Monday 19 July 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவர்?

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என யாருமே எதற்கு இன்னமும் எழுதவில்லை என யோசித்தபோது தொடர்பதிவுக்கு ஒரு அழைப்பு விட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என சுவாரஸ்யமாக பலரும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். படிப்பதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவள் என்பதையும் படித்துவிட வேண்டும் எனும் ஆவலும் கூடவே எழுகின்றது.

எனவே பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் என எழுத நான் சிலரை அழைக்கிறேன். அத்துடன் அவரவர் ஒருவரை அழைக்க மொத்த பதிவுலகமும் வரலாறுதனை பதிவு செய்துவிடும் எனும் அக்கறை எழுகிறது.

வேதம் மட்டுமின்றி பல அற்புத விசயங்களை எழுதி வரும் விதூஷ் 

கவிதைகள், தொடர்பதிவுகள் என நேஹாவின் நேரத்தை நம்முடன் பகிரும் தீபா 

படங்கள், கட்டுரைகள் என தமிழில் அழகுபடுத்தும் ராமலக்ஷ்மி 

சிறுமுயற்சிகள் செய்து தமிழ் சிறக்க செய்யும் முத்துலட்சுமி 

மரங்கள் மற்றும் உடன் பேசுவது போல கதைகள் எழுதும் ஜெஸ்வந்தி 

விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


வெ.இராதாகிருஷ்ணன் 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம், அதுதான் எனது உண்மையான பெயர். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


இது பற்றி ஒரு கதை சொல்லலாம். நான் இந்த இணையங்களில் எழுத ஆரம்பித்தது 2006ம் வருடம் என நினைக்கிறன். அப்பொழுது தமிழில் வலைப்பூ பற்றியெல்லாம் தெரியாது. ஆங்கிலத்தில் தமிழ்தனை எழுதி கொண்டிருந்த காலம். அப்படி எழுதி கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானதுதான் முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளம். அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் மூலம் நுனிப்புல் நாவல் வெளியிட்டேன். நுனிப்புல் நாவல் நண்பர்களால் பாராட்டபட்டாலும் வெளியில் இருப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.  அப்பொழுதுதான் எனது எழுத்தின் நிலை இப்படியும் இருக்கும் என அறிய முடிந்தது. அப்படிப்பட்ட நண்பர்களின் அறிவுரைப்படி எனது எழுத்துகளை சேமிக்கும் தளமாக வலைப்பூதனில் எல்லாம் இருக்கும் வரை என வலைப்பூவிற்கு தலைப்பிட்டு காலடி எடுத்து வைத்தேன். இங்கே எழுதப்பட்ட பல பதிவுகள் எல்லாம் முன்னால் எழுதியவைதான். சில பதிவுகளே நேரடியாக இங்கே எழுதி வருகிறேன். 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்


எப்படியெல்லாம் வலைப்பூதனை விளம்பரம் செய்வது என்பது பற்றி அதிகம் தேடிப்பார்த்தேன். பல தேடு பொறிகளில் எனது வலைபூதனை இணைத்தேன். எனது நண்பரின் அறிவுரைப்படி தமிழ்மணத்தில் இணைத்தேன். பின்னர் தமிழிசில் இணைத்தேன். தமிழ் 10 என்பதிலும் இணைத்தேன். சில தவிர்க்கமுடியாத
பிரச்சினைகளால் தமிழ் 10லிருந்து பின்னர் எடுத்துவிட்டேன். மேலும் சில திரட்டிகளில் இணைத்தேன். சங்கமமும், திரட்டியும் நான் இணைக்காமலே திரட்டி கொண்டன. திரட்டியில், சங்கமத்தில் நேரடியாக சில பதிவுகள் இணைத்தேன். 


இப்படி எப்படியாவது வலைப்பூதனை பிரபல படுத்த வேண்டும் என பேராசை கொண்டு திரிந்தேன். ஆனால் நான் எழுதிய முத்தமிழ்மன்றத்தில் அந்த மன்றத்தின் விதிகளுக்கு ஏற்ப எனது வலைப்பூதனை விளம்பரம் செய்யாமலே தவிர்த்தேன். மேலும் எவருடைய வலைப்பூவிலும் சென்று எனது வலைப்பூதனை விளம்பரம் செய்ய வேண்டும் என ஒருபோதும் எண்ணியதுமில்லை. ஆனால் பிறருக்கு இடப்படும் பின்னூட்டங்களே வலைப்பூவிற்கான விளம்பரம் என்பதும் அறிந்தேன். பல நண்பர்களை மனதில் நினைத்து கொண்டிருக்கிறேன். எனது நேரம் காரணத்தால் பலருடன் என்னால் பழக இயலாமல் இருக்கிறது. 


மேலும் எனது கண்களுக்கு தென்பட்டதெல்லாம் பலரும் வாசிக்கும் தளங்கள். மிக குறைவாகவே சிலர் வாசிக்கும் தளங்கள் தென்பட்டன. எனது தேவை எது என தமிழில் தெரியாததால் அதிகம் சச்சரவு நிறைந்த பதிவுகளையே படித்தேன். எப்படியெல்லாம் மனிதர்கள் சிந்திக்கிறார்கள் எனும் ஆவலும், அடுத்தவர்களை பற்றி அறிந்து கொள்ளும் மோகமும் என்னை சச்சரவு பதிவுகளை படிக்க செய்தது எனலாம். அங்கே நான் இட்ட பின்னூட்டங்கள் எனது வலைப்பூவிற்கான விளம்பரமா என தெரியாது. 


சில காலம் பின்னர் பின்னூட்டங்கள் இடுவதை குறைத்து கொண்டேன். படித்தால் உடனே எதாவது எழுத தோன்றும். மிகவும் சிரமப்பட்டு எழுதாமலே வந்து இருக்கிறேன். எனக்கு படிக்கும்போது எழுதிவிட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே உண்டு. இருப்பினும் நான் ஒன்று நினைத்து எழுத ஊர் ஒன்று நினைத்து பேசும் என்பதுதான் எனது நிலை. 


நான் மதித்து போற்றும் மனிதர்கள் இந்த வலைப்பூவில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து முகம் பார்த்து சிரித்து பேசிட வேண்டும் எனும் ஆவல் உண்டு. இதுவும் எனது வலைப்பூவிற்கு நான் தேடும் விளம்பரமா என்றால் என்னவென சொல்வது?. இதன் காரணமாகவே பல நேரங்களில் என்னை நானே ஒதுக்கி கொள்வது உண்டு. அது தவறு என பலமுறை அறிந்து இருக்கிறேன். நிறைய நல்ல நண்பர்கள் பெற வேண்டும் எனும் ஆசை மனதில் எப்பொழுதும் உண்டு. 

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


சுய சொறிதல் என இதை வலைப்பூவில் சொல்கிறார்கள். சென்ற கேள்விக்கான எழுதிய பதிலில் இருந்தே தெரிந்து இருக்கும் நான் எழுதும் எழுத்துகள் பல சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்வதுதான். எனது அனுபவங்கள் என பல விசயங்களையும், பயண கட்டுரைகள் என பல சொந்த விசயங்களையும் எழுதி இருக்கிறேன். சமூகம் எனும் பார்வையில் எழுதுவது நான் பார்த்த விசயங்களின் பாதிப்புதான். 


 சமூக அக்கறை என்பது நமது மீதான அக்கறை என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். தனி மனிதன் தன் மீது அக்கறை செலுத்தும்போதே சமூகம் அக்கறை கொண்டதாகிவிடுகிறது. சுயநலம் கருதாமல் பொதுநலம் கருதவே முடியாது என்பதுதான் எனது கோட்பாடு. மக்களுக்கு செய்கிறேன் எனும் எண்ணமே சுயநலத்தின் தோற்றம்தான். 


இப்படி சொந்த விசயங்களை எழுதுவதன் மூலம் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் எழவில்லை. எவரையும் திட்டி எழுதும் பழக்கமோ, தாக்கி எழுதும் வழக்கமோ நான் கொண்டிருப்பதில்லை என்பதால் எவ்வித விளைவுகளும் இல்லை. சாதாரணமாக எழுதுவதன் மூலம்  நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். 
    
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


 பதிவுகளின் மூலம் அதிகம் சம்பாதிக்க இயலும் எனும் நிலை வந்தால் எனது மருத்துவ ஆராய்ச்சியை விட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். ஏனெனில் எழுதுவதற்கு கற்பனை வளம் போதும்.  இணையங்களில் தேடினால் விபரங்கள் கிடைக்கிறது. நூலகங்கள் தேடி ஓட வேண்டியது இல்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுதி கொண்டே இருக்கலாம். 


கூகிள் விளம்பரம் இணைத்து இருக்கிறேன். அதன் மூலம் இதுவரை எந்த பணமும் சம்பாதித்தது இல்லை. அன்பளிப்பு அளியுங்கள் என ஒரு பொத்தான் நிறுவி இருக்கிறேன். நானாக அதில் சேர்க்கும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இதுவரை இல்லை. இவை எல்லாம் சமூக நலனுக்காக, பிறருக்கு உதவ வேண்டும் என நான் செய்திருக்கும் விசயங்கள். 


நான் வெளியிடும் நாவல்கள், புத்தகங்கள் மூலம் வரும் பணத்தினை பிறருக்கு உதவி செய்வதற்காகத்தான் என எனது குறிப்புகளில் குறித்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த வழிகள் மூலம் இதுவரை எதுவும் செய்ய இயலாமல் தான் இருக்கிறது, எழுத்தின் மூலம் சம்பாதிப்பது அத்தனை சுலபமில்லை. எழுத்தின் மூலம் வரும் பணத்தை நிச்சயம் சமூக நலனுக்காகவே செலவிடுவேன் என மனதில் உறுதியுடன் இருக்கிறேன். மேலும் நான் எழுதும் பெரும்பாலான எழுத்துகள் தொடர்ந்து புத்தகமாக வெளிவரும் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. 


நான் எழுதுவது பொழுது போக்கு என சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதுவது என்பது நிச்சயம் பொழுதை பயனுள்ள வகையில் செலவழிப்பது என்பதாகத்தான் எடுத்து கொள்கிறேன். அதே வேளையில் சச்சரவு நிறைந்த பதிவுகளை படிப்பு பொழுது போக்கு என கொள்ளலாம் என கருதுகிறேன். 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


என்னிடம் இருப்பது இரண்டு வலைப்பதிவுகள். ஒரு தமிழ் வலைப்பதிவு, மற்றொன்று ஆங்கில வலைப்பதிவு. ஆங்கிலம் அவ்வளவாக எழுதுவதில்லை. இது தவிர்த்து கல்விக்கென ஒரு தனி இணையதளம் வைத்து இருக்கிறேன். அதிலும் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


மற்ற பதிவர்கள் மீது கோபம் வந்தது உண்டு, அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என கோபம் இருந்த இடம் தெரியாமல் சில கணங்களில் மறைந்து போனது. மறைந்து போன கோபத்தை மீண்டும் நினைவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே பதிவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. ;) 


மற்ற பதிவர்கள் மீது பொறாமை என சொல்வதற்கு பதிலாக பெருமதிப்பு உருவானது. எழுதப்படும் எழுத்துகள் பல பிரமிக்க வைத்து இருக்கின்றன. அந்த மதிப்பிற்குரிய பதிவர்களை மனதார போற்றுகிறேன். 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய 
மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதலில் அறிமுகம் தான் எழுதினேன். அதில் பின்னூட்டமிட்டவர்கள் உண்டு. என்னை வலைப்பூ எழுத சொன்னவர்களின் முதல் பின்னூட்டங்கள் அது.  பின்னர் எழுதப்படும் பதிவுகளுக்கு அங்கொன்று இங்கொன்றுமாய் வந்த பின்னூட்டங்கள் என இருப்பினும், நான் பதிவு செய்பவை எல்லாம் முன்னால் எழுதப்பட்டவை என்பதால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.  


அதே வேளையில் எனது கதைக்காக விருது கொடுத்து பாராட்டிய சகோதரி விதூஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். விருது வழங்கும்போது எதற்காக வழங்குகிறேன் என அவர் சொல்லி தந்த விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. 


பின்னர் சகோதரி அன்புடன் அருணா ஒருமுறை ஒரு பதிவுக்கு பூங்கொத்து தந்து இருந்தார்கள். இந்த பதிவுலகில் நான் பெற்ற ஒரே விருது ஒரு ஒரு பூங்கொத்து அதுதான். அந்த விருதினை விரைவில் பிறருக்கு பகிர்ந்து தர வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது, அதற்கான நாளை ஆவலுடன் எதிர்பார்கிறேன். 


தாரவி எனும் பதிவிற்கு தமிழ் 10 மகுடம் சூட்டி இருந்தது. இன்னும் சில பதிவுகள் யூத்புல் விகடன் சுட்டி இருந்தது. இவை தந்த சின்ன சின்ன மகிழ்வுகள் என கொள்ளலாம். 


பதிவுகளை வாசிக்கும் அனைத்து உறவுகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கின்றேன். 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னை பற்றி நானே கூறி கொண்டாலும், அவரவர் மனதில் ஒரு எண்ணம் என்னை பற்றி உருவாகத்தான் செய்யும். அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. 


என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் விசயங்கள் தினமும் மாறிக் கொண்டே இருந்தாலும் நான் எப்பொழுதும் நான் தான். 

19 comments:

http://rkguru.blogspot.com/ said...

எல்லாமே நல்லா கேள்விகள் ஆனா எழுத நேரம் இல்லை....

கோவி.கண்ணன் said...

ன், ள் வேணாம், ர் இருக்கலாமே. ஐ மீன் பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் ?
:)

Paleo God said...

//விருப்பமிருப்பின் நீங்கள் எழுதலாம். ஒருவேளை எழுத முடியாது போனாலும், வேறு ஒருவரை அழைத்து விடவும். :)
//

நான் அதீத கனவுகள் ராதாகிருஷ்ணன் அவர்களை எழுத அழைக்கிறேன். :))

Vidhoosh said...

Thanks for the invite, is indeed a gesture to have all of these info recorded. :)
Also, i like almost all the posts by deepa, muthulakshmi, ramalakshmi, and jeswanti. Would love to see them writing on this topic.

-vidhoosh.

தமிழ் உதயம் said...

கோவி.கண்ணன் சொன்னதை வழி மொழிகிறேன்.

Radhakrishnan said...

நன்றி ஆர்.கே குரு. நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வெளியிட்டு விடுங்கள்.

மிகச் சரியாக சொன்னீங்க கோவியாரே. நன்றி.

விரைவில் எழுதிவிடுகிறேன் ஷங்கர், அழைப்புக்கு நன்றி. உங்க பதிவு பார்த்துதான் முதல் முதல் நானாக ஒரு தொடர்பதிவு எழுதினேன் என நினைக்கிறேன்.

நன்றி விதூஷ், இனிமேல்தான் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

நானும் ஏற்றுக்கொள்கிறேன் தமிழ் உதயம் ஐயா. நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! நிச்சயம் எழுதுவேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

// அனைவருமே என்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பது எனது ஆணவத்தின் குறியீடு. அனைவருமே என்னை மட்டமாக நினைக்க வேண்டும் என்பது எனது கழிவிரக்கத்தின் குறியீடு. என்னை எவர் எவர் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி நினைக்கட்டும் என இருப்பது எனது நிதர்சன நிலையின் குறியீடு. //

சூப்பர். ரசித்தேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதில் இருக்கும் பல கேள்விக்கு நான் பழய தொடர்பதிவுகளிலேயே பதில் சொல்லி இருக்கேன். மீண்டும் மீண்டும் அதை எப்படி எழுதுவது :) ..

உங்கள் பேட்டியை... நீங்கள் மிக அழகாக எழுதி இருக்கீங்க நல்லா இருக்கு ..நன்றி.

CS. Mohan Kumar said...

வெளிப்படையாக எழுதி உள்ளீர்கள். அருமை

Karthick Chidambaram said...

கடைசியாக உள்ள கேள்வியில் நீங்கள் அருமையாக இருக்குறீர்கள் ... நீங்க நல்லாவரா ? கேட்டவரானு கேக்கமாட்டேன்.
நீங்க நம்மவர்!

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி. ஆம், சில விசயங்கள் நானும் முன்னர் எழுதியவைதான்.

மிக்க நன்றி மோகன்குமார்,

மிகவும் மகிழ்ந்தேன், மிக்க நன்றி கார்த்திக்.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2010/07/blog-post_21.html

done :)

Radhakrishnan said...

மிக்க நன்றி விதூஷ். நான் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய.

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

Radhakrishnan said...

:) நன்றி, நீங்கள்தான் ஆரம்பித்து வைத்தீர்களா. உங்கள் பதிவுக்கு பதில் எழுதினேன், எங்கோ பக்கம் சென்றுவிட்டது.

ராமலக்ஷ்மி said...

பதிவு சுவாரஸ்யம்.

நான் எப்படிப் பட்டவள் என்பதை நீங்கள் எல்லோரும்தான் சொல்ல வேண்டும்:)! மற்றபடி இதிலுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு ஏற்கனவே எனது ஒருசில பதிவுகளில் [குறிப்பாக என் வலைப்பூவில் ‘நன்றி நவிலல்’ என வகைப்படுத்தப் பட்டவற்றின் கீழ்] பதில்கள் சொல்லி விட்டுள்ளேன். அழைத்த அன்புக்கு மிக மிக நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு. நாம் எழுதுவதில் அதைரியப்பட வேண்டியதில்லை. எழுதுவது ஒரு ஆத்மா திருப்தி.
வணக்கம். வாழ்த்துக்கள்.