Sunday 4 July 2010

நுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி


10. சோதிடம்தனில் சோதி

வாசன் சோலையரசபுரம் அடைந்தான். சோதிட சாஸ்திரி வீட்டில் வாசனது அம்மா, அப்பா, மாமா பொன்னுராஜ் அமர்ந்து இருந்தனர். அப்படி என்னதான் இங்கு செய்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எனும் ஆச்சரியத்துடன் சோதிட சாஸ்திரி வீட்டினுள் நுழைந்தான்.

நம்பெருமாள்... ஐம்பது வயது மதிக்கத்தக்க தோற்றம். பரந்த நெற்றி. அந்த பரந்த நெற்றியில் மட்டும் ஒற்றைச் சிவப்பு இராமம். கட்டி வைக்கப்பட்ட தலைமுடி. உடலெல்லாம் பூசப்பட்ட விபூதி. வாசனைப் பார்த்ததும் நம்பெருமாள் கேட்டார்.

''இதுதான் பையனா''

''ஆமாம் சாமி''

''உட்கார் தம்பி, என்ன பண்ணிட்டு இருக்க, உனக்கு பிடிச்ச விசயம் எது"

வாசன் நம்பெருமாளை வணங்கியவாறே அங்கே கேள்விக்குறியுடன் அமர்ந்தான்.

''விவசாயம் பார்த்துட்டு இருக்கேன், பிடிச்ச விசயம்னு ஒண்ணுமில்லை சாமி''

நம்பெருமாள் சிரித்துக்கொண்டே ஜாதக நோட்டு இரண்டினை எடுத்து அதனுடன் தனித்தனியாய் சில காகிதங்களையும் எடுத்து வைத்தார்.

''உனக்கு சாமி அருள் வருமா''

''வராது சாமி''

''இன்னைக்கு காலையில கோயிலுல உனக்கு என்ன நடந்துச்சு சொல்ல முடியுமா''

''எனக்குத் தெரியலை, என்ன நடந்துச்சுனு சொல்ல முடியலை, மயக்கமா வந்தது அவ்வளதான் தெரியும்''

''அப்ப என்ன நடந்ததுனு சொல்லுப்பா''

''என் சுயநினைவில நான் இல்லை''

வாசன் நம்பெருமாள் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே மூவரையும் பார்த்தான். ஏன் இப்படி இங்கே வந்திருக்கிறார்கள், இதுகுறித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலாவது ஏதாவது ஒரு விளக்கம் கிடைக்கும் என யோசித்தான்.

''உன் ஜாதகத்துல பகை கிரகங்கள் எல்லாம் மறைஞ்சி நிற்குது, சனி கிரகம் சாந்தப் பார்வை பார்க்குது, உன் ஜாதகத்துல எப்படி கிரகங்கள் எல்லாம் அமைஞ்சி இருக்கோ அதே மாதிரிதான் இந்த ஜாதகத்திலயும் கிரகங்கள் அமைஞ்சி இருக்கு''

வாசன் ஜாதக நோட்டினைப் பார்த்தான். நம்பெருமாள் சொன்ன விசயங்கள் புரியாதவனாக மேலும் கீழும் பார்த்தவன் நம்பெருமாளை நோக்கி பதில் சொன்னான்.

''எந்த கிரகம் எங்க நின்னா என்ன, சுத்துற வட்டத்தில ஒழுங்காச் சுத்தினா எந்த பாதகமுமில்லை சாமி''

''ஓ, தம்பிக்கு சோதிடத்தில நம்பிக்கை இல்லை போலிருக்கு, இதோ இந்த இரண்டு ஜாதகத்தையும் பாரு, ஒரே மாதிரி எல்லாம் எழுதி இருக்கு, இந்த மாதிரி ஒரே மாதிரி அமையறது ரொம்ப அபூர்வம், ஆனா எல்லாம் தசை, புக்தி, ராசி, லக்னம்னு எல்லாம் ஒரே மாதிரி இருக்கு''

''நீங்களா எழுதி வருசம் மட்டும் மாத்தி இருந்து இருப்பீங்க''

வாசன் பதில் சொல்லிக்கொண்டே அம்மாவைப் பார்த்தான். ஆனால் அவர்கள் அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தனர்.

''நான் எழுதினதா?, தம்பி இந்த ஜாதகம் எழுதினவங்க யாரு தெரியுமா?''

''தெரியாது சாமி''

''இது சோதிட சிகாமணி அனந்தன், வாசன் அப்படிங்கிற உனக்கு எழுதினது, இது சோதிட கலைஞர் அச்சுதன் இதோ இவரோட மகள் மாதவிக்கு எழுதினது, இந்த ஜாதகம் எழுதினதுக்கு அப்புறம் இந்த இரண்டு பேருமே இதுவரைக்கும் எந்த ஜாதகமும் எழுதினது இல்லை. அவங்க ஊரை மாற்றம் பண்ணிட்டு போனவங்கதான், இவங்களை எனக்குத் தெரியும், என்ன பண்றாங்கனு தெரியும்''

வாசன் குழப்பமானான். அம்மாவைப் பார்த்து கேட்கவேண்டும் போல் இருந்தது. எதற்காக இருவரது ஜாதகத்தையும் எடுத்து வரவேண்டும், இரண்டும் ஒரே மாதிரி இருக்கிறதெனில் ஆணாக நானும், பெண்ணாக அவளும் ஏன் பிறக்க வேண்டும், யோசித்தான், கேட்டான்.

''ஒரே மாதிரி ஜாதகம்னா ஏன் பொண்ணு, ஆண் பிறக்கனும் சாமி''

''அது அப்படி அமைகிற சாதகம், அதுக்குத்தான் ஜாதகம். ஜாதகம், பிள்ளை கருவா உருவாகறப்பவே கணிக்கிறது, பிள்ளை பிறக்கறப்ப வைச்சி கணிக்கிறது இல்லை, இப்ப எல்லாம் எந்த நேரம் நல்ல நேரம்னு பார்த்து பிள்ளை பிறக்க வைச்சி ஜாதகம் எழுதுறாங்க''

நம்பெருமாள் சொல்லிக்கொண்டே சிரித்தார். வாசனுக்கு இடைஞ்சலாக இருந்தது. கரு உருவாகும் போது யார் எப்படி அறிந்து கொண்டு கணிப்பது? இதுகுறித்து கேட்கலாமா என நினைத்தவன் அமைதியானான்.

''நான் கிளம்பறேன் சாமி''

''உன் ஜாதகம் பத்தி எதுவும் கேட்காம போறியே, இந்த இரண்டு ஜாதகத்துக்கும் நல்லப் பொருத்தம் இருக்கு, தாராளமா கல்யாணம் செய்து வைக்கலாம், தெய்வாம்சம் நிறைஞ்ச ஜாதகம், ஒன்னுப் பார்த்தா ஒன்னு பார்க்க வேண்டியதில்லை, இரண்டும் ஒன்னு தான், ஜாதகத்தைப் பார்த்ததும் உன்னைப் பார்க்கனும்னு தோணிச்சி அதான் வரச் சொன்னேன்''

''ரொம்ப சந்தோசம் சாமி''

வாசன் எழுந்தான். ராமமூர்த்திதான் கேட்டார்.

''ருதுவான ஜாதகம் சாமி''

''அது எல்லாம் தேவையில்லை, நீங்க தைரியமா போங்க, ஜாதகமே இவங்களுக்குப் பாத்திருக்கக்கூடாது, ஒருத்தருக்கு ஒருத்தர்னு பிறந்து இருக்காங்க அந்த காலத்திலே சொல்வாங்களே எங்க பகவான் பிறக்கிறாரோ அங்கே பத்தினியும் பிறந்துருவானு அதுமாதிரி இந்த ஜாதக அமைப்பு''

வாசன் கலகலவென சிரித்தான். நம்பெருமாள் கண்களை மூடினார். மூவரும் வாசனைப் பார்த்தார்கள். வாசன் சிரித்துக்கொண்டே இருந்தான். சிரிப்பொலி நின்றதும் நம்பெருமாள் கண்களை திறந்தார்.

''தெய்வ நம்பிக்கையை வளர்த்துக்கோப்பா''

தெய்வம், மனதில் சொல்லிக்கொண்டான் வாசன். நாராயணா என மனதில் நினைத்தான்.

''நாராயணா''

வாசன் சொன்னதைக் கேட்டார் நம்பெருமாள். அம்மூவரையும் அங்கிருந்து கிளம்பச் சொன்னார் நம்பெருமாள். ஜாதகத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் கிளம்பினார்கள். வாசனை அழைத்தார் அம்மா.

''நீங்க கிளம்புங்கம்மா, நான் வரேன், சாமிகிட்ட கொஞ்சம் பேசனும்''

மூவரும் வீட்டினை விட்டு வெளியேறினார்கள். வாசன் வீட்டை நன்றாகப் பார்த்தான்.

''சாமி எனக்கு ஜாதகம் எழுதினவங்களோட முகவரி வேணும், நான் சிரிச்ச காரணம் உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ ஆனா சொல்லிருரேன், எனக்கு நீங்க எங்களை அந்த பகவான் ஸ்தானத்தில வைச்சிப் பேசினது கேலிப்பொருளாப் பட்டது அதான் சிரிச்சேன் சாமி, என்னை மன்னிக்கனும்''

''நீ யாருனு நீயா தெரிஞ்சிக்கிறவரைக்கும் யாரு என்ன சொன்னாலும் அப்படித்தான் இருக்கும், இந்தாப்பா முகவரி''

நம்பெருமாள் எழுதியதை வாங்கிப் படித்த வாசனின் கைகள் நடுங்கியது. சாத்திரம்பட்டி!

''இந்த ஜாதகங்களை யார்கிட்டயும் போய் காட்ட வேண்டாம்னு அவங்ககிட்ட சொல்லி இருக்கேன்பா, அதனால அதை பத்திரமா பாதுகாக்கிறது உன்னோட கையிலதான் இருக்கு''

வாசன் நம்பெருமாளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் முகவரித் தாளினை மடக்கி வைத்தான். சாத்திரம்பட்டி! பெருமாள் தாத்தா! அனந்தன், அச்சுதன், திருமால்! மனது ஒருமுறை துடித்து அடங்கியது. அவரை வணங்கிவிட்டு வெளியே வந்தான். மூவரும் காத்துக்கொண்டிருந்தனர்.

''இப்ப என்னாச்சுனு இப்படி ஜாதகம் பார்க்க வந்தீங்க, கேசவன் பூங்கோதை வீட்டுக்கு வந்திருந்தாங்க என்ன ஏதுனு விவரம் சொல்லாம இப்படி பண்ணி இருக்கீங்க, கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? ஜாதகம் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணனுமா,ஏன்மா இப்படி''

''மருமகனே, புதன்கிழமை திருவில்லிபுத்தூருக்குப் போறீங்க, எப்ப வருவீங்கனு தெரியாது, அதான் இப்ப ஜாதகம் பாத்துரலாம்னு பாத்தோம், எங்க மனசுக்கு இப்ப சந்தோசமா இருக்கு''

பொன்னுராஜ் சொன்னதும் தாய் சொன்னார்.

''நாளைக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதுல அதான்''

தந்தையும் தன் பங்குக்கு சொன்னார்.

''உன்கிட்ட சொல்லி இருந்தா நீ விட்டுருக்க மாட்ட, நல்ல காரியம் தானேனு வந்துட்டோம்''

வாசன் மூவரையும் பார்த்து மெளனமானான். பேருந்துக்குச் செல்வதற்காக வாசனை அழைத்தனர். வாசன் தான் மிதிவண்டியில் வந்ததாக கூறினான். அனைவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டு தான் மிதிவண்டியில் வருவதாக கூறினான் வாசன்.

இருள் முழுவதுமாக சூழ்ந்துவிட்டது. பொன்னுராஜ் வாசனுடன் வருவதாக கூறிவிட்டு அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வாசனுடன் சென்றார்.

''மாமா ரொம்ப பயப்படறீங்க, மாதவிக்கு நல்ல நல்ல வரன்கள் எல்லாம் கிடைக்கும், இப்படி தேவையில்லாம கவலைப்படறது எதுக்கு மாமா''

''மருமகனே, உங்க அத்தை மனசு மாறினா என்ன பண்றது, அதுக்காகத்தான் இந்த முன்னேற்பாடு, எல்லாம் முத்துராசு சொன்னதால வந்த யோசனை''

''அத்தை உங்க வார்த்தை மீறமாட்டாங்க, ஆமாம் எவ்வள நேரமா இங்க உட்கார்ந்து இருந்தீங்க மாமா''

''அவரைப் பார்க்க எவ்வளவு நேரம், அவரைப் பார்த்ததும் ஜாதகத்தை பார்த்தவர் எங்களை எதுவும் பேசக்கூடாது உடனே பையன் அல்லது பொண்ணைப் பார்க்கனும்னு சொன்னார், அதான் கூப்பிடச் சொல்லி தர்மலிங்கத்துகிட்ட சொல்ல சொன்னோம், அவர் சாத்திரம்பட்டியிலதான் இருந்தாராம், இங்க வந்து மூணு மாசம்தான் ஆகுதாம் மருமகனே''

வாசன் மிதிவண்டியின் வேகத்தை குறைத்தான். காற்று இதமாக வீசியது. வாசனது கண்கள் வேகமாக துடித்து அடங்கியது.

''என்ன மருமகனே, நான் ஓட்டவா? மாசு கட்டுப்பாடுனு நீ மட்டும்தான் பேசற, ஸ்கூட்டருல வந்து இருக்கலாம்தானே''

''நானே ஓட்டறேன் மாமா, இவருக்கு குடும்பம் இருக்கா''

''ஒரு பையன், கல்யாணமாகி அவங்க எல்லாம் நாக்பூரில குடியிருக்காங்களாம், இவங்க மட்டும்தான் இங்க வந்து இருக்காங்க, இவருக்கு இதுதான் தொழில்''

வாசன் சரியெனக் கேட்டுக்கொண்டான். ஊருக்குள் வந்தபோது மணி இரவு எட்டாகி இருந்தது. கேசவனிடம் இனி எப்படி பேசுவது என புரியாமல் விஷ்ணுப்பிரியனை பற்றி யோசித்தான். விஷ்ணுப்பிரியன் பெருமாள் கோவிலில் அமர்ந்து இருந்தார்.

(தொடரும்)

No comments: