Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Sunday 21 September 2014

தமிழக திரையரங்குகள் (தியேட்டர்கள்)

இந்தியாவில் சில நாட்கள் - 11

சினிமா உயிர் மூச்சு என மொழி உயிர் மூச்சு என்பதை இடம்பெயரச் செய்துவிடும் அளவிற்கு தமிழகத்தில் சினிமா மோகம் நிறையவே உண்டு. எங்கள் கிராமத்தில் எல்லாம் சினிமா கொட்டகை எல்லாம் இல்லை. ஒன்று விருதுநகர் செல்ல வேண்டும் அல்லது அருப்புகோட்டை செல்ல வேண்டும். எனக்கு விபரம் தெரிந்து சிறு வயதில் விருதுநகர் சென்று திரைப்படம் பார்ப்பதுதான் வழக்கம்.

விழாக்காலங்களில் எங்கள் ஊரில் வெள்ளை திரை கட்டி சினிமா காட்டுவார்கள். அதுவும் எம்ஜிஆர் சிவாஜி படங்கள் அப்போது நிறைய. புழுதியில் அமர்ந்து அப்படியே உறங்கி என சினிமா பார்ப்பது ஒரு அருமையான தருணங்கள். அதுமட்டுமல்லாது மில் எனும் பக்கத்து ஊரில் அவ்வப்போது போடப்படும் படத்திற்காக கம்மாய் கரை தாண்டி சென்று பார்த்துவிட்டு நடு இரவில் மயானக்கரை தாண்டி வருவது எல்லாம் ஒரு சிலிர்ப்பான அனுபவங்கள்.

விருதுநகரில் ராஜலட்சுமி, அப்சரா, அமிர்தராஜ், சென்ட்ரல் இன்னும் சில தியேட்டர்கள். சென்ட்ரலில் அமிர்தராஜில் கட்டை இருக்கைகள் என்றே நினைக்கிறேன். ராஜலட்சுமி அப்சரா புதிய தியேட்டர்கள். இருக்கைகள் நன்றாக இருக்கும்.  ஐந்தாம் திருவிழா காலங்களில் சினிமா ஒரு அங்கம். இப்படி ஒருமுறை விருதுநகர் சென்று திரைப்படம் பார்த்துவிட்டு மழை பெய்ததால் சைக்கிளில் மண்பிடித்து கண்மாய் வழி வழியாக வீடு செல்ல முடியாமல் நாங்கள் நான்கு பேர் மல்லாங்கிணர் சென்று அங்கிருந்த தெரிந்த மருத்துவர் வீட்டில் சென்று தங்கினோம். அப்போது எல்லாம் வீடுகளில் தொலைபேசி இல்லை. தபால் அலுவலக வீடு மாமா வீட்டில் மட்டும் தொலைபேசி இருக்கும். அவர்களுக்குத்தான் எல்லா தகவல்களும் வந்து சேரும். நாங்களும் அவர்களுக்கு தகவல் சொல்லி நாங்கள் காலை வருகிறோம் வீட்டில் சொல்லிவிடுங்கள் என சொல்லி வைத்தோம்.

எங்கள் காலம், அவர் வீட்டில் சொல்ல மறந்து போனார். எங்களை இரவு ஆகியும் காணாமல் தேட ஆரம்பித்துவிட்டார்கள். மல்லாங்கிணர் டிராக்டர் மூலம் வந்து சேர நாங்கள் இருக்கும் இடம் அறிந்து பின்னர் அழைத்துச் சென்றார்கள். அந்த மாமாவுக்கு அடுத்த நாள் நல்ல திட்டு விழுந்தது. பின்னர் அருப்புக்கோட்டையில் படித்தபோது ஹாஸ்டலில் இருந்து சுவர் ஏறி சென்று படம் பார்த்த நண்பர்கள் பிடிபட்டு அடி வாங்கிய நிகழ்வுகள். மகாராணி, லட்சுமி தியேட்டர்கள் பரவாயில்லாத ரகம். எனக்கு ரஜினி படமே போதும் என்று இருக்கும். அதிகம் படம் எல்லாம் பார்ப்பது இல்லை. மதுரையில் படித்தபோது ரஜினி கமல் ரசிகர்கள் சண்டைகள் எல்லாம் எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இப்படி இருக்கிறார்கள் என! எனக்கு படிப்பு மட்டுமே முக்கியமாக இருந்தது. இருப்பினும் கமல் ரசிகருடன் அவ்வப்போது ரஜினி கமல் பார்க்க சென்று விடுவது உண்டு.

மதுரையில் சினிப்ரியா, மினிப்ரியா என சில தியேட்டர்கள். ஆரப்பாளையம் அருகே சில தியேட்டர்கள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். எப்போது படத்திற்கு கூப்பிட்டாலும் தலைவர் படம் வரட்டும் என சொல்லி எனது சினிமா ஆசையை காட்டுவேன். என்னை தனியாகவே விட்டுவிட்டு அவர்கள் படத்திற்கு செல்வார்கள். ஒத்தக்கடையில் ஒரு தியேட்டர். என்னை வலுக்கட்டாயமாக படத்திற்கு அழைத்து சென்றார்கள். என் வாழ்வில் முதன் முதலில் என்ன பார்க்கிறோம் என தெரியாமல் பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். குளியல் அறையில் பெண் என திடீரென ஒரு காட்சி வந்தது. என் நண்பன் என் அருகில் மாப்பிள்ளை அதுதான் அது என்றான். எது என்றேன் எதுவும் புரியாமல். அன்று முதல் என்னை சாமியார் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டான். வாழ்வில் அனுபவிக்க வேண்டியது நிறைய என்றார்கள். எனக்கு அந்த அந்த காலத்தில் அனுபவித்தால் போதாதா, இப்போது படிப்பு மட்டும் தானே என்றே சொன்னது உண்டு. அந்த தியேட்டர் கட்டை இருக்கை தான்.

சென்னையில் ஒரு வருடம் இருந்தபோது சில தியேட்டர்கள் போனது உண்டு. தியேட்டர்கள் நன்றாகவே இருக்கும். இப்படி எனது வாழ்வில் தியேட்டர்கள் மிகவும் குறைந்த பங்கே வகுத்து இருக்கின்றன அதுவும் ரஜினி, கமல், மணிரத்தினம் புண்ணியத்தில்.

இந்த முறை அருப்புகோட்டை தியேட்டர் ஒன்றில் அஞ்சான் படம் பார்க்க சென்று இருந்தோம். இருக்கைகள் கிழித்து எறியப்பட்டு இருந்தன. வெத்தலை எச்சில்கள் துப்பப்பட்டு இருந்தன. ஏசி என சொல்லிவிட்டு காத்தாடி சுற்றிக்கொண்டு இருந்தது. உள்ளே வெக்கையில் குளித்துக்கொண்டு இருந்தோம். படம் பார்க்கவே மனம் இல்லை. எப்படா படம் முடியும் வீடு போவோம் என இருந்தது. இதற்கு எங்கள் ஊர் மண்ணில் அமர்ந்து பார்த்தால் காற்றாவது நன்றாக வரும். இப்படி தியேட்டர் வைத்து இருந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க போவார்கள். சும்மா தியேட்டருக்கு வந்து பாருங்க பாருங்க என கத்தும் தியேட்டர் அதிபர்கள் கிராமப்புற தியேட்டர்களில் அக்கறை செலுத்துவது நல்லது, அப்படி இல்லையெனில் பேசாமல் திருமண மண்டபங்கள் கட்டிவிட்டுப் போகலாம். தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் எச்சில் துப்புவது, இருக்கையை கிழிப்பது என நாகரிகமற்ற மனிதர்கள் மீதும் அதிக வெறுப்பு வந்தது. இவர்களுக்கு எல்லாம் கட்டை இருக்கைகள் தான் லாயக்கு.

சென்னையில் ஒரு தியேட்டர் போனோம். ஒரே இடத்தில் அங்கே கிட்டத்தட்ட பல திரையரங்குகள். அருப்புக்கோட்டையில் டிக்கெட் விலை நூறு ரூபாய், இங்கே நூற்றி இருபது ரூபாய். மிகவும் சுத்தமாக அருமையாக பராமரித்து இருந்தார்கள். மிகவும் உல்லாசமாக படம் பார்க்க முடிந்தது. எல்லா வசதிகளும் நகரங்களில் ஏற்படுத்தி கிராமப்புறங்கள் எல்லாம் கைவிடப்பட்டுவிட்டன போலவே காட்சி தந்தது. இருக்கைகள் வசதி எல்லாம் வெகு சிறப்பு. அதற்காக அருப்புகோட்டையில் இருந்து சென்னை வந்து படம் பார்த்தா செல்ல முடியும்?

திருட்டு விசிடி, படத்திருட்டு என எத்தனையோ விசயங்கள் சினிமாவை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை விட பராமரிக்கப்படாத திரையரங்குகள் கூட திரைப்படங்களை அழித்து விடும் தான்.

திரையரங்குகள் நாம் செல்லும் விருந்தினர் வீடு போல. போர்க்களம் செல்வது போலவா திரையரங்குக்கு செல்வது? திரையரங்குகள் பாதுகாக்கப்படுவது நல்ல சினிமாவை பாதுகாப்பது போலத்தான். கிராமப்புறத்து ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்களா?

(தொடரும்) 

Wednesday 17 September 2014

கேரள கடற்கரையில் ஓமனக்குட்டி

இந்தியாவில் சில நாட்கள் - 10

மலையாளம் என்றால் அது ஒருவகையான கிளுகிளுப்புதான். ஓமனே இந்தாளு எந்தா பறையிது என்ற வசனங்களும் கேரளா நாட்டு இளம்பெண்கள் குறித்த குறிப்புகளும் மலையாளப்படம் என்றால் இடைச்சேர்க்கைகளும் நிலவில் கூட நாயர் டீக்கடைகளும் என மலையாளம் கிளுகிளுப்புதான்.

கோவா செல்ல வேண்டும் எனும் திட்டம் அதிக விலையினால் தள்ளிப்போட்டுவிட்டு கேரளா செல்லலாம் என திட்டமிட்டோம். இந்தியா வரும் போதெல்லாம் கேரளா ஒரு இடம் பெற்று விடுகிறது. சென்ற இரண்டுமுறை படகுப்பயணம், படகு வீடு என கழித்தாகிவிட்டது. இந்த முறை கேரளா கடற்கரை செல்வோம் என செராய் கடற்கரை கொச்சின் நகர் அருகில் தெரிவு செய்தோம்.

கம்பம் வழியாக செல்வோம் என முடிவு செய்து கம்பத்தில் உள்ள உறவினர் வீடு சென்று அடைந்தோம். அப்போது மணி மதியம் ஒன்று. இரண்டு மணி போல கிளம்பி ஆறு மணிக்கு எல்லாம் செராய் கடற்கரை செல்வோம் என பயணித்தோம். மலைப்பாதை.

வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்கிறது. சாலையில் மலை விழுந்த சுவடுகள். பாதையை கூகிள் வழிகாட்டிக்கொண்டே வருகிறது. மலை என்பதால் அவ்வப்போது கூகிள் வழிகாட்டி தொலைந்து போகிறது. இப்படியாக மிகவும் குறுகிய பாதையில் பயணம். போகிறோம் போகிறோம் வழி வந்தபாடில்லை.

ஓரிடத்தில் வேறுபக்கம் திரும்பி சென்றிட அது மிகவும் கரடுமுரடான பாதை. அந்த பாதையில் செல்லும் வாகனம் மட்டுமே பயணிக்க இயலும். விழித்தோம். அப்போது ஒரு வாகனத்தில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை நிறுத்த சொல்லி மலையாளத்தில் பேசினார்கள். குடித்து சிவந்து இருந்த கண்கள். வண்டியை நிறுத்து என என்ஜினை நிறுத்த சொல்லி எங்கே போகணும் என கொஞ்சம் கரடு முரடாகவே பேசினார்கள். என்ன கொடுமை இது என எண்ணிக்கொண்டே அவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல மனம் மாறியவர்கள் செல்லுமிடத்திற்கு வழி சொன்னார்கள். அப்பாடா என நிம்மதியும் அங்கே இருந்து தப்பித்தால் போதும் என இருந்தது.

அங்கிருந்து திரும்பி மீண்டும் முக்கிய சாலையை அடைந்தபோதுதான் பெருமூச்சு வந்தது. அங்கே எல்லாம் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் வியப்பு அளித்தார்கள்.

ஒருவழியாய் செராய் கடற்கரை ஹோட்டல் அடைந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது. ஹோட்டல் நன்றாகத்தான் இருந்தது. இரவு சாப்பாடு அங்கேயே கிடைத்தது. ஹோட்டல் எதிரில் கடற்கரை. அலைகளின் ஆர்ப்பரிக்கும் சப்தம். இரவு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து இருந்தார்கள். அன்று தங்கிவிட்டு அடுத்தநாள் குருவாயூர் சென்றோம்.

அங்கே கோபுர தரிசனம் மட்டுமே. உள்ளே எல்லாம் செல்லவில்லை. ஓரிடத்தில் இருந்து ஓரிடம் செல்ல எத்தனை நேரம். குருவாயூர் பிரமாண்டமாக இருந்தது. மீண்டும் ஹோட்டல் வந்தோம். வந்ததும் போவதுமாக இருக்கிறதே என நினைத்தார்கள். கடற்கரையில் அன்று விளையாடினோம். முகம் அறிமுகமற்ற மனிதர்கள். சந்தோசத்தை இந்த கடற்கரை எப்படி மனதில் விதைத்துவிட்டு போகிறது.

திடீரென ஒரு அலை வந்து எங்களை தள்ளாட செய்தது. தப்பித்தோம் என ஹோட்டல் வந்ததும் மீண்டும் ஒருநாள் இருப்போம் என ஹோட்டலில் கேட்டோம். சரி காலையில் சொல்கிறோம் என சொன்னார்கள். காலையில் சரி என சொன்னதும் அங்கிருந்து நேராக கொச்சின் நகரம் சென்றோம். கொச்சினில் இருந்து ஹோட்டல் 24 கி.மீ எத்தனை நேரம். சாலை ஒன்றும் பிரமாதமாக இல்லை. சென்னை சில்க்ஸ் சென்றபோது அங்கே நிறைய மலையாள பெண்கள். அதில் நமது தமிழ்நாட்டு பையன்கள் கூட இருந்தார்கள். எவ்வித சங்கோஜமின்றி அந்த பெண்கள் பேசியது ஆச்சர்யம் இல்லை தான். எனக்குத்தான் என்ன பேசுவது என தெரியவில்லை.

யார், என்ன விபரம் கேட்டவர்கள் சோட்டனிக்கரை பகவதி அம்மன் சென்று வாருங்கள் என சொன்னார்கள். எந்தா பகவதி அம்மே. யேசுதாஸ் குரலில் ஒரு பாடலில் சோட்டனிக்கரை பகவதி அம்மன் பாட்டு கேட்டு இருந்தது நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சோட்டனிக்கரை சென்றபோது இரவு  ஆகிவிட்டது.

கோவில்கள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தது. இந்த கோவில்கள் வட இந்திய புத்த மத பாணியில் அமைந்து இருந்தது. நமது கோபுர அமைப்பு எல்லாம் இல்லை. உள்ளே சென்றால் ஒரே அலறல் சத்தம். பெண்கள் சிவனே சிவனே என சப்தம் மீறிய ஆண்களின் சிவனே சிவனே சப்தம்.

நானும் அங்கே சென்று நின்றேன். திடீரென் எனது வலது கையில் ஒரு பெண்ணின் கூந்தல் விரிந்த தலை முட்டியது. திடுக்கிட்டு விட்டேன். அந்த பெண்ணை இருவர் பிடித்து இருந்தார்கள்.

பேய் இங்கே விரட்டுவார்கள் என சொன்னார்கள். அடப்பாவிகளா என் மீது அந்த ஓமனக்குட்டி மோதி மோகினி என்னுள் சென்றுவிடுமோ என அருகில் இருந்தவர் அச்சம் கொண்டார்கள். மோதப்பட்ட கை ஆடியது. இப்படித்தான் மனப்பிரமை பிடித்து ஐயோ என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என அலறி நோய்வாய்படுபவர்கள் அதிகம்.

இறைவனை தவிர அவதாரங்களை கூட நான் நம்புவதில்லை என்பதால் இதெல்லாம் ஒரு விசயமா என சொல்லிவைத்தேன். சில மணிநேரங்கள் என்னை மோகினியாக்க பார்த்தார்கள். எந்தா பகவதி அம்மே இந்த பிள்ளையை சோதிக்கினு என எண்ணிக்கொண்டு ஹோட்டல் வந்தோம். மீண்டும் இரவில் கடற்கரை சென்றோம். அங்கே இரண்டு காதலர்கள் தனியாய் அமர்ந்து இருந்தார்கள். அலைகளை அந்த இரவில் ரசித்துக்கொண்டு இருந்தார்கள். அவள் பேசியது அலையோடு கலந்து கொண்டு இருந்தது.

அந்த இரவில் கடற்கரை கடந்தோம் அந்த காதலர்களையும். கூட்டமாக எங்கேனும் தென்படுகிறார்களா என பாதுகாவலர் பார்த்துவிட்டே எங்களை வெளியில் அனுப்பினார். பாரதியின் வரிகள் தான் எத்தனை சுகமானவை. கேரளா ஒரு இனிய மாநிலம்.

(தொடரும்) 

Monday 15 September 2014

மாணிக்கவாசகரும் கோவில் கோபுரங்களும்

இந்தியாவில் சில நாட்கள் - 9

எனக்கு மாணிக்கவாசகர் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு. அவரது திருவாசகம் எனக்கு நிறையவே பிடிக்கும். எல்லாவற்றையும் வாசித்து முடித்து விட வேண்டுமென ஆவல் எழுந்தது. அப்படி வாசித்தபோது உருவானதுதான் அடியார்க்கெல்லாம் அடியார் எனும் நாவல்.

நரிகள் பரிகள், பிட்டுக்கு மண் சுமந்தது என பல கதைகள் படித்தாலும் அவர் பிறப்பிடம் பற்றி எல்லாம் அக்கறை தோணவில்லை. திருவாதவூர் எனும் ஊர் தான் அவர் பிறந்தது என அறிந்தபோது அது எங்கே இருக்கிறது என தேடுகையில் மதுரை அருகே அதுவும் திருமோகூர் வழி என சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது.

நான்கு வருடங்கள் உத்தங்குடியில் படித்தபோது ஒத்தக்கடையில் சென்று அவ்வப்போது சாப்பிட்டு சனி தோறும் திருமோகூர் வரை சென்று வந்த நான் திருவாதவூர் சென்றதே இல்லை. இத்தனைக்கும் திருவாதவூர் பேருந்தில் தான் திருமோகூர் சென்று இருந்து இருப்பேன்.

எனக்கு இந்த திருவாதவூர் பற்றி பெரும் அக்கறை அப்போது இல்லைதான். இந்த முறை இந்தியா சென்றபோது திருமோகூர், திருவாதவூர் சென்று வர வேண்டும் என நினைத்து இருந்தேன்.

விடுமுறை நாட்கள் நெருங்கி முடிய திருவாதவூர் செல்ல முடியாதோ எனும் எண்ணம் மேலிட்டது. திருவரங்கம் சென்று அங்கே கோவில் பணிகள் பல பார்த்து, திருவரங்கமே மாறிப்போன ஆச்சர்யம் மறையாமல் திருவாதவூர் அடுத்த நாள் சென்றோம்.

திருமோகூர் கடந்து திருவாதவூர் சென்றபோது மணி பன்னிரண்டு. கோவில் நடை சாத்திவிட்டார்கள். மீண்டும் 4 மணிக்கு தான் திறப்போம் என சொன்னதும் கோபுரம் பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்து மாணிக்கவாசகர் பிறந்த இடம் சென்றோம். அங்கே கோவில் கட்டப்பட்டு இருந்தது.

பூசாரி படுத்து இருந்தார், நாங்கள் சென்றதும் கதவை திறந்து தீபம் காட்டினார். அங்கே மாணிக்கவாசகர் குறித்தும் சிவபெருமான் குறித்தும் எழுதியதைப் படித்து பார்த்துவிட்டு பூசாரியிடம் மாணிக்கவாசகரின் உறவினர்கள் இன்னும் உண்டா என கேட்க அவரும் ஆச்சரியப்படாமல் இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது இப்போ இல்லை என்றார். எனது கிராமம் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் இப்போது அந்த கிராமத்தில் இல்லை, எனக்கு நெருங்கிய உறவினர்கள் எல்லாம் கிராமத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் இருநூறு ஆண்டுகள் பின்னர் அந்த கிராமத்தில் என் உறவினர்கள் எவர் என எவரேனும் தேடி சென்றால் இதே பதில் கிடைக்கும்.

மாணிக்கவாசகரை பற்றி பிரமித்துவிட்டு திருமோகூர் வந்தோம், அங்கேயும் கோவில் மூடி இருந்தது. கோபுர தரிசனம் பார்த்துவிட்டு திரும்பினோம். நான் அடிக்கடி சொல்லும் கோபுரங்கள் தரிசித்தால் போதும் கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது. ஆனால் கோவிலுக்குள் செல்லாமல் வருவது சற்று இடைஞ்சல்தான்.

எதற்கு திருவாதவூர் செல்ல இத்தனை ஆசை கொண்டேன் என்றால் எல்லாம் அந்த மாணிக்கவாசகருக்குத்தான். சிவனும், விஷ்ணுவும் நினைத்துக்கொண்டார்கள் போல என் அடியாரை நீ வணங்கினால் என்னை வணங்குவதுபோல என.

அடியார்க்கெல்லாம் அடியார் கதையை விரைவில் முடித்துவிடுவேன் மாணிக்கவாசகர் துணையுடன்.

(தொடரும்)

Sunday 10 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 2

இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் நடந்தேறிவிட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு முடிந்து போன கதை என கணக்கு எழுதலாம் என நினைத்தால் சில விசயங்கள் தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நீ இல்லாமல் இருந்து இருந்தால், நான் இல்லாமல் இருந்து இருந்தால் போன்ற வசனங்களுக்கு குறைவில்லை. முடிந்து போன விசயங்களுக்கு கொண்டாடப்படும் உரிமைகள் என்றுமே மாறப் போவதில்லை.

2012ல் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து சென்ற பின்னர் நவம்பர் மாதம் மகனுக்கு 2013ல் மிருதங்க அரங்கேற்றம் நடத்த வேண்டும் என சொன்னபோது பயம் நிறைய இருந்தது. மிருதங்க குரு முதலில் வேண்டாம் என சொன்னவர் நவம்பரில் கேட்டபோது சரி என சொன்னதும் அதிக பயம் ஒட்டிக்கொண்டது. ஒரு வருட முயற்சிக்கு ஏழு எட்டு வருட உழைப்பு இருந்தது. மகனும் துணிவாக அரங்கேற்றம் பண்ணுகிறேன் என சொன்னபோது 2013ல் இந்தியாவுக்கு வருவது தள்ளிப்போனது. இந்த மிருதங்க அரங்கேற்ற அனுபவம்தனை ஒரு தனி பதிவாக வைத்து விட இருக்கிறேன்

2012 வந்த போது மாமனார் மாமியார் சிங்கப்பூரில் முன்னர் வசித்து இருந்ததால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது என் மனைவியின்  ஆசை, ஆனால் கோவில் கும்பாபிஷேகம் என்பதால் செல்லவில்லை. இந்த வருடம் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என முடிவு செய்து மாமனார் மாமியார் என் அப்பா என அழைத்து செல்ல முடிவு செய்து விமானபயண சீட்டு கேட்டால் அதிக விலை. எப்போதும்  இல்லாமல் எர் இந்தியா பதிவு செய்தோம்

வித்தியாசமான பயண அனுபவம் என சென்னை வந்து இன்று சேர்ந்தோம். ஹோட்டல் பக்கத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் போனால் சென்னையில் இருப்பது போல் இல்லை. விமான பயண அனுபவத்தை பின்னர் குறிப்பில் வைக்கிறேன். இப்போது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை சிங்கப்பூரில் இருப்போம்.

(தொடரும்)

Saturday 9 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் -1

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இந்தியப் பயணம். ஊர் எப்படி இருக்குமோ? மக்கள் எப்படிப் பழகுவார்களோ என உள்ளூர அச்சம் இருக்கத்தான் செய்கிறது. சென்றமுறை வந்தபோது கோவில் கும்பாபிஷேகத்தில் நாட்கள் செலவழிந்தது. ஒரு பயணக்கட்டுரை எழுதாமல் விட்டுப்போனது அந்த ஒரு முறை மட்டுமே. இம்முறை எவ்வித கட்டுப்பாடுகள் அன்றி பயணம்.

நுனிப்புல் பாகம் இரண்டு அச்சடிக்கப்பட்டு விடும். அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி. அகநாழிகைப் பதிப்பகம் மூலம் நூல் வெளிவருவது உள்ளூர ஆனந்தம். சென்ற முறை வெளியிடப்பட்ட தொலைக்கப்பட்ட தேடல்கள் போது பலருக்கு நன்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். புத்தக வெளியீடு பின்னர் இந்தியா வந்தபோது கும்பாபிஷேக வேலை காரணமாக எவரையும் சந்திக்க இயலவில்லை. ஏதோ ஒரு குற்ற உணர்வு.

ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் நிறைய எழுதினேன். என் எழுத்துக்கு இளமை அடையாளம் தந்தது காதல் வரிகள். நிறைய அறிமுகங்கள். முத்தமிழ்மன்ற உறவுகள் போல பலர் அங்கே. எவரைச் சொல்வது? எவரை விடுப்பது? இந்த இந்திய பயணத்தில் வேறு ஒரு சிறு பயணமும் உண்டு. நான் எப்போதுமே பயணம் தொடங்கும் முன்னர், பயணத்தின் போது எழுதிப் பழகியதில்லை. மொத்தமாக மனதில் வைத்துக்கொண்டு எழுதுவதே வழக்கம். இம்முறை சற்று மாற்றி அமைப்போம்.

நாளை சென்னையில் இருப்பேன்

(தொடரும்)

Friday 21 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 5

கிராமம் நோக்கிய பயணம். மின்சார தட்டுபாடு பற்றி இதுவரை ஒன்றும் அறிய வாய்ப்பு இல்லை. சென்னையில் கால் வைத்ததில் இருந்து கிராமத்திற்கு வந்த ஒரு நாள் வரை மின்சாரம் நின்றதாக தெரியவே இல்லை. மின்சார வெட்டு என்றெலாம் பேசினார்களே என யோசிக்க தோணியது. ஆனால் அன்று இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மின்சாரம் வெட்டப்பட்டது. மின்சாரம் மீண்டும் ஒரு மணிக்கு வந்தது. இந்த வேளையில்  யுபிஎஸ் உதவியது. அடுத்தடுத்து மின்சாரத் தட்டுபாடு வெகுபாடு படுத்தியது. ஒருமுறை ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மறுமுறை அதுவும் கும்பாபிஷேக விழா செல்ல காலையில் எழுந்து தயாராக மின்சாரம் இல்லாமல் போனது. யுபிஎஸ் இருந்தும் உபயோகமின்றி இருந்தது. எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்ததுதான் மிச்சம். 

தினம்தோறும் மதுரை பயணம். துணிக்கடைகள். பாத்திரக்கடைகள். வேறு என்ன சொல்ல. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் மாலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்ற திருப்தி. பணம் எதுவும் கொடுக்காமல் சாதாரண வரிசையில் நின்று சென்றபோது அலாதி இன்பம். அப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. கோவில் சுற்றி வந்தபோது சரியான கூட்டம். நல்லவேளை முன்னரே சென்று வந்தோம் என நினைத்துக் கொண்டோம். 

மதுரையில் கிளி ஜோசியரை தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்குமே கிளி ஜோசியரை காண இயலவில்லை. கடைசிவரை கிளி ஜோசியமே பார்க்க இயலவில்லை. இந்த ஜோசிய அனுகூலங்கள் எல்லாம் ஒருவகையான பொழுதுபோக்கு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த ஜோசியம், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டங்கள், இதனால் நான் அடைந்த பாதிப்புகள் நிறைய என இந்த கிளி ஜோசியம் பற்றி பேசியபோது வெகுண்டு எழுந்த ஒரு மாணவியின் வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கத்தான் செய்தது.

இந்தியாவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் குறைவு என்று சொல்வார்கள். இதற்கு காரணம், உறவு, பந்தங்கள் எல்லாம் இருப்பதால் ஆறுதலுக்கு என இருப்பார்கள், அதன் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்பு குறைவு என்பார்கள். ஆனால் இன்று மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 

கேரளாவிற்கு பயணம். எங்கு சென்றாலும் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் ஆகிவிடுகிறது. படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம் நன்றாகவே இருந்தது. அதற்கு முன்னர் பதநீர் குடிக்க வேண்டும் என பல நாள் ஆசையை கேரளா செல்லும்போது வழியில் காரை நிறுத்தி குடித்தோம். பதநீர் பதநீர் போன்றே இல்லை. பாட்டில்களில் அடைத்து விற்றார்கள். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாந்தி எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் பெரும் அவஸ்தை தான். அதற்கு பின்னர் ஒரு முறை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கதை எல்லாம் அப்பப்பா. விமான நிலையம் செல்வோமா, மாட்டோமா என பெங்களூர் நகருக்குள்ளேயே வழி தெரியாமல் இரண்டு மணி நேரம் செலவழித்தது. மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் - மதுரை. இரண்டே தினத்தில் சென்று வந்ததும் மூன்றாம் நாள் எங்கும் செல்ல முடியாத நிலை. 

என்றுமே செல்லாத குற்றாலம் இந்த முறை செல்ல வாய்ப்பு வந்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. குற்றாலத்தில் வந்து தங்கி விடலாமா என்கிற சீதோஷ்ண நிலை. ஒரு திருமணத்திற்கு சென்றபோது திருமணம் முடிந்த மறுகணமே மனிதர்கள் பறந்து போயிருந்தார்கள். 

சில நண்பர்கள் கோவித்து கொண்டார்கள். ஒரே ஒரு நண்பர் பல வருடங்கள் கழித்து வந்து பார்த்தார். பழைய கதைகள் பேசிய பொழுது நன்றாகவே இருந்தது. உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே. 

இந்தியா என்றால் உறவுகள் , விருந்தோம்பல். திருவிழாக்கள். என்ன சொல்லி தந்தது இந்தியா என்று எண்ணி பார்க்கையில் என்ன நான் கற்று கொண்டேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. திருவள்ளுவர் சொன்னதுதான். கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இந்தியா என்றுமே நல்லதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. எடுத்துக் கொள்பவர்கள் மாறிவிட்டார்கள். 

முற்றும். 

Friday 14 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 4

முதலில் நல்லியில் துணிகள் வாங்கலாம் என ஐயர் அழைத்து சென்றார். வேஷ்டிகளும், துண்டுகளும் மட்டுமே அதிகமாக வாங்கினார். நல்லியில் முடித்து கொண்டு லிஸ்ட் கொடுத்த பொருட்கள் வாங்க மீண்டும் அதே இடத்திற்கு சென்றோம். ஆடி கார்த்திகை என்பதால் கோவிலில் கூட்டம் நிறைந்து இருந்தது, அதோடு அந்த பாதையை அடைத்து வைத்து இருந்தார்கள். காரினை நிறுத்த எங்குமே இடம் இல்லை. என்ன செய்வது என புரியாமல் முழித்து நின்றோம். 

அப்போது ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்த பக்கத்தில் அப்படி அப்படியே கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடம் நோக்கி காரினை நிறுத்தினோம். ஐயர் பைக்கில் முன்னமே அந்த இடம் சென்று இருந்ததால், டிரைவர் நண்பர் காரிலிருந்து கடையை நோக்கி சென்றார். அப்போது ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. மற்றொரு கார் எங்கள் கார் மறித்து நின்றது. எப்படி இந்த வேன், கார் எல்லாம் எடுப்பது என மலைப்பாக இருந்தது. 

நிறைய பொருட்கள் என்பதால் ஒரு சைக்கிள் ரிக்சாவில் கொண்டு வருகிறோம் என தகவல் வரவே காத்து இருந்தோம். அதே போல எடை நிரப்பும் வண்டி ஒன்றில் அனைத்து பொருட்களும் வந்து இருந்தது. அதற்கு முன்னர் அருகில் இருந்த வேன் மிகவும் குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை விட்டு சென்றது கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் காருக்கு முன் இருந்த கார் அப்படியே நின்று கொண்டு இருந்தது. 

சாக்கு மூட்டைகள் காரின் பின்புறம் ஏற்றினார்கள். துரியோதனன் தனது வீட்டினை வைக்கோல் மூலம் அடைத்து விட்டது போல காரின் பின்புறம் அடைக்கப்பட்டது. ஹோமம் கட்டைகள் சில வண்டியின் மேற்புறம் போட்டார்கள். அதே குறுகிய இடைவெளியில் கார் பயணித்தது கண்டு ஹூம் என்றே பெருமூச்சு விடத் தோணியது. எத்தனை நெரிசல்களிலும் லாவகமாக கார் ஓட்ட வேண்டுமெனில் இந்தியாவில் மட்டுமே கற்று கொள்ள இயலும். 

கார் பயணித்த சில வினாடிகளில் போக்குவரத்து போலீசார் காரினை ஓரம் கட்ட சொன்னார். மறுபடியும் குளிர் தாளுக்கு பிரச்சினையா என நினைக்க, டிரைவர் நண்பர் சென்று பேசிக்கொண்டே இருந்தார். என்ன பிரச்சினையோ என தெரியாமல் காருக்குள் அமர்ந்தே இருந்தோம். திரும்பி வந்தவர் காரில் லோடு ஏற்றியது குற்றம் என சொல்வதாக சொன்னார். அப்போது இன்சூரன்ஸ் படிவம் கேட்க இவரோ இரண்டு நாட்கள் காலாவதியாகிப் போன இன்சூரன்ஸ் படிவம் வைத்து இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் படிவம் வீட்டில் இருப்பதாக சொல்ல எனக்கோ 'அடக்கடவுளே' என்று இருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் வரை கேட்பதாக சொன்னார். சரி கட்டிவிட்டு வாருங்கள் என்றேன். அதெல்லாம் தேவையில்லை என சொன்னவர் போலிஸ் ஒருவருக்கு தொலைபேசி போட்டு பேசினார். 

அந்த நேரம் வந்த ஐயர் சென்று அவர்களிடம் பேச, அவர்களோ மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிந்தது. நம் மீது தான் குற்றம், இதில் அவர்கள் மீது என்ன கோபப்பட வேண்டி இருக்கிறது என்று நினைத்தே நான் எப்போதுதான் காரினை விடுவார்கள் என யோசித்தவாறே அமர்ந்து இருந்தேன். காரினை பிடித்து வைத்துக் கொள்வார்களா என்று அப்பாவியாய் கேட்டேன். இதோ வருகிறேன் என டிரைவர் நண்பர் சென்றார். அவர் கையில் வைத்து இருந்த போனை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார். அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இவரிடம் போனை கொடுத்தார். சிறிது நேரத்தில் டிரைவர் நண்பர் முன்னூறு ரூபாய் கட்டிவிட்டு வந்தார். அந்த ரசீது பார்த்தபோது வேகமாக சென்றதற்காக அபாரதம் போட்டு இருந்தது. ஹூம் இந்தியா. 

எல்லோரும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நேர் வழியில் இங்கே வாழ்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் இந்த இந்தியாவை ஒருபோதும் சீர்திருத்த போவதில்லை. இன்சூரன்ஸ் படிவம் வைக்காத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். லண்டனில் எல்லாம் இன்சூரன்ஸ் படிவம் எல்லாம் கையில் வைத்து இருப்பதில்லை. கார் எண் தட்டினால் போதும், காரின் மொத்த வரலாறும் தெரியும். இன்சூரன்ஸ் புதுபிக்கபட்டதா நகல் வேண்டும் என்று வேறு அந்த போலீசார் கேட்டாராம். அங்கேயே பேக்ஸ் வசதி வைத்து இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதேனும் தவறு எனினும் இத்தனை நாளுக்குள் நகல் அனுப்பி வை என விட்டுவிடலாம். காரினில் லோடு ஏற்ற கூடாது என்பதற்கான சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. 

எனக்கு இனி எத்தனை போலீசார் பிடிப்பார்களோ எனும் அச்சம் வேறு. அடுத்த நாள் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் இன்சூரன்ஸ் படிவம் வந்தால் மட்டுமே காரை எடுத்து செல்லலாம் என நான் சொல்லி வைத்தேன். அதைப்போலவே டிரைவர் நண்பரின் அண்ணன் அங்கும் இங்கும் அலைந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். கிராம பகுதியில் ஸ்கேன், பேக்ஸ் எல்லாம் வசதி ஒன்றும் பெருகிவிட வில்லை. டிரைவர் நண்பர் எவ்வளவோ சொல்லியும் நான் இன்சூரன்ஸ் படிவத்துடன் தான் செல்ல வேண்டும் என சொன்னது வீணான விசயமாகவே இருந்தாலும், முக்கியமான விசயமாகவே எனக்கு தெரிந்தது.  அதற்கு பின்னர் எவரும் காரை பிடிக்கவே இல்லை. 

நகரத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என நினைத்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு வரை செல்ல வேண்டிய நிர்பந்தம். எனவே மீண்டும் அதே போக்குவரத்து நெரிசல். விஜயகாந்த் வீடு சென்றபோது மாலை மணி மூன்று. சாலையில் குழி தோண்டி போட்டு இருந்தார்கள். அவரது வீட்டில் காவல் போடப்பட்டு இருந்தது. இருப்பினும் எவரும் எளிதாக செல்லுமாறு வீட்டின் வெளிவாயில் திறந்தே இருந்தது. 

சென்னையில் இருந்து கிராமம் நோக்கிய பயணம். நகரத்தை விட்டு வெளியேறவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிப்போனது. கார் சென்ற வேகம் மிரள செய்தது. இடம் செல்கிறார்கள், வலம் செல்கிறார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லை. மெதுவாக செல்லும் வண்டி வலம் செல்கிறது. ம்ஹூம். போதும் போதும் என்றாகிவிட்டது. 

இரவெல்லாம் பயணித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்று. அப்பாடா என்று இருந்தது. தமிழகம் மட்டுமே இப்படியா! 

(தொடரும்) 

Wednesday 12 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 3

கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்பதால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க லண்டனில் இருந்து வருகை தந்த ஐயர் அவர்களை சந்திக்கும் ஏற்பாடு இருந்தது. நேராக கோயம்பேடு வந்து விடுங்கள் அங்கே இருந்து பாரிமுனை பக்கம் செல்லலாம் என சொன்னார். 

நாங்கள் அவரை சந்தித்த நேரம் மாலை நான்கு மணி மேல் இருக்கும். பைக்கில் வந்தவர் காரில் ஏறாமல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நேரம் ஆகி கொண்டு இருக்கிறதே, கடைகள் எல்லாம் மூடிவிடுவார்கள் எனும் அச்சம் வேறு. சின்ன சின்ன தெருக்களில் கார் சென்றபோது எத்தனைவிதமான இடைஞ்சல்களில் இந்தியாவில் வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

அவரது வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் சென்றபோது நேரத்தின் மீதுதான் கண் இருந்தது. சில இயந்திரங்களை  முன்னரே வாங்கி வைத்ததாக காட்டினார். இவர் லண்டனில் ஏற்கனவே பணி புரிந்துவிட்டு மீண்டும் லண்டனில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்காக ஓராண்டு முன்னர் தான் லண்டனில் உள்ள கோவிலில் இணைந்தார். வெளிநாட்டில் பணி புரிவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடுவதாக அவர் சொன்னபோது மறுக்க இயலவில்லை. ஆனால் அதற்கடுத்து நான் கண்ட காட்சிகள் இந்தியாவில் உள்ள திறமைமிக்க வியாபாரிகள் போல உலகில் காண்பது சற்று கடினம் தான் என்றே எண்ண தோன்றியது. 

முதலில் தேவையான ஆராதனை பொருட்கள், கலசங்கள், குத்துவிளக்கு, குடை என வாங்கிட மிகவும் குறுகலான தெரு ஒன்றில் சென்றோம். இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது சாலையில் ஆட்டோ வந்து போய் கொண்டிருந்தது. நடப்பதற்கே மிகவும் கடினமாக இருந்தது. அந்த தெருவில் இருந்த சில கடைகளில் விசாரிக்க ஒரே பொருளின் விலை வேறு வேறாக இருந்தது. சரி என ஐயர் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றார். கடை மிகவும் சிறிதாக இருந்தது. இந்த கடையில் என்ன பொருட்கள் இருந்து விடப்போகிறது என நினைக்க மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நிற்கவே இடம் இல்லாமல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எந்த பொருள் கேட்டாலும் அங்கே வேலை செய்தவர் ஓடோடி எடுத்து காண்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இல்லாத பொருளை கூட இல்லை என சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என கணக்கு போட்டபோது ஓரிரு மணி நேரங்களில் லட்சம் ரூபாய்க்கான வியாபாரம்! சில்லறை வியாபார கடைகள் முதலாளிகளிடம் பேசினால் தான் கடைகளின் நிலவரம் புரியும் என நினைக்க கடைகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து போய் கொண்டிருந்தார்கள் மக்கள். 

அடுத்தொரு கடை. அங்கே ஹோமத்திற்கு தேவையான கட்டைகள், குங்குமம் போன்ற பொருட்கள். அந்த கடையும் சிறிதாகத்தான் இருந்தது. நாங்கள் அந்த கடையை சென்றடைந்தபோது இரவு பத்து மணி இருக்கும் என்றே நினைக்கிறேன். கடையை மூடும் நேரம். லிஸ்ட் கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி வாங்கிகோங்க என்றார். அவரது மேசையில் கணினி இல்லை, கால்குலேட்டர் இல்லை. ஒவ்வொன்றாக சொல்ல விலை போட்டு கொண்டே வருகிறார். இது கிடைக்கும், இது பக்கத்து கடையில்  வாங்கிகொள்ளுங்கள் என வேகமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். அடுத்து விறு விறுவென மொத்த கணக்கையும் போட்டு காட்டியபோது எனக்கு சரிபார்க்க மனமே வரவில்லை. சரி முன் பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். 

துணிகள் இனிமேல் வாங்கமுடியாது, நல்லி சில்க்ஸ் நாளை வாருங்கள் என ஐயர் இடம் சொல்லி அனுப்ப இரவு சாப்பாடு மெக்டோனல்ட்ஸ் சென்று நாங்கள் சாப்பிட்டோம். நான் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. அவனுக்கு தமிழ் தெரியாதோ என நான் நினைக்க அங்கே வேலை பார்க்கும் மற்றொரு பையனிடம் தமிழில் பேசினான். சரி என நான் மீண்டும் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் மட்டுமே என்னிடம் பதில் சொன்னான். தமிழில் சொல்லுங்க என நான் சொன்னது அவனது காதில் விழவே இல்லை. மொழி தொலைந்து போய் விடும் அநாகரிகம்! நகரத்தில் மட்டுமே இப்படி, அதனால் அச்சப்பட தேவையில்லை என்றே டிரைவர் நண்பர் சொன்னார். 

பன்னிரண்டு மணிக்கு ஹோட்டல் அடைந்தபோது அன்றைய தின அலைச்சல் எல்லாம் தொலைந்திட மீண்டும் பெய்த மழைத் தூறலில் சிறிது நேரம் நடந்தோம். காலையில் எழுந்தபோது எட்டு மணி மேல் ஆகி இருந்தது. கிளம்பி தயாராக பத்து மணி ஆகி இருந்தது. இனி சாப்பாடு கிடையாது என நினைத்து ஹோட்டலில் இருக்கும் உணவகம் செல்ல பத்தரை மணி வரை உணவகம் திறந்து இருக்கும் என்றார்கள். கொஞ்சம் நிம்மதி. இட்லி, பொங்கல் வடை என நமது உணவு. பேசாமல் இந்த உணவுக்காகவே இந்தியாவில் வாழ்ந்துவிட்டு போகலாம் என்றே தோணியது. 

திடீரென எனது மனைவி, அதோ ஒரு நடிகை என்றார் (வீட்டில் சன் டிவி, டிவிடி படம் நாங்கள் பார்ப்பது உண்டு). நாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து மூன்று நாற்காலி தள்ளி தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் நடிகை ஜெனிலியா. அவரைப் பார்க்க வேண்டும் என எவரும் ஓடவில்லை. அங்கே பலரும் சாதாரணமாகவே இருந்தார்கள், நாங்கள் உட்பட. அங்கே மிகவும் சாதாரணமாக அவராலும்  இருக்க முடிந்தது. இந்தியாவில் சினிமாவிற்கு என ஒரு தனி இடம், சினிமா கலைஞர்களுக்கு என தனி மரியாதை இருந்தாலும் அங்கே எதுவும் தென்படவில்லை. 

ஹோட்டலில் இருந்து சென்னை வரவே மதியம் ஆகிப்போனது.  மீண்டும் வேறு சில கடைகள் சென்றோம். நல்லியில் சாமிக்கு தேவையான உடைகள் வாங்கினோம். புது நல்லி, பழைய நல்லி என இருப்பது அன்றுதான் தெரிந்து கொண்டேன். சென்னையில் இருந்த சகோதரர் வீடு சென்றோம். அங்கிருந்து மற்றொரு உறவினர் வீடு சென்றோம். மேலும் சில உறவினர்கள் வீடு இருந்தாலும் செல்ல இயலவில்லை. உறவினர் வீடு சென்றபோது இரவு பத்து மணி. தைக்க கொடுக்கப்பட்ட துணி வாங்கிட அன்று முடியாமல் போனது. நாளை எப்படியாவது வாங்கித்தான் ஆக வேண்டும். சென்னையில் இருந்த போக்குவரத்து நெரிசல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல ஆகும் நேரம் எல்லாம் கணக்கில் வைத்து ஹோட்டலில் இருந்து நாளை மறுநாள் அப்படியே அங்கிருந்து நகரத்திற்குள் வராமல் கிராமம் சென்று விடலாம் என நினைத்தோம். 

அடுத்த நாள் வழக்கம்போல காலை உணவு. அன்று போக்குவரத்து போலீசார்... இந்தியா என்றுமே இந்தியாதான். 

(தொடரும்) 

Friday 7 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 2

காரினை நடு சாலையில் நிறுத்திவிட்டு, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களிடம் பேசி அவர்களை அழைத்து வந்தார் டிரைவர். நானும் இறங்கி கொள்கிறேன் என நான் சொல்ல, வேண்டாம் சார் என்றே சொன்னவர் அந்த மூன்று நபர்கள் காரினை தள்ள, கார் ஏனோ கிளம்பவே இல்லை. அவர்கள் காரினை சாலையின் ஓரமாக தள்ளிவிட்டு  சென்றுவிட்டார்கள். 

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் எதுவுமே வேகமாக செல்லாமல் இருந்தது மனதில் அச்சத்தை விலக்கி இருந்தது. மீண்டும் காரில் இருந்து இறங்கிய டிரைவர் வேறு ஆட்களிடம் பேசிவிட்டு வந்தார். வாகனங்கள் கிளம்ப, பேசி வைத்த ஆட்கள் மறக்காமல் வந்து காரினை தள்ளினார்கள். கார் இந்த முறை கிளம்பியது. காரினை தள்ளியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். ஓகே என ஒரு வார்த்தையோடு விலகிப் போனார்கள். யார் இவர்கள்? உதவி என கேட்டதும் ஓடோடி வந்து செய்துவிட்டு போகும் யார் இவர்கள்? 

லண்டனில் ஏழு வருடங்கள் முன்னர் மாலை ஏழு மணிக்கு சாலையில் திடீரென நின்று போன எனது காரினை நான் மட்டுமே தள்ளி சென்ற நினைவுகள் வந்தது. அதிகமான வாகனங்கள் சாலையை அலங்கரித்தாலும் அவரவர் வேகம் அவரவருக்கு தெரிந்தே இருக்கிறது. யார் மீதும் அத்தனை எளிதாக மோதமாட்டார்கள் என டிரைவர் சொன்னபோது எத்தனை நெருக்கடியிலும் வாழப் பழகிப் போன இந்திய சமூகம் மனதோடு நின்றது. 

மகாபலிபுரம் சாலை என நான் தவறாக தகவல் தர, ஈ சி ஆர் சாலையில் செல்லாமல் மகாபலிபுரம் சாலையில் சென்று ஓரிடத்தில் விசாரித்தபோது இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் சொன்ன பின்னர் தான் எனக்கு ஈ சி ஆர் சாலையே நினைவுக்கு வந்தது. ஈ சி ஆர் சாலை நேர் பாதை. மகாபலிபுரம் சாலை சுற்றுப் பாதை. ஒரு வழியாக ஹோட்டல் வந்தடைந்தபோது போதும் போதும் என்றாகிவிட்டது. இத்தனை தொலைவிலா ஹோட்டல் என சற்று அயர்ச்சியாக இருந்தது. சென்னை நகரத்துக்குள் செல்ல மலைப்பாக இருந்தது. 

ஹோட்டல் சென்றதும், அங்கே மாலை போட்டு வரவேற்றார்கள். மிகவும் சிறப்பான வரவேற்பாக இருந்தது. தனியாக வில்லா ஒன்றை பதிவு செய்து இருந்தோம். வில்லாவிற்கு வெளியே ஊஞ்சல். வில்லாவில் இருந்து நடக்கும் தொலைவில் கடல். மிகவும் ரம்மியாமாக இருந்தது. அறையின் அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. திறந்த வெளியில் குளிக்கும் வண்ணம் ஒரு அறை இருந்தது. அந்த அறையை சுற்றிய சுவர் இருப்பினும், வெளியில் இருந்து பார்த்தால் மூங்கில் வைத்து கட்டப்பட்டு இருந்தது. விலை அதிகம் தான். ஆடம்பரத்திற்கு எப்போதுமே விலை அதிகம் தான். சில நேரங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தாது போனால் வேறொரு வாய்ப்பு அத்தனை எளிதாக வந்துவிடுவதில்லை. சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டு சென்னை நகரத்திற்குள் சென்றோம். 

வாகனத்தை ஒரு சாலை விதி கண்காணிப்பாளர் நிறுத்தினார். டிரைவர் அவரிடம் சென்று பேசி நூறு ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வந்தார். என்னவென விசாரித்ததில் வாகனத்தின் கண்ணாடியில் குளிர்ச்சிக்காக ஒட்டப்பட்ட தாளினை அகற்ற வேண்டும் எனும் விதி உள்ளது என சொன்னார். இருப்பினும் இது குறித்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என சொன்னதும், இதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சொன்னார். எனக்கு ஏனோ எதற்கு விதிகள் மதிக்கப்படுவதில்லை என்றே தோன்றியது. உடனே எடுத்துவிடுங்கள் என டிரைவர் நண்பரிடம் சொல்லிவைத்தேன். மதுரைக்கு சென்ற பின்னர் எடுத்துவிடலாம் என்றே சொன்னார். 

சாலையின் தன்மை என்னை மிரள செய்தது. வேலை நடக்கிறது என எங்கே பார்த்தாலும் சாலைகள் தங்களது அழகை சூறையாடிக் கொண்டிருந்தன. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பெராஸ் மால் சென்றோம். கட்டிடத்திற்குள் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஆடம்பரத்திற்கு விலை மிக மிக அதிகம். மனைவிக்கு மிகவும் சந்தோசம். சிறிய சிறிய கடைகளாக இருந்தாலும் மிகவும் அழகிய பொருட்கள் நிறைந்தே காணப்பட்டன. இந்தியா கலைக்கு மட்டுமல்ல, கலைத்துவம் வாய்ந்த பொருட்களுக்கும் உன்னதமான இடம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. ஒரு கடையில் அந்த பொருட்களை செய்து கொண்டிருந்தவரை கண்டபோது பிரமிப்பு மிஞ்சியது. எத்தனை திறமையான மனிதர்களை கொண்டது இந்தியா என்று நினைக்கும் பொது பெருமிதமாக இருந்தது. அவரிடம் நான் பேசிய தமிழ் அவருக்கு புரியாமல் போனதற்கு காரணம் அவர் வடநாட்டினை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. 

துணிகள் வாங்கி அங்கேயே தைக்க கொடுத்துவிட, மாலை ஆறு மணிக்கு வாருங்கள் என அவர்கள் சொல்லி வைக்க, நகைக் கடை ஒன்றுக்கு சென்றோம். பணம் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். மக்கள் நிறைந்த கடைகள் என மறுபக்கம். மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள். எல்லா நாட்டிலும் உண்டு. பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க இந்தியா ஒன்றே சிறந்த இடம். 

லண்டனில் பழைய நகை கொடுத்தால் பத்து சதவிகிதம் கூட நகைக்கான பணம் தரமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே பழைய  நகை எனினும் நகைக்கான பணத்தை ஓரளவு மதிப்புக்கு தருகிறார்கள் என்றே தோணியது. கையில் இருந்த பிளாஸ்டிக் அட்டையை கொடுத்ததும், பணம் எடுக்க இயல வில்லை என கடையில் இருந்த பெண் சொன்னதும் திடுக்கென இருந்தது. சரி என கிரெடிட் கார்ட் வாங்கி பார்த்தால் முடிந்து போன கிரெடிட் கார்ட். அடக்கடவுளே, என்ன செய்வது என திகைக்க எதை உபயோக்கிக்க கூடாது என்று இருந்தேனோ அந்த கார்டுகளை கொடுத்து நிலைமையை சரி செய்து  நகை வாங்கி கொண்டு வெளியே வந்தால் மழை. அந்த மழை சத்தத்தில் எத்தனை முறை சொன்னேன், எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து வாருங்கள் எனும் மனைவியின் அன்பு பாராட்டு வேறு. 

இந்த மழை கிராமப் பகுதியில் விழுந்து தொலைய கூடாதா எனும் ஆதங்கம் மனதை தொட்டு சென்றது. மழை விடும் வரை கடையின் வாசலிலேயே நின்றோம். உடலில் பட்டு தெறிக்கும் மழை குமிழிகள், அந்த மழையோடு வந்து போகும் காற்று. இந்தியா இன்னும் இதமாகவே இருக்கிறது. 

துணிகள் தைக்க கொடுத்த கடைக்கு தகவல் சொல்லலாம் என அவர்கள் கொடுத்து இருந்த அட்டையில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, இந்த எண் தற்போது தொடர்பில் இல்லை என்றே வந்தது. அருகில் இருந்த நபரை தொடர்பு கொள்ள சொன்னேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் தொடர்பு பண்ணியவர், இந்த நம்பர் இணைப்புல இல்லையே சார் என்றார். இந்தியா என்னதான் சொல்லி தந்தது?

(தொடரும்) 


Wednesday 5 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய  விடுமுறை பயணம்  முடிந்து போன அலுப்பு மனதை அழுத்தத்தான் செய்கிறது. மீண்டும் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் எனும் ஆர்வம் இருப்பினும், எப்போது லண்டன் சென்று சேர்வோம் என்கிற மனநிலையை இந்த விடுமுறை பயணம் விதைத்து சென்றது. 

இரண்டு வருடங்கள் முன்னர் சென்ற பயண நினைவுகள் மனதை அழுத்த, காளையார்கரிசல்குளம் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்தனை முன்னிட்டே இந்த பயணம் முடிவானது. சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவது என்று சில மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் மூன்று நாட்கள் தங்கி செல்லலாம் என முடிவானது. இந்த மூன்று நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாகவே திட்டம், அதோடு சென்னையில் கடைகள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து செல்லலாம் என நினைத்து தங்குவதற்கு ஹோட்டல் தேடினோம். சென்னையில் இருக்கும் உறவினர்கள் ஏதேனும் நினைப்பார்களோ எனும் எண்ணம் எட்டிப் பார்த்தாலும் ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்து தாஜ் ஹோட்டல் தெரிவு செய்தோம். இந்த தாஜ் ஹோட்டல் ஒன்று நகரத்திலும், மற்றொன்று நகரத்தை தாண்டியும் இருந்தது. நகரம் வேண்டாம் என முடிவு செய்து ஈ சி ஆர் சாலையில் கோவளம் கடற்கரையில் அமைந்து இருக்கும் விவான்டா தாஜ் ஹோட்டல் முன்பதிவு செய்தோம். 

பெரும் ஆவலுடன் லண்டனில் இருந்து கிளம்பி அதிகாலை சென்னை வந்தடைந்தது விமானம். என்றுமில்லாத திருவிழாவாக மேலும் இரண்டு விமானங்கள் துபாய் மற்றும் இன்னொரு இடத்தில் இருந்து அதே வேளையில் வந்து இறங்க விமானநிலையத்தை விட்டு வெளியே வரும் முன்னர் போதும் போதும் என்றாகிப்போனது. நேராக விளாச்சேரியில் உள்ள ஆள் இல்லாத உறவினர் வீட்டில் சென்று முதலில் இறங்கினோம். புதிதாக கட்டப்பட்ட வீடுகள். அந்த இடத்திற்கு செல்லும் பாதையோ கிராமப் பாதை போல் மோசமாக இருந்தது. 

காலை உணவு சாப்பிடலாம் என கடைக்கு சென்று பொட்டலம் வாங்க சென்றவர்கள் வர நாழிகை ஆகி கொண்டே இருந்தது. ஓரிரு மணி நேரம் பின்னர் அவர்கள் பொட்டலங்கள் வாங்கி வர, சாப்பாடு கடைகள்  எல்லாம் ஏழர மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என்றதும் இத்தனை தாமதமாகவா திறப்பார்கள் என்றே மனம் எண்ணியது. 

லண்டனில் இருந்து எங்களுடன் வந்து இருந்த உறவினர்கள் கிராமம்  நோக்கி கிளம்பி செல்ல நாங்கள் ஹோட்டல் நோக்கி சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு பின்னர் தான் அறை கிடைக்கும் என்றாலும், வாருங்கள் அறை காலியாக இருந்தால் தருகிறோம் என ஹோட்டல் பணியாளர் வர சொல்லவே தைரியமாக சென்றோம். 

இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய கார். சோளிங்கநல்லூர் அருகில் சென்றபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென எங்களது கார் நின்று போனது. எத்தனையோ முறை முயற்சி செய்தும் கார் கிளம்பவே இல்லை. சாலை நடுவே கார். இருபுறங்களிலும் வாகனங்கள் விலகி சென்று கொண்டு இருந்தது. காரினை தள்ளிவிட்டால் கிளம்பிவிடும், பேட்டரி பிரச்சினை என டிரைவர் சொல்ல எவர் வந்து தள்ளுவது என நினைக்க, எங்கள் இருவரை காரிலியே இருக்க வைத்துவிட்டு காரினை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் இறங்கி சென்றதும் திக் திக் என்று இருந்தது. பயமுறுத்திய கார். 

(தொடரும்)


Thursday 12 April 2012

மனிதர்களின் தீவு

Isle of Man   

இந்த தீவு அயர்லாந்து கடலில் அமைந்து உள்ளது. கிட்டத்தட்ட நூறாயிரம் மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த தீவு அழகிய மலைகளால் நிரம்பி உள்ளது. வான்வெளி போக்குவரத்து மிகவும் குறைவு. கடல்படகு மூலம் செல்லும் வழியில் தான் பெரும்பாலோனோர் செல்கிறார்கள். 

வீட்டில் இருந்து இந்த கடல் படகு கிளம்பும் இடத்திற்கு செல்ல ஆறு மணி நேரம் ஆனது. காரினை கடல் படகுதனில் எடுத்து செல்லும் திட்டத்துடனே பயணம் தொடங்கியது. கடல் படகு செல்லும் இடம் அடைந்ததும் சில சோதனைகள் செய்த பின்னர் கடல் படகினில் அனுமதித்தார்கள். சகல வசதிகளுடன் கூடிய கடல் படகு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. தனிக்கட்டணம் செலுத்தினால், நான்கு படுக்கை வசதி உடைய தனி அறை ஒன்று பெற்று கொள்ளலாம். அதைப்போலவே தனிக்கட்டணம் செலுத்தி நல்ல வசதியான இருக்கையுடன், உணவும் பெற்று கொள்ளலாம். 

மூன்று மணி நேரம் முப்பது நிமிட பயணம். எங்கள் இருக்கைக்கு எதிரே ஒரு எழுபத்தி ஐந்து வயது நிரம்பிய பாட்டியும், அவரது பத்து வயது நிரம்பிய பேத்தியும் அமர்ந்து இருந்தார்கள். புன்னகை மட்டுமே முதலில். அவர்கள் இருவரும் சீட்டு விளையாடி கொண்டு இருந்தார்கள். நாங்கள் காரில் வந்த அலுப்பில் கடல் பரப்பை பார்த்து கொண்டே சென்றோம். அவ்வப்போது உணவு வந்து தந்தார்கள். கிட்டத்தட்ட தீவினை அடைய ஒரு மணி நேரம் இருக்கும்போது அந்த சிறுமி இன்னும் எத்தனை நேரம் என பாட்டியிடம் கேட்டு வைக்க, நான் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என சொன்னேன். அந்த வார்த்தைகள் பல விசயங்கள் பேச உதவியாக இருந்தது. 

அந்த பாட்டியின் கதை வெகு சுவாரஸ்யம். அவரது கணவர் இறந்து போன பின்னர், இந்த தீவில் இருந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டு எட்டு வருடங்களாக பழகி இருக்கிறார்கள். இந்த தீவில் இருந்த அவரின் மனைவியும் இவருடன் பழக்கம் ஏற்படும் முன்னர் காலமாகிவிட்டார். அவர் ஆக்ஸ்போர்ட் வருவதும், இவர் இந்த தீவுக்கு செல்வதுமாக இருந்து இருக்கிறார்கள். பலமுறை அவர் இவரை திருமணம் செய்ய வேண்டும் என சொன்னபோது மறுத்து வந்திருக்கிறார் இவர். ''எத்தனையோ இடங்கள் சுற்றினோம், எனக்குள் காதல் இருந்தது, ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல மனம் வரவில்லை. எத்தனையோ அருமையான இடங்கள் சென்றபின்னரும், எனது வீட்டின் பின்பக்க தோட்டத்தில் அவரிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என சென்ற வருடம் தான் சம்மதம் சொன்னேன்'' என அவர் சொன்னதும், அவரின் பேத்தி ''நான் தான் மணமகளின் தோழியாக இருந்தேன்'' என கிளுக்கென சிரித்து கொண்டார். ''அதுவும் திருமணத்தின் போது நான் எல்லா தருணங்களிலும் உடன் இருப்பேன் போன்ற வசனங்கள் எல்லாம் சொன்னபோது நானும் எனது உறவுக்கார பையனும் சிரித்துவிட்டோம்'' என்றார் அந்த சிறுமி. மேலும் ''நானும் திருமணம் செய்து கொள்வேன் ஆனால் இந்த வயதில் அல்ல'' என வாய் மூடி அவர் சொன்னது நகைப்பாகவே இருந்தது. 

தீவு குறித்த விசயங்கள் பல பகிர்ந்து கொண்டார். எதையும் அங்கிருப்பவர்கள் எளிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என அச்சம் தந்தார். தாங்கள் வரும்போதெல்லாம் ஒரு மலைப்பகுதிக்கு செல்வதுண்டு என சொன்னார். அப்போது அவர் கீழே விழுந்த கதையும், அவரை ஏற்றி கொண்டு செல்ல ஹெலிகாப்டர் வருவதற்கு ஆயத்தமாக இருந்த விசயம் என நினைவுகளை பகிருந்து கொண்டார். காரில் வருபவர்கள் கடல்படகில் இருந்து வேகமாக சென்று விடலாம் என சொன்னவர் தீவுதனை நெருங்க நெருங்க, தீவு நன்றாக தெரியும், ஆனால் இப்போது தெரியவில்லை என சொல்லிக்கொண்டார். வருடாந்திர பயண சீட்டு வாங்கி வைத்து இருக்கிறாராம். இப்படியாக அவர்களுடன் அந்த நேரம் கழிந்தது. நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் கடல் படகு நிற்கும் இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் என எனது மனைவியிடம் விளையாட்டாக சொல்லி வைத்திருக்க, அதை அவரிடம் கேட்டு ஊர்ஜிதம் செய்ய நினைத்தார். அதற்கு அந்த பாட்டி, இந்த தீவுதனையே மூன்று மணி நேரத்தில் சுற்றி விடலாம், எங்கு சென்றாலும், ஒரே இடத்திற்குத்தான் வந்து சேரும் என்றார். 

நிறுத்தம் வந்தது. விடைபெற்றோம். பத்தே நிமிடங்களில் ஹோட்டல் வந்தோம். எங்கே காரை நிறுத்துமிடம் என கேட்க ஹோட்டல் உள்ளே சென்று கேட்டுவிட்டு வெளியில் வந்தபோது கால் வழுக்கி ஒரு கம்பியின் உதவியால் உட்கார்ந்து எழுந்தேன். காலில் அணிந்து இருந்த சூ பயமுறுத்தியது. வீட்டில் கிளம்பியதில் இருந்து இதோடு மூன்று முறை வழுக்கிவிட்டது. எனினும் காரை ஹோட்டல் பின்புறம் நிறுத்திவிட்டு அறைக்கு சென்றோம். அழகிய அறை. தோட்ட அமைப்புடன் கூடிய அறையில் ஒரு பால்கனி என அழகாகவே இருந்தது. நாங்க வந்து சேர்ந்த நேரம் ஆறு மணி என்பதால் மழை தூற்றி கொண்டு இருந்தது. 

இரவு சாப்பிட மில்லினியம் சாகர் எனும் ஒரு இந்தியன் உணவு கடை தேடி சென்றோம். இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்த இடம் தேடி சென்றபோது அங்கே அப்படி ஒரு கடை இல்லவே இல்லை. சிலரிடம் விசாரித்தோம். தெரியாது என்றார்கள். ஒரு இந்தியரை சந்தித்தோம், அவர் சரியாக இடம் சொன்னார். அங்கே சாப்பிட்டுவிட்டு நடந்து வர தாஜ் ரெஸ்டாரன்ட், டேஸ்ட் ஆப் இந்தியா என கடைகள் தென்பட்டன. அடுத்த நாள் காரினை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஊராக சென்றோம். அந்த பாட்டி சொன்னது போலவே மதியம் இரண்டு மணிக்கெல்லாம் மொத்த தீவையும் சுற்றி விட்டோம். நாங்கள் தங்கி இருந்த இடமே பெரிய நகரம். மற்றவை எல்லாம் சின்ன சின்ன நகரங்களாக இருந்தது. நிறைய பேர் நடந்தார்கள். சைக்கிளில் சென்றார்கள். அற்புதமான மலைகள் கேரளா, ஊட்டி போன்ற இடங்களை நினைவில் கொண்டு வந்தது. பனி மூட்டங்கள் மாலை வேளையில் மலையை தழுவியது. அதில் காரில் சென்றபோது அச்சமாகவே இருந்தது. எப்போதாவது ஒரு கார் செல்லும். மற்றபடி தொடர்பு அற்ற பிரதேசங்களே. அன்று இரவு தாஜ் ரெஸ்டாரன்ட் சென்றோம். பதிவு செய்யாததால் குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என சொல்லி இருக்கை தந்தார். நாங்கள் மட்டுமே இந்தியர்கள். இந்திய உணவை பலரும் ரசித்து சாப்பிட்டார்கள். 

அடுத்த தினம் மிகவும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றோம். அப்படி செல்லும்போதெல்லாம் சென்ற பாதையே திரும்ப திரும்ப வந்தது. கடற்கரை என சொல்லமுடியாது. எல்லா இடங்களும் கடலை ஒட்டியே இருந்தது. அன்று இரவு டேஸ்ட் ஆப் இந்தியா செல்ல அவர்கள் எல்லாம் பர்மின்காம் பகுதி சேர்ந்தவர்கள் என சொன்னார்கள். இரண்டாம் தினம் சில இந்தியர்களை பார்த்தோம். மிகவும் அமைதியான தீவு. எந்த கொள்ளை, கொலை எதுவும் நடக்காத தீவு என பாட்டி சொன்னது நினைவில் வந்தது. எத்தனையோ ஆபத்தான சாலைகள் எல்லாம் சென்று வந்தாலும் பயம் என்று எதுவும் இல்லை. சின்ன சின்ன சாலைகள் என மொத்த தீவையும் மீண்டும் சுற்றியாகி விட்டது. இனி பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என நினைக்க மேலும் இடங்கள் தென்பட்டன. அடுத்த நாள் நாங்கள் இருந்த இடத்தில் இருந்த நகர்புற கடைகள் பார்த்துவிட்டு முன்னொரு காலத்தில் தண்ணீரில் இருந்து மின்சாரம் உருவாக்க செய்யப்பட மிகப்பெரிய சக்கரம் ஒன்றை கண்டோம். அப்படியே சாக்லேட் தொழிற்சாலை (சிறியது) கண்டோம். பெரிய கோட்டைகள் கண்டோம். அந்த கோட்டைகள் சொன்ன கதைகள் பற்பல. எப்படி மனிதர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்பட்டார்கள், எப்படி இந்த தீவினை ஆக்கிரமிக்க போர் எல்லாம் செய்தார்கள் எனும் விபரம் எல்லாம் கொட்டி கிடந்தது. இப்படியாக பயணம் முடிவடைய எப்போதும் போல் பிரமிப்பு மட்டுமே மிஞ்சியது. எப்படி மனிதர்கள் இப்படி ஒரு தீவு கண்டுபிடித்து அங்கே வாழ்க்கை நடத்தி, தொடர்ந்து வாழும் விதம்... 

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் அருகில் இருந்த கடலில் தண்ணீர் அளவு வற்றுவதும், அதிகரிப்பதும் என இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. அந்த தண்ணீருக்கள் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு தண்ணீர் வற்றியதும் பலர் சென்று பார்த்துவிட்டு திரும்பி வந்தார்கள். இரண்டு மணி நேரம் தான். தண்ணீர் அளவு கூடிவிடுகிறது. கடற்கரை என நாங்கள் முதல் நாள் நடந்த இடம், அடுத்த நாள் தண்ணீரால் நிரம்பி இருந்தது ரசிக்கும் வண்ணம் இருந்தது. நான்கு நாள் பயணம் முடிந்து வரும்போது இரவு நான்கு மணி நேரம் காரை ஓட்ட வேண்டும் என படுக்கை வசதி அறையை கடல் படகில் எடுத்து இரண்டு மணி நேரம் உறங்கிய அனுபவம் தனிதான். 

இந்த தீவு தனி அரசு எனினும், பிரிட்டனின் உதவி பல விசயங்களுக்கு இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட எட்டாயிரம் வருடங்கள் முன்னர் இங்கே மனிதர்கள் குடியேறி இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலோனோர் அயர்லாந்து, ஸ்காட்லாண்டு போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் எனவும் இவர்களின் மொழி அயர்லாந்து மொழிதனை ஒட்டியது எனவும் கருதுகிறார்கள். 

இந்த நாட்டில் விவசாயம் தொழிலாக இருக்கிறது. பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நாட்டில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு விசயம், இந்த நாட்டின் சின்னம். 

இந்த சின்னம் எதை குறிக்கிறது என அறிந்து கொள்ளும் ஆர்வம் முதல் நாளில் இருந்து தொடங்கி இறுதி நாள் வரை இருந்தது. இறுதி நாள் அன்று என்ன என தேடியதில் 'எப்படி எறிந்தாலும் கீழே விழாமல் இருந்துவிடும் ஒரு கால்' என்பதுதான் அந்த மூன்று கால் கொண்ட சின்னம். வாழ்க்கையில் ஒரு உற்சாகம் தந்துவிட்டு போனது. எனக்கு தெரிந்த உறவினர் ஒருவர் இந்த பயணத்திற்கு சில தினங்கள் முன்னர் தான் எதேச்சையாக சொன்னார். கொக்கு போன்ற படிப்பறிவில்லாத பறவைகள் கூட கண்டம் விட்டு கண்டம் சென்று சரியாக தனது இடம் திரும்பிவிடுகிறது. படித்தறிந்த மனிதர்கள் நம்மால் எதைத்தான் சாதிக்க இயலாது! அவர் சொன்னது எத்தனையோ உண்மை, ஆனால் நமது படிப்பறிவு சண்டை போடுவதிலும், உன் மதம் பெரிதா, என மதம் பெரிதா என்பதிலும். எனது வீடு பெரிதா, உனது வீடு பெரிதா என பொறாமை கொள்வதிலும், வஞ்சகம் தீர்ப்பதிலும், நஞ்சுகளை விதைப்பதிலும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இது போன்ற விசயங்களால் மனித இனம் எப்படி எப்படியோ எறியப்பட்டாலும் இன்னும் இந்த பூமியில் மனித இனம், மனிதாபிமானம் செழித்தோங்கி கொண்டே வந்து கொண்டிருக்கிறது. 

வீட்டில் இருந்து கிளம்பிய கார் பாதி தூரம் சென்றபோது, எனது பையன் தலைசுற்றலாக இருக்கிறது என சொல்ல காரினை நிறுத்தி எச்சரிக்கை விளக்கை அழுத்தினேன். திடீரென ஒரு வாகனம் எங்கள் முன்னால் நின்றது. அந்த வாகனத்தில் இறங்கிய நபர் ஒருவர் எங்களை நோக்கி வந்து 'எதுவும் பிரச்சினை இல்லையே' என கேட்டுவிட்டு நாங்கள் எதுவும் பிரச்சினை இல்லை, பையனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது, அதுதான் காற்றோட்டம் கிடைக்கட்டும் என நிறுத்தினோம் என சொன்னதும் சென்றார். அந்த நிகழ்வு ஏனோ கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மனிதர்கள்... எப்படி எறிந்தாலும் மனிதாபிமானம் எப்படியேனும் தழைத்துவிடும் எனும் நம்பிக்கை இந்த மூன்று கால்கள் கொண்ட சின்னம் காட்டி கொண்டு இருந்தது. 


Saturday 10 December 2011

மனைவியின் மயோர்கா - 4

பாதை மிகவும் மோசம் என சொன்னாலும் பளிங்கு போல சாலை பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனால் சாலையின் இருபுறங்களிலும் எவ்வித பாதுகாப்பு இன்றி இருந்தது. அதன் காரணமாகவே அதை மோசமான சாலை என சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும் என நினைத்து கொண்டேன்.

மலைகளின் மீதான பயணம் வெகு சிறப்பாக இருந்தது. இயற்கை காட்சிகள் அதி அற்புதமாக இருந்தன. எல்லாம் கடந்து ஓரிடம் சென்றால் அங்கு கடற்கரை ஒன்று இருந்தது. அந்த கடற்கரையில் உற்சாகமாக மக்கள் நீந்தி கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு மீண்டும் பயணம் தொடங்கினோம்.

முதன் முதலில் பார்த்த ஹோட்டல் பக்கம் செல்லலாம் என அந்த பாதை சென்றோம். சாலைகளில் பயணித்து கொண்டே பல இடங்களை பார்த்தாகிவிட்டது. ஒரு முறை ஒரு காரினை பின் தொடர்ந்து செல்ல அந்த காரோ வழி தெரியாமல் வேறு வழி செல்ல நாங்களும் பாதை மாறினோம், ஆனால் விரைவாக சுதாரித்து அருகில் சென்ற சாலையில் மாறி நேர் வழிக்கு வந்தோம். பாதை மாறிய மற்ற காரோ பரிதவித்து நின்று கொண்டிருந்தது. இப்படித்தான் சில ஊர்களுக்கு செல்லும்போது பாதை தெரியாமல் அவதிப்பட்டது உண்டு.

அங்கிருந்து ஒரு சின்ன கிராமம் சென்றோம். அந்த கிராமம் எனது ஊரில் இருக்கும் சாலைகளை நினைவுபடுத்தியது. கட்டை வண்டிகளும், டிராக்டரும் செல்ல கூடிய பாதைகள் கொண்ட எனது ஊரில் அவ்வப்போது கார்கள் வந்து போகும். அதைப் போலவே மிகவும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த கிராமத்து சாலையில் பயணம் செய்தோம். முன்னே கார் வந்தால் விலக முடியாத சூழல். எவரேனும் திட்டிவிடுவர்களோ எனும் அச்சம் வேறு.

முத்துகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தேடி சென்றோம். அந்த தொழிற்சாலை சென்று அடையும் முன்னர் சாலையில் காட்டப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு பாதை மாறி வேறு இடம் சென்றோம். பெரிய தலைவலியாக போய்விட்டதே என நினைத்தாலும் எந்த இடங்களும் முன்னர் பார்க்காத இடங்கள் என்பதால் பயணம் வெகு சிறப்பாகவே இருந்தது. சிறிது நேரத்தில் முத்துகள் செய்யும் தொழிற்சாலை அடைந்தோம். இந்த காலத்தில் விடுமுறை என தொழிற்சாலை பூட்டப்பட்டு இருந்தது ஏமாற்றத்தை தந்தாலும் அருகில் இருந்த பெரிய விற்பனை தளத்திற்கு சென்றோம். அங்கே விற்பனையாளர்கள் அதிகம் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இந்த மயோர்கா முத்துக்களுக்கு பிரபலம் என சொல்லிக் கொண்டார்கள்.

முத்து மாலை பல பார்த்தோம், அதில் சில பிடித்து இருந்தது. ஆனால் விலையோ மிகவும் அதிகம். வாங்குவதா வேண்டாமா என மனப் போராட்டத்தில் இருக்கும் இருப்பினை நினைத்து வேண்டாம் என வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தோம். 'இனி எப்போ இங்க வரப்போறோம், வாங்கலாம் எனும் மனைவியின் ஆசையை அங்கேயே நிராகரிக்க வேண்டிய சூழல் வந்தது' சில நேரங்களில் சில விசயங்கள் நமது கட்டுபாட்டுக்குள் நம்மால் கொண்டு வர இயலும், ஆனால் பெரும்பாலும் அதன்படி நாம் நடப்பதில்லை.

அங்கிருந்து ஒரு வியாபர நகர் சென்றோம். அங்கே வித விதமான பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். பல கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. மாலை நேரம் நெருங்கி வர ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பல்மா எனும் நகரின் அழகை ரசித்தோம். எங்கேனும் நிறுத்தலாம் என நினைத்தால் இடமே இல்லை. இந்த பல்மா நகரின் அழகை சுற்றிப் பார்க்காமல் மயோர்காவின் பல இடங்களுக்கு சென்று வந்துவிட்டோம் என தோணியது. மறு நாள் பல்மா நகர் என முடிவானது. வரும் வழியில் டேஸ்ட் ஆப் இந்தியா எனும் மற்றொரு கடையை அங்கே பார்த்தோம். அதே போல வேறொரு பிரபலமான சாப்பாடு  கடை ஒன்று இருந்தது.  நாளை வரலாம் என பயணித்தோம்.  பல்மா நகரின் சிறு சிறு சாலைகளில் கட்டிடங்களுக்கு இடையில் எல்லாம் பயணித்தோம். நாம் செல்லும் பாதை சரியா தவறா என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் சரியாகவே வழிகாட்டி வழி காட்டியது என கடைசியாக தெரிந்தது. அன்று இரவும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள அதே கடையில் சாப்பிடாமல் மற்றொரு இந்தியர் கடையில் சாப்பிட்டோம். சாப்பாடு அந்த அளவுக்கு சரியாக இல்லை. பேசாமல் நேற்று சென்ற கடைக்கே சென்று இருக்கலாம் என தோணியது.

இரவு மீண்டும் அதே பாடல் காட்சி. உறக்கம். காலையில் எழுந்ததும் இன்னும் ஒரு நாளில் இந்த மயோர்கா விட்டு பிரிய வேண்டுமே எனும் ஏக்கம் வந்து சேர்ந்தது. பல்மா நகருக்கு விரைந்தோம். ஓரிடத்தில் காரினை நிறுத்திவிட்டு நடையாய் நடந்தோம். கட்டிடங்கள், படகுகள் கூடிய கடல் என பல இடங்கள் பாத்தோம். வியர்த்து விறுவிறுத்து போனது. எங்கு பார்த்தாலும் கடைகள் என தேவாலயம் எல்லாம் சென்றோம். அதே தொலைவு நடந்து திரும்பினோம். மதியம் ஆனபோது அந்த பிரபலமான கடை மூடி இருந்தது. டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்பிட்டோம்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் காரை திருப்பி தர வேண்டும் என்பதால் வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பலாம் என நினைத்தோம். இருப்பினும் ஒரு கடற்கரை சென்று திரும்பலாம் என புதிய இடத்தை அடைந்தோம். அப்பொழுதுதான் தெரிந்தது மொத்த மயோர்காவையும் சுற்றி முடித்தாகிவிட்டது என்று. கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு காரை திருப்பி ஒப்படைத்தோம்.

பணம் எதுவும் அதிகமாக வாங்கவில்லை. எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஊருக்கு கடிதம் அனுப்புவார்கள், பணம் அதிகம் எடுப்பார்கள் என இணையத்தில் படித்து இருந்ததை போல எதுவும் நடக்கவில்லை. காரை விட்டபின்னர் எங்களை பத்திரமாக ஹோட்டல் வந்து சேர்த்தார்கள். அங்கே காருக்கு பெட்ரோல் போட செல்லும் இடங்களில் வேலை பார்க்கும் பையன்கள் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே எல்லாம் நாங்களகாவே பெட்ரோல் போடும் வழக்கம் உண்டு. அதிலும் ஓரிரு இடங்களில் தானியங்கிகள் தான்.

ஹோட்டல் வந்து அடைந்ததும் அதற்கடுத்து டென்ரீப் என மனைவி சொன்னார். சிறிது காலம் போகட்டும் என நினைத்து இருந்தேன். இங்கே தான் கார் ஓட்டியாகிவிட்டதே மாட்ரிட் போன்ற ஐரோப்பா இடங்கள் போகலாம் என சொன்னார். பார்க்கலாம் என அடுத்த நாள் விமானம் ஏறி ஊர் வந்தோம்.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த எனது காரில் ஏறி அமர்ந்தபோது இந்த காரை எடுத்து சென்று இருக்கலாம் என தோணியது.

முற்றும். 

Monday 28 November 2011

மனைவியின் மயோர்கா 3

கியரின் தலைப்பாகம் இல்லாமல் காரை செலுத்திவிடுவது என எங்கேயும் நிறுத்தாமல் ஹோட்டல் வந்து அடைந்தேன். ஹோட்டலில் அதற்குள் மகனும், மனைவியும் கீழே வந்து காத்து கொண்டிருந்தார்கள். நடந்த விசயம் சொன்னதும் சற்று பயம் அவர்களுக்குள் வந்து சேர்ந்தது.

காலை உணவு ஹோட்டலிலே சாப்பிட்டோம், காலை உணவு நன்றாக இருந்தது.  அங்கே இருக்கும் கார்களில், சாலைகளில்  நமது ஊரில் இருக்கும் கார்களைப் போல, சாலைகளை போல  கிலோமீட்டர் கணக்குதான். சாலைகள் மிகவும் நன்றாக இருந்தன. அதி வேகமாக செல்லும் கார்கள் பயத்தை தந்துவிட்டு போனது. மதிய வேளை வந்தது. ஓரிடத்தில் நிறுத்தினோம். அங்கே இருந்த ஒரு பெரிய கட்டிடத்தை பார்வையிட்டுவிட்டு வீதிகளில் நடந்து செல்ல பெரிய கடைத்தெரு இருந்தது. இந்த கடைகள் எல்லாம் அன்றே முளைத்து அன்றே மறையக்கூடியவை போலிருந்தது. கூட்டம் அலை மோதியது. சில பொருட்கள் ஆசையாக இருந்தது என வாங்கினோம். இந்திய கடைகள் எதுவும் தென்படவில்லை மாறாக ஆப்பிரிக்கா போன்ற நாட்டு கடைகள் இருந்தன. தனித் தொழில் திறமையுடைய மனிதர்கள் ஆங்காங்கே அமர்ந்து படங்கள் வரைந்து கொண்டு இருந்தார்கள்.








வெவ்வேறு நாடுகளின் அழகிய பொருட்கள் விற்பனைக்கு இருந்தது. மதிய வேளையில் அங்கே இருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு சுற்றுவழி மூலம் நாங்கள் தங்கும் இடம் வந்து சேர்ந்தோம். மாலை வேளையில் நடந்து நாங்கள் தங்கி இருந்த இடத்தை நடந்தே சுற்றி பார்க்க சென்றோம்.

அப்போது இரண்டு இந்திய உணவகங்கள் தென்பட்டன. ஒரு உணவகத்தில் சாப்பிட்டபோது அங்கே இருந்த பையன் நன்றாக பேசினான். வட இந்திய நாடு எனவும், வந்து சில வருடங்களே ஆனது எனவும் சொல்லிக் கொண்டிருந்தான். சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருந்தது. ஆங்காங்கே இருந்த கடைகளைப் பார்த்துவிட்டு ஹோட்டல் திரும்பினோம்.

அடுத்த தினம் வேறு வழியாக பயணத்தை செலுத்தினோம். இந்த முறை மிகவும் அபாயகரமான சாலை ஒன்று உள்ளது எனவும் அதில் சென்றால் நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து மறுகோடியில் இருக்கும் பகுதியை பார்க்க முடியும் என்பதால் சற்று பயத்துடனே கிளம்பினோம். முதலில் கடலில் நிறுத்தப்பட்ட படகுகளைப் பார்த்துவிட்டு சின்ன கிராமங்களைப் பார்க்க கிளம்பினோம்.

இந்த சின்ன சின்ன கிராமங்களை தொடாமல் நேராக அந்த அபாயகர பகுதிக்கு செல்லலாம் எனினும், மயோர்காவில் பல இடங்களை பார்த்து விட வேண்டும் எனும் ஆர்வத்தில் கிராமங்களைத் தொட்டு சென்றோம். அங்கே கைவினைப் பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். மிகவும் அருமையான இடங்களாக தெரிந்தது.




மலைகளின் ஊடே போடப்பட்டிருந்த பாதையில் சென்ற பயணம் மிகவும் அருமையாக இருந்தது. சில இடங்களில் எல்லாம் பயத்துடனே வாகனம் செலுத்த வேண்டி இருந்தது. மூணாறு சென்றபோது வந்த பயம் இங்கேயும் வந்து சேர்ந்தது. அழகிய இயற்கை காட்சிகள் என அதி அற்புதமாக மயோர்கா காட்சி தந்து கொண்டிருந்தது. சில ஊர்களில் அத்தனை பெரிய வசதிகளோ, தொழிற்சாலைகளோ இல்லை. அவர்களின் தொழில் என்ன, எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தாலும் இயற்கையும், அதன் காட்சிகளும் கவிதை சொல்லிக் கொண்டிருந்தன.

சில பாதைகளில் எல்லாம் செல்ல முடியாது என வழிகாட்டி சொல்லிக் கொண்டிருந்தது. மீறியும் அந்த சாலைகளில் எல்லாம் பயணம் செய்தோம். இந்த பாதை மிகவும் அபாயகரமானது என எச்சரிக்கை எழுதப்பட்டு இருந்தது. அந்த பாதையில் சென்றால் தான் மலை உச்சியை அடைந்து அங்கே இருந்து கடலை பார்க்க இயலும்.

இத்தனை தூரம் வந்துவிட்டு பார்க்காமல் திரும்பி செல்வதா எனும் யோசனையுடன் ஓரிடத்தில் காரினை நிறுத்தினோம்.

(தொடரும்)

Thursday 17 November 2011

மனைவியின் மயோர்கா - 2

மயோர்கா வரைபடங்களை ஹோட்டல் வரவேற்பாளரிடம் பெற்றுக்கொண்டு கார் பற்றி விசாரித்தோம். எல்லா இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் கார் மிகவும் அவசியமாக தென்பட்டது. இஷ்டத்திற்கு எங்கே வேண்டுமெனிலும் செல்லலாம், எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை போன்ற வசதிகள் இருப்பதால் கார் எடுப்பது சரியென பட்டது. அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பாளர் அதெல்லாம் தைரியமாக கார் ஓட்டலாம் என நம்பிக்கை தந்தார். சரியென மிக குறைந்த நாள் வாடகையில் மூன்று நாட்கள்  பியட் கார் ஒன்றை பதிவு செய்தோம். மறு தினம் காலையில் ஒன்பது மணிக்கு வந்து கார் பெற்று கொள்ள சொன்னார்கள். ஹோட்டலுக்கு கார் வந்துவிடும் எனும் நம்பிக்கையில் அன்றே மதிய வேளையில் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தே நாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

வெளியில் செல்லும் முன்னர் ஹோட்டலையும் அதன் வெளிப்புறத்தையும் நோட்டம் இட்டோம். ஹோட்டல் பின்புறம் நீச்சல் குளம் ஒன்று உண்டு. அந்த நீச்சல் குளம் தாண்டி சின்ன கடற்கரை ஒரு இரு நூறு மீட்டர் தொலைவு உண்டு. அதற்கு பின்னர் கடல். நீச்சல் குளம்தனை தாண்டி கடற்கரை அடைந்ததும் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்து மேல் உள்ளாடை இல்லாமல், மேலாடை இல்லாமல் மார்பகங்கள் வெளித் தெரிய வானம் பார்த்து படுத்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஒரு இளம் வயது பெண்ணை கண்டதும் திடுக் என்று இருந்தது. மணலோடு மணல் நிறத்தில் தான் அந்த மங்கை இருந்தார். ஆங்காங்கே சிலர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.  இனி அங்கே நிற்பது முறையில்லை என நகர்ந்தோம்.

மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என பத்து நிமிடத்தில் அங்கிருந்து நடந்து ஒரு இத்தாலியன் ஹோட்டல் அடைந்தோம், அவர்கள் பரிமாறிய உணவு நன்றாகவே இருந்தது. அங்கிருந்து நடந்து செல்ல மற்றொரு கடற்கரை. எங்கு பார்த்தாலும் அரை குறை ஆடைகளோடு உல்லாசமாக மனிதர்கள். சாலையில் கூட வெறும் உள்ளாடைகளுடன் சுற்றி திரிந்த ஆண்களும் பெண்களும். 'நல்ல காட்சி உங்களுக்கு' என மனைவி கிண்டல் செய்தார். இது போலிருக்க நமக்கு இத்தனை தைரியம் வராது என சொல்லிக்கொண்டு நாங்கள் அணிந்திருந்த முழு ஜீன்ஸ், டி-சர்ட் போட்டிருந்ததை சுட்டி காட்டினேன்.

மனிதர்கள் ஆடை இல்லாமல் திரிந்தாலும் அவை காம உணர்வுகளை தூண்டுவதில்லை என்பதை மயோர்கா காட்டி கொண்டிருந்தது. இந்த விசயங்களை எல்லாம் எழுத்தில் நேரடியாய் வைக்கும் போது வக்கிரம் நிறைந்த பார்வை என்றே பார்க்கப்படுகிறது. இலைமறை காயாக சொல்லும்போது, உவமைகளையும், உவமானங்களையும் வைத்து விவரிக்கும்போது அவை இலக்கியம் என சிலாகிக்கப் படுகிறது. நிர்வாணம், நிர்வானம், நேசிக்க தெரிந்த கண்களுக்கு  காமமாக தெரிவதில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் முழு நிர்வாணம் அனுமதிக்கப்படுவதில்லை. மானம், அவமானம் என்றெல்லாம் இந்த நிர்வாணம் பிரித்து பார்க்கப்படுகிறது. மார்பக புற்று நோயை பற்றிய விழிப்புணர்வுக்கு பிரா இல்லாமல் வெறும் மார்பகங்களோடு நின்று உணர்த்திய பெண்களும் சரி, சில விசயங்களுக்கு நிர்வாணமாக கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிக்காட்டும் போதும் சரி, நிர்வாணம் காமத்தின் வெளிப்பாடு அல்ல என்பது புரியும். அதே வேளையில் வெட்கம் இருக்கும் இடத்தில் நிர்வாணத்திற்கு இடமில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, அந்த வெயிலில் அங்கிருந்து நடந்தே இடங்கள் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

 நிறைய கடைகள் இருந்தன. வெயிலின் கொடுமை தாங்காமல், மகன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என விரும்பியதால் இரண்டு மணி நேரத்தில் திரும்பினோம். நீச்சல் குளத்தில் நாங்கள் சென்று விளையாட மனைவி வெட்கப்பட்டு கொண்டு  வர மறுத்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

மாலை நேரம் மீண்டும் நடந்தே இடங்கள் சுற்றினோம், ஓரிடத்தில் ஹோட்டல் செல்லும் வழி தெரியாமல் அங்கிருப்பவர்களிடம் பாதை கேட்க ஸ்பானிஸில் பேசினார்கள். ஆங்கிலத்தில் பேச மறுத்தார்களா அல்லது தெரியாதா என தெரியவில்லை. நாங்கள் ஒன்று கேட்க அவர்கள் ஒன்று சொன்னார்கள். நாங்கள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை, அவர்கள் சொன்னது எங்களுக்கு விளங்கவே இல்லை. மொழி தெரியாமல் ஒரு இடத்தில் வாழ்வது அத்தனை சௌகரியமில்லை. நாங்களாகவே நடந்து பிரதான சாலையை கண்டுபிடித்தோம். அங்கிருந்து ஹோட்டல் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

இரவு ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சாப்பிட அமர்ந்தவுடன், ஏன்டா சாப்பிட வந்தோம் என்றாகிவிட்டது. ஒரு தட்டு சோறுடன் பாத்தி கட்டி சாம்பார் ஊத்தி சாப்பிட்டு பழகி போன எனக்கு இரண்டு கத்தரிக்காய், ஒரு காளான், இரண்டு காரட் என வந்து வைக்க அட பாவிகளா என்றுதான் சொல்ல தோணியது. பஃபே முறை இருந்ததால் அங்கே இருந்த ரொட்டி வகைகளை எடுத்து சமாளித்தோம். எப்படியாவது நல்ல கடை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆவல் பிறந்தது. இரவு அந்த ஹோட்டலில் ஒருவர் பாடினார். தேநீர் அருந்தி கொண்டு இரவு பன்னிரண்டு வரை புரியாத மொழி எனினும் பாடலை ரசித்தோம்.

உறங்க செல்லும் முன்னர் கார் ஓட்டி விடுவீர்களா? என மனைவி கேட்டார். அதெல்லாம் ஓட்டிவிடலாம் என சொல்லிவிட்டு,  மனைவியின் இரவு நேர கேள்வியினால் கார் எப்படி ஓட்டுவது என்பது குறித்தான சிந்தனையை மன திரையில் ஓட்டினேன். வலது பக்கம் சென்றால் எப்படி திரும்ப வேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் என்பது குறித்து மனதில் ஓட்டி பழகினேன். ஓரளவு நம்பிக்கை பிறந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கார் வந்து இருக்கிறது, வாருங்கள் என தொலைபேசியில் அழைத்தார் வரவேற்பாளர். நான் மட்டும் போய் கார் சாவியை வாங்கி வருகிறேன், தயாராக  இருங்கள் என மனைவி, மகனிடம் சொல்லிவிட்டு சில படிவங்களை எடுத்து கொண்டு கீழே வந்தேன்.

கார் காணவில்லை. ஒருவர் வாருங்கள் என என்னை அழைத்தார். என்னோடு மேலும் சிலர் வந்தார்கள். எங்கே கார் என கேட்டேன்? இதோ இந்த காரில் ஏறுங்கள் என அனைவரையும் சொன்னார். அப்பொழுதுதான் புரிந்தது, கார் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது என்பது. எனக்கு புரிந்த வேளையில் அவரே சொன்னார். கார் வேறு இடத்தில் இருந்து நான் எடுத்து வரவேண்டுமென. அட ராமா என எனக்கு ஆகிப் போனது. அப்பொழுதுதான் எனது செல்பேசி என்னிடம் இல்லை என புரிந்தது. மனைவியிடமும், மகனிடமும் தகவல் சொல்ல வழியில்லை. வேறு வழியின்றி காரில் ஏறி அமர்ந்தேன். சற்று இடைவெளியின் போது ஒரு சுற்றுப் பாதை என வந்து கொண்டே இருந்தது. எப்படி செல்கிறார் என கவனமாக பார்த்து கொண்டே வந்தேன். ஒவ்வொரு சாலை பெயரை மனதில் பதித்தேன். ஒரு சுற்றுப் பாதை வழியாக சென்று கார் இருக்கும் இடம் அடைந்தேன். வந்தவர்களில் எவரும் ஆங்கிலேயர்கள் இல்லை. ஒவ்வொருவரும் பதிவு செய்து கார் எடுத்து கொண்டு சென்றார்கள்.

எனது சுற்று வந்தது. வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அதை ஆங்கிலத்தில் மாற்றி அமைத்து தந்தார்கள். மிகவும் பழைய கார். அங்கங்கே சின்ன சின்ன அடி வாங்கி இருந்தது. சுட்டி காட்டினேன், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள். சரியென காரில் ஏறி அமர்ந்தேன். சரியாக ஹோட்டல் சென்று விடுவோமா என அச்சம் வந்து சேர்ந்தது. காரை சிறிது தூரம் செலுத்த கண்ணாடியில் ஒட்டப்பட்ட வழிகாட்டி கீழே விழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து அது மாறி இருந்தது. அதை எப்படி சரி செய்வது என புரியாமல் வழிகாட்டி இல்லாமல் மெதுவாக காரை செலுத்த ஆரம்பித்தேன்.

இடது, வலது, மறுபடியும் வலது என பாதையை நினைவுபடுத்தி சுற்றுப்பாதை வந்தேன்.  மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது  கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.

அன்று எடுத்த சில புகைப்படங்கள்.

மயோர்கா இயற்கை காட்சிகள் நிறைந்தே தென்பட்டது. கடற்கரைகள், மலைகள் என அற்புதம். அழகிய மரங்களும், வரிசையாய் நிறுத்தப்பட்ட கார்களும்.


தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம், நீச்சல் குளமும், அதைத் தாண்டி கடலும்.




நீச்சல் குளத்தில் முன்னர் இருந்த நாற்காலிகள்.


ஹோட்டலின் உட்புறத்தில் ஒரு பகுதி.


இரவில் மயோர்கா.


(தொடரும்)

Monday 14 November 2011

மனைவியின் மயோர்கா -1

இந்த வருடம் தான் இந்தியாவுக்கு போகலையே, எத்தனைவாட்டிதான் இங்கிலாந்தில் உள்ள இடங்களையே சுற்றிப் பார்ப்பது, அதனால் ஐரோப்பாவில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லலாமா என எனது மனைவி அவரது ஆசையை சொல்லி வைக்க, அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கினேன்.

அவர் சொன்ன இரண்டு இடங்களும் விமானத்தில் பயணம் செய்யும்படிதான் இருந்தது. அதில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் குட்டித் தீவான டேனரீப் (1 ) மற்றொன்று ஸ்பெயின் நாட்டின் குட்டி தீவான மயோர்கா (2 )

                                             1 .
          
                                            2




டேனரீப் எனும் இடத்தில் தான் சில வருடம் முன்னர் ஒருவன் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்திருந்த ஒரு பெண்ணின் கழுத்தை வெட்டி சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றான் என்பதை படித்தபோது திகிலுடனே இருந்தது. அதனால் என்ன, டேனரீப் செல்லலாம் என முடிவு எடுத்து நான் எப்பொழுதும் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யும் தளத்தில் சென்று ஒரு ஐந்து நட்சித்திர ஹோட்டல் பார்த்தோம். அந்த ஹோட்டல் அறை விலை மிகவும் குறைச்சலானதாக இருந்ததை பார்த்து ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டோம்.

பின்னர் விமானத்திற்கு பயணச்சீட்டு தேடியபோது நமது ஊருக்கே சென்று வந்துவிடலாம் போலிருக்கிறதே எனும் அளவிற்கு விலை மிகவும் அதிகமாகவே இருந்தது. டேனரீப் வேண்டாம் என முடிவு செய்து மயோர்காவைத் (majorca) தேர்ந்தெடுத்தோம். டேனரீப் ஹோட்டலை வேண்டாம் என சொல்லிவிட்டு மயோர்காவில் ஒரு ஹோட்டல் முடிவு செய்தாகிவிட்டது. விமானத்தளத்தில் இருந்து அந்த ஹோட்டல் மிகவும் அதிக தொலைவு என அதனையும் ரத்து செய்துவிட்டு மற்றொரு ஹோட்டலை தேர்வு செய்தோம். சற்று விலை குறைச்சலாகவே அப்போது இருந்தது. உடனே ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டு விமானம் தேடினோம்.

ஐரோப்பா பயணம் எனில் நான் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கும் விமானம் ஈசிஜெட்.  நான் முதன் முதலில் கிளாஸ்கோ சென்றபோதும் சரி, சுவிட்சர்லாந்து சென்றபோதும் சரி இந்த விமானம்தான் தேர்ந்தெடுத்தேன். இதற்கு முக்கிய காரணம் பயண சீட்டு சற்று குறைந்த விலையில் கிடைக்கும். டேனரீப்க்கு விலை மிகவும் அதிகமாக இருந்தது, ஆனால் மயோர்காவுக்கு சற்று விலை குறைந்தே இருந்தது. சரி என இந்த விமானத்தில் பதிவு செய்தோம்.

மிகவும் ஆர்வமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது. நான், எனது மனைவி, பையன் மட்டுமே. நன்றாக வெயில் அடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம். இங்கிலாந்தில் இந்தியாவைப் போலவே இடது பக்கம் வாகனம் செலுத்துவார்கள். ஆனால் ஐரோப்பா நாடுகளில் வலது பக்கம் வாகனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு வாகனம் ஓட்டி பழக்கம் இல்லை. எனவே மயோர்காவில் சுற்றிப் பார்க்க வேண்டும் எனில் வாடகைக்குத்தான் காரை அழைக்க வேண்டும் எனும் நினைப்பு வேறு. துபாய் சென்றபோது மிகவும் பாதுகாப்பாக இருந்தது நினைவில் வந்து போனது, அதைப்போலவே இங்கேயும் பாதுகாப்பாக இருக்குமா எனும் அச்சம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து மனைவியிடம் சொன்னபோது, நாம் ஹோட்டலில் தங்கி பொழுதை கழித்துவிட்டு வந்துவிடலாம் என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

பயண நாள் நெருங்கியது. பொதுவாகவே உறவினர் எவராவது விமான நிலையம் வரை அனுப்பிவிட்டு செல்வார்கள், அது போல திரும்பி வரும்போது எவராவது வந்து அழைத்து செல்வார்கள். ஆனால் இந்த முறை காரை விமான நிலையத்திலே விட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். நான்கு நாட்கள் பயணம். காரை விமான நிலையத்தில் விட்டு செல்ல ஒரு தளத்தில் பதிவு செய்தோம்.

கார் பத்திரமாக இருக்குமா? எனும் கேள்வி மனதுள் எழுந்தது, இருப்பினும் தைரியத்துடன் காரை நிறுத்திவிட்டு செல்லலாம் என முடிவுடன் கிளம்பினோம். பயண நாள் வந்தது. காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து இருபது நிமிட தொலைவில் நிறுத்திவிட்டு (3 )கையில் கார் சாவியினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒரு பேருந்தில் விமான நிலையம் அடைந்தோம். நன்றி: கூகிள் படங்கள்.

3 .

இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் மயோர்கா விமான நிலையம் அடைந்தோம். டாக்சி என தேடினோம், அதற்கு முன்னர் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் தோணியது. மொழி தெரியாத இடம். நானும் எனது மனைவியும் சைவம். பிரான்ஸ் நாட்டில் ஒரு முறை சைவம் என்பதால் பட்ட பாடு நினைவுக்கு வந்து போனது.

விமான நிலையத்தில் இருந்த ஒரு உணவு கடையில் கையை காட்டி ரொட்டி போன்ற உணவு வாங்கினோம். கார் வாடகைக்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாமா? என்று எனது மனைவியிடம் கேட்டதற்கு வேண்டாம் என ஒரேயடியாக மறுத்துவிட்டார். சரி, பேருந்தில் செல்லலாம் என்று சொன்னதற்கும் வேண்டாம் என மறுக்க துபாயில் போலவே வரிசையாய் விமான நிலையத்தில் வெளியில் டாக்சி நிற்க கையில் இருந்த ஹோட்டல் பெயரை காட்ட அரை மணி நேரத்தில் ஹோட்டல் அடைந்தோம். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.


பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அமெரிக்காவில் எனது அண்ணனுடன் விமான நிலையத்தில் இருந்து அவரது வீடு வரை சென்றபோது இல்லாத வித்தியாச உணர்வு இங்கே இருந்தது. கார் வாடகைக்கு எடுக்க வேண்டும் எனும் நினைப்பில் சாலையெல்லாம் மனனம் செய்ய தொடங்கிவிட்டேன். ஹோட்டல் பக்கத்தில் வந்ததும் சுற்றுப் பாதை வந்தது. இங்கிலாந்தில் செல்வதற்கு எதிர்மாறாக அங்கே சென்றதை கண்டதும், காராவது, வாடகைக்கு எடுப்பதாவது என மனம் அல்லாடியது. ஹோட்டல் மிகவும் நன்றாகத்தான் இருந்தது. கார் எடுப்பதா வேண்டாமா  என மீண்டும் நடந்த சின்ன கலந்துரையாடலில் மனைவி சற்று அதிகமாகவே பயபட்டார். அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மயோர்காவில் சுற்றிப் பார்ப்பது குறித்து ஹோட்டல் அலுவலர்களிடம் பேச கீழே வந்தோம். மனம் கார், கார் என நினைக்க தொடங்கியது.


(தொடரும்)

Wednesday 27 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6

கொச்சின் என அறிவிப்புதனை பார்த்ததும் கொச்சின் செல்லலாம் என மனதில் எண்ணம் ஓடியது. நண்பரிடம் கேட்டேன். 'அதெல்லாம் போலாம் சார்' என்றார். 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவது சிரமம் எனில் என்னிடம் சொல்லுங்கள், நான் வாகனம் ஓட்டுகிறேன்' என நண்பரிடம் சொல்லி வைத்தேன். அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார். நானும் மனதில் நிம்மதி அடைந்தேன். எனக்கு இந்தியாவில் வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் மலைப்பாகவே இருக்கிறது.

கொச்சின் என்றதும் எனது மனைவி அங்கு படகு வீடு இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் அங்கு தங்கலாம் என சொல்லிவிட சரி என கொச்சின் பயணித்தோம். மலைகளும் அதை மூடியிருந்த தேயிலை தோட்டங்களும் என பச்சை பசேலென இருந்தது. பனி மூட்டத்தினால் பாதையே சரியாக தெரியவில்லை. அந்த மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மனிதர்களின் தைரியத்தை பாராட்ட தோன்றியது. மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

கோயமுத்தூரில் இருந்து எனது பாவா நாங்கள் மூணாறு சென்றோமா இல்லையா என்பதை அறியவே இல்லை. அவர் எங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நாங்கள் தொடர்பில் இல்லை. அவரையும் தொடர்பு கொள்ளவில்லை. சரியென ஓரிடத்தில் தேநீர் அருந்த வாகனத்தை நிறுத்தினோம். அங்கே இருந்த தொலைபேசி மூலம் பாவாவிடம் தகவல் சொன்னபிறகே நிம்மதியானார். அதற்குள் எனது சகோதரன் மகன் சீனிக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க சொல்லி இருக்கிறார். அவனும் முயன்று பின்னர் தகவல் பெற இயலாது போனதை அறிந்து கொண்டேன். நாங்கள் கொச்சின் செல்கிறோம் என சொன்னதும் 'அட எப்படி பாவா இப்படி திடீர் திடீர்னு பயணம் போறீங்க, அதான் நல்லது என' அவர் பாணியிலே சொன்னதோடு கொச்சினில் ராஜேஷ் எனும் உறவுக்கார பையன் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரித்து இடங்களை சுற்றி பார்க்க சொன்னார்.

நல்லது என பல தூரம் கடந்த பின்னர் செல்பேசி இணைப்பு வந்தது. ராஜேஷிடம் தொடர்பு கொண்டால் தான் ஊருக்கு சென்று இருப்பதாக தகவல் சொன்னான். சரி என சீனியிடம் படகு வீடு விசாரித்தோம். 'என்ன சித்தப்பா இப்ப சொல்றீங்க' என தகவல் சேகரித்து அனுப்புவதாக சொன்னான். பயணித்து கொண்டே இருந்தோம். அவனிடம் இருந்து தகவல் வந்தது. பயமும் வந்தது.

ஆலப்புழா அல்லது குமரகோம் போக வேண்டும் என சொன்னான். அந்த வழியை கடந்துவிட்டோமே என நினைத்தேன். கொச்சினில் படகு வீடு இல்லை என திட்டவட்டமாக சொன்னவன் ஓணம் பண்டிகையின் பொருட்டு படகு வீடு கிடைப்பதே கடினம் என பயமுறுத்தினான். ஆனால் அதே வேளையில் எங்களை ஆலப்புழா போக சொன்னான். ஆலப்புழா போய்கொண்டே இருங்கள் அதற்குள் ஏதாவது பண்ணுகிறேன் என முடிவு சொன்னான்.

கொச்சினில் நுழைந்து கோட்டயம் வழி மாறி சென்று பின்னர் திரும்பி ஆலப்புழா சாலை அடைந்தபோது அப்பாடா என இருந்தது. நண்பர் நன்றாகவே வாகனம் ஓட்டினார். எந்த படபடப்பும் இல்லை. நிதானமாகவே இருந்தார். அதே நம்பிக்கையான வார்த்தைகள். அதெல்லாம் கரெக்டா போயிரலாம் சார்' மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் தன்னம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆலப்புழா சாலை அடைந்த மறு நிமிடம் சீனியிடம் இருந்து அழைப்பு. 'சித்தப்பா நேராக ஆலப்புழா போங்க, அங்கே தாமஸ் என்பவர் இருக்கிறார். ஒரு படுக்கை அறை உடைய படகு வீடு தயார் என்றான். இரண்டு படுக்கை அறை படகு வீடு இருந்தால் அனைவரும் செல்வது எளிது என்றேன். இரண்டு படுக்கை அறை இல்லை என்றான். தாமஸ் என்பவரின் எண் தந்து பேச சொன்னான். நானும் தாமஸ் என்பவரிடம் பேசினேன். இரண்டு படுக்கை அறை உடைய படகு வீடு தயார், அதற்கு ஐநூறு ரூபாய் மட்டுமே அதிகம் செலுத்த சொன்னார். மொத்த தொகை எட்டாயிரம் மட்டுமே. யார் இந்த தாமஸ். எப்படி இவர் கிடைத்தார்.

சீனி இணையதளத்தின் மூலம் தேடியபோது கிடைத்த நபர் தான் இவர். எந்த அறிமுகமும் இல்லை. அதுவும் ஒரு இரவு ஒரு படகு தனில் சென்று தங்க போகிறோம். நாங்கள் நால்வர் மட்டுமே. மனதில் பயம் இருந்தது. ஏமாற்றபட்டு விடுவோமோ எனும் அச்சம் இருந்தது. இருப்பினும் எது நடந்தாலும் பரவாயில்லை என துணிச்சலுடன்  நம்பிக்கையுடன் சென்றோம்.

சாலை வழிதனை தாமஸ் அவ்வப்போது சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் அவர் சொன்ன இடம் சென்றபோது மாலை மணி ஆறு. சாதாரணமாக படகு மதியம் பன்னிரண்டு மணிக்கே கிளம்பிவிடும். மாலை ஆகிவிட்டால் படகு தனை செலுத்த மாட்டார்கள். எங்களுக்காக ஒரு படகு காத்து கொண்டிருந்தது. ஆனால் தாமஸ் என்பவர் அங்கு இல்லை.

வேறு ஒருவர் வந்தார். எனது பெயரை குறிப்பிட்டார். வாருங்கள் என அலுவலகம் அழைத்து சென்றார். தாமஸ் உங்களுக்காக பதிவு செய்து இருக்கிறார், அவர் என்னுடைய நண்பர்தான் என பணம் தனை பெற்றுக் கொண்டார். எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு படகினில் ஏறிக்கொண்டோம். எங்களுடன் மூன்று நபர்கள் வந்தார்கள். அதில் ஒருவர் சமையல் செய்பவர், மற்ற இருவர் படகு செலுத்துபவர்கள்.

நன்றாக பேசினார்கள். அதில் ஒருவர் எங்களது சொந்த விசயங்களை பற்றி கேட்டு கொண்டே வந்தார். நாமாக நமது விசயங்களை சொல்லும்போது வராத எரிச்சல் பிறர் கேட்டு சொல்லும்போது தானாக எட்டி பார்த்துவிடுகிறது. சிரித்து கொண்டு கலகலப்பாக பேசினார். முதலில் சொல்ல வேண்டாம் என நினைத்தாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என எல்லா உண்மைகளையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அவரும் அவருடைய விபரங்களை பகிர்ந்து கொண்டார். மற்ற இருவரும் நன்றாக பேசினார்கள். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இரவு உணவு சமைத்து கொடுத்தார்கள். மிகவும் பிடித்து இருந்தது. பொதுவாக இரவு பயணிக்க மாட்டோம் என சொன்னவர்கள் எங்களுக்காக படகு எடுத்து வருவதாக சொல்லி படகை மற்றொருபுறத்தில் நிறுத்தியபோது இரவு எட்டு மணி. பம்பை நதியில் தான் பயணம். கரையில் இருபுறங்களிலும் வீடுகள். நிறுத்திய இடத்தில் கூட பல வீடுகள் இருந்தன. எவரேனும் வந்து விடமாட்டார்களா என கேட்டபோது அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார்கள். இரவு நிம்மதியாக உறங்கினோம் எனலாம். குளிரூட்டப்பட்ட அறை. தொலைகாட்சி என சகல வசதிகளுடன் படகு வீடு இருந்தது.

அதிகாலை கிளம்பி, கிளம்பிய இடத்திற்கே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் எழில்மிகு காட்சிகள். மரங்கள், வீடுகள் மனிதர்கள் என ரம்மியமாக இருந்தது. வீடுகளின் அமைப்பு எங்கள் வீட்டினை நினைவில் கொண்டு வந்தது. படகுகளில் மூலமே பயணம் செய்கிறார்கள். சாலை போக்குவரத்து கிடையாதாம். அங்கங்கே படகு நிற்க இடம். சொந்த படகும் வைத்திருப்பவர்கள் உண்டு. காலை பத்து மணிக்கு ஆலப்புழாவில் இருந்து கிளம்பினோம்.

கம்பம் செல்ல வேண்டும் என வண்டி பெரியார், குமுளி என மலைகளும், மழை துளிகளும் என அழகிய பயணம். கேரளா குமுளி கடந்து தமிழ்நாடு என எல்லையில் வைத்தபோது மனம் வறண்டு போனது. எழில் தொலைத்த தமிழகம்.

படங்கள் எல்லாம் பின்னர் இணைக்கிறேன். :)

(தொடரும்)

Monday 18 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5

ஊட்டி செல்ல வேண்டாம், மூணாறு செல்லலாம் என முடிவு எடுத்தோம். கோயமுத்தூரில் உள்ள எனது சகோதரியின் வீட்டில் தான் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்த பின்னர் கணினியை தொட்டேன். மூணாறில் எங்கு தங்குவது என்பது குறித்தான தகவல்கள் பெற முயற்சித்தேன். அரை மணி நேரம் ஆகியும் எதுவும் முடிவு செய்ய இயலவில்லை. எனது பாவா மஹிந்திராவில் தங்கலாம் என யோசனை சொன்னார். கடைசியாக மூணாறு சென்று பார்த்து கொள்ளலாம் என கிளம்பினோம்.

இந்த கோயமுத்தூர். இந்த ஊரை சுற்றி எழுத்துலகில் இருக்கும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். எனது உறவுக்காரர்கள் இருக்கிறார்கள். இந்த முறையும் எவரையும் பார்க்காமல் சென்றது மனதில் வருத்தம் தான். அதிலும் குறிப்பாக நாமக்கலில் வசிக்கும் தினா. சென்றமுறை நாங்கள் இந்தியா சென்றபோது நட்பின் புதிய கோணம் பற்றி எனது மனதில் விதைத்து இருந்தார். இந்த முறை நாமக்கல்லோ, சேலமோ செல்லும் வாய்ப்பை உருவாக்கி கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு அழைப்பு கூடவா என்னால் அழைக்காமல் போக முடிந்தது. என்னை நானே பல கேள்விகள் கேட்டு கொள்கிறேன். அதிலும் குறிப்பாக ஏனிந்த சோம்பேறித்தனம்? ஏனிந்த புறக்கணிப்பு?

இந்த தருணத்தில் எனது மூத்த சகோதரரின் மகன் பற்றி சொல்லியாக வேண்டும். எனக்கு இந்தி தெரியாது என்பதாலும், கோவா சற்று ஆபத்துக்குரிய பகுதி என அவன் நினைத்ததாலும் நாங்கள் கோவா செல்கிறோம் என தெரிந்ததும் மும்பையின் அருகில் வேலை பார்க்கும் அவனது அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு நாங்கள் கோவாவில் இருந்த போது எங்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்தான். எனது மகனுக்கு அவன் வந்து இருந்தது மிகவும் சௌகரியமாக போய்விட்டது. செல்லும் இடங்களிலெல்லாம் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு சந்தோசமாக சுற்றினார்கள். எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவன் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தியது. எந்த ஒரு விசயத்துக்கும் பதட்டம் கொள்ளாமல் அவன் கையாண்டவிதம் எனக்கு வியப்பை அளித்தது. அவனது நகைச்சுவை உணர்வும், எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கும் தன்மையும் அந்த விடுமுறையை மிகவும் கலகலப்பாக்கின. அவனுடன் இருந்த நாட்கள் எனது மகனின் மனதில் நிறைய சந்தோசம் கொண்டு வந்து இருந்தது. அவன் மும்பை நோக்கிய பயணம் தொடங்கிய தினம் அன்று எனது மகன் கேவி கேவி அழுதான். வாழ்க்கையின் பிரிதல் பற்றி மகனுக்கு புரிய வைத்தேன். இருந்தாலும் சில மணித் துளிகள் அழுது கொண்டேதான் இருந்தான். இப்படித்தான் சென்ற வருடமும் இந்தியாவை விட்டு நாங்கள் கிளம்பி வந்தபோது எனது மகன் அழுதான்.

இனி மூணாறு.

கோயமுத்தூரில் இருந்து மாலை நான்கு மணிக்கு கிளம்பி உடுமலைபேட்டை வழியாக பயணம். கோயமுத்தூரில் கிளம்பி கொஞ்ச தூரம் வந்தபின்னர், நாங்கள் மூணாறு செல்வது குறித்து எனது சகோதரன் மகனிடம் சொல்லி ஹோட்டல் மகிந்திராவின் விபரம் அறிய சொன்னேன். முகவரியை, தொலைபேசி இலக்கத்தை குறுஞ்செய்தி அனுப்ப சொல்லி இருந்தேன். அவனும் அனுப்பி இருந்தான். இடம் இருக்கிறது எனவும் சொன்னதாக சொன்னான். பாதை அத்தனை சீராக இல்லை. இருபுறங்களிலும் காடுகள் தென்படுகின்றன. வாகனத்தை ஓட்டிய நண்பர் யானை எல்லாம் வரும், புலி எல்லாம் வரும் என பயமுறுத்துகிறார். யானை தள்ளிவிட்ட வானகங்களை எல்லாம் நினைவுபடுத்துகிறார். பயணம் தொடர்கிறது. வாகனங்கள் மிகவும் குறைவாகவே பாதையில் தென்படுகின்றன. யாரும் அதிகமாக இந்த சாலையை உபயோக படுத்துவதில்லை என்கிறார் நண்பர்.

வாகனம் வேகமாக செல்லும் வாய்ப்பு இல்லை. பாதைகள் வளைவுகளாலும், ஆபத்துகளாலும் சூழப்பட்டு இருக்கிறது. இயற்கையை ரசித்த வண்ணம் பயணம் தொடர்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கின்றன. வாகனத்தில் கோளாறுதனை சரி செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களது வாகனத்தின் வேகம் மட்டுபடுகிறது. எங்களை நோக்கி 'அங்கே யானை நிற்கிறது, யானை நிற்கிறது' என்கிறார்கள். என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறோம். வாகனத்தில் நான், எனது மனைவி, எனது மகன், வாகனத்தை ஓட்டும் நண்பர். பின்னர் அவர்களாகவே சொல்கிறார்கள். காட்டு அதிகாரிகள் இருக்காங்க, போங்க, பிரச்சினை இல்லை.

வாகனம் மெதுவாகவே செல்கிறது. சற்று தொலைவில் மூன்று சக்கர வாகனத்தில் இருந்து பயணிகள் காட்டு அதிகாரிகளின் வாகனத்துக்கு மாற்றப்படுகிறார்கள். எங்களை நோக்கி வாங்க வாங்க என சைகை செய்கிறார்கள். காட்டு அதிகாரிகளின் வாகனம் முன் செல்ல, மூன்று சக்கர வாகனம் பின் செல்ல கடைசியாக நாங்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஐந்து யானைகள் சாலையின் இடப்புறம் தென்படுகிறது. எனது மனைவி பின் இருக்கையில் இருந்தவாறு அந்த நிகழ்வினை படம்பிடித்து கொண்டிருக்கிறார். காட்டு அதிகாரிகளின் வாகனம் கடந்து செல்கிறது. மூன்று சக்கர வாகனமும் கடந்து செல்கிறது. நானும் யானைகளை கவனிக்கிறேன். சின்ன குட்டி யானைகளுடன் சில யானைகள் உணவு அருந்தி கொண்டிருக்கிறது. திடீரென ஒரு யானை.

நினைக்கும்போதே பயம் மனதில் அப்பி கொள்கிறது. எங்களை நோக்கி பாய்ந்து வந்தது. அதனுடைய சீறலை படம் பிடித்து வைத்திருந்தோம். வாகனத்தை வேகமாக செலுத்த இயலாதவண்ணம் முன்னால் மூன்று சக்கர வாகனம். அந்த யானை தொடர்ந்து வருகிறதா என்பதை கூட பார்க்க முடியாத மனநிலை. ஒலிப்பானை அழுத்துகிறார் நண்பர். என்ன செய்ய இயலும். ஆனால் யானை அப்படியே அங்கேயே நின்றுவிட்டது போல. சிறிது தூரம் சென்ற பின்னர் காட்டு அதிகாரிகள் இறங்கி வருகிறார்கள். எங்களை நோக்கி சத்தம் போடுகிறார்கள். எதற்கு ஒலிப்பானை அழுத்துகிறீர்கள் என. நிலைமையை சொன்னோம். இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என எச்சரித்து அனுப்பினார்கள். அதற்கு பின்னர் யானை பற்றிய பயம் அதிகமாகவே இருந்தது. இருட்ட தொடங்கியது. மழையும் பெய்ய தொடங்கியது. ஒவ்வொரு முறையும் யானை வந்துவிடுமோ என யானையை பற்றி பேசி யானை பயம் போக்கி கொண்டு இருந்தோம். மூணாறு அடைந்தோம். இனி எந்த ஹோட்டலை எப்படி தேட! மூணாறில் எந்த ஹோட்டலும் சரியாக தென்படவில்லை. ஹோட்டல் மஹிந்திரா செல்லலாம் என முடிவு எடுத்தோம். மூணாறில் இருந்து இருபத்தி மூன்று கிலோமீட்டர்கள். இரவு எட்டு மணி ஆகி இருந்தது. ஹோட்டலுக்கு அழைத்தால் எவரும் எடுக்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் பாதை மாறி சிறிது தூரம் கொச்சின் செல்லும் பாதையில் சென்றோம். மனதிற்கு தவறு என தோன்றியதும் நண்பரிடம் சொல்லி விசாரித்து மதுரை செல்லும் பாதையில் விரைந்தோம்.

சரியான இருட்டு. மலைபாதை. நண்பர் மிகவும் தைரியமாகவே வாகனம் ஓட்டினார். அதெல்லாம் போயிரலாம் என நம்பிக்கையுடன் சொல்கிறார். அவர் இதற்கு முன்னர் இங்கு வந்ததில்லை. எவரிடமும் கேட்க வழியும் இல்லை. தொடர்பு எல்லாம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. சென்று கொண்டிருக்கும்போதே பாதையை விட்டு தனியாக வேறொரு பாதை சூரியகனல் (நினைக்கிறேன்) வழி என பாதை தென்படுகிறது. குறுஞ்செய்தியில் வந்த முகவரி மனதில் ஆடுகிறது. இதோ இதுதான் வழி என செல்கிறோம். சில நிமிடத்தில் மஹிந்திரா தென்படுகிறது. மிக்க நன்றி சீனி. திட்டமிடாத பயணம் படு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. நிறையவே தைரியம் உங்களுக்கு என வாகனம் ஓட்டிய நண்பரிடம் சொன்னேன். சிரித்து கொண்டார்.

அன்று ஒரு தினம் மட்டுமே அங்கு தங்கிவிட்டு மறுநாள் மூணாறில் சில இடங்களை சுற்றி பார்த்தோம். அருப்புகோட்டை செல்லலாம் என கிளம்பினோம். வழியில் கொச்சின் 143 என ஒரு அறிவிப்பு கல் தென்பட்டது. வாகனம் கொச்சின் சென்றதா? அருப்புகோட்டை சென்றதா?

(தொடரும்)

Monday 11 October 2010

இந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4

அதிகாலை எழுந்து காங்கேயனத்தம் பயணம் செய்தோம். எனது மாமா வழியினர் கும்பிடும் குல சாமி என சொன்னார்கள். எனக்கு இதற்கு முன்னர் இந்த ஊருக்கு சென்றதாக நியாபகம் இல்லை.

இறைவனே இல்லை எனும் ஒரு கூற்று ஒரு பக்கம். எங்கு பார்த்தாலும் புது கோவில் கட்டி கும்பாபிஷேகம் என ஒரு பக்கம். சாமி இருந்தா என்ன, இல்லைன்னா என்ன கும்பிடரதுக்கு நாங்க இருக்கோம் என மனிதர்கள் இருக்கும் வரை இறைவனுக்கு அழிவே இல்லை. இந்த சடங்குகள், சம்பிராதயங்கள் எல்லாம் கடந்துவிட்டேன் என சொன்னாலும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதில்லை. மனிதர்களுடன் மனிதராய் கலந்து கொள்வதில் சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது. பலருடன் சிரித்து மகிழ்ந்து பேச ஒரு வாய்ப்பாக அமைந்தது என சொல்லலாம்.

அந்த திருவிழாவில் பல உறவினர்களை சந்தித்தேன். எவரது வீட்டுக்கும் சென்று பார்க்க வேண்டிய சூழல் தேவையற்று போனது. பலருக்கும் அன்னதானம் இடப்பட்டது. கும்பாபிஷேகம் முடித்த மறு கணம் பெங்களூர் செல்ல வேண்டுமென அருப்புகோட்டை வந்து மதியம் மதுரை அடைந்தோம். மதுரையில் இருந்து நேராக பெங்களூர் விமான பயணம். விமான பயணம் மிகவும் நன்றாகவே இருந்தது.

பெங்களூர் இறங்கியதும் லண்டன் போன்ற தட்பவெப்ப நிலை. விமான நிலையத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் அருமையாக இருந்தது. பெங்களூரில் அன்றே கடைகளுக்கு சென்றோம். பெரிய பெரிய கடைகளாக இருந்தது. மறு தினம் மைசூர் பயணம். செல்லும் வழியில் கைவினை பொருட்கள் மற்றும் கலை பொருட்கள் கடைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது.

பெங்களூரில் இரண்டு நண்பர்களை சந்திக்கலாம் என நினைத்து இருந்தேன், ஆனால் மைசூர் செல்லும் பயணம் அமைந்ததால் அந்த வாய்ப்பு ஏற்படுத்த இயலவில்லை. பிருந்தாவன், மைசூர் அரண்மனை, சாமுண்டி கோவில், திபெத்தியர்கள் வாழும் பகுதி என பல இடங்களை இரண்டு தினம் சுற்றி பார்த்தோம்.

தமிழர்களை மிகவும் ஏளனமாகவே கன்னடர்கள் நடத்துவதுண்டு, பார்ப்பது உண்டு என எனது மாமா மகளின் கணவர் சொன்ன போது தமிழர்களை தமிழர்களே ஒழுங்காக நடத்துவதில்லை என்பதை நினைவு படுத்தினேன். எதற்கு வெளிநாட்டில் சென்று வாழ்கிறீர்கள், இங்கே வந்து பலரது வாழ்க்கையை உயர்த்தலாமே ஏன் எல்லாரும் வெளிநாடு வெளிநாடு என சென்றுவிடுகிறார்கள் என அவருடனான உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது. படித்தவர்கள் பறந்துவிடுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எப்போதும் இந்தியாவில் உண்டு. படிக்காதவர்களும் பறந்துவிடுகிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது. பொருளாதார விசயத்துக்காக இடம் மாற்றம் நிகழ்ந்துவிடுவதுண்டு. பொருளாதாரம் என வரும்போது தன்னிறைவு என்பது நிகழ வாய்ப்பே இல்லை. எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.

பெங்களூர் சுற்றி பார்க்கவே இல்லை. ஒரு சில இடங்கள் மட்டுமே பார்த்தோம். கிருஷ்ணர் ஆலயம் செல்லலாம் என சொன்னார்கள். கடைகள் செல்வோம் என பல பொருட்கள் வாங்கினோம். அங்கிருந்து கோவா விமானத்தில் சென்றோம். கோவா.

கற்பனை ஊர். வடக்கு கோவா, தெற்கு கோவா என பிரிக்கப்பட்டிருக்க நாங்கள் பார்க் ஹையட் ஹோட்டலில் தங்கி இருந்தோம். அது மத்திய கோவாவில் இருந்தது. கொங்கனி பேசும் மொழியாம். ஆனால் ஆங்கிலம் அதிகம் பேசுகிறார்கள். அற்புதமான ஹோட்டல். நூறு ஏக்கர் பரப்பளவில் கடற்கரையுடன் அமைந்து இருந்த அருமையான ஹோட்டல். எங்கும் செல்ல வேண்டியதில்லை என்பதுபோல் இருந்தது.

இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். முதல் வடக்கு கோவா சென்றோம். செல்லும் இடமெல்லாம் கடற்கரை. மற்றும் சின்ன சின்ன ஆலயங்கள். தேவாலயங்கள் சில சென்றோம். போர்ச்சுகீசியர் அடையாளங்கள் சில இருந்தன. பம்பாய் படத்தில் எடுக்கப்பட்ட கோட்டை ஒன்று சென்றோம். சாலைகள் எல்லாம் அருமையாக இருந்தது. சுற்றியும் நல்ல இயற்கை வளங்கள்.

அடுத்த தினம் முற்றிலும் வித்தியாசமான கோவா பார்த்தோம். ஜன நெருக்கடி. பழைய கட்டிடங்கள் என தெற்கு கோவா காட்சி அளித்தது. மீண்டும் கடற்கரை. கோவா மறக்க முடியாத இடம் தான். ஹோட்டலில் மட்டுமே தங்கி இருந்துவிட்டு வரலாம் என்பது போன்ற ஊர் தான்.

அங்கிருந்து பெங்களூர் வந்து கோயமுத்தூர் அடைந்தோம். பெங்களூரில் இருந்து கோயமுத்தூர் செல்லும் விமானம் மாற சரியாக நாற்பது நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் பிரச்சினை இன்றி சென்றது மகிழ்வாக இருந்தது. கோயமுத்தூரில் இறங்கினோம். எங்களது வாகனம் வந்து இருந்தது. எனது சகோதரி வீட்டில் மூன்று மணி நேரமே தங்கி இருந்தோம்.

ஊட்டி செல்வதா, வேண்டாமா என யோசனையில் இருக்க திடீர் திட்டம் உருவானது.

(தொடரும்)

Wednesday 29 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 2

சென்னையிலிருந்து அருப்புகோட்டைக்கு ஏழு மணி நேரத்தில் வாகனத்தில் சென்றது ஆச்சர்யம் தான். ஆனால் அதிர்ச்சியாகவும் இருந்தது. இன்னும் சாலைகள் முழுவதும் போட்டு முடிக்கப்படவில்லை. பல இடங்களில் யார் முன்னர் செல்வது, யார் நின்று செல்வது என புரியவே முடியாதபடி சாலை அமைப்பு. சாலையில் இருந்து வலப்பக்கம் திரும்பும்போது எந்த அறிவிப்பும் இல்லை. திடீரென தவறான பாதையில் வரும் வாகனங்கள். நமது ஊர் மக்கள் திறமைசாலிகள்தான். எந்த சூழலிலும் வாழ்ந்துவிடும் அளவுக்கு மிகவும் திறமைசாலிகள்தான். போதிய திறமை இல்லாத காரணத்தால் நான் இந்தியாவில் வாகனத்தை ஓட்டவே இல்லை.

முதல் நாள் எங்கும் செல்லாமல் கழிந்தது. அடுத்த நாள் மதுரைக்கு சென்று வந்தோம். போத்தீஸ் கடையில் மனிதர்கள்! எங்கு பார்த்தாலும் மனிதர்கள். அங்கு வேலை பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். இன்னும் கடை முழுவதும் தயாராகவில்லை என்றே சொல்லலாம். மதுரை எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தனை சுற்றியிருந்த கடைகள் மதுரை மாட்டுத்தாவனிக்கு இடப்பெயர்ச்சி ஆகி கொண்டிருந்தது. இருப்பினும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி எங்கும் கூட்டம். பீமாஸ் எனப்படும் நகைகடையிலும் மனிதர்கள். வாகனங்கள் நிறுத்த வழியின்றி சாலைகள் எல்லாம் சிறு வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. லண்டனில் நகை கொடுத்து நகை வாங்கினால் நம்மிடம் இருந்து வாங்கும் நகைக்கு அவர்கள் தரும் விலை இருபது சதவிகிதம் கூட இருக்காது. ஆனால் தமிழகத்தில் விற்கும் விலைக்கே வாங்கும் விலை நிர்ணயிக்கிறார்கள். தொழிலில், விற்பனையில், வியாபாரத்தில் கொடிகட்டும் நம்மவர்கள் திறமைசாலிகள்.

அன்று இரவு கிராமத்தில் பூப்புனித நீராட்டு விழா. சடங்குகள் இன்னும் தொலைந்து போகவில்லை என்பதை காட்டும் வண்ணம் ஒலித்து கொண்டிருந்த குழாய் ரேடியோ. உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள். இந்த விழா பெண்ணுக்கு நடத்தப்படுவது குறித்து இப்பொழுதெல்லாம் பெரும் விவாதம் எழுப்பப்படுவது உண்டு. ஆனால் கிராமங்களில் இந்த சடங்கு உறவுமுறைகளை இணைக்கும் வண்ணமாகவே இருந்து வருகிறது. முன்னர் எல்லாம் இலைமறை காயாகவே பேசப்படும் இந்த விசயங்கள் எல்லாம் 'அம்மா, அது உங்க காலம்' என வெளிப்படையாகவே பேசும் நவநாகரிகம் இன்னும் கிராமத்தில் வளர்ந்திருக்கவில்லை. விழா முடிந்ததாக அறிவிக்கப்படும் வண்ணமாக உணவு பரிமாற்றம். எத்தனை பேர் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். உறவுகள் ஒட்டாத நகரம் எவருக்கு தேவை.

இணையம் மறந்து போயிருந்தேன். இணைய உறவுகள் மறந்து போயிருந்தேன். முத்தமிழ்மன்ற கூட்டம் ஒன்று திருவண்ணாமலையில் நடைபெற இருப்பதாக அறிந்து இருந்ததால், அன்றே நண்பர் ரத்தினகிரியை தொடர்பு கொண்டேன். மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதாக சொன்னார். நண்பர் செல்வமுரளியிடமும் பேசினேன். தோழி சூரியவிடமும் பேசினேன். எழுத்துலக நண்பர்கள்தனை சந்திக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது.

அடுத்த நாள் எனது பிறந்த ஊருக்கு சென்றேன். மேற்கு தெருவில் ஒரு வீடு எழுதிய மனம் உண்மையிலே அழுதது. நான் வருவேன், என் சகோதரன் வருவான் என எந்த ஊருக்கும் செல்லாமல், லண்டன் வரும் வாய்ப்பு இருந்தும் அதை தட்டிக் கழித்துவிட்ட எனது அன்னை இல்லாத வீடு. கடவுள் தொழுதல் கண்ணை விட்டு அகலவில்லை. நுனிப்புல்லில் எழுதிய நாச்சாரம்மாள் வீடு. மனம் ஒருபோதும் மறுப்பதில்லை. நம்பிக்கைகள் விருட்சமாக இருக்கிறது. இறைவன் மறுக்கவே முடிவதில்லை. அமைதியாய் வேண்டுதல், உள்மனதில் ஆயிரம் கேள்விகள். நம்பிக்கைகளை தொலைக்கும் தைரியம் ஒருபோதும் ஊரில் வருவதே இல்லை.

உறவுகளை பார்த்த திருப்தி. மகிழ்வுடன் பேசிய தருணங்கள். ஒரு இரவு கூட தங்காமல் திரும்பினேன். தந்தையை என்னுடன் வந்து தங்க சொல்லும் அளவுக்கு தலைக்கனம். பணம் தரும் வசதிகளில் பழையவை புறக்கணிக்கப்படுகின்றன, அல்லது புறக்கணிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். பல விசயங்கள் வேதனைபடுத்தின. இதுதான் வாழ்க்கை என சமாதானம் வசதியாகவே இருந்தது. அவசர அவசரமாக திரும்பினோம்.

அடுத்த தினம் மீண்டும் மதுரை, மீண்டும் போத்தீஸ். இன்னும் சில கடைகள். அருப்புகோட்டையும், விருதுநகரும் மதுரை அளவுக்கு இன்னும் வளரவில்லை. வியாழக்கிழமை ஒரு திருமணம். அதற்கு முதல் தினமே வளையல் அணிவிக்கும் நிகழ்வு. எந்த ஒரு திருமண நிகழ்விலும் இதுபோன்ற நிகழ்வு பார்த்ததில்லை. மிகவும் சிறப்பாக இருந்தது. பலர் ஆவலுடன் வளையல்கள் அணிந்து கொண்டார்கள். தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கும் ஒரு ஆலயம். பிரமிக்க வைக்கும் அளவில் அமைக்கப்பட்ட சிலைகள். நாற்பது நாட்களாக பூமிக்குள் இருந்த மனிதர் அதாவது சித்தர். வியக்கவைக்கும் அதிசயங்கள் நமது ஊரில் மிகவும் அதிகம். வினாக்களும் உடன் எழுவதை தவிர்க்கவே இயல்வதில்லை. ஆனால் பிறர் நம்பிக்கையை உரசும் அளவுக்கு எதுவும் பேச வருவதில்லை.

அடுத்த நாள் திருமணம். கோவிலில் வைத்து மிகவும் சிறப்பாகவே நடந்தது. திருமணம் முடிந்த உடன் பந்திக்கு பரபரக்கும் மக்கள். அடுத்த வேலை பார்க்க வேண்டும் என ஓடும் அவசரம். பலருடன் நிதானமாக பேச இயலாத தருணம் அது. நான்கே மணி நேரத்தில் அனைவரும் பறந்து போனார்கள்.

அடுத்த நாள் காங்கேயனத்தம் எனும் ஊரில் கும்பாபிஷேகம். எழுத்துலக நண்பர்கள் எவரும் தொடர்பில் இல்லை. இணையம் செல்லாமல் ஏழு நாட்கள், வாழ்க்கை வசதியாகத்தான் இருந்தது. வலைப்பூ பற்றி எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. வாழ்க்கையில் வேலையென அன்றாடம் உழலும் மக்களுக்கு எழுதுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் இருக்கும், ஆனால் அவர்களுக்கு வக்கணையாக எழுதும் வசதிகள் இருக்கவில்லை. அறிக்கைகள் விட்டு கொண்டிருக்கும் அனாவசியம் அவர்களுக்கு இருப்பதில்லை.

(தொடரும்)