Thursday 22 May 2014

இந்த கதை தெரிகிறதா?

பத்தாம் நூற்றாண்டில் ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் காம களியாட்டங்களில் தனது மனைவியுடன் ஈடுபட்டு கொண்டிருந்தான். இதனால் நாட்டின் மீது அவனால் அக்கறை செலுத்த முடியவில்லை. இதைக் கண்ட அமைச்சர் மன்னன் மீது வெறுப்பு அடைந்தான்.

''மன்னா, உங்களது நடவடிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலை தருகிறது''.

''என்ன அமைச்சரே, திடீரென உயரிய சிந்தனை''.

''மன்னா, நீங்கள் எப்போதும் மகாராணியாருடன் மஞ்சத்தில் பள்ளி கொண்டு இருப்பதால் மக்கள் பஞ்சத்தில் தத்தளிக்கிறார்கள்''

''அமைச்சராகிய நீங்கள் என்ன கிழித்து கொண்டு இருக்கிறீர்கள்?''

''நான் என்னால் முடிந்த காரியங்களை செய்து வருகிறேன், மன்னன் சொல்லட்டும் சொல்லட்டும் என நண்டு சிண்டுகள் எல்லாம் என்னை ஏளனமிட்டு பேசி தொலைக்கின்றன''

''அமைச்சரே, மகாராணியார் கர்ப்பமாக இருக்கிறார், எனவே எனக்கு அவருடன் இருப்பதுதான் முக்கியம், நாடு அல்ல''

''மன்னா, இது மிகவும் தவறு. உங்களால் முடியாது எனில் நான் அதுவரை மன்னன் பொறுப்பில் இருந்துவிட்டு கவனித்து கொள்கிறேன், எப்போது நாட்டின் மீது அக்கறை கொள்ள முடியுமோ அப்போது வாருங்கள்''

''மன்னர் பதவி மீது ஆசை வந்துவிட்டதா அமைச்சரே''

''இல்லை மன்னா, மக்கள் நலம் தான் நமக்கு முக்கியம்''

''நாடு சுபிட்சமாகத்தானே இருக்கிறது, பஞ்சம் என நீங்கள் பஞ்சப்பாட்டு பாடுவது பதவிக்கு குறி வைப்பது போல் அல்லவா இருக்கிறது''

''எனது அமைச்சர் பதவியை துறந்து செல்வது தவிர வேறு இல்லை, நீங்கள் பள்ளியறை விட்டு வெளியே வருவதே இல்லை, எப்படி நாட்டின் நிலைமை புரியும். நீங்கள் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள், மன்னர் பதவியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்''

''அமைச்சரே, மன்னன் பதவியை எடுத்துக் கொள்ளும், நானே நாளை அறிவிக்கிறேன்''

''நல்லது மன்னா''

அமைச்சர் தன வீடு செல்கிறார். தனது மனைவியிடம் ஆலோசனை செய்கிறார்.

''நாதா, நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள்''

''நாட்டிற்கே ஆலோசனை சொல்லும் நான் உன் ஆலோசனை கேட்கும் நிலை வந்துவிட்டது, என்ன சொல்''

''அரசாட்சி ஏற்றதும் அந்த காமத்தில் மூழ்கி கிடக்கும் அந்த நயவஞ்சக அரசரை கொன்று விடுங்கள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த பாதகியை நாடு கடத்தி விடுங்கள்''

''உனக்கு எதற்கு இந்த வன்மம்''

''என்னிடம் அந்த மன்னர் பலமுறை தவறாக நடக்க முயன்றார், இதை உங்களிடம் எப்படி சொல்வது என நினைத்து இருந்தேன்''

''உன்னிடமே அப்படி நடந்து கொண்டானா?''

''ஆம்''

அமைச்சர் யோசித்தார், மன்னர் அப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. தனது மனைவிக்கு எப்போதும் மகாராணியாக இருக்கும் ஆசை வந்துவிட்டது. எனவே அவள் சொல்படி செய்வோம் என நினைத்தான்.

அமைச்சர் அரசன் ஆனான். அரசரை கொன்றான். மகாராணி நாடு கடத்தப்பட்டார். மகாராணி ஒரு பையன் பெற்று எடுத்தார. அந்த பையனிடம் தனது கதைகள் சொல்லி வளர்த்தார்.

'அம்மா, எப்படியாவது அந்த அமைச்சரை பழி தீர்த்து நாட்டை கைப்பற்றுவேன்'

''ஆனால் உன் அப்பா போல் பெண்ணிடத்தில் மயங்கி இருக்காது இருந்தால் மட்டுமே சாத்தியம்'

''நான் அப்படி செல்ல மாட்டேன், அப்படி சென்றாலும் இந்த அமைச்சரை பழி வாங்காமல் விடமாட்டேன்''

பையன் பல கலைகள் கற்று வளர்ந்தான்.

''அம்மா, இந்த பெண் உனக்கு பிடித்து இருக்கிறதா'

''என்ன காரியம் செய்ய தொடங்கி இருக்கிறாய். உனது அப்பாவின் பாதையை நீயும் தேர்ந்து எடுக்கிறாயா'

'பதில் சொல்ல இயலாது, அந்த அமைச்சர் அழிவது உறுதி'

முதலில் ஒரு பெண், இரண்டாவது ஒரு பெண் என ஏழு பெண்களை அழைத்து வந்து அனைவரையும் மணம் முடித்தான்.

''நீ செய்வது மிகவும் மோசமான காரியம்''

''நான் பெண் பித்தன் இல்லை. எனக்கு இவர்கள் எல்லாம் ஒவ்வொரு வழியில் உதவியாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் எவ்வித மன வேறுபாடு இல்லை. எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை''

''உனது செயல் அழிவுக்கு தான் மகனே''

''அம்மா, இந்த பெண்கள் எல்லாம் ஒவ்வொரு சிற்றரசர்களின் இளவரசிகள். அவர்களை தேர்ந்தெடுத்து நான் மணமுடித்தேன், இப்போது புரிகிறதா ராஜதந்திரம்''

''மகனே''

''நாளை போர் நடக்க இருக்கிறது, வாழ்த்தி அனுப்புங்கள்''

தனது தந்தையின் நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடுகிறான்.

''அமைச்சரே''

''நான் மன்னன்''

''என் தந்தைக்கு நீ தான் அமைச்சர்.என்னை எவர் என தெரிகிறதா''

''அன்றே உன்னை நான் கொன்று இருக்க வேண்டும்''

''அது உன் முட்டாள்தனம்''

''என் தந்தையை கொன்ற உன்னை கொல்வது எனக்கு உத்தமம்''

''என்னை ஒன்றும் செய்து விடாதே, நாங்கள் வேறு எங்கேனும் பிழைத்து போகிறோம்''

''நாளை முடிவு சொல்கிறேன்''

தனது குருவை சென்று பார்க்கிறான்

''குருவே வணக்கம்''

''போர் எடுத்து சென்றாயா''

''ஆம்''

''நீ இப்படி நடந்து கொள்வது முறையல்ல, நீ இறைவன் பணி ஆற்றி மகிழ்ந்து இருக்க வேண்டும்''

''அந்த அமைச்சரை பழி வாங்க வேண்டும்''

''கூடாது, நீ பல பெண்களை மணம் முடித்தது எல்லாம் இந்த இறைவன் அடி சேரத்தான், அதற்காகவே நான் எதுவும் உன்னை சொல்ல வில்லை. நீ அரசராக இருந்து கொள் ஆனால் கொலைப்பாதகம் செய்யாதே அன்பை, அமைதியை உலகில் நிலைநாட்டு''

''அப்படியெனில் நான் என்ன செய்ய வேண்டும்''

''ஒரு யோசனை சொல்கிறேன்,கேள்''

''சொல்லுங்கள் குருவே''

''அந்த அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடித்துக் கொள்''

''சரி குருவே''

''அவர்கள் உனக்கு எதிரியாக இருக்கமாட்டார்கள். இப்போது எல்லா ராஜ்ஜியங்களிலும் நீயே அரசர், இளவரசர் எல்லாம். எனவே இறைப்பணி ஆற்று. உலகில் அமைதி ஒன்றே குறிக்கோள். அன்பை நிலைநாட்டிட போராடு''

''அப்படியே ஆகட்டும் குருவே''

அமைச்சரின் மகளை எட்டாவதாக மணம் முடிக்கிறான். ரத்தமும், போரும் என கண்ட பூமி அன்றிலிருந்து அமைதி உருவாய் தொடங்கியது.

இந்த கதைக் கருவை திருடிய இடம் நீங்கள் கண்டு பிடித்து விட்டால் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பொறுத்து ஒன்று நீங்கள் தமிழ்ப் புலமை உடையவர்கள் அல்லது சினிமாப் பைத்தியம்.

Monday 19 May 2014

வானத்தைக் காணோம்

'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.

'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'

'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.

'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'

'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'

'பக்தா, என்ன உளறுகிறாய்?'

'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'

'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'

'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'

'பக்தா, அது வேறு இது வேறு'

'எது வேறு'

'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'

'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கிறது, வானம் பூமிக்கே சொந்தம்'

'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'

'வானத்தைக்  காணோம்'

'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா?'

'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா?'

'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'

'நான் எதற்கு செல்ல வேண்டும்'

'அங்கே வானம் இருக்கும்'

'நமது வானம் அங்கே இருக்குமோ?''

'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'

'எனக்கு புரியும்படி சொல்லுங்கள்'

'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'

'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா?

'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'

'இப்ப என்ன கேட்டுட்டேன்'

'வானத்தைக்  காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'

'சொல்லுங்க சாமி'

'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'

'வட்டமாகவா, நீளமாகவா சாமி'

'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'

'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த  வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'

'பாய் ஒரு பிரபஞ்சம்'

'இல்லை பாய் ஒரு வானம்' 

'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'

'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'

'அந்த வானத்தைக் காணோம் சாமி'

எந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற

வெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து  இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.

வானம் என்றால் என்ன?

'A sky is the region of atmosphere or outer space seen from the earth' 

ஒருவேளை செவ்வாயில் நாம் இருந்தால் 'A sky is the region of atmosphere or outer space seen from the mars' 



Tuesday 13 May 2014

டிவிட்டப் மதுரையில் நானிருந்தேன்

பக்தா, மதுரையில் நடக்கும் டிவிட்டப் விழாவிற்கு கலந்து கொள்ள வில்லையா என்று சாமியார் கேட்டதும் நான் பயந்து போனேன்.

''என்ன சொல்கிறீர்கள் சாமி?''

''ட்விட்டரில் 140 எழுத்துக்குள் எழுதும் கீச்சர்கள் ஒன்று கூடினார்களே, எப்படி இந்த உலகத்தை மேம்படுத்தி செல்வது என, அதில் நீ கலந்து கொள்ளவில்லையா?''

''எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் சாமி?''

''நீயும் ஒரு கீச்சர் தானே''

''எப்பொழுது நான் என்னை கீச்சர் என சொன்னேன், நான் உங்கள் பக்தனே இல்லை, இதில் எப்படி கீச்சர் என்பதெல்லாம்?''

''நீ முழு நேர கீச்சர் ஆகிவிட்டாய்?, என்னோடு நீ பேசுவதே இல்லை''

''இங்கே பாருங்கள், என்னை தொல்லை செய்யாதீர்கள், வைகுண்டம் போக வேண்டியதுதானே''

''மானிடர்கள் தங்களில் பொய் உருவம் உருவாக்கிக் கொள்கிறார்கள், அதில் அந்த கீச்சர்கள் மிகவும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது நீ அறிந்ததுதானே''

''எனக்கு அதில் ஆர்வம் இல்லை, எவரோ என நினைத்துக் கொண்டு என்னிடம் வந்து பேசுகிறீர்கள்''

''பக்தா, யாம் உமது சித்து விளையாட்டு எல்லாம் அறிவோம்''

''என்னை நீங்க கலங்க படுத்த நினைத்து வந்து இருக்கிறீர்கள்''

''பக்தா, பொய்யாய் வாழ்வது பெரிய பாவம். நீ வேடம் தரித்து சென்றதை யாம் அறிவோம்''

''என்னை தொந்தரவு செய்யாதீர்கள், நான் கீச்சரும் அல்ல, கோச்சரும் அல்ல''

''பக்தா, இந்த கவிதை உன்னுடையது தானே''

''எந்த கவிதை''

''ஒன்றென கூடி இருக்கும் தமிழே
உலகம் நமதென ஒலிக்கும் தமிழே
நம் சிந்தையால் வளரும் தமிழ்
மகிழ்ந்தது நமது கூட்டம் கண்டு

எழுத்தில் நம்மை கண்டோம்
வருத்தமின்றி ரசித்து மகிழ்ந்தோம்
தமிழால் சாதித்தது நிறைய
சேர்ந்தோமே இன்று மீண்டும் அதை உரைக்க

ஊர் புகழ் உலகப் புகழ்
எல்லாம் தமிழ் தந்தது
எழுத்து கொண்ட பிம்பம்
எல்லாம் முன்னால் நின்றது
தமிழ் வளர்ப்போம், சிறப்போம்''

''சாமி, இது நான் எழுதலை, ஏன் இப்படி''

''பக்தா, இந்த கவிதை நீ எழுதியது, இதை நீ அங்கே பிறிதொருவரை வாசிக்க வைத்து ஓரிடத்தில் அமைதியாய் அமர்ந்து இருந்தாய், எனக்கு தெரியாதா?''

''உங்கள் கற்பனைக்கு அளவில்லை, நான் எழுதலை, நான் போகவும் இல்லை''

''எத்தனை சிறப்பாக இருந்தது தெரியுமா, ஆடலும், பாடலுமாய் சந்தோசத்தில் திளைத்து இருந்தார்கள், நீயும் தான். நீ அவளைத் தேடித்தான் அங்கே சென்றதும் அறிவேன்''

''போதும் நிறுத்துங்கள், நான் செல்லவே இல்லை''

''நீ இருந்தாய், பெண்கள் பெயரில் எழுதும் கீச்சரில் நீயும் ஒருவன்''

''இல்லவே இல்லை, பழி வேண்டாம்''

''பக்தா, என்னிடம் பொய் சொன்னது போதும். அது நீதான்''

''பெண் வேடமிட்டு எழுதி நான் என்ன சாதிக்கபோகிறேன்''

''பிறரை ஏமாற்றும் நோக்கம் இருக்கிறதே''

''எனக்கு எழுதவே தெரியாது''

''பக்தா, மெச்சினேன் உமது வீர தீரத்தை, நீ அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தாய்''

சட்டென விழித்துப் பார்த்தேன், இருளாக தெரிந்தது. என்னவென எழுந்து எனது மாடி அறையின் சன்னல் திறந்து பார்த்தேன்.

எவரோ ஒருவர் சத்தமாக பேசிய ஊர்ப்புகழ் உலகப்புகழ் எல்லாம் தமிழ் தந்தது என எனது அறையின் உள்ளே பாய்ந்து சென்றது.

மதியம் உறங்காதேனு எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா என அம்மா சப்தம் போட்டுக்கொண்டே மாடிக்கு வந்து கொண்டு இருந்தார்.