Friday 5 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)

திருச்சிக்குப் பயணம் என ஆரம்பிக்க, உறவினர் ஒருவர் ஸ்ரீரங்கநாதரைப் பார்க்கவேண்டும் என நினைக்க, ஸ்ரீரங்கத்தில் இருந்த எனது தாத்தா ஒருவர் சமீபத்தில் வைகுண்ட பதவி அடைந்திருக்க, கோவிலுக்குச் சென்றால் வீட்டுக்குச் செல்லக்கூடாது எனவும், வீட்டுக்குச் சென்றால் கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சாத்திரங்கள் அந்த உறவினரே சொல்லிவைக்க,
கோவில் செல்பவர்கள் செல்லலாம், நான் கட்டாயம் அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என சொல்லி அனைவரும் அதிகாலையிலேயே கிளம்பினோம். நேரம் ஆக ஆக கோவில் நடை சாத்தப்பட்டுவிடுமோ எனும் அச்சம் வேறு. அந்த உறவினரின் ஆசை நிறைவேறாமல் போய்விடக்கூடாதே என ரங்கநாதரையே வேண்டிக்கொண்டேன். சரியாக 12.10மணிக்கு ஸ்ரீரங்கம் சென்றது வாகனம். பூச்சொறிதல் தினமாம் அது. அதிக கூட்டமிருப்பினும் ஸ்ரீரங்கநாதரை சேவித்தோம் என நிம்மதியாக சொன்னார்கள் வந்த உறவினர்கள். இதற்காகவே திருச்சியில் இருக்கும் உறவினர்களைப் பார்க்காமல் நேராக ஸ்ரீரங்கம் வந்தடைந்தேன். 

பின்னர் திருச்சிக்குச் சென்றுவிட்டு சேலம் நோக்கிய பயணம் ஆரம்பிக்கும்போது மூன்றுமணி ஆகிவிட்டது. பின்னர் சேலம் நோக்கிய பயணம் ஆரம்பிக்க, அப்போதுதான் நாமக்கல் தாண்டித்தான் சேலம் செல்ல வேண்டும் என அறிந்தேன். முசிறியை நோக்கிச் செல்ல தினாவைச் சந்திக்கலாம் என நினைத்து தினாவுடன் பேசினேன். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது அவரது நண்பர் முருகானந்தத்துடன் பேருந்து நிலையம் வந்து எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தினாவின் பாட்டி ஒரு அதிசய மனிதராக இருந்தார். 

தினாவும், அவரது சகோதரியும், நண்பரும், பாட்டியும் தந்த உபசரிப்பில் நெகிழ்ந்து போனேன். எத்தனை அன்பாக பழகுகிறார்கள் என என்னுடன் வந்த ஒவ்வொருவரும் சொல்ல அவர்களின் அன்பின் உச்சம் கண்டு என் மனம் கொஞ்சம் ஆடவே செய்தது. சிறுவயதிலிருந்தே எதிலேயும் ஒட்டியும் ஒட்டாமல் வாழப் பழகிக்கொண்ட எனக்கு தினாவுடனான சந்திப்பு பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. நட்பு என்றாலும் சரி, சொந்தம் என்றாலும் சரி எதிலும் விலகியே இருந்து பழகிப்போனேன் நான். காணும்போது கலகலப்பாக பேசுவேன், அத்துடன் சரி. யாருடனும் அதிகம் தொடர்பு வைத்துக்கொண்டதுமில்லை, கொள்வதுமில்லை. என் பார்வையெல்லாம் இறைவனுடனும், உலக உயிர்களுடனும் நின்று போகும். நிலையில்லாத வாழ்க்கையில் என்ன விசயத்தை நிலைநிறுத்த வேண்டும் எனும் சிந்தனையில் என் நாட்கள் கரைந்து போகும். இதற்காக நட்பிற்கோ, உறவினர்க்கோ மரியாதையும் அன்பும் செலுத்தாமல் இருப்பவனாக இல்லை எனக்கு ஏனோ அதில் எல்லாம் ஒரு பிடிப்பினை வந்தது இல்லை ஆனால் தினாவின் பாட்டி ஒரு படிப்பினை சொல்லித் தந்தார் என்றே சொல்லலாம். 

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் எனும் பாடல் பாடியபோது இத்தனை வயதிலும் நினைவு வைத்திருக்கிறாரே என ஆச்சரியமாக இருந்தது. வந்திருப்பவர்களுக்கு உணவு பரிமாறு என கட்டளையிட்டதும் சரி, வீட்டில் செய்ய முடியாவிட்டால் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பரிமாறு என சொன்னபோதும் சரி தமிழரின் பண்பாடு தலைநிமிரச் செய்தது. இலங்கையின் கதிர்காம முருகனைப் பாடி அசத்தினார். பாட்டி இலங்கையில் சிலகாலங்கள் வாழ்ந்தவராம். 

வீட்டிலேயே தங்கிவிட்டு காலையில் செல்லட்டும் என பாட்டி சொன்னபோது வாழ்க்கையை ஒருநிமிடம் பின்னோக்கிப் பார்த்தேன். எதிலேயும் ஒட்டாமல் அவரவர்க்குச் சரியென இருப்பதை அவரவர் செய்யட்டும் என அவரவர் வழியே அது அன்னையாகட்டும், தந்தையாகட்டும், மகனாகட்டும், மனைவியாகட்டும் என அவரவர் போக்கில் விட்டுவிட்டு வாழும் எனக்கு அவரின் அன்பும் உபசரிப்பும் பெரும் கேள்விக்குறியை என்னுள் விதைத்தது. கண் பார்வை குறைச்சல் என்பதால் என்னைப் பார்க்க வந்த உங்களையெல்லாம் பார்க்க இயலாமல் இருக்கிறதே என அவர் சொன்னபோது மனம் சற்று கலங்கினாலும் அவருக்கு சமாதானம் சொன்னேன். உரிமையுடன் பாட்டி பேசியது உள்ளத்தில் இருந்து மறையாது. பாட்டியைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை சுவாரஸ்யம் அவர். 

தினா அவர்கள் உடலிலும் மனதிலும் வேதனை சுமந்து கொண்டிருந்தாலும் உறுதியுடன் போராடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, நான் அறிவோமோ அறிவியலும் ஆன்மிகமும் திரியில் எழுதிய விசயங்கள் என்னை ஏளனம் செய்தன. எழுதும்போது உலகம் மறந்து போவதை அறியாமலேயே இருந்திருக்கிறேன், இருந்து கொண்டிருக்கிறேன். மாற்றங்கள் என்னில் பலவிசயங்களில் அவசியம் என உணர்த்தியது இந்த பயணம். அதற்கு முத்தாய்ப்பாய் தினா செய்த அடுத்த காரியம் அமைந்தது. தங்களுக்கு எனது நன்றிகளும் வணக்கங்களும் தினா. இன்னும் அந்த நாட்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. சிரித்த முகமாக நீங்கள் எங்களைக் கவனித்துக்கொண்ட விதம், அன்பு பாராட்டிய விதம் மனதில் நிலைத்து நின்றுவிட்டது. உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டு இருக்கிறேன் தினா. (என்ன கொடுமையெனில் ஒரு வருடம் ஆகப் போகிறது, அவருடன் தொடர்பு கொள்ளவே இல்லை :(  )

ஒன்பது மணிக்கெல்லாம் சேலம் சென்று சேர வேண்டிய சூழ்நிலை. நான் அறிந்திராத ஆலயம் ஒன்றுக்கு தினா அழைத்துச் சென்றார். ஒருநிமிடம் ஆடிப்போனேன். என்னுடன் வந்திருந்த என் தந்தை சொன்னார் 'இது போன்ற நிகழ்வுகளால் இறை நம்பிக்கை இல்லாதோர்க்கும் அதீத நம்பிக்கை வந்து சேரும்'. 

4 comments:

Chitra said...

எதிலேயும் ஒட்டாமல் அவரவர்க்குச் சரியென இருப்பதை அவரவர் செய்யட்டும் என அவரவர் வழியே அது அன்னையாகட்டும், தந்தையாகட்டும், மகனாகட்டும், மனைவியாகட்டும் என அவரவர் போக்கில் விட்டுவிட்டு வாழும் எனக்கு அவரின் அன்பும் உபசரிப்பும் பெரும் கேள்விக்குறியை என்னுள் விதைத்தது.

...............ம்ம்ம்ம்...... அன்பு உள்ளங்கள் வாழ்க.

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

சில சமயங்களீல் படிப்பினை எங்கிருந்தோ வந்து சேரும். மனம் நெகிழ அதனை ஏற்க வேண்டிய சூழ்நிலை வரும். தினாவின் அன்பும் - அவரது குடும்பத்தினர் காட்டிய பாசமும் போற்றுதற்குரியதுதான் - ஐயமே இல்லை

நல்வாழ்த்துகள் வெ.இரா

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான மனிதர்களை பார்க்கும்போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் காட்டும் அன்பில் நம்மை மறப்போம் .

அனுபவமான பயணம் .

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, மிக்க நன்றி சீனா ஐயா, மிக்க நன்றி ஸ்டார்ஜன்.