Sunday 31 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)

பயணம் - 3

இரவு நன்றாக உறங்கினோம். காலை எட்டு மணி இருக்கும் என நினைக்கிறேன், தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என மறுமுனையில் கேட்க புவனா என சொல்லி சகோதரி சுந்தராவின் குரலை தவறாக புரிந்து கொண்டேன். 

சிறிது நேரம் பின்னர் சகோதரி சுந்தராவின் கணவர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வழியில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு சென்றோம். அடுத்தமுறை துபாய் வரும்போது வீட்டில்தான் தங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டது மகிழ்வைத் தந்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதி பர் துபாய் என அழைக்கப்படுகிறது. மற்றொரு பகுதி டேரா துபாய் என அழைக்கப்படுகிறது. சகோதரியின் வீடு ஹோட்டலில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. முன்னர் அவர்கள் இருந்த வீடு ஹோட்டலில் இருந்து வெகு அருகில் இருந்து இருக்கிறது. 

சகோதரியின் வீட்டில் புவனா, மஞ்சு, குழந்தைகள் பட்டாளம் என சின்ன திருவிழா போன்று கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் சிரமப்பட்டுதான் வந்து சேர்ந்தார்கள் என்பதை அறிந்தேன். சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சகோதரியின் கணவருடன் வியாபார விசயங்கள், துபாய் வாழ்க்கை முறை என பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரைபடம் ஒன்று போட்டுத் தந்தார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே எல்லாம் இருப்பதாக வரைபடத்தில் காட்டினார். பின்னர் சகோதரியின் வீட்டினைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். பாரதியும், நந்தினியும் வீடுதனை சுற்றி காண்பித்தார்கள், நன்றாக பேசினார்கள். விஜய் நவீனுடன் விளையாடுவதிலேயே நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார். 

மிகவும் அழகிய வீடு. ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்த அமர்ந்தோம். பிரியாணி, சிக்கன், ரைதா, சப்பாத்தி, சாதம், இரசம், தயிர்ச்சாதம், வெஞ்சனம், ஊறுகாய், பாயாசம் என மிகவும் பிரமாதமாக இருந்தது. பொதுவாக அதிகமாகச் சாப்பிடும் நான் அன்று சற்று குறைவாகவே சாப்பிட்டு முடித்துக்கொண்டேன். நிறைய சாப்பிட்டு இருக்கலாம் என மனது சொன்னது. 

கிருஷ்ண பவன் என ஒரு உணவுக் கடை இருப்பதாகவும் அங்கே வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்கமாட்டார்கள் என சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. புவனா செய்த சமையலில் வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்காமல் செய்து இருந்தார்கள். செய்த விதமோ வித்தியாசம், ஆனால் மிகவும் ருசியாகத்தான் இருந்தது. அக்ஷயா அனுஷ்யா, நித்யாஸ்ரீ என மழலைகளின் பேச்சும் சுவாரஸ்யமாக இருந்தது. 

சாப்பிட்டு முடித்ததும் இலண்டன் வாழ்க்கை முறை பற்றி பேசினோம். வியாபார நுணுக்கம் எனக்குத் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்த நான், எனக்குப் பிரச்சினையே பேசுவதுதான் என சொன்னேன். அதற்கு சகோதரியின் கணவர் 'அரசியல்வாதி' மாதிரி பேசறீங்க என சொன்னார். அடடா நம்மைப் பற்றி அற்புதமாக கண்டுபிடித்துவிட்டாரே, இனிமேல் அடக்கம் கொள்ள வேண்டியதுதான் என நினைத்த சமயத்தில் புவனா பரஞ்சோதியாருக்கு அழைப்பு விடுத்தார். பரஞ்சோதியாரிடம் பல நிமிடங்கள் பேசினேன். ஊரில் சென்று வாழ வேண்டும் என எண்ணம் பரஞ்சோதியாரிடம் நிலை கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. 

பின்னர் புகைப்படங்கள், அசைபடங்கள் எடுத்துக்கொண்டோம். மிகவும் அழகான சிறப்பான பரிசுகள் தந்தார்கள். பின்னர் கேட்டபோது, புவனா அந்த அழகிய பரிசுகளை ஷார்ஜாவில் வாங்கியதாக சொன்னார். மிகவும் சிறப்பான உபசரிப்பும், அன்பும், பரிசுகளும் என சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அற்புதமான சொந்த உறவுகளுடன் உறவாடிய அந்த தருணங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். 

சகோதரியின் கணவர் எங்களை ஹோட்டலுக்கு திரும்ப வந்து விட்டுவிட்டுச் சென்றார்கள். அன்புடன் அவர் பழகியது, பேசியது பெரும் ஆனந்தத்தைத் தந்து இருந்தது. 

சில நிமிடங்களே ஹோட்டலில் இருந்த நாங்கள் அடுத்து எங்கு செல்லலாம் என ஒரு டாக்ஸியைப் பிடித்தோம். (தொடரும்)

Saturday 30 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)

பயணம் - 2
அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு துபாய் பயணத்திற்குத் தயாரானோம். பொதுவாக இங்கு யாராவது ஒருவர், ஊருக்கு செல்பவரை விமானநிலையம் சென்று அனுப்பி வைத்து வருவதும், அழைப்பதும்தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அன்று வேலை நாள் ஆனதால் பலருக்கு முடியாமல் இருந்தது. அப்பொழுதுதான் கெளரிபாலன் தொடர்பு கொண்டார். ''எங்கள் வீடு வரை உங்கள் வாகனத்தில் வாருங்கள், விமான நிலையம் ஐந்து நிமிடங்கள் தான், நான் ஏற்பாடு செய்கிறேன்'' என அவர் சொன்னபோது 'அட' என மனதுக்குள் தோன்றியது என்னவோ உண்மை. 

ஆனால் உறவினர் ஒருவருக்கு இரவு வேலை என்பதால் அவர் விமான நிலையம் வருவதாக சொல்ல கெளரிபாலனின் உதவியை நாட இயலாது போனது. துபாய் எப்படி இருக்குமோ? அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு சென்று விமானம் தரையிறங்குகிறது, எப்படி ஹோட்டல் சென்று அடைவோம் என நினைக்கையில் சற்று பயமாகத்தான் இருந்தது. சகோதரி சுந்தராவும், புவனாவும் விமானநிலையம் வருவதாக சொன்னார்கள், நான் தான் 'நள்ளிரவு என்பதால் வர வேண்டாம், நாங்கள் ஹோட்டல் சென்று விட்டு காலையில் சந்திப்போம்' என சொல்லி இருந்தேன். 

துபாய்க்கு கிளம்பும் சில நாட்கள் முன்னர் புவனா ஒரு திட்டம் பற்றி கூறினார். அதாவது புவனாவும், அவரது தோழி மஞ்சுவும், சுந்தரா சகோதரி வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் அங்கே சந்திக்கலாம் எனவும் அதனால் எனக்கு சிரமம் இருக்காது என சொன்னார். நான் உடனே சரி என சொன்னேன். அவர்களுக்கு சிரமம் இருக்கும் என கொஞ்சம் கூட யோசனை வரவில்லை!!! நான் எதிர்பார்த்த துபாய் வேறு! 

இங்கே நினைத்தவுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டோ, பேருந்திலோ, இரயிலிலோ சென்று பழக்கப்பட்டுப் போனதால் அங்கேயும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் 15-25 நிமிட பயணம் தான் என அறிந்து இருந்தேன், அதாவது போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தால்!

எனது மனைவிக்கும், மகனுக்கும் துபாய்தனை பார்க்க அதீத ஆர்வம் இருந்தது. ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். 

எமிரேட்ஸ் விமானத்தில் தான் பயணம் செய்தோம். நள்ளிரவு 12 மணியை துபாய் அடைந்தபோது விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமிட ஆரம்பித்தது. தரையிறங்க வாய்ப்பில்லாமல், மழை பெய்வதாக விமானி அறிவித்துக் கொண்டே இருந்தார். சுற்றிய சுற்றில் என் மகன் நவீனுக்கு வாந்தி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்ட பின்னர் தரையிறங்கியபோது மணி 1.20 ஆகிவிட்டது. 

யாரிடம் கேட்டு ஹோட்டல் செல்வது என எண்ணிக்கொண்டே பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தில் நடந்து சென்றேன். அற்புதமான கட்டிட அமைப்பு. மிகவும் அழகாக இருந்தது. சிலமுறை துபாய் வழியே பயணித்து இருந்தாலும் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிச் செல்ல நடந்தது இதுவே முதல் முறையாதலால் அற்புதம்தனை பார்க்க முடிந்தது.

விமான நிலையம்விட்டு வெளியே வர ஆச்சரியமூட்டும் வகையில் வரிசையாக 'டாக்ஸி' அணிவகுத்துக் கொண்டிருந்தது. அதை ஒழுங்குபடுத்தியும், வரிசையாக வந்த பயணிகளை 'டாக்ஸி' யில் ஏற்றி அனுப்பிய விதம் மிகவும் அருமை. 'டாக்ஸி' யில் நாங்கள் பதினைந்து நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். டாக்ஸி ஓட்டியவர் ஆங்கிலத்தில் பேசவில்லை, பொதுவாக பேசவே இல்லை. நான் காட்டிய முகவரி பார்த்தார், ஹோட்டலில் வந்து இறக்கினார். உரிய கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டுக் கிளம்பினார். ஹோட்டலில் ஆரஞ்சு பழச்சாறு தந்து வரவேற்றார்கள். வித்தியாசமாகத்தான் இருந்தது!

ஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்ததும் 'அப்பாடா' என இருந்தது. லதா குறிப்பிட்டபடி மிகவும் பிரமாதமான ஹோட்டலும் இல்லை, அதே வேளையில் மோசமானதும் இல்லை. துபாயில் முன் தினம் தான் நல்ல மழை எனவும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பப்பட்டதாகவும் பின்னர் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அறிந்தேன். வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்!!!(தொடரும்)

Friday 29 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)

பயணம் - 1


இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் அதிகரிக்க ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் வாய்ப்பினை திடீரென ஜனவரியில் முடிவு செய்தோம். ஆனால் இம்முறை துபாய் சென்று மூன்று நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். 

துபாய்க்குச் செல்ல பல வருடங்கள் திட்டம் தீட்டினாலும் இம்முறை வாய்ப்பு அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் எப்பொழுதும் இரண்டு வாரங்களே பள்ளி விடுமுறை கிடைக்கும் என் மகனுக்கு இம்முறை மூன்று வாரங்கள் விடுமுறையாக அமைந்தது இந்த துபாய்-இந்தியா பயணத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. துபாய் செல்ல முடிவெடுத்ததும் சகோதரி சுந்தராவினைத் தொடர்பு கொண்டேன். விடுதியில் தங்க இருக்கிறோம் என சொன்னதும் ''வீட்டில் வந்து தங்கலாமே'' என அன்பு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அன்பு அழைப்பினை மறுக்க வேண்டியதாகிவிட்டது. அவரிடம் சில விடுதிகள் பற்றி விசாரித்தேன், அவரும் விபரங்கள் சொன்னார். திடீரென ஒரு நாள் இணையத்தின் மூலம் விடுதிகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்க ''லீ மெரிடியன்'' ஹோட்டல் பார்த்ததும் உடனே முன்பதிவு செய்தோம். விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது மட்டுமில்லாமல் விலை குறைவாக இருந்ததுதான் காரணம்.

இந்த ஹோட்டலைச் சுற்றி என்ன இருக்கிறது எனத் தேடினால் 'வசந்த பவன்' அருகில் இருப்பது பற்றி குறிப்பிட்டு இருந்தது. மனம் உற்சாகமானது. பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது சைவச் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது நினைவில் வந்தது. 

அந்த ஹோட்டலில் தங்கிச் சென்றவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் எனத் தேடிப் படித்ததில் பலர் 'நல்ல ஹோட்டல்' என்றே எழுதி இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் 'இப்படியொரு ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தது பெரும் தவறு எனவும் அங்கு சென்ற மறு தினமே வேறு ஹோட்டல் மாற்றியதாகவும் எழுதி இருந்தார், அதைப் படித்ததும் 'அடடா அவசரப்பட்டு விட்டோமோ' என எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க இயலவில்லை. 'நன்றாகவே இருக்கும்' என நம்பிக்கைக் கொண்டோம். 

பயணம் முடிவாக புவனாவிடமும் விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். ஷார்ஜா கட்டாயம் வரவேண்டும் என அழைப்பும் விடுத்தார். அரைமணி நேரம் தான் என சொன்னதும் அரைநாள் செலவழிக்க வேண்டும் என சொன்னார். இப்படியாக பயணத்திட்டம் தயார் ஆக பத்மஜா மற்றும் மோகனைச் சந்திக்கவும் எண்ணம் ஏற்பட்டது. பஹ்ரைன் துபாயிலிருந்து சற்று தொலைவாக இருப்பதால் பின்னர் வேண்டாம் என முடிவு எடுத்தோம். 

பத்மஜாவின் தோழி லதா அபுதாபியில் இடம் மாற்றலாகி இருந்தார். எனவே அபுதாபி செல்லலாம் என முடிவுடன் அவரையும் தொடர்பு கொண்டேன். அவரும் துபாய் பற்றி ஒரு கட்டுரையே எழுதி அனுப்பி விட்டார். 

இப்படியாக பயணத் திட்டம் தயாராகிக் கொண்டிருக்க நாட்களும் பறந்து கொண்டிருந்தது. (தொடரும்)

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 6


குரூப் (பிரிவு)  1 குரூப் 2 இது s வகையைச் சார்ந்தது. ஹைட்ரஜனும் s வகையில் இருந்தாலும் அது தனித்து காட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது. குரூப் 3 இல் இருந்து குரூப் 7 வரைக்கும் P வகை எனப்படுகிறது. இடைப்பட்ட வகை d எனச் சொல்வார்கள். லாந்தனைடுகள், ஆக்டினைடுகள் எல்லாம் f வகை. ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பவை உலோகங்கள், பச்சை வண்ணத்தில் இருப்ப்வை உலோகங்கள் அல்லாதவை, ம்ஞ்சளும், ஆரஞ்சு வண்ணத்திற்கு இடைப்பட்டவை உலோகங்களே, ஆனால் அவை மாற்றம் கொள்ளக்கூடியவை. 

அது என்ன வகை அப்படின்னு பார்த்தா முன்ன சொன்னமே, அதுபோல எலக்ட்ரான்கள் இங்க இங்க தான் போய் நிற்கும்னும், அதன்படி இவையெல்லாம் அமைஞ்சிருக்கு. உதாரணமாக சோடியம் எடுத்துக் கொள்வோம் அதனுடைய அணு எண் 11. இப்போ நாம சொன்ன விதிப்படி முதல் மாடி அதாவது K ல s அறையில 2 எலக்ட்ரான்கள் L ல s மற்றும் d ல சேர்த்து 8 ஆக மொத்தம் 10 எலக்ட்ரான்கள். இப்போ பதினொன்வாவது எலக்ட்ரான் M ல s அறையில போய் ஒரு எலக்ட்ரானா போய் நிற்கும் அதுதான் s வகையிகல சோடியம் முதல் குரூப். 

அட்டவணையில் கீழ்நோக்கி 2, 3 ,4 எழுதி இருக்கு இல்லையா அதன்படி சோடியம் 3 வது வரிசையில வரும் காரணம் K, L, ம என்பதில் M மூணாவது மாடி அதுல இருக்கிற அறையில தான் இந்த சோடியத்தோட கடைசி எலக்ட்ரான் இருக்கு. இதன்படிதான் எல்லா தனிமங்களும் இப்படி வரிசைப்படுத்தப்பட்டன. 

அணு சொல்றோம், தனிமம் சொல்றோம் என்ன வித்தியாசம்னா, ஒரு தனிமத்தில் ஒரே ஒரு அணுவானது பல அணுக்களாய் சேர்ந்து இருக்கும் அதனால்தான் அது தனிமம். வெவ்வேறு அணுக்கள் சேர்ந்து இருந்தால் அது மூலக்கூறு. பொதுவாக ஹைட்ரஜன், குளோரின், நைட்ரஜன் எல்லாம் இரு அணுக்களாக அதாவது இரண்டு ஹைட்ரஜன் சேர்ந்து இருக்கும் இதனை மூலக்கூறுனு சொல்வாங்க.

இந்த அட்டவணை புரிந்துவிட்டால் அதனுடைய பயன் எல்லாம் எளிதாகிவிடும். எலக்ட்ரான்கள் நிரம்பும் விதம் சக்தியின் அடிப்படையில் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. உதாரணமாக 3d அறை (ஆர்பிட்டால்) 4s அறையை விட சக்தி அதிகமானது ஆகவே எலக்ட்ரான்கள் 3d அறைக்குச் செல்லாமல் 4s அறையினை முதலில் நிரப்புகின்றன. இது மிகவும் முரண்பாடான விசயம் என நினைக்க வேண்டாம். எல்லாம் வகுக்கப்பட்டது, இப்படித்தான் என சொல்லப்பட்டது. 

எலக்ட்ரான்கள் நிரம்பும் வரிசையை எழுதி விடுகிறேன். 

1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 

இதனை கொண்டுதான் ஒவ்வொரு அணுவும் நிர்ணயிக்கப்பட்டு அதனதன் இடத்தில் அமர்ந்துள்ளது. p பின்னர் s வரும்படி அமைந்து இருப்பது ஒரு சிறப்பு, எளிதாக மனதில் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்குள் கணக்கு போட்டு பாருங்கள் எப்படி எந்த எந்த அணு எப்படி அமர்ந்திருக்கிறது என.

எப்படியோ எலக்ட்ரான்கள் அந்த வரிசைப்படி நிரம்பிவிடுகின்றன. தனக்கென பாதை வகுத்துக் கொண்டு வாழப்பழகிக் கொண்டுவிட்டன. தனிமங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. பதினைந்துக்கும் குறைவான தனிமங்கள் மட்டுமே நமது மூதாதையர்களுக்கு தெரிந்து இருந்து இருக்கிறது. மற்றதெல்லாம் பின்னால் வந்த அறிஞர்களால் கண்டுபிடித்துச் சொல்லப்பட்டது. 

உலோகங்கள், உலோகங்கள் அற்றவை, வாயுக்கள் என ஒவ்வொன்றும் வரிசைப் படுத்தப்பட்டு அதன் அதனுடைய செயல்பாடுகளை பிரித்து வைத்து இன்றைய வேதியியல் நம்முடன் இரண்டற கலந்துவிட்டது. அறிவியலை தனியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் வைத்தே அதனுடைய செயல்முறைகள் விவரிக்கப்பட்டு விளக்கப்பட்டு வந்து இருக்கின்றன. 

நியூட்டன் சொன்னது போல் ஒரு விசயத்தைக் குறித்து அவருக்கு இருந்த அளவிலா ஆர்வம் ஒன்றுதான் அவரை உலகத்தில் மறக்க முடியாத மாபெரும் மனிதராக நிலைநாட்டியது அதற்கான அங்கீகாரமும் கிடைத்தது என்பது எவரும் மறக்க முடியாது. ஆர்வம் உள்ள மனிதர்கள் அதனை செயல்படுத்தி அங்கீகாரம் பெரும்போது சாதனையாளர்களாக கருதப்படுகிறார்கள். நாமும் அந்த பட்டியலில் விரைவில் இணையத் தயாராவோம். 

(தொடரும்)

மற்ற பாதைகள் காண பாதை 5தனை காணவும். 

Wednesday 27 January 2010

காமம் - 1

1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எழுதியதை ஒளித்து வைத்து இருப்பேனோ எனும் ஒரு தேடல் உங்களுக்குள் இப்போதைக்கு எழுந்து இருக்கலாம்.

'காமம்' என்ற சொல் மிகவும் அருவெறுப்பாகவேத் தெரிகிறது. காமம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் எனும் ஒரு தேடல் என்னுள் இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதேனும் தேவையெனின் நூலகங்களுக்கோ, அறிவிற்சிறந்தவர்களைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு செளகரியமாக இருக்கிறது.

காமம் என்ற சொல்லுக்கு ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல் எனவும்  காமம் என்பதின் விளக்கம் காம சூத்திரத்தில்

'ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'

எனும் சுலோகம் மூலம் சொல்லப்பட்டு அதற்கு விளக்கமாக காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது கண்டு அதிசயமாக இருந்தது.

இந்த காமசூத்திரத்தை வாத்சயானர் எனும் முனிவர் எழுதினார் என பலமுறைக் கேள்விபட்டதுண்டு. அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என இதுவரை படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. ஆனால் இந்த காமசூத்திரம் பலரால் பின்னர் தொகுத்து எழுதப்பட்டது என தமிழ்விக்கிபீடியா சொல்கிறது.

அதுவும் காமசூத்திரத்தின் முதல் வரிகள் 'தர்மார்த்த காமேப்யோ நம' அதாவது 'அறம் பொருள் இன்பமே போற்றி' எனவும் சொல்கிறதாம். அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் ஒவ்வொரு பருவகாலத்திலும் என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வதாகவும் ஒரு சுலோகம் அமைந்திருக்கிறது.

அந்த சுலோகத்தின் விளக்கமாக குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள் எனவும், இளமைப் பருவத்தில் காமம் எனவும் முதுமைப்பருவத்தில் தர்மம் செய்யவும் அதனால் மோட்சம் கிட்டும் என்பது போல் எழுதப்பட்டு இருக்கிறது.

ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

காமம் என்றாலே தலைதெறிக்க ஓடிய காலங்களும், காமம் பற்றி பேசினால் அவர்கள் தவறானவர்கள் எனும் எண்ணம் கொண்ட அந்த சிறு வயது முதலான இளமைப் பருவ காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு அறிவியல் நோக்கோடுப் பார்க்க வேண்டும் எனும் நிர்பந்தமோ, சொந்த அறிவோ இருந்திருக்கவில்லை.

திருக்குறளில் எழுதப்பட்ட காமத்துப்பால் பக்கம் எட்டி கூடப் பார்ப்பதற்கு அத்தனை அசெளகரியமாக இருந்தது. அசிங்கமான வார்த்தைகளாகக் எனக்குக் காட்டப்பட்டவைகள் என எதையுமே எப்போதும் பிரயோகம் செய்தது இல்லை. அப்படி பேசினால் நான் மோசமானவன் எனும் எண்ணம் என்னுள் ஆழ வேரூன்றியிருந்தது. எழுத்து நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு, 'கொச்சையான வார்த்தைகள் எல்லாம் அவற்றை கொச்சையாகப் பார்ப்பதில்தான் இருக்கிறது என பலர் உரக்கச் சொல்லிக்கொள்வதோடு எழுத்திலும் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருப்பாவை எழுதிய ஆண்டாள் எழுதவில்லையா எனவும் கேட்கிறார்கள். இலக்கியத்தரத்தோடு ஒரு விசயத்தை பார்க்க வேண்டும், வக்கிர புத்தியோடு பார்த்தால் எல்லாம் வக்கிரமாகத்தான் தெரியும் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருந்துவிடட்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நமது கலாச்சாரத்திற்கு அவையெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாகவே இன்றுவரை எனக்குத் தெரிகிறது. இலைமறை காயாகவே எல்லாம் உணர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாகவே கருதப்பட்டு வருகிறது. இனப்பெருக்கம் பற்றிய விசயங்களை பாடம் சொல்லித்தர  ஒருவித தயக்கமாகத்தான் இருக்கிறது. நிற்க.

'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' எனும் கவிதையை மனதில் பதிவு செய்தபோது 'மோகம்' என்றால் பெண் மோகம் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். மோகம் என்பதற்கான அர்த்தங்கள் நன்றாக தமிழ் தெரிந்ததும் பலவகையில் புரிந்து  போனது.

காமம் சம்பந்தமான விசயங்கள் எதுவெனினும் கெட்டவர்கள் செய்யக்கூடியது என்றும் 'நீலப்படம்' பார்ப்பவர்கள் அயோக்கியர்கள், அங்க அவயங்களை வெளிக்காட்டும் எந்த ஒரு இதழ்களையும் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்றெல்லாம் மனதில் சித்திரம் வரைந்து வைத்திருந்தேன்.

ஏன் அப்படி இருந்தேன், எதற்காக அப்படி இருந்தேன் என என்னுள் கேட்டுக் கொண்டபோது எனக்குள் ஒரே ஒரு விசயம் தெரிந்தது. என்னை எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான் அது. அதாவது நல்லவன் என்றால் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது போன்றவைதான் எனக்குத் தெரிந்தவைகள். கல்லூரிக் காலங்களில் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன். அவர்களாகவே நான் எழுதிய கவிதையைப் பாராட்டிய போது என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

இந்த காமம் வாழ்க்கையில் ஒருவர் அடைய வேண்டிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்பன ஒருவர் வாழ்வில் அடைய வேண்டிய செயல்களாகும்.

ஆனால் சமீபத்தில் எழுதிய 'காதல் மட்டும்' கவிதை ஒன்றில் இப்படியும் எழுதினேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

நான் காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்க்கிறேன். காதலை காமத்திலிருந்து விலக்கி வைத்திடவே விளைகிறேன். காதல் கொண்ட பார்வைக்கும், காமம் கொண்ட பார்வைக்கும் வேறுபாடு இருப்பதாகவேத்தான் நான் பார்க்கிறேன்.

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.

(தொடரும்)

Tuesday 26 January 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5

மெண்டலீவ் வேதியயில் பாடத்தில் விரிவுரையாளாராக பணியாற்றிக் கொண்டு இருந்தார். தான் படித்துச் சொல்லித்தர வேண்டி புத்தகங்கள் தேடினார். அவருக்கு எந்த புத்தகமும் திருப்தி அளிக்கவில்லை. தான் ஒரு புத்தகம் எழுதினால் என்ன என அவருக்குத் தோன்றியது. 

அந்த காலகட்டத்தில் அதற்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் 50 க்கு மேற்பட்ட தனிமங்களைக் கண்டறிந்து இருந்தனர். 

அனைத்து தனிமங்களையும் பார்த்த மெண்டலீவ் அதனை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடக்கினார். அவர் வரிசைப்படுத்த முயன்ற முறை அணுவின் எடையைப் பொறுத்துத்தான். அந்த கால கட்டத்தில் ஹைட்ரஜனை வைத்தே மற்ற அனுக்கள் எடைச் சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அணுவின் எடைக்கும் வேதியியல் தன்மைக்கும் தொடர்பு உண்டு என கருதியே அவ்வாறு செய்தார். அவர் செய்த ஒரு மாபெரும் பணியானது மேலும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டி உள்ளது என இடைவெளிகள் விட்டு வரிசைப்படுத்தினார். ஆனால் சோதனையாக கதிரியக்கத்தன்மையுள்ள சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனை முறையாகச் செய்யமுடியவில்லை, காரணம் அளவுச் சரியாகக் கிடைக்காததுதான்.மேலும் இது போன்று அணுவின் எடையைப் பொறுத்து வகைப்படுத்தியதன் பொருட்டு தனிமத்தின் வேதியியல் தன்மையானது ஒத்துவரவில்லை. ஆனால் இந்த அரிய சிந்தனைதான் இன்றைய தனிம அட்டவணையின் முன்னோடி எனச் சொன்னால் யார் மறுப்பார்கள். 

பின்னால் மோஸ்லி அணுவின் எண்களை வைத்து வரிசைப்படுத்தி உருவாக்கினால் சரிவரும் எனச் சொன்னார். முக்கியமாக எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டன, அதுவரை அணு எடை என்பது தான் அவர்களுக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றை வைத்துப் பின்னப்பட்ட விசயங்கள் பின்னாளில் வேறு கிடைத்ததும் மாற்றம் செய்ய ஏதுவாகின. 

பல பொருட்கள் ஒன்று என இருந்தவர்களுக்கு சில அறிவியல் சோதனைகள் அவைத் தனித்தனியான தனிமங்கள் ஒன்று சேர்ந்ததால் வந்தது எனக் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்து இருக்கக்கூடும். எங்கு எங்கு எப்படி இந்த எலெக்ட்ரான் செல்கிறது என கண்டு கொள்ள முடியும் அதுவும் குவாண்டம் கொள்கை கணிப்பினால். 

ஒரு பொருளானது எப்படி பார்க்கப்படுகிறது எனில் ஒளியானது பொருளின் மேல் பட்டு பிரதிபலித்து அந்த ஒளியானது நமது கண்களில் பட்டு நமக்கு அந்த பொருள் தெரிகிறது என்பது அறிந்ததே. நுண்ணிய பொருள்களை ஒளியினை குவித்து ஒளி நுண்ணோக்கியால் நாம் அதனை பெரிதுபடுத்தி காண்கிறோம் அதாவது அளவில் சிறியதை பெரிது படுத்துகிறோம், நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு எல்லைகள் உண்டு. நேனோ தொழில்நுட்பம் நுண்ணிய பொருள் பற்றி மிகவும் ஆராய்ந்து வருகிறது. இது தவிர்த்து எலெக்ட்ரான் நுண்ணோக்கியும் உண்டு. இதன் மூலம் மேலும் நுண்ணிய பொருள்கள் காணலாம். அணுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியால் தனிப்பட்ட அணுக்களை காணாலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை யாரும் எலெக்ட்ரானைப் பார்த்ததாக இல்லை, அதனுடைய போக்கினை இப்படித்தான் இருக்கும், இங்குதான் இருக்கும் என கணிக்கும் திறமை நம்மில் உண்டு. 


(தொடரும்)


பாதை 1


பாதை 2


பாதை 3


பாதை 4

Monday 25 January 2010

நாமும் தாவரம் ஆகிவிடலாம்

நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான் 
எத்தனை காலம் தான் அண்டி பிழைப்பது

இவ்வுலகத்தில் வாழ்ந்திட மாற்றம் ஒன்றே
மரபணுக்களில் ஏற்பட்டு வந்தது எனில்
நமது செல்களுக்கும் தானே உணவு
தயாரிக்க சொல்லித் தராதா மரபணுக்கள்

மரபணு முறைகொண்டு நம்மிலும்
ஏற்படுத்துவோம் புதிய மாற்றங்கள்

எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருப்பது
மரங்களை அழிக்க வேண்டாமென

எத்தனை மாநாடுதான் போடுவது
உலகம் வெப்பமாகி போகிறதென

மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்

உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்.

Friday 22 January 2010

சாலையோரம்

ஸ்டார்ஜன், தீபா, ஸ்ரீவித்யா, பலாபட்டறை சங்கர் அவங்க எல்லாம் சாலையோரம் பற்றி எழுதியதைப் படித்தேன். இது ஒரு தொடர் இடுகைனு இருந்தாலும் விருப்பப்பட்டவங்க எழுதலாம்னு சங்கர் அவரோட பதிவுல எழுதி இருந்ததால எனக்கும் இந்த சாலையோரம் பற்றி எழுதனும்னு ஒரு எண்ணம் வந்தது.

சின்ன வயசுல சாலையோரத்தில விளையாடலைன்னாலும் எங்களுக்குச் சொந்தமான களம் ஒன்றில் செங்கல் வைத்துக் கொண்டு பேருந்து போல் மணலில் ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டிக் கொண்டு போகும் போது ஒரு மாடு நின்று கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் செங்கல் வைத்து ஓட்டிய போது மாடு விட்ட ஒரு உதை இன்னமும் மறக்க முடியவில்லை. கவனக்குறைவு!

வரப்பு ஓரங்களில் பேருந்து ஓட்டுவது போல ஓடித் திரிந்த காலங்கள் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பேருந்து ஓட்டுநர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன். எங்க ஊருக்குள்ள ஒரே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் வரும், யார் முதலில் ஊருக்குள் வருவது என போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அப்படி தனியார் பேருந்து ஒருநாள் முன்னதாக வந்துவிட இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் போட்டுக்கொண்ட சண்டை இன்னமும் நினைவில் இருக்கிறது. இதே நிகழ்வு பல வருடங்கள் பின்னர் சென்னையில் பாரிமுனையில் பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இவர்களின் வேகத்திற்கு பலியாகும் மக்கள்!

மதுரையில் படித்தபோது நானும் என் தந்தையும் சாலையோரத்தில் நடந்து சென்றபோது பேருந்து ஒன்று என் தந்தையை உரசிவிட என் முன்னால் தள்ளிச் சென்று விழுந்த தந்தையை பார்த்தபோது நான் அடைந்த அதிர்ச்சி இன்னும் மறக்க முடியாதது. பேருந்து சற்று வேகம் குறைத்து வந்ததாலும், சாலையின் ஓரத்தில் கற்கள் ஏதும் இல்லாது போனதாலும் என் தந்தை அன்று எவ்வித காயமின்றி தப்பினார்.

மிதிவண்டி ஓட்டிப் பழக வேண்டும் என கஷ்டப்பட்டு மிதிவண்டி பழகிய பின்னர் சக்கரத்தில் காலை விட்டு காயப்பட்ட கால், வேகமாக ஓட்டிக்கொண்டு வருகிறேன் என சக்கரம் சறுக்கி விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயம் என மிதிவண்டி பயணம் சிரமம் சில முறை தந்தது. அந்த சிரமமே என்னை இந்தியாவில் இருந்தவரை வேறு இரு சக்கர வாகனங்களை பழகவிடவில்லை.

சென்னையில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது என் நண்பன் ஸ்ரீராம் என்னை அவனுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டச் சொன்னபோது பயமாகத்தான் இருந்தது. அவன் அநாயசமாக ஓட்டிச் செல்லும் விதம் கண்டு பிரமிப்புதான் மிஞ்சியது. தலைக்கவசம் இல்லாமல் அவன் பயணித்தது இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறும் வரை நான் எந்த வாகனங்களும் ஓட்டியது இல்லை, ஓட்டப் பழகியதும் இல்லை.

இலண்டன் வந்ததும் கார் (மகிழ்வுந்து) ஓட்ட வேண்டுமெனில் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும் என சொன்னார்கள். சாலை விதிகள் பற்றிய தேர்வு அது. அந்த சாலை விதிகள் தேர்வுதனில் முழு மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகினேன். ஆனால் செயல்முறைத் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்றாம் முறையே தேர்வாகினேன். இத்தனை சட்டதிட்டங்கள் உடைய இங்கே சட்டம்தனை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்களும் உண்டு.

ஒருமுறை எனக்கு முன்னால் மூன்று வாகனங்கள் நின்று கொண்டிருக்க, முன்னால் இடமிருக்கிறதே என மூன்று வாகனங்களை முந்திக்கொண்டு போய் நிற்க எனக்கு முன்னால் காவல் அதிகாரி வண்டி நின்று கொண்டிருந்தது. என்னை இறங்கச் சொல்லியவர், ஏன் இப்படி வந்தாய்? எனக் கேட்க இடமிருந்தது வந்தேன், என் தவறுதான் என்றேன். நீ வந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்குப் பிடிக்கவில்லை, ஏன் வந்தாய் என மறுபடியும் கேட்டார். இடமிருந்தது அதனால் வந்தேன், என் தவறுதான், இனி அவ்வாறு செய்யமாட்டேன் என சொன்னேன். எங்கே வேலை பார்க்கிறாய் என்றார், வேலை இடம் சொன்னதும், சென்று வா என அனுப்பி விட்டார். இத்தனைக்கும் நான் அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தவில்லை. இருப்பினும் பொறுமை அவசியம் என அந்நிகழ்வு எடுத்துகாட்டியது. ஆனால் நாளிதழ்கள் புரட்டினால் 30 மைல் வேகம் செல்ல வேண்டிய இடத்தில் 70 மைல் வேகத்தில் சென்றார் என்றெல்லாம் செய்திகள் பார்க்கலாம். பல சட்ட திட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாட்டில் கூட வாகன ஓட்டிகளின் செயல்பாடு எரிச்சல் தருவதாகவே இருக்கும். பலர் வாகனம் ஓட்டுவதற்கான அங்கீகாரம் இல்லாமல் வேறு நாடுகளில் எடுத்துக்கொண்ட அங்கீகாரம் வைத்து ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகமே.

புகைப்பட கருவி சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும், வாகன ஓட்டிகள் புகைப்பட கருவி இருக்குமிடம் மட்டும் வேகத்தை மட்டுப்படுத்துவார்கள், அதைத் தாண்டியதும் பறந்து செல்வார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்றே தோன்றும்,

ஒருமுறை நான் மஞ்சளிருந்து சிகப்பு விளக்கு வரும் முன்னர் செல்ல வேண்டுமென சென்றபோது மில்லி விநாடியில் எனது வாகனம் புகைப்படம் எடுக்கப்பட்டு 3 புள்ளிகளும் 60 பவுண்டுகளும் கட்டிய நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, பலமுறை வேகமாக செல்லும் வாகனங்களைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு, எங்கே இத்தனை வேகமாகச் செல்கிறார்கள் என! அதே வேளையில் நாம் வேகமாகச் செல்லும்போது அந்த எண்ணம் ஏன் நமக்கு வருவதில்லை எனும் சிந்தனையும் வருவதுண்டு.

30 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வாகனத்தை வெளியில் இருந்து இயக்க அந்த வாகனம் பின்னோக்கிச் செல்ல அருகிலிருந்த மற்றொரு வாகனத்துக்கும், இந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி அவர் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. கவனத்துடன் சென்றாலும், கவனமில்லாமல் வந்த லாரி ஒன்றினால் மரணமடைந்த ஒருவர் பற்றிய செய்தி அதிர்ச்சி தந்தது. முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி என்னை வெகுவாகவே பாதித்தது.

சாலையினைக் கடக்கும்போதும் கவனம் தேவை. சாலை விதிகளும், சாலையில் செல்வது பற்றிய எச்சரிக்கையும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. பல வசனங்கள் ஆங்காங்கே ஊரில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு 30 நிமிடத்தில் இரவு 10 மணிக்கு பயணித்த கார்! பேருந்து ஒன்று எதிரில் வந்தபோதும் அதன் அருகில் நேராக சென்று மின்னலென விலகிச் சென்ற கார் என சமீப காலத்தில் காரில் தமிழகத்தில் பயணித்தபோது ஏன் இப்படி இவ்வளவு வேகம் என ஓட்டுநர்களிடம் கேட்டபோது 'அப்படியே அணைச்சி போகனும்ணே' எனும் பதிலைக் கேட்டபோது சாலையோரம் மிகவும் பயங்கரமானதாகவே காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

விருப்பமுள்ளோர் தொடர வேண்டுகிறேன்.

Thursday 21 January 2010

கடவுள் யாருக்குச் சொந்தம்? திரு.சிவசக்திபாலன்

முழுவதும் படிக்க இங்கே அழுத்தவும். -----> கடவுள் யாருக்குச் சொந்தம்? - திரு சிவசக்திபாலன்.


1. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அத்வானியாலோ, அப்துல் சமதினாலேயோ ஏற்படுத்தப் படுவது அல்ல.

பள்ளி வாசல் - சர்ச் - கோவில், இதில் எங்காவது நின்று கொண்டு வருவோர் போவோரிடம் "நீங்கள் ஏன் கடவுளை நம்புகின்றீர்கள்?" என்று கேட்டுப் பாருங்கள். நோய் நொடி, பொருளாதாரச் சிக்கல், திருமணப் பிரச்னை, பிள்ளைப் பேறு, குடும்பத் தகராறு, நம்பிக்கைத் துரோகம், விபத்துக்கள் என்று மனித வாழ்வின் துயரங்களில் தன்னுடைய பிரார்த்தனைகள் மூலம் கடவுளின் அற்புதங்களைக் கண்டதாய் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாய்க் கூறுவதைக் கேட்கலாம்.

2. ஆதிசக்தி - அதிலிருந்து பிரம்மா - விஷ்ணு - சிவன், அவர்களுக்கு சரஸ்வதி - லட்சுமி - பார்வதி மற்றும் பிள்ளையார் - முருகன்.

இவர்களுக்குக் கீழே இந்திரன், நவக்கிரகங்கள், ஐம்பூதங்கள், இதற்கும் கீழே சொல்லப் போனால், குல தெய்வங்கள், மாரியம்மன்கள், எல்லையம்மன்கள், அய்யனார் கருப்பணன் போன்ற தெய்வங்கள்.

இது தான் ஆதியிலிருந்து இந்தியாவில் இருந்து வரும் தெய்வ நம்பிக்கை.

ரிக் வேதம், "ஏகம் சத்; விப்ர பஹூத வதந்தி" என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமாய்க் கூறுகின்றது. இதற்குக் கடவுள் ஒருவரே, ஞானிகள் அவரைப் பல பெயரிட்டு அழைக்கின்றார்கள். என்பது பொருள்.

இந்தப் பிரபஞ்சம் நாம் நினைக்கும்படி அவ்வளவு சிறியதல்ல. கடவுளின் சக்தி மனிதனின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மார்க் போட்டு அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ தள்ளும் வாத்தியார் வேலை போன்று அவ்வளவு சிறியதல்ல.

3. நியூட்டனின் விதி ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சம விகிதத்தில் எதிர் செயலைத் தோற்றுவிக்கின்றது என்று கூறுகின்றது.

நாம் வாழ்கின்றோம், பேசுகின்றோம், பார்க்கின்றோம், கேட்கின்றோம், உண்ணுகின்றோம், உறங்குகின்றோம். எந்த நேரமும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டே இருக்கின்றோம். விஞ்ஞானம் கண்டறிந்த இயற்கையின் விதிப்படி, நமது ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்குச் சமமான எதிர் செயலை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் விஞ்ஞான விதியே தப்பு என்றல்லவா ஆகி விடும்?

இதைத் தான் நம் முன்னோர்கள் நாம் செய்யும் பாவம் புண்ணியம், அதற்குரிய பலனை நாம் அனுபவிப்போம் என்று கூறியுள்ளார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

4. இந்தக் கடவுள் எங்கே இருக்கின்றார்?

கடவுள் ஏதோ மேக மண்டலத்துக்கு அப்பால் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றால் அதை நம்பி விடாதீர்கள். அதே போல் மாய மந்திரம் செய்பவன் தான் கடவுள் என்று யாரேனும் நினைத்தால் அதை மூட்டை கட்டி வைத்து விடுங்கள்.

பயிர் நட்டு, தண்ணீர் ஊற்றி வளர்த்தால் மாங்காய் கிடைக்கும். மந்திரத்தால் மாங்காய் வருவதில்லை.

இவ்வாறு கடவுளின் செயல்கள் அத்தனையும் நேர்த்தியாய் தீர்க்கமான செயல்பாடுகள் கொண்டிருப்பதால் கடவுளை விஞ்ஞான ரீதியாய் சுட்டிக் காட்ட முடியும். அது பாவச் செயலும் அல்ல.

5. யார் செய்த பாவமோ தெரியவில்லை, கடவுளைப் பற்றிய தெளிவான சிந்தனை மனித இனத்திற்கு ஏற்படவே இல்லை. ஒவ்வொருவரும் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல தத்தம் கொள்கைகளே உண்மையானவை என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

இது விஞ்ஞான யுகம். நம் முன்னோர்கள்-ஞானிகள், கடவுளைப் பற்றிக் கூறிய அனைத்துத் தத்துவங்களையும், அவை எந்த மதத்துக் கொள்கையாய் இருப்பினும் விஞ்ஞான ரீதியாய் அலசி ஆராய்ந்து கடவுளின் தன்மைகளைப் பற்றி ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். இப்படியாக இருப்பவர் தான் கடவுள் என்று அறுதியிட்டுக் கூற வேண்டும்.

கடவுள் ஆதி அந்தம் இல்லாதவர். இதில் எந்த மதத்திற்கும் பேதம் இல்லை. ஆக, ஆதி அந்தமில்லாத ஒன்றைக் கடவுள் என்று கூறுவது தவறில்லை தானே!.

6. ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாம் நாமாக இருக்க மாட்டோம். நாமும் ஒளியாகவே மாறி விடுவோம். இதுவே சிருஷ்டி!

இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். மிரண்டு விடாதீர்கள். எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரம்பொருளாகவே மாறி விடுவோம்.

இத்தத்துவம் விஞ்ஞான பூர்வமானது. சும்மா எடுத்துக்காட்டி எழுதப்பட்டதல்ல. வேதங்கள் எடுத்த எடுப்பிலேயே - 'தத்வமசி' - நீயே அது என்று கூறுகிறது.

7. மரத்தடியில் படுத்திருந்த நியூட்டன் நெற்றியில் ஒரு ஆப்பிள் விழுந்தது. இக்கனி ஏன் மேல் நோக்கிச் செல்லாது கீழ் நோக்கி வந்தது என்று நியூட்டன் தன்னுள் கேள்வியை எழுப்பினார். முடிவு புவி ஈர்ப்பு சக்தியை அறிந்தார்.

அவர் கேள்விக்குப் பதில் எங்கிருந்து கிடைத்தது? வானத்திலிருந்து விழுந்ததா? அல்லது மண்ணுக்குள்ளிருந்து முளைத்ததா? நியூட்டன் கேள்வியை யாரிடம் கேட்டார்? யார் அவருக்குப் பதில் அளித்தார்கள்? அவர் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். பதில் அவர் உள்மனதில் இருந்து வெளிப்பட்டது.

8. ஆசை, கோபம், அஹங்காரம் என்ற சிருஷ்டியின் அனைத்து உணர்ச்சி வெள்ளத்திலும் அடித்துச் செல்லப்படக்கூடிய சந்தர்ப்பம் அமையப் பெற்றுள்ள அத்தனை இல்லறத்தாருக்கும் எதிர் நீச்சல் போட ஒரு எளிய படகை கடவுள் அளித்துள்ளான். நம் உள்ளத்தில் எழும் எல்லா ஆசைகளையும் அறுத்தெறிய இறைவன் ஒரு இலகுவான ஆயுதம் அளித்துள்ளன்.

அது தான் அன்பு, தூய அன்பு, பரந்த அன்பு.
9. பயம் மனிதனின் அடிப்படை உணர்ச்சி.

இந்த பய உணர்ச்சி இருப்பதால் தான் நம்மில் பல பேர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். தாய் தந்தைக்குப் பயந்து கீழ்ப்படிபவன் பண்புள்ளவனாய் வளர்கின்றான். கணவனுக்குப் பயந்து நடக்கும் மனைவியும் மனைவிக்குப் பயந்து நடக்கும் கணவனும் நாகரீகமான சமுதாயத்தைப் படைக்கின்றார்கள்.

நான் சொல்லும் பயம் அன்பினால் ஏற்படும் பயம். தன் உயிர் மேல் ஆசை - உடைமைகள் மீது ஆசை - எதிர்பார்க்கும் சுகத்தின் மீது ஆசை ஆகியவற்றால் ஏற்படும் பயத்தைச் சொல்லவில்லை. அன்பினால் ஏற்படும் பயம் பக்தி எனப்படும். ஆசையால் ஏற்படும் பயம் அடிமைத்தனம் எனப்படும்.

பக்தி, தன்னுடைய இன்ப - துன்ப - சுக - துக்கம் அத்தனையையும் இழந்து நிற்கத்தயாராய் இருக்கும்.

இந்த பக்தி இருக்கிறதே! அப்பப்பா. இதைச் சொல்லியோ எழுதியோ புரிய வைக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.

10. மூன்று ஆயுதங்களை இது வரை பார்த்தோம். மிஞ்சி இருப்பது ஒரே ஆயுதம். அதன் பெயர் தியானம். இதைத் தான் நம் பெரியவர்கள் ராஜயோகம் என்றார்கள்.

11. மதத் தீவிரவாதிகளே! உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனதை அடக்கி விட்டீர்களா? ஐம்புலன்களினால் ஏற்படும் ஆசையை வென்று விட்டீர்களா? அப்படியென்றால் மட்டுமே கடவுளைப் பற்றி பேசுங்கள். அவர்கள் தான் மக்களுக்கு ஆன்மீகத்தின் அற்புதத்தை உணர வைக்க முடியும்.

12. கடவுள் எண் குணங்களைக் கொண்டவர்.

ஆதி அந்தமில்லாதவர். எல்லையில்லாதவர். உருவமில்லாதவர். கால நேரங்களைக் கடந்தவர்.
அவரன்றி அண்டத்தில் வேறொன்றில்லை என்று வியாபித்திருப்பவர். பற்றற்றவர். இப்படித்தான் இருப்பார் என்று எடுத்துரைக்கத் தக்க தன்மைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிர்க்குணமாய் இருப்பவர். இடம், பொருள், காரண, காரியங்கள் இல்லாதவர்.

13. ஆதி சங்கரர் இங்கு அனைத்துமாய் காட்சியளிப்பது ஒரே பரம்பொருள் என்னும் அத்வைத கொள்கை கொண்டிருந்தார். ஸ்ரீராமானுஜரோ நாமெல்லாம் கடவுளின் அங்கங்கள் என்னும் விசிஷ்டாத்வைதக் கொள்கை கொண்டிருந்தார். மத்வாச்சாரியாரோ, கடவுள் வேறு, ஜீவன்கள் வேறு என்னும் த்வைதக் கருத்துகளைக் கொண்டிருந்தார். புத்தரோ, மறந்து கூட கடவுளைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவரையே கடவுளாக்கி நம்மவர்கள் கலவரங்களைச் செய்கிறார்கள்.

14. "பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை நிறுத்திக் கொண்டால் அதன் நிலை என்னவாகும்?"

சுக்கு நூறாய் உடைந்து போகும்? சிதறிப் போகும்? சூரியனில் போய் விழும்? எரிந்து விடும்? என்றெல்லாம் பதில் தந்தால் பூஜ்ஜியம் தான் உங்களுக்கு மதிப்பெண் போட முடியும்.

பதில் என்னவென்றால், "பூமி மாயமாய் மறைந்து விடும்"

திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட சூட்சும நிலையை அடைந்து விடும்.

15. அணுவைப் பற்றி படித்திருப்பீர்கள். புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் பற்றியும் தெரிந்திருப்பீர்கள். இதில் புரோட்டான் பாசிட்டிவ் எனவும், நியூட்ரான் நியூட்ரல் எனவும், எலக்ட்ரான் நெகடிவ் எனவும் தெரிந்திருப்பீர்கள். அணுக்களின் இயக்கம் இந்த முப்பெரும் சக்திகளாலேயே ஏற்படுகின்றது. அணுக்களின் பிளவு, சிதைவு, கலவை, கோர்வை, மூலக்கூறுகளின் தோற்றம், கூட்டுப் பொருட்களின் வெளிப்பாடு, அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பூமி, சூரியன், நட்சத்திரங்கள் அனைத்தும் இந்த முப்பெரும் சக்திகள் ஏற்படுத்தும் மின் காந்த அலைகளினால் மட்டுமே சாத்தியமாகின்றன.

இதைத்தான் மும்மூர்த்திகள் என்று கூறுகின்றேன். இவை முறையே, ஆக்கல், காத்தல், அழித்தல் பணிகளைச் செய்கின்றன.

16. ஒரே ஒரு செல்லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கி விடலாம் என்று உங்களுக்குத் தெரியும்.

17. "துன்பத்திற்குக் காரணம் ஆசையே" - புத்தர்.

துன்பம் என்றால் என்ன?

ஒரு குழந்தை தான் ஆசையாய் விளையாடிய பலூன் உடைந்து விட்டால் அளவில்லா துன்பத்தை அடைகிறது. ஆனால் சில நேரங்கள் சிலர் பலூன் உடைப்பதையே விளையாட்டாய் விளையாடுகின்றனர்.

18. அரைகுறை டிரைவிங் படித்தவர்கள் காரினை தாறுமாறாய் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்வது போல் நமது குணாதிசயங்களை தாறுமாறாய் பயன்படுத்தி நாம் ஆபத்தை வரவழைக்கிறோம்.

எனவே, நமக்கு எவ்வாறு வாழ்வது என்பது கற்றுத் தரப்பட வேண்டியதாகும்.

எனவே, பிச்சை புகினும் கற்கை நன்றே.

19. மரணத்தின் மூலம் இந்த இயக்கமற்ற நிலையை சாதிக்க இயலுமா? இயலாது. ஏனென்றால் ஜனனம், மரணம் என்னும் இந்த இரண்டுமே இயக்க நிலையாகிய சிருஷ்டியின் இரு பெரும் அத்தியாயங்கள்.

விரிந்து பரந்த அண்டமே மிகச்சிறிய பிண்டமாய் இந்த மனிதனாயும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

அண்டத்தின் விளைவே பிண்டம். பிண்டத்தை விட்டு தாண்டிக் குதித்தாலே அண்டத்தையே தாண்டிக் குதித்தது தான்.

எனவே, ஐம்புலன்கள், மனம், புத்தி, நான் என்னும் அகங்காரம் இவற்றை எவ்வழியாயினும், எம்மதத்தின் மூலமாகவேனும் அடக்கி ஆண்டு ஜெயித்துக் காட்டுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். கடவுளை உணருங்கள். கடவுளாய் உணருங்கள்.

Tuesday 19 January 2010

அறிவுரை

அறிவுரை என்பது எளிதாகக் கிடைப்பது என்பார்கள். எவர் வேண்டுமெனிலும் அறிவுரை சொல்லலாம் எனவும் சொல்வார்கள். அறிவுரை சொல்வோர் அதே அறிவுரைப்படி நடக்கிறார்களா என்பது பற்றி ஆராயவும் கூடாது எனவும் சொல்வார்கள். இதைச் சுருக்கமாக 'ஊருக்கு உபதேசம்' எனச் சொல்லப்படுவதும் உண்டு.

உட்கருத்து, வெளிக்கருத்து எனச் சொல்லிக் கொண்டே காரியத்தில் கருத்தாக இல்லாது இருப்போர் இவ்வுலகில் உண்டு. 'நான் எப்படி எல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன், அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என சொல்லும் யோக்கியதை எனக்கு உண்டு' என்பார் ஒரு கவிஞர்.

உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் நீங்கள் சொல்லிவிட்டு, அது எல்லோருக்கும் புரிய வேண்டும் என நினைப்பதும், அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதும் எத்தனை சிரமமான காரியம் தெரியுமா, எனவே எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டுமே சொல்வதை உங்களது பணியாக வைத்துக் கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம் என அறிவுறுத்தும் அறிஞர் பெருந்தகைகளும் உண்டு.

நான் ஒன்றைச் சொல்வதற்கு முன் அதன்படி என்னால் வாழ முடிகிறதா என யோசித்து செய்துப் பார்த்து விட்டேச் சொல்வேன் என இருந்த ஞானிகளும் உண்டு. ஒரு கருத்தானது பிறருக்கு நன்மை விளைய வேண்டும் எனும் நோக்கில்தான் சொல்லப்படுவது, ஆனால் அதே கருத்தினை தீமை விளைவிக்கும் வகையில் வகைப்படுத்துவது எனும்போது கருத்துச் சிதைவு ஏற்படுகிறது.

தீபம் கொண்டு திருக்குறள் படிக்கலாம், கூரையையும் கொளுத்தலாம் என்பார் ஒரு கவிஞர். உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை நீங்கள் எப்படி பயன்படுத்த நினைக்கிறீர்களோஅதன் பலன் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேகம். ஆயுதங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டிதான் உருவாக்கப்பட்டன என வைத்துக் கொண்டோமெனில் அதே ஆயுதம் பிறரைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாது போனோம்.

அவரவர் அறிந்த உண்மை அறிவே மிகும் எனும் நிலை இருப்பதினால், அவரவர் கருத்துப்படி திறம்பட செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் சமாதானமும், அமைதியும், அன்பும், பணிவும், ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலும் என உலகைச் செம்மைப்படுத்த நாம் நம்மைச் செம்மைப்படுத்துவோம்.

Friday 15 January 2010

தாரவி - Kevin McCloud, London, Channel 4

தொலைகாட்சி பார்ப்பதென்றால் சில நேரங்களில் மட்டுமல்ல, பல நேரங்களில் சற்று ஏமாற்றமாக இருக்கும். தொலைகாட்சியில் இன்று என்ன ஒளிபரப்பு செய்கிறார்கள் என நாளிதழ்கள் மூலமும், இணையங்கள் மூலமும் அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல விசயங்கள் தெரியாமலேப் போய்விடுவதுண்டு. இவ்வாறிருக்க நேற்று தாரவி பற்றி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்ததை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.

இருபத்தி நான்கு வருடங்கள் இந்தியாவில் நெரிசலிலும், குப்பை கூளங்களிலும் வளர்ந்து திரிந்து வாழ்க்கை வாழ்ந்த விதம் தனை நினைத்தபோது கண்ணீர் கண்களில் நிறைந்தது. Slumdog Millionaire எனும் திரைப்படம் பார்த்தபோது மனதில் ஏதும் தோன்றவில்லை. அது ஒரு திரைப்படம் தானே என்கிற உணர்வுதான் மேலோங்கி இருந்தது. ஆனால் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட தாரவி மனதில் பல கேள்விகளை எழுப்பிச் சென்றது.
இந்தியாவில் இருந்தபோது 1994ல் மும்பை பகுதிக்கு கல்லூரியில் இருந்து கல்விச் சுற்றுலாவாக ஒரே ஒரு முறை சென்றதுண்டு. மாதுங்கா எனும் இடத்தில் ஏழு நாட்கள் தங்கி இருந்தோம். தாரவியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று கேள்விபட்டதோடு சரி, தாரவியை நேரில் சென்று பார்த்ததில்லை.

கெவின் எனும் தொலைகாட்சி நிருபர் தாரவிக்கு இரண்டு வார பயணமாக சென்று அங்கே வாழ்க்கை முறையை பற்றி உலகுக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். படம் எடுத்த விதம் நிதர்சனத்தைச் சொன்னாலும் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது.

நினைத்த இடத்தில் மலம் கழிக்கும் சிறுவர்கள், மலம் கழித்த இடத்தின் அருகிலேயே விளையாடும் அதே சிறுவர்கள், குப்பை கூளங்களில் கட்டப்பட்ட வீடுகளா எனும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் குப்பையும், கழிவுகளும் நிறைந்து காணப்பட்டது. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஆனால் ஜன நெருக்கடி அதிக இருக்கும் இந்த இடம் தான் ஆசியாவிலேயே முதன்மை இடமாக கருதப்படுகிறது.

ராஜேஷ் என்பவர் கெவினுக்கு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். கெவினுக்கு தலை சுற்றுகிறது, எப்படி இந்த இடத்தில் இவர்கள் வாழ முடிகிறதென. ராஜேஷ் வீட்டில் ஒரு நாள் தங்கிய கெவினுக்கு காலை எழுந்ததும் தண்ணீருக்கு கஷ்டப்படும் மனித வாழ்க்கை ஆச்சரியம் தருகிறது. சாலைகள் கழிவுகள் செல்ல இடமின்றி நிரம்பி இருப்பதை கண்டதும் அவரின் முகபாவனைகள் ஏனடா வந்தோம் என்பது போன்றே இருந்தது. மேலும் ஒரு விசயம் செய்வதற்கு எத்தனை சிரமங்கள் என எவரும் அவருக்கு உதவி செய்யாமல் காக்க வைப்பதை நினைக்கும்போது அவருக்கு வெறுப்பு வருகிறது.

இத்தனைக்கும் நடுவில் 85 சதவிகிதம் தாரவியில் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் எனவும், பல கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டதைவிட, எந்த பொருளும் தாரவியில் இருந்து தயாராகிறது என்பதை குறிப்பிடாமலே பொருள்கள் விற்பனைக்கு செல்கிறது என்பதை அறிந்த போது உலக மக்களின் சுகாதாரத்திற்கும் இந்த மக்கள் விலை பேசுகிறார்கள்தான்.

பலர் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இருப்பினும் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்கிறார் கெவின். ஒரே வீட்டில் இருபத்தியொரு பேர் வசிப்பதை அறிந்து பிரமிப்பு அடைகிறார். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் வீட்டில் தங்கும் அவர், அங்கே எலித் தொல்லையால் அந்த இரவு உறங்க முடியாமல் தவிக்கிறார்.

இத்தனை நெருக்கமாக வாழும் இவர்கள் எப்படி தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிற பொல்லாத யோச்னையும் வந்து சேர்கிறது கெவினுக்கு, அதையும் கேட்டு வைத்திட, விடுதிகளில் வைத்துக்கொள்வோம் என்கிறார் ஒருவர். வாழ்க்கையின் அடிநிலையில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகள் மேல்தட்டு மனிதர்களுக்கு எப்போதுமே புரியப் போவதில்லை.

அரசுக்கு வரி செலுத்தாமல் பல கோடி வியாபாரம் நடக்கும் இந்த பகுதியானது கெவினுக்கு புதிதாக இருந்ததில் ஆச்சரியமில்லை. உழைப்பாளிகளில் சிறுவர்களும் அடக்கம், அதுவும் தகுந்த பாதுகாப்பில்லாமல் உழைப்பவர்கள் கண்டு ஆடித்தான் போகிறார் கெவின்.

அடிப்படை வசதிகள் இல்லாது இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள், கொஞ்சம் கூட சுகாதரம் இல்லை இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என கெவினின் கண்ணுக்கு தெரிகிறது. மேலும் இங்கு குற்றங்கள் மிகவும் குறைவாகவே நடக்கிறதாம். ஒற்றுமையாக அனைவரும் இருப்பதை கண்டு இங்கிலாந்தினை குறைபட்டு கொள்கிறார் கெவின். ஒருவர் வீட்டினுள் இறந்தால் மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் இறந்தாரா, இருக்கிறாரா என்பது கூட இங்கிலாந்தில் வெளித் தெரியாமல் போக வாய்ப்புண்டு, ஆனால் தாரவியில் அப்படியில்லை என்கிறார்.

ஜன நெருக்கடியான ஒரு தெருவில் திடீரென பலர் கூடி தொழுகை நடத்துகிறார்கள். இருபது நிமிட தொழுகை மட்டுமே. பின்னர் அனைவரும் கலைந்து போய்விடுகிறார்கள். அத்தனை நெருக்கடியிலும் இறைவனை தொழும் நம்பிக்கை பிரமிப்பாக இருக்கிறது கெவினுக்கு. தாரவியில் நடக்கும் ஒரு விழா காட்டுகிறார், அங்கே தரப்படும் உணவினை சாப்பிட யோசிக்கிறார் கெவின். எத்தனை பேர் கைபட்டதோ என மனம் வெதும்புகிறார்.

தாரவியில் வாழ்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் போல் தான் என் கண்களுக்குத் தெரிந்தார்கள். இயற்கையை சீரழிக்கும் குற்றவாளிகள், தங்கள் உரிமைகளை பறிகொடுத்துத் தவிக்கும் குற்றவாளிகள்.

இத்தனை சந்தோசம் இருந்தும், உழைப்பு இருந்தும் குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாதா என இங்கு வாழும் மக்களை ஏக்கத்துடன் எனது கண்களும் பார்த்துத் தவித்தது. இந்த இடமானது முற்றிலுமாக மாற்றப்பட்டு சகல வசதிகளுடன் உருவாக்கப்படும் திட்டம் இருப்பினும், இங்கே வசிப்பவர்களுக்கு இடமே இல்லாமல் செய்யும் திட்டம் என்பதால் இப்படியே இங்கேயே வாழ்கிறோம் என இருக்கும் இவர்களை காணும்போது கவலையாகத்தான் இருந்தது.

சுகாதாரம்? எனது சிறு வயது காலங்கள் நினைவுக்கு வந்தது. வீட்டின் முன்புறத்திலோ, பின்புறத்திலோ மலமும், சிறுநீரும் கழித்த காலங்கள். இயற்கை உரம் என சொல்லி தோட்டங்களிலும், காடுகளிலும் மாட்டின் கழிவுகளோடு கழிந்த தருணங்கள். இப்பொழுது கூட பல கிராமங்கள் அப்படியேதான் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை. கழிவுகள் இருந்த இடத்திலிருந்து விளைந்ததையா சாப்பிட்டீர்கள் என என்னிடம் கேள்வி கேட்கபட்டபோது ஆம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. எந்த ஒரு சுகாதாரத்தையும் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை.

சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ கொஞ்சமும் நமது நாட்டில் செயல்பாட்டில் இல்லை. படித்தவர்களும் சரி, பாமர மக்களும் சரி எச்சில் துப்புவது, நினைத்த இடத்தில் குப்பை கொட்டுவது என கழிவுகளுடன் வாழப் பழகிக்கொண்டோம். இதில் தாரவி மட்டும் விதிவிலக்கா என்ன!Thursday 14 January 2010

வெறும் வார்த்தைகள் - கருத்துரை

தங்களின் "வெறும் வார்த்தைகள்" படித்தேன். முடித்ததும் வெறும் வார்த்தைகளா இவை? என்ற வினா எழுந்தது உண்மை. பதில். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பெரும் வார்த்தைகள். மற்றவர்களும் பெற வேண்டிய வார்த்தைகள்.

ஆன்மீகம், அறிவியல், காதல், மனித நேயம், ஜீவகாருண்யம் என்று சொல்ல வந்த வார்த்தைகள் அடக்கத்திலும், ஆற்றலிலும் அடர்த்தி மிக்கவை.

உறங்'குகை'யில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது.
இல்லை நீயெனச் சொல்லுதற்கு சொல்லைத் தந்து விட்டு
எல்லையிலா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருளிகின்றாயோ அறிவதற்கு...

இந்த வினாக்கள் மனத்தில் எழுப்பும் அதிர்வலைகளை வார்த்தகளுக்குள் வரையறுத்தல் சிரமம். உறங்குகையில் என்பதைக் கூட இருவிதமாகப் பொருள் கொள்ளத் தூண்டுகிறது. உறங்குதல் என்பது தூக்கம். அதையே பிரித்து (குகையை எண்ணிப்) பார்த்தால் புரியும் பொருளின் தளம் அர்த்தம் பெறுகிறது. சலனமற்ற நீர் வெளியில் வந்து விழும் கூழாங்கல் எழுப்பிச் செல்லும் அலைகளைப் போல் ஞான வட்டம் முடிவிலியாய் விரிந்து கொண்டே போகிறது.

உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்.

அரூபமான இறைவனைப் போற்ற ரூபங்கள் அவசியமல்ல. அவன் அத்தனை மொழிகளும் தெரிந்தவன். மௌனம் தரும் அடர்த்தியை பேச்சு மொழி தந்து விடாது. காதலின் பால பாடம் மௌனம் தான். அறியாமையை அறிந்து கொள்வது தான் ஆன்மத் தேடலின் ஆதி. இந்தச் சூட்சுமத்தை ஆங்காங்கே பொடி வைத்து வெடி வைத்திருக்கிறீர்கள்.

நிலத்தடியில் புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது போல நிச்சயம் பலன் வரும் தங்கள் வார்த்தைகளுக்கு. அதற்கான நம்பிக்கையை நிறையவே விதைத்திருக்கிறீர்கள். வாய்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள நுண்ணிய திரையை உரசிப் பார்க்கும் கேள்விகளை நிறையவே எழுப்பியிருக்கிறீர்கள். சில கவிதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமே என்று சொல்கிறது வாசக மனம்.

"வெறும் வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பெறும்.

எல்லாருக்கும் பொதுவான இறைவனின் ஆசியையும், ஞானத்தையும் அனைவருக்கும் வேண்டியவனாய்.


வெறும் வார்த்தைகள் கவிதைத் தொகுப்பு பெற:

தமிழ் அலை
1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை ‍ 600 015
தொடர்புக்கு: 00919786218777

Wednesday 13 January 2010

அரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)

அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.Tuesday 12 January 2010

நாச்சாரம்மாள்

நாச்சாரம்மாள் வண்ணமயமான தெருவினில் நின்று கொண்டு மனதினில் நாராயணப் பெருமாளை நினைத்து வழிபட்டு கொண்டு இருந்தாள். ஊரில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டு இருந்தனர்.

நடு இரவு ஆகியும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த அதிசய நிகழ்வினை காண்பதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஊரின் நாட்டாமையும் ஊரின் பூசாரியும் தகதகவென நெருப்பாய் பிரகாசித்துக் கொண்டு இருந்த நெருப்புக் கோளங்களை ஒரு சட்டியில் எடுத்து வரச்சொன்னார்கள். எரிக்கப்பட்ட கட்டையானது நெருப்புத் துண்டுகளாய் மாறி நெருப்புக்கோளங்கள் போன்று இருந்தது. நாச்சாரம்மாள் வழிபாட்டினைத் தொடர்ந்து கொண்டு இருந்தார். மூதாட்டிகள் அவரைச் சுற்றி ஒரு வளையம் மூன்று அடிகள் தள்ளி அமைத்து இருந்தனர்.

நாச்சாரம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டாய் தரையில் விழுந்தது அது பூமியினை பெரும் குளிர்ச்சி அடையச் செய்தது. பூசாரி நெருப்புக் கோளங்களை நெருப்புக் கடத்தா பொருளின் உதவியுடன் வாங்கிக் கொண்டு வளையம்தனை விளக்கி நாச்சாரம்மாளின் முன் வந்தார். ‘’தாயே சேலையைப் பிடிச்சி மடி ஏந்து’’ என்று சொன்னதும் ஊரில் உள்ள அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா, நாராயணா, பெருமாளே பெருமாளே, பெரூமாளே என கோஷம் இட்டனர். பூசாரியின் கைகள் நடுங்கியது. அந்த அரும்பெரும் காட்சியினைக் காண ஒருவரையொருவர் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு கால்களை சிறகுகளாக மாற்றிகொண்டு இருந்தனர். முன் இருப்பவரின் தோள்களில் கைகள் வைத்து அழுத்தியது கூட உணராமல் மற்றவர்கள் தாங்கிக் கொண்டு இருப்பதைக் காணும்போது இந்நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது.

நாச்சாரம்மாள் சேலையின் மடியினை தாங்கிப் பிடித்தார், இம்முறை ஒவ்வொருவரும் அமைதியாய் பெருமாளே பெருமாளே என வேண்டிக் கொண்டு இருந்தனர், பூசாரி நெருப்புக் கோளங்களினை சேலையின் மடியில் போட்டார். 'கோவிந்தா' என்னும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெருப்புக்கோளங்களை தனது சேலையில் நாச்சாரம்மாள் இன்னும் தாங்கிக் கொண்டு இருந்தார். ஒரு நெருப்புக் கூட சேலையினை எரிக்கவில்லை தரையில் விழவும் இல்லை. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் 'தாயே' என விழுந்து வணங்கினர். பூசாரியும் விழுந்து வணங்கினார். ‘’நம்ம ஊர்ல தெய்வம் குடி இருக்கு’’ என அனைவரும் கூறினர். பூசாரி நெருப்புக் கோளங்களினை சட்டியில் வாங்கிக் கொண்டார். ஊரெல்லாம் நாச்சாரம்மாளினை தெய்வம் என கொண்டாடியது. மறுநாள் காலையில் நாச்சாரம்மாள் வைகுண்டப் பதவி அடைந்தார். ஊரெல்லாம் சோகத்தில் மூழ்கியது.