Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday 7 October 2015

நமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்

முதல் பக்கத்தைப் பார்த்ததும் பளிச்சென மனதில் ஒட்டிக்கொண்டு ஒருவித சந்தோசம் தந்துவிடுகிறது நமது திண்ணை. பொதுவாக குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி விளையாடுவார்கள். சுதந்திரமான வீட்டில் குழந்தைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட கோடுகள் இருக்கும். ஆனால் இப்படி ஓவியம் வரையலாம் என்பது ஒரு சில குழந்தைக்களுக்கேத்  தெரியும். அருகில் இருக்கும் செடி கொடிகளால் அந்த மரம் உயிர் பெற்று இருப்பது போல உங்கள் கண்ணுக்குத் தெரிந்தால் நீங்கள் தான் ஓவியத்தில் ஜீவன் காண்பவர்கள். இலைகள், மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள். வெகு பிரமாதம். ஓவியர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ருதி. 

எமி அவர்களின் தாயகம் தேடும் உயிர் ஒரு நீண்ட வலியை சொல்லும் கவிதை. இந்த கவிதையில் வரும் ஒவ்வொரு விஷயமும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் ஓலமாகவே இருக்கும். புலம் பெயர் மக்களில் பல வகையினர் உண்டு. இந்த கவிதையில் சொல்லப்படும் புலம் பெயர் மக்களின் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் நாடு போல எதுவுமே இருப்பது இல்லை. பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்கிறோம் என்பதோடு அந்த புலம் பெயர் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை கவிதை மனவலியுடன்  முடித்து வைக்கிறது.

ரிஸ்வான் அவர்களின் அன்புள்ள அப்பா.  பெருக்குவேன் காகிதங்கள் தினம், பணமெனும் காகிதம் வேண்டி. கல்வி நல்லதொரு வாழ்வைத் தரும் என சொல்லி மகள் மீதான எதிர்பார்ப்புடன் குப்பை பெருக்கினும் கோபுரம் தொடு என அருமையாக இருக்கிறது.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் இத்தனை வேகமாக முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சைவ மன்னன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்து இருந்தால் ஸ்ரீராமானுஜர் இன்று இத்தனை அளவுக்கு பேசப்பட்டு இருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் நல்ல மனிதர்களுக்கு எவரேனும் உதவியாக வந்துவிடுவார்கள் என்பதுதான் காலம் காலமாக கண்டு வரும் செய்தி. கண்கள் இழப்பது, உயிர் துறப்பது என்பதெல்லாம் நல்லதொரு விசயத்திற்காக முன்னர் மனிதர்கள் துணிந்து செய்தார்கள் என அறிய முடிகிறது. பிற சமயங்களை வெல்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். ஓம் நமோ நாராயணா என்றே சொன்னால் போதும் என வாழ்ந்தவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

எம்சி அவர்களின் நண்பன் கதை ஒருவரது  சின்ன கவனக்குறைவு பிறருக்கு எத்தனை பாதிப்பு உண்டாக்கும் என சோகம் சொல்லி முடித்த கதை.

விமலா பாட்டி அவர்களின் காலக்கண்ணாடி கடிதம் பற்றிய அருமையான நினைவலைகள் எனது கடிதம் எழுதிய காலங்களை, இன்றும்  கடிதம் எழுதும் அப்பா குறித்து அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. அவர் சொன்னது போல கடிதங்கள் எல்லாம் தொகுத்து வைத்து இருந்தால் ஒரு காவியமே எழுதி இருக்கலாம் தான்.

பரிசல் அவர்களின் வீட்டைக் காலி பண்ணிப்பார், அட்வான்ஸ் கேட்டுப் பார் என்பது வீட்டின் உரிமையாளரே அட்வான்சை காலி பண்ணிப்பார் என முடிந்து இருப்பது பெரும் சோகம். பணத்திற்கு ஆசைப்பட்டு நல்ல நல்ல குணங்களை மனிதர்கள் தொலைத்து விடுகிறார்கள். முன்பணம் என்பது ஒரு பாதுகாப்புக்கு எனத் தெரியாமல் அதை செலவழித்துவிடும் உரிமையாளர்கள் பலர் இதுபோல நடந்து கொள்வது உண்டு. பலர் நிலையை பிரதிபலிக்கிறது.

அவளதிகாரம், மகளதிகாரம் படங்கள் எல்லாம் அருமை.

பெண்களின் அவல நிலையைச் சொல்லும் ஒரு சோகமான கவிதை மனோவின் ஆண்  திமிர் . மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்  இறந்து போகவேணும் என எந்த ஒரு மனைவியும் வேண்டுவதில்லை, மாறாக தானே  இறந்து போகிறார்கள்.

சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ திரு அன்பழகன் நேர்காணல்! ஒரு மக்கள் பிரதிநிதியிடம் சினிமா குறித்து நேர்காணல் தொடங்கியதும் என்ன இது என்றே தோணியது. தமிழ் சமூகம் சினிமாவால் தான் சீரழிந்தது என்று இல்லை, சினிமாவுக்கு முன்னரே சீரழிந்த தமிழ் சமூகம் தான் அது. சில கேள்விகளுக்குப் பின்னர் அவரது அரசியல் வாழ்வு பற்றி இருந்தது. மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், வாரத்தில் எத்தனை முறை தொகுதிக்கு  செல்கிறீர்கள், அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறீர்களே உங்கள் தொகுதியின்  தெருக்களில் அடிக்கடி தென்படுவது உண்டா, உங்கள் தொகுதி மக்களுக்கு நாட்டின் மீதான அக்கறை என்ன, குற்றங்கள் குறைந்து இருக்கிறதா என பேட்டி எடுத்து இருந்தால் கலகலப்பாக இருந்து இருக்கும். ஆசிரியரின் முதல் நேர் காணல் என்பதால் அதுவும் தமிழகத்தில் இந்த முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்றால் அளவு கடந்த மரியாதை என்பதால் அதுவும் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்பதால் சற்று கவனம் அவசியம் தான்.

அட யானைக்கு 38 பெயர்கள். பிரமாதம்.

உமா  க்ருஷ் அவர்களின் பாடல் பரவசம்  காதல் கவிதைகள் படித்திடும் நேரம் உண்மையிலேயே பிறைசூடனின் மிகவும் அற்புதமான  பாடல். ஒரு பாடலுடன் நம் மனம் ஒன்றிவிடாது போனால் அந்த பாடலின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு பாடல் கேட்போம் அத்தோடு போய்விடுவோம் ஆனால் அதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் ரசிப்பதற்கு தனி மனநிலை வேண்டும். இசைஞானி இசை என்றால் தரம் பிரித்து விடலாம் எனுமளவுக்கு அவரது இசை இருப்பது என்னவோ உண்மைதான். பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்பட்ட பாடல் என்றாலும் அத்தனையும் சரியாக இணைந்து போக வைப்பதே ஒரு இசையமைப்பளாரின் வெற்றி. இவரது எழுத்தின் மூலமே  அந்த பாடலின் உன்னதம்தனை, இசையின் மேன்மையை நாம் அறிந்து கொள்ளச்  செய்து இருப்பதுதான் வெகு சிறப்பு. அதோடு காட்சிப்படுத்தலை அதில் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறார். அருமை.


நண்பர் ரவி அவர்களின் சமையல். உக்காரை. எங்குதான் பெயர் கண்டுபிடிப்பு செய்வார்களோ? கேள்விபட்டதே இல்லை. வெறும் கடலைப்பருப்பு வைத்து ஒரு உணவு. வித்தியாசமாக இருக்கிறது. சட்னிக்கு பதில் இப்படியும் செய்து சாப்பிடலாம்தான்.

ஆசிரியர் மூலம் சுந்தரராஜன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. நமது திண்ணை இணைய இதழ் மட்டுமல்ல இனிய இதழ்.

அழகிய வடிவமைப்பு, எண்  அழுத்தினால் பக்கம் செல்லும் நேர்த்தி எனத் தொடர்ந்து அனைவரையும் உற்சாகம் பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த இணைய இதழ் புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை நமது திண்ணை ஆசிரியர் அவர்களிடம் விபரங்கள் கேட்டு செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். 

Friday 5 June 2015

தமிழ் மின்னிதழ் -2 கடும் கண்டனங்கள்

தமிழ் மின்னிதழ் -2  தரவு இறக்கிக் கொள்ள இங்கே அழுத்தவும்

20. சான்டல்வுட்டின் டாரன்டீனோ  - அதிஷா

இவர் நன்றாக எழுதக்கூடியவர், விமர்சனம் பண்ணக்கூடியவர் என்பது அறிந்து இருக்கிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கிறேன். எனது புத்தக வெளியீட்டுக்கு நன்றியுரை சொன்னவர். இம்முறை கூட இவரை சந்திக்க இயலாமல் போனது.

சற்றும் எதிர்பாராத கட்டுரை எனலாம். கன்னட திரையுலகப் பார்வை குறித்து எழுதி இருக்கிறார். சான்டல்வுட் என்றால் கன்னட திரையுலகம் என்று இந்த தமிழ் மின்னிதழ் படித்துதான் அறிந்து கொண்டேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகம் போல கன்னட திரையுலகம் அத்தனை பிரசித்தி பெற்றது இல்லை என்றே பலரும் அறிவார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மலையாளம், தெலுங்கு என ஓரிரு படங்களே பார்த்து இருக்கிறேன். இதுவரை கன்னடம் பார்த்தது கிடையாது. அந்த திரையுலகில் நடக்கும் அதிசயங்களை விவரிக்கிறார் கட்டுரையாளர். லூசியா ஒரு என்ற படம் கன்னடப்படம் என்று கூடத் தெரியாமலே இருந்து இருக்கிறேன். இவர் விவரிக்கும் படங்களைப் பார்த்தால் கன்னட திரையுலகம் ஒரு கதை நிறைந்த மலையாள திரையுலகம் போல இருக்கும் என எண்ணலாம். 'உளிடவரு கண்டன்டே' சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி' படங்கள் குறித்த பார்வை சிறப்பு. டாரன்டீனோ போல உளிடவரு கண்டன்டே அமைக்கப்பட்டு எனும் ஒப்பீடல் அவரது படங்கள் பார்த்தவருக்கு மட்டும் புரியும்.

21. கொஞ்சம் மெய் நிறைய பொய் - யுவகிருஷ்ணா

இவரையும் ஓரளவுக்கு  இவரது எழுத்துகள் எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இவரது எழுத்துகள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவர் என்றே அறிந்து இருக்கிறேன்.

சற்றும் எதிர்பாராத எழுத்துதான். இவர்கள் இருவரும் வேறு ஏதோ  எழுதி இருப்பார்கள் என எதிர்பார்த்தது எனது தவறுதான். ஆனால் எழுதிய விஷயங்கள்  மிகவும் நன்மைத் தரக்கூடியவை. மெய் நிகரி எனும் ஒரு புத்தக விமர்சனம் இது. முதல் சில பகுதிகளை வாசித்தபோது எதுவும் தொடர்பற்ற ஒன்றாக இருக்கிறதே என எண்ண  கதைக்குள் கொண்டு செல்கிறார். ஒரு கதைக்கான களம் இருந்தால் போதும், அது இப்படித்தான் எழுத வேண்டும் எனும் அமைப்பை இன்றைய எழுத்தாளர்கள் உடைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த நூல் உதாரணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்படித்தான் எழுத வேண்டும் என்றில்லை. நாவல் ஒன்று எழுதியபோது இந்தப் போக்கினை மட்டுமே கடைப்பிடிக்கிறேன். எவருக்கு உறவுகள் பற்றிய விசயங்கள் அவசியம், தொழில் சார்ந்த விஷயங்களை  கதை மூலம் சொல்ல வேண்டும். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் குறிப்பிட்டது போல மிகவும் துணிச்சலாக உண்மை எழுதும் நபர்கள் வேண்டும். மெய்நிகரி நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் என்றே அறிய முடிகிறது.

22. அபயம் - ஹரன் பிரசன்னா

இவரும் நூல் மூலம் சிறிது பழக்கம். நிறைய விளம்பரங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்குத்தான் புத்தகங்கள் குறித்த அக்கறை இல்லாமல் போய்விட்டது. அப்படியே இவரது தொடர்பும் இப்போது இல்லை.

வித்தியாசமான கதைக்களம். கண்கள் குறித்து விவரிக்கப்பட்டு ஒரு குற்ற உணர்வுடன் தகிக்கும் கதைநாயகன் குறித்த கதை இது. மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.

23. மோடி முட்டிகள் - அராத்து

இந்த கட்டுரை அதிர்ச்சித் தரக்கூடிய வகையில் இருந்தது. கற்பழிப்பு குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது. ஒரு சமூகத்தில் நடக்கும் இழிநிலைகள், பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் என விவரித்துக் கொண்டே போக அடுத்து என்ன படிக்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவசியமா என்று கேட்டால் அது அப்படித்தான் என்று சொல்லக்கூடிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். வழக்கத்தில் சொல்லப்படும் விஷயங்கள் என அப்படியே எழுத்தில் வைக்கிறார். இது வாசிப்பவர்களுக்கு எத்தகைய எண்ணத்தைத்  தரும் என அறுதியிட்டு சொல்ல இயலாது. எனக்கோ இப்படித்தான் தமிழில் எழுதி ஆக வேண்டுமா என்றே இருந்தது. எழுதியவரை அல்லது இந்த இதழின் ஆசிரியரை குறைபடுவதில் பிரயோசனமில்லை. ஆனால் இப்படித்தான் பேசுகிறார்கள் என சொல்லும்போது முட்டாள்கள் குறித்து முட்டாள்தனமாக எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் எழுத வேண்டியது  இல்லை. ஆனால் அப்படித்தான் எழுதுவேன் என்பவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இது ஒரு கலாச்சார சீர்கேடு என குறைப்பட்டு  கொள்ள வேண்டியது இல்லை. குடிகார எழுத்தாளர்கள் அதிகரித்து விட்டார்கள். குடிகார சிந்தனையாளர்கள் தமிழில் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். இலக்கியம் என இதை எல்லாம் இனி வரும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் போல. அதற்காக கடும் கண்டனங்களை இந்த கட்டுரைக்குத் தெரிவித்துக் கொள்ளலாம். எவரேனும் இந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ஒழுக்கமற்றவன் ஒழுக்கம் சொல்வது போல தென்படும். இது தமிழ் எழுத்துக்கான விமர்சனம் மற்றும் எனது எழுத்து நிலை வேறு எனும் பார்வையில் வைக்கப்படும் விமர்சனம். அவ்வளவுதான்.

24. சாலையோரம் - பிரபாகரன்

பிரமாதம். ஒரு கவிஞரின் பார்வையில் எல்லாம் கவித்துவமாகத் தெரியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி. மிகவும் அழகாக பல நிகழ்வுகளை படம் பிடித்து நமக்குத் தந்து இருக்கிறார்.

25. ஆம் ஆத்மி - கொடுங்கனவாகும் கற்பனை - தமிழில் சைபர் சிம்மன்

ஒரு கடிதம் மூலம் ஆம் ஆத்மி குறித்து பல விசயங்கள் அறிய நேர்ந்தது. சற்று அயர்ச்சியாகவும் இருந்தது.

நன்றி மற்றும் வணக்கம்.

இந்த தமிழ் மின்னிதழ் மிகவும் சிறப்பாக இருந்தது என்றால் மிகையாகாது. திருஷ்டி பொட்டு  மீது ஆசிரியருக்கு அக்கறை கிடையாதுதான். ஆனால் எப்படியேனும் ஒரு கட்டுரை அப்படி வந்து அமைந்து விடுகிறது.

முற்றும்

Wednesday 30 January 2013

இதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி


''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை'' 

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை – தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று – ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். (‘கைத்து உண்டாக ஒன்று செய்வான்  எனக் கூட்டுக. ‘ஒன்று’என்பது வினையாதல் ‘செய்வான்’ என்றதனாற் பெற்றாம்.

குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம். - பரிமேலழகர் 

பொருள் வல்லமையுடன், அதிகார பிரயோகம், துஸ்பிரயோகம்  கொண்டு தான் செய்ய நினைக்கும் நல்ல செயல்கள் முதற்கொண்டு தரித்திர செயல்கள் வரை செய்து முடிக்கும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியவைகளே. இது திருவாளர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, திருவளர்ச் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் சரி நடந்தேறும் அவலங்களே. 

சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் திரு. ரஜினி பேசும்போது அரசினை குற்றம் சொல்லாதீர்கள், அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள் என்று பேசி இருந்தார். அரசு என்றால் என்ன?, அதிகாரிகள் என்றால் என்ன? அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்தால் அரசு சரியாக நடக்கும். ஆனால் அரசின் கைப்பாவைகள், அல்லக்கைகள் தான் அதிகாரிகள் என்பது நாடறிந்த உண்மை. 

நீதித்துறை கூட அரசின் கையில், பொருள் நிறைந்தோர் வளைக்கும் வளைப்பில் தான் உள்ளது என்பதை எவர் சொல்லித் தெரிய வேண்டும்? ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது? மற்ற பணம் எல்லாம் பிறர் போட்ட பிச்சை என்றா எடுத்துக் கொள்வது? 

திரு ரஜினி சில மாற்றங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்கிறார். மாற்றங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணபலம் மட்டும் போதாது, அரசியல் பலமும் மிகவும் அவசியம். 

ஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு படைப்பின் மூலம்  என்ன சாதித்துவிட முடியும்? ஒரு படைப்பாளி தனது பையினை நிரப்புவதுடன், அல்லது பையினை காலியாக்குவதுடன்  அவனது பணி முடிந்துவிடுகிறது. சமூக அக்கறை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்று அறிக்கைகள், வெறும் போராட்டங்கள் நடத்தி காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எவர் இவர்களுக்கு சொல்லித் தந்தது? 

திரு. ரஜினி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது, அல்லது உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கம் உடைய ஒருவர் தைரியமாக கட்சி ஒன்றைத்  தொடங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும் 

அடுக்கி வரினும் – இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் – தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

எத்தனைத் தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய முயற்சித்தால் அந்த துன்பமே துன்படும். 

திரு. கமல் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழகத்தில் வெளிவரத் துடிக்கும் ஒரு விஸ்வரூபம் திரைப்படம், சமூகப் பிரச்சினையில் இருந்து  அரசியல் பிரச்சினையாகிக் கொண்டு வருகிறது. சக மனிதர்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல. ஒரு படைப்பாளி, அந்த அந்த சமூகத்தின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுபவன். சில நேரங்களில் ஓர வஞ்சகமாகவும் படைப்பாளி நடந்து கொள்வது உண்டு. ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகலாம், ஆனால் தடை எல்லாம் அவசியம் இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் உரிமையோ, அல்லது புறக்கணிக்கும் உரிமையோ படைப்பை பார்ப்பவர்களுக்கு உண்டு. அப்படியிருக்க சிறுபான்மையினர் என கூறிக்கொண்ட  அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சமூகத்தின் உணர்வுகள் குறித்தான அக்கறை அரசுக்கு இதுவரை இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்ட ஒரு அரசு குறித்து மக்களுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையினரின் வெறுப்பு அரசுக்கு இனிமேல் தான் புரிய வரும். 

இந்த ஒரு பிரச்சினைக்காக திரு. கமல் நாடு விட்டு நாடு எல்லாம் போக வேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்கள் என மாற்றிய பெருமை திரு. கமலுக்கு உண்டு. தனக்கு அரசியல் தெரியாது என்றும்  சினிமா உலகம் மட்டுமே தெரியும் என்பவர். சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மிக சிறந்த ஆட்சி அமைய, மக்கள் யாவரும் நலம் பெற இந்த மாற்றத்தை இப்போதே உருவாக்க வேண்டும். இதுவே தருணம். 

வாழ்க தமிழ். வாழ்க தமிழகம். 

----

இப்படியாக எழுதி வைத்துவிட்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் தோட்டத்து பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். 

தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவரிடம், விவசாயம் எல்லாம் எப்படி போகுது என்றே வினவினேன். 

என்னய்யா பண்ண சொல்றீங்க, நீங்க படிச்சி மேல்நாட்டுக்குப் போயீட்டீங்க, எப்போவாச்சும் வரீங்க இங்க மழை தண்ணீ இல்லாம, கரண்ட் இல்லாம நாங்க அன்றாடம் கஷ்ட ஜீவனம் நடத்துறோம் என்றார். 

இதற்கு எல்லாம் அரசு தானே காரணம் என்றேன். 

அட நக்கல் பண்ணாதீங்கயா, எல்லாமே நாம தான் காரணம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சது யாரு? வெளில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டது யாரு? 

ஒரு படைப்பாளியான எனக்கு அவரின் கேள்விகள் புதிய அர்த்தங்கள் தந்து கொண்டிருந்தன.

அதுதான் மாற்றங்கள் நாம ஏற்படுத்தலாமே என்றேன். 

தெரியாத பேயை விட, தெரிஞ்ச பேயே மேல் தானே என்றார். 

சரியென தலையாட்டிவிட்டு மிகவும் யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். குன்றேறி யானைப்போர்... மேசையில் எழுதி வைக்கப்பட்டு இருந்த கட்டுரை தற்போது குப்பைத் தொட்டியை அலங்கரித்து கொண்டு இருந்தது.  மக்கள் எப்போது மாற்றம் கொள்வார்கள் என்றே நான் யோசிக்கத் தொடங்கினேன். 



Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


Tuesday 17 January 2012

இணையதள அறிவுகளஞ்சியங்கள் நாளை முடங்குகின்றன

அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கும் இரண்டு சட்டங்களை எதிர்த்து இணையதளங்கள் நாளை இருபத்தி நான்கு மணிநேரம் தங்களை முடக்கி கொண்டு எதிர்ப்பினை தெரிவிக்க இருக்கின்றன. 

கிட்டத்தட்ட ஐயாயிரம்  இணையதளங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என களத்தில் இறங்கி இருக்கின்றன. 

எப்படி நமது இணையதளத்தை முடக்குவது என்பது குறித்தான விபரங்களையும் இந்த இணையதளம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் வைத்திருக்காத நபர்கள் எதிர்ப்பினை ட்விட்டர், முகநூல் தனில் பதிவு செய்ய வேண்டுமென கேட்டு கொண்டிருக்கிறார்கள். சிடிசன், குடிமக்கள், என்பது போல இணையதளம் வைத்து இருப்பவர்கள் நெட்டிசன், வலைதளமக்கள், என புது பட்டம் அளித்து இருக்கிறார்கள். 

கருப்பு கொடி காட்டுவது போல எல்லா இணையதளங்களும் கருப்பாகவே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். 

சரி, அப்படி என்ன அந்த இரண்டு சட்டங்கள் சொல்கிறது. இணையதள ரகசியங்கள் பாதுகாப்பு தடுப்பு சட்டம், அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டம். இப்படி இந்த இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தால் நிறைய அறிவுசார் இணையதளங்கள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்து விடும். நாளை அமெரிக்காவில் கொண்டு வர இருக்கும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், நமது சுதந்திர பேச்சை, நமது முன்னேற்றத்தை தடுக்கும் இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.  

இந்த இணையதளங்கள் செய்யும் பல விசயங்கள் கண்டனத்துக்குரியவையாக இருக்கின்றன என சொல்கிறார்கள். 

1  ஒருவர் எழுதிய நூலை அப்படியே அப்பட்டமாக பதிவது. (இது போன்று நான் எழுத நினைத்த கம்பராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் கிடப்பில் போடப்பட்டு விட்டன). 

2 பி டி எப் வடிவில் புதத்தகத்தையே காப்பி செய்து இணையத்தில் பதிவது. 

3 இசையை வெளியிடுவது, படங்களை வெளியிடுவது, தொடர்கள் வெளியிடுவது என பல வேலைகளை இலவசமாகவே செய்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். 

எத்தனையோ அறிவு சார்ந்த விசயங்கள் இணைய தளம் மூலம் கிடைப்பதால் நூலகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியெனில் நூலகங்களில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் முடக்கப்படுமா? ஒரு படம் வாங்கி அதில் பல படங்கள் உருவாக்கி வாடகைக்கு விடப்படும் தொழில் முடக்கப்படுமா? 

இணையதள வளர்ச்சியினால்  பதிப்புரிமை, காப்புரிமை வைத்திருப்பவர்கள்  பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதற்காக இணையதளத்தையே முடக்குவது அறிவை சிதைப்பது போன்றதாகும். 

காப்புரிமை, பதிப்புரிமை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. அதே வேளையில் இணையதளம் வைத்திருப்பவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டிய தருணம் இது. 

இணையதளங்கள் மீது திணிக்கப்பட இருக்கும் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஆதரிக்கிறீர்களா? 





Tuesday 27 December 2011

டெரர் கும்மி விருதுகளும் டெரரான நானும்

டெரர் கும்மி விருதுகள் - 2011  காண அழுத்துக   உங்களுக்கு பிடித்த உங்கள் பதிவுகளை இணைத்து விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். 


ஐயா டெரர் கும்மிகளே, வணக்கமுங்க. உங்களோட விருது பற்றிய அறிவிப்பை இங்கே நான் வெளியிடுறதால நான் போட்டியில இணையறது பாதிக்கும்னா அதுபத்தி கவலை இல்லீங்க. நான் என்னோட பதிவுகளை இணைச்சிட்டேன். மறக்காம நடுவர்களுக்கு அனுப்பி வைச்சிருங்க, சொல்லிட்டேன். அப்படி செய்யலைன்னா 'இது ரத்த பூமி' அப்படிங்கிற வசனத்தை 'இது ரத்த உலகம்' அப்படின்னு ஆக்கிபூடுவேன்.

அட சாமிகளா! நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்களே! நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை. கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு எழுதுறாங்களே, இவங்க எழுத்தை ஊக்கம் செய்ய ஒரு அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். அதுவும் தமிழ்மணம் இந்த வருஷம் விருது அறிவிப்புகள் இல்லைன்னு சொல்லிருச்சா நல்ல வாய்ப்பா இருக்கும்னு நானும் மனப்பால் குடிச்சேன்.

அதோட மட்டுமா. பல அறிவிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளார வைச்சிருந்தேன். இணையத்தில் எழுதுறவங்களுக்கு ஏகப்பட்ட ஊக்கத்தொகை, விருதுகள் எல்லாம் அறிவிச்சி எழுதறவங்க நாம வெட்டியா ஒன்னும் எழுதலை அப்படின்னு நினைக்க வைக்கனும்னு. ஆனா என்ன ஒன்னு, பயபுள்ளக நான் விளம்பரம் தேடுறதுக்குதான் இப்படி அலையுதுன்னு மனசை குத்தும் குத்தம் சொல்லிப்போடுவாகனு விட்டுட்டேன்.

 நீங்க மொக்கை பதிவுகளோட கூடாரம் அப்படின்னு சொல்றதை பார்த்தா என் கண்ணுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே! நீங்க பண்றதெல்லாம் மொக்கை மறுமொழிகளின் ராஜ்ஜியம் அப்படின்னு சொல்றாங்களே, ம்ம்ம். எத்தனை பேரு நாம எழுதற பதிவுக்கு உருப்படியா ஒரு மறுமொழி கூட வரலைன்னு கவலைபட்டு இருக்காங்க. ஒருவேளை நான் எழுதறது கூட மொக்கை பதிவுகள் அப்படிங்கிற உணர்ச்சி இல்லையோ எனக்கு. ஒரு சினிமா படத்தில சொல்லக்கூடிய மிக முக்கிய கருத்தை சீரியஸா சொல்றதை  விட நகைச்சுவையா சொன்னாத்தான் புரியும்னு அந்த காலத்திலேயே என் எஸ் கிருஷ்ணன் ரொம்பவே தீவிரமா செயல்பட்டார், அதுபோல உங்க பதிவுகள் சிலதை படிச்சேன், ரசிச்சேன். நகைச்சுவையை ரசிக்க நான் என்ன நகைக்கடையில செலவு பண்றதுக்கு யோசிக்கிறமாதிரியா யோசிக்கனும். விருது அறிவிப்பு நேரத்தில இப்படி நான் எழுதறது ஒரு வழக்கு நடக்கிற நேரத்துல அந்த வழக்கு பத்தி வழ வழானு எழுதறமாதிரி ஆயிரும், அதுவும் பயபுள்ளைக நான் ஜெயிக்கிறதுக்காக காக்கா பிடிக்குறேனு கோஷம் போடபோறாங்க.

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எழுத்து தகராறு வந்ததை படிச்சேன். அந்த எழுத்து தகராருல இப்படி கூட்டமா வெளியே போயிடீங்க அப்படிங்கிற விவரத்தையும் படிச்சேன்.  ரொம்ப பேருக்கு மனசு வருத்தம், ரொம்ப பேருக்கு மனசுல சந்தோசம். நீங்க அடிக்கிற கும்மி எழுத்துல, சீரியஸ் எழுத்து எல்லாம் செத்து போகுதுன்னு ரொம்ப பேரு கவலைபட்டாங்களாம். சீரியசான விசயத்தை படிக்க நாலு பேருதான் இருப்பாங்க அப்படிங்கிற உத்தியை கண்டுபிடிச்சி ரஜினி கணக்கா கலக்கலா பாதை போட்டது நீங்க தான். கும்மி அடிச்சாலும் கம்மியான பதிவுகள் தானே போடறீங்க.

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். என்னைப் போல பலர் மின்னஞ்சல் மூலமே உங்கள் போட்டியை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும், பலருக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்குமென்பதாலும், எனது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இந்த இடுகை. அதோட விட்டுருவமா!

இந்த கும்மி பத்தி கொஞ்சம் எழுதிரலாம்.  கீழே தரப்பட்ட தகவல்கள் தமிழ்வு எனப்படும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.


//புற விளையாட்டுகள்
கும்மியும்     கோலாட்டமும் தமிழக நாட்டுப்புற உழைக்கும் வர்க்கப்
பெண்களிடையே காணப்படும் புற     விளையாட்டுகள் ஆகும்.
இவ்விளையாட்டுகள் பெண்களின் உடல்திறனை வளர்ப்பவையாக
உள்ளன.
 கும்மி
பெண்கள்     வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும்
விளையாட்டு கும்மி ஆகும்.
நாட்டுப்புறப்     பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத்
தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி
விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால்
பாடப்படு்ம் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப் படுகிறது.
கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு,முளைப்பாரிப்
பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம்
 எனப் பலவாறு
கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே
பெருவழக்காக உள்ளது.
கும்மி,     திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற
நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால்
விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும்
போதும் கும்மி கொட்டுதல் உண்டு.
குலவையிட்டுக்     கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும்
கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே
பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும்     கூறாகவும்
அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக்
கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி
ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.
கும்மி     விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள்
பார்வையாளர்களாக     மாறுவதும்     பார்வையாளர்கள்     கும்மி
கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.
கைகளை     உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை
மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து
நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக்
கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மன்     கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு
சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப்
பாடுவதுண்டு.
தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
(ரெக்கத்திலே = இடத்திலே)
வயது     வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப்
பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து
வருகின்றன
மகளிர்     விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது
போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின்
அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும்
மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன
எனலாம். //

Wednesday 14 December 2011

கன்னத்தில் முத்தமிட்டால் கறை படியும்

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கேட்டுக் கொண்டே இருக்கையில் இந்த படத்தை பார்க்கவே இல்லையே எனும் ஒரு வேண்டாத ஆசை வந்து சேர்ந்தது. இந்த படம் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

ஈழத்து தமிழர்கள் பற்றிய படம் என்றெல்லாம் கேள்விபட்டது மட்டுமே உண்டு. பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசக் கேட்டது உண்டு. விடைகொடு எங்கள் நாடே எனும் பாடல் அத்தனை துயரங்களை சொல்லி செல்லும்.

அப்படி என்னதான் படம் என பார்த்தால் ஒரு எழுத்தாளரும், ஒரு குழந்தையும் பற்றிய கதை. ஈழத்து நிகழ்வுகளை பற்றி கதை கதையாக பேசி ஈழம் வெளிநாடுகளில் மலர்ந்து விட்டது என கூவி கோடிக்கணக்கான  மக்களின் கனவுகள் சிதைந்து போன தேசமாக இப்போது இலங்கை இருந்து வருகிறது. இந்த இலங்கை அற்புத தேசம் எனவும் சுற்றுலா தளங்களில் மிகவும் சிறந்தது எனவும் சொல்லப்படுவது உண்டு.

ஒரு குழந்தையின் ஏக்கம் தனை படம் முழுக்க காட்டப்பட்டு சினிமா நடிக்க வேண்டும் என, வீட்டுக்கு பயந்து என வீட்டை ஓடிப் போகும் குழந்தைகள் போல தாயை தேடி அகதி முகாம் செல்லும் வரை என குழந்தையின் மன நிலையை இளங்கன்று பயம் அறியாது என காட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

ஒரு சாதாரண மனிதருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தற்கொலை மனிதராக காட்டியது திடுக்கிடத்தான் செய்தது. ஒரு கிராமத்தில் வாழும் பூசாரி அந்த இறைவன் வந்து காப்பற்ற மாட்டாரா எனும் ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்தே இருக்கும். இப்படி காட்சிக்கு காட்சி என ஒரு திரைப்படம் கவிதையாக வடிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது. எட்டு ஆண்டுகள் முன்னர் கள்ளத்தோணி பிடிச்சி வந்தேன் என கண்ணீர் கதையை சொன்ன நண்பரை கட்டிபிடித்து என்ன செய்யலாம் என கேட்டபோது இங்கே இருந்தே அவங்களுக்கு சாவு மணி அடிக்கலாம் என்றார். அவரை அதற்கு பின்னர் நான் காணவே இல்லை. ஈழத்தில் நடந்த விசயங்கள் சாதாரண விசயங்கள் என எவரேனும் சொன்னால் அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், இடுக்கண் வருங்கால் நகுக என இளித்து கொண்டு போக கூடியவர்கள். ஆனால் வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை. தினமும் எவரும் இந்த நிகழ்வுகள் நினைத்து அழுது கொண்டிருக்கவும் இல்லை. இதுதான் பூமி கண்ட கோட்பாடு. செத்தாருக்கு சொல்லி அழு. அழுதவுடன் எல்லாம் தீர்ந்தா போய்விடுகிறது! வடுக்கள் ஏற்பட வழியில்லா ரணம் ஆறிட வழி இல்லை. சொந்த மண்ணை கீறி எரிதழலில் போட்டு பொசுக்கி போன பின்னர், எதுவுமே நடக்கவில்லை என்றா இளைய தலைமுறை வரலாறு கற்று கொள்ளும்? வெறுப்பு எப்படி எல்லாம் வளர்ந்து தொலைக்கிறது!!!

இப்பொழுது ஈழம் எப்படி இருக்கும்? சிங்களவர்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என இருந்தாலும் சிங்களவர்கள் எனும் நினைப்பே தமிழர்களுக்கு ஒருவித எரிச்சல் தந்துவிட்டு போகிறது. எனக்கு தெரிந்த சிங்கள நண்பரிடம் பேசும்போது வார்த்தை தடுமாறுகிறது. அவரோ சகஜமாகவே பேசுவார், என்ன செய்வது சில கோணங்கி புத்தி உடையவர்களால் மொத்த இனமே வேறுபாட்டினை கொள்கிறது என்பார். ஆனால் சில கோணங்கி புத்தி இல்லை, ஒரு இனமே கோணங்கி புத்தி உடையதாக அல்லவா இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் புலம் பெயர்ந்து வந்ததால் அந்த உணர்வு இருக்க வாய்ப்பு இல்லை என நகர்ந்து விடுவேன். அதுவும் எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன, எத்தனை சிறார்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இது போன்ற காணொளி எல்லாம் இணையதளத்தில் உலவியபோது அதை பார்க்கும் தைரியம் எதுவுமே இல்லை. மருத்துவ உதவி செய்யப்போன புலம் பெயர் தமிழர் சொன்ன கதையை கேட்டு, போர் நிறுத்தம் செய்ய கூறி போராட்டம் நடத்தப்பட்ட வெளிநாடுகளில் கூடிய கூட்டம் கண்டு ஈழம் மலர்ந்து விடும் என்றே கனவுகள் உண்டு. ஆனால்... ஐம்பது வருட போராட்டம் கண்டது... இப்பொழுது இலங்கை அரசு மீதான நடவடிக்கைகள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஈழம் பற்றிய அக்கறை இனி எவருக்கும் வரப்போவது இல்லையோ! எல்லாம் போச்சு! என்றுதான் என்னிடம் ஒரு நண்பர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி வந்ததும் சொன்னார். ஒரு நல்ல இலக்கியம் ஒன்றை தமிழுக்கு படையுங்கள் என ஒரு நண்பர் கேட்டார். கதைகளும், காவியங்களும் எவருக்கு தேவை, கண்ணீருடன் வாழ்ந்து மடியும் இனங்கள் உள்ளபோது என இருந்தாலும் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு இருப்பது வேதனைக்கு உரியது. கறைபடிந்த வரலாறாக மாறக்கூடாது.

இலங்கைக்கு சென்று வரும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டு கொள்வதோடு, அங்கே செல்வதால் பயம் இல்லையா என்று கேட்டால் 'எனது தாய் மண்' என்றே பெருமிதம் கொள்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன.

இருபது வருடங்கள் முன்னால் எழுதிய கவிதை தொலைந்து போய்விட்டது. மயானத்தில் கூட அமைதி, அந்த அமைதியையா இந்த போர் வேண்டி நிற்கிறது என வரும் அந்த கவிதை. போர்  எல்லாம் அமைதிக்கான வழியே இல்லை, இருப்பினும் எதிரிகளின் கன்னத்தில் முத்தமிட்டால் நமது உதடுகளில் கறைபடிந்து விடுவதை துடைக்க வழிதான் தெரிவதில்லை. 

Wednesday 12 October 2011

திருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 20ம் தேதிக்கு பின்னர் இப்படியொரு செய்தியை படித்தால் தமிழகத்தில் உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும்? 

மக்களின் நலனை மட்டுமே கருதி 'தோற்றுப் போய்விடுவோம்' என தெரிந்தும் 'தனது பணம் வீணாகும், என புரிந்தும் மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஓரம் கட்டமாட்டார்களா என ஒவ்வொரு தொகுதியில் நம்பிக்கையுடன் போட்டியிடும் உண்மையான நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வெற்றி பெற செய்ய கூடிய ஒரு அமைப்பு தோன்ற வேண்டும். இது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பரவ வேண்டும். இதுதான் நான் கொண்டிருக்கும் கனவு. 

அப்படிப்பட்ட மக்களின் நலம் சார்ந்த ஒரு அமைப்பினை உருவாக்கும் பொறுப்பு 'அரசியல்' சாராத, குறுக்கு நெடுக்கு அரசியல் நடத்த விரும்பாத தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி போன்ற அமைப்பிற்கு மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்? உள்குத்து இல்லாத, உண்மையாகவே சமூக அக்கறையுடன் போராடக் கூடிய, நான் பெரிதா, நீ பெரிதா என்கிற பாரபட்சம் பார்க்கும் மன நிலையில் இல்லாத பதிவர்கள் இந்த விசயத்தை தொடங்க வேண்டும்.  நமக்கெல்லாம் அரசியல் எதற்கு என்கிற மனோபாவம் தொலைத்து மக்களின் நலனுக்காக போராடும் குணம் தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி தமிழ் பதிவர்களின் பார்வையானது பலமாக சமூகத்தில் படும்போது அதற்குரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் நிச்சயம் வளரும். 

புத்தகம் வெளியிடும் பதிவர்கள் ஒவ்வொருவரும், தங்களது இந்த முயற்சியை புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதோ பதிவர்களால், பதிவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள யுடான்ஸ் தொலைக்காட்சி இது போன்ற விசயங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய முயற்சியை, இதுவரையிலும் வேறு கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் அதை அறுத்து எறிந்து விட்டு, ஒரு நடிகரின், நடிகையின் ரசிகனாக இருந்தாலும் அதோடு நிறுத்திவிட்டு, கையில் எடுக்க வேண்டும். இந்த எழுத்து போராட்டம், வாசிப்பவர்களின் மனதில் புது வேகத்தை கொடுக்க வேண்டும். 

பதிவர்களிடையே இருக்கும் வேற்றுமை எண்ணங்கள் மறைந்து மக்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்பை இந்த உலகமெல்லாம் இருக்கும் தமிழ் பதிவர்கள் தொடங்கியே தீர வேண்டும். நோக்கம் மக்களின் நலன். போராட்டம் மக்களின் நலன். இதுதான் தீர்மானம். ஒரு விதை இருளில் இருந்துதான் முளைக்கிறது. மாபெரும் கும்மிருட்டில் இந்த விதையை தூவுகிறேன். 

 பத்து இருபது படங்களில் நடிக்கும் ஒரு நடிகரோ, நடிகையோ கட்சி ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு தரும் இந்த மக்கள் தங்களுக்கென போராட ஒரு அமைப்பு இருக்கிறதென உணர வேண்டும். வெறும் பேருக்கென இருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றியோ, வெட்டி சவாடல் விடும் அமைப்புகள் பற்றியோ நாம் இங்கு பேசவில்லை. அது போன்ற அமைப்புகள் இருப்பவர்கள் மக்களின் நலன் கருதி உண்மையாக போராட வேண்டும். ஒரு எழுச்சியை நம்மால் உருவாக்க இயலும். 

இதோ பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேசுகிறார், திராவிட கட்சிகளை அழிப்பதே அவரது கட்சியின் நோக்கமாம். அட, மக்களுக்கு பாடுபடுவதுதானே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தேன் என்பது கூட இத்தனை வருசம் தெரியாமல் இப்படி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக வீர வசனம் பேசி திரியலாமா? 

இதோ தே மு தி க தலைவர் ஊரெல்லாம் மக்களுடன் கூட்டணி என பேசுகிறார். அட, மக்களுடன் கூட்டணி, என்ன மக்களுடன் கூட்டணி, எதற்காக கட்சி ஆரம்பித்தீர், என்ன நோக்கம், என்ன கொள்கை என்பது குறித்து அல்லவா பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் அதை இலவசமாக தருவேன், இதை இலவசமாக தருவேன். தனியாக போட்டியிடுவேன் எனும் வீர வசனம் எதற்கு? இலவசமாக கொடுக்க பணத்தை எங்கே இருந்து எடுப்பீர்களோ? இதை கூட சிந்திக்கும் திறன் இழந்த மக்களை அல்லவா உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். விசுவாத்தின், நம்பிக்கையின் அடிப்பைடயில் நலிந்து போன மக்கள் ஐயா, நலிந்து போன மக்கள். 

இவர் எப்பொழுது கட்சி தலைமைக்கு வந்தார்? எதற்கு தி மு க கட்சி தொடங்கப்பட்டது என்பதெல்லாம் பேசி பேசியே திரைப்படங்களில் ஆஹோ ஓஹோ என வசனம் எழுதியே அரசியல் நடத்திய தி மு க தலைவர். எல்லா வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாய ஓய்வு கொடுத்து விடுவார்கள். ஆனால் அரசியலில் மட்டும் அப்படிப்பட்ட ஓய்வு எல்லாம் இல்லை, எதற்கு தெரியுமா கழக தலைவரே? உங்களுக்கு கலிங்கத்து பரணி எல்லாம் அத்துப்படி, பல விசயங்கள் பசுமையாக இருக்கும் உங்கள் நினைவினை திரும்பி பாருங்கள். மக்களின் சேவைக்கு ஓய்வு என்பதே கூடாது என்பதற்காகத்தான். இதுநாள் காறும் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்து பாருங்கள், பல விசயங்கள் உங்களை உறுத்தும், உறுத்த வேண்டும். 

அம்மா. அட பாவமே. அம்மா என மாடு அழைத்தால் கூட இவரைத்தான் அழைக்கிறது என்கிற தோரணை எல்லாம் கட்டப்பட்டு இருந்த காலம். மக்கள் தலைவர் என போற்றப்பட்ட ஒருவரின் உதவியின் மூலம் கொள்கை பரப்பு செயலாளார் எனும் பதவி கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் போராடி அ தி மு க எனும் அரசியல் கட்சியை அழிந்து போகவிடாமல் இன்று முதல் அமைச்சர் எனும் முக்கிய பதவியில் அமர்ந்து இருக்கிறார்கள். கொள்கை பரப்பு செயலாளர், நிச்சயம் கொள்கைகள் தெரிந்து இருக்க வேண்டும், ஆனால் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. தி மு க வை தோற்கடிக்க அமைந்த கூட்டணி. மக்களின் நலனுக்கு அமையவில்லை கூட்டணி என்பதை ஐந்து மாத கால கட்டத்துக்குள் நிரூபித்தாகி விட்டது. 

மக்களே எதற்கு இன்னமும் யோசனை? 

இனிமேல் இதுவரை சுயநலத்துக்காகவே உருவாக்கப்பட்ட இது போன்ற கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறக் கூடாது என்கிற முழு தீர்மானம் மக்களிடம் எழ வேண்டும். மக்களின் நலனே முக்கியம் என பாடுபடும், நினைக்கும் இது போன்ற அரசியல் சார்ந்த கட்சிகளில் வேட்பாளாராக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியில் இருந்து விலகி மக்களை முறையாக அணுகி வெற்றி பெற வேண்டும். அல்லது இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக உண்மையாக பாடுபடுவோம் என்கிற உறுதியை எடுத்து செயலாற்ற வேண்டும். இனிமேலாவது மக்களுக்கென பாடுபடும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களின் நலன் குறித்த சிந்தனை உடையவர்களே உண்மையான வேட்பாளர்கள் என்கிற எண்ணம் எழ வேண்டும். 

இது போன்ற எண்ணங்கள் எல்லாம் கனவுக்கும், கற்பனைக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்பதுதான் இதுவரை உலகம் கண்ட வரலாறு. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சி ஒன்றை எழுத்து மூலம் தொடங்கி வைப்போம். பின்னர் செயல்களில் முறைப்படுத்த முனைவோம். 


Wednesday 18 May 2011

ஈழத் தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன்

சட்டென ஒரு தொலைக்காட்சி நிகழ்வு. கண்கள் நிலை குத்தி நிற்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை நிறுத்த வேண்டியும் லண்டன் பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார் தன்மான தமிழன், ஈழத் தமிழன் பரமேஸ்வரன். வருடம் 2009. 

அந்த போராட்டம் நடைபெற்றபோது மக்கள் வெகுவாக திரண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த மக்களின் எழுச்சி போராட்டம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. புலம் வாழ் தமிழர்களின் ரணப்பட்ட மனம். பல வருடங்களாக மாறாத சோகம். உண்மை வரலாற்றினை மறைத்து வைத்த கொடுமைகள். உலகெங்கும் எழுச்சி அலைகள். 

சொந்த நாட்டில் வாழ இயலாத பெரும் துயரம். பிற நாடுகளின் குடியேறி சொந்த நாட்டிற்கென பணம் அனுப்பி துயரம் துடைத்திட துடித்திட்ட மக்கள், துடித்திடும் மக்கள். போராட்டம் வலுப்பெற்று இருந்தது. 

பரமேஸ்வரனின் உடல்நலத்தை சமயந்தோறும் சரிபார்த்திட மருத்துவ வசதிகள், பிரச்சினைகள் பெரிதாகிவிடக் கூடாதென பணியமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள். இதற்கான செலவுகள் மிகவும் அதிகம் என்றே கணிக்கப்பட்டது. உயிர்களை விட பணமா பெரிது?! 

இந்த நிகழ்வினை கண்டு பொறுக்கவில்லை பத்திரிகைகள். முதல் வேலையாக டெய்லி மெயில் எனும் பத்திரிகை தமிழர்களை கேவலப்படுத்தி எழுதியது. அதாவது பரமேஸ்வரன் திருட்டுத்தனமாக பர்கர் சாப்பிட்டார் என்று சொன்னது. போலித்தனமான உண்ணாவிரதம் என எழுதியது. இதைப் படித்த சில தமிழ் நல்ல உள்ளங்கள் உடனே செய்தியை உண்மை என நம்பி பரமேஸ்வரனுக்கு மிரட்டல்களும், பரமேஸ்வரனின் செயலால் தமிழர்களுக்கு அவமானமும் நிகழ்ந்தது என பரமேஸ்வரனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பினார்கள். 

பரமேஸ்வரன் கூனி குறுகிப் போனார். தான் நியாயமான முறையில் நடந்து கொண்டும், தம் இன மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது எத்தனை முட்டாள்தனம் என நினைத்து இருக்க வேண்டும். நன்றி கெட்ட மனிதர்கள் எல்லா இனத்திலும் உண்டு. 

நமது ஊரில் ஏதேனும் சாதாரண மனிதர்களைப் பற்றி பத்திரிக்கை எழுதினால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் இலண்டனில் சட்டம் ஓரளவுக்கு வேலையை செய்யும், மேலும் பத்திரிகைகள் நினைத்ததை எழுதி தப்பிக்க இயலாது. பார்த்தார் பரமேஸ்வரன். 

தெருக்களில் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. கருங்காலி என பட்டம் சூட்டப்படாத குறைதான். அந்த இரண்டு பத்திரிக்கைகள் மீது வழக்கு தொடர முடிவு எடுத்தார் பரமேஸ்வரன். நல்ல நேர்மையான வழக்கறிஞர்கள். பத்து மாதங்களில் தாங்கள் செய்தது தவறு என பத்திரிகைகள் மன்னிப்பு கேட்டன. போனா போகுது என்கிற தொனியில் இருந்தது அந்த மன்னிப்பு. வழக்கு மன்றத்தில் போராடி அந்த இரண்டு பத்திரிக்கைகள் மன்னிப்பு கேட்டதோடு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் பரமேஸ்வரனுக்கு நஷ்ட ஈடு தந்தது, அதுவும் வழக்கறிஞர்களின் செலவுடன் சேர்த்து. 

ஈழத்தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன். உனக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால் இன்னும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. நீ இருந்த உண்ணாவிரதம் மூலம் எவருக்கு ஐயா விடுதலை கிடைத்தது? அன்று புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் மூலம் என்ன ஐயா விடிவு வந்தது? 

ஈழத்தமிழர்கள் நடத்த வேண்டிய இந்த உண்ணாவிரத போராட்டம் இலங்கையில் நடந்து இருந்தால் எத்தனையோ இழப்புகள் தவிர்த்து இருந்திருக்கலாம். அதற்காக மறைந்த தலைவர் பிரபாகரன் எடுத்துக்கொண்ட பாதை தவறு என ஒருபோதும் சொல்லவில்லை. இலங்கையில் நமது இனம் மெல்ல மெல்ல அழிய நாமே காரணமாகிப் போனோம் என்பதுதான் மறைக்க முடியாத துயரம். 

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அங்கு வாழும் தமிழ் மனிதர்களிடம் கேட்டுப் பாருங்கள்! அவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழர்கள். புலம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, நமது இதயத்தைத் தொட்டு சொல்வோம், நாம் வீரமற்ற வாய்ச்சொல் வீரர்கள். 

பல நேரங்களில் உண்மையை சொல்லாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள். 

Friday 13 May 2011

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அரசியல் பண்ண வேண்டிய இடத்தில் அரசியல் பண்ணாமல் வேறு  பல இடங்களில் அரசியல் பண்ணுவது நமது வாடிக்கை.

வீட்டில் இருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது. 'நாக்கில்லாத நரம்பு எப்படின்னாலும் பேசும்' என்பது உலகம் அறிந்த உண்மைதான். 

'சீ சீ இந்த பழம் புளிக்கும்' எனும் கதையாய் பல நேரங்களில் நிகழ்வது தவிர்க்க இயலாதது. 

அ தி மு க எனும் கட்சியும் இரட்டை இலை எனும் சின்னமும், தி மு க கட்சியும், உதயசூரியன் எனும் சின்னமும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டிருக்கலாம். நகரங்களில் பல மாற்றங்கள் வந்த பிறகும் அதே கட்சி, அதே சின்னம், அதே 'இல்லாத கொள்கைகள்' என இந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதும் ஏதாவது ஊழல் வெளித் தெரிவதும் என இந்த கட்சிகளின் செயல்பாடுகள் மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது இல்லை. 

அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என வாய் சவுடால் விடாமல் மக்களின் குறை தீர்க்கும் அரசு என்பது வெறும் கனவு. 

அமெரிக்காவின் ஒபாமா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். பொய்த்து போனது மக்களின் எதிர்பார்ப்பு. 

ஒரு அரசு செய்வதை விட மக்கள் நினைத்தால் செய்யலாம் என்பதுதான் அமெரிக்காவில் நடக்கும் தேர்தலும் சரி, தமிழகத்தில் நடக்கும் தேர்தலும் சரி காட்டுகின்றன. 

எனவே இந்த அரசு, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட மக்களை எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட விட வேண்டும் என்பதில் தான் இந்த அரசின் வெற்றி உள்ளது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே பெரிதும் மாற்றம் ஏற்படுத்த முடியும். மக்களின் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் அரசு என்பதெல்லாம் நமது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் கூட  சாத்தியம் இல்லை. 

அதே குண்டும் குழியும் நிறைந்து கிடக்கும் சாலைகள். எந்த ஒரு வசதிகளும் இல்லாத பள்ளிகள், ஊழல் நிறைந்த மனிதர்கள், வியாபாரிகள் என இவர்கள், இவைகள் எல்லாம் ஒரு அரசு மாறுவதால் மாறுவதில்லை. மனிதர்கள் மாறினால் மட்டுமே மாறும்.

அந்த பெரும் மாற்றத்தினை முதலில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா அவர்கள் தனக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறாரா என்பதுதான் இன்று முதன்மை கேள்வி. 

இந்த வெற்றியின் உற்சாகத்தில் பேசும் பேச்சுகள் அடுத்த நொடிகளில் மறந்து போகும். மக்கள் மீண்டும் மறக்கப்படுவார்கள். மக்களும் மறந்து போவார்கள். 

ஒரு வீடு, ஒரு நகரம், ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் எனும் கனவு எந்த முதல்வருக்கும் இருந்தததில்லை, இருப்பதும் இல்லை. 

சிறு வயதில் இந்த கட்சிக்கு கொடி தூக்கிய காலம், தொண்ணூறுகளில் இந்த கட்சி மாபெரும் வெற்றி பெரும் என கணித்தபோது ஒரு இடம் கூட கிடைக்காமல் தொலைந்த காலம். அ தி மு க ஏனோ மனதில் இருந்து கொண்டிருக்கிறது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல். 

வாழ்த்துகள் அ தி மு க தலைமைக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும். 

ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எவர் சோதிடம் பார்ப்பது இனி? ஒரே சாலையில் பயணித்து பழக்கப்பட்டுத்தான் போனோம். வழியில் பார்க்கும் மனிதர்கள் மட்டும் வெவ்வேறாக இருக்கிறார்கள் ஒரே குணத்துடன்.