக்கிந்திய, சீன சந்தைகள் என உலக பொருளாதார இயக்கமே இந்த சீர்குலைவுக்கு அடிகோலிட்டது என குமுறுகிறார் மார்க்ஸ். 

கைவினை குழுமம் இந்த சந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாததால், பட்டறை குழுமம் உருவானது. ஆனால் இந்த தனிதனி பட்டறைகள் தங்களது உழைப்பில் பிரிவினை கொண்டாடின. இந்த பட்டறைகளால் கைவினை குழுமம் நலிந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எப்படி ஒரு மனித சமூகம் தொழில்வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள புதிய புதிய வழிமுறையை கண்டது என்பதை குறிப்பிட்டு அன்றைய காலத்தில் எப்படி இந்த தொழில்முறை உருவாகின என்பதை விளக்குகிறார்கள் இருவரும். இந்த பட்டறை தொழில் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால் நீராவி, எந்திரங்கள் எல்லாம் உருவானது. கைவினை தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கத்தினர். அதற்கு அடுத்து பட்டறை தொழில் வைத்திருந்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அதையெல்லாம் தாண்டி இந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து தொழிலில் புரட்சி செய்தவர்கள் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர். 

சந்தை புரட்சியை ஈடுகட்ட தொழிற்புரட்சி உருவானது. அந்த தொழிற்புரட்சி தான் கம்யூனிசம் கருவாடாகிப் போனதற்கு காரணம். பொதுவாக ஒரு பொருளை உருவாக்கினால் அந்த பொருளானது பிற நாடுகளுக்கு பிற இடங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும், அதற்கு போக்குவரத்து மிகவும் அவசியம். கழுதையிலும், குதிரையிலும், மாடுகளிலும் என கட்ட வண்டி, குதிரை வண்டி என உருவாக்கி இருந்த காலம் போய், ரயில், கப்பல் போக்குவரத்து என தொடங்கியதால் இந்த உலக சந்தையில் முதலாளிகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 

இப்படியாக அந்த முதலைத்துவம் பற்றி மார்க்சும், இங்க்கேல்சும் கோடிட்டு காட்டுகிறார்கள். இந்த முதலைத்துவம் பல வர்க்கங்களை பின்னுக்கு தள்ளியது. அதோடு அரசியலும் வளர்ச்சி அடைந்தது, ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது. மேலும் இந்த அத்தியாயம் பல விசயங்களை அலசுகிறது. அதனை அடுத்து பார்ப்போம். 

இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

பிற்போக்காளர்கள் யார்? முற்போக்காளர்கள் யார்? 

முற்போக்கு சிந்தனை உடையவர்கள் எல்லாம் முதலாளிகள். பிற்போக்கு சிந்தனை உடையவர்களே பாட்டாளிகள். அந்த பாட்டாளிகளை சூறையாடி கொண்டு வருகிறோம். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது எவரின் குற்றம்? அந்த வளர்ச்சிக்கு துணையாய் நின்றது பாட்டாளிகளின் குற்றமா? உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலை இருந்ததால் உழைக்காமல் உயிர் துறக்க பாட்டாளிகளின் உயிர் ஒன்றும் போராளிகளின் உயிர் இல்லை. போராளிகள் எவரும் நிலத்தில் உழைத்து பணம் சம்பாதித்ததை வரலாறு குறிக்கவில்லை. இவர்கள் பாழாய் போன பாட்டாளிகளின் மிச்சம் மீதி இருந்த உழைப்பின் பலனையும் சுரண்டி தின்றார்கள். இதில் பாட்டாளிகளுக்கு பெருமை வேறு. எங்களுக்காக போராடுகிறார்கள் என. இந்த போராட்ட புரட்சிகர இயக்கம் தொடங்குவதில் பல காலம் தொலைந்தது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அதன் காரணமாகவே அவர் தொழிலாளர்களை ஒன்று கூட சொன்னார். போராளிகளை அல்ல. 

இது போன்ற சமூக சீரழிவு தொடங்கியபோது தங்களது நிலைமையை உணராமல் அதற்கு அடிபணிந்து நின்றது எவர் குற்றம்? உழைப்பை சுரண்டுகிறார்கள் என்கிற உணர்வே இல்லாம் வாழ்ந்த அவர்களுக்கு யார் இருந்தார் வழிகாட்டியாய், அல்லது இன்றும் எவர் இருக்கிறார் வழிகாட்டியாய். ஐம்பது ரூபாய்க்கு சம்பாதிக்க வேண்டியது, நாற்பது ரூபாய்க்கு தண்ணி அடிக்க வேண்டியது, பத்து ரூபாய்க்கு சீட்டு ஆட வேண்டியது. இப்படி தங்கள் குடும்பத்தின் மேன்மைக்கென உழைக்காமல், தங்களை தாங்களே அழித்து கொள்ள உதவிய பாட்டாளிகள் நிலைமையை தனது வசமாக்கி அரசியல் கட்சி அமைப்புகள் ஆடும் ஆட்டம் எத்தனை. தங்களுக்கு தாங்களே தலித் என்று ஒரு பட்டம் வேறு. சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள். நாங்கள் எல்லாம் தலித் இல்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் என சிந்தியுங்கள். இந்த போராட்டத்துக்குதான் கார்ல் மார்க்ஸ் கூப்பாடு போட்டார். அதாவது முதலாளிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது அனைவருமே உழைக்கவேண்டும் என்பது. அனைவருமே பலன் அடைய வேண்டும் என்பது. 

தலித் என்பவரோ, தாழ்த்தப்பட்டவரோ தனக்கு தகுதி இல்லாத நிலையினை, தனது குல தகுதியால் பெற்று கொள்வது என்பதை கம்யூனிசம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. (தொடரும்). 

2 comments:

Unknown said...

நெத்தியடி அலசல்! தொடரட்டும் உமது சீர்பணி!

Radhakrishnan said...

மிக்க நன்றி ரமேஷ். ஆச்சர்யப்பட வைக்கும் மனிதர்கள் வாழும் பூமிதான் இது.