Wednesday, 15 December 2010

மைனா கபடி குழுவும் சொந்தலாலாவும்

விடுமுறை காலங்கள் என்றாலே ஒருவித தனி மகிழ்ச்சிதான். வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. நிம்மதியாக தொலைகாட்சிகள் பார்த்து கொண்டு பொழுது போக்கிவிடலாம். ஆனால் இந்த வருடம் நானாக தேவையில்லாமல் சமூக பணி செய்கிறேன் என நான் முன்னர் இருந்த ஒரு அமைப்பில் என்னை இணைத்து கொண்டு விட்டதால் இந்த முறை விடுமுறை விடுமுறையாக இருக்க போவதில்லை என்பது மட்டும் உண்மை. இந்த சமூக பணி குறித்து சில மாதங்கள் பின்னர் எழுதுகிறேன்.

திங்கள் கிழமை அன்று மகனிடம் வாக்கு கொடுத்தபடி நானும் அவனும் ஹர்ரி போட்டர் படம் பார்க்க சென்றோம். காலை பதினோரு மணிக்கு திரைப்படம். நாங்கள் இருவரும் பத்து நிமிடங்கள் முன்னர் திரையரங்கு சென்றோம். திரையரங்கு கதவுகள் திறக்கப்படவில்லை. மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஐந்து நிமிடங்கள் பின்னர் ஒருவர் வந்து கதவை திறந்தார். உள்ளே சென்று டிக்கட் வாங்கினோம். படம் பார்க்க வந்தவர் என எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. எவரேனும் வரக் கூடும் என உள்ளே சென்று அமர்ந்தோம். உள்ளேயும் எவரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. சரியாக பதினோரு மணிக்கு விளம்பரம் போட ஆரம்பித்தார்கள். மணி பதினொன்று முப்பது ஆனது. எவருமே வரவில்லை. எங்களை வெளியே அனுப்பிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால் எங்கள் இருவருக்காக படம் ஓடியது. எனக்கு படத்தில் அத்தனை பிடிப்பு வரவில்லை. தியேட்டரில் அவ்வப்போது தூங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். மகன் என்னை எழுப்பி கொண்டே இருந்தான்.

அதற்கடுத்து நேற்று மைனா என்றொரு படம் தனை வீட்டில் பார்த்தோம். எரிச்சலை கிளப்பிய மைனா என தலைப்பு இடலாம் என நினைத்து பேசாமல் விட்டுவிட்டேன். படம் மிகவும் நன்றாக இருந்தது எனலாம். நகைச்சுவையுடன் ஆவேசமான காதல் சொல்லப்பட்டு இருந்தது. வெறித்தனமான காதல் எனலாம். படம் மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.

கதையில் எல்லாம் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. நடக்கிறார்கள், நடந்து கொண்டே இருக்கிறார்கள். பாதை மாறி போகும்போது ஊரு வந்து சேராது என பாடலாம். மிகவும் அருமையான படம்தனை கடைசி காட்சியின் மூலம் எரிச்சல் அடைய செய்துவிட்டார் இயக்குநர். எனது மனைவியின் கணிப்பு படியே மைனா இறந்து போயிருந்தாள். எனக்கு போங்கப்பா நீங்களும் உங்க கொலைகார சிந்தனையும் என்றே சொல்ல தோன்றியது.

இருப்பினும் இது போன்ற சோகம் மனிதரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எல்லா இயக்குநர்களும் ஒரு சேர தெரிந்து வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் வெண்ணிலா கபடி குழு என ஒரு படம். கடைசி காட்சி அனைவரையும் உறைய வைக்கும். அது வேறு. ஆனால் இங்கே சூழல் வேறு. கதை நாயகி சாக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நடந்து விடுகிறது. நமது எதிர்பார்ப்பை மீறிய ஒரு படம். ஒவ்வொரு காட்சியும் மிகவும் நன்றாகவே செதுக்கி இருக்கிறார் இயக்குநர். நமது மனதில் பல எண்ண ஓட்டங்களை எழ செய்யும் விதமாக காட்சி அமைப்பு இருக்கிறது. இந்த படம் பலரின் பாராட்டை பெற்று இருக்கிறது என்கிறார்கள். பலர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போலும், இது போன்ற சோகமயமான வாழ்வியலை தாண்டி எப்பொழுது மனிதம் தாண்டுமா அப்பொழுதுதான் காதல் அன்புக்கு எல்லாம் முழு வெற்றி. காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் மரணத்தின் மூலம்  காதல் தோல்வியைத்தான் அடைகிறது. பாராட்டுகள் இயக்குநர் மற்றும் மைனா படக்குழுவினர்களே.

அதோடு விட்டோமா, மணி இரவு பன்னிரண்டு ஆகி இருந்தது. நந்தலாலா எனும் படத்தை பார்க்கலாம் என தொடங்கினோம். வித்தியாசமான படம், மிகவும் அருமையான படம் என சொன்னாலும் காவியங்கள் படைக்கிறோம் என்கிற பேர்வழியில் சில விசயங்களை முழுவதுமாக நமது யோசனைக்கு விட்டு விடுகிறார்கள். அப்படி விடப்பட்ட ஒரு யோசனையில் இந்த படத்தின் மீது கடைசியில் ஒரு வெறுப்பு வந்து உட்கார்ந்து விடுகிறது.

ஒவ்வொரு காட்சியும் மெதுவாக நகர்கிறது, ஆனால் சுவாரஸ்யமாக நகர்கிறது, தயவு செய்து படத்தை இருட்டில் எடுப்பதை தவிர்த்து தொலையுங்கள். கோடி புண்ணியம் கிடைக்கும். இந்த படத்திலும் நடக்கிறார்கள், நடந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும்போது தேடினால் கிடைத்துவிடும் எனும் எனது சிறுகதைதான் நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த படம் பிரமிக்க வைத்த படம் தான். வழியில் அவர்களுக்கு நல்ல மனிதர்கள் கிடைத்து கொண்டே வருகிறார்கள். சிறுவனின் வசனமும், மனநிலை பாதிக்கப்பட்டவரின் வசனமும் என படம் கொள்ளை கொள்கிறது. ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் சொல்ல வரும் கதைகள் ஆயிரம். இசை படத்தை மிகவும் கெட்டியாக பிடித்து கொள்கிறது. படம் மெதுவாக நகன்றாலும் ரசிக்கும்படியாய் இருந்தது. இது போன்ற தமிழ் படங்கள் மிகவும் மிகவும் மிகவும் அரிதுதான். அதற்காக எல்லா இயக்குனர்களும் இப்படியே படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் சொன்னாலும் இப்படிப்பட்ட படங்கள் எல்லாம் தொடர்ந்து எடுக்கப்படுவதும் இல்லை. குறிஞ்சிப்பூ!

வெள்ளேந்தி மனிதர்களாக வாழ்ந்து விடுவது எத்தனை எளிது. நகைச்சுவையாய் சில பல காட்சிகள். தாய் என்பவர் போற்றப்பட வேண்டியவர் தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் எத்தனை தாய்மார்கள் அதை உணர்ந்து செயல்படுகிறார்கள்? சரி தந்தைமார்களையும் கணக்கில் கொள்வோம். மனதில் வெறுப்பு என வரும்போது அன்புக்குரிய தாய் நிந்திக்கப்படுகிறார், அங்கே தாய், தந்தை என்பதெல்லாம் பெரிய விசயம் இல்லை. இதையேதான் மைனாவில் சொல்கிறார்கள். பெற்றோர்களை மதியா பிள்ளை. நான் கடவுள் எனும் படத்திலும் சொன்னார்கள். தாயை அவமதிக்கும் இயக்குநர்கள் அதிகமாகிவிட்டார்கள் போல.  அழுதபோதாவது அம்மா வருவாளா எனும் எனது கவிதை மனதில் ஏனோ ஓடிக்கொண்டே இருக்க பல காட்சிகளில் எனது கண்களில் இருந்து கண்ணீர் என்னை அறியாமல் உதிர்ந்து கொண்டிருந்தது. உலகின் மாபெரும் சோகத்தை சொன்ன இந்த படம் மிகவும் சிறப்பான படம் தான். பாராட்டுகள் இயக்குனருக்கும், பட குழுவினருக்கும்.

தமிழ்மணத்தில் எனது படைப்புகளை பரிந்துரை செய்துவிட்டேன். ஆனால் வாக்கு கேட்டு உங்கள் வாசல் எல்லாம் வரும் எண்ணம் எதுவும் இல்லை. மற்ற படைப்புகளுடன் தானும் ஒரு படைப்பாக நிற்பதே பெருமைதான். இது நான் தமிழ்மணத்திற்கு தரும் அங்கீகாரம்.

Post a Comment

Friday, 10 December 2010

வதந்திகள்

சத்தமாகவே அவர் சொன்னார்.

மிக முக்கியமான பதவியில் இருக்கும் எண்பது வயதான ஒருவர் தான் மென்மேலும் நீண்ட காலம் வாழ வேண்டுமென சமீபத்தில்ஒரு இளம் பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக

சத்தமாகவே அவர் சொன்னார்.

அவர் சொன்னதை கேட்டு அங்கே குழுமியிருந்த கூட்டத்தினர் 'யார் உங்களுக்கு சொன்னது' என ஒரு சேர கேட்டார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு இந்த ரகசிய விசயம் எல்லாம் தெரியும், ஆனால் யார் இந்த விசயத்தை முதலில் வெளியே சொல்வது என திணறி கொண்டிருக்கிறார்கள் என மீண்டும்

சத்தமாகவே அவர் சொன்னார்.

இவர் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது என புரியாமல் கூட்டத்தினர் விழித்தார்கள்.

எதற்கு இப்படி வதந்தி கிளப்புகிறீர்கள்? இதன் மூலம் நீங்கள் அடைய போகும் லாபம் என்ன என கேட்டு வைக்க அதற்கு அவர்

எவராவது இதை எழுதட்டும், உடனடியாக எப்படி சாதகம் பார்க்கப்பட்டது, எங்கு திருமணம் நடந்தது என எல்லா உண்மைகளும் வெளிவரும் என்றே மீண்டும்

சத்தமாகவே அவர் சொன்னார்.

இது யார் உங்களுக்கு சொன்னது என மீண்டும் ஒருவர் கேட்டதற்கு அவர்

என்னிடம் ஒருவர் சத்தமாகவே சொன்னார், அதைத்தான் உங்களிடமும் நானும் சொல்கிறேன் என

சத்தமாகவே சொன்னார்.

ஆம், பல நேரங்களில் பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதற்கு சத்தமாகவே சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆனால் இந்த விசயம் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு எத்தனை மன உளைச்சல் தரும் என்பதை தாங்கள் சொல்ல வந்ததை சத்தமாக சொல்ல முயற்சிப்பதில் மறந்து போகிறார்கள்.

மீண்டும் அவரிடம் கேட்டபோது

சொன்ன விஷயத்தை மீண்டும் சத்தமாகவே சொல்லி உறுதி படுத்தினார்.

இப்படி பிறர் மீது அவதூறு கிளப்புவது சட்டப்படி குற்றமாகும் என்பதை எழுதுபவர்கள், பேசுபவர்கள் ஒருபோதும் நினைவில் வைத்து கொள்வதில்லை. சுதந்திரம் என்பது எழுத்தில் இருப்பது, பேச்சில் இருப்பது சரிதான், ஆனால் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிப்பது சரியா? ஆதாரம் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடு சட்டத்திற்கு புறம்பாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த நடவடிக்கைதான் அவசியமே அன்றி செய்திகள் பரப்புவது அல்ல. ஆனால் வதந்திகள் என்றுமே வாசம் இழந்ததில்லை. வதந்திகளின் மீதான மோகம் மனிதர்களுக்கு ஒருபோதும் குறைவதுமில்லை.

அவர் சத்தமாகவே சொன்னாலும் இது வெறும் கூச்சல் தான் என்பதை தெரிந்து கொள்ள அந்த முக்கியமான பதவியில் இருக்கும் நபரை கேட்டுவிடலாம். ஆனால் அந்த முக்கியமான நபர் யார் என்பதுதான் கேள்வி? இத்தனை சத்தமாக சொல்லியும் பெயரை மட்டும் சத்தமின்றி மறைத்துவிட்டார்.

வதந்திகளுக்கு விசா, பயண சீட்டு என எதுவும் தேவை இல்லை தான்.

ஒரு விசயத்தின் தன்மையை இந்த வதந்திகள் முழுவதுமாக மறைத்து விடுகின்றன. சில வதந்திகள் காலத்துக்கும் அழியாமல் நிலைத்து விடுகின்றன.

வதந்திகளால் வாழ்க்கை தொலைத்தோர் அதிகம் என சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

சிலர் சத்தமாகவே பேசி கொண்டு இருக்கிறார்கள்.

Post a Comment

Friday, 3 December 2010

எப்படி இருக்குமோ வாசகர் கடிதம்?

நுனிப்புல் பாகம் 1 நாவல் எழுதி புத்தகமாக வெளியிட்ட பின்னர் நண்பர்களிடம் கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்டு இருந்தேன். அப்பொழுது நாவலை முழுமையாக படித்து மூன்று பக்கங்கள் மிகாமல் நுனிப்புல் பாகம் 1 பற்றி லண்டனில் வசிக்கும் கணித ஆசிரியர் ஒருவர் பாராட்டி இருந்தார். அதற்கு பின்னர் இந்தியாவில் ராஜபாண்டி என்பவர் புத்தக வெளியீட்டுவிழாவில் வெகுவாக பாராட்டி இருந்தார். அதற்கு பின்னர் இங்கொன்று அங்கொன்று என அவ்வப்போது பாராட்டுகளும், திட்டுகளும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தது.

புத்தகம் எழுதி வெளியிட்டு இப்பொழுது மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. திடீரென நண்பர் ரத்தினகிரி அவர்களிடம் இருந்து இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நான்காம் தேதி அன்று உங்கள் பெயரில் ஒரு கடிதம் வந்து இருக்கிறது என்ன செய்வது என முத்தமிழ் மன்றத்தில் தனிமடல் அனுப்பி இருந்தார். நான் செப்டம்பர் ஏழாம் தேதி வரை இந்தியாவில் தான் இருந்தேன். ஆனால் முத்தமிழ்மன்றம் நான் சென்று பார்த்தபோது தனிமடல் எனக்கு வந்து இரு வாரங்கள் ஆகி இருந்தது. அவருக்கு அதை அப்படியே எனக்கு அனுப்பி வையுங்கள் என சொல்லி வைத்தேன். அவரும் அனுப்பி வைப்பதாக சொன்னார்.

நுனிப்புல் பாகம் 1 பற்றிய கடிதமாகத்தான் இருக்கும் என என்னால் யூகிக்க முடிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என தெரியவில்லை. மாதங்கள் உருண்டோடியும் எனக்கு கடிதம் கைக்கு வந்து சேரவில்லை. அடடா ஒரு கடிதம், அதில் என்ன எழுதி இருக்கும் என தெரியாமலே போய்விட்டது என நண்பரிடம் தகவல் சொன்னேன். அவர் விசாரிக்கிறேன் என்றார். இரண்டு மாதங்கள் மேல் ஆகிவிட்டது. கடிதம் கைக்கு கிடைக்கவே இல்லை. மனதின் ஓரத்தில் சிறு ஆசை கடிதம் கிடைத்து விடாதா என்று. திடீரென ஒரு முக்கியமான வேலை வந்து சேர்ந்ததால் எனக்கு கடிதம் விசயமே மறந்து போனது.

திடீரென நான்கு தினங்கள் முன்னர் வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. எனக்கு எழுதப்பட்ட கடிதத்தை நண்பர் அனுப்பி வைத்து இருந்தார். ஆவலுடன் திறந்து பார்த்தேன்,

சென்னை பூங்கா நகர்தனை சேர்ந்த வி வி சுந்தரம் என்பவரால் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தை படித்ததும் அவர் கொடுத்திருந்த அலைபேசி தொடர்பு மூலம் அவரிடம் பேச நினைத்தேன். இதோ நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவரிடம் பேசவில்லை. நாளை நிச்சயம் அவரிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட வேண்டும்.

கடிதம் அனுப்புவர் என அவரின் முகவரியுடன், தொடர்பு எண்ணுடன் ஆரம்பிக்கிறது. அதற்கு பின்னர் பெறுபவர் என திரு ராதாகிருஷ்ணன், முத்தமிழ்மன்றம், சிவகாசி என தொடர்கிறது.

உயர்திரு ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். 2007 ஆகஸ்ட்டில் எழுதி வெளியிட்ட நுனிப்புல் பாகம் 1 என்ற அருமையான நாவலைப் படித்தேன். (கன்னிமாரா நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்தேன்) 2வது பாகம் அங்கு கிடைக்கவில்லை. தாங்கள் எழுதி வெளியிட்டீர்களா? அது சென்னையில் எங்கு கிடைக்கும், என்பதை தெரிவித்தால் எனக்கு வாங்கி படிக்க உதவியாக இருக்கும், என்று கருதி இந்த கடிதத்தை எழுதுகின்றேன். பதில் கொடுத்து உதவவும்.

நன்றி

இப்படிக்கு வி.வி. சுந்தரம்

என கடிதம் முடிகிறது.

இதயம் படபடவென அடிக்கிறது. நுனிப்புல் பாகம் 2 தனை வெளியிட ஒரு மாதம் முன்னர் தான் பொன் வாசுதேவனிடம் விசாரித்தேன். வெளியிடலாம் என சொன்னார். ஆனால் பல புத்தகங்கள் தனது அறையில் குவிந்து இருப்பதாக சொன்னபோது புத்தகம் வெளியிட்டு விற்காமல் போகும் புத்தகங்கள் நிலையை நினைக்கும்போது கவலையாகத்தான் இருந்தது.

சுந்தரம் அவர்களின் கடிதம் படித்ததும் நினைத்தேன். உடனடியாக நண்பர் ரத்தினகிரியிடம் சொல்லி நுனிப்புல் நாவலை தமிழகத்தில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் இலவசமாக தந்து விடுவது என. அதே போன்று வெறும் வார்த்தைகள் கவிதை தொகுப்பை நூலகங்களுக்கு அனுப்ப சொல்லி இஷாக் அவர்களிடம் சொல்லிவிடலாம். தொலைக்கப்பட்ட தேடல்களும் நூலகங்களுக்கு இலவசமாக போகட்டும் என வாசுதேவனிடம் சொல்லிவிடலாம் என மனம் நினைத்தது. அதை இன்னும் செய்யவில்லை. விரைவில் செய்ய வேண்டும்.

நுனிப்புல் நாவல் இரண்டாம் பாகத்தை வெளியிட வேண்டுமென ஆர்வத்தை ஏற்படுத்திய சுந்தரம் அவர்களின் கடிதம் எனது எழுத்து பயணத்திற்கான ஒரு வெற்றிதான் என்பதில் எனக்கு இருவேறு கருத்தில்லை.

நாவல் படிக்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சி தான். விரைவில் வெளி வருகிறது நுனிப்புல் பாகம் இரண்டு.

அகநாழிகை பதிப்பகம் கை கொடுக்குமா?

Post a Comment

Friday, 26 November 2010

இல்லத்தரசிகளின் இன்பமயம்

எனக்கேற்ற நண்பரை காணேன் 

தினங்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி வளர்ந்து கொண்டே இருப்பதை போல எனது மகளும் வளர தொடங்கினாள். எப்பொழுது தவழ்வாள், எப்பொழுது பேசுவாள் எனும் எதிர்பார்ப்பு என்னுள் அதிகமாகி கொண்டே போகையில் ஒரு நாள் எனது மனைவி என்னிடம் 'என்னங்க தனி குடித்தனம் போகலாமாங்க' என்றார். 'என்ன ஏதும் பிரச்சினையா' என்று கேட்டேன். 'நமக்குன்னு ஒரு குடும்பம் வந்திருச்சு, இனிமே நாம தனியா இருக்குறதுதான நல்லது' என்றார். எனக்கு புரிந்து போனது. எனது பெற்றோர்கள் ஏதேனும் சொல்லி இருக்க வேண்டும், இல்லையெனில் விளங்காத பாட்டி வந்து ஏதேனும் இவரின் மனம் வலிக்கும்படியாக பேசி இருக்க வேண்டும்.

'யாரும் எதுவும் சொன்னாங்களா' என்றேன். 'இல்லைங்க' என்றார். எத்தனையோ மாறிவிட்டார் எனது மனைவி. ஒரு நாள் கூட என்னுடன் சண்டை போடுவதில்லை. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. ஏதேனும் கேட்டு என்னால் இயலாமல் போனால் என்னை நச்சரிப்பதில்லை. எப்போ முடியுதோ அப்போ செஞ்சா போதும் என அமைதியாக இருந்துவிடுவார். அவருடைய இந்த மாற்றத்தை கண்டு நானும் என்னை  மாற்றி கொண்டேன். பரிசீலிக்கிறேன் என சொன்னேன். மறந்துராதீங்க, இனிமே இதை பத்தி பேசமாட்டேன் என சொன்னார்.

என்னுடன் வேலை பார்த்த பெண் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து போவார். மிகவும் சந்தோசமாகவே காணப்பட்டார். அதிக பணம் இருந்தால் நிம்மதி போய்விடும் என்பார்கள். ஆனால் அதிக பணம் அவளிடம் இருக்கும் காரணத்தினால்  அவள் நிம்மதியாக இருப்பதாக சொல்லும்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். அவள் புதிய இடத்திற்கு போக இருப்பதாகவும், இனிமேல் தொடர்ந்து வீட்டுக்கு வர இயலாது என சொன்னபோது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. எங்கு செல்வது என்பது பற்றி எதுவும் முடிவு செய்யவில்லை என சொல்லி சென்றார்.

ஒரு சில தினங்களில் வீட்டில் எனது பெற்றோர்களிடம் நான் புதிய வேலைக்கு செல்ல இருப்பதாக சொன்னேன். இப்போ இருக்கிற வேலைக்கு என்ன பிரச்சினை என்றார்கள். பிரச்சினை இல்லை, ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்க்கும் மன பக்குவம் எனக்கு இல்லை என சொன்னேன்.  வேலை பார்க்க செல்லும் இடம் அதிக தொலைவு எனவும், அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்க்க வேண்டும் என சொன்னதும் எனது பெற்றோர்கள் மிகவும் கவலைபட்டார்கள். எனது மனைவியையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என சொன்னதும் நிறையவே கவலைபட்டார்கள்.

'பறக்க நினைச்சிட்டீகளோ' என எனது தந்தை சொன்னதோடு நிறுத்தி கொண்டார். நாளும் வந்தது. நாங்கள் கிளம்பினோம், அப்பொழுதுதான் எனக்குள் மனது மிகவும் வலித்தது. 'எங்களோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்' என என் அம்மா சொன்னபோது எனக்குள் அழுகை வந்துவிட்டது. மனைவியை பார்த்தேன். அவள் எடுத்த முடிவு தவறோ என அவள் நினைத்து இருக்க கூடும்.

'லீவு கிடைக்கறப்ப எல்லாம் வாங்க' என எங்களை வழியனுப்பிய அவர்களை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டேன். புதிய வீடு, புதிய மனிதர்கள், புதிய இடம். வேலைக்கு செல்லாத எனது மனைவி மிகவும் சந்தோசமாகவே இருந்தார். தினமும் வேலையை விட்டு வந்ததும் அவருடன் பேசுவதில் எனது பொழுது கழியும். தனியாக இருப்பது கவலையாக இருக்கிறதா என்று கேட்டபோது, இப்பொழுதுதான் இரண்டு மடங்கு என்ன பல மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அன்பு எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது. நிறைய ஓய்வு இருக்கிறது. நம் மகளை பார்த்து பார்த்து வளர்க்க முடிகிறது என்றார்.

பாவம் உன் பெற்றோர்கள், என் பெற்றோர்கள், நாளை அவர்களின் நிலை நமக்கும் வரலாம் என சொன்னபோது 'அவர்கள் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள், தினமும் இரண்டு வீடுகளுக்கும் நான் அரைமணி நேரம் பேசிவிடுவேன்' என்றார். இந்த வாரம் ஒரு நாள் அங்கு, ஒரு நாள் இங்கு என செல்லலாம் என அவர் சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

எனது குடும்ப வாழ்க்கை இத்தனை மகிழ்ச்சிகரமாக அமையும் என ஒருபோதும் நான் கனவிலும் நினைத்தது இல்லை. எனது நண்பர்கள், எனக்கு பழக்கமானவர்கள் எல்லாம் தினமும் ஏதேனும் பிரச்சினைகளுடன் இருக்கும்போது வீட்டுக்கு வீடு வாசற்படி என சொல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். ஆனால் எனது வீட்டுக்கு மட்டும் எப்படி வித்தியாசமான வாசற்படி வந்து சேர்ந்தது.

இருவரின் பெற்றோர்களை பார்த்துவிட்டு வந்தோம். மனதில் நிறைய சந்தோசம் நிறைந்து இருந்தது. ஒருவேளை எனது மனைவிக்கு வேலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன். எதற்கு நான் வேலைக்கு செல்ல வேண்டும், எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்து இருக்கிறது.

குழந்தை கவனிப்பு, வீட்டு கவனிப்பு என மிகவும் நிம்மதியாகவே இருக்கிறது என்றார். இத்தனை படித்தும் வேலைக்கு செல்லவில்லையே எனும் ஏக்கம் இல்லையா? என்றேன். வீட்டில் இருந்தே ஏதேனும் வேலை செய்ய முடிகிறதா என பார்க்கிறேன் என்றார். நல்ல யோசனை. ஏதேனும் முடிந்தால் சொல் என சொன்னேன். அவரின் விருப்பபடி ஒரு கணினி வாங்கினோம். அத்துடன் இணைய இணைப்பும் வாங்கினோம். தினமும் புதிது புதிதாக  பல விசயங்களை என்னுடன் பேச ஆரம்பித்தார்.

வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்க கூடும் என மனதில் நினைத்து கொண்டேன். அந்த வார இறுதியில் எனது மாமா மகள், அத்தை, மாமா என மூவரும் எனது மாமா மகளின் திருமண பத்திரிகையுடன் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். பத்திரிகையை பார்த்தபோது எனது பெயர் எல்லாம் போட்டு இருந்தது. பையன் அமெரிக்காவில வேலை பார்க்கிறான், இவளும் கல்யாணம் முடிச்சிட்டு அமெரிக்கா போக போறா என்றார். எப்படி அந்த சம்பந்தம் கிடைச்சது என்றேன். இப்ப இருக்கிற நிலைமையில என்னவென்னவோ நடக்குது என அங்கலாய்த்தார். எனது மாமா மகள் என்னிடம் வந்து 'இண்டர்நெட்டுல பிடிச்சேன் மாமா' என்றார். அப்பொழுது எனக்குள் ஒரு இனம் புரியாத கவலை வந்து தொலைந்தது.

மாமா மகளின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. கல்யாணம் நடந்த சில வாரங்களில் அவள் அமெரிக்கா பறந்து போனாள். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருமுறை என்னை பார்க்க வந்து இருந்தாள். அவளின் முகத்தில் கவலை குடி கொண்டு இருந்தது. என்ன ஆயிற்று என்றேன். 'பணம் குழந்தையை தருமா?' என்றார். மனம் பக் என்றது.

(தொடரும்)

Post a Comment

Thursday, 25 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 35

வேகமாகத் திரும்பிய அந்த நபர் மதுசூதனனை நோக்கி ''உன்னை சிவலோகம் அனுப்புதேன், நீயே சிவனைச் சந்திக்கலாம்லே'' என அரிவாளை ஓங்கினார். அப்போது சிலர் ஓடி வந்தார்கள்.

''
என்னை வெட்டட்டும், இடைமறிக்க வேண்டாம்'' என நின்றான் மதுசூதனன். அரிவாளுடன் வந்தவர் கூட்டம் கண்டு ஒருநிமிடம் தடுமாறினார். ''விலகும்லே, அவனை'' என்றார் அந்த நபர். மற்றவர்கள் ஓடி வந்து அந்த நபரைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அந்த இடத்திலிருந்து விரைந்து ஓடி மறைந்தார் அந்த நபர். 

மதுசூதனனை நோக்கி கூட்டம் ஏற்பாடு செய்த சுப்பிரமணி, ''சாமி நீங்க தங்க ஒரு அறை ஏற்பாடு பண்ணியிருக்கேன், நீங்க இங்கேயே இருக்கலாம். உங்களுடைய பேச்சு மிகவும் நல்லா இருக்கு, என்னுடைய விண்ணப்பத்தை ஏத்துக்கிரனும்'' என்றார். 

மதுசூதனன் சம்மதம் தெரிவித்தான். ''எம் அடியாரும் எம்முடன் இருக்கச் சம்மதம் சொன்னால் மகிழ்வேன்'' என்றான் மதுசூதனன். ''டேய் உன்னை'' என கோபம் கொண்ட கதிரேசன் சினம் அடக்கினான். ''நீதான் எனக்கு அடியார்'' என்றான் மதுசூதனன் மறுபடியும். 

கதிரேசன் ஈஸ்வரியுடன் கிளம்பினான். வைஷ்ணவி மதுசூதனனிடம் '' உன் நிலைமையைப் பார்த்தாயா?'' என்றாள். ''என் மதியின் நுட்பம் எவருக்கும் தெரிவதில்லை'' என்றான் மதுசூதனன். ''நீ மாறிட்டேனு நினைச்சேன்'' என்றாள் வைஷ்ணவி. ''உம்மிடம் யாம் எவ்வித மாற்றமும் கொள்வதில்லை'' என்ற மதுசூதனன் ''செல்லலாமா'' என சற்றுத் தள்ளி நின்றிருந்த சுப்பிரமணியிடம் கூறினான்

மதுசூதனன் தினமும் சிவன் கோவிலில் உரையாற்றத் தொடங்கினான். அவனது உரையைக் கேட்டு அனைவரும் பாராட்டிச் சென்றார்கள்.

ஒரு நாள் இரவு மதுசூதனன் தங்கி இருந்த அறையில் வெளிச்சம் பரவியிருப்பதைக் கண்டு தயங்கிய அந்த நபர் மெதுவாக சன்னல் வழியே எட்டிப்பார்த்தார். மதுசூதனன் தியான நிலையில் அமர்ந்து இருந்தான். அவனை அந்தக் கோலத்தில் கண்டதால் தனது கையில் இருந்த அரிவாளின் மேலிருந்த பலம்தனை சற்று தளரச் செய்தது. மதுசூதனன் கண்களைத் திறப்பதைக் கண்டதும் அறைக் கதவைத் தட்டினார் அந்த நபர். மதுசூதனன் கதவைத் திறந்தான். பக்கத்து அறைக்கதவுகளும் திறந்தது.

அரிவாளுடன் ஒருவர் நிற்பதைக் கண்ட பட்டாச்சாரியர்கள் இருவர் பாய்ந்து வந்து அந்த நபரைப் பிடித்தனர். அந்த நபரின் கையில் இருந்த அரிவாள் கீழே விழுந்தது. ‘’அவரை விட்டுவிடுங்கள், என்ன நினைத்து வந்தாரோ அதைச் செய்துவிட்டுப் போகட்டும்’’ என்றான் மதுசூதனன். ‘’உங்களைக் கொல்ல வந்திருக்கிறான், சும்மா இவனை விடச் சொல்றீகளே’’ என பட்டாச்சாரியர் முணுமுணுத்தார். அந்த நபர் திமிறினார். கால்களை முன்னும் பின்னும் உதைத்தார். ‘’அவரை விடுங்கள்’’ என்றான் மதுசூதனன். 

பட்டாச்சாரியர் ஒருவர் குனிந்து அரிவாளை எடுத்துக் கொண்டார். அந்த நபரை விட்டார்கள், அந்த நபரை உள்ளே அழைத்தான் மதுசூதனன். பட்டாச்சாரியர்கள் காவலுக்கு இருப்பதுபோல் நின்றார்கள். மதுசூதனன் அவர்களை அவர்களுடைய அறைக்குப் போகச் சொன்னான்.

மதுசூதனன் கதவை சாத்தினான். ‘’என்மேல் நீவிர் கொண்ட வெறுப்பிற்கான காரணம் அறியத் தருவீரா’’ என்றான் மதுசூதனன். ‘’நீ பொய் வேசம் போடுதல, சாமிய கும்பிடுறது உண்மையா இருக்கறதுக்குல, இப்ப கூட நீ கருணை காட்டுதேனு நினைக்காதல, அடிச்சே கொன்னு போடுவேன்ல’’ என்றார் அந்த நபர். ‘’செய்துவிட்டுப் போ’’ என்றான் மதுசூதனன். மதுசூதனனை ஓங்கி அறைந்தார் அந்த நபர். சத்தம் கேட்டு பட்டாச்சாரியார்கள் ஓடி வந்தார்கள். மதுசூதனனின் மார்பில் எட்டி உதைத்தார் அந்த நபர். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எந்த சப்தமும் எழுப்பாமல் அமைதியாய் இருந்தான் மதுசூதனன். பட்டாச்சாரியார்கள் அந்த நபரை பாய்ந்துப் பிடிக்கப் போனார்கள். ‘’இதுதாம்லே உனக்கு கடைசி’’ எனச் சொல்லிவிட்டு அறையைவிட்டு ஓடினார் அந்த நபர். 

மதுசூதனன் எழுந்தான். ‘’வலிக்கிறதா, போலீஸுக்குத் தகவல் சொல்லி அனுப்புவமா’’ என்றார் பட்டாச்சாரியார். எதுவும் வேண்டாம் என சைகையிலேயே சொன்னான் மதுசூதனன்.

பட்டாச்சாரியர்கள் இரவில் நடந்த விசயத்தை கோவில் நிர்வாகியிடம் சொன்னார்கள். அவர் பதறிப்போனார். மதுசூதனனிடம் விபரம் கேட்டார். மதுசூதனன் அமைதியாகவே இருந்தான். காவல்துறைக்குச் செல்வதைத் தவிர்த்தார்கள்

மதுசூதனன் ஒருநாள் கதிரேசனை எதிர்கொண்டான்.''வைஷ்ணவியைப் பொண்ணுப் பார்க்க வந்திருக்காங்க' என்றான் கதிரேசன். அசட்டுப் புன்னகை புரிந்தான் மதுசூதனன். ''என்கூட வைஷ்ணவி வீட்டுக்கு வா'' என்றான் கதிரேசன் மேலும். 

கதிரேசன் முன்னால் நடக்க அவனைப் பின் தொடர்ந்தான் மதுசூதனன். ''என்னை உன்னோட அடியாரா இருக்கச் சொன்னீயே, நீ சிவனுக்கு இன்னுமா அடியார், நீ கோவிலுல ரொம்ப அருமையாப் பேசினனு ஒருநாள் கோவிலுக்குப் போன என் அம்மா ரொம்பச் சந்தோசமாச் சொன்னாங்க, உனக்கு எப்படி இப்படியொரு எண்ணம் வந்தது, நீ வேஷம் போடுறனுதான் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீ எவ்வளவு மாறிட்ட'' என்றான் கதிரேசன். மதுசூதனன் புன்னகை மட்டுமே புரிந்தான்.

வைஷ்ணவி வீட்டினை அடைந்தார்கள். அங்கே மதுசூதனின் மனைவி ருக்மணி இருப்பதை சற்றும் மதுசூதனன் எதிர்பார்க்கவில்லை. ''இவ்வளவுப் படிச்சிட்டு நீ இப்படி ஒரு முடிவுக்கு ஏன் போன, நீ வேலைப்பார்த்துட்டே, குடும்பத்துல இருந்துக்கிட்டு இறைப்பணி ஆற்றலாமே'' என்றார் மதுசூதனனின் பெற்றோர். 

''இனிமேல் நீங்க இங்க இருக்க வேணாம், நான் அவசரப்பட்டுட்டேன்'' என சொன்னார் ருக்மணி. ''மதுசூதனா, என்ன தயங்குற'' எனறாள் வைஷ்ணவி. ''இவள் எம்மோடு என் அடியாராய் தங்கட்டும்'' என்றான் மதுசூதனன். வா என ருக்மணியை தன்னுடன் அழைத்தான் மதுசூதனன். 

''அறிவுகெட்டவனே, உன்னை கொன்னாத்தான் சரியாகும்'' என மதுசூதனின் தந்தை அவனை அடிக்க ஓடினார். ''எம்மை யாம் கொன்று பல மாதங்கள் ஆகிவிட்டது, உமக்கும் சம்மதம் எனில் உமது மனைவியருடன் எமக்கு அடியாராய் நீவிர் இருக்கலாம், எமது அடியாரை வழி மறிக்காதீர்'' என நடந்தான் மதுசூதனன். அவனை பின்தொடர்ந்து நடந்தாள் ருக்மணி.

(தொடரும்) 
 


Post a Comment