Showing posts with label நாவல் - 2. Show all posts
Showing posts with label நாவல் - 2. Show all posts

Friday 1 August 2014

நுனிப்புல் பாகம் 2 முன்னுரை

முன்னுரை

ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்த காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டுப் போகும். ஒரு கதை என்பது நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும் போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையை கதையாக எண்ணக்கூடிய மன நிலையில் நாம் இருக்க இயல்வதில்லை. அது எங்கோ நடந்த, என்றோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மை பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் அந்த கதாப்பாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன.

வாசன் எனும் கதாபாத்திரம் மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் தோன்றியதுதான் என்றாலும் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பு எங்கோ எப்படியோ தோன்றி இருக்க கூடும். இந்த நாவலை எழுதும் போதெல்லாம் எனது கிராமத்து தெருக்கள் என்னுள் நடமாடிக் கொண்டு இருந்தது என்பதை மறுக்க இயலாது. சில அறிவியல் விசயங்கள் எல்லாம் கதையில் எழுதும்போது அவ்வப்போது படித்து அதனால் எழுந்த பாதிப்புதான் இந்த நாவலில் வைக்கப்பட்டு இருக்கிறது, எனக்கென்று என்ன சிந்தனை இருந்துவிடப் போகிறது.

தமிழ்நாட்டில் வாழ்ந்து அந்த தமிழகத்தை கடந்த பதினைந்து ஆண்டுகளாக  பிரிந்த பின்னர் அங்கே உள்ள வாழ்வுமுறை எல்லாம் எனக்கு சற்று அந்நியமாகிப் போனது என்னவோ உண்மை. எனவே கதையில் நான் வாழ்ந்த அந்த இருபத்தி நான்கு வருடங்களின் பாதிப்பு மட்டுமே இருக்க இயலும். இன்றைய சமூகம் எத்தனை மாற்றம் அடைந்து இருக்கிறது என தமிழக்கத்தில் சில வருடங்களுக்கு ஒருமுறை என விடுமுறை காலத்தை கழித்து போகும் எனக்குப் புரியப் போவதில்லை.

கல்லூரி சூழல், மாணவ மாணவியர் பழக்கம் என எல்லாமே இப்போது புதிதாகவே இருக்கும் நிலையில் மாதவி, பாரதி, ரோகினி எல்லாம் சற்று அந்நியப்பட்டு போவார்கள். எத்தனை கதைமாந்தர்கள், அவர்களுக்கென ஒரு குணாதிசயம் உருவாக்கி அவர்களை நடமாட விட்டு அவர்களோடு வாழ்ந்து முடித்த காலங்கள் இப்போது எனக்கு வெகு தொலைவில் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த கதையின் தொடர்ச்சி குறித்து நான் சிந்திக்கவே இல்லை. என்ன எழுத வேண்டும் என்பதை எழுதும்போதே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றே அடுத்த பாகம் வரை நிறுத்தி வைத்து விட்டேன். இந்த நாவல் எழுதும்போது இருந்த மனநிலை வேறு, இப்போதைய மனநிலை வேறு, ஆனால் இறைவன் இறைவனாகவே இருக்கிறான்.

முதல் நாவல் படித்து விட்டு இப்படியா ஒரு நாவலை வெளியிடுவது என எழுந்த குறையைப் போக்க இந்த நாவலின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் திருத்தித் தந்த திரு. என்.சொக்கன் அவர்களுக்கு நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

‘உன்னை என்னுள் உருவாக்கி
என்னை நீதான் உருவாக்கியதாக
இன்னும் நம்பிக் கொண்டு இருக்கும்
மனதுக்கு உண்மை எதுவென
உரைத்து நிற்பாய்

வெ.இராதாகிருஷ்ணன்

இலண்டன் 

Wednesday 11 June 2014

நுனிப்புல் - அணிந்துரை கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)


நுனிப்புல்” = இஃதொரு இலக்கிய வசவு;
அதுவே இப்படைப்பின் பெயரும் கூட!

இப்படைப்பு மட்டுமல்ல..
உலகின் எல்லாப் படைப்பும் நுனிப்புல் தானோ?
இந்த நாவலின் அடிநாதம் முழுக்க ஊடாடுகிறது, இந்தச் சிந்தனை!

நுனிப்புல் மேயாதே-ன்னு சொல்லுறோம்;
நுனிப்புல் என்று சொன்னாலே.. “அரைகுறை, மேலோட்டமான, ஆழமற்ற, ஆய்வுப் போக்கு இல்லாத” என்ற ஓவியத்தையே, நம் மனம் வரைகிறது.
ஆனா, நுனிப் புல்லின் மேன்மையை நாம் அறிவோமா?

நுனிப்புல்லில் தான் பனித்துளி தூங்குகிறது!
அந்தத் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!

பனித் துளி போல் நம் வாழ்க்கை;
நம் வாழ்க்கையை வாங்கும் ஏதோவொரு இயற்கைச் சக்தி!

நாம் நுனிப்புல்லில் தான் பனிநீராய்த் தூங்கிக் கொண்டு இருக்கிறோம்;
நாம் மட்டுமா? உலகின் படைப்பினங்கள் அனைத்தும்!
இந்த நுனிப்புல் பனித் தூக்கம் = ஞாலத்தின் இரகசியம்!
இனி யாரையேனும், “நுனிப்புல்லன்” என்று சொல்வீர்களா?:)

நுனிப்புல் நாவலின் ஆசிரியர், திரு. இராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி;
அவரும் ஒரு நுனிப்புல்லர் தான்-னு சொன்னால், என்னிடம் அவர் சினந்து கொள்ள மாட்டார்-ன்னு நினைக்கிறேன்:)
நுனிப்புல்லில் பனித்துளியாய், ஞாலத்தை நாவல் வழியே நோக்குகிறார்..

திரு. இராதாகிருஷ்ணன் பற்றி நான் அதிகம் அறியேன்; அவர் ட்விட்டர் வாயிலாக ஓர் அறிமுகம் மட்டுமே!
அதனால் அவர் தனிப்பட்ட நம்பிக்கைகள், சாற்றமுறைகள் பற்றிய முன்முடிவு ஏதுமின்றி இந்த நாவலை வாசித்தேன்; கலக்கியுள்ளார் மனிதர்!

இறைமை-உயிர்மை என்பதை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் மிகவும் குறைவு;
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவற்றுள் சிகரம்!
நுனிப்புல்லின் கதைக்களமும் அத்தகையதே; ஆனால் அத்துணை அடர்த்தி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றாய், பலவாய்…

பெரியவர் விநாயகம், வாசன், பாரதி,
மாதவி, கோதை, பெருமாள், திருமால்..
என்று பல பாத்திரங்கள், நம் அன்றாட வாழ்வில் வலம் வருபவர்கள் தான்!
சிலருக்கு அந்த வலம் குறைவு; சிலருக்கு வலம் கூடுதல்; அவ்வளவே!

கதையினூடே கவிதை சொல்வது என்பது மெய்யியல்/ மீபொருண்மை (Metaphysics) நாவல்களுக்கு, “அல்வா” சாப்பிடுவது போல;
இராதாகிருஷ்ணனும் அதையே செய்கிறார்;

“சுருக்கம்” பற்றிய ஆரம்பக் கவிதையே அசத்தல்!
ஏழு சொற்களில் எழுதப்பட்ட திருக்குறளில்
விவரிக்க முடியாச் சுருக்கம்,
பதினைந்து பிள்ளை கொண்ட குடும்பம், ஒரு பிள்ளையோடு ஒடுங்கியது
நிலத்தின் சுருக்கம்,
மனிதனின் மனம் = எதனின் சுருக்கம்?

தரவு கொண்டு விளக்க முடியாததை, உறவு கொண்டு விளக்கி விடும் கவிதை!
சுந்தரன்-பாரதி காதலும், அப்படியொரு பரிமாணமே, இந்த மெய்யியல் நாவலில்!

நாவலின் ஒரு சிறிய குறை: உரையாடல்கள்!
பலரும் உரையாடிக் கொள்வதே இல்லை! ஆசிரியரே, கதை மாந்தர்கள் வழியாகப் பேசி விடுகிறார்..
அது தான் உண்மை எனினும், அப்படி வெளியில் தெரியக் கூடாது என்பதே ஒரு கதைசொல்லியின் வெற்றி!

கதையின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூடு பிடிக்கிறது!
அதில் உரையாடல்களும் உலா வருகின்றன! இயல்பு நிலை உரையாடல்கள்!

கருவாகி நிக்குற பொண்ணு, வயித்துக்கு, மேல கைய வச்சாப் பொண்ணு, கீழே கைய வச்சா ஆணு”
-போன்ற பாட்டிக் கதைக் குறிப்புக்கள் அறியாமையழகு:)

“Cloning-இல் எந்த Nucleus-ஐ வைக்கிறோமோ, அதே போல் தான் பிறக்கும்!
பெருமாளின் Nucleus பெருமாளாகவே பிறக்கும்”
-போன்றவை நாவலின் ஊடாடு உண்மைகள்!

ஆசிரியர் இராதாகிருஷ்ணன், தன் நொறுங்கிய/ நெருங்கிய தேடல்களையெல்லாம் ஆங்காங்கே தூவுகிறார்;
ஆனால் புல் தூவாமலேயே வளர வல்லது! அதுவே புல்லின் மகிமை!

குளத்தூர் கிராமத்தில் வளரும் இந்த “நுனிப்புல்லை”, நானுமொரு பனிப்புல்லாய் வாழ்த்துகிறேன்!
சிரமம் பாராது, படித்துத் தான் பாருங்களேன்! நுனிப்புல் அழகை உணர்வீர்கள்…

- முருகு பொலிக! அன்புடன்,
Kannabiran Ravi Shankar (KRS)

New York
Jun 9th, 2014


----------------

மிக்க நன்றி தமிழ் பெருந்தகையே 

Wednesday 26 February 2014

நுனிப்புல் மதிப்புரை - எஸ். ஐஸ்வர்யா

மதிப்புரை 

நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் கிடைத்துவிட்டால் தேடல்கள் முடங்கிவிடும். பதில் கிடைக்கப் போவதும் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது தெரிய வேண்டுமெனில் நாம் ஓர் எல்லையை கடந்து தேடுதலை விரிவுப்படுத்த வேண்டும். இந்த நாவலும் இதை நோக்கிய செல்கிறது, சென்று நம்மை தேடுதல் என்னும் மலை அடிவாரத்தில் நிறுத்தி பின் மலை உச்சியில் இருக்கும் உண்மையினை அறிய யாத்திரையை தொடர்கிறது. அப்படிப்பட்ட ஓர் களத்தில் தான் ஆசிரியர் கதாபாத்திரங்களை பயணிக்க செய்துள்ளார். கதாபாத்திரங்கள், நம்முள் பலமுறை தோன்றிய கேள்விகளின் எதிரொலி எழுந்து நின்று விடை தேட முயற்சிக்கின்றனவோ என்பது போல் தோன்றியது.

இயற்கைத் தாயின் அரவணைப்பில் செழித்துக் கொண்டிருக்கும் கிராமத்தில் இருந்து கதை தொடங்கிகிறது. சாதாரண விவசாயக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை முறையைத் தொட்டு, சமூக சிந்தனையை தெளித்துஅறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பி பின், கடவுளிடம் வந்து நின்று உள்ளக்கதவை தட்டிவிடுகிறது.

அறிவியல் சார்ந்த பல நுண் கருத்துக்களை விளக்கி கூற முயற்சித்தது வரவேற்கதக்கது. உயிர் ஆக்கம் செயல்பாடு குறித்தும், மரபியல் ரீதியான ஆராய்ச்சிகள் குறித்தும் கதாபாத்திரங்கள் மூலமாக பேசப்பட்டது நன்று. இன்னும் பேசப்பட்ட அறிவியல் கூற்று சிந்திக்க வைப்பவையாக இருந்தது 

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் நோக்கத்தை முன்நிறுத்தியே அனைத்தும் செல்வதாக காட்டினாலும் பின் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிற்கும் தொடர்புடையவையே என்ற உலகின் முக்கிய நியதியை முன்கொண்டு வந்து மெய்யூட்டிவிடுகிறது .

பெரியவர், பாரதி,மாதவி, திருமால், பெருமாள், பூங்கோதை போன்ற பாத்திரங்கள் நம்மை கவர்ந்தது மட்டுமின்றி அவர்களின் சுமைகளை நாம் சிறிது சுமந்தது போல் எண்ணத் தோணிற்று.

பெரியவர்களை போற்றுதல், அனைவரிடமும் அனுசரித்தல் போன்ற தனிமனித குணத்திலும்குழந்தைகளுக்கு பாடங்களையும் நற்கருத்துகளையும் போதித்தல், ஊர் பொறுப்பை ஏற்று மக்களை வழிநடத்தல்தன் நலமின்றி பிறர் நலத்திற்க்காக உழைத்தல் போன்ற சமூக அக்கறை கொண்டவனாகவும், மனஎழுச்சியின் போது தாயிடம் குமுறுவது, அறிந்தும் அறியாமலும் தன்னுள் உறங்கிகொண்டிருக்கும் கேள்விகள் எழும் தருவாயில் விடை தேடும் மனப்போராட்டங்களின் போது என அத்தனை இடங்களிலும் தன் பரந்த மனதைக்கொண்ட இக்கதாநாயகன் வாசன் நம் மனதில் வாசம் செய்துவிடுகிறான்.

ஆனால் இந்த யாத்திரை முழுவதும் ஆசிரியர் நம்மை இக்கதையின் இன்னொரு நாயகனை உடன் வைத்து கொண்டே அவனை நோக்கி  பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் அவன் தன் பாத்திரத்தை வேண்டியளவு மட்டுமே வெளிப்படுத்துவது போன்றே கதை நகர்கிறது. அந்த நாயகனே நாராயணன் .

நுனிப்புல் மேய்தல் ஒவ்வொருவரையும் அடி முதல் முடி வரை நோக்கி உள்பொதிந்திருக்கும் கருத்தை திறந்து எடுக்க மனையின் வாசலில் நாம் காத்திருக்கும் நிலையை ஏற்ப்படுத்துகிறது!.

நன்றி


எஸ். ஐஸ்வர்யா

மிக்க நன்றி ஐஸ்வர்யா .

Tuesday 14 January 2014

நுனிப்புல் வாழ்த்துரை - என். சொக்கன்

வாழ்த்துரை

நாவல்களில் பலவகை. அறிவியல், ஆராய்ச்சிக் கருத்துகளை அதனுள் தோய்த்துத் தருவது சமீபத்தில் புகழ் பெற்று வரும் தனி வகை.

ஆகவே, நண்பர் ராதாகிருஷ்ணன் அதைப் பின்பற்றி ஒரு நாவல் எழுதிவிட்டார் என்று எண்ணிவிடவேண்டாம். அவர் இந்நாவலையும் அதன் முந்தின பாகமாக அமையும் பிறிதொரு நாவலையும் எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்விதத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதே உண்மை.

இவ்வகை நாவல்களில் ஒரு சின்ன பிரச்னை, இவற்றில் கருத்து அதிகரித்துவிட்டால் கதைச் சுவை தீர்ந்துவிடும், நாவல் நொண்டியடிக்கும், சரி என்று கதை சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டால் கருத்து நீர்த்துவிடும், வாசகனுக்கு எதுவும் சென்று சேராது.

இவ்விரு வட்டங்களிலும் சிக்கிக்கொள்ளாமல், மிக நேர்த்தியாகத் தன் கதையைக் கொண்டுசென்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அவரே மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் என்பதால், இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும் எல்லாருக்கும் புரியும்படியும் உள்ளன. குறிப்பாக, அந்தத் துறைப் பின்னணியே இல்லாத வாசகர்களுக்கும்!

கதை பாணி என்று பார்க்கும்போது, ராதாகிருஷ்ணனுக்குக் கல்கி ஆதர்ஷம் என்று ஊகிக்கிறேன். அவரது நாவல்களைப்போலவே பாத்திரங்கள் அறிமுகம், கொக்கிகள், தகவல் பரிமாற்றங்கள், முக்கியமாக, எல்லாரும் நல்லவர்கள். மனத்துக்கு மிகவும் ஆசுவாசமளிக்கும் விஷயம் இது!

கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதை. ஆகவே, பல பழக்க வழக்கங்களை நுட்பமாகக் காட்டுகிறார். குறிப்பாக, விருந்தினர்களை உபசரிக்கும் விதம், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பு, மன உளவியல் போன்றவை!

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல தளங்களில் விரிந்து செல்லும் ராதாகிருஷ்ணனின் எழுத்துகள் எண்ணற்ற வாசகர்கள் மனத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். எல்லாவிதமான எழுத்துகளிலும் அவர் கால் பதிக்கக் கோருகிறேன். நன்றி!


என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

சொக்கன் அவர்களுக்கு மிக்க நன்றி.