Friday, 7 October 2011

வாகை சூட வா

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் என்ன சொல்வது? படம் வெளியாகி  அனல் குறையாத பட்சத்தில் கொஞ்சம் கூட பிசகு இல்லாமல், தரம் குறையாமல் படத்தினை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதோடு இதனால் கணிசமான லாபத்தை படத் தயாரிப்பாளர்கள் முதற்கொண்டு திரையரங்கு முதலாளிகள் என பலரும் இழந்து விடுகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் திருட்டு குறுந்தகடு என படங்கள் வெகு எளிதாகவே கிடைத்துவிடுகின்றன. இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் ஒரு நல்ல திரைப்படம் அதுவும் பெரிய பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என இல்லாமல் உருவாக்கப்படும்போது மக்களுக்கு மத்தியில் நல்ல பெயரை எடுத்தாலும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய இயலாமல் போவது மிகவும் துரதிர்ஷ்டமானது. இதை தடுக்கும் முயற்சிகள் என மேற்கொண்டாலும் எப்படியாவது இந்த நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.

இலவசமாக கிடைக்கிறது என்றால் எவருக்குத்தான் கொண்டாட்டம் இருக்காது. மேலும் இலவசம் இலவசம் என பலவற்றை கொடுத்து மனிதர்களை பிச்சைகாரர்களாக்கி வைத்திருக்கும் அரசு எல்லா நாடுகளிலும் அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது. பொருளை இலவசமாக கொடுப்பதை விட, கல்வியை இலவசப்படுத்தும் வசதியை உலகில் உள்ள எல்லா நாடுகளும் கொண்டு வர இயலுமா என்றால் அது அத்தனை சாத்தியமில்லை.

கல்வியை கற்பிக்கும் ஆசிரியருக்கு பணம் எங்கிருந்து வரும்? கல்வியை கற்று தரும் பள்ளிக் கூடங்கள் கட்ட பணம் எங்கிருந்து வரும் என ஒட்டு மொத்த தமிழகமும் கல்வியை மாபெரும் வியாபார கூடங்களாக மாற்றி வைத்திருப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே நடந்து கொண்டுதான் வருகிறது. பணம் இருந்தால் படிப்பு என்றாகிப் போனது. கல்வியா, செல்வமா, வீரமா என கேட்கப்பட்ட நாட்களிலிருந்து ஒன்றில்லாமல் மற்றொன்று நிலைப்பது கடினம் என சொன்னாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிப் போனால் இவ்வுலகம் இல்லை என்பதுதானே நிதர்சனம். இரண்டாயிரம் வருடங்கள் முன்னரே இந்த நிலைமைதான், பொருளிளார்க்கு இவ்வுலகம் இல்லை.

வாகை சூட வா எனும் ஒரு அழகிய தமிழ் திரைப்படம். காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் 'அடிமைபட்டுப் போன மக்கள்'. இந்த மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகள். வயிற்றுப் பிழைப்புக்காக வாழும் மக்களிடம் போராட்ட குணம் இருப்பதில்லை, அடிமைபடுத்தபட்டு இருக்கிறோம் என்கிற ஒரு எண்ணம எழுவதில்லை. ஆனால் விசுவாசம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அத்தகைய விசுவாசத்தினை தனது வசமாக்கி கொள்ளும் முதலாளிகள் மட்டுமே மிச்சம்.

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்க கூடாது என்கிற வரைமுறை எல்லாம் எவருக்கு வேண்டும் என்கிற தமிழ் திரைப்பட உலகில் இதுபோன்ற திரைப்படங்கள் அவ்வப்போது தலைகாட்டுவது மிகவும் சிறப்பான விசயம் தான்.

இந்த படத்தை பார்க்கும்போது இது போன்ற கிராமங்கள் இன்னும் இருக்கின்றனவா என்று கேட்டால் ஆமாம் என்று தைரியமாக சொல்லலாம். அங்கொன்று இங்கொன்றுமாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் காலகட்டம் வேறாக இருந்தாலும் இன்னும் குழந்தை தொழிலாளிகளை சுமந்து கொண்டிருக்கும் கிராமங்கள் மிகவும் அதிகம். எதற்கும் பனியன் விற்கும் தொழிற்சாலை நகரத்திற்கோ, பட்டாசு தொழில் அதிபோகமாக நடக்கும் சிவகாசி சுற்றியுள்ள ஊருக்கோ சென்று வந்தால் தெரியும்.

'காசு வித்து பாத்துராதண்ணே' என ஒரு செங்கல் சுமக்கும் சிறுமியின் ஓலத்தை ஒரு கவிதையில் எழுதியது இன்னமும் ரணமாகவே இருக்கிறது. இப்படி வறுமையில், அறியாமையில் தவிக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ஒவ்வொரு மனமும் என்னத்த சம்பாதிச்சி சாதிச்சோம் என நினைத்தாலும் திரைப்படம் முடிந்துவிடும்போது எல்லாம் முடிந்தது போலாகி விடுகிறது.

அழகாக கதாபாத்திரங்களை கையாண்டு இருக்கும் இயக்குனரை மிகவும் பாராட்டலாம். பழைய கணக்கு எல்லாம் தொலைந்து போய்விட்டது. விடுகதை, கணக்கு கதை என மிகவும் அதி புத்திசாலிகளாக பலர் அன்றைய காலகட்டத்தில் எவ்வித தொழில் நுட்பம் இன்றி இருந்தது உண்டு. மிகவும் சிந்திக்க வைக்கும் செயல்களை செய்தார்கள். இந்த திரைப்படத்தில் காட்டப்படும் ஒரு வயதான கதாபாத்திரம் போன்ற மனிதர்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் இன்னமும் எங்கேனும் இருக்க கூடும் அல்லது நாம் தொலைத்து விட்டிருக்க கூடும். அரைக்கால், முக்கால், அரையணா என பல விசயங்கள் நம்மை விட்டு தொலைந்து போனது, நமது கலாச்சாரம் தொலைந்து கொண்டிருப்பதை போல.

நகைச்சுவை என திரைப்படத்தில் தனி கதாபாத்திரம் என வைக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களை விட, எல்லா கதாபாத்திரங்களுக்குள் நகைச்சுவை உண்டு என்று மிகவும் அழகாக சொன்னவிதம் பாராட்டலாம். எப்பொழுதுமே சிறுவர்கள் நடிக்கும் படங்கள் பெரியவர்களின் மனதினை ஒரு ஆட்டு ஆட்டி வைத்துவிட்டு போகும். உளவுரீதியாக நாம் அனைவரும் நமது பாலர் பருவ நிலைக்கு செல்லும் மனநிலை நம்மை சேர்வது உண்டு. நான் சின்னப்பையனா இருந்தப்போ... அந்த நினைவுகள் மிகவும் தாலாட்ட கூடியவை. இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு அதுவும் குறிப்பாக நகர வாழ் சிறுவர்களுக்கு அந்த அனுபவம் குறைந்து போனதாகவே இருக்கும்.

அறிவாளியாக இருப்பதை விட ஏமாற்றப்படாத வெகுளியாக வாழ்வதில் இருக்கும் சுகம் தனி சுகமே. கதாநாயகன், கதாநாயகி என ஒரு மெல்லிய காதலை சுகமான பாடல் மூலம் வெளிப்படுத்தும் விதம் தனிச்சிறப்பு.

கிராம வளர்ச்சி என ஒரு சிறுகதை எழுதியபோது மனதில் ஏற்பட்ட வலி இந்த திரைப்படத்தினை பார்க்கும் போது வந்து போனது. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்குள் மாபெரும் ஏக்கத்தினோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஏக்கங்கள் எழுத்து வடிவாகவோ, படங்கள் மூலமாகவோ வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினைகள் அத்தனை எளிதாக தொலைவதில்லை.

ஊருக்கெல்லாம் பள்ளிகள் கட்டிய காமராசர், படிக்க வா என பசி போக்கிய காமராசர்... இப்பொழுது பெரும்பாலானோர் பணம் கட்டி படிக்க வைக்கிறார்கள் எதை எதையோ தொலைத்துவிட்டு. இதனால் படித்தவர்கள் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.

படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம் 'விவரம் கெட்டவன்' இந்த வாசகத்திற்காகவே தைரியமாக தான் நினைப்பதை செய்ய முடியாத பலர் பயந்து ஒதுங்கிப் போனார்கள்.

படிப்பறிவு அனைவரும் பெறட்டும், படிப்பறிவு என்பது என்ன என்பதை படித்தவர்களும் தெளியட்டும்.

இவ்வுலகம் இருளால் ஆனது, பொருள் எனும் இருளால் ஆனது. இந்த இருள் போக்கவேண்டிய கல்வியும் இருளில் மூழ்கிப் போனதுதான் இவ்வுலகம் கண்ட மாபெரும் துயரம்.

பாராட்டுகள். வாகை சூட வா. அழைத்து கொண்டே இருப்போம். எவரேனும் தென்படுகிறார்களா? 

2 comments:

தமிழ் உதயம் said...

அருமையான விமர்சனம். குழந்தை தொழிலாளர்களாக வாழ்வது துயரம் நிரம்பியது. குழந்தை தொழிலாளர்களை ஒழித்து கொண்டிருக்கும் அரசை பாராட்டுவோம்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் போராடும் பெற்றோர்களை உருவாக்குவோம்.