Wednesday 24 November 2010

எனது பின்னூட்டங்கள் - 1

சில நேரங்களில் அதிக சிரத்தை எடுத்து பின்னூட்டங்கள் நாம் எழுதுவோம். மட்டுறுத்தல் வைத்திருக்கும் வலைத்தளங்களில் அது பரிசீலனைக்கு உட்படாமல் போகலாம். நாம் பின்னூட்டம் எழுதிய இடுகை மறைந்து போகலாம். அவ்வாறான நேரங்களில் பின்னூட்டத்தை சேமித்து வைத்திருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். 

தமிழ்மணத்தில் நமது பெயரில் வெளியான அனைத்து பின்னூட்டங்களும் சேமித்தே வைக்கப்பட்டு இருக்கின்றன. இருவர் ஒரே பெயரில் இருந்துவிட்டால் சிறு பிரச்சினை வருவது உண்டு. 

பின்னூட்டங்கள்தனை தனியாக சேமிக்கும்போது ஏதாவது உபயோகமாக இருக்குமா என்பது கேள்விக்குரிய விசயம். 

இறைவன் ரகசியம் 

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடையாக இருப்பவர் இறைவன் என்றுதான் இந்த உலகம் அறிந்து கொண்டிருக்கிறது. இறைவன் இந்த உலகம் இருக்கும் வரை அழிய போவதில்லை. இந்த உலகம் மொத்தமாக அழிந்தபின்னரும் இறைவன் இல்லாமல் ஒழியப் போவதில்லை. இதுதான் சத்திய வாக்கு என நம்புவர்களும் உளர்.

இறைவன் பற்றி தெரியாத, உணராத மனிதர்களும் உலகில் உண்டு. இறைவன் பற்றியே சதா சிந்தித்து வாழும் மனிதர்களும் உண்டு. எனவே இறைவன் தத்துவம் அவரவர் விருப்பம்.

ஒருவர் வணங்கினால் தான் இறைவன் இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல. ஒருவர் வணங்காமல் போனால் இறைவன் இல்லை என்று அர்த்தமும் அல்ல. மனிதர் இறப்போடு பிறப்பும் இறை சிறப்பும்.

அணு, உலகின் மூலம் இல்லை என இப்போதைய அறிவியல் சொல்லி கொண்டிருக்கிறது. மேலும் 'பெரு வெடிப்பு கொள்கை' ஏற்கபட்டாலும் அதற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என எந்த அறிவியலும் விளக்க இயல்வதில்லை. காரணம் காலம் என்ற ஒன்று இல்லாத நிலை என்றே அறிவியல் தர்க்கம் பண்ணுகிறது. பல ஆராய்ச்சிகள் இன்றைய சூழல் வைத்தே நடத்தபடுகின்றன. உலகம் தோன்றிய பின்னர் நடத்தப்படும் ஆராய்ச்சிகள், உலகம் தோன்றுவதற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை விளக்க முனைவது அறிவியல் கோட்பாடுக்கு உட்படாது என்பதை அறிவியல் வல்லுனர்கள் அறிவார்கள். இருப்பினும் இப்படி நடந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் சொல்லிவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் தலையாட்டி பொம்மைகள் தான் மனிதர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை.

இருப்பினும் அறிவியலும், ஆன்மிகமும் கேள்விக்கு உட்படாமல் போவதில்லை. அறிவியல் பதில் சொல்ல முயற்சிக்கும். ஆன்மிகம் நம்பிக்கை என ஒரு வார்த்தையில் சொல்லி விலகி போகும்.

அறிவியல் படித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆன்மிகம் படித்தாலும் புரிய முடியாதது. உணர்வுக்கு உட்பட்ட விசயம் என்றே பலரும் சொல்கிறார்கள். இறை உணர்வு என்று ஒன்று இருக்கிறதா என்ன! இருக்கிறது என்கிறார்கள் பலர். 


ஆனால் ஒன்றை நீங்கள் மிகவும் நன்றாக கவனித்தால் இந்த அவதாரங்கள் எல்லாம் மனிதர்களே என நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

கடவுள் ஏன் மனிதன் என்கிற போர்வையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் கதை தெரியும் என்றே நினைக்கிறேன். நீங்கள் செல்லும் வழியில் எதிரில் எவர் வருகிறார்களோ அவர் தலை கொய்து உயிர்ப்பியுங்கள் இச்சிறுவனை என்பதுதான் விநாயகர் புராணம். யானை அந்த வழி வந்து சேர யானை தலை விநாயகருக்கு பொருந்தி போனது. இது இன்றைய அறிவியலின் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்னோடி என சொல்வோரும் இருக்கிறார்கள்.

சில நேரங்களில் சில மனிதர்கள் விசித்திரமாக பிறப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் அனுமர் வழி வந்தவர்கள். ஆனால் அவர்கள் முழுவதும் அழிந்து போய் இருக்க கூடும். அனுமார் கடவுள் இல்லை, அவர் அவதாரத்திற்கு ஒரு தொண்டர்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாம் கோவிலில் வைத்து இருப்பார்கள். அவர்கள் எல்லாம் தெய்வங்கள் கிடையாது. மாரியம்மன் போன்ற ஊர் மக்கள் எல்லாம் ஊர் தெய்வங்கள் என சொல்வார்கள், ஆனால் அவை எல்லாம் தெய்வங்கள் கிடையாது. மனிதர்களே.

கடவுள் கற்பனைக்கே எட்டாதவர். இறைவன், நம்மால் அவர் இருப்பதையே அறிய இயலாதவர். 

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்:

இப்பொழுது இந்த இரண்டு நிலைகளையும் அறிந்த ஒருவரால் தான் இவ்வாறு சொல்ல இயலும் என நாம் எடுத்துக் கொண்டால் முழு வாக்கியமும் பொய்யாகிவிடுகிறது.

ஏதாவது ஒரு நிலையை அடைந்து இருந்தால் ஒன்றை மட்டுமே சொல்லி இருக்கலாம்.

அப்படி இல்லாதபட்சத்தில் 'இப்படி இருக்கலாம்' என்கிற ஒரு 'தியரி' மட்டுமே இந்த வரிகளின் மூலம் காணப்படும் சாத்தியம். 

பார்த்தவர்கள் அதைப் பற்றி பேசமாட்டார்கள் என்பது எப்படி உறுதியாக சொல்ல இயலும்?

பேசுபவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என எப்படி உறுதியாக சொல்ல இயலும்?

அதனால்தான் இந்த வாக்கியம் தவறு.

பார்த்தவரிடம் பார்த்தாயா என்று கேட்டால் பார்க்கவில்லை, பார்த்தேன் என ஒரு பதில் வந்தாக வேண்டும்.

பேசுபவரிடம் பார்த்தாயா என கேட்டால் ஒரு பதில் வந்தாக வேண்டும்.

பதிலே வராமல் போனால் என்ன அர்த்தம் என்பதை பின்னர் சொல்கிறேன்.

ஒரு சின்ன உதாரணம்...

உங்களுக்கு ராமானுஜர் கதை தெரியும் என்றே கருதுகிறேன்.

ராமானுஜர் தான் அறிந்த மந்திரத்தை உலகத்துக்கு எல்லாம் சொல்ல வேண்டுமென்றே வெளியில் சொன்னார்.

அதைப்போலவே பரமபுருஷர்கள் என கருதப்படுபவர்கள் தாங்கள் உணர்ந்த பேரருளை உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென தங்கள் உணர்வுகளை சொன்னார்கள்.

இப்பொழுது அவர்கள் பேசினார்கள் என்பதற்காக அவர்கள் பார்த்தது பொய் ஆகிவிடுமா?

பலர் பார்க்கமாலே பேசாமல் இருப்பதும் உண்டு.

எனக்கு தெரிந்து ஒரு அருமையான வசனம் உண்டு. ஒரு முறை ஒருவனை கேட்பேன். அவன் அமைதியாக இருந்தால் அவனை அறிவாளி என நினைப்பேன். பல முறை கேட்பேன், அப்பொழுதும் அவன் அமைதியாக இருந்தால் ஞானி என நினைப்பேன். ஆனால் கேட்டு கொண்டே இருந்தும் பதில் தராமல் இருந்தால் அவனை ஒரு மூடன் என நான் கருதுவேன். இதில் இருக்கும் நீதி என்னவெனில் ஒருவருக்கு தேவையானபோது பிரிதொருவரிடம் இருக்கும் நல்ல விசயமானது கிடைக்கவில்லையெனில் அதனால் பயனில்லை என்பதாகும். எனவே கண்டவர் விண்டிலர்; விண்டிலர் கண்டிலர் அனைவருக்கும் பொருந்தாது.

எனக்கு தெரிந்து மனிதர்களை தவிர எந்த ஜீவராசிகளும் இறைவன் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. அதற்காக அந்த ஜீவராசிகள் எல்லாம் இறைவனை பற்றி உணர்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தமா?

அவ்வாறு அந்த ஜீவராசிகள் இறைவன் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை என எனக்கு தெரிந்து இருப்பதால் அந்த ஜீவராசிகள் இறை உணர்வுகளுடன் இல்லை என சொல்வது நியாயமா?
இந்த உருவ வழிபாடு எல்லாம் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதைப் போலவே உருவமில்லாத வழிபாடும் அவசியமற்றது என்றே கருதுகிறேன்.

இறைவன் எவரும் தன்னை வணங்க வேண்டும் என வற்புறுத்தவும் இல்லை, தன்னை வணங்குபவர்களை வணங்க வேண்டாம் என மறுக்கவும் இல்லை. வணங்காமல் இருப்பவர்களை ஒதுக்கவும் இல்லை.

உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு சடங்கு, சம்பிரதாயம், மத கோட்பாடுகள் என எல்லாவற்றையும் கடந்த ஒரு அன்புமிக்க தெய்வீக நிலையைத்தான் மனிதர்கள் மனதில் உறுதியுடன் நினைத்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்குள் நான் நினைக்கும் ஒரு உண்மையான நிலை. இந்த அன்பு மட்டும் மனிதர்களிடம் ஆறாக பெருகி ஓடுமெனில் எவ்வித சட்டங்களும் அவசியமில்லை.

இத்தகைய சாத்தியமற்ற அறிவின் ஒளி அனைத்து மனிதர்களின் மனதில் படரும்போது சமத்துவம் நிலவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. 

உருவ வழிபாடு குறித்து ஏகப்பட்ட கதைகள் உண்டு. அவ்வை கதை ஒன்று அதி அற்புதம். ஒரு முறை அவ்வை கடவுள் சிலை இருக்கும் பக்கம் பார்த்து கால் நீட்டி அமர்ந்து இருந்தாராம். இவ்வாறு அமர்ந்து இருப்பது இறைவனை அவமதிப்பது என அவ்வையிடம் சொன்னவுடன், எம்பிரான் இல்லாத இடம் எது என சொன்னால் அந்த பக்கம் கால நீட்டுகிறேன் என்றாராம் அவ்வை.

கோவிலில் தான் கடவுள் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் கோவிலில் சென்று உருவத்தை வழிபாடு செய்ய வேண்டும் என சொன்னது, அதாவது படிக்க நினைப்பவர் பள்ளிக்கு சென்றுதான் படிக்க வேண்டும் என்பது போல. பள்ளிக்கு சென்று படித்தால் சான்றிதழ் கிடைக்கும். அவ்வளவே. கோவிலுக்கு சென்றால் வெளியில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு பக்திமான் எனும் சான்றிதழ் அவ்வளவே.

ஒரு விசயத்தை கற்று கொள்ள வேண்டும் என ஆர்வமுள்ளவர் பள்ளிக்கு சென்றுதான் படிக்க வேண்டுமென்பதில்லை. இதைப்போலவே ஒரு நாயன்மார் தனது மனதில் கோவில் கட்டி பூஜித்தார் அங்குதான் தெய்வம் வந்தார் என்கிறது ஒரு புராணம்.

உலகின் வரலாற்றை படித்தால் பலர் தங்களது சொந்த முயற்சியால் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை ஆராய்ந்து முன்னேறி இருக்கிறார்கள் என தெரியும்.

ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் படித்தால் தான் மேதையாக வேண்டும் என இருந்தால் அங்கே படிக்கும் அனைவரும் மேதையாவதில்லை என்பதை குறித்து கொள்வது நலம்.

இறைவனை நம்மில் ஒருவராக்கி, நம்மில் ஒருவரை இறைவனாக்கி வணங்குவது என்பது நமது மக்களிடத்தில் பழகிப் போனதால் இந்த உருவ வழிபாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி போகிறது.

உணர்வுள்ள மனிதரிடம் இருக்கும் சக்தியை விடவா , உணர்வற்ற கல்லிடம் இருக்க போகிறது? என்கிற சிந்தனை அங்கே எழுவதில்லை. ஏனெனில் உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை எனும் ஒரு சிந்தனையற்ற தத்துவம் மனிதரால் ஏற்கப்பட்ட ஒன்று.

அடிப்படையில் அது ஒரு கல். செதுக்கிய பின்னர் அது ஒரு சிற்பம். இத்துடன் நிறுத்தி கொள்ள இயலாத மக்கள் இருக்கும் வரை உருவ வழிபாடு ஒருபோதும் அழியாது.

கடவுள் கல்லில் மட்டுமே இல்லை.
 

உலக மகா கலாச்சாரம்

இப்ப எல்லாம் எங்க இருந்து திருடி எழுதுறீங்க, ஏதாவது ஒரு படைப்பு வந்தா ஐயோ இது என்னோட கதை, திருடிட்டார் அப்படினு பரவலா ஒரு பேச்சு அடிபடுது. சுயமா சிந்திச்சி எழுதற அளவுக்கு யார்கிட்டயும் உண்மையிலேயே எந்த அறிவும் இல்லை. அங்க இங்க கிடைக்கிற விசயத்தை சிந்திச்சி நம்மளோட சொந்த சிந்தனை போல நாம  எழுதறோம்.  அப்படி எழுதுவதில்தான் எங்க திறமை இருக்கு அப்படினு  ஒப்புக் கொள்கிற தைரியம் முக்கால்வாசி பேருகிட்ட கிடையாது.

தானே அறிவின் சித்தன், இது கம்பன் பாடாத சிந்தனை என்கிற தொனியில நான் சிந்திச்ச மாதிரி யாருமே இப்படி சிந்திக்கவே இல்லை அப்படினு நினைக்கிற எழுத்துலக சிகாமணிகளே நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் என்பதை கொஞ்சம் மனதில் வைத்து கொள்ளுங்கள்.

சொல்லப்பட்ட விசயங்களை நாம் அணுகும் முறையை பொருத்தே அந்த விசயம் வித்தியாசமாக சிந்திக்கப்படுகிறது.

நீங்கள் புதிதாக என்ன கண்டுபிடித்தீர்கள், என்ன சிந்தித்தீர்கள் என ஒரு வெள்ளை தாளினை எடுத்து எழுதி பாருங்கள். உங்களால் ஒன்றுமே எழுத இயலாது. அப்படி நீங்கள் ஒருவேளை எழுதிவிட்டால் நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதனால் வெள்ளை தாளில் எழுதும் முயற்சியை கைவிட்டு விடுங்கள்.

கலாச்சாரம் என்றால் என்ன?

அங்கீகாரத்திற்கு என வாழ்பவர்கள் தங்களை முன்னிறுத்தியே செயல்படுவார்கள், அதே வேளையில் சமூகம் பயன்பட வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் எண்ணங்களை முன்னிறுத்தி செயல்படுவார்கள். தங்களை பற்றி பெரிதாக விளம்பரம் செய்யமாட்டார்கள். அப்படி என்றால் ஒரு கலாச்சாரம் சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் இருத்தல் மிகவும் அவசியம். கலாச்சாரத்தின் மூலம் சகல உயிரினங்கள், தாவரங்கள் என மொத்த நிலப்பரப்பும், கடல்பரப்பும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஒரு கலாச்சாரமும் இதன் அடிப்படையில் உருவானதாக எந்த சரித்திரமும் இல்லை.

இந்த கலாச்சாரம் பற்றி நீங்கள் அனைவரும் விபரமாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நான் திருடும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

Monday 22 November 2010

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 1

காலம் என்று வந்த பின்னர் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பிரித்து வைத்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இக்கணத்தில் எக்கணமும் இல்லை எனும் புத்தரின் கூற்று எத்தனை உண்மை என்பதை  எத்தனை மனிதர்களின் மனம் பரிசீலிக்கும்.

பல்லாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது எது? இனிமேல் நடக்கப்போவது எது? நடந்து கொண்டிருப்பது எது? எனும் எண்ணங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

முன்னாளில், இந்நாளில் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பல விசயங்கள் மனிதர்களுக்கு புலப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் எந்தவொரு கருவிகளும் இல்லாமலே பல விசயங்களை அனுமானிக்க முடிந்தது. இது ஒரு நிகழ்தகவு என கொள்ள இயலாது.

முனிவர் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள் அல்ல. முனிவர் என்பவர் முக்காலமும் அறிந்தவர் என பொருள்படும். உண்மையிலேயே முனிவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் எவரிடம் இருக்கிறது என தேடி பார்த்தால் நம்மிடமே இருக்க கூடும். சித்தர் தன்னை சித்தர் என அறிவித்து கொள்வதில்லை. முனிவர் தன்னை ஒரு முனிவர் என முன்மொழிவதில்லை.

ஒரு விசயத்தை அணுகும்போது மனிதர்கள் அனைவருமே 'வாய்ப்பு' என்கிற தொனியில் அணுகாமல் இதுதான் சரி என்கிற தொனியில் அணுகும்போது அவர்கள் அந்த விசயத்தில் மிகவும் கெட்டித்தனமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இந்த மனிதர்களிடம் அஷ்டமா சித்திகள் அடங்கி இருக்கிறது என்கிறது சித்தர்கள் என போற்றப்படும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. இந்த வரலாற்றில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது அலசப்பட, ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஒரு ஆசிரியரின் அறிவினை சோதிப்பது அந்த ஆசிரியரை இழிவுபடுத்தும் நிகழ்வாகவே பெரும்பாலும் கருதுகிறார்கள், அந்த ஆசிரியர் உட்பட. ஆனால் உண்மை என்னவெனில் , இந்த சோதனை மிகவும் அத்தியாவசியம் ஆகிறது. ஆசிரியர் ஒருவர் தவறாக சொல்லித் தந்தால் அது தவறு என சுட்டி காட்டும் ஆற்றல் ஒரு சில மாணாக்கருக்கே உண்டு. விளக்கம் கேட்டல் எதிர்த்து பேசுதல் என்றாகிறது. நம்மில் முனிவர்கள் உண்டோ?

எதுவெல்லாம் நடக்கும் என எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உண்டு.  'இது நடக்கும்னு நினைச்சேன்' என நடந்தபின்னர் சொல்லும் மனிதர்கள் எத்தனை?

இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா?

(தொடரும்)