Monday, 31 October 2011

கைரேகை காவியம் - 1

இது ஏமாற்று கலை அல்ல. இது ஒரு அற்புதமான விசயம். அறிவியல் சார்ந்ததாக இருக்கலாம்.  இந்த கை ரேகை எப்படி அமைகிறது, எப்படி மாறுகிறது போன்ற விசயங்களை அலசப் போகும் ஒரு தேடல். சிறு வயதில் இருந்தே சோதிடம், கை ரேகை போன்றவை மனதில் பெரிய கேள்விக்குறியை எழுப்பின. ஆவலுடன் பல புத்தகங்கள் படித்தேன். ஆனால் இவையெல்லாம் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த இந்த சோதிடம், கை ரேகை எல்லாம் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்தேன். அவ்வப்போது படித்து பார்க்க ஆர்வம் ஏற்படும்.  எத்தனையோ விசயங்கள் இருக்க இந்த கை ரேகை குறித்த சிந்தனை எழுந்த காரணம் எனது கல்லூரியில் பயிலும் ஒரு வெள்ளைக்கார பெண் தான். 

சமீபத்தில் வாழ்க்கையில் காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை. நல்லவனா, நமக்கு சரிபட்டு வருவானா என பழகி பின்னர் கல்யாணம் பண்ணுவது எல்லாம் அவசியமில்லாத ஒன்று. பழகும் வரை சரியாக இருந்துவிட்டு கல்யாணம் பண்ணிய பின்னர் அவனது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் என்ன செய்வாய்? எனவே திருமணம் பண்ணிய பின்னர் எப்படி இருக்கிறார்களோ அதுபோல வாழ்க்கை மாற்றி அமைத்து கொண்டாலே போதுமானது என பேசிய விசயத்தை அப்படியே அவளது காதலனிடம் அவள் போய் சொல்ல அவனோ இவளிடம் இனிமேல் நமக்கு சரிபட்டு வராது, பிரிந்து விடுவோம் என கூறி இருக்கிறான். இவளோ விளையாட்டுக்கு சொல்கிறான் என நினைக்க அவன் உண்மையிலேயே பிரிந்து விடுவதாகவே கூறி இருக்கிறான். இந்த விசயத்தை என்னிடம் சொன்னபோது எனக்கோ பக் என்று இருந்தது. என்ன மனிதர்கள்? 

நல்லவேளை இப்பொழுதாவது சொன்னானே என மனதை தேற்றி கொண்டாள். வேறு சில காரணம் இருக்கும் என்றேன். இல்லை இல்லை ஒரு வருடம் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாளை மறுநாள் கூட ஒரு இடத்தில் சந்திப்பதாக இருந்தோம், ஆனால் இந்த விசயத்தை சொன்னதும் அவன் இவ்வாறு செய்துவிட்டான் என்றாள். ஆம் நான் பேசியது காதலை கொச்சைபடுத்தும் விசயம் தான். காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை என காதலர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வர வாய்ப்பு இருக்கிறது. நேசம் என்பது, காதல் என்பது புரிந்து கொள்ளும் என்றுதான் எனக்குள் ஒரு வரையறை வைத்து இருந்தேன். ஆனால் உலகில் வித்தியாசமான மனிதர்கள் இருப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை. அவளது கையை காட்ட சொன்னேன். காட்டினாள். அவளது கைகளில் காதல் ரேகை எனக்கு தெரியவில்லை. 

எனக்கு ஒரு மனைவி, ஒரு காதலி, அப்புறம் ஒரு காதலி என எனது கைகளில் இருந்த ரேகைகளை காட்டினேன். சிரித்தாள். இந்த கை ரேகை ஒரு சுவாரஸ்யமான விசயம். இப்படி அவளது கை ரேகையை பார்த்து கொண்டிருந்தபோது பலரும் வந்து கைகளை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ ஒரு மாதிரியாகிப் போய்விட்டது. எனக்கு கை ரேகை எல்லாம் பார்க்க தெரியாது. எல்லாம் மறந்து போய்விட்டது. சில காலம் தாருங்கள், படித்துவிட்டு வருகிறேன். இதையெல்லாம் நம்ப கூடாது, ஆனால் சுவராஸ்யமாக இருக்கும் என சொல்லிவிட்டு இந்த கை ரேகை குறித்த ஆய்வில் இறங்கி விட்டேன். இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்ததும் அருகில் இருந்த எனது மனைவி அவளது கையை என்னிடம் காட்டினாள். கொஞ்சம் பொறுத்து கொள், சொல்கிறேன் என சமாளித்து இதோ எழுதி கொண்டிருக்கிறேன். 

இந்த கைரேகை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுகதை கைரேகை பற்றியது. எந்த காரணத்திற்கு அந்த கதையை எழுதினேன் என அந்த கதையிலேயே குறிப்பிட்டு இருந்து இருப்பேன். இந்த ஜோதிடம், கைரேகை, நாடி சோதிடம் எல்லாம் மக்களை ஒரு மயக்க நிலையில் வைத்திருப்பவை என்றாலும் இதன் மேல் அனைவருக்கும் ஒருவித நாட்டம் இருப்பது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சில மனிதர்கள் முகத்தின் குறிப்பை அறிந்து அகத்தில் இருப்பதை சொல்லிவிடுவார்கள். அதுபோல மருத்துவர்களிடம் சென்றால் மருத்துவர் நமது கண்களில் ரத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்து நமது நோயினை தீர்மானிப்பார். இந்த கையும் ரேகையும் அப்படித்தான். ஒரு கையானது எப்படி மடக்கப்படுகிறது, எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பது பொறுத்து கையில் ரேகைகள் அமைந்துவிடும். 

இது மிகவும் உன்னதமான கலை. இந்த அற்புதமான கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் தாரளாமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் எனக்கு இப்படி இருக்கிறதே, அப்படி இருக்கிறதே என நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படுபவர்களாக இருந்தால் தயவு செய்து கைரேகையை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். 

இந்த கைரேகை குறித்து பல விசயங்கள் என்னை ஆச்சர்யம் அடைய செய்து இருக்கின்றன. பல வருடங்கள் முன்னர் மதுரை மீனாக்ஷி கோவில் ஒன்றில் அமர்ந்து இருந்த ஒருவர் எனது கைரேகையை பார்த்து நீ மீனம் ராசி என்றார். தவறாக சொல்கிறீர்கள், நான் மீன ராசி இல்லை என்றேன். அவர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் தம்பிக்கு கைரேகையில் நம்பிக்கை இல்லையோ என்றார். தவறுதனை தவறு என்றுதானே சொல்ல முடியும் என்றேன். ஆனால் அவர் நீங்கள் மீன ராசி தான், இந்த அம்மனுக்கு தெரியும் என்றார். ஆச்சர்யமாக போய்விட்டது. எங்கேனும் நான் ராசி சொல்லி அதை ஒட்டு கேட்டாரா என எனக்கு தெரியாது. ஆனால் கை ரேகை மூலம் எனது ராசியை மிக சரியாக கணித்த அந்த மனிதரை நான் தவறவிட்டு விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சில மனிதர்கள் அதிசயமானவர்கள். 

பார்மசி கல்லூரியின் விடுதியில் மாலை ஒன்றில் வெளியில் நண்பர்களோடு அமர்ந்து இருக்க எனது கையை பார்த்துவிட்டு கையை மூடிக்கொள் எவரிடமும் காட்டாதே என சாலமன் ரேகையை சொல்லி சென்ற ஒரு மனிதரை மனது இன்னமும் நினைத்து கொண்டுதானிருக்கிறது. இரண்டு கைகளையும் இணைத்து பார்த்துவிட்டு அழகான மனைவி அமைவாள் என்று ஒருவர் சொன்னது குறித்து இன்னமும் இரண்டு கைகளை அவ்வப்போது இணைத்து பார்த்து அழகு பார்ப்பேன். சில பல  ரேகை வளர்கிறதா, தேய்கிறதா என சோதனை செய்வேன். சனி மேடு, குறு மேடு என ஆயுள் ரேகை, புத்தி ரேகை என பல விசயங்கள் ஆச்சர்யம் பட செய்கின்றன. இவையெல்லாம் உழைக்கும் மனிதருக்கு பெரிய விசயமாக படுவதில்லை, நேரமும் இருப்பதில்லை. 

பெருவிரலில் இரண்டு ரேகைகள் இணைந்து ஒரு வளையம் போலிருந்தால் பணம் அதிகமிருக்கும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் வந்த பணம் கரைந்தோடும் என சொல்வதும் சிரிப்பாக இருக்கும். அத்தனை ரகசியங்களை நமது உடலைமைப்பு வைத்திருப்பதை சாமுத்ரிகா லட்சணம் என பிரித்து வைத்தார்கள். பிறப்புறுப்புகள் கூட எப்படி எப்படி இருக்கும் எனவும் எப்படி பட்ட கனவானுக்கு எப்படிபட்ட மனைவி பொருத்தம் என்றெல்லாம் எப்படி சிந்தனை செய்தார்கள். ஆராய்ச்சி செய்து சொன்னார்களா? எத்தனை பேர் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டார்கள் என்பதெல்லாம் தேடலில் கிடைக்குமோ தெரியாது. 

ஆட்காட்டி விரலில் அமைந்திருக்கும் ரேகை அமைப்பானது ஒரு பெரிய விசயத்தை சொல்லும் என்கிறார்கள். அதைப்போல இந்த ரேகை அமைப்பு எவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிறார்கள். இதனால்தான் படிக்காத காலத்தில் கை ரேகையை நகல் எடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கை ரேகைக்கும் மரபணுக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க கூடும் என்றால் இரட்டை குழந்தைகளின் ரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். இது குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவை. 

ஆனால் இதை மட்டும் நம்பி அவரவர் வாழ்க்கையை தொலைத்தல் என்பது மிகவும் தவறு. எனவே இந்த கைரேகை, சோதிடம் எல்லாம் ஒரு குறியீடாக மட்டுமே வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. 

(தொடரும்) 

Post a Comment

கம்யூனிசமும் கருவாடும் - 7


 கம்யூனிசம் என்றால் என்ன, அது என்ன சொல்ல வருகிறது என்பது அத்தனை சிரமம் இல்லை. இந்த கம்யூனிசம் குறித்து ஒரு தளத்திலிருக்கும் விசயத்தை அப்படியே எழுதி, தேவையிருப்பின் மேற்கோளிட்டு காட்டுவேன், அதாவது திருடி எனது தளத்தில் பிரசுரித்து கம்யூனிச பிரச்சார பதிவாக இருக்க வேண்டாம் என்பதால் எனது எழுத்துகளின் மூலமே கொடுக்கிறேன். இந்த கட்டுரையின்  கடைசி அத்தியாயத்தில் அன்றைய தினத்தில் என்ன மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் பற்றி நினைத்தார்களோ அது குறித்த சிந்தனை இப்படியாக முடிகிறது. 

'கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.'' நன்றி மார்க்சிஸ்ட் தளம்


இன்றைய அனைத்து கம்யூனிஸ்ட்கள் இதை எல்லாம் படித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் எதற்காக கம்யூனிசம் ஆரம்பித்தது என்கிற அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு இவர்கள் எல்லாம் கம்யூனிசத்தில் இணைந்து இருந்தால் இவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று பெருமிதப்பட்டு கொள்ளலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. இதனால் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கு அதாவது தங்களை தாங்களே அர்பணித்து கொண்டவர்களுக்கு, இவர்கள் அவப்பெயரைத் தேடி தந்துவிடுகிறார்கள். 

சமூக அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஆதரவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சிகள் ஆரம்பித்ததுதான் மிச்சம். மாவோயிஸ்ட், நக்சலைட், யிஸ்ட் என யிஸ்ட் என கூவியதுதான் மிச்சம். அதுவும் கேவலம், இந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும், அந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும் என நாய்படாத பாடு பட்டதை கண்டு கம்யூனிஸ்ட்கள் குறித்து நகைப்பு மட்டுமே மிஞ்சும். அதுவும் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களது பைக்கு எத்தனை பைசா வரும்படி கிடைக்கும் என முதலாளிகள் அறைக்கு சென்று கை கட்டி பேசி வந்ததை பார்த்தது இருக்கிறேன். இதே கம்யூனிஸ்ட்கள் வெளிநாட்டு கூலிப்படைகளாக அலைந்து திரிவது கூட அவமானம். இவர்கள் இங்கே அமைப்பு நடத்த எவரோ பணம் தருகிறார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க கூடும். உழைக்காமல் பணம் எப்படி வரும்? இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அத்தனை கஷ்டமில்லை. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் மொத்த கம்யூனிசத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. 

இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வெறுக்கின்ற பலர் இருந்தாலும் இந்த கம்யூனிசம் போர்வைக்குள் செல்ல மறுக்கிறார்கள். முதலாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கம். நானும் பாட்டாளி வர்க்கம் தான். நானும் கூலி வேலைதான் செய்கிறேன். எனது உழைப்பிற்கு அதிகமோ, குறைவோ மாதம் மாதம் ஊதியம் பெற்று கொள்கிறேன். எனது உழைப்பில் கிடைக்கும் வரவுதனில் பங்கு எதுவும் எனக்கு கிடையாது. ஆனால் என்னை பாட்டாளி வர்க்கம் என சொல்லக்கூடாது, என்னை நடுத்தர வர்க்கம் என சொல்ல வேண்டும் என பிரிக்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவர் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டு பணம் அவரது கைகளில் இருந்து வருகிறது, அல்லது எங்காவது கடன் வாங்குகிறார். இந்த முதலீட்டு பணத்தையோ, அல்லது அவரது உழைப்புக்கு  அவர் உபயோகபடுத்தும் அறிவையோ இந்த பாட்டாளி வர்க்கத்தினர் பகிர்ந்து கொள்வதில்லை. இவர்கள் தங்கள் உடல் உழைப்பை மட்டுமே தருகிறார்கள். இதையெல்லாம் மறந்து இவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது கம்யூனிசம். 

முதல் அத்தியாயத்தில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த கம்யூனிச அடிப்படை சிந்தனையான அனைவரும் பொது என்கிற கொள்கையானது ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமை, அயர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவுடைமை நிலம் என சில குழு சமுதாயங்கள், கிராம சமுதாயங்கள் எல்லாம் இருந்து இருப்பதாக பல அறிஞர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு பின்னர் இந்த சமுதாய கட்டமைப்புகள் ஒழிந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட தொடங்கினர். இன்றைய நிலைமையில் இந்த வேறுபாடு அதிகமாகி பாட்டாளி வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் தோற்று போயினர். இந்த நிலைமை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அதிகமாகவே இருந்து இருக்கிறது. அவர் காலம் போகட்டும், ஆனால் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் குடும்பம் எப்படி தெரியுமா இருக்கிறது? இவர்களின் நிலம் எல்லாம் வெவ்வேறு. இவர்கள் வேலைக்கு ஆள் வைத்து கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் என கத்துகிறார்கள். பாவம் கார்ல் மார்க்ஸ். 

இந்த அத்தியாயத்தில் எப்படி பல வர்க்கங்கள், அதன் உட்பிரிவுகள் இருந்திருக்கிறது என மத்திய காலம், ரோம பேரரசு காலம் என குறித்து வைக்கிறார். நிலபிரபுத்துவம் அழிந்து நவீன முதலாளித்துவம் வந்தாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டும் அதற்குரிய புது நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளதாகவே மார்க்சும், இங்கெல்சும் ஆதங்கபட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்று வேண்டாமா என எதற்கு நாம் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். 

எப்படி இந்த முதலைத்துவம் அதாவது முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை கோடிட்டு காட்டுகிறார் மார்க்ஸ். ஒரு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, கடல்வழி அதாவது நன்னம்பிக்கை வழி பயணம் என பிற நாடுகளுக்கு செல்லும் வழியே இந்த பண்ணையடிமையிலிருந்து வெளியேறிய நகரத்தார் பலருக்கு இந்த முதலாளித்துவ கூறுகள் வளர்க்க வழிபோட்டது. அதோடும்ட்டுமில்லாமல் கிழக்கிந்திய, சீன சந்தைகள் என உலக பொருளாதார இயக்கமே இந்த சீர்குலைவுக்கு அடிகோலிட்டது என குமுறுகிறார் மார்க்ஸ். 

கைவினை குழுமம் இந்த சந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாததால், பட்டறை குழுமம் உருவானது. ஆனால் இந்த தனிதனி பட்டறைகள் தங்களது உழைப்பில் பிரிவினை கொண்டாடின. இந்த பட்டறைகளால் கைவினை குழுமம் நலிந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எப்படி ஒரு மனித சமூகம் தொழில்வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள புதிய புதிய வழிமுறையை கண்டது என்பதை குறிப்பிட்டு அன்றைய காலத்தில் எப்படி இந்த தொழில்முறை உருவாகின என்பதை விளக்குகிறார்கள் இருவரும். இந்த பட்டறை தொழில் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால் நீராவி, எந்திரங்கள் எல்லாம் உருவானது. கைவினை தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கத்தினர். அதற்கு அடுத்து பட்டறை தொழில் வைத்திருந்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அதையெல்லாம் தாண்டி இந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து தொழிலில் புரட்சி செய்தவர்கள் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர். 

சந்தை புரட்சியை ஈடுகட்ட தொழிற்புரட்சி உருவானது. அந்த தொழிற்புரட்சி தான் கம்யூனிசம் கருவாடாகிப் போனதற்கு காரணம். பொதுவாக ஒரு பொருளை உருவாக்கினால் அந்த பொருளானது பிற நாடுகளுக்கு பிற இடங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும், அதற்கு போக்குவரத்து மிகவும் அவசியம். கழுதையிலும், குதிரையிலும், மாடுகளிலும் என கட்ட வண்டி, குதிரை வண்டி என உருவாக்கி இருந்த காலம் போய், ரயில், கப்பல் போக்குவரத்து என தொடங்கியதால் இந்த உலக சந்தையில் முதலாளிகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 

இப்படியாக அந்த முதலைத்துவம் பற்றி மார்க்சும், இங்க்கேல்சும் கோடிட்டு காட்டுகிறார்கள். இந்த முதலைத்துவம் பல வர்க்கங்களை பின்னுக்கு தள்ளியது. அதோடு அரசியலும் வளர்ச்சி அடைந்தது, ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது. மேலும் இந்த அத்தியாயம் பல விசயங்களை அலசுகிறது. அதனை அடுத்து பார்ப்போம். 

இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

பிற்போக்காளர்கள் யார்? முற்போக்காளர்கள் யார்? 

முற்போக்கு சிந்தனை உடையவர்கள் எல்லாம் முதலாளிகள். பிற்போக்கு சிந்தனை உடையவர்களே பாட்டாளிகள். அந்த பாட்டாளிகளை சூறையாடி கொண்டு வருகிறோம். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது எவரின் குற்றம்? அந்த வளர்ச்சிக்கு துணையாய் நின்றது பாட்டாளிகளின் குற்றமா? உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலை இருந்ததால் உழைக்காமல் உயிர் துறக்க பாட்டாளிகளின் உயிர் ஒன்றும் போராளிகளின் உயிர் இல்லை. போராளிகள் எவரும் நிலத்தில் உழைத்து பணம் சம்பாதித்ததை வரலாறு குறிக்கவில்லை. இவர்கள் பாழாய் போன பாட்டாளிகளின் மிச்சம் மீதி இருந்த உழைப்பின் பலனையும் சுரண்டி தின்றார்கள். இதில் பாட்டாளிகளுக்கு பெருமை வேறு. எங்களுக்காக போராடுகிறார்கள் என. இந்த போராட்ட புரட்சிகர இயக்கம் தொடங்குவதில் பல காலம் தொலைந்தது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அதன் காரணமாகவே அவர் தொழிலாளர்களை ஒன்று கூட சொன்னார். போராளிகளை அல்ல. 

இது போன்ற சமூக சீரழிவு தொடங்கியபோது தங்களது நிலைமையை உணராமல் அதற்கு அடிபணிந்து நின்றது எவர் குற்றம்? உழைப்பை சுரண்டுகிறார்கள் என்கிற உணர்வே இல்லாம் வாழ்ந்த அவர்களுக்கு யார் இருந்தார் வழிகாட்டியாய், அல்லது இன்றும் எவர் இருக்கிறார் வழிகாட்டியாய். ஐம்பது ரூபாய்க்கு சம்பாதிக்க வேண்டியது, நாற்பது ரூபாய்க்கு தண்ணி அடிக்க வேண்டியது, பத்து ரூபாய்க்கு சீட்டு ஆட வேண்டியது. இப்படி தங்கள் குடும்பத்தின் மேன்மைக்கென உழைக்காமல், தங்களை தாங்களே அழித்து கொள்ள உதவிய பாட்டாளிகள் நிலைமையை தனது வசமாக்கி அரசியல் கட்சி அமைப்புகள் ஆடும் ஆட்டம் எத்தனை. தங்களுக்கு தாங்களே தலித் என்று ஒரு பட்டம் வேறு. சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள். நாங்கள் எல்லாம் தலித் இல்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் என சிந்தியுங்கள். இந்த போராட்டத்துக்குதான் கார்ல் மார்க்ஸ் கூப்பாடு போட்டார். அதாவது முதலாளிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது அனைவருமே உழைக்கவேண்டும் என்பது. அனைவருமே பலன் அடைய வேண்டும் என்பது. 

தலித் என்பவரோ, தாழ்த்தப்பட்டவரோ தனக்கு தகுதி இல்லாத நிலையினை, தனது குல தகுதியால் பெற்று கொள்வது என்பதை கம்யூனிசம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. (தொடரும்). 

Post a Comment

Sunday, 30 October 2011

விவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா?

திருமணம் முடித்துவிட்டு சேர்ந்து வாழ முடியாமல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து அதுதான் சரியான முடிவு என வாழும் சக மனிதர்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்துவிட்டு வேறு வழியின்றி அதுதான் சரியான முடிவு என சேர்ந்து வாழும் சக மனிதர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்ததன் அவசியம் புரிந்து வாழ்க்கையை மிகவும் மென்மையாக நேசித்து வாழும் சக மனிதர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். 

இப்படி பூங்கா ஒன்றில் எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த அந்த வயதானவரைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஒரு சில வாரங்கள் மட்டுமே அவரை பார்க்கின்றேன். அவர் எழுதி கொண்டிருந்ததை கண்டதும் எனக்குள் அவரிடம் பேச வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியது. எப்படி பேசுவது என்ற யோசனை எதுவும் எழுந்திடாமல் அவரது எழுத்துகளையே விசயமாக பேசினேன். 

'என்ன சார், எதுக்காக இப்படி எழுதிட்டு இருக்கீங்க?'

'என்னுடைய அனுமதி இல்லாம நான் எழுதுறதை படிக்கிறது உனக்கு அநாகரிகமா தெரியலையா?'

'சாரி சார், நீங்க எழுதினது சுவாரஸ்யமா இருந்துச்சி அதுதான் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருக்கவங்க படிக்கிற பேப்பரை எட்டி பார்க்கிறமாதிரி பாத்துட்டேன்' 

'உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு?'

'என்னோட பர்சனல் விசயத்தை நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படறது உங்களுக்கு அநாகரிகமா தெரியலையா சார்?' 

'நான் சொன்னதையே நீ சொல்ற, சொல்லு எத்தனை வருசம் ஆச்சு?'

'ஆறு வருசம் ஆச்சுங்க சார், சில நேரத்துல எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கும்'

'ஏன் கல்யாண வாழ்க்கை புளிச்சி போச்சா?'

'இல்லைங்க சார், சில நேரங்களில் அப்படி தோணுறது சகஜம்தானே, எத்தனையோ பிரச்சினைகள், எத்தனையோ சுமைகள், நம்மளை விட ரொம்ப கஷ்டபடறவங்க இந்த உலகத்துல வாழ்ந்தாலும் நமக்கு வந்திருக்கிற பிரச்சினைதான் பெரிய பிரச்சினைன்னு தோணுமில்லையா சார்? எதுக்குடா இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நினைப்பு வருமில்லையா சார்'

'வேலை பார்க்கிறியா, குழந்தை இருக்கா'

'ஆமா சார், வேலை பார்க்கிறேன், ஒரு ஆணு, ஒரு பொண்ணுன்னு ரெண்டு குழந்தை இருக்காங்க, உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே சார் அதுவும் பொதுவா இப்படி எழுதுறத பத்தி'

'நான் ரிடையர்டு ஆயி ஒரு வருசம் ஆகுது. எனக்கு ஆறு குழந்தைங்க. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. போன மாசம் தான் கடைசி பொண்ணு என் மருமகன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கனும்னு வந்து நிற்கிறா, கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை' 

'சாரி சார், உங்க மனைவி இருக்காங்களா சார்?' 

'ம்ம்... இருக்கா. ரொம்பவும் நொந்து போய் இருக்கா' 

'சார், தப்பா நினைக்கலைன்னா எதுக்கு உங்க பொண்ணு விவாகரத்து வாங்கனும்னு நினைக்கிறாங்க?'

'என்னோட மருமகன் நிறைய பொண்ணுகளோட பழக்கம் வைச்சிருக்காராம், இவகிட்ட அன்போட இருக்க மாட்டேங்கிறாராம், எப்பவும் சண்டை சச்சரவுதானாம், அதானால அவரோட வாழப் பிடிக்கலைன்னு வந்து நிற்கிறா'

அவரின் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் என்னை என்னவோ செய்தது. 

'சார், பொதுவா பிரச்சினைனா பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்கு போறது சகஜம் தானே சார், நீங்க எடுத்து சொன்னீங்களா, அதுவும் இத்தனை வருசம் நீங்க வாழ்ந்த வாழ்க்கை பத்தி சொன்னீங்களா சார்' 

'நீ சொன்னியே, எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைப்பு வரும்னு. அந்த மாதிரி ஒரு நாலு கூட நான் நினைச்சதில்லை. கல்யாணம் பண்ணின அடுத்த நிமிசமே அவதான் என் வாழ்க்கை, நான் தான் அவ வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். அதை என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப தெளிவாவே சொல்லிட்டேன், நாங்களும் அவகிட்ட ரொம்ப அன்பாவே சொல்லிப் பார்த்தோம் ஆனா ஒரு முடிவா இருக்கா, என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் தனியா இந்த பார்க்குக்கு வந்து போய்ட்டு இருக்கேன், எதாச்சும் முடிவு கிடைக்காதான்னு' 

'சார், நான் கூட என் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணிருவேன்னு பல தடவை மிரட்டி இருக்கேன், ஆனா பெத்த புள்ளைங்க, சுத்தி இருக்கற சமுதாயத்த பாத்து அந்த நினைப்பு செத்து போயிருக்கு சார், அதுபோல என் பொண்டாட்டியும் என்னை பல தடவை மிரட்டி இருக்கா. ஆனா இதுவரைக்கும் அப்படி ஒரு எல்லைக்கு போனதில்லை சார். அதுக்கு தைரியம் இல்லைன்னு இல்லை சார், அவசியமில்லைன்னு ரெண்டு பேருக்குமே தோணும் சார்' 

'அதுதான் ரெண்டாவது வாக்கியம். வேற வழியில்லைன்னு சேர்ந்து வாழறது. இப்படித்தான் ரொம்ப பேரு வாழறாங்க. வாழ்க்கையோட அடிப்படையை புரிஞ்சிக்க முடியாதவங்க. இவங்களை விட முதல் வாக்கியத்துல சொன்னவங்க எவ்வளோ மேல். வேற வழியில்லன்னு பிரிஞ்சி போயிருரவங்க. ஆனா இதனால பெருமளவு பாதிக்கப்படறது அவங்களோட குழந்தைங்க. நீ ரெண்டாம் வகை' 

'இல்ல சார், நான் மூன்றாம் வகை. என்னால பிரிஞ்சி போக முடியும் சார். அவளாலயும் பிரிஞ்சி போக முடியும் சார். ஆனா கல்யாணம் எதுக்கு பண்ணினோம் அப்படிங்கிறதை புரிஞ்சி வாழறோம் சார். கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கை ரொம்ப சிரமம் சார். ஒரே மொழி பேசத்தான் சார் ஆசை. சில நேரங்களில வாய்க்கிறது இல்லை, அதுக்காக மொத்த வாழ்க்கையும் தொலைக்க ஆசை இல்ல சார்'

'என் பொண்ணுக்கு இது புரியலையே, எல்லா பிள்ளைகளும் நல்லாத்தான் இருக்காங்க, இவ மட்டும் எதுக்கு இப்படி. மருமகன் கிட்ட பேசிட்டேன், அவர் விவாகரத்து பண்ண சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு, ஆனா இவதான் ஒரேயடியா வம்பா நிற்கிறா'

'சார், உங்க மருமகன் கிட்ட பிரச்சினை இருக்கு சார், அவரை  உங்க பொண்ணு விருப்பப்படி வாழ சொல்லுங்க சார், எல்லாம் சரியாப் போயிரும்' 

'நீ என்னப்பா சொல்ற'

'அனுபவத்தில சொல்றேன் சார். ரொம்ப ஈசி சார், விவாகரத்து பண்றது அவ்வளவு ஈசின்னா வாழறது கூட ரொம்ப ஈசி சார். புருஷன், பொண்டாட்டி இவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த கொம்பனும் உள்ள வரக்கூடாது சார். புருசனுக்கு பொண்டாட்டிதான் எல்லாம், பொண்டாட்டிக்கு புருஷன் தான் எல்லாம். ரொம்ப சிம்பிளான பார்முலா சார். இந்த அடிப்படை விசயம் எங்க கால வேகத்துல அடிப்பட்டு போகுது சார். அதுதான் எனக்கு கூட சில நேரத்தில எதுக்குடா கல்யாணம்னு தோணும் சார்'

'புரியலை, இதெல்லாம் தெரியாமலா இருக்கும். எல்லாம் படிச்சவங்கதான. ஆனா இந்த காலத்துல விவாகரத்து பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்களே. அது பிடிக்கலை, இது பிடிக்கலைன்னு காரணம் சொல்லி பிரிஞ்சி போறவங்களை பார்த்து வருத்தம் மட்டுமே மிஞ்சுது. அதுதான் முத வாக்கியம்'  

'வாழ்க்கைய வாழற பொறுமை இல்லை சார் எங்களுக்கு, அந்த பொறுமை தொலையறப்போ, சகிப்பு தன்மை அழியறப்போ எதுவுமே கண்ணுக்கு தெரியறது இல்லை சார். விவாகரத்து பண்றவங்க மன வலியோட தான் பண்ணிகிறாங்க, யாரும் விருப்பபட்டு செய்றது இல்லை சார். அது அத்தனை ஈசியான விசயம் இல்லை சார், உங்க பொண்ணுகிட்ட பேசலாமா சார்' 

'ம்ம்' 

வாழ்க்கையில் எதற்கு விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாதது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி எனவும் சொல்லி முடிக்கிறார்கள். சிலர் தங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொள்வது இல்லை. வறட்டு பிடிவாதம் பிடிக்கிறார்கள். விட்டு கொடுத்து போவது என்பது கடினமாகிப் போகிறது. ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு வலி. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. 

அந்த வயதானவருடன் சென்றேன். அவரின் மகளைப் பார்த்தேன். திருக்குறளை சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளுக்கு என்ன பிரச்சினையோ, அதையெல்லாம் மனம் விட்டு பேசுவாளா என சந்தேகத்துடன் அவளிடம் பேசினேன். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என நான் ஆரம்பிக்கும்போதே அவள் 'இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என முடித்தாள். 

'இங்க பாருங்க, கல்யாணம் பண்றது சேர்ந்து வாழத்தான், எந்த பிரச்சினைனாலும் பேசி தீர்த்துக்கோங்க, எதுக்கு இப்படி அடம் பிடிகிறீங்க' 

அவளிடம் நிறைய பேசினேன். அவளும் புரிந்து கொண்டவளாய் தலையாட்டினாள். 

'நீங்க உங்க கணவர் கிட்ட நிறைய பேசுங்க. என்கிட்டே சொன்னது போல அவர் கிட்டயும் மனசு விட்டு பேசுங்க. அவர் புரிஞ்சிக்கிரனும்னு எதிர்பார்க்காதீங்க, இப்படியெல்லாம் சொல்லணும், அப்படியெல்லாம் பேசணும்னு எதிர்பார்க்காதீங்க. புதுசா வாழ்க்கைய தொடங்குங்க' 

எனது பேச்சை அவள் கேட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வயதானவர் மிகவம் சந்தோசம் கொண்டார். அவர்களிடம் விடைபெற்ற மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். 

'இன்னைக்கு ஒரு பொண்ணு விவாகரத்து பண்ண போறதை நிறுத்திட்டேன் தெரியுமா'

'யாரு அது, உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. கண்ட கண்ட பொண்ணுகளோட பழகாதீங்கனு. பேசமா அவளோட போய் தொலைய வேண்டியதுதானே'

சே, இவளை போய் கட்டிகிட்டோமேன்னு மனசு கிடந்து அலை பாயத் தொடங்கியது. விவாகரத்து என்பது அத்தனை எளிதா என்ன? 

Post a Comment

Friday, 28 October 2011

ஏழாம் அறிவு

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் என்ன குறை இருக்கிறது, எதற்கு இப்படி படம் பார்ப்பவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் எனும் சத்தம் தமிழ் திரையுலகில், விமர்சன கூட்டத்தில்  மிகவும் அதிகமாகவே உண்டு. எதுக்குதான் இப்படி பணத்தை செலவழிச்சி குப்பை படம் எடுக்கிறாங்களோ என குறைப்பட்ட படங்கள் தமிழில் அதிகமாகவே உண்டு. நாம் நமது பணத்தை செலவழித்து ஒரு படத்தை மட்டுமல்ல, எந்த ஒரு விசயத்தையுமே செய்யும்போது ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விசயங்கள் இருந்தால் அதை தூக்கிப் பிடிப்பதுதான் மனித எண்ணத்தின் இயற்கை. அதைவிட தன் மொழியில், தன்னால் இயலாத ஒன்றை ஒருவர் செய்து காட்டுகிறாரே என்கிற எரிச்சல் நிறைய பேருக்கு தமிழ் உலகில் உண்டு.

எதற்கெடுத்தாலும் இது அங்கே இருந்து காப்பி அடிச்சது, இங்கே இருந்து எடுத்து போட்டது என புலம்பி தள்ளுபவர்கள் மத்தியில் ஒரு திரைப்படம் அது சொல்ல வந்த விசயத்தை விஷமமாக்கி காட்டும் பண்பு நம்மிடம் அதிகமே உண்டு. அதைப்போல ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பதை பாலானது எப்படி தன்னிடம் இருக்கும் இனிப்பை அமிலமாக்கி தன்னை திரித்து கொள்கிறதோ அதைப்போல தங்களை தாங்களே குற்றம் சொல்லி தமிழர்கள் தலை குனிந்து கொள்கிறார்கள்.

நமது தமிழ் திரையுலகம் மாற வேண்டும், ஆங்கில படங்களுக்கு இணையாக வளர வேண்டும் என்கிற ஒரு கோட்பாடு எல்லாரின் மனதிலும் உண்டு. அதாவது கதை இருக்க வேண்டும், திரைக்கதை சீராக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஒரு நல்ல விசயத்தை மிகவும் தெளிவாக சொல்ல வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் பண்பாடு குறித்த, உறவுகள் குறித்த கதைகள் மக்களின் ரசனையை அதிகம் ஈர்த்தன, சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள் என பாராட்டப்பட்டன. இன்றும் கூட உறவுகள், காதல், நட்பு பற்றிய படங்கள் சிறந்த திரைக்கதை வடிவத்துடன் வந்தால் மக்களால் நேசிக்கப்படுகின்றன. காதல் இல்லாமல் கதை சொல்ல முடியாது என்பதுதான் நமது தமிழ் திரையுலகம் கண்ட ஒரு வெற்றி படிவம். 

பொதுவாகவே நமது முன்னோர்கள் பற்றிய சிந்தனை நம்மில் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் சிந்தனைக்கு எட்டிய விசயங்களை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி சென்றதால் மூட நம்பிக்கை மடையர்கள் என அவர்கள் திட்டப்பட்டார்கள். இதில் சித்தர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். போதி தர்மர் என்ன பெரிய போதி தர்மர்? புத்த மதம் வேறு நாடுகளில் பரவியது, இந்தியாவில் இல்லாமல் ஒழிந்து போனது. இந்து மதத்தின் கோட்பாடுகளை புத்த மதம் திருடியதுதான் என்பார் பலர். ஆனால் புத்த மதத்தின் மிகவும் மென்மையான கடவுளை எதிர்க்கும் கோட்பாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என உலகெங்கும் வீரம் பாராட்டியவர்கள் தமிழர்கள் என்பதை பாடப் புத்தகத்தில் கூட வைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் சிற்ப கலை, நுட்ப கலை என பல விசயங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 

புராணங்களில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நம்மவர்களால் கேலி கூத்தாக்கப்படுவது உண்டு. அதெல்லாம் எப்படி சாத்தியம், இதெல்லாம் எப்படி சாத்தியம் என வெட்டியாக கூவிவிட்டு போய்விடுவார்கள். கூடு விட்டு கூடு பாயும் கலை அறிந்த திருமூலர், சகல மருத்துவங்களையும் சொல்லி சென்ற போகர். இந்த சித்தர்கள் பற்றிய வரலாறு மிகவும் விசித்திரமான, நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும். நாம் எப்பொழுதும் நம்மை பெருமை படுத்திப் பார்ப்பதில்லை என்பதுதான் இயற்கையாக நடக்க கூடிய விசயம்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், அதாவது பணம், நகை, கலை உட்பட எல்லாம் வெளிநாடுகளில் தான் பெரும் பரவலாகப் பேசப்படுகிறது. தியானத்தை, யோகா பயிற்சி முறையை, எண்களை தந்தது இந்தியாதான் ஆனால் அதை கற்று கொண்டிருப்பது உலகில் உள்ள மக்கள். நாம் பெருமைப்பட்டு கொண்டு நாமும் கற்று சிறக்க வேண்டும். உலகப் பொதுமறை என்பது திருக்குறளுக்கு மட்டுமே கிடைத்த பெருமை, எந்த ஒரு நூலுக்கும், அதுவும் மத நூலுக்கும் கூட அப்படி ஒரு பெருமை கிடையாது. 

தமிழ் பற்றிய பெருமையை தமிழர்கள் நாம் தான் பேச வேண்டும். தம்பட்டம் என்பது வேறு. இப்படியெல்லாம் இருக்கிறது என தன்மையுடன் சொல்வது வேறு.  சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்களை எவரும் காப்பி அடித்தான் என சொல்லி புலம்புவதில்லை. ஒரு அவதார் படம் வந்தபோது அந்த படத்தின் அடிப்படை கதையம்சம் இந்தியாவில் இருந்துதான் திருடப்பட்டது என்பாரும் உளர். பகவத் கீதை சொல்லும் ஒரு அரிய வாசகம் என ஒரு தமிழரால் எழுதப்பட்ட 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 

அடுத்தது, படிச்சவன் எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுறான் அப்படின்னு ஒரு பேச்சு. வெளிநாட்டுக்கு போனவங்கள எத்தனை பேரு பெரிய சாதனையாளர்கள் அப்படின்னு பேரு எடுத்து இருக்காங்க. இந்தியாவில வசதி இல்லை, ஊழல் அது இது அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் இன்னும் பலர் இந்தியாவில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்ததை விட அவர்கள் நிறையவே சாதித்து இருக்கிறார்கள். வெளிநாடு வேண்டாம் என வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி தள்ளியவர்களை நான் கண்டதுண்டு. அது எதற்கு,  படிக்காதவங்க கூட வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் பொருளாதார வேறுபாடு. திரை கடலோடி திரவியம் தேடு என சொல்லி வைத்த சமூகம் நமது சமூகம் தான். அதைப்போலவே உலகில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றார்கள் என்கிறது வரலாறு. இது போன்ற குற்றசாட்டுகளை, நமது மக்களை நாமே மதிப்பது இல்லை என்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் படத்தில் வருவது சகஜமாகிவிட்டது. 

ஐந்து உணர்வுகள் தான் உயிரினங்களுக்கு பொது, அதாவது பார்க்கும் தன்மை, கேட்கும் தன்மை, தொடுதல் உணர்வு, சுவை உணர்வு மற்றும் வாசம் உணர்வு. சில உயிரினங்களுக்கு இந்த உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். சில உயிரனங்கள், காந்த சக்தி, மின் சக்தி போன்ற வேறு பல சக்திகளை உணரும் தன்மையும் உண்டு என சொல்வார்கள். நாய் ஊளையிடுது, நரி ஊளையிடுது என அதற்கு காரணம் காட்டிய தன்மை நம்மில் உண்டு. மேலும் பல உணர்வுகள் நமது உடலுக்குள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. அதாவது நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பது இந்த உணர்வுகளின் அடிப்படையில் தான். நமது மூளை செயல்பாடு நரம்புகள் மட்டும் வேதி பொருட்களினால் நடைபெறுகிறது என்பதுதான் இப்பொழுது நாம் கண்டு கொண்ட ஒரு விசயம். 

இதையெல்லாம் தாண்டி இப்பொழுது மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி பெருமளவில் நடத்தபடுகிறது. இது மிகவும் அளப்பற்கரிய முன்னேற்றம். எந்த மரபணு எந்த புரதத்தை உருவாக்கும் என்பது வரை நமது அறிவியல் சென்று கொண்டிருக்கிறது. எந்த மரபணு எந்த நோயை உருவாக்கும் என்பது வரை நமது பயணம் செல்கிறது. ஆனால் இது மட்டுமே காரணி அல்ல என்பதும் அறிவியலுக்கு தெரியும். மேலும் ஒன்றை மறந்து விடுகிறார்கள், நமது அறிவு மரபணுக்களில் ஒளிந்திருப்பது இல்லை. எனது தாய்க்கு தெரியாத ஆங்கிலம் எனக்கு தெரியும். எனது தந்தைக்கு புரியாத மொழி எனக்கு புரியும். எனக்கு தெரியாத கலைகள் அவர்களுக்கு தெரியும். இது நரம்புகளின் செயல்பாடு என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். இந்த கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது.

லமார்க் கொள்கை 'தந்தையின் அறிவு பிள்ளைக்கு செல்லும் என்பது' டார்வின் கொள்கை 'எது உயிர் வாழ பயன் தருகிறதோ அந்த தன்மை மற்ற உயிருக்கு செல்லும் என்பது'  படிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது என நிலை வந்தால் படிக்கும் தன்மையுள்ள மரபணு உருவாகலாம் என்பதுதான் பரிணாமத்தின் சாரம்சம். ஆனால் இது மட்டும் காரணி அல்ல என்பதை நினைவு கொள்வோம். வாழ்வில் பல விசயங்களை சுருக்கி கொள்ள முடியாது.

உலகில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. மொழியில்லா ஒலி எழுப்புவது இயற்கை. மொழியுடன் ஒலி எழுப்பவது செயற்கை, அதாவது கற்று கொள்தல். போதி தர்மனின் ஆய கலைகளும் அவனது பேரனுக்கு செல்வது என்பது எல்லாம் கதை. ஆம் கதை. இது கதை. ஒரு ஊருல ஒரு ராஜாவாம் என சொல்லும் கதையை போல இந்த கதையை கதையாக பார்க்க வேண்டும். அதற்கடுத்து பொதுவாக இன்றைய கால கட்டத்தில் விமானத்தில் ஒரு மசால் பொடி எடுத்து கொண்டு போனால் கூட நாய் மோப்பம் பிடித்துவிடும். அதையெல்லாம் தாண்டிய ஒரு வரத்து போன சிந்தனை இந்த போதி தர்மனை சிதறடித்து விட்டது. போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தாலே இந்த ஏழாம் அறிவு பெரிதளவு பேசப்பட்டிருக்கும், அதைவிட்டுவிட்டு இவரை தெரியுமா என இண்டர்நெட்டிலும், சில பல இடங்களிலும் திருடிவிட்டு நான் தான் இவரை கண்டுபிடித்தேன் என கொடி தூக்குவது கொடுமை. இந்த போதி தர்மனை பற்றி விக்கிபீடியாவில் எழுதியவர் கூட இத்தனை தம்பட்டம் அடித்து கொண்டிருக்க மாட்டார். இன்னும் பல வரலாற்று மனிதர்கள் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள். பல புத்தகங்களில் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் களப்பிரர் காலம் பற்றிய சிந்தனையை கதையில் சொன்னது உண்டு. பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என அவர்களது வரலாற்றில் சொல்லப்பட்ட விசயங்கள் பெரும் காவியங்கள் தான். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இளங்கோ அரச குடும்பத்தில் இருந்தவர்தான். புத்தர் கூட அரசு குடும்பத்தை சேர்ந்தவர்தான். போதி தர்மர். இவரை தெரியுமா? அட அட! இந்த போதி தர்மரை விட சித்த வைத்தியம் எனும் முறை தெரிந்த பல குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன். பார்க்கப் போறா, பார்க்கப் போறா, ஐயோ பாத்துட்டா என தன்னை பார்க்காத ஒரு பெண்ணை தான் பார்ப்பதால் தன்னை பார்ப்பாள் என நினைக்கும் செயல்பாடு. அந்த கண்கள் மூலம் பிறரை மயக்கலாம் என்பது பொது விதி. கிறங்கடிக்கும் பார்வை. மயங்க வைக்கும் பார்வை. ஒருவரை நேருக்கு நேராக பல நிமிடங்கள் எங்குமே பார்க்காமல் பார்த்து கொண்டே இருங்கள். அதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து கொள்ளுங்கள். காதலால் கசிந்து உருகி, கண்ணீர் மல்கி. சிலரை பார்க்க அச்சம் ஏற்படும். சிலரை பார்க்க சந்தோசம் ஏற்படும். இந்த உணர்வுகளை கண்கள் எப்படி மூளைக்கு கடத்துகிறது? ஒளியின் தன்மையா? டெலிபதி என ஒன்றும் உண்டு. நாம் இங்கு ஒன்றை நினைக்க எங்கோ இருப்பவர் உணர்தல். இப்படி பல மர்மங்கள் அடங்கியது இந்த வாழ்வும், நமது எண்ணங்களும். அதைப் பற்றிய ஆராய்ச்சி உலகில் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில விசயங்கள் புரியாமலே இருக்கின்றன. ஆறாம் அறிவு என்பதே சுத்த மோசம். அதில் ஏழாம் அறிவாம். இருப்பது ஒரு அறிவுதான். அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது நமது எண்ணமும் செயல்பாடும்.

ஆறாம் உணர்வு எனும் ஒரு படம் நமது தமிழரால் 'நைட் சியாமளன்' என்பவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த படத்தில் வரும் கதை எல்லாம் சாத்தியம் இல்லாத கதை. இறந்தவர்களுடன் பேசுவது, இறந்தவர்களை காண்பது என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆனால் அந்த கண்கட்டி வித்தையை நம்மில் பலர் உணர்வதாக சொல்வது உண்டு. எனது ஊரே பேய் ஊரு என்றுதான் சொல்லப்பட்டு உண்டு. அந்த கதையின் முடிவு அந்த இயக்குனரை பாராட்ட சொல்லும். சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

எந்திரன் எப்படி ஏமாற்றியதோ அப்படித்தான் பலரும் இந்த ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்து இருப்பார்கள். சிலரும் பாராட்டி இருப்பார்கள்.

அறிவியல் பக்கம் போக வேண்டும் எனும் ஆர்வத்துடன் பணியாற்றும் தமிழ் இயக்குனர்கள் சற்று திரைக்கதையில் கவனம் செலுத்துவதோடு இல்லாமல் நாலு டான்சு பாட்டு, ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, மூணு சண்டை காட்சி என கழுத்தறுக்காமல் அந்த நேரத்தையெல்லாம் திரைக்கதை அமைப்பில் செலவழித்தால் நலம். பாடல் எல்லாம் கேட்பதற்கு என இசை வடிவமாக மட்டுமே வெளியிடுங்கள். பாடலாசிரியர்கள் பிழைத்துவிட்டு போகட்டும்.

சரி இந்த படத்தோட விமர்சனம் எழுதலைன்னு நீங்க கேட்டா, கஷ்டப்பட்டு பல வருசம் உழைச்சி அட்டகாசமா ஒரு படம் எடுத்திருக்கோம்னு நினைச்சி பெருமைபட்டவங்க கிட்ட போங்கப்பா நீங்களும் உங்க குப்பை சிந்தனையும் அப்படின்னு சொன்னா அவங்களுக்கு வலிக்குமா வலிக்காதா? அது சரி இப்படி எழுதி என்னதான் சொல்ல வரேன்னு நீங்க கேட்டா நான் என்ன பண்றது. Post a Comment

Tuesday, 25 October 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? காட்டுமிராண்டி நாகரிகம்

உலகம் எப்படி படைக்கப்பட்டது என்பதற்கு திரும்பத் திரும்ப ஒரே விசயத்தையே சொல்லிட்டு இருக்கிறதுல அப்படி என்ன திருப்தியோ? உலகத்துல முக்காவாசி பேரு கடவுள்தான் அதுவும் அல்லாதான் இல்லை இல்லை பரம பிதாதான், இல்லை இல்லை பிரம்மாதான் உலகத்தை படைச்சாருனும், இல்லை இல்லை இது இயற்கையாக நடந்தது அதாவது இயற்கைத் தேர்வு அப்படினும் தெரியாத ஒன்னை இப்படித்தான் இருக்கும்னுசொல்லிட்டு இருக்காங்களே அவங்களை எல்லாம் என்ன பண்றது. 

என்ன பண்றது, அதுவும் ஒருத்தருக்கும் உண்மையான உண்மை தெரியாது, இது எப்படி எனக்கு தெரியும்? எல்லாம் யூகம் தான், ஆனா ஊர்பட்ட கதை எல்லாம் எல்லாரலாயும் சொல்ல முடியும் அப்படிங்கிறதுக்கு ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி சொன்ன விசயங்களை படிச்சிப் பார்த்தா விளங்கும். 

இப்படித்தான் ஒருத்தரோட பேசிட்டு இருந்தேன். நீங்க கடவுளை நம்புறமாதிரி தெரியலையேன்னு சொன்னாரு. எதை வைச்சி சொல்றீங்கனு நானும் கேட்டு வைச்சேன். உங்க பேச்சுல இருந்து தெரியுதுன்னு சொன்னாரு. சரி நான் அறிவியலை நம்புறேனு நினைக்கிறீங்களான்னு கேட்டேன். அப்படியும் தெரியலைன்னு சொன்னாரு. நம்பி நம்பி நாசமா போனவங்கதான் நம்ம மனித குலம், அதனால நான் எதையுமே நம்புறது இல்லை அப்படின்னு சொன்னேன். நீங்க உசிரோட இருக்கறதை கூடவானு கேட்டு வைச்சார். ஆமா, அப்படின்னு சொன்னேன். என்னை சரியான பைத்தியம்னு அவர் சொல்லிட்டுப்  போய்ட்டார். இப்ப நல்லா யோசிச்சி பாருங்க. உசிரு அப்படிங்கிறதுக்கு ஒரு விளக்கம் நாம சொல்லி வைச்சிருக்கோம். அதாவது விதிகளுக்கு உட்பட்டு வாழற வாழ்க்கை. இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும். இது இப்படி இருந்தா ஈர்ப்பு விசை. அப்படி இருந்தா எதிர்ப்பு விசை அப்படின்னு ஒரு பெரிய திட்டம் எல்லாம் போட்டு வைச்சிட்டோம், கணக்கு பண்ணி வைச்சிட்டோம். எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்காம். அறிவு, சிந்தனை எல்லாம் நம்மகிட்ட பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. 

சரி, நாம நினைக்கிற, பேசற விசயங்கள் எல்லாம் மத்தவங்க என்ன சொல்லி இருக்காங்க. அதை எப்படி சொன்னாங்க, எதை வைச்சி சொன்னாங்க அப்படிங்கிற அடிப்படையில்தான். உற்று நோக்குதல், ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல். இதுதான் வாழ்க்கையின் முழு கட்டாய சூழல். அப்படி நாம தொடர்பு படுத்தாம வாழப் பழகிகிட்டா பல விசயங்கள் அடிபட்டு போகும். ஆனா அது சாதாரண விசயம் இல்லை.

 இதுக்குதான் நம்ம ஆளுங்க அட்டகாசமா சொல்லி வைச்சாங்க. கல்லை கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லை காணோம். ஒரு கல்லில் செதுக்கப்பட்ட நாய் உருவம் அந்த சிற்பியின் திறமையால் உயிருள்ள நாயைப் போன்று தென்படுமாம். அட அட என்ன ஒரு சிந்தனை. ஆனா இதையே ஒரு நாய் எதிர்படும் போது, அந்த நாயை அடிக்க கல் தேடியபோது கல் காணவில்லை என்பது கூட ஒருவித சிந்தனைதான்.

ஆனா காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் இதெல்லாம் இல்லை. இனப்பெருக்கம், வயிற்றுக்கு உணவு. தனக்கு போட்டியாக வருபவர் எதிரி. இந்த காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் சிக்கி தள்ளாடும் மனிதர்கள் இன்றும் உண்டு. காட்டுமிராண்டிகள் நாகரித்தில் கல் மட்டுமே ஆயுதம். தற்போதைய மனிதர்கள் இந்த மனிச குலம் எப்படி உருவாச்சு, என்னவெல்லாம் செஞ்சாங்க அப்படிங்கிறதை ஆராய்ச்சி செஞ்சி பல விசயங்கள் சொல்லி வைச்சிருக்காங்க. நமக்கு முன்னால வாழ்ந்தவங்க இப்படியெல்லாமா இருந்தாங்க அப்படின்னு நாம நினைக்கிறப்ப பிரமிப்பு மட்டுமே மிஞ்சும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு சொல்லி வைச்சி பிரமிக்க வைக்கிறாங்க.

சரி திருடப் போவோம். முழு நீள சித்திரமா சொல்றதை விட இரத்தின சுருக்கமா சொல்லி வைச்சிருவோம். உணவு, உறக்கம் இல்லாம பல விசயங்களை தெரிஞ்சிக்க சுகமான வாழ்க்கையை எடுத்து எறிஞ்சிட்டு இந்த உலகம் பல விசயங்கள் தெரிஞ்சிக்கிரனும்னு போராடின மனிதர்களுக்கு நாம எப்பவும் மரியாதை செலுத்தனும்.

மனித குல வரலாறு பத்தி தெரிஞ்சிக்கனும்னா ரொம்ப பேரு நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் ஒரு விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கிரனும் அப்படிங்கிற ஆர்வம் தான். மத்தபடி இவங்க எல்லாம் பெரிய புத்திசாலிகளோ, அறிவாளிகளோ கிடையாது. உற்று நோக்குதல். ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல் அப்படிங்கிற ஒரு சிந்தனை மிக மிக முக்கியம். வெகு குறிப்பிட்ட சிலரே அறிவு சார்ந்த விசயங்களில் தங்களை அர்பணித்து கொண்டார்கள்.

ஒரு குழந்தைகிட்ட ஒரு பொருளை கொடுங்க. அந்த குழந்தை அந்த பொருளை அப்படியே வைச்சிருந்தா அந்த குழந்தை மங்குனி. அதை உடைச்சி பிரிச்சி மேஞ்சா ஒரு தேடல். அப்படி பிரிச்சி மேஞ்ச குழந்தையை அதட்டினப்புறம் அடுத்தவாட்டி பிரிச்சி மேயாம போனா இனி அந்த குழந்தை மங்குனி. அதாவது ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆர்வம் வந்து சேரும். ஆனால் காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் கல் ஒன்றுதான் கண்ணுக்கு தென்பட்டது.

இந்த கல்லை வைத்து என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் என்கிறது வரலாறு. ஏழு மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலம் தோன்றி இருக்கலாம் என்பது நிரூபிக்கபடாத ஒரு விசயம். ஆப்ரிக்காவில் மூன்று மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலத்தின் முன்னோர்கள் தோன்றியிருக்க கூடும் என்பதும் ஆராய்ச்சியின் வெளிப்பாடு. பல மனித குலம் அழிந்து போயிருக்கிறது என்பது ஆராய்ச்சி காட்டும் உண்மை.

காட்டுமிராண்டிகள் நாகரிகம் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

Post a Comment

Friday, 21 October 2011

தொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)


இருபத்தி நான்கு வயதாகும் விஷ்ணு ஒரு விசித்திரமான ஆர்வம் கொண்டவன். திடமான உடல். நன்றாக கலைத்து விடப்பட்ட தலைமுடி. மாதக்கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். கண்களில் அடக்க முடியாத ஒரு தேடல். நான்கு மணி நேர உறக்கம். இரவு வந்துவிட்டால் நட்சத்திரங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவான். நிலாவில் ஏதேனும் தெரிகிறதா என கண்களை கசக்கி கசக்கிப் பார்ப்பான். என்ன காரணமோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது வானமும், நட்சத்திரங்களும் அவனது மனதில் ஒருவித ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. அவனது குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதாகிப் போனது. பகலில் வயலில் வேலை செய்தது போக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களில் சென்று வானவியல் பற்றிய புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். மிக குறைந்த அளவிலான வான சாஸ்திரம் புத்தகங்களே நூலகங்களில் இருந்தன.

கடந்த ஏழெட்டு வருடங்களில் இவன் புத்தகங்களில் இருந்து எடுத்து குறித்து கொண்ட குறிப்புகள் இவனுக்குள் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்தன. எவரேனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கிடைக்கமாட்டர்களா எனும் ஏக்கத்தில் நட்சத்திரம் பற்றி பேசினால் நடிகர் நடிகைகள் பற்றி பிறர் பேசுவது கண்டு ஏமாற்றமே அடைந்தான். இரவு நேரங்களில் தோட்டத்தில் வேலை பார்க்க செல்லும் போது நிலவின் ஒளியை ஒரு இடத்தில் குவித்து வைக்க முடியுமா எனப் பார்ப்பான். வானமும், வயலும் என வாழ்க்கையில் வருடங்கள் மிக வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கடந்த வருடம் தான் கொரட்டூர் பஞ்சு ஆலையில் வேலைக்கு சேர்ந்தான்.

விஷ்ணுவுக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பித்தார்கள். கொரட்டூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சின்னவயல் எனும் ஊரில் எட்டு வரை படித்திருந்த ஜெயலட்சுமியை விஷ்ணுவுக்குப் பிடித்துப் போனது, ஜெயலட்சுமிக்கும் விஷ்ணுவைப் பிடித்துப் போனது. ஜெயலட்சுமி வெட்டப்படாத நீண்ட கூந்தல் உடையவளாய் இருந்தாள். அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதி ஆறு மாதங்களுக்கு பின்னர் என குறித்து வைத்தார்கள்.

பெண் பார்க்க சென்ற நாள் அன்றே தனது ஆர்வத்தை பற்றி ஜெயலட்சுமியிடம் பேசினான் விஷ்ணு. விஷ்ணுவின் ஆர்வத்தைக் கேட்ட ஜெயலட்சுமி முதலில் புரியாமல் விழித்தாள். பின்னர் ஒரு நாள் இது குறித்து அவளுடைய தோழியிடம் பேசியபோது அவளது தோழி ஸ்ரீவைகுண்டத்தில் வசிக்கும் வான ஆராய்ச்சி நடத்தும் வீரபத்திரன் என்பவர் பற்றிய குறிப்புகள் தந்தாள். இதனை ஜெயலட்சுமி விஷ்ணுவுக்கு தெரியப்படுத்தினாள். விசயம் கேள்விப்பட்ட விஷ்ணு வீரபத்திரனை சந்திக்க சென்றான். ஆய்வாளர்களுக்கே உரிய தோற்றத்துடன் இருந்தார் வீரபத்திரன். வழியெங்கும் வீரபத்திரன் பற்றி கேட்டுக் கொண்டே சென்றான் விஷ்ணு. விஷ்ணுவினை கண்டவர்கள் யாரோ ஆராய்சிக்காரன் என்றே நினைத்தார்கள். விஷ்ணுவின் ஆர்வத்தை கண்ட வீரபத்திரன் விஷ்ணுவிடம் சில புத்தகங்கள் தந்தார். தன்னிடம் இருக்கும் தொலைநோக்கியை அவனுக்கு காட்டினார். இந்த தொலைநோக்கியின் மூலம் வியாழன் கிரகத்தின் மேற்பகுதி வரை ஓரளவுக்குப் பார்க்க இயலும் என்றார்.

‘சார் ஏதாவது நட்சத்திரம் பற்றி சொல்ல முடியுமா?, என்னவெல்லாம் இந்த தொலைநோக்கி மூலம் பாத்து இருக்கீங்க என்றான் விஷ்ணு.
‘ஒன்னா, ரெண்டா கணக்கிலேயே அடங்காத எந்த நட்சத்திரத்தைப்  பத்தி சொல்றது, புத்தகங்களைப் படிச்சிப் பார், ஒரு மாசம் கழிச்சி வா என அனுப்பி வைத்தார். அவனது செல்பேசி எண்களை தனது செல்பேசியில் எழுதியவர் அவனது பெயரை Vishnu informer என குறித்து கொண்டார். அவர் கொடுத்த புத்தகங்கள் அவனால் வாசிக்கப்படாதவைகள். புரியாத ஆங்கிலத்தில் சில புத்தகங்கள். கடினப்பட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் புத்தகங்கள் சில. விஷ்ணு தன்னிடம் இருந்த கைகளால் எழுதப்பட்ட குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை கண்டான். அவன் வரும் வழியிலேயே வீரபத்திரன் விஷ்ணுவை அழைத்து குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை திருப்பி கொண்டு வந்து தருமாறு கூறினார். பாதி வழியில் சென்றவன் மீண்டும் வந்து கொடுத்து சென்றான். அவனுக்குள் அந்த குறியீடுகள் பற்றிய ஆர்வம அதிகமானது.

திருமண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. பஞ்சு ஆலையில் வேலை பார்த்த வேறு இருவரின் வாய்த் தகராறு, அவர்களுக்குள் அடிதடியில் போய் நின்றது. இந்த விசயம் கொரட்டூர் காவல் நிலையம் வரை சென்றது. கொரட்டூர் எஸ் பி, கோகுல் விசாரித்தார். விஷ்ணுவும் சாட்சியாக விசாரிக்கப்பட்டான். விஷ்ணு சொன்ன சாட்சியின்படி இருவருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் எஸ் பி கோகுல் தீர்ப்பு சொல்லி அனுப்பியவர் விஷ்ணுவை அழைத்து ‘அவங்களை காப்பாத்த நீ பொய் சொல்ற, என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கண்டித்து அனுப்பினார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை தேட ஆரம்பித்தான் விஷ்ணு. கொரட்டூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதென்றால் நாளில் பாதி பிரயாணத்தில் செலவாகிவிடும் என நினைத்து அங்கேயே வீடும் தேட ஆரம்பித்தான். இந்த விசயம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் விஷ்ணு தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

வீரபத்திரன் உதவியின் மூலம் அவரது ஆய்வகத்தில் Assistant informer என ஒரு வேலை தேடிக் கொண்டான்  விஷ்ணு. அவனுக்கு தங்குவதற்கு குறைந்த வாடகையில் ஒரு வீடும் ஏற்பாடு செய்தார். விஷ்ணுவின் உதவியால் வீரபத்திரன் உற்சாகமாக காணப்பட்டார். பொதுவாகவே வீரபத்திரன் ஆய்வகத்தில் இரவு பன்னிரண்டு மணி வரை தனியாய் இருப்பது உண்டு. குறியீடுகள் குறித்து விஷ்ணுவிடம் எல்லா விசயங்களும் சொன்னார் வீரபத்திரன். விஷ்ணுவுக்கு வீரபத்திரன் ஆய்வு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியது. அவனிடம் இந்த குறியீடுகள் அனைத்தும் தனது கணினியில் உள்ளது என்றும் அதனை காண ஒரு குறியீடு எழுதினால் மட்டுமே முடியும் என்றவர் அதனை தந்தார். S V 42 6J என்று சொன்னவர் தனது தந்தை பெயர், தனது பெயர், தனது பிறந்த வருடம் தனது மாதம் நாள் என குறித்து தந்தார். விஷ்ணு நம்பிக்கையுடன் பெற்றுக்கொண்டான், யாரிடமும் இந்த குறியீடு மட்டும் தர வேண்டாம் என கூறினார். உன் மீதான நம்பிக்கை காரணமாகத்தான் தருகிறேன் மேலும் இங்கே ஆய்வு புரிபவர்களிடம் இதனை பற்றி தான் எதுவும் கூறவில்லை எனவும், இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அவர்கள் விலைபேசி விடுவார்கள் என எச்சரித்தார் வீரபத்திரன்.  

வீரபத்திரனுடன் பல வருடங்கள் பணிபுரியும் ராகுலிடம் இந்த குறியீடுகள் குறித்த விசயங்கள் பற்றி ஒரு நாள் வாய் தவறி சொன்னான் விஷ்ணு. ராகுல் புரியாமல் விழித்தார். சுதாரித்து கொண்டு ஆமாம் ஆமாம் அது பிற நட்சத்திரங்கள் பற்றியது என்றார் ராகுல். ஆனால் இதைப் பற்றி ராகுல் அறிந்து கொள்ள அப்பொழுதுதான் முனைந்தார். தன் தவறு உணர்ந்தான் விஷ்ணு. இதனை ஒரு காவல் அதிகாரி மூலம் கண்டு பிடிக்க வேண்டும் என நினைத்தார் ராகுல். வீரபத்திரன் மேல் சந்தேகம் கொண்ட ராகுல் தனது நண்பன் கொரட்டூர் எஸ் பி கோகுலிடம் தகவல் தெரிவித்தார். எஸ் பி கோகுல் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தார். ஒருநாள் வீட்டிற்கு செல்லாமல் ஆய்வகத்திலேயே இருந்தார் ராகுல். இரவு பதினோரு மணியளவில் எஸ் பி கோகுல் ஆய்வகத்திற்கு வந்தார். ராகுலும், கோகுலும் வீரபத்திரனிடம் விசாரித்தார்கள். குறியீடு குறித்து கேட்டார்கள்.
அந்த குறியீடுகள் அமெரிக்காவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்படுபவை என்றும் இந்த உலகம் தோன்றிய உடன் உருவான நட்சத்திரம் பற்றிய தகவல்கள் என்றும் சொன்னார் வீரபத்திரன். இதை ராகுல் சற்றும் நம்பவில்லை. அப்படி எந்த ஒரு ஆய்வகத்துடனும் தொடர்பில்லை என ராகுல் சாதித்தார். தொடர்பிருப்பதாக வீரபத்திரன் ஆதாரங்கள் உண்டு என சாதித்தார். இதனைக் கண்டு வெறுப்படைந்தார் ராகுல். தன்னிடமே மறைத்த வீரபத்திரன் மேல் ஆத்திரம் பொங்கியது. எஸ் பி கோகுல் ராகுலை சமாதானம் செய்தார்.

‘கோகுல், விஷ்ணுனு ஒருத்தன் இங்கே வேலை பார்க்கிறான். அவன்கிட்ட நீ விசாரிச்சி இந்த குறியீடு எல்லாம் எப்படி பார்க்கலாம்னு கேளு. இனி இந்த வீரபத்திரனை சும்மா விடக்கூடாது, இந்த ரகசியம் நான் வெளியிட்டா எனக்குத்தான் பேரும் புகழும் கிடைக்கும் என்றார் ராகுல்

மறுநாள் விஷ்ணுவை பார்த்த கோகுல் ஆச்சர்யம் அடைந்தார். உடனே எனக்கு இந்த குறியீடு பத்தி விவரம் சொல்லு என்றவரிடம் நான் அவர்கிட்ட கேட்டு உங்களுக்கு அனுப்புறேன் என விஷ்ணு சொன்னான். ராகுலின் வேறொரு செல்பேசி எண்ணை தனது எண் என விஷ்ணுவிடம் தந்தார் எஸ் பி கோகுல். பின்னர் எஸ் பி கோகுல் ராகுலிடம் தகவல் சொல்லிவிட்டு போனார். நடந்த விசயத்தை வீரபத்திரனிடம் சொன்னான் விஷ்ணு. அதோடு தன்னை மணம் முடிக்க இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் சென்று தங்குமாறு கூறினான். வீரபத்திரனும் அன்றே ஸ்ரீவைகுண்டம் விட்டு சென்றார்.

விஷ்ணு கோகுலுக்கு Mr. கோகுல் S W H2 6F -இதுதான் குறியீடு கவலை வேண்டாம் –விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். அதோடு வீரபத்திரனுக்கும் Sir, எஸ் பி கோகுலிடம் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். இந்த இரண்டு விசயத்தையும் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இரண்டு தாள்களில் பிரின்ட் எடுத்த விஷ்ணு அந்த தாள்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டு போனான்.

அவன் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இருந்து கதவை பூட்டிவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் ராகுல் வீரபத்திரன் ஆய்வகத்தின் கதவை உடைத்து கணினியில் குறியீடுதனை எழுத கணினி திறக்க மறுத்தது. ராகுல் கோபம் அடைந்தார். தாள்களை எடுக்க வந்த விஷ்ணு வெளியில் நின்று அந்த நிகழ்வை படம் பிடித்தான். ராகுலை அழைத்தான் விஷ்ணு. அப்போது மேசையின் மீது கிடந்த தாள்களைப் பார்த்த ராகுல் தனது செல்பேசி ஒலிப்பதை எடுத்துப் பார்த்தார். செல்பேசியில் Vishnu Informer என்றிருப்பதை பார்த்த வேளையில் விஷ்ணு அதனையும் படம் பிடித்தான்.


‘ராகுல் சார், இனி நீங்க தப்பிக்க முடியாது என செல்பேசியில் சொல்லிவிட்டு அன்று இரவே ஸ்ரீவைகுண்டம் காவல் அதிகாரியிடம் புகார் தந்தான். இவன் தந்த புகார் அடிப்படையில் ராகுல் கைது செய்யப்பட்டார்

விவரம் அறிந்த எஸ் பி கோகுல் விஷ்ணுவிடம் ‘என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கொக்கரித்தார்.  வீரபத்திரன் ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி ஆய்வகம் வந்து சேர்ந்தார். வீரபத்திரன் தலைமையில் விஷ்ணுவின் திருமணம் இனிதே நடைபெற்றது.

எஸ் பி கோகுல். விஷ்ணுவை கைது செய்ய புது திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில் அவரை வேலையை விட்டு ஒரு வருடம் நீக்குவதாக ஒரு கடிதம் அவரது கைகளை தழுவியது. .


Post a Comment

Thursday, 20 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்

ஒரு நாட்டின் பொருளாதரத்தை நிர்ணயம் செய்வது அந்த நாட்டின் மக்கள் மட்டுமில்லாமல் அடுத்த நாட்டு மக்களும் தான். 

ஒரு நாடானது தனது தேவையினைப் பூர்த்தி செய்தபின்னரே பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் அந்த நாடு ஒரு முன்னேற்றமடைந்த நாடாக இருக்க இயலும். பொதுவாகவே ஒரு நாடு தனக்கு தேவையில்லாத ஒன்றை உற்பத்தி செய்து அதனை பிற நாடுகளிடம் விற்பனை செய்து தனது பொருளாதாரத்தை முன்னேற்றி கொள்ளலாம். 

மேலும் அந்த அந்த நாட்டின் தேவைகள் குறித்து அந்த அந்த நாட்டுக்கே சென்று உற்பத்தியை பெருக்கி தனது வளமையை வளப்படுத்தலாம். இப்படித்தான் உலக நாடுகள் தனது வர்த்தகத்தை பெருக்கி கொள்கின்றன. ஒரு நாட்டின் தேவை எது, அத்தியாவசியம் எது, அனாவசியம் எது என்பதை தீர்மானிக்கும் நிலையில் நாட்டின் தலைவர்களை விட நாட்டின் மக்களே இருக்கிறார்கள். 

இதை ஒரு வீடு என்பதில் இருந்து தொடங்கலாம். இப்பொழுது சௌகரியம், அசௌகரியம் என எதை விரிவுபடுத்துவத்து அல்லது விளக்கப்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு தங்குவதற்கு தேவையான ஒரு வீடு தேவை. இப்பொழுது வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட ஒரு அமைப்பாகவும் இருக்கலாம். ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவறை மற்றும் குளியலறை, ஒரு பொது அறை, ஒரு படிப்பு அறை என ஒரு வீடு போதுமானது. வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் பொது அறை படுக்கை அறையாக மாறிவிடும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்படி தனிதனி அறைகள் இல்லாமல் கூட வீடு அமையலாம். வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வசதியை பொறுத்து அமைகிறது. 

வீட்டிற்கு தேவையான பொருட்கள் அதாவது அமரும் நாற்காலி, மெத்தைகள், தொலைகாட்சி, வானொலி, சட்டி பாத்திரங்கள் என அவையும் ஒரு வகையில் அடக்கலாம். இப்பொழுது வீடு தயார். இதற்காக செலவழிக்கப்படும் பணம் எவ்வளவு? இந்த பொருட்களையெல்லாம் உற்பத்தி பண்ணுபவர்கள், வீடு கட்டுபவர்கள் என ஒவ்வொருவரின் தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு? கணக்கிட்டு பார்த்தால் வீடு கட்டுமான தொழிலாளர்கள் முதற்கொண்டு சித்தாள் வரையிலான பொருளாதாரம் தெரியும். இப்படித்தான் ஒரு நாட்டின் அமைப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

ஆனால் எந்த ஒரு நாடும் தன்னிடத்தில் அனைத்து பணத்தையும் கொண்டிருப்பதில்லை. இதனை உலக  நிதி அமைப்பிடம் கடனாக பெறுகின்றன. ஒவ்வொரு நாடுமே இத்தகைய கடன் பெற்று வாழ்க்கை நடத்துவதால் ஒவ்வொரு குடிமகனும் கடனாளிகள் என ஆகி விடுகிறார்கள். சிக்கன வாழ்க்கை, சில்லறை வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை, படோபகர வாழ்க்கை என தனது நிலைக்கு மேல் வாழ நினைப்பவர்கள் கஷ்டம் கொள்கிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் கனவுகள் இல்லாத, சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என முனைப்பு இல்லாத எவரும் முன்னேற முடியாது. 

தன்னிடம் போதிய அளவு நிதி இல்லாத பட்சத்தில் நாங்கள் கடன் வாங்க மாட்டோம் என ஒரு நாடு இருந்தால் அந்த நாடு முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கையில் இருப்பை வைத்து கொண்டுதான் எதையும் செய்ய முடியும் என நினைத்தால் எதுவுமே நடக்காது. வருவாயை பெருக்கும் வழியை அறிந்து கொண்டு செலவினங்களை கட்டுபடுத்த வகை செய்ய வேண்டும். 

வீட்டில் சமைத்து சாப்பிடுவது அசௌகரியம் என நினைத்தால் பையில் இருக்கும் பணம் அசௌகரியப்படத்தான் செய்யும். அதே வேளையில் அனைவருமே வீட்டிலேயே சாப்பிட நினைத்துவிட்டால் உணவகங்கள் எல்லாம் அவசியமில்லாமல் போய்விடும். அப்படி உணவகங்கள் அவசியமில்லாமல் போனால் அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த உணவகத்திற்கு தரப்பட்ட பொருட்கள் எல்லாம் நின்று போய்விடும். 

எல்லாருடைய தேவைகளையும் ஒரே நிறுவனத்தினால் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தின் காரணமாகவே சில பல மாற்றங்களுடன் பல நிறுவனங்கள் ஒரே பொருளை சற்று வித்தியாசப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு நிறுவனத்தின் தலைவரின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்தின் பெயரை வலுப்படுத்தவோ, வலுவிளக்கவோ செய்கின்றன. மக்களிடம் பிரசித்து பெற்றுவிட்டால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மென்மேலும் வலுவடைந்து அந்த நிறுவனம் ஒரு தனி இடத்தை இந்த போட்டியில் நிலை நாட்டிக் கொள்கிறது. 

சிறந்த பொருள் அதிக விலை என்பது வியாபார தந்திரம். அதே வேளையில் சிறந்த பொருள் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதை நாம் மறுக்க கூடாது. பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருள்களில் இருக்கும் நம்பிக்கை சின்ன சின்ன கடைகளில் விற்கப்படும் பொருள்களில் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. அது மனித இயற்கை. 

சிறுக சிறுக சேர்த்தல் அவசியம். எது எடுத்தாலும் ஒரு ரூபாய் என விற்பனைக்கு ஒரு நிறுவனம் தொடங்கினால் அதனால் லாபம் அதிகமா, நஷ்டம் அதிகமா? அடுத்து சந்திக்கலாம். 

Post a Comment

Wednesday, 19 October 2011

தமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்

முத்தமிழ்மன்றத்தில் இருக்கும்போது ஏதாவது கருத்துப் பிரச்சினை வரும். அப்பொழுது எதற்கு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்கிற ஒரு ஆதங்கம் வந்து சேரும். பின்னர் யோசித்துப் பார்த்தால் அவருக்கு தெரிந்தது அவர் செய்கிறார் என்கிற ஒரு விசயம் எச்சமாக நிற்கும். இப்பொழுது கூட அந்த பதிவுகளை எல்லாம் படித்தால் சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே போனார்கள் அவர்கள்? 

அந்த மன்றத்தில் பல உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தாலும் பங்களிப்பார்கள் மிகவும் குறைவு. இரண்டாயிரத்து ஆறாம் வருடத்தில் அங்கே இணைந்த நான் இதுவரை பத்தாயிரம் பதிவுகள் பதிந்து உள்ளேன். அதில் ஒரு வரி பதிவுகளான நன்றிகள், மறுமொழிகள் மிக அதிகம். அங்கே இருந்து இந்த வலைப்பூவில் நான் கொண்டு வந்து சேர்த்ததில் ஐநூறுக்கும் குறைந்த பதிவுகளே தேறின. அதிகம் தமிழ் வாசித்தது முத்தமிழ்மன்றத்தில் தான். பின்னர் தமிழ்மணத்தின் மூலம் பல தமிழ் பதிவுகள் வாசிக்கத் தொடங்கினேன். ஆச்சர்யமூட்டும் வகையில் பல எழுத்துகள் இருந்தாலும், நகைச்சுவை பதிவுகளும், சர்ச்சைக்குரிய பதிவுகளுமே அதிகம் ஈர்த்தது. காரணம் அது மனித இயல்பு. 

பொதுவாகவே சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து, சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து எதுவும் எழுதுவதில்லை. பல பிரச்சினைகள் பார்த்து இருந்தாலும் எல்லாம் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடும் என்பதன் காரணமாகவே. இப்படி பிரச்சினைகள் வரும்போது அது குறித்து எழுதி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவர்கள் பலர் உண்டு. ஒரு பிரச்சினை பதிவுலக பிரச்சினை ஆகிவிடும் அளவுக்கு அதிகம் பேசப்படும், பின்னர் வேறு விசயங்களுக்கு சென்று விடுவார்கள். அப்பொழுதுதானே எழுத்து பயணம் தொடரும். எத்தனை நாளுக்குத்தான் ஒரே விசயத்தை பற்றி எழுத்து போர் நடத்துவது. இதனால் தமிழ் பதிவர்கள் குறித்த சிந்தனை ஒன்று நானும் எழுதியது உண்டு. ஒரு கூட்டணியாக வலம் வரும் பதிவர்கள் ஒன்றுமில்லாத விசயத்தை கூட பலரும் படிக்கும் வகையில் அதை பெரிதுபடுத்திவிடுவார்கள். அதில் தவறும் இல்லை. ஏனெனில் நோக்கம் என்பது எழுதுவது. அவ்வளவே. வாசிக்கும் வாசகர் எதை வாசிப்பது, எதை வாசிக்க கூடாது என்பதை அவரே  தீர்மானம் செய்து கொள்ள வேண்டியதுதான். 

இதில் இன்ன இன்ன பதிவர் இப்படிப்பட்டவர் என்கிற தனி முத்திரையும் உண்டு. இந்து மதத்தை கேலி செய்யும் ஒரு கூட்டம் உண்டு. ஆனால் அதைப்பற்றி எதிர் பதிவு போடும் அளவுக்கு நிறைய பதிவர்கள் கூட்டு சேர்ந்ததை கண்டதில்லை. மதம் சார்ந்த, இயக்கம் சார்ந்த, அமைப்புகள் சார்ந்த, நட்புகள் சார்ந்த தளங்கள் நிறையவே உண்டு. அவையெல்லாம் ஒரு சாதாரண வாசகர் எனக்கு வெளிச்சம் போட்டு தந்தது இந்த தமிழ்மணமே. 

இந்த தமிழ்மணத்தில் இணைந்த பதிவர்கள் பலர் எழுதாமலேயே நிறுத்தி இருக்கிறார்கள். எதாவது பிரச்சினையின் போது விலகியும் போய் இருக்கிறார்கள். இதனால் தமிழ்மணம் இழந்தது ஒன்றுமில்லை. எழுதுபவர்கள் இழக்கிறார்கள். தனது கருத்துகள் பலருக்கு செல்லும் வழியை தாங்களே அடைத்து கொள்கிறார்கள். ஒரு நாட்டுக்கு தலைவர் அவசியம். ஆனால் அந்த தலைவரை விட மக்கள் அவசியம் எனில் தலைவர் எதற்கு? எத்தனையோ மிக சிறந்த பதிவர்கள் இந்த திரட்டிகளில் எல்லாம் இணைத்து கொண்டதில்லை. மிகவும் பிரபலமான நபர்கள் எவருமே தங்களை திரட்டியில் சேர்த்ததும் இல்லை. இணைய வழியில் எழுதாதபோது எழுத்தாளர்கள் இருக்கத்தானே செய்தார்கள். 

விமர்சனம் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என சொல்பவர்கள், பிறர் விமர்சிப்பதை தாங்கி கொள்ள மறுத்துவிடுகிறார்கள். 

நகைச்சுவையாகத்தான் இருந்தது. தமிழ்மணத்திற்கு சமீபத்திய பிரச்சினைக்கு தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்தே கண்டனம் தெரிவித்தது. இப்படி எதிர்ப்பை தமிழ்மணத்தில் இணைக்காமல் எழுதி இருக்க வேண்டும். நாங்களும் படித்து இருக்கமாட்டோம். மேலும் இந்த பிரச்சினை தங்கள் சுயத்தை உரசிப் பார்த்துவிட்டது என தெரிந்து இருந்தால் தமிழ்மணம் பக்கமே எட்டிப் பார்த்து விடக்கூடாது. ஆனால் யார் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என தமிழ்மணத்தில் தேடி தேடி பதிவு போடுகிறார்கள். இப்படி அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த தமிழ்மணம் வேண்டும்? இது போன்றவர்களை முட்டாள் பதிவர்கள், வெட்டிப் பதிவர்கள், வீண் பதிவர்கள் என்று எல்லாம் இப்போது நான் சொன்னால் இவர்கள் வருந்தமாட்டார்களா? அதோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தை தடை செய்வார்களாம். தமிழ்மணம் தார்மீக மன்னிப்பு கேட்கவேண்டுமாம். வெங்காயங்கள் என இவர்களை திட்டினால் வருந்தமாட்டார்களா? தமிழ்மனங்கள் வருந்துகின்றனவாம். எத்தனை இழிவாக, நாகரிம் அற்று  எல்லாம் எழுதிய பதிவுகள் இதே இணைய வீதியில் சிதறித்தான் கிடக்கின்றன. அதில்தான் நான் மிதிப்பேன் என்றால் யாருக்கு என்ன கவலை? தெருவுக்கு தெரு, நாட்டுக்கு நாடு ஒருவரை ஒருவர் மதத்தினால், சாதியினால் கேவலப்படுத்துவதை மதப் போர்வையில், சாதிப் போர்வையில், ஆணாதிக்கப் போர்வையில் ஒளிந்திருக்கும் மனித மிருகங்கள் குறித்து எந்த கவலையும் இல்லை இவர்களுக்கு. ஒரு வேலை உணவு க்கு வழி இல்லாமல், வானம் பொய்த்து, பூமியும் பிய்த்து வாடும் நாடுகள் பற்றிய அக்கறை இல்லை எவருக்கும். எந்த வாசகத்துக்கு சண்டை தொடங்கியதோ அந்த வாசகத்திற்கே அர்த்தம் தெரியாத சடங்களை குறித்து இறைவன் இப்போது என்ன நினைத்து கொண்டிருக்கக் கூடும்? தவறு செய்தவரை கூட்டமாக குறி வைத்து தாக்கியவர்கள் கூட குற்றவாளிகள். மன ஒழுங்கு இல்லாதவரிடம் இருந்து ஒதுங்கிப் போகக் கூடியவரே புத்திசாலி. ஒரு குற்றம் தொடங்கி ஓராயிரம் குற்றங்கள் ஏற்பட எவர் காரணம்? தான் தவறு செய்தேன் என பிறர் சொல்லி தெரிகிற அளவுக்கு ஒருவரின் மனநிலை இருக்குமெனில் அவரை எப்படி திருத்துவது? 

அதெல்லாம் இருக்கட்டும். ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்கு மொத்த நிர்வாகம் எதற்கு பங்கு ஏற்க வேண்டும்? முதலில் தனிமனிதன் தவறுக்கு அவரே பொறுப்பு. நிர்வாகத்தில் அவர் கலந்து ஆலோசித்து பின்னர் செயல்பட்டாரா? நிர்வாகம் இதற்கு அனுமதி தந்ததா? நிர்வாகத்தில் இருப்பவர் பொறுப்புடன் செயல்படவில்லையெனில் நிர்வாகத்தின் பெயர் கெட்டுவிடும் என்பது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும். மொத்த நிர்வாகமும் இதேபோல் செயல்பட்டால் அந்த நிர்வாகம் குறித்து கண்டனம் எழுப்பலாம். அதைவிடுத்து நிர்வாகம் குறித்த கருத்துகள் கேலிக்குரியவையாக இருக்கும். 

மதம் சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் புண்படுத்துகின்றன. நம்பிக்கை சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் அச்சுறுத்துகின்றன. இறைவனுக்கு எதுவுமே வலிப்பதில்லை. ஆனால் இந்த இழிநிலை மனிதர்களுக்குத்தான் எல்லாமே வலிக்கின்றன, ஏனெனில் இறைவன் ஏற்படுத்தாத பல விசயங்கள் இவர் ஏற்படுத்தி வைத்திருப்பதுதான். இறைவன் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள், இவர் கொண்டிருக்கும் சாத்திர சம்பிராதயங்கள், அப்பப்பா. உலகம் பிளவுப்பட்டு போனதில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். பொருளாதாரம், நிறம், இனம் என இவர்களின் கொலைக்குற்றங்கள் கணக்கில் அடங்காது. 

புதிய பதிவர்கள், நடுநிலை பதிவர்கள், பிரச்சினைக்கு என போகாமல் எழுத்தே தலையாயப் பணி என இருப்பவர்கள் திரட்டிகளினால் பயன் அடைவார்கள். உங்கள் நிர்வாகி ஒருவரின் எழுத்து அவரது கருத்து. பொது இடத்தில் வந்து விட்டாலே பொல்லா வினையும் வந்து சேரும் என்பது நான் உட்பட அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டியதுதான்.

ஒரு எழுத்து ஒருவரை ஓரளவுக்கே அடையாளம் காட்டும். நேரில் பேசுங்கள், நேரில் பழகுங்கள். வாழ்க்கை சுகமாகும். சாந்தி நிலவும், சமாதானமும் நிலவும். 
Post a Comment

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)


சுவாசம் என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது. இந்த சுவாசம் ஒரு இயந்திர தன்மையாக இருக்கும்பட்சத்தில் அதிகளவு உபயோகமில்லை. ஆனால் அதே வேளையில் இந்த சுவாசத்தினால் ஒரு வேதிவினை நடைபெறும்போதுதான் இதன் முக்கியத்துவம் மிகவும் மனதில் கொள்ளவேண்டியது. 

மூச்சை அடக்கி வாழும் வாழ்க்கை என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம். தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. நாமோ ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறோம். 

தாவரத்தின் சுவாசம் இலையின் மூலமாகவே நடைபெறுகிறது. இலையில் இருக்கும் காற்றிடங்கள் இதற்கு உருதுணையாகின்றன. ஸ்டாமோடா எனப்படும் சிறு துளையானது தவாரங்கள் சுவாசிக்க உதவுகின்றன. 

ஒவ்வொரு உயிர் வாழ் இனமும் தனக்குள் வெவ்வேறு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. நமக்கு மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என நுரையீரல் அமைப்புடன் சுவாசிக்கின்றோம். இந்த மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளே ஆஸ்த்மா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும். 

இந்த அமைப்பானது பஞ்சு போன்று மெருதுவாக இருக்கும். சுவாசப்பைகள் மிகவும் சின்னதாக காணப்படும். இந்த சுவாசப்பைகள் வாயுக்கள் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சுவாசப்பைகள் சிறிதாக இருப்பதினாலும், ரத்த நாளங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் வாயுக்கள் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக செய்து கொள்கின்றன. இந்த நுரையீரலும், இருதயமும் இணைந்து பணியாற்றுவதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் பரிமாற்றமும், கரியமில வாயு வெளியேற்றமும் நடைபெறுகிறது. 

இந்த நுரையீரல் அமைப்பில் இருக்கும் திசுக்கள், நார், சுரக்கும் காரணிகள் என இந்த நுரையீரலை பாதுகாத்து கொள்ளும் வகையில் பல விசயங்கள் அமையப்பெற்று இருக்கின்றன. பொதுவாகவே நமது உடலில் இருக்கும் திசுக்களுக்கு தம்மை தாமே சரி செய்து கொள்ளும் செயல்பாடுகள் உண்டு. சரிசெய்யும் அளவிற்கு விட மிஞ்சும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. 

நமது உடலில் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் நமது ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குழுவில் உள்ள நியுட்ரோபில், பெசொபில், எசிநோபில், மேக்ரோபெஜ், மோனோசைட், லிம்போசைட் என்பவை பெருமளவில் உதவிபுரிகின்றன. இவையே நமது உடலில் உள்ள பிரச்சனைகளை சரிகட்டும் நிபுணர்கள். 

இப்படி நாம் இந்த நுரையீரல் அமைப்புடன் சுவாசித்து கொண்டிருக்க, மீன்களோ வேறு சுவாச அமைப்பு பெற்று இருக்கிறது. அவைகளுக்கு இந்த நுரையீரல் அமைப்பு கிடையாது. அதற்கு பதிலாக செதில்கள் மூலம் சுவாசம் அதுவும் நீரில் மட்டுமே சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. தவளைகள் தனது தோள்களின் மூலம் நீரிலும், சிறிய நுரையீரல் அமைப்புடன் நிலையத்திலும் சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. எறும்புகள் போன்றவை எல்லாம் இது எல்லாம் எதற்கு என நேரடியாக காற்றினை தனது செல்களுக்கே அனுப்பி வைத்து விடுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமும் இப்படி இருக்க ஆஸ்த்மா மனித குலத்திற்கே மட்டும் தானா பிரச்சினை? 

பிரணாயமம் பற்றி நமது முன்னோர்கள் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம். நமது சுற்றுப்புறம் மிகவும் சுத்தமானதாகவும், நமது சுவாசம் சீராகவும் இருந்தால் நெடுங்காலம் வாழலாம் என்பது அவர்களின் கணிப்பு. அது முற்றிலும் உண்மை. 

விஷம்தனை உண்டு அதிக நாள் உயிர் வாழ்வோர் உண்டோ? சுற்றுப்புற மாசுவினால் நாம் விஷத்தை உள்ளிழுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
நாம் எப்படி மூச்சு விடுகிறோம் என்பதை நாம் உன்னிப்பாக கவனித்து பார்த்தல் அதுவே ஒரு தியானத்திற்கு சமானம். குறிப்பிட்ட நேரத்தில் வலது நாசி புறமாகவும், குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி புறமாகவும், சில நேரங்களில் இரண்டு நாசிகள் வழியாக சுவாசம் செய்கிறோம் என எவரேனும் நம்மிடம் வந்து சொன்னால் நமக்கு வேலை அற்றவர்களின் வீண் வேலை என சொல்லத்தான் தோன்றும். ஆனால் எதற்கும் ஒரு நாள் இதற்கென நேரம் செலவிட்டுப் பார்த்தால் சொல்வதில் உள்ள சூட்சுமம் தெரியும். 

நாசியில் இருந்து தொடங்கும் இந்த பயணம் நுரையீரல் வரை சென்று அங்கிருந்து வேறு பயணம் தொடங்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவானது மூச்சுக்குழல் வழி சென்றிடாது ஒரு மூடி போன்ற அமைப்பு நம்மை பாதுகாத்து வருகிறது. ஏதேனும் மூச்சுக்குழல் வழியாக சென்றுவிட்டால் புரையேறிவிட்டது என இருமல் மூலமாக நாம் அந்த பொருளை வெளியேற்றி விடுகிறோம். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது நரம்பியல் மண்டலம் தான். இந்த நரம்பியல் மண்டலம் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன செய்வது என்ன செய்யக்கூடாது என ஒரு திட்டவட்டமட்டமாக பணிபுரிந்து வருகிறது. 

நமக்கு பயம் ஏற்பட்டாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ நமது சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நமது திசுக்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் ஆக்சிஜன். அதோடு மட்டுமல்லாமல் இருதயம் இதற்கென வேகமாக துடிக்கவும் செய்கிறது. அதற்கேற்றாற்போல் நமது சுவாசத்தன்மையும் ஈடு கொடுக்கிறது. 

இப்படிப்பட்ட சகல சௌபாக்கியங்களையும் கொண்டுள்ள நமது நுரையீரல் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் என்ன? மூச்சு திணறல் மூலம் அவஸ்தைப்படும் நபர்களின் அனுபவங்கள் சொல்லும் கதைகள் பல. இந்த விசயத்தை குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. சுவாசம் இல்லாவிட்டால் சுக வாசம் ஏது?Post a Comment

Tuesday, 18 October 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? படிச்சவரும் முட்டாளும்

 முன்னுரை  எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருசம் ஆகிப் போச்சு. இனிமே ஒவ்வொரு தொடரா எல்லாத்தையும் எழுதி முடிச்சிரலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதன் முதற்படிதான் இந்த வாழ்க்கையில் சீரழிவது எப்படி அப்படிங்கிற தொடரோட தொடக்கம். சமூக பிரச்சனைகளை பத்தி சமூகம் கவலைப்படட்டும். என் தொடரைப் பற்றி மட்டுமே நான் அக்கறை கொள்கிறேன் இங்கு. 

1. படிச்சவரும் முட்டாளும் 

படிச்சவர் யாரு? முட்டாள் யாரு? இது ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம். ஆனா எப்படி யோசிக்கிறது? 

படிச்சவர் அனாவசியமா யோசிப்பார் . முட்டாள் யோசிக்கவே மாட்டார் அப்படினு ஒரு பொது கருத்து வைச்சிப்போம். ஒரு பக்கத்துல படிச்சவரே  அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். மறு பக்கத்துல முட்டாளே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். இவங்க சொல்ற கருத்தை எல்லாம் எடுத்து ஒரு குறிப்பு வைச்சிப்போம். அப்புறம் யாரு படிச்சவர், யாரு முட்டாளு அப்படினு தெரிஞ்சி போயிரும். இவங்க பேசி முடிக்கிறவரைக்கும் நாம காத்திருப்பது சரிதானுங்களா, அதுதான் இல்லை. இவங்க பேசறதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்காங்க பாருங்க அவங்க தான் முட்டாளுங்க. இதுவும் சரிதானா, அதுதான் இல்லை. 

சரி, தமிழ் விக்கிபீடியாவில , ஆங்கில விக்கிபீடியாவில அப்படி இப்படி பீடியாவில் எல்லாம் போய் தேடித்தான் பாருங்க. படிச்சவர், முட்டாள் அப்படிங்கிறதுக்கு என்ன விளக்கம் அப்படினு. ஒரு மண்ணும் இருக்காது. எதுக்குனா இதை எல்லாம் ஒரு கட்டத்துக்குள்ள விளக்க முடியாது. இது ஒரு பெரிய வட்டம். சுத்தி சுத்தி வரும். 

படிச்சவர் : குறைந்தது ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். இவருக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை பாகுபடுத்தி பார்க்கத் தெரியும். சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவதில் சிறப்பானவர். 

முட்டாள் : இவருக்கு குறைந்தபட்சம் ஒரு மொழியை கூட எழுதவோப்  படிக்கவோ  தெரியாது. சமயோசிதமாக சிந்திப்பதில் சற்று குறைபாடு இவரிடம் இருக்கும். என்ன பேசுகிறார் என்பதற்கான சிந்தனை கூட இவரிடம் இருப்பதில்லை. 

சரி படிச்சவங்களுல முட்டாளுங்க இல்லையா அப்படினு சமயோசிதமா ஒரு கேள்வி வரும். முட்டாளுங்க படிச்சவங்க மாதிரி நடந்துக்க முடியாதா அப்படினு இன்னொரு கேள்வி வரும். இப்படி கேள்வி கேள்வி கேட்கறவங்க எல்லாம் படிச்சவங்கனு சொல்ல முடியாது. எதுக்குனா முட்டாத்தனமா கேள்வி கேட்கறவங்க முக்காவாசி பேரு படிச்சவங்கதான். 

ஆக மொத்தம் படிச்சவங்களுல முட்டாளுங்க இருக்காங்க. அவங்கதான் படித்த முட்டாள்கள். இப்ப இருக்கிற வாழ்க்கையில நூத்துக்கு ஐம்பது  சதவிகிதம் இப்படிப்பட்ட  படித்த முட்டாள்கள் தான் உலகை ஆக்கிரமிச்சிட்டு இருக்காங்க. மீதி ஐம்பது சதவிகிதம் படிச்ச விரக்தியில ஒன்னும் செய்ய முடியாதா அப்படிங்கிற மன அழுத்தத்துல இருக்காங்க. அவங்களும் ஒரு முட்டாள் கூட்டம் தான். ஆக இது, மொத்தத்துல ஒரு முட்டாள்களின் உலகம். இல்லை, இல்லை நான் முட்டாள் இல்லை, அப்படி இப்படினு நீங்க குதிச்சா நல்லா குறிச்சி வைச்சிகோங்க, நீங்கதான் உண்மையிலேயே  முட்டாள். 'எப்படி மன நிலை பிறழ்ந்தவர் தன மனநிலையை குறித்த சிந்தனையை அறிய இயலாதோ அதைப் போலவே முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தை ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை. அப்படி முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டாலும் முட்டாள்களாகவே வாழ்பவர்கள் இருப்பவர்கள் அதிகம்'.  

ஒரு பாட்டு கேள்வி பட்டுருப்பீங்க, அந்த பாட்டை இன்னொருதரம் கேட்டு பாருங்க. நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவனு நாலு பேரு சொன்னாங்க, ஏற்கனவே சொன்னவங்க ஏமாளியானாங்க, எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க. 

எப்படி சீரும் சிறப்புமா வாழ்க்கையில வாழறது அப்படினு புத்தி சொல்றதை விட, எப்படி சீரழிஞ்சி போறதுனு சொன்னா ரொம்பவே நல்லா இருக்கும். 

நல்லது கெட்டது பாகுபாடு படுத்தி பார்க்கிறவங்க நல்லவர், கெட்டவர் அப்படினு பிரிச்சி பார்க்கலாம். படித்த நல்லவர், படித்த கெட்டவர். நல்ல முட்டாள், கெட்ட முட்டாள். ஆனா எப்ப கெடுதலை குறித்த சிந்தனை இருக்கோ அவங்க முட்டாள் அப்படினு ஆயிரும், அதனால படித்த கெட்டவர் எல்லாம் சரியில்லை. அவர் முட்டாள். அதுதான் முன்னமே சொல்லிட்டமே முட்டாள்களின் உலகம் இது. படித்த, படிக்காத முட்டாள்களின் உலகம். 

சரி படித்த முட்டாளைத் தவிர்த்து முட்டாள்களுல, ஓரளவு சிந்திக்க தெரிந்த முட்டாள், அடி முட்டாள், வடிகட்டின முட்டாள் அப்படிங்கிற பிரிவினை எல்லாம் உண்டு. அதனால அவங்ககளை  எந்த பிரிவுல சேர்க்கிறது அப்படிங்கிற சிந்தனையை அப்புறம் பார்த்துக்கிரலாம். 

எதுக்கு இப்படி ஒரு விவரிப்பு அப்படினா வாழ்க்கையில் சீரழிய முதல் தேவை நீங்கள் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்படிப்பட்ட முட்டாள் என்பதை உங்கள் செயல்பாடுகள் தீர்மானிக்கும்.

இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் என்ன தெரியுமா? என்னதான் நான் இது முட்டாள்களின் உலகம் அப்படினு ஒரு பொது கருத்தை சொன்னாலும் உங்க கடமைனு ஒன்னு இருக்கு இல்லையா? அது என்னனா...

நீங்க முட்டாளா, இல்லையா அப்படிங்கிற ஒரு முடிவுக்கு இதுநாள் வரை நீங்க நடந்து கொண்ட முறையை, இப்ப நடந்துகிட்ட முறையை ஒரு அலசு அலசுனும். அது உங்க நடத்தை, படிப்பு, பிறர் கிட்ட எப்படி நடந்து கிட்டீங்க, துரோகம், நட்பு, காதல், கத்தரிக்காய், திருமணம், புடலங்காய், வியாபாரம், கல்வி, கலவி பொருளாதாரம், கடன், உடன், ரசிக கூட்டம், தொண்டர் கூட்டம் அது, இது அப்படினு ஒன்னு விடாம அலசனும். அலசிட்டு நீங்க முட்டாளா இல்லையானு ஒரு முடிவுக்கு வரனும், அப்படி நீங்க உங்களை முட்டாள் அப்படினு முடிவு கட்டிட்டா வாழ்க்கையில் சீரழியறதுக்கு உங்களை தயார் படுத்திட்டீங்கனு மார் தட்டி சொல்லிகிரலாம். 

அப்போ அடுத்த பாகத்துக்கு போலாமா? Post a Comment

Friday, 14 October 2011

தண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா

நியூட்ரினோ ஒரு போங்காட்டம் அப்படினு ஒரு தலைப்புல எழுத நினைச்சேன். அதைப் பத்தி மனசுல நினைச்சிட்டே இருக்கறப்ப சவால் சிறுகதை பத்திய அறிவிப்பு பார்த்தேன். சரி போங்காட்டம் அப்படின்னு ஒரு தலைப்பு வைச்சி ஒரு சிறுகதையை எழுதி முடிச்சிட்டேன். நியூட்ரினோவுக்கு போங்காட்டம் தான்.

எப்ப பார்த்தாலும் உலகை திருத்த வந்த உத்தம சிகாமணி மாதிரி எழுத்துல வேஷம் கட்டினா எதுனாச்சும் நடக்கவாப் போகுது. வாழ்க்கைய சீரியசாப் பார்த்தா அப்புறம் ஐ சி யு ல கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான் அப்படின்ற ஒரு அடிப்படை எண்ணம கூட வந்து சேரலை. என்ன செய்ய, செய்ய முடியாதவங்க சிந்திக்க மட்டும் செய்வாங்கன்னு சொல்லிக்கிற வேண்டியதுதான்.

பல மாசங்களா இந்த பதிவுலகம் பக்கமே அவ்வளவா எட்டிப் பார்க்கலை. எல்லாம் தலை போற காரியம்னு நினைச்சி, இந்த ஊரை சீர்படுத்த வந்த தியாக செம்மல்னு நினைச்சிகிட்டு அப்பப்பா ஒருவழியா ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் தலை போற காரியம் நிறைய இருக்கு. அப்ப அப்ப எழுதுவோம்னு அப்ப அப்ப நினைப்பு வரும்.

சரி, என்ன என்ன எழுதி வைச்சிருக்கொம்னு பார்த்தா ரொம்ப தொடர்கள் அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. ஒன்னு ஆரம்பிச்சி அதை தொடர்ந்து செய்யணும், இல்லேன்னா ஆரம்பிக்க கூடாது. அப்படி ஆரம்பிச்சிட்டா முடிச்சிரனும் அல்லது தொடர்ந்து வாரம் வாரம் எழுதணும். இப்படி எந்த நிர்பந்தம் இல்லாம, கொள்கையும் இல்லாம எழுதினா 'மொக்கை பாண்டி' அப்படின்னு ஒரு பட்டம் போட்டுக்கிரலாம்.

இப்படித்தான் ஒரு பில்டர் அங்கொரு இங்கொரு வேலைன்னு எல்லா வேலையும் வாங்கி வைச்சிகிருவானாம். ஒரு வேலையும் ஒழுங்கா முடிச்சி தரமாட்டானாம். இப்போ முடிக்கிறேன், அப்போ முடிக்கிறேனு இழுத்து அடிப்பானாம். அது மாதிரி எழுத்துல இருந்தா எழுத்து வசப்படுமா.

சரி இந்த நியூட்ரினோ எதுக்கு, தண்ணீர் வரம் தலைப்பு எதுக்கு. எல்லாம் அறிவியல் பண்ற கூத்து தான். எதையாவது சொல்லிட்டே இருந்தாத்தான் அறிவியல் பத்தி பரபரப்பா பேசுவாங்க.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ஒளியை விட வேகமாக செல்லும் பொருள் எதுவுமே இவ்வுலகில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை அப்படின்னுட்டு. இவர் சொன்னதை இதுவரைக்கும் யாருமே முறியடிக்க முடியலையாம். ஒளி தான் அதி வேகமாம். ஆமா இந்த ஒளி எது? இயற்பியல் பாடம் தான் எடுக்கனும். இந்த ஒளிக் கீற்றுகளில் மொத்தம் ஏழு வகையா பிரிச்சி இருக்காங்க, அதனுடைய அலை நீளத்தை கணக்கில் வைச்சி. அந்த அத்தனை ஒளியும் ஒரே வேகம் தானாம். இந்த ஒளியின் வேகம் வேறுபட்ட கனம் நிறைந்த பொருள்களில் செல்லும் போது குறையுமாம்.

சரி இந்த நியூட்ரினோ எங்கே இருந்து வந்திச்சி. என்ன பண்றது. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் அப்படின்னு படிச்சி வந்தவங்க கிட்ட அதையும் தாண்டிய பல அணு துகள்கள் இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும், அப்படித்தான் பல அணு துகள்கள் இருக்காம். அதுல ஒண்ணுதான் இந்த நியூட்ரினோ. இருந்துட்டு போகட்டுமே, இந்த நியூட்ரினோவா சாப்பாடு போடப் போகுது.

அது இல்லை பிரச்சினை, இந்த நியூட்ரினோ ரொம்ப வேகமாம். அதாவது ஒளியை விட மில்லி செகண்டு வேகமா போகுதாம். இதை உங்ககிட்டே விடறேன், நீங்களே அறிஞ்சி சொல்லுங்க அப்படின்னு பல வருசமா ஆராய்ச்சி பண்ணுன கூட்டம் அறிவிசிருச்சாம். சரி இப்போ அதுக்கென்ன அப்படினா, ஐன்ஸ்டீன் சொன்னது பொய், இதுவரைக்கும் சொல்லிட்டு வந்த பெரும் பிளவு கொள்கை எல்லாம் பொய் அப்படின்னு நிரூபணம் செய்யலாமாம். செஞ்சி...கால காலமா ஒன்னை சொல்லி இன்னொன்னை மாத்துரதுதானே நம்ம அறிவியலோட வேலை. அதுக்குத்தானே அறி இயல்.

இந்த செய்தி வந்த நேரம் பெரும் பரபரப்பு. இப்ப அப்படியே அடங்கி போச்சு. எதுக்குனா நாநோபார்ட்டிகில் அப்படின்னு கேள்வி பட்டுருப்போம். கடுகு சிறிசு காரம் பெரிசு அப்படிங்கிற மாதிரி ஒரு துகள் ரொம்ப சின்னதா இருந்தா அதனோட போக்குவரத்தே தனியாம். அது போல இந்த நியூட்ரினோ விதிகள் எதுவுமே பின்பற்றாதாம். நம்ம உடலுக்குள்ள கூட இப்போ இந்த நிமிஷம் பல நியூட்ரினோக்கள் கடந்து போகுதாம். ஆனா ஒளி நம்ம உடலை ஊடுருவுமா? அப்படி ஊடுருவிச்சினா எப்படி ஒருத்தரை ஒருத்தரை பார்க்கறது. இந்த நியூட்ரினோ ஒளியை விட வேகமா இருக்க வாய்ப்பு இல்லைன்னு சொன்னாலும் அறிவியல் வித்துவான்கள் வேற யாராச்சும் ஆராய்ச்சி செஞ்சி சொல்லட்டும்னு இருக்காங்க.

அப்புறம் இந்த கோமெட்டு. இது பண்ற அட்டூழியம் தாங்க முடியலை. கால் கடுக்க நடந்து தலையில ஒரு குடம், இடுப்புல ஒரு குடம் அப்படின்னு தண்ணீ சுமந்து வரக்கூடியவங்க்களை நினைச்சா எவ்வளவு கஷ்டம். அதுவும் இந்த தண்ணீர் தான் இந்த பூமியில் உயிர்கள் வாழ ஆதாரம்னு தெரியும். அந்த தண்ணீரை இந்த கோமேட்டுதான் கொண்டு வந்து கொட்டுச்சாம். பூமியில மட்டும் எதுக்கு கொட்டுச்சோ. கோமெட்டுக்கே வெளிச்சம். இந்த கோமெட்டு சூரியன் பக்கத்தில வந்ததும் தன் கிட்ட இருக்க பனிக்கட்டிய உருக்கி தண்ணியா கொட்டிருமாம். அதோடு மட்டுமா, பூமியில ஏற்பட்ட எரிமலை வெடி சிதறல் இந்த தண்ணீருக்கு காரணம் அப்படின்னு எப்படி தண்ணீர் வந்ததுனு ஒரே அலசல். போர் போட்டு தண்ணீர் எடுக்கறவங்களை நிறுத்த சொல்லனும். பூமிக்கு தண்ணீர் வரம் கொடுத்தது எங்க ஊரு மாரியாத்தா அப்படின்னு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது.

அதோடு நிற்கிறாங்களா, உலகம் விரிவடைஞ்சிட்டே அதுவும் படு வேகமா போய்கிட்டே இருக்காம். எல்லாம் இந்த ஒளி மூலம் பண்ற ஆராய்ச்சி தான். கருந்துளை, கரும் பொருள் அப்படின்னு இந்த மொத்த உலகமே அப்படித்தான் இருக்காம். ஒளி ஊடுருவ இயலாத பொருள் ஏதேனும் வான் வெளியில் சிந்தப்பட்டு இருக்கிறதோ அப்படின்னு ஒரு ஐயம் வந்துட்டு போகுது.

இப்படி அறிவியல் எல்லாம் பேசிட்டு இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனா சாப்பாட்டுக்கு மம்பட்டிய எடுத்து வெட்டுனாதானே உண்டு. கிணத்துல தண்ணீ இருக்கா, வயக்காலுக்கு தண்ணீ போதுமானு வானத்தை பார்த்துட்டு இருக்கிற நமக்கு இந்த தண்ணீ எப்படி வந்துச்சுனும், இந்த உலகம் விரிவடையுதா, சுருங்கி தொலையுமானு கவலை பட தோணுமா. அவரவர் கவலை அவரவருக்கு.

அதுக்கப்பறம் ராணா படத்துக்கு ஒரு பாட்டு எழுதினா என்ன அப்படின்னு தோணிச்சி.

இணையம் இல்லாத காலத்தில்
மனிதர்களின் மனதில்
இணையே இல்லாமல்
இடம் பிடித்த அரசனே பேரரசனே

மழை பொழிய வானம் மறுத்தால்
நல்ல மனிதர்களை விதைக்கும்
வருணனே நீ தர்மனே (இணையம்)

ஒளியை விட நீ வேகம்
உன் உணர்வால் தீர்த்துவிடு தாகம்
நியூட்ரினோ அது நீதானோ
உலகம் போற்றும் அரசனே ராணா

நீ சொன்னதால் தானே பூமியில்
உயிரினம் வளர்ந்தது
பூமிக்கு பெருமை சேர்க்க
நீயும் அரசனாய் இங்கு பிறந்தது

ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்)

கருந்துளை கரும்பொருள் எல்லாம்
உன்னில் உன்னில் ஐக்கியம்
ஒளியை மட்டுமே சிந்தும்
உனது கண்கள் உலகின் பாக்கியம் ராணா

செம்மண்ணோ, களிமண்ணோ
பசுமை போத்திடும் ரகசியம்
இந்த பாரினில் நீ தந்தாய் அதிசயம்
உண்மை மக்கள் பெற்றவனே


ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்) 

இப்போதைக்கு நான் மொக்கைபாண்டி இல்ல, இல்ல, இல்ல. 

Post a Comment

Thursday, 13 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் -1


ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்குவது என்பது வெறும் கனவு. அரசனும் ஆண்டியாவான், ஆண்டியும் அரசனாவான் என்பது கேட்பதற்கு மிகவும் நன்றாகவே இருக்கும். பணத்தின் அடிப்படையில் இயங்கும் உலகத்தில் பணத்தை பெருக்கி கொள்ள தெரிந்தவரே மிகவும் புத்திசாலி என்கிறார்கள். கண்ணாடியானது கல்லை உடைக்கும் தந்திரம் பணத்திடம் உண்டு.

இந்த பணத்தின் பெரு மதிப்பு என்பது ‘காசேதான் கடவுளடா என ஒரு இரு வார்த்தைகளில் அடக்கி விடலாம். இந்த காசு பற்றிய சிந்தனையும், காசு பற்றிய எண்ணங்களும் மட்டுமே முதன்மை வகித்து வருகிறது. பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம், ஆனால் சில விசயங்களை வாங்க இயலாது என சொன்னாலும், பணத்தின் முக்கியத்துவம் அறியாதவர்கள் துறவற வாழ்க்கைக்கு செல்வது சிறந்தது என்கிற பகட்டான வாழ்க்கை அத்தியாவசிய வாழ்க்கையாகி இன்று நிற்கிறது.
கடன் பட்டோர் நெஞ்சம் போல் கலங்கினான் என்பது அன்றைய வாக்கு. கடன் கொடுத்தோர் நெஞ்சம் கலங்குகிறது அது இன்றைய வாக்கு. கேட்பவர்களுக்கு, கேட்காதவர்களுக்கு என இந்தா பணம் வந்து வாங்கி கொள், நன்றாக செலவழி என சொன்ன வங்கிகள் முதற்கொண்டு தனிப்பட்ட நபர்கள் வரை இந்த பொருளாதார சரிவுக்கு முதல் புள்ளி வைத்தவர்கள்.

வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற போக்கில் உலகத்தில் கடன் வாங்காத நாடே இல்லை எனலாம். எல்லா நாடுகளும் இந்த கடன் தொல்லையால் கண் விழி பிதுங்கி நிற்கிறது. எப்படி செலவினை குறைப்பது என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு நாட்டின் கடன், அந்த நாட்டின் குடிமகன் பட்ட கடன் என்கிற நிலை தான். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆட்பட்ட ஒவ்வொருவரும் இந்த கடன் தொல்லையால் தவிப்பது தவிர்க்க இயலாமல் ஆகிவிடுகிறது.
இதெற்கெல்லாம் என்ன காரணம், பொருளாதார கட்டமைப்பு சரிவர இல்லாமல் இருப்பதே. ஒரு பொருள் விற்பதை பொறுத்தே அந்த பொருளில் விலை நிர்ணயிக்கப்படுகிறது, அல்லது அந்த பொருளின் தேவையை பொருத்து, இருப்பை பொருத்து எனவும் கொள்ளலாம். இந்த பணம் எல்லாம் எப்படி வந்தது. பணம் பற்றாகுறை ஏற்படும்போது ஒரு அரசு பணம் பற்றாகுறையை போக்க பணம் அச்சடித்து வெளியில் விடலாம், அப்படி செய்யும்போது அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம், வங்கிகள் எப்படி பணம் சம்பாதிக்கின்றன. வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அது முழுக்க முழுக்க மக்களின் பணம். மக்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க முடியாத பட்சத்தில் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என வைக்கிறார்கள். இந்த மக்களின் பணத்தை வங்கிகள் பிற பொருள்களின் மீது செலுத்தியோ முதலீடு செய்தோ அதன் மூலம் லாபம் பார்க்கின்றன. மிக குறைந்த அளவே இந்த வங்கிகள் தரும் பணம் மக்களுக்கு பெரிதாக தெரியலாம் அதனால் ஏற்படும் இழப்புகளையும் இந்த மக்களே தாங்கி கொள்ள வேண்டும் எனும் போதுதான் நாட்டின் பொருளாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மிக முக்கியமானது போட்டியாளர்களின் நம்பகத்தன்மை. வியாபார உலகத்தை எப்பொழுது அடியோடு ஒழித்துக் கட்ட நாம் செயல்பட முயல்கிறோமோ அப்பொழுதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர் பெறும். இத்தனை காலமாக பொருளாதார சீர்கேட்டில்தான் எல்லா நாடுகளும் இருந்தன. எல்லாம் மூடி மறைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட இதே பொருளாதார சரிவு எண்பது வருடங்கள் முன்னர் ஏற்பட்டது எனவும், இருபது வருடங்கள் முன்னால் ஏற்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் கடன் பட்ட நாடுகள் என்றுதான் இருந்து வந்தது.

எனது நிலத்தில் விளைந்த தக்காளியும், மற்றொருவர் நிலத்தில் விளைந்த தக்காளியும் ஒரே விலை தான். ஆனால் ஒரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும், மற்றொரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும் விலை வெவ்வேறு. இதுபோன்ற போட்டியாளர்களின் செயல்பாட்டினால் பொருளாதாரம் சீர் குலைகிறது.

இந்த விசயத்தை மிகவும் எளிதாக சொல்லிவிட இயலாது. எப்படி குவாண்டம் மெக்கானிக்ஸ் இயற்பியலில் பெரிதாக பேசப்படுகிறதோ, எப்படி இந்த பூமியில் மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த விசயங்கள் விவாதிக்கப்படுகின்றனவோ அது போல இந்த பொருளாதாரம் குறித்த விசயங்கள் பல நிபுணர்களால் அலசி ஆராயப்படுகிறது.

குவாண்டம் கொள்கையும், உயிர் தோன்றியது எவ்வாறு என்பது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த பொருளாதாரம் அத்தனை கடினமானதா?

இந்த பொருளாதாரம் குறித்த முழு சிந்தனையும் அலசுவோம், வாருங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது யார், எது? 

Post a Comment