Sunday, 22 September 2013

சூப்பர் ஸ்டார்

என் இனிய நண்பா,

நலம், நலம் அறிய ஆவல். இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வந்த பின்னும் உன்னுடன் எனக்கு கடித போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. தந்தி அனுப்புவதை கூட சமீபத்தில் நிறுத்தி விட்டார்கள், இல்லையெனில் உனக்கு ஒரு தந்தி அனுப்பி இருப்பேன்.

உனக்குத் தெரியும், நான் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகன். அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என நாள் தவறாமல் தேடித் தேடி படிப்பது உண்டு. அவரை காண்பதற்காக அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நான் அவரது போயஸ்கார்டன் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருப்பேன். எனது நோட்டு புத்தகங்களில் அறிவியல் படங்கள் இருக்குமிடத்தில் எல்லாம் சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டு இருப்பார். நான் எனது அறையில் தலைவர் படத்தை மட்டுமே வைத்துக் கும்பிட்டு வருகிறேன் என்பது கூட உனக்குத் தெரியும்.

தலைவரது  திரைப்படம் வெளியாகும்போது, முன் இரவே சென்று திரையரங்கு வாசலில் துண்டு விரித்து தூங்கியவன் நான். நீ கூட என்னிடம் எதற்கு இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறாய் என்றே என்னை கோவித்து இருக்கிறாய். என்னால் முடியவில்லை நண்பா, நான் அவருக்கு ஒரு அடிமையாய் ஆகிப் போனேன். உன்னை கூட, நண்பன் என பாராமல் என் தலைவரை நீ அவதூறாக பேசியதற்கு உனது மூக்கை உடைத்ததை நினைக்கும்போது நான் செய்தது இன்னமும் சரி என்றே கருதுகிறேன். ஆனால் நீயோ என்னை கோவித்துக் கொள்ளாமல் உன்னை என் நண்பனாகவே ஏற்றுக் கொண்டாய்.

நான் முக்கியமில்லை, உனது குடும்பம் முக்கியம்  என்றெல்லாம் தலைவர் சொன்னபோது கூட, அவரே முக்கியம் என அவரது உடல் நலன் சரியில்லாதபோது அவருக்காக நான் ராகவேந்திரா ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றேன். இதை கேள்விப்பட்ட நீ,  நான் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எனக்கு துணையாய் நீ காரில் பயணம் செய்து வந்தாய். உன் தலைவிதி, நீ நடக்கிறாய், என் தலைவிதி உனக்கு பாதுகாப்பு தருவது மட்டுமே, எவரோ ஒருவருக்காக நான் நடக்க வேண்டிய அவசியமில்லை என எனது நலனில் நீ காட்டிய அக்கறை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தந்தையின் மரணத்தின் போது கூட மொட்டை அடிக்காத நான், தலைவரின் உடல் நலம் தேற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்த விசயம் கேள்விப்பட்டு நீ கண்ணீர் விட்டு அழுதாய். எதற்கு அழுகிறாய் என உன்னை நான் கேட்டபோது, எனது தந்தையை பற்றி நினைத்தாய் என்றே கூறினாய். அதனால் என்ன இப்போ என்றே அலட்சியம் செய்தேன்.

சில வருடங்களாக தலைவரின் படம் வெளிவராத காரணத்தினாலும், ராணா, கோச்சடையான் பற்றிய செய்திகள் மூலம் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். உன்னிடம் இதை சொல்லாமல் மறுத்தது எனது தவறு என்றே இன்று உணர்கிறேன். இப்போது இதை எப்படி உனக்கு சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாக இன்று மருத்துவர் சொன்னபோது ஆடிப் போய்விட்டேன் நண்பா. நீ அன்று என்னை பைத்தியகாரன் என்று சொன்ன நிலையை இன்று உணர்கிறேன் நண்பா. என்னை ஊரில் 'மெண்டல்' என்றே அழைத்தது உண்மையாகிவிட்டதே என அச்சம் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத போது நான் எந்திரன் படம் பார்க்க திரையரங்கு வாசலில் தவம் இருந்தபோது, நீ எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த விசயம் கேள்விப்பட்டு மனதில் எவ்வித குற்ற உணர்வு அப்போது இல்லை. நண்பா, என்னை மன நோயில் இருந்து உன்னால் மட்டுமே மீட்க முடியும் என்றே எனது அம்மா சொன்னார். அதனால் தான் இந்த மடல் எழுதுகிறேன்.

ஒரு விசயத்தில் அதிக பற்று வைத்து விட்டால், இது போன்ற கொடிய விளைவு ஏற்படும் என்றே மருத்துவர் சொன்னார். மனம் வெகு பாரமாக இருக்கிறது. எதையோ இழந்து பரிதவிப்பது போல் இருக்கிறது. நான் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் நண்பா. என்னை நீ வந்து அழைத்து சென்று உனது அருகில் என்னை வைத்து கொள்ளமாட்டாயா என்றே ஏங்குகிறேன். உனது நிறுவனத்தில் நான் வேலை செய்ய இப்போது சம்மதம் சொல்கிறேன் நண்பா. தீராத மன நோயில் நான் விழுந்துவிடக் கூடாது எனும் அச்சமே முழுக் காரணம். அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என பலர் கிண்டலாக பேசியபோது அவர்களை நொறுக்கி இருக்கிறேன். தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே எனது முடிவு என்றே இருந்தேன்.

இறுதியாக, எனது தலைவர் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் என நேற்று பேசியதை கேட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை உயரத்தில் வைத்தது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்றே சொன்னார். ஆனால் உண்மையிலேயே என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்கள் தான் அவரது இந்த உயர்நிலைக்கு காரணம் என்பதை நீ அறிவாய் நண்பா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரஜினிதாசன் என்றே என்னை கேட்டுக் கொள்கிறேன். எனது அழகிய 'முருகன்' எனும் பெயரை நான் அலங்கோலம் படுத்திக் கொண்டதாய் நினைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அவர் தூக்கி எறிந்துவிட்டு என்னைப் போன்ற ஏழை பங்காளன் உடன் அவர் நேரத்தை செலவிட சொல்ல வேண்டும் என்றே என் மனம் கேட்கிறது. எதற்கு தனிமையாய் உணர வேண்டும்! ஆனால் 'டாப்' இல் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை என்றே சொல்லிவிட்டார் நண்பா. ஆனால் நீ, எத்தனயோ உயரத்தில் இருந்தும் சாதாரண நபரை போலவே உலா வருகிறாய். பிரமிப்பாக இருக்கிறது நண்பா. இதற்கு முன்னர் இப்படித்தான் சூழ்நிலை கைதி என சொன்னார், ஆனால் நான் என் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் என்பதை நீ அறிவாய்.

எப்படி மது, மாது என அடிமையாய் ஆகிறார்களோ, அதைப்போலவே சினிமா மோகம் என்னை பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு தனி மனிதனுக்கு என்னை தாரை வார்த்துவிட்டது கண்டே கலங்குகிறேன். ரஜினி ரசிகையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற கொள்கையை தளர்த்தி கொள்கிறேன். இனி அவர் என் தலைவர் இல்லை என்பதை முழு சம்மதமின்றி ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக, என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்களுக்காக அவர் தனிமையாக இருக்கவும் வேண்டாம், சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டாம், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்றே விரும்புகிறேன். இப்போது கூட என்னால் அவர் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள இயலவில்லை நண்பா. என்னை விரைவில் வந்து அழைத்து செல், இல்லையெனில் நான்... தெருக்களில்... எழுதவே கைகள் நடுங்குகிறது நண்பா.

உனது வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
முருகன் என்ற ரஜினிதாசன்

சினிமா ஒரு மாய உலகம், நல்ல மனிதர்கள் நாசமாகப் போகிறார்கள், நாசமாகப் போக இருந்தவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள். 

4 comments:

Anonymous said...

ரஜினி என்ற கலைஞன் பிறரை ரசிப்பதற்காக தான். உங்கள் இஷ்டத்திற்கு நடப்பதற்கு அல்ல. அவரும் ஒரு மனிதர். அவருக்கும் பிரச்சினைகள் இருக்கும். உண்மையான ரசிகர்களுக்கு அவரை பற்றி எப்போதும் தெரியும். இதில் புலம்புவதற்கு என்ன இருக்கிறது. மற்றவர்களை மகிழ்விக்கும் கலைஞனுக்கு வாழ்வில் சுதந்திரமாக வாழ வழி வேண்டாமா? அரசியலில் இருந்து விலகி அவர் தற்போது செல்லும் வழியே சிறந்தது என்பது தான் என் போன்ற ரசிகர்களின் எண்ணம்.

Radhakrishnan said...

கட்டுரையின் நோக்கம் அதுவன்று. கருத்துக்கு நன்றி

Not a rasigan for any actor. said...

//கட்டுரையின் நோக்கம் அதுவன்று.//
Rajini bashing. What else?

Radhakrishnan said...

ரசிகர்கள் என்று ஒரு குழுக்கள் இல்லாமல் இருந்து இருந்தால் ரஜினி இப்படி தன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்க மாட்டார். சுதந்திரமாக இருந்து இருப்பார். ரசிகர்கள் ரசிகர்கள் என எண்ணி அவர்களுக்கென பின்னப்பட்ட வலையில் சிக்கி கொண்டு இருப்பதுதான் ரஜினியின் இப்போதைய நிலைமை.

நீங்கள் ரசிகராக இல்லாமல் இருப்பது சரியே, ரசித்தால் போதும்.