Saturday, 28 June 2014

அகவாழ்வு கொண்டனன்

புறவாழ்வு என்றும் அகவாழ்வு என்றும் பிரித்தா வைக்கப்பட்டு இருக்கிறது? நான் சில நேரங்களில் மட்டுமல்ல பல நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்றே எனக்கு தெரியாது. சட்டென வந்து விழும் சிந்தனைகளை நான் அலசுவதே இல்லை.

 அந்த அந்த நேரத்தில் ஏதோ ஒன்று தோன்றும் அதை அப்படியே எழுதி வைத்துவிடுவேன். பின்னர் எவரேனும் கேட்டால் மட்டுமே அது குறித்து விளக்கம் தர சிந்திப்பேன். எழுதிய எனக்கு தெரியாத பல அர்த்தங்களை பலர் வந்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆச்சரியமாக இருக்கும்.

அப்படித்தான் இப்படி எழுதினேன்.

பரபரப்பான உலகத்தில் ஓடித் திரியும் மனிதர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி விரும்புகிறேன். உங்கள் ஆழ்மனதின் ஓசையை கேட்க சற்று நேரம் ஒதுக்குங்கள். 

மேற்சொன்ன விசயத்தில் ஆழ்மனதின் ஓசை என நான் எழுதியது subconscious mind எனும் அர்த்தம் தான். அதாவது தற்போது நாம் அனுபவித்துக் கொண்டு இல்லாத ஒன்றை கூட தனது அனுபவத்தில் இந்த subconscious mind சேகரித்து வைத்து இருக்கும் எனும் நம்பிக்கையே அது. அதாவது இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியது.

நிகழ்காலம் பொற்காலம் எனில் 
கடந்தகாலம் என்ன 
கற்காலமா? 

எந்த ஒரு காலமும் நமக்கு ஏதோ ஒன்றை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. நிகழ்காலம் நிகழ்காலம் என எதிர்காலத்தினை நோக்கி நாம் பயணிப்பது நமக்கு புரியாமல் போய் விடுகிறது. நமது தொலைக்கப்பட்ட தேடல்கள் எல்லாம் இந்த ஆழ்மனதில் அடங்கி இருக்கும். ஆழ்மனதின் ஓசை குறித்து கேட்டவருக்கு அடுத்த வரிகள் இப்படி வந்து விழுகிறது.

நம் ஆழ்மனம் நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும், புற வாழ்வில் ஈடுபாடு கொண்ட நாம் அதை நிராகரித்துக் கொண்டே இருப்போம் அக வாழ்வு மறந்து. 

இங்குதான் எனக்கே தெரியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் , அகவாழ்வு மறந்து. அகவாழ்வு என்றால் என்ன எனும் கேள்வி எழுந்தபோது திருதிருவென விழித்தது எனது மனம்.

புற வாழ்வு குறித்த சிந்தனை அதிகம் இருக்கும்போது அகவாழ்வு குறித்து என்ன தெரியும். அக வாழ்வு என்பது இரட்டை வாழ்வா என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை.

அகவாழ்வு என்பது புறவாழ்வு குறித்த சிந்தனை அற்ற ஒன்று 

இவ்வளவுதான் என்னால் யோசிக்க முடிந்தது. புறவாழ்வுதனில் நாம் காணாத ஒன்றை எப்படி அகவாழ்வு தனில் காண இயலும். நிறைய பேர் அக வாழ்வு என்றால் ஏதோ ஆன்மிக சம்பந்தம் உடையது என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

புறத்தே நடக்கும் விசயங்களின் பாதிப்பு அகத்தே நிகழ்ந்தே தீரும். அகத்தே நிகழும் பாதிப்பு புறத்தே பல சமயங்களில் வெளித் தெரிவதில்லை. 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஓரளவுக்குத்தான் சில விசயங்களை மறைத்து வாழ இயலும். களையான முகம், பொலிவான முகம் எல்லாம் அகத்தில் ஏற்படும் சிந்தனைகளின் நீட்சி.

அகவாழ்வு என்றால் என்ன? எங்கேனும் எவரேனும் எழுதி இருப்பார்கள் என திருடத் தொடங்கிய மனதுக்கு தொல்காப்பியர் வந்து சிக்கினார்.

அகவாழ்வு என்பது காதலில் திளைத்து இருப்பது. 
அகவாழ்வு அறம் நிரம்பிய இல்லறவாழ்வு குறித்த ஒன்று. 

இது நான் சொல்ல வந்த பதில் அல்ல. அப்போதைக்கு அந்த கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நான் சொன்னது. அவ்வளவே. அகத்திணை புறத்திணை என்றே அன்று பிரித்து வைத்து இருக்கிறார்கள். ஏழு வகை அகத்திணை என்றாலும் ஐந்து வகை அகத்திணை மட்டுமே பாடுபொருளில் வைக்கப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தார்கள். இவை அனைத்துமே கற்பு தனை பறைசாற்றும் திணை என்றே சொன்னார்கள்.

காதலித்து இருப்பது தலைவன் தலைவிக்கு மட்டுமே உண்டான ஒரு பண்பு. அப்படிப்பட்ட இருவருக்கும் உண்டான பண்புகளை அவர்கள் அகத்தில் வைத்து போற்றுவார்கள். அது போலவே இல்லற வாழ்வும். அந்த இல்லற வாழ்வில் வேற்று மனிதர்க்கு இடம் இல்லை.

தமிழில் ஒரு பெரிய கலாச்சாரம் உண்டு.

என் உடம்பை நீ தீண்டினாலும் என் மனசில அவருதான் இருக்கார். அதனால நான் கற்புக்கரசி என சொல்வார்கள். மனதில் நீ வேறொருவரை தீண்டினாலே கற்பை இழந்து விடுவாய் என எச்சரிக்கை செய்வார்கள். இதற்கு பரத்தையர்கள் கூட பத்தினிகள் என பாடும் கூட்டம் இருந்தது உண்டு. உடம்பை மட்டுமே தருகிறேன், மனசை இழப்பதில்லை. தொல்காப்பியர் சொன்ன அகவாழ்வுக்கு இது சரி. கற்பு போற்றுதல் என்பன எல்லாம் சரி. ஆனால் நான் குறிப்பிட்ட அகவாழ்வு என்பது அது அல்ல. நான் குறித்த அகவாழ்வு உள்ளுணர்வு கூட அல்ல. நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வுகளும், மனிதர்களும் இந்த அகவாழ்வில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பேச முற்படுகிறார்கள். நாம் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தற்போதைய புற வாழ்வில் ஈடுபாடு கொண்டு மறந்து செயல்படுகிறோம்.

இந்த ஆழ்மனதின் ஓசையை நேரம் இருக்கும்போது சற்று கேட்டுப்பாருங்கள். அங்கே உங்களுடன் பேச முற்பட்டு பேச இயலாமல் போன ஏதோ ஒரு ஜீவன் துடிதுடித்துக் கொண்டு இருக்கலாம்.

புறவாழ்வின் பாதிப்பே அகவாழ்வு. 
அகவாழ்வின் அர்த்தம் தனை 
புறவாழ்வு புரிந்து கொள்ள விடுவதில்லை. Post a Comment

No comments: