Monday 19 May 2014

வானத்தைக் காணோம்

'அம்மா, வானத்தை காணோம்' என கத்தினேன்.

'பக்தா, என்ன வானத்தை காணோம் என கத்துகிறாய்'

'வானம் இல்லை, வாங்க காட்டுகிறேன்' என வெளியே ஓடினேன். கும்மிருட்டாக இருந்தது. சாமியார் என்னை தொடர்ந்து வந்தார்.

'என்ன பக்தா, வானம் அதோ தெரிகிறதே'

'இல்லை, ஒன்றுமே தெரியவில்லை. வானம் காணாமல் போய்விட்டது'

'பக்தா, என்ன உளறுகிறாய்?'

'வானம் நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஒளிக்கீற்று பல வண்ணங்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது பூமியில் நீல நிறத்திலும் செவ்வாயில் சிவப்பு நிறத்திலும் இந்த வானம் பகலில் தென்படும். ஒளியானது துகள்களில் மீது பட்டு இத்தகைய வண்ணம் ஏற்படுத்துகிறது'

'பக்தா, இந்த வானம் பிரபஞ்சத்தில் உள்ள மாயத்தோற்றத்தில் ஒன்று. நமது சூரிய குடும்பத்திற்கு மட்டுமல்ல சொந்தம் இது. மொத்த பிரபஞ்சத்திற்கும் உண்டான ஒருவித சொந்தம்'

'இல்லை இல்லை. நீங்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது குறித்து சொன்னீர்கள், எனவே வானம் ஏறினால் அதற்கு பின்னர் வைகுண்டம் தானே'

'பக்தா, அது வேறு இது வேறு'

'எது வேறு'

'வைகுண்டம் என்பது வேறு, வானம் வேறு'

'நட்சத்திரங்கள் வானத்தைத் தாண்டி தானே இருக்கிறது, வானம் பூமிக்கே சொந்தம்'

'பக்தா, வானம் என்பது என்னவெனில் நமக்கு மேல் உள்ளது எல்லாம் வானம். இப்போது பூமிக்கும் நமக்கும் மேல் உள்ள ஒரு பொருளுக்குமான தொடர்பே வானம். தொடுவானம் கேள்விபட்டது உண்டா, அது போலவே ஒரு தொலைவுக்கு உண்டான எல்கை'

'வானத்தைக்  காணோம்'

'பக்தா, பூமிக்குள் நாம் இல்லை. பூமிக்கு மேலே இருக்கிறோம். எப்படி சொல்வது. பறவை எடுத்துக் கொள், பறவை மீது நீ அமர, பறவை பறக்க மேலே வானம், கீழே பூமி. சரியா?'

'என்னை சுமக்கும் அளவுக்கு பறவை உண்டா?'

'இப்ப எதற்கு அந்த கேள்வி, இதுவே நீ பறவையின் வயிற்றில் போனால், உனக்கு பறவையின் உடலே எல்லாம். அது போலவே பூமி மீது நீ, அதன் மேல் இருப்பது வானம். இப்போது நீ பிரயாணம் செய்து வேறொரு நட்சத்திரம் செல்'

'நான் எதற்கு செல்ல வேண்டும்'

'அங்கே வானம் இருக்கும்'

'நமது வானம் அங்கே இருக்குமோ?''

'அதற்கே உண்டான ஒரு வானம், அங்கே எல்லாம் வியாபித்து இருக்கும்'

'எனக்கு புரியும்படி சொல்லுங்கள்'

'இது ஒரு மாபெரும் வெளி. அதாவது ஒரு பாய் எடுத்து விரித்துக் கொள்வோம்'

'சாமி, கில்மா கதை எதுவும் சொல்ல போறீங்களா?

'பக்தா, எனது சாபத்திற்கு நீ ஆளாக நேரிடும். என்னிடம் நீ முறையோடு பேச வில்லையெனில் நான் எப்படி நடந்து கொள்வேன் என உனக்குத் தெரியாது'

'இப்ப என்ன கேட்டுட்டேன்'

'வானத்தைக்  காணோம் என்ற உனக்கு வழி சொல்ல வந்தோம்'

'சொல்லுங்க சாமி'

'பாய் ஒரு பிரபஞ்சம். அந்த பாயில் வடகம் போடுவோம்'

'வட்டமாகவா, நீளமாகவா சாமி'

'இதை எல்லாம் எவரும் ரசிக்க மாட்டர்கள், நீ வாய் மூடி இருக்கவும்'

'ஒவ்வொரு வடகமும் ஒரு சூரிய குடும்பம். அந்த அந்த  வடகத்திற்கு ஒரு வானம் உண்டு. எல்லா வடகங்களுக்கும் பாய் ஒரு வானம்'

'பாய் ஒரு பிரபஞ்சம்'

'இல்லை பாய் ஒரு வானம்' 

'சாமி, அப்படியெனில் வானத்தைக் காணோம்'

'இல்லை, வானம் என்பது பொதுவான ஒன்றாகவே இந்த அண்ட வெளியில் சொல்லப்பட்டு வருகிறது. எனவே பூமிக்கு வானம் உண்டு, வானமே அந்த பிரபஞ்சத்தில் உண்டு'

'அந்த வானத்தைக் காணோம் சாமி'

எந்திருடா, வேலைக்கு போகாம இன்னும் தூங்குற

வெளியில் வந்து பார்த்தேன். வானம் மஞ்சள் கலந்து எழுந்து  இருந்தது. சாமியார் இப்படி என்னை தொல்லை பண்ணுவார் என நினைக்கவே இல்லை.

வானம் என்றால் என்ன?

'A sky is the region of atmosphere or outer space seen from the earth' 

ஒருவேளை செவ்வாயில் நாம் இருந்தால் 'A sky is the region of atmosphere or outer space seen from the mars' 



No comments: