Sunday 7 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)

தினா அழைத்துச் சென்றது ஆஞ்சநேயர் ஆலயம். முன்னரே தான் செல்ல வேண்டி நினைத்திருந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினார். ஆலயத்திற்குச் சென்றதும் உயரமான ஆஞ்சநேயர் சிலை கண்டு பிரமித்துப் போனேன், ஆனால் அதையும் தாண்டி நடந்த விசயம்தான் என்னை யோசிக்க வைத்தது. 

நாங்கள் சென்று விநாயகரை வழிபட்டுவிட்டு ஆஞ்சநேயர் முன் நிற்க தீபாராதனை ஆஞ்சநேயருக்குக் காட்டப்பட்டது. நாங்கள் செல்லவும், தீபாராதனை நிகழ்வும், அதற்கடுத்த நிகழ்ந்த நிகழ்வான தங்கத்தேர் கோவிலைச் சுற்றி வந்ததும் பெரும் மகிழ்ச்சியை மனதில் விதைத்தது. இது சாதாரணமாக அந்த ஊரிலேயே தங்கி இருந்தால் பெரிய விசயமாகத் தெரியப்போவதில்லை. மேலும் இதெல்லாம் ஒரு விசயமா என எண்ணம் ஏற்பட்டால் இதெல்லாம் பெரிதாகவேத் தெரியப் போவதில்லை. இருப்பினும் என்றோ ஒருநாள் செல்கிறோம் அதுவும் அறிந்திராத ஆலயம் செல்கிறோம். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதனைச் சேவிக்காமல் வந்த எனக்கு ஸ்ரீராமநாதனின் தூதனுக்கு நடந்த தீபவிழாவும், திருச்சுற்றுவிழாவும் காணக்கிடைக்கிறது. இது ஒரு வித்தியாசமான உணர்வை உள்ளத்தில் விதைத்தது. இப்போது பேரின்பத் தழுவல்கள் முதல் கவிதையின் தொடக்க வரிகளை நினைத்துப் பார்க்கிறேன். எதுவேண்டுமெனிலும் பொய்யாக இருந்துவிட்டுப் போகட்டும், இதுவும் கூட. 

அன்று என் மனநிலை என் தந்தை உணர்ந்தாரா? ஒருவார்த்தை கூட நான் என் தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை. கோவிலை விட்டு வெளியில் நடக்கும்போது அவராகவே சொன்னார் 'இது போன்ற நிகழ்வுகளால் இறை நம்பிக்கை இல்லாதோர்க்கும் அதீத நம்பிக்கை வந்து சேரும்'. 

நான் வருவேன் எனத் தெரிந்தா தீபாராதனை நடந்தது. சத்தியமாக இல்லை. தீபாராதனை நடக்கும் தருணத்தில் நான் இருந்தேன். அந்த நிகழ்வு நடக்க தினா வாய்ப்பு கொடுத்தார். தினாவுக்கு எங்களை ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு அழைத்துச் செல்ல எண்ணம் ஏன் ஏற்பட்டது. இப்படி சிந்தனைகள் எழுந்தபோதே ஒவ்வொன்றுக்கும் விளக்கம் தேடுவதைத் தவிர்க்கச் சொன்னது இந்த பயணம். விளக்கத்திற்கு விடையாக இறைவனே இருக்கட்டும் எனவும் புரிந்தது. புரிந்தபோதும் தெளிந்தபோதும் மீண்டும் தெளிவில்லாதது போல நடந்து கொள்வதும், புரிதல் இல்லாமலே வாழ்ந்து கொள்வதுமாக இறைவனா என்னைப் பணிக்கிறான், என்னை நான் அல்லவா ஏமாற்றுகிறேன். 

ஆலய வழிபாட்டுக்குப் பின்னர் தினா நாமக்கல்லில் உள்ள சில கோவில்களின் தலவரலாறு கூறினார். நிறைய நான் படிக்க வேண்டும் என அவரிடம் சொல்லிக்கொண்டேன். ஆலயத்தின் வெளியே இருந்த கடைகளில் இறைவன் படங்கள், பரிசுகள் என வாங்கித் தந்தார். கோவிலில் பிரசாதங்கள் வாங்கித் தந்தார். வழிபாடு செய்ய எலுமிச்சை வாங்கித்தந்தார். நினைக்க நினைக்க மனதில் பெரும் மகிழ்வைத் தரும் அந்த தருணங்கள் அற்புதமானவை. 

அருப்புக்கோட்டைக்கு வாருங்கள் என என்னுடன் வந்த அண்ணன் தினாவிடம் சொல்ல தினாவின் கண்களில் நிறைந்த கண்ணீர் என் மனதை என்னவோ செய்தது. இறைவா எல்லாரும் எல்லாம் பெற நீயே அருள்புரிவாய் என மனம் வேண்டிக்கொண்டது. தினாவின் நண்பர் மன்றத்தில் இணைகிறேன் என சொன்னார். மகிழ்ச்சியாய் இருந்தது. மீண்டும் வணக்கங்கள் தினா. நீங்கள் எல்லா வளமும், நலமும் பெற இறைவனை வணங்குகிறேன்.

நாமக்கல்லிருந்து கிளம்பியதும், கல்லில் நாமம் இடப்பட்ட பின்னரும், அந்த கல்லை கடவுளில்லை என்பேனோ? 

மணி ஏழு நாற்பது ஆகியிருந்தது என நினைக்கிறேன். ஒன்பது மணிக்கெல்லாம் சேலம் செல்ல வேண்டும் இல்லையெனில் அவரைச் சந்திக்க இயலாது. அந்த அண்ணன் கட்டாயம் சென்னை சென்றாக வேண்டும். சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருவதால் பல இடங்களில் வேகமாக செல்லலாம், சில இடங்களில் மெதுவாக ஊரலாம். பாலம் ஒன்று கட்டப்படும் இடத்தில் வாகனம் நிலையாய் நின்றது. 

தினா பற்றியும், அவரது பாட்டி பற்றியும்தான் அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். 

''தினா உங்க சொந்தக்காரன்'' என பாட்டி சொல்லியிருந்தார்கள். பாட்டி சொன்ன அந்த வரி துபாயில் நான் சகோதரி சுந்தரா வீட்டில் சொன்ன ''சொந்தக்காரங்க வீட்டிற்கு வந்திருக்கோம்'' என்பதை நினைவு படுத்தியது. 

5 comments:

Chitra said...

பயணத்தை பற்றி மட்டும் பேசாமல், தகவல்களையும் சேர்த்து கருத்து மிக்க பதிவு. நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை வெ.ரா சார்

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, ஸ்டார்ஜன்.

பித்தனின் வாக்கு said...

நாமக்கல் கடவுளை நான் சேவிக்கும் பாக்கியம் இன்னமும் கிட்டவில்லை. நன்றி அய்யா.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.