Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Thursday 23 September 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் - 1

ஸ்காட்லாந்து பயண கட்டுரையை பின்னர் எழுதி கொள்ளலாம் என ஒதுக்கி வைத்து விட்டேன். ஸ்காட்லாந்து பயண கட்டுரையை எழுதி இருந்தால் இந்த இந்திய பயண கட்டுரைக்கு இந்த தலைப்பு அவசியம் வந்து இருக்காது.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பிப்ரவரி மாதம் முடிவு எடுத்தாகிவிட்டது. பயணத்திற்கான தேதி எல்லாம் குறித்து பயண சீட்டு பெற்றபோது ஏப்ரல் மாதம் ஆகி இருந்தது. அப்பொழுதுதான் தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக பணியும் நடந்து கொண்டிருந்தது. நாம் சென்றபின்னர் புத்தக வெளியீட்டு வைத்து கொள்ளலாம் என நினைத்தபோது ஏனோ மனதில் முழு சம்மதம் இல்லை. புத்தகத்தினை நான் செல்லும் முன்னரே வெளியிட்டு விடலாம் என கருதி அதற்கான ஏற்பாடுகளை அகநாழிகை திரு. பொன். வாசுதேவன் அவர்கள் மூலம் செய்து கொண்டிருந்தேன்.

எப்பொழுதுமே இந்திய பயணத்தின் போது  திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. அங்கே இருக்கும் சூழல்படி பயணத்தை அமைத்துக் கொள்வது வழக்கம். சென்றமுறை இந்தியா சென்றபோது துபாயில் மூன்று நாட்கள் தங்கி இருந்து சென்றோம். ஆனால் இம்முறை இந்தியாவில் சில இடங்கள் செல்லலாம் என திட்டமிட்டோம். அதன்படி பெங்களூரு, கோவா, கோயமுத்தூர் என ஒரு வார பயணம் திட்டமிட்டோம். மதுரையில் இருந்து பெங்களூரு, பெங்களூருவில் இருந்து கோவா, கோவாவில் இருந்து மறுபடியும் பெங்களூரு, அதன் பின்னர் பெங்களூருவில் இருந்து கோயமுத்தூர். இதுவரை திட்டம் மிகவும் சரியாகவே செய்தேன். இதற்கான விமான பயண சீட்டு, தங்கும் அறைகள் என எல்லாம் லண்டனில் இருந்து கிளம்பும் முன்னர் தயார் செய்துவிட்டேன். கோயமுத்தூரிலிருந்து அடுத்து எங்கு செல்வது என்ன என்பதான திட்டம் எதுவும் இல்லை. அதுவும் ஊரில் இறங்கிய ஒரு வாரம், ஊரில் இருந்து கிளம்பும் முன்னர் இருக்கும் ஒரு வாரம் எந்த திட்டமும் இல்லை.

கடைசி வாரத்தில் 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' புத்தக விமர்சன கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்தலாம் என யோசனை இருந்தது. ஆனால் தேதி குறிக்கவில்லை. சென்றபின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து இருந்தேன். எனது ஆசிரியர்கள், எனது நண்பர்கள், எனது புத்தகங்களை வெளியிட்ட புத்தக வெளியீட்டார்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆவலுடன் இருந்தேன்.

பயண தினம் நெருங்க நெருங்க என்றைக்குமில்லாத ஆவல் அதிகமாகவே இருந்தது. சென்னையில் தங்கி செல்ல இயலாத வண்ணம் ஊரில் சில விசேசங்கள் திட்டமிட்டு இருந்தார்கள். அதனால் சென்னையில் இருந்து நேராக விமானம் மூலம் மதுரை செல்வதாக விமான பயண சீட்டு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இவ்வேளையில் முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவருடைய நண்பரின் மகள் லண்டனுக்கு படிக்க வரவேண்டும் அதற்கு உதவி செய்ய இயலுமா என கேட்டு இருந்தார். சரி என சொல்லி இருந்தேன்.

ஆகஸ்ட் மாதம் பதின்மூன்றாம் தேதி, காலை சரியாக எட்டு மணி. லண்டன் விமான நிலையத்துக்கு செல்ல எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தோம். கைப்பேசி ஒன்றை சமீபத்தில் மாற்றியதால் அதில் எவருடைய  எண்களையும் சேகரிக்கவில்லை. ஆதலினால்  முந்தைய கைப்பேசி ஒன்றையும் எடுத்துக்கொண்டேன். அப்பொழுது இந்தியாவில் இருந்து தொலைபேசி வந்தது. மதுரை செல்லும் விமானம் ரத்தாகிவிட்டது மதுரைக்கு செல்ல வேறு எந்த விமானத்திலும் இடம் இல்லை  என்றார்கள்.

மாற்று திட்டம் தீட்டி கோயமுத்தூர் செல்ல நினைத்தேன். விமான பயண சீட்டு அதிக விலையாக இருந்தது. இத்தனை விலை கொடுத்து எதற்கு செல்வானேன் என கோயமுத்தூரில் இருந்த எங்களது வாகனம் ஒன்றை சென்னைக்கு வருமாறு சொல்லிவிட்டு லண்டன் விமான நிலையத்தை அடைந்தோம்.

(தொடரும்)

Thursday 29 April 2010

பனிப் பிரதேசம் - 5

குகைக்குள் செல்ல இயலவில்லையே என வருத்தத்துடன் லண்டன் நோக்கிய பயணம் தொடங்கிச் சென்றோம். நேற்று சென்ற வழியிலேயே இன்றும் செல்ல, அந்த இறக்கப் பாதையில் சென்று நேற்று தவறவிட்ட ஓரிடத்தில் காரினை நிறுத்தி விசாரித்ததில் ஒரு குகை என்ன இரண்டு குகைகள் செல்லலாம் என சொன்னார்கள். மனது மிகவும் மகிழ்ச்சி கொண்டது.

நாங்கள் மூவர் மட்டும் தான். ஒரு சிறிய கடை வைத்து அங்கு நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த கடையில் ஒரு சிலர் மட்டும் இருந்தார்கள். நம்பிக்கையுடன் குகைக்குள் சென்றோம். 105 படிகள் தாண்டி கீழிறங்கியதும், ஸ்பீட்வெல் குகைக்குள் படகின் மூலம் பத்து நிமிட பயணம். ஏன் குகை உருவாக்கினார்கள், எப்படியெல்லாம் செய்தார்கள் என எங்களுக்கு துணையாக வந்த படகு ஓட்டியவர் சொல்லிக்கொண்டே வந்தார்.

காரீயமும், நீலக்கல் எடுப்பதற்காக கன்னிவெடிகள் மூலம் குகை உருவாக்கி இருக்கிறார்கள். படகு விலகிச் செல்ல என ஓரிடத்தில் ஒதுக்குப்புறம் எனவும் உருவாக்கி இருந்தார்கள். சித்தர்கள் என எவரும் அங்கே நடமாடவில்லை. ஓரிடத்தில் நிறுத்தி அங்கே சில விசயங்கள் காண்பித்தார். அப்படி நின்றபோது எடுத்த புகைப்படம் தான் மேலிருப்பது. அதே வழியாக திரும்பி வந்தோம். பின்னர் 105 படிகள் மேலேறி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பயணம் தொடங்கினோம்.

பத்து நிமிடங்களுக்குப் பின்னர் மற்றொரு குகையை அடைந்தோம், அங்கே நடைபயணமாக சென்றோம். எங்களுக்கு துணையாக யாரும் வரவில்லை. குகையின் இருபுறங்களிலும் வெளிச்சம் இருந்தது. ஓரிடம் தாண்டியதும் அதற்கு மேல் செல்லக்கூடாது என தடுப்பு போட்டு வைத்து இருந்தார்கள், ஆனால் எந்த எச்சரிக்கையும் இல்லை, நான் சென்று பார்க்கலாம் என இறங்க, சகதியைக் கண்டு பயந்து திரும்பினேன். பின்னர் குகை பராமரிப்பாளரிடம் பேசியபோது 'நல்ல வேளை நீங்கள் செல்லவில்லை, அது குகையினை பற்றி அறிந்து கொள்ள, ஆராய்ச்சிகள் புரிய வருபவருக்கான இடம். பிபிசி மூலம் படம் எடுக்கவும் வருவார்கள், அதற்குத்தான் ஒரு தடுப்பு போட்டிருக்கிறோம் என சொன்னார்கள்.

அப்பாடா என மனம் சொன்னது. குகை கண்ட மகிழ்ச்சியுடன் லண்டன் நலமுடன் வந்தடைந்தோம். வந்த சில தினங்களிலேயே ஏப்ரலில் ஸ்காட்லான்ட் செல்ல வேண்டுமென திட்டமிட்டோம். பிப்ரவரி மாதத்திலேயே நல்லதொரு திட்டத்துடன் ஏப்ரல் மாதம் பயணம் தயார் செய்து வைத்தோம். அந்த பயணக் கட்டுரையை சில வாரங்கள் பின்னர் எழுதுகிறேன். அதுவரை, பயணத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும்.


(முற்றும்) 

அடுத்த பயணக் கட்டுரை வெளியீடு :  ஸ்காட்லாந்து நோக்கிய கனவுகள் 

Wednesday 28 April 2010

பனிப் பிரதேசம் - 4

ஸ்டேட்ஸ்வொர்த் எனப்படும் இடமானது பூங்காவினையும், அருமையான கட்டிடம் ஒன்றையும் கொண்டிருந்தது. அரச பரம்பரையினரால் இந்த கட்டிடம் பல வருடங்களாக பராமரிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ்தனை முன்னிட்டு அந்தக் கட்டிடம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர்களில் அழகாக வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. ஓவியங்கள் மிக அருமையாக வரையப்பட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு பூங்கா பகுதியில் நடக்க ஆரம்பித்தோம். வெயில் காலத்தில் வண்ண வண்ணப் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த பூங்கா எங்கும் பனியுடன் காட்சி தந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அங்கே பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதியம் அங்கேயே உணவு அருந்திவிட்டு எப்படியாவது குகை ஒன்றுக்குள் சென்று பார்த்துவிட வேண்டுமென அங்கிருந்து நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ளே ஒரு குகைதனைப் பார்க்க விரைந்தோம்.

மதிய உணவு என்றதும் நினைவுக்கு வருகிறது. காலை உணவு ஹோட்டலிலேயே தந்தார்கள். காலை உணவு, இரவு உணவு போல் அல்லாது மிகச் சிறப்பாகவே இருந்தது.

விரைந்து சென்று அந்த குகையைப் பார்க்கச் சென்றபோது சற்று பனி அதிகமாக கொட்டத் தொடங்கியது. குகை இருக்கும் இடத்திற்குச் சென்றுப் பார்த்தால் குகை மூடப்பட்டு இருந்தது, பனி மிக அதிகமாக அங்கு நிறைந்து இருந்ததால் வாகனம் செல்லவும் வழியில்லை. பனி விழுவதைக் கண்டதும் நேராக ஹோட்டல் சென்றுவிடலாம் என முடிவெடுத்தோம்.

ஹோட்டல் சென்றடைந்த போது மணி மூன்றரை ஆகியிருந்தது. ஹோட்டலிலேயே அமர்ந்து இருப்பதா என யோசித்தவாரே பனி விழும் அழகை ரசித்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக தொடர்ந்து பனி விழவில்லை. தொலைகாட்சியில் செய்தியைப் பார்த்தபோது பனி விழுந்த காரணத்தினால் பலர் காரினை அப்படி அப்படியே விட்டுவிட்டுச் சென்றதாகவும், இரவெல்லாம் காரில் இருந்ததாகவும் தென் இங்கிலாந்து பகுதியில் ரெட்டிங் எனும் ஊரில் நடந்த விசயத்தைச் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் ஒரு சாலையைப் பற்றிச் சொன்னார்கள். அந்த சாலையில் தான் திங்கள் கிழமை காலையில் கிளம்பி வந்திருந்தோம், புதன் அன்று அதே வழியில் தான் செல்ல வேண்டும். எல்லாம் சரியாகிவிடும் எனும் நம்பிக்கை இருந்தது. ஹோட்டலிலிருந்து அருகில் உள்ள ஊரின் பகுதிக்குள் நடந்தே சென்றோம்.

கடைகள் எல்லாம் மூடிக் கொண்டிருந்தார்கள். இரவு என்ன சாப்பாடு என யோசித்துக் கொண்டு கடை வீதிகளில் நடந்து திரும்புகையில் இந்திய உணவுக் கடை ஒன்று கண்ணில் பட்டது. அங்கே சென்று அவர்களிடம் பேசுகையில் இருபது வருடங்களுக்கு மேலாக கடை வைத்திருப்பதாகவும் மான்செஸ்டரில் இருந்து வந்து செல்வதாகவும் கடை திறந்து அரைமணி நேரம் ஆவதாகவும் கூறினார். எங்களைத் தவிர கடையில் வேறு எவரும் இல்லை. டெர்பி பல்கலைகழகத்தில் இந்திய மாணவர்கள் அதிகம் படிப்பதாகவும் கூறினார். கோடைகாலத்தில் கடை நிரம்பி வழியும் எனவும் சொன்னார். கடையில் உணவு பொருட்கள் வாங்கிச் சென்றோம். உணவு நன்றாக இருந்தது.

கார்ன்வால் எனப்படும் இடத்தில் பனியானது உறைந்து ஒரு ஊர்வலப் பேருந்து வழுக்கி தடுமாறியதில் சிலர் இறந்த செய்தி கேட்டபோது இயற்கையின் விபரீதம் வெகுவாகவே அச்சமூட்டியது. வட இங்கிலாந்து பகுதிதான் அதிகம் பாதிக்கப்படும் என்பது போலவே ஸ்காட்லாந்து அதிக குளிரிலும், பனியிலும் வாடியதாகவும் செய்தி வந்தது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை இவ்வாறு இங்கு கொண்டாட வேண்டும் என ஆசைப்பட்டு வந்த இடத்தில் குகைப் பகுதி பார்க்காமலிருந்தது வருத்தமாக இருந்தது. நாங்கள் சென்ற இடம் எங்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. புதன்கிழமை காலையில் லண்டன் நோக்கிய பயணம் ஆரம்பித்தோம். குகை கண்களுக்குத் தென்பட்டதா?




(தொடரும்) 

பனிப் பிரதேசம் - 3

முதன் முதலில் குகைதனைப் பார்க்கலாம் என பயணித்தோம். வாகனம் செல்லும் வழியைத் தவிர பிற பகுதிகள் எல்லாம் பனிகள் சூழ்ந்திருந்தன. மலைகள் பனிகளால் தங்களை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தது. மிகவும் கவனத்துடன் பயணித்துக்கொண்டிருந்தோம்.

அப்பொழுது இரு மலைகள் இருபுறமும் சூழ்ந்திருக்க நடுவில் சென்ற பாதையில் பயணித்தோம். இறக்கமாக பாதை இருந்தது. பயமாகப் போய்விட்டது. சற்று கவனம் சிதறினாலும் பயணம் தடைபட்டுவிடும் என்கிற நிலை. செல்லும் வழியில்  இருக்கும் குகை பற்றி அறியாததால் அதைக் கடந்து வேறு இடத்திற்கு வந்தோம்.

பாதையெல்லாம் பனியாய்  நிறைந்திருக்க காரினை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். பனி லேசாக கொட்ட ஆரம்பித்தது. பாதையில் நடந்து சென்று மலை மீது ஏறி பின்னர் குகை செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினோம்.

சிறிது நேரம் மேலே ஏறியதும் மனம் அதற்கு மேல் செல்ல மறுத்தது.  பனி சற்று வழுக்கவும் செய்தது. சரியான கருவிகள் துணை இன்றி செல்வது தவறு என குகையைப் பார்க்கமால் திரும்பினோம். பின்னர் அங்கிருந்து ஸ்டேட்ஸ்வொர்த் எனும் இடத்திற்குச் சென்றோம்.









(தொடரும்)


Tuesday 27 April 2010

பனிப் பிரதேசம் - 2


அங்கே பனியில் சிறிது நேரம் விளையாடினோம். முன்னும் பின்னும் காரை நகர்த்தி ஒருவழியாக ஹோட்டல் நோக்கி காரைச் செலுத்தினேன். கரு நிறப் பாதையில் மட்டுமே வாகனம் செலுத்திய அனுபவம் உண்டு. செம்மண்ணில் டிராக்டரில் அமர்ந்து சென்ற அனுபவம் நிறையவே உண்டு. ஆனால் பனிகள் நிறைந்த வெண்ணிறப் பாதையில் முதன்முதலாக காரைச் செலுத்தும்போது காரில் எச்சரிக்கை ஒலி வந்து கொண்டிருந்தது. எதிரில் ஏதேனும் கார் வந்தால் கூட விலக முடியாத நிலை. மெதுவாக காரினைச் செலுத்தி ஒருவழியாக ஹோட்டல் செல்லும் சாலை வந்தடைந்ததும் மனதில் ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது.

ஹோட்டல் நோக்கிச் செல்லும்போது இருபுறமும் மலைகள் எல்லாம் இமயமலைகள் போன்றே காட்சி அளித்தன. அற்புதமான பயணத்தின் முடிவில் மலையில் அமர்ந்திருக்கும் ஹோட்டலை அடைந்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. நல்லதொரு வரவேற்பினைத் தந்தார் அங்கிருந்த பெண். பின்னர் எங்கள் அறையை அடைந்ததும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு வரவேற்பறை. பின்னர் உள்ளே சென்றதும் படுக்கை அறையுடன் கூடிய குளியலறை என மிகப் பெரிய அறையாகவே காட்சி தந்தது. சிறிது நேரத்தில் அறையில் தொலைபேசி சப்தம் எழுப்ப, எனது மகனுக்கான படுக்கையை தயார் செய்வதாக கூறினார்கள். அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் வரவேற்பறையில் இருந்த இருக்கையானது, படுக்கையாக மாற்றப்பட்டது. அங்கே ஒரு தொலைகாட்சி, படுக்கை அறையில் தொலைகாட்சி ஒன்று என இருந்தது. வெளியில் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து இருந்தது. மரங்கள் வெள்ளை இலையுடன் அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது.

இரவுச் சாப்பாடு என ஹோட்டலிலேயே சாப்பிடலாம் என சென்றால் முன்பதிவு செய்ய சொன்னார்கள். இருக்கைக்கு முன்பதிவு செய்துவிட்டு ஆறு மணியளவில் சாப்பிட சென்றோம். நாங்கள் சைவ உணவு என்பதால் சற்று சிரமமாக இருந்தது. எனினும் பசிக்கு எனச் சாப்பிட்டு விட்டு வந்தோம்.

காலையில் எங்கு செல்வது என ஒருவழியாய் முடிவு செய்து பயணித்தோம். அந்த பயணம் சிலிர்ப்பையும், பயத்தையும் தந்தது.

(தொடரும்)

பனிப் பிரதேசம் - 1

இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு (2009) என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில் உச்சிகளின் மாவட்டம் ( பீக் டிஸ்டிரிக்ட்) எனப்படும் வட இங்கிலாந்தில்  மான்செஸ்டருக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். வானிலை எச்சரிக்கை எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

தினமும் வானிலை எச்சரிக்கைப் பார்த்துவிட்டு பனி எதுவும் உச்சி மாவட்டத்தில் இல்லை என முடிவு செய்து கிறிஸ்துமஸ் வாரத்தில் திங்கள் கிழமை கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புதன் கிழமை திரும்பலாம் என முடிவு செய்தோம். எங்கு தங்குவது என அதிக யோசனை. விலை மலிவாகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் தங்குமிடம் மனதுக்கு திருப்தியாகவும் இருக்க வேண்டும். என்ன செய்வது என பல இடங்களை இணையத்தில் தேடினோம்.

எத்தனை மனிதர்கள் எத்தனை விதமாக ஒரே இடத்தைப் பற்றிய அனுபவங்கள், பிரமிக்க வைத்தது. அனைவருக்கும் ஒரே மனம் இருந்துவிடக் கூடாதா எனத் தோன்றியது. கிறிஸ்துமஸ் முதல் வார வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி தாண்டியும்  எந்த ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்ய இயலவில்லை. அறைகள் ஒன்று மட்டுமே உள்ளது எனும் அளவுக்கு சில ஹோட்டல்கள் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.

இறுதியாக ஆனால் உறுதியாக ஒரு ஹோட்டல் பஃக்ஸ்டன் எனும் ஊரில் தேர்வு செய்தோம். விலை மலிவாகவே இருந்தது. சனி, ஞாயிறு கிழமை கடந்துவிடாதா எனும் ஏக்கத்தில் இருக்க திங்கள் கிழமையும் வந்து சேர்ந்தது. லண்டனில் பனி பெய்ததால் சின்னச் சாலைகள் வண்ணம் பூசியதைக் கலைக்க மறுத்துவிட்டன. கால்கள் வழுக்க ஆரம்பித்தன. கிளம்பும் முன்னர் எதிர்த் தெருவில் எவரோ திருடிய கார் ஒன்று சாலையில் வழுக்கி ஒரு வீட்டு முன்புறம் நிறுத்தப்பட்ட காரில் இடித்து நின்றுவிட, காரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போனார் அவர். சாலையில் கவனம் தேவை என மனம் நினைத்துக் கொண்டது.

இந்த மூன்று நாட்கள் பனி இல்லை என சொன்ன வானிலை, செவ்வாய் அன்று சற்று பனி இருக்கும் என்றே சொன்னது. இதற்கு முன்னர் பனி பெய்ததா இல்லையா என்பதை மனம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலை ஒன்பது மணிக்கு கிளம்பி மாலை மூன்று மணி சென்றடைந்தோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாலையில் பனித்தடங்களே இல்லை.

உச்சிகளின் மாவட்டம் தனில் ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே பனி நிறைந்தே இருந்தது. பனியைக் கண்ட ஆர்வத்தில் காரினை ஓரத்தில் நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்கள் எடுத்துவிட்டு காரினை நகற்ற கார் பனியில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தது.

(தொடரும்)

Monday 8 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)

அந்த நிறுத்தத்திற்குப் பின்னர் சேலத்தை சிரமமில்லாமல் அடைந்தோம். சரியாக மணி ஒன்பது ஆகி இருந்தது. அந்த அண்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். பிறரை மதிக்கும் பண்பு, உபசரிப்பு என எனது கண்களில் அவர் உயர்ந்து தெரிந்தார்.

Sunday 7 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)

தினா அழைத்துச் சென்றது ஆஞ்சநேயர் ஆலயம். முன்னரே தான் செல்ல வேண்டி நினைத்திருந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினார். ஆலயத்திற்குச் சென்றதும் உயரமான ஆஞ்சநேயர் சிலை கண்டு பிரமித்துப் போனேன், ஆனால் அதையும் தாண்டி நடந்த விசயம்தான் என்னை யோசிக்க வைத்தது. 

Friday 5 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)

திருச்சிக்குப் பயணம் என ஆரம்பிக்க, உறவினர் ஒருவர் ஸ்ரீரங்கநாதரைப் பார்க்கவேண்டும் என நினைக்க, ஸ்ரீரங்கத்தில் இருந்த எனது தாத்தா ஒருவர் சமீபத்தில் வைகுண்ட பதவி அடைந்திருக்க, கோவிலுக்குச் சென்றால் வீட்டுக்குச் செல்லக்கூடாது எனவும், வீட்டுக்குச் சென்றால் கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சாத்திரங்கள் அந்த உறவினரே சொல்லிவைக்க,

Tuesday 2 February 2010

வித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)

பயணம் 6


துபாயிலிருந்து சென்னை வந்தடைந்தபோது வெயில் கொஞ்சம் வாட்டி எடுக்க ஆரம்பித்தது. இருபத்தி நான்கு வருடங்களாக பிறந்து வளர்ந்து வாழ்ந்த பூமி. கடுமையான வெயில் எனப் பார்க்காமல் களத்து மேட்டுகளிலும், ஒவ்வொரு ஊரின் நிலங்களைத் தரிசு நிலங்களாக்கி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருந்த பூமி. 'வேகாத வெயிலுல இப்படியா விளையாடி கருத்துப் போவ' என அன்பினால் திட்டு வாங்கியும் சலிப்பு ஏதுமில்லாமல் சுற்றித் திரிந்த பூமி. வெயிலுக்கு உகந்த அம்மன் என மாரி வேண்டுமென மாரியம்மனிடம் மழைக்கஞ்சி கேட்டு திரிந்த பூமி. அம்மனை மனம் குளிரச் செய்ய ஐந்து நாட்கள் திருவிழா என அக்கினிச் சட்டியும், பூக்குழியும் கண்டு வணங்கி இருந்த பூமி. உடலில் சாட்டையால் அடித்துக் கொண்டு ஊரில் அக்கினிச் சட்டி ஏந்தி வரும் மனிதரைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்திருந்த பூமி. பழக்கப்பட்ட வெயில் ஒவ்வொரு முறையும் ஊரில் கால் வைக்கும்போது ஏதோ குளிர்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவன் போல நினைத்துக் கொண்டு அப்பப்பா வெயில்... என்னா வெயில்... என உடலும் மனமும் அலட்டிக்கொள்ளும்போதெல்லாம் கண்களில் நீர் பொங்கத்தான் செய்கிறது. இப்போதெல்லாம் உடல் உள்ளூர் வெயிலுக்குத் துவண்டு போகிறது. 

சென்னையில் இறங்கியதும் இலண்டனில் திட்டமிட்டபடி அன்றே திருவண்ணாமலை சென்றோம். எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான திருச்சுழியிலிருந்து திருவண்ணாமலை சென்ற இரமணரின் பூர்விக இடமான திருச்சுழியைச் சென்ற முறை இந்தியா சென்றபோது பார்த்தேன். இம்முறை திருவண்ணாமலை செல்லும் ஆர்வம் சகோதரி ஒருவரின் வலைப்பூவினைப் படித்ததும் மேலும் அதிகமானது, இந்தியா செல்ல முடிவெடுத்த பொழுதே திருவண்ணாமலை பற்றி முடிவு செய்தோம். அதன்படியே சென்றோம். அடியார்க்கெல்லாம் அடியார் கதை எழுதிக் கொண்டிருக்க உன் ஆலயம் பார்க்க என்னை வரச் செய்தாயோ என எண்ண வைத்தது. சிறப்பு தரிசனம் கிடைத்தது. ''பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்'' என அவனிடம் அருள் பிச்சைக் கேட்டு வைக்க ஆலயத்தின் வெளியே பொருள் பிச்சை கேட்டு பலர். மனம் கனத்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ? 

ஆசை துறந்த, ஆடையும் துறந்த இரமணரின் ஆசிரமத்தில் பணம் வேண்டாம் எனச் சொன்ன இளைஞனைக் கண்டு மனம் மெச்சிய வேளையில் ஆடை வேண்டும் எனக் கேட்டு பின்னர் பணமும் அதே இளைஞன் கேட்டபோது சேவையுள்ளம் என்னுள் தேவையற்றுக் கிடந்தது. சென்னையில் இறங்கிய மறுகணமே ஏதுமே செய்யாமல் பணம் கேட்ட இருவரையும் இந்த இளைஞரையும் பார்த்த எனது மகன் என்னிடம் கேட்டான். ''அவர்கள் என்ன வேலை செய்தார்கள்? பணம் கேட்டு நின்றார்கள்?'' என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இருப்பவர் இல்லாதவருக்குத் தரவேண்டும் என நான் சொன்னால் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேள்வி வந்தாலும் வரும், எனவே அமைதியானேன். ''அவர்கள் ஏதாவது வேலை செய்ய வேண்டும், பணம் வரும்'' என தானாகவே பதில் சொன்னான். உழைத்தால் தான் ஊதியம் என அறிந்து வைத்திருக்கும் இச்சின்னஞ்சிறு சிறுவனே, சில வருடங்கள் முன்னர் ஒருமுறை உதவி என வீட்டின் வாசலில் வந்து நின்றவருக்கு ஓடிச்சென்று தனது சேமிப்பில் இருந்து ஒரு நாணயம் எடுத்துக் கொடுத்து இருக்கிறான். அன்றைய தின செய்தி கேட்டு கண்கள் கலங்கியது, இன்றைய தின சேதி கேட்டு மனம் விழித்தது. மிகவும் வித்தியாமான அனுபவத்தை அந்த திருவண்ணாமலைத் தந்ததோ இல்லையோ எனது மகன் தந்து கொண்டிருந்தான். 

வீட்டிற்கு வந்து சேர இரவு பத்து மணிக்கும் மேலாகியது. மறுநாள் காலை தம்பி முரளியையும், சுதாகர் அண்ணனையும் தொடர்பு கொண்டேன். சுதாகர் அண்ணனை அன்று சந்திக்கலாம் என இருந்தேன் ஆனால் சொந்த விசயங்களால் சந்திக்கமுடியாமல் போகும் என கொஞ்சமும் நினைக்கவில்லை. இரவு பத்து மணியானாலும் பார்க்கலாம் என மனம் நினைத்தது. 

முகப்பேர் சென்று அங்கிருந்து கிஷ்கிந்தாவில் விளையாடிவிட்டு சென்னை கடற்கரையில் சிறிது நேரம் கழிக்க மொத்த நாளும் கழிந்திருந்தது. அங்கிருந்து சுதாகர் அண்ணனின் வீட்டுக்குச் செல்லலாம் என நினைக்க ஐசிஎப் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட நான்கு மணிக்கெல்லாம் அழைக்க வேண்டிய சுதாகர் அண்ணாவை அழைக்கவே வழியின்றிப் போனது. ஒன்பது மணிக்கு மேல் சுதாகர் அண்ணன் சிரமப்பட்டு எங்கள் எண்ணைக் கண்டுபிடித்துப் பேச இனிமேல் சந்திக்க காலதாமதமாகிவிடும் என அவர் சொல்ல, 16ம் தேதி நிச்சயம் சந்திக்கலாம் என சூழ்நிலை புரிந்து கொண்டு அவர் சொன்னபோது அந்த நாளை மனதில் அச்சடித்து வைத்தேன். எப்படியாவது இந்த அன்புக்குரிய அண்ணனை சந்தித்துவிடுவது என்று மனதில் எண்ணிக்கொண்டேன். 

எனக்கே மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தது, எப்படி சென்னைக்குச் செல்லும்போதெல்லாம் யாரையுமே சந்திக்காமல் செல்கிறோம் என. இதற்கான ஒரு வித்தியாசமான விசயத்தைப் பின்னர் எழுதுகிறேன். அந்த ஒரு விசயம்தான் என் வாழ்வில் என்னை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுகிறது என்பதையும் அறிந்தேன், ஆனால் அதற்காக எந்த ஒரு வருத்தமும் இல்லை. 

காலை ஏழு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பியபோது கிரி அவர்களைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதை மறந்து இருந்தேன். அவருடன் அன்று தொடர்பு கொள்ள இயலவில்லை. வெயில் அதிகமாக இருந்தது. பலவருடங்கள் பின்னர் ஊரில் அதே ஐந்தாம் திருவிழா என மாரியம்மன் திருவிழா கொண்டாட்டத்தை அன்று இரவு கண்டது வித்தியாசமாக இருந்தது. முதல் இரண்டுநாள் கடும்வெயிலாக இருக்க அடுத்த இரண்டு நாள் நல்ல மழை பெய்தது. ஊருக்கு வரும்போதெல்லாம் மழை பெய்து மனம் மகிழச் செய்தது. 

தினா தொடர்பு கொண்டார், நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக பேசினார். அவரது மன உறுதி கண்டு அதிசயித்தேன். அவரது உடல்நலம் முழுதும் குணமாகிட இறைவனை வேண்டுகிறேன். சுதாகர் அண்ணனும் அவ்வப்போது பேசினார். கிரி அவர்களுடன் 'நான் கடவுள்' படம் உட்பட பல விசயங்கள் அலசினோம், இந்தமுறை கிரி அவர்களை சந்திக்க வாய்ப்பே ஏற்படுத்திக்கொள்ளாமல் போனேன். அங்கிருந்து கிளம்புவதற்கு முதல் நாளன்று அவரைத் தொடர்பு கொண்டு சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தலாம் என இருக்க அவரது செல்பேசி தனித்து விடப்பட்டுப் போக சந்திக்க வாய்ப்பின்றி போனது. இது ஒரு விசயத்தை உணர்த்தியது. நான் மேற்கொண்ட திருச்சி, நாமக்கல், சேலம் ஏற்காடு மற்றும் கோயம்புத்தூர் பயணம். 

ஒரு உறவினர் வீடு எங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது. நடந்தால் பத்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுக்கும். ஊர் வந்த அன்றே வீட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்கள், நாளை வருகிறேன் என சொல்லி இருந்தேன். ஊருக்குக் கிளம்புவரை அவர்கள் வீட்டிற்குச் செல்லவே இல்லை. கிளம்பும் முதல் நாள் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன் அதுவும் இரவு ஒன்பது மணிக்கு மேல். அப்பொழுது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தது மிகவும் சுவராஸ்யமாக இருந்தது. ஒன்றைச் செய்ய நினைத்தால் அதை உடனடியாகச் செய்ய வேண்டும், மேலும் ஒருவரைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்ய வேண்டிய அவசியமுமில்லை எனும் விசயம் மனதில் தோன்றியது. இப்படி மற்றவர்களைத் திருப்திபடுத்த வேண்டும் எனும் எண்ணம் இல்லாமல் போகும் காரணத்தினாலேயே நான் கொஞ்சம் தனிமையாகிறேன் என கருதுகிறேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற காரணம் காட்டியே நமது வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழ்வதற்கு நிர்பந்தப்படுத்திக் கொள்கிறோம் ஏதேனும் ஒருவகையில். 

''நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் தவறாக நினைக்கமாட்டோம்'' என உறவினர் சொல்ல ''நீங்கள் தவறாக நினைத்துவிடுவீர்களோ என நான் வரவில்லை, இந்த நேரமும் என்னால் ஒதுக்க முடியாவிட்டால் நான் வந்திருக்கவும் மாட்டேன், இப்படிச் சொல்வதால் பிறர் என்னை வேறு விதமாக நினைக்கக் கூடும், அதற்காக நான் சொல்லாவிட்டாலும் நினைப்பது மாறாதுதானே'' என்றேன். புரிந்து கொள்ளும் நபர்களிடையேப் பிரச்சினை இல்லை, மேலும் முக்கியத்துவம் கொடுத்தால் எதையும் செய்யலாம் என கருத்து பரிமாறிக்கொண்டபோது பல விசயங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் முனைப்பாக இல்லாது போயிருக்கிறேன் என எண்ணம் மேலிட்டது. 

ஏழாம் தேதி செல்ல இருந்த திருச்சிப் பயணம் பன்னிரண்டாம் தேதி மாற்றம் ஆனது. கோயம்புத்தூரில் இருக்கும் எனது சொந்த சகோதரியை எப்படியாவது சென்றுப் பார்த்துவிட்டு வரவேண்டும் எனும் தீராத ஆர்வமே இந்தப் பயணத்தை மேற்கொள்ளச் செய்தது. இந்த பயணத்தின் காரணமாக தினாவையும், முரளியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் வேணு ஐயாவை சந்திக்க வாய்ப்பின்றி போனது. அந்தப் பயணம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வித்தியாசமான பயணமாக அமைந்தது. 

Monday 1 February 2010

வித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)

பயணம் 5


எங்களுடன் நார்வே நாட்டினைச் சார்ந்த வயதான தம்பதியர்களும் இணைந்து கொண்டார்கள். துபாய் நகரைவிட்டு சவுதி அரேபியா வரை செல்லும் சாலையில் வாகனம் பயணித்தது. இருபுறங்களிலும் பாலைவனங்கள் தென்பட பாலைவன செடிகளும் ஆங்காங்கே தனித்து நின்று கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலான பிராயணத்திற்குப் பின்னர் ஓரிடத்தில் வாகனத்தின் சக்கரங்களில் காற்றழுத்தம் குறைக்கப்பட்டது. 

பின்னர் மேடு பள்ளங்கள் நிறைந்த பாலைவனத்தில் வாகனம் பிரயாணிக்க 'சரிதான்' என நினைத்துக்கொண்டிருக்க திடீரென மேடான பகுதிக்குச் சென்று பின்னர் கீழிறங்குவதும், மேலேறுவதுமாய் வாகனத்தில் வித்தை காண்பிக்க உடல் குலுங்கியதோடு வயிறும் கலங்கியது. உற்சாகத்தில், பயத்தில் ஆ ஓ என வயதான தம்பதியர்கள் அலறிய சப்தத்தை அசைபடம் போட்டு பார்த்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களை, கடவுளைப் பிரார்த்தனை செய்ய வைத்தது அந்த வாகன விளையாட்டு. நவீன் தன் பங்குக்கு வாந்தி வருவதாக இருமுறை கூறி வாகனம் நிறுத்தப்பட்டது. 

அந்த மணலில் இறங்கி நடந்து சுற்றிப் பார்த்திட மணலில் கோலம் இட வைக்கப்பட்ட புள்ளிகளாய் செடிகள். ஒட்டகங்கள் காட்சி கண்டோம். ஓட்டுநரிடம் தினமும் வருவீர்களா எனக் கேட்டபோது ஆம் என சொன்னவர், சில தினங்கள் மழை பெய்து இருந்ததால் நேற்றைய தினம் வாகனம் செலுத்த மிகவும் சிரமப்பட்டதாக வாகன ஓட்டி சொன்னார். மேலும் எங்கள் தொழில் இது என்பதால் சிரமம் இருப்பினும் செய்துதான் ஆகவேண்டும் என அவர் சொன்னபோது ஏதோ மனதில் இடைஞ்சல் செய்தது. இன்று அந்தப் பிரச்சினை இல்லை எனச் சிரித்துக் கொண்டார். 

பின்னர் சிறப்பு விருந்தினர்களாக ஓரிடம் சென்றோம். அது பாலைவனத்திலேயே அமைந்து இருந்தது. பலர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. உணவு மிகவும் சிறப்பாக இருந்தது. சைவம் அசைவம் என பிரித்து வைத்திருந்த விதமும், ஆண்கள், பெண்கள் என தனித்தனிப் பிரிவாக வைத்திருந்த விதமும் சிறப்பாகவே இருந்தது. பின்னர் நடன நிகழ்ச்சியை ஐம்பது வயதுமிக்க இளைஞியும், 25 வயது மிக்க இளைஞரும் ஆட அனைவரும் பார்வையாளர்களாக சென்று இருந்தோம் என்றால் தான் அது சரியாகும். நடனக் கலைஞர்களுடன் ஆர்வத்துடன் படம் எடுத்துக்கொண்டனர் பலர். சிலர் மேடையேறி ஆடவும் செய்தனர். 

இந்நிகழ்வுகளுக்கு முன்னர் ஒட்டக சவாரிதனை செய்ய விருப்பமில்லாமல் பாவமாக ஒட்டகத்தைக் கண்டுவிட்டு வந்தோம். சந்தோசமாக பலர் சவாரி செய்து மகிழ்ந்தார்கள். ஒட்டகமும் எங்கள் தொழில் இது என சொல்லி இருக்குமோ?! 

இரவு ஹோட்டல் வந்து சேர வழக்கம்போல பத்து மணி ஆகியிருந்தது. வழக்கம்போல வசந்தபவன். மறுநாள் காலையில் எழுந்து ஜுமிரா மால் சென்றோம். அது ஒரு தனி நகரமாக நிர்மாணிக்கப்பட்டதாக சொன்னார்கள். உள்ளே பல கலைபொருட்கள் வாங்கும்படியாய் இருந்தது. லதாவிடம் பேசினேன் அபுதாபிக்கு வர இயலாமல் இருப்பதாக. லதாவோ அவரது கணவர் நேற்று துபாய் வந்ததாகவும், தொடர்பு கொள்ள வசதியில்லாததால் அழைக்கமுடியவில்லை எனவும் கூறினார். பின்னர் தானே ஏர்போர்ட் வருவதாக சொல்ல நான் வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

அங்கிருந்து நேராக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். அங்கே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்தோம். பின்னர் வைரமாளிகை சென்றோம். டிராகன் மால் சகோதரி சுந்தராவின் வீட்டில் அருகில் இருப்பதாக சொல்லி இருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று பின்னர் அங்கே செல்லலாம் என அவர் சொல்லி இருக்க எங்களுக்கோ பனிச்சறுக்கு விளையாட்டில் நேரம் ஆகி கொண்டிருக்க நேராக டிராகன் மால் சென்றோம். சீனா வசம் போல டிராகன் மால்!

அங்கிருந்து சகோதரியின் வீடு பக்கம் என நினைத்து டாக்ஸியில் செல்ல சகோதரியின் வீட்டினைக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறினோம். சகோதரி வழி சொல்லியும் டாக்ஸி டிரைவருக்குப் புரியவில்லை, எனக்கு பாதை கொஞ்சமும் தெரியவில்லை. கிருஷ்சிவா அவர்களை முன்னதாக அழைத்தேன், அவர் வேலைக்குக் கிளம்பிவிட்டார் என கூறினார். நல்லவேளை அவரைக் காத்திருக்க வைக்கவில்லை எனத் தோணியது. நேரத்தை, வீடு கண்டுபிடிக்கிறேன் என டாக்ஸி கொன்று கொண்டிருந்தது. ஆனால் ஆச்சரியம் இருபது நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் கொண்டு வந்து சேர்த்தார் அவர். வந்து கொண்டிருந்தபோதே புவனாவின் கணவர் எங்களுக்காகக் காத்திருப்பதாக புவனா தகவல் சொல்ல எனக்கோ 'அடடா' என ஆகிவிட்டது. 

பின்னர் புவனாவின் கணவரை ஹோட்டலில் சந்தித்துப் பேசினோம். மிகவும் நன்றாக பேசினார். பேருந்தில் தான் ஷார்ஜா செல்ல வேண்டும் எனவும் ஒரு மணி நேரம் மேல் ஆகும் என அறிந்தபோது வருத்தம் மேலிட்டாலும் அவரைப் பார்த்துப் பேசியதில் அளவில்லாத சந்தோசம் நிறைந்து இருந்தது. பின்னர் சகோதரி தனது குடும்பத்தோடு எங்களை வழியனுப்ப வந்திருந்தார். அன்று அவரின் அன்பால் 'சரவண பவன்' சென்று உணவருந்தினோம். அருமையான சொந்தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய துபாய் பயணம் ஒரு வித்தியாசமான பயணமாகவே இருந்தது. வியாபார நுணுக்கங்களைப் பற்றி அன்றும் பேசிக்கொண்டிருந்தோம், பல நல்ல விசயங்களை சகோதரியின் கணவர் சொல்லிக் கொடுத்தார். போராடி வாழ்வில் வெற்றி கண்டு கொண்டிருக்கும் ஒரு மாமனிதரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டேன். 

துபாயில் இன்னும் சிலநாட்கள் தங்கி இருக்கலாம் எனும் ஏக்கத்தை துபாய் நகரமும், அங்கே நான் கண்ட அன்பு உறவுகளும் மனதில் விதைத்ததை வாழ்வில் ஒரு பெரிய விசயமாகத்தான் கருதுகிறேன். என் மகன் என்னிடம் கேட்டது 'இங்கே யாரும் நம்மிடம் பணம் கேட்டு நிற்கவில்லையே, ஏன்?' எனக்கு மிகவும் யோசனையாகத்தான் இருந்தது. எல்லாரும் எல்லாம் பெற்றிருக்க ஏதேனும் வழியுண்டோ? ஆனால் வாகன ஓட்டி சொன்ன ஒரு விசயம் சற்று அதிர்ச்சியாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 



''துபாயில் உழைக்கும் வர்க்கத்தினர்க்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை, உழைக்கும் வரை அவர்களது உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை ஓட விரட்டிவிடும், எதையும் தந்து அழகுப் பார்க்காது. எப்பொழுது உழைக்கும் வர்க்கத்தினர்க்கு ஒரு நாடு மதிப்பைத் தரவில்லையோ அந்த நாடு ஒரு காலத்தில் தனது மொத்தச் செல்வத்தையும் இழந்து அனாதையாகிவிடும். அப்படித்தான் இப்போது 'அல்லா' இந்த துபாயினை தண்டித்துக் கொண்டிருக்கிறார், இனியாவது துபாய் திருந்தட்டும்'' என அந்த வாகன ஓட்டி சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எதற்கெடுத்தாலும் இறைவன் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என மனிதர்கள் நினைக்கிறார்கள்! 

''துபாயில் மட்டுமே சட்டத்தில் மற்ற அரபு எமிரேட்ஸ் நாடுகளைத் தவிர விதிவிலக்காக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்கள் இங்கே அனுமதிக்கப்படுகிறது. குடித்துக் கொண்டு ஒருவர் வாகனத்தை ஓட்டும்போது பிற உயிர்கள் பறிக்கப்படுகிறது என அறிந்தும் ஏன் ஒருவரை குடிக்க அனுமதிக்க வேண்டும், குடிப்பதைத் தடைசெய்து இருக்கும் மற்ற அரபு நாடுகள் போல இங்கும் தடை செய்ய வேண்டும்'' என சொன்ன வாகன ஓட்டி அடிக்கடி புகைபிடித்துக் கொண்டிருந்தது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. எப்படி மனிதர்கள் மட்டும் தங்களது செயல்களை மிகவும் அருமையாக பிறருக்கு எதுவும் தெரியாதது போல நியாயப்படுத்திவிடுகிறார்கள்! 



இனி சென்னை! 

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)

பயணம் 4
துபாய் மால் செல்வதா, மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்வதா என டாக்ஸி டிரைவரிடம் கேட்க அவர் மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்லுங்கள் என அறிவுரை சொல்லி அங்கேயே வாகனத்தைச் செலுத்தினார். அங்கு செல்லும் வழியில்தான் துபாய் மால் தெரிந்தது. வாகனத்தைத் திருப்பச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருக்க இருக்கட்டும் என ஒரே முடிவாக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். வாகன ஓட்டி அரபு மொழியில் அவ்வப்போது பிரார்த்தனைச் சொல்லிக் கொண்டே ஓட்டினார். ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முன் தினம் மழை பெய்ததாலோ என்னவோ வியர்க்கவும் இல்லை, வெயிலும் அதிகம் இல்லை. துபாய் மிகவும் அருமையாக இருந்தது. மழை விழாமல் இருக்க பயணம் சிறப்பாக இருந்தது. மால் ஆஃப் எமிரேட்ஸ் மிகவும் அற்புதமாக இருந்தது. அரபு பெண்களின் கைகளில் விலையுயர்ந்த பைகள் தென்பட்டன. பிரிட்டனை அலங்கரிப்பது போன்ற ஒரு தெருவும் அங்கே இருந்தது. இலண்டனில் பார்த்திருந்ததை விட அங்கே பார்த்த கடைகள் அதிகமே. ஒரு அரபு பெண் கடைக்குள் நுழைந்துவிட்டால் பொருள் வாங்காமல் வெளியே வரமாட்டார் என்பது எழுதப்படாத விதி போல! 

சீரான ஒழுங்கமைப்பு மனதை கொள்ளை கொண்டது. அங்கேயே பனி சறுக்கு விளையாட்டுத் திடல் அமைத்து இருந்தார்கள். நேரமின்மை காரணமாக அன்று மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது. 

இரவு நெருங்கிக் கொண்டிருக்க அங்கிருந்து நேராக கோல்ட் சவுக் எனும் தங்க ஊருக்குள் சென்றோம். அங்கே இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பல கடைகள் வைத்து இருந்தார்கள். விலை ஊர் ஊருக்கு வித்தியாசம் இல்லை, ஆனால் தங்கம் துபாயில் வித்தியாசமாக நன்றாக இருக்கும் என சொன்னார்கள். தங்கம், வைரம் வாங்கப் போய் விலைபார்த்து விலைமதிக்க முடியாத முத்துமாலை ஒன்றை வாங்கிக் கொண்டு ஹோட்டல் திரும்பினோம். 

சாப்பிட என்ன செய்யலாம் என, இரவு ஒன்பதரை மணி ஆகிவிட, யோசிக்கையில் வசந்த பவன் நினைவுக்கு வந்தது. வழிகேட்டு வழிமாறாது வசந்தபவன் சென்றடைந்தோம். இந்த ஹோட்டலிலும் தங்கலாம் என சகோதரி யோசனை தந்து இருந்தார்கள். ஹோட்டலைப் பார்த்ததும் நல்ல வேளை என மனதுக்குப் பட்டது. முகப்பு ஒருமாதிரியாக இருந்தாலும் சாப்பிடும் முதல் மாடி மிகவும் நன்றாக இருந்தது.

தோசை இட்லி என மிகவும் அருமையாக இருந்தது. உண்டு களித்தோம் பின்னர் ஹோட்டலுக்கு வந்து வரவேற்பறையில் பன்னிரண்டு மணிக்கும் மேலாக அமர்ந்திருந்து பேசிக் களித்திருந்தோம். 

அன்றுதான் மாலையில், ஏழு மணி இருக்கும், கிருஷ்சிவா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன் என நினைக்கிறேன். பரஞ்சோதியார் கிருஷ்சிவா எண்ணினைத் தனிமடலை முன்னரே எனக்குத் தந்து இருந்தார், பரஞ்சோதியாரிடம் பேசியபோதும் இவ்விசயத்தை நினைவுபடுத்தினார். நான் கிருஷ்சிவா அவர்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவல் கொண்டேன், அவரும் ஆவல் கொண்டார். அவர் தங்கியிருக்கும் இடமும் நான் இருந்த ஹோட்டலும் அதிக தூரம் இல்லை. ஆனால் நான் அங்கே இருந்தவரை அவரைச் சந்திக்க வாய்ப்பின்றி போனது, வாய்ப்பினை ஏற்படுத்தாமல் விட்டது வருத்தம் அளிக்கத்தான் செய்தது. துபாய் விட்டு கிளம்பும்வரை ஏன் அவரைப் பார்க்காமல் விட்டுவிட்டோம் என மனவருத்தம் மேலிட்டது எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், நல்ல உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர் என பழகாமலேயே மனதில் அவரைப் பற்றி ஒரு எண்ணம் உதித்தது. 

எமிரேட்ஸ் மால் செல்லும் முன்னர் அடுத்தநாள் திட்டம் குறித்து ஹோட்டலில் பேசியிருந்தோம். அடுத்த தினம் துபாய் ஊர்தனை டாக்ஸியில் சுற்றினோம். ஒரு இடத்தில் நான் புகைப்படம் பிடிக்க, அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாட்டி அவரைத்தான் புகைப்படம் பிடிக்கிறேன் என நினைத்து அரபு மொழியில் திட்டுவது தெரிந்தது. கிராமம் போன்று இருந்தது அப்பகுதி. கட்டிடங்கள் என பழையதாய் இருந்தது. 

ஒரு மசூதியில் 11 மணிக்கு முன்னதாக சென்றால் அனைத்து மதத்தினரும் செல்லலாம் என வாகன ஓட்டி சொல்ல மணியோ 11.30 ஆகி இருந்தது. வெறிச்சோடி வெயிலில் வாடிய கடற்கரையும் கண்டேன். நதியில் கால்கள் நனைத்தோம். பின்னர் அழகிய கலைகள் பொதிந்த இடத்தையும் கண்டோம். கடலுக்குள் அமைத்த பாதை, பிரும்மாண்டமான ஹோட்டல் என கண்டோம். பனைமர வடிவில் அமைக்கப்பட்ட நகரம் என பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கட்டிடங்களாலேயே தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது துபாய். மதிய உணவினை வசந்தபவனிலேயே உண்டு களித்தோம். 

துபாயில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் பாலைவன பாய்ச்சல்தனை வாகனத்தில் செய்வதற்கு ஆயத்தமானோம். 

Sunday 31 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (3)

பயணம் - 3

இரவு நன்றாக உறங்கினோம். காலை எட்டு மணி இருக்கும் என நினைக்கிறேன், தொலைபேசி அழைப்பு வந்தது. யார் என மறுமுனையில் கேட்க புவனா என சொல்லி சகோதரி சுந்தராவின் குரலை தவறாக புரிந்து கொண்டேன். 

சிறிது நேரம் பின்னர் சகோதரி சுந்தராவின் கணவர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வழியில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு சென்றோம். அடுத்தமுறை துபாய் வரும்போது வீட்டில்தான் தங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டது மகிழ்வைத் தந்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதி பர் துபாய் என அழைக்கப்படுகிறது. மற்றொரு பகுதி டேரா துபாய் என அழைக்கப்படுகிறது. சகோதரியின் வீடு ஹோட்டலில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. முன்னர் அவர்கள் இருந்த வீடு ஹோட்டலில் இருந்து வெகு அருகில் இருந்து இருக்கிறது. 

சகோதரியின் வீட்டில் புவனா, மஞ்சு, குழந்தைகள் பட்டாளம் என சின்ன திருவிழா போன்று கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் சிரமப்பட்டுதான் வந்து சேர்ந்தார்கள் என்பதை அறிந்தேன். சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். 



சகோதரியின் கணவருடன் வியாபார விசயங்கள், துபாய் வாழ்க்கை முறை என பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு சின்ன வரைபடம் ஒன்று போட்டுத் தந்தார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே எல்லாம் இருப்பதாக வரைபடத்தில் காட்டினார். பின்னர் சகோதரியின் வீட்டினைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். பாரதியும், நந்தினியும் வீடுதனை சுற்றி காண்பித்தார்கள், நன்றாக பேசினார்கள். விஜய் நவீனுடன் விளையாடுவதிலேயே நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார். 

மிகவும் அழகிய வீடு. ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்த அமர்ந்தோம். பிரியாணி, சிக்கன், ரைதா, சப்பாத்தி, சாதம், இரசம், தயிர்ச்சாதம், வெஞ்சனம், ஊறுகாய், பாயாசம் என மிகவும் பிரமாதமாக இருந்தது. பொதுவாக அதிகமாகச் சாப்பிடும் நான் அன்று சற்று குறைவாகவே சாப்பிட்டு முடித்துக்கொண்டேன். நிறைய சாப்பிட்டு இருக்கலாம் என மனது சொன்னது. 

கிருஷ்ண பவன் என ஒரு உணவுக் கடை இருப்பதாகவும் அங்கே வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்கமாட்டார்கள் என சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. புவனா செய்த சமையலில் வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்க்காமல் செய்து இருந்தார்கள். செய்த விதமோ வித்தியாசம், ஆனால் மிகவும் ருசியாகத்தான் இருந்தது. அக்ஷயா அனுஷ்யா, நித்யாஸ்ரீ என மழலைகளின் பேச்சும் சுவாரஸ்யமாக இருந்தது. 

சாப்பிட்டு முடித்ததும் இலண்டன் வாழ்க்கை முறை பற்றி பேசினோம். வியாபார நுணுக்கம் எனக்குத் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்த நான், எனக்குப் பிரச்சினையே பேசுவதுதான் என சொன்னேன். அதற்கு சகோதரியின் கணவர் 'அரசியல்வாதி' மாதிரி பேசறீங்க என சொன்னார். அடடா நம்மைப் பற்றி அற்புதமாக கண்டுபிடித்துவிட்டாரே, இனிமேல் அடக்கம் கொள்ள வேண்டியதுதான் என நினைத்த சமயத்தில் புவனா பரஞ்சோதியாருக்கு அழைப்பு விடுத்தார். பரஞ்சோதியாரிடம் பல நிமிடங்கள் பேசினேன். ஊரில் சென்று வாழ வேண்டும் என எண்ணம் பரஞ்சோதியாரிடம் நிலை கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. 

பின்னர் புகைப்படங்கள், அசைபடங்கள் எடுத்துக்கொண்டோம். மிகவும் அழகான சிறப்பான பரிசுகள் தந்தார்கள். பின்னர் கேட்டபோது, புவனா அந்த அழகிய பரிசுகளை ஷார்ஜாவில் வாங்கியதாக சொன்னார். மிகவும் சிறப்பான உபசரிப்பும், அன்பும், பரிசுகளும் என சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக அற்புதமான சொந்த உறவுகளுடன் உறவாடிய அந்த தருணங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம். 

சகோதரியின் கணவர் எங்களை ஹோட்டலுக்கு திரும்ப வந்து விட்டுவிட்டுச் சென்றார்கள். அன்புடன் அவர் பழகியது, பேசியது பெரும் ஆனந்தத்தைத் தந்து இருந்தது. 

சில நிமிடங்களே ஹோட்டலில் இருந்த நாங்கள் அடுத்து எங்கு செல்லலாம் என ஒரு டாக்ஸியைப் பிடித்தோம். 



(தொடரும்)

Saturday 30 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (2)

பயணம் - 2
அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டு துபாய் பயணத்திற்குத் தயாரானோம். பொதுவாக இங்கு யாராவது ஒருவர், ஊருக்கு செல்பவரை விமானநிலையம் சென்று அனுப்பி வைத்து வருவதும், அழைப்பதும்தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் அன்று வேலை நாள் ஆனதால் பலருக்கு முடியாமல் இருந்தது. அப்பொழுதுதான் கெளரிபாலன் தொடர்பு கொண்டார். ''எங்கள் வீடு வரை உங்கள் வாகனத்தில் வாருங்கள், விமான நிலையம் ஐந்து நிமிடங்கள் தான், நான் ஏற்பாடு செய்கிறேன்'' என அவர் சொன்னபோது 'அட' என மனதுக்குள் தோன்றியது என்னவோ உண்மை. 

ஆனால் உறவினர் ஒருவருக்கு இரவு வேலை என்பதால் அவர் விமான நிலையம் வருவதாக சொல்ல கெளரிபாலனின் உதவியை நாட இயலாது போனது. துபாய் எப்படி இருக்குமோ? அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு சென்று விமானம் தரையிறங்குகிறது, எப்படி ஹோட்டல் சென்று அடைவோம் என நினைக்கையில் சற்று பயமாகத்தான் இருந்தது. சகோதரி சுந்தராவும், புவனாவும் விமானநிலையம் வருவதாக சொன்னார்கள், நான் தான் 'நள்ளிரவு என்பதால் வர வேண்டாம், நாங்கள் ஹோட்டல் சென்று விட்டு காலையில் சந்திப்போம்' என சொல்லி இருந்தேன். 

துபாய்க்கு கிளம்பும் சில நாட்கள் முன்னர் புவனா ஒரு திட்டம் பற்றி கூறினார். அதாவது புவனாவும், அவரது தோழி மஞ்சுவும், சுந்தரா சகோதரி வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் அங்கே சந்திக்கலாம் எனவும் அதனால் எனக்கு சிரமம் இருக்காது என சொன்னார். நான் உடனே சரி என சொன்னேன். அவர்களுக்கு சிரமம் இருக்கும் என கொஞ்சம் கூட யோசனை வரவில்லை!!! நான் எதிர்பார்த்த துபாய் வேறு! 

இங்கே நினைத்தவுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டோ, பேருந்திலோ, இரயிலிலோ சென்று பழக்கப்பட்டுப் போனதால் அங்கேயும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். ஷார்ஜாவிற்கும் துபாய்க்கும் 15-25 நிமிட பயணம் தான் என அறிந்து இருந்தேன், அதாவது போக்குவரத்து நெரிசல் இல்லாது இருந்தால்!

எனது மனைவிக்கும், மகனுக்கும் துபாய்தனை பார்க்க அதீத ஆர்வம் இருந்தது. ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் மூவர் மட்டுமே சேர்ந்து தொடங்கிய முதல் பயணம் இதுதான் என நினைக்கிறேன். 

எமிரேட்ஸ் விமானத்தில் தான் பயணம் செய்தோம். நள்ளிரவு 12 மணியை துபாய் அடைந்தபோது விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமிட ஆரம்பித்தது. தரையிறங்க வாய்ப்பில்லாமல், மழை பெய்வதாக விமானி அறிவித்துக் கொண்டே இருந்தார். சுற்றிய சுற்றில் என் மகன் நவீனுக்கு வாந்தி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்ட பின்னர் தரையிறங்கியபோது மணி 1.20 ஆகிவிட்டது. 

யாரிடம் கேட்டு ஹோட்டல் செல்வது என எண்ணிக்கொண்டே பிரமிப்புடன் அந்த விமான நிலையத்தில் நடந்து சென்றேன். அற்புதமான கட்டிட அமைப்பு. மிகவும் அழகாக இருந்தது. சிலமுறை துபாய் வழியே பயணித்து இருந்தாலும் துபாய் விமான நிலையத்திலிருந்து வெளிச் செல்ல நடந்தது இதுவே முதல் முறையாதலால் அற்புதம்தனை பார்க்க முடிந்தது.

விமான நிலையம்விட்டு வெளியே வர ஆச்சரியமூட்டும் வகையில் வரிசையாக 'டாக்ஸி' அணிவகுத்துக் கொண்டிருந்தது. அதை ஒழுங்குபடுத்தியும், வரிசையாக வந்த பயணிகளை 'டாக்ஸி' யில் ஏற்றி அனுப்பிய விதம் மிகவும் அருமை. 'டாக்ஸி' யில் நாங்கள் பதினைந்து நிமிடங்களில் எங்கள் ஹோட்டல் வந்தடைந்தோம். டாக்ஸி ஓட்டியவர் ஆங்கிலத்தில் பேசவில்லை, பொதுவாக பேசவே இல்லை. நான் காட்டிய முகவரி பார்த்தார், ஹோட்டலில் வந்து இறக்கினார். உரிய கட்டணம் மட்டுமே பெற்றுக்கொண்டுக் கிளம்பினார். ஹோட்டலில் ஆரஞ்சு பழச்சாறு தந்து வரவேற்றார்கள். வித்தியாசமாகத்தான் இருந்தது!

ஹோட்டல் அறைக்குச் சென்று பார்த்ததும் 'அப்பாடா' என இருந்தது. லதா குறிப்பிட்டபடி மிகவும் பிரமாதமான ஹோட்டலும் இல்லை, அதே வேளையில் மோசமானதும் இல்லை. துபாயில் முன் தினம் தான் நல்ல மழை எனவும் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பப்பட்டதாகவும் பின்னர் ஹோட்டல் பணியாளர்கள் மூலம் அறிந்தேன். வெயில் அடிக்கும் ஊரில் இதுவும் வித்தியாசம்!!!



(தொடரும்)

Friday 29 January 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (1)

பயணம் - 1


இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆவல் அதிகரிக்க ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் வாய்ப்பினை திடீரென ஜனவரியில் முடிவு செய்தோம். ஆனால் இம்முறை துபாய் சென்று மூன்று நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். 

துபாய்க்குச் செல்ல பல வருடங்கள் திட்டம் தீட்டினாலும் இம்முறை வாய்ப்பு அமைந்தது. ஏப்ரல் மாதத்தில் எப்பொழுதும் இரண்டு வாரங்களே பள்ளி விடுமுறை கிடைக்கும் என் மகனுக்கு இம்முறை மூன்று வாரங்கள் விடுமுறையாக அமைந்தது இந்த துபாய்-இந்தியா பயணத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. 



துபாய் செல்ல முடிவெடுத்ததும் சகோதரி சுந்தராவினைத் தொடர்பு கொண்டேன். விடுதியில் தங்க இருக்கிறோம் என சொன்னதும் ''வீட்டில் வந்து தங்கலாமே'' என அன்பு அழைப்பு விடுத்தார். ஆனால் அவரது அன்பு அழைப்பினை மறுக்க வேண்டியதாகிவிட்டது. அவரிடம் சில விடுதிகள் பற்றி விசாரித்தேன், அவரும் விபரங்கள் சொன்னார். திடீரென ஒரு நாள் இணையத்தின் மூலம் விடுதிகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்க ''லீ மெரிடியன்'' ஹோட்டல் பார்த்ததும் உடனே முன்பதிவு செய்தோம். விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது மட்டுமில்லாமல் விலை குறைவாக இருந்ததுதான் காரணம்.

இந்த ஹோட்டலைச் சுற்றி என்ன இருக்கிறது எனத் தேடினால் 'வசந்த பவன்' அருகில் இருப்பது பற்றி குறிப்பிட்டு இருந்தது. மனம் உற்சாகமானது. பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது சைவச் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டது நினைவில் வந்தது. 

அந்த ஹோட்டலில் தங்கிச் சென்றவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் எனத் தேடிப் படித்ததில் பலர் 'நல்ல ஹோட்டல்' என்றே எழுதி இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் 'இப்படியொரு ஹோட்டலைத் தேர்ந்தெடுத்தது பெரும் தவறு எனவும் அங்கு சென்ற மறு தினமே வேறு ஹோட்டல் மாற்றியதாகவும் எழுதி இருந்தார், அதைப் படித்ததும் 'அடடா அவசரப்பட்டு விட்டோமோ' என எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க இயலவில்லை. 'நன்றாகவே இருக்கும்' என நம்பிக்கைக் கொண்டோம். 

பயணம் முடிவாக புவனாவிடமும் விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். ஷார்ஜா கட்டாயம் வரவேண்டும் என அழைப்பும் விடுத்தார். அரைமணி நேரம் தான் என சொன்னதும் அரைநாள் செலவழிக்க வேண்டும் என சொன்னார். இப்படியாக பயணத்திட்டம் தயார் ஆக பத்மஜா மற்றும் மோகனைச் சந்திக்கவும் எண்ணம் ஏற்பட்டது. பஹ்ரைன் துபாயிலிருந்து சற்று தொலைவாக இருப்பதால் பின்னர் வேண்டாம் என முடிவு எடுத்தோம். 

பத்மஜாவின் தோழி லதா அபுதாபியில் இடம் மாற்றலாகி இருந்தார். எனவே அபுதாபி செல்லலாம் என முடிவுடன் அவரையும் தொடர்பு கொண்டேன். அவரும் துபாய் பற்றி ஒரு கட்டுரையே எழுதி அனுப்பி விட்டார். 

இப்படியாக பயணத் திட்டம் தயாராகிக் கொண்டிருக்க நாட்களும் பறந்து கொண்டிருந்தது. 



(தொடரும்)