Monday 8 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)

அந்த நிறுத்தத்திற்குப் பின்னர் சேலத்தை சிரமமில்லாமல் அடைந்தோம். சரியாக மணி ஒன்பது ஆகி இருந்தது. அந்த அண்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். பிறரை மதிக்கும் பண்பு, உபசரிப்பு என எனது கண்களில் அவர் உயர்ந்து தெரிந்தார்.
மிகவும் முக்கியமான சந்திப்புக்குச் செல்ல வேண்டியிருந்ததால் பல நாட்கள் முன்னரே புகைவண்டியில் பயணச் சீட்டு எடுத்து இருக்கிறார். நாங்கள் வருகிறோம் என அறிந்து எங்களுக்காக அவரே செய்த சமையல் என்னை வியக்கவைத்தது. பத்து நிமிடங்கள் பேசி இருந்துவிட்டு ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட அவர் கிளம்பிச் செல்கையில் என் தந்தையின் கால்களில் விழுந்து அவர் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டபோது என் கண்களில் கண்ணீர் துளித்தது. நுனிப்புல் மிகவும் அருமையாக இருக்கிறது என அவர் சொல்லிப் பாராட்டியபோது மனம் மகிழ்ந்தது. 

அன்றைய தினம் ஹோட்டலில் தங்கினோம், என் தந்தை அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொண்டார். அந்த அண்ணன் யாருமல்ல, என் சொந்த மூத்த சகோதரி பையனுக்கு பெண் கொடுத்தவர். அவரின் பண்பைக் கண்டு பிரமித்து நின்றேன். 

அன்று இரவு முரளியிடம் பேசியதுபோல காலை ஹோட்டலுக்கு முரளி வந்தார். துடிப்புள்ள ஒரு இளைஞனைப் பார்த்தேன். அவரிடம் சில மணித் துளிகளேப் பேசினாலும் பல மணி நேரங்களின் பயன்பாடு தெரிந்தது. வழக்கம்போல என் அறிவுரைகள் சொல்ல, பழக்கம் கொண்டது போல சிரித்துக் கொண்டார். அவரின் போராட்டங்கள், சாதனைகள், என்னென்ன செய்ய வேண்டிய திட்டங்கள் என அருமையாக எடுத்துரைத்தார். அதிக நேரம் செலவழிக்கலாம் என இருக்க அவருக்கு மிகவும் முக்கியமான வேலை ஒன்று இருந்தது. 

பல்லவி புத்தக வெளியீட்டாளரிடம் பேசி நுனிப்புல் பாகம் 1 தனை தமிழக நூலகங்கள் எடுத்துக்கொள்ளும்படி போராடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். விரைவில் நல்ல செய்தி கிடைத்துவிடும் எனவும் சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முடிவு எப்படியிருப்பினும் இதுபோன்ற முயற்சிகளுக்கு என் வணக்கங்கள் முரளி. ஒரு கவிதை வெளியீடும், அடுத்த புத்தக வெளியீடும் இதன்காரணமாகவே தற்போது நிறுத்தி வைத்திருக்கச் சொல்லி இருந்தார். 

யார் இந்த முரளி? ஏன் இவர் எனக்கு உதவி செய்ய வேண்டும்? எனும் எண்ணம் எனக்கு இவர் என்னுடன் முதன் முதலில் ஜி-மெயிலில் பேச அழைத்தபோது ஏற்பட்டது. அவரிடமே கேட்டும் வைத்தேன். ''யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்வது என் கடமை'' என சொன்னார். தன்னலம் போற்றாது பிறர்நலம் பேணி தனக்கென உயரிய கொள்கைகள் வைத்திருக்கும் இந்த இளைஞன் தன் வாழ்வில் மாபெரும் சாதனைகள் புரியட்டும். வாழ்த்துகள் முரளி. 

பின்னர் எழில் கொஞ்சும் ஏற்காடு சென்றோம். குரங்குகளுடன் விளையாடினோம். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. ஆயிரத்தெட்டு சிவலிங்கம் பார்த்துச் செல்லலாம் என சொல்ல நேரமிருக்காது என கோயம்புத்தூர் பயணம் தொடர்ந்தோம். முன்னரே முரளியை அழைத்து வேணு ஐயாவிடம் தகவல் சொல்லச் சொல்லி இருந்தேன். நான்கு மணிக்கெல்லாம் கோயம்புத்தூர் சென்றால் வேணு ஐயாவை அழைக்கலாம் என இருந்தேன். எனது செல்பேசி உணர்வற்றுப் போயிருந்தது. பொதுவாக எண்களை மனனம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தேன். இம்முறை எந்த ஒரு எண்ணையும் மனனம் செய்யாமலே விட்டு இருந்தேன். கோயம்புத்தூர் சென்றுப் பார்த்துக்கொள்ளலாம் என இறுமாப்பில் இருந்தேன். 

செல்லும் வழியிலே ஆயிரத்தெட்டு சிவலிங்கம் கோவில் பார்த்தேன். வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்து. கோயம்புத்தூர், கோயம்புத்தூர்... போய்க்கொண்டே இருந்தது. என் மகன் என்னிடம் கேட்டான். ''ஒரு சாக்லேட் தருவதற்கா இத்தனை தூரம் செல்கிறோம்' என்றான். அனைவரும் சிரித்துவிட்டார்கள். ''இல்லை சொந்தங்களைப் பார்ப்பதற்கு, அன்பு சொல்வதற்கு'' என பதில் சொன்னேன். புரிந்தவன் போல் தலையாட்டினான். 

கோயம்புத்தூர் சென்றடைந்தபோது மாலை ஐந்தரை மேல் ஆகிவிட்டது. அங்கே மிகக் குறைந்த நாழிகைகளே இருந்தோம். இந்த சூழ்நிலையில் இனி வேணு ஐயாவைப் பார்ப்பது இயலாது என முடிவு கொண்டேன். 6.45க்கெல்லாம் கோயம்புத்தூர் விட்டு கிளம்பினோம். அடுத்த நாள் வருடப் பிறப்பு. இரவு இரண்டு மணிக்கு அருப்புக்கோட்டை வந்தோம். 



அடுத்த தினம் கிராமங்களுக்குச் சென்றோம். கோவில் ஒன்றில் நானே பூசாரியானேன். உடைக்கும் தேங்காய் ஒழுங்காக உடைய வேண்டுமே என என் மனைவி சொல்ல, உடைக்கும் விதத்தில் உடைத்தால் எல்லாம் ஒழுங்காக உடையும் எனச் சொல்லி தேங்காய் உடைத்தேன். தேங்காய் ஒழுங்காகத்தான் உடைந்தது. ஏனோ மனமும் சந்தோசம் கொண்டது. 

பின்னர் சென்னை பயணமானேன். சுதாகர் அண்ணா சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஒரு கடையில் சென்று நேரம் தொலைந்து கொண்டிருக்க சொன்ன நேரத்திற்குச் செல்ல முடியாமல் கால தாமதமாகவே சென்றேன். இறைவனை வழிபட்டோம். நிசா செல்பேசியில் மிக அருமையாக பேசினார். நன்றி நிசா. 

பின்னர் அனைத்து நண்பர்களையும் சந்தித்தேன். நாகரா ஐயாவிடமும், மணிபாண்டி அவர்களிடமும் நிறையப் பேசினேன், அவர்களும் நிறைய பேசினார்கள். நாகரா ஐயாவும், மணிபாண்டியும் ஆன்மிகத்தினை உணர்ந்து கொண்டவர்கள். நான் ஆன்மிகத்தை எட்டி நின்று என்ன இருக்கிறது எனப் பார்ப்பவன். மணிபாண்டி தனக்கு ஏற்பட்ட உணர்வினைக் கூறினார். முதன்முதலாக இப்படிச் சொல்லும் ஒரு நபரைப் பார்க்கிறேன் என அவரிடம் சொன்னேன். மற்றவர்களிடம் அதிகம் உரையாட முடியாது போனது. இசா அம்மாவிடமும், சுதாகர் அண்ணாவின் மனைவியிடமும் என் மனைவி பேசிக்கொண்டிருந்தார். சிறுவனும் சிறுமியும் அமைதியாய் இருந்தார்கள்.

சுதாகர் அண்ணனை வியப்புடனேப் பார்த்தேன். எத்தனை ஆர்வத்துடன் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்த முனைகிறார் என. அவரின் முழு ஆர்வமும் இல்லாது போயிருந்தால் நானும் முனைப்புடன் இல்லாது போயிருப்பேனோ என்னவோ. இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என அவரிடம் சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எந்த ஒரு வேலையும் எனக்கு சென்னையில் இருக்காது என நினைத்திருக்க, கடையில் அத்தனை நேரம் செலவாகும் என அறிந்திருக்கவில்லை. 



கோவிலுக்கானப் பெயர்க் காரணம் அலசினோம். மேகம், கார்த்திக் இருவரும் அமைதியாக நாங்கள் என்ன பேசுகிறோம் என கவனித்துக் கொண்டிருந்தார்கள். அனைவரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்வு கொண்டேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த சுதாகர் அண்ணனுக்கு எனது வணக்கங்கள். நான் பயணித்த அதே வைகையில் தான் மணிபாண்டியும் பிரயாணம் செய்து இருக்கிறார். அவர் இந்த சந்திப்புக்காக கிளம்பி வந்தமை கண்டு மனம் அளவில்லா மகிழ்ச்சி கொண்டது, ஆச்சரியமும் அடைந்தது. 

கோவில் விட்டு வெளியே வந்ததும் சுதாகர் அண்ணா தன் செருப்பினை காணவில்லை என்றதும், இதற்கும் ஏதேனும் காரணம் வைத்திருப்பாயோ காரணீஸ்வரா என்றுதான் கேட்கத் தோணியது. 

நான் நேரத்தை நிர்வகிக்க முயற்சி செய்ய வேண்டும். அன்றைய இரவு உறங்காமல் 12மணிக்கெல்லாம் விமான நிலையம் அடைந்தோம். 


விமான நிலையத்துக்குள் சென்றதும் என் மகன் கண்ணீர் விட்டு அழுதது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. அவனது நண்பர்களை பிரிந்து செல்வது அவனுக்கு வேதனையாக இருந்து இருக்கிறது. என் நாடு, என் மக்கள், என் ஊர் ஏனோ என் மனம் அதிக தூரம் விலகிப் போய்விட்டது, அதே நாடு, மக்கள், ஊர் என் மகனின் மனதில் ஆழமாக வேரூன்றிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த பயணம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது, ஆகஸ்ட் மாதம் இந்தியா செல்லலாமா என என் மகன் கேட்கும்படியாய் அமைந்த இந்த இந்தியா பயணம் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும், விலகும் மனம் இனி ஒட்ட ஆரம்பிக்கும். 



(2010 ஆகஸ்ட் மாதம் மீண்டும் எனது மண்ணின் நிழலில் இளைப்பாறுவேன், இந்த முறை எத்தனை உறவுகளைச் சந்திக்க இருக்கிறேன் என்பதை மனம் மெதுவாக எண்ணத் தொடங்கிவிட்டது). 


முற்றும்.

6 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அனுபவத்தை படித்து மகிழ்ந்தேன் .

தொடருங்கள் தங்கள் பயணத்தை ...

நாந்தான் முதல்லயா ...

Chitra said...

தங்களின், இந்திய பயணம் - நல்ல அனுபவம். அதை நேர்த்தியாய் பகிர்ந்து கொண்ட விதம் அருமை.

புலவன் புலிகேசி said...

பயணத்தொடர் அருமை

sathishsangkavi.blogspot.com said...

அருமையான அனுபவம்...

Unknown said...

நல்ல அனுபவம்.. தொடரட்டும்...

Radhakrishnan said...

:)