Tuesday 27 July 2010

போபால் - கண்டும் காணாமல்

இந்த போபால் விஷ வாயு பற்றி பல வருடங்களுக்கு முன்னரே கேள்விப்பட்டு இருக்கிறேன். பல முறை இது குறித்து நினைத்து இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட என்ன ஏதுவென அக்கறை இல்லாமல் தான் இருந்து வந்து இருக்கிறேன். விஷ வாயு கசிவால் பலர் மரணம். அது ஒரு செய்தியாய் மட்டுமே இத்தனை வருடங்களாக தெரியும்.

இதுவரை இந்த போபால் விஷ வாயு பற்றி புத்தகங்களும், திரைப்படங்களும் வந்து இருக்கின்றன என்பது கூட அறியாத நிலைதான். சரியாக இரண்டு மாதம் முன்னர் ஆய்வகத்தில் ஒரு மூலக்கூறினை உருவாக்க நான் உபயோகித்து கொண்டிருந்த பாஸ்ஜீன் (phosgene) தனை பார்த்த இந்தியர் ஒருவர் என்னைப் பார்த்து 'உனக்கு வேறு வேதிப் பொருளே கிடைக்கவில்லையா, போபால் விஷ வாயு பற்றி தெரியாதா' என எச்சரிக்கை விடுத்தார்.

மீதைல் ஐசோசையனேட் எனும் வேதி பொருள்தான் இந்த போபால் விஷ வாயு  கொடுமைக்கு காரணம். மீதைல் அமின்,  பாஸ்ஜீன் உடன் வேதிவினை புரிந்து மீதைல் ஐசோசையனேட் உருவாக்கும். இதை நாப்த்தாலுடன் வேதி வினை புரிய செய்யும்போது கார்பரில் உருவாக்கலாம். இந்த கார்பரில் பல விசயங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த கார்பரில் உருவாக்க மீதைல் ஐசோசையனேட் உருவாக்கித்தான் செய்ய வேண்டியதில்லை. இந்த வேதிவினையில் இருக்கும் பாஸ்ஜீன் தான் நான் உபயோகபடுத்தியது.

நான் மிகவும் கவனத்துடன் 'நான் திரவ பொருள்தான் உபயோகபடுத்துகிறேன், வாயு பொருள் அல்ல' என சொன்னதும் அதற்கு அவர் திரவம் என்றால் என்ன, வாயு என்றால் என்ன 'எந்த ஒரு வாசமும் அடிக்காத இந்த வேதி பொருள் நமது உடலில் உள்ள புரதத்துடன் வேதி வினை புரிந்து நம்மை கொன்று விடும். நீ இந்த திரவ பொருளை சிந்திவிட்டால் என்ன செய்வாய் என கேட்டார். நானும் அதற்கு 'சோடியம் பைகார்பனேட்' போட்டுவிட்டால் சரியாகிவிடும் பின்னர் நீரினை உபயோகித்து ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம் என்றேன். 'இந்த ஆய்வகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு நீ உபயோகித்து கொண்டிருப்பது தெரியுமா' என்றார். 'அறிவர்' என்றேன். 'அப்படியெனில், எங்கு வேதிவினை செய்கிறாயோ அங்கு எழுதி வை' என்றார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை.

'ஏன் இப்படி ஒரு வேதிவினை செய்துதான் தீர வேண்டுமா, வேறு வேதிப் பொருள்களை உபயோகித்து செய்' என சொன்னார்.

எனக்கு அந்த பாஸ்ஜீன் மனதில் வந்து போனது. பாஸ்ஜீன் முதலில் சுவாச பைகள், மூச்சு குழல் போன்றவற்றை பாதிக்கும், நுரையீரல் பாதிக்கப்படும் என இருந்தது. நான் உபயோகித்தது மிக மிக குறைந்த அளவுதான். இதை எல்லாம் கவனத்தில் கொண்டே நான் அந்த வேதிவினையை செய்ய முற்பட்டேன்.

இருப்பினும் அவருடைய எண்ணத்தை புரிந்து கொண்டு நம்மால் பிறருக்கு எந்த கெடுதலும் நேர வேண்டாம் என  நான் இதுவரை அந்த வேதிப் பொருளின் அருகில் கூட செல்வதில்லை. அதற்கு பதிலாக மாற்று வேதி பொருள் உபயோகிக்கத் தொடங்கி விட்டேன். ஆனால் வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும்போது அறிவியல் ஆய்வாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றுதான் சொல்கிறது அறிவியல் உலகம். பல உயிர்களை காக்க தங்களது உயிர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தார்கள் பலர்.

மீண்டும் இந்த போபால் பற்றிய எண்ணம். அப்படி என்னதான் நடந்தது என தேடும் எண்ணம் வந்தாலும் மீண்டும் அதே அலட்சியம். போபால் பற்றி தேடுவதை விட்டுவிட்டேன். போபால் விஷ வாயுவினால் மனிதர்கள் மரணம் அடைந்தார்கள். மேலும் பலர் துன்புற்று கொண்டு இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் கூட சகிக்க முடியாததுதான். இது ஒவ்வொரு மனிதரையும் கலங்க வைக்கும் செயலே. சக மனிதர்கள் இறப்பது கண்டு எந்த மனிதரும் கண்ணீர் வடிக்கத்தான் செய்வார்கள். ஆனால் சக மனிதர்களை கொன்று குவிக்கும் எண்ணம் இருப்போர்கள் கண்ணீரா வடிப்பார்கள்?  உலகமெங்கும் திட்டமிட்டே மனிதர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள்.

போபால் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருக்கிறது என்பதைவிட போபால் போன்ற விசயங்களில் அக்கறை இன்மை அதிகம் தென்படத்தான் செய்கிறது. இந்த போபால் விசயங்கள் போலவே பல விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அப்படி என்னதான் போபாலில் நடந்தது என படிக்கும் ஆர்வம் வந்தது. முழுமையாக விசயத்தை விக்கிபீடியாவில் படித்தேன். அதிர்ச்சியும், அலட்சியத்துடன் செயல்பட்ட அதிகாரிகளும், அதனை பொருட்படுத்தாது தங்களது வயிற்று பிழைப்புக்காக பாதுகாப்பற்ற சூழலில் வேலை பார்க்க துணிந்துவிட்ட சாதாரண மனிதர்களும், அருகிலே மரணத்தை வைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களும் என பல எண்ணங்கள் எழுந்தது.

இந்த விஷ வாயு நடந்த ஆண்டு டிசம்பர் 1984. முழு விபரங்களை படித்து பார்த்தால் அரசுவின் மெத்தனப் போக்கு தென்படும். எந்த ஒரு அரசும் மக்களுக்காக பாடுபட்டதே இல்லை. சுகாதரமற்ற சூழலில் வாழ்ந்து பழகி போன படுபாவி மக்களுக்கு இந்த அரசுகளை எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்த அரசுகளும் அதை நன்றாகவே பயன்படுத்தி கொள்கின்றன. வழக்கில் நீதி என ஒரு கண் துடைப்பு நிகழ்ந்த ஆண்டு 2010. கிட்டத்தட்ட இருபத்தி ஆறு வருடங்கள். அந்த கொடும் கோரம் நிகழ காரணமாக இருந்தவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து விட்டார்கள். குற்ற உணர்வு இருக்குமா? என்றால் குற்ற உணர்வை குப்பையில் போடு என்றுதான் சொல்லத் தோன்றும்.

யோசித்து பார்க்கிறேன். இது போன்று அலட்சிய போக்குகளால் பல வருடங்களாய் இன்னலுற்று வாழும், இறந்து போகும் மனிதர்கள் எத்தனை எத்தனை? எவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பது?

எனது ஆயவகத்தில் கதிரியக்க வேதி பொருள்கள் உபயோகிப்பது உண்டு. அந்த ஆய்வகம் விட்டு வேறு ஆய்வகம் சென்றால் அந்த ஆய்வகத்தில் கதிரியக்க பொருள் சம்பந்தமாக எதுவுமே இல்லை என நிரூபிக்க வேண்டும். ஆனால் இந்த போபால் தொழிற்சாலையில் இது போன்று ஒன்று நடக்கவில்லை என்பது போலவும், அங்கே சில வேதி பொருட்கள் தேங்கி கிடக்கலாம் என சொல்வது எத்தனை அஜாக்கிரதை, அசௌகரியம். இந்தியா அப்படித்தான் இருக்கும். அப்படியேதான் இருக்கும்.

போபால் விஷ வாயு விபத்தா? திட்டமிட்ட சதியா? என பார்த்தால் விக்கிபீடியாவில் எழுதப்பட்டு இருப்பதை படிக்கும் போது திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும் என கருத இடம் இருக்கிறது. திட்டமிட்ட சதியோ, விபத்தோ, சக மனிதர்களின் உயிர் போனதை, அவர்களின் வாழ்க்கை தொலைந்ததை எந்த அரசு திரும்ப வாங்கி தரும்? ஆயிரத்து இருநூற்றி ஐம்பத்து ஆறு கோடி ரூபாய் இந்த போபால் மக்களின் நிவாரணத்துக்கு என இப்பொழுது அரசு ஒதுக்கி இருக்கிறதாம். பாவப்பட்ட மனிதர்கள். தொலைந்த வாழ்க்கை தொலைந்ததுதான்.

சாதாரண மனிதர்கள் ஏதாவது ஒருவகையில் நசுக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறார்கள். யார் என்ன சொல்லிவிட இயலும், யார் என்ன செய்து விட இயலும் எனும் தைரியம், வல்லவன் வகுத்ததே சட்டம் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருப்பதாலும் போபால் ஒரு தொடர்கதைதான். கண்டனங்களும், விழிப்புணர்வும் ஏற்படுத்தினாலும் பலர் கண்டும் காணாமலே செல்வார்கள். அப்படித்தான் வாழ பழகி கொண்டோம்.

4 comments:

Chitra said...

போபால் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருக்கிறது என்பதைவிட போபால் போன்ற விசயங்களில் அக்கறை இன்மை அதிகம் தென்படத்தான் செய்கிறது. இந்த போபால் விசயங்கள் போலவே பல விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது.

..... நானும் அப்படித்தான் நினைத்தேன்...... இந்த அளவுக்கு மக்கள் இருப்பதற்கு என்ன காரணம் என்றும் யோசிக்கிறேன்... நல்ல பதிவுங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

போபால் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக இருக்கிறது என்பதைவிட போபால் போன்ற விசயங்களில் அக்கறை இன்மை அதிகம் தென்படத்தான் செய்கிறது. இந்த போபால் விசயங்கள் போலவே பல விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது. //

அப்பட்டமான உண்மை..

இன்று எத்தனை பேருக்கு தெரியும் இந்த கொடூரமான விஷயம் பற்றி..

யார் செத்தா நமக்கென்ன என்று அவனவன் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு...

Radhakrishnan said...

நன்றி சித்ரா, நன்றி நண்பரே.