Friday 5 August 2016

போதை தரும் போதனைகள்

''பக்தா''

''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''

''ஆச்சர்யம் பக்தா''

''எதைப் பற்றி சுவாமி?''

''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''

''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''

''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா?''

''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''

''வேறு என்னவெல்லாம் பக்தா?''

''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''

''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா?''

''என்ன சுவாமி?''

''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா?''

''நான் சொல்வதை எப்படி சுவாமி?''

''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''

''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''

''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி  என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''

''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''

''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச்  செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''

''ஏன்  சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''

''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''

''பிறகு எப்படி பேசனும் சுவாமி? நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''

''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''

''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா?''

''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''

''யாரு அது ஆலகால நீலகண்டன்?''

''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''

''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''

''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறைய மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா?''

''சுவாமி, திருந்தவே மாட்டியா? இதை எல்லாம் கேட்டனா? ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''

''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''

''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''

''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''

''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''

''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''

சட்டென விழித்துப் பார்த்தேன்.

''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''

அப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.Tuesday 2 August 2016

காதலினும் கல்யாணம் பெரிது

காதல் பருவம் எது என்று கேட்டால் காதல் வரும் பருவம் தான் காதல் பருவம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. காதல் எப்படியும் கல்யாணத்தில்தான் சென்று முடிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை ஆனால் காதல், கல்யாணத்தில் சென்றுதான் முடிய வேண்டும் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

இன்று அலுவலகத்திற்கு  நடந்து செல்லும்போது ஒரு தேநீர் கடையில் நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. இதுவரை அப்படி எவரையும் சந்திக்கவே இல்லை என்பதுதான் ஒரு வேதனையாக இருந்தது. வேறு ஒருவரை உற்றுப்பார்த்தல் அநாகரிகமான செயல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அழகிகள் அழகன்கள் எல்லாம் தெருவில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் உற்றுப்பார்த்தால் நம்மை நோக்கிய அவர்களின் கண்களும், புருவங்களும் சுளுக்கிக்கொள்ளும். அதற்காகவே எதற்கு இந்த வீண் வம்பு என மரம் பார்ப்பதும், செடி பார்ப்பதும், மண் பார்ப்பதும், வானம் பார்ப்பதும் என அவ்வப்போது அவர்களை பார்ப்பதும் என சாலையில் நடக்கும்போது பொழுது போய்க்கொண்டு இருக்கிறது.

திடீரென மேலதிகாரி சுரேஷ் மாயதேவன் அழைத்தார். உள்ளே சென்றதும் அங்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு ஒரு யுவதி அமர்ந்து இருந்தாள். என்னோடு வேலை பார்த்தவனின் காலி வேலைக்குத்தான் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என யூகித்துக் கொண்டேன்.

''இவங்கதான் தீபா ராமநாதன், நம்ம அலுவலகத்தில் புதுசா இன்னைக்கு ஜாயின் பண்ணி  இருக்காங்க. உன்னோட புராஜக்ட்லதான் இவங்க ஒர்க் பண்ண இருக்காங்க. உன்னோட அறையில் இருக்கிற பக்கத்து சீட் இவங்களுக்கு அரேஞ் பண்ணி இருக்கு.

தீபா, இவர் தான் தீபக் சொக்கநாதன். இந்த அலுவலகத்துல ரெண்டு வருசமா வேலை பார்க்கிறார். இவரோடதான் உங்க புராஜக்ட் ஒர்க். எல்லாம் இவர் உங்களுக்கு சொல்வார். நீங்க இவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினா போதும். அவர் எனக்கு அப்டேட் பண்ணுவார்''

''சரிங்க  சார்''

மழலையின் குரலை விட மங்கையரின் குரலே அழகு என ஒரு திருக்குறள் எதற்கு எழுதவில்லை என தோனியது. திருவள்ளுவர் காதல் எல்லாம் புரிந்து இருக்கமாட்டார், நேராக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றுதான் இருந்து இருப்பார் என நினைக்கத் தோனியது.

''தீபா இதுதான் உங்க சிஸ்டம், டேபிள் சேர் எல்லாம்''

''சரிங்க தீபக்''

சார் என்று அழைப்பாள் என்று பார்த்தால் நேரடியாக பெயர் கொண்டே அழைத்துவிட்டாள்.

''இந்த அலுவலகம் எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா?''

''இது ஏன்னா சுற்றுலாத்தளமா, சுற்றிப் பார்க்க''

''எது எது எங்க இருக்குனு தெரிஞ்சிக்கலாமே''

''எல்லாம் சொல்லிட்டாங்க, இருக்கிறதே மூணு புளோர். புராஜக்ட் எதுவரைக்கும் போயிருக்கு''

''பத்து பெர்சென்ட் கூட ஆரம்பிக்கலை, இந்த ப்ரொஜெக்ட் சேன்க்சன் ஆன நேரம் அவன் வேலையை விட்டுட்டுப் போயிட்டான்''

''எதுக்குப்  போனார்?''

''ம்ம் கல்யாணம் பாரின் பொண்ணு, இனி அவன் பாரின் செட்டில்''

''பொறாமையா இருக்கீங்க போல''

இத்தனை சகஜமாக பேசுவாள் என்று எவர் எதிர்பார்த்தது.

''பொறாமைப்பட்டுக்கிட்டாலும், இதுக்கு முன்ன வேற எங்க வேலைப்  பார்த்தீங்க?''

''இதுதான் முதல் வேலை''

''ஒரு பயம் எல்லாம் இல்லையா''

''ஏன் இங்க சிங்கம், புலி, பாம்பு, பல்லி எல்லாம் வேலை செய்யுதா?''

''இல்லை''

அதற்குப் பின்னர் எதுவும் பேசாமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய கேள்விகள் வேலையைப் பற்றி கேட்டாள். என்னைப் பற்றி, என் குடும்பம் பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை.

உணவு கொண்டு வந்து இருந்தாள். மத்தியானம் நேராக உணவு உண்ணும் இடத்திற்குச் சென்றாள். வழக்கம்போல வெளியில் உள்ள கடையில்  வாங்கிக்கொண்டு உணவு உண்ணும் இடம் வந்து அமர்ந்தேன். அங்கு சாப்பிட்டுக் கொண்டு  இருக்கும் பதினைந்து நபர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாள். அலுவலகத்தில் மொத்தம் 19 பேர்தான். பெரிய அலுவலகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்த அலுவலகம் ஆரம்பித்தே ஐந்து வருடங்கள்தான் ஆகிறது. அங்கு இருந்த அனைவருக்குமே கல்யாணம் ஆகி இருந்தது. கழுத்தில் தாலி இல்லை இருந்தாலும் இந்த தீபா பற்றிதான் தெரியவில்லை. சிலர் தம்பதி சமேதரராக வேறு வேலையில் சேர்ந்து இருந்தார்கள். சில காதல் திருமணம், சில பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். அவர்களை எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தார்கள்.

''தீபக், உனக்குத் துணைக்கு இதோ தீபா. இன்னும் கல்யாணம் ஆகலை. யாருக்கு முதலில் கல்யாணம் ஆகுதுனுப் பார்ப்போம்''

இந்த தர்மலிங்கத்திற்கு இதுவே வேலை.

''தீபாவுக்குத்தான் முதலில் ஆகும், அவங்கதான் பொண்ணு''

இது சுந்தரமூர்த்தியின் அடுத்த யூகம்.

''என்னோட கல்யாணம் காதல் கல்யாணம் தான். நமக்குப்  பிடிச்ச நம்மைப் பிடிச்சவர் தான் வாழ்க்கைத் துணை அப்போதான் நம்மளப்  பெத்தவங்கள  சந்தோசமா வைச்சிக்கிற முடியும்''

தீபாவின் இந்த வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் சற்று ஆச்சரியத்துடன் பாராட்ட வைத்தன.

''சூப்பர் தீபா, உங்க மனம் போல பையன் அமைய வாழ்த்துக்கள்''

தர்மலிங்கமும், சுந்தரமூர்த்தியும் ஆசிர்வாதம் செய்தார்கள். அவர்கள்தான் இந்த அலுவலகம் ஆரம்பிக்கும்போது சேர்ந்த மூத்த பணியாளர்கள். மேலதிகாரிக்கு நண்பர்கள் என்று கூட சொல்லிக்கொள்வார்கள்.

ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. இத்தனைக்கும் தீபாவின் கடின உழைப்புதான் காரணம் என்று சொல்ல வேண்டும். தீபாவை மிகவும் பிடித்து இருந்தது. தீபாவின் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மேலதிகாரி என்னை அழைத்து வேறொரு புராஜக்ட் கொடுத்து தீபாவுடன் சேர்ந்து செய்யுமாறு கூறினார். சந்தோசமாக சம்மதம் சொல்லிவிட்டு வந்தேன்.

''அடுத்த புராஜக்ட் கூட நாம ரெண்டு பேரும்  சேர்ந்து பண்ணனும்னு சொல்லி இருக்கார்''

''சக்ஸஸ் கொடுத்தாச்சு, இனிமே எல்லா புராஜக்ட் நாம சேர்ந்துதான் பண்ண வேண்டி இருக்கும்''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

''என்ன கேட்டீங்க''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

அறையில் பெரும் நிசப்தம் நிலவியது. சில நிமிடங்களுக்குப் பின்னர் தீபா பேசினாள்.

''தீபக், பெண்கள் தேவதைகள் அல்ல, ஆணின் தேவைகள் அப்படினு நினைக்கிற கிறுக்கர்கள் இருக்கிற இந்த உலகத்தில நீங்க  நிறையவே வித்தியாசமாத்தான் இருந்தீங்க . இந்த ஒரு வருச  பழக்கத்தில உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன். உங்களோட அம்மா, அப்பா, அக்கா அப்படினு உங்களோட குடும்பம் உங்களுக்கு எத்தனைப் பெரிசுன்னு புரிய எனக்கு நிறைய நாட்கள் ஆகலை. என்னோட குடும்பத்தைப் பத்தி உங்ககிட்ட  நான் எதுவும் சொன்னது இல்லை.

என்னோட அண்ணன் காதல் கல்யாணம்தான். அண்ணியோட அம்மா அப்பா கல்யாணத்தை ஏத்துக்கலை. எங்க குடும்பம் ஏழைக்குடும்பம் தான் ஒரு காரணம். ஆனா வீட்டுக்கு வந்த அண்ணி ஒரே மாசத்துல என்னை, எங்க அம்மா, அப்பாவை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாங்க. நாங்க எந்த பிரச்சினையும் பண்ணாம வேறு வீட்டிற்கு வாடகைக்கு வந்துட்டோம். ஒரு ஆறு மாசம் கழிச்சி அண்ணி தன்னோட தப்பை உணர்ந்து எங்களை கூப்பிட்டாங்க. ஆனா நாங்க போகலை. வாரம் ஒருதரம் அவங்களைப்  பார்க்கிறதோட சரி. அவங்க அம்மா அப்பா கூட அவங்களை மன்னிச்சிட்டு ஏத்துக்கிட்டாங்க. இதுவே என் அண்ணன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாமலோ அல்லது அந்த பொண்ணு என் அண்ணனை கல்யாணம் பண்ணாமலோ போயிருந்தா இந்த காதல் எல்லாம் பண்ணினது ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆகி இருக்காது.

காதல்னு சுத்திக்கிட்டு இருக்கிறதைவிட இப்படி எதுவுமே காதல் அது இதுனு சொல்லாம தனக்குப் பிடிச்சி இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறது கூட நல்லா இருக்கு.

இந்த புராஜக்ட் உங்களோட சிந்தனை, முழு உழைப்பு. ஆனா நான்தான் எல்லாம்  பண்ணின மாதிரி ஒரு தோற்றம் நீங்க  உண்டாக்கின போதே உங்களோட மனசில நான் இருக்கேனு தெரிஞ்சிக்கிட்டேன். ஐ லவ் யூனு சொல்ல உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறப் போகுது.

காதல்னு சொல்லிட்டு அதை கேவலப்படுத்தறதை விட கல்யாணம்னு சொல்லி ஒரு உறவுக்குள்ள உரிமையோட போறது எனக்கு உங்களைப் பார்த்தபிறகுதான், பழகின பிறகுதான் தெரிஞ்சது. முதமுத காதல் கல்யாணம்தான் பண்ணுவேன்னு சொன்னதை கூட மாத்திக்கிட்டேன். ம்ம் நிச்சயம் உங்களை கல்யாணம் பண்ணிக்குவேன், நிறைய காதல் இருக்கு''

நான், அப்பா, அம்மா, அக்கா, மாமா, அக்காவின் குட்டிப்பையன் என தீபாவின் வீட்டிற்குச் சென்றோம்.  தீபாவின் அப்பா மிகவும் தயங்கினார். தீபாவின் அம்மா கூட எங்களால நிறைய செய்ய முடியாது. கல்யாணம் ஆனப்பறம் பிரச்சினை எதுவும் இதனால வந்துரக்கூடாது என்று  சொன்னபோது என் உறுதியோடு என் அம்மாவும் அப்பாவும் அப்படியொரு நிலை வராது என உறுதி அளித்தார்கள். அப்பா அதோடு நில்லாமல் மேலும் தொடர்ந்தார்.

''கல்யாணம் பண்ணுறது பெரிசு இல்லை, இந்த காலத்தில கடைசி வரைக்கும் சேர்ந்து சந்தோசமா வாழுறதுதான் குதிரைக்கொம்பா இருக்கு. கல்யாணம் ஆனபிறகு அவங்களை நாம தொந்தரவு பண்ணக்கூடாதுனு நினைக்கிறாங்க''

''அவங்க விருப்பம் போல இருக்கட்டும்''

கல்யாணத்திற்கான ஏற்பாடு எல்லாம் செய்து தேதி குறித்தாகிவிட்டது.

''தீபக், நம்மளோட என் அம்மா, அப்பா சேர்ந்து உங்க வீட்டுல உங்க அம்மா அப்பாவோட வந்து இருக்கட்டுமா?''

இப்போதைய வீட்டினை விட ஒரு பெரிய வீடு ஒன்று பார்க்க தீபாவுடன் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.