Thursday 22 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 13

13. சாத்திரம்பட்டி சுமதி


விஷ்ணுப்பிரியன் வாசன் அருகில் அமர்ந்தார். பெரியவர் விஷ்ணுப்பிரியனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். பின்னர் விஷ்ணுப்பிரியன் தான் தூங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், பெரியவர் பாண்டியிடம் விஷ்ணுப்பிரியனுக்கு தூங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். விஷ்ணுப்பிரியன் வெகுவேகமாகவே உறங்கச் சென்றார். பெரியவர் வாசனிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

''நல்லா நாராயணனை வேண்டிக்கோ வாச, நாம போற காரியம் எந்தவித தடையில்லாம முடியனும்''

''சீக்கிரம் முடிஞ்சா நல்லது ஐயா, நோட்டுல குறிப்பிட்டமாதிரி, அந்த இடத்தில ஒரு வேளை கிடைக்கலைன்னா என்ன பண்ற ஐயா''

''செடியோ, விதையோ இல்லாம நாம திரும்ப போறது இல்ல, எப்படியும் எடுத்துட்டுத்தான் வரனும் அங்கே கட்டாயம் கிடைக்கும்''

''நாம பயிரிட அளவுக்கு கிடைக்கனுமே ஐயா''

''கிடைக்கும் வாசா''

வாசன் யோசித்தான். அதிக அளவில் வளரும் செடியாய் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் எந்த வேளாண்மைத்துறையில் இந்த விதையோ, செடியோ கிடைக்காது எனில், இது நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செடிதானா என யாரிடம் கொடுத்து உறுதி செய்வது?

''என்ன யோசிக்கிற வாசா?''

''இது நீங்க வரைஞ்சிருக்க செடி போல, வேற செடி கிடைச்சி அதை நாம எடுத்துட்டு வந்துட்டா, நம்ம திட்டம் எல்லாம் வீணாயிருமே ஐயா''

''ம், இத்தனை நாளா இது பத்தி யோசிக்காம நாளனைக்கி கிளம்பிப் போகப் போறோம், இப்ப வந்து இப்படி கேள்வி கேட்கறியே''

''ஒரு இடத்திற்கு கிளம்பிட்டோம், அதனால என்ன என்ன யோசிக்கனுமோ அதையெல்லாம் யோசிக்கிறது நல்லதுதானய்யா, நாம அவசரத்துல ஏதாவது தப்பு பண்ணிறக்கூடாதுல்ல ஐயா''

''யாருக்கு அவசரம் வாசா?''

''அது...''

''அப்படி அவசரப்பட்டு செய்ற காரியமா இருந்தா, அன்னைக்கே சொல்லி ஆட்களை கூட்டிட்டுப் போய் செடிய தேடிக்கொண்டு வந்துருக்க மாட்டேனா, இது அப்படிப்பட்ட இலேசான விசயமில்லை, உன்னை வைச்சி செய்ய வேண்டிய காரியம் அதுவும் உன் மனதிருப்தியோட செய்ய வேண்டிய காரியம், உனக்காக நான் காத்திருந்தேன், இனியும் நான் காத்திருக்கனும்னா காத்திருக்கேன் வாசா''

''இல்லை ஐயா, நாம இனி தாமதிக்க வேண்டாம்''

''நம்பிக்கையை என்னைக்கும் தளரவிடாத, எது வேணும்னு நினைச்சி நாம செயல்படறோமோ அது நிச்சயமா கிடைக்கும், ம்.. திருமாலை பத்தி தகவல் கிடைச்சதுனு கேள்விபட்டேன்''

''திருமால் சாத்திரம்பட்டியில பிறந்தவராம் ஐயா''

''சாத்திரம்பட்டியா? சேகர் இதுபத்தி எதுவும் சொல்லலையே''

''சேகர் ஐயாவுக்குத் தெரியாம இருந்திருக்கலாம், உங்களுக்கு சாத்திரம்பட்டி தெரியுமாய்யா''

''ம்ம்... நம்ம ஊரிலிருந்து மூணு மணி நேரம் ஆகும், கிழக்கே இருக்கு, அந்த ஊருப் பக்கத்துல பெரிய ஊருனு எதுவும் இல்லை, போக்குவரத்து வசதி கிடையாது''

''நீங்க போனதுண்டா ஐயா''

''ம்ம் இருபத்தி ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி போய் இருக்கேன், ஆனா இப்பவும் அதே மாதிரிதான் இருக்குனு கேள்விபட்டேன்''

''யார் சொன்னாங்க ஐயா''

''பெருமாள் தாத்தா''

''ஓ சாத்திரம்பட்டிக்கு எதுக்குப் போனீங்க ஐயா?''

''அதெல்லாம் இப்ப எதுக்கு வாசா, நீ வேணும்னா ஒருநாள் போய்ட்டு வா''

''திருவில்லிபுத்தூர் போய்ட்டு வந்துதான் இனி போகனும், நாளைக்கு சில வேலையெல்லாம் இருக்கு ஐயா''

''நாளைக்குப் போறதா இருந்தா நானே வேணாம்னு சொல்லிருவேன்''

நோட்டினை எடுத்து வைக்குமாறு சொன்னான் வாசன். பெரியவரோ தனக்கு எல்லாம் நினைவில் இருப்பதாக சொன்னார். ஆனால் வாசன் தனக்கு பெரியவர் முதன்முதலில் எழுதிய நோட்டு நிச்சயம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். பெரியவர் சம்மதம் தந்தார். அருளப்பனிடம் அனைத்து விபரங்களையும் பேசிவிட்டதாக வாசன் கூறினான். இரவு ஒன்பது மணி ஆகி இருந்தது. நேரத்தைப் பார்த்த வாசன் பெரியவரிடம் விடைபெற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தான்.

இரவு நேரமாகியும் குழந்தைகள் கவலையுடன் அமர்ந்து இருந்தார்கள். சுமதி அழுதவாறே இருந்தாள். அதைக்கண்ட வாசன் என்னவென கேட்டான். சுமதி தானும் திருவில்லிபுத்தூர் வரவேண்டும் என கூறினாள். வீட்டில் அனுமதி தர மறுக்கிறார்கள் என கூறினாள். வாசன் அறிவுரை கூறினான். சுமதி சமாதனம் அடையவில்லை.

''ஆண்டாள் போல நானும் அந்த ஊரில இருக்கனும் மாமா''

''அதுக்கு அந்த ஊருக்குப் போகனும்னு அவசியமில்லை''

வாசன் தர்மசங்கடமாக உணர்ந்தான். சுமதியின் இந்த எண்ணத்திற்கு யார் காரணம்? இந்த சின்னஞ்சிறு வயதில்! அப்பொழுது சுமதியின் தாயார் சுபத்ரா அங்கு வந்தார். வாசனிடம் விபரம் கூறினார்.

''நீ படிச்சி பெரிய ஆளா வரனும்னு உங்க அம்மா சொல்றாங்க நீ இப்படி என்னோட கிளம்பி வந்தா உன் படிப்பு என்னாகிறது?''

''என்னைக் கூட்டிட்டுப் போங்க மாமா''

வாசன் சுபத்ராவைப் பார்த்தான். சுபத்ரா சுமதியை வீட்டுக்கு வருமாறு கண்டித்தார். சுமதி இடத்தைவிட்டு நகருவதாக தெரியவில்லை.

''இந்த தடவை நான் முக்கியமான காரணமா போறேன், அடுத்த தடவை கூட்டிட்டுப் போறேன்''

''தம்பி, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, எப்பப் பார்த்தாலும் நாராயணனை நினைச்சிட்டே இருக்கா, நோட்டுல ஏதாவது எழுதிட்டே இருக்கா. நல்லாப் படிக்கிறா ஆனா சின்ன வயசுல இருந்தே இந்த பழக்கம் வந்துருச்சு எப்படி மாத்துரதுனு தெரியலை''

''ஒருதரம் ஆண்டாளா, மீராவா மாறனும்னு சொன்னா''

''அம்மா, நான் மாமாவோட போகலை என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்''
இதுதான் சமயம் என வாசன் சுபத்ராவிடம் சுமதியை அழைத்துப் போகச் சொன்னான். சுமதி வாசனை திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்தாள். வாசனுக்கு சுமதியின் செயல் மிகவும் விசித்தரமாக இருந்தது. அன்றைய இரவு பல கேள்விகளுடன் கடந்து கொண்டிருந்தது.
(தொடரும்)

2 comments:

Chitra said...

லீவு முடிஞ்சு வந்துட்டேன்.... :-)

Radhakrishnan said...

:) வாங்க, வாங்க. அப்படியே பதிவுலகில் நான் எப்படிபட்டவர்? அப்படினு ஒரு தொடர்பதிவு எழுதுங்க.