Wednesday 18 May 2011

ஈழத் தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன்

சட்டென ஒரு தொலைக்காட்சி நிகழ்வு. கண்கள் நிலை குத்தி நிற்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை நிறுத்த வேண்டியும் லண்டன் பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார் தன்மான தமிழன், ஈழத் தமிழன் பரமேஸ்வரன். வருடம் 2009. 

அந்த போராட்டம் நடைபெற்றபோது மக்கள் வெகுவாக திரண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த மக்களின் எழுச்சி போராட்டம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. புலம் வாழ் தமிழர்களின் ரணப்பட்ட மனம். பல வருடங்களாக மாறாத சோகம். உண்மை வரலாற்றினை மறைத்து வைத்த கொடுமைகள். உலகெங்கும் எழுச்சி அலைகள். 

சொந்த நாட்டில் வாழ இயலாத பெரும் துயரம். பிற நாடுகளின் குடியேறி சொந்த நாட்டிற்கென பணம் அனுப்பி துயரம் துடைத்திட துடித்திட்ட மக்கள், துடித்திடும் மக்கள். போராட்டம் வலுப்பெற்று இருந்தது. 

பரமேஸ்வரனின் உடல்நலத்தை சமயந்தோறும் சரிபார்த்திட மருத்துவ வசதிகள், பிரச்சினைகள் பெரிதாகிவிடக் கூடாதென பணியமர்த்தப்பட்ட காவல் அதிகாரிகள். இதற்கான செலவுகள் மிகவும் அதிகம் என்றே கணிக்கப்பட்டது. உயிர்களை விட பணமா பெரிது?! 

இந்த நிகழ்வினை கண்டு பொறுக்கவில்லை பத்திரிகைகள். முதல் வேலையாக டெய்லி மெயில் எனும் பத்திரிகை தமிழர்களை கேவலப்படுத்தி எழுதியது. அதாவது பரமேஸ்வரன் திருட்டுத்தனமாக பர்கர் சாப்பிட்டார் என்று சொன்னது. போலித்தனமான உண்ணாவிரதம் என எழுதியது. இதைப் படித்த சில தமிழ் நல்ல உள்ளங்கள் உடனே செய்தியை உண்மை என நம்பி பரமேஸ்வரனுக்கு மிரட்டல்களும், பரமேஸ்வரனின் செயலால் தமிழர்களுக்கு அவமானமும் நிகழ்ந்தது என பரமேஸ்வரனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பினார்கள். 

பரமேஸ்வரன் கூனி குறுகிப் போனார். தான் நியாயமான முறையில் நடந்து கொண்டும், தம் இன மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது எத்தனை முட்டாள்தனம் என நினைத்து இருக்க வேண்டும். நன்றி கெட்ட மனிதர்கள் எல்லா இனத்திலும் உண்டு. 

நமது ஊரில் ஏதேனும் சாதாரண மனிதர்களைப் பற்றி பத்திரிக்கை எழுதினால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் இலண்டனில் சட்டம் ஓரளவுக்கு வேலையை செய்யும், மேலும் பத்திரிகைகள் நினைத்ததை எழுதி தப்பிக்க இயலாது. பார்த்தார் பரமேஸ்வரன். 

தெருக்களில் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. கருங்காலி என பட்டம் சூட்டப்படாத குறைதான். அந்த இரண்டு பத்திரிக்கைகள் மீது வழக்கு தொடர முடிவு எடுத்தார் பரமேஸ்வரன். நல்ல நேர்மையான வழக்கறிஞர்கள். பத்து மாதங்களில் தாங்கள் செய்தது தவறு என பத்திரிகைகள் மன்னிப்பு கேட்டன. போனா போகுது என்கிற தொனியில் இருந்தது அந்த மன்னிப்பு. வழக்கு மன்றத்தில் போராடி அந்த இரண்டு பத்திரிக்கைகள் மன்னிப்பு கேட்டதோடு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் பரமேஸ்வரனுக்கு நஷ்ட ஈடு தந்தது, அதுவும் வழக்கறிஞர்களின் செலவுடன் சேர்த்து. 

ஈழத்தமிழா பரமேஸ்வரா நீ கெட்டிக்காரன். உனக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால் இன்னும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நீதியும் கிடைக்கவில்லை. நீ இருந்த உண்ணாவிரதம் மூலம் எவருக்கு ஐயா விடுதலை கிடைத்தது? அன்று புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் மூலம் என்ன ஐயா விடிவு வந்தது? 

ஈழத்தமிழர்கள் நடத்த வேண்டிய இந்த உண்ணாவிரத போராட்டம் இலங்கையில் நடந்து இருந்தால் எத்தனையோ இழப்புகள் தவிர்த்து இருந்திருக்கலாம். அதற்காக மறைந்த தலைவர் பிரபாகரன் எடுத்துக்கொண்ட பாதை தவறு என ஒருபோதும் சொல்லவில்லை. இலங்கையில் நமது இனம் மெல்ல மெல்ல அழிய நாமே காரணமாகிப் போனோம் என்பதுதான் மறைக்க முடியாத துயரம். 

இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அங்கு வாழும் தமிழ் மனிதர்களிடம் கேட்டுப் பாருங்கள்! அவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழர்கள். புலம் வாழ் தமிழ் நெஞ்சங்களே, நமது இதயத்தைத் தொட்டு சொல்வோம், நாம் வீரமற்ற வாய்ச்சொல் வீரர்கள். 

பல நேரங்களில் உண்மையை சொல்லாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள். 

No comments: