Friday 1 August 2014

நுனிப்புல் பாகம் 2 முன்னுரை

முன்னுரை

ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்த காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டுப் போகும். ஒரு கதை என்பது நடந்த நிகழ்வாக மனித மனம் நினைக்கத் தொடங்கும் போது பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. கதையை கதையாக எண்ணக்கூடிய மன நிலையில் நாம் இருக்க இயல்வதில்லை. அது எங்கோ நடந்த, என்றோ நடந்த ஒன்று என்கிற பிரமை நம்மை பிடித்து ஆட்டுகிறது. அதனால்தான் அந்த கதாப்பாத்திரங்கள் பெரும் பாதிப்பை நம்மில் ஏற்படுத்திச் செல்கின்றன.

வாசன் எனும் கதாபாத்திரம் மட்டுமல்ல எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையில் தோன்றியதுதான் என்றாலும் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பு எங்கோ எப்படியோ தோன்றி இருக்க கூடும். இந்த நாவலை எழுதும் போதெல்லாம் எனது கிராமத்து தெருக்கள் என்னுள் நடமாடிக் கொண்டு இருந்தது என்பதை மறுக்க இயலாது. சில அறிவியல் விசயங்கள் எல்லாம் கதையில் எழுதும்போது அவ்வப்போது படித்து அதனால் எழுந்த பாதிப்புதான் இந்த நாவலில் வைக்கப்பட்டு இருக்கிறது, எனக்கென்று என்ன சிந்தனை இருந்துவிடப் போகிறது.

தமிழ்நாட்டில் வாழ்ந்து அந்த தமிழகத்தை கடந்த பதினைந்து ஆண்டுகளாக  பிரிந்த பின்னர் அங்கே உள்ள வாழ்வுமுறை எல்லாம் எனக்கு சற்று அந்நியமாகிப் போனது என்னவோ உண்மை. எனவே கதையில் நான் வாழ்ந்த அந்த இருபத்தி நான்கு வருடங்களின் பாதிப்பு மட்டுமே இருக்க இயலும். இன்றைய சமூகம் எத்தனை மாற்றம் அடைந்து இருக்கிறது என தமிழக்கத்தில் சில வருடங்களுக்கு ஒருமுறை என விடுமுறை காலத்தை கழித்து போகும் எனக்குப் புரியப் போவதில்லை.

கல்லூரி சூழல், மாணவ மாணவியர் பழக்கம் என எல்லாமே இப்போது புதிதாகவே இருக்கும் நிலையில் மாதவி, பாரதி, ரோகினி எல்லாம் சற்று அந்நியப்பட்டு போவார்கள். எத்தனை கதைமாந்தர்கள், அவர்களுக்கென ஒரு குணாதிசயம் உருவாக்கி அவர்களை நடமாட விட்டு அவர்களோடு வாழ்ந்து முடித்த காலங்கள் இப்போது எனக்கு வெகு தொலைவில் இருக்கின்றன. ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்த கதையின் தொடர்ச்சி குறித்து நான் சிந்திக்கவே இல்லை. என்ன எழுத வேண்டும் என்பதை எழுதும்போதே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றே அடுத்த பாகம் வரை நிறுத்தி வைத்து விட்டேன். இந்த நாவல் எழுதும்போது இருந்த மனநிலை வேறு, இப்போதைய மனநிலை வேறு, ஆனால் இறைவன் இறைவனாகவே இருக்கிறான்.

முதல் நாவல் படித்து விட்டு இப்படியா ஒரு நாவலை வெளியிடுவது என எழுந்த குறையைப் போக்க இந்த நாவலின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் திருத்தித் தந்த திரு. என்.சொக்கன் அவர்களுக்கு நன்றித் தெரிவித்து கொள்கிறேன்.

‘உன்னை என்னுள் உருவாக்கி
என்னை நீதான் உருவாக்கியதாக
இன்னும் நம்பிக் கொண்டு இருக்கும்
மனதுக்கு உண்மை எதுவென
உரைத்து நிற்பாய்

வெ.இராதாகிருஷ்ணன்

இலண்டன் 

No comments: