Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday 12 October 2016

தேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்

மக்கள் பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. பண்பாட்டை எடுத்துரைக்கும் பல கூறுகளில் மரபும் ஒரு கூறாகும். 

பழக்க வழக்கம் என்பது தனி மனித செயல் மட்டுமன்று. அது மரபணுக்களின் வழியாக நம் முன்னோர்களின் எச்சமாக நமக்குள் வந்து கொண்டிருப்பது. மனித இனம் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அடிப்படை மனித கூறுகளான குணங்கள் குறைந்து கொண்டே வந்தாலும் அது முற்றிலுமாக தீர்ந்து போய்விடவில்லை. மனித அடிப்படை நற்குணங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மரபணுக்களின் பங்கு அதிகம்.

 'மாறா மரபு' எந்த இந்த நாவலில் மரபு என்பதைத் திருத்தியும், மாற்றியும் அமைப்பதன் வாயிலாக வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எய்தலாம் என்ற நம்பிக்கையோடு மருத்துவத்தின் வாயிலாக அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிற ஆய்வின் மர்ம முடிச்சுகளையொட்டி கதைக் கரு அமைந்துள்ளது.

 'கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான போக்குடைய இந்தக் கதைக் கருவை மிகவும் லாவகமாகவும், சுவாரசியத்துடன் அளித்துள்ளார் எழுத்தாளர் வெ. இராதாகிருஷ்ணன். அவர் ஒரு அறிவியலாளராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால் இந்தத் திறன் அவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. 

பொதுவாகவே, இராதாகிருஷ்ணன் எடுத்துக்கொள்கிற எல்லாக் கதைகளின் கருவும், அறிவியலையும், வாழ்வியலையும் இணைத்து அதிலிருந்து எழுகிற கேள்விகளுக்கு விடை காண முற்படுபவையாக இருந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படை மனித மனக் கேள்விகளுக்கான விடை தேடல்களே இராதாகிருஷ்ணனின் எழுத்துகளின் உள்ளாழ்ந்த பொருள். இந்தத் தத்துவத் தேடல்களினூடாக அவர் கண்டடைகின்ற தரிசனங்களை, உள்ளொளியை நாமும் அவரது படைப்புகளை வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தறிய முடிகிறது. 

தனித்துவமான கதை சொல்லல் பாணி, எழுத எடுத்துக்கொள்கிற பேசு பொருள், உள்ளடக்கம், எளிமையான நடை என எல்லாவிதத்திலும் நம்மை ஈர்க்கின்றன. வெ.இராதாகிருஷ்ணனின் படைப்புகளைத் தொடர்ந்து பதிப்பிக்கிற வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் எழுத்துலகில் அவர் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க எனது நல்வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்

பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
pon.vasudevan@gmail.com

------------------

தங்களின் நல்வாழ்த்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும். நிறைய வாசிப்பு அனுபவமும், எழுத்தாளராக, தினமலரில் உதவி ஆசிரியராக, சட்ட வல்லுநராக இருக்கும் தங்களின் மூலம் எனது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

Tuesday 21 January 2014

பதிப்பகங்களும் புத்தகங்களும்

இன்றைய காலகட்டத்தில் எழுதுவது என்பது எல்லோராலும் பொதுவெளியில் எழுதும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கணினி மற்றும் தமிழ் அச்சு தெரிந்து இருந்தால் போதும், உள்ளக்கிடக்கை எல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடலாம்.

எனக்கு ஓரளவிற்கு தமிழில் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறுவயதில் இருந்தே தமிழ் படிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. எழுத்தாளர்கள் புத்தகங்கள் அவ்வளவாக படிக்கவில்லையெனினும் தினமலர், வாரமலர், குடும்பமலர், குமுதம், ஆனந்தவிகடன், தமிழ் கோனார் உரை, திரைப்பட பாடல்கள், அசோகமித்திரனின் கதைகள்  என தமிழ் படித்தது உண்டு. கடை எனும் ஒரு நாவல் படித்த நினைவு இருக்கிறது. நான் கல்கத்தாவில் படித்தபோது நண்பர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து நிறைய தமிழ் புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள். அதேபோல அங்கே உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து நிறைய ஆங்கில புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள் . நான் அதிகம் படித்தது கவியரசு கண்ணதாசனின் புத்தகங்கள் என சொல்லலாம் மற்றபடி பாடபுத்தகங்கள் மட்டுமே. இதனால் நான் நாவல் எழுத தொடங்கியபோது பாட புத்தகங்களில் உள்ள கருத்துகளை கையாண்டேன்.

பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, மோகமுள்  என பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. இந்த கதைகளை எல்லாம் நான் படித்தது இல்லை. சாண்டில்யன், தி.ஜானகிராமன், கல்கி என பல பெயர்கள் அவர்கள் மூலம் எனக்கு பரிச்சயம். என்னை மிகவும் பாதித்த மலையாள மொழி பெயர்ப்பு கதை உண்டு, இன்னமும் கதை கரு மனதில் நிழலாடுகிறது, ஆனால் தலைப்பு மறந்து போய்விட்டது.

இந்த இணையம் இல்லாது இருந்து இருந்தால் நான் நாவல், கதை எல்லாம் எழுதி இருப்பேனா என்பது கேள்விக்குறிதான். முத்தமிழ்மன்றம் போட்ட விதை நுனிப்புல் இரண்டு பாகங்களும். இப்படியே கவிதைகள், சிறுகதைகள் என முத்தமிழ்மன்றம் தந்த உற்சாகம் மடமடவென எழுத வைத்தது. இன்று எத்தனையோ கதைகள் எழுதியாகிவிட்டது. ஆனால் வெளியிட்டது மூன்றே நூல்கள்.

நாவல் வெளியிட நான் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் எல்லாம் கைகளை விரித்தன. அதனால் முத்தமிழ்மன்ற பதிப்பகம் என சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டேன். அதற்கடுத்து வெளிவந்த கவிதை தொகுப்பு, கதை தொகுப்பு எல்லாம் சொந்த செலவுதான். பதிப்பாளர்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இதுவரை சம்பந்தபட்ட பதிப்பாளார்கள் புத்தகங்கள் குறித்து ஒரு விஷயமும் தெரிவிக்கவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. புத்தகம் அச்சிட்டு தந்தார்களே அதுவே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. அவர்களிடம் புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிடுங்கள், எவரேனும் என்ன விலைக்கு கேட்கிறார்களோ கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, ஒரே அறையை அலங்கரிக்கும் அந்த புத்தகங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு அறையை அலங்கரிக்கட்டுமே. எழுதுவது எனது தொழில் அல்ல, இதன் மூலம் நான் சம்பாதிக்க இருப்பது என்று எதுவும் இல்லை. புத்தகத்திற்காக சிறு பணம் ஒதுக்கி அதை வெளியிடுவதுடன் எனது பணி முடிவடைகிறது.

இப்படி நான் எழுதி சொந்த காசு செலவு பண்ணியும் புத்தகம் வெளியிட பதிப்பகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஒரு சிறந்த பதிப்பகம் கிடைக்க வேண்டுமெனில் கதை சிறப்பாக இருக்க வேண்டும், அதுவும் மக்கள் அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது காலக்கொடுமை.

நுனிப்புல் பாகம் 2 வெளியிட வேண்டும். நண்பர் சொக்கன் இதை தனி நூலாகவே கொண்டு வரலாம் என்றார். தலைப்பு கூட நெகாதம் என்றே வைக்கலாம் என யோசிக்கிறேன். எவரேனும் இந்த நூலை, தனி  நூலாகாவோ (நெகாதம் தலைப்புடன்) , தொடர் நூலாகவோ (நுனிப்புல் தலைப்புடன்)  பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட முன்வருமாயின் தொடர்பு கொள்ளுங்கள் என்பதை தவிர வேறு என்ன கேட்டுவிட முடியும். 

Wednesday 28 July 2010

புத்தக வெளியீட்டு விழா படங்கள்


திருமதி. தாரா கணேசன்


திருமதி. தாரா கணேசன் மற்றும் கவிஞர் திரு. அய்யப்ப மாதவன்


பத்திரிகையாளர் திரு. அதிஷா



திரு. டி.வி.ராதாகிருஷ்ணன் ஐயா, திரு. சினேகன்  மற்றும் நண்பர்கள்




 திரு. காவேரி கணேஷ்   கேபிள்ஜி

இன்னும் சில படங்களை இணைக்கவில்லை.


Sunday 25 July 2010

புத்தக வெளியீட்டு விழா - நன்றி

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தகம்தனை மிகவும் சிறப்பாக முறையில் வெளியீடு செய்தமைக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

நான் யார் என்றே தெரியாத போதிலும் எனது எழுத்துதனை படித்து அதனை வெகு சிறப்பாக பாராட்டி பேசியதுடன், புத்தகத்தை வெளியிட்ட  தாரா கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

முதல் பிரதியை பெற்று கொண்டு நல்வாழ்த்து தெரிவித்த கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஐந்தே நிமிடங்களில் பேச வேண்டும் என அழைப்பு விடப்பட்டதும் என்னிடம்  கொண்டிருக்கும் நட்புக்காக மிகவும் சிறப்பாக பேசிய எனது தோழியும், முத்தமிழ்மன்றத்தின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான சூரியகாந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அசைபடம் எடுக்க வேண்டும் என விண்ணப்பம் தந்ததும், உடனே சம்மதம் தெரிவித்து அசைபடம் எடுக்க உதவியாக இருந்த மணீஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுரையை வழங்கிய புதிய தலைமுறை பத்திரிகையின் ஆசிரியர் அதிஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களின் முயற்சியால் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மற்றும் முத்தமிழ் மன்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த தருணத்தில் விதூஷ், மணீஜி, கேபிள்ஜி ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புதனை ஏற்படுத்தாமல் போனது குறித்து மனதில் சிறு வருத்தம் வந்தது என்னவோ உண்மை.

விழா குறித்து மேலும் தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

சினேகன் அவர்களின் புத்தக விமர்சனம் கண்டேன். ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி நிலவினாலும், ஒரு இனம் புரியாத பயமும் வந்து சேர்கிறது. நன்றி சினேகன்.

எங்கோ இருக்கிறேன் என
நினைக்கும்போது
அருகில்தான் இருக்கிறாய் என
அன்புடன்
அரவணைத்து கொண்ட
அனைத்து
தோழர் தோழிகளுக்கும்
எனது
உளமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.

Wednesday 21 July 2010

புத்தக வெளியீட்டு விழா


நயினார் பதிப்பக வெளியீடு.



1.  ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ (சிறுகதை தொகுப்பு)

2.  ‘நுனிப்புல்‘ நாவல் பாகம் - 1 

நயினார் பதிப்பகம்,  அகநாழிகை பொன். வாசுதேவன் 999 454 1010


3. வெறும் வார்த்தைகள் (கவிதை தொகுப்பு) 

தமிழ் அலை பதிப்பகம், 1, காவலர் குறுந்தெரு, ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 15, தொடர்புக்கு: இஷாக் 978 621 8777

Friday 9 July 2010

விரைவில் வெளியாகவிருக்கும் புத்தகம்


                                                   தொலைக்கப்பட்ட தேடல்கள்.

அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களின் நயினார் பதிப்பகத்தின் மூலம் வெளியாகவிருக்கும் ஏழு சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. தங்களின் உதவிக்கு மிக்க நன்றி பொன்.வாசுதேவன்.

எழுத்து என்பது ஒரு கனவு உலகம். அந்த கனவு உலகம், கற்பனை உலகம் மிகவும் அழகாகவே இருக்கிறது. நான் எழுதும் எழுத்துதனை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எழுத்துக்கும் உலகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த எழுத்து, இலக்கியம் அல்ல ஒரு ஏக்கம்.

இந்த நூல் பற்றி ஒரு பார்வை, அது எனதுடையதாகவே இருக்கட்டும் என அணிந்துரை, வாழ்த்துரை, ஆசியுரை என எதுவும் இல்லாமல் முன்னுரை மட்டுமே அணிந்து வந்து இருக்கிறது. விழா அறிவிப்பினை பொன்.வாசுதேவன் சிறிது நாட்கள் பின்னர் அறிவிப்பார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இப்பொழுதே வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.



                                முன்னுரை

காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது. இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.

என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள். ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.

அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை. ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.

இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா? தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை  அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது. 


நன்றி.