Monday 1 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)

பயணம் 4
துபாய் மால் செல்வதா, மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்வதா என டாக்ஸி டிரைவரிடம் கேட்க அவர் மால் ஆஃப் எமிரேட்ஸ் செல்லுங்கள் என அறிவுரை சொல்லி அங்கேயே வாகனத்தைச் செலுத்தினார். அங்கு செல்லும் வழியில்தான் துபாய் மால் தெரிந்தது. வாகனத்தைத் திருப்பச் சொல்லலாம் என நினைத்துக் கொண்டிருக்க இருக்கட்டும் என ஒரே முடிவாக மால் ஆஃப் எமிரேட்ஸ் சென்றோம். வாகன ஓட்டி அரபு மொழியில் அவ்வப்போது பிரார்த்தனைச் சொல்லிக் கொண்டே ஓட்டினார். ஆச்சரியமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

முன் தினம் மழை பெய்ததாலோ என்னவோ வியர்க்கவும் இல்லை, வெயிலும் அதிகம் இல்லை. துபாய் மிகவும் அருமையாக இருந்தது. மழை விழாமல் இருக்க பயணம் சிறப்பாக இருந்தது. மால் ஆஃப் எமிரேட்ஸ் மிகவும் அற்புதமாக இருந்தது. அரபு பெண்களின் கைகளில் விலையுயர்ந்த பைகள் தென்பட்டன. பிரிட்டனை அலங்கரிப்பது போன்ற ஒரு தெருவும் அங்கே இருந்தது. இலண்டனில் பார்த்திருந்ததை விட அங்கே பார்த்த கடைகள் அதிகமே. ஒரு அரபு பெண் கடைக்குள் நுழைந்துவிட்டால் பொருள் வாங்காமல் வெளியே வரமாட்டார் என்பது எழுதப்படாத விதி போல! 

சீரான ஒழுங்கமைப்பு மனதை கொள்ளை கொண்டது. அங்கேயே பனி சறுக்கு விளையாட்டுத் திடல் அமைத்து இருந்தார்கள். நேரமின்மை காரணமாக அன்று மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது. 

இரவு நெருங்கிக் கொண்டிருக்க அங்கிருந்து நேராக கோல்ட் சவுக் எனும் தங்க ஊருக்குள் சென்றோம். அங்கே இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பல கடைகள் வைத்து இருந்தார்கள். விலை ஊர் ஊருக்கு வித்தியாசம் இல்லை, ஆனால் தங்கம் துபாயில் வித்தியாசமாக நன்றாக இருக்கும் என சொன்னார்கள். தங்கம், வைரம் வாங்கப் போய் விலைபார்த்து விலைமதிக்க முடியாத முத்துமாலை ஒன்றை வாங்கிக் கொண்டு ஹோட்டல் திரும்பினோம். 

சாப்பிட என்ன செய்யலாம் என, இரவு ஒன்பதரை மணி ஆகிவிட, யோசிக்கையில் வசந்த பவன் நினைவுக்கு வந்தது. வழிகேட்டு வழிமாறாது வசந்தபவன் சென்றடைந்தோம். இந்த ஹோட்டலிலும் தங்கலாம் என சகோதரி யோசனை தந்து இருந்தார்கள். ஹோட்டலைப் பார்த்ததும் நல்ல வேளை என மனதுக்குப் பட்டது. முகப்பு ஒருமாதிரியாக இருந்தாலும் சாப்பிடும் முதல் மாடி மிகவும் நன்றாக இருந்தது.

தோசை இட்லி என மிகவும் அருமையாக இருந்தது. உண்டு களித்தோம் பின்னர் ஹோட்டலுக்கு வந்து வரவேற்பறையில் பன்னிரண்டு மணிக்கும் மேலாக அமர்ந்திருந்து பேசிக் களித்திருந்தோம். 

அன்றுதான் மாலையில், ஏழு மணி இருக்கும், கிருஷ்சிவா அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன் என நினைக்கிறேன். பரஞ்சோதியார் கிருஷ்சிவா எண்ணினைத் தனிமடலை முன்னரே எனக்குத் தந்து இருந்தார், பரஞ்சோதியாரிடம் பேசியபோதும் இவ்விசயத்தை நினைவுபடுத்தினார். நான் கிருஷ்சிவா அவர்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவல் கொண்டேன், அவரும் ஆவல் கொண்டார். அவர் தங்கியிருக்கும் இடமும் நான் இருந்த ஹோட்டலும் அதிக தூரம் இல்லை. ஆனால் நான் அங்கே இருந்தவரை அவரைச் சந்திக்க வாய்ப்பின்றி போனது, வாய்ப்பினை ஏற்படுத்தாமல் விட்டது வருத்தம் அளிக்கத்தான் செய்தது. துபாய் விட்டு கிளம்பும்வரை ஏன் அவரைப் பார்க்காமல் விட்டுவிட்டோம் என மனவருத்தம் மேலிட்டது எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், நல்ல உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர் என பழகாமலேயே மனதில் அவரைப் பற்றி ஒரு எண்ணம் உதித்தது. 

எமிரேட்ஸ் மால் செல்லும் முன்னர் அடுத்தநாள் திட்டம் குறித்து ஹோட்டலில் பேசியிருந்தோம். அடுத்த தினம் துபாய் ஊர்தனை டாக்ஸியில் சுற்றினோம். ஒரு இடத்தில் நான் புகைப்படம் பிடிக்க, அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாட்டி அவரைத்தான் புகைப்படம் பிடிக்கிறேன் என நினைத்து அரபு மொழியில் திட்டுவது தெரிந்தது. கிராமம் போன்று இருந்தது அப்பகுதி. கட்டிடங்கள் என பழையதாய் இருந்தது. 

ஒரு மசூதியில் 11 மணிக்கு முன்னதாக சென்றால் அனைத்து மதத்தினரும் செல்லலாம் என வாகன ஓட்டி சொல்ல மணியோ 11.30 ஆகி இருந்தது. வெறிச்சோடி வெயிலில் வாடிய கடற்கரையும் கண்டேன். நதியில் கால்கள் நனைத்தோம். பின்னர் அழகிய கலைகள் பொதிந்த இடத்தையும் கண்டோம். கடலுக்குள் அமைத்த பாதை, பிரும்மாண்டமான ஹோட்டல் என கண்டோம். பனைமர வடிவில் அமைக்கப்பட்ட நகரம் என பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கட்டிடங்களாலேயே தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது துபாய். மதிய உணவினை வசந்தபவனிலேயே உண்டு களித்தோம். 

துபாயில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் பாலைவன பாய்ச்சல்தனை வாகனத்தில் செய்வதற்கு ஆயத்தமானோம். 

6 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன சார் , பெயரை மாத்திட்டிங்க ...

எங்கே ராதாக்கிருஷ்ணன் சார் பதிவே காணலையேன்னு பார்த்தேன் .

பயணம் சிறப்பாக அமைந்ததுக்கு வாழ்த்துக்கள் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாந்தான் முதல்லயா

Radhakrishnan said...

மிக்க நன்றி ஸ்டார்ஜன், ஆங்கில பிளாக்குக்காக மாத்திக்கொண்டேன். அது எல்லா இடங்களிலும் மாற்றம் கொள்கிறது.

vasu balaji said...

அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன். முதல்ல இருந்து படிக்கணும்:)

Chitra said...

துபாய் பயணத்துல, இவ்வளவு விஷயங்களா? இன்னும் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்து சொல்லுங்க.

Radhakrishnan said...

வாருங்கள் ஐயா.

ஆமாம் சித்ரா, தொடர்ந்து சொல்கிறேன், செல்கிறேன்.