Wednesday 11 June 2014

நுனிப்புல் - அணிந்துரை கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)


நுனிப்புல்” = இஃதொரு இலக்கிய வசவு;
அதுவே இப்படைப்பின் பெயரும் கூட!

இப்படைப்பு மட்டுமல்ல..
உலகின் எல்லாப் படைப்பும் நுனிப்புல் தானோ?
இந்த நாவலின் அடிநாதம் முழுக்க ஊடாடுகிறது, இந்தச் சிந்தனை!

நுனிப்புல் மேயாதே-ன்னு சொல்லுறோம்;
நுனிப்புல் என்று சொன்னாலே.. “அரைகுறை, மேலோட்டமான, ஆழமற்ற, ஆய்வுப் போக்கு இல்லாத” என்ற ஓவியத்தையே, நம் மனம் வரைகிறது.
ஆனா, நுனிப் புல்லின் மேன்மையை நாம் அறிவோமா?

நுனிப்புல்லில் தான் பனித்துளி தூங்குகிறது!
அந்தத் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!

பனித் துளி போல் நம் வாழ்க்கை;
நம் வாழ்க்கையை வாங்கும் ஏதோவொரு இயற்கைச் சக்தி!

நாம் நுனிப்புல்லில் தான் பனிநீராய்த் தூங்கிக் கொண்டு இருக்கிறோம்;
நாம் மட்டுமா? உலகின் படைப்பினங்கள் அனைத்தும்!
இந்த நுனிப்புல் பனித் தூக்கம் = ஞாலத்தின் இரகசியம்!
இனி யாரையேனும், “நுனிப்புல்லன்” என்று சொல்வீர்களா?:)

நுனிப்புல் நாவலின் ஆசிரியர், திரு. இராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி;
அவரும் ஒரு நுனிப்புல்லர் தான்-னு சொன்னால், என்னிடம் அவர் சினந்து கொள்ள மாட்டார்-ன்னு நினைக்கிறேன்:)
நுனிப்புல்லில் பனித்துளியாய், ஞாலத்தை நாவல் வழியே நோக்குகிறார்..

திரு. இராதாகிருஷ்ணன் பற்றி நான் அதிகம் அறியேன்; அவர் ட்விட்டர் வாயிலாக ஓர் அறிமுகம் மட்டுமே!
அதனால் அவர் தனிப்பட்ட நம்பிக்கைகள், சாற்றமுறைகள் பற்றிய முன்முடிவு ஏதுமின்றி இந்த நாவலை வாசித்தேன்; கலக்கியுள்ளார் மனிதர்!

இறைமை-உயிர்மை என்பதை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் மிகவும் குறைவு;
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவற்றுள் சிகரம்!
நுனிப்புல்லின் கதைக்களமும் அத்தகையதே; ஆனால் அத்துணை அடர்த்தி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றாய், பலவாய்…

பெரியவர் விநாயகம், வாசன், பாரதி,
மாதவி, கோதை, பெருமாள், திருமால்..
என்று பல பாத்திரங்கள், நம் அன்றாட வாழ்வில் வலம் வருபவர்கள் தான்!
சிலருக்கு அந்த வலம் குறைவு; சிலருக்கு வலம் கூடுதல்; அவ்வளவே!

கதையினூடே கவிதை சொல்வது என்பது மெய்யியல்/ மீபொருண்மை (Metaphysics) நாவல்களுக்கு, “அல்வா” சாப்பிடுவது போல;
இராதாகிருஷ்ணனும் அதையே செய்கிறார்;

“சுருக்கம்” பற்றிய ஆரம்பக் கவிதையே அசத்தல்!
ஏழு சொற்களில் எழுதப்பட்ட திருக்குறளில்
விவரிக்க முடியாச் சுருக்கம்,
பதினைந்து பிள்ளை கொண்ட குடும்பம், ஒரு பிள்ளையோடு ஒடுங்கியது
நிலத்தின் சுருக்கம்,
மனிதனின் மனம் = எதனின் சுருக்கம்?

தரவு கொண்டு விளக்க முடியாததை, உறவு கொண்டு விளக்கி விடும் கவிதை!
சுந்தரன்-பாரதி காதலும், அப்படியொரு பரிமாணமே, இந்த மெய்யியல் நாவலில்!

நாவலின் ஒரு சிறிய குறை: உரையாடல்கள்!
பலரும் உரையாடிக் கொள்வதே இல்லை! ஆசிரியரே, கதை மாந்தர்கள் வழியாகப் பேசி விடுகிறார்..
அது தான் உண்மை எனினும், அப்படி வெளியில் தெரியக் கூடாது என்பதே ஒரு கதைசொல்லியின் வெற்றி!

கதையின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூடு பிடிக்கிறது!
அதில் உரையாடல்களும் உலா வருகின்றன! இயல்பு நிலை உரையாடல்கள்!

கருவாகி நிக்குற பொண்ணு, வயித்துக்கு, மேல கைய வச்சாப் பொண்ணு, கீழே கைய வச்சா ஆணு”
-போன்ற பாட்டிக் கதைக் குறிப்புக்கள் அறியாமையழகு:)

“Cloning-இல் எந்த Nucleus-ஐ வைக்கிறோமோ, அதே போல் தான் பிறக்கும்!
பெருமாளின் Nucleus பெருமாளாகவே பிறக்கும்”
-போன்றவை நாவலின் ஊடாடு உண்மைகள்!

ஆசிரியர் இராதாகிருஷ்ணன், தன் நொறுங்கிய/ நெருங்கிய தேடல்களையெல்லாம் ஆங்காங்கே தூவுகிறார்;
ஆனால் புல் தூவாமலேயே வளர வல்லது! அதுவே புல்லின் மகிமை!

குளத்தூர் கிராமத்தில் வளரும் இந்த “நுனிப்புல்லை”, நானுமொரு பனிப்புல்லாய் வாழ்த்துகிறேன்!
சிரமம் பாராது, படித்துத் தான் பாருங்களேன்! நுனிப்புல் அழகை உணர்வீர்கள்…

- முருகு பொலிக! அன்புடன்,
Kannabiran Ravi Shankar (KRS)

New York
Jun 9th, 2014


----------------

மிக்க நன்றி தமிழ் பெருந்தகையே 

No comments: