Thursday 18 February 2010

எதற்காக எழுதுகிறீர்கள்?

எழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும் சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது என்பது அத்தனை எளிதானதும் அல்ல. விசயங்கள் அறிய வேண்டியிருக்கிறது, சரியான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டியிருக்கிறது. சொந்த படைப்புகள், பிறர் தந்த படைப்புகள் என்பது பதிவிடும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலையில் உயரிய ஒன்றுதான். 

மேலும் பதிவுகளிடும் பதிவாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தேவைப்படுகிறது என்பது பொதுவாக ஒப்புக்கொண்ட வாதமாக இருந்தாலும் எழுதுபவர் எப்பொழுதுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் உற்சாகம் என்பது பிறர் மூலம் வந்தால், பிறர் இல்லாத பட்சத்தில் உற்சாகம் தொலைந்து போய்விடும். எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும். 

ஒரு பதிவரின் கருத்துக்கு மாற்று கருத்துத் தெரிவிக்கும்போது அந்த பதிவரின் சிந்தனைக்கு எதிர்மறையான சிந்தனை ஒன்று எழுந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எழும்போது தனது சிந்தனையை அந்த பதிவர் சரியே என நிரூபிக்கும் நிலைக்கும், எதிர்மறை சிந்தனையாளர் தனது சிந்தனையை சரியே என நிரூபிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்றுக் கருத்து என்பது மறைந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் எழுதுகின்ற பதிவர்கள் மனநிலையில் 'அட அவருடைய கருத்தும் பரவாயில்லையே, ஆனா நம்ம கருத்து இது' என எண்ணம் எழும்போது அங்கே கருத்து வேறுபாடுத் தோன்றாது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என எண்ணம் எழும். 

மாற்றுக் கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கும் என்ன வித்தியாசம் எனில் ஒருவர் கொண்ட கருத்தினில் வேறுபாட்டு நிலையை எடுத்துக் கொண்டு எழுதியவரின் நிலையை சந்தேகிப்பது, எழுதியவரை குற்றம் சொல்வது என தனிமனிதரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போன்ற நிலையை கருத்து வேறுபாடு உருவாக்கிவிடும். ஆனால் மாற்றுக் கருத்து என வரும்போது அங்கே அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட்டு விடுகிறது. தனிமனிதரின் செயல்பாடுகள் குறித்து எந்த கேள்விக்குறியும் எழுவதில்லை. 

பொதுவாக எதனையும் சொந்தப் பிரச்சினையாக நினைக்கும்போது செயல்பாடுகள் குறித்து வருத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது எண்ணத்துக்கு எப்படி மற்றொருவர் மாறிப் போகலாம் என எண்ணம் எழும்போது அங்கே எப்படியாவது நமது எண்ணமே சரி என்கிற தோற்றத்தை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

ஒரு கருத்தினை எடுத்துக்கொள்ளும் விதம் பொருத்தே ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. மாற்றுக் கருத்து உட்பட. ஆனால் இவர்னா இப்படித்தான் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பதிவரிடமும் இயற்கையாகவேத் தோன்றுவதால், குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது. 

எழுத்துகள் 

சாம்ராஜ்யங்கள் கட்டவும் அழிக்கவும் உதவின,
விடுதலை வேட்கையைத் தூண்டின, 
பாலியல் எண்ணங்களை பரவசப்படுத்தின, 
எதிரிகளை உருவாக்கின,
நண்பர்களை கொண்டு வந்து சேர்த்தன,
வரலாறை திரித்தும் திரிக்காமலும் பேசின, 
கற்பனைகளை, மந்திரங்களை பிரபலமாக்கின
ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் போட்டன
இறைத்தூதர்களுக்கும் ஒரு மொழியாகின
மனதின் பிம்பங்களாயின
மரணமில்லா நிலையும் பெற்றன

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?  

24 comments:

நசரேயன் said...

//இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்? //

ரெம்ப கஷ்டமான கேள்வி ஏதாவது clue கொடுங்க

Thekkikattan|தெகா said...

//இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்? /

எழுதுவது என்பது ஒரு தவம் போலவும் தானே, வெ. இரா! என்னயப் பொருத்த மட்டில் என்னய உள்முகமாக வளர்த்துக்க கூட இதப் பயன்படுத்திக்கிறேன்னு சொல்லுவேன்... so, the sooner the better!

Chitra said...

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?

..........நான் வெட்டியா எழுதுற விஷயம் தெரிஞ்சி போச்சா? :-)


நன்கு யோசிக்க வைக்கும் இடுகை.

ப்ரியமுடன் வசந்த் said...

//குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது. //

சரியா சொன்னீங்க சார்...

ப்ரியமுடன் வசந்த் said...

நான் பொதுவா எதுக்குன்னு எழுதுறதில்ல நடைமுறையில் நாம பாக்குற அஃறிணை பொருளா என்னை வைத்து பார்க்கும் பொழுது தோன்றும் சிந்தனைகள்தான் என் பதிவு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது இது என்னுடைய சிற்றறிவுக்கும் பேரறிவுக்கும் நடக்கும் விவாதமாவே பல நேரம் இருக்கு...

புலவன் புலிகேசி said...

என்னத்த சொல்ல?

அரசூரான் said...

நீங்க கேட்ட அதே கேள்விய நான் கேட்டு கேட்டு (என்னையே) பதிவு போடுரதே குறஞ்சிடுச்சி. அந்த கேள்விய நீங்க பதிவா போட்டு கேட்டா என்னத்த சொல்ல? என்ன நாம பதிவுல போடுற ஒரு சிறு தகவல் (அவங்களுக்கு புரிந்தால்) அல்லது நகைச்சுவை படிப்பவர்களை மகிழ்விக்கத்தான்

வெங்கட் said...

மனுஷன் ஏழையா கூட இருக்கலாம்..,
ஆனா., இயந்திரமா மட்டும் இருக்ககூடாது..!

என் பதிவை படிக்கும் வாசகர்கள்
உதட்டில் மெல்லிய புன்னகை
தோன்றினால் அதுவே
என் எழுத்தின் வெற்றி..!

துளசி கோபால் said...

//எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும். //

சொன்னீங்க பாருங்க, இதுதாங்க நான் எழுதுவதன் உண்மை நோக்கம்.

அகநாழிகை said...

TVR சார், மிகவும் அருமையான இடுகை. ‘எதற்காக எழுதுகிறோம்‘ என்றொரு தலைப்பில் தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், கரிச்சான்குஞ்சு எனப்பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று இருக்கிறது. மிகவும் அருமையான புத்தகம். நீங்கள் எழுதியிருக்கிற விஷயமும் குறிப்பிடத்தக்கது. சிறப்பானதும்கூட. நாமெல்லாம் ஏன் எழுதுகிறோம்? என்னைப் பொறுத்தவரையில் எழுதுபவர்களில் பலரது முதல் காரணம் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுதான். உளவியல் ரீதியாக பார்த்தால் அடையாளச் சிக்கல் மனித இனத்திற்கே பொதுவானது. அடையாளச் சிக்கல் (Identity Crisis) இதன் வெளிப்பாடுதான் உடை, உணவு,எழுத்து, விளையாட்டு இன்ன பிறவற்றில் எழும் மனிதர்களின் மோகம். எழுத்தும் ஒரு வகை போதைதான். நல்ல பதிவு. வாழ்த்துகளும் நன்றியும்.

- பொன்.வாசுதேவன்

அகநாழிகை said...

மன்னிக்கவும், TVR என்று வந்து விட்டது, VR சார் என்றிருக்க வேண்டும். கவனக்குறைவு.

அகநாழிகை said...

//Chitra said...
இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?

..........நான் வெட்டியா எழுதுற விஷயம் தெரிஞ்சி போச்சா? :-)//

:))))))

பித்தனின் வாக்கு said...

நல்ல கேள்வி சார். என் மனதில் தோன்றும் சிந்தனைகளை ஆத்ம திருப்திக்காத்தான் எழுதுகின்றேன் என்று மனம் ஒரு முலாம் பூசிக்கொண்டாலும். அடுத்தவர்கள் பின்னூட்டம் இடாவிட்டால் மனம் வாடும். அப்போதுதான் எதுக்காக எழுதுகின்றேன் என்ற குழப்பம் வரும்.
என்றாவது ஒருனாள் யாருக்காவது பயன் தரும் என்ற நம்பிக்கைதான் தொடர்ந்து எழுத வைக்கிறது என்பது உண்மை. அதுதான் எனது நம்பிக்கையும். நன்றி.

Paleo God said...

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்? //

ஏதோ நாம எழுதரதெல்லாம் படிச்சி மத்தவங்க எழுதறதையும், படிக்கரதையும், பேசறதையும் விட்டுட்டு, talking animal லா இல்லாம வெறும் animal ஆ மாறி இந்த உலகம் சுபிட்ச்சம் அடையட்டும் என்றுதான்..:))

btw நான் எழுதறத நிறுத்தி 20 வருஷம் ஆச்சு! இப்ப ஒன்லி டைப்பிங் அண்ட் பப்ளிஷிங்.. (Free of Cost)
( நீங்க ரொம்ப நல்லவரு கோவிக்கமாட்டேங்கதானே)

I too want a clue :))

Thekkikattan|தெகா said...

உங்கள பதின்ம கால டைரிக் குறிப்புகளிலிருந்து சில பக்கங்கள் என்ற தொடரழைப்பின் பொருட்டு எனது பதிவில் உங்களின் பெயரை பரிந்துரை செய்திருக்கிறேன். தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள். சுட்டி இதோ பதின்மகால மன டைரிப் பதிவுகள்... நன்றி!

Radhakrishnan said...

மிக்க நன்றி நசரேயன். ம்ம்... உங்களுக்குத் தெரிந்ததை பிறரிடம் பகிர்ந்து கொள்ள எழுதலாம், உங்கள் எண்ணங்களை எழுத்தாக தொகுத்து வைக்கலாம். பெருமைக்காக எழுதலாம். இப்படி பல கோந்து தரலாம், எனினும் எழுதும் உங்களுக்குத்தான் தெரியும், ஏன் எழுதுகிறீர்கள் என!

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா. மிகவும் அருமையாகவே தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்.

மிக்க நன்றி சித்ரா, ஹா ஹா, நீங்கள் வெட்டியாக எழுதினாலும் பலருக்கு எத்தனை உபயோகமாக இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன்.

மிக்க நன்றி வசந்த், வித்தியாசமான அணுகுமுறைதான். நிச்சயம் எழுத்தும் வித்தியாசப்படும்.

மிக்க நன்றி புலிகேசி, ஒன்று என இருந்தால் ஒன்று என சொல்லலாம். எழுத்தின் ஆதிக்கம் உங்கள் மீது அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

மிக்க நன்றி ஐயா, தங்களின் அனுபவங்கள் சொல்லும் பாடங்கள் அதிகமே.

Radhakrishnan said...

மிக்க நன்றி அரசூரான், பதிவுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் தரம் குறையக்கூடாது.

மிக்க நன்றி வெங்கட், மிகவும் சரியே. எழுத்து மன அழுத்ததைக் குறைக்கின்றன.

மிக்க நன்றி துளசி டீச்சர், பதிவின் உட்கருத்தினைக் காட்டிவிட்டீர்கள்.

மிக்க நன்றி வாசுதேவன், அட இது குறித்து புத்தகமும் இருக்கிறதா, நிச்சயம் படிக்க வேண்டும். மிகவும் அழகான கருத்து, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு வித யுக்தியே எழுத்து.

மனிதரின் யதார்த்த மனநிலையை சொல்லிவிட்டீர்கள் பித்தனின் வாக்கு ஐயா, எவருக்கேனும் பிடித்துவிடாதா எனும் வேட்கையும் எழுத்துக்குள் அடக்கம்.

Radhakrishnan said...

வித்தியாசமான எண்ணங்கள் ஷங்கர், நசரேயன் அவர்களுக்குச் சொன்னதே உங்களுக்குமாய் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் நேரம் மிகவும் பொன் போன்றது அல்லவா? அந்த நேரம் இலவசமாக ஒருபோதும் கிடைப்பதில்லை. நிச்சயம் கோவித்துக்கொள்ள மாட்டேன், கோபம் என்னைத்தான் சுடும் என்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறேன்.

பா.ராஜாராம் said...

அதானே...

எதற்குத்தான் எழுதுகிறோம்?

பொட்டில் அடிக்கிற கேள்வி.பதிவும்.

தமிழ் உதயம் said...

எழுதும் ஒவ்வொருவரும், தங்களை அவசியம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. என்னையும் நான் கேட்டு கொண்டேன். நன்றி.

Radhakrishnan said...

மிக்க நன்றி பா.ரா மற்றும் தமிழ் உதயம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கூகுள் குழுமத்திலிருந்து வலைமனை வைத்திருப்பவர்கள் வருடம் 100 அமெரிக்க வெள்ளி கட்ட வேண்டும்,கட்டினால் மட்டுமே வலைமனையைப் பராமரிக்க முடியும் என்று சொன்னால்,எவரெவர் தத்தமது வலைமனைகளை வைத்திருப்பார்களோ,அவர்கள் தெளிவாக காரணத்தை எழுத்தில் சொல்ல முடியும் என்று நினேக்கிறேன்...

நல்ல கேள்வி ! பதிலைப் பற்றி வலைமனையாளர்கள் அனைவரும் சிந்தித்தால் மொக்கைகள் குறையும் !

Radhakrishnan said...

மிக்க நன்றி அறிவன். பணம் கட்டினாலும், பணம் கட்டிவிட்டு எதை வேண்டுமெனிலும் தெளிவில்லாமல் எழுதுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எழுதுவது என்பதே தெளிந்து கொள்வது எனவும் பொருள்படும். மொக்கை என்பது குறித்து எதுவும் சொல்ல இயலவில்லை, எண்ணமே எழுத்தாகிறது.