Tuesday 2 February 2010

காமம் - 2

காமம் - 1 படிக்க இங்கே அழுத்தவும்.

காமம் பற்றி எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதனை எழுதுவதன் மூலம் பிறருக்கு என்ன பயன் இருந்துவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது என என்னிடம் கேட்கப்பட்டபோது என்னால் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் என்பதை இப்போதைக்கு நீங்கள் யூகம் செய்து கொள்ளுங்கள்.

பலரின் கவனமானது மறைத்து வைத்திருக்கப்படும் விசயங்களில்தான் அதிகமிருக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள், அதாவது அது என்னவாக இருக்கக்கூடும், எப்படி இருக்கக்கூடும் என்கிற ஒருவித தேடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்களில் மனம் நாட்டம் கொள்கிறது.

ஆடைகளே இல்லாமல் எத்தனை பேர் உலகில் நிர்வாணமாக வாழத் தயார் எனக் கேட்கப்பட்டால் 'அடச் சீ, இதென்ன மானங்கெட்ட நினைப்பும், கேள்வியும்' என்றே பதில் வந்து சேரும். ஆனால் சமணர்கள், சில முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனும் கதை கேட்டதுண்டு,  நிர்வாணமாக வட இந்தியாவில் வாழும் 'சித்தர்கள்' என அழைக்கப்படும் மனிதர்கள் பற்றிய விசயத்தை, நிர்வாணமாகவே இருந்திட வேண்டும் என்கிற கட்டுப்பாடோடு கூடிய கடற்கரை பகுதிகள், வீட்டினுள் நிர்வாணமாகவே வாழ்ந்து வரும் 'இயற்கைவாதிகள்' என தொலைகாட்சியில் காட்டியது உண்டு.

இப்பொழுது மானம் என்பது அங்கங்களை மறைத்து வாழ்வது எனச் சொன்னால் மருத்துவ உலகத்தை கொஞ்சம் உற்று நோக்குங்கள். மருத்துவ உலகத்தில் காமம் என்கிற வார்த்தைக்கு கொஞ்சமும் இடம் கிடையாது. இந்தியத் திருநாட்டில் எப்படி எனத் தெரியவில்லை, ஆனால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எல்லாம் ஆண்களும் மருத்துவ தாதிகளாகப் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் எவரும் எந்த நாட்டிலும் நிர்வாணமாக செல்ல முடியாது. நிர்வாணமாக விளையாட்டு அரங்குகளில் ஓடித் திரிந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாணமாக எவரேனும் வாழ நினைத்தால் அவர்கள் மனநிலை பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கக் கூடும் என்கிறார்கள். கிழிந்த ஆடையில் தங்களை மறைத்துக் கொள்ள இயலாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனை பேர். உண்ணவே உணவின்றி உலகத்தில் ஒரு பகுதி தத்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.  எனினும் விலங்குகளின் நிர்வாணம், குழந்தைகளின் நிர்வாணம் நமது கண்களுக்கு ஏன் அருவெறுப்பாகத் தெரிவதில்லை! மனதில் எழுதப்பட்டது எல்லாம் தவறுதலாகவே எழுதப்பட்டு வந்திருக்கிறது. எதை எதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டுமோ அது மட்டுமே வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் எனப்படும் நாகரீகம் விதைத்தது மனிதர்களாகிய நாம் தான். மறுப்பதற்கில்லை.

நமக்குச் சொந்தம் அல்லாத பிறிதொரு பொருளின் மீது ஆசைப்பட்டாலே அங்கே நமது மானம் தொலைந்துவிடுகிறது என்கிறது நமது முன்னோர்களின் சொல்வளம். அப்படியெனில் எத்தனை பேர் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் கேள்வி எழுமெனில் கிராமத்து வழக்கச் சொல்லாகிய 'மானங்கெட்ட பொழப்பு' என எளிதாகச் சொல்லிவிடலாம்.

காமத்துப்பால்தனை இப்பொழுதெல்லாம் படிக்கும்போது மனதில் எவ்வித குற்ற உணர்வுகளும் ஏற்படவில்லை. காமம் பற்றிய திருவள்ளுவரின் பார்வை காதலைச் சார்ந்தே இருக்கிறது எனச் சொன்னால் அங்கே காதல் என்று அவர் எழுதியிருக்கலாம், ஆனால் காமம் என்றே எழுதப்பட்டு இருக்கிறது. காமத்தினால் பயன் எதுவெனின் எனச் சொல்லும்போது ஊடல், உணர்தல், புணர்தல் என்கிறார். காதலில் ஊடல் இல்லை, புணர்தல் இல்லை, காதலில் உணர்தல் மட்டுமே உண்டு. இதைத்தான் ஒரு கவிதையில் எழுதினேன், காதல் புரிந்து கொள்ளும் என. இதைப் படித்தவர்கள் காதல் புரிந்து கொல்லும் என்றார்கள். சில திருக்குறள்களைப் பார்வைக்கு இணைக்கிறேன்.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

எத்தனை பேர்தனை வேண்டுமெனிலும் காதல் செய்யலாம், ஆனால் காமம் ஒருவரின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியெனச் சொன்னால் காதலை கொச்சைப்படுத்தியதாகவேத் தோன்றும்.

இப்பொழுது கவிதையை நினைவுபடுத்துவோம், காதலில் ஆசை கடுகளவும் இல்லை, காதலில் காமம் தர்மம் இல்லை. காதல் ஒருபோதும் கொச்சைப்படுவதில்லை. மாறாக இச்சை கொண்ட காமம் கொச்சைப்பட வைக்கிறது.

முதன்முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதில் உலகில் எவருக்கேனும் எப்பொழுதேனும்  பயன் பெறும் என்கிற நோக்கத்தில்தான் எனது எழுத்துதனை அமைத்துக் கொண்டேன், அதில் காமம் மட்டும் விதிவிலக்கா?

(தொடரும்)

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் வெ.இரா

அருமையான விளக்கமான முன்னுரை - தொடர்க - பார்ப்போம் - காமமெனில் என்னவென்று

நல்வாழ்த்துகள் வெ.இரா

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.