Friday 9 July 2010

விரைவில் வெளியாகவிருக்கும் புத்தகம்


                                                   தொலைக்கப்பட்ட தேடல்கள்.

அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களின் நயினார் பதிப்பகத்தின் மூலம் வெளியாகவிருக்கும் ஏழு சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. தங்களின் உதவிக்கு மிக்க நன்றி பொன்.வாசுதேவன்.

எழுத்து என்பது ஒரு கனவு உலகம். அந்த கனவு உலகம், கற்பனை உலகம் மிகவும் அழகாகவே இருக்கிறது. நான் எழுதும் எழுத்துதனை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எழுத்துக்கும் உலகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த எழுத்து, இலக்கியம் அல்ல ஒரு ஏக்கம்.

இந்த நூல் பற்றி ஒரு பார்வை, அது எனதுடையதாகவே இருக்கட்டும் என அணிந்துரை, வாழ்த்துரை, ஆசியுரை என எதுவும் இல்லாமல் முன்னுரை மட்டுமே அணிந்து வந்து இருக்கிறது. விழா அறிவிப்பினை பொன்.வாசுதேவன் சிறிது நாட்கள் பின்னர் அறிவிப்பார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இப்பொழுதே வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.                                முன்னுரை

காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது. இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.

என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள். ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.

அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை. ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.

இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா? தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை  அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது. 


நன்றி.

3 comments:

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

//இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது.//

அருமை.

Radhakrishnan said...

நன்றி சகோதரி.

Radhakrishnan said...

ஜூலை 24, 5.00pm to 8.00pm சனிக்கிழமை டிஸ்கவரி பேலஸ், கே கே நகர.