Friday 20 February 2009

பழங்காலச் சுவடுகள் - 5

குகை போல இருந்தாலும் வெளிச்சமாக இருந்தது. சூரிய கதிர்கள் உள்ளே விழுந்து சுவர்களில் மாட்டி வைக்கப்பட்ட கண்ணாடிகளில் பட்டு உள்ளே இயற்கையின் ஒளி எங்கும் வியாபித்து இருந்தது. அகிலாவும் சின்னச்சாமியும் உள்ளே நடந்து சென்றனர். வெளியில் இருந்து வந்த இளையவன் யாவருக்கும் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னான். அதைக் கேட்டதும் அகிலா ஆங்கிலத்தில் வினவினாள். மூத்தவன் பதில் சொன்னான்.

''என்ன காரியம் பண்ணி இருக்கீங்க, நாங்க எப்படி திரும்பி போறது''

''கவலை வேண்டாம், எங்களிடம் வண்டி இருக்கிறது''

ஒரு குறுகிய அறைக்குள் நுழைந்தனர். அங்கே கட்டிலில் ஒரு பெண்மணி, மரியா, படுத்து இருந்தார். மூத்தவன் தனது தாயை தொட்டு எழுப்பினான். முனகியவாறெ எழுந்தாள் அந்த பெண்மணி. அந்த பெண்மணியிடம் ஏதோ கூறினான். பெண்மணியின் முகம் மலர்ந்தது. அகிலாவை நோக்கி கையை காட்டினார் அந்த பெண்மணி. நடுவானவன் அகிலாவை செல்லுமாறு கூறினான். சின்னசாமியும் உடன் செல்ல எத்தனித்தார்.

நடுவானவன் சின்னசாமியை சைகையால் இருக்கச் சொன்னான். அகிலாவை செல்லுமாறு மீண்டும் கூறினான். அகிலா பயத்துடன் அருகில் சென்றாள். அந்த பெண்மணி அகிலாவின் கைகளை எடுத்து தனது கன்னங்களில் ஒட்டிக் கொண்டார். தனது அருகி்ல் அமருமாறு கட்டிலில் உட்காரச் சொன்னாள். மொழி புரியவில்லை, விருப்பம் மட்டும் புரிந்தது. அகிலாவும் அமர்ந்தாள். மூத்தவன் அகிலாவை நோக்கி சொன்னான்.

''நீதான் எங்களை கல்யாணம் பண்ணிக்கிற போகிற பெண்ணாக சொல்லி இருக்கிறேன் அதுதான் படுக்கையில் பல நாட்களாக வேதனையுடன் இருந்தவர்கள் எழுந்துவிட்டார்கள். வேண்டாம் என மறுத்து விடாதே''

அகிலாவுக்கு படபடப்பு அதிகமாகியது. நெற்றி வியர்த்தது.

''நான் கல்யாணமானவள் இது போன்று ஏமாற்று வேலைக்கு நான் உதவ மாட்டேன்''

''இல்லை நீ எங்களை திருமணம் முடித்த உடனே செல்லலாம்''

''விபரீதமாக போய்விடும், என்னை எனது கணவர் நிராகரித்து விடுவார்''

''கவலைப்படாதே''

இவர்கள் பேசுவதைக் கெட்டுக் கொண்டிருந்த பெண்மணி மூத்தவனிடம் விசாரித்தாள். மூத்தவன் நாளையே திருமணம் வைத்துக்கொள்வதாக கேட்டதாகவும் அகிலா சரியென சொல்வதாகவும் கூறினான். அந்த பெண்மணி இந்தியா இந்தியா என சொன்னாள்.அகிலாவுக்கு அழுகையாக வந்தது.

கிருஷ்ணரை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள். எழுந்த மரியா சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அறையை விட்டு வெளியே வந்தார். தனது நான்கு மகன்களையும் அழைத்தார். அவர்களிடம் சந்தோசமாக பேசினார். அந்த குகையில் ஒவ்வொருவருக்கென ஒரு அறை இருந்தது. ஒரு தனி அறையில் சின்னசாமி மன வருத்தத்துடன் அமர்ந்து இருந்தார். மூத்தவன் பிரம்ட் அகிலாவை சமாதனப்படுத்திக் கொண்டு இருந்தான். அகிலா சின்னசாமியை தேடிச் சென்றாள்.

''இப்போ என்ன பண்ண போற''

''நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க''

''அப்படியே தொலைஞ்சி போயிரு''

''.....''

''போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா, இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிற சொபிட் என்ன சொல்றான் தெரியுமா''

''யாரு அவன் என்ன சொல்றான்''

''அவன் தான் கடைசி பையனாம், கல்யாணம் முடிஞ்சிட்டா நீ எங்கயும் போக முடியாதாம்''

''பிரம்ட் அப்படி சொல்லலையே, இப்போ என்ன பன்றது''

அப்போது கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். மகாராணியை போன்று உடைகளும் நகைகளும் அணிந்து கம்பீரமாக மரியா அனைவருக்கும் முன்னால் நின்றார். அகிலாவை அழைத்து வரச் சொல்லி கட்டளை இட்டார். பிரம்ட் சின்னசாமியிடமும் அகிலாவிடமும் உறுதி கொடுத்துவிட்டு அகிலாவை அழைத்து சென்றான். அனைவரின் முன்னால் நின்றபோது அகிலாவுக்கு கால்கள் நடுங்கியது. புரியாத மொழியது. மரியா பேசினார்.

''நீங்கள் எல்லாம் எனது மகன்களுக்கு பெண் தரமறுத்துவிட்டீர்கள், சிந்து பெண் எனது மகன்களுக்கு மனைவியாகப் போகிறாள் அந்த வைபவம் நாளை கைரோ பிரமிடுகளுக்கு முன்னால் நடக்கும். அனைவரும் அந்த காட்சியை காண வாருங்கள்''

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அகிலாவை நோக்கி சத்தமிட்டனர். கோவமான மனிதர்கள் பார்த்து அகிலா பயந்து போனாள். சின்னசாமி அங்கே வந்தார். சின்னசாமியை காட்டி மரியா சொன்னார்.

''திருமணம் இவர்தான் நடத்தி வைக்க போகிறார், சிந்து மனிதர்''

கூட்டம் கலைய தொடங்கியது. ஆனால் சின்ன சின்ன கூட்டமாக நின்று பேச தொடங்கி விட்டனர். ஆங்கிலம் பேசுபவர்கள் அந்த கூட்டத்தில் இல்லை. இந்த ஐந்து பேர் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஆங்கிலம் கற்று கொண்டதன் காரணம் இவர்களது தந்தை.

அகிலாவும் சின்னசாமியும் விடுதிக்கு சென்று வரலாம் என சொன்னார்கள். பிரம்ட் சரியென அவர்களை அழைத்துக் கொண்டு தான் மட்டும் வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றான். அகிலா பிரம்டிடம் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிவிட்டது குறித்து கோபமாக பேசிக்கொண்டு இருந்தாள். பிரம்ட் அகிலாவின் யோசனை தான் இந்த முடிவுக்கு காரணம் என சொன்னான். வரமாட்டீர்களோ என அச்சம் கொண்டதாக வேறு சொன்னான். விடுதியில் இறங்கியதும் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டனர் இருவரும். பிரம்ட் விடுதி கீழே வெளியில் காத்துக் கொண்டு இருந்தான்.

''பயமா இருக்கு''

''எல்லாம் உன்னால வந்தது, என்னாலயும் தான்''

''போகாம இங்கேயே இருந்துலாம்''

''அவன் திட்டமில்லாமலா நம்மளை இங்க கொண்டு வந்து இருப்பான் அந்த சொபிட் என்ன சொன்னான் தெரியுமா''

''சொபிட் சொபிட்''

''நாம இந்த திட்டத்துக்கு சரினு சொல்லலைன்னா உன்னை மட்டும் கொன்னு நைல் நதியில வீசிருவானாம்''

''உங்க திட்டம் பலிக்கட்டும்''

''ஆனா அதுல விவிட் ரொம்ப கலக்கமா இருந்தான், எதுவுமே பேசலை''

''யாரு விவிட்''

''மூணாவது பையன்''

மனம் கலக்கத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் இருவரும் இருந்தார்கள். பிரம்ட் இங்கும் அங்கும் நடக்க ஆரம்பித்தான். அகிலாவும் சின்னசாமியும் உறுதியான முடிவுக்கு வந்தார்கள். அறையின் கதவு தட்டப்பட்டது.

(தொடரும்)

Tuesday 17 February 2009

பழங்காலச் சுவடுகள் - 4

ஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.

தனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''

''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''

''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''

''அப்படியா, நீ என்ன சொன்ன''

''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''

''என்ன சொன்னாங்க அதுக்கு''

''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''

''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''

''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''

''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''

''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''

''எனக்குப் புரியலை''

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.

''சொல்லு என்ன சொன்னாங்க''

''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''

சின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.

''நீயா தொலையனும்னு ஆசைப்படற''

''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''

''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''

அகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.

சின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.

அப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.

(தொடரும்)

Monday 16 February 2009

பழங்காலச் சுவடுகள் - 3

குளித்துவிட்டு வெளியே வந்த அகிலா அறையினில் சின்னச்சாமி இல்லாதது கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாள். கதவைத் திறந்திட முயற்சித்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பொதுவாக வெளியில் கதவை பூட்டினால் உள்ளிருந்து திறக்கும் வண்ணம்தான் பெரும்பாலான விடுதிகளில் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு அப்படியில்லாமல் இருந்தது. அகிலா அச்சம் அடைந்தாள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உடைகள் மாற்றிக்கொண்டு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள். சின்னச்சாமி சில உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். அகிலா, சின்னச்சாமியின் கைகளில் இருந்த பொட்டலங்களைப் பார்த்தாள்.

''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''

''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''

''பயந்துட்டேன்''

''பயம் வரத்தானேச் செய்யும்''

''என்ன சொல்றீங்க''

''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''

''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''

''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''

''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''

''நான் குளிச்சிட்டு வரேன்''

''நான் வெளியே போகமாட்டேன்''

இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.

'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.

நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'

அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

''என்ன எழுதறீங்க''

''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''

''கொடுங்க பார்ப்போம்''

'இந்தா''

அகிலா படித்துப் பார்த்தாள்.

''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''

''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''

''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''

''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''

அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.

''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''

''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''

''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''

''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''

சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.

''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''

அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 2

''என்னங்க நாம தெரியாத ஊருக்குப் போறோமே அங்க யாராவது நம்மளை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது''

''என்ன திடீருனு இந்த யோசனை''

''மாமா நம்மளை போக வேணாம்னு சொன்னாரே அதான் ஒரே யோசனையா இருந்தது''

''இராத்திரி நேரம் ஆனாலே பயம் வந்துருமே, என் அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிட்டே வருது அதான் அப்படி சொல்லிருக்கிறாரு, நீ தைரியமா தூங்கு, படத்தில வர மாதிரி எகிப்துக்கு கனவுல போய்ட்டு வந்துராத''

''உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்''

அந்த இரவில் தங்களது அறையில் சின்னச்சாமியும் அகிலாவும் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அறை நிசப்தமானது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதில் எழுந்த சின்னச்சாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார், வெள்ளம் போல் தண்ணீர் வீட்டினை சூழ்ந்து கொண்டிருந்தது. படகு ஒன்றை வாங்கி வைக்க வேண்டும் என வீட்டுத்தரகர் சொன்னது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு மணி நேரத்தில் பாதை சரியாகிவிடும் என்று மீண்டும் தனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.

''என்னங்க எழுந்துச்சா''

''இல்லை இனிமேதான் தூங்கனும்''

''மணி எத்தனை''

''நாலு''

''பிளைட்டுக்கு நேரமாச்சா''

''அது நாளைக்கு, இப்போ நீ தூங்கு''

சின்னச்சாமி எகிப்து பற்றிய சிந்தனையில் இருந்தார். எகிப்து நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. எகிப்து அரசராக இருந்ததை போன்ற உணர்வு வந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்திலும், தந்தை மற்றும் தாய் சேர்த்து வைத்த பணத்திலும் தனது கனவு நினைவாகப் போவதை நினைத்துக் கொண்டே கண் அயர்ந்தார். நைல் நதி கரைபுரண்டோடியது. எகிப்துக்கு செல்ல ஆயத்தமாகி விமான நிலையம் வந்தபோது சாமிமுத்து சின்னச்சாமியை தனியே அழைத்தார்.

''நீ அவளை அங்கேயே தொலைச்சிட்டு வந்துரு, இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேன், இப்ப சொன்னாதான் உனக்கு மறக்கவே மறக்காது, என்ன புரியுதா''

''எகிப்துல தொலைக்கவா? இல்லைன்னா பெருல தொலைக்கவா?''

''நீ எந்த நாட்டில தொலைச்சாலும் பரவாயில்லை, ஆனா நீ அவளோட திரும்பி வீட்டுக்கு வந்தா உனக்கும் அவளுக்கும் இங்க இடமில்லை''

''நீங்க சொன்னதை அப்படியே நான் நினைவில வைச்சிக்கிறேன்''

''சமத்தான பையன், இங்க உனக்கு டாக்டர் பொண்ணு பாத்து வைச்சிருக்கோம்''

சின்னச்சாமி சிரித்துக்கொண்டே விமானநிலையத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். அகிலாவிடம் விசயத்தை சொன்னார். அகிலா அரண்டு போனாள்.

''நீங்க திட்டம் போட்டுத்தான் கூப்பிட்டுட்டு போறீங்களா, நாம போக வேணாம்''

''உன்னை எதுக்கு நான் அப்படி தொலைக்கனும்''

''நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு மாமா நினைக்கிறாரே''

''நல்ல யோசனைதான், ஆனா எதுக்கு வேற கல்யாணம்''

''நீங்கதான் திட்டம் போட்டீங்க, சொல்லுங்க''

சின்னச்சாமி அகிலாவிடம் சொல்லாமல் இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டே விமானத்துக் கட்டுப்பாடுகளை முடிக்க கிளம்பினார். அகிலாவுக்குச் செல்ல மனமில்லாமல் போனது. சற்று குழப்பமாக இருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.அகிலா அச்சத்துடன் காணப்பட்டாள். சின்னச்சாமி அகிலாவை கவனித்தார்.

''பயமா''

''ரொம்பவே''

''இறங்கிப் போ''

''தொலைஞ்சி போனு சொல்றீங்களா''

''அவ்வளவு ஈசியா தொலைச்சிருவேனா''

''மாமா ஏன் அப்படி சொன்னாரு''

''அது அவரோட விபரீத ஆசை''

''நாம காதலிச்சி கல்யாணம் பண்ணினது பிடிக்கலையா''

''அப்படின்னா எதுக்கு மூணு வருசம் காத்து இருக்கனும்''

''தொலைக்கமாட்டீங்கதானே''

சின்னச்சாமி சிரித்தார். அகிலா அமைதியானாள். விமானப் பயணம் இனிதாய் அமைந்தது. எகிப்து நாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் சுட்டெரித்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிரமிடுகள் வரவேற்றுக்கொண்டிருந்தன. நைல் நதியின் ஓரத்தில் பிரமாண்டமாக அமைந்திருந்த விடுதி ஒன்றில் இருவரும் நுழைந்தனர். சின்னச்சாமி சன்னல் வழியே நதியை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.

''மனசுக்கு அமைதியா இருக்குங்க''

''எனக்கும் தான்''

''குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போவோம்''

''தொலைச்சிர மாட்டீங்களே''

''இன்னுமா நினைச்சிட்டே இருக்க, இல்லை வசனம் பேசிப் பழகுறியா''

''டாக்டர் பொண்ணு எந்த ஊரு''

''இனி அந்த பேச்சை நீ எடுத்த நாம இந்த ரூமிலேயே இருப்போம், எங்கயும் போக வேணாம், சரியா''

''குளிச்சிட்டு வரேன்''

அகிலா குளியலறைக்குள் நுழைந்ததும் சின்னச்சாமி அறையை விட்டு வெளியேறினார்.

(தொடரும்)

Saturday 14 February 2009

பழங்காலச் சுவடுகள் -1

பரந்து விரிந்த வானத்திற்கு வெள்ளை மேகங்கள் வைத்த நீல வண்ண சேலையில் ஜரிகையாக மழை பொழிந்திட தயாராகிக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் திருநகரைத் தாண்டியதும் ஒரு சாலை வடக்குப் புறமாகச் செல்லும். அந்த சாலையின் வழியாக நடந்தால் சற்றுத் தொலைவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. வீடு இருக்கும் இந்த நிலமானது முன்னர் விளைநிலமாக இருந்தது. இங்கே இந்த நிலம் வீட்டுமனைகளாக மாற முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்து முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடும் வந்துவிட்டது. மற்ற இடங்களும் விற்பனையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் சின்னச்சாமி. வயது இருபத்தி ஆறு. அவரது மனைவி அகிலா. வயது இருபத்தி மூன்று. குழந்தை தற்போது வேண்டாம் என தற்காலிகமாக தள்ளிப்போட்டார்கள், வருடம் மூன்று உருண்டோடி விட்டது. சின்னச்சாமியுடன் அவரது தந்தை சாமிமுத்துவும், அன்னை தமிழ்மணியும், இளைய சகோதரி பூர்ணிமாவும், இளைய சகோதரர் சகாதேவனும் வசித்து வந்தார்கள்.

சின்னச்சாமி திருநகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புவியியல் பாடம் மற்றும் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர். அவரது மனைவி அகிலா அதே பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை. பூர்ணிமா மதுரையில் ஆயுர்வைசியா கல்லூரியில் இரண்டாம் வருட இயற்பியல் துறை படித்து வந்தார். சகாதேவன் தல்லாகுளத்தில் மின்சாரத் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. சாமிமுத்துவும் தமிழ்மணியும் திருநகரில் உள்ள சின்னச்சாமி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

தேன்நிலவுக்காக சென்ற வருடம் திட்டமிட்டபடி இந்த வருடம் கோடை கால விடுமுறையில் எகிப்து மற்றும் பெரு நாடுகளுக்குச் செல்ல தீர்மானித்தார் சின்னச்சாமி. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் முறையாக செய்தார். அகிலா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். மதுரையும், திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் மற்றும் சென்னையும் மட்டுமே சுற்றிப்பார்த்து இருந்த அகிலாவுக்கு எகிப்து என்றதும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிரமிடுகளின் பிரமிப்பை நேரில் காணும் ஆவல் அதிகமானது. பெரு நாட்டிற்குச் செல்வதில் அத்தனை விருப்பமில்லை, இருந்தாலும் தனது கணவருடன் தனியாய் இந்த விடுமுறையினை கழிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னச்சாமியும் எகிப்து மட்டும் பெரு செல்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். சில வருடங்களாக எகிப்து நாட்டிற்கும் பெரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தார்.

மழை விழ ஆரம்பித்தது. அனைவரும் வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார்கள். தொலைகாட்சி துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. சாமிமுத்து கேட்டார்.

''எப்போடா பிளைட்டு''

''நாளன்னைக்கு காலையில எட்டு மணிக்குப்பா''

''எல்லாம் எடுத்து வைச்சாச்சா''

''எடுத்து வைச்சாச்சுப்பா''

''எடுத்து வைச்சதெல்லாம் திருப்பி கீழ எடுத்து வைச்சிடுங்க, இப்போ போக வேண்டாம்''

''என்னப்பா திடீருன்னு இப்ப சொல்றீங்க''

''கொல்கத்தாவில நிலைமை சரியில்லை, அதனால நீ சொன்ன மாதிரி டிசம்பர்ல போகலாம்'''

'அப்பா, நாங்க போகப் போறது எகிப்து நாட்டுக்கு''

''மறந்துட்டேன்பா, நீ கொல்கத்தாவுக்குப் போகனும்னு சொன்னியே அதான் சொன்னேன்''

''அப்பா நான் சொன்னது பஞ்சாப்புக்கு, அங்கதான் இந்த டிசம்பர்ல போகனும்னு சொன்னேன்''

''வர வர எல்லாம் மறந்துட்டே வருதுடா''

''இனி உங்களுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்''

அனைவரும் சிரித்தார்கள் சாமிமுத்து உள்பட. ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்கள். சந்தோசமாக வாங்கிக்கொண்டார் சின்னச்சாமி. அகிலாவுக்கு இரண்டுதின இரவுகள் இப்பொழுதே கழியாதா என்று இருந்தது. இவர்களின் இனிய வரவை நோக்கி எகிப்து உற்சாகமாகிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Friday 13 February 2009

தலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை

குரு பார்வையும், சனி பார்வையும் நமது ஜோதிட சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ராகு கேதுப் பெயர்ச்சிகளுக்குப் பெரும் முக்கியத்துவம் தராவிட்டாலும் சனிப்பெயர்ச்சிக்கும், குருப்பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருவது பலரும் அறிந்திருக்கக்கூடும் விசயமே. இதில் அறிவியலுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் ஒரு விசயம் கண்ணுக்குப் பட்டது. அவ்விசயத்திற்கு விரைவில் வருகிறேன்.

பூமிக்கு மற்ற கிரகங்களினால் பாதிப்பு உண்டு எனும் தம்பி முரளியின் பார்வை மிகவும் விசாலமானது. வாழ்த்துகள் தம்பி முரளி. பொதுவாக சூரியனின் கடுமையான கதிர்கள் நமது பூமியில் விழாத வண்ணம் வெள்ளி, புதன் கிரகங்கள் பாதுகாத்து வருவதும், பூமியானது தனது காந்த சக்தியால் அதுபோன்ற விசமிக்க கதிர்களை புறந்தள்ளிவிடும் தன்மையுடையது என நாம் அறிவோம்.

இதனைத் தாண்டி 1997ல் டொரான்டோவினைச் சேர்ந்த இரு இயற்பியல் விஞ்ஞானிகள் பூமியின் தட்பவெப்ப நிலையானது, பூமியின் வடிவத்துடன் சேர்ந்து பிற கிரகங்களின் அதுவும் முக்கியமாக ஈர்ப்புவிசையினால் சனியாலும், குருவாலும், பாதிக்கப்படுகிறது என சொல்லி இருக்கிறார்கள். இருவரும் நாங்கள் தான் இந்த விசயத்தை முதன் முதலாகச் சொல்கிறோம் என மார்தட்டிக் கொண்டார்கள். அதுவும் விசயம் வெளி வந்த இதழ் நேச்சர் எனும் இதழ். சாதாரணமாக எதையும் இந்த நேச்சர் இதழில் அத்தனை எளிதாக வெளியிடமாட்டார்கள். ஒவ்வொரு ஆராய்ச்சியாளனின் கனவும் இந்த இதழில் வெளியிடுவதுதான். இன்னும் அந்த நிலைக்கு எல்லாம் நான் போகவில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விசயமாகத்தான் இருக்கிறது. ஒருநாளேனும் அந்த இதழில் நிச்சயம் வெளியிட்டுவிடலாம் என நம்பிக்கையும் இருக்கிறது.

பூமியின் சாய்வுத் தன்மையும் அது சுற்றி வரும் தன்மையும் பூமியில் தட்ப வெப்ப நிலை மாற காரணமாக இருக்கிறது. சாய்வுத் தன்மையானது 46000 வருடத்திற்கு ஒருமுறை மாறும் எனவும், சுற்றும் தன்மையானது 26000 வருடத்திற்கு ஒரு முறை மாறும் எனவும் கணித்து இருக்கிறார்கள். இப்படி மாறுவதால் சூரியனின் கதிர்கள் பூமியில் பட்டு மாற்றம் ஏற்படுகிறது என உறுதியாகச் சொல்கிறார்கள்.

20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியானது சனி மற்றும் குருவின் ஈர்ப்புத் தன்மை போலவே தனது ஈர்ப்புத் தன்மையை வைத்துக் கொண்டதால் சாய்வு தனமையும் வடிவமும் பெற்றதாக ஆராய்ச்சியில் நிரூபித்து இருக்கிறர்கள். அதன் விளைவாகவே 20 மில்லியன் வருடங்கள் முன்னர் பூமியில் சீதோஷ்ண நிலை மாறி இருக்கக் கூடும், எனவே இனி வரும் காலங்களிலும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

ஆக சனிப் பெயர்ச்சிக்கும், குருப் பெயர்ச்சிக்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் உண்டு. இதனால் மொத்த மனிதர்களும் பாதிக்கப்படாமல் ஏன் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என எண்ணம் ஏற்பட்டால் ''எனக்கு அதுப் பிடிக்காது, எனக்கு இதுப் பிடிக்காது'' என நம்மில் எப்படியெப்படி இருக்கிறோம் என்பதையும், ஒரே மருந்து ஒவ்வொருவருக்கும் வேறுவிதமாக வேலைப் பார்க்கும் என்பதையும் கருத்தில் கொள்வோம்

தலைவிதி தலைமதி - 8

ஒரு சின்ன மாநாடு. அங்கே ஒருவர் கேள்வி எழுப்பினார். புற்று நோய் என வந்துவிட்டால் அது எதனால் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய சிகிச்சை முறை அளித்தால் ஒழிய எந்த ஒரு பிளாசிபோவும் ஒரு பலனும் அளித்துவிடாது. உடனே மற்றவர் சொன்னார், ஆமாம் ஆமாம் அப்படியே மருந்து அந்த நோயை முற்றிலும் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

பிளாசிபோவை நம்பி மட்டும் செயல்பட்டால் இன்று உலக மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்து இருக்கும் என்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். கருணை, புண்ணியம், அன்பு பிரார்த்தனை இதெல்லாம் காப்பாற்றும் என்று இருந்தால் ஏன் விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டும்! இந்த பிளாசிபோ கடுமையான ஒன்று என்கிறார்கள் அறிவியலாளர்கள். எனவே பிளாசிபோவினால் நோய் குண்மாகும் என்பதெல்லாம் நம்ப தகுந்தது அல்ல, உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

நமது திருவள்ளுவரும் அதைத்தானே அழகாக சொல்கிறார். நோய் நாடி... எனவே ஆன்மிகம் சொல்லும் மன அமைதியும், கட்டுப்பாடான வாழ்க்கையும் ஒரு பிளாசிபோ போன்று இருந்து மருந்தை சற்று தூர நிற்கச் செய்யும், ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை. நோய் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அறிவியல் மருந்தை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய நோய்கள் என பல இருக்கிறது. ஒரு காலத்தில் நோய் கடவுளால் கொடுக்கப்பட்ட தண்டனை என கருதிய புண்ணியவான்கள் இருந்தார்கள். ஆனால் கடவுள் அத்தனை சிரமம் எல்லாம் தருவதில்லை என நோய் வருவதற்கான காரணத்தை கண்டுபிடித்து எது நோய் உருவாக்கியதோ அதை வைத்தே மருந்து கண்டுபிடித்த அறிவியல் மேதைகளும் இருக்கிறார்கள்.

உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த பென்சிலின், முக்கியமாக எனக்குப் பிடித்துப் போன பென்சிலின். தடுப்பு ஊசி முறையெல்லாம் 'முள்ளை முள்ளால் எடுப்பது' போன்றதுதான். ஆக ஆன்மிகம் நம்மை நல்வழிபடுத்த, நம்மை நாம் உணர்ந்து கொள்ள சொல்லும் வழிமுறை. அறிவியல் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்து தீர்த்திட வழி பார்க்கும் ஒரு வழிமுறை. பிளாசிபோவோ, மருந்தோ 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதால் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், அத்துடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிளாசிபோ, மருந்து போன்று விற்பனைக்கு கிடைப்பதில்லை! ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நோய் தீர்க்கிறேன் என வித்தை காட்டும் மனிதர்கள் பிளாசிபோ வகையைச் சார்ந்தவர்களே. நமது மூதாதையர்களின் மருத்துவம் பிளாசிபோ வகையைச் சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்தையும் முறைப்படுத்துங்கள் என மேல்நாட்டு மருத்துவம் கேட்டுக்கொள்கிறது. நமக்கு அதற்கு எங்கே நேரம்? ஒரு திப்பிலி, சுக்கு, மிளகு, இஞ்சி போய்க்கொண்டே இருப்போம்!

மாத்திரை என்பது நமது உடலில் உயிர் வேதி மாற்றங்களை ஏற்படுத்துவதாகும். அதாவது நமது உடலில் உயிர்வேதிவினைகள் பல மூலக்கூறுகளால் வழிநடத்தப்படுகிறது. அவ்வாறு நடக்கும் வினைகள் நமது உடலுக்கு நல்ல செயலை செய்ய வேண்டும், அப்படியில்லாது ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது இந்த மாத்திரைகள் நமது உடலில் இருந்த முதன்மை நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றன.

நமது மூளை நமது உடலில் அனைத்தும் சீராக இருக்கும் வண்ணம் பல தொழிலாளர்களை வேலைக்கு அமைத்து உள்ளது, ஏதாவது பிரச்சினையெனில் இயற்கையாகவே முதல் நிலைக்கு கொண்டு செல்லப்படும், அப்படி இல்லாதபட்சத்தில் தான் இந்த மாத்திரை உதவுகிறது. அதுதான் உடம்புக்கும் மாத்திரைக்கும் உள்ள சம்பந்தம்.

இது ஒன்றும் தற்காலிகமாக நடந்தது அல்ல. பல வருடங்கள் முன்னரே மருத்துவ ரீதியாக உணரப்பட்ட ஒன்று. ஒரு ஆராய்ச்சியாளர் ஆற்றில் தண்ணீரை குடித்ததும் காய்ச்சல் வந்துவிட்டதை போன்று உணர்ந்தார். ஆனால் அந்த தண்ணீரை அதிகமாக அருந்த அருந்த காய்ச்சல் மறைந்து போனதை கண்டார். அப்படி உருவானதுதான் மலேரியாவுக்கான மாத்திரை. நமது ஆயுர்வேத மருந்தும் அதுவே.

நோய் என்பது நமது உடல்நிலை சமன்நிலை அற்று போவதாகும். நமது உடலில் பலவித வழிப்பாதைகள் இருக்கின்றன, அனைத்தும் சரியாக செயல்பட்டாலன்றி ஏதாவது பிரச்சினை வரக்கூடும், அப்படி சில வழிபாதைகளில் ஏற்படும் கோளாறுகளால் வரும் நோய் வழி அறிந்து தரப்படும் மாத்திரை அந்த வழிப்பாதையை சீராக்குகிறது. நோய் அப்படித்தான் குணமாகிறது. இது குறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது, புது புது வியாதிகள் வந்து கொண்டு இருக்கிறது, மாத்திரையும் தான்!

நமது உடம்பு கார்பன் போன்ற தனிமம் சேர்ந்த மூலக்கூறுகளால் ஆனதே. எரித்தால் தெரியும், புதைத்தால் புரியும். எனவே தனிமத்திற்கும் உடலுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. எப்படி இத்தனை சிக்கலான வழியமைப்பை ஏற்படுத்திக் கொண்டது என வரும்போதுதான் ''அறிவிற்சிறந்த ஒருவர் உருவாக்கினார்'' எனும் கொள்கை பிறக்கிறது. நமது உடல் செயற்கை அல்லவே! எல்லாம் இயற்கை தான். இயற்கை தான் செயற்கையாக தோற்றம் அளிக்கின்றதேயன்றி கீதாசாரம் சொன்னது போல எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது! மாற்று விசயங்கள் என வரும்போது எல்லாம் செயற்கைத்தனமாக இருக்கிறது அவ்வளவே. ஆம் இயற்கையாய் மட்டுமல்ல அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான்.

பறப்பது என்பது மனிதனுக்கு சாத்தியமில்லை என பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே மனிதன் தனது அறிவினைக்கொண்டு பறந்து செல்ல விமானம் தயாரித்துவிட்டான். இறக்கைகள் உள்ள பறவையெல்லாம் பறப்பதில்லை. இறக்கைக்கு கீழே இருக்கும் சிறகுகள்/இறகுகள் தான் பறப்பதற்கு காரணம். ஒரு பட்டம் பறந்தது, வியந்தான் மனிதன். பறவை பறந்தது, வியந்தான். தானும் பறக்க கைகளில் சிலவற்றைக் கட்டியும் பார்த்தான். எலும்பு உடைந்ததுதான் மிச்சம். மனிதன் நடப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்டவன் என நிரூபணம் ஆனது. பலூனில் காற்றை அடைத்து அதைப் பறக்கச் செய்தான். தனது காற்றை ஊதி பலூன் பறப்பது கண்டு தனக்குள் இருக்கும் காற்று தன்னை மிதக்கச் செய்யாதா எனும் ஏக்கம் இன்று வரை தீரவில்லை. பலூனில் ஹீலியம் வாயு அடைத்து அதில் தன்னை இணைத்து பறந்தான். ஹைட்ரஜன் மூலம் உருவாக்கப்பட்ட விமானம் எரிந்து வீழ்ந்தது. இப்படி ஒன்றில் தொடர்பு கொண்டுதான் அவனால் பறக்க முடிகிறது என்பது மனிதனால் செய்யக்கூடிய விசயம். ஒல்லியாக இருப்பவரை ஊதித் தள்ளிவிடுவேன் எனச் சொல்வது நகைச்சுவையாக இருக்கும், காற்றடித்தால் பறந்துவிடுவாய் என்பதும் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் மனிதனால் பறப்பது என்பது சற்று கடினமே.

சித்தர்கள்... அதிசய மனிதர்கள். இப்படி இயற்கையாய் சாத்தியமில்லை எனச் சொன்னால் அது உங்கள் இயலாமையின் காரணம் என சொல்லும் மனிதர்கள். கூடுவிட்டு கூடு பாய்வது, காற்றோடு காற்றாய் இருப்பது, தண்ணீரில் நடப்பது என்பதெல்லாம் இதுவரை பார்த்தது இல்லை. செய்தி கேள்விபட்டதுதான். அதே வேளையில் பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பலர் பல நாட்களாக உயிருடன் இருந்து இருக்கிறார்கள் எனும் செய்தி கேட்கும்போது அந்த அழிவின் காரணமாக மனம் வலித்தாலும் ஆச்சரியம் அளிக்கின்றது.

காற்றில் 78% நைட்ரஜன், 21% ஆக்ஸிஜன் 1% ஆர்கன், கிரிப்டான், செனான் கார்பன்- டை- ஆக்ஸைடு (0.04%) ஹைட்ரஜன் மட்டுமே. இதில் இலகுவான காற்றை உள்ளிழுத்து சித்தர்கள் பறக்கிறார்களா? அல்லது மனம் இலேசாக இருப்பதால் பறந்தது போல் உணர்கிறார்களா? அறிவதற்கில்லை.

போகர் ஆச்சரியம் அளிக்கின்றார். திருமூலர் ஆச்சரியம் அளிக்கின்றார். கலசமுனி வியக்க வைக்கின்றார். ஒருநாளேனும் ஒரு சித்தரையாவதுப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளக்கூடாதா என்றுதான் எனக்கு இருக்கின்றது. உடல் செலுத்துவது என்பது யோசிக்க வேண்டிய விசயம். இரத்தம் ஒரே வகுப்பும் காரணியும் இல்லையென்றால் உயிர் மிஞ்சாது. இன்ன இன்ன இரத்த வகுப்புதான் இன்ன இன்ன இரத்த வகுப்புக்கு என எழுதி வைக்கப்பட்ட விதி இருக்கிறது. அதே வேளையில் உறுப்பு மாற்று சிகிச்சை சாத்தியமே என்கிறது அறிவியல்.

எனது எண்ணத்தை உங்களிடம் திணித்து என்னைப் போலவே உங்களை 100% சதவிகிதம் மாற்ற முடியாவிட்டாலும் ஓரளவு மாற்ற இயலும் என்கிறது மனோதத்துவ முறை. எனவே தனிமங்கள் மூலம் சாதிப்பது என்பது சற்று யோசிக்க வேண்டியதே. கார்பன் மோனாக்ஸைடு ரத்தத்தில் அதிக அளவில் கலந்தால் உயிர் போய்விடும். நைட்ரஜன் இரத்தத்தில் கலந்துவிட தொடங்கினால் உயிர் வலி எடுக்கும். கடலுக்கு அடியில் செல்லும் மனிதர்களுக்கு இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சித்தர்கள் வாழ்க்கை முறை சாமான்யனான எனக்கு தெரிய வாய்ப்பு இதுவரை இல்லை. கோமெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு உயிரினங்கள் இல்லை. இங்கு இருப்பதோ இருபதே இருபது அமினோஅமிலங்கள். அதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் சிந்தனைகள் நமக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பது ஆச்சரியமே. எப்படியெல்லாம் உயிரினங்கள் புரதம்தனை உருவாக்கிக் கொள்கின்றன என்பது அதிசயமே.

அதாவது நமக்கு பிரச்சினை எல்லாம் சூரியன் தான். பக்கத்தில் இருக்கும் கோள்கள் நமக்கு நன்மை பயக்கும் வகையில் தான் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்தவரை. நமது வாயு மண்டலம் பற்றி விரிவாக பார்த்தால் தெரியும். பிற கிரகங்களில் இருந்து வாயுக்கள் நமது பூமியில் நுழைகிறதா என்பது பற்றி தெரிந்து கொண்டு எழுதுகிறேன். தாவர இனங்கள் அனைத்து மூலக்கூறுகளையும் வைத்திருக்கிறது. பாம்பின் விஷம் கூட நோய்க்கு மருந்து. கொல்லப்பட்ட பாக்டீரியா, வைரஸ், விஷம் நீக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ் மருந்து. எனவே விண்வெளியில் சென்று இங்கிருப்பதையே எடுத்துச் செய்வது என்பது இந்தியாவில் குக்கிராமத்தில் இருந்து காய்ச்சலுக்கு இலண்டனுக்கு வந்து ஊசிகூட போடாமல் மருந்து வாங்கிச் சாப்பிடுவது போன்றதே. இலண்டனிலாவது மருந்து கிடைக்கும் எனத் தெரிந்து வரலாம். ஆனால் விண்வெளியில் எங்கு என்ன இருக்கிறது எனப் பார்த்தால் எல்லாம் வெறுமையாக இருக்கிறது.

தலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ

தண்ணீர் சிகிச்சை முறை கூட ஒருவகை பிளாசிபோ தான். ஆனால் தற்போதைய ஆய்வின் படி ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதால் வெறும் கற்பனை என தெரியவந்துள்ளது.

இந்த பிளாசிபோவுக்கு எனது ஆய்வுக்கூடத்தில் நடந்த ஒரு சின்ன உதாரணம். இருமலைக் கட்டுப்படுத்த ஒரு மூலக்கூறுதனை கண்டுபிடித்து இருக்கிறோம். அந்த மூலக்கூறு உண்மையிலே சிறந்ததா என கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனை மேலும் உறுதிபடுத்த குவைத் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு என்னைச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். நானும் சரி என சொன்னேன். அந்த ஆய்வகமானது இங்கு பயின்ற மாணவரால் நடத்தப்பட்டு வருகிறது. சில வாரங்கள் முன்னர் என்னிடம் அந்த ஆசிரியர் வந்து குவைத் ஆய்வகத்திற்கு தண்ணீர் மட்டும் அனுப்பி மருந்து என சொல்லி இருப்பதாகவும் வரும் முடிவு பொறுத்தே நாம் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டும் என கூறிவிட்டார். என்னால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் சிரித்ததும் அவரும் சிரித்துவிட்டார். இதுதான் பிளாசிபோ!

சிரிப்பாக எனக்குத்தான் இருக்கும் ஆனால் பீச்சர் எனும் ஆய்வாளருக்கு அப்படியில்லை. பீச்சர் 15 வித வித நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை கையில் எடுத்தார். அந்த 15 ஆராய்ச்சிகளை ஆராய்ந்தவர் இந்த பிளாசிபோ மூலம் 35 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தார்கள் என தனது ஆய்வுக்கட்டுரையில் எழுதினார். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த ஆராய்ச்சிகளை ஆராய்ந்தபோது பீச்சர் சொன்னதைவிட பிளாசிபோ சற்று அதிகமாகவே நோயினை தீர்த்து இருப்பதாக தெரியவந்தது. இந்த பிளாசிபோவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றலுண்டு என மின்னல் வேகத்தில் பல ஆராய்ச்சிகளை ஆராய ஆரம்பித்த பெருமை பீச்சர் எனும் ஆய்வாளருக்குத்தான் சேரும்.

வலி, மனநிலை பாதிப்பு போன்ற நோய்களில் 60 சதவிகிதம் பிளாசிபோவால் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் எனவும், மனநிலை நோயாளிகளில் மருந்துக்கும், பிளாசிபோவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியில் எதையுமே சரி என அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், 1997 ல் கீய்ன்லே மற்றும் கீய்ன் பீச்சர் கூறிய அனைத்து ஆராய்ச்சியையும் திரும்பவும் சரிபார்த்து பீச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என காட்டினார்கள். பிளாசிபோவுக்கு இங்கே என்ன வேலை என கூறி ஒரு நோயில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு வேறு சில காரணிகளும் உண்டு, அதனை கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பாவ்செல் எனும் ஆய்வாளர் சொன்ன வாசகம் மிகவும் யோசிக்க வேண்டியது. பொதுவாக ஒரு நோய் தானாக, இயற்கையாக மாற்றம் கொள்ளக்கூடியது மருந்து உட்கொண்டாலும் சரி, உட்கொள்ளாவிட்டாலும் சரி, எனவே அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதை விடுத்து பிளாசிபோ நோய் தீர்க்கும் என சொல்வது விந்தையானது என கடந்த வருடம் அறிவித்து உள்ளார்.

ஒரு ஆராய்ச்சியில் பிளாசிபோவால் முன்னேற்றம் என சொன்னபோது அதுகுறித்து மற்ற ஆராய்ச்சியாளர் சொன்னது இந்த முடிவுகள் எதைத் தெரிவிக்கின்றது எனில் ஒன்று செய்முறையில் குளறுபடி இருக்க வேண்டும் அல்லது முடிவுகளை கண்மூடி எழுதி இருக்க வேண்டும். இப்படி பிளாசிபோ முன்னேற்றம் தந்ததாக கூறும் ஆய்வுகள் ஒருபக்கமும், அது கண்கட்டு விளையாட்டு என மறுபக்கமும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிளாசிபோ என்பது மருந்து மற்றும் சிகிச்சை முறை அற்றது என அர்த்தப்படும். ஒரு ரத்தநாளம் உடைகிறது எனில் அதை நாம் கட்டி நிறுத்தினால் அது சிகிச்சை முறை. ஆனால் அதே ரத்தநாளத்தை கட்டுவது போல் கட்டி ஆனால் கட்டாமல் விட்டுவிட்டு என்ன ஆகிறது எனப் பார்ப்பது பிளாசிபோ.

பாரசிட்டமாலை தண்ணீரில் கலந்து கொடுத்தால் அது மருந்து. அது உடலில் என்ன செய்கிறது எனப் பார்ப்பது மருந்தினால் என்ன விளைவு.

பிளாசிபோ என்றால் வெறும் தண்ணீரை மருந்து கலக்காமல் தருவது. பல சிகிச்சை முறைகள் குறிப்பாக பிரார்த்தனை கூட பிளாசிபோ வகையில் சாரும்.

மருந்து ஒன்றைத் தராமல், நோய் தீர்க்கும் மருந்து தந்திருக்கிறேன், சரியாகிவிடும் என மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் நோயாளியும் மருந்து உட்கொள்வதால் நோய் குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

நமக்கு என்ன நடக்கப்போகிறது எனும் நம்பிக்கையே நோய் தீர்க்கும் மருந்து என்கிறார் கிர்ஸ்ச். இவர் பல ஆராய்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தபின்னர் சொன்ன முடிவு இது. ஒரு மனிதனின் நம்பிக்கை நமது உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தவல்லவை எனவும் மனிதனின் எண்ணம் நரம்பியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே என்கிறார்கள்.

இதைத்தானே ஆன்மிகமும் சொல்கிறது, அப்படியெனில் ஆன்மிகமும் அறிவியலும் வேறு என எப்படி சொல்லலாம் என்றால் அறிவியல் விளக்கம் சொல்லப்பார்க்கிறது, ஆன்மிகம் விளக்கம் தேவையில்லை என்கிறது அதனால்தான் இரண்டும் வெவ்வேறு. இந்த மனநிலைதான் பிளாசிபோ ஏற்படுத்தும் முன்னேற்றத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது. ஒருவரிடம் பிளாசிபோவை தந்து அதிக சக்தி வாய்ந்த மருந்தை தந்திருக்கிறேன் என சொல்லி அவரது நோய் குணமான பின்னர் அவரிடம் நான் தந்தது பிளாசிபோ என சொன்னால் அவர் எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்று நினைக்கக்கூடும் அல்லவா! ஆனால் இந்த மனநிலைதான் ஒட்டுமொத்த காரணம் என சொல்லிவிடமுடியாது என்கிறார்கள் பலர்.

நமது எண்ணம் நமது உடலில் ஓடும் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வேண்டும் என்கிறார்கள். சரிதான்! இதுமட்டுமல்ல காரணம், அன்பு, கருணை, உற்சாகம் போன்ற காரணிகள் அவசியம் என்கிறார்கள். இதைத்தானே ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்ல வந்தார்கள்.

தலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்

பிளாசிபோ (placebo) வினை என்பது மருந்து மற்றும் பிற சிகிச்சை முறைகள் இல்லாமல், உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அளவிடக்கூடியது, பார்க்கக்கூடியது ஆகும். உதாரணத்திற்கு ஜலதோசத்தை குறிப்பிடலாம். மருந்து எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி, ஏழு நாட்களில் ஜலதோசம் குணமாகிவிடும் என சொல்வார்கள். ஒரு மருத்துவரை அவர் கைராசிக்காரர் என பலர் தங்களுக்கென ஒரு மருத்துவரைக் குறிப்பிடுவதை நாம் அறியலாம். எனக்கு இந்த அனுபவம் உண்டு.

எனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.

1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.

விடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.

கவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே குணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.

ம் பாடம் படிப்பது? அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.

இப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.

'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.

பிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.

Thursday 12 February 2009

தலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்

இந்த ஆராய்ச்சி முடிவு வந்தவுடன் இதுகுறித்து என்னவெல்லாம் ஆராய்ச்சி வந்திருக்கிறது என அறிவியல் கட்டுரைகள் எல்லாம் தேடிப்பார்த்ததில் மூன்று கட்டுரைகள் மட்டுமே வெளிவந்து இருந்ததை அறிய முடிந்தது என்கிறார் ஸ்டீபென் பேரட். அந்த ஆராய்ச்சியானது பிரார்த்தனைகளினால் மக்களிடம் என்ன மாறுபாடு இருந்தது என கண்டறிய செய்யப்பட்ட ஆராய்ச்சி, அந்த மக்களுக்கு பிரார்த்தனை செய்வது பற்றி தெரியாமல் இருக்குமாறு வைக்கப்பட்ட ஆராய்ச்சி என்கிறார்.

இதில் ஒரு ஆராய்ச்சி பிரார்த்தனையினால் பலன் இருக்கிறது என சொன்னது ஆனால் செய்முறை முறையாக செயல்படுத்தவில்லை எனவும், மற்றொரு ஆராய்ச்சி பலன் இல்லை ஆனால் செய்முறை மிகவும் முறையாக செயல்படுத்தப்பட்டது எனவும் மற்ற ஆராய்ச்சி அத்தனை தெளிவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

பல ஆராய்ச்சி நூல் வெளியீட்டாளர்களையும், வாசகர்களையும் இது குறித்த ஆராய்ச்சி பற்றி ஏதேனும் மறுத்து இருக்கிறீர்களா, எத்தனை ஆராய்ச்சி கட்டுரை வெளியிட கோரி வந்தது என விசாரித்தபோது ஒருத்தரும் பதில் சொல்லவில்லை. அதற்கு பின்னர் தேடிப்பார்த்தபோது நான்கு ஆராய்ச்சி கட்டுரை வெளிவந்ததில் இரண்டு பலனிருப்பதாகவும், இரண்டு பலனில்லை எனவும் வந்ததாக குறிப்பிடுகிறார். இங்கேதான் இந்த அறிவியலும் அறியாமையில் தவிக்கிறது! நம்பிக்கையாளர்கள் என்ன சொல்வார்கள்? நம்பிக்கையற்றவர்கள் என்ன சொல்வார்க்ள்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

பைர்ட் ஆராய்ச்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆராய்ச்சியாளரின் முடிவு நியாயமற்றது என்றார். வேறோரு பயம், மனநிலை மாற்றம் ஆராய்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இதில் பன்னிரண்டு வாரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் நோயாளிகளுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு பிரார்த்தனை செய்யப்படவில்லை. இந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து பிரிவுமே முன்னேற்றம் கண்டது, இந்த இரண்டு பிரிவிலும் மாறுபாடு இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும் ஆல்கஹால் குடிப்பழக்கத்தில் பிரார்த்தனை எந்த மாற்றம் செய்யவில்லை என மற்றொரு ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டி உள்ளார்.

1999ல் வெளியிடப்பட்ட கான்ஸாஸ் நகரத்தில் நடந்த இருதய ஆராய்ச்சியானது மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டது என குறிப்பிட்ட அவர் அவர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் முன்னேற்றம் உள்ளது எனும் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என கடுமையாக விமர்சித்துள்ளார். கணக்கியலில் 11 சதவிகிதம் முக்கியத்துவமாக இருக்கலாம், ஆனால் மருத்துவ முறையில் இது ஒன்றுமே இல்லை என்பதுதான் இவரது வாதம்.

2001ல் மாயோ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பிரார்த்தனையினால் எந்த முன்னேற்றம் இல்லை எனும் இருதயப்பிரிவு ஆராய்ச்சியை குறிப்பிட்டுள்ளார். பேரட் சொன்ன வார்த்தை இதுதான்

''மேலும் இது போன்ற பல ஆராய்ச்சிகள் எதிர்மறையான முடிவினை தந்தாலும் நம்பிக்கையாளர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போவதில்லை, அதேபோன்று மேலும் இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் நேர்மறையான முடிவுகள் தந்தாலும் நம்பிக்கையற்றவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளபோவதில்லை''

தலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா?

பிரார்த்தனையினால் நோயினால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என கண்டறிய ரேண்டோல்ப் பைர்ட் எனும் இருதயப்பிரிவு மருத்துவர் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். 393 இருதய நோயாளிகளை அவர்களின் அனுமதியுடன் சான்பிரான்ஸிஸ்கோ மருத்துவமனையில் உள்ள இருதயப்பிரிவில் ஆகஸ்ட் 1982லிருந்து மே 1983 வரை அனுமதித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

ஆராய்ச்சியில் பல விதம் உண்டு. தரப்படும் மருந்து,

அ) கொடுப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் தெரியும்.

ஆ) இருவரில் ஒருவருக்கு மட்டுமே தெரியும்

இ) எவருக்குமே தெரியாது (இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத ஒருவருக்கு மட்டுமேத் தெரியும்)

மேலும் தோராயமாக நோயாளிகளைப் பிரிப்பது. அதாவது நோயின் சீற்றம் அறிந்து பிரிக்காமல் தோராயமாக பிரித்து ஆராய்ச்சி மேற்கொள்வது.

பைர்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தோராயாக நோயாளிகளைப் பிரித்து, பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவு (192 நோயாளிகள்), பிரார்த்தனைக்கு உட்படுத்தாத பிரிவு (201 நோயாளிகள்) என பிரிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கும் எவருக்கும். பைர்ட்டுக்கும் கூட யார் யார் எந்த பிரிவென தெரியாது. பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள நோயாளி ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட மூன்றிலிருந்து ஏழு நபர்கள் மருத்துவமனை வெளியில் தினமும் கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்வது என நியமிக்கப்பட்டார்கள். பைர்ட் தனது ஆராய்ச்சி முடிவினை ஐந்து ஆண்டுகள் பின்னர் 1988-ல் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சி முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அப்படி பைர்ட் என்னதான் முடிவினை வெளியிட்டார் என்றால் பிரார்த்தனைகளினால் நோய் தீர்வதில் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறினார். உடனே இது குறித்து விமர்சனம் எழுதினார் போஸ்னர் எனும் ஆராய்ச்சியாளர். கடவுள் இருதயப்பிரிவு பகுதியில் இருக்கிறாரா? எனும் தலைப்பிட்டார். பைர்ட் செய்த ஆராய்ச்சியில் பிழை இருக்கிறது என்றார். மேலும் பைர்ட் குறிப்பிட்டதையே ஆதாரமாக காட்டினார்.

பைர்ட் சொன்னது இது

'இரு பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கும் பலர் பிரார்த்தனை செய்து இருப்பார்கள், அதனை கட்டுபடுத்த இயலாது மேலும் அவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எனவே இந்த இரு பிரிவையும் சுத்தமான பிரிவுகளாக கணக்கில் கொள்ள முடியாது'

இதை எடுத்துக்காட்டினார் போஸ்னர். மேலும் பைர்ட் இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட எடுத்துக்கொண்ட காலகட்டம் ஆராய்ச்சிக்குப் பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள். பல மருத்துவ இதழ்கள் வெளியிட மறுத்து இருக்கக்கூடும், அதன் பின்னரே பைபிள் கூட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சொந்தமான இதழ் வெளியிட சம்மதித்துள்ளது என்பதை பைர்ட் மூலமாகவே நிரூபித்தார். இது போன்ற ஆராய்ச்சி வெளியீடு வருவதில் தவறில்லை, ஆனால் தவறான நோக்கம் கற்பிக்கப்படுகிறது என மிகவும் வன்மையாகவே கண்டித்தார். பைர்ட் முடிவுகளை விமர்சித்து பைர்ட் ஆராய்ச்சி அடிப்படையற்றது என்றும் கூறினார். பைர்ட் ஆராய்ச்சி முடிவுகளை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. பைர்ட் தான் வெளியிட்ட கட்டுரைக்கு குறிப்பிட்ட தகவல் ஆராய்ச்சிகள் எல்லாம் பிழை என்றும் போஸ்னர் நிரூபித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபென் பேரட் என்பவர் சற்று ஒருபடி மேலே போய் 'நம்பிக்கை அடிப்படையில் நோய் தீர்வு பற்றி சில எண்ணங்கள்' என ஒரு கட்டுரை எழுதினார். அதில் பிரார்த்தனைகள் பற்றியும் சற்று குறிப்பிட்டுள்ளார், அதில் பைர்ட் ஆராய்ச்சியும் அடக்கம்!

தலைவிதி தலைமதி - 3

ஈர்ப்பு விசையும் மனவிசையும்:

எல்லா கோள்களும் அதன் பாதையில் ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கக்கூடிய காரணம் ஈர்ப்பு விசையும் அதனுடன் கூடிய இயக்க விசையும். எப்பொழுது ஈர்ப்புவிசையை சமநிலைப்படுத்தும் இயக்க விசை இல்லாமல் போகிறதோ அப்பொழுது கோள்கள் தடம் மாறிப் போகும். இதனை பல விண்கற்கள் இடம் மாறுவதன் மூலம் அறியலாம். சிறு துகள்களும் இந்த 'விதி'க்கு உட்படுகிறது.

இன்னதுதான் நடக்கும் என ஒரு விசயத்தை இருக்கும் பொருள் கொண்டே ஒருவர் கணித்துச் சொல்ல முடியும், இல்லாத ஒன்றை வைத்து கணித்துச் சொல்ல முடியாது. இதனால்தான் இது நடக்கும் எனும் விசயங்களுக்கு இரண்டில் ஒன்றுதான் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று நடக்கும், மற்றொன்று நடக்காது. நடந்தால் அட நடந்துவிட்டதே என சொல்லலாம், நடக்கவில்லையெனில் நம்ம கையிலா இருக்கிறது என சொல்லலாம்.

அறிவியல் கொள்கைகள் என்பது ஒன்றும் விளக்கத்தின் எல்லைக்கோடு அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் சிந்தனை செய்ததின் பொருட்டு வந்த விசயங்கள் அவை. இப்படி இருந்து இருக்கலாம் என சொல்ல முடியுமே தவிர பல விசயங்களை அறிவியல் நிரூபிக்க முடியாது, அப்படி கடந்த கால விசயத்தை நிரூபிக்கும் பொருட்டு நிகழ்கால நிலையில் இருந்து பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கும் பார்வை இன்றைய நிலைக்கு சரியென வருமே தவிர என்றைக்குமே அது சரியென வராது.

நமது மூளையில் சில விசயங்கள் திணிக்கப்பட்டு விடுகின்றன, நம்மை நாம் அறியாமல் சில விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம், அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலைதான் அறிவியல் கொள்கைகளின் நிலை.

ஆன்மிகவாதிகள் இயற்கை என ஒதுக்கப்படும் விசயங்களை இறை என சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எல்லாமே இறை என்பதுதான் அவர்களது கோட்பாடு. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதுதான் அசைக்கமுடியாத கோட்பாடு, அப்படித்தான் ஆன்மிகம் அறிவியலை சர்வ சாதாரணமாக வெற்றி கொண்டுவிடுகிறது. அந்த வகையில் பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட ஆன்மிகத்துக்கு உட்பட்டவையே என்பதுதான் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டிய விசயம்.

துகள்களாகவும் தூசியாகவும் இருந்துதான் மனிதனாக வந்து இருக்கிறோம் என்கிறது அறிவியல்! இதே பெரிய அற்புதம்தான். நம்பிக்கை கொண்டு இருப்பவர்களுக்கு மகான்களாய் மனிதர்கள் அற்புதங்கள் செய்ததாக கருத வாய்ப்புண்டு, நம்பிக்கை அற்றவர்களுக்கு அப்படி என்ன அற்புதங்கள் செய்து விட்டதாக நினைக்கிறீர்கள் என கேட்க வழியுண்டு. சகல ஜீவராசிகளிலும் அன்பு கொண்டு இருங்கள் என ஒருவர் சொல்ல அப்பொழுது உங்களுக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. இப்படியும் நடக்கும் அப்படியும் நடக்கும் எனும் செயல்பாடுகளில் இப்படியே நடக்கிறது என வரும்பொழுது மனம் அதில் லயிக்கிறது. அப்படியே நடக்கும் என ஒரு முறை வந்தாலும் மனம் சஞ்சலம் அடைகிறது.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மனிதரும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பொருட்டே பல விசயங்களை உற்று நோக்க மறந்துவிடுகிறார்கள் அதில் நானும் அடக்கம். நம்பிக்கை என வரும்போது பல விசயங்கள் மறைந்து கொள்கின்றன, ஏற்றுக்கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றன. மேலும் மகான்கள் அற்புதம் செய்ததாக எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இல்லை, இது எல்லாம் தவறுதலாக கற்பிக்கப்பட்ட விசயம்.

ஒரு விசயத்தில் ஈடுபாடு கொள்ளும் மக்கள் அதனை தங்களால் தனிப்பட்ட முறையில் செய்யாமல் போகமுடியாத போது, ஒருவரை தலைமையாக ஏற்றுக்கொண்டு அவரைப் போற்றுதல் எனும் முறைதான் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். எனவே மகான்களால் பெரும் அளவில் பூமியில் மாற்றம் நிகழ்ந்ததாக எனக்கு ஒன்றும் இதுவரைக்கும் தெரியவில்லை.

நம்பிக்கையாளர்கள் என்னை மன்னிக்கவும்! தெரிந்து கொண்டதாய் எண்ணும்போதே அறியாமை முன்னின்று வந்துவிடுவதை அத்தனை எளிதாக தவிர்க்க இயலவில்லைதான்!

Wednesday 11 February 2009

தலைவிதி - 2

கவனக்குறைவு:

ஒருவிசயம் நடந்துவிட்டது. அது நமக்கு எதிராகப் போய்விட்டது என வைத்துக்கொள்வோம். நம்மை ஏளனமாகப் பேசுபவர்கள் உண்டு, நம்மைத் தட்டிக்கொடுக்கும் மனிதர்களும் உண்டு. இப்படி எதிராக ஏன் ஒரு விசயம் போகவேண்டும் எனப் பார்த்தால் அதற்கெல்லாம் காரணம் கற்பிப்பது ஒரு கண்மூடிய விளையாட்டாகத்தான் இருக்கும். இது போன்ற செயல்களை பார்த்து பார்த்து சலித்துப் போன மானுடம் விதி வலியது என்று கூறிவிட்டுப் போகும், பாவம் என பரிதாபமாய் எளக்காரப் பார்வை பார்த்துவிட்டுப் போகும்.

அடிப்படை காரணம் கவனக்குறைவு. இந்த நேரத்தில் ஏன் நடக்க வேண்டும் என கேட்டால் அது அப்படித்தான் நடக்கும். அப்படித்தான் நடக்கும் எனும் அந்த சமயத்தில் சமயோசிதமாக செயல்படுவதுதான் ஒரு சாதாரண மனிதரை சாதனை மனிதராக மாற்றும்.

மனம் புண்படும்படி பேசும் மானுடம் வாழும் உலகில் எண்ணங்கள் உருக்குலைந்து போகும். புத்தரின் எனது அனுமதியின்றி என்னை யாரும் நிந்திக்கமுடியாது எனும் கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்டால் வாழ்வில் பல சாதிக்கலாம்.

என்னதான் வியாக்கியானம் பேசினாலும் போனது போனதுதான், அதைப்பற்றி சிந்தித்து பயனில்லை எனும் பக்குவம் வருவது அத்தனை எளிதல்ல. நாம் அடுத்தவரைப் பார்க்கும் பரிதாபப் பார்வையில் அவர்களுக்கு இருக்கும் சிறிது தன்னம்பிக்கையையும் தகர்த்தெறிகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மகாகவி பாரதியாரின் ஒரு அழகிய கவிதை இது

சென்றதினி மீளாது மூடரே! நீவீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

இந்த புனித உலகில் நம்மை நாமே அழித்துக்கொள்வதுதான் பெரிய கொடுமையான செயல். கோப்மேயரின் எண்ணங்களை மேம்படுத்துவோம் எனும் புத்தகமும், விவேகாநந்தரின் என்ன நீ நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் எனும் அழகிய தத்துவமும் அறிவியல் உலகை ஆட்டி வைக்கும். மனரீதியாக பலவிசயங்களை யாராலும் புரிந்து விளங்கிக்கொள்ள முடியாத பட்சத்தில் அறிவியல் சற்று விலகி நின்று அசைபோடும், அப்படிப்பட்ட அந்த புரிந்துகொள்ள முடியாத விசயத்துக்கெல்லாம் வடிகால் தான் ஆன்மிகம். நமக்குத் தேவை நிம்மதி, எது எப்படி இருந்தால் என்ன?

நலிந்தோர்க்கு நாளும் கோளும் இல்லை என்பதை எழுதியவர் யார்? எனக்குத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனை எப்பொழுது மொத்த சமூகத்தை ஆட்டிப்படைக்கிறதோ, ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்பாடு எப்பொழுது மொத்த சமூகத்தையும் தன் வசப்படுத்துகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டியதுதான் அந்த சிந்தனை, செயல்பாடு எத்தனை வலிமையானது என. மொத்த சமூகம் என நான் குறிப்பிடும்பொழுதே நாம் குறித்துக்கொள்ள வேண்டியது, அந்த சமூகத்தில் இதே சிந்தனை செயல்பாட்டினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உளர் என.

சிரமம் என்பது இவருக்குத்தான் வரும், இவருக்குத்தான் வரக்கூடாது என கட்டம் பார்த்து வருவதில்லை, அதைத்தான் நன்றும் தீதும் பிறர்தர வாரா என நறுக்கெனச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு எண்ணமும் நடுநிலையில் நின்று விவாதிக்கப்படுவது இல்லை, சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றுக்கும் முரண்பாடானவைகள் என்பதை வைத்தே நாம் ஒரு தெளிவற்ற சமுதாயம் என நம்மை கருத வாய்ப்புண்டு.

ஒரு தெளிவான சமுதாயமாக இருந்து இருந்தால் சூரியனை வணங்கியதோடு காற்று, நெருப்பு, நிலம், நீர் என வணங்கி அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு 'விண்டவர் கண்டில்லை கண்டவர் விண்டில்லை' எனச் சொன்னால் அது சரிதான் என போக வேண்டியதுதான்.

நான் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எனச் சொன்னால் அது சரிதான் என சிரித்துக்கொள்வேனேத் தவிர அது குறித்து ஆராயப்போவது இல்லை. நமது மனதில் ஒருவித திட்டம் வகுத்து வைத்துக்கொள்கிறோம். இது மரபியல் வாயிலாகவோ, சுற்றுப்புற காரணிகளாகவோ நம்மிடம் ஒரு வட்டம் வரைந்து கொள்ளப்பட்டு விடுகிறது.

அந்த வட்டத்திற்கு உள்ளே வருபவர்கள் வேண்டியவர்கள், வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் வேண்டாதவர்கள். 'சே உன்னைப் போய் இப்படி நினைச்சேனே' என நீங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் இருந்து இருப்பீர்களானேயானால் நீங்கள் செய்த பாக்கியம், உங்கள் வட்டம் மிகப்பெரியது அதில் அனைத்து கட்டங்களும் அடங்கும்.

உள்ளுணர்வு :

இது ஒரு மெய்யில் கலங்கிய பொய்மையான உணர்வு. என்னைப் பொறுத்தவரை இது இல்லையெனில் அது. அவ்வளவே. நான் நினைச்சிட்டே இருந்தேன் நீங்க வந்துட்டீங்க, அப்படியெனில் நினைத்தபோதெல்லாம் அவர் வந்தாரா? அவர் வந்த சமயத்தில் எல்லாம் நீங்கள் நினைத்ததுண்டா? நமது மூளை ஒரு விநாடியில் எண்ணற்ற செயல்பாடுகளை பரிசீலிக்கும். மூளையை பற்றி பலர் ஆராய்ச்சி செய்து எழுதிய கருத்துக்களில் கூட வாசிக்கும் பலருக்கு உடன்பாடில்லை. ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் வேறு, இந்த கோணத்தில் சிந்தித்துப் பார், எனது நிலையில் நின்று பார் என்பதெல்லாம் இதன் அடிப்படையே.

யாராவது நம்மை கவனிக்கிறார்கள் என நினைக்கும்போதே நாம் நமது எண்ணத்திற்கு விரோதமாக செயல்படுகிறோம் என நினைக்க வேண்டி இருக்கும். உங்களுக்குத் தெரியாத ஒருவர் உங்களை கவனிக்கிறார் என உங்கள் உள்ளுணர்வு சொல்லுமா? அமெரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மனிதர் என்னை கவனிக்கிறார் என உள்ளுணர்வு சொல்லப் போகிறதா? இது எல்லாம் மூளையின் சுட்டித்தனம்.

அடடா நான் நினைச்ச மாதிரி நடந்துருச்சே என்பதெல்லாம் மூளையின் இல்லாத ஒன்றை இருப்பதாய் படம் காட்டும் வேலை. அறிவியல் அப்படித்தான் சொல்கிறது. ஆன்மிகம் அமைதியாய் இரு என்கிறது.

பின் குறிப்பு:இதை செய்ய வேண்டாம் என நினைத்துக்கொண்டே இருந்தேன், ஆனால் அதை செய்துவிட்டேன். இதுதான் விதியோ? என நினைப்போர்களே, உங்களிடம் கட்டுப்பாடு இல்லை என்பதை கடவுள் வந்தா சொல்லித் தெரிய வேண்டும்.

தலைவிதி - 1

தலைவிதி :

சுருக்கமாகச் சொல்லப்போனால் எப்பொழுது தனிமனிதன் தன்னால் அனைத்து செயல்களையும் தனது கட்டுப்பாட்டுக் கொண்டுவர முடியாமல் தவித்தானோ அப்பொழுது அவனது மனதில் உதித்த எண்ணம்தான் தலைவிதி. எந்த ஒரு செயலுக்கும் காரணம் கற்பிக்க வேண்டும் என எப்பொழுது அவனது மனதில் தோன்றியதோ அப்பொழுது இடப்பட்ட விதைதான் தலைவிதி. ஒன்றைச் சார்ந்தே ஒன்று நடக்கின்றன என்னும் தத்துவமே இதன் அடிப்படை.

இதனால் என்ன நன்மை தீமை? நன்மை என எடுத்துக்கொண்டால் நடப்பது நமது கையில் இல்லை, அதனால் மனம் உடைந்து போய்விட வேண்டாம் என இதற்கு அதிபதியான இறைவனை துணைக்கு வைத்துக்கொண்டு அடுத்த அடுத்த காரியங்களில் இறங்கிவிடுவது. தீமை என்னவெனில் நமக்கு விதித்தது இவ்வளவுதான் என முடங்கிப்போய்விடுவது.

தலைவிதியை நிர்ணயம் செய்வது யார்? நாம். நமது செயலை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும். நம்மை மீறி ஒன்று நடக்கிறது என்ற பிரமையை அகற்ற வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என நமக்குத் தெரியாது என்பது சாதாரணமாக நடக்கக்கூடியதே அதை நாம் பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது செயல்களை முறைப்படுத்திட சுற்றுப்புற காரணிகள் மற்றும் நமது உடலில் ஓடுகின்ற ரசாயனங்கள் இதையெல்லாம் தாண்டிய எண்ணங்கள் மிகவும் முக்கியம். எனவே தலைவிதி என்பது நமக்கு நாமே விதித்துக்கொண்டது.

மரபியல் தத்துவமும் மூளையின் செயல்பாடும்:

மரபணுக்கள் மட்டுமே ஒரு மனிதருடைய குணாதிசயங்களை நிர்ணயித்துவிடுவதில்லை. மூளையின் செயல்பாடு மிகவும் முக்கியம். எப்பொழுது ஒரு மனிதன் எண்ண ஆரம்பித்தானோ அப்பொழுதே அவனது செயல்களில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. மரபணுக்கள் ஆதியிலிருந்து அத்தனை மாறுபாட்டை ஒன்றும் அடையவில்லை, ஆனால் மூளையில் பல மாறுபாடுகள் அடைந்து இருப்பதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட மாறுபாடு மனிதனை இன்று இந்த அளவிற்கு சிந்திக்க வைத்து உள்ளது.

நாம் ஒருவரை பார்த்ததும் அட என்போம், மற்றொருவரை பார்க்கும் போது ம்ஹும் என்போம், இதற்கு காரணம் நமது மனதில் தோன்றும் எண்ணமே. சற்று நமது எண்ணங்களை பரிசீலித்தால் இருவருமே அட ஆவதற்கு சாத்தியம் உண்டு. மகிழ்ச்சி நமது மனதைப் பொருத்ததே என்பதுதான் எல்லா ஆன்மிக கோட்பாடுகளுக்கும் அடிப்படை.

அறிவியலும் ஆன்மிகமும்:

இரண்டும் ஒன்று என்பார் பலர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எப்பொழுது ஒன்று தனித்தனியாக பிரிகிறதோ அப்பொழுதே அது தனது தனித்தன்மையை காட்ட வேண்டும்.

இதைப்பற்றி விரிவாக தொடர்வோம். நீங்களும் தொடருங்கள். ஒவ்வொரு விசயங்களாக எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன், கற்றுக்கொள்ளும் முயற்சியே அன்றி கற்றுக்கொடுக்கும் முயற்சி அல்ல என்பதை மிகவும் தெளிவாக கூறிவிடுகிறேன்.

அறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.

நாங்கள் பார்க்கச் சென்றவர் அதிக வயதானவராகத் தெரிந்தார். இதைப் படிம்மா என ஒரு காகித்தைத் தந்தார். நானும் படித்தேன்.

மண்ணில் துளையிட்டு
குடிகொள்ளும் ஈசல்களை
பெற்றோர்களும் உற்றார்களும்
வந்திருப்பதாய் பொய்க்கதை சொல்லி
ஆசையோடு வெளிவரும்போது
சிறகை உடைத்து நெருப்பிலிட்டு
சுவைகொள்ளும் நாவு
அன்பினை கேடயமாய்
அநீதிக்கு வைத்துக்கொள்ளும்
தீராநோய் கொண்ட நாவு

மானிட உயிருக்குள்
உள்ளிருக்கும் ஈசனை
மதிமயக்கும் மந்திரங்கள்
சொல்லி வெளிக்கொணர்ந்து
வீடொன்று கட்டி
தொலைத்துத் திரியும் நாவு
பக்தியை பகட்டுக்காக
பரவசத்துடன் சூறையாடும்
பாவநோய்கொண்ட நாவு

மெளனம்தனை மருந்தாய்
உட்கொண்டு மரிக்கும் நாள்வரை
இருக்குமெனின் தீராத நோயெல்லாம்
தீர்ந்து போகும்
பண்ணிய பாவமெல்லாம்
ஓடிப்போகும்
உள்ளுக்குள்ளே ஓசையொன்றை
உதடசைவின்றி
சொல்லிச் சிறக்கும் நாவு
இவ்வார்த்தைகளை உச்சரிக்காத நாவு!

இந்த கருமத்தை என்கையிலே ஏன் கொடுக்கிறாருனு நினைச்சிக்கிட்டு, அதுக்காக பேசாமலேயே நாம வாழ்ந்திர முடியுமானு அவர்கிட்ட வெடுக்கெனு கேட்டு வைச்சேன். சுந்தரி சும்மா இரு சரசு அப்படினு சொன்னா. பவளக்கொடி என்கிட்ட இருந்து வாங்கிப் படிச்சிட்டு மிங்கி மிங்கி பா அப்படினு சொன்னா. நாவரசன் ஒருவித தோரணையா மிங்கி மிங்கி பா சொன்னான். பத்தாததுக்கு மிங்கியும் மிங்கி மிங்கி பா சொன்னான்.

என்கிட்ட, மிங்கிகிட்ட, என் கணவர்கிட்ட, நாவரசுகிட்ட இரத்தம் எடுத்தவர் ரொம்ப நாளைக்கப்பறம் எங்களை வரச் சொன்னார். வரச் சொன்னவர் இது அறுபத்திநான்காம் மொழி அப்படினு சொல்ல ஆரம்பிச்சார். எனக்கு தலையை சுத்த ஆரம்பிச்சது. சங்கரியும் கூட வந்திருந்தா. அவர் சொன்னது சங்கரிக்கு ரொம்ப நல்லாவே புரிஞ்சிருச்சி போல. எனக்கு அவதான் விளங்கறமாதிரி சொன்னா.

நம்ம உடம்புல ஜீன் இருக்குதுல்ல அந்த ஜீன் புரோட்டின் எல்லாம் உருவாக உதவியா இருக்குமாம். பரம்பரை பரம்பரையா விசயங்களை பெற்றோரிலிருந்து பிள்ளைக்குக் கடத்தறது இந்த ஜீன் தானாம். ஒருத்தர் எப்படி இருக்கார், எப்படி வளருராருனு இந்த ஜீன் தீர்மானிச்சி வைச்சிருமாம்.

சகல ஜீவராசிகளுக்கும் இந்த ஜீன் இருந்தாலும் மனுசனைத் தவிர எந்தவொரு சிந்தனையும் இல்லாம தன்னையும் தன் வட்டத்தையும் காப்பாத்திக்கிட்டு மற்ற ஜீவராசிகள் வாழப் பழகிருக்காம். அப்படிப்பட்ட அந்த ஜீன், புரோட்டின் உருவாக்கறப்போ அதை நிறுத்த மூணு கோடான்கள் வைச்சிருக்குமாம். அந்த கோடான்களை உபயோகப்படுத்தி புரோட்டின் உருவாகறதை நிறுத்திக்குமாம். நம்ம சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடிய செயல்பாடு நரம்பு மண்டலத்தைச் சார்ந்து இருந்தாலும் இந்த ஜீன்களுக்கும் சம்பந்தம் இருக்காம். அறுபத்தி நாலு கோடான்கள்தான் மொத்தமாம். ஆனா மூணு கோடான்கதான் நிறுத்துமாம். அந்த கோடான்கள் என் பையன் விசயத்துல என் பையன் என்ன நினைச்சாலும் பேசற வார்த்தை மட்டும் இதுதானு தீர்மானிச்சிருச்சாம். என் பையனால எல்லாமே சிந்திக்க முடியும், எல்லாம் செய்ய முடியும், ஆனா வார்த்தை மட்டும் மிங்கி மிங்கி பா தானாம்.

இதுல என்ன கொடுமைன்னா அந்த ஜீன் என்கிட்டயும் இருக்காம். ஆனா அது என்கிட்ட வெளிப்படாம அடங்கிப் போயிருச்சாம். இல்லைன்னா நான் மிங்கி மிங்கி பா தான் சொல்லிட்டு இருந்திருப்பேனாம்.

சங்கரி சொன்னதும் அவர்கிட்ட ஏன் இப்படி வார்த்தைனு மிழுங்கி மிழுங்கிக் கேட்டேன். அய்யோ திரும்பவும் மிழுங்கியா? அதுக்கு அவர் சொன்னதை அப்படியே சொல்றேன்.

பொதுவா நமக்கு ஆசையோ விருப்பமோ இருந்தா பயத்துல அதை விழுங்கிருவோம். சூழ்நிலை சரியில்லைன்னா சொல்லவே மாட்டோம். இப்படி மனுசனோட அமைதியா வாழனும்ங்கிற ஆசை எல்லாம் சூழ்நிலையினால உள்ளுக்குள்ளே அமிழ்ஞ்சி போயிருச்சி. மேலோட்டமா எல்லாரும் அமைதியா வாழனும்னு சொன்னாலும் அந்த ஆசை நிறைவேறாத ஒண்ணுனு ஆயிருச்சி. இப்படி விழுங்கி வாழும் சமூகமாகவே மாறிட்டோம். யாரு எப்படிப் போனா, எந்த நாட்டுல குண்டு விழுந்தா நமக்கு என்னனும், சுனாமி பூகம்பம் வந்தா பூமிக்கு பாரம் தாங்கலை அதான் விழுங்குதுனு நாமதான் சரியான விழுங்கும் சமூகமா மாறிட்டோம். எதுக்கெடுத்தாலும் அந்த கவிதையில வரமாதிரிதான் வாழ பழகிட்டோம். மிங்கி அப்படின்னா தமிழுல முடிவு னு அர்த்தம். முடிவு முடிவு பா.

அதாவது அமைதிக்கு முடிவு கட்டிட்டோம், இந்த உலகத்துல அமைதியாவே இருக்க முடியாது அதைச் சொல்றதுதான் மிங்கி மிங்கி பா. முடிவு முடிவு பா.

ஆனா இதை மட்டுமே சொல்ற உங்க மகன்கிட்ட இருக்கிற அமைதி நம்மகிட்ட இல்லாம போனது துரதிர்ஷ்டம்தான்.

நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்ல ஆரம்பித்து இருந்தேன்.

முற்றும்.

Tuesday 10 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 6

அப்படி ஒரு வார்த்தையை நான் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. சங்கரி அந்த பொண்ணு பாலையம்பட்டியைச் சேர்ந்தவள் என்று சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. பழனிச்சாமி அடுத்த முகூர்த்தத்திலேயே பவளக்கொடியின் திருமணம் வைக்கலாம் என்று சொன்னாலும் சங்கரியின் மகன் கல்யாணம் தடையாய் இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். முறைப்படியான நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து முடித்தோம்.

கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது. கல்யாணம் முடித்து எங்க ஊருக்கு கிளம்பு முன்னர் உனக்கொரு பிள்ளை பிறந்து அந்த பிள்ளையும் மிங்கி மிங்கி பா சொன்னா என்ன பண்ணுவ என ஒரு விளங்காத பாட்டி பவளக்கொடியிடம் விளக்கம் கேட்டு வைத்தாள். நானும் பயத்தோடு பவளக்கொடி என்ன சொல்வாளோ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். பவளக்கொடி மிங்கி மிங்கி பா வை மட்டுமே நான் பேசுவேன் என்றாள். அடி ஆத்தி என முகவாயில் கையை வைத்தாள் பாட்டி.

பவளக்கொடி சொன்னதைக் கேட்டதும் எனக்கு பெரிய தப்பு பண்ணிவிட்டோமோ என மனசு பதறியது. நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசி இருக்க வேண்டுமோ என நினைத்தேன். அப்படியெல்லாம் குழந்தை பிறக்காது. இது என்ன சாபமா என இருந்துவிட்டேன். மாதங்கள் ஓட கருவுற்றாள் பவளக்கொடி. எனக்குப் பயமாகத்தான் இருந்தது. நாவரசன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொன்னான். ஒருநாள் பவளக்கொடியிடம் நீ அவனுக்கு பேசக் கற்றுக்கொடுப்பாய் என ஆசைப்பட்டேன். நீ முயற்சிக்கவில்லையா என்றேன். எனக்கு மிங்கி மிங்கி பா தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொண்டாள்.

குழந்தை பிறந்தது. மிங்கி என பெயர் வைத்தாள். எனக்கு கோபமாகப் போய்விட்டது. என்ன நீ, இப்படி பெயர் வைத்திருக்கிறாய் என்றேன். இந்தப் பெயருக்கு என்ன அத்தை? என சொல்லிவிட்டாள். நான் பவளக்கொடியிடம் சண்டையே போடுவதில்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

குழந்தை வளர்ந்தது. ங்கா சொல்லாமலே வளர்ந்தது. ம்மாவும் சொல்லவில்லை. ஆனால் முகமெல்லாம் புன்னகை. நாட்கள் வளர என் பேரப்பையன் வார்த்தை பேச ஆரம்பித்தான். மி...ங்...கி மி...ங்...கி பா. எனக்கு பகீரென ஆகிவிட்டது. பவளக்கொடியோ சந்தோசமாக கொஞ்ச ஆரம்பித்தாள். அவளும் பதிலுக்கு மிங்கி மிங்கி பா என்றே சொன்னாள். நாவரசன் பற்றி சொல்லவா வேண்டும். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஹூம், தந்தையைப் போல பிள்ளையாம்.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கரி என் வீட்டுக்கு ஓடி வந்தாள். ''சரசு சரசு உன் மகனையும், பேரனையும் என்னோட அனுப்பறியா, நான் அவங்களை ஒருத்தர் கிட்ட கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்'' என சொன்னாள். ''உன் பேத்தி நல்லாதானே பேசுறா'' என்றேன். ''ஆமா சரசு அவ நல்லாதான் பேசுற, நீயும் கூட வா'' என அழைத்தாள். ஆச்சரியமா இருந்தாலும் சரி போய்தான் பார்ப்போமே என நாங்கள் சங்கரியுடன் கிளம்பினோம்.

(தொடரும்)

அறுபத்தி நான்காம் மொழி - 5

பழனிச்சாமிச்சியின் குடும்பமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அத்தனை பேரையும் வாங்க என அழைத்து உட்கார வைத்தேன். எனக்கு என்ன ஆச்சரியமாகவும் அதே வேளையில் பயமாகவும் இருந்தது எனில் பழனிச்சாமியின் ஒரே தங்கை சங்கரியும், அவளது கணவருடன் வந்து இருந்தாள். பேசுவாளோ மாட்டோளோ என நினைத்துக்கொண்டே ''எப்படி இருக்க சங்கரி'' என்றேன். ''நல்லா இருக்கேன் சரசு'' என புன்னகையுடன் சொன்னாள்.

பவளக்கொடியும், மிங்கி மிங்கி பாவும், அடச் சே, நாவரசனும் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். நாவரசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் பழனிச்சாமி. எனக்கு எதுவும் புரியவில்லை.அதற்குள் சின்னவள் பலகாரங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டிருந்தாள். பல கதைகள் பேசினோம், ஆனால் பழைய கதை ஒன்றை மட்டும் பேசாமல் விட்டோம். எனது கணவரும் வந்தார். சங்கரியைப் பார்த்தவர் எனது கண்களைப் பார்த்தார். வயசானால் என்ன, எனக்கா கண்களால் பேசத் தெரியாது, எல்லாம் சுகமே என்றேன். அவரது முகத்தில் புன்னகை படர்ந்தது.

பேசிக்கொண்டே இருந்தால் போதுமா, சமைக்க வேண்டும் என எழுந்தேன். அதெல்லாம் வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் நான் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சமையல் அறைக்குள் செல்ல நினைக்கையில் ஒரு நிமிசம் சரசு என சங்கரி சொன்னாள்.

என்னவென திரும்பிப் பார்க்க சங்கரி திருமணப் பத்திரிக்கை ஒன்றை எடுத்தாள். எனக்கு திக்கென ஆகிவிட்டது. இத்தனை நேரம் பேசியபோது திருமணம் பற்றி ஒன்றுமே மூச்சு விடவில்லை. என்ன இது பத்திரிக்கை எனப் பார்த்தேன். அப்படியே பவளக்கொடியையும் பார்த்தேன், அவளது முகம் வெட்கப்பட்டு கொண்டிருந்தது. நம்பவைத்து இப்படி செய்துவிட்டார்களே என வெகு வேகமாக மனம் பிற்காலத்துக்குச் சென்று நின்றது. ''என்னோட பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வைச்சிருக்கேன், நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும்'' என பத்திரிக்கைத் தந்தாள் சங்கரி. அவளோட கணவர் சேலை, வேஷ்டி குங்குமம் எல்லாம் எடுத்து சங்கரியிடம் கொடுத்தார். ''யார் பொண்ணு'' என்று மிழுங்கி மிழுங்கி கேட்டேன். என்ன சொன்னேன், மிழுங்கி??? என்ன சொன்னேன், மிழுங்கி???

(தொடரும்)

Monday 9 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 4

அந்த வேளைப்பார்த்து பழனியம்மாள் பழரசம் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பேசிய விசயத்தை பழனியம்மாளிடம் பழனிச்சாமி சொன்னதும் ''ரொம்பச் சந்தோசமான விசயம்'' என மனம் மகிழ்ச்சியுடன் சொன்னார். வேகமாக பழரசம் குடித்துவிட்டு அங்கிருந்து ஊருக்குக் கிளம்பினோம். வந்தது வந்தீங்க தங்கிட்டுப் போகலாமே என சொன்னார்கள் ஊரில் இருந்தவர்கள். வேலை இருக்கிறது என நொண்டிச் சாக்கு சொல்லிவிட்டு கிளம்பியே விட்டோம்.

வழியில் என் கணவர் ஒரு உலகமகா கேள்வியைக் கேட்டு வைத்தார். ''நம்மை பழிவாங்குவதற்கு சரியென அவர் சொல்லி இருப்பாரோ?'' எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. மனம் தேற்றி ''பேசியாச்சு, இனி நடக்கறபடி நடக்கட்டும், நாம என்ன நிச்சயதார்த்தமா பண்ணிட்டு வந்திருக்கோம்'' என ஆறுதல் சொன்னேன்.

வீட்டுக்குப் போனபோது இரவு ஆகி இருந்தது. நாவரசன் மட்டும் தூங்காமல் இருந்தான். நாங்கள் சென்றதும் கடைசிப் பெண் எழுந்துவிட்டாள். ''அம்மா, அண்ணா இன்னும் சாப்பிடலை'' என சொல்லிவிட்டு தூங்கிப் போனாள். சாப்பிடலை என்பதை கூட இவன் சொல்லமாட்டான் என நினைத்துக்கொண்டே தூங்கி இருப்பாள் போல.

சாதம் எடுத்து வைத்தேன். சாப்பிட்டான், நாங்களும் அவனுடன் சாப்பிட்டோம். அவனது முகத்தில் ஆயிரம் கேள்விகள். வாயைத் திறந்துதான் கேளேடா என கத்த வேண்டும் போலிருந்தது. என் மனதை புரிந்து கொண்டவன் போல மிங்கி மிங்கி பா என்றான். சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்றேன். அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. எனக்கும் அழுகையாய் வந்தது.

பவளக்கொடியிடம் விசயத்தைச் சொன்னேன். ''என்னோட வேலையை சுலபமாக்கிட்டீங்க அத்தை'' என்றாள். அவள் அத்தை என என்னை அழைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. இப்படியே நிமிடங்கள், நாட்கள், மாதங்கள் வருடங்கள் என கடந்து சென்றது. ஆனால் நாவரசன் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தான்.

நேற்று பவளக்கொடி வீட்டிற்கு வந்திருந்தாள். படிப்பை முடித்துவிட்டாள் எனவும், ஊருக்குச் செல்லாமல் நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்திலேயே கணக்காளாராக வேலைக்குச் சேர இருப்பதாகவும் சொன்னதும் எனக்கு நிம்மதியாக இருந்தது. ''எப்பொழுது திருமணம் வைத்துக்கொள்ளலாம்'' என நான் தான் அந்தச் சின்னப்பெண்ணிடம் கேட்டு வைத்தேன். ''அடுத்த முகூர்த்தத்திலேயே வைச்சிக்கிரலாம் அத்தை, ஏன்னா நான் விடுதியிலே தங்க வேண்டியிருக்காதுல்ல'' என்றாள். எனக்கு சுர்ரென்றது. உடனே பெட்டி படுக்கையோடு நேற்றே வரச் சொல்லிவிட்டேன். எங்களுடன் தான் அவள் தங்கி இருக்கிறாள்.

இன்று பழனிச்சாமியும் பழனியம்மாளும் எங்கள் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததாக பவளக்கொடி சொன்னாள். நானும் மிகுந்த ஆர்வத்துடனே காத்திருந்தேன்.

(தொடரும்)

Saturday 7 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3

பவளக்கொடி பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். நாவரசன் வந்ததும் கேட்டுவிட வேண்டும் என நினைத்திருந்தேன். நாவரசன் வீட்டுக்குள் வந்ததும் பவளக்கொடி வந்துவிட்டுச் சென்றாள் என்றேன். அவனது முகம் மிகவும் சந்தோசமானது. என்ன சொன்னாள்? ஏது சொன்னாள் என்று கேட்கமாட்டானா என நானும் அவனையேப் பார்த்திருக்க ஒன்றுமே பேசாது முகம் அலும்பச் சென்றுவிட்டான். என்ன இது? ஒன்றுமே சொல்லாமல் செல்கிறான் என பின் தொடர்ந்தேன். அவ என்ன சொன்னாளுனு கேட்கமாட்டியா என்றேன். திரும்பிப் பார்த்தவன் புன்னகைத்தான். அவ்வளவுதான், எனக்கு ஐயோ என்றாகிவிட்டது. போடா என சொல்லிவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.

என் மற்ற பிள்ளைகள் கொஞ்சம் கூட இதில் தலையிடுவதில்லை, என் கணவரும் கூட. நான் தான் கவலை துரத்தியதில்லை என சொல்லிவிட்டு இப்படி கவலைப்படுகிறேனோ எனத் தோணியது. அன்று இரவே பவளக்கொடி பற்றி கணவரிடம் பேசினேன். நான் பயந்ததைவிட பழனிச்சாமியா என அவரும் பதறினார். நான் ஊருக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் உடன் வருவதாக அவர் சொன்னார். அப்பாடா என இருந்தது எனக்கு. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம். நாவரசன் மிகுந்த சந்தோசத்தில் இருந்தான்.

நானும் என் கணவரும் எனது பிறந்த ஊரான சிங்கம்புணரியைச் சென்றடைந்தோம். என்னை ஊரில் அடையாளம் கண்டுகொண்டவர்கள் இப்பத்தான் வழி தெரிஞ்சதோ எனக் கேட்டார்கள். வழி தெரியனும்னு வந்திருக்கேன் என்று சொல்லி எங்கள் பூர்விக வீட்டிற்குப் போனோம். கொஞ்ச நேரத்தில் பழனிச்சாமியைப் பார்க்கச் சென்றோம். எனக்கு படபடவென நெஞ்சு அடித்துக்கொண்டது.

பழனிச்சாமி வீட்டில்தான் இருந்தார். அவரது மனைவி பழனியம்மாள் என்னைப் பார்த்து உள்ளே வா சரசு என அழைத்துச் சென்றார். பழனிச்சாமி என்மேல் கோபமாகவே இருப்பார் என்று எதிர்பார்த்து வந்தது பொய்த்துப் போனது. ''வாம்மா தங்கச்சி, ஊரை விட்டு ஒரேயடியா ஒதுங்கிப் போய்ட்ட'' என்றார். எனக்குப் பழசெல்லாம் மறந்து போனது அப்போது.

என் குழந்தைகள் பற்றியெல்லாம் விசாரித்தார். மூத்தவன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே தான் சொல்றானா? என்றார். பின்னர் பவளக்கொடி பற்றியும் சொன்னார். அவரது தங்கை மணமுடித்த இடத்தில் சிறப்பாக இருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார். எனக்கு ரொம்பவே தைரியம் வந்தது. ஆனால் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசும் என் மகனை மருமகனாக எப்படி இவர் ஏற்றுக்கொள்வார். சின்னவனை வேண்டுமெனில் கல்யாணம் பண்ணிக்கிரட்டும் என சொன்னால் மறுபடியும் இவரை பகைத்துக்கொள்ள முடியாது. என் கணவர் வாயேத் திறக்கவில்லை.

நான் வந்தது காரணம் என்னன்னா அண்ணே என நான் முழுவதையும் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து கொட்டி விட்டது. ''ஓ தாராளமா பண்ணிக்குவோம்'' என்றாரேப் பார்க்கலாம். எனக்கு உடல் புல்லரித்தது. அதற்குள் அதுவரை ஒன்றுமே பேசாமல் இருந்த என் கணவர் ''நிசமாத்தான் சொல்றீங்களா'' என்றார். ''உங்களை மாதிரியா, என்னை நினைக்கிறீங்க'' என்றார் பழனிச்சாமி. எதுவும் விபரீதமாகி விடக்கூடாதே என மிங்கி மிங்கி பா தனை மனதுக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன். (தொடரும்)

Friday 6 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2

2. ஜெயராணியையும் உடன் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவளை அழைத்தபோது வேலை இருக்கிறது என மறுத்துவிட்டாள். நான் மட்டும் தனியாக நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்துக்குச் சென்றேன். ஜெயராணி சொன்னதுபோலவே ஒரு பெண் நாவரசனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது. மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லும் இவனிடம் அப்படி என்ன இவள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்தவாரே நெருங்கிச் சென்றேன். அவள் பேசி முடித்துவிட்டாள் போலும், என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கினாள்.

அவளை நிறுத்தினேன். நீ யார் எனக் கேட்டேன். நல்லவேளை அவள் நன்றாகவே பேசினாள். எங்கே இவளும் மிங்கி மிங்கி பா என்று சொல்லி விடப்போகிறாளோ என ஆத்திரத்துடன் பயமும் இருக்கத்தான் இருந்தது. அதற்குள் நாவரசன் அங்கேயிருந்து சென்றிருந்தான். என்னை கவனிக்கவில்லை போலும். பெயர் பவளக்கொடி எனவும் ஊர் பேர் சொன்னதும் எனக்கு ஆர்வம் வரத்தொடங்கிவிட்டது. யார் மகள் எனக் கேட்டபோது பழனிச்சாமி மகள் என சொன்னதும் எனக்குப் புரிந்தது. ஜபராஜ் கல்லூரியில் படிப்பதாகவும் மாலை நேரத்தில் இங்கு வந்து வேலை பார்ப்பதாகவும் சொன்னாள்.

அவன் எனது மகன் தான் என்று சொன்னேன். ஓ அப்படியா? என ஆர்வமாகக் கேட்டாள். பிறந்த ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் எங்களை அவளுக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்ன பேசினாய் எனக் கேட்டேன். மிங்கி மிங்கி பா என்றாள். அவளை ஓங்கி அறைந்து விடலாம் போல் இருந்தது எனக்கு. தொலைவில் இருந்து பார்த்தபோது நீ சிரித்துப் பேசினாயே என்றேன் சற்றும் வெட்கமில்லாமல். நான் பேசினேன், அவர் மிங்கி மிங்கி பா என பல தோரணைகளில் சொன்னார் என்றாள். இனிமேல் எனது உணர்ச்சிகளை இப்படி தேவையில்லாமல் அலைபாய விடக்கூடாது என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

காபி போட்டுக் கொடுத்தேன். இரசித்துக் குடித்தவள் ஏன் நாவரசன் மிங்கி மிங்கி பா சொல்கிறார் தெரியுமா என்றாள். நானும் அவளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டு தெரியாது, உனக்குத் தெரியுமா என்றேன் ஆவலுடன். நானும் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து கேட்கிறேன், அவர் சொல்ல மறுக்கிறார். ஆனால் வேலை இடத்தில் எல்லோரும் அவரை மிகவும் மதிக்கிறார்கள். புன்முகத்துடன் மிங்கி மிங்கி பா என சொல்லி செல்கிறார்கள். சற்றுக்கூட கோபம் கொள்வதில்லை அவர் மேல். இவரும் புன்னகையுடன் நன்றாக வேலை செய்கிறார் என சொன்னதும் எனக்கு இது தெரிந்ததுதானே என்றுதான் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் ம் அப்புறம் என்றேன்.

என்னிடமே தைரியமாக எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். என்னதான் என் ஊரு மண்ணாக இருந்தாலும் என்னிடமே இப்படிச் சொல்லலாமா என நினைத்தாலும் மனதுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது. யார் இவனுக்கு வாழ்க்கைப்படுவா என இருந்த நான் எங்கள் ஊர்ப் பெண்ணே வந்து சொல்வது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பழனிச்சாமிக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்கும்போது நான் மிங்கி மிங்கி பா சொல்லிவிடுவேன் போல.

(தொடரும்)

லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப் பகுதி.

மனுசாளைப் பத்தி கதையை மிகவும் பக்குவமா எழுதி முடிச்சிட்டேன். மூணு பக்கம்தான் வந்துச்சு. பக்கம் பெரிசில்ல சொல்ற விசயம்தான் பெரிசுனு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும்தான. என் வீட்டுக்காரிகிட்ட காட்டுனேன். ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்டா. இப்படித்தான் மனுசாள் தெய்வீக உணர்வோட அன்போட வாழனும்ண்ணானு சொன்னா. அவகிட்ட என்னோட ஐஞ்சாவது கதையும் ஜெயிச்சிருச்சிங்கிற மன நிறைவு என்கிட்ட இருந்துச்சு, அதைவிட அவ ஆசைப்பட்டதை செஞ்சிட்டோம்ங்கிற ஒரு மனநிம்மதி வந்துச்சு.

மனுசாள் பத்தின கதையை மட்டும் உங்களுக்கு காட்டுறேன். மத்த கதையெல்லாம் நீங்க எங்க வீட்டுக்கு வந்தா பார்க்கலாம். நேத்துதான் எல்லா கதையையும் டைப் அடிக்கச் சொல்லி லேமினேசன் பண்ணி பிரேம் போட்டு வரிசையா சுவத்தில தொங்கவிட்டுருக்கேன். டைப் அடிச்சதுக்கு அப்புறம் எல்லா கதையுமே மூணு பக்கத்து மேல தாண்டலை. வீட்டுக்கு வாங்க வாங்கனு உங்களை சொல்லிட்டு அட்ரஸு தராம இருந்தா எப்படி? ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு கிட்ட வந்து பிச்சிப்பூ அக்ரஹாரம் தேவநாதன் வீடு எதுனு கேளுங்க, எல்லோரும் சொல்வாங்க. மறக்காம ஒருநாளாச்சும் வரனும்.

இப்போ கதையை படிங்க.

அன்பு நிறைந்த மனிதர்கள்மீனாக வந்த ரங்கநாதா, தானாக எழுத நினைக்கையில் தேனாக விசயம்தனை நீ சொல்லிடுவாய், என் மனையாளின் அகலாத அன்பை நிறைவேற்றவே.

மனிதர்கள் ஆசையும், பாசமும், அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். சகல உயிர்களிடத்திலும் கருணையுடன் இருப்பவர்கள். வேற்றுமையுணர்வு அன்பினை விரட்டியடித்துவிடும் என்பதை அறிந்து கொண்டவர்கள். அன்பினை அமிழ்த்தி வைக்கும் வேற்றுமை எண்ணத்தை மனதில் எழவிடாமல் பாதுகாப்பாக வாழ்ந்து வருபவர்கள்.

மனிதர்கள் மிகவும் நேர்மையானவர்கள். நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள். கடமையை ஒருபோதும் மறவாதவர்கள். உண்மையை நேசிப்பவர்கள். உள்ளத்தில் எப்பொழுதும் உயர்வாகவே எண்ணுபவர்கள். பிறருக்கு நல்லதை செய்வதை முதன்மையாக கருதுபவர்கள். மனிதர்கள் உருவானதிலிருந்து பல்வேறு உருவ வேறுபாடு கொண்டவர்கள், இருப்பினும் அன்பை மாற்றம் செய்து கொண்டவர்கள் அல்லர்.

லெமூரியா எனும் நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அந்த நிலப்பரப்பு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லையெனினும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிற இடங்களுக்குச் சென்று அன்பை வழியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக இனியும் மனிதர்கள் அந்த மனிதர்களை நினைவு கூர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

லெமூரியாவில் வாழ்ந்த மனிதர்கள் உயர்நிலை கொண்டவர்களாக விளங்கினார்கள். தெய்வீக உணர்வு நிறைந்தவர்களாக காணப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென தனி தெய்வங்களையோ, தனி வழிபாட்டு முறைகளையோ பின்பற்றவில்லை. பிறரிடம் அன்பு செலுத்துவதையே முக்கியமாக கருதினர். அவர்களுக்கு மத கோட்பாடு பற்றியெல்லாம் தெரிந்திருக்கவில்லை. ஒற்றுமையாய் ஒன்றாக தெய்வீக உணர்வுடன் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவர்களது ஆயுட்காலம் எண்ணூறு ஆண்டுகள். இப்படி தன்னிகரற்று வாழ்ந்த அவர்கள் இன்றைய கணக்குப்படி சுமார் இருநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருப்பார்கள் என இன்றைய நிலையில் கணக்கு சொல்கிறார்கள். ஆனால் அதைவிட அவர்களின் அன்பு வாழ்க்கையும் பிறரிடம் வீண்விவாதங்கள், வழக்காடுதலில் ஈடுபடாமல் அமைதியை விரும்பி வாழ்ந்தவிதம் போற்றத்தக்கது.

தவத்திலும், தியானத்திலும் தானத்திலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள். லெமூரியர்கள் முக்காலம் உணர்ந்தவர்களாக வாழ்ந்து வந்தனர். லெமூர் எனும் குரங்கினமானது சிம்பன்ஸி, மனிதருக்கு முந்தைய உயிரினம் ஆகும். அதனை சிறப்பு செய்யும் பொருட்டே லெமூரியா என ஆங்கிலேயர் ஒருவர் இந்த பகுதிக்கு பெயரிட்டதாக வரலாறு குறிக்கிறது. அது எப்படியிருப்பினும் இத்தகைய மனிதர்கள் நமது முன்னோடிகளாக இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது.

சுமார் நாற்பதாயிரம் காலகட்டத்துக்கு முன்னர் அட்லாண்டிஸ் எனப்படும் பகுதியில் வேறொரு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த அட்லாண்டிஸ் பற்றி தத்துவஞானி பிளாட்டோ குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நிலப்பரப்பு இருந்ததா என சரிவரத் தெரியவில்லை. ஒரு பகுதி அமெரிக்கர்கள் பலர் இவர்களின் வழித்தோன்றல் என கூறி இனியும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என மதிநுட்பம் உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களுக்கு லெமூரியர்கள் பற்றி தெரியவந்தது. லெமூரியர்களின் தெய்வீக உணர்வு இவர்களுக்கு அதிசயமாக இருந்தது. ஆனால் இவர்கள் லெமூரியர்கள் போலவே அமைதியை விரும்பியதால் எந்தவித வேற்றுமை உணர்வு இல்லாமல் பலவித கண்டுபிடிப்புகளில் இறங்கினார்கள். இரண்டு இடத்து மனிதர்களும் ஒருவரை நேசித்தனர்.

ஆனால் இயற்கை விளையாடத் தொடங்கியது. பூமியின் நிலப்பரப்பு கடலுக்கடியில் ஒன்றுக்கொன்று உரசத் தொடங்கியது. இதனை முன்னமே அறிந்திருந்த லெமூரியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பலவழிகளைச் செய்தனர். ஆனால் அனைத்தையும் மீறி வெள்ளம் வந்தது. வந்த வெள்ளமானது ஒட்டு மொத்த லெமூரியாவையும் உள்வாங்கியது. தப்பித்தவர்கள் வெகு சிலரே. தெய்வீக உணர்வுடைய மனிதர்களின் காலம் முடிவுக்கு வந்தது பேரிழப்பாகும்.

அவர்கள் விட்டுச் சென்ற அந்த தெய்வீக உணர்வு இன்று பிரிவுகளினால் பேதங்களினால் அலைக்கழிக்கப்படுகிறது.சுமார் பத்தாயிரம் வருடங்கள் முன்னர் வரை வாழ்ந்த அட்லாண்டிஸ் மக்கள் லெமூரியர்களின் அழிவை அறிந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல வருடங்கள் தங்களுடைய அறிவாற்றலால் பல விசயங்களை அறிய முன்வந்தனர். இதன்விளைவாக இவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக்கொண்டனர். இதே பகுதியில் வெள்ளம் வந்தது. அந்த அமைதியான அட்லாண்டிஸ் மனிதர்களும் மறைந்தார்கள். இப்படி விஞ்ஞானத்தில் வேருன்றி வாழ்ந்த மனிதர்கள் அமைதியில் திளைத்த அந்த மாபெரும் மனிதர்களின் இழப்பு நமக்கு பேரிழப்பாகும்.

அதற்கு பின்னால் சரித்திரம் குறிக்கத் தொடங்கியது. மனிதர்கள் கருணையும் அன்பும் உடையவர்கள் என பலர் வலியுறுத்தி வந்தனர், இனியும் வருகின்றனர். அன்பு நிறைந்த மனிதர்கள்தான் இந்த மனுசாள் எல்லாம்.

முற்றும்

கதையைப் படிச்சீங்களா? அன்போட நீங்க எல்லாரும் இருக்கனும். நாங்க ஸ்ரீரங்கநாதரை சேவிக்கப் போறோம். கொஞ்ச நேரத்து முன்னாடி கோவில் பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சோம். 'பழமை பழமையென்று பாவனை பேசலன்றி பழமை இருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்' னு பாட்டு கேட்டுச்சு.

கைகோர்த்துக்கிட்டே நடந்தோம். பட்டாச்சாரியார் பதறிக்கிட்டே எல்லாரும் ஓடுங்கோ ஓடுங்கோனு ஓடி வந்தார். நாங்க பதட்டமானோம். நாளன்னைக்கி ஸ்ரீரங்கநாதர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்னு சொல்லி இருந்தவங்க இன்னைக்கே திமுதிமுனு வாராங்கோனு கத்திட்டே பிரகாரம் சுத்தினார். கொஞ்ச நேரத்தில ரொம்ப பேரு ஓடி வந்தாங்க. பதட்டத்தில ஒதுங்கினோம். ஓடினவங்க எங்க மேல மோதினாங்க. நாங்க ரங்கநாதானு கத்தி நிலைகுலைஞ்சி விழுந்துட்டோம். அங்கிருந்த பட்டச்சாரியார்களும், கூட்டமா ஓடினவங்க சிலரும் மயக்கமான எங்களை வீட்டுல வந்து சேர்த்துட்டாங்க போல இருக்கு.

கண்விழிச்சிப் பார்க்கறப்போ எல்லாரும் கூட்டமா நின்னுருந்தாங்க. என் புள்ளைக பேரப்புள்ளைக எல்லாம் அழுதுட்டு இருந்தாங்க. தொண்டு நிறுவனத்துக்காரங்க, சூசையப்பர், இன்னும் ரொம்ப பேரு நின்னுட்டு இருந்தாங்க. மெல்ல என் வீட்டுக்காரியப் பார்த்தேன். கண்ணை மூடி திறந்தா. பெரிய புள்ளைய கூப்பிட்டு நா செஞ்சிட்டு வந்த தொண்டு தொய்வில்லாம தொடர்ந்து செய்யனும்னு மெல்ல சொன்னேன். தலையாட்டுனான். பேரப்புள்ளைக பார்த்துட்டே நின்னாங்க. சின்னவா முதற்கொண்டு எல்லாம் கதறினா. யாரும் அழவேணாம்னு சொன்னேன். ஒவ்வொரு புள்ளையா கூப்பிட்டு தொண்டு செய்றதை தொடரனும்னு சொன்னேன். கதை எழுதினதை சொல்லி சுவரை காட்டினேன். என் வீட்டுக்காரி என்னைப் பார்த்து புன்னகைச்சா. இரண்டு பேரும் கையை பிடிச்சிக்கிட்டோம். ரங்கநாதானு ரெண்டு பேரும் முணுமுணுத்தோம். எங்க உசிரு மெல்ல பிரிய ஆரம்பிக்குது இப்போ. எங்களோட இறுதிச்சடங்குல கலந்துக்கிறதுக்கு நீங்க எல்லாம் வருவீங்களா?

முற்றும்.

Thursday 5 February 2009

லெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4

ஸ்ரீரங்கநாதரை சேவிச்சிட்டு வந்த வழியிலே ஒரு மனவருத்தம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு நடந்துச்சு. இதுமாதிரி மாசத்துக்கு ஒரு தடவையாவது மனவருத்தம் தர சின்னதா ஒரு நிகழ்வு நடக்கும், மனசுக்கு கஷ்டமா இருக்கும். அது என்னன்னா, அந்த சாலையோரத்தில குடிசை போட்டு வாழறவங்க இருக்காங்க. தொழிலுக்குப் போய்ட்டு வந்து நிம்மதியா தூங்குனோம்னு இருக்காம சண்டை சச்சரவுமா இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் திட்டிட்டு இருப்பாங்க. வழியில போறப்போ காதுல விழும். அவங்ககிட்ட இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, அன்பா இருக்கனும்னு சொல்ல மனசு கிடந்து அடிச்சிக்கும். அதை என் வீட்டுக்காரிகிட்ட சொல்வேன். அதுக்கு என் வீட்டுக்காரி அவா அன்பாத்தான் திட்டிக்கிறாண்ணா, திட்டிட்டு மறுபடியும் வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிருவாண்ணா, அதைப் பார்த்துட்டு இப்படி நீங்க மனசஞ்சலம் அடையாதேள்ணானு ஒவ்வொரு தடவையும் நா இந்த மாதிரி நிகழ்வைப் பார்க்கறச்சே சொல்றதும் அதுக்கு அவ அன்பா பதில் சொல்றதும் எனக்கு பழகிப்போச்சு.

ஆனா இன்னைக்கு வெளியிலே தன்னோட மனைவியை அவரோட வீட்டுக்காரர் அடிச்சிட்டு இருந்தார். அங்க இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் அடிக்கிறதை நிறுத்துனு சொன்னப்ப, என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன் அதை கேட்க நீ யாருன்னு தகாத வார்த்தையால பேசினான். அதுக்கு பதிலா இவரு அவரை அடிக்கப் போனார். இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்க. அதுல பொண்டாட்டிய அடிச்சவரோட கையை இவர் ஒடைச்சிட்டார். அவர் ஓ னு அலற ஆரம்பிச்சிட்டார். இனிமே இந்த பகுதியில யாராவது இப்படித் தெருவுல பொண்டாட்டிய அடிச்சா இப்படித்தான் கையை உடைப்பேனு சொன்னார். அங்கு கூடியிருந்தவங்கள ஒருத்தன் கல்லை எடுத்து இவரோட மண்டைய உடைச்சிட்டான். நா பார்த்து இப்படி நடக்கறது இதுதான் முத தடவை. அந்த கல்லு எங்க காலு பக்கத்தில வந்து விழுந்துச்சு.

பெரிய களேபரம் ஆகிப்போச்சு. என் வீட்டுக்காரி பயந்துட்டா. என்னைக்கூட ஒருத்தன் வீட்டுக்கு வேமாப் போ தாத்தா, இந்த படுபாவி பசங்க என்னனாலும் செஞ்சிருவாங்கனு எங்களுக்கு பாதுகாப்பா நின்னான். ஏன் இப்படி பண்ணிக்கிறாங்கனு எனக்கு ரொம்ப கவலையா இருந்தது. ஊரு உலகத்துல இப்படித்தான் அதிகம் நடக்குதுனு எனக்குத் தெரிஞ்ச விசயத்தை அவனும் சொன்னான். எனக்கு அங்க இருந்து போகப் பிடிக்கலை. கொஞ்ச நேரத்தில சத்தம் குறைஞ்சி அடிபட்டவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.

இதைப் பார்த்துட்டு 'அப்படின்னா மனுசாள் அன்பே உருவானவா இல்லையா?னு' என் வீட்டுக்காரிகிட்ட நா தழுதழுத்து கேட்டேன். 'அன்பு இல்லாதவா மனுசாளே இல்லைண்ணா'னு பயத்தோட சொன்னா. வீட்டுக்கு போ தாத்தா, பாட்டி நீங்களும் போங்கனு அவன் எங்களை தள்ளாத குறையா சொன்னான். எங்களை இவன் எதுக்கு காப்பாத்த நினைக்கனும்? அன்பு மனுசாளைக் கட்டிப்போடாதா?

எனக்கு அந்த நிகழ்வு மன வருத்தத்தை தந்தது. வீட்டுக்கு வந்ததும் எழுதின நோட்டை எடுத்து மீண்டும் ஒருக்கா படிச்சிப் பார்த்தேன். என் வீட்டுக்காரி சொன்னதும் நினைச்சிப் பார்த்தேன். மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணானு சொன்னதுக்கு முழு அர்த்தம் கிடைச்சது. மனுசாள் அன்பே உருவானவா, அன்பில்லாதவா மனுசாளே இல்லை. நேரத்துக்கு நேரம் அன்பை வெறுப்புக்கு வித்துக்கிறவா நம்மகிட்ட ஜாஸ்தி. கண்டிப்புல கூட அன்பு கலந்து இருக்கனும், அன்பு மட்டும்தான் எல்லா இடத்திலும் ஆட்சி செய்யனும். இதை நினைச்சிட்டே 'அன்பா சின்ன குழந்தையிலே இருந்து வாழ கத்துக்கிட்டா எவ்வள நல்லா இருக்கும் நாயகி'னு சொன்னேன். அதுக்கு அவ 'அன்பு தன்னால வரதுண்ணா, யாரும் போதிச்சி வரதிலண்ணா எல்லார்கிட்டயும் சமமான அன்பை காட்டுறதுக்கு பக்குவம் வேணும்ண்ணா'னு சொன்னா. உண்மைதானு நினைச்சிக்கிட்டேன்.

நாட்டுல நடக்கறதைப் பார்க்கறப்போ ஒவ்வொருத்தரும் தான் செய்றதை நியாயப்படுத்தி பேசுறாங்க. அவங்க செய்றதை தப்புனு அவங்ககிட்ட சொன்னா என் நிலைமையிலிருந்து இருந்து பாருனு ஈசியா சொல்லிருறாங்க. அன்பா இருக்குறதில்ல அப்படி என்ன சிரமம் வந்துருச்சினு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஒன்னு சொல்லனும் இத்தனை வருசமா நடக்கற அட்டூழியங்களை கண்டும் காணாம வாழ்ந்துட்டே வந்துட்டேன். அன்பை காட்டினா அன்பு திருப்பி வரும்னு சொல்வாங்க. நா இது மாதிரி அக்கிரமங்கள் நடக்கறச்சே காட்டின அன்புக்கு என்ன பதிலு கிடைச்சது தெரியுமோ? நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீங்கதான. அதனால அது இருக்கட்டும்.

'ஏண்ணா இந்தவாட்டி பத்தாயிரம் தந்துட்டுப் போயிருக்காள்ணா சின்னவா'னு இப்பத்தான் என் வீட்டுக்காரி சொன்னா. நா எதுவும் பணம் பத்தி கேட்கறதில்ல, அவ நல்லா நிர்வாகம் பண்ணுவா. நா வாங்குன சம்பளத்தையெல்லாம் அவகிட்ட கொடுத்துட்டு மாசச் செலவுனு குறிப்பிட்ட தொகையை வாங்கிப்பேன். அது புள்ளைகளுக்கும், என் வீட்டுக்காரிக்கும் சின்ன சின்ன பொருள் வாங்கித்தரதுக்கு பயன்படுத்திப்பேன். அவ்ளதான் அதுபத்தி சொல்ல முடியும்.

'ஆறாயிரத்தை எடுத்து ராகவேந்திரா குழந்தைகள் நலகாப்பகத்துக்கு எடுத்து வைச்சிருரேண்ணா, மீதி நாலாயிரத்தை சூசையப்பர் தன்னோட பேரன் படிப்புக்கு போன வாரம் வந்து கேட்டாரே, அதை அவருக்கு கொடுத்துருவோம்ணா'னு சொன்னா. ம் சரினு சொன்னேன்.

சூசையப்பர் என்னோட வேலை பார்த்தவர். ரொம்ப அன்பானவர். உதவின்னா என்னோட வீட்டுக்குத்தான் முதல வருவார். எனக்கு எதுவும் தேவையின்னா அவரோட வீட்டுக்குத்தான் நா முதல போவேன். இதுபோதும் அவரைப்பத்தி இப்போதைக்கு.

லெமூரியா பத்தி படிக்க ஆரம்பிச்சேன். லைப்ரரியில நா படிச்ச புத்தகத்தைத்தான் தொடர ஆரம்பிச்சேன். அட்லாண்டிஸ் மனுசாளோட முந்தைய காலகட்டத்து மனுசாள்தா லெமூரியா மனுசாள் எல்லாம். இந்த மனுசாளுக்கும் அவாளுக்கும் ஒருவித தொடர்பு இருந்துச்சு. படிக்க படிக்க மனவருத்தம் மெல்ல விலக ஆரம்பிச்சி இருந்துச்சு. மனவருத்தத்தோட வாழுறதை நீங்களும் நிறுத்திக்கிறீங்களா?

(தொடரும்)

லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3

எனக்கு அந்த லெமூரியா பத்தின புத்தகத்தை படிக்க படிக்க மனசில திகிலடிக்க ஆரம்பிச்சிருச்சி. எழுபது வருச காலமா இந்த லெமூரியாவில வாழ்ந்தவங்களைப் போல நான் வாழனும்னு ஆசைப்பட்டு அதுல எந்தவித குறையும் வைக்காம இதுவரைக்கும் வாழ்ந்து வந்துட்டு இருக்கறதை நினைக்கிறப்போ என்னால என்னையவே நம்ப முடியல. அந்த லெமூரியாவில இருந்து வழித்தோன்றலா வந்தவங்க இன்னும் அங்க அங்க இருக்காங்கனு அந்த புத்தகத்தில எழுதி இருந்ததை பார்க்கறப்போ இதெல்லாம் எப்படி சாத்தியமோனு தோணிச்சி.

லைப்ரரியன்கிட்ட போனேன், எனக்கு லெமூரியா பத்தின புத்தக பட்டியல் வேணும்னு கேட்டேன். இரண்டு புத்தகம்தான் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்னு லைப்ரரியில சட்டம் இருக்கு, இருந்தாலும் 'லெமூரியா சம்பந்தமான புத்தகம் எல்லாம் எடுத்துக்கோங்கோண்ணா' னு லைப்ரரியன் தன்கிட்ட இருந்த கம்ப்யூட்டரில தட்டி பதினைஞ்சு புத்தகத்துக்கு மேல காட்டினார். அதுல இங்கிலீஸ் புத்தகங்களும் இருந்தது. 'எல்லாம் வேணாம், ஒவ்வொரு புத்தகமா படிச்சிட்டு எடுத்துட்டுப் போறேன்'னு அவர்கிட்ட சொல்லிட்டு வந்து என் வீட்டுக்காரி படிச்சி முடிக்கட்டும்னு அவ பக்கத்துல உட்கார்ந்து இருந்தேன்.

என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதம் படிக்க ஆரம்பிச்சா நீர், ஆகாரம் எதுவும் வேணாம், படிச்சிட்டே இருப்பா. நான் கூட பல நாளு அவளுக்காக விரதம் எல்லாம் இருந்துருக்கேன். அன்னைக்கு என்னைக்குமில்லாத சந்தோசம் அதிகமா இருக்கும். இன்னைக்கும் அளவுக்கு அதிகமான சந்தோசம்தான் எனக்குள்ள இருந்தது. திடீரென திரும்பி என்னைப் பார்த்தவ 'ஏண்ணா பசிக்கிறதாண்ணா'னு அமைதியா கேட்டு வைச்சா. 'இல்லை நாயகி, நீ படி'னு அமைதியா சொன்னேன். என்ன நினைச்சாளோ புத்தகத்தை மூடி வைச்சிட்டு 'வாங்கோண்ணா போலாம்'னு கிளம்பச் சொன்னா. நானும் மறுப்பு எதுவும் பேசாம அவளோட கிளம்பிட்டேன்.

லைப்ரரியன் எனக்காக லெமூரியாவைப் பத்தி ஒரு புத்தகம் எடுத்து வைச்சி இருந்தார். 'இந்தாங்காண்ணோ, அந்த புத்தகத்தோட சேர்த்து இந்த புத்தகத்தையும் எடுத்துட்டுப் போங்கோ'னு லைப்ரரி புத்தக அட்டையில பதிவு செஞ்சி கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.
'ஏண்ணா என்ன புத்தகம் அது'னு வழக்கம்போல அப்போதான் என் வீட்டுக்காரி கேட்டா. 'இது லெமூரியா பத்தின புத்தகம்'னு சொன்னேன். அவளுக்கு லெமூரியா பத்தி தெரிய வாய்ப்பு இல்லை, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம், இராமாயணம், மஹாபாரதம், கந்தபுராணம் அப்புறம் என்னோட நாலு கதைகள் மட்டும்தான். அவளா இதுவரைக்கும் வேறு எந்த கதைப் புத்தகமும் வாசிச்சது இல்லை. எனக்கும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும் லெமூரியா பத்தி அக்கறையில்லாமதான் இருந்தது. எப்பவுமே நான் கதை படிக்கிறப்போ அந்த புத்தகத்தோட பேரு மட்டும் கேட்டுப்பா, அப்புறம் தூங்க போறப்போ கதைச்சுருக்கம் சொல்லச் சொல்வா. கல்கியோட கதையினா அவளுக்குப் பிரியம்.

திருவானைக்கோவிலுல ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு வெயில் குறைச்சலா அடிச்சதால அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சிட்டோம். பேசிட்டே நடந்தோம். அப்போ லெமூரியாவைப் பத்தி சொல்லிட்டே வந்தேன். 'அப்படியாண்ணா, அப்படியாண்ணா'னு கேட்டுட்டே வந்தவ 'அந்த மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணா'னு சொன்னதும் எனக்கு ஸ்ரீரங்க கோயிலு கோபுரம் கண்ணுல பட்டுச்சு. 'எல்லாமே உண்மைனு தெரியாது எனக்கு'னு சொன்னேன். 'ஏண்ணா நாம வாழற சரித்திரத்தை எழுதி வைச்சி பல வருசம் கழிச்சி இப்படி அந்நியோன்யமா இரண்டு பேரு வாழ்ந்தாங்கனு படிக்கிறப்ப, இது உண்மையா இருக்காதுனு படிக்கிறவா நினைக்க தோது இருக்குண்ணா, ஆனா அந்த உண்மை நமக்கு மட்டும்தா தெரியும்ண்ணா'னு சொன்னதும் 'இல்லை நாயகி அந்த மனுசாள் எப்படி வாழ்ந்தானு நா எப்படி பார்க்காம எழுத முடியும்'னு சொன்னேன். யோசனை பண்ண ஆரம்பிச்சா. இரயில்வே கிராஸ்கிட்ட வந்துட்டோம். ஒரு மரத்துக்கு கீழ நின்னோம். குளு குளுனு காத்து வேமா வீசிட்டு இருந்துச்சு.

எனக்கு ஒரு யோசனை தோணிச்சி. எந்த கதையும் படிக்காத என் வீட்டுக்காரிக்கு இந்த லெமூரியா பத்தி என்னோட கைப்பட எழுதுறதை படிக்கட்டும்னு 'நாயகி நான் அந்த மனுசாளைப் பத்தி எழுதுறேன்'னு சொன்னேன். அவ என் மாருல சாஞ்சிக்கிட்டா. நா அவளோட தலையை வருடிட்டே சொன்னேன் 'மொத்தமா எழுதுனப்பறம் படிக்கிறயா, இல்லாட்டி கொஞ்ச கொஞ்சம் எழுதறப்ப படிக்கிறியா'னு கேட்டதும் 'ஒரு வரி எழுதி காமிச்சது போல ஒரு வார்த்தை எழுதினாலும் காமிங்கோண்ணா'னு மாருல சாஞ்சிட்டே சொன்னா. அப்பத்தான் எனக்கு என்னோட மாருல சட்டை நனைஞ்சது தெரிஞ்சது. துடிச்சிப் போய்ட்டேன். நீங்களும் உங்க வீட்டுக்காரிக்காகத் துடிக்கிறீங்களா?

இரண்டு நாளா நான் ஒரு வார்த்தைக் கூட கதை எழுதலை. என்னால எழுதவும் முடியலை. லைப்ரரியில இருந்து வாங்கிட்டு வந்த புத்தகங்களை எடுத்துக் கூடப் பார்க்கலை. அந்த மரத்து நிழலுல என் வீட்டுக்காரி சொன்னது என் மனசில ஓடிட்டே இருந்துச்சி. 'மனுசாளைப் பத்தி நீங்க எழுதி முடிச்சதும் நாம இவ்வுலக வாழ்க்கையை முடிச்சிக்கிறனும்ண்ணா, அந்த ரங்கநாதருகிட்ட போயிறனும்ண்ணா'னு சொன்னதுதான் என்னை இப்படி யோசனையில உட்கார வைச்சிருச்சி. மனுசாளைப் பத்தி எழுதாம இருந்தா பல காலம் வாழலாமானு நட்பாசையில மனசு கணக்குப் போட ஆரம்பிச்சிருச்சி. அப்படி உசிரைப் பிடிச்சி பல காலம் இன்னும் வாழுறதல என்ன இருக்கப் போறதுனு நினைக்க வேணாம். கஷ்டப்படற நஷ்டபற மனுசாளுக்கு எல்லா எங்களால முடிஞ்ச தொண்டுகாரியம் பண்ணிட்டு வாரோம். மனுசாளுக்குத் தொண்டு பண்றதுதான் பெரிய தொண்டுனு பகவான் சொல்லியிருக்கார். இதே யோசனையில இருந்தாலும் காலையிலயும் சாயந்திரமும் ஸ்ரீரங்கநாதரை தவறாம சேவிச்சிட்டே வந்தோம்.

'ஏண்ணா வந்து சாப்பிடுங்கோண்ணா'னு என்னோட நினைவுகளை கலைச்சா. நா மெல்ல எழுந்து சாப்பிட போனேன். இன்னைக்கு வீட்டுச் சமையல்தான். சமையலை ரொம்ப பக்குவமா என் வீட்டுக்காரி பண்ணுவா. நா காய்கறி நறுக்கிக் கொடுத்துட்டு சமையல்கட்டிலே அவ சமைச்சி முடிக்கிறவரைக்கும் பேசிட்டே நிற்பேன்.

பிள்ளைகளெல்லாம் கூட இருந்த காலத்தில அவங்களுக்கெல்லாம் சாப்பாடு பரிமாறுவா. பிள்ளைக எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சதும், நாங்க இரண்டு பேரும் ஒன்னாதான் சாப்பிடுவோம். இன்னைக்கும் அப்படித்தான் உட்கார்ந்து சாப்பிட்டோம். அவளுக்கு பொறையேறிருச்சி. தலையில தட்டிவிட்டேன். 'தண்ணி குடிக்கச் சொல்லி நானும் குடிச்சேன். 'ரங்கநாதர் நினைக்கிறாருண்ணா'னு சொன்னா. புள்ளைக நினைக்கும்னு கூட அவளுக்குச் சொல்லத் தோணலையேனு நா சாப்பிடறதை நிறுத்திட்டு அவளையேப் பார்த்தேன். அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்க முடியல. தான் தட்டில இருந்து சாப்பாடு எடுத்து எனக்கு ஊட்ட வந்தா. 'சாப்பிடுங்கோண்ணா'னு சொன்னா. கண்ணுல நீர் கோர்த்தது. அவ ஊட்டிவிட்டதை சாப்பிட்டேன். அவளோட ஒரு குழந்தையாத்தான் வாழ்ந்து வரேன்னு மனசுக்குப் பட்டுச்சு.

வீட்டு வெளியில உட்கார்ந்தோம். இதமா காத்து வீசிச்சு. மதிய வேளையில தூங்கறதில்ல. 'மனுசாளைப் பத்தி ஒரு வார்த்தை கூட நீங்க எழுதலையேண்ணா'னு சொன்னா. இதோட நாற்பது தடவை மேல சொல்லியிருப்பா. சிரிச்சிட்டே எழுதுறேன் நாயகினு ஒவ்வொரு தடவையும் சொன்ன நா இன்னைக்கு 'எழுதத் தோணலை'னு சொன்னேன். 'ரங்கநாதருகிட்ட போக விருப்பமில்லையாண்ணா'னு சொன்னா. அழுகையா வந்துருச்சு. அவளை கட்டிப்பிடிச்சு சின்ன புள்ளை போல அழ ஆரம்பிச்சிட்டேன். பதறிப் போய்ட்டா. அவளும் அழ ஆரம்பிச்சிட்டா. நா அழுதா தாங்கமாட்டா. வீணா அவளை கவலைப்படுத்திட்டோமேனு அவ மரத்து நிழலுல சொன்னதை அழுகையில இருந்து மீண்டு வந்து சொன்னேன். 'நீங்க எழுதலையினாலும் ஒருநாள் போயிருவோம்ண்ணா, ரங்கநாதர் காத்துண்டே இருக்காருண்ணா, எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி இதுக்காக சின்ன குழந்தையாட்டம் அழலாமாண்ணா'னு கன்னத்தில திரண்டு நின்ன கண்ணீரை துடைச்சிவிட்டா.

அப்பதான் எனக்கு உறைச்சது. எழுதாம இருந்தாலும் போயிட்டா என்னோட வீட்டுக்காரியோட ஆசையை நிறைவேத்தாம போயிருமேனு 'இரு நாயகி'னு அந்த நோட்டையும் பேனாவும் எடுத்துட்டு வந்து அவ பக்கத்தில உட்கார்ந்தேன். எழுத ஆரம்பிச்சேன்.

மனிதர்கள் ஆசையும், பாசமும், அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். சகல உயிர்களிடத்திலும் கருணையுடன் இருப்பவர்கள். வேற்றுமையுணர்வு அன்பினை விரட்டியடித்துவிடும் என்பதை அறிந்து கொண்டவர்கள். அன்பினை அமிழ்த்தி வைக்கும் வேற்றுமை எண்ணத்தை மனதில் எழவிடாமல் பாதுகாப்பாக வாழ்ந்து வருபவர்கள்.

என் வீட்டுக்காரிக்கிட்ட காட்டினேன். வாசிச்சா. வாசிச்சிட்டு மனுசாளைப் பத்தி அருமையா எழுதி இருக்கேள்ண்ணானு சொல்லி என் கையை எடுத்து கண்ணுல தொட்டுக்கிட்டா. 'இதே மாதிரி தொடர்ந்து எழுதி வாங்கோண்ணா'னு கொஞ்ச நேரத்து முன்னால எனக்கிருந்த கவலையெல்லாம் விரட்டிவிட்டா. 'இப்ப இது போதும் நாயகி'னு சொன்னேன். சிரிச்சா.

அப்போ வீட்டு முன்னால காரு வந்து நின்னது. காரில இருந்து என்னோட இரண்டாவது கடைசி பொண்ணு ரங்கநாயகியும் அவளோட வீட்டுக்காரர் ரங்கப்பிரியனும் என் பேரன் கோபிநாதனும் வந்து இறங்கினா. இறங்கினதுதான் தாமசம் தாத்தா பாட்டினு அந்த இரண்டு வயசு பையன் எங்களைப் பார்த்து தள்ளாடி வந்தான். எனக்கும் என் வீட்டுக்காரிக்கும் அத்தனை சந்தோசம்.வந்தவா இரண்டு பேரும் எங்க காலுல விழுந்து ஆசிர்வாதம் பண்ணச் சொன்னா. பேரனும் எங்க காலுல விழுந்தான். என் வீட்டுக்காரி பேரனைத் தூக்கி கொஞ்ச ஆரம்பிச்சிட்டா.

நலம் விசாரிச்சிக்கிட்டோம். சாப்பாடு பரிமாறினோம். போன வருசம் வந்தவங்க. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். என் வீட்டுக்காரிகிட்ட 'இந்தாம்மா'னு கையில பணக்கட்டு தந்தா சின்னவ. வருசம் வருசம் கேட்கறதைப் போல 'டிவி வாங்கித்தரவா'னு என்கிட்ட கேட்டா. நா வேணாம்னு சொல்லிட்டேன். என் வீட்டுக்காரியோட காலை அமுக்கிவிட்டுக்கிட்டேதான் பேசிட்டு இருந்தா. இப்படித்தான் தகவல் எதுவும் தெரிவிக்காம வந்துருவா.

நாங்க ஐஞ்சு பேருமா நின்னு இந்த வருசமும் போட்டோ எடுத்துக்கிட்டோம். நானும் என் மாப்பிள்ளையும் பேரனும் வெளியில உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். என் வீட்டுக்காரியும் பொண்ணும் உள்ளே பேசிட்டு இருந்தா. மாப்பிள்ளை அவரோட தங்கி இருக்க கூப்பிட்டார். லீவு கிடைச்சா இங்க வந்து தங்குங்கனு சொன்னேன். ரங்கநாதரை விட்டு எங்கும் போக விருப்பமில்லைனு திரும்பவும் சொன்னேன். அமைதியா இருந்துட்டார்.
சாயந்திரமா கிளம்பிட்டாங்க. என்னை கவனிக்கச் சொல்லி என் வீட்டுக்காரிகிட்டயும், என் வீட்டுக்காரியை கவனிக்கச் சொல்லி என்கிட்டயும் சொன்னவ கலங்கினா. என் வீட்டுக்காரியை கட்டிப்புடிச்சி கொஞ்ச நேரம் நின்னா. அதுவரைக்கும் அந்த நோட்டு யார் கண்ணுலயும் படாம வெளியில செளக்கியமா இருந்தது.

வெளியில வந்த என் பேரன் அந்த நோட்டை எடுத்து நா எழுதுன பக்கத்தை கிழிச்சிட்டான். சின்னவாவும் மாப்பிள்ளையும் என் பேரனை இப்படிச் செய்யக்கூடாதுனு சொல்லி அன்போட கண்டிச்சா. எனக்கு பெருமிதமா இருந்தது. அவங்களை அனுப்பி வைச்சிட்டு அந்த பக்கத்தை தனியா எடுத்துட்டு மறுபடியும் எழுதி வைச்சேன். ஸ்ரீரங்கநாதர் சந்தோசப்பட்டிருப்பார். கோவிலுக்கு சேவிக்க கிளம்பினோம். நீங்களும் வாரீங்களா?

(தொடரும்)

லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.

இந்த காலங்காத்தாலே எழுந்திருக்க பழக்கம் சின்ன வயசில இருந்து வந்தது. நாங்க இரண்டுபேரும் ஸ்நானம் பண்ணிட்டு தியானத்தில உட்கார்ந்துருவோம். இன்னைக்கும் அதுதான் செஞ்சோம். அதுக்கு முன்னால ஒன்னு சொல்லனும், என் வீட்டுக்காரி நல்லா கோலம் போடுவா. வாச கூட்டி, தண்ணி தெளிச்சி கோலம் போடற வழக்கம் இன்னும் மாறலை.
'மனுசாளைப் பத்தி யோசிச்சேளான்னா' னு கேட்டா. 'யோசனையில தூங்கிட்டேன், ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு வரி எழுதி வைச்சிருக்கேன், படிக்கிறேன்'னு சொல்லி உங்களுக்கு காட்டுன அந்த வரியை படிச்சேன். என் கையைப் புடிச்சி அவ கண்ணு இரண்டையும் தொட்டுக்கிட்டா. என் மனசுல சந்தோசம் அலைமோதிச்சி. 'ரங்கநாதர் நிச்சயம் சொல்வாருண்ணா, அவர் சொல்றதைக் கேட்டு எழுதுங்கோண்ணா' னு சொல்லிட்டு பால் சுட வைக்கப் போனா.

'நாயகி உன் முகம் தூங்கறப்போ கூட மலர்ந்து இருந்துச்சி, மனுசனுக்கு பாராட்டு கிடைக்கறப்ப எவ்வள சந்தோசம் பார்த்தியா'னு சொன்னதும் 'அது இல்லைண்ணா, ரங்கநாதர் என் குரலை கேட்டுருப்பாருனு தெரிஞ்சதால வந்த சந்தோசம்ண்ணா' னு சொன்னதும் அந்த காலையில என்னை அறியாம அவ காலுல சாஷ்டாங்கமா விழுந்துட்டேன். 'என்ன காரியம் பண்றேள்ண்ணா' னு பதறிப்போய்ட்டா.

அப்புறம் வீட்டு நடுக்கூடாரத்தில கட்டியிருக்க ஊஞ்சலிலே இரண்டு பேரும் உட்கார்ந்து பால் குடிச்சிட்டு இருந்தோம். 'நீங்க மனுசாளைப் பத்தி எழுதறதை நான் படிக்கனும்ண்ணா, ஆனா நீங்க மனுசாளைப் பத்தி என்ன என்ன மனுசுல வைச்சிருக்கீங்களோண்ணு தெரியலைண்ணா' னு சொன்னதும் 'ஏன் அப்படி சொல்ற நாயகி' னு கேட்டேன்.

'பாராட்டு கிடைக்கறப்ப சந்தோசம் மனுசாளுக்கு வரும்னு நீங்க சொன்னேளே, அதைவிட மத்தவா சந்தோசமா இருக்கறதைப் பார்த்துத்தான் மனுசாளுக்கு உண்மையான சந்தோசம் வரும்ண்ணா, என்ன சொல்றேள்' னு என்னையவேப் பார்த்தா. அவ சொல்றது உண்மைனு சொன்னேன். சிரிச்சா.
'உண்மையைத்தான் பேசனும்ண்ணா, உங்களுக்கு தெரியாததாண்ணா' சொல்லிட்டு டம்ளரை எடுத்து கழுவி வைச்சிட்டு ஸ்ரீரங்கநாதரை சேவிக்க கிளம்பினோம். வழக்கம்போல மல்லிகைப்பூ, அதோட கொஞ்சம் பிச்சிப்பூ வாங்கி தலையில வைச்சி விட்டேன். பூ விற்கிற அம்மா எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிடுவா. நாங்களும் அந்த அம்மாவை கும்பிடுவோம். அவகிட்டதான் வழக்கமா பூ வாங்குறது. எந்த நாளைக்கு எந்த பூ வாங்குவோம்னு கூட அந்த அம்மாக்குத் தெரியும்.

'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்' னு பாடல் காதுல விழுந்தது. என் வீட்டுக்காரியோட கைகளை அழுத்தினேன். எப்பவும் கைகோர்த்துட்டு நடக்கறதுதான் வழக்கம். அவளும் என் கைகளை அழுத்தினா. அந்த அழுத்தத்தில காதலோட பலம் எங்க இரண்டு பேரு மனசுக்கும் தெரிஞ்சது. அந்த பாட்டு கேட்டதும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தரைப் பார்த்துப்போம். எதுவும் பேசமாட்டோம்.

கோவிலுக்குள்ள போனோம். ஸ்ரீரங்கநாதரை ரொம்ப நேரமா சேவிச்சிட்டு நின்னா. கண் மூடி சேவிக்கற வழக்கம் எங்ககிட்ட இல்ல. ஸ்ரீரங்கநாதரை நா சேவிச்சிட்டு என் வீட்டுக்காரியைப் பார்த்தப்போ அவ கண்ணுல இருந்து கண்ணீர் சொட்டிட்டு இருந்துச்சி. ரங்கநாதானு மனசுல சொல்லிட்டே அவ கண்ணைத் துடைச்சிவிட்டேன். அப்பவும் அவ ரங்கநாதரையேப் பார்த்துட்டே இருந்தா, கண்ணுல நீர் கொட்டுறது நிற்கலை. அங்கே சேவிக்க வந்தவங்க எல்லாம் அப்படியே நின்னுட்டா. பட்டாச்சாரியார்கள் ஓரமா நின்னுட்டாங்க. நேரம் போய்க்கிட்டே இருக்கு, சேவிக்க வந்தவங்க எல்லாம் அமைதியா இருந்தாங்க, எனக்கு ஆச்சரியமா இருந்தது.

சேவிச்சி முடிச்சதும் அப்பத்தான் சுத்தி சுத்திப் பார்த்தா. ஒரே கூட்டமா இருந்தது. பட்டாச்சாரியார்கள் எல்லோரும் ஒரு சேர புன்முறுவலிட்டாங்க. அங்க இருக்குறவங்களைப் பாத்து 'எல்லோரும் என்னை மன்னிச்சிருங்கோ'னு சொன்னா. பட்டாச்சாரியாரும், கூடியிருந்தவங்களும் கையெடுத்து கும்பிட்டாங்க. நாங்க மெல்ல நடந்து ஓரிடத்தில உட்கார்ந்தோம். சேவிக்க வந்தவங்கல சில பேரு வந்து 'எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமி'னு கேட்டாங்க. உட்கார்ந்து இருந்தவ என்னையும் கூட எழுந்து நிற்கவைச்சி அவங்க கேட்டாங்களேனு ஆசிர்வாதம் பண்ணினா. ஒரு சிலரு நின்னு பேசிட்டு போனாங்க.

இத்தனை வருசத்தில நடக்காத அதிசயம் இது, இன்னைக்கு நடந்துருக்கேனு நினைக்கிறப்ப எனக்கு ரங்கநாதர் ஏதோ சொல்ல வராருனு தெரிஞ்சது. என் வீட்டுக்காரிகிட்ட 'என்ன நடந்தது'னு கேட்டேன். 'மனுசாள் எவ்வள உயர்ந்தவா, ஒவ்வொரு அவதாரமா வந்தப்ப மனுசாளை கவுரவிச்சிருக்கார் இந்த ரங்கநாதர், மனுசாளை அன்போடவும் கருணையோடவும் இருக்கச் சொல்றதுக்கு மனுசாளாவே இவா வந்துருக்காளேனு நினைச்சிட்டு அப்படியே நின்னுட்டேண்ணா. மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணிட்டேண்ணா'னு சொன்னா. அடுத்தவங்க சந்தோசமா இருக்கனும்னு எப்பவும் சந்தோசமா வேண்டிப்பா. மனுசாளைப் பத்தி எனக்கு என் வீட்டுக்காரி சொன்னதும் மனசில சந்தோசம் இன்னும் அதிகமாச்சுது. 'நீ இடைஞ்சல் பண்ணலை, எல்லாம் அமைதியா வேண்டிட்டு இருந்தா'னு சொன்னேன்.

பிரசாதம் சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு இருக்கறப்பவே 'ஏண்ணா லைப்ரரி போலாமாண்ணா'னு கேட்டா. 'தாராளாம போகலாம்'னு சொன்னேன். அங்கே இருந்து நாங்க இரண்டு பேரும் திருவானைக்கோவிலுக்கு ஒரு ஆட்டோவில போனோம். ஆட்டோவை அந்த பையன் ரொம்ப மெதுவா ஓட்டிட்டுப் போனான். எங்க உடம்பு அலுத்துக்கப்படாதுனு மெதுவா ஓட்டுறதா சொன்னவன், அவனுடைய குடும்பம், ஊரு உலகம் பத்தி சொல்லிட்டே வந்தான். நாங்க திருவானைக்கோவிலுல இறங்கியதும் அந்த பையனை ஒரு நிமிசம் நிற்கச் சொல்லி கடையில ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் வாங்கி ஆஸ்பத்திரியில இருக்குற அவங்க அம்மாகிட்ட கொடுக்கச் சொன்னோம். அப்போ அவனோட கண்ணுல கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்துச்சு, எனக்கு சங்கடமா இருந்திச்சி.

லைப்ரரிக்குள்ள போனோம். 'வாங்கோண்ணா'னு எங்களை லைப்ரரியன் வரவேற்றார். என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதத்தை கையில் எடுத்துக்கிட்டா. நா மனுசாளைப் பத்தி எழுதற யோசனையிலே இருந்தேன். அப்பத்தான் ஒரு விசயம் மனசில பட்டுச்சு. அன்பே கருணையா உருவான மனுசாளைப் பத்தி எழுதனும்னு அப்பத்தான் தோணிச்சி. இப்போ இருக்கறமாதிரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கற மனுசாள் மாதிரி எல்லாருமே அன்பும் கருணையும் கொண்டவங்களா இருக்கற உலகத்தை பத்தி நினைக்க ஆரம்பிச்சேன். கண்ணுல ஒரு புத்தகம் பட்டுச்சு. அந்த புத்தகம் லெமூரியாவைப் பத்தியது. எடுத்து புத்தகத்தில எதார்த்தமா திறந்து எழுபதாவது பக்கம் எடுத்து படிச்சேன். ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. அந்த சந்தோசத்தில 'மனுசாளைப் பத்தி எழுத யோசனை வந்துருச்சினு' என் வீட்டுக்காரிக்கிட்ட முணுமுணுத்தேன். ரொம்ப சந்தோசப்பட்டா. நானும் என் வீட்டுக்காரியோட ஆவலை நிறைவேற்ற அந்த ரங்கநாதர் வழிகாட்டிட்டாருனு நினைச்சி சந்தோசப்பட்டேன். நீங்களும் சந்தோசமா இருக்கீங்களா?

லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2

இதோ இந்த ராத்திரியிலே என் வீட்டுக்காரி தூங்கிட்டு இருக்கா. எனக்குத் தூக்கமே வரலை. எப்பவுமே படுத்ததும் தூங்கிருவேன். எந்த பிரச்சினைனாலும் அதுபத்தி யோசிக்கமாட்டேன். ஆனா மனுசாளைப் பத்தி எழுதுங்கோனு சொன்னதும் எனக்கு என்ன எழுதறதுனு தெரியலை. அமரர் கல்கி கண்ணுக்கு முன்னால வந்தார். தி. ஜானகிராமன், பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதினு நிறைய எழுத்தாளர்கள் என் கண்ணுக்கு முன்னால வந்தாங்க. மனுச வாழ்க்கையை எல்லாரும் அலசிட்டாங்கனு மனசுக்குப் பட்டிச்சி. நான் அதிக விரும்பிப் போற நூலகம் திருவானைக்கோவிலுல இருக்கு. நானும் என் வீட்டுக்காரியும் தான் போவோம். அவ ஸ்ரீமத் பாகவதம் எடுத்துப் படிச்சிட்டு இருப்பா. வீட்டுல வாங்கி வைச்சிருக்கேன், இருந்தாலும் அங்க வந்தாலும் அதைத்தான் படிப்பா. எவ்வள சமத்தா தூங்குறா? ம்... இவ மட்டும் இல்லைன்னா நா உயிர் வாழுறதல என்ன அர்த்தம் இருக்கு. நான் நினைச்சிட்டே இருக்கறப்ப இருமிட்டே திரும்பி படுத்தவ என்னைப் பார்த்து 'என்னண்ணா தூங்கலையா'னு கேட்டா.

'மனுசாளைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்' அதான் தூக்கம் வரலைனு சொன்னேன். 'நல்லா யோசியுங்கோண்ணா' னு என்னோட யோசனைக்கு தொந்தரவு தராம பேசமா திரும்பி தூங்கிட்டா. இப்படித்தான் நா என்ன செஞ்சாலும் அன்பா கரிசனையா சொல்லிட்டு அவளோட வேலையப் பார்க்க போயிருவா. இதுலதான் காதலடோ வலிமையிருக்குனு எனக்கு மனசு சொல்லிக்கிரும். வீட்டு வெளியில அந்த ராத்திரியிலே வந்து நின்னேன். கோபுரத்தில் விளக்கு இன்னும் எரிஞ்சிட்டு இருந்தது. 'ரங்கநாதா எனக்கு மனுசாளைப் பத்தி என்ன எழுதறதுன்னு தெரியலை, நீ என்ன எழுதறதுனு வந்து சொல்ல மாட்டியா'னு சின்ன குழந்தை மாதிரி கை இரண்டையும் தலைக்கு மேல தூக்கி சேவிச்சுக்கிட்டேன்.

கொஞ்ச நேரத்தில கதவை அடைச்சிட்டு வந்து உட்கார்ந்துக்கிட்டேன். நல்லா தூங்கிட்டு இருப்பானு பார்த்தா என் வீட்டுக்காரி பால் சுட வைச்சி என்கிட்ட வந்து 'இந்தாங்கண்ணா குடிச்சிட்டு யோசனை பண்ணுங்கோ' னு தந்தா. 'என் யோசனையில உன் தூக்கத்தை கெடுத்துட்டேனே'னு சொன்னேன். சிரிச்சிட்டே தூங்கப் போறேன் ஒரு வரியாவது ஆரம்பிச்சி வையுங்கோண்ணா' னு சொல்லிட்டுப் போய்ட்டா.

நான் சிடி பிளேயரை எடுத்துட்டு வந்து வால்யூமை குறைச்சலா வச்சி ஒரு பாட்டு போட்டேன். ஓ இந்த சிடி பிளேயர் என் முத பொண்ணு எனக்கு பத்து வருசம் முன்னால வாங்கித் தந்தது. அவ்ளதான் சொல்ல முடியும். 'நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்' அந்த பாட்டு கேட்டதும் எனக்கு என்னை அறியாம கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சி. அந்த பாட்டில நான் என்னையவே மறக்க ஆரம்பிச்சது அந்த பாட்டு நின்னதும்தான் தெரிஞ்சது. அடுத்த பாட்டு தொடங்கிச்சி 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' அந்த பாட்டை கேட்டதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கிட்ட பேசனும்போல இருந்திச்சி. எப்பேர்பட்ட கவிஞன், அந்த சின்ன வயசிலே எத்தனை அறிவுனு நினைக்கிறப்போ என்னோட கடந்த வாழ்க்கை எல்லாம் ஒரு கணம் மனசில வந்து போச்சு. அந்த பாட்டு முடிஞ்சதும் சிடி பிளேயரை நிப்பாட்டிட்டு மனுசாளைப் பத்தி யோசிச்சேன்.

திடுதிடுப்புனு விழிச்சிப் பார்த்தேன் ஐஞ்சு மணி நேரம் அப்படியே மேசையில விழுந்து தூங்கிட்டேன், காலையில நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்காரி எழுந்திருவா. இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு, மெல்ல எட்டிப் பார்த்தேன், அசையாம நல்லா தூங்கிட்டு இருந்தா. எல்லோரும் பாராட்டின சந்தோசம் அவ முகத்தில இன்னும் இருந்துச்சு. ஒரு வரியாவது எழுதச் சொன்னாளேனு ஒரு புது நோட்டு எடுத்தேன். முத வரி இப்படித்தான் எழுதினேன். எழுதறதை எல்லாம் உங்களுக்கு காட்டுறேன். நான் நீல நிறம் தான் உபயோகிப்பேன்.

மீனாக வந்த ரங்கநாதா, தானாக எழுத நினைக்கையில் தேனாக விசயம்தனை நீ சொல்லிடுவாய், என் மனையாளின் அகலாத அன்பை நிறைவேற்றவே.
அப்படி எழுதி வைச்சிட்டு என் வீட்டுக்காரி கொண்டு வந்து தந்த பால் அப்பதான் கண்ணுக்கு பட்டது, பால் சூடு ஆறி இருந்தது. அதை அப்படியே எடுத்து குடிச்சேன். நீங்களும் குடிக்கிறீங்களா? இல்லை வேண்டாம், அவ எழட்டும் சுட வைச்சி பால் தரச் சொல்றேன்.

(தொடரும்)