Wednesday 19 October 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)


சுவாசம் என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது. இந்த சுவாசம் ஒரு இயந்திர தன்மையாக இருக்கும்பட்சத்தில் அதிகளவு உபயோகமில்லை. ஆனால் அதே வேளையில் இந்த சுவாசத்தினால் ஒரு வேதிவினை நடைபெறும்போதுதான் இதன் முக்கியத்துவம் மிகவும் மனதில் கொள்ளவேண்டியது. 

மூச்சை அடக்கி வாழும் வாழ்க்கை என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம். தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. நாமோ ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறோம். 

தாவரத்தின் சுவாசம் இலையின் மூலமாகவே நடைபெறுகிறது. இலையில் இருக்கும் காற்றிடங்கள் இதற்கு உருதுணையாகின்றன. ஸ்டாமோடா எனப்படும் சிறு துளையானது தவாரங்கள் சுவாசிக்க உதவுகின்றன. 

ஒவ்வொரு உயிர் வாழ் இனமும் தனக்குள் வெவ்வேறு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. நமக்கு மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என நுரையீரல் அமைப்புடன் சுவாசிக்கின்றோம். இந்த மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளே ஆஸ்த்மா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும். 

இந்த அமைப்பானது பஞ்சு போன்று மெருதுவாக இருக்கும். சுவாசப்பைகள் மிகவும் சின்னதாக காணப்படும். இந்த சுவாசப்பைகள் வாயுக்கள் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சுவாசப்பைகள் சிறிதாக இருப்பதினாலும், ரத்த நாளங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் வாயுக்கள் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக செய்து கொள்கின்றன. இந்த நுரையீரலும், இருதயமும் இணைந்து பணியாற்றுவதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் பரிமாற்றமும், கரியமில வாயு வெளியேற்றமும் நடைபெறுகிறது. 

இந்த நுரையீரல் அமைப்பில் இருக்கும் திசுக்கள், நார், சுரக்கும் காரணிகள் என இந்த நுரையீரலை பாதுகாத்து கொள்ளும் வகையில் பல விசயங்கள் அமையப்பெற்று இருக்கின்றன. பொதுவாகவே நமது உடலில் இருக்கும் திசுக்களுக்கு தம்மை தாமே சரி செய்து கொள்ளும் செயல்பாடுகள் உண்டு. சரிசெய்யும் அளவிற்கு விட மிஞ்சும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. 

நமது உடலில் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் நமது ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குழுவில் உள்ள நியுட்ரோபில், பெசொபில், எசிநோபில், மேக்ரோபெஜ், மோனோசைட், லிம்போசைட் என்பவை பெருமளவில் உதவிபுரிகின்றன. இவையே நமது உடலில் உள்ள பிரச்சனைகளை சரிகட்டும் நிபுணர்கள். 

இப்படி நாம் இந்த நுரையீரல் அமைப்புடன் சுவாசித்து கொண்டிருக்க, மீன்களோ வேறு சுவாச அமைப்பு பெற்று இருக்கிறது. அவைகளுக்கு இந்த நுரையீரல் அமைப்பு கிடையாது. அதற்கு பதிலாக செதில்கள் மூலம் சுவாசம் அதுவும் நீரில் மட்டுமே சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. தவளைகள் தனது தோள்களின் மூலம் நீரிலும், சிறிய நுரையீரல் அமைப்புடன் நிலையத்திலும் சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. எறும்புகள் போன்றவை எல்லாம் இது எல்லாம் எதற்கு என நேரடியாக காற்றினை தனது செல்களுக்கே அனுப்பி வைத்து விடுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமும் இப்படி இருக்க ஆஸ்த்மா மனித குலத்திற்கே மட்டும் தானா பிரச்சினை? 

பிரணாயமம் பற்றி நமது முன்னோர்கள் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம். நமது சுற்றுப்புறம் மிகவும் சுத்தமானதாகவும், நமது சுவாசம் சீராகவும் இருந்தால் நெடுங்காலம் வாழலாம் என்பது அவர்களின் கணிப்பு. அது முற்றிலும் உண்மை. 

விஷம்தனை உண்டு அதிக நாள் உயிர் வாழ்வோர் உண்டோ? சுற்றுப்புற மாசுவினால் நாம் விஷத்தை உள்ளிழுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
நாம் எப்படி மூச்சு விடுகிறோம் என்பதை நாம் உன்னிப்பாக கவனித்து பார்த்தல் அதுவே ஒரு தியானத்திற்கு சமானம். குறிப்பிட்ட நேரத்தில் வலது நாசி புறமாகவும், குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி புறமாகவும், சில நேரங்களில் இரண்டு நாசிகள் வழியாக சுவாசம் செய்கிறோம் என எவரேனும் நம்மிடம் வந்து சொன்னால் நமக்கு வேலை அற்றவர்களின் வீண் வேலை என சொல்லத்தான் தோன்றும். ஆனால் எதற்கும் ஒரு நாள் இதற்கென நேரம் செலவிட்டுப் பார்த்தால் சொல்வதில் உள்ள சூட்சுமம் தெரியும். 

நாசியில் இருந்து தொடங்கும் இந்த பயணம் நுரையீரல் வரை சென்று அங்கிருந்து வேறு பயணம் தொடங்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவானது மூச்சுக்குழல் வழி சென்றிடாது ஒரு மூடி போன்ற அமைப்பு நம்மை பாதுகாத்து வருகிறது. ஏதேனும் மூச்சுக்குழல் வழியாக சென்றுவிட்டால் புரையேறிவிட்டது என இருமல் மூலமாக நாம் அந்த பொருளை வெளியேற்றி விடுகிறோம். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது நரம்பியல் மண்டலம் தான். இந்த நரம்பியல் மண்டலம் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன செய்வது என்ன செய்யக்கூடாது என ஒரு திட்டவட்டமட்டமாக பணிபுரிந்து வருகிறது. 

நமக்கு பயம் ஏற்பட்டாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ நமது சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நமது திசுக்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் ஆக்சிஜன். அதோடு மட்டுமல்லாமல் இருதயம் இதற்கென வேகமாக துடிக்கவும் செய்கிறது. அதற்கேற்றாற்போல் நமது சுவாசத்தன்மையும் ஈடு கொடுக்கிறது. 

இப்படிப்பட்ட சகல சௌபாக்கியங்களையும் கொண்டுள்ள நமது நுரையீரல் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் என்ன? மூச்சு திணறல் மூலம் அவஸ்தைப்படும் நபர்களின் அனுபவங்கள் சொல்லும் கதைகள் பல. இந்த விசயத்தை குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. சுவாசம் இல்லாவிட்டால் சுக வாசம் ஏது?


No comments: