Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday 10 January 2020

அசுரனும் தர்பாரும்

திரையரங்கு சென்று படம் பார்ப்பது என்பது அரிதானதால் பார்க்கின்ற அனைத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து எல்லாம் எழுதுவது என்பது சற்று இடைஞ்சல்தான். அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று அசுரன் திரையரங்கு சென்று பார்த்தபோது உடன் வந்தவர்கள் படத்தின் உட்பொருளை புரிந்து கொள்ளமுடியாமல் நிறைய வன்முறையாக இருக்கிறது என்றார்கள். ஆனால் அந்தப் படத்தின் வலியை வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர இயலும். 

ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்பது அசுரன் போன்ற படைப்புகளின் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் சமூகத்தின் மாற்றம் என்பது உடனடியாக நிகழும் நிகழ்வு அல்ல. ஏதேனும் ஒரு வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். பணம் இருப்பவருக்கு, செல்வாக்கு உள்ளவருக்கு அதனால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் அல்லல்படுவது எல்லாம் பிறரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்டவர்கள்தான். 

கல்வி என்ற ஒன்றே சமூக மாற்றத்திற்கு வழி என்று சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது போல படித்தவர்கள்தான் பெரும்பாலும் புத்தியற்று வலம் வருகிறார்கள். இது இந்த உலகத்தின் சாபக்கேடு. படைப்பாளி எப்படியாவது இச்சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடாதா எனும் ஏக்கத்தில் வெளிக்கொணரும் படைப்புகளில் வலி அதிகம். இந்தப் படைப்புகள் எல்லாம்  வெறும் கை தட்டல்களுக்கு அல்ல. 

கிராமத்தில் நிலத்தகராறு, வெட்டுக்குத்து, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு போவது என ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தினூடே வாழ்ந்து வந்த காரணமோ என்னவோ படைப்பின் ஆழம் நிறையவே பாதித்தது. ஆனால் நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருப்பது இல்லை எனும் ஒரு கருத்து உண்டு, அங்கே பணத்தைத் தேடி அலைபவனுக்கு யார் என்ன ஆள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு ஏது பேதம், இருந்தாலும் கிராமத்தில் இருந்து பயணப்பட்ட பலரின் உள்ளுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் விஷச்செடி முற்றிலுமாக அழிக்கப்பட்டது இல்லை. இனி வரும் சந்ததிகள் வர்க்க பேதங்கள் பார்க்காமல் அனைவருக்கும் உதவி புரிந்து அன்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே இன்னும் பல வருடங்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். மக்கள் திருந்த நினைத்தாலும் குட்டி குட்டித் தலைவர்கள் மக்களை விடுவதாக இல்லை, ஊர் நாட்டாமைகள் உறங்குவதாகவும் இல்லை. 

மிகச் சிறப்பான படைப்பு தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இசை அருமை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 

அதன்பிறகு திரையரங்கு சென்று இன்று பார்த்த படம். தர்பார். ரஜினி என்பதைத் தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும். படம் ஆரம்பித்ததில் இருந்தே திரையரங்கில் ஆர்ப்பாட்டங்களும், சப்தங்களும் என இருந்தது. ரஜினியின் படங்களை அமைதியாகப் பார்க்கும் வழக்கம் எங்குமே இல்லை போல. இது ஒரு சினிமா எனும் மனநிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை இரசித்து வர இயலும். படம் வேகமாக முடிந்துவிட்டது எனும் திருப்தியும் நிம்மதியும் இருந்தது. இப்போதெல்லாம் எந்தப் படம் என்றாலும் முழுவதுமாகப் பார்த்து விடுகிறேன். எனக்கு இரசனை குறைந்துவிட்டது என்றில்லை, அப்படி என்னதான் ஒரு படைப்பாளி சொல்ல வருகிறார் எனும் ஆர்வக்கோளாறுதான். இது சினிமா அல்ல, மாபெரும் ஒரு படைப்பு என சுயதம்பட்டம் அடிக்கும் இயக்குநர்கள் நிச்சயம் கொஞ்சமாவது அறிவோடு இருந்தால்தான் நல்லது அப்போதுதான் என்ன மாதிரியான வசனம் எழுதுகிறோம், எந்த மாதிரியான காட்சிகள் அமைக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கும். தமிழ் சினிமா காலா, அசுரன், பரியேறும் பெருமாள், நேர் கொண்ட பாதை  போன்ற பாதையில் பயணித்தாலும் பேட்ட, விசுவாசம், பிகில், தர்பார் போன்றவைகளும் தேவையாகத்தான் இருக்கிறது. 

இப்படி பிறரது படைப்புகள் குறித்து எழுதும் போது நாம் எழுதுகின்ற படைப்புகள் குறித்தும் ஒரு குற்ற உணர்வு வராமலும் இல்லை. திருக்குறள் தராத சமூக மாற்றத்தை, இராமானுசர் மகான்கள், பெருந்தலைவர்கள் சொன்ன கருத்துக்களால் உண்டாகாத சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டி படைப்பாளிகள் பலர் தங்கள் படைப்புகளில் சுமந்து கொண்டு அலைகின்றார்கள். காலம் என்ற ஒன்றே ஒன்றுதான் அத்தனையையும் புரட்டிப் போடும் பேராற்றல் கொண்டது. காலத்தை மாற்றும் வல்லமை மனித இனத்துக்கு வசப்படட்டும். 

நன்றி. 


Saturday 9 June 2018

காலா - உலக மாற்றம் எவர் கைகளில்

கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் உறங்கி விடுவது உண்டு., என்னைத் தாலாட்டும் தமிழ் படங்கள்.  அருவி, அறம் போன்ற படங்கள் சமூகத்தில் சில விசயங்களை மாற்ற வேண்டும் என மிகவும் தைரியமாகச் சொன்ன படம். இதை விட இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படம் எல்லாம் அதீத தைரியம்தான். சமூகப் பிரச்சினைகள் ஒருபுறம், காமம் சார்ந்த விசயங்கள் எல்லாம் ஒரு புறம். படைப்பாளி சமூகத்திற்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என துடிதுடித்துக் கொண்டு இருக்கிறான்.

காலா படத்தைப் பார்க்க வேண்டும் எனும் முடிவு ரஜினி.  தியேட்டருக்குப் போனால் தெரிந்தவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள். அதற்கு முன்னர் வேறொரு திரையில் படம் பார்த்தவர்கள் வெளியில் உணவுப் பொருட்கள் வாங்க வந்து இருந்தார்கள். பார்க்க வேண்டிய படம் என சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

படம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் மனிதர்கள் குறித்த வரலாறு சொல்லப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கோலோச்சிய காலம் இன்றும் தொடர்கிறது. நிலத்தை இழந்தவர்களின்  கதையை, பறிக்கப்பட்ட கதையை கேளுங்கள், எத்தனை வலிமிக்கது எனப் புரிய வரும். குடும்பம், காதல், அடிதடி என படம் அழகாக நகர்கிறது. கதாநாயகன் வில்லன் என எடுக்கப்படும் படங்களில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்த்து விட முடியாது. நிலம் நம் உரிமை. நம் நிலத்திலேயே நம் மரணம் என்பது எல்லாம் கேட்க உணர்வுப் பூர்வமாக இருக்கும். ஆனால் வெளியூர் வேலை என்பதுதான் பலரின் கனவு. ஊரை விட்டு வெளியேப் போகாமல் வாழ்ந்து மடிந்த மக்கள் முன்னர் இருந்தனர், அப்போது கூட திரைகடல் ஓடி திரவியம் தேடு எனச் சொன்னது தமிழ்.

புரட்சி, போராட்டம் என்பது மக்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்துவது இல்லை. போராட்டம் புரட்சி பண்ண ஒரு தனிக்கூட்டம் மக்களில் உண்டு. அதிகார வர்க்கம் என்பது அடிமை வர்க்கத்தினால் உண்டாவது. அடிமை வர்க்கம் போராடும் போது அதிகார வர்க்கம் ஆடும், ஆனால் அதிகார வர்க்கம்தனை அழிப்பது கடினம். பணம், பதவி. இவற்றை வெல்ல மக்கள் மாற வேண்டும்.

படத்தில் இந்தி வசனங்கள் வருகிறது. தூய்மை இந்தியா எனும் முழக்கத்தை கேலி கூத்தாக்க முனைந்து இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாம் இப்போதைய குழந்தைகளின் மனநிலையை சொல்கிறதா எனத் தெரியவில்லை. படம் நன்றாக இருக்கிறது என்றார் ஒருவர். சரியான குப்பை என்றார் இன்னொருவர்.

தமிழகத்தில் இப்படிப்பட்ட இடங்கள் உண்டா எனக் கேட்டார் ஒருவர். இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் சாபக்கேடு பாடல்கள். மனைவி நோக்கி இரஜினி பாடும் ஒரு பாடல்  நன்றாக இருந்தது என்றனர். இசை மிகச் சிறப்பு.

நிறைய காட்சிகள் பேரழகு. இராமன் இராவணன் கதை. இராவண காவியம் எனும் நூல். என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்கிறார்கள். இறுதியில் நல்லவேளை நிலத்தைப் பாதுகாப்பது போல? முடிக்கிறார்கள். வாழ்த்துகள் இயக்குநர். ரஜினி தமிழ் சினிமாவின் பேரரசர் என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்லி முடிக்கிறேன். படைப்பாளியின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.

மக்கள் நினைத்தால் உலக மாற்றம் நிகழும், எந்த மக்கள் என்பதே கேள்வி.





Friday 22 July 2016

கபாலி - ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி

எப்போதாவதுதான் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டும், அதுவும் ரஜினி படம் என்றால் எப்போதாவது வரும் என்பதால் எளிதாக தியேட்டருக்குச் சென்றுப் பார்க்கலாம். கபாலி திரைப்படத்தை பார்க்க இதுவரை சென்று இராத ஒரு தியேட்டரை தேர்வு செய்து முன்பதிவு பண்ணியாகிவிட்டது. அதிக விலை எல்லாம் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட விலை தான்.

அரைமணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்றால் அங்கே கூட்டமே இல்லை. நிம்மதியாக இருந்தது. கூட்டம் என்றாலே ஒருவித அலர்ஜி போலாகிவிட்டது. கூட்டம் என்பது ஒரு ஒழுங்கின்மையைக் குறிக்கிறது. கூட்டம் என வந்துவிட்டால் மக்கள் செயல்பாடுகள் மாறிவிடுகிறது.

உண்பதற்கு அருந்துவதற்கு என வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் முன்னர் தியேட்டருக்குள் சென்றால் நான்கு நபர்கள் மட்டுமே இருந்தார்கள். மகிழ்ச்சி. பின்னர் ஒவ்வொருவராக வரத்தொடங்கி கணிசமான கூட்டம் சேர்ந்துவிட்டது. நல்லவேளை பெரும் விசில் அடித்து ஆரவாரம் செய்யும் நபர்கள் இல்லாது இருந்தனர். ஒரு புத்தகம் வாசிக்கும் போதோ அல்லது ஒரு சினிமா பார்க்கும் போதோ தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுவது உண்டு. இருப்பினும் விசில் அடிக்கும் மிகச் சிறிய  கூட்டம் இருந்தது.

ரஜினி. என்னைப் பொருத்தவரை ஒரு மந்திரச்சொல். எவர் என்ன சொன்னாலும் எத்தனை பேசினாலும் அது குறித்து கவலைப்படுவது இல்லை. சில பாடல்கள், விளம்பரங்கள் என முடிந்து படம் தொடங்குகிறது. உள்ளுக்குள் ஒருவித உணர்வு. ரஜினிக்கான உணர்வு அது. வார்த்தைகளில் சொல்ல இயலாது. ரஜினியின் அறிமுக காட்சி என ஆரம்பிக்கும் முன்னர் ஒரு கதைச்சுருக்கம் சொல்லப்படுகிறது. படிப்பறிவு நிறைந்த சமூகம் என முடிவு கட்டிவிட்டார்கள். மலேசியா. மலேய மொழி.

வன்முறை காட்சிகளுடன் தொடங்குகிறது. படத்தோடு நம்மை ஒன்றிவிடும்படியாக அடுத்தடுத்து என காட்சி நகர்கிறது. ஒரு மெல்லிய காதல் இழையோடிக்கொண்டே இருக்கிறது. ஒரு இழப்பினைத் தாங்க இயலாமல் தவிக்கும் இரக்க மனது. ஒரு கட்டத்தில் ரஜினி படமா என நினைக்கும் அளவுக்கு காட்சிகளின் தொகுப்பு. மகிழ்ச்சி. ஒரு படைப்பாளியின் பார்வையில் அந்த படைப்பு வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும். அப்பா என அழைத்து மனம் உருக வைக்கும் காட்சிகள். எதிர்பாராத திருப்பங்கள் என மிகவும் அருமையாக முதல் பகுதி நகர்கிறது. படைப்பாளி என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ளும் போது காட்சிகள் மிகவும் அழகாகின்றன. சலிப்பின்றி படம் நகர்கிறது. துரோகம், அடிமைத்தனத்தில் இருந்து மீளல் என பல விசயங்கள். தமிழ்நேசன் நல்ல பெயர்.

இடைவேளைக்குப் பின்னர் அதே வேகத்தில் நகரும் படம் காதலை மீண்டும் தன்னுள் எடுத்துக்கொள்கிறது. அன்பில் உலக உயிர்கள் வாழும். ஏதேனும் நடக்குமோ என நினைக்கும்படியான காட்சிகள். இசை, ஒளிப்பதிவு, வசனங்கள் இயக்கம் என களைகட்டிவிட்டது படம். பாடல்கள் கதையோட்டத்தோடு இணைகின்றது இடைஞ்சலாகவே இல்லை.

கடைசியாக வழக்கமான தமிழ் சினிமாவாக மாறிவிடுகிறது. எப்போதும் போல ஹீரோ வெற்றி பெறுகிறார். ஆனால் எழுதப்பட்ட வசனங்களை உற்று கவனித்தால் தமிழ்நாட்டின் சாபக்கேடு உலகின் சாபக்கேடு புரியும். கடைசியில் அப்படியே படமும் முடிகிறது ஏதோ ஒரு வெறுமை ஒட்டிக்கொண்டது போல இருந்தது. இனியும் இந்த படம் தொடராதா எனும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை எந்த ஒரு படத்தையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என  விரும்பியது இல்லை. ஏனோ கபாலி அப்படியொரு எண்ணத்தை ரஜினிக்காகவே விதைத்துச் செல்கிறது. ஆங்கில மொழி  சரளமாக படத்தில் ஆங்காங்கே வருகிறது. சரி சரி எல்லாம் படித்தவர்கள்தான். ஆனால் முட்டாள்கள் போலவே செயல்படுவார்கள் என முடிகிறது படம். உலகின் சாபக்கேடு அது.

நல்ல நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படைப்பு. வித்தியாசமான ரஜினி. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

கபாலி ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி. 

Wednesday 13 April 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 2

இப்படியொரு மரங்களை நான் கண்டது இல்லை கீழே காலுக்குத் தட்டிய பழங்களை எடுத்து உண்டேன் சுவையாக இருந்தது காட்டைகடக்க வேண்டியது இல்லை காடு அப்படியே மலையாக மாறுவதை உணர்ந்தேன் விலங்குகள் சத்தம் ஏதுமில்லை பறவைகள் கூட காணவில்லை காற்று வீசியது திரும்பி விடலாம் எனதோணியது அந்த நொண்ணன் இந்நேரம் வந்து இருப்பார் எந்தஎல்லையை கடக்கக்கூடாது என சொன்னார்களோ கடந்து இருந்தேன் விறுவிறுவென அங்கிருந்துதோட்டத்திற்கு ஓடியாந்தேன் நொண்ணன் இன்னும் வரவில்லை படுத்தமாத்திரத்தில் எந்திருடே எங்கட போன என்றார் பழம் சாப்பிடுணே என தந்தேன் எடே என்ன நீ சொல்லசொல்ல மலைக்குப் போயிருக்க என பழம் வாங்கி கடித்தவர் இனிப்பா இருக்குடே என்றதும் எல்லை கடந்ததை சொன்னேன் நிசமாவாடே ஆமாணே என்றதும் சரி வாடே வேலையை செய் என்றார் இந்த சேதிஊருக்குள் பரவியது என்னை எல்லோரும் வந்து கேட்டார்கள் பொய் பேசாதடே என்றார்கள் சிலர் கூடவாங்க என அழைத்தேன்.

ஒருவரும் வரத்தயார் இல்லை அந்த பொட்டி என்னிடம் வந்து எதுக்குடே ஊரை ஏமாத்துற நாசமா போவ என திட்டினார் ஏ பொட்டி உன் நொப்பா செத்தாரு அதுக்கு என்னைத் திட்டுவியா? என் அப்பா மட்டும் சாகலைடே ஊருல நிறைய பேரு போயி செத்தாங்க உன் தாத்தா பாட்டி கூடதான் செத்தாங்க அதான் அந்த எல்லை போட்டது என்னமோ வீரன் கணக்கா பேசற என பொட்டி சொன்னதும் நான் கொண்டு வந்த பழம் ஒன்று தந்தேன் போடா கிறுக்குப்பயலே மலைக்குப் போனானாம் என சொல்லி நடந்தது. ஏ பொட்டி போனவங்க திரும்பதான வரலை செத்தாகனு சொல்ற அங்குட்டு எங்கேனாலும் போயிருக்கலாம்ல பேசுவடே தொலைஞ்சி போறது திரும்பக்கிடைக்காதுடே என்றபடி மண்ணை வாரி தூற்றியது சாகத்தான போற என்னோட வா பொட்டி எல்லையை கடந்து காட்டுறேன் என சொன்னதும் நாலைஞ்சு பொணம் அந்த எல்லைக்கு கிட்ட கிடந்துச்சு ன கதை சொன்னது நான் அடுத்தநாள் கிளம்பத்தயார் ஆனேன் எடே பத்திரமா வந்துடுடே என நொண்ணன் சொன்னார் புளிச்சாதம் கட்டிக்கொண்டு கிளம்பினேன் வீரனாக உணர்ந்தேன் அடுத்த தோட்டம் கடந்தபோது இனிமே திரும்பமாட்ட என மொமா சொன்னார் திரும்பினா நீ செத்துரனும் என நடந்தேன் எல்லையைத் தொட்டேன் கைகால்கள் நடுங்கியது பின்வாங்கினேன் இந்த எல்லையை கடப்பது பற்றி யோசிக்காமல் ஓடித் தாவினேன் வியர்த்தது செடிகளுக்கு மத்தியில் அமர்ந்தேன் மரவாசனையானது பலமாக இருந்தது பூ வாசனை இலை வாசனையைவிட மர வாசனையை நுகர்ந்தேன் தண்ணீர் குடித்தேன் உயர நடக்க ஆரம்பித்தேன் மர வாசனை மாற வேறொரு வாசம் லேசாக வர ஆரம்பித்தது தடுமாற ஆரம்பித்தேன் உடலுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது சட்டென்று கீழே குதித்தேன். மரவாசனை அடிக்க உடல் சற்று சரியானது இதைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயம் ஏதோ ஒன்று இத்தகைய செயலைச் செய்கிறது என அறிவற்ற மூளைக்கு எட்டியது முகத்தை துணியால் மூடி மீண்டும் செல்ல நினைத்து பக்கவாட்டில் நடந்தேன் துணி விலக்கியபோது எவ்வித வாசமும் இல்லை அதே அளவில் நடந்து சென்றேன் மேலே ஏற முடிவு செய்து ஏறியபோது அதே வாசம் அடித்தது கீழே உருண்டேன் பேச முயற்சித்தபோது பேச வரவில்லை நினைவு எல்லாம் இருந்தது கை கால்கள் மரத்துப் போன உணர்வு அசைத்துப் பார்த்தேன் அசைந்தது மெதுவாக ஊன்றி எழுந்து கீழ் நோக்கி நடந்தேன் பேச முடியவில்லை கைகால்களை வேகமாக ஆட்ட இயலவில்லை காட்டினைத் தாண்டி வந்தபோது சற்று ஓரளவு நிம்மதியாக இருந்தது ஆனால் பேச்சு மட்டும் தொலைந்து போயிருந்தது அழுகையாக வந்தது நடந்து தோட்டம் கடந்தபோது என்னடே ஒருமாதிரி இழுத்து நடக்கற என மொமா சொன்னபோதுதான் பார்த்தேன் இடது காலை இழுத்து இழுத்து நடந்தேன் அந்ந வாசம் என்னை ஏதோ செய்துவிட்டது பதில் சொல்ல நினைத்தும் சொல்ல இயலாது.

தோட்டத்தில் சென்று படுத்தேன் இம்முறை எதுவும் எடுத்து வரவில்லை கொண்டு போன தண்ணீர் புளிச்சாதம் எல்லாம் அப்படியே போட்டபடி வந்துவிட்டேன் எடே எந்திரு என காலையில் வந்து நொண்ணன் எழுப்பினார் பேச்சு வரவில்லை என்னடே ஆச்சு கை கால் எல்லாம் தடிச்சி இருக்கு என்றபோது சொல்லவே முடியாது நான் தவித்த தவிப்பு படித்து இருந்தாலாவது எழுதி காமிக்கலாம் பாவிப்பய மூளைக்கு தெரியலையே அழுது கண்ணீர் வடித்தேன் எழ முடியாமல் எழுந்தேன் வாடே என அழைத்து ஆஸ்பத்திரி போவோம் என்றார் செடியை பறித்து மலை போல கைகள் காட்டி நுகர்ந்து காண்பித்து இப்படி ஆனதாக சொன்னேன் எதுக்குடே இப்படி பண்ணின என திட்டியபடி ஊருக்குள் போனோம் அந்த பொட்டி வந்து, சொன்னேன் கேட்டியாடே முகரைக்கட்டை என்றதும் போயிரு பாட்டி கொன்னுருவேன் என நொண்ணன் திட்ட எனக்கு என்னால் தான் இப்படி என மனம் வலித்தது ஆஸ்பத்திரி போனோம் அலர்ஜி என மருந்து ஊசி போட்டார் பேச்சுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றார்.

சொல்லு என கைகாட்டினேன் மலைக்குப் போனது நுகர்ந்தது சொன்னதும் அது ஆவி மலை ஆச்சே என்றார் டொக்டர். இல்லை என தலை ஆட்டினேன் பின்னர் யோசித்தேன்ஆவி என்றால் வாயு தானே அப்படி எனில் ஏதோ விஷவாயு அந்த மலையில் இருக்குனு தெரிஞ்சி இருக்கு எனப்பட்டது ஐயோ படிப்பு வரலையே என கதற நினைத்தால் சத்தம் ஏதும் வரவில்லை ஏன்டே மலை மலைனு சொல்லி இப்படி பேச்சை தொலைச்சி நிக்கிற. பொட்டி சொன்னது நினைவுக்கு வந்தது தொலைஞ்சிட்டா திரும்பாது அப்போது அங்கே வந்த ஒருவர் நாங்க பேசினது கேட்டு இங்கன வாப்பா அந்த மலையில் தசைகளை செயல் இழக்கச் செய்யும் கொடிய மருந்து இருக்குனு ஒருத்தர் கண்டு பிடிச்சி இருக்காரு நமக்கு மயக்க மருந்து தருவாங்கல அதைப்போலவே அது வேலை செய்யுமாம் ஆனா இது அதிக விஷத்தன்மை வாய்சசது இவன் தப்பிச்சதுகூடஅதிசயமான விஷயம் தான் இதை ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லலை அதான் பேய் மலை ஆவி மலைனு போகாதீங்கனு சொல்லி இருக்குல ஒரு பறவையும் விலங்கும் அங்கன எட்டிப்பார்க்கறது இல்லை இவன் எதுக்குப் போனான் என்றதும் என்ன இருக்குனுப் பார்க்கப் போனான் என சமாளித்தார் நொண்ணன் ஏன்டே உனக்கு இதெல்லாம் எனநொண்ணன் சொல்ல படிப்பில் இதே அக்கறை காட்டி இருக்கலாம் என நினைத்தேன் சிலவாரங்கள் பிறகு ஒருவர் எங்க ஊருக்குள் என்னைத் தேடி வந்தார்.

வீக்கமானது குறைந்து இருந்தது. பேச்சு வரவில்லை. ஒரு மருந்தை கொடுத்தவர் ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார் அதிசயமாக எனக்கு பேச வந்தது உன்னோட குரல் தசையை அந்த வாயு ரொம்பத்தாக்கி இருக்கு என்றார் இனிமே அங்க போகாத அந்த மரங்களை அழிக்கச்சொன்னா யாரு கேட்கிறா என்றவரைப் பார்த்தேன் ஏன்டே உனக்காக அந்த ஆளை தேடி வரதுக்குள்ள போதும்னு ஆயிருச்சி என்றார் நொண்ணன் இப்போது எவரும் பேய் மலை ஆவி மலை என எவரையும் அந்த மலையை நான் அழைக்கவிடுவது இல்லை

(பேய்மலை பாகுபலி முற்றும் இனி செவ்வாய் கிரகம் தொடரும்)

Wednesday 16 March 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 1

எனது ஊருக்கு மேற்கே காடுகள் அடர்ந்த ஒருபெரிய மலை ஒன்று இருந்தது அந்த மலைக்கு அருகில் எவரும் சொல்லமாட்டார்கள் குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விட வேண்டும் என்பது ஊர் விதித்த கட்டளையைவிட அவரவர் விதித்துக்கொண்ட கட்டளைதான் எவரையுமே எல்லை தாண்டவிடவில்லை. சிறு வயது முதல் அந்த எல்லையை தாண்டிவிட வேண்டும் எனும் பேராவல் இருந்தது, அதுவும் குறிப்பாக மலை மீது ஏறி மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் துடிப்பானது ற்றும் குறைந்தபாடில்லை. என் மூளைக்கு என்ன பிரச்சினையோ எனக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஒரொன்னா ஒன்பது என்பேன். நன்றாக கையில் அடி வாங்கி இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்காக அந்த அடிகளைத் தாங்கிக்கொள்வேன். நிறைய விசயங்கள் நினைவில் இல்லை. மலை குறித்து பலர் பேசியது அங்குமிங்கும் நினைவு இருக்கிறது. பேய் மலை, ஆவி மலை என கதை சொல்வார்கள். எனக்கு அந்ந கதைகளில் இஷ்டம் இல்லை. படிப்பு வராமல் போனதால் பள்ளிக்கு வரக்கூடாது என திட்டினாலும் மதிய உணவு க்காக வெட்கமின்றி போவேன். அதையும் தடுத்தார்கள். ஒருவனிடம் வாங்கித்தரச் சொல்லி திருடி உண்டேன். 

அதுவும் சில வாரங்கள் நின்றுபோனது. வீட்டில் உணவு இருந்தால் இப்படி எதற்கு அலையப்போகிறேன் நான் பிறந்த சில மாதத்தில் நொப்பாவும் நொம்மாவும் நோயில் செத்துப்போனார்கள் நொம்மாவின் தொம்பிதான் என்னை வளர்த்தார். கழுதை எங்கன போய் திங்கட்டும் என எனக்குத் திட்டு விழும் காலை இரவு ஏதேனும் கொஞ்சம் தின்ன கிடைக்கும்படிப்புதான் வரலைல பள்ளிக்கூடம் போகலைல, போய் வேலை பாத்து காசு கொண்டா என மொமா அடித்து விரட்டினார் அன்றிலிருந்து தோட்ட வேலை என போகத் தொடங்கி மதியம் கொஞ்சம் உண்ண கிடைத்தது. தோட்டத்திலேயே பொழுதன்னைக்கும் கிடப்பேன். காலை இரவு நன்றாக சாப்பிட கிடைத்தது. மொமா எனைத் தேடவில்லை காட்டின் தோட்டத்தின் பொள்ளை ஆனேன் எப்படியாவது மலைக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். என்னடே பேசற, பொட்டுல அடிச்சேன் புட்டுக்குறவ ஒழுங்கா கிட என தோட்டத்து நொண்ணன் சொன்னதால் பேசாமல் இருந்துவிட்டேன் எடேய் அந்த மலைக்குப் போனவுக யாருமே உசிரோட திரும்புனது இல்லையாம் என் பாட்டி சொன்னிச்சி என புல் பிடுங்க வர ஒருத்தன் கதை சொன்னான், எடுவட்ட பயலே உன் பொட்டிக்கு யாரு சொன்னதாம் என அவன் தலையில் நங்குனு கொட்டினேன், என் தாத்தா கூட அப்படித்தான் செத்தாராம் என அவன் சொன்னதும் எந்த தொத்தாடா என்றேன் பாட்டியோட அப்பா என்றான் பொட்டியைப் பார்க்கப் போனேன் ஏய் பொட்டி உன் நொப்பா மலைக்குப் போயா செத்தாரு என்றேன் ஆமா என பொட்டி தலையை ஆட்டிச்சி எப்படி எனக் கேட்டேன் எல்லையைத் தாண்டி போனாரு போனவருதான் என பொட்டி அழுதது.

அந்த மலையைப்பற்றி பொட்டி வேறு எதுவும் சொல்ல மறுத்தது. அன்று இரவு எனக்குத் தூக்கமே வரலை. என் தொத்தா பொட்டி எல்லாம் யாரென எனக்குத் தெரியாது. இந்த மாயஜால கதைகள் மாந்த்ரீக கதைகள் எல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள் எப்போது இந்த எல்லையைப் போட்டார்கள் என்று கேட்டால் அது எப்பவோ போட்டதுடேஎன்றே சொல்வார்கள். ஒரு பயலுக்கும் அந்த மலையைப்பற்றித் தெரியாது ஆனால் அங்கு போனால் செத்துப்போவாக என்பது மட்டுமே அறிந்து இருந்தார்கள் சாக எவர்தான் ஆசைப்படுவார்கள். அங்கனப்போன செத்த என்பதே பெரும் பயம் தான் எனக்கு உள்ளுக்குள் நமநம எரிச்சல். செத்தாலும் பரவாலை என நினைத்தபடி அந்த மலை மீது எனக்கு ஒரு கண் இருந்தது சீவாத முடி மண் பூசிய சட்டை டவுசர் என திரிந்தேன் மலைப்பக்கம் போக ஆள் சேர்த்தால் அடிக்காத குறைதான் படிப்பு. வந்து இருந்தாலவது நாலு வார்த்தை படிச்சி இருக்கலாம் ஒரு எழுத்து கூட எழுதப்படிக்க மனசே வரலை மறந்து போனது மறந்து போனதுதான் எனக்கு வயசு இப்ப இருக்கும்னு ஒரு நொண்ணனிடம் கேட்டப்ப நீ ஆவணில பொறந்த உனக்கு இப்போ 15 என்றது 15 வயசா என ஆவெனப் பார்த்தேன் மலையைப்பற்றி இத்தனைவருசமாகவா நானுநினைச்சிட்டு இருக்கேன் என அன்னைக்கு ராத்திரி பயத்தோட மலையை நோக்கி நடந்தேன் கொஞ்சம் பயமாக இருந்தது அஞ்சு பாறாங்கல் தூரம் நடக்க மனசுக்கு படபடனு இருந்தது எவடே இந்நேரத்தில இங்குட்டு என ஒரு மொமா கத்தியது நான் தான் மொமா மலைச்சாமி என கத்தினேன் டார்ச் வெளிச்சம் என்மீது பட்டது சே காவக்காரன் மாதிரி நிக்கறான் என நடந்தேன் நில்லுடே மலைப்பக்கம் போகுற உனக்கு புத்திகெட்டுப் போச்சா என மொமா கத்தியது இல்லே மொமா உப்ப திரும்பி போயிருவேன் என சொன்னாலும் தரதரவென எனது கைகளைப் பற்றி இழுத்து அவர் தோட்டத்தில் கொண்டு இட்டார் எடே இன்னும் நாலு பாறாங்கல் இந்த தோட்டம் அதைத் தாண்டிப் போனா கொஞ்ச தூரம் காடு அந்தகாட்டைத் தாண்டித்தான் மலை நீபாட்டுக்குப்போற என சொல்லி சப்புனு ஒரு அறை விழுந்தது மொமா அடிக்கிற வேலை நீ வைச்சிக்காத அப்புறம் கல் எடுத்து கொன்னேப்புடுவேன் சாவுக்கு நான் பயப்படலை மலைக்குப் போனா செத்துப் போயிருவாகனு கதையை நம்ப சொல்றயா என்னடே நீ ஓவராப் பேசற போடே போய் சாவு அப்பன் ஆத்தாளை காவு வாங்கினவதான நீனு என எட்டி உதைத்தார் வலி விர்ரென்று இருந்தது அந்த வார்த்தை என்னை ஒருமாதிரி ஆக்கியது.

மொமா நீ ஒரு தடிமாடு சின்னப்பயல உதைக்கிற எனகத்தினேன் சொல்லிட்டே இருக்கேன் பேசிட்டு இருக்க என ஓங்கி அடிக்க வந்தார் போடே போ நிக்காத மலைக்குப் போக மனசு இல்லை தோட்டம் வந்து படுத்துக்கொண்டேன் என் நொம்மா நொப்பா சாக நான் எப்படி காரணம் என மனசு பதைபதைத்தது என் சோட்டுப்பயக கூட இப்படி சொன்னது இல்லை இந்த மொமாவுக்கு என் மேல என்ன அக்கறை அடிக்கிறான் உதைக்கிறான் என் நொம்மாவோட தொம்பி கூட இப்படி இல்லை நாளைக்கு ஊருல இவன் என்னைப்பத்தி என்ன சொல்வானு தெரியாதே எனநினைத்தபடி வலியுடன் தூங்காமல் தூங்கினேன் எடே எந்திரு நைட்டு மலைப்பக்கம் போனியா என தோட்டத்து நொண்ணன் கேட்டார் இல்லண்ணே தூக்கம் வரலை சும்மா நடந்தேன் அந்த மொமா என்னை அடிச்சாக என்றேன் ஊர்ப்பக்கம் நடக்க வேண்டிதானே எதுக்கு அங்குட்டுப் போன பல்ல விலக்கிட்டு காபியக்குடி இட்லி இருக்கு பொறவு சாப்பிடு வடக்கால தண்ணி பாய்ச்சு மலைப்பக்கம் போவாத இன்னைக்கு யாரும் களை எடுக்க வரலை நானு பொறவு
வரேன் இங்கே வாடே என்னடே கன்னத்தில வீங்கி இருக்கு என தொட்டார் அடிச்சாகனு சொன்னனில காபி குடிடே கூட வாடே என இருந்தார் செங்கல் பொடியால் பல் விலக்கி காபி குடித்து நொண்ணனோடு ஊருக்குள் போனேன் நேராக அந்த மொமா வீட்டுக்குப் போனார் எவனைக்கேட்டு வெண்ணை இவனை அடிச்ச வகுந்துருவேன் என்னமோ நீசோறு போட்டு வளர்க்கற மாதிரி அடிச்சிருக்க அந்த மொமா இல்லை ராசு அவன் பேசின பேச்சு என இழுத்தார் எல்லாம் சொன்னான் அவன் மேலே தப்பு இல்லை இனி அவன் விசயத்தில தலையிட்ட மனுசனா இருக்கமாட்டேன் பாத்துக்க காவாலித்தனத்தை வேறு எவன்கிட்ட வேணா காமி ஊரே கூடியது விடுயா ராசு என விலக்கினார்கள்.

எடே நீ தோட்டத்துக்கு போ என்றதும் எனக்கு சாதிச்சது போன்று இருந்தது அந்த நொண்ணனோட எனக்கான கோபம் என்னவென இப்பதான் பார்த்தேன் வலி ஏதுமில்லை
எனக்குனு ஒருத்தர் இருக்காரு என்பதான தைரியம் நினைக்கவே நன்றாக இருந்தது கொஞ்ச நாளைக்கு மலைக்குப் போக வேண்டும் என எண்ணம் வரவில்லை எதுக்குப் படிப்பு வரலைனு யோசிக்க முடியலை ஆனா இந்தமுறை விளைச்சல் பரவாயில்லை புதுத்துணி கிடைச்சது அதைப்போட்டுக்கிட்டு சும்மா ஊருக்குள்ளார சுத்தினேன்மலைச்சாமி என என் மொமா கூப்பிட்டு காசு இருந்தா கொடுடே எனக் கேட்டார் பையில் இருந்த பத்து ரூபா தாள் கொடுத்தேன் எடே கூடக்கொடு என்றதும் இல்லை என தோட்டம் வந்தேன் மலையை நோக்கி பார்க்கத் துவங்கினேன் நொண்ணன் கிட்ட சொல்லி செய்யலாம் என சாயந்திரம் கேட்டேன் ஏன்டே இப்படி மலைக்கு நீ அலையற போனா உசுரோட யாரும் திரும்ப மாட்டாங்க சொன்னா கேளுடே திரும்பிருவேன் என்றதும் வேணாம்டே அப்புறம் உன் இஷ்டம் என போய்விட்டார் எனக்கு மனசுக்குள் ஒரு தைரியம் வந்தது அன்று இரவு மலையை நோக்கி நடந்தேன் காட்டினை நெருங்கினேன் காட்டுக்குள் பாதைஎன எதுவும் இல்லை நெடு மரங்கள் அசைந்தன சிறுசிறு செடிகள் இருந்தன புதர்கள் போன்றே காட்சி அளித்தது இதுவரை இருந்த நிலவு வெளிச்சம் மறைந்து இருட்டாக இருந்தது டார்ச் அடித்தேன் பகலில் வந்து இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் திரும்ப மனமில்லை அங்கேயே இருந்தேன் அதிகாலையில் சிறு வெளிச்சம் வர உள்ளூர பயமற்று நடந்தேன் மர வாசனையில் நான்மயங்கி விடுவேனோ என நினைத்தேன்

(தொடரும்)

Sunday 22 November 2015

நமது திண்ணை நவம்பர் மாத இணைய இதழ்

சற்று தாமதமாகவே வெளிவந்த இந்த இணைய இதழில் எப்போதும் போல வழக்கமான இராமானுசர் தொடர் இல்லாதது ஒரு குறையாகவே தெரிந்தது. பல வேலைகள் காரணமாக உடனே இந்த இதழை வாசிக்கவும் இயலவில்லை. வேலைக்கு முன்னுரிமை தரும்போது தமிழ் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த இதழின் ஆசிரியருக்கு பெருமளவில் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  ரிஜ்ஜியின் மழலைக் கடிதம் மிகவும் கவலை தரக்கூடிய கவிதை. இந்த உலகம் மிகவும் பொல்லாத ஒன்றாகவே தெரிகிறது. இறைவனுக்கு வணக்கங்கள் எனத் தொடங்கும் கவிதையில் நிறைய வலிகள். பெண்ணாக பிறப்பது பெரும் இடர் என இந்த கவிதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. பல இழிநிலை மனிதர்களால் குழந்தைகள்  படும் பெரும் துயரத்தை பல வரிகளில் நாம் காணலாம். இவ்வுலகம் மாற வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்கிறது.

உதயாவின் புகையிலை தவிர்ப்போம் எனும் விழிப்புணர்வு முத்தம் குறித்த கதை. ஒரு விஷயத்தை சமூகத்திற்கு சொல்ல முற்படும்போது வலி தரும் விசயங்களை சொல்லும்போது மனதில் படியும் என்றே எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் கதைப்பாத்திரங்கள் அத்தனை பாதிப்பை நம்மில் உண்டாக்குவது இல்லை. புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் என பல பழக்கவழக்கங்கள் உடல் நலத்திற்கு இடையூறு என சொன்னாலும் இன்றும் பெரும்பாலான மனிதர்கள் அதை விட்டுவிட்டதாகத் தெரியவில்லை.

அழகிய ஓவியங்கள் மிகவும் சிறப்பு. ஓவியங்கள் நமக்கு பாடம் நடத்தும். கொக்கின் வாயில் இருக்கும் மீன், கண்ணாடியில் விசித்திர முகம் என ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் சொல்லவே வரையப்பட்டு இருக்கும்.

அவளதிகாரம் மகளதிகாரம் அவனதிகாரம் எல்லாம் எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் அந்தந்த வரிகளில் வாழ்ந்து விடுகிறார்கள். முடி கலைவதே இன்பம். தேவதையுடன் உலா வருகிறேன். மௌனம் எப்போதுமே அழகு. பெரிய ஆபிசராம். என்னிடம் குழந்தையாகிப் போவான். சோறு ஆக்கிடுவான். குருடாக ஆசை. நானும் எத்தனையோ அவளதிகாரம் எழுதி இருக்கின்றேன் என்றே கருதுகிறேன். இதற்கு காரணம் எவர் என என்னைக் கேட்டால் அன்றில் இருந்து இன்று வரை பல பெயர்களை சொல்ல இயலும். எவரேனும் ஒருவர் கருப்பொருளாகி நிற்பார்கள். அதை எவராலும் அறிந்து கொள்ள இயலாதபடி எனது எழுத்து அமைந்து விடும்.

மெழுகுவர்த்திகள் குறித்து மேலும் பல விபரங்கள் தந்து இருக்கலாம். எங்கே செயல்படுகிறது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் யார் யார். எத்தனை வருடமாக தொண்டு புரிகிறார்கள், அவர்களை தொடர்பு கொள்வது எப்படி போன்ற விபரங்கள் இல்லாமல் இருப்பது முழுமையற்று இருக்கிறது. ஆசிரியர் இதை அடுத்தமுறையாவது இணைத்தால் நன்றாக இருக்கும்.

உதயாவின் கபாலி மிகவும் நகைச்சுவையான அதே வேளையில் நல்லதொரு கருத்து சொல்லும் கதை. ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என எனவும் சில அபத்தமான காரியங்கள் நல்லதில் சென்று கூட முடியும்.

நவராத்திரி விழாவா, பண்டிகையா சுசீமா அம்மா அவர்களின் பயன்மிக்கத்  தொடர். இதுவரை படி அமைத்து கொலு பொம்மைகள் எல்லாம் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. இந்தத் தொடரில் குறிப்பிட்டபடி பாடல்கள் பிறர் வீட்டுக்குச் செல்லுதல் எல்லாம் நான் கண்டதே இல்லை. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடுவோம். கலப்பை, புத்தகம் என கொண்டாட்டம் இருக்கும். தனிப்பட்ட சமூகம் கொண்டாடுமா, அல்லது எல்லா சமூகத்தினரும் கொண்டாடுவார்களா எனத் தெரியாது. சகோதரி ஷக்திபிரபா கூட இதுகுறித்து எழுதியாக ஞாபகம். எப்படி எடுத்துக் கொண்டாலும் இந்த நவராத்திரி ஒரு விழாதான். ஒன்பதாம் எண்ணுக்கு உரிய பலன்கள். நிறைய விசயங்களை உள்ளடக்கிய பகுதியை அனைவரும் பயன்பெறும் வண்ணம் எழுதி இருப்பது வெகு சிறப்பு. எல்லாமே புதிய விசயங்கள்தான்.

ஆசிரியரின் திரு தனஞ்ஜெயின் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு. தேசிய விருது பெற்ற ஒரு எழுத்தாளர். ஒரு தயாரிப்பாளர். சினிமா குறித்த அவரது பார்வை மிகவும் சிறப்பு. அவர் தொழில் குறித்த தொடர்பான கேள்விகள் எல்லாம் சிறப்பு.

நண்பர் ரவியின் கிச்சன் டைம் பால் பேடா. இது பால்கோவாவுக்கு சளைத்தது அல்ல என்றே கொள்ளலாம். எவரேனும் செய்து பார்த்தவர்கள் எப்படி வந்தது என சொன்னால் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

டிவிட்டரில் சிந்தனை எல்லாம் எப்படி இருக்கும் எனில் சமூகத்தில் சினிமா முதற்கொண்டு அரசியல் வரை ஏதும் பிரச்சினை எனில் அனைவருமே அது குறித்து தங்களது எண்ணங்களை பதிவு செய்வார்கள். அப்படித்தான் துவரம் பருப்பு குறித்த சிந்தனையை இதில் காணலாம்.

உமாக்ருஷ் அவர்களின் பாடல் பரவசம். இந்த பாடலை நான் கேட்டதே இல்லை. வித்யாசாகரின் இசை மிகவும் மென்மையாக இருக்கும். பாடல் வரிகள் என்னவெல்லாம் சொல்ல வருகிறது என மிகவும் தெளிவாக ஆராய்ந்து இருக்கிறார். நல்ல நல்ல பாடல் வரிகள். எப்படி பாடுவது என்பதே இந்த பாடலுக்கான வெற்றி.

மதிப்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்.

பத்து இதழ்கள் கண்ட நமது திண்ணை தனது எல்லையை விரிவாக்கி இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளை தன்னுள கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா. அற்புதமான நமது திண்ணை இணைய இதழ் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்.


Friday 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)



Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Friday 3 April 2015

நமது திண்ணை ஏப்ரல் மாத இணைய சிற்றிதழ்

நமது திண்ணை  (இணைப்பு) மூன்றாவது மாத இணைய சிற்றிதழ் இன்று வெளியிடப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை ஆசிரியர் மனமுவந்து தெரிவித்து இருக்கிறார். ஒரு இணைய சிற்றிதழ் மூலம்  சிறப்பான படைப்புகளை கொண்டு வருவது அந்த இணைய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் குழுவுக்கு மட்டுமல்ல அதில் எழுதுபவர்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர் தனது பார்வையில் இதை  மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.  மேலும் தமிழ் எழுதுபவர்களை இது உற்சாகம் கொள்ளச் செய்யும். தமிழ் கீச்சர்கள் சந்திக்க இருக்கும் விழா ஒன்று குறித்த அறிவிப்பு இதில் இருப்பது ஆச்சரியம் அடையச் செய்தது. உண்மையிலேயே இந்த இணைய சிற்றிதழ் தமிழ் எழுத்துக்காக பெரும் பங்காற்ற இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆசிரியருக்கு பாராட்டுகள்.

தமிழ் கீச்சர்கள் பற்றி நான் விரிவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. என்னால் புரிய முடியாத ஓர் உலகம் அங்கு உண்டு. அந்த உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த இணைய சிற்றிதழ் காட்டும் உலகம் எனக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அதில் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன்.  இந்த சிற்றிதழின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வெயில் காலத்தை குறிப்பிடும் வண்ணம் குளிர்ச்சியான பழ வகை, நொங்கு போன்றவைகளை கொண்டு மிகவும் அழகாக சிந்தித்து இருக்கிறார்கள். சிற்றிதழுக்கென உருவாக்கப்பட்ட வடிவம் சிறப்பு. அருமையாக வடிவமைப்பு செய்து வரும் நண்பர் அல் அமீன் அவர்களுக்கு பாராட்டுகள். எப்படி எல்லாம் இந்த இணைய சிற்றிதழ் உருவாகிறது அதற்கான பின்னணி என்ன என்பதை அறியும் போது  பிரமிப்புதான்.

முதலில் நாம் காண இருப்பது சுஷீமாசேகர் அம்மாவின் 'குகன்' எனக்கு இந்த குகன் பற்றி முன்னரே அறிந்து இருந்தாலும் பல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும் அதற்கு மிக்க நன்றி அம்மா. மொத்தமாக ஒரு கதை படிப்பது என்பது வேறு. அதில் ஒரு கதாபாத்திரம் குறித்து படிப்பது வேறு. ஒரு படகோட்டிக்கு குகப் பெருமாள் எனும் பட்டமெல்லாம் அன்பினால் மட்டுமே சாத்தியம் என்பதை திருக்குறள் மூலம் ஆரம்பித்து வால்மீகி சொல்லாத விசயங்களை கம்பர் சொன்னார் என முடித்தபோது அருமை என சொல்லாமல் எவரும் இருக்கமாட்டார். குகன் பற்றிய வர்ணனை கம்பர் பார்வையில் இருந்து அம்மாவின் பார்வை அருமை. நீங்கள் என்றுமே பார்க்காத ஒருவர் மீது பிறர் சொல்வதைக் கேட்டு அன்பு கொள்வீர்களேயானால் நீங்களும் குகப் பெருமாள் தான். அடடா! இன்றுதான் திருமங்கையாழ்வார் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அதே திருமங்கையாழ்வார் குறிப்பிட்டு ஒரு பாசுரம். என்ன தவம் செய்தனை! இந்த உலகம் கொஞ்சம் விசித்திரமானது, நாம் புரிந்து கொண்டால் விசாலமானது. குகனின் பண்பு நலன்கள், பரதனிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதெலாம் படிக்க படிக்க நமக்கே அப்படி இருக்க ஓர் ஆசை வரும். பாராட்டுகள். இன்னும் பல அதிசய மனிதர்களை இந்த சிற்றிதழ் காட்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்து விருதுநகர். எனது தந்தை நடந்து சென்று படித்த ஊர். எனது கைராசி மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி இருக்கும் ஊர். சிறுவயதில் கை முறிந்து லைசாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர். என் அம்மா, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்த ஊர். திரைப்படம் பார்த்துவிட்டு நாங்கள் தொலைந்து போனதாக பிறரை எண்ண வைத்த ஊர். இப்படிப்பட்ட எங்கள் பக்கத்து ஊரை செல்வி. நந்தினி எங்கள் ஊர் என எழுதி இருக்கும் விதம் என்னை அந்த ஊருக்கே மீண்டும் அழைத்துச்  சென்றது. எத்தனை நினைவுகளை இந்த பதிவு கீறிவிட்டது என எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

 எனது முதல் நாவலில் இந்த மாரியம்மன் கோவிலை மனதில் வைத்தே எழுதினேன். என் பேரு எப்படி இந்த சாமிக்கு தெரியும் என்பது கதைநாயகனின் கேள்வி. கதைநாயகி சொல்வாள், அணுவுக்கும் அணு கூட அந்த சாமிக்கு தெரியும் என்பது போல ஒரு காட்சி. அப்படி பட்ட அந்த கோவில் சிறப்பு என அந்த பங்குனி மாதம் விழாவை குறிப்பிட்டது நாங்கள் மாட்டுவண்டியில், ட்ராக்டரில் சென்ற காலங்களை நினைவில் கொண்டு வந்துவிட்டது. இதை நாங்கள் அஞ்சாம் திருநாள் என்றே அழைப்போம். நான் சிறுவயதில் சென்றதால் அவர் குறிப்பிட்டது போல காதல் மங்கையர்களை கண்டது இல்லை. அப்போது எல்லோரும் அக்காக்களாக கண்ணுக்குத் தெரிந்து இருப்பார்கள். பொருட்காட்சி என்றால் மதுரை தான் என்றாலும் இங்கேயும் இந்த விழாவினை முன்னிட்டு விருதுநகர் ஜொலிக்கும் என்பது கண்ணில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

கல்வி. இவர் விருதுநகர் பற்றி எழுதி இருக்கிறார் என்று சொன்னபோது நிச்சயம் கல்வி பற்றி இருக்கும் என்றே எண்ணினேன். ஆமாம், அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. நான் படித்த காலத்தில் கூட கல்வியில் முதலிடம், இப்போதும் தான். எங்கள் கரிசல் மண் அப்படி. விழுந்து விழுந்து படிப்போம். கல்வி காலங்களை கொண்டு வந்து காட்டியதற்கு மீண்டும் நன்றி. விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போடு செல்லக்கண்ணு என பாடும் அளவுக்கு பெருமிதம் உள்ள ஊர் என சொல்லிவிட்டார். ஆமாம், எங்கள் ஊர் வியாபார ஸ்தலம் கூட அதுதான். விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் முதற்கொண்டு. கல்வித்தந்தை காமராஜர் என ஒரு குறிப்பு போதும் ஓராயிரம் கட்டுரைகள் எழுதலாம் என மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டார்.

அதானே, எங்கே புரோட்டா இல்லாமல் போகுமா? அதுவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நான் எண்ணெய் புரோட்டா வாரம் ஒருமுறை சாப்பிட்டு விடுவேன். மதுரை புரோட்டா தினமும் படித்த காலத்தில் சாப்பிட்டது உண்டு. என்னதான் மதுரை புரோட்டா என்றாலும் அவர் சொன்னது போல விருதுநகர் விருதுநகர் தான். பங்குனி திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தது அன்பின் வெளிப்பாடு. திருமணம் ஆகாதவர்களை அழைக்கிறார் என நீங்கள புரிந்துகொண்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. அருமையான எழுத்துங்க, பாராட்டுகள். நந்தினி என்றால் தமிழ் ட்விட்டர் ட்ரென்ட் செட்டர் என்ற ஒரு பெயர் உண்டு. அதை இங்கும் நிரூபித்துவிட்டீர்கள். அவரது கள்ளம் அற்ற உள்ளம் போலவே அன்பு சிறப்பினை சொல்லி இருக்கிறார். சிறப்பு பார்வை சரிதானா என நந்தினிதான் இனி சொல்லவேண்டும்.

களவு போகும் உழவு எனும் கவிதை - ரிஸ்வான். உழவுத்தொழில் நசிந்து வருகிறது. ஏன்  இப்படி இருக்கிறீர்கள் என சமூக அக்கறை சொல்லும் அருமையான கவிதை. உழைப்பை நம்பி கலப்பை சுமந்து என தொடங்கி ஓர் உழவன் மண்ணில் விதையாவான், அவள் மனைவி விதையாவள் என்பது எத்தனை வலி தரும் என அந்த மண்ணில் வசிப்பவரை கேட்டுப்பாருங்கள். அந்த வலியை  வார்த்தைகளால் உணர வைத்துவிட்டார்.

நச்சுனு சிரிங்க. எல்லாமே சிறப்பாக சிரிக்க வைக்கும் ரகம் தான். எத்தனை நகைச்சுவை மிக்க மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சாமி சத்தியமா என்பது நல்ல விழிப்புணர்வு கதை. விஜய் என்பவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் இப்படி திருந்திவிட்டால் இந்த உலகம் எப்படி சிறப்பாக இருக்கும். ஒருவர் திருந்த ஒரு சிறு பொறி போதும். அந்த பொறி எப்படி பற்றிக்கொள்கிறது என அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். பொன்ராம்  அவர்களின் நீரின்றி அமையா உடம்பு அருமையான பதிவு. தண்ணீர் சிகிச்சை முறை என்ற ஒன்று உள்ளது. முறையாக எல்லாம் செய்துவர எல்லாம் சிறப்பாக இருக்கும், நல்ல தகவல்கள் கொண்ட பகுதி. இன்னும் பல விசயங்கள் எழுதி இருக்கலாமோ என தோணியது. நற்பணி தொடரட்டும். ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள் சிந்திக்கும் வண்ணம் ஆங்காங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

கவிஞர் இளந்தென்றல் திரவியம் அவர்களின் அழகிய அழுத்தமான பலகாரக் கிழவி  முக்கு கவிதை. ஒரு கவிஞரின் கவித்தன்மைக்கு ஒரு சில வரிகள் போதும். அந்த கடைசி வரிகள்தான் பலரது மூக்கை உடைக்கும் வரிகள். இன்றுவரை பிள்ளைகள் ஏதும் பெறாத எந்த பெண்ணும் பலகாரக் கிழவியாய் வந்தது இல்லை. எங்கள் ஊர் அரசுப்பள்ளியினை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள் சார். அட்டகாசம். பாராட்டுகள். அடுத்து சத்யா அவர்களின் அவள். ஆஹா அவள் உங்கள் கைகளில் அழகாகவே தவழ்ந்து இருக்கிறாள். கவிதையில் காதல் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

கீர்த்திவாசன் மற்றும் சக்திவேல் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த சிற்றிதழில் முடிந்த மட்டும் தமிழ் தலைப்பு இருப்பது நலம் என்பது எனது எண்ணம். பழமொழியும் அர்த்தங்களும் எழுதுவது எவர் எனத் தெரியவில்லை. மிகவும் சிறப்பு. போக்கத்தவன், வக்கத்தவன் என்பதான எனது அர்த்தம் வேறாக இருந்தது. ஆனால் உண்மை அர்த்தம் இப்போதே கண்டு கொண்டேன். நன்றி. வழக்கம்போல விடுகதைகள் பதில் சில தெரிந்தது. அதோடு மஹியின் பாராமுகம், பாலைவனம் ஒரு நல்ல கவிதை. பெண்கள் இதுபோன்ற கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட கவிதைகள் தான் பலரால் எழுதப்படுகின்றன. நானும் ஒன்பது வருடங்களாக பார்க்கிறேன், புரட்சி கவிதாயினிகளை காண இயலவில்லை. ஏதேனும் சொன்னால் எழுத வருவதுதானே வரும் என ஹூம் என சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

மாறா மரபு. நான் இந்த தொடர்கதை குறித்து என்ன சொல்வது. ட்விட்டரில் கதை சொல்வது எனது வழக்கம். கதைசொல்லி என பட்டம் கொடுத்து திருமதி.மீனம்மாகயல் தந்த பரிசுதான் நான் எனது பெயர் கொண்டு இந்த வலைப்பூவில் அலங்கரித்து வைத்து இருப்பது. 'சிறந்த கதை சொல்லி' அல்ல. 'கதைசொல்லி', அவ்வளவுதான். ஒரு கதையை எந்த முகாந்திரம் இல்லாமல் தொடங்குவேன். ஒரே ஒரு வரி கதைக்கான கரு. அப்படியே அதை ஒரு நாடகத்தொடர் போல வளர்த்து செல்வேன். அப்படி ட்விட்டரில் எழுத ஆரம்பித்த கதை இது. திடீரென நிறுத்தி நாளைத் தொடரலாம் என இருந்தபோது நண்பர் அல் அமீன் கேட்டதும் மறுக்க மனம் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் எவரேனும் திட்டினால் நிறுத்திக்கொள்ளும் உரிமையும், கதையில் மாற்றம் செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்றேன். ஆனால் அவர் தைரியம் தந்த காரணமே இந்த கதை இந்த சிற்றிதழில். நன்றி சார். கதை தலைப்பு என்ன எனக் கேட்டார். உடனே மாறா மரபு என  சொன்னதுதான், தலைப்பு.  இந்த கதையை தொடர்கதையாக வெளியிடுவோம் என நண்பர் அல் அமீன் அவர்கள் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. என்னவொரு நம்பிக்கை! ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட எழுதுபவருக்கு என்ன சுதந்திரம் வேண்டும்? இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது ஆங்கில இதழில் எனது எழுத்து வந்தது இல்லை. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தந்த அவருக்கும் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் எழுத்துக்கான பெரும் பாக்கியம் அது.

ஆஹா பிரமாதம் குழந்தைகள் படம். அதுவும் மாஸ்டர் கானபிரபா அவர்களின் எழுத்தும், சுஷீமா அம்மாவின் எழுத்தும் என்னவொரு பொருத்தம். மனதை கொள்ளைகொண்டன எழுத்தும் குழந்தைகளும். கருப்பையா அவர்களின் வாசிப்பு அனுபவம் கேள்விபட்டது உண்டு. அவர் ஒரு அற்புத கவிஞர். அவருக்குள் ஒரு அற்புத எழுத்தாளர் இருக்கிறார். அவர் பார்வையில் சுமித்ரா எனும் நாவல் குறித்த அவரது அனுபவம் நம்மை அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் வண்ணம் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். அருமைங்க. பாராட்டுகள். அதுவும் நூல் விமர்சனம் முடிக்கும்போது எழுதப்பட்ட வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சிந்தனை போல உள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். சுமித்ரா ஒரு பிரமிப்பு.

சாப்பாடு பக்கம். நளபாகம் ரவி அவர்களின் அக்கி ரொட்டி தயாரிப்பு. பெயரே வித்தியாசம். சப்பாத்தி போல ஆனால் இது சப்பாத்தி அல்ல என அழகாக சொல்லி இருக்கிறார். மைதா மாவு இல்லாதபோது இந்த அரிசி மாவு கொண்டு அக்கி ரொட்டி செய்து மனம் மகிழுங்கள். பாடல் பரவசம் மூலம் நம்மை பரவசபடுத்தி இருப்பவர் செல்வி.உமாகிருஷ். எடுத்துக்கொண்ட பாடல் வெகு சிறப்பு. மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த ரஜினி. நான் இப்படி எல்லாம் ரசித்தது இல்லை. எனக்கு ரஜினி திரையில் இருந்தால் போதும், ரஜினியாகவே நான் உணர்வேன். இவரது எழுத்து வாசித்த பின்னர் ரஜினியை யோசித்துப் பார்த்தேன். பிரமாதம். வரிகள், இசை சிலாகித்த விஷயம் சரி.

ஒரு கவிஞர் என்ன மனோபாவத்தில் எழுதினார் என்பது கவிஞருக்கே வெளிச்சம். அவர் குறிப்பிட்டது போல பாடியதில் தவறு சாத்தியம்தான். ஆனால் இது ஒரு கவிஞரின் எழுத்து என வரும்போது நினைத்தாயோ என்பதை விட நிலைத்தாயோ ஒரு படி மேல்தான். அப்படித்தான் புரிந்து கொண்டேன் என்கிறார். அதுதான் சரி. மறப்பேனா என்ற ஒரு மன நிலையில் நீ நிலைத்துவிட்டாயா? என்ன ஒரு அக்கிரமம் என்பது போல அந்த வரியை எடுத்துக்கொள்ளலாம். அட! இத்தனை தூரம் வரிகள் சிலாகிப்பார்களா என ஆச்சரியமூட்டும் விசயங்கள்.

தேசிய விருது குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி. இறுதியாக ஆசிரியரின் தெரிந்த பிரபலங்கள் தெரியாத உண்மைகள். சந்திரபாபு, நான் ரசித்த ஒரு அற்புத கலைஞன். பல தகவல்கள் அறிய முடிந்தது.

ஆக மொத்தத்தில் இந்த சிற்றிதழ் ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. எல்லோர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இணைய சிற்றிதழ். நமது எழுத்தை எப்போது இந்த சிற்றிதழ் ஏற்றுக்கொள்ளும் என பலரை எண்ண வைத்து இருப்பது  இந்த சிற்றிதழ் பெற்றுவிட்ட மாபெரும் பெருமை. சிறந்த வடிவமைப்பு, நல்ல கருத்துகள் தாங்கி வந்து இருக்கிறது என்றே சொல்லி மகிழ்வர். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தினைத் தாண்டி பாருங்கள். பிரமிக்க வைத்து இருக்கிறார் நண்பர் அல்  அமீன்.

அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

'தமிழ் வளர்த்த நமது மண்ணை 
தமிழ் கொண்டு சிறக்க 
வைப்பது நமது திண்ணை' 

நன்றி 

Thursday 6 November 2014

குறையொன்றுமில்லை - திரைக்காவியம்

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்கக் கூடாது என்பது பற்றி எல்லாம் எனக்கு உண்மையிலேயே தெரியாது. ஆனால் எப்படி ஒரு திரைப்படத்தை ரசிக்க வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ் படங்களில் பாடல்களை வெறுத்து ஒதுக்கும் நான் இந்த படத்தில் பாடல்களை, பாடல்களை படம் எடுத்த விதம் தனை சற்று உன்னிப்பாகவே கவனித்தேன். பாடலாசிரியருக்கும், இசை அமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கும்  என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். வெகு பிரமாதம். ஒரே ஒரு பாடல் மட்டும் எல்லாம் நடந்து முடிவது போல வழக்கமான சினிமா இருக்கத்தான் செய்கிறது. எனினும்...

படம் ஆரம்பித்து படம் முடியும் வரை ஏதோ ஒன்று வெகுவாக நெருடிக்கொண்டே இருந்தது. சில படங்களின் பாதிப்பு வெகுவாகவே என்னுள் ஏற்படும். பல வருடங்கள் பின்னர் நான் பார்த்த படங்களில் இந்த குறையொன்றுமில்லை படம் என்னுள் பாதிப்பு ஏற்படுத்திய படங்களில் ஒன்று. தமிழ் படங்களில் வணிகத்தை முன்னிறுத்தி ஆறு பாடல்கள் நான்கு சண்டைகள் எனும் கட்டமைப்பை உடைத்து இதுபோன்ற படங்கள் அத்திப்பூத்தாற்போல் வந்து சேர்கின்றன.

இந்த படத்தின் கரு எப்படியோ அதே நிலைதான் இந்த படத்தின் உண்மையான நிலையும். தயாரிப்பாளர்கள் இந்த படத்தை அதிக விலை கொடுத்து விற்க முற்பட்டு இருந்தாலும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் படம் நல்லா இருக்கு ஆனால் ஓடுமானு தெரியலை என சொல்லி இருப்பார்கள். இப்போதெல்லாம் படம் பல நாட்கள் ஓடும் வழக்கம்தனை  தமிழ் திரையுலகம் மறந்து கொண்டு இருக்கிறது. படம் வெளியான மூன்றே நாட்களில் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். வணிக வெற்றி தான் ஒரு படத்தின் வெற்றி என தமிழ் திரையுலகம் தலையில் வைத்து கொண்டாட தொடங்கிய காலம் எப்போதும் மாறப்போவதில்லை.

ஸ்டார் வேல்யூ என்பதுதான் தமிழ் திரையுலகின் சாபக்கேடு. 'பெரிய' நடிகர்கள் 'பெரிய' இயக்குனர்கள் என தமிழ் திரையுலகம் போற்றி களித்திருக்கட்டும். நல்லதுதான். அதே வேளையில் இது போன்ற திரைக்காவியங்களை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கக் கூடாது. அவ்வப்போது அருமையான படங்களை வெளியிடும் இயக்குனர்களை தயாரிப்பாளார்களை உற்சாகமூட்டும் அளவிற்கேனும் அவர்களுக்கு வருவாய் கிடைத்தாலே போதும்.

இந்த படத்தின் திரைக்கதை ஒரு நாவலை போல பயணிக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் வாசகன் பக்கங்களை வேகமாக புரட்டிவிட நினைக்காத புத்தகம் போல சினிமாவிற்கு எனும் யுக்தியோடு திரைக்கதை அமைந்து இருக்கிறது. படம் நிதானமாகவே நகர்கிறது. அவசர உலகில் சாப்பிடுவதற்கே அள்ளிப்போட்டு கொண்டு ஓடும் மனநிலை கொண்ட மக்கள் மத்தியில் நிதானம் எல்லாம் எப்போது வரப்போகிறது. எதிலும் ஒரு அவசரம், எதிலும் புரிதலின்மை என வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது.

விவசாயம் அதன் மூலம் அந்த மக்கள் அடையும் தன்னிறைவு தாண்டிய ஒரு நிலையை குறையின்றி சொல்ல முற்பட்டு இருக்கிறார் கார்த்திக் ரவி. வாழ்த்துக்கள். படத்தில் அடுத்தவர்களை கேலி பேசி அடி கொடுத்து அடி வாங்கி எனும் கோமாளித்தனமற்ற நகைச்சுவை காட்சிகள் ஆங்காங்கே புன்னகையை வரவழைத்து போகிறது. வறட்டு பிடிவாதம் முரட்டு பிடிவாதம், புதுமைக்கு செல்லும் தயக்கம் என யதார்த்த வாழ்வை மிகவும் அழகாகவே படம் பிடித்து இருக்கிறார்கள்.

எனது கிராமத்தில் எனது தாத்தா கடை ஒன்று இருக்கிறது. அங்குதான் வத்தல், பருத்தி என சென்று விவசாயிகள் கூலியாட்கள் கொண்டு போடுவார்கள். அவர்களுக்கு தாத்தா ஒரு விலை நிர்ணயம் செய்வார். ஓரளவு எல்லாம் சேர்ந்தபின்னர் மாட்டு வண்டி, டிராக்டர் என விருதுநகருக்கு அவ்வளவும் கொண்டு சென்று ஒரு கமிசன் மண்டியில் கொண்டு சேர்ப்பார். அங்கே கமிசன்காரர் ஒரு விலை நிர்ணயம் செய்வார். பின்னர் அங்கிருந்து அவை வெவ்வேறு இடங்களுக்கு செல்லும். இப்போதும் கூட கிராமத்தில் விளைபவைகள் எல்லாம் அருகில் உள்ள நகரங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்று வரும் வழக்கமே உள்ளது. ஒரு மூட்டை கத்தரிக்காய் இவ்வளவு விலை எனபது போன்று நிர்ணயம் செய்யப்படும்.

பெரிய விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் எனது விவசாய பணி என்பது நீர் பாய்ச்சுவது, வேலையாட்களுக்கு சாப்பாடு கொண்டு செல்வது என்பதோடு முடிந்தது. மற்றபடி இதுவரை இந்த வியாபார நுணுக்கம் எல்லாம் சென்று நேரடியாக பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் இன்னும் விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்கள் தான் கிடைக்கமாட்டேன்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கையை சீரமைக்க முடியவில்லை என்றாலும் குடிப்பழக்கங்கள் புகைப்பழக்கங்கள் சீரழித்து விடுகின்றன. முறையாக விவசாயம் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் ஆனால் விவசாயம் என்பது வானம் பார்த்த பூமி. மழை பொய்த்தால் எல்லாம் பொய்க்கும். எப்படி விலங்குகள் தங்களுக்கு தேவையானதை சேகரித்து கொள்கிறதோ அது போல மழை இல்லாமலும் வரும் விவசாயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கதைநாயகன் கதைநாயகி என படத்தின் காதல் காட்சிகள் அட! முதலிலேயே கதைநாயகனின் குண நலன்களை ஒரு காதல் காட்சியில் சொல்லி விடுகிறார்கள். புதிய விஷயத்தை சாதிக்க நினைக்கும் எவருடைய குணமும் அப்படித்தான் இருக்கும். இந்த உலகில் எதையும் சாதிக்க வேண்டும் எனில் திறமை மட்டும் போதாது எவரேனும் அதை ஊக்குவித்தால் மட்டுமே இயலும். மிக இயல்பாக ஒரு திரைப்படம் செல்கிறது. நமது கனவுதனை வேறு ஒருவர் காண இயலாவிட்டாலும் நமது கனவுக்கு சரி என சொல்ல ஒருவர் போதும்.

படத்தில் பர்மிங்க்ஹாம் நகரம், லண்டன் நகரம் எல்லாம் கதைநாயகியின் தயவால் வந்து போகிறது. இந்த நகரங்களின் ஒளிப்பெருக்கை விட தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தின் ரம்யமான காட்சிகள் மனதை வருடிச் செல்கின்றன. கிராம வளர்ச்சி என சில வருடங்கள் முன்னர் ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அந்த கதையின் நாயகன் கிராமத்திற்கு சென்று மருத்துவ பயிற்சி பெற வேண்டும். அந்த கதையை நினைவுபடுத்துவது போல இந்த கதைநாயகியின் மருத்துவ சேவை. அதையொட்டிய விவசாயிகள் கடன் பட்டு படும் தொல்லைகள் தற்கொலைகள், கதாநாயகனின் நண்பனின் தங்கை கல்யாணம் பண்ண இயலாது என நினைத்து தற்கொலை பண்ண முயலும் காட்சி என விவசாயியின் துயரம். புதிய விஷயம் நமக்கு சரிப்பட்டு வருமா என யோசிக்கும் ஊர்க்காரர்கள்.

பணத்தை தந்தால் என்ன பண்ணுவீர்கள் என மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட காட்சிகள். புதிய விஷயத்தை கொண்டு வர பெரிய நிறுவனங்கள் லாப கணக்குதனை மனதில் வைத்து புறம் தள்ளும் முயற்சிகள் என ஒரு யதார்த்தமான சூழலை இந்த படம் சொல்லிச்செல்கிறது. இப்போதெல்லாம் நிறைய தமிழ் குறும்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ் குறும்படங்களின் ஒரு நீட்சி என சொல்லலாம். ஒரு சமூகம் முன்னேற எவரெவர் தடை இருப்பார்கள் என அழகாகவே சித்தரித்து இருக்கிறார்கள்.

ஜிகர்தண்டா, அஞ்சான், கத்தி, பூஜை போன்ற படங்கள் மத்தியில் இது போன்ற படங்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பது வெகு கடினம். அடுத்தவர் கவலையை படுவதற்கு நமக்கே நேரம் கிடையாது என்பதுடன் அல்லாமல் சினிமா ஒரு பொழுதுபோக்கு அதில் இப்படி எல்லாம் எடுத்தால் எவர் பார்ப்பார்கள் என்கிற மனப்பக்குவமும் இருக்கத்தான் செய்யும். தமிழில் இது போன்ற படங்கள் எல்லாம் விருதுக்குரிய படங்கள் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இதுபோன்ற படங்கள் நிச்சயம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

படம் முழுக்க காதல் ததும்பி வழிகிறது, அத்தோடு உணர்வுப்பூர்வமான காட்சிகளும். குறையொன்றுமில்லை மிகவும் சிறப்பான தமிழ் சினிமா. இந்த திரைப்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Sunday 21 September 2014

தமிழக திரையரங்குகள் (தியேட்டர்கள்)

இந்தியாவில் சில நாட்கள் - 11

சினிமா உயிர் மூச்சு என மொழி உயிர் மூச்சு என்பதை இடம்பெயரச் செய்துவிடும் அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் நிறையவே உண்டு. எங்கள் கிராமத்தில் எல்லாம் சினிமா கொட்டகை எல்லாம் இல்லை. ஒன்று விருதுநகர் செல்ல வேண்டும் அல்லது அருப்புகோட்டை செல்ல வேண்டும். எனக்கு விபரம் தெரிந்து சிறு வயதில் விருதுநகர் சென்று திரைப்படம் பார்ப்பதுதான் வழக்கம்.

விழாக்காலங்களில் எங்கள் ஊரில் வெள்ளை திரை கட்டி சினிமா காட்டுவார்கள். அதுவும் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் அப்போது நிறைய. புழுதியில் அமர்ந்து அப்படியே உறங்கி என சினிமா பார்ப்பது ஒரு அருமையான தருணங்கள். அதுமட்டுமல்லாது மில் எனும் பக்கத்து ஊரில் அவ்வப்போது போடப்படும் படத்திற்காக கம்மாய் கரை தாண்டி சென்று பார்த்துவிட்டு நடு இரவில் மயானக்கரை தாண்டி வருவது எல்லாம் ஒரு சிலிர்ப்பான அனுபவங்கள்.

விருதுநகரில் ராஜலட்சுமி, அப்சரா, அமிர்தராஜ், சென்ட்ரல் இன்னும் சில தியேட்டர்கள். சென்ட்ரலில் அமிர்தராஜில் கட்டை இருக்கைகள் என்றே நினைக்கிறேன். ராஜலட்சுமி அப்சரா புதிய தியேட்டர்கள். இருக்கைகள் நன்றாக இருக்கும்.  ஐந்தாம் திருவிழா காலங்களில் சினிமா ஒரு அங்கம். இப்படி ஒருமுறை விருதுநகர் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு மழை பெய்ததால் சைக்கிளில் மண்பிடித்து கண்மாய் வழி வழியாக வீடு செல்ல முடியாமல் நாங்கள் நான்கு பேர் மல்லாங்கிணர் சென்று அங்கிருந்த தெரிந்த மருத்துவர் வீட்டில் சென்று தங்கினோம். அப்போது எல்லாம் வீடுகளில் தொலைபேசி இல்லை. தபால் அலுவலக வீடு மாமா வீட்டில் மட்டும் தொலைபேசி இருக்கும். அவர்களுக்குத்தான் எல்லா தகவல்களும் வந்து சேரும். நாங்களும் அவர்களுக்கு தகவல் சொல்லி நாங்கள் காலை வருகிறோம் வீட்டில் சொல்லிவிடுங்கள் என சொல்லி வைத்தோம்.

எங்கள் காலம், அவர் வீட்டில் சொல்ல மறந்து போனார். எங்களை இரவு ஆகியும் காணாமல் தேட ஆரம்பித்துவிட்டார்கள். மல்லாங்கிணர் டிராக்டர் மூலம் வந்து சேர நாங்கள் இருக்கும் இடம் அறிந்து பின்னர் அழைத்துச் சென்றார்கள். அந்த மாமாவுக்கு அடுத்த நாள் நல்ல திட்டு விழுந்தது. பின்னர் அருப்புக்கோட்டையில் படித்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி சென்று படம் பார்த்த நண்பர்கள் பிடிபட்டு அடி வாங்கிய நிகழ்வுகள். மகாராணி, லட்சுமி தியேட்டர்கள் பரவாயில்லாத ரகம். எனக்கு ரஜினி படமே போதும் என்று இருக்கும். அதிகம் படம் எல்லாம் பார்ப்பது இல்லை. மதுரையில் படித்தபோது ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகள் எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்கிறார்கள் என! எனக்கு படிப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது. இருப்பினும் கமல் ரசிகருடன் அவ்வப்போது ரஜினி கமல் பார்க்க சென்று விடுவது உண்டு.

மதுரையில் சினிப்ரியா, மினிப்ரியா என சில தியேட்டர்கள். ஆரப்பாளையம் அருகே சில தியேட்டர்கள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். எப்போது படத்திற்கு கூப்பிட்டாலும் தலைவர் படம் வரட்டும் என சொல்லி எனது சினிமா ஆசையை காட்டுவேன். என்னை தனியாகவே விட்டுவிட்டு அவர்கள் படத்திற்கு செல்வார்கள். ஒத்தக்கடையில் ஒரு தியேட்டர். என்னை வலுக்கட்டாயமாக படத்திற்கு அழைத்து சென்றார்கள். என் வாழ்வில் முதன் முதலில் என்ன பார்க்கிறோம் என தெரியாமல் பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். குளியல் அறையில் பெண் என திடீரென ஒரு காட்சி வந்தது. என் நண்பன் என் அருகில் மாப்பிள்ளை அதுதான் அது என்றான். எது என்றேன் எதுவும் புரியாமல். அன்று முதல் என்னை சாமியார் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். வாழ்வில் அனுபவிக்க வேண்டியது நிறைய என்றார்கள். எனக்கு அந்த அந்த காலத்தில் அனுபவித்தால் போதாதா, இப்போது படிப்பு மட்டும் தானே என்றே சொன்னது உண்டு. அந்த தியேட்டர் கட்டை இருக்கை தான்.

சென்னையில் ஒரு வருடம் இருந்தபோது சில தியேட்டர்கள் போனது உண்டு. தியேட்டர்கள் நன்றாகவே இருக்கும். இப்படி எனது வாழ்வில் தியேட்டர்கள் மிகவும் குறைந்த பங்கே வகுத்து இருக்கின்றன அதுவும் ரஜினி, கமல், மணிரத்தினம் புண்ணியத்தில்.

இந்த முறை அருப்புகோட்டை தியேட்டர் ஒன்றில் அஞ்சான் படம் பார்க்க சென்று இருந்தோம். இருக்கைகள் கிழித்து எறியப்பட்டு இருந்தன. வெத்தலை எச்சில்கள் துப்பப்பட்டு இருந்தன. ஏசி என சொல்லிவிட்டு காத்தாடி சுற்றிக்கொண்டு இருந்தது. உள்ளே வெக்கையில் குளித்துக்கொண்டு இருந்தோம். படம் பார்க்கவே மனம் இல்லை. எப்படா படம் முடியும் வீடு போவோம் என இருந்தது. இதற்கு எங்கள் ஊர் மண்ணில் அமர்ந்து பார்த்தால் காற்றாவது நன்றாக வரும். இப்படி தியேட்டர் வைத்து இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க போவார்கள். சும்மா தியேட்டருக்கு வந்து பாருங்க பாருங்க என கத்தும் தியேட்டர் அதிபர்கள் கிராமப்புற தியேட்டர்களில் அக்கறை செலுத்துவது நல்லது, அப்படி இல்லையெனில் பேசாமல் திருமண மண்டபங்கள் கட்டிவிட்டுப் போகலாம். தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எச்சில் துப்புவது, இருக்கையை கிழிப்பது என நாகரிகமற்ற மனிதர்கள் மீதும் அதிக வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் கட்டை இருக்கைகள் தான் லாயக்கு.

சென்னையில் ஒரு தியேட்டர் போனோம். ஒரே இடத்தில் அங்கே கிட்டத்தட்ட பல திரையரங்குகள். அருப்புக்கோட்டையில் டிக்கெட் விலை நூறு ரூபாய், இங்கே நூற்றி இருபது ரூபாய். மிகவும் சுத்தமாக அருமையாக பராமரித்து இருந்தார்கள். மிகவும் உல்லாசமாக படம் பார்க்க முடிந்தது. எல்லா வசதிகளும் நகரங்களில் ஏற்படுத்தி கிராமப்புறங்கள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன போலவே காட்சி தந்தது. இருக்கைகள் வசதி எல்லாம் வெகு சிறப்பு. அதற்காக அருப்புகோட்டையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்தா செல்ல முடியும்?

திருட்டு விசிடி, படத்திருட்டு என எத்தனையோ விசயங்கள் சினிமாவை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை விட பராமரிக்கப்படாத திரையரங்குகள் கூட திரைப்படங்களை அழித்து விடும் தான்.

திரையரங்குகள் நாம் செல்லும் விருந்தினர் வீடு போல. போர்க்களம் செல்வது போலவா திரையரங்குக்கு செல்வது? திரையரங்குகள் பாதுகாக்கப்படுவது நல்ல சினிமாவை பாதுகாப்பது போலத்தான். கிராமப்புறத்து ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்களா?

(தொடரும்) 

Monday 24 February 2014

கதிர்வேலனின் வில்லாவில் பிரியாணி

சினிமா பார்ப்பது போன்று ஒரு பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. அதுவும் பாப்கார்ன் கொறித்துக் கொண்டு ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதைகளை ரசிப்பதில் ஒரு அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது. இதை பண விரயம் என்றெல்லாம் சொல்லி முடித்து விடமுடியாது. சினிமா எதையோ மக்கள் மனதில் காலம் காலமாக சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால் மக்கள், ஆமா இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாக்கும் என்றே மனபாவத்தில் படங்களை அணுகுகிறார்கள்.

இது கதிர்வேலனின் காதல். ஒரே வரிக்கதை. அப்பாவின் சம்மதத்துடன் தனது காதலியை கரம் பிடித்துவிட  நினைக்கும் காதலன். இப்போது இதை சுற்றி ஒரு திரைக்கதை பின்னப்பட வேண்டும். அவ்வளவே. காதலிக்கு ஒரு கெட்ட நண்பன், காதலியின் அப்பாவுக்கு ஒரு பலமில்லாத எதிரி. காதலுனுக்கு ஒரு நகைச்சுவை நண்பன், ஒரு காதலித்து ஓடிப்போன அக்கா, காதலை எதிர்க்கும் தந்தை. இப்படியாக திரைக்கதை முடித்தாகிவிட்டது. காதலில் ஒரு தவிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. அதை படம் முழுவதும் தெளித்து இருக்கிறார்கள். மனதில் எதுவுமே ஒரு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. காதல் புளித்துப் போன ஒன்றாகிவிட்டது.

அப்படியே வில்லா பக்கம் போனால் பில்லி சூனியம் இதற்கு ஒரு அறிவியல் பின்னணி, நரபலி என்றெல்லாம் சொல்லி தமிழ் உலகம் இன்னும் மாறவில்லை என்றே சொல்லி முடிக்கிறார்கள். ஓவியத்தில் வரையப்பட்டது எல்லாம் நடக்கிறது என்கிற ஒரு தோரணையை உருவாக்கி இருக்கிறார்கள். திகிலும் இல்லை ஒண்ணுமில்லை. படம் மெதுவாக ஊர்ந்தால் அது இலக்கியத் தரமிக்கது என்றெல்லாம் தமிழ் சினிமா நினைக்க ஆரம்பித்துவிட்டது. அதில் ஒரு காதல். தனது காதலியை தான் மணமுடித்து கொல்ல வேண்டுமே என இறந்து போகும் காதலன், கதைநாயகன். ஆனால் அந்த மணவாளன் வேறு என முடியும் படம். ஒரு சுறுசுறுப்பு வேண்டாம். இது பிட்சா எனும் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லி இருந்தார்கள், பிட்சா படத்தின் முதல் பாக கதை மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து அதுபோன்று தமிழில் சினிமா வர இயல்வதில்லை இதனால் தான் ஜில்லா, ஆரம்பம் போன்ற மசாலா படங்கள் எப்போதும் தமிழில் கொடிகட்டி பறக்கின்றன.

மசாலா படங்கள் கொடி கட்டி பறக்கின்றன என பிரியாணி பக்கம் போனால் அது என்ன கதை என நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வெஜிடபிள் பிரியாணியா, சிக்கன் பிரியாணியா. சிக்கன் பிரியாணி கதை தான். எதிர்பாராத திருப்பங்கள் கொண்டு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்து இருந்தார்கள். யார் கொலையாளி என்பதை படம் முழுக்கத் தேடவிட்டு இருந்தார்கள். சினிமா என்றால் பொழுதுபோக்குதான். அதை சற்று கனகச்சிதமாகவே இந்த பிரியாணி முடித்து இருந்தது. இந்த காட்சி எதற்கு, அது எப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பாமல் வாசமிக்க பிரியாணி தான்.

இப்போது தமிழ் சினிமா இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது. நாங்க எங்க இஷ்டத்துக்கு படம் எடுப்போம், அது எங்களுக்குப் பிடிச்சி இருக்கு. உங்களுக்கு பிடிச்சி இருந்தா எங்க தயாரிப்பாளுருக்கு லாபம் இல்லைன்னா நஷ்டம். மத்தபடி படைப்பாளிக்கு ஒரு படைப்பு எப்பவுமே உசத்திதான். மோசமான படம் என நினைத்தால் தயாரிப்பாளர், இயக்குனர் அந்த படத்தை தயாரிக்க இயக்க முன்வருவாரா, இல்லையே. படைப்புதனை தர வேண்டும், அதில் பணம் பண்ண வேண்டும் என நினைப்பவர்கள் சற்று சிந்திப்பது நலம். எவர் இதை எல்லாம் கருத்தில் கொள்ளப்போகிறார்கள்.

இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் கிடைப்பது குறித்து பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். வெளிநாடுகளுக்கு தியேட்டரில் படம் வருகிறதோ இல்லையோ புத்தம் புது காப்பி என டிவிடி கிடைத்துவிடுகிறது. குறிப்பிட்ட சில படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம் என நினைக்கும் மக்களையும் இந்த விமர்சகர்கள், கருத்து சொல்லிகள் படம் வந்த முதல் நாள் அன்றே படத்தை குறித்த கருத்துகளை இணையதளத்தில் தெளித்துவிடுவதால் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று கணிசமாக கூடவோ குறையவோ  செய்கிறது. விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் என்பது கூட கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனவே இனிமேல் தமிழ் சினிமா கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து ஒரு படம் எடுப்பதைவிட குறைந்த பணத்தில் அற்புதமாக படம் படைத்து நகர வேண்டும் என்பதே ஒரு வேண்டுகோள். எவரும் செவிமடுக்க போவதில்லை என்பது வேறு விஷயம். 

Wednesday 9 October 2013

நடிகைகளும் இயக்குனர் சிகாமணிகளும்

''நாய் வேசம் போட்டா குரைக்கத்தான் வேணும்'' என எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார்.

''என்னதான் நான் குரைத்தாலும் நாய் போல் என்னால் குரைப்பது என்பது கடினமே, வேசம் போட்டாலும் என்னால் நாயாக ஆக முடியாது, அதனால் இந்த நாய் வேசம் எல்லாம் போட முடியாது'' என அவர் முகத்தில் அறைந்தது போன்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இங்க வாடா'' என என்னை அழைத்து ஒரு அறை விட்டார்.

''எதுக்கு சார் இப்ப அடிக்கிறீங்க?'' என சுற்றி நிற்கும் மாணவர்கள் பார்க்கும் அவமானம் தாங்காமல் கேட்டேன்.

''நாய் வேசம் போடுன்னு சொல்றேன், ராஸ்கல் என் பேச்சை கேட்காம என்னையவா எதிர்த்து பேசற''

''என்னால முடியாது சார், அதுக்கு வேற ஆளு பாருங்க'' என திரும்பவும் சொன்னேன்.

''என்ன திமிருடா உனக்கு, நாயே'' என காலால் எட்டி உதைத்தார். அவர் சொன்னதை செய்யாமல் அடம் பிடிக்கும் என்னால் அவருக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது போன்றே அவ்வாறு நடந்து கொண்டார் என நினைத்தேன். ஆனால் எனக்கு நாய் வேசம் போடவே விருப்பம் இல்லை.

இனிமேலும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது என ஆசிரியர் என்று கூட பார்க்காமல் அவரை ஓங்கி காலால் எட்டி உதைத்தேன். எனக்கு எப்படி அத்தனை தைரியம் வந்தது என எனக்குத் தெரியவில்லை. பதவி, நிலை என காரணம் காட்டி பிறரை கொத்தடிமைகளாக வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சமூகம் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்தது. மாணவர்கள் அனைவரும் டேய் வாத்தியாரை அடிச்சிட்டாண்டா என்றே பேசிக் கொண்டார்கள். வாத்தியாருக்கு அடிக்கும் உரிமையை எவர் கொடுத்தது? என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை செய்ய சொல்லும் உரிமை அவருக்கு எவர் தந்தது.

ஆசிரியர் என்னை பாய்ந்து கொண்டு அடிக்க வந்தார். நானும் விடுவதாக இல்லை. மாணவர்கள் சிலர் இடையில் புகுந்தார்கள். கல்லூரி முதல்வரிடம் அழைத்து செல்லப்பட்டேன்.

''நீ என்ன காரியம் பண்ணியிருக்க, ஒரு ஒழுக்கம் வேண்டாம்'' என முதல்வர் என்னைத் தான் திட்டினார்.

''இதோ நிற்கிறாரே அவருக்கு ஒழுக்கம் இருக்கானு கேளுங்க சார்'' என்றேன்.

''என்ன அடவாடியா என்கிட்டே பேசறே, ஒரு ஆசிரியரை நீ அடிச்சது குத்தம், நீ உன் பேரன்ட்ஸ் கூப்பிட்டு வந்து டிசி வாங்கிட்டு போ, உனக்கு இனிமே நல்ல கண்டக்ட் சர்டிபிகேட் தரமுடியாது'' என எனது பக்கம் நியாயம் எதுவும் கேட்காமல் முடிவை சொன்னார்.

''மாணவர் போராட்டம் வெடிக்கும், எப்படி காலேஜு நடத்துரனு பாக்கிறேன்'' என்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இருப்பா'' என்றார் கல்லூரி முதல்வர். நான் நிற்காமல் வெளியில் வந்து விட்டேன். மாணவர்கள் என்ன ஆச்சு என்றே கேட்டார்கள். நடந்ததை சொன்னேன். எவரும் என் பேச்சு கேட்பதாய் தெரியவில்லை. நான் ஆசிரியரை அடித்தது தவறு என்றே சொன்னார்கள்.

கல்லூரியில் நடந்த விசயம்தனை வீட்டில் சொன்னேன். ''நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போக வேண்டியதுதானே, எங்க தலைவிதி வந்து தொலையறோம், கையில காலுல விழுந்து உன்னை அங்கே படிக்க வைக்கிறோம்'' என்றே அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். அன்று  மாலை எனக்கு சிறு வயதில் இருந்து தெரிந்த ஒரு அக்காவை பார்க்க சென்றேன். அவர் சினிமாவில் இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். எதற்கு நடிக்க போனார் என்றெல்லாம் நான் கேட்டதில்லை. இருப்பினும் இந்த நடிப்பு குறித்து கேட்க வேண்டும் என சென்றேன். என்னை பார்த்ததும் வா என முகம் ம்லர வரவேற்றார்.

''என்னடா நடிக்க சான்ஸ் கேட்டு வந்துட்டியா'' என சிரித்தார்.

''என்னால நடிக்க முடியாதுக்கா, நடிப்பு எல்லாம் எனக்கு வராதுக்கா'' என்றேன்.

''என்னடா சோகமா இருக்க'' என அக்கறையுடன் கேட்டார்.

கல்லூரியில் நடந்ததை சொன்னேன். அந்த அக்கா என் மேல் அதிக கோபம் கொண்டார்கள.

''ஏண்டா, இதுக்கா இப்படி ரகளை பண்ணுவ. நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போகலாமேடா'' என அந்த அக்காவும் சொன்னதும் எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

''ஏன்க்கா, படத்தில உங்களுக்கு பிடிக்காத மாதிரி நடிக்க சொன்னா என்னக்கா பண்ணுவீங்க'' என்றே கேட்டு வைத்தேன்.

''முடியாதுன்னு சொல்வேன், நடிச்சித்தான் ஆகனும்னு சொன்னா நடிச்சி தான் கொடுக்கனும். இது தொழில், இதுல முரண்டு பிடிச்சா நிலைக்க முடியாதுடா. நீ எந்த வேலைக்கும் போய்ப்பாரு, சொல்ற வேலையை நீ செய்யலைன்னா உன்னைய தூக்கிருவாங்கடா'' என அந்த அக்கா சொன்னதும் இந்த சமூகம் பற்றிய கோபம் கொந்தளித்தது.

''சுதந்திரமா நாம நினைச்சத செய்ய முடியாதாக்கா'' என்றே சோகமாக கேட்டு வைத்தேன்.

''எனக்கு நடிக்கிறது பிடிச்சி இருக்கு, அதான் வாய்ப்பு தேடி ஒரு படத்தில வாய்ப்பு கிடைச்சி இருக்கு. டைரக்டர் என்ன சொல்றாங்களோ அதை நான் அப்படியே செய்யலைன்னா இந்த பொண்ணு திமிரு பிடிச்சவனு முத்திரை குத்திருவாங்க, அப்புறம் என் கேரியர் என்ன ஆகுறதுடா. எல்லாம் டைரக்டர் கையில இருக்குடா. நான் எல்லாம் ஒரு பொம்மை மாதிரி'' என சொல்லும்போது ஏதோ ஒரு வலி இருப்பதை போன்று நான் உணர்ந்தேன்.

''அக்கா, நான் டைரக்டர் ஆகனும்க்கா'' என்றேன்.

''டே நிசமாவ சொல்ற, நடிக்க பிடிக்காதுன்னு சொன்ன, டைரக்டர்னா நடிச்சி காமிக்கனும்டா. அப்போதான் எப்படி நடிக்கனும்னு தெரியும். சில காட்சிகள் நமக்கே இயல்பா வரனும்டா, நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா. நான் நல்லா நடிக்கிறேன்னு யூனிட்ல எல்லாரும் சொல்றப்ப சந்தோசமா இருக்கும்டா'' என அவர் சொன்னபோது டைரக்டர் கூடவா நடிக்க வேண்டும் என்றே தோணியது. நான் அமைதியானேன். இந்த இயக்குனர்கள் மனம் வைத்தால் எல்லா நடிகைகளும் ஒரு கவர்ச்சி பொருளாக சினிமாவில் வர வாய்ப்பில்லை என்றே நினைக்க தோணியது.

''கவர்ச்சியா எதுக்குக்கா நடிக்கனும்'' என நான் கேட்டது எனக்கே தப்பாக தோணியது. ஒவ்வொரு சராசரி மனிதனும் பிற பெண்களை கவர்ச்சியாக பார்க்கும் எண்ணம் பெருகி விட்ட காலத்தில் எனது கேள்வி தவறுதான்.

''இதை ஒரு கலை நோக்கில, தொலைநோக்கு பார்வையில நீ பார்க்கனும்டா, யாரும் விருப்பபட்டு இப்படி நடிக்கிறதில, ஒரு கான்செப்ட் அதுக்கு ஒரு டான்ஸ் இப்படிதான் போகும்'' என அவர் சொன்னது அவரது பக்க நியாயம் தெரிந்து கொள்ள முடிந்தது.

''எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலைக்கா, வரனும்'' என மனமாற்றத்திற்கு தயாரானேன்

''இங்க பாருடா, நீ கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து வாழ பழகிக்கோ, எத்தனை தடவை நான் சொல்றது. எப்ப பார்த்தாலும் யாருகிட்டயாவது சண்டை போட்டு வந்து நிக்கிற, உன்னால உன் குடும்பத்துக்கு எத்தனை அவமானம். உன்னை யாருக்குடா பிடிக்கும் சொல்லுடா'' அந்த அக்காவின் வார்த்தை என்னுள் வலியை ஏற்படுத்தியது. ''டைரக்டர் ஆகனும்னா சொல்லு, இந்த படத்து டைரக்டர்கிட்ட சொல்லி அசிஸ்டெண்டா ஒர்க் பண்ண சான்ஸ் கேட்கறேன்''.

''வேணாம்க்கா, காலம் பூரா நடிக்க எனக்கு முடியாதுக்கா'' என சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து கிளம்பினேன்.

''சார், சார்' என கதவை தட்டினேன்.

''என்னடா, வீட்டுக்கே வந்துட்டியா, உன் கேரியர் பாதிக்குமேனு உன் மேல போலிஸ் கேசு போடாம விட்டது என் தப்பு'' என்றார் அந்த ஆசிரியர்

''சார், என்னை மன்னிச்சிருங்க சார், நான் நாளைக்கு நாய் வேசம் போட்டு குரைக்கிறேன்'' என்றேன்

''இப்போ மட்டும் எப்படி அறிவு வந்துச்சி, அதை முன்னமே செய்றேன்னு சொல்லி இருக்கலாமே''

''என் தப்பு தான் சார்''

''சரி போ, நான் பேசிக்கிறேன். காலேஜுக்கு நாளைக்கு வா''

நாய் போல எப்படி குரைப்பது என ஒத்திகை பார்க்க துவங்கினேன். மனிதனாய் எதற்கு பிறந்தோம், விலங்காகவே பிறந்து இருக்கலாமோ  எனும் கேள்வி என்னை துளைத்துக்கொண்டு இருந்தது!

Monday 7 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படைப்பாளியும்

தமிழில் இப்படி ஒரு திரைப்படம் இனிமேல் வருமா அல்லது இப்படி ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இது ஒரு தமிழ் திரைப்படம். சற்று வித்தியாசமான தமிழ் திரைப்படம். கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிகாட்சிக்கு சற்று முன்வரை  யார் இந்த ஓநாய் என்பதை சொல்லாமல் காட்சி அமைப்புகள் அமைத்த விதம் இந்த படத்தின் சிறப்பம்சம். இந்த ஓநாய்தனை சுற்றி பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் கதையை வெகு சுவாரஸ்யமாக நகர்த்த ஏதுவாகிறது. அதுவும் இந்த ஓநாய் பற்றிய கதையை ஓநாய் சொல்லும்போது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அத்தனை அருமை. பின்னோக்கி பார்த்தல் என பெரும்பாலான படங்களில் பல காட்சிகளை வைத்து நகர்த்தி இருப்பார்கள். ஆனால் இதில் ஒரு சின்ன கதையை அழகாக சொல்லி ஒரே காட்சியில் ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்கள்.

அவ்வளவுதான் கதை. ஆனால் சொல்லப்பட்ட விதம் சற்று வித்தியாசமானது. பிட்சா மற்றும் இது போன்ற தமிழ் படங்கள் நிறைய வர வேண்டும் என்றே சற்று தமிழ் ரசிகர்கள் ஒருவேளை  எதிர்பார்க்கலாம். ஆனால் இதே காலகட்டத்தில் தான் மற்ற மசாலா படங்கள் கூட வெற்றியும் குவிக்கின்றன. ஒரு படைப்பை இத்தனை சிரமப்பட்டுத்தான் தர வேண்டுமா என்றே பலரும் நினைக்க கூடும். மிகவும் எளிமையாக ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என முடித்து செல்வதை விட்டுவிட்டு இதெல்லாம் அவசியமா என்றே குரல் எழுப்பப்படும். ஆனால் அந்த அந்த படத்திற்கு அந்த அந்த சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழ் திரையுலகில் நடிகைகளை மிகவும் நேர்த்தியாக காட்டக் கூடிய வரிசையில் இந்த இயக்குனர் இருக்கிறார் என சொல்லலாம். கவர்ச்சி காட்டித்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் என்பதை சற்று தமிழ் திரையுலகம் தகர்த்தி கொண்டால் நடிகைகள் மீதான மரியாதை தமிழகத்தில் சற்று அதிகம் ஆகும். ஆனால், காட்டத்தான் கவர்ச்சி, காணத்தான் கவர்ச்சி என சொல்லி விட்டார்கள்.

 படத்தில் இசையை பற்றி சொல்ல வேண்டும். எனக்கு இசையை பற்றி அதிகம் தெரியாது என்றாலும் கூட ஏதோ ஒருவித இசை உணர்வு படத்துடன் ஒன்றியே இருந்தது. இன்ன இன்ன காட்சிக்கு இப்படித்தான் இசையை எழுப்ப வேண்டும் என ஒரு இசை மேதைக்கு தெரியாமல் இருந்தால் மட்டுமே ஆச்சர்யப்பட வேண்டும். பாடல்கள் இல்லாத படம் இது என்று சொல்ல முடியாது. ஒரு அருமையான பாடல் ஒன்று சில வரிகளில் வந்துவிட்டு போகும். காட்சிக்கு ஏற்ற அமைப்பு.

படம் குறித்து ஒவ்வொரு பிரதியையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு திரைப்பட நுணுக்கம் தெரியாது என்பதால் ஒரு படைப்பாளியின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இது ஒரு உயர்ந்த படைப்பு தான். சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நபர், அவரை புறக்கணிக்கும் சமூகம். உதவிக்கு வராத மருத்துவத்துறை, காவல் துறை என எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. ஆனால் அடுத்த கட்ட காட்சி தமிழ் திரையுலகுக்கு சற்று புதிது, அல்லது நான் பார்க்க தவறி இருக்கலாம். ஆதி காலத்தில் இருந்து இது வரை உடலில் குண்டு பட்டால் ஒரு கத்தியால் குத்தி கிளறி குண்டுதனை எடுத்து போட்டுவிட்டு ஒரு கட்டுடன் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கே மண்ணீரல்தனை வெளி எடுத்து விடுவது போன்ற காட்சி அமைப்பு.  மண்ணீரல்தனை எடுத்து விட்டால் என்ன ஆகும் என்பதை விளக்க இது அறிவியல் படம் அல்ல. எப்படி எடுப்பது என்பதுவும், அந்த காட்சியும் தொழில்நுட்பம் இல்லாத காலம்தனை சொல்லி சென்றது. ஆதிகாலத்தில் இப்படித்தான் மருத்துவம் பார்த்தார்கள், இதன் காரணமாக பாக்டீரியாக்கள் மூலம் நோய் பரவி மக்கள் இறந்து கூட போனார்கள்.

ஒருவரை பார்த்து நீ சிறந்தவன் என சொல்லிவிட்டால், சிறந்தவராக இருக்க வேண்டும் என அந்த நபர் நினைப்பது மனித இயல்பு. டாக்டர் என சொன்னதும் டாக்டர் என நினைப்பதுவும், செயல்படுவதும் தன்னம்பிக்கையின் அடையாளம். இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி காட்சியில் மனம் சற்றே கனக்கிறது. வாழ்த்துகள் மிஸ்கின்.

கல்விக்கும், கலைக்கும் செல்வம் தலை வணங்க வேண்டும். ஆனால் செல்வத்தின் முன்னர் இந்த இரண்டுமே பிச்சைக்காரர்கள் போல் காட்சி அளித்து கொண்டு இருக்கிறது. இந்த வியாபார உலகில் நேர்மையான கல்வி, அற்புதமான படைப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இந்த வியாபார உலகில் கலையை வியாபாரமாக்கிட நினைக்கும் எந்த ஒரு படைப்பாளியும் உன்னதமான படைப்பினை தர இயலாது. ஒரு படைப்பாளி தனது படைப்பின் வெற்றியை வணிக ரீதியாக கணித்து கொள்வான் என்றால் அவனுக்கு இது போன்ற படைப்புகள் தோல்வியே.

இணைய உலகில் இப்போது எந்த படங்களும் திரையரங்குகளுடன் சேர்ந்தே வெளி வந்து விடுகின்றன. உலக நாடுகளில் எல்லா நாடுகளிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுவதில்லை. தமிழகத்தில் வெளிவந்த ஒரே வாரத்தில் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்படி ஒரு படைப்பை பார்ப்பதினால் படைப்பாளி பாதிப்புக்கு உள்ளாகின்றான். அவனது படைப்பு வணிக ரீதியாக தோல்வி அடையும்போது அது போன்ற முயற்சிக்கு அவனால் செல்ல இயல்வதில்லை, யாரும் துணை வருவதில்லை.

இதை எல்லாம் எப்படி தடுப்பது? முடியாது என்பதன் காரணமாகவே தமிழில்  மசாலா படங்கள் பெருகி போய்விட்டன. திரை அரங்குக்கு சென்று காணும் கூட்டம் அதற்கென்றே இருக்கிறது.

படைப்பாளி தனது படைப்பிற்கு விலை பேசக் கூடாது! விலை பேசும் நிலை வந்துவிட்டால் தனது படைப்பை பற்றி கவலை படக்கூடாது. தனது படைப்பா, பணமா என்பதை படைப்பாளி தேர்வு செய்யட்டும். 

Sunday 22 September 2013

சூப்பர் ஸ்டார்

என் இனிய நண்பா,

நலம், நலம் அறிய ஆவல். இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வந்த பின்னும் உன்னுடன் எனக்கு கடித போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. தந்தி அனுப்புவதை கூட சமீபத்தில் நிறுத்தி விட்டார்கள், இல்லையெனில் உனக்கு ஒரு தந்தி அனுப்பி இருப்பேன்.

உனக்குத் தெரியும், நான் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகன். அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என நாள் தவறாமல் தேடித் தேடி படிப்பது உண்டு. அவரை காண்பதற்காக அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நான் அவரது போயஸ்கார்டன் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருப்பேன். எனது நோட்டு புத்தகங்களில் அறிவியல் படங்கள் இருக்குமிடத்தில் எல்லாம் சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டு இருப்பார். நான் எனது அறையில் தலைவர் படத்தை மட்டுமே வைத்துக் கும்பிட்டு வருகிறேன் என்பது கூட உனக்குத் தெரியும்.

தலைவரது  திரைப்படம் வெளியாகும்போது, முன் இரவே சென்று திரையரங்கு வாசலில் துண்டு விரித்து தூங்கியவன் நான். நீ கூட என்னிடம் எதற்கு இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறாய் என்றே என்னை கோவித்து இருக்கிறாய். என்னால் முடியவில்லை நண்பா, நான் அவருக்கு ஒரு அடிமையாய் ஆகிப் போனேன். உன்னை கூட, நண்பன் என பாராமல் என் தலைவரை நீ அவதூறாக பேசியதற்கு உனது மூக்கை உடைத்ததை நினைக்கும்போது நான் செய்தது இன்னமும் சரி என்றே கருதுகிறேன். ஆனால் நீயோ என்னை கோவித்துக் கொள்ளாமல் உன்னை என் நண்பனாகவே ஏற்றுக் கொண்டாய்.

நான் முக்கியமில்லை, உனது குடும்பம் முக்கியம்  என்றெல்லாம் தலைவர் சொன்னபோது கூட, அவரே முக்கியம் என அவரது உடல் நலன் சரியில்லாதபோது அவருக்காக நான் ராகவேந்திரா ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றேன். இதை கேள்விப்பட்ட நீ,  நான் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எனக்கு துணையாய் நீ காரில் பயணம் செய்து வந்தாய். உன் தலைவிதி, நீ நடக்கிறாய், என் தலைவிதி உனக்கு பாதுகாப்பு தருவது மட்டுமே, எவரோ ஒருவருக்காக நான் நடக்க வேண்டிய அவசியமில்லை என எனது நலனில் நீ காட்டிய அக்கறை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தந்தையின் மரணத்தின் போது கூட மொட்டை அடிக்காத நான், தலைவரின் உடல் நலம் தேற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்த விசயம் கேள்விப்பட்டு நீ கண்ணீர் விட்டு அழுதாய். எதற்கு அழுகிறாய் என உன்னை நான் கேட்டபோது, எனது தந்தையை பற்றி நினைத்தாய் என்றே கூறினாய். அதனால் என்ன இப்போ என்றே அலட்சியம் செய்தேன்.

சில வருடங்களாக தலைவரின் படம் வெளிவராத காரணத்தினாலும், ராணா, கோச்சடையான் பற்றிய செய்திகள் மூலம் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். உன்னிடம் இதை சொல்லாமல் மறுத்தது எனது தவறு என்றே இன்று உணர்கிறேன். இப்போது இதை எப்படி உனக்கு சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாக இன்று மருத்துவர் சொன்னபோது ஆடிப் போய்விட்டேன் நண்பா. நீ அன்று என்னை பைத்தியகாரன் என்று சொன்ன நிலையை இன்று உணர்கிறேன் நண்பா. என்னை ஊரில் 'மெண்டல்' என்றே அழைத்தது உண்மையாகிவிட்டதே என அச்சம் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத போது நான் எந்திரன் படம் பார்க்க திரையரங்கு வாசலில் தவம் இருந்தபோது, நீ எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த விசயம் கேள்விப்பட்டு மனதில் எவ்வித குற்ற உணர்வு அப்போது இல்லை. நண்பா, என்னை மன நோயில் இருந்து உன்னால் மட்டுமே மீட்க முடியும் என்றே எனது அம்மா சொன்னார். அதனால் தான் இந்த மடல் எழுதுகிறேன்.

ஒரு விசயத்தில் அதிக பற்று வைத்து விட்டால், இது போன்ற கொடிய விளைவு ஏற்படும் என்றே மருத்துவர் சொன்னார். மனம் வெகு பாரமாக இருக்கிறது. எதையோ இழந்து பரிதவிப்பது போல் இருக்கிறது. நான் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் நண்பா. என்னை நீ வந்து அழைத்து சென்று உனது அருகில் என்னை வைத்து கொள்ளமாட்டாயா என்றே ஏங்குகிறேன். உனது நிறுவனத்தில் நான் வேலை செய்ய இப்போது சம்மதம் சொல்கிறேன் நண்பா. தீராத மன நோயில் நான் விழுந்துவிடக் கூடாது எனும் அச்சமே முழுக் காரணம். அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என பலர் கிண்டலாக பேசியபோது அவர்களை நொறுக்கி இருக்கிறேன். தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே எனது முடிவு என்றே இருந்தேன்.

இறுதியாக, எனது தலைவர் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் என நேற்று பேசியதை கேட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை உயரத்தில் வைத்தது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்றே சொன்னார். ஆனால் உண்மையிலேயே என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்கள் தான் அவரது இந்த உயர்நிலைக்கு காரணம் என்பதை நீ அறிவாய் நண்பா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரஜினிதாசன் என்றே என்னை கேட்டுக் கொள்கிறேன். எனது அழகிய 'முருகன்' எனும் பெயரை நான் அலங்கோலம் படுத்திக் கொண்டதாய் நினைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அவர் தூக்கி எறிந்துவிட்டு என்னைப் போன்ற ஏழை பங்காளன் உடன் அவர் நேரத்தை செலவிட சொல்ல வேண்டும் என்றே என் மனம் கேட்கிறது. எதற்கு தனிமையாய் உணர வேண்டும்! ஆனால் 'டாப்' இல் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை என்றே சொல்லிவிட்டார் நண்பா. ஆனால் நீ, எத்தனயோ உயரத்தில் இருந்தும் சாதாரண நபரை போலவே உலா வருகிறாய். பிரமிப்பாக இருக்கிறது நண்பா. இதற்கு முன்னர் இப்படித்தான் சூழ்நிலை கைதி என சொன்னார், ஆனால் நான் என் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் என்பதை நீ அறிவாய்.

எப்படி மது, மாது என அடிமையாய் ஆகிறார்களோ, அதைப்போலவே சினிமா மோகம் என்னை பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு தனி மனிதனுக்கு என்னை தாரை வார்த்துவிட்டது கண்டே கலங்குகிறேன். ரஜினி ரசிகையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற கொள்கையை தளர்த்தி கொள்கிறேன். இனி அவர் என் தலைவர் இல்லை என்பதை முழு சம்மதமின்றி ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக, என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்களுக்காக அவர் தனிமையாக இருக்கவும் வேண்டாம், சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டாம், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்றே விரும்புகிறேன். இப்போது கூட என்னால் அவர் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள இயலவில்லை நண்பா. என்னை விரைவில் வந்து அழைத்து செல், இல்லையெனில் நான்... தெருக்களில்... எழுதவே கைகள் நடுங்குகிறது நண்பா.

உனது வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
முருகன் என்ற ரஜினிதாசன்

சினிமா ஒரு மாய உலகம், நல்ல மனிதர்கள் நாசமாகப் போகிறார்கள், நாசமாகப் போக இருந்தவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள்.